யார் நல்ல மாணவர்?
நண்பன்
ஒருவனிடமிருந்து அலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அவனின் குரலில் சோர்வு தென்பட்டது. ‘என்ன?’ எனக் கேட்டேன். எனது அந்த
வார்த்தைக்காகக் காத்திருந்ததுபோல், ‘மிகவும் குழப்பமாக இருக்கு; நான் உணவு உண்ணும் நேரத்தைத் தவிர, வேறு எந்த நேரத்தையும் வீணாக்குவதில்லை; முழுமையாகக் கல்விக்கு மட்டுமே செலவழிக்கிறேன்; இருந்தாலும், நினைத்த மதிப்பெண் கிடைப்பதில்லை; இந்தக் கணிதப் பாடம் எனக்குக் குதிரைக் கொம்பாகவே இருக்கு’ என அங்கலாய்த்துக்கொண்டான். அந்த நண்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். சற்றுச் சிந்தித்த நான் அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்: “அதிக மதிப்பெண் வாங்க விரும்புவதன் நோக்கம் என்ன?”
அவன்
கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களிலெல்லாம் 80% மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
சற்று அமைதியாய்ச் சிந்தித்த நண்பன், “ஒரு
மாணவனாய் நான் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லவா!” என்றான்.
“நீ கூறுவது சரிதான்.
ஒருவேளை நீ குறைந்த மதிப்பெண்
எடுத்தால் என்னவாகும்?” என்றேன்.
யோசித்துப்
பதில் சொன்னான், “நான் ஒரு நல்ல மாணவன் அல்லன்” என்று. நான் இந்த ஒற்றை வாக்கியத்திற்காகவே காத்திருந்தேன். எங்கள் உரையாடல் இன்னும் தொடர்ந்தது...
“நீ நல்ல மாணவன்
என்பதைத் தீர்மானிப்பது உன் மதிப்பெண் மட்டுமா?” என்றேன்.
“இல்லை” எனத் திடமாகக் கூறினான்.
“பின்னர் எது நீ ஒரு நல்ல
மாணவன் என்பதைத் தீர்மானிக்கின்றது?” எனக் கேட்டேன்.
எங்கள்
உரையாடல் தொடர்ந்தது. இறுதியாக நாங்கள் பேசி முடிக்கும்போது, அவன் தன்னுள் இந்தக் கேள்விகளோடு விடைபெற்றான்: “எனது தனி மனித அடையாளம் (identity)
எது? என் அடையாளத்தைத் தீர்மானிப்பது எது?”
80 சதவிகிதத்திற்கும்
அதிகமான மதிப்பெண்களை அவன் எடுத்திருந்தாலும், இன்னும் அதிக மதிப்பெண் பெறுவதே அவனது நோக்கமாக இருந்தது. உயர்ந்த மதிப்பெண் பெறும்போதுதான் தான் நல்ல மாணவன் எனக் கருதினான். அவனது புரிதலில், உயர்ந்த மதிப்பெண் பெறுவது மட்டுமே ஒரு நல்ல மாணவனுக்கான அடையாளம், அது கிடைக்காதபோது அவனது அடையாளம் சிதைக்கப்படுகிறது. தன் அடையாளத்தை மீண்டும் பெற ஓய்வில்லாமல் உழைக்கத் தொடங்குகின்றான். அவன் உணவிற்கான நேரத்தைக் கூட வீணடிக்கும் நேரமாகவே பார்த்தான்.
ஒருவேளை,
அவன் இழந்த மதிப்பெண்களை மீண்டும் பெற்றால், ‘நான் நல்ல மாணவன்’ என்ற அடையாளத்தை மீண்டும் பெறுகின்றான். அவ்வாறு அந்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், அந்த மதிப்பெண்ணைப் பெறும் நோக்கோடு ஓடிக்கொண்டே இருப்பான்.
என்
நண்பனது தன் அடையாளத்தை நோக்கிய பயணத்தை நமது பயணத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பலர், ‘வாழ்க்கை முழுசும் ஓடிகிட்டே இருக்கிற மாதிரியே இருக்கு!’ எனச் சலித்துக்கொள்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அங்கலாய்த்துக் கொண்டிருப்போர் பெரும்பாலும் என் நண்பனைப் போலக் குறிப்பிட்ட ஒன்றைத் தங்கள் அடையாளமாக எண்ணி, அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஓட்டம் எதை நோக்கியது? அவர்களுக்கும் இதற்கான பதில் பல நேரங்களில் தெரிவதில்லை.
பின் ஒரு மனிதனின் அடையாளம் எது? அதை எவ்வாறு கண்டு கொள்வது?
எது அடையாளமல்ல?
என்
நண்பனின் எடுத்துக்காட்டிலிருந்து, தனது உயர்ந்த மதிப்பெண் அவனுக்கு அடையாளமாக இருந்தது. உண்மையில் மதிப்பெண் என்பது, ஒருவருடைய கல்வித்திறனை அளவிடும் அளவுதான் அல்லவா! பின்னர், ஓர் அளவீட்டை அடையாளமாகக் கொண்டால், அதன் அளவு மாறும்போது, என் அடையாளமும் நிலையாய் இருக்க வாய்ப்பு குறைவுதான். என் நண்பன் கல்வியின் அளவை அடையாளமாகக் கொண்டிருந்ததுபோல், நம்மில் பலரும் நிலையற்றவற்றை அடையாளமாகக் கொண்டிருக்கின்றோம். சிலருக்கு அது அவர் வகிக்கும் பதவியாக இருக்கலாம்; தனது கல்வித் தகுதியாக இருக்கலாம்; ஒருவருடைய பொருளாதார நிலையாக இருக்கலாம்; சமூக அங்கீகாரம், செய்யும் தொழில் மற்றும் பலவாக இருக்கலாம். நிச்சயம் இவையும் அடையாளங்கள்தாம். ஆனால், மாறக்கூடியவை.
மேற்கூறிய
அடையாளங்கள் யாவும் மாறக்கூடியவை. சில காலங்கள் மட்டுமே நமக்கான அடையாளங்கள். இவை மாறக்கூடிய ஒன்று. நமது நிலையான அடையாளமாகத் திகழும்போது, நாமும் நம் வாழ்நாள் எல்லாம் அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நம் வாழ்வில் நிச்சயம் ஏதேனும் ஒரு சூழலிலாவது, யாரேனும் ஒருவரைப் பார்த்து வியந்திருப்போம்: ‘எப்படி இவர்களால் மட்டும் இவ்வாறு எல்லாச் சூழலிலும் அமைதியாக இருக்க முடிகிறது? இவர்களின் வாழ்வில் எல்லாமே நேர்மறையாக நடக்கின்றனவா? அல்லது இவர்களின் வாழ்வில் நடப்பதைக் குறித்து இவர்கள் எந்தக் கவலையுமே கொள்வதில்லையா?’ இப்படிச் சிலர் இருப்பதற்கு மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது, அவர்களின் அடையாளமாக அவர்கள் கருதுபவை.
எது நிலையான
அடையாளம்?
உளவியல்
ரீதியாக, தனிமனித அடையாளத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, வெவ்வேறு உளவியலாளர்கள், வெவ்வேறு சூழலுக்கேற்ப பல்வேறு புரிதல்களை முன்வைக்கிறார்கள். அவற்றிலிருந்து இரண்டு நமது சிந்தனைக்கு உதவும் என எண்ணுகின்றேன். ஆன்ரி
டஃச்ஃபெல் எனும் உளவியலாளர், “மனிதனுடைய அடையாளம் பல நேரங்களில் ஒருவர்
சார்ந்திருக்கும் சமூகத்தைச் சார்ந்தது”
என்கிறார். சமூகம் என்பதை இனக்குழு, நாடு, மதம், பாலினம் எனப் பரந்த பார்வையோடு அவர் எடுத்துக்கொள்கிறார். ஒருவர் இதுபோன்ற எத்தகைய சமூகக் குழுவைச் சார்ந்திருக்கின்றாரோ, அந்தக் குழுவின் தத்துவயியலை (Philosophy) அல்லது
புரிதலை உள்வாங்கி தன்னுடைய சுய அடையாளத்தைத் தீர்மானிக்கின்றார்.
உளவியலாளர்
கார்ல் ரோசர், மனிதத்தன்மையின் (Self) இரு
வேறு கூறுகளைப் பற்றிப் பேசுகிறார். இலட்சியத்தன்மை (Ideal Self) மற்றும்
உண்மைத்தன்மை (Real Self). இலட்சியத்தன்மை
என்பது, ஒருவன் எவ்வாறு வாழ விரும்புகிறான் என்பதையும், உண்மைத்தன்மை என்பது, ஒருவன் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் குறிக்கும். இந்த இரு தன்மைகளும் ஒன்றித்துப் போகும்போது, ஒரு மனிதன் புத்தன்போல் அமைதியாகிறான். இரு தன்மைகளுக்கும் இடையே இடைவெளி ஏற்படும்போது சலனமடைகிறான்.
ஆன்ரி
டஃச்ஃபெலின் புரிதலின்படி இந்தச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட, ‘அதிக மதிப்பெண் எடுப்பவர்தான் நல்ல மாணவன்’(I’m good, when
I score high) எனும்
புரிதலை உள்வாங்கிய என் நண்பன், அச்சமூகத்தின் புரிதலைத் தனது அடையாளமாக மாற்றிக்கொள்கிறான். கார்ல் ரோசரின் புரிதலின்படி, ‘உயரிய மதிப்பெண் எடுத்தால் நான் நல்ல மாணவன்’ என்பது அவனது இலட்சியத்தன்மை; ஆனால், உண்மை வாழ்வில் அது சாத்தியப்படவில்லை. இங்கு இலட்சியத்தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் இடைவெளி ஏற்படுகின்றது. இந்த இடைவெளி அவனுள் ஒரு மோசமான சலனத்தை ஏற்படுத்துகின்றது.
என்
நண்பனின் வாழ்வை இந்த இரு உளவியல் புரிதலோடு பார்க்கும்போது, அவனுக்குள் ஏற்பட்ட உள்ளச் சலனத்தின் காரணம் நமக்குப் புரியும் என நம்புகின்றேன். நாம்
எப்படி? நம்முள்ளும் இது போன்ற உள்ளச் சலனங்கள் எழத்தானே செய்கின்றன! பல நேரங்களில் இந்தச்
சலனங்கள் உறவுச் சிக்கல்களுக்கும் மனக்குழப்பங்களுக்கும் நிம்மதியற்ற சூழலுக்கும் நம்மை இட்டுச் செல்லத்தான் செய்கின்றன. இந்தச் சிரமமான சூழலுக்குத் தீர்வு என்ன?
மெய்யியலாளர்
சாக்ரடீசு மனிதனின் கோபத்தைப் பற்றிப் பேசும்போது கூறுவார், ‘எது உண் மையோ அதைக் குறித்துக் கோபம் கொள்ளமாட்டோம்!’ ஒருவர் நம்மைப் பார்த்து, ‘நீ ஓர் ஆரஞ்சு
பழம்’ எனக்
கூறும்போது, நமக்குக் கோபம் வருவதில்லை. காரணம், நான் ஒரு பழம் இல்லை, மனிதன் என நமது அடையாளத்தில்
நமக்கு இங்குத் தெளிவிருக்கிறது. அதேநேரத்தில் ஒருவர் நம்மிடம், ‘நீ ஒரு முட்டாள்’ எனக்
கூறினால், அடுத்த வினாடியே கூறியவரின் மூக்கு காயமுற்றாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், ‘முட்டாள்’
என்பது நம் அடையாளம் இல்லை என்பதில் நமக்குத் தெளிவில்லை.
ஒரு
மனிதனின் அடையாளம், மனித வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகள் எப்படி இருக்கலாம், எவையெல்லாம் நிரந்தரமான அடையாளமாக இருக்க முடியாது, உளவியலாளர்களின் புரிதலின் அடிப்படையில் தனிமனித அடையாளத்தை எப்படிப் பார்க்கலாம்... என விவரித்த நான்,
இறுதிவரை எது சரியான அடையாளம் எனக் கூறவே இல்லை. ‘இதுதான் சரியான அடையாளம்’
என்று எந்த ஒன்றையும் கை காட்டிவிட முடியாது.
ஒவ்வொருவரின் வாழ்வியலைப் பொறுத்து அவரின் அடையாளம் மாற்றம் பெறும். எந்த ஓர் அடையாளம் ஒருவரைச் சலனமின்றி வைக்கின்றதோ, அதுவே அவரது நிலையான அடையாளம் என நம்பலாம்.
கிறித்தவப் பத்திரிகையாளர்கள் மற்ற செய்தியாளர்களின் பங்களிப்பைவிட ஒருபடி மேலே பொறுப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையின் அறிவிப்பாளர்கள்; நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்கள்; ‘பூமியின் உப்பு’ என்று அழைக்கப்படுகிறவர்கள் (மத் 5:13). பத்திரிகை அவர்களுக்கு வெறும் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான பணி. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மறக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிவு செய்யும் ஒரு தெய்வீக அழைப்பு. அவர்களின் பணி மனித கண்ணியத்தையும் மதச்சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது; கடவுளின் எல்லையற்ற அன்பைப் பிரதிபலிக்கிறது.
ஆயினும்,
இந்த அழைப்பில் சோதனைகள் இல்லாமல் இல்லை. கிறித்தவ ஊடகங்கள் கிறித்தவர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றன என்ற குறுகிய எண்ணங்களைப் போக்குவதும்
ஒரு பெரும் சவாலாகும். திரு அவையின் செய்திகளுக்கு அப்பால் நகர்ந்து, சமூகத்தின் பரந்த சிந்தனையுடன் ஈடுபட நமது பார்வையை விரிவுபடுத்தவேண்டும். தவறான தகவல்களும், சேர்ப்பு நிலைப்பாடு கொண்ட செய்திகளும் பெருகிவரும் இவ்வுலகில், துணிவுடன் உண்மையையும் நேர்மையையும் நிலை நிறுத்தவும், தீய எண்ணங்களுக்கு அடிபணியாமல் அநீதியை எதிர்கொள்ளவும் கிறித்தவ ஊடகவியலாளர்கள் பணிக்கப்படுகிறார்கள். இயேசு செய்தது போல, இவர்கள் உண்மையை அறிவிக்கிறார்கள்; “உண்மை அவர்களை விடுதலையாக்கும்” (யோவா
8:32). “நன்மை செய்வதில் மனம் தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்ககாலத்தில் அறுவடை செய்வோம்”
(கலா 6:9) எனும் புனித பவுலின் அறிவுரையிலிருந்து நாம் உத்வேகம் பெறுவோம்.
இதயத்துடன் தொடர்பு
கொள்ள
ஓர்
அழைப்பு
மே
12, 2025 அன்று நமது புதிய திருத்தந்தை லியோ அவர்கள், கத்தோலிக்க ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது, இரக்கத்துடனும்
நம்பகத்தன்மையுடனும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள அவர்களை வலியுறுத்தினார். அமைதியை வளர்க்கும் மற்றும் குரலற்றவர்களுக்குத் துணையாக இருக்கும் உரையாடலுக்கு எதிராகப் பிளவுபடுத்தும் தகவல்தொடர்புகளை நிராகரிக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
‘நாம் சத்தமாகவும் வலுவாகவும் தொடர்புகொள்ளத் தேவையில்லை; மாறாக, குரலற்றவர்கள், பலவீனமானவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களிடம் தகவல் சேகரிக்கவும் நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டும்’
என்று கேட்டுக்கொண்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுடன் திரு அவையின் உடனிருப்பைத் திருத்தந்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். உண்மை மற்றும் சனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்தார்; மேலும், கட்டுப்பாடு மற்றும் இலாப நோக்கத்தில் இயக்கப்படும் உலக மனநிலைக்கு எதிராக நாம் நிற்க வேண்டுமென எச்சரித்தார்.
இன்றைய காலத்தில் மக்கள் கடவுளுக்காக ஏங்குகிறார்கள் என்றும், அவர்கள் ஊடகவியலாளர்கள் மூலமாகவும் அவரைத் தேடுகிறார்கள் என்றும் அவர் நினைவூட்டினார்.
கிறித்தவப் பத்திரிகைகளைக்
கொண்டாடுதல்
இன்று,
ஆங்கிலம் அல்லது எந்த அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழியிலும் சிறந்து விளங்குவது கிறித்தவப்
பத்திரிகைகள்தாம். கிறித்தவத் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களால் இந்தியில் முன்மாதிரியான பத்திரிகைகள் வெளிவருகின்றன. எழுச்சி தரும் மதச்சார்பற்ற புத்தகங்களின் ஆசிரியர்கள் கிறித்தவர்களே. கிறித்தவ, சமூக மற்றும் மனித மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது You Tube வீடியோக்களின்
எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்களில் முன்னிற்பவர்கள் கிறித்தவர்களே! இத்தகைய அசாதாரண பங்களிப்புகளை எண்ணிப்பார்க்கும்போது நாம் பெருமைப்படவேண்டும்; நமது பத்திரிகைகளை, ஊடகங்களை, எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும்.
இந்த
யூபிலி ஆண்டு நம்மை ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்று
அழைக்கிறது. கிறித்தவப் பத்திரிகையாளர்கள் நம்பிக்கையின் விதைகளை விதைக்கவும், தவறான செய்திகளை எதிர்த்துப் போராடவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் ‘உலகின் ஒளி’
(மத் 5:14); மறைக்க முடியாத ஒரு மலையின் மீதுள்ள நகரமாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். “ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவா
1:5) என்று இறைவாக்கு நமக்கு உறுதியளிக்கிறது போல, அவர்கள் உண்மை
மற்றும் துணிவின் ஒளியாக ஒளிவீசவேண்டும்;
இருள் அவர்கள்மீது வெற்றிகொள்ளாது.
சவால்களைத் தாண்டி
எழுச்சி
கொள்வோம்!
எண்ணிமத்
தொழில்நுட்பத்தின் அழுத்தங்களால் நாம் திகைக்காமல், அச்சமின்றி எழுச்சி கொள்வோம். கத்தோலிக்க எழுத்தாளர்களின் படைப்பு வெறும் காகிதத்தில் உள்ள மை அல்ல; மாறாக,
அது நீதி, அமைதி மற்றும் உண்மைக்கான நற்செய்தியை முன்னறிவிக்கும் கருவி. ஆகவே, கிறித்தவ எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், நிருபர்கள் யாவரும் திரு அவைக்கும் நாட்டிற்கும் செய்யும் மேலான பணிகளுக்காக நாம் நன்றியைத் தெரிவிக்கவேண்டும்.
எண்ணற்ற
சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் அழைப்புக்கு உண்மையாக இருக்கிறார்கள். இறைவன் நிறைவாக அவர்களை ஆசிர்வதித்து, அவர்களின் எதிர்கால முயற்சிகளை வழிநடத்துவாராக!
மொழியாக்கம்:
அருள்முனைவர்
செ.
இராஜசேகரன்
தமிழ்நாடு அரசியலும் திரைத் துறையும் பின்னிப் பிணைந்தவை. 1950-களுக்கு முன் சேலம், கோவை என்ற ஊர்களில் படப்பிடிப்புத் தளங்கள் இருக்கும். படப்பிடிப்புகள், படப்பிடிப்புத் தளங்களில் மட்டுமே நடக்கும். பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதி ராஜா போன்ற இயக்குநர்கள் வந்தபின்பு பொதுவெளிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
கோவை
இராமநாதபுரம் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா, 16 திரைப்படங்களை
எம்.ஜி.ஆர். அவர்களைக்
கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தவர். இவர் விலங்குகளை வைத்து திரைப்படம் எடுத்துப் பெரும் பணம் ஈட்டினார். இவர் ஒருமுறை செய்தியாளர்களிடம் “விலங்குகள் கால்ஷீட் சொதப்பாது; ஒரு படம் ஓடிவிட்டால் அதிக சம்பளம் கேட்காது; தயாரிப்பாளரை வீண் தொந்தரவு செய்யாது”
என்றார். சின்னப்பாவை எம்.ஜி.ஆர். ‘முதலாளி’ என
அழைப்பார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
எம்.எம்.ஏ. சின்னப்பா பணத்தை
மூட்டைக் கட்டிக்கொண்டு படம் எடுக்க வந்ததைப் பார்த்த இந்தி திரைப்படத் துறையினர் அதிர்ந்தனர். இவர் தன் வருவாயில் நான்கில் ஒரு பங்கை பழனி, மருதமலை கோவில்களுக்கு வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.
இந்தச்
சின்னப்பா ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற திரைப்படத்தை எடுத்தார். மந்த புத்தியுள்ளது எனக் கூறப்படும் ஆடு, திரைப்படத்தில் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தது. திரைப்படம் வெள்ளி விழா கண்டது. அன்று வெள்ளி விழா என்பது 175 நாள்கள் ஓடுவது. திரைப்படத்தில் நடித்த ஆட்டை ஊர்கள் தோறும் திரையரங்குகளில் காட்சிக்கு அனுப்பினார். ஆட்டைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. நெரிசல் அதிகமானது. இதைக் கண்டு வருத்தமுற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதினார்: ‘ஆடு கம்பீரமாகத்தான் நிற்கிறது; ஆனால், மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்.’ இன்று நாட்டு நடப்பும் அப்படித்தானே இருக்கிறது!
சில
வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக, பள்ளிக் குழந்தைகள் தங்கள் கதாநாயகனை, கதாநாயகிகளைக் காண வீட்டிலிருந்து காணாமல் போவர். சிலர் அந்தக் கதாநாயகனை, கதாநாயகியைக் கல்யாணம் செய்வேன் என ஊர் முழுவதும்
கூறிக்கொண்டு அலைவர். பெண்கள் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டப்பட்டு எல்லாம் இழந்தார்கள். இரசிகர்கள் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம், பட வெளியீடு அன்று
திரையரங்குகளில் திருவிழாக்கள் நடத்தினர். இதில் ‘எங்க தலைவனுக்குதான் பெரிய கட்-அவுட்’ என உயரப்போட்டி நடத்தினர்.
பரிணாம வளர்ச்சியாக ‘பாக்ஸ் ஆபிஸ்’ புள்ளி விவரங்களைப் போட்டு நொறுக்கினர்.
ஒரு
கதாநாயகி ஒரு முக்கிய நகரத்தில் நகைக்கடையைத் திறக்க வருகிறார். நகரப் போக்குவரத்து மூன்று மணி நேரம் முடங்கிப்போகிறது. சமீபத்தில் கண்ட ஒரு கட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. சுற்றுலாத்தலம் ஒன்றில் ஓடாத ஒரு படத்தில் ஒரேயொரு காட்சியில் நடித்த ஒரு பெண்மணியை அடையாளம் கண்ட கூட்டம் புகைப்படம் எடுக்க, கைகுலுக்க அலைமோதியது. அதிர்ந்து போனோம். அதன் உச்சமாக இரசிகர்கள் என்ற சுயம் இழந்தவர்களால், சுயாதீனம் இல்லாதவர்களால், அவர்களது சிந்தனையற்ற செயல்களால், அக்கறையின்மை காரணமாக, புத்துயிர் பெற்ற இரசிகச் சடலங்களால் ஓர் ஊரே பிணக்காடாகி உள்ளது. வழிநடத்தப்படாத
அரசியல் மோதலின் வழி, சக்தி வாய்ந்த துன்பவியல் அரங்கேறி உள்ளது. இவை நம் வார்த்தைகள் அல்ல; சோம்பிகள் குறித்த அகராதி தரும் விடையிது. இது தமிழ்நாடு அரசியலில் கால் பதித்துள்ள ‘இரசிகர்கள்’ என்ற
புதிய தலைமுறையினருக்குப் பொருந்தும்.
1970-களில் எழுத்தாளர்
ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’
என்ற கதையில் பாமர மக்களின் சினிமா மோகம் பற்றி எழுதியிருக்கிறார். அன்று கவிஞர் கண்ணதாசனும், நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரஸ் சார்பாகத் திரைத்துறையில் எம்.ஜி.ஆருக்கு எதிராகக்
களம் கண்டனர். கண்ணதாசன் தன் பத்திரிகையில், ‘சினிமாவுக்குப் போன சித்தாள்’
என்று சிறுகதையாக எழுத ஆரம்பித்து, அது ஐந்து, ஆறு வாரம் வருகிற குறுநாவலாக முடிந்தது. சினிமா போதையில் ஓர் ஏழைக் குடும்பமும், அடித்தட்டு மக்களும் பாதிப்பதைப் படம்பிடித்தது அந்தக் குறுநாவல். எம்.ஜி.ஆர். அவர்களை
‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பதிற்குப் பதில், ‘இலட்சத்தில் ஒருவன்’ என்றும் ஜெயகாந்தன் கதையை வடிவமைத்தார். அன்றைய தி.மு.க.வினர் இச்சிறு கதையை எழுதிய எழுத்தாளர் ஜெயகாந்தனைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அன்று தி.மு.க.
விதைத்த வினையை இன்று அதே தி.மு.க.வே அறுவடை செய்கிறது.
பின்னாள்களில்
ஆந்திர முதல்வராக என்.டி. ராமராவ் பதவி ஏற்றபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்: “தமிழ்நாட்டைப் பிடித்த சனி ஆந்திராவையும் பிடித்தது”
என்று. மின்னணு ஊடகங்கள் வளர்ச்சிப்பெற்ற நிலையிலும், கதாநாயகப் பிம்பம் உடைபடவில்லை. ஏழை, எளிய, அடித்தட்டுப் பாமர மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதிலும் 75 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்பது பெரும் கவலையளித்தது. தங்களைச் சுற்றிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உணர்வதில்லை. ஏன், அன்றாட நாட்டு நடப்புகள் தெரியாத கூட்டமாக இருக்கிறார்கள். தமிழினத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற அடிப்படை அறியாத, சினிமா மோகத்தில் எடுப்பார் கைபிள்ளைகளாக உள்ளார்கள். அடிப்படை நிலைகளைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளாக உருமாறி விட்டார்கள். இவர்கள் தங்கள் திரைநாயகனின் திரைக்கதை போன்ற கனவு உலகில் வாழ்கிறார்கள். இவர்களது கதாநாயகனும் அப்படியே வாழ்கிறார்.
எனது
இளம் வயதைத் தன் கதைகளால் பெரிதும் ஆக்கிரமித்தவர் பாலகுமாரன். அவரை இன்றைய இளைய தலைமுறைக்கு ரஜினிகாந்த் அவர்களின் பஞ்ச் டயலாக் வசனகர்த்தா எனக் கூறி அறிமுகம் செய்யலாம். அவர் கதாநாயக நடிகர்கள் பற்றிக் கூறுகிறார்: “நடிகர்களிடம் எங்கோ தவறு இருக்கிறது. நான் சாதாரணமானவன் இல்லை என்கிற எண்ணம் இருக்கிறது. யாரோ கதை சொல்ல, எவரோ வசனம் எழுத, எந்த இயக்குநரோ தவித்துத் தண்ணீராய் உருகிப் படம்பிடிக்க, இரவு-பகல் தெரியாது, அவர் நடிப்பு குறை தெரியாது, யாரோ பிலிம் தொகுத்துக் கொடுக்க, பின்னணி இசை சேர்க்க, நூறு பேர் சேர்ந்து வெளிச்சத்தில் ஓர் ஆளைத் தூக்கிப்பிடிக்க, வெளிச்சத்தில் கண்ட ஆளே அத்தனைக்கும் காரணம் என மக்கள் நம்ப,
அந்த ஆள் உலகமே தன் காலடியில் என்று நடக்க... சினிமா விசித்திரம்தான்.”
எல்லாக்
கதாநாயர்களின் நினைப்புகூட இதுதான். இவர்கள் மனநலக் குறிப்புகளில் உள்ளபடி என்.பி.டி. எனப்படும்
சுயநலச் சிக்கல்களால் பாதிப்பு அடைகிறார்கள். இது இன்று முதல்வர் கனவு, கலவரம் என்று நிறுத்தி இருப்பது கண்கூடு. இவர்களது வெறிபிடித்த இரசிகர்களின் வழிபாட்டுக் கலாச்சாரம் (கல்ட்) உயிர்ப் பலிகளை வாங்கியுள்ளது. துன்பவியல் நிகழ்விற்குப் பின்னான அவர்கள் தங்கள் பதிவுகள் வழியே கதாநாயக நடிகர் பின் நின்றார்கள். நேரில் மட்டுமல்ல, சமூக வலைத்தளப் பதிவுகளில் கூட உயிரிழந்த, காயமடைந்த மக்கள் பின் நிற்கவில்லை. இது பெரும் இனக் கொடுமை அன்றோ! இது நம் தமிழ்ச் சமூகம் முன்னுள்ள பெரும் சவால் என உணர்ந்து, அறிவார்ந்த
பெற்றோர், தம் குழந்தைகளுக்கு ஊடகக் கல்வி புகட்டும் அளவு விழிப்புணர்வு பெறவேண்டும்.
வாக்கிற்கு இலஞ்சம் என்பதைப் போல, பீகாரில் உள்ள 1.27 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டன. விளைவு - பா.ச.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இது வெறும் தேர்தல் வெற்றி அல்ல; மக்களின் அடிப்படை வறுமையையும் உடனடித் தேவைகளையும் மூலதனமாக்கி, மதவாதிகள் பெற்ற ‘வியூக’ வெற்றியாகும். சமூக நீதி, உழைக்கும் மக்களின் நலன், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்தான் இந்தத் தேர்தல் முடிவுகள்.
ஆளும்
வர்க்கத்தின் மிக நுட்பமான, அதிகாரத்தை அபகரித்துக்கொள்வதற்கான சூழ்ச்சியை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்களை) ‘சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம்’ என்று ஏளனம் செய்தனர் பா.ச.க.வினர். ஆனால், அதே மக்கள்நலத் திட்டங்களைத் தனது பிரதான தேர்தல் ஆயுதமாகக் கையாண்டு, பீகாரில் வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது பா.ச.க.
ஆம்!
பீகாரில் அதிகாரம் வென்றிருக்கிறது. மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஆர்.ஜே.டி. தலைமையிலான
‘இந்தியா’ கூட்டணி
ஏற்கெனவே வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்ற இடமெல்லாம் இலட்சோப இலட்சம் மக்கள் கூடினார்கள். வாக்குத் திருட்டுப் பிரச்சாரம் நாடு முழுக்கப் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் சகல தில்லு முல்லுகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே பல கேள்விகளை எழுப்பின.
மாநிலத்தில்
இளையோருக்கு வேலைவாய்ப்பு இல்லை; தொழில் வளர்ச்சி இல்லை; கல்வியில் முன்னேற்றம் இல்லை; பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை... இப்படி பீகாரைக் கடந்த இருபது ஆண்டுகளாக ‘பித்துக்குளித்தனமாக’ வழிநடத்திய
நிதிஷ் குமாரை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் அவலநிலை குறித்து பீகாரின் ஒவ்வொரு தெருவெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். மக்களும் ஆரவாரம் செய்து அதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அது வாக்குப்பதிவின்போது பிரதிபலிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது இருந்த மக்களின் அமோக வரவேற்பு வாக்குகளாக மாறாமல் போனது.
இந்த ஆரவாரமும் ஆதரவும் ஏன் வாக்குகளாக மாறாமல் போனது? கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லையா? அல்லது ஒருங்கிணைப்பு இல்லையா? அரசுத் துறைகளின் மீது அகலக் கால் விரித்து அமர்ந்து கொண்டு, அசுர பலம் காட்டிவரும் பா.ச.க.வை வீழ்த்த மதச்சார்பற்ற,
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்கள், கட்சிகள் தங்களது அடித்தளத்தை மேலும் உறுதியாக்கவேண்டுமா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு
விடை காண வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகளைத் தள்ளி இருக்கிறது பீகார் தேர்தல் முடிவு.
‘பீகாரில் நேர்ந்ததுதான் இங்கும் நிகழும். அரியானாவில் நிகழ்ந்ததுதான் இங்கும் அரங்கேறும். மராட்டியத்தில் ஏற்பட்ட அரசியல் முடிவுதான் தமிழ் நாட்டிலும் நிகழும்’ என்று அ.இ.அ.தி. மு.க.வினரும்
பா.ச.க.வினரும்
ஆருடம் கூறி வருகிறார்கள். ஜனநாயகப் படுகொலைக்கு எஸ்.ஐ.ஆர். போன்ற
கூர்தீட்டிய கத்திகளைக் கைகளில் ஏந்தியவாறு அ.தி.மு.க.வும் பா.ச.க.வும்
களத்தில் இருக்கின்றன. சிறுபான்மையின மக்களோ, தங்களுக்கு எதிரானவர்கள்…யாராக
இருந்தாலும் அவர்களைக் கூறுபோட்டு, அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடே இல்லாமல் செய்துவிட துணிந்துவிட்டன அதிகாரப் போதை ஏறிய அதிகார சக்திகளும், சதிகார அடிமைக் கும்பலும்.
நண்பர்களே,
நாம் ஏமாந்துவிடக்கூடாது. பீகார்
தேர்தல் முடிவு, நமக்கான எச்சரிக்கை மணி! விழித்துக்கொள்வோம்!
ஆர்.எஸ்.எஸ். என்ற இந்துத்துவத்தின் ஏகத் தலைவர் மோகன் பகவத் அவர்கள் அருளிய அருளுரையின் உள்ளடக்கம் கேட்டு இந்திய ஆயர் பேரவை அதிர்ந்து போனதும், எதிர்வினையாற்றியதும் மகிழ்ச்சி தரும் செய்தியே. ஆனால், இவ்வமைப்பு தோன்றி நூறாண்டு கண்ட நிலையில், இவ்வமைப்பின் தோற்றம், தோன்றிய சூழமைவு, இந்திய-தேசிய அளவில் உருவாக்கி வரும் அதிர்வலைகள், இவ்வமைப்பு உயிர்க் கொள்கையென ஏற்றுக்கொண்டிருக்கும் இந்துத்துவம், இந்துத்துவத்தின் பாசிசப் பண்புகள் இவையெல்லாம் இந்திய மண்ணில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதை, இந்திய வகுப்புவாத அரசியலின் வளர்ச்சியைக் கவனத்தில் கொள்வோர் நன்கறிவர்.
“இந்திய நாட்டில் வாழ்வோர் அனைவரும் இந்துகள்; இந்துகள் அல்லாதோர் இந்தியர்கள் இல்லை” என்ற மோகன் பகவத் அவர்களின் திருவசனங்களில் புதியன எதுவும் இல்லை. எனவே, அகில இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் எதிர்வினை பாராட்டப்பெற வேண்டியதொன்றாலும், பகவத் அவர்களின் செய்தியின் உள்ளடக்கத்துள் புதைந்திருக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்காகவாவது தெளிவுபடுத்துவது இன்றைய கட்டாயத் தேவையாகும்.
‘இந்தியா’ என்ற பூகோள அமைப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்தியா, இந்துத்துவர்களின் வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படி, எப்போதும் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு நிலப்பரப்பு (Territory) எனும்
பொய்மையை நாங்கள் ஏற்கவில்லை. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இன்று வழங்கப்பெறும் ‘இந்து’ என்ற கருத்தாக்கம் இல்லை; வெள்ளையன் தயவினால்தான் நாம் ‘இந்து’ என்ற பெயரினைப் பெற்றோம் என்று நன்றியோடு பகர்ந்த மேனாள் காஞ்சிப் பெரியவாளின் கூற்றினை ஏற்கின்றோம். “இந்துவாக இயலாதோர் இந்தியராக இருக்கமுடியாது” என்ற
இந்திய மதவாதிகளுக்கு இந்து மதம் இந்தியா என்ற கட்டமைப்பின் உள்ளடங்கிய பொய்மையை எடுத்துரைக்கவே இவ் விளக்கம்.
‘இந்தியா
ஒரு தேசமல்ல’ என்பதையும், ‘தேசங்களின் நாடு’ என்பதையும் ஏற்கின்றோம். பிரபல அரசியல் அறிஞர் அவர்களின் ஆழமான ஆய்வின்படி, ‘இந்தியா அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நாடு’
(Politically integrated).
ஆனால், பன்மைக் கலாச்சாரமுடையது (Culturity plural)
என்பார். இன்றைய இந்தியா ஒரு சுயம்புத்தன்மையுடைய ஒன்றல்ல; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதும் அல்ல; சுருக்கமாக, இது ஒற்றை இந்தியாவும் அல்ல; இதன் அழகே இதில் உள்ளடங்கிய பன்மைக் குணமே! பன்மையை மறுப்பவரே இந்தியப் பண்பை மறுப்போர், ஏன்... இந்தியாவை மறுப்போர்.
இந்துத்துவர்களால்
விழுந்து போற்றப்பெறும் இந்து மதம் ஒற்றைப் பண்புடைய (Homogenous) மதமல்ல; ஒற்றை
என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. இந்து மதத்தின் உயர்வு அதன் பன்மையுள் உள்ளது. ஒற்றைக் குணமுடைய மதமாக இந்து மதம் எப்போதும் இருந்ததில்லை. இந்திய நிலப்பரப்பில் சைவம், வைணவம், சித்தார்த்தம் என்று நிலவிய நம்பிக்கைகள் உண்டு. இவைகளுக்கான பொதுப்பெயர்தான் இந்து. இன்று நாம் காணும் இந்து மதம் ‘Syndicated Hinduism’ என்பார் பிரபல வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ரொமிலா தப்பார். இந்து அல்லாதோரையும் ‘இந்து’ என்ற பெயரில் ஒருங்கிணைத்து அகவயப்படுத்தி, அரசியல்ரீதியான பெரும்பான்மையை உருவாக்கிய இந்துத்துவர்கள், யாரை ‘இந்து’ என்றழைக்கின்றனர்? யாரை
‘அ. இந்து’
(A Hindu) என்று
அழைக்கின்றனர்? இந்துவாக இல்லாதவர்கள் என்று இந்து மதம் சாராதோரை அழைப்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆனால், இந்து மதம் சாராதோர் இந்தியர் என்று கருதப்பெறார் என்ற கருத்தை எவரும் ஏற்கமுடியாது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக அல்லது குருஜியாக அழைக்கப்பட்ட குரு கோல்வால்க்கரின் ‘Punch of thoughts’ எனும்
நூல் இந்துத்துவக் கருத்தியலின் மூலமாகும். இவரின் கருத்துப்படி, “இந்தியாவில் வாழும் இந்தியர்கள் இந்து மதத்தை ஏற்கவேண்டும்; இந்துமதத் தலைவர்களைப் போற்றவேண்டும்; இந்து கலாச்சாரம் இவர்கள் வாழ்வாகவேண்டும். இவை தவிர்த்து வேறெதுவும் இவர்களின் வாழ்வுக்கு முதன்மை இல்லை. இல்லையெனில், இந்துவல்லாத இவர்களும் இந்தியாவில் வாழலாம். எப்படி? இந்நாட்டின் உரிமைகளுக்குத் தகுதியற்றவராய் (Deserving nothing),
எவ்வுரிமையும் கோர முடியாதவராய் (claiming nothing), ஏன்... குடியுரிமை கூட மறுக்கப்பட்டவராய்தான் (not event citizenship)
வாழ முடியும். இவர்கள் இந்துகளாய் வாழ்ந்தால் இந்தியர்கள்! இல்லையெனில் அந்நியர்கள் (Aliens)!
மதம்
எப்போதும் ஒரு நாட்டின் குடிமகனின் குடியுரிமையைக் காக்கும் அலகாக இருக்க முடியாது என்பதே உண்மையாயிருக்க, யாரை அல்லது எதனை நியாயப்படுத்த பகவத் இம்முழக்கத்தை இப்போது முன்வைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது மோகன் பகவத் விடுத்த இந்து மதம் சாராதோர் குறித்த அறிக்கை இவரின் ‘அ. இந்து’ அறிக்கையை மேலும் ஆழப்படுத்தியது. “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்நாட்டில் நுழைந்த வெளிநாட்டினர் பலர் திரும்பிச் சென்ற போது சிலரை இந்நாட்டிலேயே விட்டுச் சென்றனர். பாரதியக் கலாச்சாரத்தின் பெருங்குணத்திற்கேற்ப இந்நாட்டில் தங்கியோர் பரிவுடன் கவனிக்கப்பட்டனர். இம்மக்களை இந்நாட்டின் குடிகளாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால், இவர்கள் தம் வேறுபட்ட அடையாளங்களால் நாட்டில் வேற்றுமை உணர்வை வளர்த்தனர்” (‘தி
இந்து’, அக்.6).
மோகன்
பகவத் அவர்களின் உரையை மெச்சிய மோடி, நெகிழ்ந்து போனதாக அறிவித்தார். மோகன் பகவத் இந்துகள் அல்லாதோர் சிலர் தம் தனித்த அடையாளங்களைத் தொடர்ந்து கைக்கொள்வதால் இந்நாட்டில் வேற்றுமை வளர்வதையும், நாட்டின் ஒருமை பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்று ‘அ. இந்தியர்’ பற்றிப் பேசும் மோகன் பகவத், இந்துகள் அல்லாதோரின் தனித்த அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
மதம்
ஒரு தனிமனிதன் சார்ந்த நம்பிக்கை மட்டுமல்ல; ஏற்றுக்கொண்ட நம்பிக்கையால் ஓர் அடையாளத்தையும் பெறுகின்றான். கிறித்தவம் என்பது என் நம்பிக்கை மட்டுமல்ல; அது என் அடையாளமாகவும் உள்ளது. இந்த அடையாளத்தை, அடையாளம் எனும் உரிமையை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மோகன் பேசும் கருணை இங்கு ஏற்கத்தக்கது அல்ல!
சவார்க்கரும்
மத
அடையாளமும்
மோகன்
பகவத் அறிக்கையின் உள்ளடக்கம் புதிய செய்தியில்லை; இவ்வறிக்கையின் உள்ளடக்கம் கண்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் தோற்றுனராம் ஹெக்டவார், குருஜி கோல்வால்க்கர் தொட்டு இன்றைய மோகன் பகவத் வரை அனைவரும் ஒரே தொனியில்தான் பேசிவருகின்றனர். இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்ட சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் இக்கருத்தில் ஒற்றைக் கருத்துடையவையே.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு முந்தைய அமைப்பினரான (1916) வீர் சவார்க்கர் என்பவர்தாம் ‘இந்துத்துவா’ என்ற
சொல்லாடலை முதன் முதலில் கையாள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.-சின் உறுப்பினராக இருந்த கோட்சே, இந்து மகாசபையின் உறுப்பினராக இருந்தபோதுதான் காந்தியின் கொலைகாரனாக மாறுகிறார். காந்தியின் மீது நிகழ்த்தப்பட்ட வன்மத்திற்கான காரணம் என்ன என்பதை வரலாறு அறியும். காந்தியின் கொள்கைகள் இந்து இராஷ்டிர உருவாக்கத்திற்கு எதிரானது என்பதாலும், இசுலாமிய பகையை காந்தியின் பரிவாரங்கள் முன்னெடுக்காமையே காரணம் என்பதும் வெளிப்படை. ஆர். எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையும் ‘இந்தியர் யார்?’ என்று நிர்ணயம் செய்வதில் ஒத்தக் கருத்துடையவையே.
“அவர்கள் (இசுலாமியர்) இந்நாட்டில் பிறந்தவர் என்பதாலேயே அவர்கள் ஒற்றை இதயம் கொண்டவர்கள் என்ற கருத்தை ஏற்கமுடியாது. இந்து, இசுலாமியர் ஒற்றுமையை ஏற்பதைவிட நான் சாவதே சிறந்தது.”
“நாமனைவரும் இந்துகளே; இந்துகளாகிய நாம் அனைவரும் பொதுவான இரத்த உறவு (common
blood) கொண்டவர்கள். நாம் தட்சணத்தியாஸ், கௌட்ஸ் சராவத்ஸ், கின்னர்ஸ், வாணர் என்ற பிரிவுகளுள் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், நாம் அனைவரும் இந்துகளே. நம்முள் ஓடுவது பொதுவான இரத்தமே. நாம் ஒற்றைக் கொள்கையுடையவராய் (Monists) நம்பிக்கையற்ற
நாத்திகராய், பல்வகை இறைக்கொள்கையராய் இருக்கலாம். ஆனாலும் நாம் இந்துகளே.”
“இந்நாட்டைத் தாய்நாடாக ஏற்கும் அனைவரும் இந்நாட்டைத் தம் முன்னோர் வாழ்ந்த நாடாக (பித்ரு பூமி) புண்ணிய பூமியாகக் கருதுவார்களானால், அவர்களே இந்த நாட்டின் இயல்பான குடிமக்கள் (in
habitants) ஆவர். இப்புண்ணிய பூமி (கிறித்தவர்களின் பாலஸ்தீனம் போலவோ முசுலிம்களின் அரேபியா போன்றதோ அல்ல). கிறித்தவர்களும் யூதர்களும் இசுலாமியரும் இயல்பான (Original) தேசிய (Original) குடிகளல்லர்.
இந்தியா அடிப்படையில் ஓர் இந்து நாடு என்பதுதான் உண்மை.”
“இந்தியா எனும் தேசம் இந்துகளை மட்டுமே உள்ளடக்கியது” (Hindu Constitute this nation) – Janki Bakkhle ‘Savakkar
aud the making of Hinduva’ (மேற்கண்ட நூலில் தெரிவு செய்யப்பட்ட சவார்க்கரின் கருத்துகள்).
இன்றைய
மோகன் பகவத்தின் பிரிவினைவாதக் கருத்து புதியது அல்ல. சங்கப் பரிவாரங்களின் தொடக்கக் காலந்தொட்டு தொடர்ந்து கூறிவரும் வெறும் முழக்கமல்ல. இவ்வமைப்பின் அடிநாதமே இந்நாட்டை மதரீதியான, மதம் சார்ந்த நாடாக மாற்றுவது எனும் உண்மையை அறிய வேண்டுவதே இப்போதைய தேவை.
இந்தியா
விடுதலை பெறும் முன்பே இந்தியாவுக்கான அடையாளம் (idea
of India) எதுவாக
இருக்க வேண்டும் என்பதில் அன்றைய இந்தியத் தலைவர்கள் தெளிவாகவே இருந்தனர். உண்மை தேசியம் அல்லது உள்ளடங்கிய தேசியம் பேசியவர்கள், அப்போதே ஒற்றைத் தேசியம் அல்லது ஒதுக்கும் தேசியர்களின் தீவிர மதவாதம் பேசியோரின் எதிர்ப்பினைத் தீரத்தோடு எதிர்கொண்டு, பெரும்பான்மை மதவாதிகளின் எதிர்ப்பைச் சமாளித்து, இந்தியாவிற்கான புதிய அடையாளமாக, சனநாயகச் சமய சார்பற்ற அரசை நிறுவினர்.
இந்தியா
எனும் மண்ணிற்குப் பொருத்தமற்ற ஓர் அரசமைப்பை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்ற தேசியத் தலைவர்களைப் போற்றும் நாம், இந்தியாவிற்கென சனநாயகத்தை, சனநாயகம் எனும் விழுமியத்தை மெல்ல மெல்லக் கைநழுவி வருகிறோமோ என்ற அச்சம் குடிமக்களை வாட்டி வருவதையும், இன்று இந்து அல்லாதோருக்கு இந்தியாவில் இடம் இல்லை என்பதும், இந்தியர் என்ற உரிமை வேண்டுவோர் இந்துகளாகவே இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போக்கும் ஒரு பாசிசப் பண்பே.
ஹிட்லரின்
நாசிகள் இனப்பகை வளர்த்து, யூதர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலை நிகழ்வை நியாயப்படுத்திய கோல்வால்க்கரின் கருத்தியல் இன்றும் இந்தியாவில் சிறுபான்மையினரை ஒதுக்கி ஒடுக்கும் அரசியலில் நாளும் சாத்தியமாகி வருதலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய
சனநாயகம், சனநாயகப் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள சனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் ‘un
Hindu’ (இந்து
பண்பு இல்லாதது) என்று வர்ணிக்கப்பட்ட இந்துத்துவவாதிகள்தாம் இன்று நம்மை ஆட்சி செய்கின்றனர்.
இந்துத்துவ
உள்ளடக்கம் இந்தியர்களுக்கு எதிரானது; ஏன்... இந்துகளுக்கே எதிரானது என்பதையும் புரிந்துகொண்டால் நம் இந்துத்துவ எதிர்ப்பின் அகலம் விரியும்.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள ‘SIR’ (Special Intensive Revision) என்பது சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தம் அல்ல; இதன் தாக்கம், விளைவு, நோக்கம் ஆகிய மூன்றும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டியவையாகும். வழக்கமாகத் தேர்தல் ஆணையம் வருடந்தோறும் இறந்தவர்களை நீக்குதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், ஊரை விட்டு நீண்ட காலமாக இல்லாதவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற திருத்தங்களைச் செய்கிறது. ஆனால், இந்த முறை ‘SIR’ என்ற பெயரில் நடப்பது, பழைய வாக்காளர் பட்டியலைத் திருத்துவது அல்ல; அதை முற்றிலுமாக ஒழித்துப் புதிய பட்டியல் உருவாக்கும் செயல்முறை.
தமிழ்நாட்டின்
6 கோடி 36 இலட்சம் வாக்காளர்களும் இப்போதைய நிலையில் ‘இருப்பதாக’
இனி ஏற்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் பழைய பட்டியலைக் களையெடுத்து, குப்பைத்தொட்டியில் போட்ட நிலையிலேயே ஒவ்வொருவரும் புதிய கணக்கெடுப்புப் படிவத்தை (enumeration
form) நிரப்பிச் சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் அடையாளம் கிடைக்கும். அப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்,
வாக்குரிமை தானாகவே அழிகிறது. இவ்வளவுதான்! ஆனால், இதன் விளைவுகள் மிகப்பெரியது.
ஒரு
வாக்குச்சாவடிக்குள் உள்ள மக்கள் அனைவரும் அப்படிவத்தை நிரப்பவில்லை என்றால், அந்த முழு வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் இல்லை எனும் அபாயம் உருவாகிறது. அதனால், இது ‘திருத்தம்’
அல்ல; மொத்தமாக ‘நீக்கம்’ எனப் பலரும் உணரத்தொடங்கியுள்ளனர். இதன் நோக்கம் வாக்காளர்களைச் சரிபார்ப்பதா? அல்லது சிலரை விலக்குவதா? என்ற கேள்வி உருவாகிறது.
சந்தேகத்தை ஊட்டும்
விவரங்கள்
புதிய
கணக்கெடுப்புப் படிவத்தில் ஆச்சரியமூட்டும் அளவுக்குப் பெருமளவு விவரங்கள் கேட்கப்படுகின்றன. பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர் மட்டுமல்லாமல், தாய் மற்றும் வாக்காளர் அடையாள எண் வரையிலும் கேட்டுள்ளார்கள். மேலும், 2002-இல் நடந்த முந்தைய தீவிரத் திருத்தப் பட்டியலில் இருந்த உறவினர் பெயரும், அவருடன் உள்ள உறவு முறையும் தகவல் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த உறவினர் இறந்தவராக இருந்தால், இறப்புச் சான்றிதழ் சேர்க்க வேண்டிய நிலையும் உருவாகிறது. இப்படிவம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப்படும். அதிலும் QR குறியீடு
இருக்கும். அதனால் இதனை ஜெராக்ஸ் எடுத்து மாற்றிப் பயன்படுத்துதல் முடியாது. படிவத்தில் சிறிதளவு தவறு ஏற்பட்டால் அதைத் திருத்தும் வாய்ப்பு இருக்குமா? என்பதுகூடத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில், 2002-க்குப்பின் வாக்காளராகப் பதிவு செய்தவர்கள் தங்கள் வாக்குரிமையை நிரூபிக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய தீர்மானமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
நவம்பர்
4 முதல் டிசம்பர் 4 வரை வெறும் முப்பது நாள்களுக்குள் தமிழ்நாட்டின் 6 கோடி 36 இலட்சம் பேரிடம் புதிய படிவங்களை நிரப்பச் செய்து விடமுடியுமா? செயல் ரீதியாகச் சாத்தியமேயில்லை. இந்தச் சிறுகாலத்தில் குறைந்தது 1.5 கோடி மக்கள் வாக்குரிமையைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இழக்கக்கூடும். பின்னர் மேல்முறையீடு அல்லது விசாரணை மூலம் மீண்டும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
இத்தகைய
சூழ்நிலையில், இது ஒரு சாதாரண தேர்தல் தொழில்நுட்பப் பணியாகத் தெரியவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) விளைவாக இருந்த தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) போன்று,
இதுவும் மறைமுகமாகக் குடியுரிமையைச் சரிபார்க் கும் முயற்சியாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைய
தேர்தல் ஆணையம் பா.ச.க.
சார்ந்த அரசியல் அழுத்தத்திற்குள் இயங்குவதாகப் பலரும் பார்க்கின்றனர். அதனால், பா.ச.க.
அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்கிற மக்கள்தொகையை நீக்கவே அரசியல் நோக்கம் உள்ளதாகவும் ஒரு பரவலான எண்ணம் உருவாகியுள்ளது. அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்
கட்சிகளின் மௌன ஆதரவு இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
வாக்குரிமை
என்பது குடிமகனின் அடிப்படை உரிமை. எந்த மதம், சாதி, மொழி, பொருளாதார நிலை கொண்டவராக இருந்தாலும் வாக்குரிமையின் புனிதம் அனைவருக்கும் சமமானது. அந்த உரிமையைச் சுருக்கும் எந்தச் செயலும் சனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். SIR என்ற முறைமையில் பல கேள்விகள் எழுகின்றன.
வாக்காளர் பட்டியலை நீக்கி புதிய பதிவு செய்யும் பணியில் அவசரம், அச்சம், சந்தேகம் நிறைந்துள்ளன. ஒருவர் வாக்காளராக இருப்பதற்கு மீண்டும் ஆதாரம் அளிக்க வேண்டிய நிலை வந்தால், அது பொதுமக்களின் நம்பிக்கையையும் சனநாயகத்தின் அடித்தளத்தையும் நசுக்கும். வாக்குரிமை என்பது அரசின் கருணையால் வழங்கப்படும் பிரிவு அல்ல; அது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை. அதனைப் பாதுகாப்பது சனநாயகத்தின் உயிர்ச்சுவாசம்.
பாராளுமன்றம்,
நீதித்துறை, மக்கள் - மூன்றும் ஒருமித்த குரலில் இதனைச் சீராய்ந்து கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இதோ வந்துவிட்டது.