news
சிறப்புக்கட்டுரை
நேர்மை என்ற எரிபொருள் (வலையும் வாழ்வும் – 32)

நான் ஒரு சாதாரணமான ஆட்டோக்காரன் தான் சார். ஏதோ அன்றாடம் கிடைக்கிறத வைச்சி பிழைப்பு ஓடுது. பணம் சம்பாதிக்கணுமுனு ஆசைதான். அதுக்காக இப்படி திருடிதான் சம்பாதிக்கணுமுணு இல்ல சார். அதான் இந்தப் பணத்தை உங்க கிட்டயே கொடுத்துக்கிட்டு போலாமுணு வந்தேன்!”

தன் ஆட்டோவில் ஒருவர் மறந்து வைத்துச் சென்ற தோள்பையையும், அதனுள்ளே இருந்த ஒரு கட்டுப் பணத்தையும் போலீசிடம் ஒப்படைக்க வந்திருந்தான் கணேசன். காவல்துறையினர் கணேசனின் நன்னடத்தையை வெகுவாகப் பாராட்டி அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

ஆட்டோவில் வீடு திரும்பும்போது கணேசனின் மனம் கம்பளத்தில் பறப்பதுபோல இலகுவாக இருந்தது. ஏதோ பெரிய மனப்பாரம் குறைந்ததாகத் தோன்றியது. ஆட்டோ நேராகச் சென்றாலும், அவனுடைய மனம் காலை நடந்த நிகழ்வையே சுற்றி வந்துகொண்டிருந்தது.

அன்றைய நாள் காலைஊபர்செயலியில் கணேசனுக்கு முதல் சவாரி வந்தது. பயணியை அழைத்துச்செல்ல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்திருந்தான். ஐந்து நிமிடங்கள் ஆன பிறகும் பயணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. போன் போட்டுப் பார்க்கிறான். ‘இதோ இங்கு நிற்கிறேன், அங்கு நிற்கிறேன்என்று பதில் வருகிறதே தவிர, சரியான லொக்கேசனை கணேசனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சார்! உங்க லொக்கேசனைஎன்னேபிள்பண்ணுங்க. அப்போதான் நீங்க எங்க இருக்கீங்கனு எனக்குத் தெரியும்என்று போனில் ஒரு சிறு பிள்ளைக்குக் கூறுவதுபோல விளக்கமாகக் கூறிக்கொண்டிருக்கிறான்.

சில நிமிடப் போராட்டங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அந்தப் பயணி சென்னை எக்மோருக்குப் பதிலாக, பிக்-அப் லொக்கேசனை சென்னை சென்ட்ரலுக்குப் போட்டிருப்பது. மனத்திற்குள்ளேயே அந்தப் பயணியைத் திட்டிக்கொண்டு சென்னை எக்மோர் இரயில் நிலையத்திற்கு விரைந்தான் கணேசன்.

சர்ட் இன் செய்துகொண்டு கையில் ஒரு சூட்கேசும், தோளில் ஒரு பையும் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். முதல் முறையாக சென்னைக்கு வருவது போலிருந்தது அவருடைய செயல்பாடுகள். கணேசன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆள்வார்பேட்டை நோக்கிப் புறப்பட்டார்.

பயணத்தின் தொடக்கநிலையில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது கணேசன் அவரை முன்பாக இருந்த கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.

சார்! காலையிலேயே என்ன சுத்தவிட்டிட்டீங்களே! ஒரு ஐம்பது ரூபாய் போட்டுக்கொடுங்கஎன்று கணேசன் கேட்டவுடனேயே, புகை கக்கும் ஆட்டோ சைலன்சர் போலக் கோபத்தில் கத்தத் தொடங்கினார் அந்த மனிதர்.

ஆட்டோவ நிறுத்து. ஸ்டாப் ஆட்டோ! சே. யூ டாமிட்! ரைட் நவ்.”

கணேசனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. பந்தை எறிந்தால் பந்து திரும்பி வரும் என்று எதிர்பார்த்த கணேசன் அணுகுண்டு திரும்பி வந்ததை எதிர்பார்க்கவில்லை. ஆட்டோவைச் சாலையருகிலே நிறுத்தினார். ஆட்டோவை விட்டு இறங்கியவர் ஓய்ந்தபாடில்லை. கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டினார். “ வில் கால் போலீஸ்என்று ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தார். சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், சென்றுகொண்டிருந்தவர்கள் எனப் பலரும் அங்குக் கூடிவிட்டனர்

சார்! கொஞ்சம் பாத்து பேசுங்க. படிச்ச மனுசன் மாதிரி தெரியிறீங்க. ஒழுங்கா லொக்கேசன் கூட உங்களுக்குப் போடத் தெரியல. உங்க மேல தப்ப வைச்சிக்கிட்டு என்ன தப்பு சொல்லாதீங்கஎன்று கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார் கணேசன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று ஆட்டோவிலிருந்த தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் ஒன்றும் பேசாமல் வேகமாக நடந்தார் அந்த மனிதர்.

யோவ்! காசு கொடுத்துக்கிட்டுப் போயாஎன்று கூறிப்பார்த்தார் கணேசன். ஆனால், அந்த மனிதருக்கு அந்த நேரத்தில் காது கேட்கவில்லை. கோபத்தில் கொப்பளித்துக்கொண்டே தன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஸ்டாண்டுக்கு திரும்பினார் கணேசன்.

காலையிலேயே பஞ்சாயத்து ஆகிப்போச்சேஎன்று தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கையில், பின்னிருக்கையில் இருந்த அந்தத் தோள் பையை கணேசன் பார்த்தார். ஆத்திர அவசரத்தில் அந்த மனிதர் தோள் பையை விட்டுவிட்டுப் போயிருக்கக் கூடும். ஆட்டோவை ஓரமாக ஒதுக்கி, பைக்குள் என்னயிருக்கின்றது என்பதைப் பார்க்கின்றபோது, அங்குச் சில கோப்புகளும், ஒரு கட்டுப் பணமும் இருந்தன.

அந்த மனுசனைப் பழிவாங்க சரியான வாய்ப்பு. இந்தப் பணத்தை நாமே வைத்துக்கொள்ளலாம்என்றது ஒரு மனம். ‘திருப்பிக் கொடுத்துவிடலாம். அந்த மனுசனுக்கு அப்படி என்ன பிரச்சினையோ?’ என்றது மற்றொரு மனம்.

பல குழப்பங்கள், போராட்டங்களுக்குப் பிறகு போலிஸ் ஸ்டேசனில் திருப்பிக்கொடுத்து விடலாம் என முடிவுசெய்து போலிஸ் ஸ்டேசன் நோக்கிப் புறப்பட்டார் கணேசன். அவருடைய ஆட்டோவின் பின்னால்நேர்மைதான் எரிபொருள் - அதுதான் வாழ்க்கையை ஓட்டும்என்று எழுதப்பட்டிருந்தது.

பொய்யும் புரட்டும் போலியும் ஏமாற்றும் மலிந்துகிடக்கும் இணைய உலகில், ஒன்று குறைபடுவதாகப் பார்க்கிறேன். அதுதான் நேர்மை என்ற எரிபொருள். புலனம் (Wats-App) செயலியை இன்று உலக அளவில் 2.78 பில்லியனுக்கு அதிகமானோர் 180 நாடுகளில் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்குச் சராசரியாக 140 பில்லியன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். பேசுவதற்கு, குறுஞ்செய்தி அனுப்புவதற்கு, உணர்வுகளை எமோஜி வழியாகப் பகிர்ந்துகொள்வதற்கு, குரல் செய்தி அனுப்புவதற்கென்று பல தேவைகளுக்கு நாம் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சமீபகாலமாக, புலனம் கூட கொந்தர்களால் (Hackers) கொந்தப்படுகிறது (Hacking) என்பது அதிர்ச்சி தருகின்றது (கொஞ்சம் கணினித் தொடர்பான தமிழ் வார்த்தைகளையும் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாமே!).

1. சைபர் கிரிமினல்கள் லிங் ஒன்றை வாட்ஸ்-அப் குழுக்களில் அல்லது தனிநபருக்கு அனுப்பி அதனைக்கிளிக்செய்யச் சொல்கின்றனர். அனுப்பப்படுகின்ற மீத்தொடுப்பு (Hyberlink) பயனர்களால் சொடுக்கப்படுகிறப்போது (Click) நமது கணக்கு கொந்தப்படுகிறது. எனவே இத்தகைய ஏமாற்று மீத்தொடுப்புகளை (phishing) புறக்கணிப்பது நல்லது.

2. சைபர் கிரிமினல்கள் கால் அல்லது மெசேஜ் செய்து ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது உறுதிப்படுத்தல் குறியீட்டை (Verification code) சூழ்ச்சியால் கேட்டுப் பெற்றுக்கொண்டு நமது கணக்கைஹேக்செய்கின்றனர். எனவே, அத்தகைய ஏமாற்றுதல்களுக்கு இரையாகாமலிருப்பது நல்லது.

3. சில வேளைகளில் பெகாசஸ் (Pegasus) போன்ற உளவுச் செயலிகளைப் பயன்படுத்தி நமது கணக்கைகொந்தர்களால்ஹேக்செய்ய முடியும்.

4. கியூ.ஆர். குறியீட்டை (QR Code) வருடி (Scan), பிற மின்னணு சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றோம். ஆனால், அந்தக் கியூ.ஆர். குறியீடு நம்பகமானதா என்பதைச் சரிபார்க்கவேண்டும்.

5. வாட்ஸ்அப்பில்இரு-படி சரிபார்ப்பை (Two step verification) இயலுமைப்படுத்துவது (enabling) கொந்தர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.

மக்களை இத்தகைய புதிய அதிநவீன ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க தொழில்நுட்பத்துறையைச் சார்ந்தவர்களும் இந்திய அரசும் புதிய தொழில்நுட்பத்தையும் செயல்திட்டங்களையும் துரிதமாக முன்வைக்கவேண்டும். செயலிகளையும் இணையத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் மக்கள் மிகக் கவனத்தோடு அவற்றைக் கையாளவேண்டும்.

நேர்மைதான் எரிபொருள் - அதுதான் வாழ்க்கையை ஓட்டும்என்ற எண்ணம் இல்லாதவரை, இணையத் தாக்குதல்களும் கொந்துதல்களும் தொடர்ந்து நடைபெறும் என்றே நினைக்கிறேன்.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
திரையில் தேடும் தலைவர்கள்

தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வித்தியாசமான பாதையில் சென்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கு அரசியல் மையங்கள், கட்சித் தலைமைகள், மக்கள் இயக்கங்கள் எனப் பலவற்றுக்கு உயிர் கொடுத்தது திரை உலகம். அரசியல் தலைவர்கள் திரையில் தோன்றிய கதாபாத்திரங்கள் மூலமே மக்களின் இதயங்களில் நுழைந்தனர்.

இன்றுகூடதிரையில் தோன்றுபவர் நாளை தலைவராக வருவார்என்ற நம்பிக்கை பொதுமக்களின் மனத்தில் உறுதியான பிம்பமாக நிலைத்துள்ளது. இந்த நிலை உருவாகக் காரணம் என்ன? திரை மற்றும் அரசியல் இணைந்த நம் மாநிலத்தில் இது ஒரு சமூகப் பிம்பமாக மாறிவிட்டதா? இன்றைய இளம் தலைமுறையினர் இதை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்?

இந்திய விடுதலைக்குப் பின் தொடர்ந்த காலம் அரசியலின் பொற்காலம் என்று கூறலாம். அப்போது அரசியல் என்பது மக்கள் நலனுக்கான ஓர் அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துதல் எனும் எண்ணம் கொண்ட தலைவர்கள் மட்டுமே அரசியல் களத்தில் நுழைந்தனர். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களும் சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வுடன் அரசியலில் ஈடுபட்டனர். ஆனால், காலம் மாறியது. இன்று அரசியல் ஓர் அதிகாரப் போட்டி, ஒரு தனிநபர் நலப் பந்தயம், ஒரு புகழ் மேடையென  மாறிவிட்டது. அரசியலின் மையநோக்கம் - மக்கள் சேவை மறைந்து, அதிகார ஆசை முன்னிலை பெற்றுள்ளது. இதுவே அரசியலைச் சீரழிக்கும் முக்கியக் காரணம். இன்றைய அரசியல் சிந்தனைகள் இன, சாதி, மொழி எனப் பிரிக்கப்பட்டு, சமூக ஒற்றுமை சிதைந்த, பொருளாதார, சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்காகப் போராட வேண்டிய மாண்பை மறந்து, இன்று வாக்கு வங்கிகளைப் பிடிக்கும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

தமிழ்நாட்டில் அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. திரையுலகம் தலைவர்களை உருவாக்கிய தாயகம். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள் அனைவரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள். அவர்களின் திரைப்படங்கள் மக்களிடையே ஒருவித நம்பிக்கையையும் வெற்று வீரத்தையும் உருவாக்கின. ‘திரையில் நாயகன்; நிஜ வாழ்விலும் தலைவன்என்ற கற்பனை மக்களின் மனத்தில் வேரூன்றிவிட்டது. இன்றுகூட நம் இளம் தலைமுறை திரையுலக நாயகர்களையே தங்கள் அரசியல் மாதிரியாகக் காண்கிறது. சமூக நலனுக்கான சிந்தனைக்குப் பதிலாக, திரைப்படக் கவர்ச்சி மற்றும் புகழை அரசியலின் அடையாளமாகக் காண்கின்றனர். இது ஓர் ஆபத்தான மாற்றமாகும்.

இன்றைய இளம் தலைமுறை சமூக ஊடகங்களின் காலத்தில் வளர்கின்றவர்கள். அவர்கள் அரசியலைட்ரெண்ட்அல்லதுவிளையாட்டுபோல அணுகுகிறார்கள். தெளிவில்லா அரசியல் ஈடுபாடு ஒரு வெறும் ஆவேசம் மட்டுமே. தெளிவில்லாமல் சினிமா நட்சத்திரங்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்வது, சனநாயகத்தின் ஆழமான நோக்கத்தைச் சிதைக்கிறது. அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி; ஆனால், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நிலை ஆபத்தானது.

சினிமா என்பது கலை வடிவம்; அது நம் வாழ்க்கையின் கலவையான பிரதிபலிப்பு. ஆனால், அது நம் வாழ்வை நிர்ணயிக்கக்கூடாது. நாயகன் திரையில் தோன்றுவது கற்பனை உலகம்; ஆனால், நிஜ வாழ்வில் ஒரு நாயகன் உருவாக வேண்டுமெனில் கல்வி, நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவை அவசியம். அரசியல் தலைவர்கள் சினிமாவிலிருந்து வருவது தவறில்லை; ஆனால், அவர்கள் திரைப்படக் கவர்ச்சியைவிட, மக்களுக்கான அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே அது உண்மையான தலைமை எனலாம்.  

நம் சமூகம் அறிவார்ந்தது; ஆனால், தற்போது அது தவறான திசையில் செல்கிறது. ‘திரையில் தோன்றினாலே தலைவனாகத் தகுதி வந்துவிடும்என்ற எண்ணம் வேரூன்றும்போதே, உண்மையான அரசியல் நோக்கம் அழிகிறது. அரசியல் என்பது மக்கள் வாழ்வை உயர்த்தும் தளம்; சினிமா என்பது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தளம். இவை இரண்டும் இணையும்போது, ‘பொறுப்புள்ள கலைஞன்உருவாகலாம். ஆனால், பொறுப்பில்லாமல் இணையும்போது அதுமாயை அரசியல்ஆகிவிடும்.             

தற்போதைய இந்த நிலையை மாற்றுவது கல்வி மூலமே சாத்தியம். கல்வி என்பது மனிதனை அறிவார்ந்த குடிமகனாக மாற்றும் கருவி.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக நன்கு புரிய வைக்கவேண்டும்.

அரசியல் என்பது மக்கள் நலத்திற்கான பொறுப்பு என்பதை எடுத்துக்கூற வேண்டும்.

சினிமா என்பது கலைக்கான மேடை; அரசியல் என்பது சேவைக்கான மேடை என்பதை மாணவர்கள் பிரிந்துணர்ந்திட பயிற்சியளித்தல் வேண்டும்.

சிந்தனையுள்ள தலைமுறையே தூய்மையான அரசியல் களத்தில் நின்று போராடும் என்பதை அவர்களின் மனத்தில் மிக ஆழமாகப் பதிய வைத்தல்வேண்டும்.

ஆசிரியர்கள். மாணவர்களில் சமூக பொறுப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, சமூக நீதி பற்றிய புரிதல் ஆகியவற்றை வளர்க்கவேண்டிய நேரம் இது.

ஆகவே, இன்றைய இளம் தலைமுறை அரசியலை சிந்தனையுடன், விழிப்புணர்வுடன், பொறுப்புடன் அணுக வேண்டும். அதற்கு வழிகாட்டும் வெளிச்சம் கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் அறிவார்ந்த சமூகம்தான். அதுவே நாளைய அரசியலின் தரத்தை உயர்த்தும் அறிவார்ந்த தலைமுறையின் தொடக்கம் ஆகும்.

news
சிறப்புக்கட்டுரை
பிண அரசியல்

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் பார்த்து வியந்து உள்ளேன். சில அரசியல் தலைவர்கள் தம் தொகுதியில் நடக்கும் குழந்தையருக்குப் பெயர் வைத்தல், காதுகுத்து, கல்யாணம் என அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர். அவர்களுக்குக் கட்சி வேறுபாடு கிடையாது. இறப்பு வீடுகளில் கண்ணீர் விட்டு அழுததையும் பார்த்திருக்கிறேன்.

அவர்களின் ஒரே நோக்கம் அடுத்தத் தேர்தலில்  அவ்வீட்டு ஓட்டு தமக்கு என்பதாகும். இதைபிண அரசியல்என்று கூறுவதே சரியானதாகும்.

செப்டம்பர் 27, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் மரணமடைந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். அடுத்த நாள் (செப். 28) கரூர் சென்ற தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு  மற்றும் .வெ.. கட்சிமீது குற்றம் சுமத்தி சமநிலையில் பேசினார். அவர் அதில் மூச்சுக்கு முண்ணூறு முறை தான் தொலைக்காட்சியில் பார்த்துப் பேசுவதாகக் கூறினார். அவர் முதலமைச்சராக இருந்தபோதே தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் அறிந்த  அறிவாளி என மக்கள் ஏளனம் செய்தனர்.

செப்டம்பர் 30, நடிகை ஹேமமாலினி தலைமையிலான எட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கரூர் வருகிறது. மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்த மேதைகள் குழுநடிகருக்குப் பிரச்சாரம் செய்ய கொடுத்த இடம் குறுகலானது; முழு தவறும் தமிழ்நாடு அரசுமீதே உள்ளதுஎனக் கண்டறிந்தது. அக்குழுவினர் பேசிய ஒருமணி நேரத்திற்குள், “நான் வீட்டில்தான் இருக்கிறேன்; முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்என நடிகரிடமிருந்து வீடியோ பதிவு  வருகிறது. கூடவே தனக்கு இந்தத் துயரநேரத்தில் ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் நடிகர் தெரிவிக்கிறார்.

41 பேர் இறந்த இழவு வீட்டில், பா...வும், .தி.மு..வும் கூட்டணி என்ற துண்டைப் போடுகிறார்கள். இதைத்தான்பிண அரசியல்என்று கூறுகிறோம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்  நடிகரின் கட்சியை  விட்டுவிட்டு, தமிழ்நாடு அரசுதான் கரூர் சம்பவத்திற்குக் காரணம் என மறுநாள் முதல் உரக்கப்பேசுகிறார். .வெ.. சட்ட சபையில் இருந்தால் கூட இவ்வளவு பதற்றப்பட்டிருக்காது; அவ்வளவு பதற்றமும் கோபமும் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அக்டோபர் 9, ‘புரட்சித் தமிழரின்எழுச்சிப்  பயணம் திருச்செங்கோடு குமாரபாளையத்தில் நடக்கிறது. அக்கூட்டத்தில் .வெ.. கொடி பறக்கிறது. வாயெல்லாம் பல்லாக, முகம் மலர்ந்து, பெரும் மகிழ்வாய், “நமக்குக் கூட்டணிக்கு சமிச்ஞை கிடைத்தாயிற்று  என எடப்பாடி திருவாய் மலர்கிறார். இவரைவிட ஒருபடி மேலே சென்ற பா... கட்சியின் தேசிய மகளிர் பிரிவு தலைவர் வானதி சீனிவாசன், “எங்கள் கட்சியுடன் ஸ்ட்ராங்கான கட்சி கூட்டணிக்கு வரப்போகிறதுஎன முகம் மலர்ந்தார். இவர்களுக்கு ஒருபடி மேலே சென்ற எந்தப் பதவிகளும் இல்லாத தமிழிசை சௌந்தரராஜன், ‘நானும் உள்ளேன்பாணியில்கூட்டணிக்குப் பொதுவெளியில் அழைப்பு விடுவதில் தவறு ஒன்றுமில்லைஎன்றார்.

அடுத்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரிடம் பேசி துணை முதல்வர் பதவிக்கு நடிகரைச் சமாதானம் செய்ததாகத் தகவல் பரவுகிறது. பீகார் தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் பற்றிப் பேசலாம் என அமித்ஷா கூறியதாகவும் கூறப்பட்டது. இதைவிட காங்கிரஸ் கட்சியின் மறுபக்கமும் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. நடிகர் தன் வருமான வரி பிரச்சினை மற்றும் ஜெயலலிதா நெருக்கடிகளால் முன்பே காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, பிரதமர் மோடியைச் சந்தித்து ஆறுதல் பெற்றிருக்கிறார்.

கரூர் சம்பவங்கள் குறித்து முதல்வரிடம் பேசிய இராகுல் காந்தி அவரிடம்நான் நடிகரிடமும் பேசுகிறேன்எனக் கூறினார். நடிகரிடம் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு, “தைரியமாக இருங்கள்என நடிகரைத் தேற்றுகிறார். இதனிடையே பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுசாமியின் பேச்சுகள், தி.மு..- காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்துகிறது. கரூர் சம்பவங்களுக்குப் பிறகு நடிகருக்குமாஸ்கூடி விட்டதாக எண்ணிய காங்கிரஸ், “சாறு உங்களுக்கு, சக்கை எங்களுக்கா?” என மேனாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி மூலம் ஆட்டம் காட்டினர். எப்பொழுதும் தி.மு..வைத் திட்டும் மாணிக் தாகூர், கார்த்திக் சிதம்பரம் போன்றோரும் அதிகம் பேசினர். இராகுல் காந்தி நடிகரிடம் பேசி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு  நடிகர் கட்சி கூட்டணி என்ற தகவல் பரவியது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் காங்கிரஸ் பங்கு பெற்றுவிடும் எனப் பகல் கனவு கண்டனர்.

41 பேர் மரணமடைந்தும், 100 பேர் படுகாயமடைந்தும் நடிகருக்கு மக்கள் செல்வாக்கு கூடுகிறது எனத் தவறுதலாக அனுமானிக்கப்பட்டுப் பிண அரசியல் நடக்கிறது. கூட்டணி குறித்த பொய்கள் பரப்பப்படுகின்றன. 40 நாள்கள் மௌனம் காத்த நடிகர், மகாபலிபுரத்தில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடத்தி, கூட்டணி குறித்து முடிவுகளைத் தானே வைத்துக்கொள்கிறார். பிண அரசியலின் பலனைப் பிறருக்கு விடுவாரா? என்ன?

நவம்பர் 5-இல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய .வெ.. இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார் தெளிவாக, “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லைஎன எடப்பாடியின் கனவைப் போட்டு உடைத்தார். எடப்பாடி முட்டுச்சந்தில் நிற்கிறார். இருந்தாலும், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல, “என்றும் நாங்கள் .வெ..வுடன் கூட்டணி பேசவில்லைஎன்றார். ஆனால், நடிகர் கட்சித் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர், “நாங்கள் 40 சீட்டுகளுக்காகக் கட்சி ஆரம்பிக்கவில்லைஎன்றார். மேலும் ஆதவ், “.தி.மு.. தொண்டர்கள் .வெ..வுக்கு வந்துவிட்டதால் எங்களுக்கு .தி.மு..வுடன் கூட்டணி என்ற பேச்சே எழவில்லைஎன்றார். இதற்குப் பதிலடியாக .தி.மு..வின் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரமாயிரம் கோடிகளில் பணம் கேட்டுப் புதிதாக ஆரம்பித்த கட்சி பேரம்பேசியது என்று போட்டு உடைத்தார்.

எது எதுவாயினும், தேர்தல் வேட்பாளர் மனுத்தாக்கல் திரும்பப் பெறும் நாள்வரை கூட்டணிகள், அதற்கான பேரங்கள் பேசப்படலாம். 41 பேர் மரணத்திற்கு இன்றுவரை தார்மீகப் பொறுப்பு ஏற்காத பிண அரசியல் நடத்தும் புதிய கட்சியுடன், பிற கட்சிகளுக்கு ஏன் இந்தக் கூட்டணி மோகம் என்றால், பதவி ஆசை வெட்கம் அறியாது என்பதே பதிலாகும். புதிய கட்சியின் நடிகர் தமிழ்நாடு சிறுபான்மை மக்களின் வாக்குகளைஇந்தியாகூட்டணிக்கு விழுவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு என்றால், நாம் அவரை அடையாளம் காண்போம். நமது வாக்கு ஒன்றிணைந்த வலிமையை மீண்டும் நிரூபிப்போம். பிண அரசியலை  வீட்டிற்குள்ளேயே வைத்திருப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
கடவுளின் கைகளால் வரையப்பட்ட வரலாறு

நவதுறவகத்தில் நுழைந்தது எம் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. எம் பெயரைச் சொல்லி அழைத்த கடவுளின் பணிக்கு எம்மை முழுமையாக அர்ப்பணிக்க அளிக்கப்பட்ட கொடையாகும். இங்குதான் அவரின் முன்னிலையில் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினோம். பெரும் நிகழ்வுகளில் அல்ல; தினசரி வாழ்க்கையின் அமைதியான நிகழ்வுகளில் ஒவ்வொரு விடியலும் புதிய பாடங்களைக் கற்பிக்கிறது. தினசரி செபங்கள், வகுப்புகள், பன்முகத்திறன் வளர்ச்சிகள் மற்றும் சமூக வாழ்க்கை எமக்குக் கடவுளின் இதயத் துடிப்பைக் கேட்டு எம் இதயத்தை அவரைப் போல வடிவமைக்க உறுதுணையாக இருந்துள்ளன.

இந்த யூபிலி ஆண்டில் எமது சபையின் வரலாற்றின் அழகை நாங்கள் மேலும் தெளிவாக உணர்ந்தோம். நமது மூத்த அன்னையர்களின் தியாகம், எளிமையான வாழ்வு, உறுதியான இறைநம்பிக்கை, கடின உழைப்பு போன்ற வாழ்க்கைமுறை எம்முள் வியப்பையும், உற்சாகத்தையும் எழுப்புகின்றன. அவர்கள் நடந்த தடங்கள், காலத்தால் மங்கினாலும், நாங்கள் இன்று நடக்கும் பாதையை அடையாளப்படுத்துகின்றன. எமது பாதுகாவலரான புனித அலோசியஸ் கொன்சாகா, தூய்மையான இதயத்துடன் வாழவும் தன்னலமற்ற அன்புடன் சேவையாற்றவும்  எம்மை ஊக்குவிக்கிறார்.

பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்த சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ்வது, விட்டுக்கொடுப்பது, மன்னிப்பது ஆகியவற்றை இந்தக் கொன்சாகா சபை எமக்குக் கற்பித்தது. எங்களின் உருவாக்கப் பொறுப்பாளர்கள் தங்கள் மென்மையான  குணத்தாலும் ஞானத்தாலும், வழிநடத்தலாலும் எங்களை வளர்த்தும், கடவுளின் சித்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் உதவினர்.

ஒவ்வோர் ஆன்மிகப் பயணமும், ஒவ்வொரு திருப்பலி அனுபவமும், ஒவ்வொரு சிந்தனையும் எம் உடலையும் ஆன்மாவையும் மெதுவாக, கடவுளின் பணிக்குத் தயாராகிய ஒரு பாத்திரமாக வடிவமைத்தன. ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர், துன்புறுவோர் ஆகியோருக்குச் சேவை செய்வது எம் அழைப்பின் இதயத்துடிப்பாக மாறிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

எம் கொன்சாகா சபை இந்த 250-ஆம் ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் இந்த வேளையில், பல நூற்றாண்டுகளாக எரிந்துவரும் நம்பிக்கையின் தீப்பந்தத்தைத் தொடர்ந்து சுமக்க அழைக்கப்படுகிறோம் என்று ஆழமாக உணர்கிறோம். இந்த மகத்தான கதைப்பாகத்தின் சிறு பங்காக இருப்பதில் எமக்குப் பேரானந்தம். கடவுளின் கையால் எழுதப்பட்ட இந்த வரலாற்றில் எம் சிறு பங்களிப்பு. அவர்களின் பாரம்பரியம் எம் சுதந்திரம்; அவர்களின் தூய்மை  எம் ஊக்கம்; அவர்களின் பணியே எம் அழைப்பு!

இந்த யூபிலி ஆண்டில் நமது சபையின் சகோதரிகள் காட்டிய அதே திருப்பணித் தாகத்தை ஒவ்வோர் இதயத்திலும் மீண்டும் ஏற்றிடட்டும். நாமும், புதிய தலைமுறை சகோதரிகளும், புனித அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மையான வாழ்வையும் சபை நிறுவுநர் மிக்கேல் அன்சால்தோவின் கனவைத் தூய்மையுடனும் இரக்கத்துடனும் தைரியத்துடனும் வாழ்வாக்குவோம்.

ஆண்டவரே, உமது அன்பின் தாழ்மையான கருவியாக எம்மை மாற்ற அருள்தாரும்.

news
சிறப்புக்கட்டுரை
கொன்சாகாவின் தூய்மை நம்மை வழிநடத்தட்டும்!

ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை (சீராக் 11:4)

பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டின் யூபிலி விழாவைக் கொண்டாடும் இந்த மாபெரும் வேளையில், எம் கொன்சாகா பெருங்குடும்பத்தில் 50 ஆண்டுகளாக... அதாவது, அரை நூற்றாண்டுகளாக வாழக்கிடைத்த பேற்றினை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகூறுகிறேன்.

தாயின் கருவில் உருவாகும் முன்னரே முன்குறித்து, ‘அஞ்சாதே நான் என்றும் உன்னோடு இருப்பேன்என்று திடப்படுத்தி, ‘என் வல்லமையால் செயல்படுஎன்று கூறி, இன்றுவரை வாழவைத்த மாபெரும் கருணைக்கு இறைவா உமக்கு என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். இது ஒரு சாதாரண விழா அல்ல! இது நம் சபையின் புனித வரலாற்றைப் பெரும் மகிழ்ச்சியுடன், கடவுளைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தும் தருணமாகும். இந்த மாபெரும் யூபிலி நம் சபையின் நீண்ட நெடிய பயணத்தை நம் கண்முன் நிறுத்தி இறைவன்மீது கொண்ட மாறாத நம்பிக்கை, கடின உழைப்பு, பொறுமை, எளிமையான வாழ்வு, சேவை, அன்பு, தியாகம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் மாபெரும் வரலாறு ஆகும். கடந்த 250 ஆண்டுகளாகப் பல தலைமுறைகளை உருவாக்கி, பல சாதனைகளைப் படைத்து வெற்றி பாதையில் இன்று நாம் பயணிக்கிறோம். எம் முன்னோர் வாழ்வில் ஒளிர்ந்த இறைநம்பிக்கை, எனது வழியையும் ஒளிரச் செய்தது.

என்னுடைய பொன்விழா ஆண்டை இத்தனை பெருமைக்குரிய யூபிலியுடன் இணைத்து கொண்டாடுவதில், என் இதயம் நன்றியால் நிரம்புகிறது. இந்த ஐம்பது ஆண்டுகள் நான் அறிவு, ஆளுமை மற்றும் ஆன்மிகத்தில் வளரவும், சபை என்மீது முழு நம்பிக்கை வைத்து பல்வேறு பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தது. உண்மையுடனும் நேர்மையுடனும் உழைத்து கிறிஸ்துவுக்குச் சாட்சியாக சான்று பகர்ந்து வாழ்ந்திட ஒவ்வொரு நாளும் ஓர் ஆசிர்வாதமாகவும், ஒவ்வொரு சவாலும் ஒரு கற்றல் அனுபவமாகவும் இருந்தது.

இன்று பின்னோக்கிப் பார்த்து, கடவுளின் கரங்களால் எழுதப்பட்ட இந்த அருள்மிகு பயணத்திற்காக நன்றி செலுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தை நோக்கிப் பார்த்து, நம்பிக்கை, அன்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றோடு தொடர்ந்து வாழ்ந்து சேவை செய்திடவும், இந்த 250-ஆம் ஆண்டு யூபிலி நம் அனைவரையும் நம் தந்தை அன்சால்தோவின் கனவைத் தொடர்ந்து நிறைவேற்ற ஓர் உந்துசக்தியாக அமையட்டும்நம் புனித தந்தை அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மை நம்மை வழிநடத்தட்டும்; கடவுளின் அருள் நம் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் வாழ்விலும் தொடர்ந்து பெருகட்டும்; இடம் மாறி வந்தாலும் இலட்சியங்கள் தடம்மாறிப் போவதில்லை. நம்மை அழைத்தவருக்கு நம்பிக்கையோடு இருந்தால், அவர் அருள் நம் வாழ்வை வழிநடத்தும்.

news
சிறப்புக்கட்டுரை
எண்ணிமத் (Digital) தொழில்நுட்ப உலகில் அச்சு இதழியலின் சவால்களும் சாத்தியங்களும்! (நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் சிறப்புக் கட்டுரை)

இன்றைய சூழலில், பொதுவாக ஊடகத்துறையின் செயல்பாடுகள் வியப்பூட்டுகின்றன. நமது கிறித்தவ அச்சு ஊடகவியலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கண்டு பெரிதும் பூரிப்படைகிறேன். அவர்களின் கூர்மையான எழுத்துகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் உண்மைக்கான அச்சமற்ற அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கவை. உண்மை பெரும்பாலும் மறைக்கப்படும்- மறுக்கப்படும் காலத்தில், அவர்களின் சிறப்புக்குரிய பணிகள் நமது முன்னேற்றத்திற்கான பாதையை ஒளிரச் செய்கின்றன.

ஒரு பத்திரிகையாளரின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும் நமது தேசப் பிதா மகாத்மா காந்தி, “ஒரு பத்திரிகையாளரின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் நாட்டின் அன்றாடச் சூழல்களைப் படித்து, உறுதியான மனத்துடன்திட்டவட்டமான அச்சமற்ற வெளிப்பாட்டை வழங்கக்கூடியதாக இருக்கவேண்டும்என்று கூறினார். இக்காலத்தில் அதன் கூடுதல் பொறுப்பு என்பது, உண்மையின் குரலை உருவகப்படுத்தவும், குரலற்றவர்களின் குரல்களைப் பதிவுசெய்யவும், தளராத நேர்மை மற்றும் துணிவுடன் மனசாட்சியை வெளிப்படுத்தவும் அழைக்கப்பட்ட இன்றைய கிறித்தவப் பத்திரிகையாளர்களில் ஆழமாக எதிரொலிக்கிறது. அவர்கள் அரசியல் அழுத்தங்களின் கொந்தளிப்பான நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும்; தவறான புனைக்கதைகளை எதிர்க்க வேண்டும்; எதார்த்தத்தைச் சிதைக்க முயலும் மறைமுக நிகழ்வுகளுக்கும் செயல்திட்டங்களுக்கும் எதிராக உறுதியுடன் நிற்கவேண்டும்.

இந்திய அச்சு ஊடகத்துறை, எதிர்காலத்தின் முன்னோட்டமாக அதன் புனிதமான பணிக்கும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அதிகரித்துவரும் அச்சுறுத்துதலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் தன் இருத்தலை எண்பித்துக்கொண்டிருக்கிறது. நீதி மற்றும் உண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம், சக்திவாய்ந்த அரசியல் தாக்கங்களின் அழுத்தம் மற்றும் சுதந்திரமான வெளிப்பாட்டின் அரசியலமைப்பு உத்தரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றத்தை இது அன்றாடம் எதிர்கொள்கிறது. அச்சு ஊடகம் எதிர்கொள்ளும் சவால்கள் இதற்குமுன் ஒருபோதும் இவ்வளவு சிக்கலானதாகவும் பன்முனைத் தாக்குதல் கொண்டதாகவும் இருந்ததில்லை.

வளர்ந்து வரும் தளங்கள்

தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளின் இடைவிடாத வேகத்தால் உந்தப்பட்டு, ஊடகத்துறை பெரும் அதிர்வுக்குரிய மாற்றத்திற்கு இன்று உட்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் செய்தி பரவலின் அடிநாதமாக, மூலைக் கல்லாக விளங்கிய அச்சு ஊடகம், இன்று தொழில்நுட்பச் சமூக ஊடகங்களின் உடனடித்தன்மையுடன் போராடுகிறது. டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை ஒரு காலத்தில் அச்சு ஊடகத்தின் தொட்டுணரக்கூடிய பக்கங்களுக்கு விருப்பம் கொண்டிருந்த வாசகர்களின் எண்ணங்களை இன்று ஆழமாக மறுவடிவமைத்துள்ளன. இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் ஊடக நுகர்வில் பெரும் அசாதாரண எழுச்சி ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, இளையோர் இனி காலைச் செய்தித்தாளுக்காகக் காத்திருக்காமல், ‘ஆன்லைன்செய்திகளின் வேகமான நீரோட்டத்தில் பயணிக்கிறார்கள். இந்தகைய எண்ணிமத் தொழில்நுட்ப உலகில் அச்சு ஊடகங்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்க  முடியுமா? என்னும் அடிப்படைக் கேள்வியும் இங்கு எழுகிறது.

கிறித்தவப் பத்திரிகையாளர்கள் நவீனத் தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொண்டு, கால நீரோட்டத்துடன் தங்களைத் தகவமைத்துக்கொள்வதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும். திரு அவையின் நீடித்த பலம், அதன் சமூக ஒற்றுமையின் மரபில் உள்ளது. அதாவது, ஞானத்தைப் பகிர்ந்துகொள்வதிலும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்குவதிலும் கற்றுக்கொள்வதிலும் உறுதி கொண்டிருக்கிறது. மேலும், நாம் இயேசுவின் சீடர்களாக, ‘உலகின் ஒளியாக (மத் 5:14) வாழ அழைக்கப்படுகிறோம். “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் இறைவார்த்தையால் வழிநடத்தப்பட்டு, இந்தக் குழப்பமான காலங்களில் தெளிவுடனும் உன்னத நோக்கத்துடனும் பயணிக்க நாம் துணிவுடன் இருக்க வேண்டும்.

வளர்ந்து வரும் எதார்த்தங்கள்

இந்தியாவில் பத்திரிகையின் நெறிமுறைகள் முன்பில்லாத வேகத்தில் தற்போது மாறி வருகின்றன; கிறித்தவப் பத்திரிகையாளர்களை வலிமையான சவால்களுடன் அவை எதிர்கொள்கின்றன.

கேள்விக்குள்ளாகும் பத்திரிகைச் சுதந்திரம்: நுட்பமான அழுத்தங்கள், வளர்ந்து வரும் ஊடகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளால் பத்திரிகைச் சுதந்திரத்தின் புனிதத் தன்மை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்கள், அவர்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்  உண்மைக்குச் சான்று பகர்பவர்களிடையே அச்சத்தையும் நிலையற்றத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன.

பரபரப்பின் எழுச்சி: பரபரப்பான செய்தி, உண்மையற்றத் தரவுகளை (Fake News) வெளியிடுதல் மற்றும் புனையப்பட்ட கதைகள், உண்மையான அச்சுப் பத்திரிகையின் அளவிடப்பட்ட பரவலை விட, ஆபத்தான வேகத்தில் பரவுகின்றன. இந்தச் சிதைவு உண்மையான செய்தி வெளியிடுதலின் நம்பகத் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

வாசகர் எண்ணிக்கையில் மாற்றம்: எண்ணிமத் தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் AI-ஆல் இயக்கப்படும் செய்திகளின் ஆதிக்கம், விளிம்புநிலை மற்றும் படிப்பறிவற்றவர்களுக்குக் கூட அணுகக்கூடியது; இது அச்சு ஊடக வாசகர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது; இது பாரம்பரிய ஊடகங்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது.

சிறுபான்மையினரின் அடையாளங்கள்: கிறித்தவச் சமூகங்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் அடிக்கடி சிதைந்த சித்தரிப்புகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு ஆளாகின்றனர்; இது தவறான எண்ணத்தையும் உண்மைக்குப்  புறம்பான தகவல்களையும் தருகிறது.

கிறித்தவ வெளியீடுகளில் நிதி நெருக்கடி: சிறிய அளவிலான கிறித்தவ வெளியீடுகள், குறைந்துவரும் விளம்பர வருவாயுடன் போராடுகின்றன. மேலும்அவை வரையறுக்கப்பட்ட ஊழியர்கள், காலங்கடந்த பழைய  தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்புகளுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

வெளிப்புற அழுத்தங்கள்: கிறித்தவப் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் அரசியல்-சமூக அழுத்தங்களால் தங்கள் நம்பிக்கை, சிறுபான்மை உரிமைகள் அல்லது சமூக நீதி பற்றிய செய்திகளை மென்மையாக்குவதற்கான வெளிப்படையான சவால்களையும் ஆளும் அரசியல் கட்சிகளால்-பெரும்பான்மையினரால் எதிர்கொள்கின்றனர்; இது நேர்மையுடன் அறிக்கையிடுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைச் சோதிக்கிறது.

இத்தகைய  கடினமான எதிர்மறைச் சூழலில், கிறித்தவப் பத்திரிகையாளர்கள் அசைக்க முடியாத உண்மை, அச்சமற்ற நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அறிக்கையிடுவதற்கான புனிதமான கொள்கைகளைக்  கொண்டுள்ளனர். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியது போல, தவறான முன்னெண்ணம், வெறுப்பு ஆகியவற்றின் கட்டுகளிலிருந்து தகவல்தொடர்புகளை நாம் இன்று விடுவிக்கவேண்டும்; பிளவுபடுத்தும் சொல்லாட்சிகளைப் புறந்தள்ளுவதன் மூலம் இரக்கத்தில் வேரூன்றிய உரையாடலை நாம் வளர்க்க முடியும்; எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகில் உண்மையின் கலங்கரை விளக்கங்களாகவும் நல்லிணக்கத்தின் முகவர்களாகவும் இருக்கவேண்டும்

அச்சுப் பத்திரிகையின் நீடித்த பலங்கள்

எண்ணிமத் தொழில்நுட்ப ஊடகங்களின் அதி மிக வளர்ச்சியால்  ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், அச்சு ஊடகம் அதன் தனித்துவமான, ஈடு செய்ய முடியாத தாக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. கவனமாக எழுதப் பட்ட, திருத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட கட்டுரையின் நம்பகத்தன்மை, ஒரு சமூக ஊடக இடுகை / ‘டுவீட்களின் விரைவான தன்னிச்சையான தன்மையைவிட மிக உயர்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை உலகம் அறிந்துகொள்ளவேண்டும். உறுதியான பதிவுகளாகப் பாதுகாக்கப்படும் செய் தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், வரலாற்றின் ஒரு பகுதியாக மாறி, எதிர்காலச் சந்ததியினருக்கு இன்றைய காலத்தின் உண்மையின் தரவுகளைப் பதிவு செய்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே, அச்சுப் பத்திரிகையின் மரபை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்போம். எண்ணிம உலகத்தில் சவால்கள் இருந்தபோதிலும், இந்த முக்கியமான ஊடகத்தைப் பாதுகாத்து, அதைப் பின்தொடர்பவர்களுக்கு நேர்மையுடன் என்றும் வழங்க நாம் முற்படுவோம்.

மொழியாக்கம்அருள்முனைவர் செ. இராஜசேகரன்