news
சிறப்புக்கட்டுரை
அருள்சகோதரிகளின் மகத்தான வளர்ச்சி

புனித அலோசியஸ் கொன்சாகா சபை தொடங்கி 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அருள்சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இந்தத் துறவற சபை ஆல்போல் வளர்ந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வளப்படுத்த எனது செபங்கள்.

ஆன்மிகத் தெளிவும் பணியின் சான்றும்

இயேசு சபையினரால் தொடங்கப்பட்டாலும், சபை புனித அசிசியாரின் ஆன்மிகத்தை (எளிமை, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் நோக்கிய பணி) பின்பற்றுவது மிகச் சரியானதொரு முன்னறிவிப்பு. உங்களின் நற்செய்திப் பணி, நலவாழ்வுப் பணி, சமூக மாற்றுப்பணி மற்றும் கல்விப்பணி ஆகியவை பல ஆண்டு காலமாக விளிம்புநிலை மக்களை நோக்கியே அமைந்திருப்பதற்கு இதுவே சான்று. உங்களின் வாழும் வரலாறு எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இதை உறுதியாகக் கூறுகிறேன்.

மகத்தான வளர்ச்சிக்குக் கிடைத்த பதிலடி

ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட நீங்கள், இன்று உலகில் எட்டுத்திக்கும் சென்று, பல மொழிகளைக் கற்று, கடவுள் பணி  செய்கிறீர்கள். ஆங்கிலம் மட்டுமின்றி, இத்தாலிய மொழி, ஜெர்மனி மொழி, இந்தி எனப் பல மொழிகளில் தேர்ச்சி பெற்று, திரு அவைக்கும் சமூகத்திற்கும் இன்றியமையாத எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளீர்கள்.

உயர்கல்வி நிறுவனங்கள், இமயம் தொடும் கல்விச்சாலைகள் என இன்றைய இளைய சகோதரிகள் உருவாக்கி வருவது, உங்களைக் குறைவாக மதிப்பிட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் உரத்த பதிலடி.

இலட்சியப் பயணம் தொடர வேண்டும்

உங்கள் பயணம் இதோடு நின்றுவிடக் கூடாது. விளிம்புநிலை மக்களின் வாழ்வு, குறிப்பாக, மகளிரின் வாழ்வு உச்சங்களைத் தொட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களாக உயர்த்துங்கள்பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யுங்கள். மகளிருக்கான சிறப்பான நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கி, ‘நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்என்பதை நிரூபிக்க வேண்டும்.

உங்களை உளமார வாழ்த்துகின்றேன்... உங்களுக்காகத் தொடர்ந்து வேண்டுகின்றேன்!

news
சிறப்புக்கட்டுரை
வரலாற்றுச் சிறப்புமிக்க யூபிலி

பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் (FSAG) 250-வது யூபிலி விழா மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் உள்ளது.

இந்த எனது உரையில் சபையின் தோற்றம், நிறுவுநரின் அர்ப்பணிப்பு, இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் உள்ள ஆழமான உறவு மற்றும் ஏழை எளியோருக்காகச் சபையினர் ஆற்றும் பணி ஆகியவற்றை எடுத்துரைக்க விரும்புகிறேன். 250-வது யூபிலி விழா வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!

தலைமை அருள்சகோதரி மோ. தெரேசா ஞானமணி உள்பட அனைத்து அருள்சகோதரிகளுக்கும் மாநிலத் தலைவிகள், நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் யூபிலி விழா வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயேசு சபை துறவிகள் மற்றும் கொன்சாகா சபை (FSAG) உறவு இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் இடையேயான பிணைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு சபைக்கும், கொன்சாகா சபைக்கும் இடையே உள்ள உறவு தொப்புள் கொடி உறவாகும்.

கொன்சாகா சபையை நிறுவியவர் இளம் வயதில் இந்தியாவுக்கு வந்த ஓர் இயேசு சபை அருள்பணியாளரான இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ ஆவார். இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகத்தை அடித்தளமாகக் கொண்டு, ‘எதைச் செய்தாலும் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்என்ற உந்துதலுடன் சபையின் பணிகளைத் தொடங்கினார். இந்த இயேசு சபையின் வேகமும் துடிப்பும் இன்றும் கொன்சாகா சகோதரிகளிடம் நிலைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இயேசு சபையினரும் சகோதரிகளும் இணைந்து பணியாற்றும் இந்த உறவு எதிர்காலத்திலும் ஆழமாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அன்சால்தோ அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொன்சாகா சகோதரிகள் தங்களின் வாழ்வாக மாற்ற வேண்டும்.

1773-ஆம் ஆண்டில் இயேசு சபை தடை செய்யப்பட்ட போதும் தந்தை அவர்கள்  துவண்டு விடாமல் புதுச்சேரியில் ஆழமான ஆய்வு செய்து தனது ஆன்மிக வாழ்வை அடித்தளமாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் செயல்பட முடிவெடுத்தார். சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஓர் இல்லத்தை அமைத்து அவர்களுக்கான பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். சபை மற்றும் பிற ஆதரவுகள் இல்லாத சூழலிலும், கடவுளின் துணையையும் ஓர் இந்து நண்பரின் உதவியையும் மட்டுமே நம்பி கார்மேல் கான்வென்ட் கொன்சாகா இல்லம் மற்றும் போன் செக்கர்ஸ் இல்லம் ஆகியவற்றைத் தொடங்கினார். பெண்களுக்குக் கைத்தறிநெசவு போன்ற தொழில்களைக் கற்றுக்கொடுக்க நிறுவனங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.

36 வயதில் சபையை ஆரம்பித்து, 34 ஆண்டுகள் நம் தாய் மண்ணில் பணியாற்றி, 66 வயதில் காலமானது தந்தை அவர்களின் அயராத உழைப்பையும், இந்தியா மீதான அன்பையும் காட்டுகிறது.

கொன்சாகா சபையினர்ஏழைகளுக்கு நற்செய்திஎன்பது வெறும் வாக்கியத்தில் மட்டுமல்ல, ஏழைகளுக்கு இதயத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதக் கொள்கையைத் தங்கள் பணிகளில் செயல்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் ஒருமுறை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கொன்சாகா சகோதரிகளுக்கும், உடன் உழைப்பாளர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

news
சிறப்புக்கட்டுரை
மக்களைத் தேடிய நற்செய்தியாய்...

1775-இல் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் என்று இத்தாலி தேசத்தின் செசிலி தீவிலுள்ள மெசினாவின் அன்பு மகன் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட எம் சபை,… இன்றுபிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபைஎன்ற பெயரைத் தாங்கி, ‘கொன்சாகாஎன்ற பெருங்குடும்பமாய், இதில் உள்ள எல்லாரும் கொன்சாகாவின் புதல்வியராய் ஒருங்கிணைந்து பணிசெய்து வருகின்றோம்.

250-ஆம் ஆண்டினைத் தொட்டிருக்கும் எம் சபை, நன்றிப்பெருக்குடன் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகன்று வருகின்றது. இந்த 250-ஆண்டுகளில் எம் சகோதரிகளின் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, கடின உழைப்பு, இறை-மறை பக்தி, கறைபடியா எளிய உள்ளம், எளிய வாழ்வு, வளர்ச்சி இவற்றை எண்ணும்போது என் உள்ளம் பேருவகை கொள்கின்றது. இறைவனின் அபரிமிதமான பராமரிப்பை நினைக்கையில்நன்றி... நன்றிஎன்று மட்டும் என் நெஞ்சம் இறைவனை நோக்கிப் புகழ்ச்சிக் கீதம் இசைக்கின்றது.

எம் நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ எம் சபையை இப்புதுச்சேரி மண்ணில் தோற்றுவிப்பதற்கான அடிப்படைக் காரணமாய் அமைந்தது சமூகத்தின் பல்வேறு விதமான அடக்கு முறைகள், சாதிய வேறுபாடு, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பிரிவினைகள், ‘தாழ்த்தப்பட்டோர்தலித் மக்களைதீண்டத்தகாதோர்என முத்திரையிட்டு ஒதுக்கி வைத்தது. இளம் விதவைகள், பெண் குழந்தைகள் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட நிலை. பெண்களுக்குக் கல்வி மறுப்பு, பெண்கள் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளான நிலை, பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டு, தெருவோரங்களில் அபலைகளாய் திரிந்த நிலைஇந்த இழிநிலைகளைக் கண்ணுற்ற இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்ய தன் தாயகம் மறந்தார், தன் தாய் மொழி மறந்தார், தன் பண்பாடு மறந்தார்ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

தன் மனநிலையைக் கொண்டவர்களாய் தனது உள்ளுயிரை புனித அலோசியஸ் கொன்சாகாவைப் பாதுகாவலராக வைத்து புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் (இல்லம்) என்ற பெயரில் எம் சபையை உருவாக்கினார். அப்போது அவரோடு இணைந்து பணிசெய்ய விரும்பிய இளம்பெண்களைக் கொண்டு முகவரியற்றோரின் முகங்களாய் சுயநலம் விடுத்து வாழ, அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய் விடுதலைக் குரலாய் குரலெழுப்ப வீரப்பெண்களாக உருவாக்கினார். ஆரம்பம் முதலே இளம்பெண்களை, குழந்தைகளை  உருவாக்கும் உருவாக்குநராகச்  செயல்பட்டார். பாதிக்கப்பட்ட மகளிர், பெற்றோரை இழந்த குழந்தையர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மகளிர் என எல்லாருக்கும் வாழ்வு வழங்கும் கற்பக விருட்சமாய் தந்தை திகழ்ந்தார்.

எம் நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபை அவர் எமக்கு வகுத்தளித்த தனிவரத்தையோ, உள்ளுயிரையோ நீர்த்துப்போகச் செய்யவில்லை. மாறாக, கொன்சாகா சகோதரிகள் தங்கள் வாழ்வால், பேச்சால், மூச்சால், இருப்பால், பணியால் அதற்கு ஒவ்வொரு நாளும் உயிர் கொடுத்து வருகின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல; மாறாக, எம் சகோதரிகள் கல்லும் முள்ளும் நிறைந்திருந்த, வசதியற்ற, வாழ்வாதாரம் சொற்பமாகக் கிடைத்த இடங்களிலேயே பணிசெய்ய முன்வந்தனர். எங்கெல்லாம் போக்குவரத்து வசதியில்லையோ, மின்வசதி இல்லையோ, தண்ணீர் வசதி இல்லையோ, அடிப்படை வசதிகள் இல்லையோ... குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்குபுறமாய் வாழ்ந்த பகுதிகளில் அவர்களோடு அவர்களுக்காக அவர்களாகவே மாறிப்போய் வாழ்ந்தார்கள். அவர்களுக்காக தம்மைத் துறந்தார்கள், தம் சுகம் மறந்தார்கள், தம்முயிர் இழக்கவும் துணிந்தார்கள். அப்போதே எங்கள் பணி கண்டு, எங்கள் வாழ்வு கண்டு அரசு, கொன்சாகா அருள்சகோதரிகள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம் என்று அழைப்பு விடுத்தது. இதுவே எங்கள் பணிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.

இன்றைக்கு எங்கள் கொன்சாகா பெருங்குடும்பம் இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், வட மாநிலம் எனப் பல்வேறு இடங்களிலும், ஐரோப்பாவில் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் எனப் பல இடங்களில் தன் கிளைகளைப் பரப்பி எம் நிறுவுநர் தந்தையின் உள்ளுயிருக்கு உயிர்ப்பு அளித்து வருகின்றது.

திருத்தூதுப்பணியை அதன் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை உணர்ந்து செயல்படுத்திய நாங்கள் சமூகப்பணி, சமூக மாற்றப்பணி, நலவாழ்வுப்பணி, கல்விப்பணி என எங்கள் பணிகளை விரிவுபடுத்தி ஒடுக்கப்பட்டோர் சார்பாக, எளியோர் சார்பாக ஓரணியில் இணைந்து பணிசெய்து வருகிறோம்.

ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க அனுப்பப்பட்டுள்ளோம்என்பதை எம் சகோதரிகள் தங்களது தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றுகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.

இனிவரும் காலங்களிலும் முன்பிருந்ததுபோல் எம்மவரின் பணி இம்மண்ணில் தொடரும். வசதியின்மைகளையும் வலிகளையும் இழப்பையும் இகழ்ச்சிகளையும் அவமானத்தையும் அவமதிப்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இயேசு ஆண்டவரின் உண்மைத் தொண்டர்களாய் எம் நிறுவுநர் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எம் முன்னோர் வாழ்ந்து சென்ற பாதையில் ஆழமாய் எம் தடம் பதிப்போம்.

நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளிலும் இறை அன்பும் பிறரன்பும் இரு கண்களென ஒளிர்ந்திடச் செய்வோம். தியாகமிக்க அன்னையர் போல் தியாகம் செய்யத் துணிவோம்.

எங்கள் பணி எங்கு தேவையோ சிறப்பாக, பட்டி தொட்டிகளில், குக்கிராமங்களில் பணிசெய்ய வாய்ப்பு வரும்போது அதனைப் புறக்கணிக்காமல் அன்பாய் ஏற்றுச் செயல்படுவோம்.

250-ஆம் ஆண்டின் அற்புதமான கொண்டாட்டத்தில்புனிதத்தில் நிறைவைக் காணஎன்ற யூபிலி விழாத் தயாரிப்பு எங்களுக்குக் கொடுத்த உன்னதமான அழைப்பை ஏற்று, அதனை உணர்ந்து எங்கள் வாழ்வு, சொல், செயல், சிந்தனை எல்லாம் புனிதம் நோக்கியதாய் அமைய உறுதி ஏற்போம். அதனைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுவோம். மக்கள் எங்களைத் தேடி வரட்டும் என்றில்லாமல், மக்களைத் தேடியதே எங்கள் வாழ்வு என்பதை எங்கள் முன்னோர் போன்று உணர்ந்து, மக்களைத் தேடி நற்செய்தியாய் நாங்கள் இருந்து, மகிழ்வின் செய்தியை வழங்கி எம் கடமைகளைக் கருத்தாய் செய்வோம்.

2025-ஆம் ஆண்டு தாய்த் திரு அவைஎதிர்நோக்கின்  திருப்பயணிகள்என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. தாய்த் திரு அவையின் யூபிலி ஆண்டின் சிறப்பில் எம் கொன்சாகா சபையும் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவைச் சிறப்பிக்கின்றது என்பது இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெருங்கொடை. எனவே, இலக்கு மக்களோடு உள்ள எங்கள் பயணத்தில் எப்போதும் தடையிராது, தொடர்ந்து பணி செய்வோம். தடை வந்தாலும், இறைவன் துணை செய்வார். இதுவே எம்மவரின் நம்பிக்கை. நம்பிக்கை இழக்க மாட்டோம்; ஏனென்றால் கண்ணீரோடு விதை விதைப்பவர்கள் மகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்!

news
சிறப்புக்கட்டுரை
250 ஆண்டுகள்: தியாகத்தின் சிகரம்! பணியின் மைல்கள்!

அன்புநிறை சகோதரிகளுக்கும், பிரான்சிஸ்குவின் குடும்பத்தினருக்கும், விழாவில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த இனியதொரு நாள், நமது பிரான்சிஸ்கன் சகோதரிகள் 250 ஆண்டுகாலத் தன்னலமற்ற சேவைப் பணியை நிறைவுசெய்து, ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் யூபிலி நிகழ்வாக அமைவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நானும் ஒரு பிரான்சிஸ்கனாகக் கலந்துகொள்வது மிகுந்த பெருமையைத் தருகிறது. சபை அன்னை மோ. திரேசா ஞானமணி, மாநிலத் தலைவிகள் உள்பட அனைத்துக் குழுவினரின் அர்ப்பணிப்பும், அரும்பணியும் போற்றுதலுக்குரியவை. உங்களுடைய பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தியாக வாழ்வின் சுவடுகள் 250 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவு அல்ல. அது தொடர்ச்சியான தியாகத்தின் சிகரம். இது நமது சபையின் பணியானது ஒருபோதும் தொய்ந்துவிடக்கூடாது என்பதற்கான உத்வேகத்தை அளிக்கும் ஒரு பெரிய மைல்கல் ஆகும். பணியின் தொடக்கம் மட்டுமல்ல, எதிர்காலச் சிந்தனை என்ற இலக்கோடு இந்த விழா அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

ஏழைகளுக்கான நற்செய்திமறைவானவை வீட்டின் மேற்கூறையிலிருந்து அறிவிக்கப்படும்என்ற இறைவாக்குக்கு ஏற்ப, நீங்கள் மறைவாகச் செய்த பணி இன்று வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகிறது என்பதைக் காணும் போது மெய்சிலிர்க்கிறது. ‘Gospel To The Poor(ஏழைகளுக்கு நற்செய்தி) என்ற உன்னத நோக்கத்தை, நீங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறீர்கள். 1775 - இல் கொன்சாகா இல்லமாகத் தொடங்கி, 1886-இல்பிரான்சிஸ்கள் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் அலோசியஸ் கொன்சாகாஎன்ற பெயரில் திரு அவையின் வடிவம் பெற்றது, உங்கள் சபையின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. புனித அசிசியார் தன் போதனைகளால் அல்லாமல், எடுத்துக்காட்டான வாழ்வுமுறையால் பலரைப் பின்பற்றுமாறு செய்தார். அவர் காட்டிய வழியில், மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட சகோதரிகளாகிய நீங்கள், திருத்தந்தை லியோ XIV  கூறியதுபோல, “Poor church For The Poorஎன்ற இலக்குக்கேற்பpoor Gonzaga for the poorஆகச் சேவை செய்கிறீர்கள். கல்விப்பணி, சமூகப்பணி, சட்டப்பணிகள் என உங்கள் சேவையின் அனைத்துத் துறைகளிலும் நீங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க உளமார வாழ்த்துகிறேன். இறைப்பணி மென்மேலும் தொடரட்டும்! நற்செய்தி ஏழைகளைச் சென்றடையட்டும்! உங்கள் பணிக்கு இறைவன் எப்போதும் பரிசளிக்கட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
கடவுளால் தரப்பட்ட சபை கொன்சாகா

அனைத்தும் கடவுளாலேயே உண்டாயின. அனைத்தும் கடவுளுக்காகவே இருக்கின்றன. அந்தக் கடவுளுக்கே புகழும் மாட்சியும் உரித்தாகுக  (உரோ 11:36). இவ்வசனம் இப்போது மிகப் பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தலைமை அன்னை கூறியது போன்று 250 ஆண்டுகளுக்கு முன்பாக மடம் என்ற நிலையில் இருந்த ஓர் அமைப்பு இன்று பெரும் குடும்பமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட விருட்சத்தன்மை என்பது கடவுளால் மட்டுமல்லாமல், வேறு யாராலும் நமக்குக் கிடைத்திருக்காது. அலோசியஸ் கொன்சாகா சபை கடவுளால் தரப்பட்டது.

சத்தம் இல்லாமல் சாதனை புரிகின்ற அற்புதமான அருள்சகோதரிகளால் சபை இன்று வளர்ந்து நிற்கின்றது. கடவுளுக்கு மட்டுமே இந்தச் சபை பணிபுரிந்து கொண்டிருக்கிறது.

தொடக்க காலத்திலிருந்து இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. மைக்கேல் அன்சால்தோ என்ற இறை ஊழியர் மட்டுமல்ல, ஞானப்பிரகாசியார் என்ற பாதுகாவலர் மட்டுமல்ல, அன்று தொடங்கி இன்றுவரை உள்ள இயேசு சபையினர் எல்லாருக்கும் பங்களிப்பு புரிவதற்கான வாய்ப்பைக் கொன்சாகா சபை எங்களுக்குத் தந்திருக்கிறது.

நவதுறவு நிலை கல்லூரிகளிலும், இன்னும் பல துறைகளிலும் பொறுப்பேற்று இயேசு சபையினர் கொன்சாகா சபைக்கு உதவி புரிந்திருக்கின்றார்கள். ஆன்மிக ரீதியாக, சட்ட ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாகத் தெளிவுகளைத் தந்திருக்கின்றார்கள். இயேசு சபையினரோடு உறவினை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பினைக் கொன்சாகா சபை தந்திருக்கின்றது. எனவே, சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இயேசு சபை என்ன பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றதோ அந்தப் பணிகளிலும் கொன்சாகா சபை பங்காளிகளாக இருக்கின்றார்கள்.

1986-ஆம் ஆண்டில் வீதி நாடகம் வழியாக மக்களுக்குச் சமூக சேவை புரியும் நிலையில் நாங்கள் இருந்தபொழுது, சகோதரி அல்போன்சா அவர்கள் எங்களுடன் வந்து மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தார். கரிசல் என்ற பகுதியிலே துப்புரவு தொழிலைச் செய்கின்ற மக்களைக் கண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பணியில், பணியின் தோழர்களாகக் கொன்சாகா சபையினர் பணிபுரிந்து இருக்கின்றார்கள்.

பல துறைகளில் பண்டித்துவமும் தெளிவும் பெற்றிருந்தாலும், சத்தம் இல்லாமல் சாதனை புரிகின்ற சபையாகக் கொன்சாகா சபை இருக்கின்றது. இதைத்தான் சபையின் பெரும் வரமாக நாங்கள் பார்க்கின்றோம்.

ஏழையாகத் தாழ்ச்சி நிறைந்த இயேசுதாம் நம்மை ஏழைகள் வாழும் தெருக்களில் நடக்க வைக்கின்றார். ஏழ்மையும் தாழ்ச்சியுமான இயேசு நம் ஒவ்வொருவருக்கும் தூண்டுதலாக இருந்து நாம் பணியாற்ற உதவி செய்வாராக!

தாழ்ச்சியால் நிறைந்திருந்த இயேசு பல சகாப்தங்களைக் காண உங்களுக்கு அருள்புரிய வேண்டும். சகாப்தங்களைப் படைக்கின்ற காட்சிகளில் நாங்களும் உங்களுடைய சாட்சிகளாக இருப்போம். எனவே, இவ்வேளையிலே உங்களை வாழ்த்துகின்றோம்; உங்களுக்காகச் செபிக்கின்றோம்!

news
சிறப்புக்கட்டுரை
“கொன்சாகாவின் பணி தொடரட்டும்!”

நற்செய்தியின் இதயம் ஏழைகள்என்பது நம் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள்.

ஏழைகளை நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துவிட்டால் அது இதயமற்ற செய்திகளாகத்தான் இருக்கும்.

ஏழைகள் நற்செய்தியின் மையம் மட்டுமல்ல, ஆண்டவர் இயேசு கனவு கண்ட இறையாட்சி என்கிற இலட்சியச் சமுதாயத்தின் மையமாகவும் இருக்கின்றனர்.

விளிம்புகளில் இருக்கிறவர்கள் மையத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இறையாட்சி மலரும். விளிம்புகளில் இருக்கின்ற மக்களை மையத்திற்கு அழைத்து வருகின்ற பணியைப் பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகின்ற FSAG சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொன்சாகா சகோதரிகளின் தலைமை அன்னை அவர்களுக்கும் ஆலோசகர் சகோதரிகளுக்கும் மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுஉங்கள் பணி தொடரட்டும்; உங்களுடைய பணி திரு அவைக்கும் சமுதாயத்திற்கும் தேவை; ஆகவே, நீங்கள் சோர்வடையாமல் பணி செய்யுங்கள்என்று வாழ்த்துகின்றேன்.