news
சிறப்புக்கட்டுரை
வேர்களைத் தேடிய புனிதப் பயணத்தில்...!

எங்கள்கொன்சாகாபெருங்குடும்பம் இம்மண்ணில் இருநூறு ஆண்டுகளைக்  கடந்து, மூன்றாவது நூற்றாண்டை நோக்கி 250 ஆண்டுகள் உயிரோட்டம் உள்ளதாய்த் தொடர்ந்து பயணித்து, தன் இருப்பாலும் வாழ்வாலும் பணியாலும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கின்றது என்று எண்ணும் போதே, என் உள்ளம் எல்லாம் வல்ல இறைவனை நோக்கி இருகரம் குவிக்கின்றது, கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன, பேச்சற்று மெய்சிலிர்த்து நிற்கின்றேன்.

சீராக்கின் ஞானநூல் 17:21-இல் கூறுவது போல், “ஆண்டவர் நல்லவர்; அவர் தம்முடைய படைப்புகளை அறிவார்; அவற்றை அவர் அழித்துவிடவில்லை; மாறாக, அவற்றை அவர் பாதுகாத்தார்.” ஆம், இம்மண்ணில் 250 ஆண்டுகள் துறவற அர்ப்பணம் வழி கொன்சாகாவின் துறவிகளாய் நாங்கள் பணிசெய்ய எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பிற்காய் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள், திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள் (எசா 1:17) என்ற இறை வார்த்தைகளும்,  “ஏழையருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4:16-18) என்ற நற்செய்தியின் மறைவாக்குகளும் எம் நிறுவுநர் இறை ஊழியர்  மைக்கேல் அன்சால்தோவுக்கு வாழ்வூற்றாய் அமைந்தன போன்று, எம்மவர்க்கும் ஒளிவிளக்காய் அமைந்தன என்றால் அது மிகையில்லை.

தந்தை மைக்கேல் அன்சால்தோவிடம் கனன்று கொண்டிருந்த கனலின் நெருப்பினை ஒவ்வொரு கொன்சாகா சகோதரியும் பெற்று இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று பணிசெய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

கி.பி. 1771-இல் இந்தியாவின் புதுச்சேரி அரிக்கமேடு பகுதிக்குக் கடல் வழியாக இத்தாலியிலுள்ள செசிலி தீவிலுள்ள மெசினா நகரிலிருந்து வந்த இயேசு சபை அருள்பணியாளர் மைக்கேல் அன்சால்தோ, அன்று தன் அன்பான பணியால், இரக்கப் பார்வையால், கருணைமிக்க உள்ளத்தால்மைக்கேல் நாதர்என்றழைக்கப்பட் டார். கி.பி. 1775-இல் தந்தை அவர்கள் தனது முதல் பயணத்தில், முதல் பார்வையில், முதல் சவாலாய் உருவாக்கிய மடம்தான் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்.

தீண்டத்தகாதவர்என்று ஒரு சாராரைப் புறக்கணித்த சாதியப் பிளவுபிரெஞ்சுப் போரின் தாக்கத்தி னால் பெற்றோரை இழந்து திக்கற்றவர்களாய் அனாதைகளாக்கப்பட்ட குழந்தையர், கணவனை இழந்து தவித்த இளம் விதவை, கணவனால் கைவிடப்பட்ட திக்கற்ற மகளிர், தாழ்த்தப்பட்ட மகளிர் போன்றோர் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை, சுரண்டலுக்கு ஆளாகும் நிலை இருந்தது. இதுபோன்ற அடிமைத்தன அவலத்தைப் போக்க பாதிக்கப்பட்டவர்களோடு, புறக்கணிக்கப்பட்டவர்களோடு தோழமை கொண்டு, அவர்களின் மனிதம் காக்க உருவாக்கப்பட்டதுதான் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் - பேரன்பின் இல்லம். இன்று இது இறையருளாலும் பராமரிப்பாலும், எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவின் செபப் பரிந்துரையாலும், எமது முன்னோர்களின் தியாக வாழ்வாலும் பெரிய விருட்சமாய் வளர்ந்திருக்கிறது. திக்கற்றவர்களுக்கு அடைக்கலமாய், உறைவிடமாய் இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இயேசு சபை கலைக்கப்பட்ட போது இயேசு சபைக்கு மட்டும் இருண்ட காலம் அல்ல; இயேசு சபை கலைக்கப்பட்ட வேளையில் மறைப்பணியாளராக இந்தியா வந்து, தனது கொள்கையில் உறுதியாக நின்ற அருள்பணி. மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபைக்கும் அது இருண்ட காலமே. அதனால் எம் சபை அமைதியான, ஆடம்பரமில்லா ஒரு வரலாற்றை தன்னகத்தே கொண்டு, மறைக்கப்பட்ட உலகிற்குத் தெரியாத ஒரு சபையாக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. ஆனாலும், கைவிடப்பட்ட இயேசு சபை அருள்தந்தையாக இருந்தாலும், மாற்று வாய்ப்புகள் இருந்தாலும், சொந்த நாட்டிற்குச் செல்லாமல், தான் விரும்பி ஏற்ற மறைப்பணியைச் செய்வதிலேயே அதிமிகு ஆர்வம் கொண்டார். அதோடு நின்றுவிடாது மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்க வழக்கங்களை  வேரறுக்கவும், சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்டுகடைநிலையினர்என்று முத்திரை குத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவைப் புகட்டவும், மகளிரின் அடிமைத்தன விலங்கொடித்து, சுயமாய் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, சுயதொழில் செய்து முன்னேற அவர்களுக்கான நெசவுத் தொழிற்கூடங்களை உருவாக்கியும் எனப் பல்வேறு சமூக அக்கறையுள்ள பணிகளை ஈரமுள்ள நெஞ்சுரம் கொண்டவராய் செய்தார். தான் மட்டும் செய்யாமல், தன் அர்ப்பணிப்புப் பணியில் இயேசுவின் அடியொற்றி அர்ப்பணிப்புடன் தன்னலம் மறுத்து வாழ்ந்த ஆர்வமுள்ள மகளிரையும் இணைத்துக்கொண்டார். இவர்களைக் கொண்டு ஆதரவற்ற சிறார்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை குழந்தையருக்குக் கல்வி புகட்டினார். கைம்பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான மகளிருக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கினார்.

சுயமாகப் பொருள் ஈட்டும் வகையில் தொழிற் கல்வி அளித்து, சுயமரியாதையோடு வாழ வழி செய்தார். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போன்று, தந்தையோடு இணைந்து பணியாற்றிய சகோதரிகளுக்கும் ஆழ்ந்த இறைநம்பிக்கையும் சமூக அக்கறையும் ஒடுக்கப்பட்டோர்மீது பரிவிரக்கம் காட்டுவதும் இயல்பாகிப் போனது.

கி.பி. 1778 முதல் கி.பி. 1903 வரை 125 ஆண்டுகாலம் வரை 8 தலைமைத் தாயார் நியமனம் பெற்று, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த பிள்ளைகளை, இளம் சகோதரிகளைக் கொண்டு பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். சகோதரிகளுக்கென்று ஒழுங்குகளும், தினசரி செபிக்கும் செபங்களும், அவர்கள் அணிந்துகொள்ளும் உடைகள் குறிப்பிட்ட நிறங்களைக் கொண்டதாய் சீருடையாய் வடிவமைத்துத் தரப்பட்டன. 1858 முதல் துறவு உடை அணியத் தொடங்கினர். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையோடு இணைக்கப்பட்டதோடு, திருப்புகழ்மாலை செபிக்கவும் பழகிக் கொண்டனர். பல்வேறு அன்னையர்கள், சகோதரிகள் பாண்டி தவிர பிற இடங்களில் பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். பாண்டிச்சேரியில் பொதுப்பள்ளியில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 18.07.1886 முதல் திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் திரு அவை அங்கீகாரம் பெற்ற சபையாக வளர்ச்சி கண்டது. 1903 முதல் தேர்தல் வழி சபை தலைமைச் சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமைச் சகோதரி அன்னை கிளாரம்மாள்.

1903 முதல் 1964 வரை தேர்வு செய்யப்பட்ட தலைமைச் சகோதரிகள் கல்விப்பணி, மறைப்பணியோடு பல்வேறு அருள்பணிகளைத் தங்கள் பணிகளாக இணைத்துக் கொண்டனர். பல்வேறு இடங்களில் புதிய புதிய பணித்தளங்கள் உருவாயின. 1929-இல் மியான்மரில் பணி செய்ய சகோதரிகள் அனுப்பப்பட்டனர். சிறிது நிலங்கள் வாங்கப்பட்டன. குழந்தையர் பராமரிப்பைச் சீரிய முறையில் செய்ய பால்வாடிகள் தொடங்கி நடத்தப்பட்டன. செவிலியர் படிப்பு, தட்டச்சுப்படிப்பு  போன்றவை சகோதரிகளுக்கு உயர் படிப்பாக வழங்கப்பட்டன. தொடக்க நிலையிலிருந்து சகோதரிகள் சிறிது முன்னேற்றம் கண்டனர். ஆனால், சகோதரிகளிடமிருந்து இறைப்பக்தி, சமூக அக்கறை, ஒடுக்கப்பட்டோர்மீது காட்டிய பரிவிரக்கம் கொஞ்சமும் குறைவுபடவில்லை.

1899 முதல் 1922 வரை மூன்று முறை தலைமை அன்னையாய் விளங்கிய காணிக்கை மேரி, தவ வாழ்வின் மணிமகுடமாய் விளங்கினார். இரவு நேரங்களில் விழித்திருந்து செபித்தவர் இவர்.

1935-1958 வரை மூன்று முறை சபைத் தலைவியாய் உயர்த்தப்பட்ட அன்னை பெர்க்மான்ஸ் மேரி, நற்கருணையில் வாழ்வு உள்ளது என்பதை உணர்ந்து நற்கருணைப் பக்திக்கு அனைவரையும் உந்தித் தள்ளியவர் என்பது எம் சபைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

1959-1964 வரை சபைத்தலைவியாக இருந்து வழிகாட்டியவர் அன்னை ழாந்தார்க் மேரி. இவர்கள் ஒழுங்குகளை அனுசரிப்பதால் மட்டுமே உயர்வடைய முடியும் என்பதை எண்பித்துக் காட்டினார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எம் சபையிலும் பல்வேறு வளர்ச்சி நிலைகள், ஏற்றங்கள், உயரங்கள் எட்டப்பட்டன. மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று அழைக்கப்பட்டவர் அன்னை டென்னிஸ் மேரி. இவர் 1965-1976 வரை இரண்டு முறை சபைத்தலைவியாகத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். சமகாலத்தை உணர்ந்து, சபையின் வளங்களைக் கண்டறிந்து, செயல்திட்டம் தீட்டிசபையைச் சார்ந்த பணிகளைச் செழுமையாக்கினார்.

அன்னை பார்பரா மேரி அவர்கள் 1977-1982 வரை சபையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரலாற்றில் இடம்பெறச் செய்தார். தனித்து விடப்பட்ட பர்மா சகோதரிகள் மீண்டும் நம் தாய்ச் சபையோடு இணைக்கப்பட இணைப்புப் பாலமாய்ச் செயல்பட்டார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கிட 1978-இல் ஆந்திராவில் உள்ள இராப்பூரில் பணி செய்ய வாய்ப்பைப் பெற்று மனிதநேயத்தை வென்றெடுத்தார்

சிகரங்களை நோக்கி கொன்சாகா பெருங் குடும்பத்தைப் பயணிக்க வைத்தவர், 1983 - 1994 வரை சபையை வழிநடத்திய அன்னை நம்பிக்கை மேரி. சபையானது வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு, வட்டாரத் தலைவியர் ஓராண்டு நிர்ணயிக்கப்பட்டும், பிறகு தேர்தல் முறையிலும் தேர்வு செய்யப்பட்டு ஆளுகையில் உடன் பணியாளர்களாக மிளிர்ந்தார்கள். சகோதரிகளிடம் அளவு கடந்த அன்பும், இறை நம்பிக்கையில் ஆழமாய் வளர்த்தெடுக்க வேண்டுமென்ற தாய்க்குரிய பாசமும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் மிளிர்ந்தது. தவறு காணும் இடத்தில் கண்டித்துத் திருத்தும் தந்தையாகவும், மன்னிக்கும் இடத்தில் வானகத் தந்தையாகவும் செயல்பட்டு அனைவருக்கும் முன்மாதிரிகையாய் திகழ்ந்தார்.

சமூக சீர்திருத்தவாதியாய், சமூகத்தின்மீது அக்கறை கொள்வதே நம் நிறுவுநர் மைக்கேல் அன்சால்தோவின் உள்ளுயிர் என்பதை ஒவ்வொரு சகோதரியரும் உணரச் செய்தவர் 1995-2000 வரை சபையை நிர்வகித்த அன்னை L.C. மரியா. விளிம்பு நிலை மக்களை மையத்திற்கு அழைத்து வருவதே நம் பணி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். எம்மவர் உள்ளத்தில் சாதனையாளராய் எப்போதும் மிளிர்கின்றார். இவர் காலத்தில்தான் கொன்சாகா சபையின் புகழ் திருச்சபையெங்கும் பரவத் தொடங்கியது. ஏனென்றால், இவரது அயராத முயற்சியால் 1996 அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால்  எம் சபை திருத்தந்தையின் நேரடி ஆளுகைக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட்டது. இது திரு அவையால் எம் சபைக்குக் கிடைக்கப்பெற்ற  மாபெரும் அங்கீகாரம். இவரின் இந்தப் பணி எம் சபை உள்ளவரை மறக்கப்படாது. 1997-இல் வட்டாரங்கள் தன்னிறைவோடு கூடிய மாநிலங்களாய் உயர்ந்திட வழிகாட்டி நின்றார்.

எல்லாரும் நலம் பெற்றவராய், வளங்கள் பல சபைக்குரியதாய் மாற்றப்பட, சபை பல உயரங்களை எட்டிட வித்திட்டவர் 2000-2012 ஆண்டுகள் சபைத் தலைவியாக அரும்பணியாற்றிய அன்னை நோயல் ராணி அவர்கள். உயர் கல்வி அளிப்பதற்காக நிறுவுநரின் பெயரால் கல்வியியல் கல்லூரியையும், சபையின் பெயரால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் உருவாக்கி, சபையைப் பல உயர்ந்த சபைகளின் வரிசையில் நிலைநிற்கச் செய்தார். சபை அமைப்புச் சட்டம் மற்றும் வழிநூலைத் தொகுத்து, அதற்குரிய திரு அவை அங்கீகாரம் பெறச்செய்து அனைத்துச் சகோதரிகளும் துறவற அர்ப்பண வாழ்வில் ஆழம்பெறச் செய்தார். அசுர வளர்ச்சியைச் சபையும், சபை சகோதரிகளும் பெற்றிட வழி செய்தார். இவரின் காலத்தில் சபைக்கென்றுவாழ் வகம்என்ற நற்செய்திப் பணிமையம் உருவாக்கப்பட்டு, அதில் பல பொதுநிலையினர், சகோதரிகள் இன்றும்  பயிற்சிபெற்று வருவது திரு அவைக்காகப் பல நற்செய்திப் பணியாளர்களை உருவாக்குவது எம் சபைக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வரம்.

நமது பணிகளை இந்தியாவின் இதயமாம் தில்லியை நோக்கி, வட மாநிலங்களை நோக்கி நகரச் செய்தவர், 2012-2018 வரை சபையை வழி நடத்திய அன்னை மேரி ஸ்டெல்லா. வட மாநிலத்தில் நம் சிறகை விரித்துக் கிளை பரப்பிட அயராது உழைத்தார். சகோதரிகளைத் தன்னிறைவு கொண்டவர்களாய் உருவாக்கிட மேற்படிப்புப் படித்திட வழிகாட்டினார். தொழில்நுட்பங்களைச் சகோதரிகள் கற்றுத் தேர்ந்திட வாய்ப்பு வழங்கியதோடு, இசை குறுந்தகடுகளை உருவாக்கிட ஆர்வம் உடையவராய் அனைத்துச் சகோதரிகளையும் ஈடுபாடு உடையவராக்கினார். மேலும், சபைக்கென கொன்சாகா அனிமேஷன் மையத்தை உருவாக்கிய பெருமை இவரைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் 120 நபர்கள் இதில் தங்கிப் பயனடையும் ஒரு தளமாக இது இருப்பது கூடுதல் சிறப்பு

சபை நிறுவுநர் மைக்கேல் அன்சால்தோ புனிதராவதற்குத் தகுதி உடையவர். அவரது புனிதர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள தடையேதும் இல்லை என்பதை உலகறியச் செய்து, இறை  ஊழியர் மைக்கேல் அன்சால்தோ என எல்லாராலும் அழைக்கப்பட சிறப்பான முயற்சியைச் செய்தவர் 2018-2024 வரை சபைத் தலைவியாக இருந்து செயல்பட்ட அன்னை G. ராஜாமணி அவர்கள். வட மாநிலத்தைத் தனி வட்டாரமாக உயர்த்தியும், புனித வளனாரின் பெயரில் புதிய கல்லூரியை உதயம் பெறச் செய்தும், வளங்களை அதிகப்படுத்தியும் எனப் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி சரித்திரத்தில் கொன்சாகாவை இடம்பெறச் செய்தார். மேலும், நிறுவுநருக்காக மணிமண்டபம் அமைத்து, இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவின் வழி அனைவரும் இறைவனின் பதமலரைப் பற்றிக் கொள்ள வழிவகுத்தார்.

சபையின் 250 ஆண்டுகால அசுர வளர்ச்சியைப் பார்க்கையில், முகவரியற்றவர்களின் முகமாய் சகோதரிகள் மாறிப் போயிருக்கிறார்கள். சமூக அவலங்களைக் கண்டு சமரசம் செய்துகொள்ளாமல், சாட்டை எடுத்து எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவைப் பின்பற்றி, சமூகத்தின் சீர்கேடுகளைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களாய் உருமாறியிருக்கிறார்கள். மானுடத்தின் மாண்பு சிதைக்கப்படும்போதெல்லாம் மறு கிறிஸ்துவாய் தங்களை உருமாற்றி, மானுடத்தைத் தலைநிமிரச் செய்திருக்கிறார். புனித அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மையான வாழ்வையும் இறைநம்பிக்கையையும் தம்மிரு கண்களாகக் கொண்டு ஈரமுள்ள நெஞ்சம் கொண்டவர்களாய் இயேசுவின் பார்வை கொண்டு, எளியோரை உற்றுப்பார்த்துப் பணிவிடை செய்திருக்கிறார்கள்.

வானகத் தந்தையே தன் தந்தை, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் தன் சகோதரர், சகோதரிஎன நினைத்து, எல்லாவற்றையும் இழந்து நிர்வாணமாய் நடுத்தெருவில் நின்ற புனித பிரான்சிஸ் அசிசியைப் போன்று ஆடம்பரம் விடுத்து, அந்நியராய் யாரையும் எண்ணாமல், சாமானியர் போன்று சாமானியரோடு கைகோர்த்து எளிய வாழ்வே ஏற்றமிக்கது என்பதை ஏற்று யாரும் பணி செய்ய முடியாத இடங்களைத் தேர்வு செய்து, அங்கே அன்பு ஒன்றை மட்டும் ஆடையாக அணிந்து பணி செய்திருக்கிறார்கள்.

எம் மூத்த அன்னையரின், அவர்தம் புனிதம் நிறைந்த புண்ணிய வாழ்வை நினைத்துப் பார்க்கையில், அன்பும் அடக்கமும் அமைதியும் தவழ்ந்திட, ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத வாழ்வை      இலைமறை காய்போல் ஈரக்கசிவைக் கண்களில் பனிக்கச் செய்து, உண்மையை உரக்கப் பேசி, உள்ளதை எல்லார்க்கும் பகிர்ந்தளித்து, ஊனமில்லா இதயம் கொண்டு, எளிய மனம், எளிய பணி, எளிய வாழ்வு என்பதில் ஏக்கம் கொண்டுஇயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதே எங்களின் உன்னதப் பணி என்று எண்ணிஐயம் களைந்து ஒற்றுமையைத் தங்கள் பாடமாக்கி, ஒவ்வொரு பேச்சும், விடும் மூச்சும்  ஒடுக்கப்பட்டோருக்காய் அமைய வேண்டுமெனஓராயிரம் இடர்களை எதிர்கொண்ட போதும் இடிந்து போகாமல், தடைகள் வந்த போதும் தளர்ந்து போகாமல், அவமானங்கள் பல சந்தித்த போதும் உடைந்து போகாமல், சறுக்கல்கள் பல வந்த போதும் சஞ்சலம் கொள்ளாமல், சோகங்கள் வந்த போதும் வேதனை கொள்ளாமல், சோதனை வந்த போதும் சோம்பித் திரியாமல், நலிவுற்ற போதும் வேதனை கொள்ளாமல், நலிவுற்ற போதும் நடுங்கிப் போகாமல், நாணயத்தையும் நேர்மையையும் கடின உழைப்பையும், நிறுவுநரின் கனவையும் நெஞ்சுரமாக்கிக் கொண்டு எல்லாக் காலங்களிலும் நேரங்களிலும்  எம்மவரின் ஒவ்வோர் அசைவும், எம் பணிகளுக்கான இசைவும் நாங்கள் பயணிக்கும் திசையும் ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற்று வாழ என்பதைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, நிறுவுநரின் உள்ளுயிரை நனவாக்க  கனவு கண்டால் மட்டும் போதாதுநிறைவேற்றுவதில் எம்மவர்க்கு முழுப் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட உண்மைத் தொண்டராய்  வீறு கொண்டு  எழவேண்டும் என்பதை உணர்கின்றோம்.

சிறகு கிடைத்தவுடன் பறப்பதற்காக அல்லமாறாக, சிலுவை கிடைத்தவுடன் சுமப்பதுதான்  உண்மையான பணி வாழ்வு என்பதை உணர்ந்துஒருங்கிணைந்து செயல்பட ஒன்று கூடுகின்றோம். எம் அன்னையர், மூத்தவர், முன்னோர் போன்று சவால்கள் மேல் சவாரி செய்து சாதனை படைத்திடவும், சரித்திரத்தில் இடம்பிடித்து இன்னும் பல நூறு ஆண்டுகள் எம் சபை நிறுவுநரின் பாதையில் தீரமாய்ப் பயணித்திட உழைப்பை மட்டும் தானமாய் கொடுக்க இருக்கின்றோம்.

இவ்வீரக் காவியங்களில் துயரங்களையும் துக்கங்களையும் தூர எறிந்துவிட்டு, தொடரவிருக்கும் பயணத்தைச் சலிப்பின்றி-களைப்பின்றிக் கடப்பதற்கு, எம் அன்னையர்களின்  அனுபவப் பாடங்களை எங்களுடையதாய்  மாற்றிக் கொள்கின்றோம். தலை சாயும் நிலையே வந்தாலும் தன் மானத்தை ஒரு போதும் இழந்து போகாமல், தியாகத் தாய்களாய் கொன்சாகா பெருங்குடும்பத்தை 250 ஆண்டுகளைக் கடக்க உதவிய அன்னையரை ஒரு போதும் மறந்து போகாமல், நெஞ்சுரத்தின் ஆழத்தில் நிலைநிறுத்தி நெஞ்சுரம் பெறுகின்றோம்.

விடியல் தேடிய பயணத்தை வீறுகொண்டு தொடர்கின்றோம். வீண் பேச்சகற்றி விவிலிய பேச்சாக மட்டுமே எம் பேச்சை மாற்றிக்கொண்டுசுவாசிக்கும் மூச்சும் யாசிக்கும் கரங்களும் யோசிக்கும் மூளையும் எம் இலக்கு மக்களுக்குரியதாய் மட்டும் அமையும் என எம் முன்னோரின் வாழ்வை மாதிரியாக்கிஎங்களுடையதாய் உருமாற்றிக் கொள்கின்றோம்.

நாங்கள் தொடர இருக்கும் பயணம் எம் அன்னையர் தொட்டு விட்டப் பயணத்தின் தொடர்ச்சியே என்பதை மறந்து போகாமல், வலிகளை வலிந்து பற்றிக்கொண்டு வாழ்வு நெறிகளைக் கருத்தாய்ப் பின்பற்றி, சமூகத்தின் இழிநிலைகளுக்கு எங்களது வாழ்வால், பணியால், ஆன்மிக உறவால், பதிலிறுக்கத் தெடர்ந்து காலம் காட்டும் திசை நோக்கிப்  பறக்கத் தொடங்கியிருக்கின்றோம். தூரம் அதிகம் என்றாலும் பாரமாய் எண்ணாமல் சாரம் கொடுத்த இயேசுவையும்  இயேசுவைப் பின்பற்றிய எம் பாதுகாவலர் புனித அலோசியஸ் கொன்சாகா, புனித பிரான்சிஸ் அசிசி, எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு, மீட்பின் திட்டத்தில் பங்கெடுத்த அன்னை மரியா...  இவர்களின் வாழ்வின் அனைத்துப் புண்ணியங்களை, புண்ணிய முயற்சிகளை, தியாகங்களை எங்களுடையதாய் மாற்றிக்கொண்டு, புனிதத்தில் நிறைவு காண புதுப் பார்வையோடு, புதிய உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கின்றோம்.

இதோ இன்று முதல் எங்கள் பேச்சு, நாங்கள் விடும் மூச்சு, எங்கள் பணி இயேசுவின் உண்மை சீடத்திகளாய் மட்டுமே  எங்களை அடையாளப்படுத்தும். அதற்காய் எங்களை இழப்போம். எம் நிறுவுநரின் கனவினை நனவாக்க முன்னோரின் வழிகளில் எம் இலக்கு மக்களுக்காய் தொடர் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வோம். இதுவரை காத்தவர் இனியும் காப்பார், வழிநடத்துவார் என்பதே எங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நங்கூரத்தை  இதயத்தில் இறக்கி வைத்துள்ளோம். இறையாசிர் எங்கள் ஒவ்வொருவர் மீதும், எங்கள் சபை மீதும், நாங்கள் பணி செய்யும் மக்கள் மீதும், எங்களை வழிநடத்தி, ஆலோசனைகள் அளித்து வரும் திரு அவையின் ஒவ்வொரு தலைவர்கள் மேலும் என்றும் தங்கட்டும்.

காரிருளில் ஒளிக்கீற்றல் மின்னுவதுண்டு. முட்டும் சந்துகளில் முன்னேற்றத்திற்கான  புதிய பாதை தெரிவதுண்டு (கிடைப்பதுண்டு). முடிந்து விட்டது என்றெண்ணும்போதுவெற்றியின் புதிய தொடக்கங்கள் பிறப்பதுண்டு. அதற்கு உயிருள்ள சாட்சி எம் தாயாம் பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா. புனித லூயிஸ் தே கொன்சாகா மடமாய் மண்ணில் விழுந்த சிறிய விதை  பெரும் விருட்சமாய்க் கிளைப்பரப்பி எம் நிறுவுநரின், முன்னவரின், மூத்தோரின், அன்னையரின், அன்புப் பணிகளுக்குச் சாட்சி சொல்கிறது.

இதோ இன்று நாங்களும் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சி சொல்ல  வேர்களைத் தேடிய புனிதப் பயணத்தில் எங்களை இணைத்துக் கொண்டு, இன்னும் பல  பிரமாண்டங்களை, இறை விருப்பத்தில் பல அதிசயங்களைக் காண இறையோடு எம் கரம் சேர்த்துப் பலம் பெறுகின்றோம்.

வாழ்க எம் தாயாம் கொன்சாகா! எம்மவரின் இலக்கு மக்கள் பணியால் இறைவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!

news
சிறப்புக்கட்டுரை
தாழ்ச்சியும் திறமையும் கொண்டவர்கள்!

புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டமானது, FIHM, FBS மற்றும் FSAG ஆகிய மூன்று முக்கியச் சபைகளின் பிறப்பிடமாக விளங்கும் மகத்தான பெருமையையும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இன்று 250 ஆண்டு நன்றியுணர்வு யூபிலியைக் கொண்டாடும் FSAG சகோதரிகளுடன் இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதில் நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

கொன்சாகா இல்லத்தின் 250 ஆண்டு யூபிலி விழாக் கொண்டாட்டம், அநேகர் மனத்தில் பல கேள்விகளை எழுப்பியிருக்கலாம். ‘250 ஆண்டுகளா?’ என ஆச்சரியத்தையும் உருவாக்கி இருக்கலாம். ‘250 ஆண்டுகள் என்றால் என்ன?’ என்று சிலர் நினைக்கலாம். இவற்றைக் குறித்து ஐயமோ குழப்பமோ நமக்குத் தேவையில்லை. கொன்சாகா இல்லம் நிறுவப்பட்ட 250-வது ஆண்டு நிறைவைத்தான் கொண்டாடுகிறோம்.

இருப்பினும், நான் என்னை வரலாற்றுடன் மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பில்லை. வரலாறு  அனைவருக்கும் தெரியும். இந்தப் புனிதமான தருணத்தில்நான் இத்தாலியைச் சேர்ந்த இயேசு சபைக் குருவாகிய இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆசிக்கிறேன்.

1773-ஆம் ஆண்டு, இயேசு சபையினரின் பணிகள் திரு அவையால் நிறுத்தப்பட்டன. ஆனால், தந்தை மைக்கேல் அன்சால்தோவின் உள்ளுயிர் (spirit) ஒருபோதும் ஒடுக்கப்படவில்லை, அழிக்கப்படவில்லை. பெரும்பாலான இயேசு சபை உறுப்பினர்கள் வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது. அதனால் 1776-ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் தொடங்கிய கர்நாடக மறைப்பணியை MEP குருக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். ஆனாலும், அன்சால்தோவின் உள்ளுயிர் உயிரோடு இருந்தது. அவரின் இறையன்பு, பிறரன்பு, சேவை மனப்பான்மை, பிறருக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக அவருள் வாழ்ந்த ஆண்டவர் இயேசுவின் உள்ளுயிர்! அதாவது ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீதான அவரது முன்னுரிமை. அவருக்கு இருந்த அந்த உள்ளுயிரை எவராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை.

அவர் தனது பணியைச் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இல்லத்தை அமைத்ததன் வழியாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இது மிகவும் சிறப்பானதும், நாம் ஆழமாகப் போற்றவேண்டிய, நினைவுகூரத்தக்கதுமான செயலாகும். அதற்கு அவர், ‘கொன்சாகா இல்லம்என்று பெயரிட்டார். இதிலிருந்துதான் பிற்கால உத்வேகம் பிறந்தது.

கொன்சாகா சபை அதிகாரப்பூர்வமாகத் தாமதமாக நிறுவப்பட்டாலும், தொடக்கத்திலிருந்த உத்வேகமும் உள்ளுயிரும் தொடர்ந்து செயல்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வாறுதான் கொன்சாகா சகோதரிகள் சபை தோன்றியது. தொடக்க காலத்தில் தந்தை அன்சால்தோவிடம் இருந்த அந்த உத்வேகமும் உள்ளுயிரும் கொன்சாகா சகோதரிகள் வாழ்வில், பணியில் சற்றும் குறையாமல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருகிறது. இவர்களின் வாழ்விலும் பணியிலும் ஒரு மாபெரும் தொடர்பும் தொடர்ச்சியும் உள்ளன. இதனைத்தான் நான் இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.

நான் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பே கொன்சாகா சகோதரிகளை அறிந்திருந்தேன். முதன்முதலில் அவர்களை நவசாதனா பாஸ்டரல் மையத்தில் சந்தித்தேன். மூன்று சகோதரிகள் திருத்தூதுப்பணி ஆற்றுவதற்காக (pastoral centre) வந்திருந்தனர். அவர்கள் அங்கே மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.

சகோதரிகளின் பணி சிறப்பாக இருந்ததால், வட இந்திய ஆயர்கள் (என்னையும் சேர்த்து), “உங்கள் சபையின் பணிகளை எங்கள் மறைமாவட்டங்களிலும் தொடங்க முடியுமா?” எனக் கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர்கள் மிகவும் பணிவுடன், “எங்களுக்குப் போதுமான கைகள், கால்கள் இல்லைஎன்றனர். அதாவதுபோதுமான சகோதரிகள் இல்லைஎன்று கூறினர்.

அவர்களின் தாழ்மையும்  திறமையும் எனது மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இப்போது புதுச்சேரியில் பணியாற்றும்போது, அவர்களை இன்னும் நன்கு அறிந்துகொண்டேன்.

இன்று இறை ஊழியர் தந்தை மைக்கேல் அன்சால்தோவிடம் இருந்த அதே உள்ளுயிரைக் கொன்சாகா இல்லத்தின் வழியாக, கொன்சாகா சகோதரிகள் உறுதியாகப் பின்பற்றி வருகிறார்கள் என்பதை நான் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.

அவர்கள் தங்கள் பணியை ஒரே துறையிலேயே இல்லாமல் மருத்துவம், கல்வி, நற்செய்தி அறிவித்தல் (இயேசுவை அறிவித்தல்), சமூகப் பணி போன்ற பல துறைகளில் விரிவுபடுத்தியுள்ளனர். பாரம்பரியப் பணிகளிலும், அதற்கும் அப்பாற்பட்ட மாற்றுப் பணிகளிலும் முழுமனத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களிடம் நான் கண்ட எனது சொந்த அனுபவம்.

ஆகவே, இன்று தந்தை மைக்கேல் அன்சால்தோ அவர்களுக்கு இறைவன் அளித்த அந்த அருள்கொடைகளுக்காகவும், கொன்சாகா இல்லம் தொடங்க அவரைத் தூண்டிய உள்ளுயிருக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். அதே உள்ளுயிர் இன்று புனித அலோசியஸ் கொன்சாகாவின் பாதுகாப்பின்கீழ் இயங்கும் FSAG சகோதரிகளின் வாழ்வில் தொடர விரும்புகிறேன்.

இந்நன்னாளில், சபைத்தலைவி அருள்சகோதரி ஞானமணி அவர்களையும், அவர்தம் ஆலோசனைக் குழுவினரையும், அனைத்து மாநிலத் தலைவிகளையும், ஒவ்வொரு கொன்சாகா அருள்சகோதரிகளை யும், பயிற்சி பெறுவோர் உள்பட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் உரித்தாக்குகிறேன்.

250 ஆண்டுகள் நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நான் உங்களுக்கு ஓர் அறைகூவலை விடுக்க விரும்புகிறேன். தந்தை மைக்கேல் அன்சால்தோவிடம் இருந்த அந்த உள்ளுயிரையும், சபை தொடங்கிய போது இருந்த அந்தத் தொடக்ககால உள்ளுயிரையும் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். அதை உங்கள் வாழ்விலும் பணியிலும் முன்னெடுத்துச் சென்று அதனை இரு மடங்காகப் பெருக்குங்கள்

இறைவாக்கினர் எலிசா எவ்வாறு எலியாவின் உள்ளுயிரை இரு மடங்காகக் கேட்டாரோ அதே போல, கொன்சாகா சகோதரிகள் ஒவ்வொருவரும் இறை ஊழியர் மைக்கேல்  அன்சால்தோவிடம் இருந்த உள்ளுயிரை இரு மடங்காகக் கேட்க வேண்டும். அதே உள்ளுயிருடன் சமுதாயத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், சாதி மற்றும் பல தடைகளால் பிளவுண்டு கிடக்கும் மக்களுக்கும் நீங்கள் தொடந்து பணி செய்ய வேண்டும். அதுவே என் உளங்கனிந்த வேண்டுகோளும், என் இறைவேண்டலும் ஆகும். நீங்கள் நம் ஆண்டவரும் தலைவருமான இயேசு கிறிஸ்துவின் ஆவியிலும் வலிமையிலும் வளர்வீர்களாககடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக! இதயங்கனிந்த வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
வெப்பமயமாதலின் விளைவுகள் (உலகம் உன் கையில் – 13)

பூமியின் வெப்ப அதிகரிப்பினால் வெப்ப அனல் காற்று (heatwaves), அடிக்கடி வறட்சி (Drought), அதிகளவு மழை  (rainfall) மற்றும் சூறாவளிகள், சில உயிரினங்களின் உயிரிழப்பு என்பவை சில நேரடியான விளைவுகள். காற்றின் வேகம் அதிகரிப்பு, பூமியின் நிலப்பரப்பு அதிக வெப்பமடைவதால் தானாகவே காட்டுத்தீ (wildfires) உருவாவது, சில பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வறட்சி (drought) தொடர்ந்து நீடிப்பது மற்றும் உலகளவில் உணவு உற்பத்தி குறைதல், ஏழ்மை அதிகரிப்பு, இடம்பெயர்வு, உடல்நலம் பாதிப்பு என்பவைகளுக்கும் வெப்பமயமாதல் காரணமாயிருப்பதாக அறியப்படுகிறது.

நாம் வாழும் பூமி இயல்பாக காற்று, நிலம், நீர் என்று ஒன்றையொன்று சார்ந்துள்ளதுஇப்போது ஏற்பட்டுள்ள வெப்பமயமாதலால் வடதுருவப் பனிக்கட்டிகள், சில மலைகளின்மேல் படர்ந்துள்ள பனிக்கட்டிகள் அசாதாரணமான வெப்பத்தினால் உருக ஆரம்பத்திருப்பதும், காலந்தவறிப் பனிப் பொழிவு, கடல்மட்டம் உயர்வு என்பவை இயற்கைச் சூழலை (Ecological balance)அசைப்பதாகவும் அறியப்படுகிறது.

மற்றொரு செய்தி, தென்துருவத்தில் பனி அகன்ற இடங்களில் புல் காணப்படுவதாகவும், இது புதிராக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  1940-லிருந்து காலநிலை தரவுப் பதிவுகளின்படி (record of climate and weather data -ERA5) 2024-ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று அறியப்படுகிறது. இது வெப்ப அதிகரிப்பின் தொடர்ச்சியைக் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கூறுகிறார். காலநிலை விஞ்ஞானிகள் இவை, மனிதனால் உண்டான கழிவு வாயுக்கள் (anthropogenic green house gases) என்றும், இதன் விளைவுகளை அண்டார்டிகா போன்ற இடங்களிலும் காணமுடிகிறது என்றும் கூறுகின்றனர்.

..-யின் வளர்ச்சியும் வெப்பமயமாதலும்

ஜூன் 2024 மத்தியில் உலக .. நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட்டின் நிறுவுநர் பில்கேட்ஸ் பேசுகையில், “வெப்பமயமாதலைச் சமாளிக்க மாசில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தவும், அதிக விலையிலும் வாங்க எங்களைப் போன்ற .. பெரும் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனஎன்று கூறினார். உலகப் பெரிய நிறுவனங்கள், மாசில்லா மின்சக்தியைப் பெரியளவில் வாங்குவதில் முன்னிலையில் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால், இத்தகைய நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு ஏறுமுகத்திலிருக்கிறது என்பதை அந்நிறுவனங்களின் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கூகுள் நிறுவன கார்பன் வெளியேற்றம் 48% அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிரசித்திப்பெற்ற .. மாடல்களான ஓபன் AI-யின் Chat -GPT மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி தங்கள் chatbot கருவிகளுக்கு இன்னும் இவற்றைப் போன்ற பல நிறுவனங்கள் பயிற்சி அளிக்க தரவு மையங்களை நம்பியிருக்கின்றன. இத்தரவு மையங்கள் திறம்படச் செயலாற்ற மின்சாரம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

தரவு மையங்கள் மற்றும் அதனைச் சார்ந்த செர்வர்ஸ் (servers) தொடர்நிலையங்களின் மின் உபயோகம், சிப்ஸ் (chips) உற்பத்தியின் மின்சாரத் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக மின்சக்தி கழகம் தங்களுடைய ஆய்வில் உலகளவில் 2022- வைத்துப் பார்க்கும்போது தரவு மையங்களின் மின்தேவை 2026-இல் இரண்டு மடங்காகும் என்கிறது. அதாவது, ஜப்பானின் மின் தேவைக்குச் சமமாக (1000 TWHrs) இருக்குமென்றும், 2030-இல் தரவு மையங்களுக்கு மட்டும் உலகளவில் 4.5% மின்சாரம் தேவைப்படுமென்றும் கணிக்கப்படுகிறது

.. புரட்சியில், நீரின் தேவையும் சேர்ந்து கொள்கிறது. 2027-ஆம் ஆண்டில் நீரின் தேவை 6.6 பில்லியன் cubic metres இருக்குமென்றும், இது இங்கிலாந்து நாட்டின் வருடாந்திரத் தேவையில் மூன்றில் இரண்டு (2/3) பங்கு என்றும் கணிக்கப்படுகிறது.

.., பொழுதுபோக்குத் துறையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. கற்கும் இயந்திரம் (மெஷின் லர்னிங்-ஆடு) உதவியுடன் நடைமுறையிலிருக்கும் ஸ்மார்ட்போன், ஆட்டோ வாகனங்கள், பாதுகாப்புச் சாதனங்கள், ஓட்டுநரில்லா வண்டிகள் ஜி.பி.எஸ். (GPS) தொழில்நுட்பத்தைக் கொண்டே செயல்படுகின்றன. அல்கோரிதம் அடிப்படையில் செயல்படும் சமூக ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ..-யின் ஊடுருவல் உலகளவில் அதிகரித்து வருகிறது.

..-யின் பயன்பாடு முற்றிலும் மின்சாரத்தையே நம்பியிருக்கும் நிலையில், இத்தொழில்நுட்பத்தின் விளைவுகளையும் சமீபத்திய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

கணினி செயலாக்கம் மற்றும் நவீன .. மாடல்களை இயக்க, பயிற்சி அளிக்கத் தேவைப்படும் மின்சாரம், அதனால் வெளியாகும் கார்பன் வெளியேற்றம் என்பவை சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்கிறதென்று அறியப்படுகிறது. இதன் பாதிப்பு கார்பன் கட்டுப்பாட்டின் வரையறையைவிட அதிகமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

புவி வெப்பமாவதைத் தடுக்க .. உதவுகிறதா?

இன்று .. புதுமைப் படைப்பிற்கும், தொழில்துறைக்கும் உந்துசக்தியாக விளங்குகிறது. இத்தொழில்நுட்பம் நம் வாழ்வின் வழிமுறைகளில் ஒன்றிவிட்டதென்பதை நம் கடந்தகால அனுபவங்கள் கூறுகின்றன. இதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது மின்சாரம். ..-யின் வளர்ச்சியும் மின்சாரத்தின் தேவையும் ஒரே திசையில் இருப்பது, ‘இவை இரண்டும் புதிய நண்பர்களா?’ என்று தோன்றுகிறது. இன்றுள்ள மின்சார உற்பத்தி ஆதாரங்கள் பெரும்பாலும் உலக வெப்பமயமாதலுக்குக் காரணிகளாக உள்ளன என்ற அச்சம் உலகளவில் நிலவுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் மின்உற்பத்தி உருவெடுத்ததன் வரலாறு மூன்று கட்டங்களாகப் பார்க்கப்படுகிறது.

1970-2000 - பாரம்பரிய முறைகளுடன் மாசு இல்லாத மின் உற்பத்தி (Renewable Energy) இணைந்த காலம்.

2000-2020 - மின் உற்பத்திப் பிரிவில் தரவுத் தொழில்நுட்பம் மூலம் திறனை மேம்படுத்தி, மாசு இல்லாத மின்சக்தியை ஒன்றிணைத்துச் செயல்பட்ட இடைக்காலம்.

2020 - தானியங்கி (automation) தொழில்நுட்ப சகாப்தத்தின் ஆரம்பம்.

எரிசக்தி பயன்பாட்டின் இப்போதைய நிலை

ஓர் ஆய்வின்படி உலகளவில் எரிசக்தியின் பயன்பாட்டின் விகிதம் இவ்வாறு உள்ளது:

1. நிலத்தடி எரிபொருள்கள் - 81%

   (எரி எண்ணெய்+ நிலக்கரி+ எரிவாயு)

2. அணுசக்தி - 6%

3. நீர் மின்சாரம் - 2%

4. சூரிய ஒளி + காற்றாலை + பிற - 11%

இவ்வாய்வின்படி, எரிசக்தியின் பயன்பாட்டின் ஏற்றம் தொழில்புரட்சி மற்றும் மக்கள்பெருக்கம் போன்ற காரணங்களால் என்றும் எரி எண்ணெய் 1860-ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டாலும், 1940-ஆம் ஆண்டிலிருந்து அதிகளவில் உபயோகத்திலிருப்பது கார்பன் அதிகரிப்பிற்கு இது காரணமாக இருப்பதாகக் கூறுகிறது.

.. வெப்பமயமாதலைக் குறைக்கத் துணை நிற்குமா?

இந்நிலையில், உலகை எதிர்நோக்கியுள்ள வெப்பமயமாதல் என்ற பெரும் சவாலைச் சந்திக்க .. உதவிடும் என்றும் நம்பப்படுகிறது.

வெப்பமயமாதலால் என்றும் கண்டிராத இறப்பு, நோய், உணவுப் பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம் என்பவைகளை உலகம் இன்று எதிர்கொள்கிறது.

இயற்கையின் மாற்றம் பனிகட்டி உருகுதல், வெப்பமயமாதலின் வேகத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது. பனிக்கட்டி உருகும் இடங்களில் மனிதர் எளிதில் செல்ல முடியாமை ஒருபுறம்; அப்படியே செல்வதற்கும் காலநிலை ஒத்துழைக்க வேண்டியுள்ளது. இத்தகைய இடர்ப்பாடுகளினால், மனிதர் செல்ல முடியாத இடங்களைப் பற்றிய தகவல்கள், உண்மை நிலையை ..-யின் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் உதவியுடன் சில நிமிடங்களில் கண்டறியலாம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறுகிறது.

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகளவில் காடுகளின் அழிவு மற்றும் கார்பன் சேமிப்பு போன்றவற்றைக் கண்காணிக்க செயற்கைக்கோள் தரும் தரவுகளைக்கொண்டு உடனுக்குடன் அறிந்திடவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் .. உதவுகிறது. ‘ட்ரோன்தொழில்நுட்பத்துடன் இணைந்து காடுகளில் விதை தூவி, அதன்மூலம் காடுகளைப் பெருக்கவும் .. பயன்படுகிறது.

உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான விஷ வாயுக்களில் ஒன்றான மீத்தேனை உருவாக்குவது அன்றாடம் சேரும் கழிவுப்பொருள்கள். உலக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, மொத்த விஷ வாயுக்களில், இந்த வாயு மட்டும் 16% என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக் கழிவுகளை ஆராயவும், அதனை மறுசுழற்சி செய்யவும் .. தொழில்நுட்பம் உதவுகிறது.

வெப்பமயமாதலைத் தவிர்க்க நிலத்தைத் தூய்மையாக வைப்பது மட்டுமன்றி, கடலையும் சுத்தமாகக் காப்பது இன்றைய தேவையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. முன்பு வானூர்தி மூலம் இவை கண்காணிக்கப்பட்டு, இப்போது .. தொழில்நுட்பம் மூலம் துரிதமாகவும் திறன்படவும் செய்ய முடிகிறது.

அரசுகளுக்குக் காலநிலை முன்னறிவிப்பு - புயல், வெள்ளம், வணிக நிறுவனங்களுக்குக் கால நிலைத் தரவுகள் என்பது அவசியமாகிவிட்டது. இதன்மூலம் பெரிய இழப்புகளைத் தவிர்க்கவும், வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் செய்யவும் .. பெரிதும் உதவுகிறது.

உலகளவில் தொழிற்சாலைகள் மட்டும் 30% வெப்பமயமாதல் வாயுக்களை வெளிப்படுத்துகின்றன. இந்த அளவைக் கட்டுப்படுத்த குறிப்பாக, சுரங்கம், எரி எண்ணெய், எரிவாயு போன்ற கார்பன் அதிகம் வெளியாகும் பிரிவுகளுக்கு ..-யின் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இவ்வாறு .. அடிப்படையில் வெப்பமயமாதலைத் தவிர்ப்பதில் மறைமுக நண்பனாக விளங்குகிறது.

மற்றொரு பக்கம், உலகளாவிய வெப்பமயமாதலைத் தவிர்க்கும் முயற்சிக்குக் கொடுக்கும் விலை, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது விழாமல் பார்க்கவேண்டியதாயும் இருக்கிறது. ஏனென்றால், உலகின் பல பாகங்களில் நிலத்தடி எரிபொருளை நம்பி வாழும் ஏழ்மைச் சமுதாயத்தின் மக்களைக் குறைந்த விகிதத்தினர் என்று எண்ண முடியாது. ..-யின் பயன்பாடு இந்தப் பிரிவினரைப் பாதிக்காமலிருப்பதும் இன்றைய விஞ்ஞானத்தின் கடமை.

news
சிறப்புக்கட்டுரை
மது விலக்கு திரு அவையின் கடமை

அண்மையில் 20 கத்தோலிக்கக் குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் பெரும்பாலும் கட்டட வேலை, 100 நாள் வேலை மற்றும் விவசாயக் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் தினம் ரூ. 300 முதல் ரூ. 500 வரை சம்பாதிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் கல்வி, மருத்துவம், குடும்ப நிகழ்ச்சிகள், கிராமத் திருவிழாக்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்கி, மாதம் ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை திருப்பிச் செலுத்துகின்றனர்.

ஆண்கள் தினம் ரூ. 700 முதல் ரூ. 1,000 வரை சம்பாதித்தாலும், பெரும்பாலோர் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் ரூ. 150 முதல் ரூ. 200 வரை மதுவுக்குச் செலவிடுகின்றனர். மேலும், திருமணம், மரணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மதுவிற்குச் செலவாகிறது. இளைஞர்களும் வாரந்தோறும் மதுவை அருந்துவது வருத்தத்திற்குரியது.

தமிழகத்தில்டாஸ்மாக்கடைகள் மற்றும் கள்ளச்சாராயம் சமூக வாழ்வில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குடும்பப் பிளவுகள், மகளிர்-குழந்தையர் துயரங்கள், உடல் நலப் பிரச்சினைகள், இளம் வயது மரணங்கள், வறுமை, கடன்சுமை, வன்முறை ஆகியவை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறக் கத்தோலிக்க விழாக்கள் மற்றும் இறுதிச் சடங்குகளிலும் மதுவின் தவறான பயன்பாடு அதிகரித்துள்ளது.

பல கத்தோலிக்கச் சமூக சேவை மையங்கள் மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்புப் பணி செய்து வருகின்றன. அவர்களின் பணி பாராட்டத்தக்கது. இருந்தாலும், திரு அவையின் சமூகப் பொறுப்பாக மதுவிலக்குப் பிரச்சினையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது.

கத்தோலிக்கத் திரு அவை அரசியல் சார்புடையதல்ல; ஆனால், கடந்த காலங்களில் சமூக அவலங்களைக் கண்டித்தும், மக்களின் நலனுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தும் வந்துள்ளது. 2018-19-ஆம் ஆண்டுகளில் ஆயர் பேரவை இயற்கைவளச் சுரண்டல், விவசாயிகள் பிரச்சினைகள், ஸ்டெர்லைட், சாதிக்கொலைகள் போன்ற பல சமூகச் சிக்கல்களைத் தொடர்ந்து வலியுறுத்தியது.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயர் பேரவையின் அரசியல் வழிகாட்டல் ஆட்சி மாற்றத்திற்குப் பங்காற்றியது. அதன் பலனாக, தற்போதைய அரசு சிறுபான்மை நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், மதுக் கடைகள் குறைக்கப்படும், படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதி மட்டும் நிறைவேறவில்லை.

தமிழகத்தில் மதுவிலக்கு - மீள்பார்வை

1948: சென்னை மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது; 50 ஆண்டுகள் தொடர்ந்தது.

1981: எம்.ஜி.ஆர். அரசு மதுவிற்பனையை மீண்டும் அனுமதித்தது.

1983: டாஸ்மாக் நிறுவப்பட்டது.

1989: மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்திய கருணாநிதி அரசுக்குப் பின்னர் ஜெயலலிதா அதை இரத்து செய்தார்.

2003: சில்லறை விற்பனை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, டாஸ்மாக் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

இன்று, 4,829 டாஸ்மாக் சில்லறைக் கடைகள், 2,919 பார்கள் இயங்குகின்றன. அதன் வருவாய்...

2003-04: ரூ. 3,694 கோடி

2010-11: ரூ. 14,965 கோடி

2015-16: ரூ. 25,845 கோடி

2019-20: ரூ. 33,133 கோடி

2022-23: ரூ. 44,121 கோடி

2023-24: ரூ. 45,856 கோடி

2024-25: ரூ. 8,344 கோடி

இவ்வாறு வருவாய் அதிகரித்தாலும், அதனுடன் சமூகச் செலவுகளும் (மருத்துவம், கல்வி பாதிப்பு, குடும்ப நலன்) உயர்ந்து வருகின்றன.

அண்மைக்காலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்துள்ளன. 2023 ஜூன் - விழுப்புரம், செங்கல்பட்டு: 22 பேர் உயிரிழப்பு. 2024 ஜூன் - கள்ளக்குறிச்சி: 65 பேர் உயிரிழப்பு, 150 பேர் சிகிச்சைகடந்த ஐந்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை மதுவிலக்கின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

கணவன்-மனைவி தகராறு, குடும்ப வன்முறை, பெண்களின் உழைப்புப் பணம் மதுவுக்குச் செல்வது, இளம் விதவைகள், குழந்தைகளின் கல்வி பாதிப்பு, சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்புகர்ப்பிணி மகளிர் மற்றும் குழந்தையரின் உடல் நலப் பிரச்சினைகள் என சமூகம் சிதைந்து போகின்றது.

தமிழ்நாடு திரு அவை இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். முதல்வரிடம் பூரண மதுவிலக்கு தொடர்பான மனுவை நாம் வழங்கவேண்டும். ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள், மகளிர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் நடத்தவேண்டும். மது விடுதலை மையங்கள், கைம்பெண்-குழந்தையருக்குப் பொருளாதார ஆதரவை நாம் வழங்கவேண்டும்.

அடுத்தத் தேர்தலில் பூரண மதுவிலக்கு உறுதி செய்யும் அரசையே கத்தோலிக்க மக்கள் ஆதரிப்போம் என்று வெளிப்படையாக நாம் கூறவேண்டும்.

திருவிவிலியப் பார்வையில்

மது மனிதனைக் கேலி செய்கிறது; கள்ளம் இரக்கமற்றவன் (நீமொ 20:1). “உங்கள் உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் (1கொரி 6:19).  ஆகவே, மனித உடலும் குடும்பமும் மதுவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்; திரு அவை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “உண்மையை அறிந்தால் அது உங்களை விடுதலை செய்யும் (யோவா 8:32) என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமூக விடுதலைக்குப் போராடவேண்டும்.

மதுவிற்பனையும் கள்ளச்சாராயமும் வறுமையை அதிகரிக்கும் சமூகக் கொலைகள் ஆகும். தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில், பூரண மதுவிலக்குத் தவிர்க்க முடியாதது.

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவை, தன் வரலாற்றுச் சமூகப் பங்கினைப் போலவே, இன்றும் மதுவிலக்குப் பிரச்சினையை முன்னெடுத்து, மக்களின் உயிர், குடும்பநலம், எதிர்காலத் தலைமுறை பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே, நம் கிறித்தவச் சாட்சியம்; காலத்தின் அவசியமும் கூட.

news
சிறப்புக்கட்டுரை
மாய மான் ஒன்று! மண் குதிரைகள் பல்லாயிரம்!

தமிழ்ச் சமூக மரபுப்படி தனிநபர் வழிபாடு இல்லை.  இனக் குழுக்களின் மரபார்ந்த வழிபாடு இயற்கை வழிபாடாகும். மனிதன் எதையெதைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையோ  அதை வழிபட்டான். சூரியன், சந்திரன், காற்று, நீர், நிலம் என்பதைப்பஞ்சபூதம்என்றான். நதிக்கரை நாகரிகத்தின் படிநிலையாக விவசாயம், இரும்பை உருக்குதல், வளைத்தல், இரும்புப் பொருள்கள் செய்தல் எனத் தொழில் சார்ந்த சமூகக் குழுக்கள் உருவாகின.

மனிதன், தான் கண்ட புதியவைகளில் வியந்தான். அதில் ஒரு பகுதியாக, தன்னிடம் இல்லாத  சிறந்த திறன் கொண்ட மனிதர்களைப் போற்றினான். குழு தலைவன், அரசன் என ஆராதித்தான். இதனால் தனிநபர் வழிபாடு உருவானது.

தமிழ்நாடு அரசியலையும், திரைத் துறையையும் பிரித்துப் பார்க்க இயலாது. 1953-இல் தி.மு..-வின் அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். 1969 வரை தி.மு..வில்  நின்றார். தன் திரைப்பாடல்களில், வசனங்களில், காட்சிகளில் தி.மு.. கொடியைக் காட்டுவது, உதயசூரியன் சின்னம் வைப்பதுமாக இரசிகர்களின் திரை மோகத்தை, தி.மு..வுக்கு மடை மாற்றினார். தன் இரசிகர்களை அரசியல்மயமாக்கினர் அண்ணா, கருணாநிதி, முரசொலி மாறன் உட்பட்ட திரைக் கதாசிரியர்கள். எம்.ஜி.ஆரின் திரைக் கவர்ச்சியைத் தி.மு..வுக்காக மிகச் சரியாகப் பயன்படுத்தினர். எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.. கட்சிப் பொருளாளராகவும் உயர்ந்தார். தன் சினிமா பிம்பத்தை இரசிகர் மன்றங்கள் வழி ஒருங்கிணைத்தார். வள்ளல் தன்மை என்ற புகழிற்காகத் தன் பெரும் வருவாயைக் கரைத்தார்.

அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுக்கும் ஏற்பட்ட தன் முனைப்பால் (ஈகோ) எம்.ஜி.ஆர். அவர்களைத் தி.மு..வில் இருந்து நீக்கும் முடிவு வந்தது. எம்.ஜி.ஆர். - கலைஞர் எதிர்ப்பு, தி.மு.. எதிர்ப்பு என்ற அடிப்படையில் .தி.மு.. என்ற கட்சியை ஆரம்பித்தார். இன்றுவரை .தி.மு.. அதே நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது.

எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் பொதுக் கூட்டங்களில் பேசி பொதுமக்களைச் சந்திக்கிறார். ஊடக வெளிச்சம் இல்லாத அக்காலத்தில்பெரிய பொட்டல் காடுகளைத்  தூய்மை செய்து பொதுக்கூட்டங்கள் நடந்தன. திருப்பூரில் அப்படிப் பொதுக் கூட்டம் நடந்த இடத்திற்குஎம்.ஜி.ஆர். காடு என இன்றுவரை அழைக்கப்படுகிறது. இதன் நீட்சியாக வி.ஆர். ஜானகி, ஜெ. ஜெயலலிதா எனத் தொடர்ந்தது. தி.மு..வும் தன் பங்கிற்கு மு.. முத்து, மு.. ஸ்டாலின், உதயநிதி எனத் தன் குடும்ப நபர்களைத் திரைத் துறையில் இறக்கியது; அது தோல்வியில் முடிந்தது என்பதே சரியானதாகும்.

காலச்சக்கரம் சுழல்கிறது. தனது நான்கு திரைப்படங்கள் நன்கு ஓடிய பின், அடுத்ததமிழ்நாட்டு முதல்வர் நான்எனத் தமிழ்த் திரைக் கதாநாயகன் கற்பனைக் கோட்டை கட்டுகிறார். தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத தேசியக் கட்சிகள் பின்புலமாக நிற்கிறார்கள். ஊடகம் மற்றும் மின்னணு காலத்தில் மக்களைக் கவர அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வியூக வகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆலோசனை கூறுகிறார்கள்.

அவ்வாறே, ஒரு நடிகரும் கட்சி ஆரம்பித்தார். அவர் தன் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஒரு வியூக வகுப்பாளரை வைத்தார். உடை முதல் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். அவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வியூக வகுப்பாளரிடம் பல விசயங்களைப் படி எடுத்தார். முழு காபி அடித்தார்.

திராவிடம், தமிழ் தேசியம் இரண்டிலும் கட்- பேஸ்ட் செய்து கட்சிக்கொள்கை, கொள்கைத் தலைவர், அரசியல் எதிரி, கொள்கை எதிரி என முழங்கத் தொடங்கினார்.

அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளை நிகழ்வு மேலாண்மை முறையில் சடங்காக நடத்தினர். தலைவர் வெளியே வராமல், தலைவரின் அலுவலகத்தில் அனைத்தும் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்களும் அங்கே அழைத்துச் செல்லப்பட்டு, தலைவரின் தரிசனம் தரப்பட்டது.

தலைவரின் உரைகள் வெளி ஆதார முறையில் (அவுட் சோர்சிங்) பெறப்பட்டது. தலைவர் உரையை ஏற்ற-இறக்கங்களுடன் பேசப் பயிற்சி, மனப்பாடப் பயிற்சி நடந்தது. அவரது பேச்சு தின மலரின் திண்ணைப் பிரச்சாரமாக, பொத்தாம் பொதுவில் இருந்தது; வாரிசு அரசியல், ஊழல், சட்டம்-ஒழுங்கு சரி இல்லை, போதைப்பழக்கம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற எல்லைக்குள் அடங்கியது. கடைசியில், மூன்று நிமிடப் பேச்சிற்கே தள்ளாட வேண்டிய நிலை நடிகருக்கு வந்தது. அவரது உள்ளடக்கம் இல்லாத, சமூக, தமிழ்நாட்டுப் பிரச்சினை அறியாத அவரது மொழியில் செயல்திட்டம் (புராஜெக்ட்) தோல்வியில் முடிந்தது. அவர் தமிழ்நாடு, தமிழ் சமூகப் பிரச்சினைகளை அறிய வேண்டும். அவருக்கு அரசியல் வியூக வகுப்பாளர் புகட்டிய, “மக்களைக் கவர்வதில் நீங்கள் எம்.ஜி.ஆர்.; கட்சி நடத்துவதில் நீங்கள் ஜெயலலிதாஎன்ற பால பாடமே மனத்தில் பதிந்துகிடக்கிறது.

நடிகருக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. அது கட்டுப்படாத கூட்டம். தங்கள் தலைவர் திரைப் படத்தில் காட்டிய சாகசங்களைத் தலைவர் முன் செய்து காட்டுகிற விடலைக் கூட்டம். தலைவர் முகம் காண வேண்டும், தலைவரோடு, தலைவர் பிரச்சார வண்டியோடுசெல்பிஎடுக்க வேண்டும் என்ற திரை மோகம் தவிர வேறு எதுவுமில்லை.

இவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் உள்ளன. இவர்கள் தங்கள் கையில் உள்ள கைப்பேசியில் சமூகநீதி, மொழிப் பிரச்சினை, மாநில சுயாட்சி, காவேரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு என அடித்தால் பதில் வரும். அவர்கள் தலைவருக்கே, இது குறித்த தெளிவு இல்லாத போது, இதை இரசிகர்களிடம் எதிர்பார்ப்பது தவறானது. தலைவருக்கும் தொண்டர்களுக்கும் ஒரே திரைப்பாடலில்  முதலமைச்சராக மாறும் கனவு மட்டுமே உள்ளது. அதற்கான செயல்திட்டம் இல்லை.

பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிற நடிகர் எங்கேயாவது தீர்வைக் கூறினாரா? ‘இல்லைஎன்பதே நடப்பு. கூட்டத்திற்கு வரும் இரசிகர்களைக் கேட்டால், ஒரே பதில்தமிழ்நாட்டில் அரசியல், ஆட்சி மாற்றம் வரட்டுமே; மாற்றத்தை மட்டுமே வேண்டுகிறோம்என்பதே. அந்த மாற்றம் குறித்த விவரங்கள் தலைவரிடமோ, இரண்டாம் கட்டத் தலைவர்களிடமோ, தொண்டர்களிடமோ  இல்லை. ஏனெனில், அவர்களிடம் அது குறித்த அடிப்படைத் தெளிவு இல்லை.

தலைவரோ தான் வெளியே வந்து, எம்.ஜி.ஆர். போல தன் முகத்தைக் காட்டினால் ஓட்டு விழும்; ஜெயலலிதா போல தான் ஒன்று, தன் கட்சியில் எல்லாரும் பூஜ்யம் என்ற மனநிலையில் உள்ளார். எல்லாக் கதாநாயக நடிகர்களைப் போல, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் தானே உயர்ந்தவன் எனக் கருதுதல், விமர்சனங்களை ஏற்காமல், சுற்றியுள்ள எல்லாரும், தன்னை உச்சி முகர்ந்து பாராட்டுகளைத் தரவேண்டும் என்ற மனநிலையில் வாழ்கிறார். இதன் விளைவு கரூர் துயரச் சம்பவங்களின்போது இக்கட்சித் தலைவருக்கு, தலைமைப் பண்பு இல்லை. ‘என்னய்யா கட்சி இது?’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளுத்து வாங்கிவிட்டனர்.

எங்கள் கிராமங்களில் சொலவடை ஒன்று உண்டு: ‘சிறுவர் விட்ட வெள்ளாமை விளையுமாம், வீடு வந்து சேராதாம்.’ இது அந்த நடிகரின் கட்சிக்கும் பொருந்திப் போகிறது.

இவர்கள் மண் குதிரைகள். அவர் மாய மான். மாய மானை ஆர்.எஸ்.எஸ்.-இன் வலையில் அமுக்கி விட்டது என்பதே பரிதாபத் தகவல்.

இந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டின் பெரும் ஆர். எஸ்.எஸ். கார்ப்பரேட் கம்பெனி பணத்தை வாரி இறைக்கிறது என்பது கூடுதல் செய்தி. தமிழ்நாடு வாக்காளர்கள் 2026 தேர்தலில் விழித்தெழ வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
விளிம்பு நிலை மக்களின் விடுதலையில் விடியும் இறையாட்சி (தலித் விடுதலை ஞாயிறு)

ஒடுக்கப்பட்ட யூத மக்களின் துயர் கண்டு இறங்கி வந்து விடுதலை அளித்த இறைவன், விடுதலைப் பயண நூலில் (3:7-10) தம்மை ஒடுக்கப்பட்டோரின் கடவுள் என வெளிப்படுத்துகிறார். மீட்பின் வரலாற்றில் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கு விலங்கொடித்து விடுதலை அளித்துக்கொண்டே இருக்கிறார். உலகில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட இனங்கள் விடுதலை அடைந்து கொண்டுள்ளன.

இந்தியாவில் தலித் கிறித்தவர் மூன்று நிலைகளிலும் ஒடுக்கப்படுகின்றனர். இந்துவாக இருந்தபோது சாதியத் தீண்டாமையினாலும், கிறித்தவச் சமூகத்திற்குள் காட்டப்படும் வேறுபாடுகளினாலும் பாதிப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசினாலும் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இறையாட்சியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சமத்துவம், நீதி நிறைந்த சமுதாயம் அமைக்க தலித் மக்கள் விடுதலை பெற வேண்டும். தலித் மக்களின் விடுதலையில்தான் இறையாட்சி விடியும்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர்

இந்தியச்  சமூகம் சாதிய அமைப்பின்மீது கட்டப்பட்ட சமூகம். இச்சாதியம் சமயம் கடந்து எங்கும் பரவியுள்ளது. இந்திய வரலாற்றில் வர்ணத்திலிருந்து வளர்ந்த சாதியம் கி.மு. 1500-ஆம் ஆண்டிற்குப்பின் ஆரியர்களால் புகுத்தப்பட்டது. அவர்கள் தலைமையைத் தக்க வைக்க இந்தப் பொய்யான படிநிலை சாதியமைப்புக் கடவுளின் படைப்பு என்று கூறப்பட்டது. வேத நூல்கள் அதைப் புனிதம் ஆக்கியது. சாதி அமைப்பைத்தர்மம்என்று ரிக் வேதம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது (X90.12). இந்த நான்கு வர்ண (Chatur Varba) அமைப்புகளுக்குள்ளும் வராத மக்களைச்சாதிக்குப் புறம்பானவர்கள்என்று தள்ளிவைத்தனர். மனுதர்மச் சட்டம் மண்ணின் மைந்தர்களை அடிமைகள் (தாசர்கள்), பஞ்சமர்கள் (ஐந்தாவது பிரிவினர்), சாதிக்குப் புறம்பானவர்கள், சண்டாளர்கள் என்று பெயரிட்டது. மண்ணின் மைந்தர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர்.

உரிமைகள் மறுக்கப்படுவோர்

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவதற்கு உரிமைகள் அளிக்கப்பட்டன. இந்திய அமைப்புச் சட்டம் 15, 16 இவைகளில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்குச் சிறப்பு உரிமைகளையும் ஒதுக்கீட்டையும் அரசு அளித்தது. அரசியல் சாசனப் பிரிவு 15(4) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் இவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புச் சட்டங்களை அரசு உருவாக்குவது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் உரிமைகளைப் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடி மக்களுக்குச் சமூகநீதி அடிப்படையில் அரசு அளிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளில் ஒதுக்கீட்டு உரிமையும் சட்டப் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.

பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் மதம் மாறிய பட்டியலினக் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அமைப்புகள் தலித் சம உரிமைக்காகப் போராடி வருகின்றன. இது இந்தியாவெங்கும் ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டமாகவும் எதிரொலித்து வருகின்றன.

திரு அவையின் தலித் விடுதலைத் திட்டங்கள்

தமிழ்நாடு தலித் கத்தோலிக்க ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, தமிழ்நாடு ஆயர் பேரவை 1990-ஆம் ஆண்டு 10 அம்ச செயல்திட்டத்தினை அறிக்கையிட்டது. அதனைத் தொடர்ந்து 2004-இல் தலித் கத்தோலிக்கக் கிறித்தவர்களை அதிகாரப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான எட்டு அம்சத்திட்டம் ஒன்றை அறிவித்தது. ஆனால், முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பட்டியலின கத்தோலிக்கரின் அதிகாரப்படுத்தலுக்கான கொள்கை வரைவை 2016, டிசம்பர் 26-இல் பிரகடனம் செய்தது. இதில் 12 தலைப்புகளில் 56 செயல்திட்டங்களைக் கத்தோலிக்கத் திரு அவையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, திட்டங்களைச் செயல்படுத்தி, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையிடப்பட்டது. இதன் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பு நிறைந்த இறையாட்சிச் சமூகத்தை இம்மண்ணில் மலரச் செய்வது ஆகும். எட்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இத்திட்டங்கள் செயலாக்கம் பெறவில்லை. ஆகவே கீழ்க்காணும் தலித் கொள்கை வரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும்.

1. தீண்டாமை, சாதிப் பாகுபாடுகளை ஒழித்து, சமத்துவச் சமுதாயம் உருவாக்குதல்.

2. அரசியல்தளத்தில் சம உரிமை பெற மக்கள் அமைப்புகளோடு இணைந்து செயல்படுதல்.

3. பங்கேற்பு அமைப்புகளில் ஆளுமையோடு பங்கேற்று தலைமையேற்கச் செய்தல்.

4. பொதுநிகழ்வுகளில் தலித் கலை, பண்பாட்டுக் கூறுகளை இடம்பெறச் செய்தல்.

5. உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கல்வி அளிக்க வேண்டும்.

6. இளைஞர்கள் நுண்திறன்கள், ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு நல்ல தலைவர்களாக உருவாகச் செய்தல்.

7. அனைத்து நிலைகளிலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி அளித்தல்.

8. பெண்கள் சமப் பங்கேற்பு, பங்களிப்பு மற்றும் தலைமையேற்க வழிசெய்தல்.

9. திரு அவை, சமூகம், அரசியல் தளங்களில் தலைமையேற்கத் தொடர் பயிற்சித் திட்டங்கள்.

10. ஒடுக்கப்பட்டோருக்கு உரிமையளிக்கும் வலுவுள்ள மக்கள் அமைப்புகளை அமைத்தல்.

11. குறைதீர்ப்பு மையம்.

12. கண்காணிப்புக்குழு.

தலித் விடுதலைக்கு அரசு உரிமைகள்

1921-ஆம் ஆண்டிலிருந்து வகுப்புவாரி ஒதுக்கீட்டு ஆணையின் அடிப்படையில்இந்தியக் கிறித்தவர்என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 ஜனாதிபதி ஆணை 3-வது பத்தி நீக்கப்பட்டு, சமூக நீதி தலித் கிறித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போராட்டம் சமநீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவை தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 74 ஆண்டுகளாகப் பேரணி, மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய-மாநிலத் தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இச்சமூக நீதிப் பிரச்சினை அரசியல் ஆக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு மே, 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி SC பட்டியலில் சேர்க்கப் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள (WP 180/2004) விசாரணைக்குப் பா... அரசு உடனே பதில் தர வேண்டும். நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்கவேண்டும்.

திரு அவையில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு, சம உரிமைகளையும் அரசின் பட்டியலின உரிமைகளையும் தலித் கிறித்தவர் பெறுவதற்கு அனைத்து மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள தலித் கிறித்தவ மக்களுக்கு விடுதலை அளிப்பதே யூபிலி ஆண்டின் சிந்தனையாக அமையவேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்க் கிறித்தவர் விடுதலை அடைந்து, அதிகாரப்படுத்தப்பட்டால் இறையாட்சி விடியல் உண்டாகும்.