“அந்தத் தெய்வத்தைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்குமான்னு ஏங்குனதுண்டு. ஆனா, அந்த தேவமாதா புண்ணியத்துல இன்னைக்கு நிறைவேறிடுச்சி! ஆமா, நான் சொல்றது சத்தியம்! எங்க பாதரு எங்க ஊர் மக்களை வாழ வெச்ச தெய்வம்” என்று அந்த அம்மையார் மேற்கத்தி மாவட்டத் தமிழில் இழுத்துச் சொன்னபோது கண்களிலிருந்து அனிச்சையாக நீர் கொட்டியது.
அறுபது
வயது மதிக்கத்தக்க அந்த அம்மையார்,
தந்தை கார்மல் அடிகளாரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக அடிகளாரின்
சொந்த ஊரான இராசாவூர் என்ற கிராமத்திற்கு வந்திருந்தார். இராசாவூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குமரி மாவட்டத்தின் மேற்கத்தி மலையகமான கடையாலுமூடு
என்ற ஊரிலிருந்து ஊர்தி அமர்த்தி வந்திருந்தவர்களில் ஒருவர் அந்த அம்மையார், தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலும், தந்தையை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்திருப்பதாகக் கூறினார். அவர் சொல்லில் புதைந்திருந்த
அன்பில் உண்மை மட்டுமே வெளிப்பட்டது.
இராசாவூரின்
புகழ்பெற்ற திருத்தலமான புனித மிக்கேல் அதிதூதர் பேராலயத்திலிருந்து கிளைப்பங்கான வடக்கு இராசாவூர் புனித காணிக்கை அன்னை ஆலயத்தை நோக்கி வரவேற்புப் பவனி செல்ல ஆயத்தமான நேரம். ஊர்
பொதுமக்கள் புடைசூழ
கூடியிருந்த அந்த நேரம் உணர்வுகளின் சங்கமமாகக் காட்சியளித்தது. தொலைதூரத்திலிருந்து வண்டி பிடித்துவந்த பலரும் தந்தை அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் முண்டியடித்துக் கொண்டு அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
சக்கர
நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தை அவர்கள் வந்திருந்த மக்களின் அன்பு வளையத்திற்குள் சிக்குண்டு கிடந்தார். பொக்கை வாய் மலர முதுமையின் நடுக்கங்களின் ஊடாகச் சலிக்காமல் அவர்களுக்கு ஆசிர் அளித்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை ஊர் மக்களோடு நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஆயர் பெருமக்களும் பங்குப் பணியாளர்களும் நெகிழ்ச்சியுடன் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர்.
இந்தக்
காட்சி மட்டுமே நூற்றாண்டின் நிறைவுநாளில் நின்றவாறு இன்றுவரை இறைப்பணியாற்ற இயங்கிக்கொண்டிருக்கும் தந்தை கார்மல் அடிகளாரின் இயல்பை எடுத்துரைக்கும் நிகழ்சாட்சியமாகத் திகழ்ந்தது.
இவர்தான் தந்தை
கார்மல்!
அன்பின்
நிறைகுடம்! சொல்லொண்ணா அன்புக்குச் சொந்தக்காரர்! கன்னியாகுமரி மாவட்டம் இராசாவூர் என்னும் வயலும் வயல் சார்ந்த மருத நில மண்ணில் 1925-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 16-ஆம் நாள் பிறந்தார்.
செல்வத்திற்குக்
குறைவில்லாத வேளாண்மை சார்ந்த கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர் என்றாலும், கல்வியோடு கழனிப் பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்த பொழுதுதான் இறையழைப்பிற்கிணங்க கோட்டாறு குருமடத்தில் இணைந்தார்.
மேய்ச்சல்
நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவருக்கு, இறையியல் நிலத்தில் ஆடுகளை மேய்க்கும்
வாய்ப்பும் கிடைத்தது. இராசாவூர் பங்குத்தளத்தின் முதல் இறைப்பணியாளராக உருவான கார்மல்
அடிகளாருக்கு ஒரு தனித்துவமான
குணமிருந்தது. இடக்கை
அறியாமல் வலக் கையால் வாரி வழங்கும் குணம்! ஏழைபாழைகள் என்றால் அவரது இரக்கத்தின் கரங்கள் துடிக்கத் தொடங்கிவிடும். சட்டைப் பைக்குள் நுழையும் கரங்களுக்கு எண்ணிக்கை எப்படித் தெரியும்? அப்படித் தான் கொடுத்துக் கொடுத்து ஏழைகளின் வாழ்க்கையில் இன்பத்தைப்
பரவச் செய்வார்.
அவர்
ஒரு நட்பு விரும்பி! இளையோர் என்றாலும், தன்னைவிட மூப்பு என்றாலும் அனைவரையும் ‘நண்பரே’ என்று அழைப்பதன் மூலமாகத் தனது நட்பு வட்டத்தை இரட்டிப்பாக்கியவர். அந்த நட்புக்குச் சாதி, மதம் என்ற சாயமும் கிடையாது. அனைவரிடத்திலும் நட்பு பாராட்டினார். அவருக்குள் இருந்த அன்பும் நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால், அவரது அன்பான பேச்சைவிட செயல்களே அவரது அடையாளமாக மாறியது.
அவர் ஒரு
திறந்த
புத்தகம்:
வெளிநாட்டவர்களின் நட்பைப் பெற்ற அவர் அந்த நட்பின் மூலமாக இருப்போருக்கும் இல்லாதவர்களுக்குமான பொருளியல் பாலமாகத் திகழவேண்டும் என்று நினைத்தார். தான் பணியாற்றிய பங்குத்தளங்களில் வாழும் மக்களின் இன்னல்களைப் போக்க இரக்கத்தின் கரங்களை இயன்றவரைக்கும் நீட்டினார். அவரால் கல்வி, வேலைவாய்ப்புப் பெற்ற விளிம்பு நிலை மக்களின் உயர்வில் இன்பத்தைக் கண்டார்.
பொருளாதாரப்
பிரச்சினைகள், கல்வி உதவி, குடியிருப்புப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு ஆகிய பல பிரச்சினைகளின் நிமித்தமாக
நித்தம் நித்தம் தன்னைத் தேடி வருவோருக்காகத் தட்டாமல் திறந்தது அவரது கதவு! கேட்காமல் கிடைத்தன உதவிகள்! ஆனாலும்,
எந்த நிலையிலும் தன்னை உயர்த்தவில்லை. ‘தாழ்ச்சியே எழுச்சி’ என்று நம்பினார். இன்றுவரைக்கும் ‘நான் உலகம் அறியாத சாமானியன்’
என்றுதான் கூறுவார். அவர் ஆசைப்பட்டிருந்தால் வெளிநாட்டு நண்பர்களின் அழைப்பை ஏற்று உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் சென்று திரும்பியிருக்க முடியும். ஆனால், அவர் பங்குத்தளத்தை விட்டு வேறு எங்குச் செல்வதையும் விரும்பாதவர்.
திருவிழாக்காலங்களில்
ஏழைபாழைகளுக்கு வழங்குவதற்காக அவர் இருப்பிடத்தில் துணிமணி மூட்டைகள் காட்சியளிக்கும். ஆனால், பிறிதொரு சமயங்களில் மாற்று
உடையில்லாமல் இடுப்பில் போர்வையைக்
கட்டிக்கொண்டிருக்கும்
காட்சிகளையும் அருள்பணியாளர்கள் சிலர் பார்த்து வியந்திருக்கின்றனர்.
மக்களோடு
மக்களாய் வாழ்ந்தார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் ‘மேய்ப்பர்கள் ஆடுகளின் வாசனையில்தான் வாழவேண்டும்’ என்று
கேட்டுக் கொண்டார். அந்தச் சொல்லாடல் தந்தை கார்மல் அடிகளாருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது.
கோட்டாறு
பங்குத்தளத்தில் முதல் பணியைத் தொடங்கிய அருள்தந்தை பின்னர் மிடாலம், இராசாக்கமங்கலம்துறை, வாணியக்குடி, காரங்காடு, கீழ இராமன்புதூர், கீழ் ஆசாரிபள்ளம், கடையால், ஆரோக்கியபுரம், நல்லாயன்புரம், சூழால், புதுக்கடை, மற்றும் கொட்டில்பாடு ஆகிய பங்குத்தளங்களில் தனது இறைப்பணியைச் செவ்வனே செய்து முடித்திருந்தார்.
பிட்டுக்கொடுத்த
அப்பத்திற்கு அப்பால் பங்கு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து, பங்கு மக்களின் இதயத்தைத் தொட்டெடுத்து வாழ்ந்தார். அனைவரின் வாழ்க்கைப் பின்னணியையும் உணர்ந்து அதற்கேற்றவாறு செயலாற்றியவர்.
புற்று
நோயால் பாத்திக்கப்பட்ட கடையாலுமூடைச் சேர்ந்த அந்த அம்மையார் மேலும் கூறுகையில், “ஆண்டவன் புண்ணியத்துல எங்கக் குடும் பத்துக்கு எந்தக் குறைவும் கிடையாது. அதனால பாதர்கிட்டயிருந்து எந்த உதவியும் எங்களுக்குத் தேவைப்படலை. ஆனா, எங்க ஊர்ல இருக்கிற இல்லாத சனங்களைத் தூக்கிப்பிடிச்சவரு இவரு” என்று கூறினார். பங்குமக்களைத்
தன் நெஞ்சாங் கூட்டுக்குள் வைத்துக் காத்துக்கொண்டதால்தான் இன்றுவரைக்கும் அந்த மக்கள் அவரைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
1956-ஆம் ஆண்டு
முதல் 2002-ஆம் ஆண்டு வரை மெய்யங்கடவுளை மையமாகக் கொண்டு மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பாடு ஆடுகளோடு கழிந்தது. தான் வேளாண் நிலத்தில் மந்தையோடு பட்ட அனுபவங்களின் பிறிதொரு தொகுப்பாக மறைபரப்புப்பணி அமைந்ததை இன்முகத்துடன்
ஏற்றுக்கொண்டார்.
இறையியல்
தத்துவங்களை எதார்த்தமாக மக்களிடம் எடுத்துச்சென்றார். சென்ற இடத்திலெல்லாம் தனது அன்பு முத்திரையைப் பதித்துப்
பங்கு மக்களின் வாழ்க்கையோடு சங்கமித்தார்.
எல்லா
நிலையிலும் சிரிக்கத் தெரிந்த முகம்!
எந்த
நிலையிலும் கொடுக்கத் தெரிந்த குணம்!
எந்த
நிலையிலும் தன்னைத் தாழ்த்தத் தெரிந்த மனம்!
இன்று
நூறாண்டை முடித்து நூற்றியோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
அருள் தந்தை கார்மல் அவர்களை அனைவரும் கொண்டாடுவோம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுப்பட்டி என்னும் கிராமத்தில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் பிறந்தவர் காமராசர். அவரது பிறந்த நாளான ஜூலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அவர் 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அரசியலிலும் கல்வியிலும் நிகழ்த்திய சாதனைகள் இன்றும் நினைவுகூரத்தக்கன.
கல்வி
என்பது மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த கருவி. அது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த காலத்தில், ஏழை எளியவருக்கும் கல்வி வாய்ப்புக் கிடைக்கச் செய்த மறக்க முடியாத பெருந்தலைவர் காமராசர். இவ்வாறு கல்விக்காகப் போராடிய உன்னத நாயகன், தமிழர் என எண்ணி வியக்கும்
வண்ணம் இன்றும் நம் நினைவில் வாழ்கின்றார்.
கல்வியும் காமராசரும்
காமராசரின்
முக்கியமான இலட்சியம் ‘ஏழைகளும் கல்விபெற வேண்டும்’
என்பதுதான். அறிவுச் சுடர் என்பதையே அறியாது, வாழ்வும் மனமும் வறுமையில் வாடிக்கிடந்து, செய்வதறியாது தவித்த மக்களுக்கு ஒளிவிளக்காக விளங்கும் கல்வியைத் தருவதையே முதற்கடமையாகக் கொண்டிருந்தவர். கல்வி செல்வந்தருக்கே உரியது என்ற நிலையை மாற்றிட அரசுப் பள்ளிகளை அதிகரித்து, கட்டாயக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்.
“ஒரு நாட்டின் உண்மையான சொத்து கல்வி பெற்ற மக்களே” என்பார் காமராசர். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலத்தில் அவர் தொடங்கிய கல்வித்திட்டங்கள் பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றது. தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியில் 4,267 தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய்த் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தைக் கொண்டு வந்ததால் ‘கல்விக்கண் திறந்த காமராசர்’
என அழைக்கப்பட்டார். பள்ளி மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கல்வித் துறையில் காமராசரின் சீரிய திட்டத்தால், 1957-இல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள், 1962-இல் 29,000 ஆக உயர்ந்தன. 1955 -இல் 814 ஆக
இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962-இல் 1,996 ஆக உயர்ந்தன.
மதிய உணவுத்
திட்டம்
பசியுடன்
வாடும் ஏழைக் குழந்தைகள் வயிறு நிறைந்திட மதிய உணவுத் திட்டம் தொடங்கி மதிகூர்மையுடன் செயல்பட்டார் காமராசர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாய் உயர்ந்தது. இதனால், காமராசர் பதவி ஏற்றபோது தமிழ்நாட்டில் 7% மட்டுமே கல்வி
பெற்றிருந்தனர் என்ற நிலை மாறி 37%- ஆக உயர்ந்தது.
காமராசரின்
முயற்சியால் பழங்குடியினருக்கும், கிராமப்புறத்தில் இருக்கும் மற்றும் மலைவாழ் மக்களுக்கும் கல்வி கிடைத்தது. ‘ஒரு பள்ளி உருவானால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்’
என்ற நம்பிக்கையில் அவர் செயல்பட்டார். ‘அடிப்படைக் கல்வியே இந்தியாவின் வளர்ச்சி மையம்’ எனக் கூறினார். ‘எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி மட்டுமே ஒரே சொத்து. கல்வி என்ற சொத்தைப் பெற்றுவிட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும்’ என்று கூறினார்.
ஒருமுறை
ஒரு நிபுணர் அவரிடம், “உங்களது முக்கியமான சாதனை எது?” என்று கேட்டார். அதற்கு அவர் “ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் நாள்தான் என் வாழ்க்கையின் சாதனை” என்றார்.
‘கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க
அதற்குத் தக’
(குறள் 391)
என்ற
வள்ளுவரின் வாக்கு காமராசரின் கல்விக்கொள்கையின் வெளிப்பாடே. மேலும் இவரது சிறப்புகள் பற்பல...
காமராசரின் அறப்பணிகள்
அடிப்படைக்
கல்வி மட்டுமன்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். பல பொறியியல் மற்றும்
கலைக்கல்லூரிகளை உருவாக்கினார். சிறப்புக் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிலையங்களையும் தொடங்கினார். பட்டி தொட்டி எல்லாம் நூலகம் அமைத்து, வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தினார். சிறந்த நீர்வளப்பாசனத் திட்டங்களைத் தீட்டி வெற்றி கண்டார். பெரியாறு திட்டம், பாபநாசம் திட்டம், மணிமுத்தாறு திட்டம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனத் திட்டங்களைச்
செயல்படுத்தினார். இதனால் நெல் மற்றும் விவசாய உற்பத்தி அதிகரித்தது. இவ்வாறு தமிழ் நாட்டில் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
அவரது
ஆட்சியில் அறிவியல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி பெற்றது. நெய்வேலி லிக்னைட் கழகம், பொதுநிலைத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனால் சேவை வாய்ப்புகள் உருவானது. மேலும், மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பட்டது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், மதுரை போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கினார். தொலைதூரக் கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பேருந்து வசதிகளை மேம்படுத்தினார். தமிழ்நாடு அரசுப் பேருந்து சேவையை விரிவுபடுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளி, சாலை, குடிநீர் தொட்டி அமைத்துக் கிராமப்புற வளர்ச்சியில் பங்கெடுத்தார்.
‘கிங் மேக்கர்’ என இந்தியா போற்றும்
வகையில் செயல்பட்டார். 1963-67 காலகட்டங்களில் இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைவர் பதவியை வகித்தார். அப்போது லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்த முக்கியத் தலைவர் காமராசர். ஊழலுக்கு இடமில்லாத அரசியலையும் நேர்மையான நிர்வாகத்தையும் தந்தவர் காமராசர். ‘யுனெஸ்கோ’
உள்ளிட்ட பல கல்வி அமைப்புகள்
காமராசரின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டியுள்ளன.
இவரைப்போல இனி
எவர்
உளர்?
காலமெல்லாம்
கதர் அணிந்து மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவர் காந்தி பிறந்த அக்டோபர் 2-ஆம் நாளையே தனது நினைவு நாளாக்கிச் சென்றார். ‘கல்வி கற்பதும் அறிவு பெறுவதும் அன்பு செய்யவே; அன்பு செய்வதும் பண்பு காப்பதும் அறம் வளர்க்கவே’
என்பதை மாணவர்கள் இதயத்தில் பதியவைத்துச் சென்ற காமராசர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனத்தில் என்றும் நிலைத்து நிற்கிறார் என்பதே நிதர்சனம். காலங்கள் கடந்தாலும் அவரது திட்டங்கள் மறையவில்லை. காவியத் தலைவன் பிறந்த நாளை காலம் முழுதும் நினைத்துப் போற்றுவோம்; அவரின் வழி நடப்போம்.
கீழடியில் தமிழர் தொன்மை நாகரிகம் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த செய்திகளைத் தனது ஆய்வறிக்கை மூலம் வெளிக்கொணர்ந்த தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களை மீண்டும் ஒருமுறை அதிகாரமும் செயல்பாடுகளும் இல்லாத ஒரு பணியிடத்திற்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. கீழடி அகழாய்வு வடக்கே உள்ளவர்களுக்கு ஏன் பதற்றத்தையும் பரிதவிப்பையும் தருகிறது என்பதைத் தமிழ்நாட்டிற்கும் உலகிற்கும் எடுத்துச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கீழடி
அகழாய்வின்போது கிடைத்துள்ள மிக அரிதான பொருள்கள் இதுகாறும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகள் கட்டமைத்து வைத்திருந்த வரலாற்றுப் புனைசுருட்டுகளின் போலி முகங்களை உலகிற்கு உணர்த்தியுள்ளன.
வேதகால
நாகரிகமே இந்தியத் துணைக் கண்டத்தின் ஆதி நாகரிகம் என்றும், சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும் கூறிவந்தவர்கள் தலைகளில் கீழடித் தகவல்கள் பேரிடியாக விழுந்தன. தமிழர் நாகரிகமும் தமிழ் மொழியும் வேதகால நாகரிகத்திற்கும் முந்தையவை என்ற அறிவியல்பூர்வமான உண்மையினை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குற்றவாளிகள் தடயங்களை அழித்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதுபோல கீழடி நாகரிகத்தின் தொன்மையினையும் சிறப்பையும் வெளியுலகிற்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் ‘அவர்கள்’ செய்து பார்த்தார்கள். உண்மைகளை எத்தனை நாளுக்குத் திரையிட்டு மறைக்க முடியும்? சரியான நேரத்தில் கீழடியைக் கைவசம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.
உலகெங்கும்
உள்ள வரலாற்று அறிஞர்கள் கீழடி நாகரிகத்தின் தொன்மையையும், அதனது பிரமாண்டத்தையும் பார்த்துப் பிரமித்து, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் துவங்கியுள்ளதால் மூக்கறுபட்ட ஒன்றிய அரசு, கீழடி அகழ்வாய்வு அறிக்கையின் தகவல்கள் ‘இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை’ என்று
கூறி அறிக்கையை வெளியிட மறுக்கின்றது.
தொல்பொருள்
அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிதுறை சார்பில் இரண்டு கட்டமாகக் கீழடியில் அகழாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும், அந்த அறிக்கையினை ஏற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு மேலும் அதிகமான தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை அவர் தந்தால் மட்டுமே அடுத்தக் கட்டத்திற்கு நகரமுடியும் என்றும் ஒன்றியக் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய ஒரு செய்தி மிகவும் முக்கியமானது:
“Let them come with more results, data and evidence because a
single finding cannot change the entire discourse.”
- ‘தி
இந்து’ ஆங்கிலப்
பத்திரிகைக்கு ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அளித்த பேட்டி இது. அதாவது, “எங்களுக்கு இன்னும் ஏராளமான தரவுகளும் சான்றுகளும் வேண்டும்; ஓர் அகழாய்வின் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு இதுகாறும் சொல்லப்பட்ட வரலாற்றை மாற்ற முடியாது.”
அமைச்சர்
எதையும் ஒளிக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை. தற்போது கீழடியில் கிடைத்துள்ள தகவல்களை ஒன்றிய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை ஏற்றுக்கொண்டால் இதுகாறும் கூறப்பட்டு வந்த வரலாற்றை மாற்ற வேண்டியதிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதே அமைச்சர் கூறும் செய்தி.
கீழடி
ஆய்வில் ஒவ்வொரு தட்டிலும் கிடைத்த பொருள்களின் தொன்மத்தையும் சிறப்பையும் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒன்றிய அரசு, அகழாய்வை அப்படியே கைவிட முயற்சித்தது. “அகழாய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த பொருள்களுக்கு எவ்வித வரலாற்று முக்கியத்துவமும் இல்லை” என்று கூறி இராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு ஆய்வை அப்படியே நிறுத்தியது.
இந்திய
நாட்டின் தொன்மை நாகரிகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அறிவியல் சார்ந்து ஆய்ந்து தெரிவிக்கும் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொல்லியல்துறை, தனது சிறப்பான செயல்பாட்டால் உலகம்
முழுமையும் பாராட்டுகளைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால், மோடி அரசு பதவியேற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூறுகின்ற வலதுசாரி (வரலாற்று) நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளை வைத்துக்கொள்வதுதான் இன்றைய தொல்லியல்துறையின் நிலைப்பாடு என்று அந்தத் துறையில் அனுபவம் பெற்ற சிலர் கூறுவதைக் கவனிக்க வேண்டியதுள்ளது. இதிகாசங்களை வரலாறாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை துணை போகிறதோ என்ற ஐயத்தைத் தவிர்க்க முடியவில்லை.
கீழடித்
தகவல்களுக்கு அறிவியல்பூர்வமான தகவல்களும் சான்றுகளும் இல்லை என்று கூறுகின்ற அமைச்சர் ஷெகாவத் உத்தரப்பிரதேசம் சின்னாலியில் நடந்த ஆய்வுகளைப் பற்றித் தொல்லியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு என்ன அறிவியல் ஆதாரங்கள் உள்ளன என்று கூறுவாரா? அங்குக் கிடைத்தப் பொருள்களை வைத்துக்கொண்டு துறையின் ஆய்வாளர்கள் அங்கே ஒரு தொன்மையான இந்து நாகரிகம் இருந்ததாகக் கட்டமைத்து உள்ளார்கள். ஆனால், உண்மையில் கிடைத்த பொருள்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்ட செய்திகளுக்கு எதிர்மாறான கண்டுபிடிப்புகளை நிரூபிக்கின்றன என்று நடுநிலையான, உலகம் போற்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
சம்பால்,
ஞானவாபி பள்ளிவாசல்களில் நடந்த ஆய்வுகளும், பிரதமரின் சொந்த ஊரான வாட் நகரில் நடந்த ஆய்வுகளும் தொல்லியல்துறை ஆய்வுகளை ஒன்றிய அரசு விரும்பியபடி எப்படியெல்லாம் வளைக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்று பெயர்களைக் கூறவிரும்பாத தொல்லியல்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2003-ஆம் ஆண்டில்
தொல்லியல்துறையின் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றிய A.I. மணி
எனும் அதிகாரி பாபர் மசூதிக்குக் கீழே பத்தாவது நூற்றாண்டை சார்ந்த ஓர் இந்து ஆலயம் போன்ற கட்டுமானங்கள் இருக்கின்றன என்று ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பாபர் மசூதி சம்பந்தப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு அந்த அறிக்கையே அடிப்படையாகக் காட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவரை, மோடி அரசு தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமித்துப் பெருமை சேர்த்தது. பாபர் மசூதி சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைக்கான அங்கீகாரம்தான் அந்தப் பதவி என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ‘2G’ வழக்கிற்குக்
காரணமாக இருந்த தணிக்கைத்துறை அறிக்கையினைத் தந்த வினோத் ராய்க்கு, மோடி அரசால் வழங்கப்பட்ட பேங்கிங் ஓம்பட்ஸ்மேன் பதவியையும், பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த சில நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்பட்ட பதவிகளும் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
அமர்நாத்
இராமகிருஷ்ணா தொல்லியல் துறையில் நீண்ட நிறைந்த அனுபவம் பெற்ற ஆராய்ச்சியாளர். தொல்லியல் துறையில் அகில இந்திய அளவில் பல களங்களில் பணியாற்றியவர்.
அப்படிப்பட்ட தகுதியுடைய ஒருவர் எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் ஓர் அகழாய்வு பற்றித் தரமற்ற ஓர் ஆய்வறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளார் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அப்படி ஒரு தரமற்ற அறிக்கையினை அவர் அரசுக்குத் தரவேண்டிய அவசியம் என்ன? தொல்லியல் துறையில் நடந்த பல்வேறு ஆய்வுகளுக்கு என்ன விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டனவோ, அதே நடைமுறைகளைப் பின்பற்றிதான் தனது அறிக்கையினை அவர் சமர்ப்பித்துள்ளார்.
அகழாய்வுக்காக
வரையறுக்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் 45% நிலத்தில் மட்டுமே
தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் உள்ள நிலப்பரப்பில் இதுவரை 13,000 பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தந்தம், தங்கம், கண்ணாடி, தாயக்கட்டங்கள், சுட்ட மண்பாத்திரங்கள், ஓடுகளில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள், பாசிமணிகள், தாமிர நாணயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிணறுகள், வடிகால் அமைப்புகள் என்று வளமான தொழிலும் வணிகமும் செழித்து வளர்ந்திருந்த ஒரு நாகரிக சமூகத்திற்கு அடையாளங்களாக இருக்கும் அத்தனை பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட
பொருள்கள் கரிம பகுப்பாய்வு பரிசோதனைகளுக்கு உலகின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பகுப்பாய்வுச் செய்யப்பட்டு ஆய்வறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. சில பொருள்களைப் பகுப்பாய்வு செய்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான பீட்டா அனெலிட்டிக்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட பொருள்கள் கி.மு. ஆறாம்
நூற்றாண்டைச் சார்ந்தவை என்று சான்றிதழ் தந்துள்ளது. இதுதவிர சிகாகோவின் ஃபீல்டு மியூசியம், பூனாவின் ஆகர்கார் ஆராய்ச்சி நிறுவனம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீஸா பல்கலைக்கழகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடீஸ் பெங்களூரு போன்ற பல சர்வதேச, தேசிய
நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்குச் சந்தேகங்கள் இருப்பின் பகுப்பாய்வு செய்த அந்த நிறுவனங்களிடமிருந்தே தெளிவுகளைப் பெற்றிருக்க முடியும். எதையும் செய்யாமல் அறிக்கையினை வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு வருடங்கள் தூங்கிய தொல்லியல்துறை நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கும், பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் கூற முடியாமல், ‘அறிக்கை முழுமையாக இல்லை’ என்று கூறித் தப்பிக்க நினைப்பது கண்டனத்திற்குரியது.
உலகப்
புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் தரக்கூடிய சான்றுகளை ஏற்க மறுக்கும் தொல்லியல்துறை சில முக்கியமான ஆய்வுகளில் தந்த அறிக்கைகள் சர்வதேசத் தொல்லியல் ஆய்வர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
நமது
பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை செய்த ஆய்வுக்கும், அவர்கள் தந்த அறிக்கைக்கும் எந்த அறிவியல் ஆதாரம் என்பது யாருக்கும் தெரியாது. பள்ளிவாசலுக்குள் தொழுகைக்குச் செல்லுமுன்னர் இசுலாமியர்கள் தங்களை ஒடுக்கம் செய்துகொள்ளும் இடமான ‘வாசுகானா’
பகுதிக்குள் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் ஆய்வர்களைத் தடை செய்துவிட்டது. தொழுகை நடக்கும் பகுதிகளில் தரையைத் தோண்டக்கூடாது என்றும் தடை விதித்துவிட்டது. பூமிக்கு மேலே வைத்துப் பார்க்கும் நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் கண்டதாக ஓர் அறிக்கையினை நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தாக்கல் செய்தது. அதில் தொல்லியல்துறை, ஞானவாபி பள்ளிவாசல் கட்டடத்திற்குக் கீழே இடிந்த நிலையில் ஓர் இந்து
கோவிலையும் சிலைகளையும் கண்டதாகவும், அது 17-வது நூற்றாண்டில் மொகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டிருப்பதைப்போல தெரிகிறது என்றும், சில இடங்களில் கோவிலின் பகுதிகளையே பள்ளிவாசலாக மாற்றியுள்ளனர் என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.
17-ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தது என்று சொல்ல எந்தக் கரிமப் பகுப்பாய்வும் நடந்ததாகத் தெரியவில்லை. அவுரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டது என்று சொல்ல அறிவியல் ஆதாரம் எதையும் தரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சரியான நேரம் பார்த்து நீதிமன்றத்தில் தொல்லியல்துறை அறிக்கையினைத் தாக்கல் செய்துவிட்டு, ஊடகங்களிலும் பெருமளவில் செய்திகள் வெளிவரும்படி பார்த்துக்கொண்டது. இந்த அறிக்கையால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதாயம் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.
மேற்கு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பாட்
மாவட்டத்தில் சொனாலி என்ற இடத்தில் தொல்லியல் துறையின் ஆய்வின்போது, பழங்கால மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட நூறு இடங்களைக் கண்டனர். வாள், வில், அம்பு, பானை ஓடுகள் போன்ற பொருள்களோடு சக்கரம் பொருத்திய வண்டி போன்ற ஒரு வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டன. சஞ்சய் குமார் மஞ்சுல் என்ற தலைமை ஆய்வர் அதனைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட இரதம் என்றும், இதன் மூலமாக அங்கு ஒரு மாபெரும் சத்திரிய வம்சத்தினர் வாழ்ந்திருந்தது தெரியவருவதாகவும், ரிக் வேதம் மற்றும் மகாபாரத நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்படுவதாகவும்
தெரிவித்தார்.
அடுத்த
நாள் நமது பிரதமர் அந்த அகழாய்வு அறிக்கையினைப் பாராட்டியும், நமது தொன்மையான நாகரிகத்தை வியந்தும் தனது ‘X’ தளத்தில்
பதிவு செய்தார். கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் ஒரு வண்டியாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குதிரைகள் இருந்ததாக அடையாளங்கள் கிடைக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கும் ரிக் வேதத்திற்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்புக்கு அறிவியல் ஆதாரம் ஏது என்று யாரும் கேட்கவும் இல்லை. அதையெல்லாம் வியந்து பாராட்டுகிற பிரதமருக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் இரும்பை உருக்கும் வித்தையைக் கற்றிருந்தான் என்பதை உலகுக்குக் கூறிய அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பை வியந்து பாராட்ட மனமில்லை.
தற்போது
சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள, நாட்டின் முக்கிய அருங்காட்சியகமான ‘பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ அருங்காட்சியகத்தில் சிந்து சமவெளிப் பகுதிகளில் நடந்த அகழாய்வின்போது கிடைத்த பொருள்களை ‘திராவிட நாகரிகத்தின் எச்சங்கள்’
என்ற பெயரில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
தற்போது அதனை மாற்றிவிட்டு ‘அடையாளம் தெரியாத மக்களின் நாகரிக எச்சங்கள்’
(unknown civilisations) என்று எழுதி வைத்துள்ளனர். திராவிட நாகரிகத்தையும், அதன் தொன்மையையும் ‘அவர்கள்’ ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை!
நமது
முதலமைச்சர் கூறியதுபோல தவறுகள் அறிக்கையில் இல்லை. ‘அவர்களது’
மனங்களில் இருக்கின்றன. ‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம்’ என்று
கூறி அரசியல் நடத்திவரும் அவர்களுக்குச் சமஸ்கிருத மரபு மற்றும் ஆரிய நாகரிகம் தவிர வேறு பண்பாட்டுக் கூறுகளை ஏற்க முடியவில்லை. அவர்கள் கொண்டாடும் வேதகால நாகரிகத்தைவிட, பலவகைகளில் சிறந்த ஒரு நாகரிகம் வேதகாலத்திற்கு முன்னரே இந்த மண்ணில் செழித்தோங்கியிருந்தது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை அவர்களிடம் இல்லை. இதிகாசங்களை வரலாறாகக் கட்டமைக்கும் அவர்களது அரசியல் திட்டங்களுக்கு கீழடி மண் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற எதார்த்தம் அவர்களைக் கதிகலங்கச் செய்கிறது.
‘அவர்களை’ பற்றிக்கூட நாம் கவலைப்படவில்லை; திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், தமிழ்ச் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்த அவதானித்திருக்கும் தலைவர்கள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் அநீதி குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கள்ள மௌனம் காக்கிற இவர்களை ‘தமிழர் விரோதிகள்’
என்று ஏன் அழைக்கக்கூடாது?
எங்கள்
ஊர் மொழியில் கூறினால், ‘கரடி கூட காறித் துப்பும்.’ இவர்களது துரோகத்தைக் காலம் ஒரு நாளும் மன்னிக்காது!
ஒருமைக் கோட்பாடு:
இது
அனுமானமாகயிருக்கலாம்,
மனித செயலாற்றலை மிஞ்சுவதென்பது. ‘குருவுக்கு மிஞ்சிய சீடன்’ என்ற பழமொழியைப்போலவே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பமும்
மனிதரின் புத்திசாலித்தனத்தை ஒரு நாள் மிஞ்சுமோ? என்ற கேள்வி இன்று பரவலாகக் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வியின் மையத்தில் இருப்பதுதான் ‘ஒருமை’ என்ற கருத்து. நாம் மெதுவாகத் தொழில்நுட்ப நகர்வில் மனிதச் சமுதாயத்திற்குச் சவாலாக இருக்கும் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
ஒருமை
என்றால் என்ன? இப்போது பேசப்படும் ‘ஒருமை’ என்ற கருத்து 1915-இல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘சார்பியல்’ தத்துவத்தில்
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை விவரிக்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் கூறுவது: ‘இப் பிரபஞ்சம் ஒருமையிலிருந்து உண்டானது; அது ஒன்றுமில்லாத, அளவிடப்படாத அடர்த்தியும், புவிஈர்ப்பும் கொண்டது’ என்பதாகும்.
வெர்னர்
விங்கே என்ற கணிதப் பேராசிரியரும், புகழ்பெற்ற விஞ்ஞானக் கற்பனை எழுத்தாளருமான இவர் தன்னுடைய நூலில் “தொழில்நுட்ப ஒருமை என்பது எதிர்காலத்தில் கணினி அறிவாற்றல் வளர்ந்து மனிதனை மிஞ்சும்; இது மனிதனின் கட்டுப்பாட்டிற்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டு, புதிய யுகத்தின் ஆரம்பமாயிருக்கும்; ‘இப்படியும் நிகழலாம்’
என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் மனிதனைவிட திறன் படைத்தவையாக உருவெடுப் பது என்பது மனிதனால் அடையக்கூடாத திறன்” என்று கூறுகிறார்.
இது
ஒரு கைமீறிய தொழில்நுட்ப வளர்ச்சியாக, அதனைத் திரும்ப மீட்க முடியாமல் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று தொழில்நுட்ப நோக்கில் புரிந்துகொள்ளப்படுகிறது.
‘ஒருமை’ விபரீதத்தில்
முடியுமா?
ஏ.ஐ. தானாக அடுத்தடுத்து
மேம்படுத்திக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதிவேகத் தொழில்நுட்பத்தை மனிதனால் ஆய்ந்தறியவும் கட்டுப்படுத்தவும் முடியாத நிலையில் அபார செயற்கைச் செயலாற்றல் மனிதருக்கே சவாலாகவும் மனிதனை அடிமையாக்கிடுதல், ஒழித்திடுதல், என்பது போன்ற ஒரு தீயனவாக இருக்கலாம்.
ஒருவேளை
ஏ.ஐ. முறைகள் இந்த
நிலையை அடையாமல் போனாலும், சில நேரங்களில் ஒரு சிக்கலான கட்டத்தை அடைந்து, அந்த நிலையில் எப்படி இயங்குகிறதென்று புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். இவ்வாறு எந்த நோக்கமுமின்றி, ஆனால் வெளிப்படைத்தன்மை இல்லாத செயல்பாட்டினால் எவ்வித அல்கோரிதங்கள் மூலம் தீர்வுகளைக் காணமுடியும் என்று திகைக்கும் நேரமும் ஏற்படலாம். இவ்வாறு மனிதன் இயந்திர வேகத்துடன் ஈடு கொடுக்க இயலாத நிலையில் சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை போன்றவைகளில் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை முழுமை பெற்ற தன்னிச்சையான ஏ.ஐ. உருவாகவில்லை
என்றாலும், நவம்பர் 2022-ஆம் ஆண்டில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தால்
அறிமுகப்படுத்தப்பட்ட
பதில்பேசி (chat GPT - Generative
Pre-trained Transformer) என்பது
ஒரு மொழி பேசும் இயந்திரம் (Large Language Model). இந்தப்
படைப்பு ஆராய்ச்சியாளர்களிடையே சற்றுத் திகைப்பை ஏற்படுத்திவிட்டது. மனிதரைப் போன்று உரையாடும் ஏ.ஐ. சாதனமான
பதில்பேசியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவுநரான
சாம் ஆல்ட்மேன், அவருடைய உருவாக்கத்தைக் குறித்து அவரே சிறிது பயப்படுவதாகக் கூறுகிறார்.
ஒரு
பெரிய அச்சமென்னவென்றால், ‘மனித கட்டுப்பாட்டிற்கு அப்பால்’ என்ற ஆற்றலை ஏ.ஐ. அடைவது.
இதன் விளைவாக இயந்திரம் மனிதனை அவனின் தனித்தன்மையிலிருந்து விடுபடச்செய்வது; ஒரு கட்டத்தில் மனிதனின் இடத்தை இயந்திரமே பிடித்துக்கொள்ளும் என்ற நிலையையும் அடைவது; இதனால் மனிதன் இப்பூவுலக உயிரினங்களிலேயே தனி அதிகாரச் சக்தியாக விளங்கும் இடத்தை இழப்பதோடு, இயந்திரத்திற்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்படும் சூழல் ஏற்படலாம்.
ஒருமைக்
கோட்பாட்டின் முன்னோடியான ஜான் வான் நியூமேன் என்பவர், “இயந்திரங்கள் ஒருமை நிலையை அடையும்போது மனித இயல்புகள் இல்லாமல் போகும்” என்று
கூறுகிறார். மற்றொரு வகையில், இது மனிதகுல அழிவிற்கு ஆரம்பமாயிருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
இத்தகைய
மனித இயந்திரங்களின் பெருக்கம், உண்மை மனிதர்களை எவ்வாறு சிறுமைப்படுத்தும் என்பதற்கு மூர் கோட்பாடு உதாரணமாகக் கூறப்படுகிறது. மூர் கோட்பாட்டின்படி மைக்ரோ ஃப்ராசஸர்களின் ட்ரான்சஸ்டர்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை செலவு அதிகமில்லாமல் இரட்டிப்படைகிறது என்பது. அதாவது, காலப்போக்கில் இயந்திரங்கள் மிகத்திறன் படைத்தவைகளாகும் என்பது. அறிவாற்றல் கொண்ட மனிதன், தன்னை விட குறைந்த அறிவாற்றலுடைய உலகின் உயிரினங்களைக் குறைவாக மதிப்பதும், தேவைக்கென்று பயன்படுத்துவதும் உலக நடைமுறை. அதுபோன்று, வருங்காலத்தில் அதிக அறிவாற்றல் பெற்ற இயந்திரங்கள், அதைவிட குறைந்த அறிவாற்றல் பெற்றுள்ள மனிதனை எவ்வாறு நடத்தும்? என்ற கேள்வியும் எழுகிறது.
ட்ரான்சென்டென்ஸ்
(Transcendent) என்றால்
என்ன?
ஒருமைக்
கோட்பாடென்பது மனிதச் செயலாற்றலை மிஞ்சுவது. இதையும் மீறிய செயலாற்றலின் தத்துவமே ட்ரான்சென்டென்ஸ். இது இயந்திரங்கள் மனித நுண்ணறிவை அப்படியே பிரதிபலிப்பதோடு, தரத்தில் புதுமை படைத்தல், விண்வெளியில் இதுவரை கண்டறிய முடியாதவற்றை ஆராய்ந்தறிதல், குணப்படுத்த முடியாத நோய்களுக்குத் தீர்வு போன்ற சிக்கலான முடிச்சுகளை அவிழ்ப்பதில் உதவுவது.
இந்நிலையில்,
இயந்திரம் சுயமாக இயங்குதல், மனிதத் திறனுக்கு ஈடு கொடுத்து நிற்பது என்பவை மனோதத்துவ, ஆன்மிக, நெறிமுறை கொண்ட பாரம்பரிய வாழ்வின் முறைக்குக் கேள்வியாய் அமைந்திருப்பது, விஞ்ஞானம் மனிதனுக்கு விட்டிருக்கும் சவால் என்றும் கூறலாம். நம்மை விஞ்ஞானம் வேகமாக நடத்திக் கொண்டு வருகிறது. இன்று ஏ.ஐ. பாதையின்
எல்லையைக் காண இருக்கின்றோம்.
நாம்
நிற்பது ஒளிமயமான எதிர்காலத்தின் வாசலாயிருக்கலாம். ஆனால், இத்துடன் அபாயமும் சேர்ந்து நம்முன் நிற்கிறது என்பதை மறந்துவிடலாகாது. அல்கோரிதம் செயல்பாட்டின் வெளிப்படையின்மையும், இயல்பாகவே காணப்படும் பாரபட்சச் செயலாற்றல் என்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள்
ஒருவேளை, தீங்கிழைப்போர் வசம் சிக்கினால், அதனால் ஏற்படும் சவால்களைக் குறித்து நாம் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டியுள்ளது.
2021, ஜூலை 05 அன்று பழங்குடி மக்களின் அறப்போராளி தந்தை ஸ்டேன் அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பல கண்டனப் போராட்டங்களையும், அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகளின் கண்டனக் குரல்களையும் ஏற்படுத்தியது. மனித உரிமை மீறலான இந்நிகழ்வு நடந்து நான்கு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை ஸ்டேன் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வும், அவரின் எழுத்துகளும் நம்மை வெறுமனே கடந்து செல்லவில்லை என்பதுதான் உண்மை.
அண்மையில்
தந்தை ஸ்டேன் அவர்கள் சிறையில் இருக்கும் வேளையில் எழுதிய கடிதங்களையும் கவிதைகளையும், அவர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளையும் அவரின் ஆங்கிலத் தன் வரலாற்று நூலான ‘நான் மௌன சாட்சி அல்லேன்’
(I am not a Silent Spectator) வழியாக
வாசிக்க நேர்ந்தது. என் வாசிப்பில் நேசித்த, பாதித்த உள்ளொளிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சமத்துவம் பேசும்
கவிதை
தந்தை
அவர்கள் டஜோலா சிறையில் இருக்கும்போது மூன்று கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றில் ‘நம்மைச் சிறப்பாகச் சமப்படுத்துகிற சிறை வாழ்க்கை’
என்னும் தலைப்பில் எழுதியுள்ள கவிதை வரிகள் சமத்துவத்தையும் பொதுத்தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது...
‘நீ முதலில் வருகிறாய்!
நான்
அடுத்ததாக வருகிறேன்; என்றாலும்
நாம்
சுவாசிக்கும் காற்று ஒன்றல்லவா!
என்னுடையது
எதுவுமில்லை,
உன்னுடையது
எதுவுமில்லை,
எல்லாம்
நமதே அவரவர் திறனுக்கும்
அவரவர்
தேவைக்கும் தருவது பொதுத்தன்மை
இது
நெருக்கடிச் சம்மட்டியால் நொறுக்கப்படாமல்
விருப்போடும்
சுதந்திரத்தோடும்
அனைவரையும்
அரவணைக்கும்போது
உண்மையில்
நாம் எல்லாரும்
பூமித்தாயின்
பிள்ளைகளாகிறோம்.’
என்ற
கவிதை வரிகள் தந்தை ஸ்டேன் அவர்களின் ஆழமான சமூக மாற்றுச் சிந்தனையையும், அவர் சமூக மாற்றத்தில் கொண்டிருந்த தாகத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
சாட்சியம் பகரும்
சிறைக்
கடிதங்கள்
சிறையில் மலரும்
மனிதம்:
தந்தை ஸ்டேன் அவர்கள் சிறையிலிருக்கும்போது தனக்கு நடப்பதைப் பிறருக்குத் தெரியப்படுத்தக் கடிதங்களையும் சிறை நாள்குறிப்புகளையும் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் 12 கடிதங்களும், சில குறிப்புகளும் உள்ளன. அவை தந்தை அவர்கள் ஒரு சாட்சியாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன.
தந்தை
ஸ்டேனைப் போல, அதே சிறையில் அதே காரணத்திற்காகச் சிறையிலிருக்கும் சமூகப் போராளிகளான வரவரராவ், வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரைரா அவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தந்தை அவர்களுக்கு நடுக்கு வாதநோய் இருந்ததால் அருண் என்பவர் தந்தை ஸ்டேனுக்கு மதிய உணவருந்த உதவியதாகவும், வெர்னன் என்பவர் தந்தைக்குக் குளிப்பதற்கு உதவியதாகவும் எழுதுகிறார். மேலும், தந்தை ஸ்டேனுடன் உடனிருக்கும் இரண்டு சிறைவாசிகள் மற்ற நேரங்களில் துணிகளைத் துவைத்துத் தருவதில், மூட்டு வலிக்கு மருந்திடுவதில் உதவியாக இருந்ததை நன்றியோடு நினைத்து அதனைத் தனது கடிதம் ஒன்றில், ‘எல்லா முரண்பாடுகளுக்கும் மத்தியில் டஜோலா சிறையில் மனிதம் மலர்கிறது’
என்று எழுதுகிறார்.
சிறையிலும் பிறர்
நலனில்
அக்கறை
கொண்டவர்:
டஜோலா சிறையில் காரணமின்றிச் சிறையில் வாடும் பலருடன் உரையாடி, அவர்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட தந்தை ஸ்டேன் ‘சிறைவாசிகளின் புன்னகையிலும் வலிகளிலும் கடவுளைக் காண்கிறேன்’ என்று
எழுதுகிறார். தனது கருத்துகளை எழுதியதோடு நின்றுவிடாது, செயலிலும் வாழ்ந்து காட்டுகிறார். தந்தை ஸ்டேன் அவர்களுக்கு ‘முகுந்தன் மேனன் மனித உரிமை விருது’ அறிவிக்கப்பட்டு அதற்குப் பாராட்டுத் தொகையாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. அதனை ஆதிவாசி மக்களுக்காகச் சிறையில் வாடும் நபர்களின் குழந்தைகளுக்கு வழங்கிட கேட்டுக்கொண்டார். இச் செயல் தந்தை அவர்கள் பிறர்நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
துன்புறும் மானுடத்தோடு
பயணித்தவர்:
தந்தை அவர்கள் மக்களோடு தனது கையை மடக்கி முழங்கால்மீது வைத்துக்கொண்டு தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படமானது புலனப் பக்கத்தில் பலரும் பகிர்ந்தனர். இப்படம் தான் ‘நான் மௌன சாட்சி அல்லேன்’ என்ற புத்தகத்தின் அட்டைப் படமாக உள்ளது. மக்களோடு உடன் பயணிக்கும் பண்பானது, தந்தை அவர்கள் சிறைக்குச் சென்றும் தனது பணியை நிறுத்திவிடவில்லை; மாறாக, சிறையில் வாழும் சிறைவாசிகளின் உண்மை நிலையை அறிய முற்பட்டதோடு, தன்னுடன் இருப்பவர்களுக்காகச் செபிக்கக் கேட்கிறார். மக்களோடு மக்களைப்போல் உடனிருப்பது, மக்களைத் தனதாக்கிக்கொள்ள வழி செய்கிறது என்ற பணிவாழ்வுக்கான வழிகாட்டியாக அமைகிறார் தந்தை ஸ்டேன்.
உண்மைக்காகப்
போராடுவதில்
ஓய்வு
காணாதவர்:
‘பல
இன்னல்கள், இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தந்தை ஸ்டேன் அவர்களால் எப்படி உடன்பாட்டு எண்ணங்களுடன் சிறை வாழ்வை எதிர்நோக்க முடிந்தது?’ என்ற கேள்விக்குத் தந்தை அவர்கள் சிறைக்குச் செல்லும் முன்னர் காணொளியில் பேசிய வார்த்தைகள் பதிலாக அமைகிறது. “உண்மை
கசப்பாக, கருத்துத் தெரிவிப்பது சகிக்க முடியாததாக, நீதி எட்டாததாக ஏனோ மாறிப் போனது? காரணம், உண்மை அதிகாரத்திற்குக் கசப்பாக, கருத்துத் தெரிவிப்பது ஆளும் வர்க்கத்துக்குச் சுவையற்றதாக, நீதி வலுவிழந்தவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எட்டாக் கனியாக மாறியுள்ளது. இருந்தாலும், உண்மை அறிவிக்கப்பட வேண்டும்; கருத்துத் தெரிவிப்பது உயர்த்தப்பட வேண்டும்; நீதி ஏழைகளின் கதவுகளை அடைய வேண்டும். நான் மௌன சாட்சி அல்லேன். செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிப்பது கடவுளின் விருப்பமென்றால் அவ்வாறே நடக்கட்டும். ஆதிவாசிகளின் உரிமைக்காக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதால் என்னைத் தேசத்துரோகி என்று மரண தண்டனை விதித்தாலும் பரவாயில்லை; அதுவும் நடக்கட்டும்.”
இயேசுவின் இறப்பைத்
தன்னிலே
பிரதிபலித்தவர்:
தந்தை ஸ்டேன் அவர்களுக்குத் தண்ணீர் குப்பி தராத நிகழ்வு மனித உரிமை பறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. இயேசு சிலுவையிலிருந்து ‘தாகமாயிருக்கிறேன்’ (யோவா
19:28) என்று கூறிய நிகழ்வு, இயேசுவைப் பின்பற்றிய தந்தை அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது எனலாம். இயேசுவின் ஏழை எளியோரின் நீதிக்கான வாழ்வை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் அநீதியான தீர்ப்பைப் பழங்குடி மக்களின் வாழ்வுக்காக ஏற்றுக்கொண்டு தன்னுயிர் தந்தார். இவ்வாறு இயேசுவின் இறப்பும், இயேசுவைப் பின்பற்றிய தந்தை ஸ்டேனின் இறப்பும் மனித உரிமை மீறலையே சுட்டிக்காட்டுகிறது.
சவால் விடுக்கும்
கேள்விகள்
தன்னைக்
கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்தேதான் தந்தை ஸ்டேன் அவர்கள் சிறை சென்றதாகக் குறிப்பிடுவது தந்தை அவர்கள், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது, வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாது, நீதிக்காக, உண்மைக்காக இறுதி வரையும் குரல் கொடுத்து, செயல்வீரராக வாழ்ந்த நிலைப்பாடு நம்மில் எத்தனை பேருக்கு வரும்?
தன்னைச்
சுற்றி நடக்கும் அநீதி தனக்கு மட்டும் நடக்கின்ற ஒன்றல்ல என்று சமுதாயத்தின் அவலங்களைக் கண்டுகொண்டு, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட இயேசுவைப்போல சாட்சிய வாழ்வு வாழ அழைக்கிறார். 2020, ஆகஸ்டு 13 அன்று திருத்தந்தை பிரான்சிஸ், “மனித இனம் தன்னலம் மற்றும் கண்டுகொள்ளாமையில் இருந்து குணம் பெறவேண்டும்” என்று
செபிக்க அழைப்பு விடுத்தார். சமூகத்தில்
நடக்கும் அவலங்களைக் கண்டுகொண்டு, சரியான பதிலிறுப்பைத் தன் சாட்சிய வாழ்வு வழியாகத் தந்த இயேசுவைப்போல சமூக மாற்றத்தையும் சமத்துவத்தையும் உருவாக்கும் சாட்சிகளாக வாழ முயற்சிப்போம்.
மேளதாளத்தோடு சவ ஊர்வலம், தார் சாலையெங்கும் காலில் மிதிக்கப்பட்டு ஒப்பாரி வைக்கும் பூக்கள், பாதையில் குறுக்கே செல்லும் மாட்டு மந்தைகளைப்போல சாலையை மறித்துச் செல்லும் பெருங்கூட்டம், கூட்டத்திற்கு நடுவில் மாரடித்து அழுதுகொண்டே ஒப்பாரி ஓலங்களோடு சில பெண்கள்!
யார்
இறந்து போனது? அரசியல் தலைவராக இருப்பாரோ? இல்லை... இல்லை...! அப்படியெனில், கட்சிக்கொடிகள் காணப்பட்டிருக்குமே! சினிமா பிரபலம் யாராவது? சீ! இருக்காது. சினிமா பிரபலமெனில், சினிமா முகங்கள் தென்பட்டிருக்குமே!
மதுரையில்
சாலையோர டீக்கடையில் ஒரு பேப்பர் கப் டீயோடு நின்றிருந்த என்னை இந்தச் சவ ஊர்வலம் திரும்பிப்
பார்க்க வைத்தது. டீ மாஸ்டர் கடைசியில்
மிஞ்சும் டீத்தூளைச் சுடுதண்ணீரில் வடித்தெடுப்பதுபோல, ‘இறந்தவர் யார்?’ என்ற கேள்வி என் மனத்தை வடிகட்டியது.
இத்தனை
மனிதர்களின் மனத்தையும் சம்பாதித்த இந்தப் பெரிய மனிதர் யார்? ஆணா? இல்லை... பெண்ணா? டீக்கடைக்காரரிடம் கேட்டேன். அவரும் “ஒவ்வொரு நாளும் ஒரு சவ ஊர்வலம் போகுது.
அதெல்லாம் யாருனு தெரிஞ்சு வச்சுக்கணுமா?”
இம்முறைச்
சர்க்கரையோடு கொஞ்சம் கோபத்தையும் கலந்தே டீ ஆத்தினார். ‘தெரியாது’ என்று
ஒற்றை வார்த்தையில் அவர் முடித்திருக்கலாம். பரவாயில்லை. சண்டைபோட நேரமும் இல்லை. டீ குடித்த பேப்பர்
கப்பைச் கசக்கி எறிந்துவிட்டு சவ ஊர்வலத்தைப் பேரார்வத்தில்
பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் சென்றபிறகு சவ ஊர்வலம் நின்றது.
மணமகன் ஊர்வலத்தில் மணமகனை மணமகள் கண்கள் தேடுவதுபோல சவ ஊர்வலத்திற்குள் இறந்துபோனவரைக் காண
ஊடுருவிச் சென்றேன். அருகில் சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இறந்துபோனது ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. அது மனிதரே இல்லை! டிராக்டருக்குப் பின்னால் இணைக்கப்பட்ட பெட்டியிலிருந்து ஒரு சிறு ரக கிரேன் கொண்டு
பிணத்தை அப்படியே தூக்கியெடுத்தார்கள்.
அது
ஒரு கோவில் மாடு. மஞ்சளால் பூசப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது அந்த மாடு. ஐயோ! மன்னிக்க வேண்டும். மாடு இல்லை, சாமி! அங்குச் சூழ்ந்திருந்தவர்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள். அவர்களின் அழுகையைப் பார்த்து உண்மையைக் கூற வேண்டுமென்றால், என் கண்ணும் கொஞ்சம் கலங்கியது. மாட்டிற்குக் கொடுக்கும் இந்த மரியாதையில் கொஞ்சமேனும் இந்தச் சமூகம் எனக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
வீட்டிற்குச்
செல்ல பேருந்தில் ஏறினேன். அருகில் வந்த நடத்துநரிடம், “அம்பேத்கர் நகருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என்றேன். டிக்கெட்டை வாங்கிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு சன்னலோரம் அமர்ந்தேன். சன்னல் காற்று என்னவோ இதமாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது முகத்தைத் தழுவிச் செல்லும்போது ஊருக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத என் அப்பாவின் சவ ஊர்வலம் என்
நினைவிற்கு வந்து என் கண்களை நனைத்தது. ‘அடுத்த சென்மத்தில் கோவில் மாடாகப் பிறந்திட வேண்டும்’
என்று எண்ணிக்கொண்டிருக்கையில், ‘அம்பேத்கர் நகர் இறங்கு’ என்ற கண்டக்டரின் குரல் கேட்டு இறங்கிச் சென்றேன்.
எத்தனை
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வந்தாலும், மனிதர்களைப் பிளவுபடுத்தும் சாதி, சமய வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. மனிதர்களுக்கு அன்று கோவில் மாடுபோல இன்று ஏ.ஐ. தொழில்நுட்பம்
சமயச் சடங்குகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றது. கோவில் மாடுகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை இன்று குறைந்திருப்பதால், அதனை ஈடுசெய்ய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாச் சமயங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாகவே
சமயத்தலைவர்கள் அறிவியலின் குறுக்கீட்டையும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தையும் எளிதாக ஆதரித்துவிடமாட்டார்கள். ஆனால், இன்று செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் ஊடுருவியிருப்பதுபோல சமயங்களிலும் அதன் வழிபாடுகளிலும் கால்பதித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது.
சமயத்தைப்
பொறுத்தவரை முக்கியமாக இரண்டு தளங்களில் செயற்கை நுண்ணறிவின் தேவை இருக்கும்: 1) சமயங்களின் மரபுசார் நம்பிக்கையினைப் (Orthodoxy) பாதுகாக்கவும்
ஆழப்படுத்தவும் அதனைப் பரவலாக்கம் செய்யவும் செயற்கை நுண்ணறிவு தேவைப்படலாம். 2) சமயங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையினையும், அதன் கோட்பாட்டினையும் சமூகத்தில் ஈடுபடுத்துவதற்கும், அந்நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கும் (Orthopraxis) செயற்கை
நுண்ணறிவு தேவைப்படலாம்.
ஏற்கெனவே
உலகில் பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவினால் செறிவூட்டப்பட்ட மனித உருவ ரோபோக்கள் சமயப் பயன்பாட்டிலும், அதன் வழிபாட்டு முறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஈரான் நாட்டைச் சார்ந்த அக்பர் ரெசாய் என்ற 27 வயது இளைஞர் ஒருவர் ‘வெல்டன்’
(Veldan) என்னும்
மனித உருவ ரோபோ ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.
குழந்தைகளுக்குக்
குரானையும், இசுலாமியச் செபங்களையும் போதிப்பதற்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரோவடோ என்னும் 42 வயதான கணினிப் பொறியாளர் ‘சாண்டோ’
(Santo) என்னும்
கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கான ஒரு ‘ரோபோ புனிதரை’ வடிவமைத்திருக்கின்றார். இந்த மனித உருவ ரோபோ, முதியவர்கள் செபிப்பதற்கு உதவுகின்றது. ‘பெப்பர்’
(Pepper) என்னும்
மனித உருவ ரோபோவை ‘சாப்ட்பேங்’ என்னும்
ஜப்பானிய நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. புத்தமத பிட்சுகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் சரியாகப் புத்தமதச் செபங்களைப் புத்த வழிபாடுகளில் பயன்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, அடக்கச்சடங்கு நிகழ்வுகளில் ஓதும் செபங்களை மிகச் சரியாகவும் உச்சரிப்புப் பிழையில்லாமலும் ஒப்புவிக்கிறது. மலேசியாவில் புகழ்பெற்ற கோவிலில் சீனக் கடல்தேவதை என்று கருதப்படுகின்ற மசு மாதாவின் டிஜிட்டல் சிலையை (AiMazu) ‘அய்மாசின்’ என்ற
நிறுவனம் வடித்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால்
செறிவூட்டப்பட்ட இக்கடல் தேவதையிடம் பக்தர்கள் என்ன கேள்வி கேட்டாலும், அதற்கு நம்பத்தகுந்த பதிலைச் சமய மற்றும் மனத்தத்துவ அடிப்படையில் தருகின்றது.
சுவிட்சர்லாந்தின்
கத்தோலிக்கப் பேராலயம் ஒன்றில் ‘தேயுஸ் இன் மெசீனா’
(Deus in Machina) என்னும்
இயேசுவின் முப்பரிமாண டிஜிட்டல் உருவம் நிறுவப்பட்டுள்ளது. இத்தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் கேள்விகளுக்கு இறையியல் அடிப்படையில் சுமார் நூறு மொழிகளில் பதிலளித்து வருகிறார் ஏ.ஐ. இயேசு!
சமயங்களில்
ஏ.ஐ. ரோபோக்களின் (Humaniod
Robots) பயன்பாடு தொடக்க
நிலையில் ஆச்சரியமூட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அது எத்தகைய இறையியலை அடிப்படையாகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது
என்பதைப் பொறுத்தே, அது எவ்வகையில் சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் கூறமுடியும்.
கடவுளை
அடைவதிலும், மனித நேயத்தை வளர்ப்பதிலும் ஏ.ஐ. ரோபோக்கள்
பயன்படுமாயின் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், நம் மக்கள் ஏ.ஐ. ரோபோக்களையே
கடவுளாக்கிவிட்டால் அதை என்னவென்பது?