news
சிறப்புக்கட்டுரை
நிரந்தரமா சுதந்திரம்?

வேற்றுமையில் ஒற்றுமைகாணும் இந்தியத் தாய்த் திருநாடு பல்வேறு விழாக்களை ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றது. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனுடைய சுதந்திர தினம்.

இந்தியா சுதந்திரம் பெற்றதா? அல்லது சுதந்திரமானது இந்தியாவுக்கு அளிக்கப்பட்டதா?’ என்ற கேள்வியே உலக அரங்கில் இன்னும் விவாதப் பொருளாக இருக்கின்றது. பிபின் சந்திரா போன்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய மக்களின் கடும் போராட்டத்தாலும் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறுகின்றனர். மறுபுறம் சர்ச்சில் மற்றும் ஜூடித் எம். புரோன் போன்ற ஆங்கிலேயர்கள் பிரித்தானிய அரசு உலகப் போரால் பலவீனம் அடைந்ததன் விளைவாக இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டது என்று இந்திய விடுதலைப் போராட்டத்தின் வலியின் வடுக்களை மறைக்க முயற்சி செய்கின்றனர். இதில் யாருடைய கூற்று உண்மை? என்று பதிலளிக்க வேண்டிய கடமை இந்தியர்கள் அனைவருக்கும் உண்டு. இதே கேள்வியைத்தான் பாரதியும்என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்ற வரிகளின் மூலம் கேட்கின்றார். நாடு சுதந்திரம் பெற்றாலும், நாட்டு மக்களிடம் நிலவும் அடிமை மனப்பான்மையிலிருந்து இன்னும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றது; இந்தியர்கள் சுதந்திரம் பெற்றார்களா?’ என்ற கேள்வியை புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பியுள்ளனர். இதை மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டே அளவிட முடியும். மக்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தைச் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டு ஆய்ந்தறிவது தவறான அணுகுமுறையாகும். ஏனெனில், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவானது பிரித்தானியாவின் ஒரு காலனி நாடு. இதன் காரணமாக இந்தியர்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கான கடமைகளைப் பெருக்கி, உரிமைகளை நசுக்கியது பிரித்தானிய அரசு. ஆனால், தற்பொழுது இந்தியா ஒரு சனநாயக நாடு. சனநாயக நாட்டில் மக்களே மன்னர்கள். எனவே, இந்திய சனநாயகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. இதுவே சுதந்திர நாட்டின் இயல்பான நிலையாகும். இவ்வியல்பான நிலை தவறும்பொழுதெல்லாம், இந்தியக் குடிமகனின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. பல நேரங்களில் வாழ்வாதாரமும், சில வேளைகளில் தனிமனித வாழ்வுமே பறிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சுதந்திரத்தை முழுமையாகச் சுவாசிக்காத இனக்குழுக்கள் இம்மண்ணில் உள்ளன.

பிரித்தானிய அரசிடமிருந்து பெற்ற விடுதலையானது ஊழல், மதக்கலவரங்கள், இன மோதல்கள், சாதியப் பாகுபாடுகள், வாரிசு அரசுகள் மற்றும் பிற்போக்குச் சிந்தனைகள் போன்ற பல கதவுகளுக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது. அக்கதவுகளின் சாவியைச் சிலர் திருடி வைத்துக் கொண்டு, அவர்கள் மட்டுமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் சுரண்டப்படுகின்றனர். அனைவருக்கும் பொருந்தும் வகையில் அம்பேத்கர் வடித்த சட்டப் புத்தகத்தின் முகவுரையில் உள்ளஇந்தியர்களாகிய நாம்என்ற பதம் இன்று அனைத்து இந்தியர்களையும் குறிப்பதில்லை; பணம் மற்றும் அதிகாரத்தைக் கொண்ட உயர் வகுப்பு இந்தியர்களை மட்டுமே குறிக்கின்றது.

நள்ளிரவில் மின்னிடும் நகையுடன் பெண்கள் பாதுகாப்பாய் வலம் வரும் நாளே இந்திய விடுதலை நாளென்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நண்பகலில் அபயா போன்ற பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலையில் இந்தியா உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இராமர், ஒடிசாவில் ஜகநாதர், மேற்குவங்கத்தில் காளி மற்றும் தமிழ்நாட்டில் முருகர் என்று கடவுள்களின் உரிமையைக் காக்க மனிதர்களை ஒன்றிணைக்கின்றனர். இது பக்தியின் வெளிப்பாடாக இருந்தால் பாராட்டுக்குரியது. ஆனால், இது சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராகப் பெரும்பான்மை சமூகத்தின் மனத்தில் பகையை உண்டாக்கும் முயற்சியாகும்.

பெரும்பான்மை மக்களின் கடவுள்களுக்கும் உரிமைக்கும் வாழ்வுக்கும் சிறுபான்மை இன மக்களால் பிரச்சினை என்ற நாசிச மற்றும் பாசிச அரசின் கொள்கைகளை இந்திய மண்ணில் தொடர்ந்து விதைக்கின்றனர். இதன்மூலம் பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் பொருளாதாரச் சுமையை மறக்கடித்து, அவர்களைச் சிறுபான்மையினரின் பக்கம் திருப்பி விடுகின்றனர். இதைத்தான் இலங்கையில் சிங்கள அரசு செய்தது. இன்று இலங்கையின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரச் சுமையைப் பெரும்பான்மை இந்துகளும் மற்றும் சிறுபான்மையினரும் சேர்ந்து சுமக்கின்றனர் என்ற தெளிவை இந்தியர்கள் அனைவரும் பெற வேண்டும். ஏனெனில், வெகுசன மக்களை மதத்தின் பக்கம் திருப்பி விட்டு விட்டு, நாட்டின் செல்வங்களைப் பெரும் முதலைகளும் ஊழல் எலிகளும் சுரண்டுகின்றன.

நாடு முழுவதும் ஏறக்குறைய 6,900 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. ஜெர்மனியின்டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்என்ற தனியார் நிறுவனம் வெளியிட்ட ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 180 நாடுகளில், 96-வது இடத்தில் உள்ளது. வங்கி முறைகேடுகளின் மொத்த மதிப்பு 36,014 கோடி என்று கணக்கிடப்படுகின்றது. இவை மட்டுமே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.5 விழுக்காடு இருக்கும். நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அரசுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதற்காகவே சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொழுதுஇந்தியாவின் 40 விழுக்காடு வளங்களை வெறும் 1 விழுக்காடு நபர்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் ஈட்டும் வருவாயை இந்தியாவின் வருவாயாக ஆவணப்படுத்தி, இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக முழங்குகின்றனர். மொத்தத்தில், இந்தியாவில் பணம் உள்ளது; ஆனால், அனைத்து இந்தியர்களிடமும் இல்லை

இந்தியாவின் உற்பத்தித் திறன் ஒரு மூலையில் அதிகரிக்கும் பொழுது, மக்களின் வாங்கும் திறன் குறைந்து கொண்டிருக்கின்றது. இதன்மூலம் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை விரைவில் சந்திக்க உள்ளது. உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக வளர்ச்சியடைய வேண்டும். அப்படி இல்லாமல் உடலின் ஒரு பாகம் மட்டும் வளர்ந்ததென்றால் அது வீக்கம், நோய். இந்தியாவும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையேயான பெரும் பொருளாதார இடைவெளி என்ற நோயால் அவதிப்படும் அபாயத்தில் உள்ளது.

இப்படி மக்களை மதங்கள் மற்றும் இனக் கலவரங்களில் மூழ்க வைத்து, நாட்டின் மொத்த வளங்களும் சுரண்டப்படுகின்றன. சுதந்திரம் பெற்ற இந்தியாவின் வளமானது பணக்காரர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கடன் சுமை, வரி என்ற பெயரில் பாமர மக்களின் முதுகில் ஏற்றப்படுகின்றது

இப்படிப் பொருளாதாரச் சுரண்டல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இருப்பவருக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்று நீதியைத் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றுகின்றனர். இதற்கு ஏதுவாக, அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற முயற்சிக்கின்றனர். செயற்கையாகக் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே, நிகழும் கலவரங்களில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றுகின்றனர். இதற்கு இன்றும் தொடரும் மணிப்பூர் கலவரமே எடுத்துக்காட்டாகும். ‘ஆப்ரேஷன் சிந்தூர்என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்கள், உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பிறருக்குத் தெரியாமல் தவறான தரவுகளைக் கொண்டு மறைக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டிய மாநில அரசுகளை, வருமானவரித்துறையின் மூலம் தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கின்றனர்.

எப்பொழுது நாட்டு மக்களின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆட்சியாளர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின் நலன் முன்னிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்நாட்டு மக்கள் தங்களின் சுதந்திரத்தை இழக்கின்றார்கள். இந்த அடிமை முறையிலிருந்து விடுபட இந்தியர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்.

வரி செலுத்துவதுபோல், வாக்கையும் சரியாகச் செலுத்தவேண்டும். சரியான முறையில் சரியானவர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே, குறைவான வரி என்பது இந்தியாவில் சாத்தியமாகும். நாட்டை ஆட்சி செய்வதற்காகத் தேர்தல் என்ற நிலை மாறி, அரசியல் விளையாட்டுகளின் முதல் புள்ளியாகத் தேர்தல் மாறிவிட்டது. இதற்கு இந்தியர் அனைவரும் காரணம் என்று உணர வேண்டும். அரிஸ்டாட்டில்குடியரசுஎன்ற தன் படைப்பில் கூறுவது போல்குறைந்த தீமையைத் தேர்ந்தெடுக்காமல், நிறைந்த அறிவுடன், பிறர்நலச் சேவைக் கண்ணோட்டத்துடன் தேர்தலில் நிற்கும் இளைஞர்களுக்கும், கட்சிசாரா தன்னார்வத் தொண்டர்களுக்கும் வாக்களிக்கவேண்டும். இனி வரப்போகும் அனைத்துத் தேர்தல்களிலும் அறிவாளிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முழுச்சுதந்திரமே இலக்குஎன்று இச்சுதந்திர தின நாளில் முடிவெடுப்போம். இந்தியர்கள் அனைவரும் தாய்த்திருநாட்டின் மன்னர்கள் ஆவர். தன்னுடைய சகமனிதன் துயருறும்பொழுது, ஒவ்வொரு மன்னரும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். மணிப்பூரில், காஷ்மீரில், சாத்தான் குளத்தில் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியெரியும் பொழுது, இந்தியர்கள் அனைவரும் கொதித்தெழ வேண்டும். ஏனெனில், அதேநிலை நமக்கு நாளை வரலாம்; அப்பொழுது, நமக்காகக் குரல் கொடுக்க அவர்கள் வேண்டும்.

மதவாதம், ஊழல், சாதி பாகுபாடு, வாரிசு அரசியல் மற்றும் சினிமா மோகம் என்ற பாதையில் பயணிக்கும் இந்திய அரசியலை முற்போக்குப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டியது இந்தியர்களுடைய கடமையாகும். ஒவ்வோர் இந்தியனும் அரசியல் போக்கை அறிந்து, விவாதித்து அதைச் செயல்படுத்தவேண்டும். நல்லது செய்பவர்கள் இந்த அரசியல் கோமாளிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து அரியணை ஏற்ற வேண்டும். அதற்கு இந்தியாவில் உள்ள இன, மொழி, மத, சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும். ஏனெனில், இந்தியர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இப்புரட்சிகள் நிகழ்ந்தால்இந்தியா தானாக முன்னேற்றம் அடையும். இந்தியர்களும் முழு சுதந்திரம் அடைவார்கள். இந்திய இளைஞர்கள் தங்கள் கையில் இணையம் மட்டுமல்ல, இந்தியாவும் உள்ளது என்று உணர வேண்டும்.

இளைஞர்கள் அரசியல் பயின்று, அரசியல் பாடமெடுக்கத் தொடங்கும் நாளில், இந்தியாவின் சுதந்திரம் நிரந்தரமாகும். அதுவரை...?

news
சிறப்புக்கட்டுரை
சிறைக் கைதிகளின் குரலைக் கேட்போம்!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் சிறைப்பணியானது சிறைக்கைதிகளுக்கும், அவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்கும் தேசிய தன்னார்வ இயக்கமாகும். இது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் யூபிலி 2000-ஆம் ஆண்டில் இந்தியச் சிறைப்பணியாக அங்கீகரிக்கப்பட்டது.

எங்கள் தன்னார்வத் தொண்டர்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் 850 பிரிவுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம், குறிப்பாக ஆற்றுப்படுத்துதல், மருத்துவ முகாம், இலவசச் சட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள், உள்மனக் குணமளிக்கும் தியானங்கள், வேலை சம்பந்தமான பயிற்சி முகாம்கள்... இவற்றின் மூலமாக இந்தியாவில் உள்ள சிறைகளில் மிகவும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

வெளிநாட்டுச் சிறைவாசிகள் நமது இந்தியச் சிறைகளில் மொழி அறியாது வாடிவருகின்றனர். அவர்களது குரலைக் கேட்டு, நமது தாயாம் திரு அவையின் அந்த நாட்டுத் தூதர்கள், ஆயர்கள், குருக்களைத் தொடர்புகொண்டு அவர்களது குடும்பத்தாரோடு இணைத்துவைப்பது நமது சிறப்புப் பணியாகும்.

புனித மாக்சிமில்லியன் கோல்பே தன்னுடைய துணிவான வாழ்வு முறையால் சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புனித கோல்பே இரண்டாம் உலகப் போரின் போது சிறைப்பிடிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். அவர் சிறைக்கைதிகளோடு இருந்தபோது தனக்காக அளிக்கப்பட்ட சிறிதளவு உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். பலரைச் சிறப்பானதோர் ஒப்புரவு அருளடையாளம் பெற ஆயத்தம் செய்து, அவர்களுக்காகச் செபம் செய்தார். இறுதியாக, ஒரு சகோதரருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து, இன்றைய உலகில் யாரும் செய்ய இயலாத காரியத்தை அன்று செய்து முடித்தார். இந்தத் தியாக மனநிலை, பகிர்தல், தனக்கு முக்கியம் என்று கருதுகின்ற சில பொருள்கள், செபம், நேரம், பணம் மற்றும் நமது வாழ்வு ஆகியவற்றை இன்று இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

தமிழ்நாட்டில் 9 மத்தியச் சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச்சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கிளைச் சிறைச்சாலைகள் உள்பட 120 சிறைச்சாலைகளில் 22,631 சிறைவாசிகள் நமது வரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில், சிறைவாசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, சிறைவாசிகளின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி மற்றும் சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட சேவைகள் சிறைப்பணித் தன்னார்வத் தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகின்றன.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயரின் உதவியுடன் உற்றார் உறவினர் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுஎங்களுக்கு ஒருவருமில்லைஎன்ற சிறைவாசிகளின் மன ஏக்கத்தை மாற்றும் முயற்சியாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.

இறுதியாக, இயேசுவின் விடுதலைப் பணியில்சிறைப்பட்டோருக்கு விடுதலைஎனும் முழக்கம் மையம் கொண்டிருந்ததுபோல, நாமும் சிறைக் கைதிகளின் குரலைக் கேட்போம்! அவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
சமூக நீதி வேண்டும்! - ஆகஸ்டு 10 (கறுப்பு நாள்)

சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலாச்சாரத் தளங்களில் மிகவும் பின்தங்கி பிற்பட்ட நிலையில் உள்ள மக்களுக்குச் சிறப்புச் சலுகை வழியாகத்தான் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியிலும் மன்னர் ஆட்சியிலும் சுதந்திர இந்தியாவிலும் தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.

வரலாற்றில் தலித் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார உரிமைகள் வர்ணாசிரமத் தர்மத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டது. மனித உரிமைகளைப் பிறப்போடு இணைக்கப்பட்ட சாதியின் அடிப்படையில் மறுப்பதை மனுதர்ம சாஸ்திரம் சட்டமாக்கியது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக நீதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ஆம் நாள் கறுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, தலித் கிறித்தவர்களுக்குப் பட்டியல் வகுப்பினர் உரிமைகளை ஒன்றிய அரசு வழங்க தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. பல்லாண்டு காலம் இந்தியக் கிறித்தவர் என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கிட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 சனாதிபதி ஆணையில் சனாதிபதி கையெழுத்திட்ட நாள் ஆகஸ்ட் 10-ஆம் நாள் கறுப்பு நாள் ஆகும்.

தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

அரசியல் பிரிவு 341 அளிக்கும்அரசியல் அதிகாரம் குடியரசுத் தலைவர் பட்டியலினச் சாதிகளின் பட்டியல் அளிப்பதுஎன்று உள்ளது. ஆனால், முதல் குடியரசுத் தலைவர் திரு. இராஜேந்திர பிரசாத் அத்துமீறி, அரசியல் சாசனம் அளித்த அதிகாரத்தையும் கடந்து, ஓர் அநீதியான Constitution (Scheduled Caste) Order 1950 என்ற ஆணையை வெளியிட்டார். 1950 என்ற ஆணை 3-வது பத்திஇந்து மதத்தைத் தழுவாத தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தார் (SC) என்று கருதப்படமாட்டார்என்று கூறுகிறது. இந்த ஆணை சமயத்தின் அடிப்படையில் ஷெட்யூல்டு வகுப்பைச் சார்ந்த மக்களைப் பிரித்து, இந்து மதத்தைத் தழுவாத தலித் மக்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் சாதி (SC) பெயரால் அளிக்கும் உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மறுக்கிறது. இந்த ஆணை அரசியல் நிர்ணயச் சாசன சட்டம் எண் 15/4, 46,330, 332, 341, 25 பிரிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது. சமய சார்பற்றத்தன்மையை ஒழிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் சாதியின் அடிப்படையில் அளிக்கின்ற உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மதம் மாறிய தலித் மக்களுக்கு இந்தக் குடியரசுத் தலைவரின் ஆணை மறுக்கிறது. இவ்வாணை திருத்தப்பட்டு, மதம் மாறிய சீக்கிய தலித் மக்களுக்கு 1956-ஆம் ஆண்டும், புத்தமத தலித் மக்களுக்கு 1990-ஆம் ஆண்டிலிருந்தும் பட்டியலின சலுகைகளையும் ஒதுக்கீட்டு உரிமைகளையும் அளிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசுகள் தொடர்ந்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியின் அடிப்படையில் அளிக்கும் பட்டியலின (SC) உரிமைகளை மறுத்து வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளாட்சி அனைத்திலும் ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலினத்தார்க்கு அளிக்கப்படும் சமூக நீதி, மதம் மாறிய கிறித்தவப் பட்டியலினத்தார்க்கு மறுக்கப்படுகிறது.

போராட்டம்

2010, ஆகஸ்டு 10-ஆம் நாள் முதல் ஆண்டு தோறும்கறுப்பு நாள்கண்டனத்தை வெளிப்படுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் மூலம் தலித் கிறித்தவர்கள் சம உரிமை பெறுவதற்கான போராட்டங்களை, திட்டங்களை முன்னெடுக்கின்றது. 1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போராட்டம் சம நீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவைத் தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் பேரணி மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளன. மத்திய-மாநில தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன. இச்சமூக நீதி பிரச்சினை அரசிய லாக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

கோரிக்கைகள்

ஒன்றிய அரசு மே 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான குடியரசுத் தலைவரின் ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி, SC பட்டியலில் சேர்க்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றவேண்டும்; 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு (WP 180/2004) விசாரணைக்குப் பா... அரசு உடனே பதில் தரவேண்டும்; நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்க வேண் டும்.

இந்த அநீதியை ஒழித்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு, அரசினர் தலித் தீர்மானத்தை 19.04.2023 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க அரசினர் தலித் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்குக் கிறித்தவச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகிறது.

பா... கொள்கையின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு உரிமைகளை முற்றிலுமாக மறுக்கிறது. ஆகவே, பா... தொடக்கத்திலிருந்தே தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை மறுக்கிறது. பாராளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அநீதியாக எதிர்க்கிறது.

கிறித்தவச் சமூகம் தாய்த்திருநாட்டிற்கு எண்ணற்ற நன்மைகளை ஆற்றி வருகிறது. கல்விச் சேவையில் அனைவரும் பாராட்டும் வகையில் அர்ப்பணத்தோடு செயல்படுகிறது. கிறித்தவ மக்கள்தொகை 2.5% உள்ளது. அதில் தலித் கிறித்தவர் 1.5% அவர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து ஒதுக்கீட்டு உரிமையை அளிப்பதால் மற்றவர்களுக்கு இழப்பில்லை. ஆகவே, இவர்களுக்குச் சமூக நீதி அடிப்படையில் பட்டியலினத்தார் உரிமைகளைப் பா... மறுப்பது மாபெரும் அநீதியாகும். தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சமூக நீதியை நிலைநாட்டும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற வழக்கில் நீதி கிடைக்கவும், ஒன்றிய அரசு தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தார் (Scheduled Caste) பட்டியலில் சேர்த்துச் சமூக நீதி வழங்கவும், இந்தியத் திரு அவை தேசிய அளவில் தொடர்ந்து போராட வேண்டும்.

போராடுவோம், சமூக நீதியை வென்றெடுப்போம்!

news
சிறப்புக்கட்டுரை
துன்பப்படும் தலித் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்!

கறுப்பு தினத்தை (ஆகஸ்டு 10) நினைவுகூர  தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலித் பணிக்குழுத் தலைவரின் சுற்றறிக்கை

அன்புக்குரியவர்களே,

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் தலித் பணிக்குழுவின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியலமைப்புபட்டியல் சாதிகள் ஆணைகையெழுத்திடப்பட்டு 74 ஆண்டுகள் நிறைவடையும் இந்நாள் தலித் கிறித்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் மதம் காரணமாக, பட்டியல் சாதியினராக (SC) அடையாளப்படுத்தப்படுவது அநியாயமாக மறுக்கப்பட்டதைக் குறிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் குடிமை உரிமைகள் மனு (Civil Rights Petition) 180/2004 நிலுவையில் உள்ள போதிலும், இந்தக் கொடுமையான அநீதி தொடர்கிறது. இவ்வேதனையை வெளிப்படுத்தவும், அரசியலமைப்பு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதைக் கண்டித்தும் அமைதியான முறையில் நாம் போராட்டம் நடத்த விரும்புகிறோம். இந்த இக்கட்டான சூழலில் அரசின் கவனத்தை ஈர்க்க கறுப்பு தின நிகழ்வுகளை ஆகஸ்டு 10, 2025 அன்று மேற்கொள்ள அன்போடு வேண்டுகிறோம்.

இந்த ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது. எனவே, ஒவ்வொரு பங்கு ஆலயத்திலும் முக்கியத் திருப்பலிக்குப் பிறகு நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாம் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து வலியுறுத்த வேண்டுகிறோம்.

ஆகவே, அனைத்து ஆலயங்களிலும் கிறித்தவ வீடுகளிலும் கறுப்புக் கொடிகளை ஏற்ற ஏற்பாடு செய்யவும், பரந்த சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் தலைவர்களைக் கொடி ஏற்றுவதில் பங்கேற்க அழைத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். அனைத்துப் பங்கு ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் பங்குத்தந்தைகள் அல்லது நிறுவனத் தலைவர்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி இந்நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நம் போராட்டத்தின் தீவிரத்தை வலியுறுத்தும் வகையில், ஆயர் மறைமாவட்டத் தலைமையகம் அல்லது பேராலயத்தில் தனிப்பட்ட முறையில் கறுப்புக் கொடியை ஏற்றிடவும் அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே, 2025 ஆகஸ்டு 11 அன்று மறைமாவட்டப் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் ஆணையச் செயலாளர், தலித் பிரதிநிதிகளுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் (MPs) சந்தித்து, தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

அதிகபட்சப் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வண்ணம், பல்வேறு குழுக்களைத் தயாரிக்கவும், அனைத்துக் குருக்கள் மற்றும் துறவறத்தார்களின் ஆதரவைப் பெறவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் செயலாளர் ஓர் ஆயத்தக் கூட்டத்தைச் (தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் இருவர் உடனும்) சாத்தியமான இடங்களில் ஏற்பாடு செய்யவும், இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையர் ஆகியோருக்கு விரிவான மனுக்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்கவும் வேண்டுகிறோம். மேலும், அனைத்துக் கூட்டங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்தவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) ஒதுக்கீட்டிற்குள் தலித் கிறித்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு கோரும் நமது கோரிக்கைக்கு ஆதரவாக முடிந்தவரை பல கையொப்பங்களைச் சேகரிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக, தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்தப்படுவதில் மறுக்கப்படும் உரிமைகள் குறித்து, இந்திய அரசுக்கு நாம் இடைவிடாமல் நினைவூட்ட வேண்டும். இந்த முயற்சியில் உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது உறுதியான ஆதரவையும், பட்டியல் சாதியில் பிறந்து துன்பப்படும் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு குருக்கள், துறவறத்தார் மற்றும் நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மக்கள் அதிக அளவில் பங்கேற்க தீவிரமாக ஊக்குவிக்குமாறும் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

news
சிறப்புக்கட்டுரை
‘சமயச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!’ (தமிழ்நாடு ஆயர் பேரவையின் கண்டன அறிக்கை!)

அண்மைக்காலங்களில் இந்தியாவில் மதவாதச் சக்திகளால் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமயச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு போன்ற நிகழ்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி அன்று மிகவும் கவலைக்குரிய நிகழ்வு ஒன்று சத்தீஸ்கரில் உள்ள துர்க் இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மேரி இமாக்குலேட் அசிசி துறவற சபை அருள்சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவர் மீதும் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றக் குற்றங்கள் போலியாகச் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி, சமயம் பாராமல் ஏழை, எளியவர்களுக்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த இந்த அருள்சகோதரிகளுக்கு நேர்ந்தது சனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ்நாடு ஆயர் பேரவை வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறது.

அர்ப்பணிப்புடன் செயல்படும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயலாக இது அமைகிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, அந்த இரு அருள்சகோதரிகளை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. அத்தோடு, சமயச் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், தனிநபர்கள் சமய நம்பிக்கைகளுக்காக அநியாயமாகக் குற்றம் சுமத்தப்படவோ துன்புறுத்தப்படவோ கூடாது என உறுதி செய்யவும் வேண்டும். சிறுபான்மையினரைத் தவறாகக் குற்றம்சாட்டப் பயன்படுத்தக்கூடிய மாநிலச் சட்டங்களின் சீர்திருத்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது

பரந்த நம் இந்திய நாட்டில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து, வேற்றுமையில் ஒற்றுமைப் பாராட்டி, சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் மீதான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

+ மேதகு பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
சிறப்புக்கட்டுரை
ஈமோஜி முகங்கள்! (வலையும் வாழ்வும் – 23)

வெள்ளையடிக்கப்படாத சுவற்றில் ஒற்றைக் கீறலோடிருந்த அந்த முகக் கண்ணாடியில், தன் முகம் பார்த்துத் தலைவாரிக் கொண்டு அவசரம் அவசரமாக வெளியே கிளம்பினான் சத்யா. ‘டேய்! கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போகலாம்லஎன்ற தன் தாயின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘வந்து சாப்பிடுறேன்மாஎன்று மட்டும் சொல்லிக்கொண்டு போனான்.

அந்த வீட்டில் என்னவோ எல்லாருடைய முகமும் ஏதோ சோகத்தைப் பிரதிபலித்துக்கொண்டே இருந்தன. சத்யாவுக்குச் சிறுவயதிலிருந்தே பைக் ஓட்டப் பிடிக்கும். வீட்டுச்சுவர் முழுவதும் ரேஸ் பைக்குகளின் கதாநாயகர்கள் சிரித்த முகத்தோடு இருப்பது போன்றே புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். சிறு வயது முதலே சிறுகச் சிறுக பைக் வாங்க வேண்டுமென்பதற்காகவே உண்டியலில் சேமித்தும் வந்தான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் பைக் வாங்கித் தரவேண்டும் என்று முன்கூட்டியே வீட்டில் சொல்லி வைத்திருந்தான்.

சத்யாவின் குடும்பம் அப்போது பைக் வாங்கிக் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆம்னி பஸ் ஓட்டுநராக இருந்த அவனுடைய அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கோர விபத்துக்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார். கால்களில் முறிவு ஏற்பட்டது. அவருடைய முகம் சிதைந்திருந்தது. எனவே, எப்போதும்மாஸ்க்அணிந்திருப்பார். வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டார். அதன் பிறகு வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வந்தார். அவர் அழுவதையும் சிரிப்பதையும் யாரும் கண்டதில்லை. அந்த விபத்திற்குப் பிறகு சத்யாவின் பைக் கனவும் தடைபட்டது. அதன் பிறகுபைக் வாங்கித் தாங்கஎன்று அவன் தன் பெற்றோரிடம் கேட்டதே இல்லை. ஆனாலும், அவனுக்குப் புதிய பைக் வாங்கணும் என்ற ஏக்கம் இருந்தது. மதுரை அருளானந்தர் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசிக்கல் சயின்ஸ் படித்து வருகிறான்.

சத்யாவின் குடும்பத்திலிருந்த ஒரே நம்பிக்கை சாந்தி அக்காதான். ‘கவலைப்படாத உனக்கு நான் ஒருநாள் பைக் வாங்கித்தரேன். கொஞ்சம் பொறுத்துக்கோஎன்று தன் தம்பியை அவ்வப்போது தேற்றுவாள் சாந்தி. கல்லூரிப்படிப்பை முடித்திருந்த சாந்திக்கு நிறைய படிக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால், வறுமையின் காரணத்தினால் அவளால் மேற்படிப்பிற்குச் செல்ல முடியவில்லை. அருகிலிருந்த டோல்கேட் ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக ஆபிஸ் கிளர்க்காகப் பணிசெய்து வருகிறாள்.

உனக்குப் பிடித்த பைக்க வாங்கிக்கோ. மீதி காச மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமா கட்டலாம்என்று ஒருநாள் தான் சொன்னபடியே தன் தம்பி சத்யாவை அழைத்து அவன் கையில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைத் திணித்தாள் சாந்தி. ‘எதுக்குமா பைக்கெல்லாம்? அவனுக்குப் பிறகு வாங்கிக் கொடுக்கலாம். உன் கல்யாணத்துக்குக் கொஞ்சம் சேர்த்துவைச்சா நகை நட்டு வாங்க உதவுமுல?’ தாய் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தாலும் சாந்தி கேட்கவில்லை.

அந்தப் பணத்தைத் தன் கையில் பெற்றுக்கொண்ட சத்யா அப்படியே தன் அக்காவை இறுக அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.  ‘வீடு இருக்குற நிலையில் இவனுக்கு இது தேவையா?’ தன் மனைவியிடம் சொல்லிக் கவலைப்பட்டார் சத்யாவின் அப்பா. இருவரின் முகமும் வேதனையில் ஆழ்ந்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா காலையிலேயே சாப்பிடாம போனவன இன்னும் காணலியே. உன் தம்பிக்கு ஒரு போன் போட்டுக் கேளு சாந்திஎன்று சொல்லிக்கொண்டு சோறு வடிக்கத் தயாரானாள் சத்யாவின் தாய். வீட்டிற்கு வெளியே பட்டாசு சத்தம்; பெருங்கூட்டம். சத்யாவின் நண்பர்கள் புடைசூழ புதிய வண்டி வாசலிலேயே வந்து நின்றது. தன் பெற்றோரிடம் முதலில் காட்டவேண்டும் என்பதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது அது.

அக்கம் பக்கத்து வீட்டார் கண்கள் அனைத்தும் வண்டி மேலேயே வேரூன்றிருந்தன. ‘டேய்! சத்யா வண்டி வாங்கிட்ட? கலக்கு மச்சான்பக்கத்து வீட்டு நண்பன் வாழ்த்து சொன்னான்.

சத்யாவின் முகத்தில் பிரமிப்பு இருந்தது. தான் எதையோ சாதித்ததாக நினைத்தான். தன் பெற்றோரையும், தன் அக்கா சாந்தியையும் அருகில் வரவழைத்து மூடப்பட்டிருந்த துணியைத் தூக்கியெறிந்து வண்டியை அவர்களிடம் காட்டினான். நண்பர்கள் கைதட்ட, பட்டாசு காகித மலர் சொரிய, அந்த நிகழ்வே தடாலடி கொண்டாட்டமாக இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அது அவனுக்கான உயர்ரக பைக் இல்லை. தன் தந்தைக்காக அவன் பிரத்யேகமாகச் செய்துபெற்ற நான்கு சக்கர பைக்.

அப்பா! இந்தப் பைக்கை அக்காவின் பணத்தை வைத்தும், என் சேமிப்பையும் போட்டு வாங்கினேன். என்னைவிட உங்களுக்குத்தான் இப்போ இது தேவைப்படுகிறதுஎன்று சொல்லி கண்ணீர் வடித்தான் சத்யா. தன் தம்பியின் செயலை நினைத்து சாந்தி அவன் தோளைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டுஅப்பா! ஒரு ரவுண்டு ஓட்டிப்பாருங்க. வாங்கஎன்று சொல்லி தன் அப்பாவை அழைத்தான் சத்யா. தன் மாஸ்கை கழற்றியெறிந்து விட்டு தன் முகச்சிரிப்பைத் தன் மகனுக்கு அன்று அவர் பரிசளித்தார். இதற்காகவே இத்தனை ஆண்டுகள் தவமிருந்ததாக உணர்ந்தது அக்குடும்பம். முகம் ஆயிரம் பேசும் என்றாலும், அன்று மட்டும் அங்கிருந்தவர்களின் ஒவ்வொரு முகமும் ஒன்றையே பேசியது. அது மகிழ்ச்சி!

தொடர்பாடல் (communication) என்பதே உணர்வுகளை, எண்ணங்களை, தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுதான். ஆயினும், நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் நூறு விழுக்காடு நம்மால் பிறருக்குக் கடத்தமுடிகிறதா என்றால், அது இல்லை. எனவேதான் தகவல் தொடர்புக்கு, சொல் தொடர்பாடலும் (verbal communication), சொல்லில்லாத் தொடர்பாடலும் (non verbal communi cation) மிக முக்கியம்.

வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகிலே பிறரோடு பேசுவதற்குப் பதிலாக, குறுஞ்செய்திகளைப் புலனம் (whats app) வழியாகவோ, எஸ்.எம்.எஸ். வழியாகவோ அனுப்புகிறோம். ஆனால், இது நாம் நினைப்பதை அல்லது உணர்வதைச் சரியாக எடுத்துரைப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இன்று பலரும் பயன்படுத்துகின்ற ஒன்றுதான்ஈமோஜிகள் (Emojis). தமிழில் இதனைஉணர் சின்னங்கள்என்றும் சொல்லலாம் (இது என் கண்டுபிடிப்பு). எனினும், இங்கு நமது புரிதலுக்கு வேண்டிஈமோஜிகள்என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறேன்.

பொன்னிற முகம், சிவந்த கன்னங்கள், முகம் முழுக்க இதயம், அதோடு ஓர் அழகிய சிரிப்பு. காதலைத் தெரிவிக்க, சோகத்தைக் காண்பிக்க, அதிருப்தியை வெளிப்படுத்த என்று ஏராளமான ஈமோஜிகளை நாம் பயன்படுத்துகிறோம். இப்போதெல்லாம் ஈமோஜிகளைப் பிசினஸ் உலகிலும் பலர் மார்கெட்டிங்காகப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்காட் . பால்மேன் என்பவர் எண்பதுகளில் முதன் முதலில்ஈமோடிகான்ஸ் (Emotiocons – Emotions+icon) என்ற பெயரில் ஈமோஜிகளை வடிவமைத்துத் தன் மின்னணுத் தகவல் தொடர்பிற்குப் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது நாம் பயன்படுத்துகின்ற ஈமோஜிகள்ஷிகேடகா குரிட்டாஎன்னும் ஜப்பானைச் சேர்ந்தவரால் முதன்முதலில் 2001-ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.

Emojiஎன்பதற்கு ஜப்பானிய மொழியில்Eஎன்றால் படங்கள், ‘mojiஎன்றால் எழுத்துருக்கள் என்று பொருள். ஓர் ஆய்வின் அடிப்படையில் இன்று 74 விழுக்காடு அமெரிக்கர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளில் ஈமோஜிகளைப் பயன்படுத்துகின்றார்கள். இன்று சமூக ஊடகங்களிலும், அன்றாட மெசேஜ்களிலும் ஈமோஜிகள் பயன்படுத்தப்படாத குறுஞ்செய்திகள் இல்லை என்றே கூறவேண்டும்.  

எல்லாவற்றையும் வேகமாகவும் சுருக்கமாகவும் கூறவிரும்பும் இத்தலைமுறையினர் குறுஞ்செய்திகளிலும் ஈமோஜிகளிலும் மட்டுமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சொல்ல விரும்பும் செய்தி சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சூழல், மொழிவளம் குன்றுகின்ற நிலை, செய்தியின் தீவிரத்தன்மையை அறிந்திராது கடந்துபோகின்ற போக்கு என்று ஏராளமான தகவல் தொடர்பு இரைச்சல்களை உருவாக்கக்கூடும்.

சக மனிதர்களிடம் முகமுகமாகப் பேசி, சிரித்து, அழுது, கோபித்து, வெட்கி, உறவாடி மகிழ்வது தொடர்பாடலின் உன்னத நிலையே. இவ்வுணர்வினை எந்த ஈமோஜிக்களாலோ ஸ்டிக்கர்களாலோ கொடுக்கமுடியாது என்பதே உண்மை. (தொடரும்)