சுமார் 800 வருடங்களுக்கு முன் புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு மாபெரும் அபாயச் சங்கை ஊதிச்சென்றார். அது ‘இயற்கை-மனிதன் உறவில்’ ஏற்பட்டிருந்த சறுக்கலைப் பற்றியது; இயற்கைக்கு எதிராக மனிதன் செய்து கொண்டிருந்த செயல்பாடுகளைப் பற்றியது; மனித இனத்தின் அழிவைப் பற்றியது. இப்பேராபத்திலிருந்து மனிதன் தப்பிக்க வேண்டும் என்றால், அவனுடைய ‘மனிதச் செயல்பாடுகளில்’ ஒரு மாபெரும் மாற்றம் தேவை என்று புனித பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
மனித
வாழ்வு அடிப்படையில் நான்கு உறவுகளைச் சீராக வைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இவை நான்குமே ஒன்றாகச் சமநிலையில் பயணிக்க வேண்டியவை. ஒரு நிலையில் விரிசல் ஏற்பட்டாலும், மற்ற நிலைகளையும் சரித்துவிடும் அபாயம் உள்ளது. புனித பிரான்சிஸ் அந்த நான்கு உறவுகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறார்:
1. என்னோடு
நான் கொண்டுள்ள உறவு
2. நான்
கடவுளோடு கொண்டுள்ள உறவு
3. நான்
அயலாரோடு கொண்டுள்ள உறவு
4. நான்
படைப்போடு கொண்டுள்ள உறவு
தொடக்கத்தில்
ஏதேன் தோட்டத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படியாத காரணத்தால்தான் கடவுளோடு கொண்டிருந்த உறவை மனிதன் முறித்துவிட்டான். அதன் விளைவாக மற்ற மூன்று நிலைகளில் உள்ள உறவையும் மனிதன் முறித்துக் கொள்கிறான். இந்த அவல நிலையைப் புனித பிரான்சிஸ் அசிசியார் நிவர்த்தி செய்யும் முயற்சியில், அதே நான்கு உறவுகளையும் சீராக அமைத்துக்கொள்வதன் மூலம், மீண்டும் கடவுள் நம்மைத் தூக்கி எறிந்த ஏதேன் தோட்டத்திற்கு நாம் திரும்பிவிடலாம் எனும் மாபெரும் நற்செய்தியைத் திரு அவைக்குக் கொடுத்துச் சென்றார். ஆனால், திரு அவையில் பெரிய மாற்றம் வந்தது போல வரலாறு நமக்குக் கூறவில்லை. எதிர்பாராத விதமாக, 800 வருடங்கள் அந்த நான்கு உறவுகளில் மனிதன் என்னென்ன அழிவுகளை உருவாக்க முடியுமோ அவற்றையெல்லாம் செய்து முடித்தான். திரு அவையும் புனித அசிசியார் காட்டிய பாதையில் நடக்க மறந்திருக்கிறது.
அதன்
காரணமாக, புனித பிரான்சிஸ் அசிசியாரே மீண்டும் ‘திருத்தந்தை பிரான்சிஸ்’ எனும்
அவதாரத்தை எடுத்து, மார்ச் மாதம் 13-ஆம் நாள் 2013-ஆம் ஆண்டு இப்புவியில் அவதரித்தார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவதாரம் எடுத்த இரண்டு ஆண்டுகளில் 2015, மே 24 அன்று திரு அவையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழுமையான திருத்தூது மடலைத் தந்திருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்þ. மொத்தம் 246 பத்திகளைக் கொண்டது ‘laudato si’ என்னும் இம்மடல்.
தமிழில் ‘புகழ் அனைத்தும் உமதே’ என்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.
ஏறக்குறைய
2014 ஆண்டுகளாக ‘மனித-இயற்கை உறவை’ பற்றிய தெளிவான சிந்தனையைக் கொடுக்காத திரு அவை, திடீரென 2015-இல் ‘அறம் செய்ய விரும்பு’
என ஒளவையார் கற்பித்தது போல, திருத்தந்தை பிரான்சிஸ் வாயிலாக ‘புகழ் அனைத்தும் உமதே’ என்னும் அறநூலை வெளியிட்டிருப்பது விந்தையிலும் விந்தை எனலாம். தூய ஆவியானவர் தூண்டுதல் மூலம் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் விந்தைதானே!
2015-ஆம் ஆண்டு
டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபை பாரிஸ் மாநகரத்தில் 196 நாடுகளை உள்ளடக்கிய ‘பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு’ ஒன்றை நடத்தத் தயாரித்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் ஆறு மாதங்களுக்கு முன்பே ‘புகழனைத்தும் உமதே’ என்னும் சூழல் பாதுகாப்பு அறநூலை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே ஆவியானவரின் தூண்டுதல் அல்லது புனித பிரான்சிஸ் அசிசியாரின் தூண்டுதல் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.
உலக
நாடுகளின் தலைவர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய நூலைப் படித்து, அதில் கூறப்பட்டிருக்கிற நான்கு உறவுகளும் சம நிலையில் பயணிக்க
வேண்டும் என்றால், மனிதச் செயல்பாடுகளில் (Human Activity) ஒரு
மாபெரும் மாற்றம் தேவை எனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டு உலக நாடுகள் தரமான முடிவுகளை எடுத்து இப்புவியைப் பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
பாரிஸ்
மாநகரில் ‘cop-21’ என்று அழைக்கப்படும் உலக நாடுகள், உலக மதங்கள், உலக மக்கள், உலகப் பொருளாதாரம், உலக விஞ்ஞானத் தொழில்நுட்பம் போன்றவை cop-21 -இல் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கடந்த பத்து வருடங்களாகச் செயல்படுத்தி, அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்கள் என்றால், அது திருத்தந்தை பிரான்சிஸ் இப்புவி மேல் காட்டிய அக்கறை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி ‘Laudato Deum’ என்னும் இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய மடலை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார். ‘புகழ் அனைத்தும் இறைவனுக்கே’ என்னும்
இந்த மடல் மொத்தம் 72 பத்திகளை உள்ளடக்கிய ஓர் அறநூல் எனலாம்.
2023, டிசம்பர் மாதத்தில்
மீண்டும் ஓர் ஐக்கிய நாடுகள் சபை பருவநிலை மாற்ற உச்சி மாநாடு துபாயில் நடக்கப்போவதை முன்னிட்டு, ஏழு மாதங்களுக்கு முன்னமே இந்தச் சுற்றுச்சூழல் பராமரிப்பு மடலை வெளியிட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. இந்த மடலில் கூறப்பட்ட அறிவுரைகள் உலக நாட்டுத் தலைவர்களுக்குச் சென்று சேரவேண்டிய அவசியத்தில் ‘cop-28’ என்று
அழைக்கப்படும் துபாய் மாநாட்டில் மிகச் சிறப்பான விதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை முன்னெடுக்க இச்செயல் முக்கியமான செயலாக்கத் திட்டங்களையும்
தீர்மானங்களையும் எடுத்து ‘மனிதச் செயல்பாடுகளில்’ (human activity) ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவை.
2019-ஆம் ஆண்டு
‘புனித பிரான்சிஸ் பொருளாதாரக் கொள்கைகள்’
(Economy of Francis) எனும்
திட்டத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் கொண்டு வந்துள்ளார். இது சுமார் 11 வாரியங்களை உள்ளடக்கியது. புனித பிரான்சிஸ் அசிசியார் காட்டிய நான்கு உறவுகளின் வெளிப்பாடாக வந்த ஆன்மிகத்தை மையமாகக் கொண்டவை. அந்த 11 வாரியங்களில் ஒரு சில உதாரணங்களாக இதோ:
•
இயற்கை சக்தி உற்பத்தி
•
மழைநீர் சேகரிப்பு
•
கரிம மாசு அற்ற போக்குவரத்து
•
பசுமை உற்பத்தி
•
சூழல் அமைப்புகளின் பராமரிப்பு
•
குப்பை இல்லா உருவாக்கம்
•
மறுசுழற்சி, மீள் பயன்பாடு (Recycle, re-use)
•
சுற்றுச்சூழல் கல்வி
•
சுற்றுச்சூழல் ஆன்மிகம்
•
சுற்றுச்சூழல் வாழ்வுமுறை
•
இயற்கை விவசாயம்
இன்று
உலகளாவிய அளவில் கிறித்தவ சமயம் இயற்கைப் பராமரிப்புத் திட்டங்களைச் செல்வனே செய்து கொண்டிருக்கின்றது என்றால், அது திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துக் கொண்ட முயற்சி எனலாம்.
2015-ஆம் ஆண்டு
‘புகழனைத்தும் உமதே’ என்ற மடல் மூலம் சுமார் 200 கோடி கிறித்தவ மக்களை இப்புவியின் பாதுகாப்பு ‘அக்கறையில்’ திருப்பிவிட்டவர்
திருத்தந்தை பிரான்சிஸ். 2023- ஆம் ஆண்டில் தனது ‘புகழனைத்தும் இறைவனுக்கே’ எனும்
இரண்டாவது சூழல் எழுத்து மடல் மூலம் ஏறக்குறைய 800 கோடி மக்களையும் இப்புவியைப் பாதுகாக்கும் மாமனிதர்களாக மாற்றியவரும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார்.
இறுதியாக,
2019-ஆம் ஆண்டு ‘புனித பிரான்சிஸ் அசிசியாரின் பொருளாதாரம்’ எனும்
திட்டத்தின் கீழ் “படைப்பில் உள்ள ஒட்டுமொத்த உயிரற்ற பஞ்சபூதங்கள், உயிருள்ளவை எனும் நுண்ணுயிரிகள் முதல் மனிதன் வரை கடவுள் உருவாக்கி, அவற்றை நல்லதெனக் கண்டார். அவற்றைக் கடவுள் எவ்வாறு அன்பு செய்கிறாரோ அதைப்போல மனிதனும் அவற்றை நல்லதெனக் காண வேண்டும்; அன்பு செய்ய வேண்டும்”
எனும் நற்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ‘படைப்பின் பங்காளி’ என்று அழைப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்!
பொதுவாக சமுதாயத்தில் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தில் பாதியாவது திரு அவையில் உள்ளதா? என்ற கேள்விக்கு, திரு அவை பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் எதிர்பார்க்கும் அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லக்கூடிய அளவில் இல்லை என்பதுதான் நிதர்சனம்! எங்குப் பார்த்தாலும் பெண்கள் தங்கள் இருப்பை உறுதி செய்யக் கடின உழைப்பும் முயற்சியும் தேவைப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் பெண் பிள்ளைகளைப் பீடச்சிறுமிகளாக நியமித்த பங்குகளும் உண்டு. ஆனால், திரு அவையில் பெண்களின் நிலையை உயர்த்திச் சாதனை செய்தது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மட்டுமே என்று கூறினால் அது மிகையாகாது. திரு அவையில் பல சீர்திருத்தங்களைச் செய்த நம் திருத்தந்தை எவ்வித பயமோ, நெருடலோ இன்றி காலத்தின் அறிகுறிகளை அறிந்து செயல்பட்டவர்.
பெண்களுக்குத்
திரு அவையின் முடிவெடுக்கும் தளங்களிலும், தலைமைப் பொறுப்புகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது - திருத்தந்தை பிரான்சிஸ் திரு அவையின் தலைவராவதற்கு முன்னால்! கத்தோலிக்கத் திரு அவை என்றாலே அது ஆண்கள்தான் என்ற நிலையை மாற்றியவரும், பெண்கள் உலகில் இரண்டாம் நிலை குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்ற பொதுவான கூற்றையும் உடைத்து, தன் 12 வருடகாலத் திரு அவையின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து பெண்களையும் திரு அவையின் முடிவெடுக்கும் தளங்களில் பொறுப்பாளர்களாக நியமித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை
பிரான்சிஸ் துறவற சபைத் தலைவர்களைச் சந்தித்தபோது ‘பெண்களின் நுண்ணறிவு திரு அவை மற்றும் சமுதாயத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலும் இன்றியமையாதது’ என்று
குறிப்பிட்டார் (இந்திய ஆயர் பேரவையின் தலித் கொள்கை வரைவு 98N VII m).
கூட்டொருங்கியக்கத்
திரு அவையின் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என்பதைத் தேர்ந்து தெளிந்து பெண்களுக்கான உரிமைகளையும் இடத்தையும் கொடுத்தவர். பல நூற்றாண்டுகளாக அருள்பணியாளர்கள்,
ஆயர்கள், கர்தினால்கள் மட்டுமே பங்கேற்று வந்த திரு
அவையின் கட்டமைக்கப்பட்ட
பெரும்பான்மைப் படிநிலைக் குருத்துவத்தைக் கண்டித்தார். அன்னை மரியாவிற்குத்
திரு அவை அளிக்கும் முக்கியத்துவத்தைத் திரு அவையில் பெண்களும் பெற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.
பாதம்
கழுவுதல் சடங்கு என்றாலே ஆண்கள்தான் என்ற பாரம்பரியச் சடங்கை மாற்றி 2015-ஆம் ஆண்டு முதல் பெண்கள், நோயாளிகள், சிறையிலிருப்போர் என எல்லா மக்களையும்
பொதுக் குருத்துவத்தில் இணைத்து, ‘திரு அவை அனைவருக்குமானது’ என்ற
நிலையை மீண்டும் மீண்டும் உறுதி செய்தார். 2024 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் நாள் பெரிய வியாழன் அன்று சிறையில் இருந்த பெண்களுக்குப் பாதம் கழுவி முற்போக்குவாதப் பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், திருத்தந்தையின் இந்த உன்னதமான செயல் இன்னும் பல பங்குகளில் இன்றும்
செயல்படுத்தப்படவில்லை
என்பது வேதனையளிக்கிறது.
திரு அவையில்
பெண்கள்...
திரு
அவையில் நிகழும் பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு மட்டுமே சிறப்பு இருக்கைகள் தரப்பட்டிருக்கும். அவ்வப்போது மற்ற ஆண்களுக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அருள்சகோதரிகளும் பெண்களும் இதில் தீண்டத்தகாதவர்களாக அல்லது பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அமர்த்தப்படுவார்கள். ஆனால், 2019-ஆம் ஆண்டு உரோமில் நடைபெற்ற ஆறு இலட்சம் அருள்சகோதரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலகளாவியத் தலைமைச் சகோதரிகள் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 850-க்கும் மேற்பட்ட அருள்சகோதரிகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தபோது, அதன் அப்போதைய தலைவரான ஆப்பிரிக்க அன்னையின் மறைபரப்பாளர்கள் சபை அருள்சகோதரி கார்மென் சம்மூட் அவருக்கு அருகில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தலைமைத்துவத்தில்
பெண்கள்...
பெண்களைப்
பங்குப் பேரவைகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதையே விரும்பாத பங்குகள் இருந்தாலும், திரு அவையின் தலைவராகத் திருத்தந்தை பிரான்சிஸின் முற்போக்குச் சிந்தனைகளை அவரின் செயலாக்கத்தை வரலாறு ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஆயர் பேரவைகளிலும் தலத் திரு அவைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், வத்திக்கானின் உயர் பதவிகளுக்குப் பெண்களை நியமிப்பதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரிமை அளித்தது பாலினச் சமத்துவத்தையும் சமூக மாற்றத்தையும் விரும்பிய மாமனிதர் என்றே உணர்த்துகிறது.
2016-ஆம் ஆண்டில்
வத்திக்கான் அருங்காட்சியகங்களின் முதல் பெண் இயக்குநராக பார்பரா ஜட்டாவை நியமித்தார் நம் திருத்தந்தை.
பிப்ரவரி
2021-இல் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானின் ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் இரண்டு துணைச் செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நத்தலி பெக்கார்ட்டை நியமித்து, கத்தோலிக்கத் திரு அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 1965 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அலுவலகம், உரோமில் மாமன்றங்களை ஏற்பாடு செய்கிறது. மேலும், பெக்கார்ட் மாமன்றங்களில் வாக்களிக்க முடியும் என்ற பேச்சும் இருந்தது.
2022-ஆம் ஆண்டில்
அமைதி மற்றும் நீதி பிரச்சினைகளைக் கையாளும் வத்திக்கானின் மேம்பாட்டு அலுவலகத்தில் சகோதரி அலெக்ஸாண்ட்ரா ஸ்மெரிலியை இரண்டாவது அதிகாரியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார்.
2022-ஆம் ஆண்டில்
உரோமைத் தலைமைச் செயலகம் (Roman Curia) பெண்கள்
மற்றும் பொது நிலையினர் வழிநடத்த அனுமதிக்கும் வகையில் வத்திக்கானின் அரசியலமைப்பைத் திருத்தந்தை பிரான்சிஸ் மாற்றியமைத்தார். ஜனவரி 6, 2025 அன்று கன்சோலாதா மறைபரப்பாளர்கள் சபை அருள்சகோதரி சிமோனா பிராம்பில்லாவை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் திருத்தூதர் சார் வாழ்வு சங்கங்களுக்கான வத்திக்கான் பேராய முதல்வராகத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார். கத்தோலிக்கத் திரு அவையில் முதல் முறையாகப் பெண்கள் துறவற அவைகளை ஒரு பெண் மேற்பார்வையிடும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்.
நற்கருணையின்
பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை அருள்சகோதரி இரஃபேல்லா பெட்ரினி, வத்திக்கான் நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராக மார்ச் 1, 2025 அன்று பதவியேற்றார். அவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகாவிற்கு அடுத்து பதவியேற்றார். அவர் நிர்வாகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய மேலாண்மை உள்ளிட்ட நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார்.
அதோடு
மட்டும் நின்றுவிடாமல், இறைவனின் தாயான அன்னை மரியாவைத் தன் வாழ்விலும் தாயாக ஏற்று அவரை அன்பு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் திரு
அவையின் அனைத்துத் திருத்தந்தையரும் புனித பேதுருவின் ஆலயத்திற்குள்தான் புதைக்கப்படுவர் என்ற மரபை மாற்றி, தன்னை எளிமையான முறையில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், அதுவும் உரோமில் உள்ள தான் எப்போதும் செபம் செய்யும் பெரிய நாயகி மாதா பசிலிக்காவில்தான் தன்னைப் புதைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்பில்,
இரக்கத்தில், புன்னகையில், நீதியில், எளிமையில் அயலாரை நேசித்த, பெண்களை மாண்புடன் நடத்தி, எளிமையை ஊன்றுகோலாய் ஏந்தி நின்ற திரு அவையின் அன்புத் தந்தையின் ஆன்மா மூவொரு இறைவனில் இளைப்பாறட்டும்!
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் புதிய மாற்றங்களை உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவையின் வாழ்விலும் பணியிலும் பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தார். அதாவது, திரு அவையின் உலகப் போக்கு குறைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்த திருத்தந்தை, கோவிட்19-இன் காலகட்டத்தில் உலகில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தப்படவும் மற்றவரைச் சந்திக்கக்கூடாது என்னும் காலகட்டத்திலும் கிறித்தவ மக்கள் தங்களது திருவழிபாட்டின் உண்மை அழகை மீண்டும் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த அக்கறையுடன் செயல்பட்டார்.
திருவழிபாட்டில்
மாற்றங்கள்
திரு
அவையின் வாழ்விற்கு அடிப்படையானது நற்கருணைக் கொண்டாட்டம். அதுவே கிறித்தவ வாழ்வின் ஊற்றும் சிகரமுமாக உள்ளது என்கிறது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம். அத்தகைய மேன்மை நிறைந்த திருப்பலிக் கொண்டாட்டத்தின் நற்கருணை மன்றாட்டில் அன்னை மரியாவின் பெயருக்குப் பின் புனித யோசேப்பின் பெயர் இடம்பெற 2013, மே 1 அன்று சிறப்பு ஆணை பிறப்பித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத் திரு அவை இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் புனித யோசேப்பை நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்வது குறிப்பிடத்தக்கது.
‘தந்தையின் இதயத்தோடு’
என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடலில் (2020) புனித யோசேப்பின் சிறப்புப் பண்புகளைக் கத்தோலிக்க நம்பிக்கையாளர் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் விவரித்துள்ளார். குறிப்பாக, அன்பான, கனிவான, கீழ்ப்படிதலுள்ள, ஏற்றுக்கொள்ளும், துணிவுள்ள, படைப்பாற்றல்மிக்க, கடினமாக உழைக்கக்கூடிய, மறைந்திருந்து செயல்பட்ட தந்தையாகவும், அன்னை மரியாவுக்கு நல்ல கணவராகவும், ஆண்டவர் இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார் என்பதையும் உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு எனவும் அறிவித்தார். அதோடு 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2021 டிசம்பர் 8 வரை ‘புனித யோசேப்பின் ஆண்டு’ எனத் திரு அவையில் அறிவித்து புனித யோசேப்பின் மனநிலையை நம்பிக்கையாளர் அனைவரும் கற்றுக்கொள்ள, கடைப்பிடிக்க, வாழ்ந்துகாட்ட வலியுறுத்தினார்.
உறங்கும்
நிலை புனித யோசேப்பின் பக்தியைப் பரவச் செய்தவர். நற்செய்திகளின் பின்னணியில் கடவுளின் தூதர் புனித யோசேப்புடன் கனவின் மூலம் பல்வேறு வகையான உரையாடல்களை மேற்கொண்டார். இவைகளின் மூலம் கடவுள் கவனித்துக்கொள்வார், கடவுளின் உடனிருப்பு உண்டு எனவும், கடவுளின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இந்தப் பக்தி முயற்சி துணைபுரியும் என்பதைத் தனது வாழ்வில் கடைப்பிடித்து நம்பிக்கையாளர் அனைவரும் கற்றுத் தந்துள்ளார்.
கோவிட்-19
பெருந்தொற்றுக் காலத்தில் உண்மையான கத்தோலிக்க நம்பிக்கையை வளர்க்கவும் அர்த்தம் தேடும் வழிபாடாக நமது வழிபாடு அமையச் சிறந்த வகையில் அருகிலிருந்து அக்கறை காட்டும் கலாச்சாரத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். உலகம் பல்வேறு நிலைகளில் துன்பத்திற்கு உள்ளான நிலையில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தங்களது அடிப்படையான நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதில் கருத்துடன் செயல்பட்டார்.
பெரிய
வியாழன் அன்று கத்தோலிக்கத் திரு அவையில் இடம்பெறும் பாதம் கழுவும் சடங்குகளில் மாற்றத்தை வலியுறுத்தினார். 2016-ஆம் ஆண்டு சனவரி மாதம் பாதம் கழுவும் சடங்குகளில் பெண்களும் பங்கேற்கலாம் என்னும் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியவர். மேலும், பெண்களின் பணியும் வாழ்வும் திரு அவையின் செயல்பாடுகளில் முதன்மை பெற வேண்டும் என்பதில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தியவர்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி வெளியிட்ட ‘Traditionis Custodes’ என்னும் ஆவணத்தில் பாரம்பரிய இலத்தீன் திருப்பலியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புதிய திருப்பலி முறையே திரு அவையின் வழிபாட்டு முறையில் ஒற்றுமையை உருவாக்கவும், அதனை வலுப்படுத்தவும் சிறந்தது என்பதை வலியுறுத்தினார். கத்தோலிக்கத்
திரு அவையின் செயல்பாடுகளில் இலத்தீன் மொழி சிறந்த இடம் வகிக்கிறது. இருப்பினும், பல்வேறு அமைப்புகள் மீண்டும் கத்தோலிக்கத் திரு அவையின் வழிபாடுகள் இலத்தீன் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்னும் ஆர்வத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஆவணத்தின் மூலம் நாம் இப்போது பயன்படுத்துகின்ற புதிய திருப்பலி முறையைப் பயன்படுத்தும்போதுதான் திரு அவையில் ஒற்றுமையை உருவாக்கும் வழிகள் உருவாகும் என்பதையும் வலியுறுத்தினார்.
2022-ஆம் ஆண்டு
‘மிக மிக ஆவலாய் இருந்தேன்’
என்னும் திருத்தூது மடல் வழியாகக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், நம்பிக்கையாளர் ஆகிய அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய திருவழிபாட்டுப் பயிற்சி பற்றித் தெளிவுபடுத்துகிறார். திருவழிபாடு கிறிஸ்துவைச் சந்திக்கும் இடம் எனவும், திருவழிபாடுதான் உலகுசார் ஆன்மிக நஞ்சுக்கு மாற்றுமருந்து எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருவழிபாட்டு உருவாக்கமும் திருவழிபாட்டின் வழியாக உருவாக்கம் பெறுவதும் அவசியத் தேவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். திருப்பலியும் அருளடையாளக் கொண்டாடங்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு.
‘உலகம் அறிவுணர்வு என்னும் நச்சுத்தன்மையால் மயக்குகிறது; அங்கே கடவுளும் இல்லை, அடுத்தவரும் இல்லை. இத்தகைய நிலையிலிருந்து மாற்றம் பெற்று இறைவனுக்கே முதலிடம் தரவேண்டும்; அவரிடம் மன்றாடுவதே நமது முதல் கடமையாகும். இறைவன் தமது சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் இறை ஒன்றிப்பின் முதல் ஊற்று திருவழிபாடு; அதுவே ஆன்மிக வாழ்வின் முதல் பள்ளி’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியவர்.
நற்செய்தி
அறிவிப்பில்லாத ஒரு கொண்டாட்டம் உண்மையானதல்ல; அதேபோல நற்கருணைக் கொண்டாட்டத்தில் உயிர்த்த ஆண்டவரைச் சந்திப்பதற்கு வழிவகுக்காத அறிவிப்பும் உண்மையானதல்ல என்னும் உண்மையை ஒவ்வொரு வழிபாட்டுக் கொண்டாட்டமும் உணர்த்துகிறது என்ற உண்மையை உரக்கக் கூறியவர்.
வழிபாடு
வெறும் விதிமுறைகளின் இயங்கு தளமாகவோ, கற்பனையான விதிமுறைகளின் படைப்பாற்றலாகவோ குறைத்து மதிப்பிடுவது அல்ல; ஒவ்வொரு கொண்டாட்டதிற்கும் தேவையான கொண்டாட்டத்திற்குரிய கலை தேவைப்படுகிறது. மறையுண்மைகளைத் திருமுழுக்குப் பெற்ற ஒரு நபரே அனுபவிக்க முடியும். ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கொண்டாடும் கலைக்கு எதிரானவைகளான இறுக்கமான கடுமை அல்லது எரிச்சலூட்டும் படைப்பாற்றல், ஆன்மிகமயமாக்கும் மாயவாதம் அல்லது நடைமுறைச் செயல்பாட்டுவாதம், அவசரமான சுறுசுறுப்பு அல்லது மிகைப்படுத்தப்பட்ட மந்தநிலை, அலட்சியமான கவனக்குறைவு அல்லது அதிகமான நுணுக்கம், பொங்கி வழியும் நட்பு அல்லது குருத்துவ இயலாமை என்பனக் கொண்டாடும் கலைக்கு எதிரானவைகள் எனக் குறிப்பிட்டு திருவழிபாட்டு மாற்றங்களை மையப்படுத்திய நிலையில் கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ள மாற்றங்கள் ஆற்றல் பெறவும், அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் பெறவும் இறைவேண்டலில் இணைவோம்.
இந்நூற்றாண்டில் மனித குலம் கண்ட ஒரு மாமனிதர் திருத்தந்தை பிரான்சிஸ். இவருடைய திருமடல்கள், ஆவணங்கள், கற்பிதங்கள் பலவற்றை எடுத்தியம்பினாலும், அவற்றில் இயற்கைப் பாதுகாப்பு, மனித மாண்பு, மனித உரிமை, ஆண்-பெண் சமத்துவம், அதிகாரப் பரவலாக்கம், அனைவரும் திரு அவையில் இணைப் பொறுப்பாளர்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, எல்லாரும் சகோதரர்கள், திருத்தூதுப் பணியின் முக்கியத்துவம், திரு அவையில் பொது நிலையினரின் மாண்பும் முக்கியத்துவமும், நற்செய்தி அறிவித்தலின் அவசியம், திரு அவை இறை மக்களின் ஒன்றிப்பின் மையம், பொருளாதார மற்றும் அறநெறி தொடர்பான முறைகேடுகள் பற்றிய தெளிவான வரையறைகள், திருமுழுக்கினால் இறை நம்பிக்கையாளர்கள் பெற்ற முப்பணிகளாகிய போதிக்கும்-புனிதப்படுத்தும்-வழிநடத்தும் பணிகளுக்கான அழைப்பு, புலம்பெயர்ந்தோரின் வாழ்வுக்கான வழிகள், இரக்கம் கலந்த நீதியில் தண்டனைகளுக்கான அவசியம், திரு அவைச் சட்டங்களில் காலத்திற்கேற்ற தேவையான சீர்திருத்தங்கள் போன்றவை தனி வெளிச்சம் பெறுகின்றன.
‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(Evangelii Gaudium-2013) என்ற
மடல் இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் முழு ஆர்வத்தோடு திரு அவை ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் படிப்பினைத் தொகுப்பு 1. திரு அவை மறை அறிவிப்பில் ஈடுபடும் ஒன்றாக மாற்றம் பெறல்; 2. குழுவாக நற்செய்தி அறிவிப்பில் ஈடுபடுதல்; 3. நற்செய்தியை அறிவிக்கும் பணி செய்தல்; 4. நற்செய்தி அறிவிப்பின் சமூகக் கூறுகள்; 5. ஆவியால் நிரம்பிய நற்செய்தி அறிவிப்பாளர்கள் என ஐந்து பிரிவுகளைக்
கொண்டது. இந்தப் படிப்பினைத் தொகுப்பில் கிறித்தவர்களின் சமூகக் கடமைகளையும் அவர் எடுத்துரைக்கின்றார்.
‘இறைவா உமக்கே புகழ்’
(Laudate Si-2015) என்ற
திருமடல் சுற்றுச்சூழல் நெருக்கடியை முன்வைக்கிறது. இத்திருமடல் நவீன உலகு, ஆன்மிக விழுமியங்களின் பாதையில் செல்லவும், பொதுநலனுக்காக ஒத்துழைப்பு வழங்கும் வழிகளைத் தேடவும் அழைப்பு விடுக்கிறது. நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பராமரித்தல் பற்றிய இத்திருமடல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுக்கின்றது.
‘அன்பின் மகிழ்வு’
(Amoris Laetitia-2016) என்ற
மடலின் வாயிலாக, அன்பு என்றால் என்ன? குடும்பத்தில் ஒவ்வொரு நபரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? என்பதை வரையறுக்கிறார். நமது காலத்தில் - குடும்பம் பல வழிகளில் தாக்குதலுக்கு
உள்ளாகி, குடும்பங்கள் பிளவுகளுக்கு உள்ளாகிற சூழல்கள் அதிகரித்திருக்கின்ற வேளையில், இந்த மடல் மாற்றத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த மருந்தாக அமைந்துள்ளது. குடும்பத்திற்கும் திரு அவைக்கும் இடையே நிலவும் உறவு பலப்படுத்தப்பட்டு, இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள சக்தியை வழங்கும் நோக்கத்தில் ஆலோசனைகளை இம்மடல் வழங்கியுள்ளது. ஒரே பாலின இணைவு என்பது திருமணத்திற்குச் சமம் என்கிற பார்வையை நிராகரிக்கும் இம்மடல், அவர்களுக்கு மரியாதைக்குரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
‘இன்றைய உலகில் புனிதத்திற்கான அழைப்பு’ என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்த ‘மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அடைந்துகொள்ளுங்கள்’ (Gaudete et exsultate-2018 -
Rejoice and Be Glad) என்ற
திருத்தந்தை பிரான்சிஸின் மூன்றாவது திருத்தூது மடல் அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் அவர்களின் நிலை எதுவாக இருந்தாலும், கடவுளால் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தூய்மையையும்
புனிதத்தையும் அடைய அழைப்பை விடுக்கின்றது.
‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus vivit-2019)
என்ற திருத்தூது அறிவுரை மடல் அனைத்து இறைமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் குறித்துப் பேசுகின்றது. திருத்தந்தை இளைஞர்களுக்கு அவர்களின் ஆற்றலையும் அவர்களால் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் நினைவூட்டுகின்றார். மேலும், அவர்களின் குடும்பம், சமூகம், திரு அவை மற்றும் உலகத்திற்காகத் தங்களால் இயன்றதைச் செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
‘அனைவரும் சகோதரர்கள்’ (Fratelli tutti-2020) என்ற திருத்தூது மடலில் ‘சகோதரத்துவம்’ என்ற
கருத்தை வலியுறுத்துகின்றார். அதிகரித்து வரும் வறுமை, மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி உள்ளிட்ட இன்றைய அச்சுறுத்தும் சவால்களைச் சந்திக்க மனிதகுலம் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டியதன் இன்றியமையாமையையும், கருத்தொற்றுமையில் நிலைத்திருப்பதன் தேவையையும் எடுத்துரைத்துள்ளார்.
‘ஆண்டவரின் ஆவி’
(Spiritus Domini-2021) மற்றும்
‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’
(Antiquum Ministerium-2021) என்ற திருத்தூது
மடல்களின் வழியாகப் பொதுநிலையினர் நிலையான வாசகர்கள், பீடத்துணைவர்கள் மற்றும் வேதியப் பணியைப் பெறுவதை உறுதிப்படுத்துகிறது. பொது நிலையினரின் பணி என்பது தற்காலத்தில் நாம் பெற்றிருக்கிற அருள் மட்டுமல்ல; மாறாக, திரு அவையின் மறைபோதகப் பணியில் மிகப்பெரும் உதவியாக இருப்பது என்பதைத் திண்ணமாகத் திரு அவைக்குத் திறம்பட எடுத்தியம்பியுள்ளார்.
உரோமைச்
செயலகத்தைக் (Roman Curia) குறித்த
‘நற்செய்தியை அறிவியுங்கள்’ (Praedicate Evagelium-2022)
என்னும் புதிய திருத்தூதுப்பீட ஆணை மடலின் வழியாக உரோமைச் செயலகத்தை மறைபரப்புப் பணியை மையமாக வைத்துச் செயல்பட அழைப்பு விடுத்தார். இம்மடல் ‘நற்செய்தி அறிவிப்பே திரு அவையின் முதன்மைப் பணி’ என்பதை வலியுறுத்துகின்றது. திருத்தந்தையின் தனிப்பட்ட பிறரன்புப் பணிகளை (Personal Charity) மறுசீரமைப்புச்
செய்தது. தற்போது அது திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கான பேராயம் என மாற்றம் பெற்றுள்ளது.
உரோமைச் செயலகத்தில் எந்தத் துறையையும் பொதுநிலையினராக உள்ள எந்த ஆணோ, பெண்ணோ தலைமையேற்று வழிநடத்தலாம் எனத் திரு அவையின் கதவுகளைத் திறந்து வைத்துள்ளார்.
‘கடவுளைப் புகழ்தல்’
(Laudate Deum-2023) என்பது
நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களுக்கும், காலநிலை மாற்றப் பிரச்சினை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய
ஒரு திருத்தூது அறிவுரை மடலாகும். அவரது 2015-ஆம் ஆண்டு சுற்றறிக்கையான ‘Laudate Si’-இன்
தொடர்ச்சியான ஆவணமாக இது கருதப்படுகின்றது. இது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதன் அவசியத்தையும், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மூலம் தாய் பூமியைப் பராமரிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
‘எல்லையற்ற மாண்பு’
(Dignitas Infnita-2024) என்ற
மடல் இன்றைய உலகில் மனித மாண்பிற்கு எதிராக நிகழும் குற்றங்களையும் பட்டியலிடுகிறது. குறிப்பாக, கடுமையான வறுமை, போர், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைகள், ஆள்கடத்தல், பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கருக்கலைப்பு, வாடகைத்தாய், கருணைக் கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணித்தல், பாலினக் கோட்பாடு, பாலின
மாற்றம், எண்ணியல்சார் முறைகேடுகள் (Digital Violence) ஆகியவைகளைப்
பட்டியலிட்டு, அதற்கெதிரான வழிமுறைகளை முன்வைக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் ‘Motu Proprio’ என்னும் தன் சுயவிருப்பத்தின் பேரில் வெளியிட்ட ‘ஆண்டவர் இயேசு, இரக்கமுள்ள நீதிபதி’
(Mitis Iudex Dominus Iesus-2015) மற்றும் ‘இரக்கமும்
சாந்தமும் கொண்ட இயேசு’
(Mitis et Misericors Iesus-2015) என்ற
இரு திருத்தூது அறிக்கைகள் வழியாகத் திருமணத்தின் செல்லுபடியாகாத நிலை குறித்து ஆராயும் நடைமுறையில் சீர்திருத்தங்களை வழங்கினார். இந்தத் திருத்தூது அறிக்கைகள், திருமணம் செல்லாது என்பது குறித்து ஆராயும் படிநிலைகள் விரைவானதாகவும் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தித் திரு அவைச் சட்டங்களை மாற்றியமைத்துள்ளார்.
‘மகிழ்ச்சியின் உண்மை’
(Veritatis gaudium),
‘இறையியலை மேம்படுத்துவதற்காக’ (Ad Theologiam Promovendam)
போன்ற மடல்கள் இறையியல் என்பது சூழல் சார்ந்ததாகவும், சமூகத்திற்கு ஏற்றதாகவும் இருக்க அழைப்புக் கொடுக்கின்றன. கத்தோலிக்க இறையியல் என்பது சமகால அனுபவம் மற்றும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்பப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இறுதி ஆவணமாக வெளிவந்த ‘இணைந்து பயணிக்கும் திரு அவையின் கற்பிதங்கள்’ பொதுநிலையினரைத்
திரு அவையில் இணைப்பொறுப்பாளர்களாகப் பொறுப்பேற்கப் பரிந்துரைக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் நமது காலத்திற்கான தகுந்த இறைவாக்கினர். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற இந்தப் படிப்பினைகள் நமது வாழ்வுக்கான படிகள் ஆகட்டும். திரு அவை வாழும் இறையரசாகட்டும்.
மையங்கள் கவர்ச்சிகரமானவை. சாதாரண மனிதர்களின் கவனக்குவியலை எளிதாக ஈர்ப்பவை. சுயமதிப்பையும் மாண்பையும் வெளியில் தேடுபவர்கள் தங்கள் கவனத்தையும் பயணத்தையும் மையம் நோக்கியே திருப்புவர். மையம்தான் இவர்களின் சேருமிடம். மையத்தைத் துறந்தால், தாங்கள் மறைந்துவிடுவோம், மாயமாகிவிடுவோம் என அஞ்சி, மையத்தைப் பற்றுவதையும், பற்றியிருப்பதையுமே தங்கள் குறிக்கோளாகக் கொள்வர். மையத்தில் தங்களை மறைத்துக்கொண்டு, தங்கள் சுயமதிப்பின் கனத்தைச் சார்ந்திருக்கும் இடங்களிலும், பதவிகளிலும் தேடுவர். ஆனால், மானிட மாண்பின் வேர்களை அறிந்தவர்கள், அகத்திலே தங்கள் கவனத்தைச் செலுத்துவர். அசாதாரணமான இந்த மனிதர்களுக்கு மையம் என்பது வாழ்வின் மையமல்ல; ஏனென்றால், இவர்களின் மாண்பின் மகத்துவம் இடம் சார்ந்ததல்ல; மாறாக, ஆளுமை சார்ந்தது. அப்படி மானிட மாண்பின் ஊற்று, அவர்கள் இறை உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டதிலே என்பதை நன்கறிந்த ‘மக்களின் திருத்தந்தைதான்’ ஆடுகளாகிய நம்மைத் தவிக்கவிட்டுப் பிரிந்த நமது தலைமை ஆயர் பிரான்சிஸ்.
இவரது
அடையாளமும் ஆளுமையும் மதிப்பும் இடம் சார்ந்ததோ, பதவி சார்ந்ததோ அல்ல; அதனால்தான் இவரது வாழ்வியலும் மையங்களைத் தாண்டி, விளிம்புகளை நோக்கியதானது. மையம் என்பது இவரது விளிம்புகளை நோக்கிய பயணத்தின் புறப்பாடு; வெற்று தங்குமிடமில்லை. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ‘விளிம்புகளின் வித்தகர்’
என்றழைப்பது பொருத்தமே. ‘விளிம்புகள்’ திருத்தந்தையின்
சிந்தனை, சொல், செயல்களின் மையம் மட்டுமல்ல; மாறாக, அவரது இவ்வுலகப் பயணமே விளிம்புகள். மைய வாழ்வுதான் என்பதைப் பின்வரும் அவரது சான்று வாழ்வின் பரிமாணங்கள் வழியாக நன்கறியலாம்.
புத்தாக்கத் தலைமைத்துவம்
திருத்தந்தை
பிரான்சிஸ் தன்னை வெறும் திருத்தந்தையாக மட்டும் கருதவில்லை; தான் கிறிஸ்துவின் சீடர் என்பதை அடிக்கடி நினைவு கூர்ந்தார். சிலுவையோடு பயணிப்பதையும் சிலுவையோடு கட்டியெழுப்புவதையும் சிலுவையில் இருக்கும் கிறிஸ்துவைப் போதிப்பதையும் உண்மையான சீடத்துவத்துவம் என்றார். தன்னுடைய தலைமைத்துவத்தை, இயேசுவின் வாழ்வு மற்றும் படிப்பினைகளைத் தாழ்ச்சியோடு பிரதிபலிக்கின்ற சுயதுறப்புப் பணிக்கான அழைப்பு என்றார். அதனால்தான் ‘பிரான்சிஸ்’ என்பதைத்
தனது பெயராகத் தேர்ந்ததோடு, எளிமை மூலமாக எழுச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவராக வாழ்ந்தார். அவரின் தலைமைத்துவத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், தொடர்ந்து நம்மை வியக்க வைக்கும் ஒரு புத்தாக்கத் தலை மைத்துவத்தை வாழ்வாக்கினார். எல்லைகளை நோக்கிய இவரது பார்வையும், இதயத்திலிருந்து தோன்றிய வார்த்தைகளும் இவரை மானிடர் மையத் தலைவராக வாழ வைத்தன.
விளிம்புகளை நோக்கி...
மருத்துவராக
வேண்டும் என்ற தொடக்க கால விருப்பை உதறாமல், ஆன்மாக்களைக் குணமாக்கும் மருத்துவராகத் தன்னைச் செதுக்கினார். “நோயற்றவர்க்கு அல்ல; நோயுற்றோருக்கே மருத்துவர் தேவை”
(மாற் 2:17) என்பதை உணர்ந்த திருத்தந்தை, மானிட சமூகத்தில் சிதைந்து, உருவமற்று, முகவரியற்று கவனம் பெறாத அனைவரையும் திரு அவையின் பார்வை வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றார். தீண்டத்தகாதோரைத் தீண்டுவதையும், புறக்கணிக்கப்பட்டோரை உள்ளடக்குவதையும் விரும்பிச் செய்தார். சமூகத்தின் பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு, ஆன்மிக, சமய, அறநெறி, நிலவியல் விளிம்பிலுள்ளவர்களுக்கு விலாசமும் விடியலும் கொடுத்து, அவர்களையும் கிறிஸ்துவில் ஒளிரச்செய்ய தனது வாழ்வின் எல்லைவரை அவர்களை நோக்கிய தேடலையும் பயணத்தையும் அரவணைப்பையும் தொடர்ந்தார். இவரை ‘விளிம்புகளின் திருத்தந்தை’ என
அழைப்பதில் வியப்பேதுமில்லை.
மானிட மாண்பு
அனைவரும்
ஒரே இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட சம மாண்புடையவர்கள் என்ற உண்மையை
மதிக்காமையைச் சாடினார். ஏற்றத்தாழ்வே சமூகநோயின் ஆணிவேர் என்றதோடு, அனைவரும் ஒரே உடலாக இருக்கிறோம் என்பதை உரக்கக் கூறினார். இந்த உறுதிப்பாடுதான், நரம்பு நார்க்கட்டியால் பாதிக்கப்பட்ட, உருக்குலைந்திருந்த வினிசியோவைக் கட்டி முத்தமிடச் செய்தது. மேலும், ஒருவரின் வெளி அடையாளங்கள் நிரந்தரமற்றவை; மானிடர் ஒவ்வொருவரும் புனிதமானவர், அன்பிற்குரியர்; அவர்களில் இயேசுவைக் காண அறிவுறுத்தினார்.
நிலவியல் விளிம்புகள்
விளிம்புகளை
நோக்கிப் பயணிக்கும் ஒரு திரு அவைக்குத் தொடர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வழக்கமாக அடிக்கடிச் சந்திக்காத நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஈராக்கிற்குச் சென்ற (2021) முதல் திருத்தந்தை இவரே. பொறுப்பேற்ற ஒருசில மாதங்களிலேயே (2013) லம்பேடுசா என்ற இத்தாலியத் தீவைப் பார்வையிட்டார். ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்பவர்களின் தலையாயப் புகலிடமான இந்த இடத்திற்கான பயணம், புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கான இவரது நிலைப்பாட்டை வெள்ளிடைமலையாக்கியது. இங்குதான் உலகமயமாகும் கண்டுகொள்ளாமையைக் கடுமையாகச் சாடினார். மேலும், ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பயணங்கள், உலகின் விளிம்புகளாகக் கருப்படும் மக்களுக்கான இவரது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகள்.
ஆடுகளின் வாடை
காணாமல்போன
ஆட்டைத் தேடிச்சென்ற நல்லாயனைப்போல, சமூகத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டக் காயப்பட்டோரைத் தேடிச்சென்று, அவர்களின் காயங்களுக்கு மருந்திடுவதே திரு அவையில் ஆயர்களின் பணி என்பதை அடிக்கடி நினைவூட்டினார். ‘விமானத்தள’
ஆயர்களாக இல்லாமல், சேரிப்புறங்களுக்குச் சென்று ‘ஆடுகளின் வாடையை’ அறிந்து, அவர்களின் துயர் போக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல், விளிம்பு நிலையினருக்கான அவரது நிலைப்பாட்டின் மற்றொரு சான்று. துறவிகள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்களது நிறுவனங்களை விட்டு வெளியேறி, எளியோர் மத்தியில் அன்பைப் பகிர்வதே மேன்மையான மேய்ப்புப்பணி என்றார்.
நம்பிக்கையாளர்களின்
முதன்மை
பெரும்பான்மையினரான
கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்களே திரு அவையின் மையம் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். குடும்பம் மற்றும் சமூகத்தின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர இவர்கள் அழைக்கப்படுகின்ற னர். அவர்களோடு உடன் நடந்து, ஊக்கமூட்டி, உதவிசெய்து, அவர்களின் முயற்சியிலும் முன்னெடுப்புகளிலும் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அளித்து, இவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது, அருள்பொழிவு செய்யப்பட்ட சிறுபான்மையினரின் கடமை. ஆடுகளின்றி
ஆயனில்லை; ஆடுகளுக்காக ஆடுகளோடிருந்தே ஆயன் மேய்ப்புப் பணியாற்றுகிறார்.
ஏழைகளுக்கான திரு
அவை
ஏழையான
கிறிஸ்துவோடும், நற்செய்தியின் தூதுவரான புனித பிரான்சிஸ் அசிசியாரோடும் திருத்தந்தை தன்னை அடையாளப்படுத்தி ஏழையான, ஏழைகளுக்கான திரு அவையே தனது கனவு (2013) என்றார். ஏழைகள் பிறரன்பின் பயனாளிகளல்ல; மாறாக, கிறித்தவ அகமகிழ்வின் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள். எனவே, நமது பாதுகாப்பான சூழல்களிலிருந்து விளிம்புகளை நோக்கிப் பயணித்து, நோயுற்ற குழந்தைகளைப் பேணும் அன்புத்தாய் போல, நாம் ஓரங்கட்டப்பட்ட ஏழைகளுக்காகப் பணியாற்ற வேண்டும். இதுவே காலஞ்சென்ற நமது காவியத் திருத்தந்தைக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள நினைவஞ்சலி!
‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்ற யூபிலிக்கான ஆணை மடலில், எதிர்நோக்கின் அடையாளங்களாக வறியோரையும் புலம்பெயர்ந்தோரையும் குறிப்பிடுகிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாளுக்கு
நாள் அதிகரித்து வரும் வறுமையின் புதிய வடிவங்களைப் பார்த்து நாம் பழகிப்போய் விட்டோம். இருப்பினும், உலகின் சில பகுதிகளில் மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் நம்மைச் சுற்றி நாளும் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து நம் கண்களைத் திருப்பிக் கொள்ளக்கூடாது. கண்டுகொள்ளாமல் இருப்பதே அவர்களின் துயரம்.
உலகின்
மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் - கோடிக்கணக்கானோர் வறியவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் அவர்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் கிடப்பில் போடப்படும் ஆவணங்களின் அடியில் இருந்து விடுகின்றன என்பதை (எண் 15) வேதனையோடு திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
எதிர்நோக்கின்
அடையாளம்
புலம்பெயர்ந்தோர்
வறுமையின்
பல வடிவங்களில் முதல் வடிவமாக நிற்பது புலம்பெயர்ந்தோர் (Dignitas Infinita,40). பன்னாட்டு
மோதல்களால் பாதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போர்கள்-வன்முறைகளினால் பாதுகாப்புக்காக அலைகிற சகோதரர்கள்தான் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள். கல்விக்காக, வேலைவாய்ப்புக்காக, உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக நம்மை அணுகும்பொழுது, அவர்களின் தேவைகளைச் சந்திக்கக்கூடிய சமூகம்தான் கிறித்தவச் சமூகம். தங்கள் இதயக்கதவுகள் தாராளமாய் அவர்களுக்காகத் திறந்திருக்க வேண்டும். இறுதித் தீர்ப்புகள் பற்றிய சிறப்பான உவமையில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் எப்பொழுதும் நம்முடைய இதயங்களில் எதிரொலிக்க வேண்டும்: ‘அந்நியராக இருந்தேன்; என்னை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்கிற
இயேசுவின் அமுதமொழிகள் நமது வாழ்வின் வழிகளாக மாற வேண்டும்.
புலம்பெயர்ந்தோரின்
வலிகள்
புலம்பெயர்ந்தோர்
வன்முறைகளுக்குப் பலியாகிறார்கள்; பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்; ஆள்கடத்தலுக்கு உள்ளாகிறார்கள்; உளவியல் வலிகளால் மிகவும் நொறுங்கிப் போய் இருக்கிறார்கள். சொந்த நாட்டை விட்டு வருகிறவர்கள் எல்லாரும் சோகத்தில்தான் தமது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சொந்த நாட்டில் உரிமைகளை, உடைமைகளை இழந்து இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கின்ற ஓர் அனுபவம் அது.
புலம்பெயர்ந்தோர்
எதிர்நோக்கின்
மறைபரப்புப்
பணியாளர்கள்
2025-ஆம் ஆண்டான
இந்த யூபிலி ஆண்டில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாளை, வரும் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில்
கொண்டாடத் திருத்தந்தை அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டின் மையச்சிந்தனை
‘புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கின் மறைபரப்புப் பணியாளர்கள்’ என்பதாகும்.
1914 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்த அவர்களின் சவால்களை முன்வைத்து இறைவேண்டலுக்கும் செயல்பாட்டுக்கும் செல்ல நம்மைத் தூண்டுகின்ற நாள்கள் இவை. புத்துயிர் அளிக்கும் நம்பிக்கையை, மதிப்பீடுகளை உருவாக்கும் பல்சமய உரையாடலை வளர்க்கும் தளமாகப் புலம்பெயர்ந்தோர் தளமானது அமைந்திருக்கிறது.
புலம்பெயர்ந்தோர்
பெரும் உடைமைகளாகத் தங்கள் திருவிவிலியங்களையும் இறைவேண்டல் புத்தகங்களையும் ஆறு, கடல், பாலைவனம் கடந்து சுமந்து செல்கிறார்கள். இதுதான் அவர்களின் நம்பிக்கை வாழ்வு என்பதைப் புலம்பெயர்ந்தோருக்கான
2024-ஆம் ஆண்டு செய்தியில் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
புலம்பெயர்ந்தோருக்குத்
துணை
செய்ய
நல்ல
சமாரியர்கள்
தேவை
திருத்தந்தையின்
சுயசரிதை புத்தகத்தில் அமெரிக்க நாட்டு கர்தினால் ஒருவர் திருத்தந்தையிடம் பகிர்ந்த ஒரு நிகழ்வில், புதிதாய் அருள்பொழிவு பெற்ற இரண்டு அருள்பணியாளர்கள் கர்தினால் அவர்களை அணுகி ‘இலத்தீன் மொழியில் திருப்பலி
நிறைவேற்ற எங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்’
என்கிறார்கள்.
‘இலத்தீன் புரியுமா? தெரியுமா?’ என்று கர்தினால் கேட்டதற்கு, ‘புரியாது, தெரியாது; ஆனால், நாங்கள் இலத்தீன் கற்றுக்கொள்வோம்’ என்றார்கள்.
“அது சரி, இலத்தீன் படிப்பதற்கு முன்னால் உங்கள் மறைமாவட் டத்தில் உள்ள வியட்நாமைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் என்பதை அறிவீர்களா? வியட்நாம் மொழியைக் கற்றுக் கொள்வீர்களா? ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய உங்கள் மறைமாவட்டத்தில் ஸ்பானிஷ் மொழியையும் நீங்கள் கற்றுத்தேற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, முதலில் மக்கள் பணியாற்றுவதற்கு நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் தேவையில் இருக்கக்கூடிய வியட்நாம் மொழியையும் ஸ்பானிஷ் மொழியையும் கற்றுக்கொண்டு வாருங்கள். பின்னர் இலத்தீனைப் பற்றிச் சிந்திக்கலாம்” என்று
வழி அனுப்பி வைத்தாராம் அந்தக் கர்தினால்.
இஸ்ரயேல்
மக்களை அடிமைத்தனம், தீராத தொல்லைகள், பாதுகாப்பற்றத்தன்மை, பாகுபாடு, வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை இவற்றிற்கு மத்தியில் மோசே வழிநடத்தியதைப்போல புலம்பெயர்ந்தோரின் தாகத்தையும் பசியையும் போக்கிப் பாதுகாப்பையும் பராமரிப்பையும் நாமும் இறைத் துணையினால் மோசே போன்று கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர வேண்டும். புலம்பெயர்ந்தோருக்குத் துணை செய்ய, அவர்களைப் பாதுகாக்க நல்ல சமாரியர்கள் இன்று தேவை எனத் திருத்தந்தை பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
புலம்பெயர்ந்து
கொண்டிருப்பவர்
நம்
கடவுள்
2024-ஆம் ஆண்டு
செய்தியில் ‘கடவுள் தம் மக்களோடு நடக்கிறார்’ என்கிற
மையச்சிந்தனையைப் பதிவு செய்து, கடவுள் ஒரு நாளும் ஒரே இடத்தில் அமராதவர் என்றும், கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டபோது “என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நான் தங்கி இருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.
இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை. நான் என்றுமே திருக்கூடாரத்திலிருந்து ஒரு கூடாரத்தை விட்டு மற்றொரு கூடாரத்திற்கு மாறி வந்துள்ளேன்’ என்கிறார்
ஆண்டவர்” (1குறி 17:5). எனவே, கடவுள் மக்களோடு பயணிக்கிறார் என்பதை உறுதிபட இது கூறுகிறது.
புலம்பெயர்ந்தோரைச்
சந்திப்பது என்பது கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவமாக மாறுகிறது. கடவுள் நம் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கிறார். பசியோடு, தாகத்தோடு, வெளியூர் பயணியாய், உடையில்லாதவராய், நோயாளராய், சிறைக்கைதியாய்க் கதவைத் தட்டுகிறார்.
புலம்பெயர்ந்தோர்
என்றாலே பலருக்கு அதிக பயம் தொற்றிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. இதை ‘xenophobic mentality’ என்கிறார் திருத்தந்தை (Cf. Fratelli Tutti-39).
கிறிஸ்துவின்
சாயல்கள்
புலம்பெயர்ந்தோர்
தேவையில்
இருப்போர் அனைவருக்கும் கடவுளைத் தரிசிக்கும் வாய்ப்பாக நமது வடிவில் கடவுள் வருகிறார். புலம்பெயர்ந்தோர் உருவில் இறைத் தரிசனத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் இச்சந்திப்பு வழியாகப் பெறுகின்றோம். புலம்பெயர்ந்தோர் இன்னும் பிற நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்டவராய், கீழானவர்களாய் பார்க்கப்படுகிற போக்கை அறிகிறோம். ஒவ்வொரு புலம்பெயர்ந்தோரும் சக மனிதர்கள்தான் என்று
நினைத்து, எச்சூழலிலும் உரிமைகளையும் உரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது நமது கடமை.
சாதி,
இனம், மதம் கடந்து கண்ணியத்தோடு வரவேற்க நாம் கடமைப்பட்டுள்ளோம். புலம்பெயர்ந்தோரைக் காக்க மறுப்பவர்கள் மனச்சாட்சியை ஆய்வுசெய்து, கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது (cf. Dignitas Infinita 40, 41).