‘பிரான்சிஸ்’ எனும் பெயருடன் கர்தினால் பெர்கோ லியோ திரு அவையின் தலைமை ஆயராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அதற்குள் அவருடைய பல மரபுமீறிய முன்னோடிச் செயல்பாடுகள் கத்தோலிக்கத் திரு அவையை அவர் மக்கள் திரு அவையாக மலரச் செய்யப் போகின்றார் என்பதை ஏற்கெனவே முன்னறிவித்துக் கொண்டிருந்தன. தலைமை ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றே மக்கள் கூட்டத்தின் முன்பு ‘நான் ஒரு பாவி’ என அவர் அறிக்கையிட்டது, புனித வாரத்தில் உரோமையிலுள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த பல சமயத்து ஆண்-பெண் குற்றவாளிகளின் காலடிகளைக் கழுவியது என்பன அவற்றுள் சில.
இந்நிலையில்
ஒரு நாள் (30-10-2013) புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் கூடியிருந்த தாத்தா-பாட்டியருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4-5 வயதுள்ள ஒரு சிறுவன் எவ்விதத் தயக்கமும் இன்றி, திருத்தந்தை உரையாற்றிக் கொண்டிருந்த மேடையின்மீது ஏறி வந்தான்; கூட்டத்தைச் சில நொடிகள் கண்ணோட்டம் இட்டான். ஆனால், எத்தகைய தடங்கலோ தடுமாற்றமோ இன்றித் திருத்தந்தை புன்முறுவலுடன் தன் உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். பின்பு அச்சிறுவன் திருத்தந்தையின் பின்புறம் சென்று அவரது இருக்கையில் ஏறி அமர்ந்து சற்று நேரம் சுற்றுமுற்றும் பார்த்தான். கூட்டத்தினர் அனைவரது முகத்திலும் பெரும் அதிர்ச்சி! ஆனால், திருத்தந்தை அதைக் கண்டுகொள்ளாது தன் உரையைத் தொடர்ந்தார். பின்பு அச்சிறுவன் திருத்தந்தையின் இருக்கையிலிருந்து இறங்கி வந்து உரையாற்றிக் கொண்டிருந்த திருத்தந்தையின் காலைக் கட்டிப் பிடித்தான். திருத்தந்தையும் தன் உரையைத் தொடர்ந்தவாறே அவனது தலைமீது தனது கையை வைத்து அவனுக்கு ஆசி வழங்கினார்.
இத்தகைய
ஒரு நிகழ்ச்சி முன்னைய எந்தத் திருத்தந்தையின் முன்னிலையிலும் அரங்கேறியிருக்க முடியுமென நம்மால் கற்பனைகூட செய்திருக்க இயலாது. ஏனெனில், அத்தகைய நிகழ்வுகள் மக்களிடமிருந்து அவர் சற்றுத் தொலைவில் நிற்க, எவருடைய எத்தகைய இடையூறும் இன்றி உரிய ஒழுங்குமுறைப்படி சீராக நடைபெறும். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் எளிமை, குழந்தைகள்-சிறுவர்கள் உள்பட எல்லாரையும் நெருங்கி இனிதாகப் பழகும் பாணி, மனிதநேயத்தை முன்னிறுத்தி மரபுசார் நெறிமுறைகளைக் கைவிடும் போக்கு, ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்களை உயர்நிலையினர் எனக் கருதிக்கொண்டு, மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் நிலையை விடுத்து, அவர்கள் ‘ஆடுகளின் நெடி தங்கள்மீது படிந்திருக்கும் அளவுக்கு அவர்களுடன் தோழமை கொண்டிருக்க வேண்டும்’ (நற்செய்தியின்
மகிழ்ச்சி- 24) என அவர் விடுத்த
தொடர் அழைப்பு என்பவைதாம் மேற்கூறிய நிகழ்வு நடந்தேற வாய்ப்பளித்தன எனலாம். திருத்தந்தையின் இருக்கையில் ஏறி அமர்ந்ததன் வழியாகத் திருத்தந்தை செயல்படுத்த விரும்பிய ஓர் அரிய, அழகான உண்மையை அச்சிறுவன் தன்னை அறியாமலேயே அடையாள முறையில் அனைவருக்கும் உணர்த்திவிட்டான். அது திரு அவையில் அனைவரும் முதன் முதலில் சகோதரர்-சகோதரிகள் என உறவானவர்கள்; சமமான
மாண்பும் பொறுப்பும் உடையவர்கள்; திரு அவையின் இறையாட்சிப் பணியிலும் ஆட்சிப் பொறுப்பிலும்கூட அனைவரும் சம உரிமை உடையவர்கள்
என்பதே.
நீங்கள் யாவரும்
சகோதரர்-சகோதரிகளே!
திரு
அவையின் உறுப்பினர் அனைவரும் தாம் ஆற்றும் பணிகளில்தான் திருநிலையினர்-பொது நிலையினர் என வேறுபடுகிறார்களே அன்றி தங்கள்
சீடத்துவ இயல்பிலோ, இறைவனின் பிள்ளைகளுக்குரிய மாண்பிலோ, இறையாட்சிப் பணியாற்றும் பொதுவான பொறுப்புரிமையிலோ அல்ல; ஏனெனில், அவர்கள் அனைவரும் ‘அரசரும் குருவும் ஆசிரியருமாகிய இயேசு கிறிஸ்துவோடு ஓருடலாக ஒன்றித்திருந்து நிறைவாழ்வு பெற’
(திருமுழுக்குச் சடங்கு) குருக்களாக அருள்பொழிவு பெற்றவர்கள்; திருமுழுக்கில் பெறப்படும் அத்திருநிலைப்பாடு முதன்மையானது மட்டுமல்ல;
அடிப்படையானதும் ஒப்புயர்வற்றதும் ஆகும்.
‘திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும் இறையாட்சிப் பணிப்பொறுப்பிலும் சமமானவர்கள்’ என்கிறது
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். ஆனால், சங்கம் முடிந்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பும் அப்படிப்பினைகளை
நடைமுறைப்படுத்த எத்தனை
தயக்கங்கள், தடுமாற்றங்கள், தடைகள், பின்னடைவுகள்! அவற்றையெல்லாம் தாண்டி, அப்படிப்பினையை நடைமுறைப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸின் கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு வகைகளில் முனைந்தார்.
திருநிலையினர்
ஆதிக்கத்தைக்
கண்டித்தவர்
“திருநிலையினர் ஆதிக்கம் ஒரு முள்; ஒரு கொடிய நோய்; அது ஆண்டவரின் மணமகளது (திரு அவையினது) முகத்தைக் கறைபடுத்தும் ஒரு வகை உலகியல் போக்கு; அது புனித நம்பிக்கையாளர்களாகிய கடவுளின் மக்களை அடிமைப்படுத்துகிறது.” இவை திருத்தந்தை பிரான்சிஸ் 2023, அக்டோபர் 25 அன்று ஆற்றிய உரையில் தனது வழக்கத்திற்கு மாறாகப் பயன்படுத்திய கடுமையான சொற்கள். திருநிலையினர் ஆதிக்கத்தை ஒரு பெருந்தீமை எனத் தனது தலைமை ஆயர் பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே அவர் வன்மையாகத் தொடர்ந்து கண்டித்துள்ளார். “அருள்பணியாளர்களாகிய நாம் பொதுநிலையினரின் மேலதிகாரிகள் அல்லர்; மாறாக, அவர்களுடைய ஆயர்கள்” என்றும் 2024 அக்டோபர் 1-இல் ஆற்றிய உரையில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுநிலையினருக்கு
முன்னிலை
பொதுநிலையினரின்
தனி அழைப்பு தங்களது சாட்சிய வாழ்வாலும் நற்செய்தி விழுமியங்களாலும் உலகியல் துறைகள் அனைத்தையும் ஊடுருவி இறையாட்சிக்கு ஏற்ப அவற்றை உருமாற்றுவதே. எனினும், திரு அவையின் அகவாழ்விலும் பணிகளிலும்கூட அவர்களுக்குச் சம உரிமையும் பொறுப்பும்
உண்டு. ஏனெனில் “பொதுநிலையினர் திரு அவையில் விருந்தினர்கள் அல்லர்; அது அவர்களது வீடு. தங்களது வீட்டைப் பராமரிக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்... பொதுநிலையினரும், குறிப்பாகப் பெண்களும், அவர்களுடைய மனித மற்றும் அருள்வாழ்வுசார் திறமைகளும் அருங்கொடைகளும் பங்குகள் மற்றும் மறைமாவட்டங்களின் வாழ்வில் அதிகம் மதிக்கப்படுவது அவசியம்” எனக் குறிப்பிடுகிறார் (2023, பிப்ரவரி 16-18).
பங்குகள்
மற்றும் மறைமாவட்டங்களின் பணிப்பொறுப்புகளில் பொதுநிலையினரையும் தத்தம் அருங்கொடைகளுக்கு ஏற்ப சம உரிமையுடன் பங்கேற்கச்
செய்யும் வகையில் அவரே பல முன்னோடிச் செயல்பாடுகளையும்
ஆற்றியுள்ளார். திரு அவையின் பல்வேறு பணிகளில் பொதுநிலையினரைத் தலைமைப் பொறுப்புடன் பணியாற்ற அழைத்ததுடன், பொதுநிலையினர் திருப்பணிகளையும் பரவலாக்க ஊக்கப்படுத்தினார். மறைமாவட்ட தலைமைச் செயலகங்களில் கீழ்நிலைச் செயலர்களாக மட்டும் அல்ல; பொறுப்புரிமை உள்ள அதிகாரிகளாகப் பொதுநிலையினர் நியமிக்கப்படும் வகையில் வத்திக்கான் பேராயங்களின் முதல்வர்களாக பொதுநிலையினரும் பெண்களும் நியமனம் பெறும் வகையில் புதிய சட்டம் இயற்றினார்.
கூட்டொருங்கியக்கத்
திரு
அவைக்கான
ஆயர்
மாமன்றம்
திரு
அவையில் திருநிலையினரும் பொதுநிலையினரும் சகோதர உறவுடனும் சமத்துவப் பணிப் பொறுப்புடனும் இணைந்து செயல்படத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னெடுத்த மாபெரும் முயற்சிதான் 2023-2024 ஆண்டுகளில் நடந்த ஆயர் மாமன்றம். கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பதை மைய ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது அடிமட்டத்திலேயே நடந்த கலந்துரையாடல்களில் தொடங்கியது. அனைவருடைய கருத்துகளும் கேட்டு மதிக்கப்பட்டு,
அனைத்து நிலையினருடைய பதிலாள்களுடன் இணைந்து முடிவுகள் எடுக்கும் ஒரு புதிய நடைமுறையை அனுபவம் ஆக்கியுள்ளது. அதனால் இதுவரை ஆயர்கள் மட்டுமே பங்கேற்ற ஆயர் மாமன்றம் அனைத்துலகத் திரு அவையின் மாமன்றம் ஆகியது.
இறுதியாக...
ஆயர்கள்
மற்றும் அருள்பணியாளர்களை முன்னிறுத்தியே இன்றும் செயல்படும் திரு
அவைக்கு அவர்கள் பொதுநிலையினருடன் இணைந்து பயணிக்கும் மக்கள் திரு அவையாக வளரவும் மலரவும் திருத்தந்தை பிரான்சிஸ் பாதை காட்டியுள்ளார். அதே பாதையில் அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒரே அரச குருத்துவக் குலமாக இணைந்து பயணித்து, இறையாட்சியின் அடையாளமாகவும் கருவியாகவும் செயல்படுவதே வருங்காலத் திரு அவைக்கு அவர் விட்டுச்செல்லும் மாபெரும் அழைப்பும் அறைகூவலும் ஆகும்.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பின் திரு அவையில் தேவையான மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் தன் தலைமைத்துவப் பணியில் ஏற்படுத்தியுள்ள பெருமையும் புகழும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே சாரும். ஆடம்பரம் இல்லாமல், ஆதாயம் தேடாமல், எளிமையிலும் பிறரன்பிலும் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது பணிக்கு ஒரு புதிய முகத்தைத் தந்திருப்பவர் இவர். பணியாற்றும் திரு அவையாக, நம்பிக்கையாளர்களின் சமத்துவ, சகோதரத்துவத் திரு அவையாக, இறைவாக்கினர் திரு அவையாக இன்றைய திரு அவை செயலாற்றிட, இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கிச் சான்று பகரும் திரு அவையாக செயல்பட, தன் சீரிய தலைமைத்துவப் பண்புகளால், காலத்தின் அறிகுறிகளை அறிந்து, தேர்ந்து தெளிந்து பல மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ். இவரின் பணிக்காலத்தில் நிகழ்ந்த ‘மாமன்றங்கள்’ திரு அவையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த
12 ஆண்டுகளில் திருத்தந்தையின் சீரிய தலைமைத்துவத்தில், அவரின் சிறப்பான வழிகாட்டுதல் அனைவரையும் உள்ளடக்கிய, ஈடுபாடு நிறைந்த நான்கு (ஆயர்) மாமன்றங்களைக் கண்டிருக்கிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஏற்படுத்த விரும்பிய மறுமலர்ச்சியின் மிகச் சிறப்பான முயற்சியாகத் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் 1965-இல் ‘ஆயர் மாமன்றம்’
அமைக்கப்பட்டது.
1967-ஆம் ஆண்டு முதல் ஆயர் மாமன்றம் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் கூட்டப்பட்டது. திரு அவையை வழிநடத்தும் பொறுப்பில், திருத்தந்தைக்கு உதவும் உன்னத நோக்குடன், பங்கேற்புத் திரு அவையாகச் செயல்பட முன்னெடுக்கப்பட்ட ஆயர் மாமன்றம் இன்று மறுமலர்ச்சி கண்டுள்ளது. இது ‘நம்பிக்கையாளர்கள் மாமன்றம்’
என்ற புதிய முகத்தைப் பெற்றுள்ளது. ‘அதிகாரத் திரு அவை’,
‘பணியாளர் திரு அவை’ எனும் புதிய பார்வையைப் பெற்றுள்ளது. தன் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் திரு அவை என்ற விமர்சனத்தைக் கடந்து, ‘மாற்றங்கள் வழி மறுமலர்ச்சி காணும் திரு அவை’ எனும் புதிய பயணத்தைக் கண்டிருக்கிறது.
குடும்பங்கள்
பற்றிய
மாமன்றம்
(2014-2015)
முதல்
மாமன்றமாகத் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டிய மாமன்றம் திரு அவையில் குடும்பங்களின் மாண்பும் மதிப்பீடுகளும் குறித்து விவாதித்தது. வழக்கமாகக் கூடும் ஆயர் மாமன்றங்களின் வரிசையில் இல்லாமல், சிறப்பு ஆயர் மாமன்றமாக இந்த நிகழ்வு நடந்தேறியது. ‘நற்செய்தி அறிவிப்பின் ஒளியில் இன்று திரு அவையில் குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு அருள்பணிச் சவால்கள்’
என்ற மையச் சிந்தனையில் முதல் பொது அமர்வு 2014, அக்டோபரில் நடைபெற்றது. தொடர்ந்து அதன் இரண்டாம் பொது அமர்வு 2015, அக்டோபரில் ‘குடும்பங்களின் அழைப்பும் பணியும்’ குறித்து ஆய்வும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. திரு அவையின் பார்வையில் குடும்பங்கள் மாண்புமிக்கவை; மதிப்பிற்குரியவை; அவைதான் ‘குட்டித் திரு அவைகள்’ என்ற உயர் மதிப்பீடுகள் முன்னிறுத்தப்பட்டன. இன்றைய குடும்ப வாழ்வு பல்வேறு சவால்களைச் சந்திக்கும் சூழலில், குடும்பங்களின் பங்களிப்பும் பங்கேற்பும் திரு அவையின் வாழ்வுக்கும் பணிக்கும் முதன்மையானது என்ற சிந்தனையை இந்த மாமன்றம் வழங்கியுள்ளது.
இரண்டாம்
பொது அமர்வின் சிறப்பான நிறைவு நிகழ்வாக, குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பெற்றோர்களான தந்தை லூயிஸ் மற்றும் தாய் செலி மார்ட்டின் இருவரையும் அருளாளர் நிலைக்குத் திருத்தந்தை உயர்த்தினார். இரண்டு பொது அமர்வுகளின் மணிமகுடமாக 2016-ஆம் ஆண்டு ‘அன்பில் மகிழ்ச்சி’
(Amonis laetitia)
எனும் திருத்தூது ஊக்க உரையைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய திரு அவையாக நாம் பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இளையோர் பற்றிய
மாமன்றம்
(2018)
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் அகில உலக இளையோர் மாநாடுகளைத் தொடங்கி வைத்து, இளையோரின் ஈடுபாடு நிறைந்த நம்பிக்கை வாழ்வுக்கு வழிகாட்டியிருப்பது எவ்வளவு சிறப்பானதோ, அதேபோல் 2018-இல் உரோமையில் அக்டோபர் 3-28 வரை நடைபெற்ற ஆயர் மாமன்றத்தில் இளையோரின் நம்பிக்கை வாழ்வுக்கான அழைப்பும், பணிக்கான தேர்ந்து தெளிதலும் கருப்பொருளாக அமைந்திருந்தது. இன்றைய உலகில் இளையோர் எதிர்கொள்ளும் சவால்களான கணினி உலகம், புலம்பெயர்தல், பாலியல் உறவுச் சவால்கள் குறித்து இந்த மாமன்றம் சிந்தித்தது. அதன் அடிப்படையில் 2019-இல் ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christu vivit) எனும் திருத்தூது மடலை வெளியிட்டு, வாழ்வின் மதிப்பீடுகளை முன்னிறுத்தி, இளையோரின் பங்கேற்புக்கும், பணிவாழ்வுக்கும் திரு அவை திறந்த உள்ளத்துடனும் நிறைந்த நம்பகத்தன்மையுடனும் இளையோரை ஏற்றுக்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
அமேசான் ஆயர்
மாமன்றம்
(2019)
அகில
உலக பொது ஆயர் மாமன்றம் என்ற வடிவத்தைக் கடந்து, கண்டங்கள் அளவிலான சிறப்பு ஆயர் மன்றங்களின் வரிசையில், 2019 அக்டோபர் 6-27 வரை நடைபெற்ற அமேசான் பகுதிக்கான ஆயர் மாமன்றம் இயற்கை, காலநிலை, சுற்றுச்சூழல் சகோதரத்துவ உலகம் போன்ற இறையியல், அருள்பணி மதிப்பீடுகளை முன்னிறுத்தி, திரு அவையின் நம்பிக்கை வாழ்வு சமூக மாற்றத்தை உள்ளடக்கியது என்ற சிந்தனை இந்த மாமன்றத்தில் முதன்மை பெற்றது. அழிந்து கொண்டிருக்கிற அமேசான் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அகில உலக நாடுகள் மிகக் குறிப்பாக, வளர்ந்த நாடுகளின் கடமையையும் வலியுறுத்தும் மாமன்றமாக அமேசான் ஆயர் மாமன்றம் நிகழ்ந்தேறியது. 2020-ஆம் ஆண்டு இந்த ஆயர் மாமன்றத்தின் கனவுகளாக சமூகம், பண்பாடு, இயற்கை நலன், ஒருங்கிணைந்த திரு அவை எனும் நான்கு உயர் மதிப்பீடுகளை உள்ளடக்கிய ‘Querida Amazonia’ ஆவணம் வெளியிடப்பட்டது.
கூட்டொருங்கியக்கத்
திரு
அவை
(2023 -2024) மாமன்றம்
1965-இல் தொடங்கப்பட்ட
ஆயர் மாமன்றத்தின் பொன்விழா ஆண்டில் திரு அவை கூட்டொருங்கியக்கத் திரு அவையாகச் செயல்பட வேண்டும் என்பது தூய ஆவியாரின் அழைப்பு எனத் திருத்தந்தை அறைகூவல் விடுத்தார். 2018, மார்ச் 22-ஆம் நாள் அகில உலக இறையியல் மன்றத்தின் உதவியுடன் ‘இன்றைய திரு அவையின் வாழ்விலும் பணியிலும் கூட்டொருங்கியக்கம்’ என்ற
தலைப்பில் இந்த மாமன்றத்துக்கான தயாரிப்புகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என மூன்று முக்கியமான
தாரக மந்திரங்களை முதன்மைப்படுத்திக் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்துக்கு அழைப்பு விடுத்தார்.
2021-ஆம்
ஆண்டு தலத்திரு அவைகளில் ‘அனைவருக்கும் செவிமடுத்தல்’ எனும்
முக்கிய நிகழ்வைச் செயல்படுத்த திருத்தந்தை விடுத்த அழைப்பு ஆயர் மாமன்றச் செயல்பாடுகள் தலத்திரு அவைகளில் நிகழ வேண்டிய புரட்சிகரமான செயல்பாட்டைத் தொடங்கி வைத்தது. ஆயர்களும், அருள்பணியாளர்களும் ஆட்சியாளர்கள் எனும் ஆதிக்க மனப்பான்மையை விடுத்து, செவிமடுக்கும் பணியாளர்களாகச் செயல்பட அழைப்பு விடுத்தார். அதிகாரத் திரு அவை, ஆட்சியாளர் திரு அவை எனும் நிலையைக் கூட்டொருங்கியக்கத் திரு அவை எனும் மாற்றுச் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும், இதன்மூலம் புதிய பாதையை, பார்வையை வழங்கினார்.
2022-ஆம் ஆண்டு
கண்டங்கள் அளவிலும் (continental Synods) 2023-ஆம்
ஆண்டு பொதுப் பேரவை எனத் திட்டமிட்டு செயலாற்ற வழிகாட்டினார். 2023, அக்டோபர் 4-ஆம் தேதி முதல் பொது அமர்வு தொடங்கியது. கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தை 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இரண்டாம் பொது அமர்வாகக் கொண்டு செலுத்தினார். இந்தப் பொது அமர்வில் வாக்களிக்கும் உரிமையை ஆயர்கள் கடந்து அருள்சகோதரிகள், பொதுநிலை சகோதர- சகோதரிகளுக்கும் நீட்டிப்புச் செய்தது ஆயர் மாமன்றத்தின் புரட்சி.
நிறைவாக,
அகில உலக ஆயர் மாமன்றங்கள் 1967-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 மாமன்ற நிகழ்வுகளைக் கண்டுள்ளன. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ‘ஈடுபாடு மற்றும் பங்கேற்புத் திரு அவை’ எனும் அடிப்படையான
மாற்றத்தை ஆயர் மாமன்றங்கள் வழி நிகழ்த்தியுள்ளார்.
மாமன்றங்கள்
வழியாக “நீங்கள் என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள்; அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்” (பிலி 4:9) எனும் செய்தியே திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு விட்டுச் செல்லும் பாடம்.
இயேசுவின் இயக்கம் வரலாற்றில் இடையிடையே அவரின் கனவுகளைக் கடந்து விலகிச் சென்றதுண்டு. ஆசிய இயேசுவின் இரத்தம் ஐரோப்பியக் கிண்ணங்களில் ஊற்றப்பட்டதால், ஏழைகள் ஏற்றம் பெற ஏணியாகத் தம்மை மாற்றிக்கொண்ட அவரின் மார்க்கத்தின் மீது ‘பிரபுக்களின் பிரதிநிதி’ என்ற பிம்பம் போர்த்தப்பட்டது. ‘இயேசுவின் மறையுடல்’ என்று சுட்டிக்காட்டப்படும் திரு அவையும் தன்னைச் சில வேளைகளில் அதிகார நாற்காலியோடு நகர்கிற பெருநிறுவனமாய் முன்னிறுத்தப்பட்ட வரலாறும் உண்டு.
அடுத்தவரின்
மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, தச்சுக்கூடத்தில் வளர்ந்து, நாடோடி வாழ்க்கை நடத்தி, இறுதியில் மாற்றானின் கல்லறையை இரவல் வாங்கித் துயில் கொண்ட ஏழை இயேசுவைத் திரு அவையும் அதன் தலைமைகளும் மறைத்துவிட்ட நிகழ்வுகள் வரலாற்றுப் பிழைகளாக நிகழ்ந்துள்ளதை மறுக்க இயலாது.
21-ஆம்
நூற்றாண்டில் காயப்பட்டு, தன் அடையாளத்தைத் தொலைத்து, திக்குமுக்காடிய திரு அவையின் பயணத்தில் நம்பிக்கை ஒளிக்கீற்றாய்த் தோன்றியவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தூதர் பேதுருவின் வரிசையில் 266-வது வாரிசாக வரலாற்றில் இடம்பிடித்த இவர், தன் வாழ்வாலும் பணியாலும் திரு அவையின் முகத்தை மாற்றிவிட்டார். தடம் மாறிப்போன இயேசுவின் இயக்கத்தை இயேசுவின் மனநிலைக்கு ஏற்ப சரியான தடத்திற்கு நகர்த்தி, அதை வழிநடத்தி வந்த சரித்திரச் சாதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே சாரும்.
ஏழைத்
தொழிலாளர்களை ஏராளமாகக் கொண்டிருந்த, அர்ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகரில், புலம்பெயர்ந்த இத்தாலிய இரயில்வே தொழிலாளி மரியோ ஜோசப் பெர்கோலியோவிற்கு மகனாகப் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, அடிப்படையில் ஓர் ஏழை. ஆகவே, சிறு வயது முதலே ஏழைகள் மீது இரக்கம் இயல்பாகவே இவருக்கு வசப்பட்டது. இளமையில் குடும்பத்தில் பெற்ற அனுபவப் பாடம் மற்றும் வாலிபத்தில் இயேசு சபையில் இணைந்து எளிமையான வாழ்வைத் தனக்கென வகுத்துக் கொண்டது இவரது குருத்துவ வாழ்வுக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.
இயேசு
சபைத் துறவி, அருள்பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால், திருத்தந்தை எனப் பணிவாழ்வு பரிணமித்தாலும், ஜார்ஜ் மரியோ தன் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு தன்னை ஏழைகளின் பங்காளனாய் வடிவமைத்துக் கொண்டார். இவர் ‘பிரான்சிஸ்’ எனும்
பெயரை அனிச்சைச் செயலாகத் தேர்ந்து கொள்ளவில்லை. அசிசி நகரத்துப் பிரான்சிஸ் செல்வக் குடியில் பிறந்தாலும், கட்டிய ஆடையைக் கூட பிறந்த வீட்டில் வீசிவிட்டு வெறுங்கையராய் வாழ்வை நடத்தியவர். அவர் பெயரை இவர் தேர்ந்து கொண்டபோதே தன் வாழ்வின் அடையாளத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
வரலாற்றில்
திருத்தூதர்களின், பிரபலமான புனிதர்களின் பெயர்களையே திருத்தந்தையர்கள் தேர்வு செய்வதுண்டு. சிலரது பெயரைப் பல திருத்தந்தையர்கள் தேர்ந்து கொண்டு
வரலாற்றில் தங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால், கடந்த காலத்தில் எவருமே தெரிவு செய்யாத அசிசி நகரத்துப் புனிதரான பிரான்சிஸின் பெயரைத் தேர்வு செய்து தன்னை வித்தியாசமானவராக விலாசப்படுத்திக் கொண்டார். திருத்தந்தையாகத்
தேர்வு பெற்றவுடனே அவர் மொழிந்தவை வரலாற்றுப் பதிவேடுகளில் தடம் பதித்தவை. “என் மக்கள் ஏழைகள் எனவும், தான் அவர்களில் ஒருவன் என்பதையும்...” என்று அவர் குறிப்பிட்டபோது அது உதட்டளவில் மட்டும் நின்றுவிடவில்லை. திருத்தந்தையர்களுக்கான பிரத்யேக மாளிகையில் தங்காமல், நகருக்கு வெளியே இருந்த ‘புனித மார்த்தா இல்லம்’ என்ற பயணியர் விடுதியிலே சாதாரண நபராய்த் தங்கியிருந்து தனது உணவைத் தானே சமைத்து உண்டு வந்தார் என்பது எண்ணிப் பார்க்க முடியாத நிகழ்வு.
இவரது
எண்ணமும் ஏக்கமும் ஏழைகளைப் பற்றியதே என்பதற்கு ஏராளமான உதாரணங்களை எடுத்துக்கூறலாம். அர்ஜென்டினாவின் வறுமை படிந்த வீதிகளை வாழ்வில் தெரிந்திருந்த காரணத்தால், அவர் ஏழைகள்மீது கரிசனை கொண்ட இரக்கத்தின் கவிதையாக இந்த உலகிற்கு அறியப்பட்டார். புலம்பெயர்ந்தவர்களில் பலர் போதிய வருமானம் இல்லாதவர்கள். சிலர் சட்டப்பூர்வ புலம்பெயர்வு பதிவு பெறாத காரணத்தால் அவர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டது. அர்ஜென்டினா மட்டுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் புலம்பெயர்ந்தவர்கள் புலம்பல் வாழ்வையே கொண்டிருக்கின்றனர். இந்த நிலையை நெஞ்சுக்குள் சேகரித்து வைத்திருந்த இந்த ஏழைப்பங்காளன், 2015, செப்டம்பர் அன்று அமெரிக்க மண்ணில் காலடி பதித்தபோது, தன் அடையாளத்தையும் நிலைப்பாட்டையும் உறுதிபடக் காட்டினார். தலைநகர் வாஷிங்டனில் வந்து இறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடன் மனந்திறந்து உரையாடினார். உலக வறுமை, புலம்பெயர்ந்தோர் கண்ணீர், வளரும் வன்முறை, பூமி வெப்பமயமாதல் என்று நீள்கிற மக்கள் பிரச்சினைகளே அவரது உரையை நிரப்பியிருந்தன. அதே அவையின் மேல் தளத்தில் நின்று கூடியிருந்த மக்களை நோக்கிக் கருணை பொங்க அவர் உரை நிகழ்த்தியது, இயேசு மலைமீது ஏறி அமர்ந்து மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றியது போலிருந்தது.
பத்து
பேர் கூடினாலே ‘மாநாடு’ என்று தலைப்புச் செய்தி வெளியாகும் அமெரிக்க மண்ணில், அவர் இலட்சக்கணக்கான சாதாரண மக்கள்முன் உரையாற்றியபோது கூட்டத்தில் ஒருவனாய் அமர்ந்து உரை கேட்ட நான், கண்ணீரோடு அவர் கருத்துகளை இதயத்தில் அமர்த்திக்கொண்டேன். ஆசி வழங்குவதும் கைகுலுக்குவதும் மறையுரையாற்றுவதுமே சமயத் தலைவர்களுக்கு வழக்கமாகிப்போன நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்த மக்களைச் சொந்த மக்களாக ஏற்றுக்கொள்வதுடன் கடவுள் தந்த செல்வத்தை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஒரு கருணைமிக்கத் தகப்பனாக அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கர்கள்
எல்லாரும் ஒரு காலத்தில் அம் மண்ணுக்குப் புலம்பெயர்ந்தவர்களே என்கிற வரலாற்று உண்மையை உரக்கக் கூறினார். முதலாளித்துவமே வேதமான அந்த வல்லாட்சி மண்ணில், எந்தத் தயக்கமும் இன்றி ஏழைகளுக்காக நீதி கேட்டது இந்தச் சோசலிசப் புறா! ஏடுகளை மேற்கோள்காட்டி, சமய உரை நிகழ்த்துகிற சமயத்தலைவர்கள் மத்தியில், வறியோரின் பாடுகளைச் சுட்டிக்காட்டி நீதி கேட்டவர் இவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?
திருத்தந்தை
பிரான்சிஸ் தனது அடையாளத்தைத் தன் நடை, உடை, பாவனைகளில் அடைத்துக் கொண்டார். முன்பிருந்த திருத்தந்தையர் அணியும் மரபு உடைகள், காலணிகள் இவற்றை எளிமையாக்கிக் கொண்டார். தெருக்களின் அறிஞர்கள் என அவர் அன்பொழுக
அழைத்த வீடற்ற ஏழை அகதிகளைக் கொண்டு வந்து வத்திக்கான் வளாகத்தில் குடியமர்த்தினார். புனித வியாழனன்று சடங்காகவே நடந்து முடிகிற பாதம் கழுவுதல் நிகழ்வை எதார்த்தச் செயலாக மாற்றிய இவர் - பெண்கள், கிறித்தவரல்லாதோர், சிறைக்கைதிகள், தெருக்களில் வாழ்க்கை நடத்திய ஏழைகள் ஆகியோரின் காலடிகளைக் கழுவி தன்னை ‘இயேசுவின் பணியாளன்’
என நிறுவினார். ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பது என்பனவற்றை இறையாட்சிப் பணியின் முதன்மையாகக் கொண்ட இவர், இந்த யூபிலி ஆண்டில் ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினர் யாவரையும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் கூட்டத்தில் இணைத்துக்கொண்டார். “ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்” என்ற
வகையில் தன் கருணைமிகு செயல்களால் இவர் கடவுளையே கடன்காரராக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அவ்வாறே,
ஏழைகளுக்காகத் தன்னை ஏழையாக்கிக் கொண்டு, மரபுகளை உடைத்து மானுடத்தை நேசித்த நாசரேத் மரியாவின் மகனைக் குறை கூறிய கூட்டத்தைச் சட்டை செய்யாமல் சரித்திரம் படைத்தது போன்றே திருத்தந்தை பிரான்சிஸின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. ஏழைகளின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களுக்குத் தொண்டாற்றுவதே இயேசுவின் குருத்துவப் பணி என்று எண்பித்த திருத்தந்தை பிரான்சிஸ், அவர் போன்றோ, இவர் போன்றோ, எவர் போன்றோ இல்லாத நிகர் இல்லாத் திரு அவையின் தலைவர்!
கிறித்தவ
மறைக்குள்ளே இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல இவரது இலக்கு மக்கள்; மறைகளைக் கடந்தும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை எப்போதும் நெஞ்சிலே சுமந்து களமாடியவர். ஆகவே, தகப்பனை இழந்த குழந்தைகளின் குமுறல் போன்ற நிலையே ஏழைப்பங்காளன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு நம் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.
இன்றைய சூழல்
•
இஸ்ரயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் போர்; இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர்.
•
இந்தியாவில் சனாதன ஒன்றிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியரை வெறுக்கின்றனர். கிறித்தவர்கள், சனநாயகவாதிகளைப் பகைவர்களாகப் பார்க்கின்றனர்.
•
சாதிமறுப்புத் திருமணம் செய்கிறவர்களை ஆதிக்கச் சாதி உறவினர்கள், பெற்றோரே கொலை செய்யும் அளவுக்குச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது.
•
மாற்றுக்கருத்துகள், விமர்சனங்களை முன் வைப்போர் எதிரிகளாகவும் பகைவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். கவுரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்க்கி, தபோல்கர் போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர்.
•
ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நில உரிமைக்காகவும் வாழ்வாதார உரிமைக்காகவும் போராடிய அருள்பணி. ஸ்டேன் சாமியை அரசு - நீதிமன்றம்
- சிறைச்சாலை மூன்றும் இணைந்து அநியாயமாகக் கொன்றன. அவரோடு ஒன்றித்துப் போராடியவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.
அன்றும் இன்றும்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் உலக உறவுப் பண்பாட்டுப் புரட்சியாளர் புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (குறள்
972), ‘எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி, அருள்நெறியில் நிற்பவர்களே அந்தணர்’
(குறள் 30) என்றார் வள்ளுவர் பெருந்தகை.
இந்தப்
பண்பாட்டுப் புரட்சியில் உலகிலுள்ள ‘அனைவரும் உடன் பிறந்தோரே’
(Fratelli tutti)
என்றார் தனது சுற்றுமடலில் (2020) திருத்தந்தை பிரான்சிஸ். மானுட ஒன்றிப்பின் மகத்தான அடையாளம் (icon) திருத்தந்தை பிரான்சிஸ். இவர் தாம் வாழ்ந்ததைக் கூறியவர், கூறியதை வாழ்ந்து காட்டிய அரிய முன்மாதிரி. இதனால்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலகின் பேசு பொருள் ஆனார்.
2019-இல் தெற்கு
சூடானில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நாட்டின் அதிபர் சர்விர்கிர், அதிருப்தித் தலைவர் ரியக் மக்சார் இவர்கள் இருவரது கால்களில் விழுந்து முத்தமிட்டு, போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட மானுட ஒன்றிப்பின் குறியீடு திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சிஸ்
(அசிசி) என்று யாருடைய பெயரைத் திருத்தந்தை தனது பெயராக எடுத்துக்கொண்டாரோ, அவரும் ஒரு மகத்தான சமய ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அது சிலுவைப் போர் நடந்து கொண்டிருந்த காலமும் சூழலும். 1220-இல் புனித பிரான்சிஸ் அசிசியார் துணிச்சலோடு எகிப்துக்குச் சென்று அந்நாட்டின் தலைவர் சுல்தான் மாலிக் - அல் கமில் என்பவரைச் சந்தித்தார். சமய நல்லிணக்க ஒன்றிப்பின் உறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்தினார். இவ்வாறு போருக்கு மத்தியிலும் அமைதியின் தூதராகச் செயல்பட்டார் புனித அசிசியார். இந்த வரலாற்று நிகழ்வின் 800-ஆம் ஆண்டு நினைவாக, 04.02.2019-இல் திருத்தந்தை பிரான்சிஸ் அபுதாபியில் வாழ்ந்த தலைமை இமாம் அகமத் - அல் - தாயெப் என்பவரைச் சந்தித்து உரையாடினார். ‘உலக அமைதிக்கான மானுட சகோதரத்துவமும் இணைந்து வாழ்தலும்’
(தோழமை ஒன்றிப்பு) என்ற ஆவணத்தில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டனர்.
அனைவரும் உடன்பிறந்தோர்
உலகச்
சகோதரத்துவ ஒன்றிப்பு என்பதே ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய சுற்றுமடலின் மையக் கருத்து. அடுத்தவர்களைச் சகமனிதர்களாக ஏற்க மதிக்காது (சமுதாயத்தின் எச்சங்களாகப் பார்க்கும் நிலை), தங்களது சுயநலச் சொகுசு வாழ்வுக்காக அவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் சூழலில், மானிடர் அனைவரும் சகோதர உறவு கொண்டவர்கள் என்ற புதிய, புரட்சிப் பார்வையை முன்வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இதன் அடித்தளமாக இறைமையைச் சுட்டுகிறார்.
ஒரு
கையில் ஐந்து விரல்கள் உள்ளன. விரல்களின் நுனியில் மேம்போக்காகப் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், மிகச் சிலர் நுனி விரல்களின் அடி ஆழத்திற்குச் செல்கின்றனர். அங்குச் சமவெளிபோல் இருக்கும் அகலமான உள்ளங்கையில் ஒருங்கிணைகின்றனர். மேல் மட்டத்தில் தனித்தீவாக நின்றவர்களை இப்போது ஒருங்கிணைப்பது, அவர்களைத் தாங்கி நிற்கும் உள்ளங்கை இறைவன் ஆகும். இதை நன்குணர்ந்து அனுபவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். தனது
சுற்றுமடல்களில் சகோதரத்திற்கும் சமூக நட்புக்கும் சவாலான அடைபட்ட உலகையும் இருண்ட மேகங்களையும் அடையாளப்படுத்துகிறார்.
பெந்தகோஸ்து
நிகழ்வின்போது ஆவியாரைப் பெற்ற இளைஞர்கள் காட்சிகள் கண்டனர்; முதியோர்கள் கனவுகள் கண்டனர்; புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைத்தனர் (திப 2:16-17). நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் இலட்சிய உலகை, சகோதர-சகோதரிகள் ஒன்றித்து வாழும் உன்னத உலகைக் கனவு காணத் திருத்தந்தை அழைத்தார். நாம் அனைவரும் பூமித்தாயின் புதல்வர்கள்; இயற்கையின் சிகரப் படைப்புகள்; கண்ணால் காணும் கடவுளின் சாயல்கள் என்றார். இயற்கையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்தும் இருப்பதுபோல மானிடரும் வாழ அழைத்தார். உலகின் சகோதரத்துவச் சேவையில் சமயங்கள் ஒன்றிணைய வேண்டும். சமயங்கள் மானிடரின் இறுதிப் பொருளை முன்வைக்கின்றன. இதை நடைமுறைப்படுத்த ஏதுவான புதிய சமுதாய - அரசியல் - பொருளாதார - பண்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
இளையோர் எழுச்சியும்
நான்கு
முனைப்
போராட்டமும்
‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற
திருத்தூது ஊக்க உரையில் அநீத, அசமத்துவ, ஏற்றத்தாழ்வு உலகில் ஒன்றிப்பை உருவாக்க இளையோர் கலகம் செய்யவும் கிளர்ச்சியை உருவாக்கவும் அழைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் கனவு காணும் (இதுவே இயேசுவின் இறையாட்சிக் கனவும் ஆகும்) உடன் பிறந்தவர்களாக அனைவரும் அன்பிலும் நீதியிலும் வாழ உறுதி ஏற்பின், நான்கு முனைப் போராட்டங்களை அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
1. நமது
மனத்திலும் இதயத்திலும் கட்டியிருக்கும் பிரிவினைச் சுவர்களை இடிக்கவும், ‘நான்’,
‘எனது’ என்ற
அகந்தைச் சிறையை உடைக்கவும், தன்னையும் பிறரையும் அழிக்கும் சுயகாதல் கோட்டையில் இருந்து வெளியேறி, பிறரை, குறிப்பாகச் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பொதுநன்மையை நோக்கி நகரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
2. ஏழைகளின்
உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள், முதலாளி வர்க்கத்தினர் (முதலாளித்துவத்தைக் கடுமையாக விமர்சித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்) முதல் உலக நாடுகளின் பொருளாதாரச்
சுரண்டல் அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில், இதனால் பாதிக்கப்படும் அடித்தள மக்களை, அமைப்புகளை, முற்போக்கு இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும்.
3. பிறப்பின்
அடிப்படையில் உயர்வு-தாழ்வுக் கற்பிக்கும் சனாதன அதர்மத்திற்கு எதிராகச் சவால்விடும் சமூக நீதிப் போராட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும்.
4. தந்தை
வழி ஆணாதிக்கத்தைத் தகர்த்து, ஆண் - பெண் உறவுகளில் சரிநிகர் சமத்துவம் (ஆண் - பெண் வேறுபாடுகள் உண்டு; ஆனால், ஏற்றத்தாழ்வு கூடாது) என்பதைத் தூக்கி நிறுத்த பெண் விடுதலைப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்.
அனைத்துப்
போராட்டங்களின் அடித்தளம், கைம்மாறு கருதாத இயேசு காட்டிய அன்பாக அமைய வேண்டும். இப்போராட்டங்களின் இலக்கு நீதி - சமத்துவ சகோதரச் சமுதாயம் படைப்பதாகும். அன்பும் நீதியும்தான் திருவிவிலியக் கடவுளின் இரு பெரும் பண்புகள் (மத் 23:23; லூக் 11:42). மற்ற விழுமியங்களான இரக்கம், பரிவு, மன்னிப்பு, நேர்மை, உண்மை, நன்மை போன்றவை அன்பு- நீதி என்ற விழுமியங்களின் நீட்சி-விரிவாக்கமாகும்.
நிறைவாக...
அன்று
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்க யாவே கடவுள் மோசே வழியாக அம்மக்களோடு இணைந்து போராடினார் (விப 14:14,23-24). இன்று மகன் இயேசு புதிய சகோதரத்துவ உலகை உருவாக்க இம்மானுவேலராக நம்மோடு உடனிருந்து ஆவியாரின் ஆற்றலால் நம்மை உறுதிப்படுத்துகிறார் (மத் 28:20; மாற் 16:20).
சமயங்கள்,
கோட்பாடுகள், சட்டத்திட்டங்கள், சமூகப் பழக்கவழக்கங்களைக் கடந்து மனிதர்களைக் குறிப்பாக சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் உள்ளவர்களை அன்பு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் மானுட ஒன்றிப்பின் விடிவெள்ளியாக ஒளிர்ந்து இன்று நமக்கு வழிகாட்டுகின்றார்.
அன்று அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இருந்தேன். உலகின் மாபெரும் தலைவரை, திரு அவையின் தந்தையை நேருக்கு நேராகச் சந்திக்கவும், அவரோடு சில மணித்துளிகள் செலவிடவும் கிடைத்த அருமையான வாய்ப்பை எண்ணி அந்தப் பரபரப்பு... ஏக்கம்...!
இயேசு
சபையின் பொது அமர்வு 2016 அக்டோபர், நவம்பர் மாதங்களில் உரோமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 215 நபர்களில் நானும் ஒருவன். 2016, அக்டோபர் 24 ஒரு மறக்க முடியாத சிறப்பான நாள். அன்று காலை 8:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருத்தந்தை பிரான்சிஸ் எங்களுடன் இருப்பார், உரையாடுவார், ஒவ்வொருவரையும் சந்திப்பார் என்பதால் இரட்டிப்பான மகிழ்ச்சி... பரபரப்பு! அவர் அன்று ஆற்றிய உரைக்கும், தான் இறப்பதற்கு முந்தைய நாள் 2025, ஏப்ரல் 20 அன்று ஆற்றிய உரைக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. இதையே இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
பொதுநலனை முன்வைக்கும்
திருத்தந்தை
பதற்றமும்
(Tension), உள்மனப்
போராட்டமும் எல்லாருடைய வாழ்விலும் எப்போதும் உண்டு. குறிப்பாக, நமது கிறித்தவ வாழ்வில் இறை தியானத்திற்கும் - செயல்பாடுகளுக்கும் இடையே, நம்பிக்கைக்கும் - நீதிக்கும் இடையே, தனிவரத்திற்கும் - நிறுவனத்திற்கும் இடையே, குழும வாழ்விற்கும் - நமது பணிகளுக்கும் இடையே பதற்றம், மோதல்கள் எப்போதும் உண்டு. இப்பதற்றங்களால் உருவாகும் மன உளைச்சல், முரண்பாடுகள்,
போராட்டங்கள் இயல்பானவை. ஆனால், அவற்றைப் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளின் அடிப்படையில், இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நாம் வாழும் காலத்தின் அறிகுறிகளை அலசி ஆய்ந்தறிந்து இப்பதற்றங்களுக்குப் பதிலிறுப்பது இன்றியமையாதது என்றுரைத்தார் திருத்தந்தை.
நாம்
எத்தகைய செயல்பாடுகளைச் செய்தாலும் அவை ஒட்டுமொத்த மனித குலத்திற்கு இன்னும் அதிகமான, சிறப்பான பொதுநலனை முன் வைத்தும், இறை இரக்கத்தின் உதவியுடனும் இன்றைய பதற்றங்களைத் தணிக்க நாம் தனிநபராக, சபையாக, திரு அவையாகச் செயல்பட முன்வர வேண்டும் என்ற ஆழமான அழைப்பை முன் வைத்தார். இக்கருத்தைத் தனது 12 ஆண்டு காலத் திருத்தந்தை பணிவாழ்வில் வலியுறுத்தி வாழ்ந்து காட்டியதோடு, உயிர்ப்பு நாள் 2025, ஏப்ரல் 20 அன்று தனது இறுதிச் செய்தியாகவும் வெளிப்படுத்தினார். பதற்றம் நிறைந்த இவ்வுலகில் அமைதியை உருவாக்க, குறிப்பாக லெபனான், சிரியா, ஏமன், உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பதற்றங்கள் தணியவும் அமைதி திரும்பவும் அனைவரும் செயல்பட உலகத் தலைவர்களுக்கும் நமக்கும் அழைப்பு விடுத்துச் சென்றுள்ளார்.
உரையாடலை வாழ்வாக்கிய
திருத்தந்தை
நாடுகளிடையே,
குழுக்களிடையே, மதங்களிடையே, குடும்பங்களிடையே, நம்மிடையே பல்வேறு கருத்து மோதல்கள், வேறுபாடுகள், கலாச்சார - மொழி - இனப் பாகுபாடுகள் இருப்பினும், இப்பதற்றத்தை உரையாடல்கள் மூலம் தணிக்க முடியும், களைய முடியும் என முழுமையாக நம்பினார்.
அகில உலக அளவில் மதத் தலைவர்களிடையே, நாட்டுத் தலைவர்களிடையே உரையாடலை ஊக்குவிக்கப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். உரையாடல் மூலம் பதற்றத்தைத் தணிக்கவும் நல்லிணக்கத்தை
ஊக்குவிக்கவும் மனித நேயத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் இறுதிவரை பல்வேறு செயல்பாடுகளை ஏற்பாடு செய்தார்.
பரிவிரக்கத்தின்
பாலமான
திருத்தந்தை
“இவ்வுலக அவலங்களினால் துயருறும் மக்களின் அழுகுரல்கள் நமதாக வேண்டும்”
என்ற திருத்தந்தையின் கூற்று அவரின் பரிவிரக்கத்தின் அன்பை ஆழமாக உணர்த்துகிறது. ஏழைகள், நோயாளிகள், வறுமையில் வாடுவோர், அநீதச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கான பணி முன்னுரிமையும் ஆதரவும் அன்பும் நமதாக வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். வளர்ச்சியின் பெயரால் புலம்பெயர்ந்த, ஆதரவற்ற மக்களுக்குத் திரு அவை அடைக்கலம் தர வேண்டுமென வலியுறுத்தினார்.
‘புலம்பெயர்ந்தோரின் வேதனை என் இதயத்தை முள்போல் குத்துகிறது’ எனத்
தனது பரிவிரக்க அன்பைப் பாதிக்கப்பட்டவருக்காக வெளிப்படுத்தினார். பரிவிரக்கத்தோடு கூடிய பிறரன்புப் பணிகளே, நற்செய்திப் பணியின் தவிர்க்க முடியாத அங்கமாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
சமூக நீதியை
நிலைநாட்டிய
திருத்தந்தை
சமூகத்தில்
ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்குவதிலும், பாதிக்கப்பட்டோரின் பார்வையில் திரு அவையின் செயல்பாடுகள் மாற்றம் பெறுவதிலும், அழிந்து வரும் இயற்கையைப் பேணிக்காப்பதிலும் திரு அவை செயல்பட இவர் எடுத்த முயற்சிகள் சிறப்பானவை. துன்புறும் ஏழை எளியோரைத் தேடிச்செல்வதும் (go to the street), அவர்களது துயரினில்
பங்குகொள்வதும் (smell the sheeps) இவரது சமூக
நீதியின் அடித்தளமாக அமைந்திருந்தன. இத்தகைய சிந்தனைகளையே ‘இறைவா உமக்கே புகழ்’
(Laudato si),
‘அனைவரும் உடன் பிறந்தோர்’
(fratalli totti) எனும் தனது ஏடுகளில் சிறப்பாக வலியுறுத்தினார்.
கடந்த
இரண்டு ஆண்டுகளாக அவர் முன்னிறுத்திய கூட்டொருங்கியக்கத் திரு அவை (synodal church), திரு அவையை
மாற்றத்தை நோக்கி மக்கள் மையத் திரு அவையாகத் திசை திருப்பியுள்ளது. இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு, இயற்கை மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பது என இரண்டு தன்மைகளையும்
இணைத்து ஒருங்கிணைந்த இயற்கை (integral ecology) அல்லது மனிதன்
காக்கும் இயற்கை (human ecology) என ஒடுக்கப்பட்டோரின்
சமூக நீதிக்கான பார்வையைத் திரு அவைக்கு வழங்கி, அதை நோக்கிச் செயல்படவும் தூண்டியவர். ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்காமல் இயற்கையை நாம் பாதுகாக்க இயலாது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.
ஆன்மிகத் தாகம்
கொண்ட
திருத்தந்தை
இறைச்சாயலாகப்
படைக்கப்பட்ட மனிதரைச் சிதைப்பதும் ஒடுக்குவதும் பாவம் என்றும், இப்படிப் பாதிக்கப்பட்ட ஏழைகளையே இயேசு தேடி வந்தார் ( மாற் 2:17) என்னும் ஆன்மிகப் புரிதலை ஆழமாக வாழ்ந்து காட்டியவர் இவர். எச்சூழலிலும் எந்நேரத்திலும் இறையாற்றலில் உறுதி கொண்டு ஆழமான நம்பிக்கையில் தன்னையே சரணாகதி ஆக்கிய இறைத்தொண்டர் இவர். அவரது ஒவ்வொரு செயல்பாடும் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இறையன்பில், இறைப் பராமரிப்பில் முழு நம்பிக்கை, இந் நம்பிக்கை ஒருபோதும் கைவிடாது (hope does not dissappoint) என்ற உணர்வோடு ஏழை-எளியோருக்கான முன்னுரிமை, இன்னும் சிறப்பாகச் செயல்படும் வேகம், துணிவு, செபமும் செயல்பாடும் இணைந்தே இருப்பது, அனைத்திற்கும் மேலாக ஆவியில் பகுத்துணர்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் (discernment) இவை திருத்தந்தையைப் புனித இஞ்ஞாசியாரின் மறுவுருவாக
வாழ வைத்துள்ளது.
ஏழ்மையும் தாழ்ச்சியும்
மிளிரும்
திருத்தந்தை
சிறிய
பதவி கிடைத்தாலே ஆடம்பரமும் ஆரவாரமும் கொண்ட அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் மத்தியில், ஒரு தனித்துவமான தலைவராக வலம் வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். தனது வாழ்வின் எல்லா நிலைகளிலும் வகைகளிலும் ஏழ்மையை விரும்பி ஏற்றவர். தங்குமிடம்,
உடுத்தும் உடை, நடை உடை பாவனை என எப்போதும் எளியோரின்
தோற்றம்! அதேபோலத் திரு அவையின் அகில உலகத் தலைவர் எனினும், எளியோரின் பாதம் தொட்டுக் கழுவி முத்தமிடும் தாழ்ச்சி மிக்கப் பணியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். உலகத் தலைவர்களுள் ஏழ்மையையும் தாழ்ச்சியையும் தனதாக்கி, புறக்கணிக்கப்பட்டோரின் புனிதராக நம்மிடையே வாழ்ந்த சமகாலச் சமூகப் புனிதர். இவ்வாறு ஏழ்மையும் தாழ்ச்சியும்
நிறைந்த திருத்தந்தையாக இவரை இறைவன் நமக்கு அடையாளம் காட்டுகிறார். இவரைப் பின்பற்றி, புறக்கணிக்கப்பட்டோரின் புனிதர்களாக வாழ்ந்து காட்ட, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து
அழைப்பு விடுக்கிறார்.
2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு உரோமையர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த யூதேயா நாட்டில் முகவரி இல்லாத சில மனிதர்களால் துவங்கப்பட்ட ‘சத்தியத் திரு அவை’ காலக் கரையானால் அரிக்கப்படாமல், அதிகாரச் சுனாமிகளுக்கு அசைந்து கொடுக்காமல் இனம், மொழி, பிராந்தியம் என்ற எல்லாப் பிரிவினைகளையும் கடந்து இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. இது மனித முயற்சியாலா!
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக வார்த்து எடுக்கப்பட்ட ஆகம வழிமுறைகளைத் தங்கள் பெருமைமிகு அடையாளமாக விரித்திருந்த யூத மேலாக்கத்தின் மரண அச்சுறுத்தல்களுக்கும், பேரரசு மன்னர்கள் அள்ளி எறிந்த அக்கினி எரிகணைகளுக்கு இடையிலும், விசுவாசக் கண்ணீரை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தங்களை அழிக்க நினைத்த பேராசை மேல் வெற்றி கொண்டு இன்னும் உயிரோட்டமாக வாழ்கிறது கிறித்தவம் என்றால் அதற்கு யார் காரணம்?
இந்த
நீண்ட காலப் பயணத்திற்கு ஒவ்வொரு காலத்திலும் பல வழிகாட்டிகள் தேவைப்பட்டார்கள்.
காலத்தின் தேவைகளை எதிர்கொள்ளத் தகுதியான தலைமைகள் தேவைப்பட்டன. போர்க்காலத்தின் தன்மைகளின் அடிப்படையிலும், எதிரிகளின் தகுதியின் அடிப்படையிலும் போருக்குத் தேவையான கருவிகளும் ஆயுதங்களும் யுக்திகளும் தேவைப்பட்டன. தேவையான அனைத்தையும் இறைவனே தம் தூய ஆவியின் மூலம் திரு அவைக்குத் தந்தார் என்பதுதான் உண்மை. இதில் முதன்மையாகத் தமது திரு அவையைத் தலைமையேற்று வழிநடத்த இறைவன் உருவாக்கின நிறுவனமே ‘பாப்பரசர்’
என்ற திருப்பீடம் (Holy see).
இந்த மேய்ப்பர் மூலமாகத்தான் இறைவன் தம் ஆடுகளைக் கட்டுக்கோப்பான மந்தையாக 2000 ஆண்டுகளாக வழிநடத்தி வந்துள்ளார்.
மேய்ப்பரை
அறியாத ஆடுகளும், ஆடுகளை அறியாத மேய்ப்பரும் ஒரு நாளும் மந்தையாக வாழ முடியாது. உடல் சோர்ந்து, திரு அவையின் ஆட்சிப் பாரத்தைச் சுமக்க முடியாமல் மற்றொரு சுமைதாங்கியின்மீது பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் முடிவெடுக்கையில், இறைவன் தமது திரு அவையின் அடுத்தக்கட்ட பயணத்தைத் தலைமையேற்று நடத்த ஒரு சரியான மாலுமியை அவரே அடையாளம் காண்பித்தார். அவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ்!
உலகின்
மிகப்பெரிய ஆன்மிக இயக்கமான கத்தோலிக்கத் திரு அவையைத் தலைமையேற்று வழிநடத்தும் ஒரு திருத்தந்தை, ஒரே நாளில் உருவாக்கப்படுவதில்லை. இறைவன் அவரைக் கருவின் உருவிலேயே அடையாளம் காண்கிறார். அவரை ஒவ்வொரு நாளும் செதுக்கிச் சமைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இறைவன் எப்படி இந்த 12-ஆண்டு காலகட்டத்திலும் தம் அருள் எனும் உளி கொண்டு செதுக்கி வடிவமைத்தார் என்பதற்கு அவர் ஆற்றிய பணிகளே மிகச்சிறந்த சான்று.
காலம்
எவ்வளவு மாறுபடுகின்றது? உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம், பயங்கரவாதம், புதிய தகவல் தொழில்நுட்பங்கள், சீரழியும் சுற்றுச்சூழல், பெரும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பேராசை, அரசியல் தலைவர்கள் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் ஊழல், ஆண்-பெண் உறவுகள்-திருமண பந்தங்களில் ஏற்பட்டுள்ள உரசல்கள் மற்றும் விபரீதங்கள் போன்ற பல புதிய சவால்களைத்
திரு அவை எதிர்கொள்கிறது. பயணத்தின் ஆபத்துகளை நாம் புரிந்திருந்தாலும், நம்மை வழிநடத்தும் திருத்தந்தை அந்தச் சவால்களைச் சந்திக்கும் தகுதியும் தலைமைத்துவமும் பெற்றவராகவே விளங்கினார்.
உரோமாபுரி
மாளிகையின் நான்கு சுவர்களுக்குள் பாதுகாத்து வைக்கப்பட்ட புனித பொருளாகப் பாப்பரசர்கள் இருந்த காலம் போய், உலகின் தெரு வீதிகளில் உள்ளம் நிறைய கவலைகளோடும், கண்களில் நிறைய கண்ணீரோடும் காயப்பட்டு உயிருக்குப் போராடும் மனிதத்தைத் தூக்கி தன் மார்பில் சாய்த்து, நம்பிக்கை பால் ஊட்டி, மனித நேயம் வளர்க்கும் மகத்தான பணிதான் பாப்பரசரது பணியாக இருந்தது.
‘நீங்கள் யார்?’ என்று கேட்டால், ‘நான் ஒரு பாவி’ என்று தாழ்ச்சியுடன் தன்னை அடையாளப்படுத்துகிற ஒரு பாப்பரசராக நம் திருத்தந்தை விளங்கினார். ஊழல், உலகம் வெப்பமயமாதல், இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு இடையே உலகம் முழுவதும் இருக்கின்ற பெரும் இடைவெளி, ஓரினச் சேர்க்கையாளர்களின் உளவியல் பிரச்சினைகள், கத்தோலிக்கக் குருத்துவத்தால் கசக்கி முகரப்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள், கத்தோலிக்கத் திரு அவையின் மேல்மட்ட நிர்வாகங்களில் இருக்கிற குளறுபடிகள்... என்று எல்லாவற்றைப் பற்றியும் உணர்வுப்பூர்வமாகத் தன் உள்ளத்தைத் திறந்து பேசும் ஒரு சமூக நீதிப் போராளியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி அமைந்திருந்தது.
தனது
தலைமையிலான திரு அவை ‘ஏழை மக்களுக்கான ஏழைத் திரு அவை’ என்று நமது திருத்தந்தை கூறியபோது, நமது கண்கள் நன்றியின் கண்ணீரால் நனைந்தன.
இத்தனை
நல்ல பண்புகளைத் தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு நம் ஒட்டுமொத்தத் திரு அவைக்கும் அளவில்லாத துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதர-சகோதரிகளாக ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அவர் விதைத்துச் சென்ற விதையானது நல்லெண்ணம் கொண்ட நம் அனைவரின் உள்ளங்களிலும் தொடர்ந்து முளைக்கும் என்பதில் ஐயமில்லை!