நான் அறிந்த திரு அவைத் தலைவர்களுள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும் பணியும் ஆண்டவர் இயேசுவின் வாழ்வு மற்றும் பணியோடு நெருக்கமாக ஒத்திருப்பதாகவே உறுதியாக நம்புகிறேன். இயேசுவின் வாழ்வும் திருத்தந்தையின் வாழ்வும் ஒன்றோடொன்று பிரிக்க முடியா இணைப்பைக் கொண்டுள்ளதாக உணர்கிறேன். ஒருசில ஒற்றுமைகளை மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தீவனத் தொட்டியில்
கந்தைத்
துணியில்
பொதிந்தவர்
“துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்.” வாழ்நாள் முழுவதும் எளிமையே இயேசுவின் அடையாளம். திருத்தந்தை 13-ஆம் நூற்றாண்டு புனித அசிசி நகர் பிரான்சிஸ் பெயரை ஏற்று, அதற்கேற்ப எளிய வாழ்வும் ஏழைகளுக்கான அர்ப்பணமும் கொண்டு வாழ்ந்தவர். ஆயராகப் பணியாற்றியபோது ‘குடிசைப் பகுதிகளின் ஆயர்’ என்றே அறியப்பட்டவர். திருத்தந்தையரின் ஆடம்பர வாழ்வைத் துறந்து, எளிய குடிலில் தங்கி உணவு, உடை, பயணம் என யாவற்றிலும்
எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
எதிர்க்கப்படும்
அடையாளம்
இது
சிமியோன் குழந்தை இயேசுவைப் பற்றி முன்குறித்த இறைவாக்கு. யூத சமயத் தலைவர்கள், மறைநூல் அறிஞர் இயேசுவை வன்மையாக எதிர்த்தனர். உண்மையைவிட தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாரம்பரியங்களையும் உயர்வாக அவர்கள் கருதினார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அண்மைக்காலத் திரு அவைத் தந்தையர்களில் அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தவர். திரு அவை பற்றிய அவருடைய கருத்துகள், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு போன்றவை எதிர்ப்புக்குக் காரணங்களாய் அமைந்தன. வரம்பு மீறிய முதலாளித்துவம், உலகச் சந்தை போன்றவற்றைக் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தபோது, “அமெரிக்கர்கள் என்னைத் தாக்குவதை மரியாதையாக ஏற்கிறேன்”
என்றார். ‘From Benedict’s peace to francis’ war’ மற்றும்
‘lost shepherd’ போன்ற நூல்கள் இத்தகைய எதிர்ப்பின் வெளிப்பாடுகள். ஆயினும், வேடிக்கையாகத் திருத்தந்தை குறிப்பிட்டார், “தம் எளிய குடிலில் மற்றவரோடு வரிசையில் நின்று உணவு பெறுவதால் உணவில் நஞ்சைக் கலக்கவும் வாய்ப்பில்லை.”
‘என் திருச்சபையைக்
கட்டுவேன்’
திரு
அவை ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பெற்று, கட்டியமைக்கப்பட்ட சமூகம். நம்பிக்கையின் தொடர் பயணத்தில் இணைந்து செல்லும் மக்கள் திரு அவை. தலைவர்கள் ஏற்றத் தாழ்வு அற்ற, அனைவருக்கும் பணியாளர்களாகச் செயல்படும் மாறுபட்ட சமூகம். அவ்வாறே, திருத்தந்தையும் இறைமக்களைத் திரு அவையின் மையத்திற்குக் கொணர்கிறார். திருமுழுக்கு அருளடையாளம் மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டும் அடையாளம். திரு அவை வாழ்விலும் பணியிலும் அனைத்து இறைமக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்குடன் திருத்தந்தை கூட்டொருங்கியக்கத் திரு அவையை முன்னிலைப்படுத்தினார். இதன் வழியாக அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருடைய பங்கேற்பையும் உறுதி செய்கின்ற திரு அவையைச் சமைக்க முற்பட்டார். திரு
அவையில் ஓரங்கட்டப்பட்டவர்களான பெண்கள், இளைஞர் ஆகியோருக்குப் பொறுப்புகளையும் பங்களிப்புக்கான அழைப்பையும் வழங்கினார்.
‘நான் இம்மக்கள்
மீது
பரிவு
கொள்கிறேன்’
‘ஏழைகளுக்கு நற்செய்தி’
இயேசுவின் திருப்பணிக்கும் திருத்தந்தையின் திருப்பணிக்கும் மையமாக அமைகிறது. தன் ஆண்டவரைப் போன்று திருத்தந்தையும் மனவுருக்கம் நிறைந்தவர். பிற நாடுகளில் குடிபுகுந்தவர்கள், அகதிகள் ஆகியோருடைய நலன்களை நோக்கிப் பயணித்தவர். தன் கிரீஸ் பயணத்தின்போது லெப்பாஸ் என்னும் இடத்திலுள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட்டு அங்கிருந்து 12 சிரியா நாட்டு இஸ்லாமியர்களைத் தன் விமானத்தில் உரோமை நகருக்கு அழைத்து வந்தார். ஆலயங்கள் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என ஆயர்கள், பேராயர்களுக்கு
அறைகூவல் விடுத்தார். கிறித்தவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நற்செயல்கள் செய்யவும் அந்நியரை ஆதரிக்கவும் வேண்டும் என வலியுறுத்தினார். மற்றவர்களைப் பற்றிய
அக்கறையின்மையை, உலகமயமாக்குதலை வன்மையாகக் கண்டித்தார்.
‘நானும் தீர்ப்பளிக்கவில்லை’
பரிசேயர்
என்னும் குழுவினர் இயேசுவை ‘பாவிகளின் நண்பர்’ எனக் குறைகூறினர். ஆயக்காரரோடு உணவருந்துகிறார், ஒழுக்கக்கேடான பெண்களுக்குச் சார்பான நிலைப்பாடு எடுக்கிறார் என்றனர். பாவிகளை மீட்கவே தாம் வந்துள்ளதாக இயேசு பதில் மொழிந்தார். அதுபோல, தற்காலச் சூழலில் கேள்விக்குள்ளான சில அறநெறிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர் திருத்தந்தை. ஓரினப் பாலியல் உணர்வு கொண்டிருப்பது குற்றமல்ல என்றும், அப்படிப்பட்டவர் ஆண்டவரைத் தேடி அவரது அருளைப் பெறுவாராயின், அவரை நியாயம் தீர்ப்பதற்கு நான் யார்? என்று குறிப்பிட்டார். மணவிலக்குப்
பெற்றவர் மற்றும் மணவிலக்குப் பெற்று மறுமணம் செய்தவர் நற்கருணையில் பங்குபெற வகை செய்தார். “நற்கருணை என்பது தூயவருக்கு அளிக்கப்படும் பரிசு அன்று; மாறாக, பலவீனமானவர்களுக்கு அளிக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து மற்றும் ஊட்டச்சத்து” என்றார்.
‘இஸ்ரயேலரிடத்திலும்
இத்தகைய
நம்பிக்கையை
நான்
கண்டதில்லை’
இயேசு
யூதர்-யூதர் அல்லாதோர் எனும் வேறுபாடு இன்றி சமயம், இனம் கடந்து மக்களை இறைவனின் அன்புக்குரியவராய் கண்ணோக்கினார். உண்மைகளை அனைவருக்கும் போதித்து நற்சுகம் அளித்தல், உணவளித்தல் போன்ற அருங்கொடைகளை அனைவருக்கும் வழங்கினார். யூதர் அல்லாதோரிடையே காணப்பட்ட நம்பிக்கையைப் பாராட்டினார். நற்செயல் செய்வதற்கு உதாரணமாக ஒரு சமாரியரைச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையும் முழு மனுக்குல ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர், பாடுபட்டவர். “பாலம் கட்டாமல் தடுப்புச் சுவர் கட்டுகிறவன் கிறித்தவன் அன்று” எனத் துணிச்சலுடன் முழக்கமிட்டவர். துபாய் அல் அசார் மசூதியின் தலைமை இமாமைச் சந்தித்தபோது, அமைதி மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான அறிக்கையைப் பிரகடனப்படுத்தினார். ‘சமயப் பன்மை இறைவனின் திருவுளம்’
எனும் புரட்சிக் கருத்தையும் முன்வைத்தார். “பிற சமயங்களை அவர்தம் கண்ணோட்டத்திலும் உடன்பாடு முறையிலும் பார்க்க வேண்டும்; தம் சமயம் உயர்வானது என்னும் கண்ணோக்கில் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனற்றது”
என்றார். உலகம் சீரமைவதற்குச் சமயங்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இவர் பிற சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்.
இஸ்லாமும் வன்முறையும் பிரிக்க முடியாதது என்ற தவறான கருத்தினைத் தகர்த்தார்.
‘உப்பும் ஒளியும்
நீங்களே...
உங்கள்
ஒளி
மனிதர்
முன்
ஒளிர்க’
ஆண்டவர்
இயேசு தம் சீடரை உப்பாகவும் ஒளியாகவும் உருவகப்படுத்துகிறார். “சீடர் உப்பையும் ஒளியையும் கொண்டு செல்பவர் அல்லர்; மாறாக, அவர்களே உப்பாக ஒளியாக வாழ்பவர்.” “அப்பொழுதுதான் அவர்கள் உங்கள் நற்செயலைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” என்றார்.
திருத்தந்தை பிரான்சிஸ் நம் கிறித்தவ நம்பிக்கை வெறும் கோட்பாடு அன்று; அது வாழ்வின் நெறி என்பதை வலியுறுத்தினார். நற்செய்தி வழி நின்று அன்றாட வாழ்வில் நற்செய்தித் தகவுகளின் வழியில் வாழ்வதே வலிமையுள்ள நற்செய்தி என்கிற அர்த்தத்தை, நற்செய்தி வாழ்வியலை தம் வழியாக வாய்மையாக வாழ்வாகக் கொண்டு பயணித்த திருத்தந்தை தம் ஆண்டவரோடு விண்ணுலகில் இப்பயணத்தைத் தொடர்கிறார்.
திருத்தந்தைக்கு
என் தாழ்மையான அஞ்சலி. அன்னாரது சீர்திருத்த கருத்தாக்கம், நிலைப்பாடு, செயலாக்கம் தொடரவும் திருச்சபை தொடர்ந்து புதுப்பிக்கப்படவும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.
அன்புடையீர்! வணக்கம்.
கடந்த
2013-ஆம் ஆண்டு ‘பிரான்சிஸ்’ என்ற
பெயரில் ஒரு போப் ஆண்டவர் கத்தோலிக்கக் கிறித்தவத் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கப் போகிறார் என்றவுடன், ஒட்டுமொத்த உலகமும் வத்திக்கானைத் திரும்பிப் பார்த்தது.
இன்னார்,
இன்ன கருத்தைச் சொன்னார் என்று ஒரு பெயரைக் குறிப்பிடுவோம். ஆனால், தன் பெயரைக் குறிப்பிடுவதிலேயே ஒரு கருத்தைப் பதிவு செய்தவர் மரியாதைக்குரிய போப் பிரான்சிஸ் அவர்கள். எளிமை, தாழ்ச்சி, இரக்க குணம், அன்பு, மனிதநேயம் அத்தனைக்கும் சொந்தக்காரரான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்கள் 2025, ஏப்ரலில் தன்னுடைய மேல் உலகப் பயணத்தை மேற்கொண்டார் என்றதும், இங்குத் தங்கி நிற்கும் நாம் தயங்கி நிற்கிறோம். இனி வழிகாட்ட யார்?
‘அம்மையே மகவே வாய்ந்த
வருந்தவத் திறைவ சூசை
நும்மையே
யுயிரென்றாக
நுதலிநுந் நிழலில் வாழ்ந்த
நம்மையே
யகன்று போதீர்
நட்பிடை யகலா தன்பின்
செம்மையே
பேண்மி னென்னாச்
சென்றுமீண் டெவரும் போனார்’
- தேம்பாவணி
ஒவ்வோர்
உயிரின் மரணத்தின் போதும் நிலையாமையை நாம் உணர்ந்து கொள்கிறோம். எனினும், நிலையாத இந்த வாழ்வை கொண்டு இறைநெறியை, எளியோரின் நல்வாழ்வுக்கான சாத்தியக்கூறுகளை நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சித்தவர்களைப் பிரியும் போது ‘மனிதநேயத்தின் நுரையீரல்’
வலிக்கிறது.
‘வெந்திறல் கூற்றம் பெரும்பே துறுப்ப
எந்தை
ஆகுதல் அதற்படல் அறியேன்;
அந்தோ
அளியேன் வந்தனென் மன்ற;
என்னா
குவர்கொல் எற்றுன்னி யோரே;
மாரி
இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர்
உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்ணில்
ஊமன் கடற்பட் டாங்கு...’-புறநானூறு-238
இந்த
நேரத்தில் தேவையான ஆறுதலையும் தேறுதலையும் இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பாராக என்று பிரார்த்திப்போம்.
ஏழைகளை
நாம் கௌரவப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அவர்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட, பிறர் நலம் பார்க்க வேண்டும். “ஒரே ஒரு பயம் இருக்கட்டும்; ஏழைகளை நாம் அலட்சியப்படுத்தினால் கடவுளின் அன்பைப் புண்படுத்துவதாகும், காயப்படுத்துவதாகும். ஏழைகளை இயேசு நேசிக்கிறார்.
தேவை உள்ளவர்களிடம் இயேசு இருக்கிறார்” - இது
2021-ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விழாவில் திருத்தந்தை
போப் பிரான்சிஸ் அவர்களின்
உரை.
நடக்க
இயலாத போதும் நல் எண்ணத்தால் எழுந்துவிடலாம். ஆனால், கண்கூடாகப் பாதிக்கப்பட்ட பிறருக்கு உதவாதபோது, எப்பேர்பட்ட செல்வந்தனாகவோ அறிவாளியாகவோ பலசாலியாகவோ இருந்தாலும், ஒரு மனிதன் முடங்குகிறான்.
‘நேயத்தே என்ற நிமலன் அடிபோற்றி!’ என்றார் மாணிக்கவாசகர். தான் மனிதநேயத்தோடு நடந்துகொள்வது என்பதைக்காட்டிலும், தன்னைப் போல எல்லாரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வாழ்ந்து காட்டுவது அரிது.
‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு
மாய்வது மன்’
(குறள் 996)
2025, ஈஸ்டர் விழாவில்
ஆயிரக்கணக்கான கிறித்தவ மக்களிடையே உரையாற்றும்போது திருத்தந்தை அவர்கள் கூறிய கருத்து பின்வருமாறு:
“உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். போர் என்பது மனிதநேயத்தின், மனித குலத்தின் தோல்வி. எனவே, அமைதியை ஏற்படுத்த வேண்டும்.”
அன்பர்களே!
இந்தச் செய்தியைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவர் கடைசியில் எதைக் கூறினார் என்பதல்ல; கடைசி வரைக்கும் எதைக் கூறினார் என்பதில்தான் அவரது கொள்கை நிலைத்து நிற்கிறது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்” (மத்
13) என்று திருவிவிலியம் அறிவிக்கிறது.
தஞ்சை
மாவட்டம், பாபநாசத்திலிருந்து திருக்கருகாவூர் வரும் வழியில் ‘மறுபிறவி மர இழைப்பகம்’ என்கின்ற ஒரு பெயர்ப் பலகையைப் பார்த்தேன். சிந்தனையைத் தூண்டியது. மரம் குறித்தான இருவேறு பார்வைகள் உள்ளன. புனிதமானது பயனுடையது என்றாலும், உபயோகம் இல்லாமல்
நிற்பவர்களை ‘மரம்போல் நிற்கிறாயே...’ என்பது உலக வழக்கு. விளைந்த மரங்களை அறுத்து முறைப்படுத்தி, பலகைகளாக்கி கதவு, ஜன்னல், நிலைகள் எனக் கட்டுமானங்களுக்கும், கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வாகனம், தேர் எனவும் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம். மரங்கள் பயன் மரங்களாய் மறுபிறவி எடுக்கிறது பாருங்கள். இதைத்தான், ‘மறுபிறவி மர இழைப்பகம்’ என்னும் பெயர் குறிக்கிறது என்று நினைக்கிறேன். புரிந்துகொள்வோம்; விதையாவோம்; மரமாவோம்; பயனளிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைப்பணிக்கும் மனிதநேய மாண்புக்கும் தலை வணங்குகிறேன்.
நமது வாழ்வு ‘உறவு’, ‘உலகு’ எனும் இரு கூறுகளின் சங்கமத்தில் ‘இருத்தல்’ கொண்டது. இவ்விரு தளங்களையும் ஒழுங்குபடுத்தும் போதும் அவற்றை நேரிய வழியில் பேணிக்காக்கும் போதும் இறைவனின் ஒட்டுமொத்தப் படைப்பும் பேருவகை கொள்ளும். இப்பேருண்மையை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது பணிக்காலத்தின் முதல் நாள் தொட்டு, இறுதி மூச்சு வரை அதைத் தன் போதனையாகவே கொண்டிருந்தார். காலம் கரைந்தாலும், கனவுகள் சிதைந்தாலும் திருத்தந்தையின் சிந்தனைக் கதிர்கள் அதிர்வலைகளை இனி எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதே என் நம்பிக்கை.
‘அக்கறை’ என்பது உறவின் மீதும் உலகின் மீதும் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய வாழ்வியல் நியதி. Man is not only a rational being, but also a relational being.
உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதும், உலகு எனும் பொது இல்லத்தைக் கட்டியெழுப்புவதும் நமது இயல்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும் என்னும் அவருடைய சிந்தனையை இவ்வுலகோருக்கு வாழ்வியல் சிந்தனையாக விட்டுச் சென்றிருக்கிறார்.
‘நாம் வாழும் இவ்வுலகின் மீது அக்கறை கொள்வது நம்மீதே நாம் கொள்ளும் அக்கறையாகும்’ எனக்
குறிப்பிடும் திருத்தந்தை, “நாம் அனைவரும் இவ்வுலகின் பொது இல்லத்தில் (common home) வாழும் ஒரே
குடும்பத்தினர் எனச் சிந்திப்பது அவசியமானதொன்று” எனவும்
வலியுறுத்துகிறார்.
நாம்
அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மறைந்து வரும் இன்றைய உலகில், நீதி மற்றும் அமைதிக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். ஆகவே,
ஏமாற்று மாயையின் பின்னணியில் பிறக்கும் பாராமுகமாய் உலகமயமாக்கப்பட்ட, நேச உணர்வற்ற அலட்சியப் போக்கினால் அனைவரும் சக்தி வாய்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு
நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.
ஒவ்வொரு
மதமும், கடவுளின் குழந்தையாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது கொண்ட மரியாதையின் அடிப்படையில் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் சமூகத்தில் நீதியைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வழிகாட்டுகிற திருத்தந்தை, சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தை நோக்கியப் பயணத்தில் அடிப்படை மனித உரிமைகள் மறக்கப்படக்கூடாது என நினைவூட்டினார். இதுவே பல்வேறு
கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கக்கூடியது.
ஆகவேதான்,
திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்நாள் முழுவதும் இறையரசின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அறைகூவலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். எனவே,
“மனிதர் அனைவரையும் உரிமைகள், கடமைகள் மற்றும் மாண்பில் சமமாக உருவாக்கி, அவர்களைச் சகோதர, சகோதரிகளாக ஒன்றாக வாழவும், உலகை நிரப்பவும், நன்மை, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் மதிப்புகளை அறியவும் கடவுளே நம்மை அழைத்துள்ளார்” என
வேண்டுகிறார். இத்தகைய
கொள்கையில், கருத்தியலில், வாழ்வியலில் உறுதியான நிலைப்பாடு கொண்டதால்தான், “ஒருவரைக் கொல்பவன், முழு மனிதகுலத்தையும் கொல்பனைப் போன்றவன்; ஒரு நபரைக் காப்பாற்றுகிறவன், முழு மனிதகுலத்தையும் காப்பாற்றுகிறவனைப் போன்றவன்”
என அவரால் உறுதிபடக் கூறமுடிந்தது.
ஆகவே,
ஏழைகள், ஆதரவற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிகவும் தேவையிலிருப்பவர்கள், அனாதைகள், விதவைகள், அகதிகள், வீடுகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் நாடு கடத்தப்பட்டவர்கள், போர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், அநீதிகளால் பாதிக்கப்பட்ட அனைவரின் பெயரால் பலவீனமானவர்கள், பயத்தில் வாழ்பவர்கள், போர்க் கைதிகள் மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்கள்... எப்போதும் அவர் கண்முன் நின்றனர். எனவே, அவர்களின் பாதுகாப்பை, அமைதியை மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்பை உறுதி செய்து, எல்லாரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லும் புது சமுதாயத்தைக் காண வழிகாட்டினார்.
அமைதியில்
மலரும் கலந்துரையாடலே இத்தகைய விடியலுக்கான விடிவெள்ளி என்பதை உணர்ந்தவர். உரையாடல் கலாச்சாரத்தைப் பாதையாகவும் பரஸ்பர ஒத்துழைப்பை நடத்தை நெறிமுறையாகவும் ஒருவருக்கொருவர் இடையேயான புரிதலை வழியாகவும் தரச்சான்றாகவும் அறிவித்துள்ளார்.
சுருங்கக்கூறின்,
உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்துவதன் வாயிலாக உலகோடு உறவையும், உலகின் படைப்பனைத்தோடும் நல்லிணக்கத்தையும் இரு கண்களாக அவர் கொண்டிருந்தார்; நம்மையும் அவ்வாறே கொண்டிருக்க அழைத்தார். உலகோர் அனைவருக்கும் சகோதரனாக விளங்கிய அவர், இறுதிவரை இந்த ‘பிரபஞ்சத்தின் சகோதரனாகவே’ வாழ்ந்திருக்கிறார்
என்பதே உண்மை!
ஆகவே,…
“ஆண்டவரே, மாந்தர் அனைவரின் தந்தையே, நீர் மனிதர் அனைவரையும் ஒரே மாண்புடன் படைத்துள்ளீர்; ஒரு சகோதரத்துவ ஆவியை எங்கள் இதயங்களில் ஊற்றவும் புத்துணர்வுப் பெற்ற உரையாடல், நீதி மற்றும் அமைதி குறித்தக் கனவை எங்களுக்குள் ஊக்குவித்தருளும். மேலும், கண்ணியமான உலகத்தை, பசி, வறுமை, வன்முறை மற்றும் போர் இல்லாத ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்க எங்களையே நாங்கள் மாற்றிட அருள்புரியும். எங்கள் இதயங்களைப் புவியின் எல்லா மக்களுக்கும் தேசங்களுக்கும் திறந்திருக்கச் செய்யும். நீர் எங்கள் ஒவ்வொருவரிடமும் விதைத்துள்ள நன்மையையும் அழகையும் அடையாளம் காணவும், இதன் மூலம் ஒற்றுமையையும் பொதுவான திட்டங்களையும் கனவுகளையும் பகிர்ந்திடச் செய்தருளும்.
உம்
இறைமையின் ஆழமான ஒற்றுமையிலிருந்து, சகோதர அன்பினால் எங்களை நிரப்பும். நாசரேத்தின் குடும்பத்தில், தொடக்ககாலக் கிறித்தவச் சமூகத்தில், இயேசுவின் செயல்களில் பிரதிபலித்த அன்பை எங்களுக்கும் தாரும். கிறித்தவர்களாகிய நாங்கள் நற்செய்தியை வாழ்வாக்கவும், ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்துவைக் காணவும், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் படுகின்ற துன்பங்களில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும், ஒரு புதிய தொடக்கம் காணும் ஒவ்வொரு சகோதர, சகோதரியிலும் உயிர்த்த இயேசுவையும் கண்டடையும் அருள்தாரும்.
வாரும்
தூய ஆவியே! புவியின் எல்லா மக்களிலும் பிரதிபலிக்கும் உம் அழகை எங்களுக்குக் காட்டும். இதனால் அனைவரும் முக்கியமானவர்கள், அவசியமானவர்கள், கடவுள் அதிகம் அன்பு செய்யும் மனித குலத்தின் வெவ்வேறு முகங்கள் என்பதை நாங்கள் அறியச்செய்யும்!” என ‘Fratelli tutti’
(‘சகோதரத்துவமும் சமூக நீதியும்’)
என்ற தனது திருத்தூது மடலில் அவர் தரும் செபம் என்றென்றும் நம் வாழ்க்கைப் பாடமாகட்டும்.
இன்று நாம் சில சமயங்களில் கணினி சார்ந்த அலுவலக அல்லது வணிகச் சந்தேகங்களுக்கு அல்லது சரியில்லாத விவரங்களுக்கு விளக்கம் தேவைப்படின், நமக்குக் கிடைக்கும் ஒரு பதில் கணினி (computer). அப்படியிருக்க, நாம் காலெடுத்து வைத்திருக்கும் ஏ.ஐ. யுகத்தில், தொழில்நுட்ப அல்லது தயாரிப்புக் கோளாறுகளினாலோ (manufacturer defects) அல்லது தவற்றினாலோ (Negligence) ஏற்படும் விபத்துகள், நட்டங்கள், சேதங்கள், தொழில் இழப்புகளுக்கு யார் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பது? என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கிறது. இதற்கான காப்பீடு (insurance) அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU GDPR) செயல்பட்டாலும் முழு அளவில் இல்லை என்று கருதப்படுகிறது.
நீதித்துறையில்
‘அல்கோரித தொழில்நுட்பம்’ அணுகுமுறையில்
பாரபட்சமின்மையுடையதாகக்
கருதப்படுவதும், மனித
நீதி அரசரைவிட (Human judge)
இயந்திரம் திறனாகக் கருதப்படுவதும் அதில் நம்பிக்கை வைப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு ஒருநாள் ரோபோக்கள் இவ்விதச் செயலாற்றலைப் பெற்று (Intelligence) சமுதாயத்தில்
பல துறைகளில் நடமாடுமோ என்ற எண்ணமும் எழுகிறது. சிவில் - குற்றவியல் வழக்குகளில் உள்நோக்குடன் குற்றமிழைத்தல் (Civil and criminal cases -intentional and culpability are the
criteria) என்பது
அளவுகோலாக உள்ளதென்பதை அறிவோம். ஏ.ஐ. கணினியைப்
பொருத்தவரை, இயந்திரமென்பதால் உள்நோக்கம் (intent) என்பதை நிரூபிக்க இயலாமலிருக்கிறது. இதை நிரூபிக்க வேண்டுமென்றால், தவறான நோக்கத்தினால் தயாரித்து உபயோகத்திற்குக் கொண்டு வந்தவர் (Human individual)
பின்செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இவைகளை ஒழுங்குபடுத்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. ஆனால், இவை செயல்முறைக்கு வராமலிருப்பதற்குத் தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் அரசமைப்புகளுக்கும் போட்டியில் முண்டியடித்துச் செல்லும் நிறுவனங்களுக்கும் இடையே சொல்லப்படாத உடன்பாடு இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இது ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கும் இழப்புகளுக்கும் சரியான தீர்வில்லாமை, நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்நிலையில்,
உலகம் ஏ.ஐ. கணினியின்
பின் செல்லும் வேகம், வரும் நாள்களில் ஒரு கட்டத்தில் மனித அறிவாற்றலும் (human intelligence), செயற்கை அறிவாற்றலும் (artificial intelligence) ஒன்றுசேரும் நேரம் நெருங்கிவிட்டதா? என்ற மற்றொரு கேள்வியும் நம்முன் நிற்கிறது. பெரும்பாலான உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் டிஜிட்டல் சகாப்தத்திற்கு முன்பு எழுதினதும், பிரகடனப்படுத்தப்பட்டவைகளாகும்
(Before the age of digitalisation).
இப்போது
உலகில் டிஜிட்டல் ஊடகங்கள், சிலரால் தேவைக்கென்றும் சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கும் வழியிலும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு டிஜிட்டல் காலத்திற்கு (pre Digital age) முன்பு இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்டங்கள் எவ்வகையில் டிஜிட்டல் காலத்திற்கு ஏற்றதாயிருக்குமென்ற கேள்வி எழுகிறது. இயந்திர வாழ்க்கைக்கு எதைச் செய்வது? எதை உண்பது? என்று நம்மை மெதுவாக நகர்த்திச்செல்வது ஒரு வேளை நமக்கு வசதியாக அமையலாம். அதே நேரத்தில் அல்கோரிதம் சார்ந்த இத்தொழில்நுட்பம், மனிதராகிய நாம் உணவைச் சாப்பிடும்போது தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து அதிலே நம்மை மறந்துவிடும் நிலை, இயந்திரம் நம்மை வழிநடத்துவது, மனித கண்ணியத்திற்கு (human dignity) கேள்வியாகவும் அமைகிறதல்லவா?
சில
பணிகளில் இயந்திர (Algorithm) வழிமுறைகள்
மனிதரிடையே பாகுபாட்டை (bias) உண்டு
பண்ணுவதையும் நிறுவனங்களும், அரசும் தனி மனித சுதந்திரம், இரகசியம் (Privacy) என்பவைகளை
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் பறிப்பதையும், அரசு சில குற்றங்களைக் கண்டுபிடிப்பதில்
(Investigation) இயந்திரங்கள்
பின் செல்வதும், சிக்கலான சூழலில் அந்த இயந்திரங்களை உருவாக்கிய நிறுவனங்கள் ஒத்துழைக்காமலிருப்பதும், போர்க்களங்களில் தானியங்கிப் போராயுதங்கள் தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படுவதும்
மனித உரிமை மீறல்களுக்குச் சான்றாக இருப்பது மட்டுமன்றி, இவைகளுக்கு விடை காணாத நாள்களில் வாழ்கிறோம்.
ஏ.ஐ. இயந்திரங்களை அறிவாற்றலடையச்
(Intelligence) செய்து,
அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். ஏ.ஐ. மனித
அறிவாற்றலை மிஞ்சுவதென்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒருவேளை, இது திரைப்படம் போன்று அல்லது அறிவியல் கற்பனை (Science fiction) அலைகளாகக்
கூட தோன்றலாம். இன்று இவ்வெண்ணத்தைக் கருத்தாழமாக (Serious) எடுத்துக்கொள்வதா?
அல்லது மாயை என்று தள்ளிவிடுவதா? (Dismiss these ideas as fantasy).
உலகளாவிய
இப்புதிய தொழில்நுட்பத்தில் பெருமளவிலான வணிக மதிப்பீட்டைப் பெற்றுப் பங்குதாரராயிருக்கும் அரசுகளையும் அல்லது பெரும் நிறுவனங்களையும் இப்போது கட்டுப்படுத்த முடியுமா? ஒருவேளை சமீபத்திலோ அல்லது பின்வரும் நாள்களிலோ இத்தொழில்நுட்பத்தின் வருங்காலச் சந்ததி மனித இனத்தை மீண்டு வரமுடியாத அழிவிற்கு அழைத்துச் செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா?
தொழில்நுட்பம்
தலைமுறைகளாக மனித வாழ்க்கைக்கு வளத்தைப் பெருக்கியது மட்டுமல்லாமல், ஒரு தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது. இதன் பின்னிருந்து இயக்கும் நிறுவுநர்களும் (Entrepreneurs) உலகின்
முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்தனர். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருப்பவர், நாளடைவில் தன் கண்டுபிடிப்பு எத்திசையில் செல்கிறதென்றும், அது செல்லும் பாதையைக் கட்டுப்படுத்த அவர் இயலாதவராகி விடுகிறார் என்பதும் வரலாறு. தொழில்நுட்பமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பல உதாரணங்களில் ஒன்று:
எரி எண்ணெய் மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்தவர், ஒருநாள் உலக வெப்பமயமாத லுக்கு அவை முக்கியக் காரணமாகிவிடும் என்று சற்றும் நினைக்கவில்லை; அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சென்ற நூற்றாண்டின் அணு ஆயுதப் பிரயோகம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் தணிந்துவிட்டது என்ற எண்ணம் இன்றுவரை உலகளவில் வெளித்தோற்றத்தைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எப்போது என்பதை விட, எந்த நேரத்தில் என்ற பயம் எல்லார் மனத்திலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
இதுவரை
சரித்திரம் கண்டிராத வேகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
சென்றுகொண்டிருக்கிறது.
இன்று நடைமுறைக்கு வந்திருக்கும் ரோபோ, அதன் வருங்காலத் தொழில்நுட்ப வளர்ச்சி, அதேபோன்று குவாண்டம் கணினியின் (Quantum computer)
முதிர்ந்த நிலை, அதன் பயன்பாடு என்பவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறதென்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
ஏ.ஐ. என்ற தொழில்நுட்பம்
இந்த நூற்றாண்டில் மனித இனத்திற்குத் துணையாய்ப் பயணிக்கப் போகிறதா? இல்லை மனித அறிவாற்றலை மிஞ்சியதாய், ஒருவேளை மனித ஆற்றலுக்குச் சவாலாய் அல்லது மனிதனை எதிர்த்து நிற்குமா? என்ற திகில் மனத்தில் எழாதவரை சற்று நிம்மதியாய் இருப்போம்.
மனிதனின்
பயணம் பல பேரழிவுகளைச் சந்தித்து
வருகிறதென்பது வரலாறு.
போலித்
தீர்க்கதரிசிகளும் (False prophets), அழிவை
முன்மொழிபவரின் (Doomsayer) கணிப்பும்
பொய்யாகிப் போனது ஒருபுறமிருக்க, இப்போது நாம் எதிர்கொள்ளவிருப்பது ஏன் வேறு விதமாக இருக்கக்கூடாது என்றும் எண்ணலாம் அல்லவா!
அகிலனின் பெயர் பள்ளியின் கரும்பலகையில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இதுவரையில் அகிலன் என்ற பெயர் பள்ளியில் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஓட்ட டௌசர், கருவண்டு, கூமுட்ட, ஊமை என்று பள்ளியில் பல பெயர்கள் அவனுக்கு உண்டு. கரும்பலகையில் அவன் பெயர் இடம்பெற்றதால், அவன் ஏதோ மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என்று நினைத்துவிட வேண்டாம். பள்ளி அரையாண்டுத் தேர்வில் பக்கத்திலிருந்தவனைப் பார்த்துக் காப்பி அடித்துவிட்டான். இரண்டு மாணவர்களின் தேர்வுத் தாள்களிலும் ஒரே மாதிரியான விடை எழுதப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு பிழை போட்டிருந்தால், மற்றவனும் அதே பிழையை எழுதியிருந்தான். தலைமையாசிரியர் எடுக்கின்ற பாடம் என்பதால் இந்தப் பெரிய தவறு வெளிச்சத்திற்கு வந்தது. இதில் யார் யாரைப் பார்த்துக் காப்பி அடித்தனர் என்பது இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில் விமல், “அகிலன்தான் என்னைப் பார்த்து எழுதினான்” என்று கூறிவிட்டான்.
அகிலன்
வழக்கம்போல் வாய் பேசவில்லை. எல்லார் முன்பாகவும் கூனிக்குறுகித் தலையைக் தொங்கவிட்டு அப்படியே கைகளைக் கட்டிக்கொண்டு வெறிநாய் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட முயலைப்போல அசையாது அழுதுகொண்டே நின்றான். தலைமையாசிரியர் கண்டிப்பாகக் கூறிவிட்டார் “நீ உன் பேரன்ட்சைக்
கூட்டிட்டு வரும் வரை உன் பெயர் ஸ்கூல் மெயின் பிளாக் போர்ட்ல ‘காப்பி அடித்தவன் அகிலன்’னு எழுதப்பட்டிருக்கும்.”
அகிலன்,
வீட்டில் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. வகுப்பாசிரியர் அகிலனிடம் கேட்டேவிட்டார் “அதான் உன் பேரன்ட்சைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காருல ஹெட்மாஸ்டர்... கூட்டிட்டு வரவேண்டியதுதானே.” அகிலன்
பேசாதிருந்தான். அவனுடைய இதயத்தின் மௌன அறைக்குள் வலிகள் நிறைந்த கதைகள் அடைப்பட்டுக் கிடந்தன.
அகிலன்
ஏழாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன். அவனுக்குக் கிராமமே இல்லை. அவனிடம் ‘உன் ஊர் பெயர் என்ன?’ என்று கேட்டால், அவனால் சொல்ல முடியாது. ஏனெனில், அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு செங்கல் சூளைக் குடியிருப்பில்தான். குடிசை வீடுகளாலும் பிளக்ஸ் கூரை வீடுகளாலும் அந்த வெட்டவெளிக் குடியிருப்பு அமைந்திருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் கொத்தடிமைகளாக அவனுடைய குடும்பமே மீசைக்காரனிடம் பல ஆண்டுகளாக வேலை
பார்த்து வந்தது. அகிலனுடைய அக்கா, அம்மா, அப்பா ஆகியோர் மற்றவர்களைப்போல அந்தச் செங்கல் சூளையில்தான் வேலை பார்த்து வந்தனர். அகிலனுக்கு மூத்தவன் கைக்குழந்தையாக வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருக்கும்போது எலி கடித்து இறந்துவிட்டான். இதனால் மீசைக்காரனுக்கு ஒரு குற்றவுணர்வு கொஞ்ச நாள் இருந்தது. அகிலனின் அப்பா மீசைக்காரனிடம் மன்றாடி தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பச் சம்மதம் வாங்கினார்.
“டேய் ராசா! நல்லா படிச்சு, நல்ல பெயர் வாங்கணும்டா” என்று
அவர் அடிக்கடி அகிலனிடம் கூறுவார். அகிலனின் அக்கா அகிலாவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தும். “ஆம்பளனா என்ன அவனுக்குக் கொம்பா மொளச்சிருக்கு? அவன மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, என்ன இந்த வெயில் காட்டுல மீசைக்காரனுகிட்ட கஷ்டப்பட வைக்கிறீங்க?” என்று அடிக்கடி அழுதுகொண்டு குறைபடுவாள்.
இரண்டு
மூன்று நாள்களாகியும் அகிலனின் பெயர் அழிக்கப்படாமல் கரும்பலகையில் இடம்பெற்றிருந்தது. இதுவரை அகிலனைப் பாவம் என்று பார்த்தவர்கள், இப்போதெல்லாம் அவனை ஏளனமாக ஒரு குற்றவாளியாகப் பார்த்தனர். இது அகிலனுக்குப் பிடிக்கவே இல்லை. இப்போதெல்லாம் அவன் அருகில் வந்தால் கூட யாரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ‘காப்பி அடித்தவன் அகிலன்’ என்ற கரும்பலகை வாக்கியமும், ‘டேய் ராசா! நல்லா படிச்சு நல்ல பெயர் வாங்கணும்டா’ என்ற
தன் அப்பாவின் வார்த்தைகளும் அகிலனின் மனத்தில் வந்து வந்து சென்றன. தன்னால் தன் பெயரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று எண்ணி வருந்தித் தவித்தான் அகிலன்.
அன்று
பள்ளி முடிந்து ஓட்டம் பிடித்தவன்தான்... அதன் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே அவன் வரவில்லை. பள்ளியிலிருந்து யாரும் அவனைத் தேடவுமில்லை. பள்ளிக்கூட கரும்பலகை மட்டும் அவனுடைய வருகைக்காக மழை, வெயில் பாராது காத்துக்கிடந்தது.
பள்ளியின்
கரும்பலகைபோல இன்று சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் சிலரின் வாழ்வைக் கெடுக்கின்றது. சிலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது. ஒருவருடைய பெயரை அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்போடு பலர் இணையத்தளங்களையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். யாருக்கும் தெரியக்கூடாது என்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனிப்பட்ட வங்கி விவரங்களையோ, போன் நம்பர்கள் அல்லது இமெயில் விவரங்களையோ, புகைப்படங்கள் அல்லது காணொளிகளையோ, ஆவணங்களையோ அந்த மனிதருக்கோ நிறுவனத்திற்கோ ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் வலைத்தளங்களில் பகிரும் செயலை ‘டாக்சிங்’
(Doxing or Doxxing) என்கிறோம்.
டிசம்பர்
2024-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ‘எப்.ஐ.ஆர்.’ வலைத்தளங்களில்
அனுமதியில்லாமல் பகிரப்பட்ட நிகழ்வை டாக்கிங்கிற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் தலைவர்களில் ஒருவர் முன்னணி நடிகர் ஒருவரின் சமயப் பின்னணியைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவருடைய முழுப்பெயரை அப்போதைய ‘டுவிட்டர்’
பக்கத்தில் வெளியிட்ட செயலையும் ‘டாக்சிங்’
எனலாம்.
‘டாக்சிங்’
ஒரு சைபர் குற்றமாகும். நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர், காதல் முறிவால் புறக்கணிக்கப்பட்ட காதலன், பண மோசடியால் ஏமாற்றப்பட்ட
நண்பர்களில் ஒருவன், சக நிறுவனத்தின் வளர்ச்சியைச்
சகித்துக்கொள்ளாத போட்டி நிறுவனம்... என்று இப்படி யார் வேண்டுமென்றாலும் ‘டாக்சிங்’
என்னும் குற்றச் செயலில் ஈடுப்படுவதுண்டு.
‘டாக்சிங்’
என்னும் சைபர் குற்றத்தை எதிர்கொள்ள நாம் நம் சைபர் பழக்கத்தை (Cyber-etiquette) ஆரோக்கியமானதாக
வைத்துக்கொள்ள வேண்டும். தெரியாத நபர்களின் மின்னஞ்சல் லிங்கை ‘கிளிக்’ செய்யாமல் இருப்பது, தனிப்பட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்யாமல் இருப்பது, ‘டிஜிட்டல் செக்யூரிட்டிக்கு’ அதிக
முக்கியத்துவம் கொடுப்பது, ஆன்லைன் சர்வேக்களைத் தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்கள் ‘டாக்சிங்’
போன்ற சைபர் குற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடும். பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள்
பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ அல்லது சைபர் கிரைம் காவல்துறையிடமோ தகுந்த ஆதாரத்தோடு தங்களின் நிலையை எடுத்துரைக்க முன்வர வேண்டும்.
கரும்பலகை
ஒன்றுதான்; ஆனால், அது பலரையும் கல்வியாளர்களாக, அரசியல்வாதிகளாக, அறிவியல் மேதைகளாக, தொழில்நுட்பக் கலைஞர்களாக மாற்றியுள்ளதுபோல, சமூக ஊடகப் பலகையினைச் சரிவரப் பயன்படுத்தினால் அதுவும் நம்மை உயர்ந்த இடத்திற்கே கொண்டு செல்லும். பள்ளியை விட்டு ஓடிய அகிலனைப்போல, இன்று யாரும் வாழ்க்கையை விட்டு ஓடிவிடாமல் இருக்க வழி செய்வோம்.
இந்தியா என்பது ஒரே நாடல்ல; அது பல்வேறு இனக்குழுக்களை, பல்வேறு தேசிய இனங்களை, பல்வேறு மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். தேச விடுதலைக்குப் பின் புது இந்திய தேசமாக ‘ஒரே நாடாக’ உருபெற்றது. தேசிய இனங்களுக்கான மொழிவாரி மாநிலங்கள் அமைந்தன. மாநிலத்தில் சுய ஆட்சியும், மத்தியில் கூட்டாட்சி என்ற ஆட்சி முறையும் அமலானது. ஒன்றிய அரசுக்கான அதிகாரம், மாநில அரசுக்கான அதிகாரம், இரு அரசுகளுக்கான ஒருங்கிணைப்புப் பட்டியல் அதிகாரம் என அதிகாரப் பகிர்வுகள் உருவாக்கப்பட்டன.
மாநில
அரசுகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ‘மாநில சுயாட்சி’
என்ற வலுத்தக் கோரிக்கையைப் புயலாய்க்
கிளப்பியது. பேரறிஞர் அண்ணா முழங்குகிறார்: “ஒன்றிய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா மந்திரியிடம் கேட்பார்,
‘மந்திரியே, நமது மாநகரில் மும்மாரி பொழிகிறதா?’ (இராஜா மழை பெய்வது கூட தெரியாமலே மாநகரில் இருப்பது பெரும்
அபத்தம் தானே!). அதேபோல மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்களை டெல்லியில் கூட்டி, ‘பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புதான் டெல்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. மக்களின் சுக துக்கத்தோடு, பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே
தவிர, மத்திய அரசு அல்ல.”
மாநில
சுயாட்சி என்ற கோரிக்கையை 1970-இல் அன்றைய ஆளும் தி.மு.க.
உயர்த்திப் பிடித்தது. 1969-இல் ஒன்றிய,
மாநில அரசுகளின் உறவு, உரிமை குறித்த இராசமன்னார்
குழு, தமிழ்நாடு அரசால் உருவகம் பெற்றது. 1971-இல் அக்குழு தன்
பரிந்துரைகளைத் தந்தது. மாநில அரசிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே தேசத்தின் கூட்டாட்சி முறை வலுப்பெறும்; அதற்கேற்ப அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதற்கு முன்பே ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளைப் பெற தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரும், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பாவும் பெரும் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதே வரலாற்றுப் பதிவு.
பாராளுமன்றத்தில்
மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறன், எல். கணேசன், வைகோ போன்றவர்களின் முழக்கம், தமிழ்நாடு மக்களின் குரலாகப் பதியப்பட்டுள்ளது. பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் எனத் துவங்கிய மாநில சுயாட்சி இன்று
கர்நாடகா, கேரளா என விரிவுபெற்றுள்ளது. இம்மாநில
சட்டசபைகள், மாநில சுயாட்சிக் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள்.
உதாரணமாக, 1976-ஆம் ஆண்டு தேசத்தில் நெருக்கடி நிலை அமலான காலம். கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து, அன்றைய ஒன்றிய அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படுகிறது. இன்றைய ‘நீட்’ விவகாரம், பல்கலைத் துணை வேந்தர் நியமனம் என அடிப்படைப் பிரச்சினைகளின்
ஆணிவேர் இந்த மாற்றமே எனக்
கூறலாம்.
தமிழ்நாடு
ஆளுநர் தன்னிச்சையாகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்துகிறார், உத்தரவுகள் போடுகிறார். இது குறித்து சட்டப்பேரவையில்
பேசிய முதல்வர் ஸ்டாலின் “ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007-ஆம் ஆண்டு மேனாள் தலைமை நீதிபதி பூஞ்சித் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையப் பரிந்துரை, ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக்கூடாது’ என்றது.
குஜராத், தெலுங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தேடுதல் குழு அமைத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறுகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கல்வி என்பதில்
ஒன்றிய அரசு தமிழ் நாடு அரசை நெருக்குகிறது. ஒன்றிய அரசின் திட்டம் சார்ந்து செயல்படும் கல்வி திட்டங்களுக்கான ஆசிரியர்களின் ஊதியங்களைத் தர மறுக்கிறது. ஒன்றிய
அரசின் காவிக்கொள்கை முடிவுகளை மாநில அரசுகள்மீது திணிக்கிறது.”
குஜராத்
முதல்வராக மோடி இருந்தபோது, மாநில உரிமைகள், ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு குறித்து முழங்கியவை, சூழலைத் தீப்பற்ற
வைப்பதாக இருந்தது. விவசாயிகள் புதுடெல்லி தெருக்களில் வாட்டும் குளிரில் வருடக்கணக்கில் போராடியும், மோடியைப் பார்க்க முடியவில்லை. மோடி பாலிவுட் திரைநாயகிகளின் விழாக்களில் கலந்து மகிழ்ந்தது, தேசத்தின் கடந்த காலக் கண்ணீர் நிலை.
எல்லாக்
காலங்களிலும் ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு பேணப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. 1983-இல் அமைக்கப்பட்டு, 1985-ஆம் ஆண்டு சர்க்கரியா ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளைத் தந்தது. ஆனால், காலம் எதிர் பாதையில் ஒன்றிய அரசைத் திசைதிருப்பி விடுகிறது.
திட்டக்குழு
கலைக்கப்பட்டு விட்டது. ஆனால், பரிந்துரைப்படி அனைத்து இந்தியத் தேர்வுப் பணிகள் ஆணையம் கலைக்கப்பட எந்த நடவடிக்கையும் இல்லை. முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஆள்களை இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அனைத்துவகைப் பணிகளிலும் முழுமையாக நுழைத்துவிட்டனர்.
356-ஆம் சட்டப்பிரிவால்
134 மாநில அரசுகள், ஒன்றிய அரசால் கலைக்கப்பட்ட நிலை மட்டும் மாறிவிட்டது. 1994-ஆம் ஆண்டு ‘எஸ்.ஆர். பொம்மை எதிர்த்தரப்பு இந்திய ஒன்றிய
அரசு’ என்ற
வழக்கில், ஆட்சிக் கலைப்பு என்பதற்குக் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகள் உச்சநீதிமன்றத்தால் தரப்பட்டு விட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதன்பின் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே ஆட்சிக் கலைப்பு நடந்துள்ளது.
இன்று ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால்,
தமிழ்நாடு அதிக
அளவு வரி வருவாயை ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது. ஆனால், ஒன்றிய அரசோ, தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
ஆள்கிற மாநில அரசுகளுக்கு இயற்கைச் சீற்றங்களுக்கான நிதி, திட்டங்களுக்கான நிதியென உரிய வரிப் பகிர்வைத் தருவதில்லை. பா.ச.க.
மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆள்கின்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் குறித்த சட்டங்களை ஒன்றிய அரசுதான் கொண்டுவர முடியும் என்ற கட்டாயம் களையப்பட வேண்டும். ஜி.எஸ்.டி.
கவுன்சிலில் மாநில அரசுகளின் உறுப்பினர்கள்
தலையாட்டிப் பொம்மைகள் என்ற அவலம் களையப்பட வேண்டும். இன்று மாநில அரசுகள் உள்ளாட்சி வருவாய்கள், பத்திரப் பதிவு வருவாய், மது வருவாய் என முடங்கிக் கிடப்பது
பெரும் ஆபத்து.
பேரறிஞர்
அண்ணா “உரிமை மிக்க மாநிலங்களே வலிமை மிக்க நாட்டை உருவாக்க முடியும்”
என்றார். உள்ளாட்சி அமைப்புகளாகச் செயல்படும் மாநில அரசுகள் எதற்கு? அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மாகாணக் கவுன்சில்களுக்குப் பெரும் அதிகாரம்
அளித்துள்ளது. ஆனால், பா.ச.க.வின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை, ஒரே தேர்தல், ஒரே தலைவன், ஒரே வரிசையில், ஒரே அரசு என்ற நீண்டகாலத் திட்டமும் ஒளிந்துள்ளது.
பேரறிஞர்
அண்ணா ஒற்றை வரியில் கூறுகிறார்: “தேசப் பாதுகாப்பைத் தவிர மற்ற அனைத்திலும் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டும். இதுவே உண்மையான கூட்டாட்சித் தத்துவமாக அமையும்.”
2024-ஆம் ஆண்டு
நீண்ட காலமாகத் தேர்தல் நடைபெறாத ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிற தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர்
அப்துல்லாவுக்குத் தமிழ்நாடு முதல்வர் வாழ்த்துச் செய்தியில் கூறுகிறார்: “மாநில உரிமைகளுக்காக வடமுனை காஷ்மீரும், தென்முனை தமிழ்நாடும் தொடர்ந்து போராடும்.” ஆம், தொடர்ந்து ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் மெல்லப் பறிக்கப்பட்டு, இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற இறுதி நிலையில் நிற்கிறது.
‘காலத்தே ஆறுதல்’ எனும் கலங்கரை விளக்கு ஒளிர்கிறது. காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் இராகுல் காந்தி சமூக நீதி, சிறுபான்மையோர் நலன், விலைவாசி உயர்வு, இடஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ். அபாயம், மாநில உரிமைகள் எனப் பொதுமக்கள் குரலைப் பொதுவெளியில் எதிரொலிக்கிறார்.
மாநிலங்கள்
என்ற வேர் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே, தேசமெனும் பெரும் மரம் உறுதி பெறும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் பெரும் முழக்கத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.