கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் திடீர் பரபரப்பு. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ (Manju mmel Boys) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ‘குணா’ குகைக்கு அலைமோதியக் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தவே காவல்துறையினருக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் மதுரை மாவட்டப் பள்ளி ஒன்றிலிருந்து வந்திருந்த மாணவி ஒருவரைக் காணவில்லை என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேடி அலைந்தனர். அவர்களின் முகத்திலே பயமும் சோர்வும் ஒட்டிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பாக ஆடிப்பாடி ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்திருந்த பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் மாலைநேர குளிரிலும் வியர்வையில் குளித்திருந்தனர்.
நண்பர்களாகச்
சுற்றுலா சென்றிருந்த நாங்களும் காணாமல் போன அந்த 12-ஆம் வகுப்பு மாணவியின் அடையாளங்களை ஓர் ஆசிரியரிடம் கேட்டறிந்து கொண்டு தேடித் திரிந்தோம். வானம் முட்டி வளர்ந்திருந்த யூக்கலிப்டஸ் மரங்களும், கொண்டை ஊசி வளைவுகளும் பள்ளமேடுகளும் இருட்டேறிய பாறைப் பிளவுகளும் சிவப்பேறிய மாலைப்பொழுதும் ஆரவாரமில்லாச் சாலைகளும் திகில் படங்களை நொடிப்பொழுதில் ஓட்டிக்காட்டின.
ஆசிரியர்களும்
சில மாணவர்களும் அங்கிருந்த போலீஸ் ஸ்டேசன் சென்று கம்பிளைன்ட் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தனர். சுற்றுலாப் பேருந்திலேயே காணாமல் போன மாணவிக்காகக் காத்திருந்த பிற மாணவ-மாணவிகள் செய்வதறியாது நகத்தைக் கடித்துக்கொண்டும் இருளை வெறித்துப் பார்த்துக்கொண்டும் இருந்தனர். பேருந்து சன்னல் கம்பிகளுக்கு வெளியே ஆசிரியர்களோ தலைமை ஆசிரியருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமலேயே விழி பிதுங்கி நின்றனர். அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
“சார் கவலைப்படாதீங்க. மாணவி கிடைத்து விடுவாள்”
என்று ஆறுதல் கூறி விட்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றோம். சில நேரம் கழித்து அந்தப் பள்ளிப் பேருந்து நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டலுக்கு முன்பாக வந்து நின்றது. பேருந்திற்குள் மாணவ-மாணவிகள் மின்னித் தெறிக்கும் கலர் வெளிச்சத்தில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிச் சாலையோரங்களில் சிலிர்த்து நிற்கும் மரங்களைப்போல மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டனர். சற்று நேரத்தில் சாப்பிட வந்த ஆசிரியர் ஒருவரிடம் பேரார்வத்தில் கேட்டேன் “மாணவி கிடைத்துவிட்டாளா?” என்று. இருக்கையை அருகிலே இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு மெல்லிய குரலில் அவர், “சார்! அது ஒரு பெரிய கதை. அந்த மாணவி யாரையோ ஒரு பையனை இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறாளாம். சுற்றுலாவிற்கு வருவது தெரிந்து தற்கொலைப் பாறை இருக்குல... அங்க சந்திப்பதாக அவனுக்கிட்ட சொல்லியிருக்கிறா. நாங்க காலையில தற்கொலைப் பாறைக்குப் போயிருக்கும்போது அவங்க யாருக்கும் தெரியாம சந்திச்சுப் பேசியிருக்காங்க.” அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்ற மாணவ-மாணவிகள் பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சாப்பிட வந்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் தொடர்ந்தார் “பேருந்தை எடுக்கும்போது நாங்க சரியா அந்த மாணவிய கவனிக்காம விட்டுட்டு வந்துவிட்டோம். அவ பிரண்ட்ஸ் கூட
ஆட்டம்பாட்டத்துல அவளக் கவனிக்காம விட்டுட்டாங்க. குணா பாறையில வச்சுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.”
நண்பர்களில்
ஒருவர் “இப்போ அந்த மாணவிக்கு என்ன ஆச்சு? திரும்பி வந்துட்டாளா?” என்று கேட்டுக்கொண்டே மாணவர் கூட்டத்தில் காணாமல் போன மாணவியைத் தேடினார்.
“அவ எங்க திரும்பி
வந்தா? அவ அவளுடைய பாய்
பிரண்டோட எங்களைத் தேடி
அலைஞ்சிருக்கிறாங்க, நாங்கதான் அங்க இருந்து கிளம்பிட்டோமே. பிறகு
போலீஸ்காரங்கதான் அந்தப் பொண்ணுடைய யூனிபார்மைப் பார்த்துவிட்டு நாங்க கம்ப்ளைண்ட் கொடுத்த மாணவி அவதானு தெரிஞ்சிக்கிட்டு அந்தப் பையனுங்க பெயர், அட்ரசை எழுதி வாங்கிட்டு இவளை எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்க. இப்போதான் சார் போன உசிரு திரும்பி வந்திருக்கு” என்று
சொல்லும்போது அந்த ஆசிரியரின் மனம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.
எல்லா
மாணவர்களும் மகிழ்ச்சியாக அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். காணாமல் போய் திரும்பி வந்த மாணவியை எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஆசிரியரிடமும் ‘அந்த மாணவி யார்?’ என்று கேட்க நாங்கள் துணியவில்லை. மாணவி
திரும்பி வந்ததே சந்தோசமாக இருந்தது.
இன்றைய
காலகட்டத்தில் சைபர் உலகத்தில் கத்தரிக்காயும் கிடைக்கிறது, காதலும் கிடைக்கிறது. ‘காதல்’ என்ற போர்வையில் ஏராளமான சைபர் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. சமீபத்தில் குஜராத்தைச் சார்ந்த 10 வயது சிறுமிக்கும் 16 வயதான சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாகக் காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியச் சூழலில், காவல் துறையினர் அருகாமையில் இருக்கும் கிராமம் ஒன்றில் இவர்களைக் கண்டறிந்து பெற்றோரிடம் சேர்த்துள்ளனர்.
கொல்கொத்தாவில்
2016-ஆம் ஆண்டு 19 வயது இளைஞன் 15 வயது சிறுமியைப் பேஸ்புக்கில் காதலித்து, அச்சிறுமியைத் தனியாக வரவழைத்து, தன் நண்பரோடு சேர்ந்து அச்சிறுமியைப் பலாத்காரம் செய்திருக்கிறான். இதேபோன்ற செயல்கள் இன்று பத்திரிகைகளில் தினச்செய்தியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சைபர்
குற்றவாளிகள் சிறார்களைக் குறிவைத்துச் சமூக ஊடகம் வழியாகக் காதல் வலைவீசி, அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் செயலை ‘சைபர் குரூமிங்’
(Cyber-grooming) என்கிறோம்.
இது பல்வேறு வகைகளில் அரங்கேறுகின்றன. சைபர் தளங்கள் வழியாகச் சிறார்களுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்புவது, ஆபாசப் படங்களை அனுப்புவது, காதல் மொழி பேசி வீட்டை விட்டு வெளியே தனியாக வரவைத்துப் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்குவது போன்றவை சைபர் குற்றங்களே. தேசியக் குற்ற ஆவணப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுப்படி, இந்தியாவில்
2021-ஆம் ஆண்டு மட்டும் 1376 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகச் சைபர் வலைத்தளங்களில் அரங்கேறியுள்ளன.
சிறார்கள்
இத்தகைய சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டால் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் முறையிடவோ அல்லது 1930 என்ற உதவி எண்ணையோ அழைக்கலாம். இத்தகைய சைபர் குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள குழந்தைகளோடு பெற்றோர்கள் தொடர்ந்து உரையாட வேண்டும். அவர்களின் இணைய ஆர்வத்தைக் கண்காணிக்க வேண்டும். இணைய ஆபத்துகளிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்னும் படிப்பினையைக் குழந்தைகளுக்கு எளிய வழியில் கூற வேண்டும். குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், அதில் அவர்களின் புகைப்படம் அல்லது தனிப்பட்டத் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதையும் தவிர்க்க உதவி செய்ய வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாகப் பெற்றோர்கள் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.
இணையமும்
சமூக ஊடகங்களும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானமில்லை; அங்கு உலவுகின்ற பொம்மைகள் உண்மையில்லை; சைபர் தளங்களில் அன்பொழுகப் பேசுபவர்கள் உறவுகளுமில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
1924 முதல் 2024 வரையிலான நூற்றாண்டு கால அன்புச் சேவையை, ஆழமான அர்ப்பணிப்பைப் பெருமையுடன் நினைவு கூரும் வகையில் சென்னை குட் ஷெப்பர்ட் கான்வென்ட் தன் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை இத்தருணத்தில் கொண்டாடுகிறது.
1835-ஆம் ஆண்டு
புனித மேரி யூப்ரேசியா பெல் லெட்டியர் அவர்களால் பெண்களுக்கான நல்மேய்ப்பரின் சபை (Congregation of Good Shepherd Sisters)
பிரான்சில் நிறுவப்பட்டது. அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைபரப்புப் பணியின் ஆர்வத்தால் இச்சபை இந்தியாவில் - பெங்களூரில் ஆகஸ்டு 15, 1854 அன்று தனது பணியை விரிவுபடுத்தியது. அன்று முதல் கல்வி, சமூக சேவை, மருத்துவம், இளம்பெண்களுக்கான குடியிருப்பு வசதிகள், சிறைத்துறை, திருமணமாகாத தாய்மார்களுக்கான வீடுகள், இளம் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கான விடுதிகள், நீதி - அமைதி முன்னெடுப்புகள், மிகவும் பாதிப்புக்குள்ளான தாழ்த்தப்பட்ட பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு ஆகியவற்றில் சகோதரிகள் தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர்.
மொழி,
கலாச்சாரம் மற்றும் பண்பாடு தெரியாத போதிலும், அன்றைய சென்னை-மயிலை ஆயர் டி காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு
இணங்க நவம்பர் 21, 1924 அன்று லஸ் தேவாலயத்தில் பங்குப் பராமரிப்பு மற்றும் மேய்ப்புப் பணிகளைத் துணிவுடன் தொடங்கிய அருள்சகோதரிகள், பின்னர் மூரட்ஸ் கார்டனுக்குக் குடிபெயர்ந்து, 1930-இல் நுங்கப்பாக்கத்தில் தங்கள் முதல் இல்லத்தை உருவாக்கினர்.
‘உலகம் முழுவதையும் விட ஒரு நபர் மிகவும் விலைமதிப்புள்ளவர்’ என்ற
தங்கள் நிறுவுநரின் ஆழ்ந்த நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டு, தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களுக்குக் குட் ஷெப்பர்ட் கான்வென்ட் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் சரணாலயமாக மாறியது. அவ்வகையில் கடந்த பல ஆண்டுகளாக, இது
ஒருங்கிணைந்த முழுமையான கல்வி, ஒழுக்கம், மதிப்பீடுகள் மற்றும் ஆற்றல்படுத்துவதன் வாயிலாக எண்ணற்றவர்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளது.
நூற்றாண்டு விழாச்
சிறப்புகள்...
நன்றி
தெரிவிக்கும் ஓர் ஆண்டு: குறிப்பிடத்தக்க இப்பயணத்தில் துணையிருந்த அருள்சகோதரிகள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு நன்றி தெரிவிப்பது.
அருட்கொடைகளின்
ஆண்டு: இவ்விடத்தால் வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் கண்டவர்களைக் கௌரவித்தல்.
நம்பிக்கையின்
ஆண்டு: சேவை மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் தழுவுதல்.
புதிய
முயற்சிகளின் ஆண்டு: இக்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பணியை விரிவுபடுத்துதல்.
மேற்கொள்ளப்படும்
பணிகள்
ஒரு
பார்வை:
சமூகப்
பணிகள்: மேரியன் ஹோம் - பள்ளி இடை நிற்றவர்களுக்கான திறன் பயிற்சிக்கூடம். சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட், இளம்பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பின்னணியில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரிந்த உறவுகளிலிருந்து வரும் பெண்கள் மற்றும் குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பங்கள் உட்பட சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, 1924-இல் இவ்வில்லத்தை அருள்சகோதரிகள் நிறுவினர். இந்த இல்லம் 1952-இல் மேரியன் ஹோம் என்று பெயரிடப்பட்டது. சிறுமிகள் மற்றும் பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது பேக்கரி, கேன்டீன் சேவைகள், தையல் மற்றும் வீட்டுப் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்சார் பயிற்சிகளை வழங்குகிறது. இளம்பெண்களைத் தன்னிறைவு மற்றும் நிதிச் சுதந்திரத்திற்கான நடைமுறைத் திறன்களுடன் உருவாக்குகிறது.
நூற்றாண்டு காணும்
சிறப்பான
கல்விப்பணி:
வில்லியம்
பட்லர் யீட்ஸ் கூறுவதுபோல, ‘கல்வி என்பது ஒரு பாத்திரத்தை நிரப்புவது அல்ல: மாறாக, நெருப்பை மூட்டுவதாகும்.’ கல்வியே குட் ஷெப்பர்ட் பணியின் மூலைக்கல்லாகும். கற்றல் தனிநபர்களை மேம்படுத்துகிறது மற்றும் சமூகத்தையே மாற்றுகிறது என்ற நம்பிக்கையில், 1925-ஆம் ஆண்டு முதல், இப்பள்ளி இளம் மனங்களை வளர்த்து, வலுவான மதிப்பீடுகளை ஊக்குவித்துக் கல்விப்பணியில் சிறந்து விளங்குகிறது.
‘நீங்கள் செய்வதையெல்லாம் நன்றாகச் செய்யுங்கள்’ என்ற
சபை நிறுவுநர் புனித மேரி யூப்ரேசியா பெல்லெட்டியர் வகுத்துக்கொடுத்தக் கொள்கையின் வழியில், அன்று எளிமையான தொடக்கம் கொண்ட இப்பள்ளி, இன்று கலங்கரை விளக்கமாக உயர்ந்து, சிறந்து விளங்குகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, முழுமையான கற்றல், உறுதியான அர்ப்பணிப்பு, அறிவார்ந்த வளர்ச்சி, தார்மீக ஒருமைப்பாடு மற்றும் யாவரையும் அரவணைக்கும் அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டு, ஞானம் நிறைந்த உயர் நோக்கத்துடன் இளம்பெண்களைத் தொடர்ந்து இப்பள்ளி வழிநடத்தி வருகிறது.
குட் ஷெப்பர்ட்
நூற்றாண்டு
நினைவுப்
பள்ளி
100 வருட அர்ப்பணிப்பு
மற்றும் சேவையைக் கொண்டாடும் வகையில், CICSE பாடத் திட்டத்தைப்
பின்பற்றிக் குட் ஷெப்பர்ட் நூற்றாண்டு பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை ஜூன் 10, 2024 அன்று அருள்தந்தை ராஜ் மரியசூசை SDB அர்ச்சிக்க,
எம் சபைத் தலைவி ஜோன் லோபஸ் மற்றும் அவரது ஆலோசகர் குழுவினர் ஜூன் 14, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். கடந்த காலத்தின் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலச் சாத்தியக்கூறுகளால் ஈர்க்கப்பட்டு, நூற்றாண்டு காணும் இப்பள்ளி, பள்ளிக் கல்வித்தளத்தில் சிறப்பான அடையாளமாகவும் புதுப்படைப்பாக்கும் கருவியாகவும் திகழ்கிறது.
பின்தங்கிய குழந்தைகளுக்கான
தங்குமிடம்
• மொட்டுகள்: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பின் தங்கிய பெண் குழந்தைகளுக்குத் தங்குமிடம் மற்றும் அரவணைப்பும் வழங்கும் வண்ணம் ‘மொட்டுகள்’
எனும் இவ்வில்லம் 1996-இல் நிறுவப்பட்டது. குறுகிய காலத் தங்கும் வசதிகள், ஆலோசனைகள், கல்வி ஆதரவு, குடும்ப மறு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில் பயிற்சி ஆகிய உதவிகளை இவ்வில்லம்
வழங்குகிறது.
• குடிசைப்பகுதி செயல்திட்டங்கள்: சென்னை குடிசைப்பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டக் குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், குறிப்பாக, வீடுகளை விட்டுக் குழந்தைகள் வெளியேறுவதைத் தடுக்கவும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளை விட்டு வெளியேறிய சிறுமிகளைக் குறுகிய காலப் பாதுகாப்பிற்குப்பின் மீண்டும் அவர்களை அவர்களின் குடும்பத்தோடு ஒருங்கிணைக்க இந்தத் திட்டம் உதவுகிறது.
பணிபுரியும் பெண்கள்
மற்றும்
கல்லூரி
செல்லும்
மாணவர்களுக்குப்
பாதுகாப்பான
புகலிடம்
• ரோஷினிவாஸ் விடுதி: பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதற்காக ரோஷினிவாஸ் விடுதி 2000-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது 74 நபர்களுக்குத் தனிப்பட்ட வழிகாட்டுதல், பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் முழுமையான ஆதரவுடன் தொழில்முறை வளர்ச்சியையும் அவர்களுக்கு வழங்குகிறது.
• உடன்பணியாளர்கள்: நல்மேய்ப்பன் பணிகளை முன்னெடுப்பதில் பல உடன்பணியாளர்கள் முக்கியப் பங்கு
வகிப்பவர்களாக எம்மோடு பயணிக்கின்றனர். அருள்சகோதரிகளுடன் பணியில் உடனிருப்பதுடன் ஆலோசனை தரும் வழிகாட்டிகளாக ஒத்துழைத்து, இரக்கம், நீதி மற்றும் சேவை போன்ற மதிப்பீடுகள் சமூகத்தில் தொடர்ந்து செழித்து வளர்வதை இவர்கள் உறுதி செய்கிறார்கள்.
• பாதுகாப்புக் கொள்கை: குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குட் ஷெப்பர்ட் சபை உறுதியாக உள்ளது. உலகில் 68 நாடுகளில் பரவியுள்ள இச்சபை எல்லா இடங்களிலும் இப்பாதுகாப்புக் கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நூற்றாண்டு விழாக்கள்:
நவம்பர்
11, 2024 அன்று சிறப்பு நன்றித் திருப்பலியுடன் நூற்றாண்டு விழா தொடங்கியது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 2024 முதல் ஜூலை 2025 வரை ஒவ்வொரு மாதமும் செபம் மற்றும் நன்றியுணர்வுடன் ஒரே சமூகமாகப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த கால நினைவுகளைக் கொண்டாடக் குட் ஷெப்பர்ட் முன்னாள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட லெகசி காலா (Legacy Gala), ஏறக்குறைய 700 முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். கூடுதலாக, பிப்ரவரி 15, 2025 அன்று மேரியன் ஹோம் மொட்டுகள் 350 சிறுமிகளை ஒன்றிணைத்து, அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டு 2025 இல், நிறைவுக் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.
100 ஆண்டுகால அர்ப்பணிப்பு
மற்றும் சேவையை நினைவுகூரும் நாங்கள், அன்பு, இரக்கம் மற்றும் ஊக்கமளித்தல் ஆகியவற்றின் நோக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்கிறோம். ஆழ்ந்த நன்றியுணர்வுடன், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம். வரவிருக்கும் தலைமுறைகளுக்குக் குட் ஷெப்பர்ட் நிறுவனத்தின் வளமான மரபுகளை எடுத்துக்கூறி அவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்வதை உறுதிசெய்கிறோம். ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’
(திபா 107:1). இதயம் நிறைந்த நன்றியுடன் எங்கள் பயணம் தொடர்கிறது...
நல்மேய்ப்பன்
பணியில்,
அருள்சகோதரிகள், குட் ஷெப்பர்ட் கான்வென்ட்
சென்னை
சிறு வயதில் ‘அந்திக் கிறிஸ்து’ என்று சொல்லிக் கேட்டது, நான் அப்பொழுது ஒருவேளை சூரியன் சாய்ந்த பின்னால் ‘அந்தியில்’ வருவானாக்கும் என்று நினைத்தேன். பின்னர்தான் ‘அந்தி’ என்பது ‘anti’ என்ற இலத்தீன் முன்னொட்டின் ஒலி பெயர்ப்பு என்று தெரிந்தது. பொது மொழிபெயர்ப்புத் திருவிவிலியம் அறிமுகப்படுத்திய ‘எதிர்க் கிறிஸ்து’ என்ற சொல்லாடல் இப்போது ஓரளவு எல்லாராலும் பயன்படுத்தப்பட்டு நிலைத் தன்மை பெற்றுவிட்டது. இன்னமும் ‘அந்திக் கிறிஸ்து’ என்று சொல்பவர்களை அவனிடமே பிடித்துக்கொடுக்க வேண்டியதுதான்.
யார் இந்த
எதிர்க்
கிறிஸ்து?
திருவிவிலியத்தில்
பல நூல்களில் இக்கருத்து வெளிப்பட்டாலும், ‘எதிர்க் கிறிஸ்து’
என்ற சொல்லாடல் யோவானின் மடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு இடங்களில் வருகிறது. அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்தால், எதிர்க் கிறிஸ்து குறித்துப் பின்வரும் சித்திரம் கிடைக்கிறது.
• எதிர்க் கிறிஸ்து ஒரு பொய்யன். இயேசு கிறிஸ்து மெசியா இல்லை என்று பரப்புவதே அவனுடைய முழுநேர வேலை (1யோவா 2:22).
• எதிர்க் கிறிஸ்து எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஓர் ஆள் அல்ல; அது எல்லாக் காலகட்டத்திலும் செயல்பாட்டில் இருக்கும் கடவுளுக்கு எதிரான ஒரு கொள்கை, சிந்தனைப்போக்கு (1யோவா 4: 3).
• எதிர்க் கிறிஸ்து ஒரு தனித்த ஆள் கிடையாது. இயேசு கிறிஸ்து மனிதராக வந்தார் என்ற உண்மையை (Incarnation - மனுவுரு) மறுதலிக்கும் எல்லாருமே எதிர்க் கிறிஸ்துகள்தாம் (1யோவா 2:18; 2யோவா 1:7).
பவுலின்
கடிதங்களில் எதிர்க் கிறிஸ்து என்ற பிரயோகம் இல்லை. ஆனால், 2தெசலோனிக்கர் 2:3-12 பகுதியில் அவர் பேசும் ‘நெறிகெட்ட மனிதன்’ எதிர்க் கிறிஸ்து பிம்பத்திற்கு மிக அருகில் வருகிறான். அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். கோவிலில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடவுள் என்று காட்டிக்கொள்வான் (2தெச 2:4) என்று பவுல் கூறுகிறார். எதிர்க் கிறிஸ்து செய்வதும் இதுதான். அவன் வலிமை இந்தப் பொய்த் தோற்றமே. அவன் நல்லவன்போல நடிக்கிறான்; கிறிஸ்து போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். அவன் பெயரிலேயே ‘கிறிஸ்து’
இருக்கிறது. அதனால் பலர் ஏமாந்து போகிறார்கள். இரண்டு கொம்புகள் வைத்துக்கொண்டு, பெயின்ட் அடித்த இரப்பர் நாக்கு வெளியே தொங்க, நம் நாடகங்களில் வருவதுபோல தலை விரிக்கோலமாகத் தோன்றினால் ‘அய்யோ பேய்’ என்று நாம் பதறி விலகிவிடலாம். ஆனால், பேய் ஷூ, பேண்ட் சட்டை எல்லாம் போட்டு, நம் பக்கத்து வீட்டுப் பையன் போல அல்லவா வருகிறது!
எதிர்க்
கிறிஸ்துவை அடையாளம் காண்பது கடினம். நெறிகெட்ட மனிதன் ஓர் ஏமாற்றுக்காரன். அவன்
போலி அருஞ்செயல்கள் கொண்டும், பொய் கொண்டும் மக்களை
வீழ்த்துகிறான் என்று 2தெச 2:9-12 கூறுகிறது. ‘எதிர்க் கிறிஸ்து’,
‘நெறிகெட்ட மனிதன்’ என்ற இரு வேறு சொல்லாடல்களில், யோவானும் பவுலும் ஒன்றையே குறிப்பிடுகிறார்கள். கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்கச் செயல்படும் ஒரு நுட்பமான தீய ஆற்றல். திருவெளிப்பாடு 13-ஆம் பிரிவில் யோவான் குறிப்பிடும் விலங்கு பல நேரங்களில் எதிர்க்
கிறிஸ்துவோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த விலங்கு குறித்துத் திருவெளிப்பாடு ஆசிரியர் கொடுக்கும் தரவுகளைச் சற்று ஆராயலாம்.
• அது கடலிலிருந்து எழும்பி வருகிறது (திவெ 13:1). இதுதான் விலங்கு குறித்து யோவான் தரும் முதல் முக்கியத் தகவல். திருவிவிலியத்தில் கடல் என்பது கடவுளுக்கு எதிரான பிற இன அரசுகளை, சக்திகளைக்
குறிக்கும் படிமம். லிவியத்தான் கடலில் வாழ்ந்த ஒரு பெருமிருகம். “நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்துவிட்டீர். லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே” என்று திபா 74:13-14 கூறுகிறது. எதிர்க் கிறிஸ்து கடவுளுக்கு எதிரான ஆற்றல்களிலிருந்து கிளம்பி வருவான். அவர்களின் பதிலாளாகச் செயல்படுவான்.
• அது ஒரு கலவை விலங்கு. ‘Mongrel’ என்று ஆங்கிலத்தில்
சொல்வார்கள். சிறுத்தையின் தோற்றம் - கரடியின் கால்கள் - சிங்கத்தின் வாய் (திவெ 13:2). புராணங்களில்தான் இதுபோன்ற விலங்குகள் உலாவும். அர்த்தம் - எதிர்க் கிறிஸ்து, உலகில் உள்ள பேராபத்துக் கொண்ட அனைத்துத் தீய ஆற்றல்களின் தொகுப்பாக இருப்பான்.
• அந்த விலங்கு ஒரு புதுமையை நிகழ்த்துகிறது. அதன் ஏழு தலைகளில் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்தது. எல்லாரும் விலங்கு செத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்தக் காயம் அவர்கள் பார்க்கப் பார்க்க அதிசயிக்கத்தக்க வகையில் குணமாகிறது. A medical miracle!
இதனால் வியப்புற்று மக்கள் அவ்விலங்கைப் பின்தொடர்கிறார்கள். அதை வணங்கத் தொடங்குகிறார்கள் (திவெ 13:3-4). எதிர்க் கிறிஸ்து ஒரு பெரிய வித்தைக்காரன். இது போன்ற போலி அருஞ்செயல்களைக் கொண்டு மக்களை வீழ்த்துவதில் அவன் கில்லாடி!
•
விலங்கின் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் காணப்பட்டன என்று
திவெ 13:1 பகுதியும், அது வாய் திறந்து கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது என்று திவெ 13:6 பகுதியும் சொல்கின்றன. எதிர்க்
கிறிஸ்துவின் முக்கியப் பணி, கடவுளுக்கு எதிராகப் புறணிகளைப் பரப்புவது. To give God a bad press. சொல்,
செயல் இரண்டிலும் அவன் அந்தக் காரியத்தை நிறைவேற்றுவதை இங்குக் காணலாம். கடவுளுக்கு எதிரான பழிப்புரைகளின் நடமாடும் அடையாளம் அவன்.
• அந்த விலங்கு உலகின்மீது 42 மாதங்கள் அதிகாரம் செலுத்த விடப்பட்டது என்று திவெ 13:5 கூறுகிறது. இது ஒரு முக்கியமான காலத்தொகுப்பு. இதன் மூன்று வடிவங்களைத் திருவிவிலியத்தில் காணலாம். சில இடங்களில் 42 மாதங்கள் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, திவெ 11:5 மற்றும் திவெ 13: 5. சில இடங்களில் மூன்றரை வருடங்கள். உதாரணத்திற்கு, திவெ 12:14 மற்றும் தானியேல் 7:25. சில இடங்களில் 1260 நாள்கள். உதாரணத்திற்கு, திவெ 11:3 மற்றும் 12:6. மூன்று வடிவங்களும் ஒரே அளவு காலத்தையே குறிக்கின்றன. அதாவது, மூன்றரை
வருடங்கள். 3.5 என்பது 7-இல் பாதி. 7 என்பது திருவிவிலியத்தில் முழுமையைக் குறிக்கும் ஓர் எண். அதில் பாதியான 3.5 ஒரு முழுமையற்ற எண். இது சொல்லும் அர்த்தம் என்ன? எதிர்க் கிறிஸ்துவின் அதிகாரம் முழுமையானது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அவன் ஆட்சி நீடிக்கும். பவுலடியார் கூறுவதுபோல, “ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார். அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும்” (2தெச
2:8). God is the ultimate conqueror.
இறை
ஊழியர் ஃபுல் டன் ஷீன் 1947-ஆம் ஆண்டு ‘எதிர்க் கிறிஸ்துவின் 12 தந்திரங்கள்’ என்ற
தலைப்பில் கொடுத்த ஒரு மறையுரையின் ஒலி வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. ஷீன் ஓர் அமெரிக்க ஆயர். பிரபல மீடியா மறைப்பணியாளர். ரேடியோ, டி.வி. என்று
அக்காலத்துத் தகவல்பரப்புச் சாதனங்களை நற்செய்தி அறிவிப்புக்காகப் பெரிய அளவில் பயன்படுத்தியவர். 80 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு மறையுரையை ஆயர் ஷீனின் சொந்தக் குரலில் இன்றும் துல்லியமாகக்
கேட்க முடிவதைவிட ஆச்சர்யம் தருவது, அவர் குறிப்பிட்ட எதிர்க் கிறிஸ்துவின் தந்திரங்கள் இப்போதும் வழக்கில் இருப்பதும், தீவிரமாகச் செயல்படுவதும்.
• எதிர்க் கிறிஸ்து தன்னை ஒரு மாபெரும் மானுட வாதியாகக் காட்டிக்கொள்வான். அமைதி, பொருளாதார வளம், தன்னிறைவு பற்றி வாய் கிழியப் பேசுவான். அவற்றைக் கடவுளைச் சென்றடையும் வழிகளாக அல்லாமல், வாழ்வின் இலக்குகளாக நிலைநாட்டுவான்.
• மக்கள் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றதுபோல, கடவுளைப் பற்றிப் புதிய புதிய கருத்துகள் கொண்ட புத்தகங்களை எழுதுவான். ‘எதுவும் பாவம் இல்லை’ என்பதே அவன் கொள்கை.
• சோதிடத்தில் நம்பிக்கை கொள்ள மக்களைத் தூண்டுவான். ‘மனிதன் செய்யும் பாவங்களுக்குப் பொறுப்பாளி மனிதன் அல்லன், நட்சத்திரங்கள்’ என்று
எல்லாரையும் நம்ப வைக்க முயல்வான்.
• குற்றவுணர்ச்சி என்பது ஒரு பெரிய விசயம் அல்ல; அது வெறும் அடக்கப்பட்ட பாலுணர்வு என்று கற்பிப்பான்.
• சரி, தவறு என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே உண்மையான சகிப்புத் தன்மை (tolernace) என்று சொல்வான்.
• திருமண முறிவுகள் அதிகமாகும். ஓர் ஆணுக்கும்-ஒரு பெண்ணுக்கும் இடையில் இருப்பதுதான் திருமணம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. இன்பமான வாழ்விற்கு இதரத் தொடர்புகளும் தேவை என்ற சிந்தனையைப் பரப்புவான்.
• ‘அன்பு’ என்கிற கருத்தின்மீது பெரிய
கிளர்ச்சியை (love for love) உண்டு பண்ணி,
பிற மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய உண்மையான அன்பு குறையும்படி பார்த்துக்கொள்வான்.
• ஒரு மதத்தின் பெயரைக் கூறி மற்றொரு மதத்தை அழிப்பான்.
• இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூட பேசுவான். ‘இவ்வுலகில் வாழ்ந்த மிகச் சிறந்த மனிதர் இயேசு’ என்று சொல்வான். ‘அவர் கடவுள் அல்லவா?’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், ஓடிவிடுவான்.
• மூடநம்பிக்கை, சர்வாதிகாரம் போன்றவற்றின் பிடிகளிலிருந்து மனிதர்களை விடுவிப்பதே தன் பணி என்று சொல்வான். ஆனால், எது மூட நம்பிக்கை, எது சர்வாதிகாரம் என்று விளக்கமாட்டான்.
• அன்பு, விடுதலை, சமத்துவம் என்று கலர் கலர் வார்த்தைகள் கொண்டு பேசினாலும், தன்னுடைய ஒரு முக்கிய இரகசியத்தை யாரிடமும் சொல்ல மாட்டான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதர்களின் சகோதரத்துவத்தைப் பற்றி (Men’s Brotherhood) பெரிய உரைகள் நிகழ்த்துவான். கடவுளின் ‘தந்தைமை’
(God’s Fatherhood) குறித்து வாய் திறக்கமாட்டான்.
• ஓர் எதிர் திரு அவையை உருவாக்குவான். அதில் உறுபினர்களாகும் ஆசையை நம்பிக்கையாளர்களிடம் விதைப்பான். பாவத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, மனமாற்றம் அவசியமில்லை, இந்தக் கூட்டத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே போதும், வாழ்க்கை அர்த்தம் பெற்றுவிடும் என்று சொல்லி ஏமாற்றுவான்.
மேலே
கூறப்பட்ட எல்லாமே நல்லவை போன்ற தோற்றம் கொண்ட ஆபத்துச் சிந்தனைகள். அதுதான் எதிர்க் கிறிஸ்துவின் உத்தி.
அவன் வெற்றியின் இரகசியமும்
இதுவே.
யோசிக்கும்போது
இன்றைய உலகில் ஓர் எதிர்க் கிறிஸ்து அல்ல; ஓராயிரம் எதிர்க் கிறிஸ்துகள் செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.
அப்படித்தானே?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
இந்தியாவில் பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பற்றிய நினைவு நம் குடிமக்கள் மனத்தில் இன்னும் குடியிருக்கிறதா? என்றால், கொஞ்சம் குழம்பிய நிலையில்தான் நம்மவர்கள் பதில் அளிப்பர். ‘இந்தியா ஒளிர்கிறது’ (India shining) என்ற பொய்ப் பரப்புரையை நாளும் விடாது பரப்பி வந்த அன்றைய தேசிய சனநாயக அரசின் முகமூடி கிழிக்கப்பட்டு, சோனியாகாந்தி அவர்களின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் கட்டிலேறியது. இராஜீவ் காந்தியின் துணைவியாரான திருமதி. சோனியாகாந்திமீது தூவப்பட்ட அந்நியத் தேசத்தவர்; கிறித்தவ மறையைச் சார்ந்தவர் போன்ற கொடுந்துயர அவதூறுகளை மக்கள் அப்புறப்படுத்தி, எளிய ஒரு பெண்மணியை அரியணையில் அமர்த்திப் பார்த்தப் பெருமை இந்த மண்ணுக்கு உண்டு.
சோனியாகாந்தி
இந்தியப் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், முழுநேரப் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் அவர்கள் சோனியா அவர்களால் கைகாட்டப்பட்டார். இவர் பதவி வகித்த பத்து ஆண்டுகளில் இந்தியா கண்ட வெற்றிகள் பற்றி அவர் மரணத்திற்குப்பின் நிறையவே நாடு பேசியது. அவர்
பதவி வகித்த நாள்களில் அவரின் நேர்மை பேசப்பட்டது; நாணயம் பாராட்டப்பட்டது. அதேவேளை, இன்றைய ஆட்சியாளர்களால் ‘வலிமைக் குன்றியவர்’ எனவும்
அவர் இகழப்பட்டார். தனக்குத் தரப்பட்ட பதவியை ‘Accidental’ என்று ஏற்றுக்கொள்ளவும்
அவர் தயங்கியதில்லை.
இன்றைய
மதவாதிகள் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுக்
கட்டமைத்த பொய்மைகளைத் தாண்டியும் பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய பெருமை அவருக்கு உண்டு. அவரின் பத்தாண்டு கால ஆட்சியில் அவர்மீது ‘ஊழல்’ குற்றச்சாட்டுகள் எவையுமில்லை. ஆனால், நிறையப் படித்திருந்த இம்மேதையின் ஆட்சி ‘ஊழல்’ எனும் பொய்மையால் கட்டமைக்கப்பட்டுக் கவிழ்க்கப்பட்டது.
இந்தியாவில்
திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் ‘இராமசென்ம பூமி’ எனும் அடையாள அரசியலால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, வாஜ்பாய் தலைமையில் ஆறாண்டுகள் ஆட்சி நடத்தப்பட்ட பின்பும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றி கண்டமை வியப்பைத் தருவதே! ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த வெற்று முழக்கம் எது? கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் வென்றெடுக்க முடியாமல் மோடி அரசில் வாழ வேண்டிய சூழலை உருவாக்கியது எது?
மும்பையைச்
சேர்ந்த அன்னா ஹசாரே என்பவர் ஒரு சிறந்த சமூகச் செயற்பாட்டாளர். மராட்டியத்தின் மும்பை அரசின் ஊழல் பிரச்சினைகளைத் தெருவுக்குக் கொணர்ந்தவர். இவருடைய நோக்கம் பற்றியோ, எடுத்துக்கொண்ட பிரச்சினைகளின் கனம் பற்றியோ நாம் சந்தேகப்பட வேண்டியது இல்லை. இவரோடு அணி சேர்ந்தவர் கெஜ்ரிவால், கிரண்பேடி, இன்னும் பலர். இவர்கள் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஊழல் பிரச்சினைகளைப் பெரிதாக்கி தலைநகரைக் குலுக்கி வந்தார்கள். நாடு முழுவதும் இவர்கள் எழுப்பிய ஊழலுக்கு எதிரான முழக்கங்களே முதன்மை பெற்றன.
அன்னா
ஹசாரே தலைமையிலான போராட்டம் மக்களின் மனத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அசைத்துப் பார்த்தது. இந்தியத் தலைநகர் ஊழலுக்கு எதிரான முழக்கங்களால் திகைத்து நின்ற நிலையில் மதவாதக் கருத்தியலால் வளர்ந்து, ஆறாண்டுகள் ஆட்சியும் நடத்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் தன் ஆட்சிப் பொறுப்பை இழந்து நின்ற மதவாதிகள் என்ன செய்தனர்? எரியும் நெருப்பில் தாமும் குளிர் காய்வது மட்டுமின்றி, எரிக்கும் நெருப்புக்கு உரமிட்டுத் தம் தோழமையைக் காட்டிக்கொண்டனர். ஊழல்
என்ற ஓர் ஆயுதத்தைக் கையில் எடுத்த அன்னா ஹசாரேக்கள் தலைநகர்
ஜந்தர் மந்தரைப் போராட்டத்தளமாக முன்னெடுத்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொஞ்சம் அசைந்துதான் போயிற்று. இன்று நேர்மையானவர் என்று போற்றிப் புகழப்பெறும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் இச்சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கப்பட்டார். உரிய காலத்திற்காகக் காத்திருந்த மோடி பரிவாரங்கள், அன்னா ஹசாரே விதைத்த விதையை ஆட்சி அதிகாரத்தால் அறுவடை செய்தது.
ஆளும்
அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிற்கான ஆதாரமாக ஊழலை முன்னெடுத்தவர்கள் காணாமற்போக, நீண்ட பெரிய திட்டத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ‘மதவாதம்’ பெரும் வெற்றி பெற்றது என்பதுதான் இதில் காணப்பெறும் பெரிய முரண்பாடாகும்.
இன்றைய
ஆளும் ஒன்றிய அரசு ஊழலின் அனைத்துப் பரிமாணங்களையும் வழுவாமல் ஏற்றுக் கொண்டிருப்பதோடு, ஊழலின் ஊற்றுக் கண்ணை மௌனம் எனும் சூழ்ச்சி கொண்டும், வளர்ச்சி என்னும் பொய் முழக்கம் கொண்டும் மக்களிடம் நாடகமாடி வருவதோடு, பெரும்பான்மைவாதம் எனும் கொடிய நாசக்காரக் கருத்தியலால், பொதுமக்களிடம் பொய்யான அங்கீகாரத்தையும் பெற்று வருகிற அவலத்தை மக்கள் நாளும் சந்தித்து வருகின்றனர். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே தலைமையில் முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசியல் அரங்கில் எங்குள்ளனர்? ஊழல் என்னும் பெருச்சாளி இன்னும் சாகா நிலையில், ஊழலையும் தாண்டிய மிகப்பெரும் பாசிசக் கோரத்துள் இந்தியா சிக்கித் தவிக்கையில், இன்று இவர்கள் எங்கே போனார்கள்?
அன்னா
ஹசாரே எனும் காந்தியார் வழிவந்தவர்க்கு முதல் சீடனாய் வளர்ந்து நின்ற கெஜ்ரிவால் என்னும் ஊழலுக்கு எதிரான போராளி, ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு வலுப்பெற்றார். எந்த ஊழலுக்கு எதிரான போராட்டம் இவருக்கு ஆட்சியைத் தந்ததோ அதே வகையான ஊழல் குற்றச் சாட்டினால் சிறை சென்றவரும் இவரே. முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதே, இன்றைய மதவாத ஒன்றிய அரசின் சூழ்ச்சி வலையால் விசாரணையின்றிச் சிறையிலடைக்கப்பட்ட பெருமையைப் பெற்றவர் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கண்ட இவர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியேற்ற மதவாதிகளின் பிரித்தாளும் மதவாதக்கொள்கையை என்றுமே கேள்விக்குள்ளாக்கவில்லை. அது மட்டுமல்லாது, தனது ஆட்சியைக் காப்பாற்ற மெல்லிய இந்துத்துவக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தவும் இவர் தயங்கியதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமியருக்கு எதிரான சட்டம் என்பதனால் எழுந்த போராட்டத்திற்கு இவர் துணை நிற்கவில்லை. டெல்லி மாநகரில் இசுலாமியப் பெண்கள் ஒன்று திரண்டு நடுங்க வைக்கும் குளிரில் இரவும் பகலுமாய்ப் போராடியபோது, டெல்லி முதலமைச்சரான கெஜ்ரிவால் கண்டுகொள்ளவும் இல்லை. அயோத்தியில் இராமருக்கான கோவில் எழுப்பப்பட்டது பற்றியோ, சமயச் சார்பற்ற இந்திய அரசின் தலைமை அமைச்சர் தலைமைப் பூசாரியாக நின்று பூஜை செய்ததெல்லாம் கெஜ்ரிவாலை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை.
ஆனால், அரியானா தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக அனைத்துத் தொகுதிகளிலும் களம் கண்டு காங்கிரஸ் தோல்விக்குக் காரணமானார்.
‘ஊழல்’
(Corruption) நம்
சமூகத்தைப் பற்றி நிற்கும் ஒரு நோய். வலுவான அரசுக் கட்டமைப்பை உடைய பொதுவுடைமை அரசுகள் கூட இந்நோயை அகற்றிட முடியவில்லை என்பதே உண்மை. இப்படியிருக்க, பாராளுமன்ற சனநாயக அரசியல் ஆட்சியுள் ஊழலுக்கான வெளி
எப்போதுமே பெரிது என்பதுதான் உண்மை. இது வளர்ந்த நாடுகளிலும் சரி, வளர்ச்சி பெறாத நாடுகளிலும் சரி, நாட்டின் தன்மைக்கேற்ப பரந்து விரிந்த அளவில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும், தவிர்க்கவியலா வகையிலும் தன் சதிராட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தியப்
பிரதமராக ஆட்சி செய்த திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்திலும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திருமதி. இந்திராகாந்தி அவர்கள் அப்போது அளித்த பதில் இப்போதும் நினைவுகூரத்தக்கது. அதாவது, “ஊழல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி சார்ந்த பிரச்சினை அல்ல; மாறாக இது உலகு தழுவிய பிரச்சினை (Universal Phenominal)” என்றார்.
ஊழலின் நியாயப்படுத்துதல் பொருட்டு முன்வைக்கப்படும் கருத்தல்ல; ஊழல் எனும் நோய் ஒழிக்கப்பெற வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகுந்த இந்தியச் சமூகத்தில் ஊழல் வரைமுறையின்றி ஊடுருவி, இச்சமூக அமைப்பை அரித்துவிடும் கரையானாக மாறுமாயின், இச்சமூக அமைப்பின் கடைத்தட்டு மக்களைக் காக்கின்ற ஆயுதம் எதுவுமே இல்லை என்றாகிவிடும்.
ஊழலுக்கு
எதிரான போராட்டத்தை முன்னெடுத்தோர் ‘ஊழல் ஆட்சி’ என்று முத்திரை குத்தி, ஓர் ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதில் வெற்றி கண்டனர். ஆனால், நாம் நாளும் சந்திக்கும் பொருள் ரீதியான ஊழலைத் தாண்டி, நம் சமூகத்தைச் சீரழித்து வரும் வகுப்புவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், மதவழி
தேசியம், பிரிவினைவாதம் என்பனவெல்லாம் ஊழலின் பரிமாணங்கள் இல்லையா? கையூட்டு என்னும் ஊழலின் வெளிப்பாடு (Manifestation) மட்டுமே
நாம் நேரடியாக அனுபவிக்கும் தீமை என்பதால், மேற்கண்ட வாதங்கள் ஒப்புமையில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தி விடுமா? ஊழல் எனும் ஒரு நோயை மட்டுமே சுட்டிக்காட்டி ஓர் அரசின் இருப்பை அல்லது தரத்தை நிர்ணயிக்க முடியுமா?
நமக்கு
எழுகின்ற கேள்வியெல்லாம், ஊழல் மட்டுமே ஒரு கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அளவுகோலாக இருக்க முடியுமா? சுதந்திரம் பெற்ற இந்தியா இன்று சந்தித்து வரும் சவால்களைப் புரிந்துகொள்ள முயன்றால், ஊழல் மட்டுமே அளவுகோலல்ல!
இந்நாட்டின்
சனநாயகத்தைக் காக்கும் பணியில், சமூக நீதியைச் சமரசமின்றி காக்கும் வகையில், இந்தியக் கூட்டாட்சியின் மகத்துவம் பேணும் வகையில், நாட்டின் உயிர்மூச்சாம் சமயச் சார்பின்மையைப் போற்றும் வகையில் நம் அரசியல் நிலைப்பாடு இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட இந்நிலைப்பாடுகள் ஊழல் ஒழிப்பைக் காட்டிலும் உன்னதமாகப் போற்றப்படக் கூடியவை.
ஒரு
குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவு என்பது, அக்கட்சி மேற்கொண்ட கொள்கையில் காட்டும் உறுதியில் அமைவது. ஆனால், இவ்வேளையில் மக்கள் சார்புக் கொள்கையில் உறுதியாக நாம் நிற்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
நிதர்சனக் கண்ணோட்டத்தோடும், தெளிந்த பார்வையோடும் நாம் முன்னெடுக்கப்பட வேண்டிய பார்வை இது. இது முற்றுப்பெறும் கட்டுரை அல்ல; தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டிய முயற்சி.
எப்போதும் பச்சைப் பசேலென இருக்கும் அந்த வாகை மரம், ஊருக்கே மணி மகுடம் போல ஊர் நடுவே இருந்தது. நானூற்றுக்கும் மேற்பட்ட கைகளை அகல விரித்த மரக்கொம்புகள், கிளைகள் பெற்றெடுத்த தேன்கூடுகள், பூக்களால் சீவிச் சிங்காரித்த இலைமுடிகள், தென்றலுக்கு மணிக்கிலுக்கும் காய்கள், பம்பரமாய்ச் சுற்றி நின்ற ஆணி வேர் என்று எம் ஊர் வாகை மரம் பிரமிக்கத்தக்க ஓர் ஓவியம் எனலாம்.
முதியவர்கள்
அதன் அடியில் அமர்ந்து, அயர்ந்து தூங்கும்போது, அது ஒரு தாய்மடி. சிறுவர்கள் அதன் நிழலில் ஓடியாடி விளையாடும்போது, அது ஒரு விளையாட்டு மைதானம். அதன் கொம்புகளைப் பிடித்துக் குரங்காய்த் தாவி விளையாடும்போது, அது ஒரு சர்க்கஸ் கூடாரம். பள்ளிப் பருவ காலத்தில் விடுமுறை நாள்களில் அந்த வாகை மரத்தடியில்தான் நாள்கள் கழிந்தன.
ஒவ்வொரு
சீசனுக்கும் விளையாட்டுகள் மாறிக் கொண்டே இருந்தன. பம்பரம், கோலிக்குண்டு, புளியம் முத்துகளை வைத்து பாண்டி விளையாடுதல், கிட்டிப்புள்,
கபடி, கிளியாந்தட்டு, அவ்வப் போது கிரிக்கெட்... இப்படி எல்லா விளையாட்டுகளும் அந்த வாகை மரத்தடியில்தான் நடந்தன. பிள்ளைகள் வாகை மரத்தடியில்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்திருந்ததால், பெற்றோர் நிம்மதியாய் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்தனர்.
கல்லூரி
போகும் பருவம் அது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலைப் பொழுது ஊர்க்காரர்கள் ஆண், பெண் என்று பலரும் அந்த வாகை மரத்தடியில் கூடியிருந்தனர். “ஏல செல்லத்துரை! ஒவ்வொருத்தனும்
ஒவ்வொருத்தனுங்க மூஞ்ச பாத்துக்கிட்டு இருக்கீங்க. சட்டுப் புட்டுணு ஒரு முடிவுக்கு வாங்கலே” என்று ராஜாமணி தாத்தா மௌனத்தைக் கலைத்து வைத்தார்.
“நான் என்ன சொல்லுறது? ஊரு திருவிழா வருது. இந்தக் கோவில் கட்டி ஐம்பதாவது வருசம் வேற. அந்தோணியாருக்குப் பெரிய தேர் ஒண்ணு செய்யணும். திருவிழாவை ஜாம்ஜாம்முணு கொண்டாடணும். அவ்வளவுதான்” செல்லத்துரை
சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
“தேர் செய்ய நிறைய செலவாகும். இந்த வருசமும் கூடுதல் வரி போட்டு வயித்த அடிக்காதிங்கடே...” விரக்தியில் சொன்னாள் விக்டோரியா பாட்டி.
“அதுக்கெல்லாம் அவ்வளவு செலவாகாது. அதுதான் நம்ம வாகை மரம் இருக்குலா. அத வெட்டி தேர்
செஞ்சிட வேண்டியதுதான். நம்ம ஊர் இளந்தாரிங்ககிட்ட அந்த வேலைய கொடுத்திடலாம். என்னடே சொல்லுறீங்க எல்லாரும்...” செல்லத்துரை பெரியப்பா எங்களைப் பார்த்துக் கேட்டார். வாகை மரத்தை வெட்டி தேர் செய்யும் முடிவே எங்களுக்குப் பிடிக்கல.
“ஏன் வாகை மரத்த வெட்டணும், தேர் செய்யணும்? அந்தோணியார் வந்து தேர் செய்யுணு கேட்டாரா?” எப்போதாவது பேசுற ரீகனே தைரியமா கூட்டத்துல கேட்டுட்டான்.
“லே! பக்கத்து ஊர்க்காரப் பயலுக போன வருசம் அவன் ஊர் திருவிழாவுல புத்தம் புதிய தேர செஞ்சி ‘ஷோ’ காட்டுனானுக பாத்தியா? நம்ம அவனவிட எதுலல கொறஞ்சிட்டோம்?” இப்போ தொண்டை கிழியக் கேள்வி கேட்டது சின்னப்பன் தாத்தா. வாகை மரத்தை இனி காப்பாற்றவே முடியாது என்று நினைக்கும்போது, மனம் பானை தண்ணீர் போல அலம்பி அடங்கியது.
சில
நாள்களிலேயே பொக்லைன் இயந்திரம் ஊருக்குள் ஊர்ந்து வந்தது. வாகை மரத்தை வேரறுத்தது. தும்பிக்கையைக் கொண்டு அழுத்தித் தள்ளும் யானையைப்போல தன் கையால் அந்தப் பெரிய மரத்தை முட்டி மோதியது. மரத்தைக் கீழே தள்ளியபோது காக்கை முட்டைகள் விழுந்து உடைந்து தெறித்தது போல, சில நொடிப் பொழுதுகள் எங்கள் ஊர் அடையாளமே விழுந்து நொறுங்கியது போலிருந்தது. ஊரும் எங்கள் உணர்வும் வெறுமையை உணர்ந்தது. வாகை மரம் இல்லை, வாகை மரத்தடி விளையாட்டும் இல்லை. அந்த ஊர்ல இருக்கவே மனம் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் படிப்பிற்காக, வேலைக்காகவெனச் சிதறிப் பறந்தோம்.
ஆண்டுகள்
பல கடந்து ஊர் திரும்பும்போது ஊரே புதிய வீடுகள், காம்பவுண்டு சுவர்கள், கீல் சாலைகள், மெட்ரிக் பள்ளி, பாழடைந்த கிணறு, வெட்டாந்தரை, ஆரவாரமற்ற வீதிகள் என்று முற்றிலுமாக மாறியிருந்தது. வீடுகளில் டி.வி. சத்தம்,
சிறுவர்கள் கைகளில் மொபைல் போன். ஒன்று மட்டும் புரிந்தது. வாகை மரம் வெட்டப்பட்டு தேரானதுபோல, எங்க ஊரு தெரு விளையாட்டுகளும் மொபைல் போனுக்குள் வெவ்வேறு பெயர்களில் தஞ்சம் புகுந்தன.
இன்று
விளையாட்டு நேரங்களை இணையத் தள விளையாட்டுகள் ஆக்கிரமித்துவிட்டன.
இயற்கையும் விளையாட்டுகளும் இணைந்தே அழிக்கப்படுகின்றன. விடுமுறை நாள்களில் வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் சூழல் இன்று கிராமங்களில் கூட இல்லை. குழந்தைகள் முதல் சிறார் வரை போனிலேயே விளையாடுகின்றனர். ஒரு காலத்தில் வெளியே விளையாடப் போனால் பெற்றோர் விடுவதில்லை. இப்போது ‘வெளியே போய் விளையாடு’
என்று குழந்தைகளைப் பெற்றோர்களே வற்புறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றாம் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே பெற்றோரின் துணையில்லாமல் போனில் விளையாட்டுச் செயலிகளைத் தரவிறக்கம் செய்து விளையாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆன்லைன் விளையாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கங்களும் சைபர் குற்றங்களும் ஏராளம் என்பதை நாம் அறிவதில்லை.
இன்று
ஆன்லைன் விளையாட்டுகள் பல விதங்களில் உள்ளன.
மேசிவ் மல்டி ப்ளேயர், ஆன்லைன் ரோல் பிளே விளையாட்டுகள் (Massive Multiplayer and online role playing games) என்னும் விர்ச்சுவல் விளையாட்டுகளை விளையாடுபவர்கள் தங்களை அந்த விளையாட்டின் கதாப்பாத்திரங்களாகச் சித்தரித்து ஒருவர் மற்றவரோடு சண்டையில், பந்தயத்தில், போட்டியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆன்லைன் மைதானத்தில் மட்டும் இல்லை, ஆப்லைன் வாழ்விலும் சண்டைகளும் ஆபத்துகளும் நீள்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
ஆன்லைன்
கேசினோ விளையாட்டுகள் (Online casino Games) வழக்கமான
கேசினோ விளையாட்டுகளைப்போல ஆன்லைனில் விளையாடுவது. இது பணம் வைத்துச் சூதாடுவது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2023) 40 பேர் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ‘பர்ஸ்ட் பெர்சன் சூட்டர்’
(First Person Shooter) என்னும்
ஆன்லைன் விளையாட்டுகள் முப்பரிமாண விர்ச்சுவல் தளத்தில் ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டு விளையாடுவது. இவ்வகை விளையாட்டை விளையாடும் போது நாமே விளையாடுகின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது. தான் விளையாட்டில் வீழ்த்தப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால் பல்வேறு மனநல நோய்களுக்கு விளையாடுபவர் தள்ளப்படுகின்றார்.
ஆட்டக்காரருக்கு
எதிராக சுற்றுச்சூழல் (Player Vs Environment) என்னும்
வகை விளையாட்டு ஆட்டக்காரர்களைச் செயற்கை நுண்ணறிவோடு செயற்கையான ஆன்லைன் களங்களில் விளையாட வைப்பது. இதில் மல்லுக்கட்டி விளையாடி வெல்வது கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது. இன்னும் இதேபோன்ற பல ஆயிரக்கணக்கான ஆன்லைன்
விளையாட்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுச் சந்தை 25 முதல் 30 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றது என்றும், ஆன்லைன் விளையாடுபவர்கள் 42 கோடியிலிருந்து 50 கோடியாக அதிகரித்திருக்கின்றார்கள் என்று புள்ளி விவரம் ஒன்று ஆன்லைன் விளையாட்டின் அசுர வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
பல
மணி நேர விரயம், ஒரே இடத்தில் பல மணி நேரம்
அசைவில்லாமல் இருப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம், மனப்பிறழ்வு,
பண மோசடி (Phishing), சைபர்
அடக்குமுறை (Cyber-Bullying), அந்தரங்கத்
தரவுகள் களவாடப்படுதல் (Data Breach), கொந்துதல்
(Hacking), வைரஸ்
தாக்குதல் (Malware), தனிமையுணர்வு
போன்றவைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகளும் காரணமாய் இருக்கின்றன.
இத்தகைய
விளையாட்டு விபரீதங்களிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாப்பது நம் கடமை. வீட்டிலே குழந்தைகள் கேட்கும் ஆன்லைன் விளையாட்டுகளைப் பெரியவர்களே சரியான தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து தருவது நல்லது. ஏதாவது விபரீதம் நடந்தால், அதனை ‘ஸ்கிரீன் ஷாட்’எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்களை அல்லது சொந்த விவரங்களை வெளியிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் நேரத்தை மேலாண்மை செய்யவும், குழந்தைகள் நண்பர்களோடு மைதானங்களில் விளையாடும் பழக்கத்தை உருவாக்கவும், வீட்டுத்தோட்ட வேலைகளில் அவர்களைப் பழக்கப்படுத்தவும் பெற்றோர்கள் முனையவேண்டும்.
வாகை
மரமோ அல்லது வாகைமர நிழலோ இன்று நமக்கு எட்டுக் கடல்கள், எட்டு மலைகள் தாண்டிக் கிடைக்கும் அனுபவமாகிவிட்டது. நிழல் படங்களோடு விளையாடுகிறோமே தவிர, நிஜங்களோடு விளையாடுவதில்லை. வாகை மரம் போன்று ஆயிரக்கணக்கான மரங்களின் நிழல்களே ஆயிரமாயிரம் விளையாட்டுகளின் கருவறைகள். ஆன்லைனோடு நம்மை இணைத்துக் கட்டிப் போட்டிருக்கும் டிஜிட்டல் வலைகளை அறுத்தெறிந்துவிட்டு வீதிக்கு வருவோம்! மரங்களோடும் மனிதர்களோடும் விளையாடுவோம்!
வாடிக்கையாளர்கள், தங்கள் பிராண்டுகளை ((Brand) அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகளை அல்லது சேவைகளை அதிக அளவில் மக்கள் வாங்குவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு தொடர்பு கருவியே விளம்பரங்கள். ஆனால், அடிக்கடி விளம்பரங்களுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிறுவனங்கள், அதில் ஒரு நுட்பமான அரசியலை ஊடுருவச் செய்து, உண்மை அல்லாதவற்றைக் கூறி தங்களின் பொருளை விற்பதற்கான முயற்சிதான் விளம்பர அரசியல் என்பதாகும்.
இவர்களின்
இத்தகைய இழிசெயலை நிறுத்துவதற்கென எந்தச் சட்டமும் இல்லை என்பதே எதார்த்தம். அப்படியே இருந்தாலும் அதில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதன் வழியே வெளியே வந்துவிடும் அளவிற்குக் கிரிமினல் தனம் கொண்டவர்கள்தான் இந்த விளம்பர அரசியலை முன்னெடுப்பவர்கள். இதனால்
பாதிக்கப்படுவது இந்தச் சமுதாயத்தின் மக்கள்தாம் என்ற உண்மையை உணரக்கூட மறுப்பவர்கள் இவர்கள்.
21-ஆம்
நூற்றாண்டின் புதிய இயல்பு நிலையாக உருவெடுத்து வரும் இணையக் குற்றங்கள் என்ற ‘சைபர் கிரைமுக்கு’ அடிப்படைக்
காரணம் இந்த மயக்கும் போலி விளம்பர அரசியல்தான். ஒவ்வொரு மனிதனையும் இடம், பொருள், ஏவல் தேடிக் குறி பார்த்து அலைந்து கொண்டிருக்கிறது இந்த விளம்பர அரசியல். மின்னஞ்சல் மற்றும் இணைய மோசடி, அடையாள மோசடி, கிரெடிட் கார்டு, மிரட்டிப் பணம் பறித்தல், சேவை மறுப்புத் தாக்குதல்கள் போன்ற இணையக் குற்றங்களின் வழியாகப் பொய்ப்பிரச்சாரத்தால், போலி கருத்துகளால் மக்களை மயக்கி ஏமாற்றுவதில் இவை முதல் இடம் வகிக்கின்றன. இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால், மற்றொரு வகையான விளம்பர அரசியல், மக்களின் மூளையை மழுங்கடித்து, அதன் வழியாகப் பொருள் ஈட்ட, மக்களின் அன்றாடத் தேவையான ஒவ்வொன்றிலும் கைவைத்து கல்லாக் கட்டி வருகிறது.
ஒரு
பொருளை வாங்குவதற்கு உங்கள் விழிகளின் வழியே பொருளைக் காட்சிப்படுத்தி, ஆசையைப் புகுத்தி, இதயத்தைக் கவர்ந்திழுத்து, செவிகளின் வழியாகத் தேன்துளிகளாய் பொய்யுரைத்து, மூளையைக் கரைத்து அந்தப் பொருளை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்ற நுகர்வு வெறியை உண்டாக்குபவை இந்த ஊடகவழி அரசியல் விளம்பரங்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களைப் பார்ப்பதற்காகவே படைக்கப்படுகின்றன இல்லத்தரசிகளின் கனவுக்கோட்டையான சீரியல் தொடர்கள். சீரியலின் நேரத்தைவிட, விளம்பரங்களின் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வணிக அரசியலால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’
என்கின்ற போலித் தத்துவத்தைக் கொஞ்சம் மெருகேற்றி, ‘கறுப்பாக இருக்கின்ற பெண்கள் எங்கள் நிறுவனத்தின் கிரீமைத் தடவினால் வெள்ளையாகி விடுவாங்க’
எனப் பொய் சொல்கின்றன இந்தப் போலி விளம்பரங்கள். அது மட்டுமா? இந்தப் பற் பசையில் பல் துலக்கினால் பொண்ணுங்க மயங்கிடுவாங்கன்னு இளைஞர்களையும், ‘இந்தச் சிப்ஸ் சாப்பிடுறது உங்க இளமையின் அடையாளம்’
என்று இளம்பெண்களையும், கையில் ஸ்மார்ட் போனும், ஏர்டெல் இணைப்பும் இணையமும் இருந்தால் சோம்பேறியாக இருந்தாலும் பரவாயில்லை என்றும், பல முட்டாள்தனமான விளம்பரங்களில்
ஊடுருவிக் கொண்டிருக்கும் அரசியலால் இந்தச் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
அறிவுள்ள
இளைய தலைமுறையை அறிவிலிகளாக மாற்றும் போக்கை இந்த விளம்பர அரசியல் தொடர்ச்சியாகச் செய்வதன் பின்னணியில் ஒரு பயங்கரமான மூளைச்சலவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்றாலே அது குஜராத்தும், உ.பி.யும்தான்
என்று கிடைத்த கேப்ல, விளம்பர அரசியலை இப்போது கொஞ்சம் பொய்ப் பிரச்சாரம் வேற காலடி எடுத்து வச்சிருக்கு. இதுக்குப் பெயர் அரசியல் விளம்பரமாம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவோரைப் பன்மொழி வித்தகர்களாகவும், கோட்டு-சூட்டுப் போட்ட முட்டாள்களைக்கூட அறிவாளிகளாகவும் காட்டுகிறது இந்த விளம்பர அரசியல். நுகர்வோரின் பகுத்தறிவுத்திறனை மழுங்கடித்து, உணர்ச்சி சார்ந்த செய்திகளை நச்சு விளம்பரங்களாக்கி அதிலும் பணம் பார்க்கிறது ஒரு கூட்டம்.
இந்த
விளம்பரக் கூட்டம் இரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களையும் சமூகத்தையும் ஏன் இந்த நாட்டையும் முதலாளித்துவப் பொருள்கள் வாங்கும் ஒரு சந்தைக் கூட்டமாக மாற்றி வைத்திருக்கிறது. தலை முடி இல்லாத அல்லது முளைக்காத தலைக்கு எர்வாமேட்டினை அமேசான் காட்டிலிருந்து வாங்கி, அதனை தேய்த்துக் கொண்ட தலைகள் இன்றைக்கு வரையில் வறண்டுபோய் அலைந்து கொண்டிருப்பதை நேரில் பார்த்தும் அதனை நம்ப மறுக்கிற அளவுக்கு விளம்பர அரசியல் என்பது ஆழமானது; ஆபத்தானது. இவைகளோடு இணைந்து மக்களை வாட்டி வதைக்கும் மற்றொரு முகம்தான் வணிக அரசியல். வணிக அரசியலின் வில்லனாக வந்து முளைத்திருப்பவை வரிகள் என்று மேலோட்டமாகக் கூறிவிட முடியாது. ஜி.எஸ்.டி.
(GST) என்னும்
சரக்கு மற்றும் சேவை வரிகள் இன்று வணிகர்களின் பார்வையில் எமனாகத் தெரிகின்றன.
அரசியல்
கட்சிகளுக்கு இடையிலான காழ்ப்புணர்வு, பிளவு, எதிர்ப்பு போன்றனவற்றால் வணிகங்களில் நேரடித் தாக்கம் ஏற்படுகிறது என்றும், அதிகாரத்துவம், ஊழல், வரிக்கொள்கைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் என்பவை இவற்றில் முதன்மை வகிப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நலம் தரும் ஜி.எஸ்.டி.
(GST) என்றார்
நம் பிரதமர். ஆனால், நடப்பதென்னவோ எதிர்மறையாக இருக்கிறது என்றார்கள் மக்கள்.
பலவிதமான
மறைமுக வரிகளை இரத்து செய்துவிட்டு, இப்போது ஒரே முனையாக்கப்பட்டுள்ளது வரி. ஆனால், பொருள்களின் விலைகள் முன்பிருந்ததைவிட அதிகரித்ததுதான் மிச்சம். சமையல் எரிவாயு, வீட்டு உபயோகக் குடிநீர், பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகம், பெண்களின் நாப்கின்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள் என எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
மேலும், கிரைண்டர், நீர் இறைக்கும் பம்பு, திரையரங்குகள், சில்லறை வேலைகளில் ஈடுபடும் கடைகளும், நிறுவனங் களும், உணவுப் பண்டங்களிலும் ஈக்களைப் போல் ஒவ்வொரு பொருள்களின் மீதும் வந்தமர்ந்திருக்கிறது ஜி.எஸ்.டி.
(GST); மக்களின் ஓட்டு என்ற மருந்து தெளித்துதான், அந்த ஈயை ஓட்ட வேண்டும் போல் தெரிகிறது.
நாட்டின்
தலைநகரங்களில் தொடங்கி, வணிக உலகில் நுழைந்து, நம் வீட்டு வாசலில் வந்து முடிகிறது இந்த விளம்பர மற்றும் வணிக அரசியல். நுகர்வோரின் நுகர்த்தலே விளம்பர அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் காய் நகர்த்தல். நகர்த்துவார்களா, நுகர்வோர்?