news
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: மக்கள் ஆதரவு யாருக்கு?

ஒரு காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நம் வீட்டு வரவேற்பு அறைகளில் வந்து அமர்ந்தன. இன்று அலைப்பேசி நமது கைகளில் மூன்றாவது கையாக மாறிவிட்டது. மின்னணு ஊடகங்கள் நொடிக்கு நொடி பரபரப்புச் செய்திகளை வாரித் தெளிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2026-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இது அரசியலமைப்பு சார்ந்த காலகட்டாயம். தேர்தல் காலத்தில் தமிழ்நாடு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும். யார் தீர்வைத் தருவார்? என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பேண உறுதி வழங்கப்படுதல் மிக மிக அவசியம். ஆனால், இன்று இங்கு வருந்தத்தக்க விதமாய், ‘யார் அடுத்த முதல்வர்?’ என்ற இசை நாற்காலிப் போட்டி  நடக்கிறது.

1967-இல் உணவுப் பஞ்சம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வி, உட்கட்சிப் பூசல்கள் என ஆளும் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த காலம். பேரறிஞர் அண்ணாதுரை, இராஜாஜியின் சுதந்திரா கட்சி, .பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளோடு  வலுவான கூட்டணி அமைத்தார். 1967-இல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

58 ஆண்டுகளாகத் திராவிட இயக்கங்கள் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கின்றன. தற்போது ஆளும் தி.மு..வும் 2019 முதல் பலமான கூட்டணியைத் தக்கவைத்து, தொடர் வெற்றிகளைக் குவிக்கிறது. எதிர்முகாமில்யார் முதல்வர்?’ என்ற ஒற்றைக் கேள்வியால் தேர்தல் களம் ஐந்து அணிகளைக் கொண்டதாய் அமைகிறது. நாளது தேதி வரை தமிழ்நாடு ஆளுங்கட்சிக்கு  எதிரான  வாக்குகள்யார் முதல்வர்?’ என்ற எதிர்க்கட்சிகளின் போட்டியால் பிரிகிறது. ஆளுங்கட்சியும் ஆட்சிக்கு எதிரான  மக்களின் மனநிலையை மாற்ற, குறைந்தபட்ச செயல்களைக் கூட செய்ய முன்வரவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

.தி.மு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய பின்பு கூறுகிறார், “தேர்தலுக்கு 15 மாதங்கள் இருக்கின்றன; அப்பொழுது கூட்டணி முடிவு செய்யப்படும்என்று. அமித்ஷாவோ, எடப்பாடி பழனிச்சாமி அவரது அறையிலிருந்து வெளிவந்த பின்பு தன்எக்ஸ்வலைதளப் பக்கத்தில் ‘2026-இல் தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்எனப் பிரகடனம் செய்கிறார். தமிழ்நாடு தேர்தல் களத்தைப் பொறுத்த வரை 10 விழுக்காடு சிறுபான்மை வாக்குகளே முடிவை மாற்றும் காரணி என்பதால் தன் பா... கூட்டணி குறித்து எடப்பாடியார் ஒளிவு மறைவு காட்டலாம். அது அவரது அரசியல். இரண்டாவதாக, காலத்தே சிறுபான்மையினரைச் சமாதானப்படுத்த சாக்குபோக்குகளைத் தேடலாம். மூன்றாவதாக, மூத்த தலைவர்களின் பிற கட்சி செல்லும் தன் இலையுதிர் காலத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் என்பதும் அவரது அரசியல் கணக்கு. தமிழ்நாடு தேர்தல்களில் வெற்றிபெற அடிப்படைக் கட்டமைப்பு உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும். மேலே ஒரு படி சென்று விளக்கலாம் எனில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தங்கள் கட்சியினரை வாக்குச்சாவடி முகவராக நியமிக்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும். ஆளும் தி.மு.. மற்றும் எதிர்க்கட்சி .தி.மு..வுக்கு மட்டுமே ஊர் தோறும் உடன் பிறப்புகளாக, இரத்தத்தின் இரத்தங்களாகத் தொண்டர் படை உள்ளன. தமிழ்நாட்டில் பிற கட்சிகள் இந்த அடிமட்ட அடிப்படை ஆட்டத்திலேயே இல்லை.

சமீப காலத்தில் நடந்த ஈரோடு கிழக்கு  சட்டமன்றத் தேர்தலில், எதிரணி வாக்குச் சாவடி முகவர்கள் பிற்பகலுக்குப் பின் பெரும்பான்மையோர்  காணப்படவில்லை என்கிறது தேர்தல் கள அறிக்கைகள்.

தமிழ்நாடு தேர்தல் புள்ளி விவரங்களில் தி.மு.. மற்றும் .தி.மு..வைத் தவிர்த்த கட்சிகள், இரட்டை இலக்க வாக்கு சதவிகிதம் கொண்டவைகளாக இல்லை. பா... கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தாமரையில் நின்ற சிறு சிறு கட்சிகளின் வாக்குகளைத் தங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, தாங்களும் இரட்டை இலக்க வாக்கு விழுக்காடு என மார்தட்டுகிறது. எல்லாப் பலமும் உள்ள .தி.மு.. கூட பாராளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் கட்டுத்தொகை இழந்தது வரலாறு.

தமிழ்நாட்டில் சில கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சியில் தினம் பேட்டி கொடுக்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள்; கோபத்தில் கொப்பளிக்கிறார்கள்; காலை  ஒன்று, மாலை  ஒன்று என முரண்பாடுகளை அடுக்குகிறார்கள்; மாற்றி, மாற்றிப் பேசி  மக்களைக் குழப்புகிறார்கள்.

இவர்களில் ஒருவர் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலமாகவே தங்கள் கட்சியை வளர்த்துவிடலாம், முதல்வராகி விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். இந்த  விளம்பர வெளிச்சம் பட்டாசாக வெடித்துச் சிதறுமே ஒழிய, வாக்குகளாக மாறாது. இன்னும் சிலரோ மின்னணு ஊடகங்கள் வழி மாயவித்தை நடத்தி, தேர்தல் வெற்றி குறித்துக்  கற்பனை கோட்டைகள் கட்டுகிறார்கள்.

ஆளுநர்  என்பவர் ஆட்சிக்கான வழிகாட்டி என்பதைக் காட்டிலும், ஒன்றிய அரசின் கொள்கை பரப்புச் செயலாளராக ஆளும் அரசிற்குக் குடைச்சல் கொடுப்பது தமிழ்நாடு அரசியலில் நடப்பு பெருங்கொடுமை!

தேர்தல் காலத்தே சாதிக்கட்சிகள் மாநாடு போடலாம். ஏதாவது ஒரு கூட்டணியில் சீட் வேண்டி துண்டு போடலாம். 2011 தேர்தலில் அரசியல் சாணக்கியர் எனப்படும் திரு. கருணாநிதி அவர்கள் சாதிக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைத்து தோல்வி கண்டிருக்கிறார். தமிழ்நாடு மக்கள் சாதி வாரி ஓட்டுக்குத் தயார் இல்லை என்பதும் வெள்ளிடைமலை.

ஊடகங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தம் சார்பு கருத்துகளைத் திணிக்கலாம். அது வெற்றி பெறும் கட்சிக்கே தனது ஓட்டு என்கிற சிறு விழுக்காட்டினரை அசைக்குமே தவிர, பெரும் மாற்றம் ஏற்படாது. நாம் மக்கள் பிரச்சினைகளை அறிந்தவர்களுக்கு அதைத் தீர்க்க முனைவோருக்கு வாக்களிப்பதே உரிய  சனநாயக  நடைமுறையாகும். தமிழ்நாடு தேர்தல் ஆணையமும்  வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை 2026-இல்  தேர்தலுக்கான தன் பங்காகச்  செய்துவிட்டது.

2026-இல் தமிழ்நாடு தேர்தல் களம், தமிழ்நாடு மக்களின் வாழ்வுரிமை குறித்துப் பேச வேண்டும். மத வாதம் முற்றிலும் அழித்தொழிக்கும் வழி, மதச் சுதந்திர  உத்தரவாதம், மாநில உரிமைகள், மறுக்கிற ஒன்றிய அரசு, உரிய நிதி பகிர்வு, கல்வி உரிமை, மொழியுரிமை, நீதியுரிமை இதை முன்னெடுக்கிற ஆட்சியாளர்களே ஆள வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள், முனைப்புகள், நம் பங்களிப்புகள் என்பதே இடைப்பட்ட காலத்தில் நம் செயல் திட்டமாக இருக்கலாம். வாருங்கள்... நல்லாட்சி அமைப்போம்!

 

news
சிறப்புக்கட்டுரை
சைப்ரஸ் சர்ப்ரைஸ் (கண்டனையோ... கேட்டனையோ... – 32)

கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து இன்னும் ஆறு சுவாரசியத் தகவல்கள் இங்கே:

1. மனவாட்டம்

நொஸ்டால்ஜியாஎன்று சொல்லப்படும் பழைய காலத்திற்கான தீவிர ஏக்கம் இளம் பருவத்தில் திருத்தந்தை பிரான்சிஸை அலைக்கழித்திருக்கிறது. துக்கம் இல்லை. ஒருவித மன வாட்டம் (Melancholy). எனக்கும்கூட  அவ்வப்போது வரும். ஏதாவது  பழைய நட்புகள், படித்த இடங்கள், பணித்தளங்கள் பற்றி நினைக்கும்போது திடீரென்று பெரிய அலை மாதிரி வயிற்றில் சோகம் வந்து தாக்கி அந்தக் காலங்களை, அந்த மனிதர்களை இனி திரும்பப் பெறவே முடியாது என்ற நிச்சயத்தில் நெஞ்சம் அடைத்துக் கொண்டு, மூச்சு முட்டுவது மாதிரி ஆகி...  உங்களுக்கு இப்படி நடந்திருக்கிறதா? இதுபோன்ற ஏக்கப் படலங்களிலிருந்து, பெரிய பிரயத்தனம் செய்தே மீள்வேன். ஏதாவது ஒரு நிகழ்காலப் பணியில் மனத்தையும் உடலையும் செலுத்தி அதை வெல்ல வேண்டும். சரியாகக் கையாளப்படாத ஏக்கம், உளச்சோர்வுக்கு இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது.

பிரான்சிசுக்கு இந்தப் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக அவர் ஓர் உளநல மருத்துவரைப் பார்த்துள்ளார். நம்ப முடிகிறதா? அதுவும் ஒரு வருடத்திற்கு!

அவர் ஒரு யூதர். மிகக் கனிவுடன் என்னை நடத்தினார். அவர் கொடுத்த ஆலோசனைகள் இன்றும்கூட எனக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றனஎன்று பிரான்சிஸ் கூறுகிறார்.

2. சிரிப்பு மருந்து

துக்கம் ஒருவரைக் கடவுளிடம் கூட்டிச் செல்லாது. துக்கமாய் இருப்பதும் கோபப்படுவதும் புனிதத்தின் அடையாளங்கள் என்று யாராவது கூறினால், அது பொய்த்தகவல். அவரைத் தயங்காமல் போலீசில் பிடித்துக் கொடுத்து விடலாம். ‘மகிழ்ச்சியே கிறித்தவப் பண்புஎன்று பிரான்சிஸ் கூறுகிறார். சிரிக்கத் தெரிந்த சில மிருகங்களில் மனிதன் ஒருவன். சிம்பன்சி, நாய், எலி போன்ற விலங்குகள் மனிதச் சிரிப்பை ஒத்த ஒலிகளை எழுப்பினாலும், அவை மனிதன்  போன்று மகிழ்வு, நகைச்சுவை, உறவு போன்ற மதிப்பீடுகளை வெளிப்படுத்தச் சிரிப்பதில்லை.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம். கடவுள் சிரிக்கிறார்எனவே, நாமும் சிரிக்க வேண்டும். கடவுளோடு சேர்ந்து சிரிக்கலாம். சில நேரங்களில், கடவுளைப் பார்த்துக் கிண்டலடித்தும் சிரிக்கலாம். தப்பில்லை. நம் வீட்டில் உள்ள பெரியவர்களை எப்போதாவது, விளையாட்டாகக் கேலி செய்து சிரிக்கிறோம் அல்லவா! அதுபோல.”

புனித தாமஸ்மூர் (St Thomas More) எழுதிய  ‘நல்ல சிரிப்புக்கான மன்றாட்டுஎன்ற ஓர் அழகிய இறைவேண்டல் இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பிரான்சிஸ் அதை ஒவ்வொரு நாளும் சொல்கிறாராம். அந்த இறைவேண்டலின்  ஒரு பகுதி இங்கே...

நான்என்ற எண்ணம் உருவாக்கும் கவலைகளிலிருந்து எனக்கு விடுதலை தாரும். அலுப்பும் முணுமுணுப்பும் பெருமூச்சும் புலம்பலும் அறியாத ஆன்மாவைத் தாரும். நல்ல நகைச்சுவை உணர்வைத் தாரும். ஒரு கேலியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனம் தாரும். வாழ்வின் சிறு மகிழ்வுகளைக் கண்டுகொள்ளவும், அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் வரம் தாரும்.”

நல்ல இறைவேண்டல்! எல்லாரும் இதைச் சொல்ல வேண்டும். குறிப்பாக, எப்போதும்கொயர்சரியில்லை, ‘வயர்சரியில்லை என்று மைக்கில் புலம்பும் அருள்பணியாளர்கள்.

3. பீட்சா விரும்பி

இரண்டு காரணங்களால்பீட்சாதமிழில் பிரபலம். ஒன்று, அந்தப் பெயரிலேயே வந்து கலக்கிய விஜய் சேதுபதி நடித்ததிகில்படம். நான் அறையில் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு, பத்து பேர் நடுவில் அமர்ந்து அப்படத்தைப் பார்த்தேன். இரண்டாவது, 2014-இல் அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், ‘பீட்சாஎன்ற உணவைக் குறியீடாக வைத்து, எளிய குடும்பத்துக் குழந்தைகளின் வாழ்வை, ஆசைகளை, போராட்டங்களை ஒரு கவிதை போல சொன்னகாக்கா முட்டைதிரைப்படம். கடைசியில் அதைத் தின்ன வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு கடி கடித்து விட்டு, ‘அய்ய... வே... கொளகொளனு நல்லாவே இல்ல; இதுக்கு ஆச்சியோட தோசையே நல்லா இருந்துச்சிஎன்று சொல்லும்சின்ன காக்கா முட்டைகட்சி நான். பீட்சா எனக்கு ஆகாது.

எல்லாருக்கும் பிடித்த உணவு இருக்கிறது. எனக்கு இட்லி உப்புமா...  மூன்று வேளைகள் கொடுத்தாலும் ஓகே! பிரான்சிசுக்குப் பிடித்த உணவு பீட்சாவும், நத்தைக் கறி வறுவலும். Buenos Aires நகரின் பிரபல சான் லோரென்சோ கிளப் கால்பந்து ஆட்டங்களுக்குப் போவதும், ஆட்டம் முடிந்த பின்பு ஹோட்டலுக்குப் போய் பீட்சா சாப்பிடுவதும் பெர்கோலியோ குடும்பத்தினரின் முக்கியப் பொழுது போக்குகளில் ஒன்று.

அந்தப் பீட்சாவின் மணத்தை இப்போது கூட என்னால் நுகர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் திருத்தந்தையாக நான் இழந்த விசயங்களில் ஒன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு கடைக்குப் போய் அமர்ந்து பீட்சா சாப்பிடுவது.”

4. நாயக வழிபாடு

ஹீரோ ஒர்ஷிப்என்று சொல்லப்படும்நாயக வழிபாடுபிரான்சிசுக்கு அறவே பிடிக்காத ஒன்று. ஜான் F. கென்னடி அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க அதிபர். 65 ஆண்டுகளுக்கு முன் அவர் வெள்ளை மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள் அதைக் கொண்டாடினார்கள். கென்னடி அவர்களின்New Frontier (புதிய எல்லைகள்) வாக்குறுதி, இனி உலகில் வறுமை இருக்காது, எல்லாருக்கும் விடுதலை, வான் வெளி முழுக்க நம் கைவசமாகி, ‘பொள்ளாச்சிக்குப் போய் வருவதுபோல், நிலாவுக்குப் போய் வரலாம்என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். கென்னடி ஒரு நவீன மெசியா போலத் தோன்றினார். பிரான்சிஸ் அதை நம்பவில்லை.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடன் வாழ்ந்த அருள்பணியாளர் ஒருவர், கென்னடியின் வெற்றியை ஏதோ போப்பாண்டவரே அமெரிக்காவின் அதிபர் ஆகிவிட்டதுபோல் கொண்டாடினார். அதுபோன்ற பாமரத்தனம் எனக்குக் கோபத்தைத் தந்தது.”

அமெரிக்க ஷூ, அமெரிக்க பர்கர், அமெரிக்க விசா... என இன்றைக்கும் கூட  அமெரிக்காவிற்காக மக்கள்ஆலாய்பறக்க, பிரான்சிசைப் பொறுத்தமட்டில் அது மற்றொரு நாடு. அமெரிக்கா பற்றிய மிதம் மீறிய கற்பனைகளோ, அங்குப் போக வேண்டும் என்ற பேராவலோ அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. டாலர்மீது அவருக்கு மயக்கம் இல்லை. கர்தினால் ஆகியும், அமெரிக்கா போகாதவர் பிரான்சிஸ் ஒருவராகத்தான் இருப்பார். அமெரிக்காவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம், அவர் திருத்தந்தையாகி, இரண்டு வருடங்கள் கழித்து, 2015-இல்தான் நடந்தது.  

5. டிவிக்குநோ...நோ...’

1990-ஆம் ஆண்டு ஒருநாள் பிரான்சிஸ் சக இயேசு சபை அருள்பணியாளர்களோடு அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியில் ஒரு மோசமான காட்சியைக் காட்டினார்கள்அது பிரான்சிஸை மிக ஆழமாகப் பாதித்தது. உடனே பிரான்சிஸ் எழுந்து வெளியே போய்விட்டார். “ஏதோ கடவுளே எனக்குக் கூறுவது போல இருந்தது. டிவி உனக்குச் சரியானது அல்ல; அதனால், உனக்கு எந்த நன்மையும் இல்லை.”

ஒரு திருப்பலியின்போதுஇனி நான் டிவி பார்க்கப் போவதில்லைஎன்று அன்னை மரியாவுக்கு வாக்குறுதி கொடுத்து, அதற்கு இதுவரை 1999-இல் Buenos Aires நகரில் பெரிய விமான விபத்து ஏற்பட்டபோது ஒருமுறை 2001-இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது ஒருமுறை என இரண்டு முறை மட்டும் விலக்கு அளித்துள்ளார். தன் விருப்பத்திற்குரிய சான் லோரன்சோ கிளப்பின் கால்பந்து ஆட்டங்களைக் கூட பிரான்சிஸ் டிவியில் பார்ப்பது இல்லை.   முக்கியமான மேட்ச்சுகள் நடக்கும்போது, ஒரு சுவிஸ் கார்டு பாதுகாவலர், போட்டி அட்டவணையையும், ஆட்டத்தின் ஸ்கோர்களையும் எழுதி, திருத்தந்தையின்  மேசையில் வைத்து விடுவாராம். பாவம், பிரான்சிஸ்!

6. அடக்கமான அடக்கம்

பெரும்பாலான நவீன காலத் திருத்தந்தையர்கள் உரோம் நகர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சிஸ்  தன்னை St. Mary Major பேராலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மரியாமீது பிரான்சிசுக்கு உள்ள அன்பும் பற்றுமே இதற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம், மஞ்சள் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் அவர் தன்மை. வசதியான போப் மாளிகையைத் தவிர்த்து, ‘மார்த்தா இல்லம்என்கிற எளிய விருந்தினர் இல்லத்தில் கடந்த 12 வருடங்களாக வாழும் பிரான்சிஸ், ‘அடக்கத்தில் பேதுரு ஆலயம்என்ற ஆடம்பரத்தைத் தவிர்க்க விரும்புவதில் ஆச்சர்யம் இல்லை. இறுதிப்பயண வழிபாடுகளும் மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று பிரான்சிஸ் கேட்டுள்ளார்.

திருத்தந்தையர்களின் அடக்க நிகழ்வுகள் மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளது. வழிபாடுகளின் ஒருங்கிணைப்பாளரிடம் அதை எளிமைப்படுத்தச் சொல்லியிருக்கிறேன். அது போல, என் அடக்கத்தில் சைப்ரஸ் மரத்தால் ஆன சவப்பெட்டி மட்டுமே பயன்படுத்தப்படும். அதை மற்றோர் உலோகப் பெட்டியில் வைப்பது, பிறகு அது இரண்டையும் மூன்றாவதாக ஒரு  ‘Oakபெட்டியில் வைப்பது போன்ற பாரம்பரிய விசயங்கள் இருக்காது. ஒரே பெட்டி! சைப்ரஸ் போதும்.”

எல்லாக் கிறித்தவர்களையும் போல எளிமையாக, அதே நேரத்தில் மாண்போடு புதைக்கப்படவே நான் விரும்புகிறேன். உரோமின் ஆயர், ஆதாரமாக ஓர் அருள்பணியாளர், ஒரு சீடர், அவ்வளவுதான். நான் உலகின்தாதாகிடையாது.”

இந்த நல்ல மனிதர், எளிய திரு அவைத் தலைவர், விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்றும், அவர் தொடங்கி வைத்து நடைபெற்று வரும் சீர்திருத்தத் திட்டங்கள் முழுமைபெற வேண்டும் என்றும்  பெரியநாயகியிடம் வேண்டுகிறேன்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
சிறப்புக்கட்டுரை
AI ஊடுருவல் (உலகம் உன் கையில்! – 03)

தொழில்நுட்பமயமான புதிய சகாப்தத்தை (Era) விரைவில் காணவிருக்கிறோம். இவ்வாறு, உலகில்ஏஐ-யின் மூலம் அடையப் போகும் பெரும் மாற்றத்தில் எவ்வாறு நம்மை இணைத்துக்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வி இன்று நம் முன் நிற்கிறது.

ஏஐ-யின் மின்னல் வேகம் ஒரு கட்டத்தில், மனித அறிவாற்றலுக்குச் சமமாக உருவெடுக்க எவ்வளவு காலமெடுக்கும் என்ற கேள்வி பலரின் மனத்தில் எழுந்தது; சில ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதற்குச் சிலர் அடுத்த சில பத்து ஆண்டுகள் ஆகலாம் என்றனர்; ஒருசிலர் 100 ஆண்டுகள்; சிலர் இது இயலாத ஒன்று என வேறுபட்ட கருத்துகளைக் கூறினார்கள். இந்நிலையில், 2060/2070-இல்  முடியலாமென்பது பரவலாகக் கருதப்பட்டாலும், சிலர் அதற்கு முன்பே நிகழலாம் என்கின்றனர்.

1903-இல் மனிதன் ஆகாயத்தில் பறக்க முடியும் என்பதை முதலில் பறந்த விமானிகளான வில்பர் ரைட், ஆர்வில் ரைட் செய்து காட்டினர். ஆனால், 1901-இல் வில்பர் தன் சகோதரரான ஆர்வில்லிடம் இச்சாதனை நடைமுறைக்கு வர இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாமென்று கூறினாலும், அடுத்த இரு ஆண்டுகளில் அது நிகழ்ந்துவிட்டது.

வரலாற்றில் இவ்வாறு பல வெளியில் வராத நிகழ்வுகள் இருப்பதால், புதுமைப் படைப்புகளுக்குக் காலத்தைக் கணிக்க முடியாமலிருக்கிறோம். இன்று மூலைமுடுக்குகளெல்லாம் தொழில்துறை, வணிகம், மருத்துவம் என்று எல்லாவற்றிலேயும் ஊடுருவிக் கொண்டிருக்கும்ஏஐ, 70 ஆண்டுகளுக்கு முன் நம்மில் பலரிடையே ஒரு பகல் கனவாக இருந்தது.

50 ஆண்டுகளுக்கு முன்கால்குலேட்டர்இருந்தது. மனிதரைவிட துரிதமாகவும் துல்லியமாகவும் பிழையின்றி முடிவுகளைக் கொடுக்கும் ஆற்றல் படைத்து, பெரும்பாலானோரின் அலுவலக மேஜைகளை அலங்கரித்தும், பலரின் கணிதம் சார்ந்த வேலைகளுக்கு நண்பனாகவும் இருந்ததை அறிவோம். இதன் வேகம், தனித்தன்மை, மாறிடும் அமைப்பு பொருத்து அதன் செயல்பாட்டினை மதிப்பிடும்போது கால்குலேட்டரை அறிவாற்றல் (Intelligent) என்ற பெரிய தொகுப்பின் வரிசையில் இடம்பெறுவதாகவும் கருதப்பட்டது.

கைப்பேசியின் ஆரம்ப காலத்தில், சிலரின் கழுத்தைச் சுற்றி மாலையாக அணிவதைப் பெருமையாக உணர்ந்தனர் என்பதைப் போன்று, அதற்குமுன் கால்குலேட்டர் சிலரிடமே இருந்தது. ஆனால், இதனை இன்று நாம் காணும் அறிவாற்றல் திறவு வாசலானஏஐ-க்குச் சமமாகக் கருத முடியுமா? ஏனென்றால், ‘ஏஐஒவ்வொரு நாளும் புதிய தோற்றத்தையும் ஆற்றலையும் பெற்று உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் கல்விக்காக மட்டும் போதுமானது என்று பயின்ற நாள்கள் சென்று, இத்தொழில்நுட்பம் 21-ஆம் நூற்றாண்டில், அன்றாட வாழ்க்கையின் பயன்பாட்டிற்கும் தேவை என்று உணரப்படுகிறது.

இன்றுஏஐதொழில்நுட்பத்தினால் ஒருவருடைய முகத்தையோ அல்லது பொருளையோ அறிந்துகொள்ள முடியும். ஒருவரின் பேச்சை எழுத்து வடிவில் பெற்றிடவும், உடனடியாக மொழிபெயர்ப்பு செய்திடும்படியான தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கிறோம்.

ஒருசில தூண்டுதல் (Prompts) மூலம்ஏஐமாடல்களிடமிருந்து வரைபடங்களை (Images) மற்றும் தெளிவான, விளக்கமான தகவல் தொகுப்புகளை உருவாக்க முடியும். ‘ஏஐவழிமுறைகள் சிறிதும் மாறாத குரல்களை உருவாக்கவும், வியத்தகு இசையை அமைத்திடவும் திறன் பெற்றவைகளாக உள்ள நாள்களில் வாழ்கிறோம்.

இன்று பலர் ஸ்மார்ட் ஃபோன் மூலம் தொட்டுப் பேசுவதைக் காண்கிறோம். ‘ஏஐ-யின் கிளைப் பிரிவில் உருவானதே நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணினிப் பார்வை (Computer Vision). ஆன்லைன் மூலம் கல்வி என்பதுஏஐ-யின் மற்றொரு பிரிவு.

பொழுதுபோக்குக்கென்று தொடங்கி, ஓட்டுநர் இல்லாத கார் ரோபோட்ஸ் (Robots), ட்ரோன்ஸ் (Drones) என்று, 2030 போல்ஏஐபோக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, என்று பல துறைகளில் அன்றாடப் பயன்பாட்டிலிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ-யின் ஊடுருவல் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சமுதாயம் இதன்மூலம் பயன்பெறத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.

பொருளாதாரத்தின் வலிமை முன்பு, ஒரு நாட்டின் நிலம், வேளாண்மை அதனை நிர்வகிக்கும் திறன் இருந்தது; இது உலகளவில் பரந்து விரிந்திருந்துமிருந்தது. காலத்திற்கேற்ப பொருள்களின் முக்கியத்துவமும் மாறிக்கொண்டிருப்பதற்குத் தரவு (Data) ஓர் எடுத்துக்காட்டு. இன்று நாம் பயன்படுத்தும் தரவுகள் வலிமையும் வேகமும் கொண்டதாய் உள்ளன. தனிமனிதனின் அனைத்துத் தரவுகளையும் இயந்திரம் வைத்திருப்பது ஒருவரின் வாழ்வின் முறையைக் கணிக்க, வசப்படுத்த உதவிடும் என்பதோடு இல்லாமல், ‘ஏஐஎது சரி? எது இல்லை? (Redefine what is right and wrong) என்பதைத் தீர்மானிக்கும் இடத்தையும் பெற்று விடுகிறது.

ஏஐஎன்பது இயந்திரங்களை அறிவாற்றலடையச் (Intelligent) செய்து, அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். ‘ஏஐமனிதர்களைவிட மேன்மையாக, குறைந்த செலவில் தன்னிச்சையாகச் செயலாற்றும் இயந்திர உருவாக்கமும் கூட. (Unaided machines being able to accomplish every task better and more cheaply than human).

ஏஐஇயந்திரங்களான ரோபோக்கள், ட்ரோன்கள் இயங்குவது மட்டுமன்றி, ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றும் (Collective Intelligence) திறன் பெற்றிருப்பதை அவைகளின் சில செயல்களான ஜோடிகளாகப் பறப்பதில் (Flying formation) காணமுடிகிறது. எதிர்காலத்தில் இன்னும் பலஏஐஇயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வது நடைமுறையில் வருவது தொலைவில் இல்லை.

இன்று கணினி உலகில் பரவலாகப் பேசப்படும் அல்கோரித தொழில்நுட்பத்திற்கு அதிக இடம் (Space) ஒன்றும் தேவைப்படாது. ஒரு நாட்டிலிருந்தே பொறியாளர்கள்கோட் (Code), அல்கோரித சாவியை (Keys) வைத்து அனைத்துலக நிலைமையைக் கண்காணிக்கலாம். இதனால் ஏழ்மை நாடுகள் ஒதுக்கிவிடப்பட்ட நிலையிலும், வலிமையான நாடுகள் மேலும் வலிமை பெறவும் வழிவகுக்கும். இதே நிலைதான் உலகளவில் தொழிலாளர்களுக்கும் ஏற்படும். இந்த டிஜிட்டல் வளர்ச்சி எங்கு கொண்டு சேர்க்கும் என்று திகைக்கும் நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயந்திரம் தரவுகளைத் தன் வசம் வைத்து, உலகளவில் அனைவரின் சொந்தத் தகவல்களைப் பெற்றிருப்பது எந்த நாட்டில் யார் வாழ்வது? ஒரு வேளை நாம் டிஜிட்டல் நாட்டில் வாழ்கிறோமா? என்பதாகக்கூட இருக்கும்.

இந்த ஓட்டத்தில் சேர்ந்துகொள்ள இயலாதோர் சமுதாயத்தில் தானாகவே ஒதுங்கி நிற்கும் சூழலும் ஏற்படலாம்.

news
சிறப்புக்கட்டுரை
சைபர் நரிகள் (வலையும் வாழ்வும் – 07)

அனிதாவிற்குக் காலை படுக்கையிலிருந்து எழும் போதேஇந்த நாள் நன்றாக இருக்கும்என்று தோன்றவில்லை. அவளின் உள் மனம் ஏனோ எச்சரிக்கை மணியை ஒலித்தது. அவசரம் அவசரமாகக் காலை வீட்டு வேலை, அசௌகரியமான பேருந்துப் பயணம், கல்லூரி மாணவர்களின் அலப்பறைகள் இவையெல்லாம் மிடில் கிளாஸ் அனிதாவிற்குப் புதிதல்ல. தனியார் கல்லூரிப் பேராசிரியைப் பணி என்றபோதும், அதிலே அனிதாவிற்கு மகிழ்ச்சியில்லை. தந்தையை இழந்த பிறகு குடும்பம் வறுமையில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக அவ்வேலையினைத் தொடர வேண்டியிருந்தது. அதிலும் குறிப்பாக, தேர்வில் சில சீனியர் மாணவர்கள்பிட்அடித்ததைக் கண்டுபிடித்துரிப்போர்ட்செய்ததிலிருந்து அவர்களின் பகையைச் சம்பாதிக்க நேர்ந்தது. அவர்களின் குறுகுறு பார்வை, இரட்டை அர்த்த கமெண்ட்ஸ்கள், நரிகளைப் போன்று அவளுக்குத் தெரியாமலே பேருந்தில் பின்தொடர்வது, வீட்டிற்கு முன்பாகக் கூட ஆக்ஸ்சிலேட்டரை முறுக்கிக்கொண்டு பைக்கில் வலம் வருவது... இவையெல்லாம் அப்பாவை இழந்திருந்த அனிதாவிற்குத் தர்மசங்கடத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன.

வீட்டிலிருந்து அனிதா இளமஞ்சள் நிற சேலை உடுத்தி வெளியேறும்போதே சூரியன் தன் காலைக் கதிர்களால் அச்சேலையைப் பட்டாடையாக்கியிருந்தது. வெண்டைக்காயை நிரப்பியிருக்கும் அதன் விதைகளைப்போல பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் என்று பேருந்தே நிரம்பியிருந்தது அன்று. கூட்டத்தில் யாரோ தன்னைத் தவறாகச் சீண்டியது அனிதாவிற்குத் தெரிந்தது. கூட்டத்தில் யாரைக் குற்றப்படுத்துவது? வழக்கம்போல பல்வேறு சீண்டல்களுக்கு ஆளாகும் பல பெண்களைப்போல மௌனம் என்னும் முகம் அணிந்திருந்தாள் அனிதா.

வியர்த்து விறுவிறுக்க நிறுத்தத்தில் வந்து நின்றது பேருந்து. அனிதா பேருந்தை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

ஏம்மா!” அனிதா யாரோ கூப்பிட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். ஒரு நடுத்தர வயது பெண், “எனக்கு ஊரு கோவில்பட்டியாக்கும். என் வீட்டுக்காரர் இங்கதான் வேலை செய்றார். பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கால் பண்ணச் சொன்னார். ஆனா, யாரோ கூட்ட நெரிசலில் என் போனைத் திருடிட்டாங்க. உன் போன் கிடைக்குமா? ஒரு கால் பேசிக்கிட்டு குடுத்திடுறேன்.”

அனிதாவிற்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “இதோ, பேசிக்கிட்டு கொடுங்கம்மாஎன்று பாசத்தோடு கொடுத்தாள். அந்த நடுத்தர வயது பெண்மணி யாருடனோ பேசி விட்டுப் போனைத் திருப்பி அனிதாவிடமே தந்தாள். “ரொம்ப தேங்க்ஸ்மா...” என்று சொல்லி விட்டுச் சென்றாள். யாருக்கோ உதவி செய்திருக்கிறோம் என்ற மனமகிழ்ச்சியில் கல்லூரி நோக்கி உற்சாகமாக நடந்தாள் அனிதா.

அன்று கல்லூரி நுழைவாயில் வழியாகச் செல்வது என்பது ஏதோ பிளந்து திறந்திருக்கும் ஹிப்போ பொட்டாமசின் வாய்க்குள் நுழைவதுபோல் இருந்தது. வழியில் மரத்தடியில் அமர்ந்திருந்த சில சீனியர் மாணவர்கள் அனிதாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். ஒருவரோடு ஒருவரின் காதில் ஏதோ கிசு கிசுத்துக்கொண்டனர். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அனிதா தொடர்ந்து நடந்தாள்.

பேராசிரியர்கள் அறையில் வந்து தனது இருக்கையில் அமர்ந்ததும் அனிதாவிற்குத் தெரியாத நபரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.

நான் நீங்க ஒரு பெண்ணோடு பஸ்சில் வந்தீங்கல, அவங்க கணவர் பேசுறேன்.”

சொல்லுங்க சார்என்றாள் அனிதா.

இந்த நம்பரிலிருந்துதான் அவள் எனக்குப் போன் பண்ணினா. ஒரு பெண்பிள்ளை கிட்ட போன் வாங்கிப் பேசுறேன்னா. ஆனா, நான் வந்து பஸ் ஸ்டாண்டுல பாக்குறேன், அவளைக் காணல. சுத்திச் சுத்தி அலைஞ்சு தேடி பாத்தாச்சு. எங்கயும் அவளைக் காணல. எனக்கு உன்மேலதான் சந்தேகமா இருக்கு. என் பொண்டாட்டிய எங்க கடத்தி வச்சிருக்க?”

அனிதாவிற்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. கல்லூரி மாணவர்கள் வராந்தாவில் இங்கும் அங்குமாக நடக்கும்போது எழும் காலடிச் சத்தம் கூட மனத்தைத் தொடர்ந்து உலக்கையால் இடித்ததுபோல் இருந்தது அனிதாவிற்கு.

சார்! என் போனை வாங்கித்தான் பேசினாங்க. ஆனா, அவங்க எங்க போனாங்கன்னு எனக்குத் தெரியலை.” அனிதாவின் பதில் அந்தக் கரகர குரல் மனிதருக்கு நம்பக்கூடியதாய் இல்லை.

இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கிறீங்க? என் பொண்டாட்டி வீடு வரலனா உன்னைத் தேடி வந்து சாகடிக்கிறேன் பாரு.”

அனிதா இதுபோல் கெட்ட வார்த்தை அர்ச்சனைகளைக் கேட்டதில்லை. உடனேயே அந்த நம்பரைபிளாக்செய்தாள். உதவி செய்யப் போய் இப்படி ஆகிவிட்டதே என்று யோசிக்கும்போதே மற்றொரு போன் அழைப்பு வந்தது. இப்போது அது வேறு நம்பர். “வீட்டுக்கு வாரேன் என்று சொன்ன என் பொண்டாட்டியைக் காணல. இந்த நம்பர்ல இருந்துதான் அவ பேசினா. பஸ் ஸ்டாண்டுல இருக்கேன்னு சொன்னா? என் பொண்டாட்டி மட்டும் வீடு வரல உனக்குச் சங்குதான்.”

இப்போது பேசிய குரல்கீச்சென்றிருந்தது. அனிதா தான் ஒரு மோசமான கும்பலிடம் மாட்டிக் கொண்டதைப் புரிந்துகொண்டாள். அவளுடைய கண்கள், கதவைக் குடைந்து வெளியே பார்த்தன. தூரத்தில் மரத்தடியில் சில சீனியர் மாணவர்கள் அவள் அறையை உற்றுநோக்கிக் கொண்டே நின்றனர். அனிதாவின் கண்களுக்கு அவர்கள் நரிக்கூட்டமாகத் தெரிந்தனர்.

ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை ஓர் ஆணோ அல்லது ஒரு கும்பலோ நிழல்போல பின்தொடர்வது, அவரைக் குற்றப்படுத்தி எதற்கேனும் கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது மற்றும் தொடர் தொல்லை கொடுப்பதைஸ்டாக்கிங்என்கிறோம். இத்தகைய செயல் இணையம், சமூக ஊடகம் அல்லது திறன் பேசி (ஸ்மார்ட் போன்) வழியாக நடந்தால் அதனைசைபர் ஸ்டாக்கிங்என்கிறோம். காதல் வயப்பட்டவன், பழி வாங்கும் உணர்வுள்ளவன், பொறாமைக்காரன், வக்கிரப்புத்திக்காரன், மனநோயாளன் ஆகியோர் வசதியாகச் சைபர் தளங்களில் தங்களை மறைத்துக் கொண்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தொடர் துன்புறுத்துதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

தேசியக் குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுப்புடி, இந்தியாவில் 2020 முதல் 2023 வரை 2,051 சைபர் ஸ்டாக்கிங் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவுகள் 66E, 67 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354D -இன்படி சைபர் ஸ்டாக்கிங் குற்றமாகக் கருதப்படுகின்றது.

பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாக மட்டும் சைபர் ஸ்டாக்கிங்கை நாம் இன்று பார்த்துவிடக் கூடாது. ஆண்களும் இளம் மாணவர்களும் கூட பல்வேறு விதங்களில் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆபாசமாகப் பேசுவது, நிர்வாணமாகச் சித்தரித்து போட்டோ அல்லது வீடியோ மார்ஃபிங் செய்து அச்சுறுத்துவது, தெரிந்தவர்களாக இருப்பின், ஏற்கெனவே நெருக்கமாய் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ அல்லது வீடியோக்களைக் காட்டிபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டானு போட்டு உன் பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாருக்கும் சென்ட் பண்ணுறேன் பாருஎன்று மிரட்டிப் பணம் பறிப்பது அல்லது தேவைக்கு இணங்க வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்விலோ அல்லது நம் நண்பர்களின் வாழ்விலோ தினந்தினம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய அமில வீச்சும், பாலியல் அத்துமீறல்களும் இன்று சமூக ஊடகங்களில் அரங்கேறுகின்றன. களமும் கருவியும் வேறென்றாலும், காரணம் ஒன்றாகவும் அது ஏற்படுத்தும் வலி அதிகமாகவும் இருக்கின்றது.

நரிகள் இருக்கும்வரை அவற்றின் ஊளைச் சத்தமும் இருக்கத்தான் செய்யும் என்னும் மனநிலை கொண்டிராமல் பெண்களும் குழந்தைகளும் சைபர் ஸ்டாக்கிங்கினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களும், அதனை மனத்திலேயே அடைகாத்திடாமல் பெற்றோரிடம், நண்பர்களிடம், ஆசிரியர்களிடம் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம், தான் பாதிக்கப்பட்டிருப்பதைக் கூற வேண்டும். தேவை ஏற்படின், சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறையிடுதல் அவசியம்.

அனிதாக்களும் அமுதாக்களும் மௌனித்திருக்கும் வரை நரிகளின் எண்ணிக்கையும் அதன் ஊளைச்சத்தமும் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.

news
சிறப்புக்கட்டுரை
கேள்விக்குறியாகும் தீர்ப்புகள்!

இந்திய சனநாயகத்தில் சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கை நீதி மன்றங்கள். அங்கு நீதிபதிகள்,  எவ்வளவு மழை பெய்தாலும், குளத்தில் எவ்வளவு நீர் இருந்தாலும், அதில் மிதக்கும் தாமரையின் இலையில் விழும் தண்ணீர்போல், எதிலும் ஒட்டாமல்  இருக்க வேண்டும். ஒட்டுறவு இல்லாது வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா போன்றோரை அடையாளம் கண்டதே பேரழகு! நீதியரசர் குன்ஹா அவர்கள் இறை வார்த்தையின்படி உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் வாழ்ந்து காட்டியவர்.

இன்று இக்கட்டுரையைத் தட்டச்சு செய்யும்போது கேட்கிற தொலைக்காட்சி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதுதில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹோலி பண்டிகை கொண்டாட வெளியூர் சென்று விடுகிறார். எதிர்பாராத விதமாக அவரது வீடு தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாகப் பணம் எரிகிறது. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அக்காட்சி வீடியோவில், தீயணைப்பு வீரர்காந்தி எரிகிறார்என்கிறார். தீயணைப்புத்  துறையினர் வழங்கிய பட்டியலில் எரியாத நிலையில் 26 கோடி ரூபாய் இருந்ததாக அறிக்கை தரப்படுகிறது. அது மறுநாள் தீயணைப்புத் துறை தலைவரால் மறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நீதிபதி விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாற அவரது வயது மூப்பு 9 என்பதிலிருந்து 2-ஆக மாற்றவே, அவரது பணிமாற்றம் புதுதில்லிக்கு நடந்தது எனவும் கூறப்படுகிறது. அவருக்கான பெரிய தண்டனைகள் எதுவும் இதுவரை இல்லை.

இதே அலகாபாத் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பெங்களூரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் என வர்ணிக்கிறார். உச்ச நீதிமன்றம் அவரைக் குட்டுகிறது. பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறந்த நீதிமன்றக் கூடத்தில் சொந்தக் கருத்து என்ற பெயரில், வழக்கிற்குச் சம்பந்தப்படாத செய்திகளைப் பேசுவதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. பல வழக்குகளில், பட்டியலிடப்படாமல் அன்றே வழக்கை எடுத்துக்கொள்ளுதல், ‘சுமோட்டாஎன்ற பெயரில் தானே வலிந்து வழக்குகளை எடுப்பது, ‘பிரேயர்எனப்படும் கோரிக்கை இல்லாமல் தீர்ப்பு வழங்குவது, திரைப்படங்கள், திரைப்பாடல்களை மேற்கோள்காட்டுவது, புராண இதிகாசங்களைத் துணைக்கு அழைப்பது என நீதி பரிபாலன முறைக்கு உட்படாத ஒவ்வாத செயல்களைச் செய்கிறார்கள்.

இதே அலகாபாத் நீதிமன்றம் சமீப நாள்களில் வழங்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பெண்களின் ஓர் உடல் பகுதி தீண்டல் குற்றமல்ல எனத்¹ தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து வழக்கைத் தானாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கிய நீதிபதியைதிறன் குறைபாடு உள்ளவர், மனிதாபிமானம் அற்றவர்எனக் கூறிவிட்டு, ‘இத்தீர்ப்பு அதிர்ச்சி தந்ததுஎன்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. ‘மதமாற்றம்எனச் சோடிக்கப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி ஒருவரிடம் போகிறது. அந்த வழக்கில் வாதிடும் வழக்குரைஞரை மையப்படுத்தி, அந்த வழக்கு நடைபெற்ற ஊர், பெயர் பற்றி நீதிமன்றத்தில்  நீதிபதி ஆராய்ச்சி  நடத்துகிறார். அத்துடன் கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம் உள்பட்ட, வலதுசாரிக் கருத்துகளைத் தன் தீர்ப்பில் பதிவிடுகிறார். இருப்பினும், இவ்வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை எந்த மதமாற்றமும் நடக்கவில்லை எனத் தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது,

மேலும், எச். இராஜாவின் தந்தை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், காஞ்சி விஜேயந்திரர் தமிழ்த்தாய் வணக்கத்திற்கு எழுந்து நிற்காததற்கு விலாவாரியாக வியாக்கியானம் செய்து, தியானத்தில் இருப்பது தவறல்ல என்று நியாயப்படுத்துவது, முட்டுக்கொடுப்பது நீதிமன்றப் பாரம்பரியம் மீறியதாகும். விஜயேந்திரரும் சட்டத்திற்கு உட்பட்டவர்தான் எனத் தமிழ்நாடு அரசு யாராக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் எனச் சட்டம் போட்டுவிட்டது. செல்வி ஜெயலலிதா ஜெயேந்திரர் வழக்கில் காட்டிய துணிவுதான் அவரைஇரும்புப் பெண்மணிஎனக் கூறவைத்தது என்பதையும் நாம் வலுவாகச் சொல்ல வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உள்ளர்த்தம் கற்பிக்கக்கூடாது, தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் தேடக் கூடாது, தனிமனித விமர்சனங்கள் கூடாது, அது ஏற்றுக்கொள்ளக்கூடிய மரபுதான். ஒரே நீதிபதி அளித்த தொடர் தீர்ப்புகள் ஒரு பக்கம் சார்ந்தவை என்ற பின் குரல்கள் எழுப்பக்கூடாதா? மூட நம்பிக்கை குறித்து கவலைகொள்ளாமல், சட்ட விதிகளைப் பாராமல், பழைய உச்ச, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மதியாமல், மதநம்பிக்கை என்ற பெயரில் எல்லாவற்றிலும் தனி நீதிபதியே  முடிவெடுத்தால், மக்கள் எங்கே போவது?

ஒரு நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். அவர்கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா? மசூதிகள் மற்றும் தேவாலயங்கள்மீது அரசு அதே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டாமா? அவ்வாறு வாதிடுவதில் நியாயம் இல்லையா?” என்று கேட்கிறார். சில சமூக, மதநல்லிணக்க விரோதிகள், வழக்கு நீதிமன்றம் போகட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற ஏகாந்த மனநிலைக்கு வந்துவிட்டனர். இந்த மனநிலை சட்டத்தின் ஆட்சியின் முன் சாபம் அல்லவோ? ஒரு சமயச் சார்பற்ற நாட்டில், இவ்வாறான நீதி பரிபாலனையை நாம் எப்படி எதிர்கொள்ள  முடியும்?

ஓய்வுபெறும் நாளில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் கூறுகிறார், “என் வாழ்வின் கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறது.” நான் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகளை எவ்வாறு விமர்சிப்பது? மேலும், உச்ச நீதிமன்ற பார்கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல், “நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன், தாங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றும், அங்கேயே திரும்பச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறார்கள்என்ற உண்மையைப் பொதுவெளியில் போட்டு உடைக்கிறார்.

விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சட்டப்பிரிவு 1)  காசி, மதுராவில் பள்ளி வாசல்கள் இருக்கும் இடத்தில் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகள்,  2) வக்ஃப் சட்டத் திருத்தம், 3) மதமாற்றத் தடைச்சட்டம்  என மூன்று  முக்கிய மதவாத பிரச்சினைகளை விவாதிக்கிறது. மத்திய சட்ட அமைச்சர் இதில் கலந்துகொள்கிறார். இக்கூட்டத்தில் காவி சால்வை அணிந்து, 30 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். இதைத்தான் தந்தை பெரியார் அன்றே கூறினார்... “நாம் போராடி சட்டங்கள் கொண்டு வரும் நாளில், ஒரு சாரார் நீதிமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். ஆம், நீதித்துறை சார்ந்த ஒரு புள்ளி விவரம் அதை உறுதிப்படுத்துகிறது.

உயர் நீதிமன்றங்களில் 650 நீதிபதிகள். அதில் உயர் சாதியினர் 75.69% 492 பேர், .பி.சி. 11.7% 76 பேர், எஸ்.சி. பிரிவினர் 3.5423 பேர்எஸ்.டி. பிரிவினர் 1.54% 10 பேர்இதைத்தான் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் காட்டமாகப் பேசுகிறார்: “பார்ப்பனியத்தின் அதிகார மையங்களைத் தகர்க்காமல், சமூக நீதியைப் பெற முடியாது.” சமூகத்தின் வெறும் 3% மக்கள் எப்படி அனைத்து அரசு உயர் பணிகளிலும் பெரும்பான்மை பெற்றார்கள்? என்று கேட்கிறார்.

இங்கேதான் நம் சமூக நீதியின் குரல் ஒலிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 124/217 மற்றும் 224-இன்படி, நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. இச்சட்டம் திருத்தப்பட்டு, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை முன்னெடுக்கப்பட  வேண்டும். அக்காலத்தே ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள் முடிவுக்கு வருவார்கள். வருங்காலத்தில் தேசத்தில் சமூக நீதிக்கு உள்பட்டே  நீதி பரிபாலனம்  வலுப்பெறும். அதுவே சிறந்த சனநாயகம்.

news
சிறப்புக்கட்டுரை
உணவு அரசியல் – கார்ப்பரேட்டின் கனவு! (அரசியல் இல்லாத வாழ்வியலா? – 03)

உணவு முறை என்பது கடந்த 10,000 ஆண்டுகளை விடவும், கடைசி 50 ஆண்டுகளில் பெரிதும் மாறிப்போயிருக்கிறது என்ற கசப்பான உண்மைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, ஓர் உணவு அரசியல். இந்த அரசியலைக் கையிலெடுத்து, தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது  கார்ப்பரேட் வேளாண்மைஎன்ற கருத்தை  வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவில் வெளியான ஓர் ஆவணப்படம்.

விவசாயிகளை அடிமையாக்கி, சந்தையில் மக்களின் உடல் நலனுக்குக் கேடுதரும் உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் தேவையைச் செயற்கையாக உருவாக்கி, ஓர் எளிய மனிதனின் வாழ்வியல் தேவையான ஒரு கைச்சோற்றைத் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறது கார்ப்பரேட் புத்தி.

பிறகு ஏன் விவசாயிகள் இவர்களுக்காகத் தங்கள் நிலத்தில் விளைவிக்கிறார்கள்? அவர்களுக்குப் புத்தி இல்லையா? என்று நாம் நினைக்கலாம். இந்தக் கேள்வியை விவசாயியிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணினால், அவர்கள் பதில் என்ன தெரியுமா? “இதைத்தான் நாங்கள் விளைவித்துத் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம்; இயற்கை விதைகள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பன்னாட்டு  நிறுவனங்களின் கைகளுக்குள் போய்விட்டன; இவர்களின் பிடியில் மொத்த அரசும் சிக்கியிருக்கிறதுஎன்கிறார்கள். இதைக் கூறியவர் ஓர் அயல்நாட்டு விவசாயி. அவர்களுக்கே  நிலைமை இப்படி என்றால், ஓர் எளிய இந்தியக் கிராமத்து விவசாயியின் நிலைமையை என்னவென்பது?

உணவு ஓர் அரசியல் ஆகிப்போனது பற்றிய எந்த உண்மையும் தெரியாமல் நாமும் விழிப்பற்றுத் தூங்கிக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தாம் குடிக்கின்ற கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள வெங்காயம் இருந்தால் போதும் என்ற மனநிலையோடு கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், உணவரசியல் செய்யும் பன்னாட்டுச் சந்தைச் சூதாடிகள், எளிய மனிதர்களின் உணவு உரிமையைப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அளவில் சந்தைச் சூதாடிகளின் உணவரசியல் ஒரு பக்கம் என்றால், உள்ளூர் அளவில் மாட்டுக்கறியை வைத்து அரசியல்  செய்கிறது மற்றொரு கூட்டம். இரண்டுக்கும் இடையில் சிக்கித் தனிமனிதனின் உணவு உரிமை சந்தி சிரித்து நிற்கிறது.

உணவு என்பது அவரவர் விருப்பம். என்ன சாப்பிடுவது? எதைச் சாப்பிடுவது? சாப்பிடாமல் இருப்பது என்பது எனது விருப்பம்; அந்த விருப்பத்தை, உரிமையைத் தடுத்து நிறுத்தி, அதில் ஒரு வக்கிரத் திருப்தி அடைவதற்கு, அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள்  அதிகாரம் படைத்தவர்கள் சிலர்.

வட மாநிலங்களில் உள்ள பல நகரங்களில் அப்பாவி மனிதர்கள் உண்ணும் உணவைக் குறிவைத்து நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியாவின் உணவரசியல். மறக்க இயலாத அளவுக்குக் காணொளியில் சாட்சிகள் குவிந்து கிடக்கின்றன. நல்லவேளை, தமிழ்நாட்டில் பிறந்துவிட்ட காரணத்தால், நாம் தப்பிப் பிழைத்து விட்டோம் என்று இதயம் கூறுகிறது. இப்படிப்பட்ட அநீதிகள் இந்த மண்ணில் நிகழ்ந்துவிடாத அளவிற்கு நமது கலாச்சாரப் பண்புகள் நம்மை வளர்த்தெடுத்திருக்கின்றன.

ஆனாலும், தமிழ்நாட்டின் மீது கார்ப்பரேட்டுகளின் கவனம் இன்றும் அதிகரித்திருக்கிறது. ஏனென்றால், நாம் உணவை மருந்தாக உண்டவர்கள். மருந்தை விஷமாக்கினால்தானே காசு பார்க்க முடியும் என்பது அவர்களின் கணக்கு.

உணவும் உடலும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இயங்கும் வாழ்வியலைக் கொண்ட நமது நாட்டில் இன்று உணவைத் தனியாகவும், உடல்நலத்தைத் தனியாகவும் பிரித்து வணிகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பல பன்னாட்டு நிறுவனங்கள்.

இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்காகச் சொந்த நாட்டின் வளத்தைச் சூறையாடி, உழைக்கும் மக்களின் உணவை அரசியலாக்கி, உழைப்பைச் சுரண்டி, அவர்களின் நலனைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைத்து, மேட்டுக்குடி நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கு உலகெங்கிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

என்றைக்கு உலகமயமாக்கல் என்ற மாயக்கரம், நம் நாட்டு மக்களுக்குப் பீட்சா, பர்கர், KFC, டோமி னோஸ் என்ற மோகத்தைக் காட்டி வீழ்த்தியதோ, மேட்டுக்குடியினரின் சமையலறைக்குள் வெளிநாட்டு உணவு வகைகளை உலவவிட்டு பரவலாக்கியதோ, அன்றே உணவுக்கான அரசியல் இங்கே வந்து அமர்ந்து விட்டது. ‘உணவே மருந்துஎன்பது, ‘உணவே விஷம்என்றாகிவிட்டது. விளைவு, இதற்கு விலையாக வளரும் நம் இளைய சமுதாயம் வலுவற்ற, நோயுற்ற புதிய தலைமுறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை சர்க்கரை நோய், இதயநோய் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிருக்கும் இந்த உணவுதான் காரணம் என்றால் நம்ப மறுக்கிறது அவர்களின் மூளை. நம்ப விடாமல் செய்கிறது அவர்களின் நாக்கு. அறிவியலை உணவியலுக்குள் புகுத்திவைத்து, பணமுதலைகளும் சுயநலச் சக்திகளும் ஆடும் இந்த அரசியல் ஆட்டம், நம் கிராமங்கள் வரை ஊடுருவி இருக்கிறது

இன்று பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், பன்னாட்டுக் குளிர்பானங்கள், இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள், பயிர்களை நாசமாக்கும் பூச்சிக்கொல்லிகள் என்று அனைத்தும் வரிசை கட்டி நின்று, நம் அன்றாட வாழ்வியலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உணவரசியல் சங்கிலித் தொடர் உலகைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டிருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் அகப்பட்டுள்ள நம் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் மீண்டும் நம் உலகத்தைப் பஞ்சத்தை நோக்கியும் பட்டினிச் சாவை நோக்கியும் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். ஆனால், நீண்ட கால இலாபத்தை, ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியைக் கைப்பற்றுவதன் வழியாக அறுவடை செய்துகொள்ளலாம் என்ற கனவைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ABCD நிறுவனங்கள்.

யார் இந்த ABCD   நிறுவனங்கள்?’ என்கிறீர் களா? உலக அளவில் எண்ணெய் வித்துகள், உணவு தானிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், Archer Burge Cargill  Daniels Midland Dreyfus ஆகியவைதான் இந்த நிறுவனங்கள்.

ஒட்டுமொத்த விவசாயத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் இலக்கு. நிலத்தின் மீதான சொத்துரிமை, இரு பொருள்கள், அறிவியல் அறிவுரைகள், காப்பீடு, ஒப்பந்த விவசாயம், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து, சில்லறை விற்பனை அனைத்தையும் அதன் உரிமைகளையும் தங்களின் கீழ் இணைத்துக்கொள்ளப் போகிறார்கள்.

என்னென்னவோ கூறுகிறீர்கள், இதற்கும் நான் உண்ணும் உணவிற்கும் என்ன சம்பந்தம்?’ என்று இனி நீங்கள் கடந்து போய்விட முடியாதுஎளிய மனிதனின்  விருப்பமான மாட்டுக்கறி தொடங்கி, உயர்தர நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மட்டுமின்றி, கணிசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கீழ் நடுத்தர வர்க்கம் வரை, தங்களின் சங்கிலித்தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் இந்தப் பன்னாட்டுச் சந்தைச் சூதாடிகள்.

ஒரு தனிநபர் என்கின்ற வகையில், அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களை வாங்கி, அவற்றின் சொந்தக்காரராக இருப்பவர் யார் தெரியுமா? கணினி உலகின் கதாநாயகன் பில்கேட்ஸ்!

நம்ப முடிகிறதா? உணவரசியல் எங்கிருந்து தொடங்கி இருக்கிறது என்பது!

இப்போது ஓரளவுக்கு நீங்கள் யூகிக்க முடிந்தால், நீங்கள்தான் அறிவாளி!

(வாழ்வியல் அரசியல் தொடரும்)