news
சிறப்புக்கட்டுரை
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் ஆற்றிய மறையுரை (கச்சத் தீவும் கடவுளின் அருளும்!)

என் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் ஒவ்வொருவருக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நல்வாழ்த்துகள்!

இலங்கை - இந்திய நாடுகளின் நட்புறவுக் கொண்டாட்டமாக இந்தக் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இறைவனுடைய ஆசிரின் அடையாளமாக இருப்பதோடு, இரண்டு நாட்டு மக்களையும் ஒன்று கூட்டுகிற நபராகப் புனித அந்தோணியார் திகழ்கிறார். இராமேஸ்வரம் பகுதியில் வாழ்ந்த சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் அன்றிலிருந்து விழா கண்டு வருகிறது. தற்போது, தவக்காலத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தத் திருவிழா இங்குச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வேளையில், நம் எல்லா மக்களும் குறிப்பாக, இலங்கை - இந்திய நாட்டு மக்களும் இதன் கடற்கரைப் பகுதிகளிலே வாழ்கிற மீனவர்களும் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும், ‘இல்லாமை இல்லாத நிலை வேண்டும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்என்ற செபத்தோடு புனித அந்தோணியார் நமக்குத் தரும் செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கூடுகை என்பது தவக்காலத்தினுடைய திருப்பயணமாக அமைகிறது. இவ்விழாவை இந்தத் தவக்காலத்தில் கொண்டாடுவது பெரிதும் பொருத்தமானதாக அமைகிறது. எபேசியர் 1:4-இல் புனித பவுல், “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்என்று குறிப்பிடுகிறார். எனவே, கிறித்தவ வாழ்வுக்கான அழைப்பு என்பது புனிதத்திற்கான அழைப்பு; அதனால்தான், தொடக்க மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒவ்வொரு கிறித்தவரும்புனிதர்என்றே அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு கிறித்தவரும் இறந்தவுடன் அவரிடம் மற்ற கிறித்தவர்கள் செபித்தார்கள். ஆனால், கி.பி. 313-ஆண்டிலேயே கான்ஸ்டான்டைன் மன்னர் திரு அவைக்குச் சுதந்திரம் கொடுத்த பிறகு, நமது ஆடம்பர வாழ்வின் காரணமாகப் பல்வேறு பாவங்கள், பலவீனங்கள் கிறித்தவர்களை ஆட்கொண்டன. ஒரு கிறித்தவர் இறந்தார் என்றால், அவருக்காக, அவருடைய பாவ மன்னிப்புக்காகச் செபிக்கிற வழக்கம் திரு அவையிலே ஆரம்பமானது. எனவே, நாம் அனைவரும் புனிதர்களாக வாழ்வதற்கும் இறுதியாக, புனிதத்தின் உச்சமான இறைவனை மறுவுலகில் சென்று தரிசிப்பதற்கும் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நம்முடைய நம்பிக்கை அறிக்கையிலேபுனிதராம் கடவுள் மனிதரைப் புனிதராக்க மனிதரானார்என்று நாம் பாடுகிறோம். மனிதரைப் புனிதராக்கப் புனிதராம் கடவுள் மனிதரானார். எனவே, நாம் புனிதத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இந்தப் புனிதம் என்பது என்ன? இறைவனை நெருங்கி வருவதாகும். இறைவனை நெருங்கி வருவது என்பது கடினமான ஒன்றாக எப்பொழுது இருக்கும்? என்று சொன்னால், பாவங்கள் நம்மைச் சூழ்ந்தபொழுது நாம் இறைவனை நெருங்க இயலாது. இந்தப் பாவம் என்பது இருளுக்குச் சமம். இருளில் இருந்துகொண்டு நாம் ஒளியைக் காண இயலாது. ஒளிக்கு வருகிறோம் என்று சொன்னால், இருள் மறைந்துவிடும். எனவே, நாம் இருளைத் துறப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். இந்த இருள் என்பது என்ன? பாவத்தின் ஆட்சியே! பல்வேறு ஆசைகளே இதற்குக் காரணம் என்கிறது புத்த சமயம். “எல்லாப் பாவங்களுக்கும் ஆசையே காரணம்!” என்று கூறினார் புத்தர் பெருமான். “ஆசை அறுமின், ஆசை அறுமின், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்என்றார் புத்தர். ஆகவே, இந்த ஆசைதான் மனிதனுடைய பாவங்களுக்குக் காரணமாக இருக்கின்றது.

ஆசை மட்டுமல்ல, பேராசைப்படுகின்ற மனிதர்களும் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வுக்குத் தேவையானது மட்டுமல்ல, அதற்கு மேலும் மேலும் வசதிகள் குவிய வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். கவிஞன் பாடுகிறான்மேகங்கள் மோதி வானங்கள் காயம் அடைவதில்லை; வண்டுகள் மோதி மலர்கள் காயமடைவதில்லை. அலைகள் மோதி பாறைகள் காயம் அடைவதில்லை. பனித் துளிகள் மோதி புற்கள் காயம் அடைவதில்லை! அந்தோ பரிதாபம், மனித மனத்தை ஆசைகள் மோதும்போது, மனிதன் காயப்பட்டுப் போகிறான்என்று பாடுகிறான். இதில் ஆசை என்று சொல்லுகிற பொழுது கெட்ட ஆசை இருக்கிறது, நல்ல ஆசையும் இருக்கிறது. நல்ல ஆசை நல்லதுதான்; நான் நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும், என் மனைவிக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் பிரமாணிக்கம் உடையவனாக இருக்க வேண்டும், கடினமாக உழைப்பவனாக இருக்க வேண்டும், எல்லாரிடமும் நல்லவன் என்று பெயர் பெறுபவனாக இருக்க வேண்டும், கடவுளுடைய ஆசைக்கு உகந்தவனாக இருக்க வேண்டும்...… என்பன போன்ற நல்ல ஆசைகள் இருப்பதில் தவறில்லைஆனால், நம்மிடம் தீய ஆசைகள்தான் அதிகமாக நம்மை வந்து சூழ்ந்துகொள்கின்றன. இந்தத் தீய ஆசைகள்தான் ஒரு கெட்ட சக்தியாக நம்மில் இருந்துகொண்டு பாவங்களைச் செய்ய வைக்கின்றன.

இளங்குருவாக நான் இருந்தபொழுது சிறைச்சாலைகளிலே சென்று கைதிகளுக்கு உதவி செய்வதுண்டு. அவர்களுடைய குறைகளைக் கேட்டு அவர்களுக்குகவுன்சிலிங்கொடுப்பதுண்டு. அப்பொழுது ஒரு கைதி சொன்னார், “ஒரே ஒரு நிமிடம் வந்த கோபத்தின் காரணமாக நான் என்னுடைய நண்பனையே கொன்றுவிட்டேன் ஃபாதர். அதனால் இப்பொழுது இருபது வருடங்களாக இந்தச் சிறைச்சாலையில் வாடுகிறேன்என்று. ஒரு நிமிடம் வந்த கோபத்தின் காரணமாக, நம்முடைய தீய குணங்கள், தீய இச்சைகள் தீய சக்திகளாக மாறிவிடுகின்றன. அவைதான் நம்மைப் பாவம் செய்ய வைக்கின்றன. எனவே, இந்தப் பாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இனி நான் இந்தப் பாவத்தைச் செய்ய மாட்டேன்என்று பலமுறை உறுதியெடுக்கின்றோம்; ஆனால், மறுநாளே அதே பாவத்தைச் செய்வதுண்டு. பாவச் சூழல் என்பது இயல்பாக நம்மைத் தொடர்கிறது. எனவேதான், இந்தப் பாவங்களால், தீய நாட்டங்களால் நாம் கவரப்படுகிறோம்.

ஏன் இப்படித் திரும்பத் திரும்ப நாம் பாவம் செய்கிறோம்? என்று சொன்னால், அதற்கு இந்திய மரபில் வருகிற ஒரு கதை உண்டு. ஒரு மனிதரை முனிவர் ஒருவர்நீ பன்றியாகப் போவாய்…” என்று சபித்து விடுகிறார். அவர் வீட்டிற்கு வந்ததும் தன் மகனிடம், “நான் பன்றியாக மாறிவிட்டால்,நீ என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடு. ஏனென்றால், மனிதனாக வாழ்ந்த நான் பன்றியாக வாழ விரும்பவில்லைஎன்று சொன்னார். ஆகவே, மகன் ஒரு பெரிய வாளை எடுத்துக்கொண்டு அப்படியே சுற்றி வருகிறான். சென்னை கூவம் சாக்கடைக்கு வந்தபோது, அப்பா பன்றி ஒரு பெண் பன்றியுடன் 10 குட்டிகளை அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நீந்திக்கொண்டிருந்தது. மகன் உடனே வாளை எடுத்து வெட்ட வருகிறான். அப்போது அந்த அப்பா பன்றி, “என்னை வெட்டாதே!” என்றது. அதற்கு மகன், “மனுசனா வாழ்ந்த நான், பன்றியா மாறி வாழ விரும்பல, கொன்னுடுன்னு சொன்னியே? இப்ப என்னடான்னாகொல்லாதேஎன்று சொல்கிறாயேஎன்று மகன் கேட்டான். அதற்கு அப்பா பன்றி, “அப்போ கூறியது உண்மைதான். ஆனால், இப்போ இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. அது மட்டுமில்ல, இது உங்க சித்தி, இதெல்லாம் உன் தம்பி, தங்கைகள்என்று கூறியது.

ஏன் நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறோம்? என்று சொன்னால், இந்தப் பாவம் ஒரு கெட்ட சுவையை நம்மிடம் விட்டுச் செல்கிறது. பாவத்திற்கு என்று ஒரு சுவை இருக்கிறது. அந்தக் கெட்ட சுவையின் காரணமாகத்தான் நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறோம். எப்படி இந்தக் கெட்ட சுவையை மாற்றுவது? நல்ல சுவையை நாம் நாட ஆரம்பித்து விட்டோம் என்றால், இந்தக் கெட்ட சுவை காணாமல் போய்விடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

என்கிறார் வள்ளுவர். கெட்ட பற்றுகளான ஆசைகளை விடுத்து, பற்றற்றவரான கடவுளை நாம் பற்றிக்கொண்டோம் என்று சொன்னால், நாம் நிச்சயமாக நன்றாக வாழ்வோம். குறிப்பாக, நம்முடைய தீய நாட்டங்கள், தீய இச்சைகள், தீய பாவங்கள் நம்மை அணுகாமல் தூரமாகப் போய்விடும். நாம் கடவுளைப் பற்றிக்கொண்டோம் என்றால், நல்லவரைப் பற்றிக் கொண்டோம் என்றால் அல்லவை எல்லாம் அழிந்துவிடும், தூரமாகப் போய்விடும். ஆகவேதான், இத்தகைய ஒரு புனிதத்தை அடைபவர்கள் எப்பொழுதும் பாவத்திலிருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல,… புனிதம் வந்த பிறகு புனிதத்தின் அடையாளங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவைதான் புதுமைகள்!

எத்தனையோ புனிதர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ பேர் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், இறந்தும் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் பதுவை புனித அந்தோணியார் மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கக் காரணம் என்ன? இவரிடம் அவ்வளவு ஓர் ஆழமான இறைநம்பிக்கை காணப்பட்டது. இவருடைய உணர்வு நாளங்கள் முழுவதும் இறை நாளங்களாக மாறிவிட்டன. அதனால்தான் அவர் வாழும் காலத்திலேயே நிறைய புதுமைகள் செய்தார். அவருடைய வார்த்தைக்கு ஆற்றல் இருந்தது. அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்றால், இறைவனிடமிருந்து வருகிறது. புனித அந்தோணியார் செபத்திலே இறைவனோடு முழுமையாகக் கலந்திருந்த காரணத்தினால், அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ஆற்றல்கள் கிடைத்தன. அதன் காரணமாகத்தான் அவர் நிறைய புதுமைகள் செய்தார்.

துறவு வாழ்வில் கடினமான ஒன்று இருக்கிறது என்று சொன்னால், குருக்களுக்கு, துறவிகளுக்குத் தெரியும்... பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிவது என்பதுதான். அந்தோணியார் புதுமை செய்து மிகவும் அறியப்பட்ட காரணத்தினால் அப்பொழுதுஒரு நாளைக்கு ஏழு புதுமைதான் செய்ய வேண்டும். அதுக்கு மேல் செய்யக்கூடாதுஎன்று இல்ல அதிபர் கட்டளையிட்டார். ஒருநாள் காலையிலேயே ஏழு புதுமைகளையும் செய்துவிட்டார். அன்று மாலை அவர் இல்ல வளாகத்தில் நடந்து கொண்டிருந்தார். அந்தத் துறவு மடத்தின் மேல் மாடியில் ஒரு கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் அந்தச் சாரம் சரிந்து விழுவதைப் பார்க்கிறார். அவரை அப்படியே ஆகாயத்தில் நிறுத்திவிட்டு, இல்ல அதிபரிடம் சென்று அந்தக் கொத்தனாரைக் காப்பாற்ற எட்டாவது புதுமை செய்ய அனுமதி கேட்கிறார். அப்போது அந்த இல்லத்தின் அதிபர், “நீங்கள் ஏற்கெனவே எட்டாவது புதுமை செய்துவிட்டீர்கள். அவரை அங்கேயே நிறுத்திவிட்டீர்களே!… இருந்தாலும், நீங்கள் கீழ்ப்படிந்து அனுமதி கேட்க வந்தது மிக்க மகிழ்ச்சி. இனிமேல் உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லைஎன்று கூறினார்.

இப்படியாக புனித அந்தோணியார் மிகச்சிறந்த ஒரு நபராக, நல்ல புனிதராக வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்வில் நல்லவராக இல்லாதவர்கள், கடவுளுக்கு நல்லவராக இருக்க முடியாது. கடவுளுக்கு நல்லவராக இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் ஆற்றல்மிகுந்த செயல்களைச் செய்ய முடியாது.

நீங்கள் எந்த அளவிற்குக் கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறீர்களோ, கடவுளுடைய அனுக்கிரகத்தைப் பெற்றிருக்கிறீர்களோ அவர்களுக்குத் தொட்டதெல்லாம்  துலங்கும்; நினைத்ததெல்லாம் கைகூடும். எனவே, அத்தகைய ஒரு புனிதராக நம்முடைய புனிதர் இருந்த காரணத்தினால், புனித அந்தோணியார் என்றும் மிகச்சிறந்த புனிதராகப் போற்றப்படுகிறார். புனித அந்தோணியாரிடம் வந்து மன்றாடிய மன்றாட்டுகள் வீண்போனதே இல்லை. எனவே, கோடி அற்புதர், புதுமை வள்ளல், அழியா நாக்கு படைத்த மாமுனி என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கக் கூடிய புனித அந்தோணியாரின் பக்தர்களாகிய நாம், இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாக இவ்விழாவில் கலந்துகொள்வது தொடர வேண்டும். நமது நல்லுறவு தொடர்ந்து வளர வேண்டும். இரண்டு நாடுகள் மட்டுமல்ல, உலக நாடுகள் முழுவதும் சமாதானமாக இருக்க வேண்டும். போர்கள் ஒழிய வேண்டும். நட்புறவு திகழ வேண்டும். வறுமை, வேலையின்மை ஆகிய தீமைகள் அகல வேண்டும். இளம் பருவத்தில் வேலைவாய்ப்பை, திருமணத்தைத் தேடி நிற்கிற பிள்ளைகளுக்கு அவை விரைவிலே கைகூட வேண்டும். பெரியவர்கள் உடல் சுகம், மன சுகம் பெற்று வாழ வேண்டும் என்று புனித அந்தோணியார் வழியாகத் தொடர்ந்து மன்றாடுவோம்!

news
சிறப்புக்கட்டுரை
இரண்டு இடது கால்கள் (கண்டனையோ... கேட்டனையோ...- 31)

கடந்த ஒரு மாதத்தில் சமூக ஊடகங்களில் அதிகம்அடிபட்டதுபோப் பிரான்சிஸ் பெயராகத்தான் இருக்கும். பிப்ரவரி 14-ஆம் நாள் மூச்சுக்குழாய் பிரச்சினை ஏற்பட்டு அவர் ஜெமெல்லி மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டவுடன், புதியகன்டென்ட்கிடைத்த உற்சாகத்தில் உரோம் நகரில் களமிறங்கிய உலக ஊடகங்கள், பிரான்சிஸின் உடல் பிரச்சினை என்ன? அவர் பிழைப்பாரா? மாட்டாரா? அடுத்த போப் யார்? இப்போது யார் வத்திக்கானை நிர்வாகம் செய்வது? ‘கான்க்ளேவ்என்றால் என்ன? சுவிஸ் கார்டுகள் ஒத்திகை பார்ப்பது உண்மையா? என்றெல்லாம் பலவற்றை ஆராய்ச்சி செய்து செய்திகள் வெளியிட, இரவில் தூக்கம் வராத நம் ஊர் சமூக ஊடகர்கள்போப் இறந்து விட்டார் - கண்ணீர் அஞ்சலிஎன்றும், ‘இல்லை, இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்-கடவுளுக்கு நன்றிஎன்றும் மாற்றி மாற்றி உளறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் பல நாள்களுக்கு முன்பே அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து, பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டிருந்தHope: The Autobiographyஎன்ற பிரான்சிஸ் அவர்களின் தன் வரலாறு நூலைப் பொறுமையாக வாசித்து முடித்தேன்.

இது போப் பிரான்சிஸ் Carlo Mussoஎன்கிற இத்தாலிய பத்திரிகையாளரோடு இணைந்து எழுதியது. வெளியீடு: Randon House. ஜனவரி 25 அன்று வெளியான Hope, பதவியில் இருக்கும் ஒரு போப்பாண்டவர் வெளியிடும் முதல் தன் வரலாறு நூல் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. 80 நாடுகளில், பல்வேறு மொழிகளில் இந்நூல் கிடைக்கிறது. மூலமொழி இத்தாலி. நான் வாசித்தது Richard Dixon மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆங்கிலப் பதிப்பு

கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக திருத்தந்தை பிரான்சிஸ், பத்திரிகையாளர் கார்லோவுடன் நிகழ்த்திய பல்வேறு உரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளHopeஒரு முழுநீள தன் வரலாறு நூல் அல்ல; இதைMemoirஎன்று வகைப்படுத்துகிறார்கள். அதாவது, சில ஆதார வாழ்க்கை நிகழ்வுகளின் நினைவுகூரல்கள்  அல்லது டைரி குறிப்புகள் என்று சொல்லலாம் - selective life story.

பிரான்சிஸின் குடும்பம் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்தது, அவரின் குழந்தைப் பருவம், தந்தையின் இறப்பு, இறை அழைத்தல், இயேசு சபைத் துறவியாக வார்த்தைப்பாடு, Buenos Aires ஆயர் பணி, திருத்தந்தையாகத் தேர்வு போன்ற முக்கிய நிகழ்வுகளுடன் அவரின் சிறுவயது ஆசை கள், வருத்தங்கள், ஆர்வங்கள், தடுமாற்றங்கள், ஆன்மிகச் சிந்தனைகள், நிலைப்பாடுகள் போன்ற human interest அம்சங்களையும் சரிவிகிதத்தில் சேர்த்து, ஒரு நாவலுக்குரிய கதைமொழியில், விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளHope- வாசிக்கும் கத்தோலிக்கர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸின் papacy ஆட்சிக்காலத்தைப் புரிந்து கொள்ள சில சன்னல்கள் திறக்கும்.

திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் கடவுளின் செயல்பாட்டைப் பார்க் கிறார். நூலின் முன்னுரையில் அவரே கூறுவது போல, “I don’t recall anything in which You are not there.” திருத்தந்தை பிரான்சிஸின் வாழ்க்கை நூல் ஓர் எதிர்நோக்குப் பயணத்தின் கதை  (The book of my life is the story of a journey of hope).  இறந்த பின் posthumous ஆக வெளியிடத் திட்டமிட்டு ஆரம்பித்த  ‘Hopeதன் வரலாறு நூலைத் திருத்தந்தை பிரான்சிஸ், ‘எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு 2025’-இன் தொடக்கத்தில், தான் உயிரோடு இருக்கும்போதே வெளியிட முடிவெடுத்ததில் ஆச்சரியமில்லை.

Hopeநூலை ஒட்டிNational Catholic Registerஎன்னும் அமெரிக்க இணையப் பத்திரிகையில், Matthew McDonald என்பவர் எழுதியுள்ளஏன் பிரான்சிஸ் பீட்சாவை விரும்புகிறார்? டிவியை வெறுக்கிறார்? - போப் பற்றி 12 தகவல்கள்என்ற கட்டுரையை விரும்பி வாசித்தேன். அதில் ஆறு தகவல்களின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம், ‘நம் வாழ்வுவாசகர்களுக்காக இங்கே. மீதம் 6 அடுத்த கட்டுரையில்.

1. கசாப்பு - மருந்து - சாக்லேட்

போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ. ஹோர்கே ஒரு சாதாரண குடியேறி குழந்தைA migrant childஎதிர்கால மேன்மையின் ஆரம்ப அடையாளங்கள் எதுவும் அவரின் வளர் பருவத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. நம் குழந்தைகளுக்கு JCB இயந்திரம் போல, பல எளிய விசயங்கள் அவரைக் கவர்ந்திருக்கின்றன. மார்க்கெட்டில் வெள்ளை மேலுடை தரித்து, நிதான கரங்களால் கறிகளை வெட்டிப் போடும் கசாப்புக்கடைக்காரர் அவருக்கு ஒரு ஹீரோவாகத் தென்பட்டிருக்கிறார். ‘எதிர்காலத்தில் நான் ஒரு கறிக்கடை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்கப் போகிறேன்.’ சற்று வளர்ந்த பிறகு மருத்துவம். மாநில வேதியியல் நிறுவனத்தில்உணவு அறிவியல்படித்த காலத்தில், படிப்பின் ஒரு பகுதியாகச் சாக்லேட்டுகளின் rancidity - கெட்டுப்போகும் தன்மையைச் சாப்பிட்டுப் பார்த்து சோதிக்க வேண்டும் என்று கூறியபோது, ஹோர்கேவின் தலையில் பல்பு எரிந்து, ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’ என்று யோசித்து, ‘நான்   சாக்லேட் அனலிஸ்ட்டாகப் போகிறேன்என்று கூறியிருக்கிறார்.

2. சண்டைக்காரர்

இளம்பருவத்தில்ஹோர்கே சண்டை விரும்பியாக இருந்துள்ளார். வேதியியல் நிறுவனத்தில் பயின்றபோது, அவர் வகுப்பில் இரண்டு மக்குப் பையன்கள் இருந்தார்கள். வாத்தியார் எது கூறினாலும், தலையில் ஏறாத கேசுகள். எப்போதும் மற்ற மாணவர்கள் அவர்களை வம்பிழுத்துக் கொண்டிருப்பார்கள்... ஹோர்கே உள்பட. ஒருமுறை அவர்களில் ஒருவனுக்கும் ஹோர்கேவுக்கும் சண்டை வந்து விட்டது. சண்டை என்றால் தண்ணீர்க் குழாயடி வகை கிடையாது. படத்தில் பார்ப்பது போன்ற ஆக்ஷன்! ஹோர்கே வாட்டசாட்டமான ஆள். ஒரே அடியில் அவனைத் தரையில் வீழ்த்திவிட்டார். ‘அவனுக்குத் தலையில் அடிபட்டுவிட்டது. அவன் சிறிது நேரம் எந்த உணர்வும் இல்லாமல் மயக்கமாகக் கிடந்தான்என் செயலை நினைத்து நான் அவமானப்பட்டேன்.’

அன்று மாலை ஹோர்கேவின் தந்தை அவரை அந்த மாணவனின் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல, அங்கே ஹோர்கே அவனிடம் மன்னிப்புக் கேட்டார்.

பின்னாள்களில் அவர் Buenos Aires பேராயராக இருந்தபோது, அந்த மாணவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் ஒரு பிரபல நற்செய்தி ஊழியர். ஐந்து குழந்தைகள். ‘அவர் மிகவும் கனிவுள்ள மனிதராக இருந்தார்என்று ஹோர்கே தன் ஒரு காலசண்டையாளனைநினைவுகூர்கிறார்.

3. இரண்டு இடது கால்கள்

ஹோர்கேவுக்குக் கால்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. அர்ஜெண்டினாவில் கால்பந்து பிடிக்கவில்லை என்று சொன்னால் தூக்கில் போட்டு விடுவார்கள். கோல் கீப்பராக விளையாடியிருக்கிறார். ஆனால், அவ்வளவு பிரமாதமான ஆட்டக்காரர் கிடையாது. ‘என் போன்ற ஆள்களை Pata dura என்று அழைப்பார்கள்என்று ஹோர்கே சொல்கிறார்Pata dura என்றால்இரண்டு இடது கால்கள் கொண்ட கால்பந்து ஆட்டக்காரர்என்று அர்த்தம். அவர்களுக்கு என்ன ஆட வரும்? பந்தை கிழக்கே அடித்தால், அது மேற்கே போகும். ‘எனக்கு ஒழுங்காக விளையாட வராது என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. கால்பந்து விளையாடுவதை நான் மிகவும் விரும்பினேன்என்கிறார்.

4. திருப்புமுனை

1953-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் நாள். பதினாறு வயது ஹோர்கே, அம்மா கொடுத்த ஒரு வேலையை நிறைவேற்ற போய்க்கொண்டிருந்தார். வழியில் ஆலயம். ஹோர்கே உள்ளே போனார். அங்கே ஓர் அருள்பணியாளர் ஒப்புரவுத் தொட்டிலில் அமர்ந்திருந்தார். “அந்தக் கோவிலுக்கு நான் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலிக்கும் செல்வேன். ஆனால், அவரை நான் முன்பு அங்குப் பார்த்ததில்லை.” உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, ஹோர்கே அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் செய்தார். அருள்பணியாளர் மிகக் கனிவுடன் ஹோர்கேவை நடத்தினார்.

அதன்பிறகு, நான் பழைய ஹோர்கே அன்று என்று எனக்குத் தோன்றியது. அன்று கோவிலை விட்டு வெளியேறியபோது, நான் நிச்சயம் ஓர் அருள்பணியாளராகப் போகிறேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”

5. இறை அழைத்தல்

ஹோர்கேவின் குடும்பத்தினர் சராசரி கத்தோலிக்கர்கள். எல்லாச் சமயக் கடமைகளையும் செய்தார் கள். ஆனால், ரொம்ப ஈடுபாடுள்ள கிறித்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஹோர்கே பிறந்து ஒன்றரை வருடம் கழித்துதான் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது.

ஹோர்கேவுக்கு 18 வயது இருக்கும்போது, அவர் படுக்கையறையைத் தூய்மை செய்யச் சென்ற அவர் அம்மா அங்கேகாணக்கூடாதசிலவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் - இறையியல் புத்தகங்கள்! அதுவும் சில புரியாத இலத்தீன் மொழியில்.

மருத்துவர் ஆகப் போகிறேன் என்றுதானே நீ என்னிடம் சொன்னாய்?”

ஆம் அம்மா, ஆன்மாக்களின் மருத்துவன்.”

ஹோர்கே மறைமாவட்டக் குருகுலத்தில் சேர்ந்தபோது, அம்மா அவரைக் கொண்டுவிடச் செல்லவில்லை. அங்கு இருந்தபோது ஒருமுறை கூட அவரைச் சந்திக்க வந்ததில்லை. பின்னாளில் ஹோர்கே மறைமாவட்டக் குருகுலத்தை விட்டு விலகி,   இயேசு சபையில் சேர்ந்தபோது, இந்த முறை அவருடைய அம்மா உடன் சென்றார். ஆனால், ஹோர்கே அருள்பணி வாழ்வைத் தேர்ந்தெடுத்ததில் அவர் அம்மாவிற்கு முழு சம்மதம் என்று சொல்ல முடியாது.

6. தொடரும் வருத்தங்கள்

சிறு வயதில் உடன் படிக்கும் மாணவன் ஒருவன் ஹோர்கேவின் சைக்கிளைக் கடன் வாங்கி, எங்கோ கொண்டு போய்விட்டு, வண்டிக்குச் சிறிய பாதிப்பைச் செய்துவிட்டான். ஹோர்கேவுக்கு பயங்கர கோபம். ‘வண்டியைச் சரிசெய்ய முழு தொகையையும் கொடுஎன்று சொல்லி அவனைக் கட்டாயப்படுத்தி வசூலித்தார். இது ஒரு பெருந்தன்மையற்ற, அநியாயச் செயல் என்ற எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.

59 ஆண்டுகளுக்குப் பின் 2009-இல், அவர்   Buenos Aires - பேராயராக இருந்தபோது, அந்த முன்னாள் வகுப்புத் தோழனை அழைத்து, “நான் அன்று செய்த செயலுக்காக என்னை மன்னித்து விடுஎன்று கூறினார்.

இரண்டு இடது கால்களும், ஒன்றரை நுரையீரல்களும் கொண்ட ஒரு மனிதர்தான், 2000 ஆண்டு பழமையான ஒரு நிறுவனத்தின் சிந்தனைகளை நவீனப்படுத்தி, அதன் அக்கறைகளையும், முன்னெடுப்புகளையும் உத்தரவாதமாக மாற்றி அமைத்துள்ள மகத்தான திரு அவைத் தலைவர் என்று உணரும்போது, இந்தக் கடவுளை வியக்காமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
சிறப்புக்கட்டுரை
பொய் பொம்மைகள்! (வலையும் வாழ்வும் – 06)

காலை நேரம் வாசலிலே போட்ட கோலம், மாலை நேரம் அடையாளமே இல்லாமல் காணாமல் போவதுபோல ஒருசில நினைவுகள் மங்கி மறைந்து போய்விடுகின்றன. நினைவுகள் சில எப்போதுமே பசுமையானதாக இருக்கும். அப்படி மனத்திலிருக்கும் ஒரு நினைவுக்குறிப்பு இது.

அன்று அந்தக் கிராமமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. பெரியவர் ஒருவரின் இறப்பு ஊரில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இறந்துபோன பெரியவருக்கு இரண்டு மகன்கள். இரண்டாண்டு கழிந்து பிறந்தாலும், இருவரும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருப்பர். சிறு வயதில் இருவரும் ஒரே ஆடை அணிந்து கைக்கோர்த்து விழாக்களுக்குச் செல்வர். ஒன்றுபோல முடித்திருத்தம் செய்துகொள்வர். சில ஊர் பெருசுகளுக்கு இவர்களில் யார் மூத்தவன்? யார் இளையவன்? என்று கண்டுபிடிப்பதில் கூட சிக்கல் இருந்தது. இரண்டு பேரையும் பார்த்தால் அச்சு அசலாக ஜவுளிக்கடை பொம்மைகளைப் போலவே இருந்தனர்.

வளர்ந்த பிறகு மூத்த மகன் ஒரு பெண்ணைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டான். இது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. “இனி இந்த வீட்ல கால் வச்ச, கால வெட்டிப்புடுவேன்என்று கோபத்தில் எச்சரித்திருக்கின்றார் பெரியவர். அதன் பிறகு பல ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் இரு வீட்டாரும் சமாதானம் ஆகவில்லை.

இளைய மகனுக்குத் திருமணம் முடிந்திருந்தது. இந்த நிலையில்தான் பெரியவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். “உங்கப்பன் தவறிட்டாரு. என்ன இருந்தாலும் உன் அப்பன்ல, ஓர் எட்டு வந்து பார்த்துட்டுப் போயிடு டே, என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். நீ வாஎன்று ஊர் தோழனிடமிருந்து வந்த அலைப்பேசி அழைப்பைக் கேட்டு மூத்த மகன் செய்வது அறியாது உறைந்து நின்றான். “நீ வேணும்னா போய்ட்டு வா, நான் வரல  என்று செய்தியறிந்து போய்வரக் கூறினாள் மனைவி. ஊருக்குள்மூத்த மகன் நுழைந்துவிட்டான்என்ற செய்தி காட்டுத் தீயைப்போல வேக வேகமாகப் பரவியது. ஊர் மக்கள் குழுக்களாக இங்கொன்றும் அங்கொன்றுமாக மழைக்கால காளான் கூட்டம்போல முளைத்து, ஏதோ முக்கிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். மூத்த மகன் ஊருக்குள் வந்த நேரம் பெரியவரின் பூத உடல் சவப்பெட்டியில் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது. அடக்கம் செய்ய பெட்டியைத் தூக்கிய நேரமும், மூத்த மகன் ஆட்டோவில் வீட்டிற்கு முன்பாக வந்திறங்கிய நேரமும் ஒன்றாயிருந்தது.

எவனப் பாக்க நீ இங்க வந்த? காம்பவுண்டுக்குள்ள கால் வச்ச, தொலைச்சிடுவேன்என்று கையில் மரச்சிலுவையை வைத்துக்கொண்டே கோபத்தில் கொப்பளித்தான் இளைய மகன்.

தனக்காகத் தாய் பேசுவாள் என்று தன் தாயைத் தேடினான் மூத்த மகன். அவள் எங்கோ ஓரத்தில் அழுதுகொண்டே சேலை நுனியால் மூக்கைச் சிந்திக்கொண்டு செய்வதறியாது நின்றிருந்தாள்.

வழக்கப்படி மூத்த மகன்தான் மரச்சிலுவையைத் தூக்கணும். நீ ஏம்ல தூக்குற? மூத்தவன்தான் வந்துட்டானுல, இனி அத அவனுக்கிட்ட குடுஎன்று ஊர்க்காரன் ஒருவன் சொன்ன உடனேயே, விசில் ஊதிய குக்கர் நாலாப்பக்கமும் வெடித்துச் சிதறியது போல இரு அணியினரும் ஒருவர் மற்றொருவரை ஏசியும் கெட்ட வார்த்தை பேசியும் சண்டையில் ஈடுபட்டனர். மரச்சிலுவையைத் தூக்குகின்ற உரிமை தனக்குக் கொடுக்கப்படவில்லை என்பது மூத்த மகனின் கோபம்.

இத்தன வருசம் நோய் வந்து கிடையில கிடந்தவரை ஒருநாள் கூட வந்து பாக்கல, இப்ப மட்டும் ஏன் வந்தான்? இப்ப வருவான், மரச்சிலுவையைத் தூக்கிச் சவப்பெட்டிக்கு முன்னாடி போவான். நாளைக்குச் சொத்தில் எனக்குப் பங்கு கொடுனு கேட்பான். அத எப்படிக் கொடுக்க முடியும்?” என்பது இளைய மகன் அணியின் கேள்வி.

நான்தான் இவருக்கு மகன், மூத்தவன் செத்துப் போனான். எனக்குதான் அந்த உரிமைஎன்று இளைய மகன் பலமுறை அல்லது பல்லாயிரம் முறை கத்தினாலும் கதறினாலும் ஊர்க்காரர்கள், உறவினர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது இளையவன் பொய் பொம்மைதான் என்று.

இளையவன் மூத்தவனுக்கான அடையாளத்தை ஒருபோதும் பெற முடியாது என்பது நமக்குத் தெரியும்; ஆனால், இன்றைய சைபர் உலகிலே அடையாளங்கள் களவாடப்படுகின்றன. ஆள் மாறாட்டப் பித்தலாட்டம் தினந்தினம் அரங்கேறுகிறது. தன் முகத்தை மறைத்துக்கொண்டு பிரபலமான மற்றொருவரின் அடையாளத்தை முகத்தில் தைத்துக்கொண்டு வலம் வரும் இணையதளங்கள் இன்று நிறைய இருக்கின்றன. எது போலி? எது உண்மையானது? என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அது ஒத்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பலர் இணையம் வழியாக ஏமாற்றப்படுகின்றனர்.

இந்த ஏமாற்று மோசடியினைபாமிங் (Pharming) என்கின்றனர். எடுத்துக்காட்டாக கூகுள் தேடல் பக்கத்தில் நமது வங்கி இணையதளப் பக்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பெயர் சரியாக இருக்கின்றது; அதன் இலட்சினை (logo) சரியாக இருக்கின்றது; கிளிக் செய்து உள்செல்லும்போது அதன் முகப்பக்கமும் சரியாக இருக்கின்றது; எனவே, இது நமது வங்கியின் ஒரிஜினல் பக்கம்தான் என்று எண்ணிப் பணபரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், இந்தச் சரிபார்ப்பு மட்டும் போதுமானது இல்லை. உரலி அல்லது இணையதள முகவரி (URL - Uniform Resource Locator) சரியாக உள்ளதா? என்பதைச் சரிபார்ப்பது அவசியம். இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் எது சரி? எது தவறு? www.google.com அல்லது www.goople.com. இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல; இரண்டும் வெவ்வேறு.

பாமிங்என்ற இணையதள மோசடி பல விதங்களில் நடைபெறுகின்றது. ஓர் இணையத்தளத்தைகிளிக்செய்தால் அதேபோன்ற மற்றொரு போலி இணையதளத்திற்குக் கொண்டு சேர்க்கின்றது. ஓர் இணையதள லிங்கைகிளிக்செய்யும்போது தேவையில்லா Poisoned cache குறியீடு (codeதரவிறக்கம் செய்யப்பட்டு நம் கணினியின் கோஸ்டு (Host) பைலுக்குள் சென்று ஒட்டிக் கொள்வதால் எந்த ஹைப்பர் லிங்கைகிளிக்செய்தாலும், அது போலியான இணையதள முகப்பக்கத்திற்கே கொண்டு செல்கின்றது.

ஓர் இணையதளத்தில் டி.என்.எஸ். (DNS -Domain Name System) மிக முக்கியமானது. இதுதான் ஓர் இணையதள முகவரியைக் கணினி புரிந்துகொள்ளும் .பி. (IP) முகவரியாக மாற்றித் தருகின்றது. ‘பாமிங்என்னும் இவ்வித மோசடி வழியாக டி.என்.எஸ். (DNS) பிழைப்படுத்தப்பட்டு .பி. (IP) முகவரி மாற்றப்பட்டு, போலியான இணையதளத்திற்கு நாம் தள்ளப்படுகின்றோம். இங்கு இளையவன் மூத்தவனாக மாறுவதற்கான ஒரு முயற்சி எனலாம்.

இணையம் என்பது எப்போதும் நன்மையும் உண்மையும் விளைவிக்கச் செய்யும் விளைநிலம் அல்ல; தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளைப் போல நமது அடையாளங்களும் அந்தரங்கங்களும் நமது இயல்பும் இருப்பும் இணையதள சந்தைக் கிடங்குகளில் விற்பனைக்காகத் தூக்கி வீசப்படுகின்றன. பொய் பொம்மைகளை இனம் கண்டுகொண்டால் மட்டுமே உண்மையும் நம்மையும் இணையதளங்களில் தொடர்ந்து முளைவிடும்.

news
சிறப்புக்கட்டுரை
மனுதர்மமா? மானுடதர்மமா?

முற்காலத்தில்  மனிதர்கள் கூட்டங்கூட்டமாக, வாழ்விற்கான அடிப்படை ஆதாரங்களைத் தேடி இடம் மாறினார்கள். வாழ்விற்கான போராட்டத்தால் நாடோடிகளாகப்  புலம்பெயர்ந்தார்கள். ஆடு, மாடுகளோடு மேய்ச்சல் தேடிய ஒரு கூட்டம்  இந்துகுஷ் மலை வந்து சேர்கிறது. அம்மக்கள் பள்ளத்தாக்குகள் வழி கைபர், போலன் கணவாயை வந்தடைகிறார்கள். இது நாம் பள்ளியில் படித்த ஆரிய வருகை குறித்த பாலப்பாடம்.  மானுடவியல்  இனம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புஎன்கிறது. மத்திய  ஆசியாவிலிருந்து கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் வந்த அந்தக் கூட்டம் சமய, சமூக, அரசியல், பொருளாதார நிலைகளைப் படிப்படியாகக் கைப்பற்றினார்கள்.  அவர்கள் இன்று  மண்ணின் மைந்தர்களான பூர்வீகக் குடிகளைஅடிமைகள்என்கிறார்கள்.

மனுதர்மம் உள்ளிட்ட வர்ணாசிரமச் சாத்திரங்களைஆரியம்என்கிறோம். ஆரியம் என்பது பிராமணியமாக  உருப்பெற்றுள்ளது. மனுதர்மம் சமூக அமைப்பை நான்காகப் பிரிக்கிறது. தலையிலிருந்து  பிறந்த பிராமணர் படிப்பு, அரசருக்கு ஆலோசனை சொல்லுதல், இறை வழிபாட்டை நடத்துதல் என அறிவால் முழு தகுதியை உருவாக்கிக் கொண்டனர். அவர்களின் யஜூர் வேதம் மனிதர்களை வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களின் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறது. இதை இராமாயண கதை சார்ந்து, ‘இது ஆரிய-திராவிட போராட்டம்என்கிறார் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு.

இந்திரனே, நாகர்களின் நகரங்களை எரித்து தரைமட்டமாக்கு; நீர்த் தேக்கங்களை உடைத்தெறி; எங்களுக்கு   நிறைந்த செல்வங்களைக் கொடு; குதிரைகளை, பசுக்களை மந்தைகளாகக் கொடு; நல்ல மேய்ச்சல் நிலங்களை எங்களுக்கு வழங்கு; நாகர்களின் நிலங்களை எங்களுக்கு வழங்கு; நாகர்களின் இனத்தைக் கூண்டோடு ஒழித்துக் கட்டு  என்று வேதங்கள் பாடுகிறது. இந்த நாகர்களே தேசத்தின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள். வேதம் சொன்னபடி செய்தார்கள். தமிழீழ விடுதலைப் போரில் அன்றைய இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகரான எம். கே. நாராயணனும், அன்றைய இந்திய அமைதிப்படைச் செயலாளரும், இன்றைய வெளியுறவு அமைச்சருமான ஜெயசங்கரும் தமிழ் மக்களை அழித்தொழித்தார்கள். அக்காலக் கட்டத்தில் இந்தப் பிராமணர்கள் செய்ததை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது.

ஆரியர்கள் போர் செய்து, திராவிடர்களை வெல்ல முடியாது. ஆனால், ஆரியப் பண்பாட்டை நம் மக்களிடையே  புகுத்தியே வெற்றி கொண்டனர்என்று குறிப்பிடுகிறார் தந்தை பெரியார் (விடுதலை - 23.03.1950). மத வழிபாட்டில், அரச அவையில்சடங்கு, சம்பிரதாயங்கள்என எளிய மக்களை ஏமாற்றி உச்சம் பெற்றனர்.

1927-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன. அங்கு பாபாசாகிப் அம்பேத்கர் ஆயிரக்கணக்கான  தன் ஆதரவாளர்களுடன், சாத்திரம் இவைகளை நியாயப்படுத்துவதாகக் கூறி, மனுதர்ம சாத்திரப் பிரதிகளை எரித்தார். இருப்பினும் மனுதர்மம் உயிர் பெற்றது.

தேசச் சுதந்திரத்தைவிட, சாதிக்க வேண்டியது வேறு உண்டு எனச் சாதிய வெறியில் உருப்பெற்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்புஇவ்வமைப்பு சுதந்திர இந்தியாவை மனுதர்ம அடிப்படையில், சாதியைக் கையிலெடுத்து வென்றது. அதன் அரசியல் பிரிவான பா...-வை ஆட்சிக்கும் கொண்டு வந்துவிட்டது. இவர்கள் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் காலங்காலமாக - நீதிக்கட்சி காலம் தொட்டே ஆயிரமாயிரம் வழக்குகளைப் போட்டவர்கள். இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள  மக்களுக்கான.டபிள்யூ.எஸ். இடஒதுக்கீடுஎன மத்திய அரசில் 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பின்வாசல் வழியாகப் பெற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில்.டபிள்யூ.எஸ். இடஒதுக்கீடு இல்லைஎனத் தமிழ்நாடு அரசு அறிவித்து விட்டதால்  கொதிக்கிறார்கள்.

ஒரு விவாத மேடை நிகழ்ச்சியில் பேசிய  ஒருவர், “தமிழ்நாடு ஆட்சி அதிகாரத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் எங்களை மேல் சாதி எனக் கூறுகிறது. ஆனால், எங்களுக்கு அதற்குரிய  பிரதிநிதித்துவம் இல்லையே?” எனக் கேட்டார். அதற்குப் பதில் அளித்தவர், “கோடிக்கணக்கான மக்கள் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் போடும் சட்டம், தமிழ்நாடு ஆளுநரால் நிறுத்தப்படுகிறது அல்லது உச்ச நீதிமன்றத்தில் செல்லாது எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் யார்? உங்கள் மேல்தட்டு சாதியினர்தானே?” என்று கூறுகிறார்.

சிறுபான்மைப்  பள்ளிகள் குறித்த ஓர் அரசாணை நீண்ட நாள்களாகக் கிடப்பில் வைக்கப்படுகிறது. “இந்த அரசாணை வெளியிட, கல்வி அமைச்சருக்கும் அரசிற்கும் ஆர்வம் உள்ளது. உயர் அதிகாரிகள் பல சாக்குபோக்குக் கூறித் தள்ளிவிடப் பார்க்கிறார்கள்என்கின்றனர் அங்கிருக்கும் இரண்டாம் நிலை அதிகாரிகள். அவர்கள் யார்? என்றும், எந்தச் சாதியைச் சார்ந்தவர்? என்றும் ஊர் அறியும்!

ஐந்து விழுக்காடு மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினர், 50 விழுக்காடு ஆளுநர்களாகவும், மாநில அரசின் தலைமைச் செயலாளர்களில் 62 விழுக்காடாகவும், உச்ச நீதிமன்றத்தில் 56 விழுக்காடாகவும், வெளிநாட்டுத் தூதர்களில் 41 விழுக்காடாகவும், பாராளுமன்றத்தில் 48 விழுக்காடாகவும், மாநிலங்களவையில் 36 விழுக்காடாகவும், பொதுத் துறை நிறுவனங்களில் 57 விழுக்காடாகவும், மாநில அரசுகளில் 82 விழுக்காடாகவும்,     ஏர்லைன்சுகளில் 61 விழுக்காடாகவும், ..எஸ்.-சில் 72 விழுக்காடாகவும், .பி.எஸ்.-சில் 61 விழுக்காடாகவும், தொலைக்காட்சி மற்றும் பாலிவுட்டில்  83 விழுக்காடாகவும் கோலோச்சுவது அவர்களது தந்திரமே தவிர, அறிவல்ல!

இன்று ஊடகத்துறையும் இவர்கள் கைக்கு மாறிவிட்டது. தமிழ்நாடு பத்திரிகை வரலாற்றில், தினம் பேருந்தில் செய்தி  எழுதி அனுப்பிய பத்திரிகையாளர்களைப் பார்த்திருக்கிறேன். பிரதமர், முதல்வர் போன்ற முக்கியஸ்தர்களின் கூட்டச் செய்திகளைப் புகைப்படம் கழுவி, பிரிண்ட் போட்டு காத்திருக்கும் பக்கம் வைத்து, கணினி தட்டச்சு செய்த காலம் இருந்தது. தமிழே படிக்காமல், தமிழ் எழுத்துகளே தெரியாமல் சாதியை வைத்து தமிழ் நாளிதழில்  வேலைக்குச்  சேர்ந்தவர்கள் இவர்கள். மாலை வேளைகளில் அந்தப் பத்திரிகையாளர்களே செய்தி வாசிப்பாளர்கள்போல செய்தி தருவார்கள்.

நாம்  இதைக் குறை கூறுவதற்குப் பதிலாக, குடிமைத் தேர்வுகளுக்கு, தேசிய, மாநில, அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நாமும் நம் பிள்ளைகளைத் தயார்செய்ய வேண்டும். நமது குழந்தைகளும் அதற்கான தகுதியும் திறமையும் பெற்றவர்களே. நாம் அடிக்கடி பொதுவெளிகளில் பேசுவதுபோல, தமிழினமே உலகில் யூதர்களுக்கு நிகரான, அவர்களை மிஞ்சும் ஆற்றல் படைத்த அறிவார்ந்த இனம் என்பதில் ஐயமில்லை. வாருங்கள்! உலகச் சமுதாயத்திற்காக, தமிழ்ச் சமூகமாக மானிட தர்மம் காப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
அல்காரித சூட்சமம் (வலையும் வாழ்வும் – 05)

இரயில் பயணம் எப்போதுமே சுவாரசியமானதுதான். சிறுவயதில் மலை மற்றும் வயல்களுக்கிடையே வளைந்து நெளிந்து நகரும் ஆயிரம் கால் இராட்சசப் பூச்சி போன்ற பிரமிப்பைத் தந்தது தூரத்தில் ஊர்ந்து செல்லும் இரயில் வண்டி. சிறுபிள்ளைகளுக்கு அந்த இரயில் பெட்டிகளில் பயணிக்கும் எல்லாருமே உறவினர்கள் ஆகிவிடுகின்றனர், கையைத் தூக்கி ‘டாட்டா காட்டும்போது. சிறுவயதில் இரயில் வண்டி எத்தனை பெட்டிகளை இழுத்துச் செல்கின்றது என்பதை வைக்கோல் போர்வையின் முதுகிலே சவாரிச் செய்துகொண்டே பார்த்து மகிழ்ந்ததையும் மறக்க முடியாது.

என்னதான் இரயில் வண்டி தூரத்தில் பெயர் சொல்லி அழைப்பது போன்று சத்தம் போட்டுக் கொண்டே சென்றாலும், அதில்  என்றாவது ஒருநாள் பயணிக்க வேண்டும் என்ற பேரார்வம் என்றுமே இருந்தது. வளர்ந்து பலமுறை இரயில் வண்டியிலே பயணித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது ஒரு புது அனுபவத்தைத் தந்துகொண்டே இருக்கும். ஒவ்வோர் இரயில் வண்டியும் பல ஆயிரம் மனிதர்களை மட்டுமல்ல, பல ஆயிரம் கதைகளையும் சுமந்து செல்கின்றது.

சமீபத்தில் சென்னை - நாகர்கோவில் செல்லும் ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் பயணித்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாமலேயே பலரும் கிடைத்த இருக்கைகளிலே அல்லது இடங்களிலே தங்களை நிரப்பிக் கொண்டார்கள். முதியவர்கள், இளையவர்கள், பெண்கள் என்று எல்லாரும் இந்த இடைச்செருகல்களில் உண்டு. ‘இது முன் பதிவு செய்து பயணிக்கக்கூடிய பெட்டிதானா?’ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஒருசிலர், ‘கொஞ்சம் ஒதுங்கி உட்காருங்களேன் என்று சொல்லி கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். சிலர் இடம் கேட்டும் கடுகு பொட்டித் தெறித்த பதிலும் பார்வையுமே கிடைத்ததால், வழியிலேயே பெரும் கூட்டம் நின்று பயணித்தது. அவர்களைக் கடந்து கழிவறைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு அப்பெருங் கூட்டம் அசௌகரியத்தைத் தந்தது.

குழந்தைகளின் துள்ளல், மின்விசிறிகளின் அலறல், விழிப்பேச்சு, நண்பர்களின் நச்சரிப்பு, அரசியல் கிசுகிசு, மொபைலில் சத்தமாக ‘இன்ஸ்டாகிராம் சிரிப்பு, இடையிடையே ‘தண்ணீ பாட்டில், தண்ணீ பாட்டில்...’ என்னும் அழைப்பு, காணாமல் போன தண்ணீர் பாட்டில் என்னும் பெயர் கொண்ட சிறுவன் ஒருவனைப் பெற்றோர் கூட்டத்தில் தேடி அலைவதுபோல. நடமாடும் மனிதக்கடைகள், உணவுப் பதார்த்தங்கள், விதவிதமான பாடல்களைப்  பாடி யாசகம் கேட்கும் மேடை கிடைக்காத சங்கீத மேதைகள், துப்புரவாளர்கள், காய்கறி-பழ வியாபாரிகள்... என்று ஒவ்வொரு பயண நிறுத்தத்திலும் தாவி ஏறும் அன்றாடங்காய்ச்சிகள். இரயில் வண்டியின் ஓட்டத்தில் பல கறைபடிந்தக் கதைகளும் வலி நிறைந்த அனுபவங்களுமே கூட இழுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த இரயில் பயணத்தைப் போன்றதுதான் இந்த அல்காரித அபத்தங்களும். ‘அல்காரிதம் (algorithm) என்பதை ‘தானியங்கி நெறிப்பாட்டு முறை என்று மொழிபெயர்க்கலாம். இரயில் பயணத்தின்போது நமக்குத் தேவையானதை யாரோ ஒருவர் நம் இருக்கையிலேயே கொண்டு வந்து தருகின்றார். அவர் தருவதை நாம் உண்ண வேண்டியுள்ளது. அந்த உணவுப்பொருளின் சுவை, தரம் பற்றிய கேள்வி கேட்க முடிவதில்லை. ஆயிரம் உரையாடல்கள் பல்வேறு மொழிகளில் நம் செவிப்பறையைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன. அதில் எது சுவாரசியமோ அதை நாம் உற்றுக்கவனிக்க முடிகின்றது. எங்கோ திரும்பத் திரும்ப ஒலிக்கும் பாடல் பயணம் முழுவதும் நம் நாவில் ஒட்டிக்கொள்கின்றது.

எங்கெல்லாம் இரயில் நிற்கின்றதோ, அந்த இடத்தில் பிரபலமானவைகள் நமக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. மதுரை என்றால் மல்லி, கோவில்பட்டியென்றால் முறுக்கு, திருநெல்வேலியென்றால் அல்வா!

நாம் யாருடனாவது பேசினால் அந்த நபருடனான உரையாடல் இரயில் நிறுத்தம்வரை நீள்கின்றது. யாரை வாஞ்சையோடு பார்க்கின்றோமோ, அவர் அடிக்கடி நம் கண்முன்னே வந்து செல்கின்றார். இந்தப் பொறிமுறைதான் (mechanism) இன்று சமூக ஊடகங்களையும் இயக்குகின்றது. டிஜிட்டல், மனிதன் ஒவ்வொருவரையும் ஆள்கின்றது. இந்த இரயில் பயண நிகழ்வுகள், நம்மோடு பயணிக்கும் மனிதர்கள், நம் கண்முன்பாக வலம் வரும் உணவுப் பதார்த்தங்கள்,  நாம் கேட்கும் பாடல்கள், அருகிலிருப்பவர் அடிக்கடிப் பேசும் கருத்தியல்கள், சன்னல் வழியே காணும் கலர் காட்சிகள், அடிக்கடி வரும் இரயில் நிறுத்தங்கள்... இப்படி எல்லாமே யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று வேண்டுமென்றே வடிவமைத்த மேடை நாடக ஸ்கிரிப்டின் அடிப்படையில் அரங்கேறுகின்றது என்போமானால், நம் உணர்வு நிலை என்ன? இப்படியாகத்தான் சமூக ஊடக ‘அல்காரிதம் செயல்படுவதாகக் கருதப்படுகின்றது. உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், நம்மை யாரோ அல்லது ஏதோ ஒன்று உளவுப் பார்த்து நமக்கு உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் நம் மூளையைச் சலவை செய்கின்றது எனலாம்.

நாம் எதை வாங்குவது? எதைப் பார்ப்பது? யாருக்கு வாக்கு செலுத்துவது? எதை நாம் விவாதப் பொருளாக எடுத்துக்கொள்வது? எதைச் சிந்திப்பது? இப்படி எல்லாமே அல்காரிதத்தின் மாயாஜாலக் குமிழிக்குள் (filter bubble) மாட்டிக்கொண்டதன் விளைவு என்கின்றார்கள்.

ஒரே கருத்து அல்லது செய்தி மீண்டும் மீண்டும் நமக்குப் பரிந்துரைக்கப்படுவதால் (eco-champer) நாம் அதனையே உண்மை என ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றோம். ஒரு குறிப்பிட்ட சிந்தனை, ஒரு குறிப்பிட்ட பார்வை, ஒரு குறிப்பிட்ட விருப்பநிலை, ஒரு குறிப்பிட்ட உலகத்தின் ஒற்றைப் பிரஜையாக (silos) நம்மை மாற்றிவிடுவதும் இந்த அல்காரிதம்தான். இந்த அல்காரித சூட்சமத்தைத் தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்தி உலக வர்த்தக வித்தகர்கள் இலாபம் பார்க்கின்றனர், பெரும் அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலிலே அமர்கின்றனர், கருத்தியல்வாதிகள் சமூகக் கட்டமைப்பை உடைத்து மறுசுழற்சிக்கு அல்லது வெகுசன மக்களின் சிந்தனையை மாற்றியமைக்க (social engineering) துடிக்கின்றனர்.

இந்தச் சமூக ஊடக அல்காரித சூட்சமத்தை அறிந்து வாழ்வது என்பது நம் இரயில் பயணத்தில் நாமே ஓட்டுநரும் நாமே நடத்துநரும் நாமே பயணியும் நாமே பயணமும் என்ற நிலை உருவாக உதவும்.

news
சிறப்புக்கட்டுரை
மீண்டும் வேண்டும் பணியிட ஒழுக்கம்!

பணியிடங்களில் முதலாளி - தொழிலாளி, உயர் அதிகாரி - ஊழியர், மேலாண்மை நிர்வாக அதிகாரி - பணியாளர்கள் என்ற உறவுமுறை பணித்தளத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட சமூக உறவுமுறை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தாம். ஆயினும் படிப்பு, திறமை, நிர்வாக ஆளுமை எனப் பல தளங்களின்மீது இந்தப் பொறுப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.

ஒரு நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தை விட, நன்மதிப்பும் நற்பெயரும் நம்பிக்கையுமே விலையேறப்பெற்ற பெரும் பேறாகக் கருதிய பணியாளர்கள் கடந்தகாலத் தலைமுறையினர். வர்க்கபேதமின்றி அன்பாய் உறவாடுவதும், நேர்மையாய்ப் பணியாற்றுவதும், கடுமையாய் உழைப்பதும், நம்பிக்கையாய் துணை இருப்பதும் இவர்களின் அளவுகோலாக இருந்தன.

காலம் செய்த கோலம், உலகமயமாக்கலுக்குப் பிறகு எல்லாத் தளங்களிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு இடையிலான பிணைப்பு, உறவு என்பது பெருமளவில் பேசப்படுவதில்லை; இன்று அவை நலிந்து விட்டன. பணியிட ஒழுங்கு என்பது இன்று காற்றில் பறந்துவிட்டது. நிர்வாகத்திற்குக் கீழ்ப்படிதல், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், தவறு இழைக்கும்போது அல்லது தவறும்போது கொடுக்கப்படும் அறிவுரைகளுக்கும் அறவுரைகளுக்கும் இணங்கிச் செல்வது என்பதெல்லாம் இன்று காண்பது அரிது.

இத்தகைய சூழலில், அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பணியிடங்களில் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதாவது, “பணியிடங்களில் கீழ்மட்ட ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியர் கண்டிப்பதை வேண்டுமென்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாதுஎன்பதுதான் அந்தத் தீர்ப்பு.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் மீது அங்குப் பணியாற்றும் பெண் உதவிப் பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதை அறிந்த இயக்குநர், அந்தப் பெண் உதவிப் பேராசிரியரைத் தனது அறைக்கு அழைத்துபுகார் மனு அனுப்புவதற்கான அலுவலக நடைமுறைகள் உங்களுக்குத் தெரியாதா? எப்படிப் புகார் அனுப்பினீர்கள்?’ எனக் கூறி கண்டித்துள்ளார்; அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி அந்தப் பெண் உதவிப் பேராசிரியர், இயக்குநர் தன்னைப் பலர் முன்னிலையில் சத்தம் போட்டு பேசி அவமானப்படுத்திவிட்டதாகவும், அதனால் தனக்கு மனவேதனை ஏற்பட்டதோடு மருத்துவ ரீதியில் தனக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 504(BNS. 352)-இன்படி திட்டமிட்டு அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின்கீழ் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு காலம் தண்டனை தரும் இந்த வழக்கை இரத்து செய்யும்படி உயர் நீதிமன்றத்தை அணுகினார் இயக்குநர். ஆனால், உயர் நீதிமன்றமோஇது ஒரு தீவிரமான பிரச்சினை; முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்எனக் கூறி இயக்குநரின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே, இயக்குநர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சஞ்சய் கரோல், சந்திப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வானது, “அலுவலகங்களில் மூத்தவர்கள் அவர்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது என்பது வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் ஆகாது; வேலை செய்யும் இடத்தில் கண்டிப்பது என்பது, நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதி; அதற்காகக் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தால் அது அலுவலகங்களில் பேண வேண்டிய பொது ஒழுங்குக் கட்டமைப்பைச் சீர்குலைத்துவிடும்என்று அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

முன்பெல்லாம் தவறு செய்யும் ஊழியர்களை நிர்வாகம் முதலில் கடுமையாக எச்சரிக்கும்; தொடர்ந்து தவறு செய்தால் தண்டனை அளிக்கும், இடை நீக்கம் செய்யும்; அதன் பிறகும் தவறுகள் தொடர்ந்தால் பணிநீக்கம் செய்வது போன்ற நடைமுறைகள் இருந்தன. ஆனால், இப்போது பணியிடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஊழியர்களுக்கு மேலோட்டமாகச் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களுடைய நடத்தையை மேன்மைப்படுத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அறிவுரைகள் பிடிக்காவிட்டால் ஊழியர்கள் வெளியேறுவார்கள்; அறிவுரையைப் பின்பற்றாவிட்டால் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதுதான் நடைமுறையாக இருக்கிறது.

ஆயினும், அண்மைக் காலங்களில் பணியிடங்களில் ஊழியர்கள் காலதாமதமாகப் பணிக்கு வருவதும், கைப்பேசிகளில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், சக ஊழியர்களுடன் நீண்ட நேரம் அரட்டை அடிப்பதும், பணிச் செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதும் போன்ற ஒழுங்கீனங்கள் அதிகமாகவே நிகழ்கின்றன. இது ஏதோ ஒன்றிரண்டு அலுவலகங்களில் மட்டுமல்லாது, எல்லாப் பணித்தளங்களிலும் நடக்கும் பொதுவான செயல்பாடுகளாகவே இன்று கணிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழல்களில், அரசு அல்லது தனியார் பணித்தளங்களில் மேல்மட்ட அதிகாரிகள் தங்களின் கீழ் செயல்படும் பணியாளர்களைப் பணியின் நிமித்தமாகக் கண்டிக்கும்போது, தவறை உணர்த்தும்போது, அறிவுரைகள் கூறும்போது அல்லது உயர் அதிகாரிகள் கடிந்துகொள்ளும்போது, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், மதத்தின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்துவது இன்று வாடிக்கையாகிப் போனது. இத்தகைய குற்றப் பின்னணியில் எழும் உண்மைத்தனத்தைக் கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது.

பொது இடங்களிலும் பணித்தளங்களிலும் ஊழியர்களின் நன்னடத்தையும் சுயஒழுக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றன. பணித்தளத்தின் நன்மதிப்பையும் இலக்கையும் நோக்கத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கும் எந்த ஒரு செயலும் ஊழியர்களால் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நிலை தொடரும்போது ஊழியரின் பணி, செயல்திறன், நன்னடத்தை ஆகியவை கேள்விக்கு உட்படுத்தப்படுவது எதார்த்தமே. இது பணித்தளத்தின் மேன்மையையும், உற்பத்தித் திறனையும் செயல்பாட்டையும் அதன் இலக்கையும் நிலைநாட்டுவதாகவே அமைகிறது.

ஆகவே, அலுவலக விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒழுக்கத்துடனும் பணித்திறனுடனும் நடந்துகொள்ளும் ஊழியர்களுக்குக் கண்காணிப்பும் உயர் அதிகாரிகளின் கண்டிப்பும் அவசியம் இருக்காது. ஆயினும், எல்லாப் பணியாளர்கள் மத்தியிலும் பணித்தள ஒழுக்கச் செயல்பாடுகள் மீண்டும் மலர வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.