மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வழக்கம் போல நமது பிரதமரும், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்களது வேட்பாளர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். நீட்டி முழக்கி, கண்கள் எல்லாம் கோவைப் பழம் போல சிவக்க, ஆவேசத்துடன் அவர்கள் பேசும்போது, அவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்த நமக்கே அவர்கள் இருவரும் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பத் தோன்றுகிறது!
நம்மையே
அவர்கள் ஒரு கணம் அசைத்துப் பார்க்கிறார்கள் என்றால், அக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று, அவர்களுடைய பேச்சுகளைக் கேட்கின்ற அப்பாவி பொதுமக்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால், இரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல் மருந்துக்குக் கூட ஓர் இடத்திலும் ஒரு முறைகூட உண்மை பேசவில்லை.
அரசியல்
மேடைகளில் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை உண்மையைப் போல பேசுவதை ஒரு கலையாகவே தங்கள் தொண்டர்களுக்குத் தனிப்பயிற்சியாகத் தரும் ஓர் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாகிய அவர்கள் வேறு எப்படிப் பேசுவார்கள்?
மோடியும்,
அமித்ஷாவும் அந்த இயக்கத்தின் தலைவர்களாகவே மட்டும் இருந்து, இப்படிப் பொதுமேடைகளில் அபாண்டமாகப் பொய்களைப் பேசினார்கள் என்றால் அதைப்பற்றி நாம் அதிகம் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால், ஒருவர் உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள சனநாயக நாட்டின் பிரதமர்; மற்றொருவர் 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கும், சமூக அமைதிக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவர்களது அனைத்து அசைவுகளும் நகர்வுகளும் கோடிக்கணக்கான மக்களது வாழ்க்கையையும், ஒட்டுமொத்த இந்தியாவின் நலனையும் உள்நாட்டிலும், உலக அளவிலும் பெருமளவில் பாதிக்கும் என்பதை அறிந்து பேசுகிறார்களா? அல்லது அறியாமல் பேசுகிறார்களா? என்று நமக்குப் புரியவில்லை. அறிந்து பேசினால் இது மாபாதகம்; அறியாமல் பேசினால் மகா கேவலம்!
‘இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி நடப்பேன்’
என்று இறைவன் பெயரால் உறுதிமொழி எடுத்த நம் பிரதமர், எப்படி ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் வெறுப்பையும், துவேஷத்தையும் மூட்டை மூட்டையாக விதைக்கிறார்? இனம், மதம், மொழி, மாநிலம் என்ற வேறுபாடுகள் பாராமல் நாட்டு மக்கள் அனைவரையும் இந்தியர்களாகவே பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் கடமைப்பட்ட பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்நாட்டின் மண்ணின் மக்களான முப்பது கோடி சிறுபான்மை இசுலாமியர்களை ஏன் இவ்வளவு அந்நியப்படுத்துகிறார்கள்? ஏன் அவர்களை இந்நாட்டின் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு எதிரான ஜென்மப் பகைவர்களாகக் கட்டமைக்கிறார்கள்?
நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர், “இந்தியா கூட்டணி வென்றால் உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை எடுத்து முஸ்லிம்களிடம் கொடுத்துவிடுவார்கள்” என்று
பேசினார். இந்த முறை ஜார்க்கண்ட்டில் பேசும்போது பழங்குடியின மக்களைப் பார்த்து “உங்கள் பெண்களையெல்லாம் ‘அவர்களே’ திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தைகளைப் பெற்று அனைவரையும் இஸ்லாமியராக மதமாற்றம் செய்து, பழங்குடியினத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள்” என்று
எச்சரித்தார்.
பழங்குடி
மக்களின் மக்கள்தொகை குறைந்து, இஸ்லாமியர்களது மக்கள்தொகை கூடிவிட்டது; பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பு சுருங்கி, இஸ்லாமியர்கள் வாழும் நிலப்பரப்பு அதிகமாகிவிட்டதென்றும் பொய்யான செய்திகளை எவ்வித ஆதாரங்களும் இன்றி வாய் கூசாமல் கூறினார்.
மகாராஷ்டிராவில்
பேசிய பிரதமர், “நடக்கப் போகும் தேர்தல் ஒரு சட்டமன்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல; சத்ரபதி சிவாஜி மகராஜைக் கொண்டாடுகிறவர்களுக்கும், அவுரங்கசீப்பைப் போற்றுகிறவர்களுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்” என்றார். அவர் மனத்தில் ஏன் இவ்வளவு வக்கிரம்?
அதைப்போல
மகாராஷ்டிராவில் அமித்ஷா ஒரு படி அதிகமாகச் சென்று இந்து மக்களைப் பார்த்து, “இந்தியா கூட்டணி வென்றால் உங்கள் நிலங்களையெல்லாம் எடுத்து வக்பு வாரியச் சொத்துகளாக மாற்றிவிடுவார்கள்” என்று
பயமுறுத்தினார். மேலும், “பட்டியல் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான இடஒதுக்கீட்டை இரத்து
செய்து அந்த இடங்களையெல்லாம் இசுலாமியருக்கு வழங்க இருக்கிறார்கள்” என்றும்
எச்சரித்தார். மற்றும் சில இடங்களில் அரசுப் பணிகளின் ஒப்பந்தங்களில் ஒரு பகுதியை இசுலாமியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்ற காங்கிரஸ் திட்டமிடுகிறது என்றும் பா.ச.க.
பிரச்சாரம் செய்கிறது.
அறுபது
ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியிலும், அடல் பிகாரி வாஜ்பாயின் கூட்டணி ஆட்சியில், ஒரு சிறுபான்மை இஸ்லாமியர் குடியரசு தலைவராகவும், ஒரு சிறுபான்மை சீக்கியர் பிரதமராக இருந்து நடத்திய ஆட்சியிலும் இந்துகளுக்கு இப்படிப்பட்ட எந்தக் கேடும் நடக்காமல் அவர்கள் பத்திரமாகவும்
பாதுகாப்பாகவும் வாழ்ந்தபோது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுமையான சித்தாந்தப் பயிற்சி பெற்ற சுயம்சேவக்குகள் குடியரசு தலைவராகவும், பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கின்றபோது, இந்துகளுக்கு இப்படிப்பட்ட கொடுமைகளெல்லாம் நடந்துவிடும் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்வதை யார் நம்புவார்கள்?
2014-இல் பிரதமர்
இப்படிப் பேசியிருந்தால்கூட அனுபவம் இன்மையால் இப்படிப் பேசுகிறார் என்று நாம் கடந்து சென்றிருப்போம். ஆனால், பதினோர் ஆண்டுகளாக, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன், எதிர்த்துக் கேள்வியே கேட்க முடியாத அதிகாரத்துடன் ஆட்சி செய்த மோடியும், அமித்ஷாவும் இப்படிப் பேசுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
பங்களாதேஷிலிருந்து
பலர் சட்டவிரோதமாக ஜார்க்கண்டில் குடியேறியதால் அங்கு இசுலாமியர்களின் மக்கள்தொகை கூடிவிட்டது என்று குற்றம் சாட்டும் மோடியும் அமித்ஷாவும் யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்? நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தானே உள்ளது! அந்நியரின் சட்டவிரோதக் குடியேற்றத்தை நீங்கள் இருவரும் ஏன் தடுக்கவில்லை? அப்படிச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நீங்கள் ஏன் வெளியேற்றவில்லை? அப்படி வெளியேற்றும் நடவடிக்கைகளை நீங்கள் எடுத்து,
அதற்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனவா?
நம்
நாட்டு இசுலாமியரோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளோ, அயல்நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறும்
இசுலாமியருக்குக் குடியுரிமைகள் வழங்கவேண்டும் என்று உங்களிடம் என்றாவது கேட்டார்களா? இப்படி எந்தச் சூழலும் இல்லாத நிலையில், சட்டவிரோதக் குடியேற்றங்கள்மீது
பதினோர் ஆண்டுகளாக மோடியும் அமித்ஷாவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்? மோடியும், அமித்ஷாவும் செய்த பாவங்களை எதிர்க்கட்சியினர் மீது ஏன் சுமத்த வேண்டும்?
பதினோர்
ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட பா.ச.க.வுக்குத் தங்களது சாதனைகள் என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை! ஏழை
எளிய மக்களின் வாழ்வாதாரங்களை
உயர்த்த எந்தச் சிறப்புத் திட்டங்களையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எந்தப் பெரிய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் கடன்களையும், படித்து விட்டு வேலை
கிடைக்காத மாணவ-மாணவியரின் தவணை தவறிய கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினையும் நிறைவேற்றித்
தரவில்லை. தேய்ந்துகொண்டே
வரும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு முறையான நிதிப்பங்கீட்டை வழங்காமல், நன்றாகச் செயல்படும் மாநிலங்களையும் திவாலாகும் நிலைக்குத் தள்ளியது
என்று அவர்கள் செய்யத் தவறியவைகளை நீண்ட பட்டியலாக எழுதிக்கொண்டே இருக்கலாம்.
‘பதினோர் ஆண்டுகள் அவர்கள் என்னதான் செய்தார்கள்?’ என்று ஒரு கேள்வி எழும். எப்போதோ படித்த ஒரு புதுக்கவிதை என் நினைவுக்கு வருகிறது. பதினோர் ஆண்டுகள் இவர்கள் என்ன செய்தார்கள் என்ற பட்டியல். என்
நினைவில் நின்றதை எழுதுகிறேன். இதுதான் அவர்களின் செயல்பாடு,
‘காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டு!
கடலிலிருந்து
மீனவர்களை விரட்டு!
நகரங்களிலிருந்து
குடிசைவாழ் மக்களை விரட்டு!
டெல்டாவிடமிருந்து
விவசாயிகளை விரட்டு!
சிறு
நகரங்களில் இருந்து சிறுதொழில்,
சிறு
வணிகரை விரட்டு!
மாநிலங்களில்
இருந்து
மண்ணின்
மக்களை விரட்டு!
ஊர்தோறும்
சேரி மக்களை ஓட ஓட விரட்டு!
சிறுபான்மை
மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களைச் சித்திரவதை செய்!
பாசிச
வன்முறை சக்திகளைக் கட்டவிழ்த்துவிட்டு பட்டியல் இன மக்களை மானபங்கப்படுத்தி
வன்கொடுமை செய்!
காட்டைக்
கொழுத்து! கடலை நஞ்சாக்கு!
பூமியின்
மறுபுறம் வரை துளையிடு!
வாயு,
கரி, எண்ணெய் என எதையும் விடாதே!
இயற்கை
வளங்களைப் பன்னாட்டு
கம்பெனிகளின் பகல் கொள்ளைக்குத் திறந்துவிடு!
அரசு
உடைமைகள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் தானம் கொடு!
ஏழை
மக்களின் சேமிப்புகள் அனைத்தையும்
பெரு முதலாளிகளுக்கு
வாராக்கடனாக அள்ளி விடு!
பேச்சுரிமையைப்
பறி! எழுத்துரிமையைப் பறி!
வாழ்வுரிமையைப்
பறி! போராட்ட உரிமையைப் பறி!
சாதி
வெறிக்குச் சாம்பிராணி போடு!
மதவெறிக்கு
ஊதுபத்தி கொளுத்து!
ஏழைகளுக்காகப்
போராடுகின்றவனை உயிருள்ளவரையில் சிறையில் போடு!
நாட்டின்
வளங்களை அனுதினமும் கொள்ளையடி!
அக்கொள்ளைக்குத்
துணைபோவதுதான்
தேசபக்தி
என்று சொல்!
கார்ப்பரேட்டுகள்,
காவிகளின் கால்களை நக்கிக் குடி!
அதை
நாட்டின் மானம் காக்கும் செயல்
என
உன் ஊடக அடிமைகள் ஊருக்குச் சொல்லட்டும்!
எதிர்த்துக்
கேட்போர்
இந்த
மண்ணிலேயே இருக்கக்கூடாது!
அவர்களை
‘இந்து விரோதி’ என அடையாளப்படுத்து!
கல்வியைக்
காவி மயமாக்கு!
இதிகாசத்தை வரலாறு
எனப்
பாடப் புத்தகங்களில் எழுது!
உண்மையான
வரலாற்றின்
மூலங்களையெல்லாம்
அழித்து விடு!
இதைத்
தட்டிக் கேட்பவனை
‘அர்பன் நக்ஸல்’ என்று பிரச்சாரம் செய்!
ஊடகம்
யாவையும் ஊமையாக்கு!
உனக்கு
மட்டும் ஊது குழலாக்கு!
சனநாயக
நிறுவனங்களையெல்லாம்
உன்
ஏவலாள்களால் நிரப்பு!
இந்த
அக்கிரமங்களையெல்லாம்
நியாயப்படுத்த நீதித்துறையை வளைத்துப் போடு!
அதுவும்
முடியவில்லையென்றால் புது சட்டம் போடு!’
இப்படித்தானே
பதினோர் ஆண்டுகளாக ஆட்சி நடக்கிறது! ‘இதையெல்லாம் நாங்கள் செய்தோம்’
என்று அவர்களால் சொல்ல முடியுமா? அதற்காகத் தான் இந்த நாட்டின் சிறுபான்மையின மக்களைப் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார்கள்!
சிலரைச்
சில நாள்கள் ஏமாற்றலாம்.
பலரைப்
பல நாள்கள் ஏமாற்றலாம்.
ஆனால்,
எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது!
‘நம்
வாழ்வு’ நாகர்கோவிலுக்கு
இடம்பெயர்ந்தது குறித்து ‘நம் வாழ்வு’ இதழின் இணை ஆசிரியர் எம்.
ஏ.
ஜோ
அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை (19.05.1985).
‘நம் வாழ்வு’ நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. காரணம்... சில சங்கடங்கள், சில நிர்ப்பந்தங்கள்.
‘நம் வாழ்வு’ இதழின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட பலர் இந்த இடமாற்றத்தைப் பற்றி வேதனையோடு என்னிடம் பேசியிருக்கிறார்கள். ‘நம் வாழ்வு இதழின் எதிர்காலத்தை நினைத்து அவர்கள் வெகுவாய்ப் பயப்படுகிறார்கள்.
அவர்கள்
பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. நாகர்கோவிலுக்குப் போனால் இது மற்றொரு கோட்டாறு மறைமாவட்டப் பத்திரிகையாக மாறிப் போகும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
மறைமாவட்டப்
பத்திரிகைகள் யாவும் ‘ஆமாம் சாமி’ கிரகத்தைச்
சார்ந்திருந்த வேளையில், புதியதொரு சுதந்திரத்தோடு ‘நம் வாழ்வு’ நீதிக்குக் குரல் கொடுத்து, பழமைகளைத் துணிவோடு களைந்துவிட்டு, இளமைக்கும் புதுமைக்கும் திறமைக்கும் ஊக்கம் தந்து, தனக்கென்று ஒரு பாதையை, ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
குற்றங்களைச்
சுட்டிக்காட்டும் இறைவாக்கினருக்கு எப்போதுமே இருப்பதுபோல ‘நம் வாழ்வு’க்கும் எதிர்ப்புகள் இருந்துகொண்டேயிருந்தன. இதனால் நம் வாழ்வை மிரட்டியவர்கள் இருந்திருக்கிறார்கள். முறைத்துக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் திரிந்தவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். இவர்களையும்
மீறி இதுவரை தன் உயிரையும், குரலையும் எப்படியோ காத்துக்கொண்ட ‘நம் வாழ்வு’ இப்போது கோட்டாறு ஆயரின் வீட்டு வாசலுக்குப் போய்விட்டால், தன் சுதந்திரத்தை இழந்து விடும்; பத்தோடு பதினொன்றாய் ஆகிவிடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள்.
இந்தப்
பயங்கள் எல்லாம் தேவையற்ற பயங்கள் என்று நிரூபித்துக் காட்டும் கடமை நம் வாழ்வின் தோள்களில் இப்போது விழுந்திருக்கிறது.
இப்படி
மற்றோர் ஊருக்குக் குடிமாற வேண்டியதன் அவசியமே சில நிர்ப்பந்தங்களால் ஏற்பட்டதுதான்.
சில
வயிற்று வியாதிக்காரர்களுக்குக் காரமே ஒத்துக்கொள்ளாதல்லவா? அதுபோல நம் வாழ்வில் இருந்த சிறிது காரமும் சிலருக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. எல்லாமே தித்திப்பாய், எதனையும் வரவேற்று, எல்லாரையும் பாராட்டி, எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் ‘நம் வாழ்வு’ இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அப்படி அது இல்லாமல் போனதால் கோபப்பட்டு இவர்கள் குமுறினார்கள். ஒழிந்து போகாவிட்டாலும் பரவாயில்லை... இங்கிருந்து வெளியேறினால் சரி என்ற இவர்களின் ஆற்றல் மிகுந்த ஆசை ஒரு காரணம்.
துவக்கத்தில்
‘நம் வாழ்வு’ அச்சிடப்பட்ட நல்லாயன் அச்சகம் விற்கப்பட்டதிலிருந்து, இதழுக்கென்று சொந்தமாய் ஓர் அச்சகம் இல்லாமற்போனது மற்றொரு காரணம்.
தரைக்குக்
கீழே சாமான்களை அடைத்து வைக்கவேண்டிய கிடங்கு - கொசுவும் இருளும் சூழ்ந்த அறையே சில ஆண்டுகளாய் அலுவலகமாக இருந்த அவலத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனது மற்றொரு காரணம்.... இப்படிச் சில நிர்ப்பந்தங்கள்....
‘நம் வாழ்வு’ நாகர்கோவிலுக்குப் போனதால் சில புதிய நம்பிக்கைகள் துளிர்ப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
ஆதியிலிருந்து
இன்றுவரை கோட்டாறு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களே நம் வாழ்வின்மீது உண்மையான அக்கறை கொண்டு உதவி வந்திருக்கிறார்கள். அன்னாரின் அருகாமையும் ஆர்வமும் அக்கறையும் இதழுக்குத் தொலைவிலிருந்து அவர் செய்ய முடியாத பல நன்மைகளை இப்போது
சாத்தியமாக்கக் கூடும்.
துடிப்புடன்
வேகமாய் நடைபோட்ட ‘நம் வாழ்வு’ பொருளாதாரச் சேற்றில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட பிரச்சினையை மிகத் திறமையாய்ச் சமாளித்து மீட்டு வந்திருக்கும் ஆசிரியர் அமலநாதனே தொடர்ந்து ஆசிரியராய் இருக்கப் போகிறார். இனி வரும் பிரச்சினைகளையும் உறுதியாய் நின்று, வென்று காட்டுவார் என்று நாம் நம்ப முடியும்.
ஆசிரியர்
குழுவில் புதியவர்கள் வரப்போவது புதிய சிந்தனைகளுக்கு இடமளிக்கும்.
நம்
வாழ்வில் இணை ஆசிரியனாய்ப் பணியாற்ற ஈராண்டுக் கால ஒப்பந்தத்தில் வந்தவன் நான். அடியேன் வந்து இரண்டு ஆண்டுகள் முடிவதால் இப்பொறுப்பினின்று விடைபெற்றுக்கொள்கிறேன்.
புதுக்குடித்தனம்
துவங்கும் புது வாழ்வு இன்னும் செழித்துச் சிறந்து, சாதனைகள் படைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இடம் மாறினாலும்
இதயங்களிலிருந்து
இடம்
மாறவில்லை!
(‘நம் வாழ்வு’ இதழ் நாகர்கோவிலை நோக்கி இடம்பெயர்ந்த நாள்களில் அன்றைய முதன்மை ஆசிரியர் அருள்பணி. அமலநாதன் அவர்கள் எழுதிய ஆசிரியர் பக்கம் (09.06.1985)
‘நம்
வாழ்வு’ அலுவலகம்
இடம் மாறியதால் வாசகர்களின் இதயங்களிலிருந்தும் இவ்விதழ் இடறி விழுந்துவிடுமோ என்ற அச்சம் என்னுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், அந்த அச்சம் வெறும் பிரமைதான் என்பதை வாசகர்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் கடிதங்கள் - நம் வாழ்வின் புதுப்பிறப்பு பற்றியும், புதிய அம்சங்களைப் பற்றியும், அச்சு வேலைப்பாடுகளைப் பற்றியும் பாராட்டி எழுதப்பட்டவை - இதயத்திற்கு இதமாக இருக்கின்றன.
அலுவலகம்தான்
இடம்மாறியிருக்கிறதே தவிர, ‘நம் வாழ்வு’ மாறவில்லை, மாறாது. ‘தான் தமிழக இறைமக்களின் பொதுச்சொத்து’ என்கிற
தனது நிலையை ‘நம் வாழ்வு’ ஒருபோதும் மறக்காது. வரிக்கு வரி இதனை அழுத்திக் கூற நான் ஆசைப்படுகிறேன்.
‘என் உயிரினும் மேலான வாசகர்கள்’
- வலம்புரியாரின்
வார்த்தைகள் இவை.
‘பத்திரிகையின் உயிர்மூச்சு வாசகர்கள்தான்’
நம்
வாழ்வின் வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் கைகொடுத்த தெய்வங்கள் வாசகர்களாகிய நீங்கள்தான்....
‘நம் வாழ்வு’ வானத்து உச்சியை எட்டிவிட நீங்கள் ஒவ்வொருவரும் ஏணிகளாக இருக்கின்றீர்கள்....
ஏற்றிய
ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் நம் வாழ்வுக்கு இல்லை.
நம்
வாழ்வின் இதயத் துடிப்புக்கூட உங்கள் பெயரைச் சொல்லியே ஒலிக்கின்றது.
நீங்கள்
தொடர்ந்து கொடுக்கும் ஆதரவில் ‘நம் வாழ்வு’ வெற்றிக்குமேல் வெற்றி நடைபோடும் என்பது மறுக்க முடியாத உண்மை....
“படியுங்கள், படித்துக்கொண்டேயிருங்கள்...
இறக்கும்வரை படித்துக்கொண்டே இருங்கள்”
என்கிறார் பிராஷ்யூ என்ற அறிஞர்.
படிப்பதோடு
நிறுத்திக்கொள்வது மடமை
படித்தபின்
சிந்திப்பதுதான் பெருமை
சிந்தித்தபின்
செயல்படுவது நம் கடமை....
வாசகர்களாகிய
நீங்கள் படித்து, சிந்தித்து, செயல்படுகிறீர்கள் என்பதற்கான அடையாள முத்திரைகள்தான் நீங்கள் அனுப்பிய அஞ்சல் அட்டைகள்.... பிராஷ்யூவின் வார்த்தைகளையே மீண்டும் சொல்கிறேன்... ‘படித்துக்கொண்டேயிருங்கள்’. காரணம்,
நிறையப் படிப்பதன் மூலம் அறிவு வளர்கிறது. அறிவின் மூலம் பண்பாடு வளர்கிறது....
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய மதிப்புகளையும், கொள்கைகளையும் கற்றுக் கொள்ள, பரப்புரை மேற்கொள்ள ஓர் அழைப்பு.
இரு
நூற்றாண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்த இந்தியா, சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் சுதந்திரத்திற்காக உழைத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மனத்தில் எழுந்த கேள்விகள் பல. ‘இந்தியா யாருக்கு உரிய நாடு? இந்நாட்டின் உரிமையாளர்கள் யார்? இந்த நாடு எப்படிப் பயணிக்க வேண்டும்? இந்த நாட்டை ஆள்வோரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? நாட்டை ஆள்வோருக்கான அதிகாரங்கள் எவை? இந்தியக் குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் என்னென்ன? இந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரின் நிலை என்ன? அவர்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? குழந்தைகள், பெண்களின் நிலை என்ன? அவர்களின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்?’ போன்ற எண்ணற்றக் கேள்விகளுக்குப் பதிலாய் உதித்ததுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் - இந்தியாவின் 140 கோடி மக்களின் இலட்சியக் கனவாகும். மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் பாதுகாப்புக்
கவசமாகும். சட்டப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட உத்தரவாதங்களாகும். பன்மைத்துவத்தில் ஒருமைப்பாட்டின் அடையாளமாகும். யாரும் பாகுபடுத்தப்படாமல் வாழ உதவிடும் சமத்துவ தத்துவ நூலாகும். மக்கள் நலனை மையப்படுத்திச் செயல்பட அரசுக்கு வழிகாட்டும் நெறி முறைகளாகும். நீதிமன்றத் தீர்ப்பு வழங்கிட உதவிடும் அடிப்படைச் சட்ட ஆவணமாகும். சுருங்கக் கூறின், “இது வெறும் ஒரு சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமன்று; மாறாக, ஒரு மாபெரும் சகாப்தத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வழிகாட்டி”
என்றார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
இது
இந்திய நாட்டின் அரசியல்துறைக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் அடிப்படை மனித மதிப்புகளை உயர்வாகக் கருதவும், நீதி நேர்மையான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் இது வழிகாட்டுகிறது. உலகில் வேறு எந்த ஓர் அரசியலமைப்பும் தராத பொதுநலன் மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குத் தந்திருக்கிறது.
இந்திய
அரசியலமைப்பின் மதிப்புகளான பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் இயக்கமாக ஒருங்கிணைந்து செயலாற்றும் சுதந்திரம் போன்ற தனி மனிதச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்தச் சுதந்திரங்கள் சாதி, சமய, பாலினம் அல்லது வேறு எவ்விதப் பாகுபாடு காட்டுவதையும் தடுப்பதற்கும், சம உரிமைகள்- சம
வாய்ப்புகளை அனுபவிப்பதற்கும், அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவ வாழ்வை உறுதி செய்வதற்கும், அனைத்துத் தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படவும், ஒரு நீதியான சமூகத்தையும், சனநாயக அமைப்பையும் உருவாக்கிடவும் உறுதுணை செய்கிறது.
மேலும்,
சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினரின் மேம்பாட்டை
உறுதி செய்தல், அவர்களின் நலன் மற்றும் வாழ்வை மேம்படுத்துதல், பொருளாதாரச் சமத்துவத்தை உறுதி செய்தல், இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், மக்களிடையே நல்லுறவையும் அமைதியையும் எற்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.
இது
கூட்டாட்சி முறை அரசை உறுதி செய்கிறது. சமயச் சார்பற்ற அரசை வலியுறுத்துவதோடு, ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அரசின் மூன்று இயந்திரங்களான சட்டம் இயற்றுதல், நிர்வகித்தல், நீதியை நிலைநாட்டுதல் என்று ஒவ்வொன்றிற்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது.
இவ்வளவு
அருமையாக எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எத்தனை குடிமக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? இது மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் அறிந்திருக்க வேண்டிய மதிப்புக்குரிய கொள்கைகள் அல்லவா! இது இந்தியாவின் ஆன்மா; இது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகளின் / குடிமகனின் சமய நூல் அல்லவா! இத்தைகைய உன்னத நூலுக்குத் தகுந்த மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறதா?
75-ஆம் ஆண்டு நினைவு
நாள்
1947-ஆம் ஆண்டு
நவம்பர் திங்கள் 26-ஆம் நாள் நமது அரசியல் நிர்ணய அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனைச் சட்டமாக இயற்றி நமக்கு நாமே வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75-ஆம் ஆண்டு நினைவு நாளானது 2024-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26-ஆம் நாள் வருகிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். இது நடைமுறைக்கு வந்த 1950-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26-ஆம் நாளைத்தான் நாம் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
இந்தியக்
குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருடைய மனத்திலும், குறிப்பாக
மாணவ-மாணவியர் மனத்தில் ஆழமாகப் பதியும் வண்ணம் வருகின்ற 2024 நவம்பர் திங்கள் 26 முதல் 2026 சனவரி திங்கள் 26 வரை 14 மாதங்கள் தொடர் கொண்டாட்டமாகக்
கொண்டாடுவது நாட்டில் சமூக, சமய அமைதியையும், நல்லிணக்கத்தையும், சகோதர உறவையும் வளர்த்தெடுக்கும் முயற்சியாகக் கட் டாயம் அமைந்திடும். இந்தக்
கொண்டாட்டமானது குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அரசு பார்க்கும் வண்ணம் கல்வி நிறுவனங்களிலும், குடிமைச் சமூகங்களிலும், சமய வழிபாட்டுத் தலங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் கொண்டாடப்பட வேண்டும்.
இது
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தையும், அது வழங்கிடும் மதிப்புகளையும், கொள்கைகளையும் நமதாக்கிக் கொள்வதற்கான நல்வாய்ப்பு. அதைப் பிறருக்கு அறிவிப்பதற்கான கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.
இந்திய அரசியலமைப்புச்
சட்டக்
கொண்
டாட்டம்
இந்தியா
சுதந்திரம் பெற்ற 75-ஆம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாகக்
கொண்டாடியது நமக்கு நினைவிருக்கலாம். அது 2022 மார்ச் திங்கள் 12-ஆம் நாள் தொடங்கி 2023 ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் வரை 75 வாரங்கள் கொண்டாடப்பட்டது. இதனை ஒன்றிய அரசும், மாநில அரசும் முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாகக் கொண்டாடின. இது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்திய 75-ஆம் ஆண்டு
நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்கான எந்த அறிவிப்போ, திட்டமிடலோ இதுவரை நடைபெறவில்லை.
ஆனால்,
வருகின்ற நவம்பர் 26-ஆம் நாள் இரு பாராளுமன்ற அவைகளும் ஒன்றிணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகிய நாளை ஒரு சாதாரண நினைவுக் கொண்டாட்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
ஏன்
இதனை இந்திய மக்கள் அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாகக் கொண்டாட அழைக்கப்படவில்லை? அனைத்து மக்களோடும் இணைந்து கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏன் உருவாகவில்லை? மக்கள் இதனைத் தெரிந்து கொண்டால், இதன் மதிப்புகளையும், கொள்கைகளையும் உள்வாங்கினால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு செயல்படும்பொழுது மக்கள் கேள்வி கேட்பார்கள். எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என்பதை அறிந்துதான் இந்தக் கொண்டாட்டத்தை அரசு விரும்பவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்திய
மக்கள்தொகையில் 50%-க்கு மேல்
குழந்தைகளும், இளைஞர்களுமே! இவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். இவர்களில் எத்தனை நபர்களுக்கு இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் பற்றித் தெரியும்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் அறிந்தால், சமூகத்தில் அதிகாரமிக்கவர்களாகவும் அங்கீகாரம் பெற்றவர்களாகவும் மாறுவார்கள். இது இவர்களது உரிமைகளைப் பற்றியும், பொறுப்புள்ள குடிமகளாக /குடிமகனாக வாழ்வது குறித்தும் கற்றுத்தருகிறது.
ஆகவே,
சனநாயகம், குடியாட்சி சுதந்திரம், சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் போன்றவைகளைக் கருப்பொருளாகக் கொண்ட விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும்,
நம் அனைவரையும் இந்திய நாட்டின் குடிமக்களாக இணைக்கவும், நாட்டுப்பற்றை உருவாக்கவும், பிரிவினைவாதம், பகையுணர்வு, வெறுப்புணர்வு போன்றவற்றை விட்டுவிட்டு ‘நாம்’ என்ற உணர்வில் வளரவும் இக்கொண்டாட்டம் தூண்டுதலாக அமைய வேண்டும்.
இறுதியாக,
இந்தியாவில்
ஒரு மதிப்புமிக்க, விலைமதிக்க முடியாத ஒரு புதையல் இருக்கிறது என்றால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே! இது பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். இது
இந்தியராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகளை / குடிமகனை அதிகாரமிக்கவராக மாற்றுகிறது. இப்படி நிகழும்பொழுது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் அதிகாரம் மிக்கதாகவே மாறுகிறது. இது இந்தியர் அனைவரையும் ஒரே குழுமத்தின் உறுப்பினர்களாக இணைக்கின்ற சக்தியாகும், இந்தச் சக்திதான் இந்திய நாட்டை வலிமைமிக்க, வளமைமிக்க நாடாக மாற்றும் என்பது உறுதி.
குறிப்பு: இக்கொண்டாட்டத்திற்கு உதவியாக 120 பக்கங்கள் அடங்கிய ‘இந்திய அரசியல் சாசனம்- இந்தியாவின் ஆன்மா’ என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வு பெறவும், பரப்புரை, கருத்துரை வழங்கவும் இந்நூல்
பரிந்துரைக்கப்படுகிறது.
(விலை
35, தொடர்புக்கு: வழக்கறிஞர் சந்தனம் சே.ச. 63802 55324. 99435 70083).
பேரறிஞர் அண்ணா எழுதிய நாடக நூல் ‘நீதி தேவன் மயக்கம்.’ இராவணன் இரக்கமில்லா அரக்கன் என்ற கம்பரின் தீர்ப்பு! தீர்ப்பைச் சீராய்வு செய்ய இராவணனே நாடகக் காட்சிகளில் தனக்காக வாதிடுகிறான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் இராவணனின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நீதிதேவன் மயக்கம் அடைகிறான். இந்தியச் சமூக அமைப்பில் இராவணன் திராவிடத்தின் குறியீடாகக் கட்டமைக்கப்படுகிறான்.
தேசத்தில்
மறுக்கப்படுகிற சமூக நீதிக்கு உரிமைக் குரல்கள் எழுப்பப்படுவது தார்மீகமும், அடிப்படை அறனும், நீதி பரிபாலனம் மீதான முழு நம்பிக்கையையும் கொண்டதாகும். அது சமூகச் சமத்துவத்திற்கும், மானுடத் தர்மத்திற்கும் உட்பட்டது. நீதிமன்றங்களே இந்திய
அரசியலமைப்பில் சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கை. வழக்கறிஞர்கள் மூலம் தங்கள் கண்ணீர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாமர மக்கள் நீதியரசர்கள் முன் வருகிறார்கள்.
நீதி
தேவதை யாருக்காகவும், எதற்காகவும் நீதியை வளைக்கக்கூடாது; தராசின் தட்டுகள் சரியாக இருக்க, துலாக்கோல் மையப்பட வேண்டும். நீதியின் முன் அனைவரும் சமம், யார் எனத் தெரியக் கூடாது என நீதி தேவதையின்
கண்களில் கறுப்புத் துணி. அந்தக் கறுப்புத் துணி வேறு வண்ணம் மாறிடக் கூடாது என்பதே நம்
ஆதங்கம்.
மதுரை
உயர் நீதிமன்றக் கிளையில், தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் குறித்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வருகிறது. வழக்கில் முன்பே, இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவர் அமர்வில் இருக்கிறார். தமிழ்நாடு அரசிற்காக வாதிடுகிற மூத்த வழக்கறிஞர் வில்சன் இதைச் சுட்டிக்காட்டி வாதத்தைத் துவங்குகிறார். கடுங்கோபம் கொண்ட மற்றொரு நீதிபதி ஆர். சுப்பிரமணியம், வில்சன் கேட்காத, ஆட்சேபம் தெரிவிக்காத நீதிபதி குறித்த விவரங்களைத் தானே கற்பனை செய்து, ‘நீங்கள் யார் அதை முடிவு செய்ய?’ எனக் கண்ணியக் குறைவாகப் பேசுகிறார்.
இந்தக்
காட்சிகள் யாரோ ஒருவரால், நீதிமன்ற அனுமதியின்றி
பதிவு செய்து, எடிட் செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் ‘வில்சனுக்கு நீதிபதியிடம் விழுந்த டோஸ்’ என்ற வகையில் பரப்பப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், “நீதிபதி கோபமாகப் பேசுகிறார். தவறாகப் புரிந்துகொண்டது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் தன்னிலை விளக்கம் அளிக்கிறார்” என்று
கூறுகிறார்.
முன்னாள்
நீதியரசர் சந்துரு ஒருபடி மேலே போய் சொல்கிறார்: “நீதிபதியின் உள்மனத்தில் இருப்பதைப் பேசக்கூடாது. நீதிபதி ‘நீ ராஜ்யசபா உறுப்பினர்தானே?
அங்கே போய் இப்படிப் பேசு’ எனக் கடுமை காட்டுகிறார்” என்கிறார்.
தமிழ்நாடு
- புதுச்சேரி வழக்கறிஞர்
சங்கமும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் “வழக்கறிஞர்களைக் கண்ணியத்தோடு நடத்த வேண்டும்; நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட விதிமுறைகளை வகுக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்”
என்ற கோரிக்கைகளை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முன் வைத்தனர்.
அகில
இந்திய வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஆதிஷ்
அகர்வாலாவும், தங்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கோரிக்கையும், புகாரும் வைத்தார். இம்மியளவும் கண்டனங்கள் பதியப்படவில்லை என்பதே வழக்கறிஞர்களின் கையறு நிலை. நீதிபதி வழக்கை வேறு அமர்விற்கு மாற்றியும், ‘நீதிமன்ற அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்தது யார்?’ என விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கொஞ்சம்
பின்னோக்கிப் போவோம்: தமிழ் நாட்டின் தெற்கு, வடக்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறுகள் கட்டிக்கொண்டு பள்ளிகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. இது சாதிய ரீதியான குழு மோதல்களுக்கு வழிவகுத்தது. அடிதடிகள் பள்ளி வளாகத்தில், தெருக்களில் நடந்தன. தமிழ்நாடு அரசு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்துத் தீர்வு தேடியது. ‘வண்ணக் கயிறுகள் கட்டத் தடை’ எனப் பரிந்துரைக்கப்பட்டு, அரசாணைகள் வந்தன.
அந்நேரத்தில்
வேறு ஒரு வழக்கில், தேவை இல்லாமல் வழக்கிற்குச் சம்பந்தம் இல்லாமல் பேசிய நீதிபதி ஆர். சுப்பிரமணியம், “அந்த அறிக்கை
வந்ததிலிருந்துதான் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு, நீதிமன்றம் வருகிறேன்”
எனத் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதுபோன்றே
கடந்த மாதங்களில் நடந்த ஜக்கி வாசுதேவ் குறித்த வழக்கும் கவனம் கொள்ளக்கூடியதே. தன் இரண்டு மகள்களைச் சட்ட விரோதமாக கோவை ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைத்திருப்பதாக அவர்களது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தார். கோவை, ஈஷா யோகா மையத்தின் மீதுள்ள வழக்குகளுக்காக அங்குள்ளவர்களை விசாரிக்க காவல்துறைக்குச் சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்குத் தடை கோரிய கோவை ஈஷா யோகா மையத்தின் கோரிக்கை வழக்கின்போது, அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தனக்கு மாற்றிக்கொண்டது. வழக்கு விசாரணை அறிக்கை தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை,
ஈஷா யோகா மையத்தின்மீது வன அழிப்பு, வன
இட ஆக்ரமிப்பு, யானைத் தடம் அழிப்பு, அனுமதியின்றி விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டுவது, பாலியல்
குற்றச்சாட்டுகள், போதை பொருள்கள் உபயோகம், ஆள்கள் காணாமல் போதல், அரசின் அனுமதியின்றித் தகன மேடை அமைத்தது எனச் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகள் அதிகம். ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, நகராமல் நிற்கின்ற நிலை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவ் குறித்து தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய பொதுவெளிக் குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாத மாமனிதராக ஜக்கி
இருக்கிறார்.
உச்ச
நீதிமன்றம் அவரது கடந்த மாத வழக்கில் இவ்வாறு சொல்கிறது: “ஈஷா போன்ற ஒரு நிறுவனத்திற்குள் நீங்கள் இராணுவத்தையோ அல்லது காவல்துறையையோ அனுமதிக்க முடியாது.”
இது
யாரின், எந்த மனநிலையைக்
காட்டுகிறது? என்பதை உங்கள் யூகங்களுக்கே விட்டு விடுகிறேன். ஆயிரம்
குற்றச்சாட்டுகள் உள்ள ஈசா, சட்டப்படி தன்னை நிரூபித்து வெளி வந்தால் மட்டுமே, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்பதே நடுநிலையாளர்களின் நம்பிக்கை.
இருப்பினும்
வரலாற்றுச் சம்பவம் ஒன்றை இங்குப் பதிந்தே தீர வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. 03.06.1984 அன்று அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘நீல நட்சத்திர நடவடிக்கை’
என்ற பெயரில் இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது. சொல்லப்பட்ட காரணம்: ‘காலிஸ்தான் எனும் தனி சீக்கிய நாடு
கோரும் தீவிரவாதிகள் பொற்கோவிலில் இருந்தார்கள்; அதன் தலைவர் பிந்தரன் வாலேவும் இருந்தார்’
என்பதே.
பொற்கோவில்
சீக்கிய மத நூலான ஆதி
கிரந்தம் வைக்கப்பட்டுள்ள புனித இடம். பொற்கோவில் சீக்கியர்களின் மத நம்பிக்கையின் முழு
அடையாளம். இன்றும் சீக்கியத் தன்னார்வலர்களால் தினம் இலட்சம் பேருக்கு உணவளிக்கிற கோவில். அத்தகைய பொற்கோவிலில் குண்டு மழை பொழிந்தது. இதனால், இந்திய இராணுவத்தில் கலவரம், இந்திரா காந்தி படுகொலை, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை என இரத்தம் தோய்ந்த
வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.
வரலாறு
ஒருபோதும் பின்னோக்கிப் போகாது; போகவும் கூடாது.
இந்தியத் திருநாட்டின் 50-வது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ள நீதிபதி D.Y. சந்திரசூட் அவர்களிடம் ஓர் இந்திய சாமானியன் எழுப்பும் சில பல கேள்விகள்.
தேர்தல்
பத்திரங்கள் வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்காமல், பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஆளும் கட்சி வசூல் செய்து முடித்த பின்னர், ‘அது சட்ட விரோதமானது’ என்று
தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிநாயகம் சந்திரசூட் அமர்வு, பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதற்கோ அல்லது தவறாக நன்கொடை என்ற பெயரில் வசூல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்மீது விசாரணை செய்வதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?
சண்டிகர்
நகர மேயர் தேர்தலை முறைகேடாக நடத்திய அயோக்கியத்தனமான அதிகாரியைக் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு, அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று விஷயம் தெரிந்த வர்கள் யாரும் கேட்கமாட்டார்களா?
மகாராஷ்டிராவில்
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஷிண்டே-பட்னாவிஸ்-அஜித் பவார் பாவக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநரின் செயல்கள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துவிட்டு, நடவடிக்கை எடுக்கும் பொறுப்பைச் சபாநாயகரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு, முறையாக நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முறையற்ற அரசைப் பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது மாபெரும் வரலாற்றுப் பிழை என்று நாளைய சரித்திரம் சொல்லாதா?
மலைவாழ்
மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய 84 வயது ஸ்டேன்ஸ் சுவாமியை, ‘நக்சலைட் தீவிரவாதி’
என்று பொய் வழக்கில் கைது செய்து, விசாரணையே இல்லாமல் சிறையிலடைத்து, சிறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், “என் மக்கள் மத்தியில் நான் சாக விரும்புகிறேன்; அதற்காக என்னைப் பிணையில் விடுங்கள்”
என்று அவர் மன்றாடியபோது, உச்ச நீதிமன்றம் பிணை வழங்காமல், அவர் சிறையிலேயே இறந்து போனாரே... அந்த வழக்கு என்ன ஆனது என்று எந்த நீதிநாயகமும் இதுவரை கேட்கவில்லையே! இது நியாயம்தானா? என்று அவரது ஆன்மா கேட்காதா?
இந்தியாவின்
மிகப்பெரிய பணக்காரரான அதானியும், அவரது நிறுவனங்களும் பங்குச் சந்தையிலும், கம்பெனிச் சட்ட வாரியத்திலும் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிட்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்தபோது, ‘அந்த அறிக்கை தவறாக இருந்தால் அமெரிக்காவில் நீதிமன்றங்களில் ஹிட்டன்பர்க் மீது நடவடிக்கை எடுங்கள்’
என்று அதானியிடம் சொல்லாமல், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, அந்தக் குழுவும் எங்களால் முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிய பின்னரும், அந்த அறிக்கையையே சாதகமாக்கிக்கொண்டு அதானி நிறுவத்திற்கு நன்னடத்தைச் சான்று வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதானா?
காஷ்மீர்
மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக மாற்ற சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் 371 பிரிவின் முக்கிய உள்ளடக்கத்தைப் புறந்தள்ளி, சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்த வேளையில், குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவரைக் கலந்து அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என்ற தங்களது தீர்ப்பு மிகவும் விநோதமானது மற்றும் வேடிக்கையானது என்று அரசியல் சாசன விற்பன்னர்கள் கூறுகிறார்களே, அது உங்கள் செவிகளை எட்டியதா?
எந்த
விசாரணையும் இல்லாமல், தீர்ப்பும் சொல்லப்படாமல் நான்கு ஆண்டுகளாக உமர் காலித் எனும் ஏழை இஸ்லாமிய இளைஞர் சிறையிலடைக்கப்பட்டுள்ளாரே...
அவருக்கு இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உரிமைகள் ஏதாவது உண்டா? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகளின் சப்தம் எங்கள் காதுகளைச் செவிடாக்குகின்றனவே! உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு அது எட்ட இன்னும் எத்தனை நாள்கள் ஆகும்?
சாரி!
மை லார்ட்...
உச்ச
நீதிமன்றத்திலும், பல உயர் நீதிமன்றங்களிலும்
சில நீதி அரசர்கள் நடந்துகொள்வதும், அவர்கள் பேசுவதும் நீதிபரிபாலனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நாங்கள் எல்லாரையும் குறைசொல்லவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரது செய்கை நீதி பரிபாலனத்தினையே களங்கப்படுத்துவதைத் தாங்கள் அறியவில்லையா? அப்படிப்பட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தயங்குவது ஏன்?
சமீபத்தில்
தனக்கு முன் வாதாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் வழக்கறிஞரைப் பார்த்து ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி எவ்வளவு ஆபாசமானது! அதற்கு ஒரு கண்டனம் மட்டுமே போதுமானதா?அந்த நீதிபதி வருத்தம் தெரிவித்தால் சரியாகிவிடுமா? அவரை நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை அறிவோம். அந்த நீதிபதி ஆறு மாதங்களுக்கு எந்த வழக்கையும் விசா ரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும் ஓர் அமர்வில் அமர்ந்து ஓர் உத்தரவு போடமுடியாதா?
தங்களது
பள்ளி வாசல்களுக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொண்டிருக்கும்போது, பாசிச வெறிகொண்ட வன்முறையாளர் கூட்டம் உள்ளே புகுந்து ‘ஜெய் ஸ்ரீராம்’
என்று கோஷம் போடும்போது, ‘சமூக அமைதியைக் கெடுத்தார்கள்’ என்று
அவர்கள்மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தால், ‘ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குவது சமூக அமைதியைக் கெடுக்காது’ என்று
கூறி, அவர்கள்மீது போட்ட வழக்கை ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி இரத்து செய்தாரே... அப்படிப்பட்ட தீர்ப்புகளெல்லாம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்குச் சட்டத்தின் ஆட்சி மீதும், நீதிமன்றங்களின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையைக் குலைத்துவிடாதா? இப்படித் தீர்ப்பு எழுதுகின்றவர்களையும் நாங்கள் ‘நீதி நாயகம்’ என்று எத்தனை நாள்கள் அழைக்க வேண்டும்?
இவைகளெல்லாம்
ஓய்வு பெறப்போகும் உங்களுக்கான கேள்விகள் மட்டுமல்ல, உங்களைத் தொடர்ந்து உங்களது ஆசனத்தில் அமர இருக்கின்றவருக்கும், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதி அரசர்களுக்கும் வைக்கப்படும் கேள்விகள் மட்டுமல்ல; கோரிக்கைகளும் கூட!
சமீப
காலமாக பா.ச.க.
மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரதிய அதிவக்த பரிஷத் (Akhil Bharatiya Adhivakta Parishad - ABAP) அமைப்பின் ஆளுகையும், செல்வாக்கும் நீதித்துறையில் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லியிலும், மாநிலத் தலைநகர்களிலும் அடிக்கடிக் கூட்டப்படும் இந்த அமைப்பின் கூட்டங்களில் இந்நாள் மற்றும் மேனாள் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டு, இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பாடம் எடுப்பதும், விவாதம் நடத்துவதும் வாடிக்கையாக நடக்கின்றன. 1992-ஆம் ஆண்டு தத்தோபந்த் தெங்காடி எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவரால் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று 15,000 உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தொடுக்கின்ற வழக்குகளையும், அவர்கள்மீது தொடுக்கப்படுகின்ற வழக்குகளையும் இந்த அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள்தாம் நடத்துகின்றனர். பா.ச.க.
ஆளும் மாநிலங்களிலும், ஒன்றிய அரசு நிர்வாகத்திலும் இந்த அமைப்பினர்தாம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாகப் பெரும்பாலும் நியமனம் செய்யப்படுகின்றனர். இன்று உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 33 நீதிபதிகளில், ஒன்பது பேர் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்கிறார்கள் (பி ஆர் கவாய்,
சூரியகாந்த், ஜே கே மகேஷ்வரி,
பி வி நாகரத்னா, பங்கஜ்
மித்தல், இராஜேஷ் பிண்டல், கே வி விஸ்வநாதன்,
உஜல் புயான், பி பி வராலே).
மாநிலங்களில் இந்த அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பல உயர் நீதிமன்ற
நீதிபதிகள் அடிக்கடிக் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் திண்டுக்கல்லில் இந்த அமைப்பினர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் நமது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த
அமைப்பை தெங்காடியோடு சேர்ந்து உருவாக்கியவர்களின் பெயர்களைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஈ.எஸ். வெங்கட
ராமையா (இவரது மகள் நாகரத்னா தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி), மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பிஸி கன்னா (வரப்போகும் தலைமை நீதிபதியின் தந்தையின் சகோதரர்), மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உதய் லலித்தின் தந்தை உமேஷ் தலித், பஞ்சாப் ஹரியானா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இரமாஜாய்ஸ் என்று பல மேனாள் நீதி
அரசர்கள் இதன் காப்பாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இன்று இந்த அமைப்பைச் சார்ந்த பல வழக்கறிஞர்கள் பல
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மானன் மிஷ்ராவும் இந்த அமைப்பைச் சார்ந்தவரே.
அரசியல்
சட்டத்தை மாற்றாமல், தங்களுக்கு அனுசரணையாகச் செயல்படும் நீதித்துறையின் மூலமே தங்களது அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுதியாக இருப்பதாக அவர்களோடு தொடர்பில் இருக்கின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஒன்றிய
சட்ட அமைச்சரைப் பார்ப்பதற்காக ஒரு மாநிலச் சட்ட அமைச்சர் சென்றிருந்தபோது அந்த அலுவலகத்தில் அவர் கண்ட காட்சியில் அவர் அதிர்ந்து போனாராம்! அமைச்சரின் பார்வையாளர் அறை முழுவதும் இருக்க இடமில்லாமல் உட்கார்ந்திருந்த அநேகர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாம்! தங்களது பதவி மாறுதல்களுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் சட்ட அமைச்சரைச் சந்திக்க வந்திருப்பதாக அங்கிருந்த ஒருவர் கூறியதாகக் கூறினார்.
சுதந்திரம்
பெற்று, சனநாயகம் கிடைத்து, நம்மை நாமே சட்டத்தின் ஆட்சி மூலம் ஆளும் அதிகாரம் பெற்று இன்னும் நூறு ஆண்டுகளைக்கூட நிறைவு செய்யவில்லை. அவைகளைத் தொலைத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது! அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட நீதித்துறை (Indoctrinated judiciary)
சனநாயகத்தின், சட்டத்தின் ஆட்சியின் அழிவின் துவக்கம்!
கண்ணதாசன்
பாடியதுதான் நினைவுக்கு வருகிறது:
‘மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்!
கங்கையே
சூதானால் என்ன செய்வது?’
சாரி! மை
லார்ட்ஸ்!
அண்மையில் அக்டோபர் 22 அன்று வெளிவந்த நாளிதழ்கள் சமயச் சார்பின்மை தொடர்பான மூன்று செய்திகளைத் தந்துள்ளன. மூன்றினுள் சமயச் சார்பின்மை பற்றிய நம்பிக்கை தரும் செய்தியும் உண்டு; அவநம்பிக்கையைத் தக்கவைக்கும் செய்தியும் உண்டு. ‘சமயச் சார்பின்மை’ என்பது வெறும் முழக்கமல்ல; சமயச் சார்பின்மை சமயச் சார்பற்ற சனநாயகச் சக்திகளின் தேர்தல் நேரத்து அறிவிப்புகளில் ஒன்றுமல்ல.
விடுதலை
பெற்ற இந்தியா இரு நாடுகளாகப் (Two nations)
பிரிக்கப்பட்ட நிலையிலும், இரு நாடுகளில் ஒன்று மத அடிப்படையில் உருவான
போதும், இந்திய அரசியல் நிர்ணய சபை ‘அரசமைப்பின் மூலம்’ இந்தியாவை இறையாண்மையோடு கூடிய சனநாயகக் குடியரசாகவே அறிவித்தது. ஆம்! அரசியல் சாசனத்தின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சமத்துவம் (Socialism) என்ற
வார்த்தைகள் இடம் பெறவில்லை என்பதும் உண்மைதான். இந்திய அரசமைப்பின் முகப்புரையில் 1976-ஆம் ஆண்டு திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் சமயச் சார்பின்மை (Secular), சமத்துவம்
(Socialism) என்ற
இரண்டு சொற்களும் இணைக்கப்பட்டன.
“விடுதலை பெற்ற இந்தியா சந்திக்கவிருக்கும் சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்?” என்ற வினாவைப் பண்டித நேருவிடம் முன்வைத்தபோது அவர், “ஒரு சமயம் சார்ந்த நாட்டில் சமயச் சார்பற்ற சமூகத்தைக் கட்டுவதே”
(create a sender state in a religious
society) என்று பதிலளித்தார். இச்சவாலைக் கையிலெடுத்து, சமயச் சார்பின்மையை வலிந்து நிலைநிறுத்தியவர்களில் முதன்மையானவருள் பண்டித நேரு என்றும் போற்றுதற்குரியவர். இரு வேறுபட்ட முரண்பட்ட கொள்கைகளில் வளர்ந்த தேசிய இயக்கத்துள் ஒன்றான இந்து தேசியர்கள் சமயச் சார்பின்மையையும், சமத்துவத்தையும் எப்போதுமே ஏற்காதவர்கள். இந்திய அரசியல் சாசனம் தந்த சமயச் சார்பின்மையை ‘போலி மதச்சார்பின்மை’ (Psecedo Secular) என்று கேலி செய்பவர்கள்; சமத்துவம் இவர்களின் முதல் எதிரி. ஆர்.எஸ்.எஸ். என்ற மூலஅமைப்பும், அதன் துணைப் பரிவாரங்களும் இவைகளோடு ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் முன்னணியான அன்றைய பாரதிய சனசங்கமும், இன்றைய பாரதிய சனதா கட்சியும் என்ன கூறி வந்தன?
‘நாங்கள் முழுப் பெரும்பான்மை அடையும் நிலையில் அரசமைப்பை மாற்றுவோம்’ என்ற
பாரதிய சனதா கட்சி, வாஜ்பாய் தலைமையில் ஆட்சியேற்றபோது, தாம் ஏற்கெனவே உறுதியளித்தபடி, அரசமைப்பை மாற்றியமைக்க நீதியரசர் வெங்கட செல்லையா தலைமையில் குழுவொன்று அமைத்தது. இக்காலத்தில் நல்வாய்ப்பாக இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு. கே.ஆர். நாராயணன்.
இக்குழு உருவாக்கத்திற்கு அனுமதியளித்த நாராயணன், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மாற்றக்கூடாது என்பதில் உறுதி காட்டினார். இக்குழுவும் தன் பரிந்துரையை அடிப்படைக் கூறுகளில் எந்தவித மாற்றமும் செய்யாமலேயே சமர்ப்பித்தது. ஆனால், இன்று அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு கட்சி ஆட்சிக் கட்டிலேறி ஆண்டுகள் பத்தான நிலையில், அரசமைப்பின் அடிப்படைக்கூறுகளை நாளும் சிதைத்து வருதலை இந்தியா பார்த்து வருகிறது.
இந்திய
அரசமைப்பின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் ஏற்கெனவே இடம்பெறா நிலையில் இவ்வார்த்தைகள் அகற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் திரு. சுப்பிரமணிய சுவாமி. இவ்விரு கோட்பாடுகளும் மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதால் எதிர்த்த இவர்கள், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அரசியல் சாசன முகப்புரையில் இடம்பெறாமையால் நீக்கப்பெற வேண்டும் என்று பொய்க்காரணம் காட்டி வழக்காடினர். உச்ச நீதிமன்றம் இங்கும் சரியாகவே தீர்ப்பளித்தது.
“சமயச் சார்பின்மை இந்திய அரசமைப்பின் மறுக்க முடியா அடிப்படைக் கூறு” மீண்டும் மதச் சார்பின்மை எப்போதுமே அரசமைப்பின் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம்
போலவே சமயச் சார்பின்மையும் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சோசலிசம் என்ற கொள்கையை மேலைநாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தல் தவறு என்றும், சமவாய்ப்பு மற்றும் சமூக வளங்களைச் சமமாகப் பகிர்தலே இந்திய சோசலிசம் என்றும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
உச்ச
நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் சனநாயகச் சக்திகள் பெருமகிழ்வு கொள்ளலாம். 2014-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் ஆட்சி பாரதிய சனதா வசம் சென்றபோது, ஏற்கெனவே எழுந்த அரசமைப்பின் முகப்புரையின் சாராம்சம் குறித்த அச்சம் மக்கள் சிலரிடம் இருந்தது. அவ்வச்சத்தை உண்மையாக்கும் வகையில் அவ்வாண்டு நடைபெற்ற குடியரசு விழாவுக்கான அரசின் அழைப்பிதழில், அரசமைப்பின் பிரதான கூறுகளான சமயச் சார்பின்மையும், சமத்துவமும் விடப்பட்டிருந்தன என்று சொல்வதைக் காட்டிலும், திட்டமிட்டுக் களவாடப்பட்டன என்றே சொல்லலாம். திட்டமிட்டு நடத்தப்பட்ட இக்களவாடலுக்குக் காரணமான அரசு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அரசமைப்புச்
சட்டத்தின்மீது கைவைத்து உறுதி மொழியேற்று, பதவியேற்கும் சங்கப் பரிவாரங்கள், அரசமைப்பு முகப்புரையின் கூறுகள் அனைத்தையும் நாளும் மீறிக்கொண்டே அரசியல் அமைப்பு தினக் கொண்டாட்டத்தை அறிவிக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை, தான் வேதமாகப் போற்றுவதாக மோடி கூறுகிறார். மதவாதப் பாரதிய சனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சனநாயகமும், அரசமைப்பும் பறிபோய்விடும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியது கண்டு, மோடி கோபம் கொண்டார். எதிர்க்கட்சிகளைக் கண்டபடி வசைபாடி கேலி செய்தார்.
சமயச் சார்பின்மை
என்றால்
என்ன?
சமயச்
சார்பின்மை என்பது சமயத்தை மறுப்ப தல்ல; சமயம் முன்வைக்கும் கடவுளையும் மறுப்ப தல்ல! மாறாக, பன்முகச் சமயங்களை உடைய ஒரு நாட்டில் சமயங்களின் சமத்துவத்தை மதிப்பது மத அடிப்படையில் மக்களைப்
பாகுபடுத்தாமல், பெரிய சமயங்களையும் சிறிய எண்ணிக்கையிலான சமயங்களையும் சமமாக மதிப்பது.
மதச்சுதந்திரம்
இங்குப் போற்றப்படும் உரிமையுள் மிகப்பெரிது. மதத்தைத் தழுவவும், தழுவிய மதத்தைக் கடைப்பிடிக்கவும், கடைப்பிடிக்கும் மதத்தைப் பரப்புரை செய்யவும் அனைவருக்கும் உரிமையுண்டு. அதேவேளை, இயங்கும் மதங்களுக்கும், ஆளும் அரசுக்கும் எத்தொடர்பும் இல்லை. மதம் அரசின் கொள்கையை வகுக்க முடியாது. சனநாயக அரசின் நிறுவனங்கள் எவற்றிற்கும் மதக்கொள்கைகள் ஆதாரமாக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.
“நான் சார்ந்த மதத்தை உளமார மதிக்கிறேன். என் மதத்தைக் காக்கும் வகையில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அரசுக்கும், இந்த நம்பிக்கைக்கும் எத்தொடர்பும் இல்லை. அரசு குடிமக்களின் சமயச் சார்பற்ற நிலைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நலவாழ்வு, ஆரோக்கியம், சமூகத் தொடர்பு, வெளியுறவு என்பனவற்றில் அரசு கவனம் செலுத்தட்டும். என் மதத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை” என்றார் மகாத்மா காந்தி.
1945 -ஆம் ஆண்டில்
நேருவோ, “நான் முழுமையாக நம்புகிறேன். நாம் அமைக்கவிருக்கும் அரசு உறுதியாகச் சமயச் சார்பற்ற அரசாகத்தான் இருக்கும். அந்த அரசு இந்த நாட்டின் எந்தச் சமயங்களோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது. ஆனால், அனைத்துச் சமயங்களும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும்” என்றார்.
தொடர்ந்து சொல்கிறார்... “சமயச் சார்பற்ற அரசு பெரும்பான்மை சமூகம்மீது வைக்கப்பெறும் ஒரு நம்பிக்கை என்பது பெரும்பான்மை சமூகம் மதச் சிறுபான்மையினரிடம் கரிசனையோடும் பரிவோடும் நடந்துகொள்வதில் இருக்கிறது” என்றார்.
மத
நம்பிக்கையுடைய காந்தி, தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கையுடையவராயினும், அரசு சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். சமயச் சார்பற்ற அரசையே வரவேற்கிறார். பண்டித நேரு, காந்தியின் உற்றச் சீடனாக இருந்தாரெனினும், நேரு கடவுள் பற்றிய சிந்தனையற்றவர் (Gnostics); நிலவும்
எச்சமயத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாதவர். அவர் சமயச் சார்பின்மையின் தேவையை வலியுறுத்துவதோடு, சமயங்களிடையே நிலவ வேண்டிய நல்லுறவு பற்றியும் பேசுகிறார். “இந்தியா சமயச் சார்பற்ற அரசாக மாற்றம் பெறுகையில் கடவுளையோ, மதங்களின் ஏற்புடைமையையோ மறுக்கிறோம் என்று பொருளில்லை. இந்தியப் பாரம்பரியம் எப்போதுமே ஏதோ ஒரு சமயத்தை ஏற்கும் குணமுடையது என்றாலும், இந்தியச் சமூகம் ஏதோ ஓர் ஒற்றைச் சமய கட்டுப்பாட்டிற்குள் அடங்காது என்பதுதான் உண்மை. எந்தக் குறிப்பிட்ட சமயத்திற்கும் அரசு தனி அங்கீகாரம் வழங்கக்கூடாது. அம்மாதிரியான சிறப்பு அங்கீகாரம் என்பது சனநாயகத்தையே அவமதிப்பதாகும் என்பதோடு மானுட உரிமைகளுக்கும் எதிரான போக்காகும். குடிமகன் ஒருவன் தான் சார்ந்த சமய நம்பிக்கையால் பாகுபடுத்தப்படக் கூடாது. பொது வாழ்வில் அனைத்துக் குடிமக்களும் தம் நம்பிக்கையின் சிறப்பைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்”
என்றார் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
மேலும்,
உச்ச நீதிமன்ற நீதியரசர், முஸ்லிம்களின் மதராசா கல்விக் கூடங்கள் குறித்த தீர்ப்பு, சமயச் சார்பற்ற அரசு மதச் சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியது அதிர்ச்சியைத் தருகிறது. ‘மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்கள் மீதான சட்ட ஒழுங்குகள் சமயச் சார்பின்மைக்கு எதிரானதல்ல’ என்ற
நீதியரசர் சந்திரசூட் அவர்களின் தீர்ப்பு, உருவாக்கவிருக்கும் விளைவு என்னவாயிருக்கும்? சிறுபான்மையினர் தாம் விரும்பியவாறு கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவுமான உரிமைகள் மதச் சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் கருவியாகக் கருதப்படுகையில், உச்ச நீதிமன்றத்தின் இப்பார்வை என்ன மாதிரி பாதிப்பைத் தரும்? சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும்.
சமயச் சார்பின்மையின்
சோக
முடிவு
விடுதலை
பெற்ற இந்தியா கட்டிக்காத்த சமயச் சார்பின்மை இன்று மதத்தின் பெயரால் ஆளப் பெறுகிறது. பெரும்பான்மை இல்லாத மதத்தின் பெயரால் மதப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்பட்டு, மதச் சிறுபான்மையினர் அரசியல், சமூக ரீதியாக ஒதுக்கப்படுகின்றனர். அரசமைப்பின் முகப்புரை இந்தியத் தேசியத் தத்துவம் (National Philosophy)
எனக் கருதப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், தேசம், தேசப்பற்று என்ற பெயரில் ‘ஜெய் ஸ்ரீராம்’,
‘பாரத மாத்தா கீ ஜே’ போன்ற முழக்கங்களே தேசிய முழக்கங்களாகி விட்டது. வாழ்த்துச் சொற்கள் பகைச் சொற்களாக நிலவும் அவலம். இராம சென்ம பூமியில் இராமருக்கான கோவில் கட்டி முடிப்பது சமயச் சார்பற்ற அரசின் தேர்தல் நிலைப்பாடாக இருக்க முடியாது. மதச்சிறுபான்மையினரின் 400 ஆண்டுகால வரலாற்றையுடைய வழிபாட்டுத் தலம் ஒன்று மதம் சார்ந்த ‘பக்தர்களால்’ தகர்க்கப்பட்டதோடு,
மதப்பகையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு ‘இந்து தேசிய எழுச்சி’ என்று கொண்டாடப்படவும், அழிவின்மீது கட்டி எழுப்பப்பட்ட கோவிலுக்கான மதரீதியான சடங்கினைச் சமயச் சார்பற்ற அரசின் பிரதமரே பிரதமப் பூசாரியாய் நின்று செய்து முடிப்பதன் பொருள் என்ன?
இந்திய
அரசமைப்பினை வேதமெனப் புகழ்ந்த இந்தியப் பிரதமர், மதத்தால் வேறுபட்டவர்களை ‘சுதேச விரோதிகள்’
என்று வசைபாடுகிறார். குடியுரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாயிருக்க, குடியுரிமை பெற்ற குடிமக்கள் மதரீதியாகப் பாகுபடுத்தப்படுகின்றனர்.
சமயச்
சார்பின்மையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பிரிக்கவியலாப் பண்புகளாயிருந்தன. மதவாதம் தூக்கிப் பிடிக்கப்படும் இந்நாட்டில், நாம் கண்ட சமயச் சார்பின்மை ‘சமயங்களைச் சமமாக நடத்துவது’
என்ற உயரிய நோக்கம் சிதைந்து வருகிறது.
சமூகத்தால்
இயங்கும் சமயம் என்ற நிலை மாறி, சமயத்தால் இந்தியச் சமூகம் என்ற நிலை ஏற்பட்டு வருவது இன்றைய சோகத்தின் உச்சம்.