“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அது பலன் கொடுக்கும்” (யோவான் 12:24) என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, தான் வாழ்ந்தபோதும், சருகணி மண்ணிலே துயில் கொண்ட பின்பும் இயேசுவின் கோதுமை மணியாக மாறி, மக்களின் வாழ்க்கையோடு கலந்து, மடிந்து இன்றும் பலன் அளித்துக் கொண்டு இருக்கின்றார் நம் சருகணியின் சகாப்தமான இறை ஊழியர் லூயி மரி லெவே.
தந்தை
அவர்கள் விண்ணகப் பிறப்பு அடைந்து 51 ஆண்டுகள் கடந்தாலும், அவரின் பரிந்துரையை நாடி ஒவ்வொரு நாளும் சருகணியின் மண்ணை நோக்கி மக்கள் சாதி, இன, மத பேதமின்றி வந்து
செல்கின்றார்கள். இன்றளவும் அவரது கல்லறையில் தங்களது விண்ணப்பங்களை, மன்றாட்டுகளை வைத்துச் செபித்த பின்பு, ஒவ்வொரு மாதமும் லெவே தினமாக 21-ஆம் தேதி சாட்சியம் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, புற்றுநோயிலிருந்து, சிறுநீரகக் கல் அடைப்பிலிருந்து, பார்வை குறைபாட்டிலிருந்து, தீராத தலைவலி மற்றும் கண் வலியிலிருந்து குணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மற்றும் திருமண வரனுக்காகக் காத்திருப்போர், அவரின் பரிந்துரையால் குழந்தைச் செல்வத்தையும், நல்லதொரு வரம் கிடைத்தவர்களாய் அவருக்கு நன்றி செலுத்த சருகணி நோக்கி மக்கள் ஒவ்வொரு நாளும் வந்து செல்கின்றனர்.
தந்தை
வாழ்ந்தபோதே விவசாயிகளின் காப்பாளனாய், மழைக்காக மக்கள் காத்திருந்தபோது தந்தை லெவேயிடம் வந்து, “ஐயா, மழையில்லாமல் பயிர்கள் வாடுகின்றன; எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்” என்று
கூறியபோது, உடனே மக்களின் கண்ணீரைப் போக்க செபமாலையுடன் முழந்தாள்படியிட்டுச் செபிப்பார். உடனே அல்லது மூன்று நாள்களுக்குள் மழை வரும். மக்களும் மன நிம்மதியுடன் தங்கள்
இல்லம் திரும்புவார்கள்.
விவசாயிகள்
தங்களின் பயிர்களைப் பூச்சி, எலி, புழுக்கள் கடித்துத் தின்றால், நாசப்படுத்தினால் உடனே தந்தை லெவேயிடம் ஓடி வருவார்கள். அவரும் பனையோலையில் செபத்தை எழுதி மந்திரித்துக் கொடுத்து அனுப்புவார். தங்களின் நிலத்தில் அந்த மந்திரித்த ஓலையைக் கட்டியவுடன், பூச்சி மற்றும் எலியின் தொல்லையிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.
இன்றளவும்
மக்கள் தங்கள் நிலத்தில் விதைப்பதற்கு முன்பு, லெவே சாமியின் கல்லறையைத் தரிசித்து, விதைகளைக் கல்லறை மீது வைத்துச் செபித்த பின்புதான் விதைக்கச் செல்வார்கள். பயிர்களைப் பூச்சி, புழு அழித்தால், ஓலைகளை வாங்கிச் சென்று கட்டுவார்கள். இன்றும் பல ஊர்களிலிருந்து விவசாயிகள்
வந்து செல்வதுண்டு.
“நான் செய்யும் செயல்களை, என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்கள்” என்றார்
இயேசு (யோவான் 14:12). தந்தை லெவே அவர்கள் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டவராய் வாழ்ந்தார். அதனால்தான் இந்த மண்ணிலே துயில் கொண்டு பல புதுமைகளைத்தான் அன்பு செய்த
மக்களுக்காகச் செய்து கொண்டு இருக்கிறார்.
வாருங்கள், சருகணியை
நோக்கி!
தந்தை லெவே
அவர்களின்
பரிந்துரையை
நாடுங்கள், இறையருளைப்
பெற்றுச் செல்லுங்கள்!
“தன் பணிக்காலங்களில் தனிப்பட்ட நபர்களின் பேராதரவைப் பெறவும், அவர்களின் ஆன்மிகக் காரியங்களில் அக்கறை காட்டவும் தந்தை லெவே தவறியதில்லை. கீழக்கரை, சித்தார்கோட்டை, இராமநாதபுரம், தேவிபட்டணம் போன்ற இடங்களிலிருந்த இஸ்லாமியர்களிடமும் இவர் நல்லுறவு கொண்டிருந்தார்.”
1962, அக்டோபர் 11 முதல்
1965 டிசம்பர் 8 வரை
நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகுதான் திரு அவையில் பொதுநிலையினர் மற்றும் அவர்தம் பங்களிப்பு பற்றிப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பே (1943-73) வாழ்ந்த இறை ஊழியர் லூயி மரி லெவே சே.ச. பொதுநிலையினரோடு இணைந்து
பணிபுரிந்துள்ளார்.
ஆண்டாவூரணியில்
22 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இராமநாதபுரத்திலும், 17 ஆண்டுகள் சருகணியிலும் மறைப்பணியாற்றிய தந்தை லெவேயின் மறை அறிவிப்புப் பணியில் பெருவாரியாக பிரிட்டிஷ் இந்தியாவின் பொதுநிலையினர் பல்வேறு நிலைகளில் பங்கு பெற்றுள்ளனர். ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தம் பள்ளிகளில் பணிபுரிந்த இருபால் ஆசிரியர்கள், பயிற்சி
பெற்ற வேதியர்கள், இவர்களால் உருவாக்கம் பெற்ற கோவில்பிள்ளைகள், உபதேசியார்கள் எனப் பொதுநிலையினரின் பட்டியல் நீள்கிறது.
“எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரில் செய்து, அவர் வழியாய் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்” ( கொலோ
3:17) என்ற பவுல் அடியாரின் கூற்றுக்கு ஏற்ப பணிபுரிந்தார் தந்தை லெவே. இராமநாதபுரத்தில் தந்தை லெவே வாழ்ந்த காலங்களில் (1943-56) பிரான்சில் உள்ள
தன் உறவுகளுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் காணப்பட்டவையே இக்கட்டுரையின் கருவாய் அமைந்துள்ளன.
தன்
அண்ணன் மகன் இயேசுவின் மரியாவுக்கு மார்ச் 1949-இல் எழுதிய மடலில், “இங்குள்ள வேளாண் மக்கள் அறுவடையிலிருந்து கால் பலன் மட்டுமே பெற்றுள்ளனர். அவர்கள் தாமதமாக நடவு செய்யத் தொடங்கினர். மழை போதுமானதாக இல்லை; மழை இல்லாததால் அவர்களின் அறுவடைகள் அழிந்தன. பெண்கள் வயல்களில் புல் வெட்டி அவைகளைக் குதிரைக்காக இராமநாதபுரம் சென்று விற்கிறார்கள். இப்பணத்தில்
ஒரு நாளைக்குப் போதுமான உணவை வாங்குகிறார்கள். அவர்கள் இராமநாதபுரத்திலிருந்து தாமதமாகத் திரும்பி வருகிறார்கள். மிகவும்
சோர்வாக இருக்கிறார்கள். படிக்கும்
தைரியம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன்”
என்று எழுதியுள்ளார்.
23.10.1953-இல் இயேசுவின் மரியாவுக்கு எழுதிய கடிதத்தில், “தேவிபட்டணம், ஆத்தங்கரை மீனவர்களின் குறைதீர்க்கும் வகையில் தஞ்சாவூரிலிருந்து நரம்பு நூல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து மீன்வலைகளைப் பின்னினால் அவர்களின் மீன் பிடிப்பு முன்னேற வாய்ப்புகள் அதிகமாகும். இவைகளுடன்
அவர்களுக்கு நல்ல படகும் ஏற்பாடு செய்து கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது. அவ்வாறு உதவி செய்தால், அவர்கள் பெரிய அளவில் மீன்களைப் பிடிக்கலாம். அவர்களுடைய வாழ்க்கைத்
தரம் உயர வாய்ப்புள்ளது” என்று
எழுதியுள்ளார். இவை தந்தை லெவே அவர்கள் பொதுநிலையினர் மீது கொண்டிருந்த கரிசனையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.
மேலும்,
சமூகத்தில் பொருள் படைத்த சிலரும் விரும்பி இவரின் அருள்பணியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கப்பல் கேப்டன் திரு. மைக்கேல் கோமஸ். தந்தை லெவேயின் பேருபகாரி. இறைபக்தியும் மனிதநேயமும் கொண்ட கத்தோலிக்கச் செல்வந்தர். மதுரை மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் விருது பெற்ற முதல் கத்தோலிக்கர் இவர்.
1951-ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் தனுஷ்கோடி குழந்தை இயேசு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அருள்தந்தையர் அடைக்கலம், பொடல், லெவே மற்றும் ஜோக்கிம் கலந்துகொண்டனர் (The New Leader, 13.1.1952). இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை செல்லும் கப்பலின் தலைவராய் விளங்கினார். இலங்கை கண்டியில் படித்த அன்றைய இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட அரசர் சண்முகராஜ இராஜேஸ்வர சேதுபதியின் புதல்வர்கள் இவர் கப்பலில்தான் பயணிப்பர். இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி இராஜா தினகரனாலும், அவர் மனைவி மாரி என்னும் மேரி நாச்சியாராலும் கட்டப்பட்டிருந்த கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியை ‘ராஜா தினகர் ஆர். சி. பள்ளி’ என்ற பெயர் மாற்றத்துடன் தந்தை லெவேக்கு வாங்கிக்கொடுத்தவர் இவரே. இன்று அதே பெயரில் உயர்நிலைப் பள்ளியாய் உயர்ந்து நிற்கிறது அப்பள்ளி (நன்றி: ‘ஏழைப்பங்காளன் அருள்தந்தை லூயி லெவே சே.ச. D.
கஸ்பார் S.H.J. 21.3.1999).
இத்தகு
செல்வாக்குப் பெற்ற கேப்டன், 1955-இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவர் உடல் நலிந்து வருவதையும், வேதனையில் துடிதுடிப்பதையும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பதையும், அருளானந்தரின் பரிந்துரைக்காய் ஏங்கி நிற்பதையும் மிகுந்த மனவேதனையோடு தன் அண்ணன் மகள் இயேசுவின் மரியாவுக்கு 07.06.1955-இல் எழுதிய
கடிதத்தில் குறிப்பிடுகிறார். லூர்துநகர் சென்று லூர்து அன்னை கெபியில் கேப்டனுக்காகச் செபிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார்.
பாம்பனிலிருந்து
இரயில் நிலையத்தில் திரும்பி வரும்போது, இரயில்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரியைச் சந்திக்கிறார். இவர் ஒரு பிராமண ஐயங்கார். 1914-18 போரில் பொதுப் போக்குவரத்துக் கண்காணிப்பாளராக இருந்தவர். இவருடன் உரையாடும்போது “இந்து, கிறித்தவ மதங்களிடையே குறைந்த வித்தியாசமே உள்ளன. கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒருவரே“ என்கிறார் அவர். ஆனால், தந்தை லெவே அவரிடமிருந்து முரண்படாமல், கிறிஸ்துவின் வல்லமை, உன்னதம், முழுமை போன்றவைகளைப் பற்றிக் கூறி கத்தோலிக்கத் திருமறையை விளக்குகிறார். இதில் சேர நல்லெண்ணம் ஒன்றே போதும் என்று உணர்த்துகிறார். இயேசு கற்பித்த செபத்தை மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டுக்கொள்கிறார். இவர் மனைவியை இழந்தவர். இறக்கும் தருவாயில் தன் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்க 60 வயதாகியும் மறுமணம் செய்துகொள்ளாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார். “என் மனைவி நல்ல மனசாட்சியுடன் இறந்தார்”
என்கிறார். நல்ல மனசாட்சியுடன் இவ்வுலகை விட்டுச் செல்லும் இந்து மத அன்பர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள் என்று இந்த நிகழ்வினைத் தன் அண்ணன் மகள் இயேசுவின் அன்னை மரியாவுக்கு 17.9.1950-இல் எழுதிய கடிதத்தில் பதிவிடுகிறார்.
இவ்வாறு
தன் பணிக்காலங்களில் தனிப்பட்ட நபர்களின் பேராதரவைப் பெறவும், அவர்களின் ஆன்மிகக் காரியங்களில் அக்கறை காட்டவும் அவர் தவறியதில்லை. கீழக்கரை, சித்தார்கோட்டை, இராமநாதபுரம், தேவிபட்டணம் போன்ற இடங்களில் இருந்த இஸ்லாமியர்களிடமும் இவர் நல்லுறவு கொண்டிருந்தார்.
‘செம்மண் புனிதர்’ அருளானந்தர் திருத்தலம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், சாதி, மதம் கடந்து பொதுநிலையினரோடு நல் லுறவு கொண்டிருந்த சின்ன அருளானந்தர் இறை ஊழியர் லூயி லெவே அவர்கள் விரைவில் புனிதராய் உயர்ந்து நம் உள்ளங்களையும் இல்லங்களையும் பலிபீடங்களையும் அழகு செய்வாராக!
“இறைவார்த்தையின்படி வாழ்ந்தவர்களே புனிதர்கள்” என மறைந்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் வலியுறுத்திக் கூறுகிறார். இறைவார்த்தையினின்று புறப்பட்டு வரும் சுடரொளி போன்று ஒவ்வொரு புனிதரும் இறையடியார்களும் விளங்குகின்றனர். இயேசுவின் பாதச்சுவட்டைத் தன் வாழ்வில் பதித்து புனிதம் பெறுகின்றனர். “தூயோராய் இருங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நான் தூயவர்” (லேவி 19:2) என்ற இறைவாக்கின்படி, கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப தூய வாழ்வு வாழ்ந்து, தூய்மையான நெறிமுறைகளால் தங்களை அலங்கரித்து நடமாடும் புனிதர்களாய், மாமனிதர்களாய் வாழ்ந்து தடம்பதித்துச் சென்றவர்கள்தான் புனிதர்கள். அத்தகையவர்களின் வரிசையில் இடம்பெறுபவருள் ஒருவர்தான் இறை ஊழியர் லூயி மரி லெவே!
முகவை
மாவட்டத்தின் விசுவாச வாழ்வின் விளக்காக வாழ்ந்து, செம்மண் புனிதர் அருளானந்தரின் அடிச்சுவட்டில் தடம்பதித்து, ‘சின்ன அருளானந்தர்’ என்ற
பெயருக்குச் சொந்தக்காரராக இருப்பவர் சருகணியின் புனிதர், மேற்கத்திய சூரியன் அருள்தந்தை லூயி மரி லெவே!
பிறப்பும் இளமைப்
பருவமும்
06.04.1884-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரென் மாவட்டத்தில் இலாவி என்ற ஊரில், திருவாளர் ஜோசப் லெவே, திருமதி. ஜூலியானா லெபினே என்ற தம்பதியருக்குப் பத்தாவது குழந்தையாய், மண்ணின் மாணிக்கமாய் பிறந்தார். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்பது போல, குடும்பத்திலேயே சிறப்பான பண்புகளுடன் வளர்க்கப்பட்டார். இறையுறவு, பிறர் உறவு, இறைவார்த்தையைப் படித்து வாழ முயற்சித்தல் போன்றவற்றுடன் செபம் செய்தல், செபமாலை செபித்தல் போன்ற ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வளர்க்கப்பட்டவர்.
பிரான்ஸ்
நாட்டில் சிறப்பாகப் பணிபுரிந்து வரும் இயேசு சபைக் குருக்களின் வாழ்வு அவரை ஈர்த்ததால் இறைப்பணி செய்ய ஆர்வம் கொண்டு, 06.10.1906-இல், பெல்ஜியத்தில் உள்ள இயேசு சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். டூலூஸ் மறைமாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் நவ துறவியாகப் படித்துவிட்டு
தமிழ், ஆங்கிலம் மொழிப் பயிற்சி
பெறுவதற்காக ஓராண்டு கொடைக்கானலில் உள்ள செண்பகனூரிலும், மேலும் இரண்டு ஆண்டுகள் மெய்யியல் பயிற்சியும் பெற்றபின், நான்கு ஆண்டுகள் களப்பணிக்காகப் (Regeney) பாளையங்கோட்டைக்கும்,
இறையியல் பயிற்சிக்காக இரண்டு ஆண்டுகள் டார்ஜிலிங் மாவட்டத்திலும் பயிற்சிகளை முடித்து, 13.01.1920-இல் குருத்துவ அருள்பொழிவு பெற்றார். அதன்பின் ஆண்டாவூரணி பங்குப்பணியாளராக சிவகங்கை மண்ணில் தன் அடிச்சுவடுகளைப் பதித்தார்.
1921-1943 வரை முத்தாய்ப்பான
பணிகளைச் செய்தார். பின் 1943 - 1956 வரை மக்கள் வியந்து போகும் வகையிலே ஆக்கப்பூர்வமான பணிகளை ஆவலோடும் ஆனந்தமாகவும் செய்து மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார். பின்னர் சருகணியின் சரித்திரமாய் இம்மண்ணிற்குப் பணிவிடை புரிய வந்தவர் ஆன்மிகக் குருவாக இருந்து, ஓய்வுக்காக வந்தவர் ஓயாது பணிபுரிந்து, ஓங்கு புகழோடு உயர்ந்து நிற்கிறார் நம் அனைவர் மனத்திலும்!
குருத்துவ வாழ்வியல்
அருள்பொழிவு
நாளில் இறைவன் தந்த புனிதப்படுத்தும் பணி, மேய்ப்புப் பணி, போதனைப் பணி என்னும் முப்பெரும் பணிகளிலும் தடம் பதித்தவர். இறைவார்த்தை பரவிட, இறைப்பணிகள் தொடர்ந்திட இறக்கும் வரையும் தன்னை இயக்கியவர். நற்செய்தியின் விழுமியங்களை எட்டுத்திக்கும் பறைசாற்றி குருக்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து குன்றின் மேலிட்ட தீபமாய் ஒளிர்ந்தவர்.
பங்குப் பணித்தளத்தில்
“இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்” (1தெச
5:17) என்ற இறைவாக்கின்படி, அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து செபம் செய்துவிட்டு திருப்பலி நிறைவேற்றும் இவர், பின் ஒப்புரவு அருள்சாதனம், செபமாலை, சிலுவைப்பாதை போன்ற ஆன்மிகச் செயல்களால் இறையுறவில் திளைத்திருப்பவர். இறைவனின் பிரசன்னத்தால் ஒவ்வொரு நாளும் அரும்பெரும் செயல்களைச் செய்தவர்.
நற்கருணை ஆண்டவரின் நல்லாசிர் பெற்று, நாளெல்லாம் இறையுறவில் மூழ்கி இயேசுவைச் சுவாசமாக்கியவர்.
ஞாயிறு
திருப்பலியின் மகத்துவத்தை மக்கள் அறிய வீடு வீடாக, தெருத் தெருவாகச் சென்று, மக்களை அழைத்து வந்து திருப்பலியின் மேன்மையை உணர்த்தியதோடு, செபம் சொல்ல, செபமாலை செய்ய மக்களை ஊக்கப்படுத்தியவர். திருப்பலி முடிந்தபின்னும் இறைமக்களோடு நேரத்தைச் செலவிட்டு ‘இயேசுவே, அன்பின் அரசரே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்’ என்ற
மந்திரத்தை மக்களுக்கு ஊட்டியவர். ஆழமான போதனைகளால் மக்களை இறைவன்பால் ஈர்த்தவர். புனித அருளானந்தர்மீது அளப்பரிய பக்தி கொண்டவர். அவர் வழித்தடத்தில் தன் பாதையை அமைத்துக் கொண்டவர். செப, தவ, தான, தர்மங்களால் கருணையாளர் ஆனவர். “எனக்கு வலுவூட்டுகிற ஆண்டவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு”
(பிலி 4:13) என்ற புனித பவுல் அடியாரின் கூற்றை நம்பியவர். அவருக்கு வலுவூட்டும் சக்தியாக இருந்தது செபம் மட்டுமே. சோதனைக்கு உள்பட்டபோதெல்லாம், கதவு, சன்னல்களை அடைத்துக் கொண்டு ஐந்து முடிச்சு கொண்ட சாட்டையால்
தன்னை அடித்துக் கொண்டு சோதனைகளை வென்றவர்.
பண்பு நலன்களின்
செயல்
வீரர்
அன்பு,
மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, சாந்தம், விசுவாசம் போன்ற ஆவியின் கொடைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டவர். குழந்தைக்குரிய மனநிலையுடன் வாழ்ந்தவர். வானகத்தின் திறவுகோலான எளிமையை வாழ்வாக்கியவர். இறையன்பின் சாயலை மக்களிடமும் இயற்கையிடமும் கண்டு நட்புக் கொண்டு வாழ்ந்தவர்.
ஆடு,
மாடு வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வந்தாலும் செபித்து, புனித நீர் தெளித்துச் சுகப்படுத்தியவர். யார் வீட்டில் எது நடந்தாலும் பங்குப் பணியாளராக மட்டுமல்ல; குடும்ப உறவினர்போல் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்விப்பவர். கொடுப்பதில் இன்பம் கண்டு, அனைவருக்கும் குறிப்பாக, ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்வதில் நிறைவு பெற்றவர்.
அறிவார்ந்த
தோழமை, ஆதிக்கமில்லாத அணுகு முறை, சாதி வேறுபாடில்லாத உறவு, கலாச்சார ஒற்றுமை போன்ற விழுமியங்களில் மையம் கொண்டு, உயர்ந்த செயல்பாடுகளால் மக்களைக் கவர்ந்தவர். மக்களிடமிருந்து வரும் ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்து, உருக்கமாய் செபித்து, செபத்தின் வெளிப்பாடாக பதில் கடிதம் தவறாது அனுப்பியவர்.
மக்களால் கொடுக்கப்பட்ட
செல்லப்
பெயர்கள்
லெவே
சாமி, தாத்தா சாமி, மழைச்சாமி, வெள்ளக்காரச் சாமி, ஆண்டாவூரணியின் ஆதவன், சருகணியின் சகாப்தம், முகவையின் முகவரி, மேற்கத்திய சூரியன் எனப் பல்வேறு அடைமொழிகளில் சிவகங்கைச் சீமையில் பவனி வந்தவர். இத்தகைய மாமனிதர் வாழும்போதே இறைத்துணையால் புதுமைகள் செய்யும் சிறப்பு வரம் பெற்றவர். எல்லோராலும் வணக்கம் செலுத்தத் தகுதியுள்ளவர். திரு அவையில் புனிதர் என்னும் அங்கீகாரம் பெற்று, உலக மக்கள் அனைவரும் போற்றும் புனிதப் பட்டம் பெறும் காலம் இதோ கனிந்து வருகிறது. அதற்காகச் செபிப்பதோடு, தந்தை லூயி மரி லெவேயின் ஆன்மிகத்தோடு அவரின் புனிதமான நற்பண்புகளால் நம் மனத்தை நிறைத்து, அவரின் வழித்தடங்களை நமது வாழ்வின் தடங்களாக்கி நாமும் புனிதம் பெறுவோம்; புது வாழ்வு வாழ்வோம்!
மோடி அரசின் மற்றுமொரு பட்ஜெட்! வழக்கம்போல இலட்சக்கணக்கான கோடிகளில் அறிவிப்புகள். நம் வாய்களில் நுழையாத பெயர்களில் திட்டங்கள். ஒவ்வொரு முறையும் தவறாமல் உச்சரிக்கப்படும் திருக்குறள். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியையாகக் கண்டிப்புடனும் கறாராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, தனக்கு மட்டுமே பொருளாதாரம் தெரியும் என்ற அதிகாரத் தோரணையில் பேசுகிற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர்களது ஒவ்வோர் அறிவிப்பினையும் முதல்முறையாக அறிவதுபோல வியப்பும் பெருமிதமுமாக முகபாவம் காட்டி மேஜையைத் தட்டிக்கொண்டே இருக்கும் பிரதமர்.
தலைப்புச்
செய்திகளைக் கைப்பற்றி முக்கியச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ள மோடிமயமாக்கப்பட்ட ஊடகங்களின் கையில் ‘லட்டு’ போல ஒரு செய்தி. “இனிமேல் 12 இலட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை” என்ற
அந்த அறிவிப்பை இந்தியாவில் உள்ள அனைத்துக் காட்சி மற்றும் செய்தி ஊடகங்களும் 48 மணி நேரம் இடைவிடாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருந்தன. எங்குப் பார்த்தாலும் அதே பேச்சு. தொலைக்காட்சிகள் அனைத்திலும் அதனைப் பற்றியே விவாதங்கள். அந்த அறிவிப்பைப் புகழ்ந்தே பேட்டிகள். பட்ஜெட்டைப் பற்றிப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வேறு எதுவும் இல்லை என்பதைப் போன்ற ஒரு பொதுஜனப் பிரமையை உருவாக்கியதில் மோடி அன்ட் கம்பெனி ஓரளவு வெற்றி பெற்றனர் என்பதும் உண்மை. அந்த மாயத்தோற்றம் சரியா? பட்ஜெட் ஆவணங்கள் மூடி மறைத்திருக்கும் அவலங்களும் அசிங்கங்களும், அழுகிப்போன பொருளாதார இரணங்களும், அவற்றால் சாதாரண மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளும் வேதனைகளும் எப்போது வெளிச்சத்திற்கு வரும்?
வேதப்புத்தகத்தைப்
படிக்கின்றவரை பார்த்து பரவசமாக நிற்கின்ற மக்களுக்கு, அவர் கைகளில் வேதப்புத்தகம் மட்டுமல்ல, அவரது கக்கத்தில் கன்னக்கோலும் இருக்கிறது என்பதை நாமாவது கூறி புரிய வைப்போம். மோடி அரசின் கடந்தகாலச் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி புதிதல்ல. அவர் எப்போதும் கூறியதைச் செய்ததில்லை. செய்யப் போவதைக் கூறியதில்லை. இதற்கு ஓராயிரம் உதாரணங்களைக் கூற முடியும். இதற்கு அவரது அரசின் பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் அப்படியே செலவு செய்யப்படும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு பட்ஜெட்டை எடுத்துக்கொள்வோம். அரசு அறிவித்த வருவாயைவிட,
அரசு பெற்ற வருவாய்
ரூ. 42,000 கோடி குறைவு. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட வரி வருவாயை விட ரூ. 27,000 கோடி குறைவு.
திட்டச்
செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஓர் இலட்சம் கோடிக்கு அதிகமாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குறைத்துக் கொண்டார்கள். மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்படுவதாகப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொகையில் சுமார் ஓர் இலட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்யவே இல்லை. இந்தப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட எந்தத் துறையில் மோடி அரசு கைவைத்தது என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. சுகாதாரம், கல்வி, சமூக நலம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி போன்ற முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளைத்தான் மோடி அரசு குறைத்தது. அது மட்டுமின்றி பட்டியலினப் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள், பட்டியலினப் பிற்படுத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள், பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பழங்குடி மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத்தான் மோடி அரசு குறைத்தது.
கடந்த
ஆண்டு மிகப்பெரிய விளம்பரங்களுடன் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு இந்த
ஆண்டு போதிய ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அவற்றுக்கான ஒதுக்கீட்டின்படி செயல்படுத்தப்படுமா? என்பது நமக்கு அடுத்த ஆண்டுதான் தெரியவரும்.
ஆண்டுக்கு
ரூ. 12 இலட்சம் வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பை அத்தகைய வருமானம் உள்ளவர்கள் வரவேற்பார்கள். நாமும் வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களில், 7 கோடி மக்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதாகவும், அதில் இரண்டு கோடி நபர்கள் இந்த அறிவிப்பால் பயன்பெறுவார்கள் என்றும் கூறுகிறார்கள். அதனால் அரசுக்கு ஓர் இலட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். இந்த ஓர் இலட்சம் கோடியை எந்த வருவாய் மூலம் ஈடுகட்டப் போகிறது என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை.
நம்மால்
ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். மோடி அரசு இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கும், மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் எந்தக் கூடுதல் வரியையும் விதிக்கப்போவதில்லை. ஏற்கெனவே
அவர்கள் கட்டி வந்த வரிகளைக் குறைத்து, அவர்களுக்குப் பல சலுகைகளைத் தொடர்ந்து
செய்து வரும் மோடி அரசு, எப்படி அவர்கள்மீது புதிய வரிகளை விதிக்க முடியும்? ஆண்டுக்கு ரூ. 4,500 கோடியினைப் பெரும் முதலாளிகளிடம் இருந்து நன்கொடையாகத் திரட்டும் பா.ச.க.வின் அரசு அவர்கள் மீது வரி விதிக்காது என்பது நமக்கும் தெரியும்.
இந்த
அரசில் வரி கட்டுவதற்கென்றே பிறந்து வாழும் மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலும் நடுத்தர வர்க்கத்திலும் வாழும் மக்கள்தாம். அவர்கள்
அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களின்மீதும் விதிக்கப்படும் வரிகள்தாம் இன்று இந்திய அரசின் கோரப்பசிக்குத் தீனியாக உள்ளது.
இரண்டு
கோடி மக்களுக்கு மட்டுமே பயன்படும் ஓர் அறிவிப்பினைச் செய்துவிட்டு, அதனால் இந்தியாவின் பொருளாதாரமே நிமிர்ந்து உட்கார்ந்து விடும் என்று பேசுகிற இவர்கள் யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்?
கடந்த
பத்து ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் பெற்று வரும் ஊதியங்களில் மாற்றம் இல்லை என்பதை அரசின் பொருளாதார அறிக்கையே கூறுகிறது. அதே அறிக்கை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத பெரும் இலாபங்களை இந்தியக் கார்ப்பரேட் கம்பெனிகள் இந்த ஆண்டு குவித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும், எந்த நிறுவனமும் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியங்களையும் சலுகைகளையும் கூட்டவே இல்லை என்பதையும் தெரிவிக்கிறது. இவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள் வழங்குவதன் மூலம் புதிய முதலீடுகள் வரும், வேலைவாய்ப்புகள் பெருகும், ஊதிய விகிதங்கள் கூடும் என்றெல்லாம் கூறி, அவர்களுக்கு இலாபம் தரும் வகையில் ரூபாய் இரண்டு இலட்சம் கோடி கார்ப்பரேட் வரிச்சலுகையை மோடி அறிவித்தார். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டிய வரிதான் குறைந்ததே தவிர, எந்தப் புதிய முதலீடுகளும் வரவில்லை, வேலைவாய்ப்பும் பெருகவில்லை. இந்தியாவில் முதன்முறையாக மோடி ஆட்சியில் மட்டும்தான் கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டும் வரிகள் குறைவாகவும், தனி நபர் கட்டும் வரிகள் அதிகமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.
நாட்டின்
மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு ரூ. 150-க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இந்த மக்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்று பா.ச.க.
நண்பர்கள் நாட்டுக்குக் கூற வேண்டும். உணவுப் பொருள்களின் விலைவாசிகள் விண்ணைத் தொடுகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன.
கல்வி,
மருத்துவம் போன்ற வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அவர்களிடம் பணம் இல்லை. கடன் சுமையால் உயிர் வாழவே போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விவசாயிகளுக்குக் கடன் நிவாரணமும் இல்லை; அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச விலைக்கான உத்திரவாதமும் இல்லை. சிறு குறு தொழில்களுக்குச் சலுகை காட்டுங்கள் என்று கேட்டால் ரூ. 500 கோடி வரவு - செலவு செய்யும் நிறுவனங்களையும் சிறு தொழில் நிறுவனங்கள் என்று அறிவிக்கும் மோடி அரசின் கொடுமையை எங்கே போய் கூறுவது? சிறு தொழில்களுக்கான சலுகைகளையெல்லாம் அந்தப் பெரிய நிறுவனங்களே கைப்பற்றிக்கொள்ளும் என்கிற அடிப்படை உண்மை கூட இந்த அரசுக்குப் புரியாதா?
இந்தியப்
பொருளாதாரத்தின் உந்துசக்தியாக விளங்குகின்ற தமிழ்நாடு, கர்நாடகம் அனைத்து சமூக வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதலிடத்தைப் பெற்றிருக்கின்ற கேரளா போன்ற தென் மாநிலங்கள் ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது என்ன நியாயம்?
பட்ஜெட்
தயாரிக்கும் உயர்மட்ட 90 அதிகாரிகளில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் இல்லை என்று கூறுகிறார்களே! இதுதான் சமூக நீதியா? உயிர் காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை என்று பெரிதாக அறிவித்தார்கள். ஆனால், உள்ளே போய் பார்த்தால் இறக்குமதி செய்யப்படும் பிளாட்டினம், தங்க நகைகள், வைரம், விலை உயர்ந்த நவரத்தினங்கள்... இவற்றுக்கெல்லாம் வரிச்சலுகை அறிவித்துள்ளீர்களே! அது யாருக்காக?
எலான்
மஸ்க்குக்காக எலெக்டிரிக் கார்களின் மீதான வரிக்குறைப்பு, டிரம்பைத் திருப்திப்படுத்த அமெரிக்க இறக்குமதி ஹார்லி மோட்டர் சைக்கிளுக்கு வரிக்குறைப்பு, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றவர்களுக்கு வரிச்சலுகை... ஏழை மாணவர்களின் கல்விக்கடன் வண்டிகளைத் தள்ளுபடி செய்யக்கூடாதா?
மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒதுக்கீடு கூட குறைந்துகொண்டே வருகிறதே! இது யாருக்கான அரசு?
உற்பத்தியைக்
கூட்டாத, வேலைவாய்ப்புகளைப் பெருக்காத, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைக்காத, விவசாயிகளின் துயர் நீக்காத, ஏழைகளின் கண்ணீர் துடைக்காத இந்தப் பட்ஜெட்டால் யாருக்குப் பயன்?
பள்ளி, கல்லூரிக் காலங்கள் எல்லாருக்கும் பசுமையான நினைவுகளைத் தரும். சில நினைவுகள் காலச் சருகுகளைப்போல அடித்துச் செல்லப்படும்; சில நினைவுகள் ஆலமரம் போல விழுதுவிட்டு காலங்காலமாக நிலைத்து நிற்கும்.
கல்லூரி
படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருந்தோம். எல்லா நாள்களும் வெளியில் செல்ல அனுமதி இல்லை.
விடுமுறை நாள் ஒன்றில் அனைவரும் வெளியில் ‘ஷாப்பிங்’ செல்ல
அனுமதிக்கப்பட்டோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில், காலைப்பொழுது மரங்களை விட்டு பறந்து
செல்லும் பறவைக் கூட்டத்தைப்போல சிலர் விண்டோ ஷாப்பிங், சிலர் நண்பர்கள் வீடு, சிலர்
திரைப்படம், சிலர் பார்க், சிலர் சும்மா பயணம் என்று சிறகடித்துப் பயணித்தோம்.
சூரியன்
கண் சிவந்து மயங்கி விழும் நேரம் பல திசைகளில் பயணித்தவர்கள் தாய்மடி தேடும் பிள்ளைகளைப்
போல ஹாஸ்டல் மடி தேடி திரும்பி வந்து சேர்ந்தார்கள். இரவு சாப்பாட்டு நேரத்தின்போது
நண்பர் ஒருவர் இன்னும் வந்து சேரவில்லை என்பது தெரிய வந்தது. ஹாஸ்டல் வார்டனுக்குச்
செய்தி பறந்தது. ஹாஸ்டல் கல்லெறியப்பட்ட குழவிக் கூட்டைப்போல பரபரப்பானது. நாலாப்பக்கமும்
ஹாஸ்டல் வாசிகள் சிதறிச்சென்று தேடியலைந்தார்கள். கல்லூரி வளாகத்தையே இருள் போர்வையாக
மூடிய போதும் நண்பர் இன்னும் இருப்பிடம் வந்து சேரவில்லை என்ற செய்தி பீதியைக் கிளப்பியது.
ஹாஸ்டல்
வார்டன் கல்லூரி அலுவலர்களை வரவழைத்து விவாதித்த பிறகு காவல்துறைக்குத் தகவல் சொல்லலாம்
என்று முடிவு செய்யப்பட்டது. “பையனுக்குக் காதல் கீதல் எதாவது உண்டா?” கம்பிளைண்ட்
கொடுக்கச் சென்ற ஹாஸ்டல் வார்டனிடம் காவல்துறையினர் கேட்டார்களாம். “அப்படி ஒன்றும்
இருக்க வாய்பில்லைங்க. நல்லா படிக்கிறப் பையன்” என்றாராம்
வார்டன்.
நண்பனின்
வீட்டிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இரவு முழுவதும் எங்கள் யாருக்கும் தூக்கம் வரவில்லை.
‘எங்கு சென்றிருப்பான்? என்னவாகி இருக்குமோ?’ ஒவ்வொருவரும் தங்கள் கற்பனையின் கடைசி
எல்லைவரை சென்று இரவு நேரக் கதை சொல்லிகள் ஆனார்கள்.
அடுத்த
நாள் காவல்துறையினர் ஹாஸ்டல் வந்து சில விவரங்களைச் சேகரித்துச் சென்றார்கள். இரண்டு
நாள்களான பிறகும் நண்பரைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை. நண்பர் காணாமல் சென்ற மூன்றாம்
நாள் காலை கல்லூரி செல்லத் தயாரான வேளையில், ஹாஸ்டல் எங்கும் மீண்டும் அதே பரபரப்பு
ஒட்டிக்கொண்டது. ‘என்னவாக இருக்கும்?’ என்று மனத்தில் ஆயிரம் கேள்விகளோடு மேல்மாடி
அறை சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன்.
அங்கு
வார்டன், காணாமல் போன என் நண்பரோடு ஹாஸ்டல் வாசல் அருகிலே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
மாணவர்கள் பலரும் அவர்களைச் சுற்றி நின்றனர். காணாமல்போன நண்பர் திரும்பி வந்து விட்டார்
என்பது மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ‘எங்கு சென்றார்? என்ன ஆனார்?’ என்ற கேள்விகளுக்கு
மனம் விடை தேடி அலைந்தது.
எல்லாரும்
சூழ நண்பர் பேசத் தொடங்கினார்: “நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது
முதியவர் ஒருவர் ஒரு கடிதத்தோடு வந்து என் தோளைத் தொட்டார்.”
ஒரு
திரைப்படத் திகில் கதைக்காட்சியைப் போல கதை நீண்டது.
“தன்
மகன் இராணுவத்தில் பணிபுரிவதாகவும், அவன் எழுதிய கடிதத்தைப் போஸ்ட்மேன் வழியில் பார்த்துக்
கொடுத்ததாகவும். அதை வாசித்துத் தரும்படியாகவும் கேட்டார். நானும் சரி என்று சொல்லி
கடிதத்தில் இருந்ததைத் தெளிவாக வாசித்துக் காட்டினேன். முதியவர் மனம் மகிழ்ந்து கண்டிப்பாக
ஒரு டீ குடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். நானும் முதியவர் ஆசையாகக் கொடுக்கின்றார்
என்று நினைத்து வாங்கிக் குடித்தேன். குடித்த பிறகு என்ன நிகழ்ந்தது என்பது எனக்குத்
தெரியாது. நான் அடுத்த நாள் ஓசூர் பகுதியிலே சாலையோரம் கிடந்தேன்.”
நண்பர்
தன் அனுபவங்களைச் சொல்லச் சொல்ல எல்லாருடைய புருவமும் வியப்பில் வளைந்து நின்றது. நெஞ்சம்
படபடத்தது.
“பிறகு
அங்கிருந்த ஊர் மக்கள் என்னைப் பார்த்துவிட்டு, நலம் விசாரித்து, நான் யார் என்பதைக்
கேட்டறிந்து காசு கொடுத்து இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்று
முடித்தார்.
யார்
இவரை ஓசூருக்குக் கடத்தியது? ஏன் கடத்தினார்கள்? கடத்தியவர்கள் ஏன் ஓசூரிலே போட்டுச்
சென்றார்கள்? என்ற விடை தெரியாத கேள்விகள் என் சிந்தனைக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தாலும்,
நண்பர் வந்து விட்டார் என்பது மனநிம்மதியைத் தந்தது (இந்தக் கதையினுடைய மற்றொரு சுவாரசியமான
பகுதியும் இருக்கின்றது; அதனை இந்தக் கட்டுரையின் கடைசியில் சொல்கின்றேன்).
இந்தியாவில்
2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓர் இலட்சத்திற்கு மேலானவர்கள் கடத்தப்பட்டிருக்கின்றார்கள்
என்று ‘தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்’ (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
இதன் அடிப்படையில் ஒரு நாளில் இந்தியாவில் மட்டும் 294 பேர் கடத்தப்படுகின்றார்கள்.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி அல்லது
இணையத் துணையுடன் மொபைல் பயன்பாடு வழியாகப் பலர் கடத்தப்படுகின்றார்கள் என்பது உறுதி
செய்யப்பட்டிருக்கின்றது. இதனை ‘சைபர் கடத்தல்’
(Cyber kidnapping)
என்கின்றோம்.
2024
டிசம்பர் மாதத்தில் சீனாவில் வசிக்கும் பெற்றோருக்கு அமெரிக்காவில் படிக்கின்ற தங்கள்
17 வயது மகன் கடத்தப்பட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட
சீன மாணவனை ஒரு கும்பல் மிரட்டி, அவனை யாரும் இல்லாத தனிமையான இடத்திற்குப் போகவைத்ததோடு,
அவனை 24 மணிநேரமும் இணையம் வழியாகக் கண்காணிக்கவும் செய்திருக்கின்றது. கடத்தப்பட்ட
பையனை விடுவிக்க கடத்தல்காரர்கள் 66 இலட்சம் ரூபாய் கேட்டு பெற்றோரை மிரட்டியிருக்கின்றார்கள்.
பயத்தில் பதறிப்போன பெற்றோர் மகன் கடத்தப்பட்டதைத் தங்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம்
மற்றும் குரல் பதிவு மூலம் உறுதி செய்துவிட்டு, கடத்தல்காரர்கள் கேட்ட 66 இலட்சம் ரூபாயை
அனுப்பியிருக்கின்றார்கள்.
தகவலறிந்த
அமெரிக்கக் காவல்துறை துரித நடவடிக்கையில் ஈடுபட்டு குளிரிலும் உறைபனியிலும் தவித்துக்கொண்டிருந்த
கை சுவாங் (Kai Suang) என்னும் அமெரிக்கவாழ் சீன மாணவரை மீட்டுள்ளனர்.
இன்றும்
பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவின் துணையோடு மகன் அல்லது மகள் குரலைப் படி எடுத்து,
அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பிள்ளைகள் கடத்தப்பட்டதாகப் பெற்றோரை நம்பச்செய்து
பணம் பறிக்கும் ஆன்லைன் கொள்ளைக்கூட்டம் அதிகரித்திருக்கின்றது.
இத்தகைய
சைபர் கடத்தல் சம்பவங்களுக்கு நாமும் பல நேரங்களில் துணை போகின்றோம். சமூக ஊடகங்களில்
நம் தனிப்பட்ட தரவுகளைப் பதிவேற்றம் செய்வது, நம்முடைய நகர்வுகளை, பயண விவரங்களை எல்லாரும்
அறிந்துகொள்ளும் விதத்தில் பதிவு செய்வது, தெரியாத நபர்களைச் சமூக ஊடகங்களில் நண்பர்களாக
ஏற்றுக்கொள்வது, தெரியாதவர்களோடு உரையாடுவது, உறுதிப்படுத்தாமல் எதையும் உண்மை என நம்புவது...
முதலில்
குறிப்பிட்ட ஹாஸ்டல் கடத்தல் சம்பவத்தில் சுவாரசியமான சம்பவம் என்னவென்றால், இந்தச்
சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து அந்த நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அந்த கடத்தல் சம்பவத்தை நினைவு கூரும்போது அவர் கூறினார், “டேய், நான் ஒன்றும்
கடத்தப்படவே இல்லை. நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்குப் போனேன். லேட் ஆனதால அங்கேயே
தங்கிவிட்டேன். இந்தச் சூழலை எப்படியாவது சமாளிப்பதற்காக ஒரு பொய் சொன்னேன். நம்ம வார்டனும்
நம்பிவிட்டார்” என்று கூறிச் சிரித்தான்.
கடத்தல்
நாடகங்களை யார், எப்போது, எங்கே அரங்கேற்றுகின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
விழிப்பாய் இருப்பது நல்லது!
வரலாறு திரும்பும் என்பதே சமகால வரலாறு. தில்லி அரசியல் காலங்காலமாக அதிகாரக் குவிப்பின் பெரும் அடையாளம். ஆணவப்போக்கு, அழித் தொழிப்பு, அடிமைகளை உருவாக்கல் என்ற தம் மத, இன அரசியலை எவ்விலை கொடுத்தும் தக்க வைப்பார்கள். அது முடியாட்சியில் மட்டுமல்ல, தற்போதைய குடியாட்சியிலும் தொடர்கிறது என்பதுதான் வேதனை.
பத்தாவது
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என். சேஷன்
பணியில் சேர்ந்த பின்புதான் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பே பொதுவெளியில் பேசுபொருளானது. அவர் ஒருவர்தான் ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளைத் தட்டிக் கேட்டவர். துணிகரத் தேர்தல் சீர்திருத்தங்களை உருவாக்கியவர். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பு எனப் பிரகடனப்படுத்தியவர். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, எந்தவித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துபவர் என நடத்திக் காட்டியவர்.
மதிப்பிற்குரிய
நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்த காலம். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, இரு தேர்தல் ஆணையர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, முக்கிய முடிவுகளில் பெரும்பான்மை முடிவு என அவருக்கு அதிரடி
காட்டப்பட்டது. அன்று தொடங்கி தற்போது ஓய்வு பெற்ற 25-வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் வரை முதுகெலும்பு இல்லாத அதிகாரிகள்
ஆளுங்கட்சிக்குத் தலையாட்டியே காலம் தள்ளுகிறார்கள். சமீபகாலமாக பா.ச.க.
நடைமுறைகளில் நீதிபதிகளிலிருந்து தேர்தல் ஆணையர்கள் வரை, ஓய்வுபெற்றவுடன் மாநில ஆளுநர் முதல், ஆணையத் தலைவர் வரை பரிசாகத்
தரப்படும் புதிய கலாச்சாரமும் உருவாகியுள்ளது.
2024 பாராளுமன்றத் தேர்தல்
முடிவுகள், மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தில்லி தேர்தல் முடிவுகள் என எல்லா முடிவுகளிலும்
பொது மக்கள் “வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கிறது”
என்ற ஒரு கருத்தை முடிவாகச் கூறுகிறார்கள். தலைமைத்
தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார், “அதற்கான வாய்ப்புகள்
இல்லை” என
ஒற்றை வார்த்தைகளில் கடந்து போகிறார்.
இவர்தான்
மூன்று ஆண்டு காலம் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.
இவர் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 31 மாநிலத் தேர்தல்களை நடத்தியவர். ஜம்மு-காஷ்மீர் தேர்தலை வேண்டிய அளவு தள்ளிப்போட்டு வாங்கிக் கட்டிக்கொண்டவர்.
காலச்சக்கரத்தைக்
கொஞ்சம் பின்னோக்கி சுழலச் செய்வோம். 2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்படப் போகிற நாள்கள்.
தேர்தல் ஆணையர் அருண்கோயல் பதவி விலகுகிறார்; மற்றோர் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெறுகிறார். அருண் கோயல் பதவி விலகல் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதுவரை பதில் இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையர், பிரதமரின் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப ஏழு கட்டத் தேர்தல்களை அறிவிக்கிறார். மகாராஷ்டிரா சட்ட சபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா பா.ச.க.
கூட்டணி அரசு மாதம் மகளிருக்கு வழங்கும் ரூ 1,500-யை, மகாராஷ்டிரா மகளிரின்
வங்கிக் கணக்கில் சேரும் வரை தேர்தல் தேதி அறிவிப்பைத் தள்ளி வைக்கிறது. ஆளும் பா.ச.க.வின் ஓர் அரசியல் பிரிவாகவே தேர்தல் ஆணையம், ஓய்வு பெற்ற
தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் காலத்தே செயல்பட்டது. அரசியல் கட்சிகள், கட்சிகளுக்குள் கூட்டணி என்றால்...
பா.ச.க. கட்சியோ
தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்திருந்தது.
தலைமைத்
தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் காலத்தே வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல் மற்றும் நீக்குதல்,
சில குழுக்கள் குறிவைத்து நீக்குதல், கடைசியாக மொத்தமாக வாக்காளர்களைச் சேர்த்தல் போன்ற குவிந்த குற்றச்சாட்டுகள், தேர்தல் ஆணையத்தின் குப்பைக் கூடைக்குள் போனது.
2024 மக்களவைத் தேர்தல்,
மகாராஷ்டிரா சட்ட சபைத் தேர்தல், தில்லி தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும்
பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் கோடிக்கணக்கில் வித்தியாசம் உள்ளது. உச்ச நீதிமன்றம் வாக்குப் பதிவு இயந்திரப் பதிவுகளை அழிக்காதீர்கள் என மென்மை காட்டுகிறது.
அதிகபட்சமாகத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுரை கூறுகிறது. ‘வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்புங்கள்; தேர்தல் ஆணையத்தை நம்புங்கள்’ என்கிறது, மக்களவை
எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “இது
குறித்து வழக்கு
தொடர்வோம்” என
அறிவிக்கிறார்.
தில்லி
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் எங்கள் வாக்குச் சாவடி முகவர்கள் வழியாகப் பெற்ற வாக்குச்சாவடி ஓட்டுப் பதிவு விவர 17-சி படிவ விவரத்தை
எங்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையமும் அதுபோல் 17-சி படிவ விவரங்களை
இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்”
என்று கோரிக்கை வைக்கிறார். தேர்தல் ஆணையம் 17-சி படிவத்தை வாக்குச்
சாவடிகளில் அரசியல் கட்சி முகவர்களிடம் வழங்குவதுதான் நடைமுறை எனக் கூறி இணையத்தில் வெளியிட மறுக்கிறது. இது தேர்தல்
ஆணையம் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவதில்லை என்பதின் ஓர் அடையாளம். அது பா.ச.க.
விற்கு சாமரம் வீசுகிறது என்பதே நடைமுறை.
2024 மக்களவைத் தேர்தல்
பிரச்சாரத்தில் தனி நபர் தாக்குதல், வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு வழக்கு, தண்டனை என்ற நடைமுறை வந்தபோது இராகுல் காந்திக்கும் கார்கேவுக்கும் தனிப்பட்ட நோட்டீஸ் அனுப்பிய ஆணையம், பா.ச.க.
தலைவர் நட்டாவுக்கு கட்சி சார்பில் எனத் தன் சுயமுகம் காட்டி கண்டனம் பெற்றது. இதைவிடக் கொடுமை, தேர்தல்
பத்திரங்கள் வழி நிதி திரட்டுவது. இது தேர்தல் முறைகேடுகளுக்கு மூல காரணம்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு
இரண்டு மாதங்களுக்கு முன் உச்ச
நீதிமன்றத்தால் தடை செய்யப்படும் வரை எல்லா விவரங்களையும் வைத்திருந்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் அமைதியாகக் காலம் கழித்தார். அக்காலத்தே அறக்கட்டளை முறைகேடு என மத்திய அரசின்
புலனாய்வு அமைப்புகளால் பிரதான எதிர்க்கட்சி காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது, தேர்தல் களப் போட்டி சமமின்மை நிலைக்குப் பெரும் அடையாளம். தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் தேர்தல்களில் பங்கு பெற்று, மக்கள் பிரதிநிதிகளாக மிளிரும் கிரிமினல் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். வெறுப்புப் பிரச்சாரங்கள் உச்சம் பெற்றபோதும், அது தன் எஜமானர்கள் என்பதால் அமைதியாகி காலம் கழித்தார். சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் எனப் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களைத் தடுக்கவில்லை. அது குறித்து சிறு துரும்பையும் அசைக்கவில்லை. எஜமான விசுவாசம் கண்ணைக் கட்டிவிட்டது.
தலைமைத்
தேர்தல் ஆணையர் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் கூறும் வார்த்தைகளே முத்தாய்ப்பு வரிகள்: “இராஜீவ் குமாரது அணுகுமுறைகள் பாரபட்சமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் பாரபட்சமின்றி தேர்தல்கள் நடத்தப்படாவிடில், நமது சனநாயகம்
ஆபத்திற்கு உட்படுத்தப்படும். இதை மாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்”
என்கிறார்.
சனநாயகத்தில்
தன்னாட்சி அமைப்புகளை முடக்கும் பா.ச.க.வுக்குத்
தக்கநேரத்தில் இந்திய மக்கள் தம் வாக்குகள் மூலம் பதில்
தருவார்கள். காலம் கனிந்து வரும். வரலாறு திரும்பி வரும்.