வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் ஆணுக்கும்-பெண்ணுக்கும் சரி நிகர் சமமான கூலி வேண்டும் என்பதற்காக 1960-களில் அமெரிக்காவில் பஞ்சாலைகளில் எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, உயிர் துறந்த நாளின் நினைவாகவும், பெண் தொழிலாளர்கள் எழுப்பிய உரிமைக் குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவும் பிறந்ததுதான் அகில உலகப் பெண்கள் தினம். இந்நாள் ஆண்டுதோறும் அகில உலக அளவில் மார்ச் 8-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வரு கிறது. ஐக்கிய நாடுகள் பெருமன்றம் இந்த ஆண்டை அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமைகள், சமத்துவம், அதிகாரம் அளித்தல் என்ற கருப்பொருளில் கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது.
ஒரு
தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, மகளாக என ஒட்டுமொத்த உறவிலும்
ஆணுக்குத் துணையாக, இணையாக நிற்பவள்தான் பெண். உலக மக்கள் இனத்தில் ஐம்பது விழுக்காட்டினர் பெண்களே. இருப்பினும், உரிமைகளைப் பெறுவது, வளங்களைப் பகிர்ந்து கொள்வது, வாய்ப்புகளைப் பெறுவது, வன்முறை இன்றிப் பாதுகாப்புடன் வாழ்வது என்பனவற்றில் பெண்களுக்கு உண்மையான சமத்துவமின்மையே காணப்படுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, பாலினச் சமத்துவத்தினை அடைய இன்னும் 133 ஆண்டுகள் ஆகும். இத்தகைய சூழலில் தமிழ்நாடு திரு அவையின் பெண்கள் பணிக்குழு ‘பெண்களை ஆற்றல்படுத்தி சம உரிமையை நிலைநாட்டுவோம்’ என்ற
கருப்பொருளில் அகில உலகப் பெண்கள் தினத்தைக் கொண்டாட அழைக்கிறது.
2025-ஆம் ஆண்டு
பாலினச் சமத்துவம் பேணுதல், பெண்களுக்குச் சமூகத்தில் அதிகாரமளித்தல் ஆகிய வற்றின் உலகளாவிய நோக்கமும், யூபிலி ஆண்டின் கூட்டொருங்கியக்கத் திரு அவையின் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
மையக் கருத்தும் இணைந்து முக்கிய நிகழ்வாக அமைகின்றன.
அகில உலகப்
பெண்கள்
தினத்தினைப்
பொருளுள்ள
வகையில்
கொண்டாட...
• நாடு, நமது மாநிலம், நாம் வாழுமிடம், நமது பங்கு ஆகிய இடங்களிலும், கல்வி, உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், அமைதி, ஊடகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் பெண்களின் நிலையை ஆய்வு செய்தல்.
•
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்தல்.
• தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராகப் பெருகி வரும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
• பாலினச் சமத்துவத்தைப் பயிற்றுவித்தல் - பாடத்திட்டங்களில், மறைக்கல்வியில், பங்கு அளவிலும் மறைமாவட்ட அளவிலும் பல்வேறு பயிற்சிகளில் பாலின சமத்துவத்தைப் பயிற்றுவித்தல்.
• அதிகாரமளித்தலை ஊக்குவித்தல் - கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமத்துவத்தைப் பேணுதல், தலைமைத்துவம் வழங்குதல், முடிவெடுக்கும் தளங்களில் பெண்களை அமர்த்துதல், இதன்மூலம் அதிகாரக் கட்டமைப்புகளை மறுவரையறை செய்தல், இளம்பெண்களையும் சிறுமிகளையும் வழிநடத்துதல்.
• பாலினச் சமத்துவத்திற்கான, பாலின நீதிக்கான இயக்கங்களோடு இணைந்து பயணித்தல்.
• சட்ட விழிப்புணர்வு, ஆலோசனை, பாதுகாப்பு, சட்ட உதவி மையங்கள், வன்முறையிலிருந்து தப்பியவர்களுக்குத் தங்குமிடங்கள் போன்ற அவசியமான தேவைகளை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பெற்றுத் தருதல்.
• பெண்களின் பொருளாதாரத் தற்சார்பிற்கான பயிற்சிகளை அளித்து அவர்கள் வாழ்வு வளம் பெற வழிகாட்டுதல்.
• பெண்களின், சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துதல் - அனைத்து வகையான வன்முறை, பாகுபாடு, சுரண்டல் அனைத்தையும் எதிர்த்து, பெண்களின், சிறுமிகளின் முழு அளவிலான மனித உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடுதல்.
• பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல் - திரு அவையில் பங்குத்தளங்களில், பங்குப் பேரவையில் சமமான எண்ணிக்கையில் பங்கேற்றல், தடைகளை நிவர்த்தி செய்தல், பெண்களின், சிறுமிகளின் குரல்களை உயர்த்துதல், அதிகாரமளித்தலை உறுதி செய்தல்.
• பெண்களின் மாண்பை இழிவுபடுத்தும் ஊடகக் காட்சிகளுக்கு எதிராகத் தணிக்கைக் கோருதல். பெண்களின் மேன்மையை, திறமைகளை வெளிப்படுத்தும் மாற்றுக் காட்சிகளை உருவாக்குதல்.
• பெண்களின் குடும்பம்சார் உழைப்பினை அங்கீகரித்தல், வீடுசார் பணிகளில் ஆண்-பெண் பங்கேற்பை ஊக்குவித்தல்.
சவால்களைத்
தாண்டி திரு அவையிலும் சமுதாயத்திலும் பெண்கள் பல புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளனர்.
பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அலுவலக நியமனப் பணியில் அருள்சகோதரி சைமோனா பணி அமர்த்தப்பட்டுள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவரான திருமிகு. திரௌபதி முர்மு, கல்விப் போராளியான மலாலா யூசுப் சாய், ஆசிரியரும் சமூக விமர்சகருமான அருந்ததிராய். சுற்றுச்சூழல் ஆர்வலர் மேத்தா பட்கர், அரசியல்வாதி பிரியங்கா காந்தி, மாநில முதல்வரான திருமிகு மம்தா எனப் பெண்கள் சாதித்து வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியாளர் திருமதி பிருந்தா உள்பட தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பெண்களே மாவட்ட ஆட்சியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். விண்வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், அதிக நேரம் விண்வெளியில் நடந்து கின்னஸில் இடம்பெற்றுள்ளார். சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதை உணர்வோம்!
“இனி உங்களிடையே ஆண் என்றும் பெண் என்றும் இல்லை... கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” என்ற
தூய பவுலடியாரின் வாக்கையும் (கலா 3:28), “ஆணும்-பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி, இவ்வையம் தழைக்குமாம்” என்று
புரட்சிக்கவி பாரதி உரைத்த உண்மையையும் வாழ்வாக்குவோம். பெண்களின் திறன்களை மேம்படுத்தி, சமமான பங்கேற்பை உறுதி செய்வோம்!
‘ஆணுக்கு நிகர் பெண்’ என்ற உயர்ந்த குறிக்கோளோடு பயணிப்போம். உறவில் உயர்ந்து, சமூகத்தில் சிறந்து, பண்பாட்டில் பக்குவமாகி யூபிலி ஆண்டில் பயணிப்போம். பாலினப் பாகுபாடு இன்றிப் பெண்களும் ஆண்களும் ஒன்றிணைந்து சமத்துவம் கொண்ட புதியதோர் உலகு படைப்போம்!
சிந்திப்போம்!
செயல்படுவோம்!! வாழ்க மகளிர் தினம்!! வளர்க பாலினச் சமத்துவம்!!!
- தயாரிப்பு: தமிழ்நாடு ஆயர்
பேரவையின்
பெண்கள் பணிக்குழு, திருச்சி
7. திண்டுக்கல் சாலை, பிராட்டியூர்,
திருச்சி
- 620 009
அரசியல் இல்லா வாழ்வியலில், இன்று நாம் அணிந்துகொள்ளப் போவது அல்லது உடுத்திக் கொள்ளப் போவது... ஆடை அல்லது உடையைத்தான்.
பரம்பரை
பரம்பரையாக, பாரம்பரியமாக நாம் அணிந்துகொண்டு வரும் ஆடைகளில், அப்படி என்ன அரசியல் சாயம் படிந்திருக்கிறது? என்றுகூட எண்ணத் தோன்றலாம். இந்த எண்ணம் நம் இளைய தலைமுறைக்கு வியப்பாகக்கூட இருக்கலாம். ‘பிடித்த உடையை வாங்கப் போகிறோம்; அதை அணிந்துகொள்ளப் போகிறோம்; பயன்படுத்திய பின் அதைத் தூக்கி எறியப் போகிறோம். இதிலென்ன அரசியல்?’ என்று மேம்போக்காகச் சிந்திக்கும் வாய்ப்பு இன்றைய இளைய தலைமுறைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
இன்றைக்குப்
பெரும்பாலான இளையவர்கள் நோயாளிகளாகிவிட்டதற்கான காரணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். மாறிவிட்ட மேற்கத்திய உணவுமுறை, மது, புகை, தீயபழக்க வழக்கங்கள் என்று பட்டியலிடுவார்கள். ஆனால், தம் உடலோடு இறுகப் பிடித்து ஒட்டியிருக்கும் ஆடைகளே தமக்கு நலக்கேட்டை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த விழிப்புணர்வை அவர்களுக்குத் தரும் சூழலும் இல்லை, இந்தச் சமுதாயத்தில்.
இன்றைக்குத்
திருமணமான பலருக்குக் குழந்தைகள் தாமதமாகப் பிறப்பதற்கு அல்லது குழந்தைக்காக மருத்துவரை நாடிச்செல்வதன் பின்னணியில், பல அதிர்ச்சியூட்டும் காரணங்களில் அதிமுக்கியத்துவம்
வாய்ந்ததாக, அவர்கள் அணிந்திருக்கும் தொடையை இறுகப் பற்றிப் பிடித்திருக்கும் நவநாகரிக உடைகளும் காரணம் என்று நம் பாரம்பரிய அறிவியல் கூறுகிறது. இவை நம் உடலின் உள்பாகங்களுக்குள் ஏற்படுத்தும் தீமைகள், நமக்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன.
“தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டி வாழ்ந்தவர்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர்கள்; மேற்கத்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வரும் இளையவர்கள் குழந்தைக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள்” என்று
நம் தமிழ் முன்னோர் ஒருவர் கூறியிருப்பது உடை அரசியலின் அடிப்படையில்தான். பாரம்பரிய உடையை மறந்ததன் விளைவே இது என்பது நம் கிராமத்து ‘பெருசு’களின் உரத்தச் சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. வரலாறு
குறித்தோ, பண்பாடு குறித்தோ அறிந்துகொள்ளும் ஆர்வம் இன்றைய தலைமுறை களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும், வெறும் பொழுதுபோக்குகளின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையும் அறிவார்ந்த பெருமக்களின் கூற்றாக இருக்கிறது. ஓர் இனம் அழிவதற்கு அந்த இனத்தின் மொழி அழிவது எவ்வாறு முக்கியக் காரணமோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரமும், பண்பாடும்.
‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின்
பீடுடையது இல்’
(குறள் 1021)
என்கிறது
குறள். குடிப்பெருமைக்குரிய
கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை என்பதே இதன் பொருள். அந்தப் பெருமை என்பது நம் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுதானே தவிர, தவிர்ப்பது அல்ல என்பதை இன்றைய இளசுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது யார்? இதனைப் பயன்படுத்தித்தான் ஓர் உள்நோக்க அரசியல் நம் ஆடைகளின் வழியாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்த ஊடுருவல் இன்று நேற்று தொடங்கியது அல்ல; ஆதிக்கச் சமூகம் ஆடையை என்று கைப்பற்றியதோ, அன்றிலிருந்து தொடங்கியதுதான் ஆடை அரசியல். அந்த ஆதிக்கச் சமூகம் சிலைகளில், பாறைகளில் வெட்டப்பட்ட, செதுக்கப்பட்ட சிற்பங்களில், குகை ஓவியங்களில், மனிதக் கலைவடிவங்களில் ஆடைவழி அடையாளங்களாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றன.
மேலோர்,
கீழோர் என்பவர்க்கான ஆடை வடிவங்கள் அன்றே தீர்மானிக்கப் பெற்றிருந்தன. சமூகத்தின்
உயர் வகுப்பினர் மெல்லிய மஸ்லின் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பட்டுத்துணிகளில், ஓவியங்களாக மிளிர்ந்து கொண்டிருந்தனர். பொதுவகுப்பினர் பருத்தி, கம்பளி, கைத்தறி போன்றவற்றில் காட்சி அளித்தனர். ஆனால், இந்த ஆடை பாகுபாடு என்பது பெண்களின் தலைமையில் இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்தபோது இல்லை என்றும், பாலினப் பாகுபாடு கிடையாது என்றும் குறிப்பிடுகிறார் ஆடை வரலாற்றைப் பற்றி எழுதி வரும் சகோ. சிந்துஜா. பின்னாளில்தான் ஆடை என்பது அதிகாரவர்க்கம் தன் அதிகாரத்தைச் செலுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்தது, வந்து கொண்டிருந்தது; இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வர்ணங்கள்,
வண்ணங்களாக மக்களின் ஆடை மீது அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. சாதி, சமுதாய, மத அடையாளங்கள் என்ற
வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு, நம் ஆடை அரசியல் கந்தல் கந்தலாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இனத்தையே, மொழியையே, ஒரு கலாச்சாரத்தையே, பண்பாட்டையே வேரோடு அழித்துப் போடும் அளவிற்கு ஆடை அரசியல் வளர்ந்து கொண்டிருக்கிறது.
அன்று
‘ஏழை விவசாயிகளும் நெசவாளர்களும் அரை ஆடையுடன் இருக்கையில், எனக்கு மட்டும் பாதம் தொடங்கி தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அரை ஆடைக்கு மாறியது மகாத்மா காந்தியின் ஆடை அரசியல். கௌரவமான ஆடை அணிய மறுக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அண்ணல் Dr. அம்பேத்கர்
கோட்டும், சூட்டும் அணிந்து நம்பிக்கை ஊட்டியது மற்றொரு வகையான ஆடை அரசியல்.
தோளில்
போடப் பயந்து, கைகளின் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு, குனிந்த தலை குனிந்தபடியே இருக்க தெருவைக் கடந்தவர்களின் தலைக்குனிவை நிமிர்த்த, தங்கள் தோள்களின்மீது துண்டுகளைத் தொங்கவிட்டு, வாழ்வியல் கம்பீரத்தைக் கற்றுக்கொடுத்த திராவிடத் தலைமைகளின் தோள் துண்டு அரசியலும், உடை சார்ந்த அரசியலின் வெளிப்பாடுதான்.
அன்று
எண்ணற்றப் பேதங்களுக்கிடையிலும், குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் போர்வையாக இருந்தது ஆடை அரசியல். இன்றோ வெறுப்பரசியலின் விளைவாக வெயிலுக்குப் போர்த்திக் கொண்ட கம்பளியாகத் திரிகிறது ஆடை அரசியல். இதில் தங்களை அறியாமலேயே இளைய சமுதாயம் சிக்கிக்கொண்டிருக்கிறது.
பாரம்பரியம்
மறந்தால் வாழ்வே பாழாகும் என்பதே வரலாறு. திருவிவிலியம் கூறும் நிகழ்வாக ஏவாள் தந்த கனியை ஆதாம் என்று சுவைத்துப் பார்க்கத் தொடங்கினானோ அன்றே பிறந்ததுதான் ஆடை. அந்த ஆடையை, ஆதிமனிதர்கள் தங்கள் உடல்களைப் பல்வேறு இயற்கை இன்னல்களிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள் என்பதே ஆதி மனித வரலாறு.
மனித
வரலாறு மாற்றம் பெற்றாலும், மாறாதது ஆடை என்பதே உண்மை. காரணம், ஆடை மனிதனின் உடலோடு மட்டுமல்ல, உணர்வோடும் ஒன்றியிருக்கும் ஒன்று; வாழ்வியலோடு அரசியல் கலந்திருப்பது போல. இனி...
உடைக்குப்பின் உணவுதானே!
(தொடரும்)
இந்தியா சனவரி 26 அன்று குடியரசு நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தது. விடுதலை பெற்ற இந்தியா தனக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்கிட முனைந்த நிலையில், நாடு முழுமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அரசியல் நிர்ணயச் சபையை உருவாக்கியது. அறிவர் அம்பேத்கர் அவர்களை வரைவுக் குழுத் தலைவராகக் கொண்டு உருவாக்கிய புரட்சிகர அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
புதிய
இந்தியாவின் அடையாளமாகவும், இந்தியாவின் கொள்கைப் பெட்டகமாகவும், மக்கள் உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இனி உருவாகவிருந்த இந்தியாவின் கருத்தாகவும் (Idea of India) கருதப்பெறும்
இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் பிறப்பெடுத்தது.
இந்தியச்
சுதந்திரப் போரில் பங்கு எதுவும் பெறாத ஓர் அமைப்பு, இந்தியச் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் தலைமையேற்று நடத்தப்பெறும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், இந்திய அரசமைப்பின் பண்புகள் இந்துப் பண்பிற்கு எதிரானது என்று கோல்வாக்கர் அவர்களால் அவமதிக்கப்பட்ட நிலையிலும், இதே அரசமைப்பின் மீதுதான் கைவைத்து உறுதிமொழி (Oath) எடுத்து
ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இவ்வரசமைப்புச் சட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ‘போற்றுதற்குரிய வேதம்’ எனப் புகழ்ந்ததும் இன்று உலகறிந்த செய்தி!
நடந்து
முடிந்த நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவை முன்வைத்து நடத்தப்பட்டவைதான் என்பதும், இவ்விவாதத்தின் ஒரு பகுதியில் அறிவர் அம்பேத்கர் இந்திய உள்துறை அமைச்சர் அவர்களால் அவமானப்படுத்தப்பட்டதையும் அறிவோம். மனுஸ்மிருதியையும் சவார்க்கரையும் கொண்டாடும் இன்றைய அரசு, சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை மதித்ததில்லை என்பதையும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் முக்கிய விழுமியங்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டுள்ளன என்பதையும் எதிரணிகள் ஆணித்தரமாக எடுத்து வைத்தன.
சனநாயகத்தை
நம்பாத ஒரு மதவாத கட்சி, சனநாயகம் தந்த தேர்தல் சனநாயகத்தை விடாமல் காத்து வருதலில் என்ன சூழ்ச்சியுள்ளதோ, அதே நிலைதான் அரசமைப்பைக் காப்பதாக அல்லது மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் நாடகமும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
“தொன்று தொட்டு இந்தியா காத்துவரும் முதன்மை மதிப்பீடுகளின் தொடர்ச்சியே இன்றைய அரசமைப்புச் சட்டம். சமத்துவம், சுதந்திரம், நீதி எனும் உயர்விழுமியங்கள் இந்திய நாகரிகம் ஏற்கெனவே காத்துவரும் மதிப்பீடுகளே. இதைத்தான் நம் அரசமைப்புச் சட்டம் பிரதிபலிக்கிறது. இந்தியச் சுதந்திரத்தின் நிலைப் பண்பைக் குறித்து சந்தேகப்பட்டவர்கள்தான் தோற்றுப் போனார்கள்”
- குடியரசுத் தலைவர் முர்மு அவர்களின் குடியரசு தின உரையின் சுருக்கம். இந்தக் குடியரசு தின உரையின் சாரம் மிகச் சரியானதே. அரசமைப்பின் முகப்புரையில் தரப்பட்டுள்ள அடிப்படை விழுமியங்களின் இன்றைய ஏற்புடைமை பற்றி நமக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் வலுவூட்டப்பெறும் இக்கூற்றுகள் நமக்கு மகிழ்வையே தருகின்றன.
நம்பிக்கையற்ற
அல்லது பக்தி தன்மையற்ற ஒரு மதவாத கட்சி சனநாயகத்தைக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை ஏற்குமா?
அரசமைப்புச்
சட்டத்தின் அனைத்து விழுமியங்களுக்கும் எதிரான ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பு தன் நோக்கை மிகத் தெளிவாகவே இந்திய மக்களிடம் வைத்து வருகிறது. மூலக் கொள்கையில் இவ்வமைப்புகளிடம் எந்தவிதச் சமரசமும் இல்லா நிலையில்,
ஆட்சியைத் தற்காலிகமாகக் காத்துக் கொள்ளும் சூழ்ச்சியாகவே இக்கட்சியின் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சூழ்ச்சியின்
உச்சம்
பாபர்
மசூதி உடைப்பிற்குப் பின், விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கியதைப் பலர் மறந்திருக்கலாம். மோடி ஆட்சிக் கட்டிலேறிய முதலாண்டில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவுக்கெனத் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில் ‘சோசலிசம்’,
‘சமயச் சார்பின்மை’ என்ற
இரு வார்த்தைகளும் களவாடப்பட்டிருந்தன. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் இந்தியா 1947-இல் பெற்ற சுதந்திரத்தை மறுத்து, ‘இராமருக்கான கோவில் எழுப்பப்பட்ட நாளையே உண்மையாகச் சுதந்திர நாள்’ என்று அறிவித்தமையின் உள்ளடக்கம் என்ன?
இந்தியச்
சுதந்திரப் போரில் பங்கு எதுவுமற்ற ஆர்.எஸ்.எஸ். இப்படித்தான் சிந்திக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தியச் சுதந்திரம் இந்து நாடு ஒன்றை உருவாக்க உதவவில்லை என்பதாலும், சுதந்திரம் பெற்ற இந்தியா சனாதனக் கொள்கைகளுக்கு முரணான அரசமைப்புச் சட்டத்தை அடிப்படை அடையாளமாக ஏற்றதால், இந்துத்துவ அமைப்புகள் நிலவும் அரசமைப்பை ஏற்றுக்கொள்வதுபோல நாடகமாடி வருகையில், அண்மையில் ‘தர்ம சன்மத் சமய நாடாளுமன்றம்’ (Religious Parliament) என்று அழைக்கப்பெறும் விசுவ இந்து பரிஷத்தின் அமைப்பொன்று புதிய அரசமைப்புச் சட்டத்தை அறிவித்துள்ளது.
“இந்து இராஷ்டிராவுக்கான அரசமைப்பு ஒற்றைச் சட்டமன்றத்தை (unicameral Legislature)
நடைமுறைப்படுத்துமாம்.
இராணுவப் பயிற்சி அனைத்துக் குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப்படுமாம். அரசு தொகுதி வளர்ச்சிக்குத் தரும் நிதி, சமய நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வழங்கப்பெறுமாம். வேளாண்துறை வரிவிலக்குபெறும். இப்பிரதிநிதிகள் வேத பாடசாலையில் கல்வி கற்றவர்களாக இருத்தல் வேண்டும். சமய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களைத் திரும்பப் பெறும் உரிமையுண்டு. வாக்காளர் எண்ணிக்கையில் 50,000 பேரின் ஒப்புதலைப் பெற்றால் இது நடைமுறைக்கு வரும். இந்தப் புதிய அரசமைப்புச் சட்டம் இராமராஜ்யம், மனுஸ்மிருதி, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர அடிப்படையில் அமையும். விரைவான நீதிக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். ஒரு நபருக்கு அளிக்கப்பெறும் தண்டனை, அவரைத் திருத்துவதற்கான கருவியாக அமையும். பொய்யான குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனை வழங்கப்பெறும். இவ்வரசமைப்புச் சட்டப்படி சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இந்திய மண்ணில் தோன்றிய இந்து, சைனம், சீக்கியம், பௌத்த மதம் சார்ந்தவர்களே வாக்களிக்கும் (Vote) உரிமை
பெற்றவர்கள். கல்வி அமைப்பு குருகுல முறையில் மாற்றப்படும். ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குருகுலப் பள்ளிகளாக மாற்றப்படும். இசுலாமியர்
நடத்தும் மதராசா பள்ளிகள் மூடப்படும். சாதி அமைப்பு ஒழிக்கப்படும். ஒற்றைத் திருமண முறையும், கூட்டுக் குடும்ப முறையும் ஊக்குவிக்கப்படும். உலக நாடுகள் அனைத்தும் இந்து இராஷ்டிரத்தை அங்கீகரிக்கும் வகையில் பரப்புரை அமையும்.
இவ்வுலகில்
கிறித்தவர்களுக்கென்று
நாடுகள் உள்ளன; இசுலாமியர்க்கும் உள்ளன; இந்துகளுக்கென்று நாடு எதுவும் இல்லாச் சூழலில், இந்நாட்டை இந்து நாடாக அங்கீகரிக்க இம்முயற்சி தொடரும். புதிய அரசமைப்பின்படி, மத நம்பிக்கைகளும் மதச்
சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.
இந்தியா
முழுமையிலான நிபுணர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும்
501 பக்க இந்த ஆவணம் சங்கராச்சாரியாரின் அனுமதி பெற்றபின் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் (‘டெக்கான் ஹெரால்டு’,
பெங்களூரு பதிப்பு 26.01.2025).
மேற்கண்ட
செய்தித் தொகுப்பினை நாம் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம்? எங்கோ கூடிய சில மதவாதிகளின், மத அடிப்படைவாதிகளின் உளறலாக மட்டுமே
கருதப் போகிறோமா?
மதவாதிகள்
எனச் சிறுமைப்படுத்தப்பட்டு, கண்டுகொள்ளாமல் விட்ட நிலைக்கு இந்த நாடு ஒவ்வொரு நாளும் பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது.
வகுப்புவாத
இந்துத்துவர்கள் பேசிய அகண்ட பாரதக் கனவு இன்றும் நனவாகாமல் இருக்கலாம்; நிலப்பரப்பில் அகண்ட பாரதக் கனவு நனவாகாமல் இருக்கலாம்; இந்துத்துவர்களின் தொடர் பரப்புரைகளால் இந்திய எல்லை தாண்டி, உலக அளவிலான அங்கீகாரத்தை மோடி தலைமையிலான அரசு பெற்றுள்ளது என்பதே உண்மை. இதுவும் அகண்ட பாரதக் கருத்தியலின் வெற்றிதான் அல்லது மதப் பெரும்பான்மைவாத அரசு, ஒரு பாசிச அரசாகத்தான் இருக்க முடியும் என்ற அடிப்படை அரசியல் ஞானம் கூட இல்லாத உலக அரசுகள் எப்படி மோடி அரசுக்கு அங்கீகாரம் வழங்க முடியும்?
சனநாயகத்திற்கு,
சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு இந்துத்துவ அரசியலால் ஆபத்து வரும் என்று வகுப்புவாத அரசியலின் போக்கையும் வரலாற்றையும் அறிந்திருந்த அரசியல் அறிஞர்கள் முன்னறிவித்த போதெல்லாம், இது வெறும் கற்பனையென்று நகைத்தவர்கள் அனைவருக்கும் இன்றைய ஆட்சியாளர் தரும் பாடம் என்ன? இந்துத்துவர்களின் சனநாயகத்தின் எதிரான போக்கு உண்மை சனநாயகம் பற்றிய விவாதத்திற்கும், அரசமைப்புச் சட்டம் பற்றிய புரிதலுக்கும் வழிவகுத்தது என்பது ஒரு நேரடி விளைவு என்பதும் உண்மையே. இந்த நேரடி விளைவு வரவேற்கத்தக்கது என்றாலும், காந்தி, நேரு, அம்பேத்கர் தலைமையிலான இந்தியக் கனவுக்கு (Idea of India) நேர்
எதிரான போக்கு மக்கள் மனத்தில் திட்டமிட்டு விதைக்கப்பட்டு நியாயம் பெற்று வருதலை மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற மோடி ஆட்சி நிரூபிக்கவில்லையா?
நாக்பூரைத்
தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். எனும் வகுப்புவாத அமைப்பு, தன் பரிவாரங்களை நாடு முழுவதும் விரித்து வருகின்ற சூழலில் இந்திய அரசியல், சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்புகளைச் சிதைத்து வருவதை இந்தியாவின் சமயச் சார்பற்ற அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளனர். இவ்வெச்சரிக்கைகளைத் தொடர்ந்து வந்த ஆட்சியமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுதான் இன்று தரப்பட்டுள்ள இந்துத்துவச் சாயலோடு கூடிய அரசமைப்புச் சட்டம்.
பன்மைக்குணம்
மிக்க இந்தியாவை ஒற்றைக்குள், ஓர்மைக்குள் முடக்கி, சனநாயகத்தின் குரல் வளையை முறிக்கும் இந்திய மதவாதிகள் 1925-ஆம் ஆண்டிலிருந்தே இதைத்தான் கூறி வருகின்றனர். இன்று அக்குரலின் உச்சம் நம் செவிகளைத் துளைக்கும்போதுதான் வேற்றுமை (Diversity) பற்றி,
பன்மைக் குணம் (Pluralizion) பற்றி
பெரிய அளவில் பேசத் துவங்கியுள்ளோம். பன்மை ஒழிப்பைத் தன் அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் இன்று ஒற்றையை, ஒற்றையை வலியுறுத்தும் எதேச்சதிகாரத்தை, தேசிய இனங்களின் தனித்துவத்தை, அவற்றின் அடையாளத்தை அழித்து வருவதில் எந்த ஒளிவு மறைவுமில்லை.
காஷ்மீருக்கான
தனி அந்தஸ்து ஒழிக்கப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இராமருக்கான ஆலயம் எழுப்பப்படும்... இவையெல்லாம் எப்போதுமே இந்துத்துவர்கள் தம் தேர்தல் முழக்கங்களாகக் (Manifestos) கூறி
வந்துள்ளனர். சிறுபான்மையினரைச் சமயச் சார்பற்ற கட்சிகள் திருப்தி (appeaserent) செய்யும் வகையில் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வெறும் உளறல்களாகவே கருதப்பட்டு வந்தன. மதமாற்றுத் தடைச்சட்டங்கள் பா.ச.க.
ஆளும் மாநிலங்கள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளன.
இந்திய
மதவாதிகள், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மதவாத கட்சிகள் ஒருவகையில் பார்த்தால் நேர்மையானவர்கள். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று உறுதி அளித்தனரோ, அவ்வுறுதி மொழிகளை எழுத்துப் பிசகாமல் நிறைவேற்றி வருகின்றனர். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரம் கருகிப்போவது உண்மையெனினும் மதவாத சக்திகள் உறுதியானவர்கள்.
நிச்சயமாக
அண்மையில் இந்து அமைப்புகள் அறிவித்த புதிய சாசனம் உருப்பெறும் காலம் தொலைவில் இல்லை.
5,125 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்ட ‘மாயன்’ (MAYA) காலண்டர், 21.12.2012-இல் முடிவடைந்தது. அந்த நாள் உலகின் கடைசி நாளாக இருக்குமென்று பலர் அஞ்சியது, வரலாற்றில் ஒரு நாளாக எழுதப்பட்டுவிட்டது.
ஜோகன்னஸ்
ஸடோபர் என்ற ஜெர்மானிய கணித வல்லுநரும், சோதிடருமான (Astrologer) இவர்,
பெரிய வெள்ளம் 25.02.1524-இல் உலகைச் சூழ்ந்துகொள்ளுமென்றும், கிரக மாற்றங்கள் ஏற்படுமென்றும் கணித்தார். பலர் நம்பினர். அதேபோன்று மழை வந்தது, ஆனால் சிறிதளவே.
76 ஆண்டுகளுக்கு
ஒருமுறை, ஹேலி வால்நட்சத்திரம் (Halley comet) நாம்
வாழும் உலகிற்கு அருகில் வருவது இயற்கை. அவ்வாறு 1910-இல் இந்த வால்நட்சத்திரம் வந்த நிலையில், அதனால் விஷ வாயு பரவும் அல்லது வானலோகக் கிரக மோதல்கள் எழும், உலகம் அழியும் என்று கூறப்பட்டது. அதுவும் நிகழவில்லை.
1806-ஆம் ஆண்டு
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில், உலக முடிவைக் குறிக்கும்படியாக, பெட்டைக் கோழி ஒன்று ‘கிறிஸ்து வருகிறார்’
என்று எழுதப்பட்ட முட்டை இடுவதாகச் செய்தியைப் பரப்பினார். இதனைக் கேள்வியுற்று பலர் அதைச் சென்றும் கண்டனர். பின்னர் அதை எழுதியது அந்தக் கோழியின் சொந்தக்காரர் என்று தெரியவந்தது.
1911-ஆம் ஆண்டு
பிறந்து 1996-இல் மரித்த பாபா வெங்கா (Baba Venga) என்ற
பல்கேரிய தொலைநோக்குத் திறனாளர் (clairvoyant) தன் 12-ஆம் வயதில் பார்வையை இழந்தார்; உலகின் பல நிகழ்வுகளை முன்கணிப்பதில்
தேர்ந்தவர்; இவரின் பல கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.
டயானாவின் மரணம், செப்டம்பர்-9/11 நிகழ்ச்சி என்பவைகள் சில. இவர், 2024-இல் ஏ.ஐ. (A.I.) உலகை ஆளும் திறன் பெறும் என்பதை முன்கணித்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு
வெர்னன் விங்கே (Vernon Vinge) என்ற
அமெரிக்கக் கற்பனை எழுத்தாளர், கணினி விஞ்ஞானி, இவரின் முன்கணிப்பு: முப்பது ஆண்டுகளில் மனிதனை மிஞ்சும் அறிவாற்றலைக் (Super human
intelligence) கொண்ட தொழில்நுட்பத்தை உலகம் பெற்றுவிடும் என்று. அதோடு நிற்கவில்லை, மனித சகாப்தமும் முடிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். நாம் 2023-ஆம் ஆண்டைக் கடந்து ஓராண்டாகிறது. இவ்வாறு உலக அழிவைக் குறித்து முன்மொழிந்தவர்கள் பலர். நிலவரம் இப்படியிருக்க, இந்தச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் ஆதாயம் சம்பாதிப்போர் சிலர்; ‘எல்லாருக்கும் நடப்பது நமக்கும்’
என உலக அழிவைக் குறித்து கவலையின்றி சிலர் அவரவர் வேலையைப் பார்ப்பதையும் காண்கிறோம்.
உலகச்
சரித்திரத்தில், கடந்தகாலத் தொழில்நுட்பங்கள் பல உருவில் மனிதனின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. இன்று நாம் புதிய தொழில்நுட்பத்தைக் காண்கிறோம். பல முந்தையத் தொழில்நுட்ப
அலைகள் தொழிலாளர் பிரிவில் சில வேலைத் திறன்களைத் தேவையற்றதாகவும், அதே நேரத்தில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியது. ஆனால், இப்போது நாம் சந்திக்கும் ஏ.ஐ. (AI) அலை எங்கு அழைத்துச் செல்கிறதென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் சகாப்தம்
(Digital era)
டிஜிட்டல்
தொழில்நுட்பம் இதுவரை கண்டிராத வேகத்துடன், எவ்வாறு எதிர்காலமிருக்குமென்று கணிக்க முடியாத (unpredictable)
ஒன்றாக உள்ளது. ரோபோக்களும், ஏ.ஐ. (AI) சார்ந்த தொழில்நுட்பமும் முழு அளவில் இயங்கும்போது வேலைகளை ஆக் கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் புதிய வேலைகளை உருவாக்கியது என்பதுதான் கடந்தகால வரலாறு.
ஏ.ஐ. (AI) கடந்த
இருபது ஆண்டுகளில் முன்னேறி வரும் (developing countries) உலக நாடுகளின் 50% மக்களிடம்
சென்றடைந்து சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது.
வேகமான விஞ்ஞான வளர்ச்சியினால், உலகச் சரித்திரத்தில் எப்போதுமில்லாத அளவிற்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் நிலை இயல்பாகவோ அல்லது தேவைக்கென்றோ உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 780 கோடி உலக மக்கள்தொகையில் 550 கோடியினரிடம் கைப்பேசி (mobile) உள்ளது; 440 கோடியினர் இணையதளமும் (Internet), 37 கோடியினர்
சமூக ஊடக (Social Media) உபயோகிப்பாளர்களாகவும்,
25 கோடியினர் மின்னஞ்சல் (email), 28 கோடியினர் முகநூல் (Facebook) பயன்படுத்துவோராகவும்
உள்ளனர் என்பது ஓர் ஆய்வின் அறிக்கை.
இன்று
ஏறக்குறைய 50% உலக
மக்கள் தொகையினர் சமூக ஊடகங்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒருபுறம், இது மக்களிடையே சில வேளைகளில் உண்மைக்கு அப்பாற்பட்ட செய்திகள் பரவ வழிசெய்தாலும், உலகச் சமுதாயத்தினர் தங்கள் குரலை மற்றவர் கேட்க இடமளிப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இந்நிலையில்,
உலகளாவிய வேகமான இப்புதுமை தொழில்நுட்ப வளர்ச்சி நாடுகளிடையே இடைவெளியை ஏற்படுத்தவும் இடமளிக்கலாம்; வலிமை பெறும் நாடுகள் தங்களுக்கென்று இணையதளம், ஏ.ஐ. (AI) கட்டமைப்பு , பண ஆதிக்கம், வர்த்தகம்,
நிதி ஒழுங்குமுறைகள் என்பன ஒருவேளை, முன்பொரு காலத்தில் உருவாகிய பெர்லின் சுவர் நிலைக்குச் செல்வதாக இல்லாமல் தவிர்க்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கூறுகிறார்.
இன்று
ஏ.ஐ. என்ற தொழில்நுட்பம்
தொடக்கத்தில் மெதுவாகக் கால்பதித்து இப்போது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி வருவதை நாம் வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் உணர்வதில்லை. 2010-ஆம் ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் குறித்து யாரும் பெரும் பொருட்டாக நினைக்கவில்லை. இன்று ஏ.ஐ. சிறுகச்
சிறுகப் பல துறைகளில் ஒரு
பெரும் புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது .
உலகில்
தலைசிறந்த கணினி நுட்ப நிறுவனங்களிலொன்றான மைக்ரோசாப்ட்டின் (Microsoft) தலைவர்
நாடெல்லா, ஏ.ஐ. பற்றி
“இப்போதிருக்கும் மின் அஞ்சலின் (email) முக்கியத்துவத்தை 1995-இல் யாரும் உணரவில்லை என்பதைப் போன்று, ஏ.ஐ.யின்
நிலை இருக்கிறது; இன்று இணையதளம் (Internet) இல்லையென்றால்
வீட்டிலிருந்து பணி (WFH) சாத்தியப்படுமா?
அல்லது பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குக் கூகுள் (Google) இல்லையென்றால்
இருக்குமிடத்திலிருந்து
யாரிடம் சென்று பதில் பெற முடியும்?” என்று கூறுகின்றார். வரலாற்றில் இதுவரை மனித வாழ்க்கை முறைகளில் தொழில்நுட்பம் ஓரளவிற்குத் தேவைக்கேற்ப கலந்திருந்ததைக் கண்டோம். இன்று நாம் சந்திக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பல துறைகளில் குறிப்பாக,
மருத்துவத்துறையில் ஏற்படப் போகும் மாற்றங்கள், மனித வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்திடப் போகிறதென்பதை உணரப் போகிறோம்.
சென்னை ‘ஏயர் N~h’ 2024, அக்டோபர் மாதம் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது. மெரினா கடற்கரையில் புறாக்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு தானியங்கள் தரையில் சிதறிக் கிடப்பதுபோல ஏராளமான மக்கள் கூட்டம் கடற்கரையில் திரண்டிருந்தது. உச்சி வெயில் தலையைப் பிளக்க, மணல்சூடு காலை வறுத்தெடுக்க கடலை நோக்கி ஓடினேன். கடல் தண்ணீரில் கால் நனைத்ததுமே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சிலர் கையில் குடைகளோடும், தண்ணீர் பாட்டிலோடும் தயார் நிலையில் வந்திருந்தனர். ஒரு சிலர் என்னைப்போல முன்தயாரிப்பு இல்லாமல் வந்திருந்தனர்.
‘ஏயர் N~h’ தொடங்கியதுமே
பாராசூட்டில் வீரர்கள் தேசியக்கொடி தாங்கி வந்திறங்கினர். அணிவகுத்துப் பறக்கும் பறவைகள் புகை கக்கிச் செல்வது போன்று இயந்திரப் பறவைகளின் அணிவகுப்பு அங்கு வட்டமடித்துக் கொண்டிருந்த பறவைகளுக்கே பிரமிக்கத்தக்கதாய் இருந்தது.
இயந்திரப்
பறவைகளை இயற்கை பறவைகள் வீழ்த்திவிடும் என்பதாலோ என்னவோ பட்டாசு வெடிக்கச் செய்து அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மற்றும் காகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி விரல் நீட்டி வானூர்திகளைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தந்தைமார்கள், கடல்நீரில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த கரையேறிய குழந்தைகள், களைத்துப்போய் தாயின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு விழாமல் நின்ற சிறார்கள், ஆரத்தழுவக் காத்திருந்த கடல், உச்சிமுகர்ந்து வியர்வை வழியச் செய்த வெயில், ‘காற்றே வீசு’ என்றிருந்த மனம், மௌனத்தைக் கலைத்துச் சென்றது வானில் சீறிப்பாய்ந்த இரபேல் விமானங்கள். மனம் புத்துணர்வு பெற்றது. ‘அடுத்தென்ன?’ என்று ஏங்கித் தவித்தது. மீண்டும் அதே வெயில், அதே உஷ்ணம், அதே மௌனம், அதே வியர்வை, அதே கூட்ட நெரிசல் அத்தனையும் கொத்திச் சென்றது தீ கக்கும் இயந்திரப்பறவை.
‘அடுத்து என்ன?’ என்று கேட்டு, வானம் பார்த்து நின்றது என் மனம்.
‘அது என்ன?’ என்று தொடங்கி, ‘அடுத்து என்ன?’ என்று ஏங்கித் தவிப்பதுதான் மனித மனத்தின் இயல்பாக உள்ளது. இதனை உளவியலாளர்கள் ‘நெஸ்டிங்’
(Nexting) என்கின்றனர்.
சமூக ஊடக உலகில் ‘நெஸ்டிங்’
என்பது மனித மனத்தில் ‘அடுத்து என்ன?’ என்ற ஆர்வத்தைக் கிளர்ந்தெழச் செய்து, சமூக ஊடக வலைப்புழுக்களாக நம்மை மாற்றிவிடுவது. சமூக ஊடகங்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது நமது உடலில் டோபோமைன் (dopomine) என்ற மகிழ்ச்சி அமிலம் சுரந்து, அந்த வெகுமான சுழற்சிக்குள் (reward loop) நம்மைச் சிக்கவைத்து
விடுகின்றது.
ஒரு
வீடியோவைப் பார்க்கிறோம்; அது ஒருவித மகிழ்மயக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது. மீண்டும் உடலும் உணர்வும் அதே மகிழ்மயக்க நிலையை எதிர்பார்க்கின்றது. எனவே, மீண்டும் அடுத்த வீடியோவைப் பார்க்க வைக்கின்றது. இதுவே தொடர் செயலாகிப் பல மணி நேரம்
நம்மை அறியாமல் சமூக ஊடகங்களின் கைதிகளாக்கி விடுகின்றது. இந்தச் சுழற்சியின் சூத்திரத்தை அறியாமல் இருப்பது என்பது காளை மாட்டின் கண்ணுக்கு முன்பாகக் கட்டப்பட்ட புற்கட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காளை மாட்டின் ஓட்டத்திற்கு ஒப்பானது. புற்கட்டு கண்ணுக்குப் புலப்படுமே தவிர, அதனால் அந்தக் காளைக்கு எந்தப் பயனும் இல்லை. அந்தக் காளையினை ஓடச்செய்ய திட்டம் தீட்டிய வியாபாரிக்கே அதிகப் பயன். அதே சூத்திரத்தைப் பயன்படுத்தியே நம்மையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது நுகர்வுக் கலாச்சார உலகம்.
நம்மைச்
சமூக ஊடகங்களை அதிகமாக நுகரச் செய்வதால் வியாபாரம் பல தளங்களில் அதிகரிக்கின்றது.
பொருள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
பொருள் வியாபாரப்படுத்தப்படுகின்றது.
‘டேட்டா’ விற்பனையாகின்றது.
நம் சொந்தத் தரவுகள் விற்கப்படுகின்றன. நாம் வீடியோக்களைப் பகிர்வதால், நாமும் அந்த விற்பனையாளர்களின் ஊதியமில்லாப் பங்காளிகளாக்கப்படுகின்றோம்.
மனிதர்களின்
‘அடுத்து என்ன?’ என்று எதிர்பார்க்கும் இயல்பை நன்கு புரிந்துகொண்டு, அதிலே ஆதாயம் தேடும் ஒரு வணிக யுக்தியை அடையாளம் காண்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த ‘டோபோமைன்’
வெகுமதி சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
சமூக
ஊடகங்களை உள்சென்று ஆழ நுகர்வதற்குப் பதிலாக,
புறம் நின்று தேவைக்கு நுகர்கின்ற கட்டுப்பாடு நம்மில் வளர வேண்டும். போதையும் பொழுதுபோக்கிற்காக நுகரப்படுகின்ற போனும் ஒரே டோப்போமைனை (depomine) சுரக்கச் செய்கின்றது என்ற அறிவியல் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்ற அறிதல் வந்தால் அதனிடமிருந்து கொஞ்சம் விலகி இருப்பது (digital detox) நல்லது.
நாம்
பயன்படுத்தும் ஊடகங்கள், நம்மைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது அறிவு.
எனக்கு அப்போது சிறு வயது. திடீரென்று இரவைக் கிழித்து வந்தது பக்கத்து வீட்டு அழுகைக் குரல். ஓர் அழுகைக் குரல் பலர் சேர்ந்துகொண்டதால் ஒப்பாரி ஆனது. ஏன்? என்ன ஆச்சு? இதயம் சில நிமிடங்கள் தறிக்கெட்டோடும் ஓட்டுநர் இல்லா வாகனம் போல வேகமெடுத்தது. ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் என்னவென்று பார்ப்பதற்குள், பக்கத்து வீடு அக்கம்பக்கத்தினரால் சூழ்ந்திருந்தது. கூட்டத்திற்குள் புகுந்து ஒருவழியாய்ப் பக்கத்து வீட்டு கதவருகில் போய் நின்றேன். “எங்களை விட்டுப் போய்ட்டீயே. இனி எங்களுக்கென்று யாரு இருக்கா?”
யாரோ
இறந்து போயிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இறந்து போனவரின் உடல் அங்கு இல்லை. சிறிது நேரம் ஆழ்தூக்கத்தில் எழுப்பி விடப்பட்ட சிறுவன் போல ஒன்றும் புரியாதிருந்த எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை புலப்படத் தொடங்கியது. வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தால் வந்த பிரச்சினை அது. அந்த வீட்டின் நபர் ஒருவர் வெளிநாட்டில் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலை ஒப்படைக்கக் கொஞ்சம் செலவாகும் என்றும், எனவே குறிப்பிடப்பட்ட தொகையை அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மணியார்டர் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டில் அழுகையும் ஒப்பாரியும் ஒருபுறம் அரங்கேறினாலும், மற்றொரு புறம் ஒன்றும் புரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் போன் போட்டும், தெரிந்தவரிடம் பேசியும் உண்மை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இன்றைய காலத்தைப் போன்று அன்றைய காலத்தில் போன் போட்டுப் பேசுவதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பனம்பழம் பழுத்து விழுந்தது போன்று கடைசியாக உண்மையும் விழுந்து உடைந்தது. இறந்ததாகக் கருதப்பட்டவர் உயிரோடு நலமாக இருப்பதாகவும், யாரோ அக்குடும்பத்தை நன்கு அறிந்தவர் பணத்தாசையில் அம்மனிதர் இறந்ததாகக் கடிதம் எழுதியதும் தெரிய வந்தது.
‘ஏமாறுபவர் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்’ என்பதைப்
போன்று காலங்கள் கடந்தாலும், அறிவும் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் ஏமாறுபவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்குமான தொடர் பந்தம் இந்த நவீன காலத்திலும் தினந்தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஹெட்செட் போடாமல், சத்தம்
அதிகம் வைத்து, பிறருக்குத் தொந்தரவாக இருக்கும் என்னும் நினைப்பே இல்லாமல் இரயில் அல்லது பேருந்தில் செல்லும்போது சமூக ஊடகங்களில் வலம் வரும் டிரெண்டிங் வீடியோக்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும் ஏராளமான பயணிகளைப் பார்த்திருப்போம். இந்த வீடியோக்கள் பத்தில் இரண்டு போலியானது என்று ஆய்வு ஒன்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது இல்லையா!
‘டீப்டிரேஸ்’ என்ற
நிறுவனம் 2019-இல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் சமூக ஊடகங்களில் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான பதிவுகளில் 15,000 வீடியோக்கள் போலியானவை என்ற உண்மையைச் சொன்னது. இந்த எண்ணிக்கை இன்றைய தினத்தில் 83% அதிகரித்திருக்கின்றதாம்.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் சுமார் 30 இலட்சம் படங்களும் சுமார் 7,20,000 மணிநேர வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்று ‘தி கான்வர்சேசன்’ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எத்தனை பதிவுகள் போலியானவை என்பது யாருக்கும் தெரியாது.
செயற்கை
நுண்ணறிவின் வருகைக்குப் பிறகு எதுவும் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘டீப்பேக்’
(Deepfake) தொழில்நுட்பம்
மூலமாக யாரையும் யாராகவும் மாற்றலாம், யாருடைய குரலையும் மாற்றியமைக்கலாம்.
சமூக
ஊடகங்களின் வீடியோக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருடைய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் போலியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாது. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாமானியர்கள் என்று யாரையும் இந்த ‘டீப்பேக்’
தொழில்நுட்பம்
விட்டு வைப்பதில்லை. பிறரை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக, ஆபாசப் படம் தயாரிப்பதற்காக, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, ஒருவருடைய நற்பெயரைக் கெடுப்பதற்காக, மக்கள் மத்தியில் போலி கருத்தியலைத் திணிப்பதற்காக ‘டீப்பேக்’
பயன்படுத்தப்படுகின்றது.
மனிதனுக்கு
எப்போதுமே கடவுளைப்போல் படைக்கின்ற செயலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உண்டு. இதனைத் தொடக்கநிலை சோதனை எனலாம். இதுவே அவனை இன்று படைப்பாளியாக மாறச்செய்கின்றது. கடவுள் ‘ஒளி தோன்றுக’ என்கின்றார், ஒளி தோன்றியது என்று திரு விவிலியத்தில் வாசிக்கின்றோம். அதேபோன்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மனிதன் ‘தோன்றுக’ என்கின்றான். அனைத்தும் கண்முன் தோன்றுகின்றது.
அறிவியலின்
வளர்ச்சியை ‘ஓகோ’ என்று பாராட்டினாலும், அது உருவாக்கும் ஆபத்தை அறியாமல் கடந்துபோக முடியாது.
கடவுள்
படைப்பில் போலி என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டிருந்தது. மனிதனின் படைப்பில் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. போலிச் செய்தி, போலி முகங்கள், போலிக் குரல்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் என்று எல்லாம் போலியாகவே உள்ளன.
இந்தப்
போலி உலகிலிருந்து உண்மையைப் பகுத்தறிவது என்பது நம் முன் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றே நினைக்கின்றேன். போலிகளுக்கு முகமும் முகவரியும் தந்த மனிதனை என்னவென்பது?