news
சிறப்புக்கட்டுரை
சட்டவிரோதக் குடியேற்றமும் திரு அவை படிப்பினையும்

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை அமெரிக்காவில் கடந்த 1868-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறக்கும் சுமார் 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுகிறார்கள். இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த சுமார் 16 இலட்சம் பேருக்கும் அமெரிக்கக் குடியுரிமை கிடைத்திருக்கிறது.

கடந்த சனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பிறப்பு ரீதியிலான குடியுரிமையை இரத்து செய்ததோடு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை உடனடியாக வெளியேற்றவும் உத்தரவு பிறப்பித்தார். இவ்வாணை அடுத்த 30 நாள்களில் அமலுக்கு வரும் என்றார். இச்சூழலில், சனவரி 24-ஆம் நாள் அவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது கூட்டாட்சி நீதிமன்றம். இருப்பினும், ‘என்ன நடக்குமோ?’ என்கிற பீதியில் பிறப்புக் குடியுரிமை நடைமுறை இரத்து செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கின்றனர்.

முன்கூட்டியே குழந்தை பெற்றுக்கொள்வதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து அதிகம். குறிப்பாக, வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்பு மண்டல பாதிப்பு, எடைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதற்கிடையில், வாஷிங்டன் எபிஸ்கோப்பல் சர்ச்சின் முதல் பெண் பிஷப்பாக அறியப்படும் மரியன் எட்கர் பட்டே (Marianne Edgar Budde) டிரம்ப் பங்கேற்ற பிரார்த்தனையில்ஒரு நாட்டை வழிநடத்த அநீதத் தீர்ப்பு எழுதுவது ஆபத்தான வழிஎன்கிற ரீதியில் மறைச்செய்தி வழங்கினார். தற்சமயம் இதுவும் பேசுபொருளாகி உள்ளது.

ட்ரம்பின் நடவடிக்கை குறித்து கடந்த சனவரி 19-ஆம் தேதி, இத்தாலிய தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், “இது (ட்ரம்ப் நடவடிக்கை) உண்மையாக இருந்தால், இது அவமானகரமானது; ஏனெனில், ஒன்றும் இல்லாத ஏழை மக்களைத் திணறச் செய்யும். இதுவே பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி அல்லஎன்றார். “எல்லாரும் ஒரேவிதமான மனித மாண்போடு பிறந்திருப்பதால் இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. நிறம், மதம், திறமைகள், பிறப்பிடம், வசிப்பிடம் இவை போன்ற இன்னும் பல காரணிகளில் வேறுபாடு இருப்பதால், எல்லாருக்குமான உரிமைகளின் மீது ஒரு சிலருக்கு மட்டும் அதிகச் சலுகைகள் என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. ஒரு சமூகமாக நம் அனைவருக்கும், எல்லா மனிதர்களும் மாண்போடு வாழவும், அவர்களுடைய முழுமையான வளர்ச்சிக்குப் போதுமான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்யவும் கடமை இருக்கிறது (அனைவரும் உடன்பிறந்தோர் (FT), எண் 118).

குடியேற்றம் மற்றும் வெகுமக்கள் வெளியேற்றம் - இவ்விரு சூழ்நிலைகள் குறித்த திரு அவை அணுகுமுறையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

1. குறிக்கோளுடன் கூடிய வெளியேற்றம் (Targeted Deportation): ஒவ்வொரு நாடும் தத்த மது மக்களைக் காக்கும் பொறுப்பினைப் பெற்றுள்ளது. அதற்கு இடையூறாக வரும் எதையும் அகற்றுவது அதன் கடமை. இதனைத் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், “தோன்றும் பொதுநலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு குடியேற்றத்தை ஒழுங்குபடுத்துவது ஒவ்வொரு நாட்டின் உரிமையாகும் (2013) என்கிறார். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களை வெளியேற்றுவது என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் அமையும் வெளியேற்றமாகும். இது நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியம். “தேவையற்ற அந்நிய நாட்டுக் குடியேற்றம் என்பதைத் தவிர்ப்பதுதான் சிறப்பானது (FT, எண் 129).  குடியேற்றச் சட்டங்களும் சரியான நுழைவை உறுதிப்படுத்த வேண்டும்.

2. வெகுமக்கள் (கும்பல்) வெளியேற்றம் (Mass Deportation): கடந்த செப்டம்பர் 2024-இன் படி மொத்தம் 11.9 மில்லியன் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் அமெரிக்காவில் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பொருளாதார நெருக்கடி, போர், வன்முறை, மனிதக் கடத்தல் மற்றும் போதைக்கடத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவே இங்குக் குடியேறியுள்ளனர். இவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள், சமூகத்திற்குப் பங்களிப்பு நல்குகிறார்கள், குடும்பங்களை உருவாக்குகிறார்கள். “குடியேற்ற உரிமையின் பயன்முறைகள் பொதுநலத்திற்குப் பாதகமாக இருப்பதாக இருந்தால் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்என்கிறார் புனித இரண்டாம் ஜான்பால். குடியேற்றக்காரர்கள் தங்கிய நாட்டின் சட்டங்களை மதிக்கவும், நன்றி தெரிவிக்கவும், அவர்களின் பொருளாதார மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும் கடமைப்பட்டுள்ளனர் (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடு (CCC), எண் 2241). “வளர்ந்து கொண்டே போகும் பொருளாதாரத் துறையோடு ஒருங்கிணைந்து செல்கின்ற இடப்பெயர் பண்பானது தனிமனிதரையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வையும் பாதுகாப்பின்றி இடருக்குள்ளாக்காத விதத்தில் முறைப்படுத்தப்பட வேண்டும்...” (இன்றைய உலகில் திரு அவை, எண், 66). ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பத்திற்காகச் சிறந்த வாழ்க்கையைத் தேடி மற்ற நாடுகளுக்குக் குடியேற உரிமை உள்ளது.” இத்தகையோரை வெளியேற்றும் நடவடிக்கை என்பதனை மனித மாண்புடன் அணுக வேண்டும் என்பதே திரு அவை நிலைப்பாடு.

குடிவரவு மற்றும் வெகுமக்கள் வெளியேற்றங்கள் மீது மேற்கொள்ளப்படும் கொள்கைகள் மனித மாண்பு மற்றும் ஒற்றுமை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். ‘அனைவரையும் அனுமதிப்பதுஅல்லதுஅனைவரையும் வெளியேற்றுவதுஎன்ற நெறிமுறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சட்ட முறைப்படி நமது நாட்டிற்குக் குடியேற வரும் நபர்கள் மீதான நமது நடவடிக்கையும் வரவேற்பு (Welcome), பாதுகாப்பு (Protect), வளர்ச்சிக்குத் துணைசெய்தல் (Promote) மற்றும் சமூகத்தில் ஒருங்கிணைத்தல் (Integrate) என்பதாக அமைய வேண்டும். இதனையே 1888-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ எழுதியQuam Aerumnosaமுதல் 2020-இல் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியFratelli Tutti’ (அனைவரும் உடன்பிறந்தோர்) வரை வலியுறுத்துகின்றன. “குடியேறிகள் (சரியான விதத்தில் குடியேறிய சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்) ஓர் ஆசிர், சமூகச் செறிவூட்டலுக்கு ஒரு மூலாதாரம், மற்றும் ஒரு சமூக நிறைவை நோக்கி வளர்வதற்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை (FT, எண் 135). யாவற்றிற்கும் மேலாய், பிரெஞ்சு தத்துவஞானி பால் ரிகோயர் (Paul Ricoeur) சுட்டிக்காட்டுவதுபோல், “நாம் அனைவருமே இவ்வுலகில் குடியேறியவர்கள் (அகதிகள்) என்பதனையும் ஒருபோதும் மறவோம்! நம் உடலில், சிந்தனையில், செயலில் நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருப்பதால் நாமேநமக்கு-நமக்குள்அகதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எதுவும் யாருக்கும் நிலையானதல்ல!

news
சிறப்புக்கட்டுரை
எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது?

எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது?’ என்று எங்கள் மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு. தங்களுடைய வழக்கத்திற்கும் இயல்புக்கும் தன்மைக்கும் தகுதிக்கும் மாறாக யாராவது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் நடந்துகொண்டால், இந்தப் பழமொழியைச் சொல்லிஇவர் இப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்?’ என்று தேடுவார்கள். எலிக்குக் கோவணம் அவசியம் இல்லை. ஆனால், அப்படி ஒன்றைக் கட்டிக்கொண்டு அது ஓடுகிறது என்றால், அங்கே ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கிறது என்று ஊகிக்க முடியும்.

சென்னை ..டி. இயக்குநர் காமகோட்டி. இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுமையும் அறியப்பட்ட ஒரு முதல்தர உயர்கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர் மெத்தப் படித்தவர்; சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்; பல ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டமும் பெற்றவர்; அனுபவம் பெற்ற பேராசிரியர். அப்படிப்பட்ட ஒருவர், “பசுவின் மூத்திரம் குடித்தேன்; பதினைந்து நிமிடங்களில் காய்ச்சல் சரியாகிவிட்டது. அந்த மூத்திரத்தில் பல நோய்களைக் குணமாக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளனஎன்று அறிவியலுக்கு எதிரான செய்தியைப் பொதுத்தளத்தில் ஏன் பகிரவேண்டும்? ஒன்றிய அரசு நடத்தும் புகழ்பெற்ற ஓர் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் இதைப்போன்று பேசும்போது, கல்வி அறிவு இல்லாத பொதுமக்கள் நம்பத்தானே செய்வார்கள்! அப்படி நம்பி பசுமூத்திரத்தைக் குடிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு? காமகோட்டி பொறுப்பேற்பாரா?

கடைவீதிகளில் இரவு நேரங்களில் லேகியங்களை விற்பனை செய்யும்லேகிய வியாபாரிஇப்படிப் பேசினால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்படிப் பேசுவது யார்? சென்னை ..டி. இயக்குநர்! கோமியத்தில் நோய்களைக் குணமாக்கும் தன்மை இருக்கிறது என்பதை உலகச் சுகாதார நிறுவனமோ அல்லது எந்தவோர் உலகளாவிய சுகாதார அமைப்போ ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கோமியம் குடித்தால் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும், கோமியத்தில் உள்ள ஈக்கோலை, சால்மோனல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் போன்றவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுநீர் பாதைத்தொற்று, வயிற்றுப் போக்கு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது பல மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இதையெல்லாம் அறியாதவரா காமகோட்டி? அறிந்தும் ஏன் அப்படிப் பேசுகிறார்?

தமிழிசை சௌந்தரராஜன் ஓர் அலோபதி மருத்துவர். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். அவரது கணவர் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர். சிறுநீரக நோய்கள் சம்பந்தப்பட்ட நிபுணர். அப்படிப்பட்ட தமிழிசை காமகோட்டியின் அபத்தமான பேச்சை வரிந்து கட்டிக்கொண்டு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறார். “மாட்டுக்கறியைச் சாப்பிடுபவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் என்ன?” என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார். பதநீரைக் குடிக்க முடியும்; பனை ஓலையைச் சாப்பிட முடியுமா? இதைத் தமிழிசை அறியமாட்டாராஅறிவார். அறிந்த பின்னரும் ஏன் இப்படி அபத்தமாகப் பேசுகிறார்?

இராஜ்பவனில் இருக்கும் ஆளுநர் இரவி மேனாள் .பி.எஸ். அதிகாரி. அவருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் இரவி எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்? இல்லற வாழ்வின் அனைத்துப் பரிணாமங்களையும் வாழ்ந்து தெளிந்த ஒரு மகத்தான குடும்பத் தலைவரான வள்ளுவப் பெருந்தகையைக் காவியுடை தரித்த சந்நியாசியாகச் சித்தரிக்கும் அதிகாரத்தை இரவிக்குத் தந்தது யார்? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று வாழ்ந்த அவருக்குப் பூணூல் போட்டு, சாதி அடையாளம் தந்தது எப்படி? இது தவறு என்று ஆளுநர் இரவிக்குத் தெரியாதா? அது தன்னுடைய வேலையல்ல என்பதும் புரியாதா? அவருக்குத் தெரியும். அவருக்குப் புரியும். தெரிந்தும் புரிந்தும் இரவி ஏன் இப்படிச் செய்கிறார்?

பா... தலைவர் அண்ணாமலை ஒரு மேனாள் .பி.எஸ். அதிகாரி. டங்ஸ்டன் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் மதுரை மாவட்ட விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகிறார்: “இந்தச் சுரங்கத் தொழிலால் இப்பகுதியின் பொருளாதாரம் வளரும், வேலை வாய்ப்புகள் பெருகும். இதனை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; இதனை எதிர்க்கும் தி.மு.. கூட்டணிக் கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்களின் எதிர்காலத் தேவை அறிந்து பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சுரங்கத் திட்டத்தை மக்கள் வரவேற்க வேண்டும்என்று பகிரங்கமாகப் பேசினார். பின்னர் அவரே விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று மக்களுக்குப் பாதகமாக இருக்கும் இந்தச் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். உடனே அந்த ஒன்றிய அமைச்சரும் அந்தத் திட்டத்தை இரத்து செய்துவிட்டதாக அறிவிக்கிறார். “அரிட்டாப்பட்டி மக்கள்மீது அன்பும் கருணையும் கொண்டு, திட்டத்தைக் கைவிட்ட மோடிக்கு அந்த மக்கள் காலங்காலமாக நன்றியுடன் இருப்பார்கள்என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அன்று பேசியதுநாற வாய்!’ இன்று பேசியதுஎந்த வாய்?’ என்று மக்களுக்குத் தெரியாதா? இந்தக் கபட நாடகம் மக்களுக்குத் தெரியும் என்று அண்ணாமலைக்குத் தெரியாதா? பின்னர் ஏன் அண்ணாமலை இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?

தமிழ்த் தேசியம், சமூகநீதி, சுயமரியாதை, தமிழர்களின் இனமானம் என்றெல்லாம் மேடைதோறும் பேசிக்கொண்டிருந்த சீமான் ஏன் திடீரென்று தந்தை பெரியாரைத் தரக்குறைவாகப் பேசுகிறார்? எண்பது ஆண்டுகளாகக் கலப்படமற்ற பொதுநல உணர்வுடன், தனக்கென இருந்த அனைத்தையும் இந்த மண்ணின் மக்களுக்காக வஞ்சகமின்றி வாரி வழங்கிய அந்த மனிதப்புனிதரைமக்களின் எதிரிஎன்று சீமான் தூற்றவேண்டிய அவசியம் என்ன?

தந்தை பெரியாரின் தியாகத்தை அறியாதவரா சீமான்? அவரது தொண்டைப் புரியாதவரா சீமான்? அறிந்தும் தெரிந்தும் சீமான் ஏன் இப்படித் தரம் தாழ்ந்து  நடந்துகொள்கிறார்?

உத்தரப்பிரதேசத்தில் பிரயாகையில் மகா கும்பமேளா எனும் புனிதமான நிகழ்வு நடக்கிறது. ‘உலகின் மிகப்பெரிய ஆன்மிகக் கூடல்என்று அந்த நிகழ்வைப் பெருமையுடன் அழைக்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; உலகமெங்கிருந்தும் இப்புனிதமான நிகழ்வுக்கு மக்கள் வருகின்றனர். பண்டித நேரு கூட இதனைப் பாரத ஆன்மிகத்தின் மிகப் பிரமாண்டமான நிகழ்வு என்று தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். எத்தனை ஆண்டுகளாக இந்தப் புனித நிகழ்வு நடக்கிறது என்ற நிச்சயமான வரலாறு தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஓர் ஆன்மிக நிகழ்வு.

கோவிந்த வல்லப பந்திலிருந்து, கமலபதி திரிபாதி உள்பட பல மாபெரும் தலைவர்கள் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார்கள். இறைவனையும் மன அமைதியையும் தேடி வரும் யாரையும் அங்கே தடை செய்ததில்லை. ஏனென்றால், அது மனிதமும் தெய்வீகமும் தழுவிக் கொள்ளும் ஆன்மிகக் கூடல். இதை அறியாதவரா முதலமைச்சர் ஆதித்தியநாத்?   அறிந்தும் தெரிந்தும் அங்கே போய் அமைச்சரவை கூட்டம் நடத்தி ஆன்மிகக் கூடலை, அரசியல் நிகழ்வாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

காமகோட்டி, தமிழிசை, ஆளுநர் இரவி, அண்ணாமலை, சீமான், ஆதித்தியநாத் - இவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்கள். ஆனால், ஒரேஎஜமானுக்காகஉழைப்பவர்கள். அவரவர்களின் உழைப்புக்கேற்ப கூலி கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

சிலருக்குப் பதவி! சிலருக்குப் பணம்! சிலருக்கு அதிகாரம்!

எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது என்பது இப்போது புரிகிறதா?

news
சிறப்புக்கட்டுரை
வலையும் வாழ்வும் (புதிய தொடர் - 01)

உழவும் உழைப்பும் வாழ்வின் அச்சாணிஎன்று நினைத்திருந்தபோது திடீரென்று உருவான சகாரா பாலைவனப் பெரு வெள்ளம் போல வலைதளமும் சமூக ஊடகமும் குறைந்த கால கட்டத்திலேயே நமது அன்றாட வாழ்வினை முழுவதும் ஆக்கிரமித்து விட்டன. இதயமும் இதயத்துடிப்பும் போல நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துவிட்ட எண்ணிம (Digital) உலகைப் பற்றிய  அறிதலும் புரிதலும் இன்று நமக்குத் தேவைப்படுகின்றது.

நம்மில் பலர் எண்ணிம உலகில் குடியேறுபவர்களாக (digital immigrants) அல்லது எண்ணிம உலகின் பிறப்பாளர்களாக (digital natives) இருக்கக்கூடும். இந்த இரண்டு பிரிவினர்களுக்கான தலைமுறை இடைவெளி அல்லது உறவுச்சிக்கல்களுக்குத் தீர்வு வேண்டுமெனில், எண்ணிமத் தொழில் நுட்பத்தினையும், அதன் தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘வலையும் வாழ்வும்என்னும் இத்தொடர் மூலம் எண்ணிம உலகின் மொழியினை நாம் தெரிந்துகொள்ள உதவுவதோடு, அதன் ஆழத்தையும் அகலத்தையும் ஆபத்தையும் அபத்தத்தையும் காட்சிப்படுத்தும் நிலைக்கண்ணாடியாக விளங்க வருகிறது இத்தொடர். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்...

1. வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். வளாகமே வண்ண விளக்குகளாலும் பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் கண்டிருந்தது. சிலர் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற பேச்சாளர் அரங்கிலே அமர்ந்து, அந்நாளுக்கான பேச்சை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்தனர். அறியாததை அறிந்துகொள்வதிலும் புரியாததைப் புரிந்துகொள்வதிலும் எப்போதுமே மனிதர்களுக்குத் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. இருப்பினும், ஒருசிலர் நண்பர் கூட்டமாய்க் கூடிசெல்பிஎடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல ஒவ்வொரு புத்தக அரங்கிலும் சிறார்-பெரியோர் எனப் பெருங்கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதில் சிலர் குளத்து நீரில் பட்டும் படாமலும் தொட்டுச் செல்லும் தட்டானைப் போல புதிய புத்தகத்தின் மணத்தை மட்டும் நுகர்ந்து ஒரு புத்தகத்தைக் கூட வாங்காமல் வீடு திரும்பியதையும் காண முடிந்தது. பிளாஸ்டிக் டப்பாக்களைச் சேகரித்துவிட்டு, ஒன்றையும் பயன்படுத்தாமல் சுமந்து செல்லும் சாலையோர மனநலம் குன்றிய மனிதரைப் போல பேரார்வத்தில் வாங்கப்பட்ட புத்தகங்கள் பல வாசிக்கப்படாமலேயே வீட்டில் அட்டைப் பெட்டிக்குள் அடைக்காத்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? கோடைகாலத்திலே காட்டு யானைகள் நீரோடைகளைத் தேடி அலைவது போல அறிவு அரங்குகள், கருத்துரைகள், விவாத மேடைகள், புத்தகப் பகிர்வுகள், தத்துவ தர்க்கங்கள், நல்ல புத்தகங்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றை நாடித் தேடுகின்ற ஆர்வம் இந்த டிஜிட்டல் மனிதர்களிடம் இல்லை

1980 முதல் 1994 -க்குள் பிறந்தவர்களை Gen Yஎன்றும், 1995-லிருந்து 2009-க்குள் பிறந்தவர்களைGen Zயினர் என்றும், 2010 முதல் 2024-க்குள் பிறந்தவர்களைGen Alphaஎன்றும், இனிமேல் பிறக்கின்ற தலைமுறையினரை Gen Betaஎன்றும், ‘டிஜிட்டல் சமூகம்அழைக்கின்றது. மனித வாழ்வில் சமூக ஊடகங்களின் ஊடுருவல்களுக்குப் பிறகு குறிப்பாகGen Y, ‘Gen Zமற்றும்Gen Alphaதலைமுறைகளைச் சார்ந்த பெரும்பான்மையினர் ஆழப் படிப்பதிலும், அகல அறிவதிலும் ஆர்வம் இல்லாதிருக்கின்றனர். மழைக்காலத்தில் ரீங்கரிக்கும் புற்றீசல்கள் உதிர்த்துச் செல்லும் ஒன்றுக்கும் பயன்படாத சிறகுகளைப் புத்தகங் களில் சேகரித்து வைப்பது போல, சமூக ஊடகங் களில் பகிரப்படும் மேம்போக்கான பொழுதுபோக்கு வீடியோக்களையும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நுகர்வதிலே அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இத்தலைமுறையினரைவாட்ஸ் அப் யூனிவர்சிட்டி மாணவர்கள்என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ்என்னும் அமைப்பு 2024-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாகபிரைன் ராட் (Brain rot) என்று அறிவித்தது. இந்த வார்த்தை அறிவிக்கப்பட்டதிலிருந்தே பேட்டரியில் ஓடும் கார் பொம்மையை ஓரிரு நாளில் உடைத்துப் பார்த்து, உள்ளே என்ன இருக்கின்றது என்று பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தைப்போலபிரைன் ராட் (Brain rot) என்னும் இந்த வார்த்தைக்குள் அப்படி என்ன இருக்கின்றது என்ற தேடலும் இணையத்தில் அதிகமானது. அப்படி ஆர்வம் கொண்டு தேடலில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன். ‘பிரைன் ராட் (Brain rot) என்பது அதீத மேம்போக்கான இணைய நுகர்வினால் ஏற்படும் மன நலச்சிதைவு அல்லது அறிவாற்றலை வற்றிப்போகச் செய்யும் நிலை என்று சொல்லலாம். எல்லாரும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறோம்; தனக்குபிரைன் ராட் (Brain rot) அறிகுறி இருப்பதை எப்படி அறிந்துகொள்வது? ஒன்றும் பிரச்சினை இல்லை. அதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன. காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போதும் நீங்கள் தூங்குவதற்கு முன்பாக உங்கள் இன்டர்கிராமில் பூனை பாடுவதிலிருந்து, பாப் பாடகர் நாலுகாலில் நடப்பது வரையிலான ஏராளமான ரீல்ஸ்களை அதிகாலை 2 மணி வரை பார்ப்பவர்களா நீங்கள்? காலை 6 மணிக்கு ஸ்மார்ட் போன் மூஞ்சியில் விழித்த பின்பும் அதிகமான நேரங்களில் கைக்குப் பதினொன்றாம் விரலாக உங்கள் செல்போன் உள்ளதா? புத்தகத்தில் வாசித்த ஒரு பத்தி கூட நினைவில் இல்லாமல், எதையுமே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் மூளை மந்த நிலையில் இருப்பதை உணர்கின்றீர்களா? இணையத்தில் உலாவுகின்றீர்கள். ஆயினும், எதுவும் உருப்படியாகக் கற்றதாக இல்லை. நுனிப்புல் மேய்ந்ததாகவே இருக்கின்றது என்று உணர்கின்றீர்களா? நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டி அடுப்படிக்குச் செல்போனைப் பார்த்துக்கொண்டே வருகின்றீர்கள், வந்த பிறகுஎதற்கு அடுப்படிக்கு வந்தோம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்கின்றீர்களா? அப்படியெனில் உங்களுக்குபிரைன் ராட் (Brain rot) அறிகுறி இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

இரவானால் விட்டில்பூச்சிக்கு அதன் பின்பகுதியில் ஒளி அரும்புவதைப்போல இன்றைய மனிதர்களின் முகம் எப்போதும் ஸ்மார்ட்போன் ஒளிபட்டு சுவாலித்துக்கொண்டே இருக்கின்றது. இரவில் அந்த முகங்களில் பல வண்ண ஒளிக்காட்சிகளைச் சற்று கூர்ந்து நோக்கினால் இலவசமாகவே காணலாம்.

பிரைன் ராட்டிலிருந்து (Brain rot) எப்படி வெளி வருவது? முதலிலே வெளிவருவதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். ‘தாவரக்குடுவைஎன்னும் வகை தாவரங்கள் பூச்சிகளை உண்ணும் தன்மை கொண்டது. பூச்சிகளுக்குத் தேனாசைக் காட்டி அருகில் வரச்செய்து கொன்று விழுங்கும். அதேபோன்று ஸ்மார்ட் போனும் ஆசைக்காட்டி மனிதனின் உயரிய சிந்திக்கின்ற தன்மையைச் சிதைக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பேராபத்திலிருந்து விடுபட சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது சுமார்ட் போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது அல்லது தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது. இதனைடிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) என்று சொல்கிறார்கள். புத்தகங்களை வாசிப்பது, மூளைக்கு வேலை கொடுக்கும் புத்துணர்வுப் புதிர்களில் (Puzzles) பங்கேற்பது, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவது, தோட்ட வேலை மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, சரியான உணவு, சீரான தூக்கம் பிரைன் ராட்டிலிருந்து நமக்கு விடுதலை தரும் என்பது உறுதி.

மனிதனின் தனித்துவமே சிந்திக்கின்ற ஆற்றல்தான். எனவேதான் அவனைஅறிவுஜீவி (Rational Being) என்கின்றோம். இந்தச் சிந்திக்கின்ற ஆற்றலை இழந்துவிட்டோமெனில், மனிதனுக்கான முக்கிய அடையாளத்தையே நாம் இழந்துவிட்டோம் என்றாகிவிடும்.

சமூக ஊடகம் நுனிப்புல் மேய்ச்சல் அல்ல; மாறாக, வாழ்க்கையிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் அதிகமாகக் கற்றல், ஆழக் கற்றல், அகலக் கற்றல் மட்டுமே நம் சிந்தனையைத் தீட்டும் சாணைக்கல் ஆகும்.

சிந்திக்கின்ற ஆற்றலை இழப்பதில் அல்ல; சிந்திக்கின்ற ஆற்றலைக் கடப்பதில் இருக்கின்றது மனித ஞானம்!

news
சிறப்புக்கட்டுரை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த மனித வாழ்வில்அடுத்து என்ன நடக்கும்?’ என்ற புதிரும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்ற வழியும் வாழ்வைச் சுவாரசியம் நிறைந்ததாக மாற்றுகின்றன. குழந்தையாய் பிறந்து, மழலையாய் தவழ்ந்து, இளமையில் நிமிர்ந்து, முதுமையில் நாணலாய் வளையும் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தால் நலமாயிருக்கும் என்ற பட்டியலை நிச்சயம் வைத்திருப்பார்கள்.

எனக்கு எந்த ஆசையும் இல்லை, நான் எதையும் எதிர்பார்ப்பது இல்லைஎன்று யாராலும் கூறமுடியாது. ஏனெனில், எதன் மீதும் பற்றில்லாத புத்தர் கூடபற்றில்லாமையில் பற்றுக் கொண்டிருந்தார்என்று கூறுவார்கள். மனிதன் பிறக்கும் நொடியில் அவனோடு பிறக்கும் அவனுடைய தேவைகள் வாழ்க்கை முழுவதும் அவனை இயங்க வைக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் ஒருவரையொருவர் பொறுத்து மாறுபடலாம்; ஆனால், அனைவருக்கும் விருப்பம் இருக்கும் என்ற உண்மை ஒருபோதும் மாறுபடாது. ஏனெனில், தேவைகளே மனித குல வளர்ச்சிக்கு அடிப்படை. இதைத்தான் ஆங்கிலத்தில்necesscity is the mother of inventionஎன்பார்கள். இதை மையமாக வைத்துச் சிந்திக்கும் பொழுது, மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் வாழ்க்கையா? என்று தோன்றும். உண்மையில் மனிதன் வாழ்வதற்கான காரணத்தை அவனுடைய தேவைகளும் ஆசைகளுமே அளிக்கின்றன.

நம்முடைய இலட்சியமும், அதை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் தொகுப்புமே வாழ்க்கையாகும். இலட்சியமில்லாத மனிதர் என இவ்வுலகில் யாரும் இருக்கவே முடியாது. கேலியாகக் கூற வேண்டுமெனில், எதன் மீதும் ஆர்வம் இல்லாத ஒரு மனிதன்கூட சோம்பித்திரிவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார் என்று கூறலாம். எனவே, இலட்சியமும் அதை மையமாக வைத்து ஏற்படும் ஆசைகளும் விருப்பங்களும் அனைவருக்கும் பொதுவானவை. அதேவேளையில், நம்முடைய தனிப்பட்ட சுய ஒழுக்கமே நம்முடைய இலட்சியத்தை மதிப்புமிக்கதாக மாற்றுகின்றது. நம்முடைய இலட்சியம் எத்தனை உயர்வானதாக இருக்கின்றதோ, அத்தனை மதிப்பை அது நமக்குப் பெற்றுத்தரும். நம்முடைய கனவுகளும் எண்ணங்களும் எப்பொழுதும் நம்மைச் சுற்றி மட்டும் இருக்குமெனில், அதனால் பிறருக்கு என்ன பலன்? சில சமயங்களில் பிறருக்குப் பயனளிக்காத இதுபோன்ற இலட்சியங்கள் பிறருக்கு ஆபத்து அளிக்கவும் நேரிடும். நாம் நமக்காகக் கனவு காணும்பொழுது மனிதனாகின்றோம்; பிறருக்காகச் சிந்திக்கும் பொழுது தலைவனாகின்றோம். எனவே, நமக்கும் நம் சுற்றத்திற்கும் பயன் அளிக்கும் வகையில் வாழ வேண்டும் என முனையும் பொழுது, நம்முடைய இலட்சியம் நலமானதாக இருக்கும்; நம் பாதையும் சிறப்படையும்.

அப்துல் கலாம் விண்வெளி வீரராக ஆசை கொண்ட பொழுது, தன்னுடைய ஆசையைத் தனக்கானதாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நம் தேசத்தின் கனவாக அதை தகவமைத்தார். அதன் பலனை நாம் அனைவரும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். நாமும் நம்முடைய தனிப்பட்ட கனவுகளைப் பிறருக்கு உகந்ததாக மாற்றும் பொழுது அளப்பரிய மாற்றங்களை இச்சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றோம்.

இலட்சியம், கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் என நம்முடைய நிகழ்காலத்தைத் தொட்டுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் இந்த வார்த்தைகள் அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்டவையாகத்  தோன்றினாலும், இவற்றுக்கிடையில் பெரிய வேறுபாடு உள்ளது. கனவுகள் ஒரு மனிதன் தனது வாழ்க்கையை எப்படி உருவாக்க விரும்புகிறான் என்பதைக் குறிக்கும் கற்பனை உலகம். ஆசைகள் என்பது மனத்தின் ஆழ்ந்த உந்துதல். இது மனத்தின் உள்ளார்ந்த தேவைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கின்றன. விருப்பங்கள் ஒருவரின் இப்போதைய தேவைகளையும், மனத்தின் இச்சைகளையும் பிரதிபலிக்கும். இலட்சியம் என்பது தெளிவான ஒரு பயணத்திற்கான இறுதி இடம். இது மனிதன் தனக்காகத் தீர்மானித்த நோக்கத்தைக் குறிக்கிறது. மேற்குறிப்பிட்ட நம்முடைய வாழ்வின் நான்கு எதிர்காலப் பாதைகளில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்பதே நம்மைத் தலைநிமிர்த்துகின்றது.

நாம் நம்முடைய கனவுகள், ஆசைகள் அல்லது விருப்பங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் அலைந்து நம் வாழ்வைச் சிறுமைப்படுத்துவதும், உயரிய இலட்சியத்தின் மூலம் நம் வாழ்வைப் பெருமைப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய இலட்சியம் உயர்ந்ததாக இருந்ததால், நம்முடைய பாதை தெளிவடையும். நாம் பயணிக்கும் பாதை தெளிவானால், நம்முடைய அன்றாடத் தேவைகள் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும்இதன்மூலம் நம்முடைய அன்றாடத் தேவைகளும் எதிர்கால நோக்கமும் ஒன்றிணைந்து, ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவுக்கு வரமுடிகின்றது.

நம் வாழ்வில் நாம் நினைப்பவையெல்லாம் நடக்க, நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். நம்முடைய தற்போதைய வாழ்க்கை முறை நம்முடைய இலட்சியத்திற்கு உறுதுணையாக இல்லாததால்தான் நாம் நினைப்பவையெல்லாம் நம் வாழ்வில் நடைபெறவில்லை. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, கல்வி, பொருளாதார நிலை மற்றும் சமூக வாழ்வு என அனைத்துத் தளங்களுக்கும் ஏற்றவாறு நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறை மாற வேண்டும். தினமும் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழித்தல், சிக்கனமாகச் செலவு செய்தல், தினமும் படித்தல், நேர மேலாண்மையில் கவனமாக இருத்தல் போன்ற சில தினசரி ஒழுங்குமுறைகளுக்கு நாம் பழகும் போது, நம்முடைய இலட்சியப் பாதையில் எவ்வித இடையூறும் இருக்காது. நம் வாழ்வில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ, அவையெல்லாம் நடக்கும்.

நடைமுறைக்குத் தகுந்தவாறு நம்முடைய உயரிய இலட்சியத்தை நோக்கி நேர்மையுடன் பயணித்து, நம் அன்றாட வாழ்வின் தேவைகளை நம் வாழ்க்கை பயணத்திற்கு ஏற்றார்போல் தகவமைக்கும் பொழுது, நாம் நினைத்தவை எல்லாம் நடக்கும். நாம் நினைக்காதவை நடக்கும் பொழுது அதை எதிர்கொள்ளும் சக்தியும் நம்மிடம் இருக்கும். நம்மை இயக்கும் நம் வாழ்வின் தேவைகளை நாம் இயக்கி, நாம் நினைப்பதையெல்லாம் செய்வோம்! ‘ஆகாயமே எல்லைஎனக் கொண்டு இவ்வுலகை வெல்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
ஒன்றுபட்டால் வெற்றியுண்டு!

மக்கள் இயக்கமாக ஒன்றுபட்டுப் போராடும்போது வெற்றி கிடைக்கும் என்பது அரிட்டாப்பட்டி மக்களின் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராட்ட வெற்றியில் மீண்டும் உண்மையாகியுள்ளது.

நவம்பர் 7, 2024 மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலூர் தெற்குத் தெரு, அரிட்டாப்பட்டி, . வல்லாளப்பட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம்மாங்குளம், நாயக்கர்பட்டி, கொட்டாம்பட்டி, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி மற்றும் கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டமானது டங்ஸ்டன் தாதுக்களில் ஒன்றான சீலைட்டை எடுப்பதாகும். இந்தத் தாதுப்பொருளானது பொதுவாக உயர் வெப்பநிலை, நீர் வெப்ப நரம்புகள் மற்றும் தொடர்பு-உருமாற்றமடையும் அரிட்டாப்பட்டி போன்ற மலையடுக்குகளில் காணப்படுகிறது. இதனால்தான் அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான நீர் ஆதாரமாக, பெரியாறு நீர்ப்பாசனமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

டங்ஸ்டன் சுரங்கம் உருவாக இருந்த இடங்கள் அனைத்தும் வளமான விளைநிலங்களாகும். அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பெரியாறு பாசனத்தை நம்பியே உழவுத் தொழில் செய்கின்றனர். இந்த நீர்ப்பாசனம் சுரங்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் விளைநிலங்கள் நீர்ப்பாசனமின்றி தரிசுகளாக மாறியிருக்கும். மேலும், அழகர்கோவில் காப்புக் காடுகள் அழிவது மட்டுமின்றி 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் மூன்று தடுப்பு அணைகள் சுரங்கத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் காட்டு விலங்குகள் அழிவதோடு, அரிட்டாப்பட்டி மலைப்பகுதியில் உள்ள 250 பறவை இனங்கள் காணாது போயிருக்கலாம்.

இவற்றை உணர்ந்த மக்கள் விழித்துக் கொண்டவர்களாகத் தங்களுக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக, ஒரே உணர்வுடன் டங்ஸ்டன் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பலகட்டப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

டங்ஸ்டன் ஏலத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் டிசம்பர் 9 அன்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் இரத்து செய்யும் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அரிட்டாப்பட்டியிலுள்ள பல்லுயிர் தலங்களைத் தவிர்த்து மீதி இடங்களில் சுரங்கத்திற்கு மறுஆய்வு செய்யவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

தற்காலிக நிறுத்தத்தில் மக்கள் நிறைவுகொள்ளவில்லை. அதோடு மட்டுமல்லாது ஒன்றிய அரசு அறிவித்த மறு ஆய்வையும் எதிர்த்து,  “எங்கள் வாழ்விடங்களில் எங்குமே ஆய்வு செய்யக் கூடாதுஎனத் தெரிவித்தனர். இதன் நீட்சியாக, மாபெரும் நடைபயணப் போராட்டத்தைவேண்டாம் டங்ஸ்டன்என முழக்கமிட்டு முன்னெடுத்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜனவரி 7-ஆம் தேதி நரசிங்கம்பட்டியிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரம் நடை பயணமாக மதுரை வந்து தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தன்னெழுச்சியாக ஒன்றுபட்ட மக்களின் தொடர் போராட்டம் மாற்றத்தைக் கொணர்ந்தது. 24 ஜனவரி, 25 அன்று ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை இரத்து செய்தது. இந்த அறிவிப்பால் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் உற்சாகம் அடைந்த மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தமிழ் நாட்டில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டங்களைப் போல அல்லாமல், மூன்று மாதங்களுக்குள் தீர்வு கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. இதற்குக் காரணம் மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக, ஒருமித்த உணர்வுடன் போராடியதேயாகும்.

ஒருமித்தப் போராட்டத்தோடு சுரங்கங்கள், கனிமங்கள் (வளர்ச்சி ஒழுங்குமுறை) 1957 சட்டமும் டங்ஸ்டன் திட்டம் இரத்து செய்யப்பட ஒரு காரணமாகும். இச்சட்டத்தின்படி, ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் நேரடியாக ஏலம் விட முடியும். ஆனாலும் சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும். அதேபோல நில விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்பதும்சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க முடியும் என்பதாலும், மாநில அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு ஏலத்தில் இறங்கியது தவறாகும். தனது தவறை உணர்ந்த ஒன்றிய அரசு இத்திட்டத்தை இரத்து செய்துள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்பது வெறும் பழமொழியல்ல; மாறாக, தமிழர்களின் வரலாற்று அனுபவம். இன்று அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள மக்களும் அந்த வரலாற்று அனுபவத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். தமிழர்களாகிய நாம் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுப் பங்கெடுக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பானது மக்கள் தொடங்கி, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல்வாதிகள் வரை நீண்டு ஒருமித்த தீர்மானத்தை வெளிப்படுத்தியதும் நமக்கான உரிமைகளைப் பெற எல்லாரும் கேட்கும் வகையில் குரல் எழுப்ப வேண்டியதும் இன்று காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
திராவிடம் எனும் நெருப்பு

திராவிடம் என்பது புனைவு, திராவிடம் என்பது மாயை. திராவிடம் என்பது நிலப்பரப்பா? திராவிடம் என்பது இனமா? திராவிடம் என்பது மொழியா? தற்குறிகளால் இவ்வாறான கேள்விகள் இன்று எழுப்பப்படுகின்றன. இது குறித்த கற்பனை வாதங்கள் அடுக்கப்படுகின்றன.

திராவிடம் என்பது இனம்; திராவிடம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை உள்ளடக்கியது; திராவிடம் என்பது  ஒரு மொழிக்குடும்பம் சார்ந்தது; திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவக் கருத்தியலை உள்ளடக்கியது. இன்று  திராவிடம் என்ற மொழிவாரிக் குடும்பம், பெருங் கலாச்சாரச் சமூகமாக உலக அரங்கில் உயர்ந்து  நிற்கிறது என்பதே உண்மை.

வேட்டையாடுதல்  எனும் கற்காலம் முடிந்து, நதிக்கரை நாகரிகங்களாகச் சமூக அமைப்பு உருபெற்ற காலம். மனிதர்கள் இயற்கை வழிபாட்டை முன்னெடுத்த பொழுதுகள்; எதை, எவற்றைக் கண்டு பயந்தார்களோ, அவைகளை வழிபட்ட முற்காலம். பாம்பைக் கண்டு பயந்தார்கள். நாகத்தை வழிபட்ட மக்கள் நாகர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுக்கிறார்: “நாகர்களும் திராவிடர்களும் ஒருவரே!” இந்திய வரலாறு என்பதே  ஆரிய, திராவிடப் போராட்டம் என்பதுதான் (அம்பேத்கர் எழுத்துகள், பேச்சுகள் நூல்கள், தொகுப்பு 14  பக்கம் 78 முதல் 95 வரை).

இந்திய நிலப்பரப்பில் வட இந்தியாவில், தென்னிந்தியாவில், நேபாளம் தொடங்கி பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களே நாகர்கள்; அவர்களே பிற்காலத்தில் திராவிடர்கள். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது புதிய கட்டுரையில் எழுதுகிறார்: திராவிடம் என்பது மரபினம். அது  தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, தமிழராகப் பிரிந்து, திராவிடராக ஒருங்கிணைகிறார்கள்.”

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதே! அது திராவிடத்தின் பழமையை வெளிப்படுத்துவதாகும். ஆகவே, சிந்து சமவெளி  நாகரிகம் திராவிட நாகரிகம் அல்ல  என மடைமாற்ற நடந்த வலதுசாரிக் கருத்தியல்கள், தொல்லியல் ஆய்வாளர்களால் முறியடிக்கப்பட்டன.

சிந்து சமவெளி நாகரிகம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் சர். ஜான் மார்ஷல் தன் ஆய்வுகளின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்து அறிவிக்கிறார்: “சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் திராவிடர்களே!” திராவிடம் மூத்த முதல் நாகரிகம். இன்றுவரை இந்தியாவில் பல பழங்குடி மக்களின் பேச்சு மொழிகளில், திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் விரவிக் கிடப்பதே ஆதாரம்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம் திராவிடர்கள் தோன்றிய நிலப்பகுதி  என அறியப்படுகிறது. அது அழிந்துபோன பழைய திராவிட நாடு. பின் ஆரியர்களின் வருகைக்கு முன்னே இந்தியாவெங்கும் பரவி வாழ்ந்த ஆதிக் குடிமக்களே திராவிடர்கள். இது மரபணுச் சோதனை அடிப்படையில் 65,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூத்த இனம் என  ஹார்வேர்டு பல்கலைக் கழகம் மரபணுக் குறியீடு, உயிரியல் மொழியியல் ஆய்வுகள் அடிப்படையில் அறிவிப்பு செய்தார்கள். உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களின் ஒப்புதலின் பேரில் திராவிட இனம் மூத்த முதல் இனம் என இறுதி முடிவு எட்டப்பட்டது.

தொன்மையான மரபணு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் பிச்சப்பன் அவர்கள்திராவிட புதிர்என்ற நூலில், திராவிடர்கள் ஆதிகுடிகள் என்றும், அவர்கள் மரபணு ரீதியாகத் தென்னிந்தியா முழுவதும் வாழ்கிறார்கள் எனவும் உறுதிபட உரைக்கிறார். 2008-ஆம் ஆண்டு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த 18 பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அதில்திராவிடம் என்பது மொழி வழிக் குடும்பம்; அது ஒரு பழமையான கலாச்சாரம்என உறுதிபட அறிவிக்கப்பட்டது.

4,500 ஆண்டுகள் தொன்மைமிக்கது திராவிட மொழிக் குடும்பம். அது 86 மொழிகளை உள்ளடக்கிய  215 மில்லியன் மக்கள் பேசுகிற தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சில  சிறு அளவிலான பழங்குடி  மக்கள்  பேசும் மொழிகளை  உள்ளடக்கியதாகும். திராவிட மொழிகள் தென்னிந்திய  திராவிட மொழி பேசும் மாநிலங்களில் அலுவல் மொழியாகவும், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தமிழ்  அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் பெருமை கொள்கின்றன.

திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்த தொன்மையை நிலைநாட்டினார். இக்காலத்தே, தமிழ்நாடு ஆளுநர்  ‘ஆரிய ரவிஅவர்கள் கால்டுவெல் மேல் சீறி பாய்ந்த கடந்தகால நிகழ்வை வாசகர்களுக்கு நினைவூட்டுவது என் தார்மீகக் கடமையாகும்.

அது ஆரிய, திராவிட யுத்தத்தின் சிறு பகுதியாகும். ஒரு மொழியியல் அறிஞரை, ஆளுநர்ஆரிய ரவி  அடிப்படைக் கல்வி மட்டுமே கற்றவர் என்று கூறியது ஆரிய மோகத்தின் உச்சம். தமிழிற்கு இலக்கணம், இலக்கியம் எனக் கிறித்தவர்களின் சீரிய தொண்டை நினைவுகூர்வது இவ்விடத்தில் சாலச் சிறந்தது.

18 -ஆம் நூற்றாண்டு. மொழியியல் குறித்த ஆய்வுகள் தேசத்தில் இல்லாத காலம். கால்டுவெல் மொழியியலில் ஆர்வம் கொண்டவர். 15 ஆண்டுகள் கடுமையாகத் திராவிட மொழிகள் குறித்து (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், படுகா, கொரகா, கொடலா, கொடகு, துளு, கோண்டி, பிரஹஜ்ய், குருக், சௌரியா, புனியா, குரும்பா மற்றும் சில  திராவிட மொழிகள்) ஆய்வுகள் மேற்கொண்டார். 1856 -ஆம் ஆண்டுதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலை வெளியிடுகிறார். இன்றுவரை திராவிட மொழிக்குடும்பம்  குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற அந்த நூலைக் கால்டுவெல் எழுதிப் பெருமை பெற்றார்.

எதுவாயினும், காலங்காலமாகத் திராவிடம் குறித்த வாதங்களும் விவாதங்களும் எழுவதுண்டு. நாம் திராவிடப் பரப்பு, மரபணுத் தொன்மை, மொழித் தொன்மை குறித்து  விவரித்து விட்டோம். இருப்பினும் அன்று .பொ. சிவஞானம், ஆதித்தனார், .வெ.கி. சம்பத், பொதுவுடமை கல்யாண சுந்தரம் போன்றோர் திராவிடம் என்பதை மறுத்து தமிழ் தேசியம் பேசினார்கள். இன்று இவர்கள் இனம், மொழி  என்ற திராவிட வாதத்தை மறுக்கிறார்கள். தேவை இல்லை; எளிதானது இதுதான். நாம் தேசத்தால் இந்தியர்கள். நாம் இனத்தால் திராவிடர்கள். மொழியால் தமிழர்கள்!