news
சிறப்புக்கட்டுரை
வைகைக் கரையின் வளமான மறைச்சான்று...

தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் நலிந்தோர் சேவைக்கும் பெயர் பெற்றுத் திகழும் ஒப்புயர்வற்ற மறைத்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மறைப்பணி வரலாறு கொண்ட இத்தளம், சேசு சபையின் நிறுவுநர் புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் அன்புத் தோழர் புனித பிரான்சிஸ் சவேரியார் கோவாவிலும், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் நற்செய்தி அறிவித்துச் சென்ற சூழலில், தென் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் மதுரையை மையமாகக் கொண்டு தமிழ் வளர்த்த மறைப்பணியாளர்களைக் கண்ட மங்காத மறைத்தளம் இது.

தமிழுக்குத் தொண்டாற்றி தமிழ் முனிவராகவே வாழ்ந்து தேம்பாவணி காப்பியம் படைத்த வீரமாமுனிவர், தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்பட்டதத்துவ போதகர்அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, இராமநாதபுரம் மறவ நாட்டில் மறைச்சாட்சியாய் மரித்த அருளானந்தர், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த திரிங்கால் சாமிகள், கழுகேர்கடையில் வேதசாட்சியாக இன்னுயிர் தந்து, ‘வேதபோதகர்என அன்போடு அழைக்கப்படும் அருள்பணி. அகஸ்டின் கப்பலி, பாம்பன்-மண்டபம்-வேதாலை கடற்கரைப் பகுதிகளில் மறை வளர்த்து, சேசு சபையாரின் முதல் மறைச்சாட்சியான அருள்பணி. அந்தோணி கிரிமினாலி, இறைஊழியர் தந்தை லெவே சுவாமிகள்... எனத் தொடர்ந்த சேசு சபையாரின் மறைப்பணித் தொண்டு இன்றும் கல்வி, சமூக, ஆன்மிகத் தளங்களில் ஆழம் கொண்டு மக்களை நம்பிக்கையில் வளர்த்து வருவது நன்றியோடு நினைவுகூரத்தக்கது. இயேசு சபையாரின் மறைப்பணியால் அன்று மதுரை மறைத்தளம் புதிய வடிவம் பெற்றது என்றால் அது மிகையல்ல.

ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட மதுரை உயர்மறைமாவட்டம், இதுவரை ஆறு பேராயர்களைக் கண்டிருக்கிறது. அன்றைய ஒருங்கிணைந்த மதுரை உயர்மறைமாவட்டத்தின் எல்லையானது வடக்கில் மேலூர் முதல், தெற்கில் வள்ளியூர் வரையிலும் கிழக்கில் இராமேஸ்வரம் தீவு முதல் மேற்கில் கொடைக்கானல் மலை வரைக்கும் பரந்து விரிந்திருந்தது.

இந்த உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு அவர்கள், எல்லாப் பங்குத்தளங்களிலும், எல்லாப் பெரிய கிளைப்பங்குகளிலும் ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கி இவ்வுயர் மறைமாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கு வழிகாட்டினார். அந்நாளில் ஆன்மிகம், கல்வி, சமூக, மருத்துவப் பணிகள் என யாவற்றையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதுவே பின்னாளில் பல்வேறு பணிகளாகக் கிளைபரப்ப, வளர்ச்சி அடைய அடித்தளமாக அமைந்தன.

உயர் கல்வியை மனக்கண்முன் கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள் முதல் கல்லூரி வரையிலான உயர்கல்வியை உயர்மறைமாவட்டம் முழுமைக்கும் கொண்டு வந்து சேர்த்த பெருமை இரண்டாவது பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களையே சாரும்! இவருடைய காலத்தில் பாளையங்கோட்டை, சிவகங்கை, மதுரை என எல்லாப் பணித்தளங்களிலும் எண்ணற்ற புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மாணவர் விடுதிகள் கட்டப்பட்டன. இவ்வளர்ச்சி இன்னும் விரிவுபட பாளையங்கோட்டை, சிவகங்கை மறைமாவட்டங்களைப் பிரித்து அதனுடைய முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டியவரும் அவரே!

மூன்றாவது பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் கஸ்மிர் ஞானாதிக்கம் அவர்கள் 20 மாதங்கள் மட்டுமே இங்குப் பணியாற்றி, பிறகு சென்னை - மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றார். பேராயரின் பணிக் காலம் மதுரை உயர்மறைமாவட்டத்தில் சிறிது காலமே என்றாலும், மேய்ப்புப்பணியில் பல புதிய தடங்களைப் பதித்துச் சென்ற பெருமைக்குரியவர்.

நான்காவது பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் 17 ஆண்டுகாலப் பணித்திட்டங்கள், செயல்பாடுகள் தமிழ்நாட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, மற்றொரு தலைநகரம் போலவே சமூக, ஆன்மிக, அரசியல் தளங்களில் பல்சமயத் தலைவர்களின் கூடுகையால், அவர்களின் வீரியமான செயல்பாடுகளால், ‘திருவருட்பேரவைபோன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பணிகளால், மதுரை அன்றாடச் செய்தியில் தவிர்க்க முடியாத நகரமாகவே இருந்தது.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் உளவியல் மேதையாக குருக்களையும் மக்களையும் ஆன்மிகத்திலும் சமய நல்லிணக்கத்திலும் வழிநடத்தியவர் மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள். பேராயரின் வழிநடத்துதலில் புதிய மறைவட்டங்கள், புதிய பங்குகள், புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் என எண்ணற்றவை உருவாக்கப்பட்டன. தந்தைக்குரிய கரிசனையும், அதிர்ந்து பேசாத பேராண்மையும், தன்னை எதிர்ப்பவர்களையும் அன்பு செய்யும் பேராற்றலும் பேராயரின் அருள்பணி ஆன்மிகத்திற்கு அழகு சேர்த்தன.

ஆறாவது பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் நியமனம் மதுரை உயர்மறைமாவட்ட வரலாற்றில் தனித்துவமானது. துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், இத்தனை ஆண்டுகள் பணிக்குப் பிறகுதிண்டுக்கல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் முதல் ஆயராகப் பத்து ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மீண்டும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்குப் பேராயராகப் பணி நியமனம் பெற்றார். ஏறக்குறைய 10 ஆண்டுகள், நான்கு மாதங்கள் மதுரை உயர்மறைமாவட்டத்தைப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சிக்கான பல திட்டங்களை முன்னெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

ஆழமான ஆன்மிக அடித்தளம் கொண்ட பேராயர் அவர்கள், மேய்ப்புப்பணித் திட்டங்களைக் கூர்மைப்படுத்துவதிலும், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு சந்திப்பதிலும் தனித்துவமானவர்

பேராயரின் பணி ஓய்விற்குப் பிறகு, இவ்வுயர் மறைமாவட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு கொடை திருத்தூது நிர்வாகி. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த மேதகு ஆயர் அந்தோனி சவரிமுத்து அவர்கள், கடந்த எட்டு மாதங்களாக இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்று, களச்சூழலை நன்கு அறிந்து, குருக்களுடன் சிறப்பாகக் கலந்து ஆலோசனை கண்டு, தீர்க்கமான முடிவெடுப்பதில் சிறந்ததொரு நிர்வாகியாகத் தன்னை அடையாளப்படுத்தியதுடன், மறைமாவட்டத்தையும் சிறப்புற வழிநடத்தினார்.

இவருடைய மேலான பணிகளைக் கண்டு பூரிப்படைந்த இறைவன், “இவரே என் அன்பார்ந்த மகன்; இவரே நான் தேர்ந்துகொண்டவர்என்ற இறைவாக்கு மெய்ப்படும் வகையில் இவ்வுயர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராகத் தந்திருப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

சிறந்த ஆசிரியராய், ஆன்மிகத் தந்தையாய், வழிகாட்டியாய், ஆழமான இறைப்பற்றாளராய், இயேசுவின் குருத்துவத்தில் மகிமை கண்டவராய், நல்லாயன் இயேசுவின் வழிகாட்டலில் நல்மேய்ப்பராய் வாழ்ந்து வருவதால் இறைவன் இவரை இன்று இந்த உன்னதப் பணிக்கு உயர்த்தி இருக்கிறார். மதுரை உயர்மறைமாவட்டம் பேருவகையோடு மகிழ்ந்து வரவேற்கிறது!

news
சிறப்புக்கட்டுரை
“அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும்” (லூக் 8:50)

அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும் (லூக் 8: 50) என்பது பேராயரின் ஆயத்துவ விருதுவாக்கு! அச்சம் தவிர்த்து நம்பிக்கையில் ஆழப்படவும், மக்களின் வாழ்க்கையில் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையில் அவர்களை உறுதிப்படுத்தவும் இவ்விருதுவாக்கை முன்னெடுத்து வருகிறார் நம் பேராயர்.

பேராயரின் இலட்சினையில் நான்கு அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, திருவிவிலியம்! நமது இறைநம்பிக்கையின் அடித்தளமாக இருப்பது திருவிவிலியம். அத்தகைய அடித்தளத்தில் மக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும், அதையே மறைப்பணியின் ஊற்றாகக் கொண்டிருக்கவும் திருவிவிலியத்தின்மீது கட்டப்பட்ட திரு அவையை முன்னெடுக்கவும் வருகிறார் பேராயர்.

இரண்டாவதாக, பாதுகாப்பான ஒரு கரத்தில் இளைப்பாறும் குழந்தையின் அடையாளம். இறைவன் நம்மைப் பராமரிக்கிறார், பாதுகாக்கிறார், நம்மை அரவணைத்துக்கொள்கிறார், நம் பெயரைத் தம் உள்ளங்கையில் பொறித்து வைத்திருக்கிறார் என்னும் பேருண்மைகளைத் தியானிக்கும் வகையில் இறைவனின் பாதுகாப்பை, பராமரிப்பை நாமனைவரும் பெற்றுக்கொள்கிறோம் என்ற பேருண்மையை எடுத்துக்கூறுகிறது இந்த அடையாளம்.

மூன்றாவதாக, இடம்பெற்றிருக்கும் நங்கூரம், நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. உறுதியான நம்பிக்கையில் நாம் ஆழமாக வேரூன்றி இருக்கிறோம் என்பதை இது அடையாளப்படுத்துகிறது. வாழ்வின் எதார்த்தச் சூழலில் நாம் சந்திக்கும் துன்ப துயரங்கள், வேதனைகள், போராட்டங்கள் காற்றாகமழையாக, புயலாக, அலையாக, பேரிரைச்சலாக நம்மைத் தாக்கினாலும், நம்பிக்கையில் ஆழமாக நாம் வேரூன்றி இருக்கும்போது, எளிதில் நாம் வெற்றிகொள்கிறோம் என்பதை எடுத்துக்கூறுகிறது.

நான்காவதாக, இடம்பெற்றிருக்கும் லில்லி மலர், பேராயர் அவர்கள் தனது பாதுகாவலர் தூய அந்தோனியாரின்மீது கொண்ட பற்றுதலின் வெளிப்பாடாக தூய அந்தோனியாரின் கரங்களில் இருக்கும் லில்லி மலர்போல, தன் பணியும் வாழ்வும் புனிதம் கொண்டதாக அமைய தன்னையே அர்ப்பணிக்கும் அடையாளமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. தன்னையும், தன்னைச் சார்ந்த இறைச்சமூகத்தையும் இறைவார்த்தையின் அடிப்படையில் நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி தூய வாழ்வு வாழ அழைக்கும் பேராயரின் பணிவாழ்வு சிறக்க வாழ்த்துவோம், இறைவேண்டல் செய்வோம் !

news
சிறப்புக்கட்டுரை
குடும்பத்தின் இனிமை: தாத்தா-பாட்டிகள்

மனித வாழ்க்கையின் மூலவேர்களாகவும், பாசத்தின் பாதுகாப்புக் கோட்டையாகவும் இருக்கின்றவர்கள் நம்முடைய தாத்தா-பாட்டிகள். அவர்களின் கைகளில் நாம் பழகிய முதல் நொடிகளில் கதைகள் பிறந்தன. அவர்களின் வார்த்தைகளில் முதன் முதலாய் அறிவு பிறந்தது. மூத்தோர் நாள் என்பது அவர்களுடைய பங்கு, பாசம் மற்றும் பண்பாட்டுக்குரிய பாராட்டுகளை நன்றியுடன் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில், அவர்கள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வளவு வெறுமையாக இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க அழைக்கின்ற தருணம்.

இல்லம் என்பது கோவில். அதில் முதியோர், பெரியோர், இளையோர், சிறுவர் எனப் பலரும் இணைந்து இருக்கின்றபொழுது அது ஒரு குடும்பமாக அமைகின்றது, கோவிலாக இருக்கின்றது. ஆனால், எங்கே நம்முடைய முதியோர்கள்? எங்கே நம்முடைய தாத்தா-பாட்டிகள்? முதியோர் இல்லத்திலும், மூன்று மகன்களின் இல்லத்திலும் மாதம் ஒரு முறை இருக்கும் சூழலை நினைத்துப் பார்க்கின்ற தருணம் இது.

முந்தையத் தலைமுறையின் ஆசிர்வாதம், எதிர்காலத்தின் நம்பிக்கையின் விதைகள்!” என்று திருத்தந்தை 14-ஆம் லியோ  தாத்தா-பாட்டிகள் பற்றித் தன்னுடைய செய்தி மடலில் கூறுகின்றார்மேலும், வாழ்வின் நீண்ட பயணத்தைக் கடந்து, அனுபவங்களின் ஒளியில் ஒளிரும் தாத்தா-பாட்டி என்பவர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தூணாக இருக்கின்றனர். நம் மனத்தில் நிறைந்து இருக்கும் பாடல்கள், பழமொழிகள், செபங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்... இவைகளெல்லாம் அவர்களால்தான் பசுமையாக இன்று இருக்கிறது.

உலக தாத்தா-பாட்டிகள் தினம், நம் மூத்தத் தலைமுறையின் பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் ஓர் அரிய நாள். இவ்விதமான ஒரு நாளில், நாம் அவர்களைப் பாராட்டுவதே இல்லை. நம் உள்ளத்தை அவர்களிடம் செலுத்தி, அவர்கள் சிரிப்பிலும் அமைதியிலும்  இறைவனைக் காணும் ஆசிர்வாதமாக உணர்வதற்கான ஓர் அழைப்பாக இது இருக்கிறது என்றும் திருத்தந்தை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தாத்தா பாட்டியின் செபம் ஓர் இல்லத்தின் பாதுகாப்புச் சுவராகும்.”

பழமை என்பது பாழ்மை அல்ல; அது நம்மை வழிநடத்தும் ஒளி.”

வயது கூடினாலும், நம்பிக்கை புதிதாகிறது. அவர்கள் நமக்கான செபக்கதவுகள்!”

பெரியவர்கள் வீட்டின் கதவுகள் போல. வெளியே புயல் இருந்தாலும், உள்ளே நிம்மதி இருக்கிறது. அவர்களின் வாழ்வில் இருந்த கற்றல்களும் தியாகங்களும், நம் தலைமுறைக்குத் தேவையான ஒளிக்கீற்று. இன்று நாம் நம் தாத்தா-பாட்டிக்கு அருகில் போகவேண்டும், அவர்களின் கைகளைப் பிடித்து, நம் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது ஒரு கடமை அல்ல; இது ஒரு கருணைப்பூர்வமான அழகு. நம் குழந்தைகள், நம் பேரன்கள் இந்த மரபைத் தொடர, இப்போதைய நம் நடத்தைதான் அவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும். பெரியவர்கள் நமக்கு ஓர் ஆசிர்வாதம், வாழும் நம்பிக்கையின் சின்னங்கள்!

வயது என்பதெல்லாம் எண்கள் மட்டும்; உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் வாழ்வு அழகு!”

தாத்தா-பாட்டியின் புன்னகையில் தேவனின் முகம் தெரிகிறது!”

அவர்களின் நாள்கள் சிரமமானவையாக இருந்தாலும், அவர்களின் நினைவுகள் சீரானவை!”

தாத்தாவும்-பாட்டியும் இல்லாத வீடு, சத்தம் இல்லாத கோவில்போல் இருக்கும். அவர்களின் பரிசுத்தமான அன்பும், அனுபவங்களின் வெளிச்சமும் நம்மை வழிநடத்துகிறது. மூத்தோர் தினம் ஒரு நாளாக மட்டுமல்ல; அவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம் அன்பையும் கவனத்தையும் வழங்கும் ஒருவிதமான கடமை. அவர்களுக்கு நன்றி கூறுவதும், அவர்களைக் கொண்டாடுவதும் நம் சமூகப் பண்பாடுகளுக்குப் பெருமை சேர்க்கும். அன்பும் மதிப்பும் சேர்க்கும் இந்த நாள், நம் மூத்தோர்களுக்கான புகழின் நாளாக நிலைக்கட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
கிரிப்டோ உலகம் (வலையும் வாழ்வும் – 22)

பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடந்தார் ஆவுடையப்பன் தாத்தா. ஒரு நாளுக்குக் காலை-மாலையென்று சோமனூருக்கு இரண்டு பேருந்துகள்தான். காலை ஒன்பது மணிக்கெல்லாம் வரவேண்டிய வண்டி இன்னும் வரவில்லை. காலையிலேயே களத்துல பறிச்ச தக்காளிகளை ஒரு கோணிப்பையில் கட்டி சூலூர்ல போய் விற்று வரவேண்டி நின்றுகொண்டிருந்தார் ஆவுடையப்பன் தாத்தா. பத்தரை மணிக்கெல்லாம் சூலூர் சந்தைக்குச் சரக்கை கொண்டுபோனாதான் தக்காளி வியாபாரமாகும்.

நேரம் ஆக ஆக ஆவுடையப்பன் தாத்தாவிற்கு ஏதோபோலிருந்தது. “தாத்தா! வரும்போது சிவப்பு கலர்ல பெரிய பலூன் ஒண்ணு வாங்கிட்டு வாங்கோ - வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தன் பேரன் சொன்னது ஞாபகம் வந்தது.

என்ன பெருசு சூலூருக்கா?” தன் மிடுக்கான சோடாபுட்டிக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார் தாத்தா.

யாரது? இராணியா?”

ஆமா! நானேதான்சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் அவள்.

இராணிக்கு இப்போது நாற்பது வயதிற்குமேலிருக்கும். அவள் பிறந்து வளர்ந்த ஊர் கோம்பக்காடு. இளம்வயதில் பள்ளி படிக்கும்போதே சோமனூர்க்காரர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டாள்.

எங்க புறப்பட்டீக? சோமனூர் இராணிஆவுடையப்பன் தாத்தாவின் கேள்வியில் கோயம்புத்தூர் குசும்பு கொஞ்சம் ஒளிந்திருந்தது.

அத ஏன்பு கேட்டுக்கிட்டு? ஆத்தா சூலூர் சர்கார் ஆஸ்பத்திரில சாகக்கிடக்கிறானு செய்தி வந்துச்சு. அதான் ஓர் எட்டுபோய் பார்த்துக்கிட்டு வந்திடலாமுனு போறேன். அவுக என்ன ஏத்துக்காட்டாலும், அவுக எனக்கு ஆத்தா இல்லாம போகுமா!” பொங்கிவரும் உணர்வை முந்தானையால் பொத்திக்கொண்டு அருகிலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்துகொண்டாள் இராணி.

இன்னும் வேறு சிலரும் பேருந்துக்காக  முனங்கியபடியே காத்துக்கிடந்தனர். காலையிலேயே வெயில் உயிரை உறிஞ்சுவதுபோலிருந்தது. அந்தப் பொத்தல் சாலையில் அவ்வப்போது சைக்கிள்களும் பைக்குகளும் அணிவகுப்பு நடத்தின. ஆனால், ஒன்பது மணி பேருந்து பத்தாகியும் இன்னும் வரவில்லை. ஒருசிலர் திட்டியபடியே வீடு திரும்பினர். ஆவுடையப்பன் தாத்தாவுக்கு மூட்டையில் இருக்கும் தக்காளிகளும், பேரன் கேட்ட சிவப்பு கலர் பலூனும் நினைவுக்கு வந்து தலைக்கிறக்கத்தை ஏற்படுத்தியது. தன் தாயின் சாவுக்கு முன்பாக அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தவிப்பு இராணியின் கண்கள் வழியாக எட்டிப்பார்த்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களின் கண்கள் அந்த ஒற்றைப் பேருந்துக்காய் எதிர்நோக்கி இருந்தன. ஒரு பேருந்து எவ்வளவு கனவுகளைச் சுமக்கிறது? ஒரு பேருந்து எத்தனை உறவுகளுக்குப் பாலமாகிறது? என்பதைப் போன்று, ஓர் இணையம் எத்தனை இதயங்களை இணைக்கிறது! எத்தனை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகமாகிறது! எத்தனை நாடுகளுக்குப் பாலமாகிறது! எத்தனை வியாபாரங்களுக்குத் தளமாகிறது!

இன்று இணைய உலகில் பெரும் சக்தியாகவும் இணைப்புப்பாலமாகவும் பேசுபொருளாகவும் இருப்பதுகிரிப்டோ கரன்சி (crypto currency) ஆகும்கிரிப்டோ கரன்சி என்பது இணையத்தில் மட்டுமே செல்லுபடியாகும் ஒருவகையான டிஜிட்டல் பணம். எந்த ஓர் அரசின் அல்லது வங்கியின் கட்டுப்பாடு இல்லாமல் இணையம் வழியாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்ய இயலும். கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் (block chain) தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இயங்குகிறது. பிளாக்செயின் என்பது ஒரு தானியங்கி கணினிப் பதிவேடாகும் (digital ledger). ஒவ்வொரு பரிவர்த்தனையும் இதில் பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் இந்தப் பதிவேட்டைப் பார்க்கமுடியும். ஆனால், பதிவேட்டின் தரவுகளை மாற்றமுடியாது.

கிரிப்டோ கரன்சி இன்று பல பிட்காயின் (bitcoin), எத்தீரியும் (ethereum), சோலனா (solana), டோஜ்காயின் (Dodgecoin) என்று பல வகைகளில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கின்றது. இந்த நாணயங்களை வாங்க மற்றும் விற்க பல உலகளாவிய மற்றும் தேசிய இணையத் தளங்கள் உள்ளன. பைனான்சு (finance), காயின் பேசு (coinbase) போன்ற உலகளாவிய தளங்களிலும், வாஃயீர்எக்ஸ் (wazirX), காயின் டி.சி.எக்ஸ். (coin DCX) போன்ற இந்திய தளங்களைப் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யலாம்.

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கின்றது. 2025-இல் உச்ச நீதிமன்றம்கிரிப்டோ கரன்சியைத் தடைசெய்வது என்பது உலக எதார்த்தங்களுக்கு நாம் கண்மூடிக் கொண்டிருப்பதுபோலுள்ளதுஎன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளது. மெய் நிகர் டிஜிட்டல் சொத்துகள் (Virtual Digital assets) குறித்த நிலையான வரிக்கொள்கைகள், தெளிவுகள் மற்றும் சட்டங்கள் இந்தியாவில் விரைவில் கொணரப்பட வேண்டும் என்பது அப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோரின் விருப்பமாக உள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வியாபார முதலீட்டாளர்கள் 6.6 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையைக் கிரிப்டோ சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். இது 2030-இல் இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

என்னதான் கிரிப்டோ கரன்சி டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாதது என்று நாம் பேசினாலும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். கிரிப்டோ கரன்சியின் மதிப்பு எப்போது கூடும்? எப்போது குறையும்? என்று கணிப்பது சிரமம். அரசுகளின் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாததனால், இதில் ஏமாற்று வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது. தீவிரவாதம் மற்றும் நாச வேலைகளுக்குக் கிரிப்டோ கரன்சி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இரகசியக் குறியீட்டு எண் (private key) திருடப்பட அல்லது அது வைக்கப்பட்டுள்ள வாலட் (wallet) தொலைந்துபோக வாய்ப்புள்ளது. இலண்டனைச் சார்ந்த ஜேம்ஸ் ஹோவல் என்பவர் 2013-ஆம் ஆண்டு தொலைத்த இரகசியக் குறியீட்டு எண் இருந்த ஹார்ட் டிரைவை இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறார். இன்றைய நாளில் அவர் தொலைத்த பிட்காயினுடைய மதிப்பு 800 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது.

எத்தனை டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகள் வந்தாலும், எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்கு உதவாமல், பணம் படைத்தவர்களையே மையப்படுத்துகின்றது. ஏழை எளியவர்கள் வாழ்வு மேம்படச்செய்யும் தொழில்நுட்பங்கள் என்று வருகின்றதோ, அன்றுதான் தொழில்நுட்பங்களின் புரட்சி எனக் கூறமுடியும். அன்றைய நாள் என்று வருமோ?

news
சிறப்புக்கட்டுரை
முட்டுச்சந்தில் இந்திய வெளியுறவுத்துறை

1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. அன்று முதல் இன்றுவரைகாஷ்மீர் யாருக்குச் சொந்தம்?’ எனும் கேள்வியாலே இந்தியா-பாகிஸ்தான் யுத்தங்கள் தொடர்கின்றன. காஷ்மீர் பகுதிகளை மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துவிட்டன. இந்திய அரசாங்கம் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறது. ‘இது இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே  உள்ள பிரச்சினை; மூன்றாம் நாடுகளின் தலையீடு கூடாதுஎன்ற இந்தியாவின் நிலையில் டிரம்ப் மண் அள்ளிப் போடுகிறார். தான்தோன்றித்தனமாகநான் பஞ்சாயத்துச் செய்கிறேன்என அறிவிப்பது, முட்டுச்சந்தில் இந்திய வெளியுறவுத் துறையை நிறுத்திவிட்டது. காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் குரலுக்கு டிரம்ப் முட்டுக்கொடுக்கிறார்.

பாகிஸ்தான் தன் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பது எப்போதும் வாடிக்கையான செயலாகும். ஏப்ரல் 22 அன்று 5 தீவிரவாதிகள், 26 சுற்றுலா பயணிகளைப் பகல்காம்  எனும் இடத்தில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் லஷ்கர்--தொய்பாவின் கிளை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (டி.ஆர்.எஃப்.) என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத் தேசியப் புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டது. முதலில் பொறுப்பேற்ற அவ்வமைப்பு, பிறகு தாங்கள் ஈடுபடவில்லை என மறுத்தது. இந்திய அரசாங்கம் பாகிஸ்தானைத் தொடர்புகொண்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது. பாகிஸ்தான் வழக்கம்போல் கள்ள மௌனம் சாதித்தது.

15 நாள்கள் மௌனம் காத்த இந்திய அரசாங்கம், மே 7 அன்றுசிந்தூர் ஆபரேஷன்எனும் நடவடிக்கையை முன்னெடுத்தது. பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, வான்வெளித்தாக்குதல் வழி அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்--தொய்பா மற்றும் செய்ஷ்--முகமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது.

மே 15-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “முன்பே பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் தீவிரவாத முகாம்களைத் தாக்கினோம்என்றார். மறுநாள் ஜெய்சங்கர்அப்படிக் கூறவில்லைஎன உள்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மறுத்தார். மே 25-இல் ஜெய்சங்கரும், “இத்தகவல் பாகிஸ்தானுக்குக் கூறப்படவில்லைஎன மறுத்தார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் செயலற்ற வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் குரல் வலுக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “சிந்தூர் ஆபரேஷனால் எத்தனை விமானங்கள் இந்திய இராணுவத்திற்கு இழப்பு ஏற்பட்டன? முன்பே தகவல் அளித்ததால் தீவிரவாதிகள் தப்பிவிட வாய்ப்பு உள்ளதே...” எனக் கேள்வி கேட்டார். பாகிஸ்தானும் பதிலுக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் குண்டு வீசியது. போர் துவங்கிவிட்டது. “நான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நின்றுவிட்டதுஎன்கிறார் டிரம்ப். ஆம், அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்... “டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை; இந்தியாவிற்குப் போர் வேண்டாம் என உத்தரவு போட்டுவிட்டார்என்பதே! அது உண்மைதான். பாகிஸ்தானுக்குப் போரைத் தாங்கும் வலுவில்லை. டிரம்பிடம் கெஞ்சி தப்பிவிட்டது.

சிந்தூர் ஆபரேஷன்குறித்து உலகின் எந்த நாடும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்திய அரசு ஏழு தூதுக் குழுக்களை அமைத்து உலகெங்கும் ஆதரவு  திரட்டியது. எதிர்க்கட்சித் தலைவரை ஆலோசிக்கவில்லை. பா... தூதுக்குழு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சசி தரூரை நியமித்து, உள்கட்சிப் பூசலை  உருவாக்கியது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

2008-ஆம் ஆண்டில் நான்கு நாள்களில் மும்பையில் நடந்த லஷ்கர்--தொய்பாவின் தீவிரவாதத் தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கோர் காயம் அடைந்தார்கள். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் 100 நாடுகளுக்குப் பல்வேறு தூதுக் குழுக்களைச் சத்தமில்லாமல் அனுப்பினார். தீவிரவாதிகளின் உலகளாவியப் புகலிடம் பாகிஸ்தான் என உறுதிபட அறிவித்தார். பாகிஸ்தானுக்கு உலகளாவியப் பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிற்கிற நாளில், ஒரு மில்லியன் டாலர் கடனை .எம்.எஸ்.சிடமிருந்து பாகிஸ்தான் எளிதாகப் பெறுகிறது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் மோடி அரசின் முடிவுக்கு உலகின் எந்த நாடும் ஆதரவு தரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைள் புரியும்.

2001-ஆம் ஆண்டு அல்-கொய்தா அமைப்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தியது. அதன் முழு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். 2011, மே 2 அன்று பாகிஸ்தானின் அபோட்டா பகுதியில் ஒசாமா பதுங்கியிருந்தபோது அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தேடப்படும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம்கூட பாகிஸ்தானில் இருப்பதாகத் தகவல் கசிகிறது. அவர் முக்கியக் கிரிக்கெட் பந்தயங்களைப் பாகிஸ்தானில் உள்ள விளையாட்டுத்திடலுக்கே வந்து பார்த்தார் என்ற அதிகாரப்பூர்வமற்றத் தகவல்களும் உலா வருகின்றன. பாகிஸ்தான் உலகளாவியத் தீவிரவாதிகளின் புகலிடம்  என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

பாகிஸ்தானில் நிலையான அரசு இல்லை. குடியாட்சி இல்லை. இராணுவ ஆட்சி நடக்கிறதுதெற்காசிய நாடுகளில், புவிசார் அரசியலில், சீனாவைக் காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக் காட்டிச் சீனாவிடமும் பாகிஸ்தானியர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இலங்கையும் இந்தியாவிற்கு எதிராக இதே அரசியல் நிலைப்பாட்டில் கொழிக்கிறது.

நமது பிரதமர் மோடி தனது 11 ஆண்டுகால பிரதமர் பதவிக் காலத்தில் 151 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு 72 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவிற்கு மட்டுமே 10 முறை சென்றுள்ளார். ஆனால், ‘இந்த ஏழைத் தாயின் மகனுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லைஎன்பதே பெருங்கவலை. கையறு நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா நகரில் நடந்தஜி-7’ நாடுகளின் மாநாட்டில் அழையா விருந்தாளியாகச் சென்றார். உலகத் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துத் தன்னை மாபெரும் உலகப் பெருந்தலைவராக மோடி ஊடகங்களால் வெளிச்சம் பெற்றார். கெஞ்சி, கூத்தாடி டிரம்பிடம் பெற்ற காணல் பேச்சு வார்த்தை இரத்தானது. திடீரென டிரம்ப் அமெரிக்கா திரும்பினார். பிறகு வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் இராணுவ அமைச்சருடன் மதிய உணவு மற்றும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பினார் எனத் தெரிய வந்தது.

பிரதமர் மோடி சீன என்ற நாட்டின் பெயரைப் பொதுவெளியில் சொல்லவும், சீன அதிபரின் பெயரைச்  சொல்லவும் தைரியமற்றவர் என்ற உண்மை சுடுகிறது. நேருவால் முன்னெடுக்கப்பட்டஅணிசேரா நாடுகள்என்ற நிலையும் மாறிஇந்திய வெளியுறவுக்கொள்கை புயலில் சிக்கிய கப்பலாய்  மோடி ஆட்சியில் தவிக்கிறது. தற்போதைய இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் பா... அரசு தன் மதவெறியின் பகுதியாக இஸ்ரேல் பக்கம் சாயும் நிலையில் உள்ளது. இது குறைந்த விலைக்கு இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரானைக் கோபப்படுத்தும். அதன் பின்விளைவுகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்ற அடிப்படையைக்கூட அறியாமல் உள்ளார்கள்.

மதவாத அரசியல் நடத்தும் பா... தனது மோசமான அயலுறவுக்கொள்கையால் நாடுகள் இடையே  தனித்து விடப்பட்டுள்ள தன் நிலை அறிய வேண்டும். புதிய அயலுறவுக் கொள்கை உருவாக எதிர்க்கட்சிகளிடம் பேசி, கூட்டு முயற்சியில் நாட்டின் நலனைப் பாதுகாக்கப் புதிய முன்னெடுத்தல்கள் காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
பேரழிவின் கடிகாரம்

அணு விஞ்ஞானிகள், உலகமெங்கும் நடக்கும் அணு ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்ய ஒரு செய்தி இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அதில்பேரழிவின் கடிகாரம் (Dooms day Clock) என்ற ஒரு முக்கியமான தகவல் இடம் பெறும். மனிதன் தனது சுயநலத்தால், பேராசையால், இன- மதவெறி போன்ற வெறுப்பின் உந்துதலால், அதிகாரப் போட்டிகளால் நடத்தும் மோசமான நடவடிக்கைகளால் இந்த உலகம் முழுமையாக அழிந்துபோவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை அந்தக் கடிகாரம் அறிவித்துக் கொண்டே இருக்கும்.

உலகம் முழுவதும் அணு ஆயுதப் பீதியில் வாழ்ந்திருந்த 1947-ஆம் ஆண்டு இக்கடிகாரம் உருவாக்கப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் அமெரிக்க இராணுவத்தால் முதன்முதலில் வீசப்பட்டன. 1949-இல் சோவியத் இரஷ்யா தனது அணு ஆயுதங்களைத் தயாரித்தது. 1952-இல் பிரிட்டனும், 1960-இல் பிரான்சும், 1964-இல் சீனாவும் தங்களுக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டன. 1974-இல் இந்தியாவும், 1990-இல் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாகத் தங்களை உருவாக்கிக்கொண்டன. தற்போது இஸ்ரயேலிடமும் வடகொரியாவிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருப்பதாகவும், அந்நாடு விரும்பினால் உடனடியாக அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

தற்போது உலகம் முழுவதும் பிரயோகிப்பதற்குத் தயாராக அணு ஆயுத நாடுகளில் சுமார் 20,000 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது. இந்த அணு ஆயுதங்களால் 800 மில்லியன் மக்களைக் கண்மூடி கண் திறப்பதற்குள் தடயங்களே இல்லாமல் முழுமையாக அழித்துவிட முடியும். அதன் தொடர்ச்சியாகப் பூமிப்பந்து முழுவதும் பேரிருளில் மூழ்கும். உலகின் நிலப்பரப்பு முழுவதும் தாவரங்கள் உள்பட உயிரின் அடையாளங்களே இல்லாமல் உறைபனி மூடி, ஆண்டுகள் கணக்கில் கொடுங்குளிர்காலமாகவே இருக்கும்.

1945-லிருந்து அணு ஆயுதம் பல நாடுகளில் இருந்தாலும், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் இராணுவத் தளபதிகளும் பொதுவெளியில் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் பற்றிப் பேசுவதில்லை. அப்படிப்பட்ட பேரழிவுக்கான ஆயுதங்கள் தங்களிடம் இருக்கிறது என்று கூறுவதற்குக்கூட பல நாடுகளின் தலைவர்கள் தயங்கிய நாள்களும் உண்டு. இந்த ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய பேரழிவை அறிந்திருந்த பல நாடுகள், தாங்கள் அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டால் மட்டுமே தங்களது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று தங்களுக்குள் ஒப்பந்தமும் செய்துள்ளார்கள் (No first use agreement).

இரண்டாவது, உலக யுத்தத்திற்கு பின் ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், ஐக்கிய நாடுகள் சபைக்குத் தாக்குதலுக்கான காரணங்களைத் தெரிவித்து, பாதுகாப்புக் கவுன்சிலின் அனுமதி பெறவேண்டும் என்றெல்லாம் விதிகளை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். ஆனால், அண்மையில் இப்படிப்பட்ட நடைமுறைகளையெல்லாம் எந்த நாடும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் தாங்கள் நினைத்தால், தேவைப்பட்டால் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று இப்போதெல்லாம் தங்களது எதிரி நாடுகளை மிரட்டுவது சாதாரணமாகிவிட்டது. சில நாள்களுக்கு முன்னர் பாகிஸ்தானிய இராணுவ செனரல் இப்படிப் பகிரங்கமாய்ப் பேசியதை உலகம் முழுவதும் பார்த்தது. தான் சரியான நேரத்தில் தலையிட்டிராவிட்டால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பெரிய அணு ஆயுதப் போர் நடந்திருக்கும் அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. வடகொரிய அதிபர் வாரத்திற்கு ஒருமுறை தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தென்கொரியாவின் மீது ஏவ எப்போதும் தயார் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இரஷ்ய அதிபர் புட்டின்கூட, உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி உதவி செய்யும் ஐரோப்பிய நாடுகள்மீது அணு ஆயுதங்கள் உள்பட அனைத்துவிதமான தாக்குதல்களையும் தொடர இரஷ்யா தயங்காது எனப் பகிரங்கமாகப் பேசினார்.

1991-இல் சோவியத் இரஷ்யா பல நாடுகளாகச் சிதறுண்டபோது, பேரழிவின் கடிகாரம் பேரழிவுக்கு 17 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கடிகாரம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், பேரழிவுக்கான இடைவெளி இவ்வளவு அதிகமாக அதற்கு முன்பும் பின்பும் என்றும் இருந்ததில்லை. தற்போது இக்கடிகாரத்தின் நேரத்தைக் கணக்கிடும் பணியில் உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். டெல்லி ..டி. பேராசிரியர் உள்பட தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மூன்றுபேர் தற்போது பேரழிவுக்கான நேரத்தைக் கணக்கிடும்போது புவி வெப்பமயமாகி வருவதால் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர். மேலும், தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligent) மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) ஆகியவற்றின் தாக்கங்களையும் கருத்தில் கொள்கின்றனர். இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் யுத்தங்களின் அத்தனை பரிணாமங்களையும் தலைகீழாக மாற்றியுள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உலகின் பேரழிவுக்கு இன்னும் 89 வினாடிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2024-இல் 90 வினாடிகளாக இருந்ததை 2025-இல் 89 வினாடிகளாக மாற்றியுள்ளனர். கடிகாரம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இதுதான் நமக்கும் பேரழிவுக்கும் இடையே மிகக்குறைந்த நேரம். பேரழிவுக்கான கடிகாரத்தின் மூலம் விஞ்ஞானிகள் தருகின்ற எச்சரிக்கை அறிவிப்பின் அபாயத்தை உலக நாடுகள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதே உண்மை.

இரஷ்யா-உக்ரைன் போர், பாலஸ்தீனம்- காசாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் இன அழிப்புத் தாக்குதல்கள், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதல்கள், தன் இருப்பினைத் தக்கவைக்க ஈரான் ஏவுகணைகள் மூலம் நடத்தும் பதில் தாக்குதல்கள், ஐந்து நாள்கள் மட்டுமே நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள், சீனாவுக்கும்-தைவானுக்கும் இடையே எந்த நேரத்திலும் வெடிக்க இருக்கும் யுத்தம், சீனப் பெருங்கடலில் கடல் எல்லைகளை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும்-ஜப்பானுக்கும், சீனாவுக்கும்-பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையே தினசரி நிகழ்வாக நடக்கும் மோதல்கள், அண்டை நாடுகளை அன்றாடம் அச்சுறுத்தும் வடகொரிய நாட்டின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப் பரிசோதனைகள், மோதல்கள் என்று உலகம் முழுவதும் இருக்கின்ற யுத்தப் பதற்றம் எந்த நேரத்திலும் மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாகச் சர்வதேச புவி அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர். அப்படி ஒரு பெரும்போர் ஏற்படும்போது, அணு ஆயுத யுத்தம் தவிர்க்கமுடியாத பேரழிவாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. இதுவரை யுத்தங்களைப் பற்றிச் சிந்தித்திராத நாடுகள்கூட, அப்படி ஒரு யுத்தம் வந்தால் என்ன செய்வது என்று திட்டமிடத் துவங்கியுள்ளன.

உலக நாடுகள் அனைத்தும் நடப்பு நிதி ஆண்டில் தங்களது பாதுகாப்புக்கான இராணுவப் பட்ஜெட்டை அதிகப்படுத்தியுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடே தேவையில்லை என்று முடிவெடுத்திருந்த ஜப்பான், கடந்த வாரம் ஓர் ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது. அண்மையில் நடந்தநேட்டோநாடுகளின் உச்சி மாநாட்டில் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இராணுவப் பாதுகாப்பு நிதிக்காகத் தங்களது ஒட்டுமொத்தத் தேசிய உற்பத்தியில் கூடுதலாக ஐந்து விழுக்காட்டினை ஒதுக்குவதாக அறிவித்துள்ளன. அணு ஆயுதங்களைத் தாங்கிச்சென்று தாக்கும் 12 அமெரிக்கத் தயாரிப்புஎஃப்-35’ விமானங்களை உடனடியாக வாங்கப்போவதாகநேட்டோஉச்சி மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

எரிகிற வீட்டில் அள்ளியது அனைத்தும் ஆதாயம் என்ற நிலையில் இந்தியாவையும் உலகின் ஆயுதத் தொழிற்சாலைகளில் ஒன்றாக மாற்றுவதற்கு மோடி அரசு பெரும் முயற்சிகளை முன்னெடுக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்தியா 50,000 கோடி பெறுமான ஆயுதங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது என்றும், வரும் நாள்களில் அதனை இலட்சம் கோடியாக உயர்த்த இருப்பதாகவும் நமது பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் பெருமைப்பட்டுக்கொள்கிறார்.

இப்போதெல்லாம் யுத்தங்களை நடத்துவதற்குப் போர்வீரர்களும், பீரங்கிகளைத் தாங்கிச் செல்லும் டேங்குகளும் தேவையில்லை; தற்போது நடப்பது நட்சத்திர யுத்தம் (Stars wars). ‘ட்ரோன்ஸ்என்றழைக்கப்படும் ஆளில்லாத விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆயிரக்கணக்கான மைல் தூரங்களை, ஒலியைவிட வேகமாகச் சென்று எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள், எதிரி நாட்டின் ரேடார்களின் திரைகளிலேயே தெரியாமல் தங்களையே மறைத்துக் கொண்டு பறக்கும் நவீன ஜெட் விமானங்கள், 35 மணி நேரம் இடைவிடாமல் பறக்கும் விமானங்கள், நடுவானிலேயே எரிபொருளை மற்றொரு விமானம் மூலம் நிரப்பும் வசதி, அணு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு கடலுக்கடியில் எதிரிகளின் கண்களில் படாமல் ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்யக் கூடிய நீர்மூழ்கி கப்பல்கள்... என்று கற்பனையில்கூட எண்ணிப்பார்த்திராத அதிசயங்களையெல்லாம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கும் நவீனத் தொழில்நுட்பங்களால் உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எதிரி நாட்டின் இராணுவத் தளங்களை அழித்து, அந்நாட்டின் இராணுவ வீரர்களைச் சரணடையச் செய்வது என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் எதிரிநாட்டு அரசின் தலைவர்களை, அந்நாட்டின் முக்கிய இராணுவத் தளபதிகளை, யுத்தத் தளவாடங்களைத் தயார் செய்து தரும் நிபுணர்களைக் குறிவைத்து, அவர்கள் இருக்கும் இடங்களிலேயே ஏவுகணைகளை வீசி அழிப்பது சாதாரணமாகிவிட்டது. ஈரான் நாட்டின் முக்கியமான தளபதிகளையும் அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்துக் கொலை செய்த இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் அதிகார உச்சமானகாமினியைக் கொலை செய்வதோடுதான் யுத்தம் முடியும்என்று கொக்கரித்ததை நாம் எல்லாரும் கேட்டுக் கொண்டுதானே இருந்தோம்!

காமினி எங்கே ஒளிந்திருக்கிறார்? என்று எனக்குத் தெரியும். அவரைக் கொல்ல இஸ்ரேலை தான் அனுமதிக்கவில்லைஎன்று பேசிய டிரம்பின் ஆணவத்தை யாரும் மறக்கமுடியுமா? இதைப் போன்ற ஒரு நிலைமை எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் நாளை வரலாம் அல்லவா?!

ஒரு நாட்டின் பூகோள நிலப்பரப்பு, அதன் மக்கள்தொகை, அந்நாட்டின் இயற்கை வளங்கள், அதன் தொன்மையான நாகரிகம், பாரம்பரியமான கலாச்சாரம் ஆகியவை அந்நாட்டின் தகுதியினையும் பலத்தையும் நிர்ணயிப்பதில்லை. அதனுடைய விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்ப மேன்மை மட்டுமே அந்நாட்டின் மேலாண்மை உயர்வுக்குக் காரணம் என்பதே இன்றைய உலகின் எதார்த்தம். ஈரானுடைய இராணுவப் பலத்துக்கும் இயற்கை வளத்துக்கும், அதன் நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கும் முன்னால் இஸ்ரேல் ஒப்பிடவே தகுதியில்லாத நாடு. ஆனால், இஸ்ரேல் தன்னிடம் இருக்கும் விஞ்ஞானத் தொழில்நுட்ப வசதிகளால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஈரானை ஆட்டிப்படைக்கின்றது. பொருளாதாரப் பலம் மிக்க சக இசுலாமிய நாடுகள்கூட அமெரிக்காவுக்கும்-இஸ்ரேலுக்கும் பயந்து ஈரானுக்கு உதவிட முன்வரவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இந்தப் பயங்கரத்தாக்குதல்கள் நடைபெற்றபோது டிரம்பினுடைய பெயரைச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு ஈரானின் அண்டை நாடான பாகிஸ்தான் பரிந்துரைப்பது காலத்தின் கொடுமை என்பதைத் தவிர்த்து, வேறென்ன கூறுவது?

ஒரு சாதாரண கிராமப் பஞ்சாயத்துக்கு இருக்கும் அதிகாரமும் செல்வாக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இல்லாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம்! நேரு, குருசேவ், கென்னடி, டிட்டோ, நாசர் போன்ற உலகம் அறிந்த தலைவர்கள் இன்று இல்லை என்பது நம் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு. தவறு செய்கின்ற நாடுகளைக் கண்டிக்கவும், அதன் தலைவர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டவும், மோதல்களில் இருக்கும் நாடுகளின் தலைவர்களை அழைத்து சமரசம் பேசி சமாதானத்திற்கு வழிகாணவும் உலகம் முழுவதும் எந்த அமைப்பும் தலைவர்களும் இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் (Security council) இருக்கின்ற அதிகாரம் மிக்க உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஆயுதத் தயாரிப்பாளர்களாகவும் விற்பனையாளர்களாகவும் இருக்கிறார்களே... இந்தக் கொடுமையை எங்கே போய் கூறுவது? அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது அனைத்துமே அப்பட்டமான பொய் என்று தெரிந்த பின்னரும் கூட அதனைப் பொய் என்று தைரியமாகக் கூறும் பேராண்மை உலகில் எந்தத் தலைவருக்கும் இல்லையே!

காசாவில் குண்டடிபட்டுச் சிதைந்துகிடக்கும் பிஞ்சுக் குழந்தைகளையும், ஒரு நேர உணவுக்காகச் செத்துமடியும் மக்களையும் ஆயிரக்கணக்கில் பார்த்த பின்னரும்கூட உலக மனச்சாட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே! பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணைத் தாக்குதல்களைச் சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகள்போல காண்பித்து, அந்த ஏவுகணைகளின் தொழில்நுட்பச் சிறப்புகளை விவாதப் பொருளாக்கி மக்களின் மனத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலைகுறித்துக்கூட சிந்திக்கவிடாமல், ஒட்டுமொத்தச் சமூகத்தின் மனச்சாட்சியையும் மழுங்கடிக்கும் வேலையைத் தினசரி அரங்கேற்றும் ஊடகங்கள் செய்வது வேசித்தனம்தானே!

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருப்பது அறிவீனம் அல்லவா! ஒவ்வொரு காலத்திலும் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தங்களால் ஏதாவது நன்மை ஏற்பட்டது உண்டா? இன்று ஈரான் மீது கொடுமையானÀ2குண்டுகளை வீசிவிட்டு ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுமையும் அழித்துவிட்டோம் என்று அறிவித்த டிரம்பின் குரல் அடங்குவதற்குள், கத்தாரில் அமெரிக்க இராணுவத்தளங்களை ஈரான் தாக்கியது. தங்களது அணு ஆராய்ச்சிச் சொத்துகள் அனைத்தும் பத்திரமாகப் பாதுகாப்பாக இருக்கின்றன என அறிவிக்கின்றது. இப்படித்தான் 2001-இல் ஆப்கானிஸ்தானைத் தாக்கி தாலிபன்களை ஒழித்துவிட்டோம் என்று அறிவித்தது. இருபது வருடங்களுக்குப் பின்னர் அதே தாலிபன்களிடம் அந்நாட்டை அமெரிக்கா ஒப்படைத்தது. 2003-இல் ஈராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அதன்மேல் போர் தொடுத்தது. அதைப்போல லிபியாவைக் காப்பாற்றி, அங்கே சனநாயக ஆட்சியை உருவாக்கப்போகிறோம் என்று போர்தொடுத்தது. ஆனால், அமெரிக்கா நடத்திய போர்களால் (வியட்நாம் உள்பட) அவர்கள் விரும்பியதை எங்கேயும் சாதிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிதி ஆண்டில் மட்டும் உலக நாடுகள் யுத்தங்களில் செலவுசெய்த பணம் சுமார் மூன்று டிரில்லியன் டாலர். தற்போது நடந்த தாக்குதலில் இஸ்ரேல் அனுப்பிய ஓர் ஏவுகணைக்கான செலவு இரண்டு மில்லியன் டாலர். இப்போது நடந்த ஐந்து நாள் சண்டைக்கு நாம் செலவுசெய்த பணம் 50,000 கோடி. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் வரக்கூடிய நாள்களில் இந்தியாவின் இராணுவச் செலவு 20 பில்லியன் டாலராக இருக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.

நாம் இப்போது பாகிஸ்தானை மட்டும் எதிர்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்குச் சீனா வாரி வழங்கும் ஆயுத உதவிகளையும் தொழில்நுட்பங்களையும் சீன விண்கோள்கள் தரும் இரகசியத் தகவல்களையும் சேர்த்துச் சமாளிக்கவேண்டும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கமும் உறவும் நமக்கிருக்கின்ற மிகப்பெரிய சவால். பத்து பில்லியன் டாலருக்கு நாம் வாங்கிய பிரான்சின் இரபேல் விமானத்தைச் சீனாவின் ஸ்பைட்டர் ஜெட் சுட்டு வீழ்த்தியது சர்வதேச இராணுவத் தாள்வாரங்களில் மிக முக்கியமான பேசும்பொருளாக மாறியுள்ளது.

இரபேலின் பங்கு மதிப்புகள் பங்குச் சந்தையில் வேகமாகச் சரிந்துவிட்டது. நாம் எவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தாலும், நாம் நினைத்தபடி பாகிஸ்தானைப் போரிட்டு வெற்றிபெற முடியாது. அது இறுதியில் அணு ஆயுதப்போராகத்தான் முடியும். யுத்தங்களைத் துவங்குவது எளிது. ஆனால், துவங்கிய யுத்தங்கள் முடிவுறுவது கடினம். யுத்தங்களினால் அழிகின்றவர்கள் அனைவரும் பெண்களாய் குழந்தைகளாய் ஏதுமற்ற ஏழைகளாகவே இருப்பதுதான் நிதர்சனம்!

புதியதோர் உலகம் செய்வோம்... கெட்ட போரிடும் உலகத்தினை வேரோடு சாய்ப்போம்என்ற புரட்சிக் கவிஞரின் வார்த்தைகளை இந்த உலகம் கவனத்தில் கொள்ளுமா? பேரழிவை நோக்கி வேகமாக நகரும் பேரழிவின் கடிகார முள்களைத் தடுத்து நிறுத்துமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!