news
சிறப்புக்கட்டுரை
மனித நுண்ணறிவை மிஞ்சும் நிலையில் A.I. (உலகம் உன் கையில் – 8)

நாம் வாழும் இப்புவியின் எதிர்காலம் யார் கையிலிருக்கப் போகிறது? ‘ட்ரான்செண்டென்ஸ்என்ற முற்றிய நிலை ஆன்மாவைச் சிந்திக்கும் ஆன்மிகவாதிகள், மனோதத்துவ  வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் அவர்களுடைய அடிப்படை நம்பிக்கையை அசைப்பதாகக்கூட இருக்கலாம். எல்லாவற்றிற்கும்மேல் அபார நுண்ணறிவின் செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கனவு நினைவாகி, நினைவு நிகழ்வாகிறதா?

உலகில் 1700 விஞ்ஞானிகள் சேர்ந்து AGI (Artificial General intelligence) சாத்தியப்படுமா? என்று ஆராய்ந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்குக் கிடைத்த பதில்ஆம்என்பதாகும். ‘ஒருமை தொழில்நுட்பம் எப்போது நிகழும்?’ என்ற கேள்வி பலர் மனத்திலும் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளவுகோல் இல்லை. அது சீராகவும் அல்லது சூடுபிடித்து, முடுக்கிவிட்ட வேகமாக விரிவடையும் தன்மையும் பெற்றது.

1965-ஆம் ஆண்டு இன்டெல்லின் இணை நிறுவுநர் கார்டன் மூர் என்பவர், கணினியின் சக்தி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும் என்று கணித்தார். இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தது. அமெரிக்கக் கணினி விஞ்ஞானியும், தொழில் நிபுணருமான ஏர் கர்ஸ்வெல் ..-யில் ஆதிக்கம் பதித்தவர். 2005-ஆண்டு இவர்ஒருமை அருகாமையிலிருக்கிறதுஎன்ற நூலை எழுதினார். அப்போது .. பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியாது.

அந்நூலில், ‘கணினியானது மனித நுண்ணறிவின் தரத்தை 2029-ஆம் ஆண்டுகளுக்குள் அடைந்துவிடும்என்றும், அது ஒன்றாகி அபார மனிதனாக, ஏறக்குறைய 2045-ஆம் ஆண்டில் உருவெடுப்பதைஒருமைஎன்று குறிப்பிட்டிருக்கிறார் (computers would reach human level intelligence by 2029 and merge with computers and become super humans around 2045 is called singularity). .ஜி.. என்பது, நாம் எப்படி வேலை செய்கிறோம்? வாழ்கிறோம்? நினைக்கிறோம்? என்ற மனிதமூளையின் செயலாற்றலைக் கொண்ட தொழில்நுட்பம். இந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஆராய்ச்சியின் வேகம், நாம் .ஜி..-யின் எல்லைக்குள் நுழைந்து விட்டதையும், .எஸ்.. (Artificial Super Intelligence-ASI) அடைவது எட்டிய தூரத்திலிருப்பதையும் காட்டுகிறதாக உள்ளது. .ஜி.. என்பது உடனே வெளிப்படாவிட்டாலும், அது உருவெடுப்பதையும், அதன் அறிகுறிகளையும் காணமுடிகிறது.

2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆல்ட்மேன், ‘The intelligent ageஎன்ற நூலில், ‘.ஜி.. என்பது மனித வர்க்கத்திற்குக்  கிடைக்கும் கருவியாயில்லாமல், மனித வரலாற்றை உருவாக்கும் புதிய சகாப்தமாயிருக்கும்என்று கூறியிருக்கிறார்.

ஓர் இயந்திரம் தானே கற்று, புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றுவிட்டால், அது அதிக ஆற்றலை அடைவதென்பது வெகு தொலைவில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக .ஜி.. பார்க்கப்படுகிறது.

இதுவரை .. அமைப்புகள் எழுதுவது, நகல் எடுப்பது, நோய்களை அறிவது, போக்குவரத்தை விரிவுபடுத்துவது என்ற செயலாற்றல்களைக் கணினியின் குறுகிய எல்லைத் திறனில் அமைந்திருந்தன. ஆனால், .ஜி..-யின் செயலாற்றல், மாற்றியமைத்துக்கொள்ளுதல், காரணமறிதல், பல்வகைச் சிக்கல்களைத் தீர்த்தல் என்ற திறன்களைப் பெற்றிருக்கும். இதற்கு உதாரணமாக, பேசும் இயந்திரங்களைக் கூறலாம்.

நுண்ணறிவு என்பது இதுவரை மனிதனுக்கே உரிய தனித்துவப் பண்பாக மதிக்கப்படுகிறது. இந்நிலையில் .ஜி.. என்ற இயந்திரச் செயலியை நம் வாழ்க்கையின் அங்கமாக அது கருவியாகவோ அல்லது பங்காளியாக அல்லது எதிரியாக எவ்வாறு இணைக்கப்போகிறோமோ அதைப் பொருத்தே நம் கலச்சாரத்தை, அடையாளத்தை, முக்கியத்துவத்தை அது பிரதிபலிக்குமென்பது இப்போது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாயுமிருக்கிறது..

.ஜி.. பின் ஏன் செல்லவேண்டும்?

மனிதனின் திறனைவிட கணினியின்அறிவாற்றல் இயந்திரங்கள்இப்போதைக்கு இல்லை என்றாலும், சில ஆராய்ச்சியாளர்கள் மொழி பேசும் இயந்திரங்கள் அப்படி மேம்பட்ட திறனைப் பெற்று உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிக்காட்டுவதாக நம்புகின்றனர்.

இன்று வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களான ..-யும் கற்கும் இயந்திரமும் இணைந்து-உதாரணமாகஒருவர் நோபல் பரிசைப் பெற எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குச் சமமான உழைப்பை ஒரு சில நிமிடங்களில் உருவாக்கிச் சாதிக்கும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது இயந்திரச் செயலாற்றலின் வீரியத்தைக் காட்டுகிறது. .ஜி.. பின் செல்வதென்பது ஒரு குருட்டுத்தனமான முயற்சி என்று தோன்றினாலும், இதற்கான சில காரணங்களும் சொல்லப்படுகின்றது.

மனித அறிவாற்றல் பல ஆயிரம் ஆண்டுகள் நிலையானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், புரிந்துகொள்ளும் திறனை இயந்திரங்களுடன் இணைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திசையில் எலான்மஸ்க் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இயந்திரச் செயலாற்றல் என்பது அல்கோரிதம்கள் ஆய்வுத்திறன் மற்றும் நினைவறை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இவற்றில், ஆய்வுத் திறனும் நினைவறையும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. இயந்திரங்களின் ஆய்வுத் திறனுக்கும் நினைவறைக்கும் ஏற்ற அல்கோரிதம்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது நாம் ஏதோ ஒன்றை நெருங்கிவிட்டோம் என்பதாகத் தெரிகிறது.

மனிதச் செயலாற்றல் நிலைத்துவிட்டது; இயந்திரச் செயலாற்றல் வளர்ந்து கொண்டே போகிறதா?

மனிதனின் செயலாற்றல் நிலைத்துவிட்ட நிலையில், இயந்திரச் செயலாற்றல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால், இயந்திரங்களுக்குத் தகுந்த வரையறைகள் இல்லையென்றால், அவை மனிதனை மிஞ்சும் தருணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதுவரை அந்த எல்லையை நாம் எதிர்கொள்ளவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

ஒருவேளை இயந்திரங்கள் இப்போது ஊமையாக இருப்பதாகத் தோன்றலாம்; ஆனால், அவை மிக திறனுடன் மிக விரைவில் வளரும் தன்மையைப் பெறும் நிலை எப்போது என்பதுதான் கேள்வி.

2022-ஆம் ஆண்டு இத்துறை சார்ந்த 738 வல்லுநர்கள் நடத்திய ஆய்வில், இது 2059-க்குள் சாத்தியப்பட 50% வாய்ப்புகளிருப்பதாக அறியப்பட்டது.

டெஸ்லா மற்றும்ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் என்பவர் இப்போதுள்ள ஆராய்ச்சியின் வேகத்தில் 2030-க்குள் அபார மனிதச் செயலாற்றலை .. பெற்றுவிடும், இத்தொழில்நுட்பம் மனித இன அழிவிற்கு வழிவகுக்கும், அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க இயலாது. இதனால் இருண்ட எதிர்காலம் என்றில்லை; ஆனால், ..-யின் வேகமான வளர்ச்சியை ஒளிமயமான திசையில் எடுத்துச் செல்ல முயல்வதாகவும் கூறுகிறார்.

..-யின் பிதா என்றழைக்கப்படும் ஜியாப்ரே ஹின்டன் என்பவர் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் BBC-4 நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில், ..-யினால் இன்னும் 30 ஆண்டுகளில் மனித வர்க்கத்தை அழிக்கும் சூழல் உருவாகலாம் என்கிறார். 2024-ஆம் ஆண்டின் பௌதிக நோபெல் பரிசைப் பெற்ற இவர், 10-20% இது நிகழ வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறார். எலான் மஸ்க், ஹின்டனின் கூற்றுடன் உடன்படுவதாகவும் கூறுகிறார்.

தேவைப்படுகிறதோ இல்லையோ, தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்தியதாக இதுவரை சரித்திரமில்லை. ..-யின் எதிர்காலம் பாதி எழுதப்பட்டுவிட்டது. மனிதனும் இயந்திரமும சுமூகமாக இணைந்து இயங்குவதும், அப்படியான எதிர்காலம் நம் அனைவரின் முன்னோக்கப் பார்வையிலும் பொறுப்பிலும், உலகளாவிய ஒத்துழைப்பிலும் இருக்கிறது.

பயன்கள்

ஒருமையின் மனிதரைவிட, வெகுவேகச் செயலாற்றலினால் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறிப்பாக, மருத்துவம், எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. உலகில்ரோபோடிக்ஸ்தொழில்நுட்பம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் செலவை வெகுவாகக் குறைத்து மக்களுக்கு உதவும் என்று எலான் மஸ்க் கூறுகிறார். ரே கர்ஸ்வில் என்ற அமெரிக்க விஞ்ஞானி, “இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டும் கிடைக்குமென்று நினைக்கவேண்டாம்; உதாரணமாக, கைப்பேசி ஆரம்ப நாள்களில் விலையின் காரணமாகச் சிலரிடமேயிருந்தது. இப்போது யாவரும் பயன்பெறும்படியாகக் கிடைப்பது தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களும் நலன் பெற அமைந்திருக்கிறதுஎன்று கூறுகிறார். ஒரு சில வல்லுநர்கள் இதனை வணிக நோக்குடன் ..-யின் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

இணையதளம் செய்தி அனுப்புவதில் செலவினை வெகுவாகக் குறைத்திருப்பதுபோன்று அறிவுத் திறனாய்வதில் செலவினை .. குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. நன்மை, தீமைகளிருக்க, ஐசக் அசிமோவின் மூன்று ரோபோ விதிகளை நினைவுகூர வேண்டியுள்ளோம். ஒன்று, ரோபோக்கள் மனிதருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; இரண்டு, மனிதரின் கட்டளைக்கு அடங்கவேண்டும், கெடுதல் விளைவிக்கும் கட்டளையைத் தவிர்த்து மூன்று, மேலிரண்டு விதிகளோடு தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
அம்மா வருவாள்! (வலையும் வாழ்வும் – 21)

இரயிலுக்கு நேரமாகிவிட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் நாள் தன் இரு பிள்ளைகளையும் இரு கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு ஒன்றாம் நம்பர் பிளாட்பார்மிலே வேகமாக நடந்தாள் காயத்திரி. அவளின் பெற்றோர் பிள்ளைகளைக் கூட்டிச்செல்ல வந்திருந்தார்கள். என்றும் இல்லாத வகையில் அன்று சென்ட்ரல் இரயில் நிலையம் மௌனத்தில் மயங்கிக்கிடந்தது.

காயத்திரி ஒரு சிங்கிள் பேரன்ட்! காலரா நோயினால் தன் கணவனை இரண்டாண்டுகளுக்கு முன் இழந்திருந்தாள். மயிலாப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை. ஓரளவிற்குச் சம்பளம். தன் இரு பிள்ளைகளையும் தானே வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை உதவிக்கு வைத்துக் கொண்டு கவனித்து வந்தாள். அவளின் நெருங்கிய தோழிகளும், அவ்வப்போது வயதான அவள் பெற்றோரும் வந்துசெல்வர். இந்நிலையில் திடீரென்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. “காயத்திரி! ஆம் சாரி! உங்களுக்குச் செகண்ட் ஸ்டேஜ் கேன்சர்.” அனைத்து ரிப்போர்ட்களையும் சரிபார்த்துக்கொண்டு மூத்த மருத்துவர் ஒருவர் கூறியது காயத்ரியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

மாத்திரை, மருந்துகள், டிரீட்மெண்ட் செலவுகள்... இதற்கிடையில் தன் பிள்ளைகளின் படிப்பு. காயத்திரிக்கு இது பெரும் மனச்சோர்வைக் கொடுத்தது. “நம்ம நாட்டுல இதற்கு டீரீட்மெண்ட் இல்ல. வெளிநாட்டுல புதுசா கீமியோதெரபி மருந்துகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த வருசத்துல வந்திடும்என்றார் மருத்துவர்.

சில நாள்களிலேயே பாதி எடை குறைந்திருந்தாள். தன் பெற்றோரை வரவழைத்துத் தன் பிள்ளைகளை அழைத்துப்போகச் சொன்னாள். அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றம் பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். “நீயும் எங்களோடு வந்திடு! உன்ன நாங்க பாத்துகிறோம்என்று பலமுறை அவளின் தாய் கூறியபோதும், அவள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. “இது செகண்ட் ஸ்டேஜ்தான்மா! சரியாகிடும். ஆபீஸ்ல வேல வேற இருக்கு. இங்கேயே டிரீட்மெண்ட் போய்க்கிறேன். பார்த்துக்க. என் பிரண்ட்ஸ்செல்லாம் இங்க இருக்கிறாங்க. நீங்க கவலைப்படாதீங்கஎன்பாள். கீமியோதெரபி மருந்துகள் மயிலாப்பூருக்கு வரும், தனக்கு மறு வாழ்வு கிடைக்கும் என்று காத்திருந்தாள் காயத்திரி.

தள்ளாடும் வயதில் பேரப்பிள்ளைகளின் பெட்டிகளையும், தங்கள் பைகளையும் இழுத்துக்கொண்டு இரயிலேறி அமர்ந்தனர் காயத்திரியின் பெற்றோர். பைகளை இருக்கைகளின் கீழ் பத்திரப்படுத்திய தன் தாயைப் பார்த்து மூத்த மகள் அபிராமி, “அம்மா! நீயும் வாமா! ஜாலியா இருக்குமுலஎன்று தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டே கூப்பிட்டாள். அபிராமிக்கு ஐந்து வயதுதான் ஆகிறது என்று யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்குப் பேச்சிலும் நடத்தையிலும் அவள் அப்பாவைப்போல கெட்டிக்காரி.

தண்டவாளப் பொந்துகளுக்கிடையில் ஓடிவிளையாடும் பெருச்சாளிக் கூட்டத்தைப்போல பலரும் அந்தப் பெட்டியின் வழிப்பாதையில் போவதும் வருவதுமாக இருந்தனர். “அம்மா! அஜய்க்குச் சுடுதண்ணீர் வச்சிருக்கேன். அத கொடுங்கஎன்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே கூறினாள் காயத்திரி. அஜய் இராகவன் காயத்திரிக்கு இரண்டாம் பிள்ளை. மூன்று வயதுதான் ஆகிறது. ‘தாயைப் பிரிந்து எப்படி இருப்பான்?’ என்ற கேள்விக்கு காயத்திரியிடம் விடையில்லை. “அம்மா! நேரம் ஆச்சு. இப்போ இரயில் கிளம்பும். அபி! அக்கிரமம் பண்ணக்கூடாது. தாத்தா-பாட்டி சொல்லுறதைச் சமத்தா கேட்டு நடக்கணும், சரியா? அம்மா கிளம்புறேன்.”

இதை காயத்திரி சொல்லும்போது ஏதோ அவளின் பெற்றோர் முகம் வெளிச்சமிழந்திருந்தது. ‘அம்மா! எப்போ வருவீங்க?’ என்ற அபிராமியின் கேள்விக்குஅடுத்த மாதம் வருவேன்என்று கூறிக் கொண்டு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கும்போது, வேகமாக வெளிப்பட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென விடைபெற்று வெளியேறினாள் காயத்திரி.

இரயில் பெட்டியிலிருந்து வெளியே வந்த காயத்திரி சன்னலோரமாகப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு கையசைவுகளில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். போனில் டிரங்கால் போட்டுத் தூரதேசத்திலிருந்து உரக்கப்பேசுவது போலிருந்தது அது. புறப்படும்போது இரயில் எழுப்பிய ஹார்ன் சத்தமும் கரும்புகையும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது காயத்திரிக்கு. டாட்டா காட்டி, கையசைத்துத் தன் உயிரை வழியனுப்புவதாக உணர்ந்தாள் அவள். கீமியோதெரபி மருந்துகள் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையில் காயத்திரி கையசைத்து நின்றாள். ‘அம்மா ஒருநாள் வருவாள்என்ற நம்பிக்கையில் பாட்டியின் மடியில் அஜய் இராகவன் கண்ணயர்ந்திருந்தான்.

அறிவியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகில் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பூமியைக் கதிரவன் சுற்றி வருகிறது (Geocentric) என்று 14-ஆம் நூற்றாண்டு வரையிருந்த கோட்பாட்டை 1543-இல் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மாற்றியமைத்து, பூமிதான் கதிரவனைச் சுற்றிவருகிறது (Heliocentric) என்ற அறிவியல் தெளிவைDe revolutionibus orbium coelestiumஎன்னும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையின் வழியாக உலகிற்கு எடுத்துரைத்தார்.

15-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானியரான ஜோகன்னஸ் கூட்டன்பெர்க் என்பவர் முதன்முதலில் 1440-களில் அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். இவருடைய கண்டுபிடிப்பால் பல அரிய வகை இலக்கியங்களும் சமயக் கருத்துகளும் வரலாற்றுப் பதிவுகளும் மருத்துவக்குறிப்புகளும் அச்சேறின. சமூக மாற்றத்திற்கும் செய்தி தொடர்புக்கும் இது மிகப்பெரிய அளவில் பங்காற்றியது எனலாம்.

பிரிட்டனில் பிறந்த சார்லஸ் டார்வின் 1859-இல் வெளியிட்டஆன் தி ஆர்ஜின் ஆப் ஸ்பீஃயீஸ் (On the Origin of Species) என்னும் புத்தகம் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் மிகவும் பிரபலமாக இருந்த படைப்புக் கொள்கையினை ஓரங்கட்டிவிட்டு பரிணாமக்கொள்கைப் பற்றிய விவாதங்களை இது முன்வைத்தது.

அறிவியலின் வளர்ச்சியால் பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெரும் திருப்பத்தையும் உலகளாவிய மாற்றத்தையும் ஏற்படுத்தின. அதில் மிக முக்கியமானது நீராவி இயந்திரம். 1712-இல் தாமஸ் நியூகம்மேன் உருவாக்கிய நீராவி இயந்திரத்தை, 1765-இல் ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஜேம்ஸ் வாட் என்பவர் மறுசீரமைப்பு செய்து போக்குவரத்து, ஜவுளி உற்பத்தி போன்றவைகளுக்கு அதனைப் பயன்படுத்தி தொழில்புரட்சிக்கு வித்திட்டார்.

தொலைத்தொடர்பிலும் தொழில்நுட்பம் ஊடுருவத் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில்தான். மனிதன் புறாக்களையும் பிற விலங்குகளையும் தொலைத்தொடர்புக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் 1844-ஆம் ஆண்டு சாமுவேல் மூர்ஸ் என்பவர் மின்சாரத்தால் இயக்கப்படும்டெலிகிராப்என்னும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். மூர்ஸ் குறியீட்டைப் (Morse Code) பயன்படுத்தி டெலிகிராப் உதவியால் செய்திகளைக் கேபிள் வழியாகக் குறியீடாக அனுப்பினார். முதன்முதலில்எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்!” (WHAT HATH GOD WROUGHT!) (எண்ணிக்கை 23:23) என்னும் திருவிவிலிய வாக்கியமே டெலிகிராப் மூலமாக அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு கண்டுப்பிடிப்பும் மற்றுமோர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு அடித்தளமிடுகிறது. அதிலும் குறிப்பாக, மின்சாரம் மற்றும் டெலிகிராப் தொழில்நுட்பம் இன்றைய கணினிக்கு அடிப்படை எனலாம். அன்றைய டெலிகிராப்பில் பயன்படுத்தப்பட்ட மூர்ஸ் குறியீடான ‘.’ (dotமற்றும் ‘- (dashஇன்று கணினியின் பைனரி குறியீடான ‘0’ மற்றும் ‘1’ ஆக உருமாறியிருக்கின்றது. 21-ஆம் நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவிற்கும் அடிப்படை மின்சாரப் பயன்பாடும் மூர்ஸ் குறியீடும் எனலாம்.

அண்மையில் ஓப்பன் ஏஐ-யினுடைய தலைவர் சாம் ஆல்ட்மேன், சாட் ஜிபிடி பயனர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில்யாரும்தயவுசெய்து (please) மற்றும்நன்றி (thankyou) என்ற வார்த்தைகளைச் சாட் ஜிபிடில் பதிவேற்ற வேண்டாம். ஏனெனில் அது ஏராளமான மின்சாரத்தைக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்துவதனால் (Computation) பல இலட்சம் டாலர் செலவாகிறதுஎன்றார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு வார்த்தையும் டோக்கன் என்னும் குறியீட்டில் கணினியால் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அடிப்படையாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றன. இதுவே தொலைத்தொடர்பு, தொழில், கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, மருத்துவம் போன்ற துறைகளில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன.

மாற்றம் ஒருநாளில் நிகழ்வதல்ல; ஓராயிரம் தடைகளைக் கடந்துவருவது. மாற்றம் நடைமுறைகளை உருமாற்றும், கேள்விக்குள்ளாக்கும், விவாதத்திற்குள் தள்ளும். மாற்றத்தை முத்தமிட்டு ஏற்பதும் மறுதலிப்பதும், மாற்றியமைப்பதும் முழு மனித நலனை மையப்படுத்தியே இருக்கவேண்டும். இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அணுகுண்டுகளாகவும் இருந்திருக்கின்றன, ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் இருந்திருக்கின்றன.

மனித அறிவு அன்பிலிருந்து பிறக்கும்போது மாற்றம் ஏமாற்றம் தராது!

news
சிறப்புக்கட்டுரை
‘தமிழ்க் கடவுள்’

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு, பாம்பன் பாலத் திறப்பு விழாவிற்கு விமானத்தில் பறக்கிறார். பறந்த பின் மோடி தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிடுகிறார்: ‘இராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், இலங்கையிலிருந்து திரும்பும்போது வானத்திலிருந்து  இராமர் சேதுவைக் காணும் தெய்வீகப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதேநேரத்தில் அயோத்தியில் இராம் லல்லாவின் சூரிய திலக விழாவையும் காண முடிந்தது. ஸ்ரீ இராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் இருக்கட்டும்.’

 ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் பிரிவு பா...வுக்கு எல்லா நிகழ்வுகளுமே மதவாதம்தான்! மத அடிப்படைவாதம்தான்! மதச்சார்பற்ற குடியரசு என அரசமைப்புச் சட்டம் தன்னைப் பிரகடனப்படுத்துகிற நாட்டில், பிரதமரே இப்படி மதச்சார்பில் பேசலாமா? என்ற கேள்வி எழுகிறது.

பா...வின் ஒன்றிய ஆட்சி அதிகாரம் என்ற கதையில்இராமர் கோவில்என்பதே முக்கியப் பங்காற்றியது. உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில், இந்த இராமர் வெறி வாக்குகள் பெறத் தொடர்ந்து காக்கப்படுகிறது. பா...வின் இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்த அரசியலில்  சிறுபான்மையோர் நசுக்கப்படுகிறார்கள் என்பதே கொடிய மறுபக்கம். பா...வின் மதவாத அரசியல் காலத்தேவியாபம்ஊழல் நீட்சி பெறுகிறது. மாநிலங்களில் விருப்பத் தெய்வங்களை முன்னிறுத்திய மதவாத அரசியல்போக்குத் தீவிரமடைகிறது.

ஒடிசா சட்டமன்றத் தேர்தல் காலம். 2000 முதல் 2024 வரை பிஜூ சனதாதளத்தைச் சார்ந்த நவீன் பட்நாயக் மாநில முதல்வராக அசைக்க முடியாமல் இருந்தார். “பூரி செகநாதர் ஆலய இரத்னபந்தரின் பொக்கிஷ அறைச் சாவிகளைக் காணவில்லை; அச்சாவிகள் தமிழ்நாட்டில் உள்ளதுஎனப் பா... மதவாதப் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாநில வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் எல்லாமுமாக இருந்த குடிமைப்பணி அதிகாரி தமிழர் வி.கே. பாண்டியனை அது மறைமுகமாகக் குற்றம்சாட்டியது. ஒரு படி மேலே சென்றுஒடிசாவைத் தமிழர் ஆள்வதா?’ என்ற பிரச்சாரமும் நடந்தது.

மேலும், வி.கே.பாண்டியனை முன்னிறுத்தி, தமிழரின் உணவுமுறையைக் கேலி செய்த  காணொளியைப் பாச..வினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். நாகரிகமற்ற அரசியல் செய்தனர். ஒடிசாவில் ஆட்சியைப் பா... பிடித்தது.

2023-இல் கர்நாடகா தேர்தல் நிலவரங்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தியது. பா... வெற்றியைத் தந்திரமாகப் பறிக்கஜெய் ஹனுமான்என்ற முழக்கத்தோடு ஹனுமான் யாத்திரைகளை  நடத்தினார்கள். காங்கிரஸ் விழித்தது. ஆட்சியைப் பா...விடமிருந்து கைப்பற்றியது.

மேற்கு வங்கத்திலும் மகாராஷ்டிராவைப்போல விநாயகர் சிலை வழிபாட்டைப் போல காளி பூசையின்போது ஆண்டுதோறும் காளி சிலைகளை அதிகப்படுத்துகிறார்கள். மம்தா அம்மையார் கூட மதவாத அரசியலுக்குத் தப்ப முடியாது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். மகாராஷ்டிரா அரசியலில் பாலகங்காதர திலகர் காலம் முதல் இன்றுவரை விநாயகர் சிலை அரசியலே பா...வை நிலை நிறுத்துகிறது. 2024-ஆந்திரத் தேர்தலுக்குப் பா... எடுத்தது இலட்டு அரசியல்! திருப்பதி பிரசாத இலட்டு தயாரிப்பில் நெய்யுடன் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது ஆகம விரோதம் என எகிறிக் குதித்தார்கள். பதவியேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நெய் வழங்கிய நிறுவனங்கள் வட இந்தியாவைச் சார்ந்த காவிகள் என்றவுடன் அமைதி அடைந்தார். ஆனால், இது குறித்துக் கேலிச்சித்திரம் பதிவிட்டவரைத் தண்டித்தது ஆந்திர மாடல் அரசியல். வட மாநிலங்களில் மாட்டுக் கறி வைத்திருந்தார்கள், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று விளிம்புநிலை மக்கள், பா.. ஆட்சியில் கொடுமைப்படுத்தப்பட்ட நிலை  தேசத்தின் பெரும் சாபம். உணவு உரிமை மதவாதத்தின் பெயரால் மறுக்கப்பட்ட சமூக அவலம்.

கேரளாவில் சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்கலாம் என்றது நீதிமன்றம். பெண்கள் சென்றால் தீட்டாகிவிடும் எனத் துடித்தது பா... கேரள இடதுசாரி அரசு பால் சமத்துவத்தைத் தூக்கிப் பிடித்து வென்றது. பா...வின்  எந்த ஓர் அசைவிற்கும் இணையாத  தமிழ்நாடு அரசியலில்தமிழ்க் கடவுள்எனக் கொண்டாடப்படும் முருகனைத் துணைக்கு அழைக்கின்றனர். முருகன் இவர்கள் சனாதன நெறியில் கூறப்படாத கடவுள்.

அன்றைய பா... தலைவர் எல். முருகன், 2021, ஜனவரி  6-இல் திருப்பரங்குன்றத்தில் வேல் யாத்திரையைத் துவங்கினார். 2025, பிப்ரவரி  11-இல் பழனிமலை முக்கோணத்தில் அன்றைய பா... தலைவர் அண்ணாமலை மயில் காவடி எடுத்தார். இம்முறை பா..., தான் களம் இறங்காமல் தன் குட்டியை விட்டுப் பதம் பார்க்கிறது. திருப்பரங்குன்றம் குறித்து உயர்நீதிமன்றத் தீர்ப்பு, மத நல்லிணக்கம் சார்ந்ததாக உள்ளது. பா... புலிவால் பிடித்த கதையாகி விடுமோ? என இந்து முன்னணி அமைப்பைக் களம் இறக்கியது. மாநாடு வெற்றிக்காக உள்துறை அமைச்சர், பா...வோடு இந்துத் துவா சங்பரிவார் அமைப்புகளை இணைத்துக் கூட்டம் போட்டது, இந்த மாநாட்டிற்குப் பா... அளித்த  முக்கியத்துவத்தை உணரலாம்.

2025, ஜூன் 22 அன்று மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டை ஆன்மிக மாநாடாக மட்டுமே நடத்தவேண்டும், அரசியல் கலப்பு கூடாது என உயர்நீதிமன்றம் நிபந்தனையிட்டது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி வருவார் என்றார்கள். பின் நடிகர் ரஜினி என்றார்கள். ரஜினிஉங்கள் விளையாட்டில் இனி நான் இல்லைஎன்று கூறி மறுத்தார். இறுதியில், அம்பேத்கர் குறித்துக் கட்சி துவக்க நாள்களில் பேசி, தற்போது முழுக் காவியாகிவிட்ட ஆந்திரத் துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். பவன் மதமாற்றம் குறித்து எழுதிக் கொடுத்ததை எந்தப் புரிதலும் இல்லாமல் பேசியது விவாதமானது.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மதுரை முருகன் மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்து முன்னணி முருகன் மாநாட்டில் ஒலி, ஒளி பரப்பிய தன் அமைப்புக் குறித்த காணொளியில் பெரியார், அண்ணா குறித்த கடுமையான விமர்சனத்தை வைத்தனர். முருகன் மாநாட்டிற்குச் சென்ற நான்கு முன்னாள் .தி.மு.. அமைச்சர்களும் அமைதியாக அமர்ந்து இருந்தது, பொதுவெளியில் பேசுபொருளானது. ‘2026-இல் மாற்றம் வரும், மாற்றத்தை முருகன் மாநாடு கொண்டு வரும்என்ற பேச்சுகளே அதிகமாக இருந்தது. முருகன் மாநாட்டில்பாரத் மாதாவுக்கு ஜேஎன்ற முழக்கம் ஏன்? எனக் கேள்விகள் பொதுமக்களால் கேட்கப்பட்டன.

முருகன் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். சாயம் கொண்ட அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதினங்கள் அடையாளம் காணப்பட்டனர். புல்டோசர் யோகியைப் புகழ்ந்து பலர் பேசினர். ‘சங்கிஎன்றால்சங்கம் வைத்தவன்என்ற புதிய கருத்தை இந்து முன்னணித் தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் கூறியது கேலிப்பொருளானது. அண்ணாமலைநாட்டில் இரு வகையான சட்டங்கள் எதற்கு?’ என்றார். நயினார்மூன்றாவது மொழி படியுங்கள்என அறிவுரை வழங்கினார். முருகன் மாநாட்டில் ஆறு தீர்மானங்களில் 5-வது தீர்மானம்இந்து மக்கள் ஒரே வாக்கு வங்கியாகத் திரள வேண்டும்என்ற பா...வின் மதவாத, வாக்கு வங்கி அரசியலை வெளிக்கொணர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது மாநாட்டுக்கான உயர் நீதிமன்ற நிபந்தனை மீறல், நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறப்படுகிறது.

முருகன் மாநாடு குறித்து மதுரை மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களது கருத்து என்ன? மதுரையிலுள்ள வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அனைத்துத் தமிழ்நாடு மக்களுக்கு விடுக்கும் அறைகூவல் இதுதான்: “இந்து, முசுலிம், கிறித்தவம் உள்ளிட்ட மதங்கள் அமைதியாகவும் பல்லாயிரம்  மக்கள் ஒற்றுமையுடன் திரளும் கள்ளழகர் திருவிழா சமண, புத்த, குலத்தெய்வ வழிபாட்டையும், தொன்மை வரலாற்றை, மதநல்லிணக்கத்தை அடையாளம் கொண்ட மாமதுரையின் சமத்துவச் சகோதரத்துவ மரபை மதுரை மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மரபை, மாண்பைச் சீர்குலைக்க முயலும் மதவெறிச் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்  கோருகிறோம்.”

அரசு, மதவாதத்தை முளையிலே கிள்ள வேண்டும் என்பதே சிறுபான்மை மக்களின் கனிவான வேண்டுகோள்.

news
சிறப்புக்கட்டுரை
ஏன் இன்றும்?

போர் ஒரு முற்றுப்புள்ளியா? பாதிக்கப்படுவது யார்? ஆயுதம் நீதியை நிலைநாட்டுகிறதா? பரமன் பதவியைத் தக்கவைக்க, பாமரன் மாண்டு அழிவது இன்று விழிகளுக்கு வெந்நீர் பாய்ச்சுவதுபோல் இன்றைய போர் நிரூபித்து கொண்டு இருக்கிறது. புதிய நவீன ஆயுதங்கள், பெரிய மன்னர்களின் ஆணைகள், சிலர் வெற்றியைக் கூறித் தங்களைப் பெருமைப்படுத்துகிறார்கள். ஆனால், யாராவது ஒருவராவது அந்த வெற்றியின் பின்னால் மண்ணில் கிடக்கும் மனித உடல்களையும், அழிந்த வீடுகளையும், தாயை இழந்த பிள்ளைகளையும் எண்ணுகிறார்களா?

மனித குலத்திற்குள் உருவான பிணைப்பு இன்று சிதைந்து வருகிறது. சகோதரத்துவம் ஒரு கொள்கையாய் மட்டும் விடப்பட்டது. இது உண்மையில் ஒரு மனித உரிமையின் மறுப்பாகும்.

கிழக்கு காசா போரின் பின்னணியில் ஒரு சிறு ஊர். 12 வயதான ஒரு சிறுமி கண்ணீர் மல்கிய கண்களுடன் கண்ணில் பதிந்த காட்சியைக் கூறுகிறாள்: “அம்மா இரத்தக் குளத்தில் கிடந்தாள். நான் ஓடினேன்.… மீண்டும் யாரும் இல்லை.”

இது யாருடைய தவறு? ஒரு நாட்டின் தலைவரின் தவறா? அல்லது உலகினர் நம்முடைய மௌனத்தின் பரிசா?

உலகளாவிய போர் நிலைமை

இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஒரு புனித நிலத்தில் குண்டுகள் சிதற, பசுமைக் காடுகளும், பள்ளிக்கூடங்களும் இருண்டுவிட்டன.

இரஷ்யா-உக்ரைன்: மக்களுக்குத் தினசரி உயிர் பிழைக்கும் போராட்டம். தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளைப் புதைக்கும் நிலைமை.

உலக நாடுகள்போர் முடியவில்லையெனில், நாங்கள் தேவைப்பட்டால் உதவி செய்கிறோம் எனக் கூறுகின்றன. ஆனால், அந்தச் செய்கைகளும் புதிய போர்களுக்குத் தொடக்கமே ஆகின்றன.

திருத்தந்தையரின் வரிகள்

திருத்தந்தை 23-ஆம் யோவான் (‘உலகில் அமைதி):நீதி, நேர்மை, மற்றும் பிறர்நலம் போன்றவற்றைக் கட்டி அமைப்பதே உண்மையான அமைதி.”

திருத்தந்தை 6-ஆம் பவுல் (‘நற்செய்தியை அறிவித்தல்) (சர். 37):திரு அவை ஒருபோதும் ஆயுதங்களையும் போர்களையும் ஊக்குவிக்காது.”

திருத்தந்தை பிரான்சிஸ் (‘அனைவரும் உடன் பிறந்தோர்):போர் என்பது - சகோதரத்துவத்தின் தோல்வி,  “போர் என்பது - மனித உரிமையின் முழுமையான மறுப்பு.\"

திருத்தந்தை 14-ஆம் லியோ: பசி ஒருபோதும் போரின் ஆயுதமாக இருக்கக் கூடாது.”

அறம், அமைதி, மனிதம்

இன்று நமக்குள் எவ்வளவு அமைதி இருக்கிறது? என்பதை நாம் கேட்க வேண்டும். “என்னைத் தொடாத வரை எனக்கு எதுவும் இல்லை எனும் மனநிலை உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்கிறது.

அமைதி என்பது அரசியல் தீர்வாக மட்டும் இல்லாமல், இது ஓர் உள்ளுணர்வு நிலை - இது ஒவ்வொருவரிடமும் தொடங்க வேண்டியது.

கேள்விகளாக முடிவுறும் சில சிந்தனைகள்

பிள்ளைகளைக் கையில் வைத்திருக்கும் தாயின் மரணம் நியாயமா?

ஒரே வீட்டில் இரு சகோதரர்கள் இரு எதிர்பார்ப்புகளுக்காகப் போரிடுகின்ற னர். இதுவே, நம்முடைய நிலைமை.

மக்கள் அமைதிக்காகக் கதறுகின்றனர். ஆனால், அதைக் கேட்பது யார்?

ஏன் இன்றும் போர்? போரை வெற்றியாகக் கொண்டாடும் உலகத்தில் நாம் தோல்வியடைந்த மனிதர்கள். ‘இனி போர் இல்லை என்று சொல்ல முடியாத அளவிற்கு நம்மில் சிலர் இன்னும் மனிதர்களாகவே இல்லை. ஆனாலும், நம்மில் சிலர் எழுந்து, அமைதி பேசும்வரை இந்தக் கேள்வி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்: ‘ஏன் இன்றும்?’

news
சிறப்புக்கட்டுரை
பொடுகு (வலையும் வாழ்வும் - 20)

சென்னைக்குப் புதிதாக வந்த காலம் அது. நண்பர் ஒருவர் உயர் இரக முடிதிருத்தும் நிலையம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அலுவலகத்திற்கு அருகாமை என்பதாலும், ‘அப்படி என்னதான் உயர் இரகம்! பார்த்து விடுவோமே?’ என்ற எண்ணத்திலும் அங்குச் சென்றேன். குளு குளு அறையில் அலங்கார விளக்குகள் ஜொலிக்க, கண்ணாடிச் சுவர்கள் பிம்பங்களைப் பிரதிபலிக்க சங்கர் பட பாணியில் பிரமாண்டம் தெரிந்தது. வரிசையாக நின்றுகொண்டு கற்களில் தேவதைகளை வடிக்கும் சிற்பிகளைப் போல சுழல் இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு முடி மற்றும் முகத்திருத்தம் செய்து கொண்டிருந்தனர் சிலர். நானும் அந்த வரிசை இருக்கையில் அமரும்போது, ஏதோ அரச சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்த உணர்வு இருந்தது. நானே மிக அழகாய் இருப்பதுபோல அந்த மாயக்கண்ணாடி காட்டியது. ‘டேய்! எங்க ஓடுற? ஒழுங்கு மரியாதையா இங்க வந்து உட்கார்ந்து தாத்தாவிடம் முடிவெட்டிக்கோஎன்ற அப்பாவின் அதட்டல் ஞாபகம் வந்தது.

அந்தக் காலத்தில் மாதம் ஒருமுறை ஊருக்கு வரும் ஆறுமுகம் தாத்தாவிடம் முடிவெட்ட வேண்டும் என்றாலே பயம்தான். எல்லாரும் ஓடி ஒளிந்துகொள்வோம். உரோமம் கத்தரிக்க ஆடுகள் வரிசையில் நிற்பதுபோல ஊர் சிறுபிள்ளைகள் மரத்தடியில் வரிசையாக நிற்போம். ‘பங்க் ஸ்டைலில வெட்டுங்கஎன்றால்சரிஎன்பார். ‘ரஜினி ஸ்டைல்என்றாலும்சரிஎன்பார். ஆனால், எல்லா ஸ்டைலும் ஆறுமுகம் தாத்தாவிற்கு ஒன்றுதான். சில நேரம் அப்பா ஆறுமுகம் தாத்தாவின் காதில் ஏதேதோ முணுமுணுப்பார். விளைவு, கிரிக்கெட் மைதான புற்களைப் போல தலைமுடியை ஒட்ட வெட்டிவிடுவார். பள்ளியில் நண்பர்களிடம் தலையைக் காட்டவே சில நாள்களுக்கு வெட்கமாக இருக்கும்.

யூனிபார்ம் அணிந்த ஒருவர் அருகே வந்து, ‘சார்! எப்படி வெட்டணும்என்றது பழைய ஞாபகங்களைக் கலைத்தது. ‘மீடியமா வெட்டுங்கஎன்றேன். சீப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு முடியைச் சீவிப்பார்த்தார். ‘சார்! உங்களுக்கு டாண்ட்ரப் இருக்கு. ஸ்கல்ப்ல இன்பக்சன் வேற. டாண்ட்ரப் ட்ரீட்மென்ட் பண்ணிக்கலாமா?’ என்றார். ‘இல்ல வேண்டாம், ஹேர் கட் மட்டும் பண்ணிக்கிறேன்என்றேன். ‘சார் அப்படியே விட்டீங்கனா இன்பக்சன் அதிகமாகிடும்என்றவர், ஒரு மெல்லிய பிளாஸ்டிக் உடையை எடுத்து என் உடலில் போர்த்திவிட்டார். ‘சார், எங்ககிட்ட பெஸ்ட் புராடக்ட் பேஸ்கிரீம் இருக்கு. போட்டீங்கனா பேஸ்ல இருக்கிற டேன் எல்லாம் போய்டும்என்றவர் என் மௌனத்தைப் பதிலாக எதிர்பார்த்திருக்க மாட்டார்போலும்.

தூசு படர்ந்த தண்ணீரை விலக்கி அருந்துவதுபோல என் மௌனத்தை விலக்கிஎவ்வளவு ஆகும்?’ என்று கேட்டேன். ‘ஹேர் வாஷ், ஹேர் கட், ஃபேஸ் ட்ரீட்மென்ட் எல்லாம் சேர்த்து 5,500 ரூபாய் ஆகும்என்று கூறிக்கொண்டு மெசினை எடுத்தார். ‘இல்ல வேண்டாம், ஹேர்கட் மட்டும் பண்ணிக்கிறேன்என்று மறுபடியும் கூறினேன். ‘இல்ல சார், ஹேர் வாஷ் பண்ணாம உங்க ஹேர் கட் பண்ண முடியாதுஎன்றார். அப்படியே இருக்கையிலிருந்து சட்டென எழுந்துசரி சார், பிறகு பார்த்துக்கலாம்என்று சொல்லிக்கொண்டு எல்லாரும் என்னையே உற்றுப்பார்க்கையில் வேகமாக வெளியேறினேன்மனம் கொஞ்சம் கனத்திருந்தது. இதை அவமானம் என்று சொல்லலாமா? இல்லை வேண்டாம். அனுபவம் என்று எடுத்துக்கொள்ளலாம். இதே தலை, இதே முடி, பல்வேறு இடங்கள், இத்தனை ஆண்டுகள். பொடுகு வரும் போகும், யாரும் முடி வெட்ட முடியாது என்று சொன்னதில்லையே என்ற எண்ணம் மட்டும் என்னோடு வேகமாக நடந்து வந்தது.

சாலையோரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையைக் கண்டு உள்நுழைந்தேன். குறை கூறமுடியாத அளவு நன்றாகத்தான் இருந்தது அந்தச் சலூன். ‘முடி வெட்ட வேண்டும்என்றேன். புன்முறுவலோடுபைட்டியே சார்என்றார் ஒரு வட நாட்டு இந்திக்காரர். இருக்கையில் அமர்ந்தேன். முடிதிருத்தம் செய்தார். பொடுகு அவர் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை. முடி வெட்டிய பிறகு குளு குளு எண்ணெய் ஊற்றி மசாஜ் வேறு. தலைபாரம் முழுமையாக இறங்கியது போலிருந்தது. கேட்ட நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அன்றிலிருந்து அங்குதான் முடி வெட்டிக்கொள்கிறேன். கத்தரிக்கப்பட வேண்டியது முடி மட்டுமல்ல, நம் முன்சார்பு எண்ணமும்தான் என்று தோன்றியது. வட நாட்டுக்காரர்களை யாராவது பழித்தால், இப்போதெல்லாம் எனக்குக் கோபம் வந்துவிடுகிறது.

ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் இந்தப் பொருள்கள் எல்லாம் வாங்கவேண்டும் என்று ஒரு பட்டியல் வைத்திருப்போம். ஆனால், உள்ளே சென்ற பிறகு அங்கிருக்கும் இன்னும் பல பொருள்கள் நமக்கு அத்தியாவசியத் தேவை என்று தோன்றுகிறது. அவற்றையும் சேர்த்து வாங்கி வருகிறோம். கடைசி நேரத்தில் நம் முடிவில் ஏன் மாற்றம் ஏற்பட்டது? நாம் வாங்கவேண்டும்? என்று நினைத்துக்கொண்டதும், நாம் வாங்கியதும் எண்ணிக்கையிலும் அளவிலும் வேறுபடுகிறதே... ஏன்? என்றாவது சிந்தித்திருப்போமா? அதற்கான பதில்தான்மார்க்கெட்டிங் உத்திகள் (Marketing Strategy).  

நாம் குள்ளமானவர்களாக, அழகில்லாதவர்களாக, ஏதோ குறையுள்ளவர்களாகவே முதலாளித்துவ உலகின் கண்களுக்கு எப்போதும் தெரிகிறோம். ‘இந்த டானிக்கைக் குடித்தால் உயரமாக வளர முடியும்என்பதிலிருந்து, ‘இந்தப் பற்பசையைப் பயன்படுத்தினால் பற்கள் பளபளக்கும்என்பது வரை எல்லாம் மார்க்கெட்டிங் உத்திகளே. முதலாளித்துவ மார்க்கெட்டிங் உத்திகள் மனித மூளையை எளிதாகச் சலவை செய்து அவர்களின் பொருள்களை வாங்க வைத்துவிடுகின்றன. இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல மார்க்கெட்டிங் உத்திகள் மனிதனைச் சுற்றிப் புனையப்படுகின்றன.

AIDA (Attention, Interest, Desire and Action) என்பது மார்க்கெட்டிங் உத்தியிலே மிகவும் பிரபலமான மாடல் எனலாம். இது நுகர்வோர் ஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்குமுன் கடந்து செல்லும் மனநிலையை விவரிக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவின் வரவினால் இந்த உத்தி இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டு குறிப்பாக, மின் வணிகத்திலே (E-commerce) அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மின்ட்ரா, பிக்பாஸ்கட், டாட்டா கிளிக், பெப்பர் பிரை, ஜியோ மார்ட் போன்ற மின் வணிகத்தளங்கள் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி முதலில் செயற்கைத் தேவையினை உருவாக்குகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியினால் நுகர்வோரின் தேவையினை முன்கூட்டியே கண்டறிகின்றனர் (Anticipating Needs). குறிப்பிட்ட நுகர்வோருக்காகவே தயாரிக்கப்பட்டது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றனPersonalized Recommendations). தொடர்ச்சியான நினைவூட்டல்கள் வழங்கப்படுகின்றன (Persistent Reminders). செயற்கையான பற்றாக்குறை பயத்தை ஏற்படுத்துகின்றனர் (Fear of Mission Out- FOMO). அவசர உணர்வை உருவாக்குகின்றனர் (Creating Urgency). கடைசியாக உளவியல் தூண்டல்கள் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன (Psychological Nudging)). இன்று செயற்கை நுண்ணறிவினால் செறிவூட்டப்பட்ட இத்தகைய மார்கெட்டிங் உத்திகளைக் கடந்து நம்மால் மின் வணிகத்தளங்களிலிருந்து ஒரு பொருளையாவது வாங்காமல் வெளிவர முடியாத நிலை உருவாகி வருகிறது.

மனிதனுக்குரிய அடிப்படை ஆற்றலாகிய பகுத்தறிவு செயற்கை நுண்ணறிவிடமும், அதன் மார்கெட்டிங் உத்தியிடமும் மண்டியிட்டுக்கிடப்பது காலத்தின் கொடுமை, மானுடத்தின் சிறுமை.

news
சிறப்புக்கட்டுரை
ஆடுகளின் வாசனையில்... கார்மல் அடிகளார்

அந்தத் தெய்வத்தைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்குமான்னு ஏங்குனதுண்டு. ஆனா, அந்த தேவமாதா புண்ணியத்துல இன்னைக்கு நிறைவேறிடுச்சி! ஆமா, நான் சொல்றது சத்தியம்! எங்க பாதரு எங்க ஊர் மக்களை வாழ வெச்ச தெய்வம்என்று அந்த அம்மையார் மேற்கத்தி மாவட்டத் தமிழில் இழுத்துச் சொன்னபோது கண்களிலிருந்து அனிச்சையாக நீர் கொட்டியது.

அறுபது வயது மதிக்கத்தக்க அந்த  அம்மையார், தந்தை கார்மல் அடிகளாரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக  அடிகளாரின் சொந்த ஊரான இராசாவூர் என்ற கிராமத்திற்கு வந்திருந்தார். இராசாவூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குமரி மாவட்டத்தின் மேற்கத்தி மலையகமான  கடையாலுமூடு என்ற ஊரிலிருந்து ஊர்தி அமர்த்தி வந்திருந்தவர்களில் ஒருவர் அந்த அம்மையார், தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலும், தந்தையை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்திருப்பதாகக் கூறினார். அவர் சொல்லில்  புதைந்திருந்த அன்பில் உண்மை மட்டுமே வெளிப்பட்டது

இராசாவூரின் புகழ்பெற்ற திருத்தலமான புனித மிக்கேல் அதிதூதர் பேராலயத்திலிருந்து கிளைப்பங்கான வடக்கு இராசாவூர் புனித காணிக்கை அன்னை ஆலயத்தை நோக்கி வரவேற்புப் பவனி செல்ல ஆயத்தமான நேரம்ஊர் பொதுமக்கள்  புடைசூழ கூடியிருந்த அந்த நேரம் உணர்வுகளின் சங்கமமாகக் காட்சியளித்தது. தொலைதூரத்திலிருந்து வண்டி பிடித்துவந்த பலரும் தந்தை அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் முண்டியடித்துக் கொண்டு அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தை அவர்கள் வந்திருந்த மக்களின் அன்பு வளையத்திற்குள் சிக்குண்டு கிடந்தார். பொக்கை வாய் மலர முதுமையின் நடுக்கங்களின் ஊடாகச் சலிக்காமல் அவர்களுக்கு ஆசிர் அளித்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை ஊர் மக்களோடு நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஆயர் பெருமக்களும் பங்குப் பணியாளர்களும் நெகிழ்ச்சியுடன் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் காட்சி மட்டுமே நூற்றாண்டின் நிறைவுநாளில் நின்றவாறு இன்றுவரை இறைப்பணியாற்ற இயங்கிக்கொண்டிருக்கும் தந்தை கார்மல் அடிகளாரின் இயல்பை எடுத்துரைக்கும் நிகழ்சாட்சியமாகத் திகழ்ந்தது.

இவர்தான் தந்தை கார்மல்!

அன்பின் நிறைகுடம்! சொல்லொண்ணா அன்புக்குச் சொந்தக்காரர்! கன்னியாகுமரி மாவட்டம் இராசாவூர் என்னும் வயலும் வயல் சார்ந்த மருத நில மண்ணில் 1925-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 16-ஆம் நாள் பிறந்தார்.

செல்வத்திற்குக் குறைவில்லாத வேளாண்மை சார்ந்த கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர் என்றாலும், கல்வியோடு கழனிப் பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்த பொழுதுதான் இறையழைப்பிற்கிணங்க கோட்டாறு குருமடத்தில் இணைந்தார்.

மேய்ச்சல் நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவருக்கு, இறையியல் நிலத்தில் ஆடுகளை  மேய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இராசாவூர் பங்குத்தளத்தின் முதல் இறைப்பணியாளராக உருவான  கார்மல் அடிகளாருக்கு ஒரு  தனித்துவமான குணமிருந்ததுஇடக்கை அறியாமல் வலக் கையால் வாரி வழங்கும் குணம்! ஏழைபாழைகள் என்றால் அவரது இரக்கத்தின் கரங்கள் துடிக்கத் தொடங்கிவிடும். சட்டைப் பைக்குள் நுழையும் கரங்களுக்கு எண்ணிக்கை எப்படித் தெரியும்? அப்படித் தான் கொடுத்துக் கொடுத்து ஏழைகளின் வாழ்க்கையில்  இன்பத்தைப் பரவச் செய்வார்.

அவர் ஒரு நட்பு விரும்பி! இளையோர் என்றாலும், தன்னைவிட மூப்பு என்றாலும் அனைவரையும்நண்பரேஎன்று அழைப்பதன் மூலமாகத் தனது நட்பு வட்டத்தை இரட்டிப்பாக்கியவர். அந்த நட்புக்குச் சாதி, மதம் என்ற சாயமும் கிடையாது. அனைவரிடத்திலும் நட்பு பாராட்டினார். அவருக்குள் இருந்த அன்பும் நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால், அவரது அன்பான பேச்சைவிட செயல்களே அவரது அடையாளமாக மாறியது.

அவர் ஒரு திறந்த புத்தகம்: வெளிநாட்டவர்களின் நட்பைப் பெற்ற அவர் அந்த நட்பின் மூலமாக இருப்போருக்கும் இல்லாதவர்களுக்குமான பொருளியல் பாலமாகத் திகழவேண்டும் என்று நினைத்தார். தான் பணியாற்றிய பங்குத்தளங்களில் வாழும் மக்களின் இன்னல்களைப் போக்க இரக்கத்தின் கரங்களை இயன்றவரைக்கும் நீட்டினார். அவரால் கல்வி, வேலைவாய்ப்புப் பெற்ற விளிம்பு நிலை மக்களின் உயர்வில் இன்பத்தைக் கண்டார்.

பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வி உதவி, குடியிருப்புப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு ஆகிய பல பிரச்சினைகளின் நிமித்தமாக நித்தம் நித்தம் தன்னைத் தேடி வருவோருக்காகத் தட்டாமல் திறந்தது அவரது கதவு! கேட்காமல் கிடைத்தன உதவிகள்ஆனாலும், எந்த நிலையிலும் தன்னை உயர்த்தவில்லை. ‘தாழ்ச்சியே எழுச்சிஎன்று நம்பினார். இன்றுவரைக்கும்நான் உலகம் அறியாத சாமானியன்என்றுதான் கூறுவார். அவர் ஆசைப்பட்டிருந்தால் வெளிநாட்டு நண்பர்களின் அழைப்பை ஏற்று உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் சென்று திரும்பியிருக்க முடியும். ஆனால், அவர் பங்குத்தளத்தை விட்டு வேறு எங்குச் செல்வதையும் விரும்பாதவர்.

திருவிழாக்காலங்களில் ஏழைபாழைகளுக்கு வழங்குவதற்காக அவர் இருப்பிடத்தில் துணிமணி மூட்டைகள் காட்சியளிக்கும். ஆனால், பிறிதொரு  சமயங்களில்  மாற்று உடையில்லாமல் இடுப்பில்  போர்வையைக் கட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளையும் அருள்பணியாளர்கள் சிலர் பார்த்து வியந்திருக்கின்றனர்.

மக்களோடு மக்களாய் வாழ்ந்தார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளில்மேய்ப்பர்கள் ஆடுகளின் வாசனையில்தான் வாழவேண்டும்என்று கேட்டுக் கொண்டார். அந்தச் சொல்லாடல் தந்தை கார்மல் அடிகளாருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது.   

கோட்டாறு பங்குத்தளத்தில் முதல் பணியைத் தொடங்கிய அருள்தந்தை பின்னர் மிடாலம், இராசாக்கமங்கலம்துறை, வாணியக்குடி, காரங்காடு, கீழ இராமன்புதூர், கீழ் ஆசாரிபள்ளம், கடையால், ஆரோக்கியபுரம், நல்லாயன்புரம், சூழால், புதுக்கடை, மற்றும் கொட்டில்பாடு ஆகிய பங்குத்தளங்களில் தனது இறைப்பணியைச் செவ்வனே செய்து முடித்திருந்தார்.

பிட்டுக்கொடுத்த அப்பத்திற்கு அப்பால் பங்கு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து, பங்கு மக்களின் இதயத்தைத் தொட்டெடுத்து வாழ்ந்தார். அனைவரின் வாழ்க்கைப் பின்னணியையும் உணர்ந்து அதற்கேற்றவாறு செயலாற்றியவர்

புற்று நோயால் பாத்திக்கப்பட்ட கடையாலுமூடைச் சேர்ந்த அந்த அம்மையார் மேலும் கூறுகையில், “ஆண்டவன் புண்ணியத்துல எங்கக் குடும் பத்துக்கு எந்தக் குறைவும் கிடையாது. அதனால பாதர்கிட்டயிருந்து எந்த உதவியும் எங்களுக்குத் தேவைப்படலை. ஆனா, எங்க ஊர்ல இருக்கிற இல்லாத சனங்களைத் தூக்கிப்பிடிச்சவரு இவருஎன்று கூறினார்பங்குமக்களைத் தன் நெஞ்சாங் கூட்டுக்குள் வைத்துக் காத்துக்கொண்டதால்தான் இன்றுவரைக்கும் அந்த மக்கள் அவரைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.  

1956-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை மெய்யங்கடவுளை மையமாகக் கொண்டு மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பாடு ஆடுகளோடு கழிந்தது. தான் வேளாண் நிலத்தில் மந்தையோடு பட்ட அனுபவங்களின் பிறிதொரு தொகுப்பாக மறைபரப்புப்பணி அமைந்ததை  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

இறையியல் தத்துவங்களை எதார்த்தமாக மக்களிடம் எடுத்துச்சென்றார். சென்ற இடத்திலெல்லாம் தனது அன்பு  முத்திரையைப்  பதித்துப் பங்கு மக்களின் வாழ்க்கையோடு சங்கமித்தார்.

எல்லா நிலையிலும் சிரிக்கத் தெரிந்த முகம்!

எந்த நிலையிலும் கொடுக்கத் தெரிந்த குணம்!

எந்த நிலையிலும் தன்னைத் தாழ்த்தத் தெரிந்த மனம்!

இன்று நூறாண்டை முடித்து நூற்றியோராவது ஆண்டில்  அடியெடுத்து  வைக்கும் அருள் தந்தை கார்மல் அவர்களை அனைவரும்   கொண்டாடுவோம்.