news
சிறப்புக்கட்டுரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா?

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே ரேசன், ஒரே தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டம்; அதுவே பின் வழியேஒரே தலைவன்என்ற அதிபர் ஆட்சி முறைக்குத்  திசைவழி காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கூறுகிறார்: “ஜனநாயகம் என்பது அந்நிய சரக்கு.”  ஆம். என்றுமே ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அங்கீகரித்தது இல்லை. அதன் அடிப்படையை  மாற்றத் துடிக்கிறார்கள். புதுப் புது வழிகளைத் தேடுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா... 2014 முதல்ஒரே நாடு, ஒரே தேர்தல்என்றது. இதையே தன் தேர்தல் அறிக்கையிலும் அறிவித்தது. 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பா...விற்குத் தனிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்துகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்குறித்து  ஆராய, கொண்டுவர, முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட ஒரு குழுவை மோடி  அரசு அமைத்தது.

குழுத் தலைவராக கோவிந்த் நியமிக்கப்பட்டது  மரபு மீறல் என்ற விமர்சனம் எழுந்தது. ‘முப்படைகளின் தலைவராக இருந்தவரை, ஒரு முன்னாள் முதல் குடிமகனைச் சாதாரண குழுவிற்குத் தலைவராக்குவதா?’ என்று கேள்விகள் பிறந்தன. 27,000 பொதுமக்களிடமும் 47 அரசியல் கட்சிகளிடமும் அக்குழு  கருத்துகள் கேட்டதுஏழு முக்கியப் பிரச்சினைகளை ஆராய்ந்தது. பல போலி இணையதள வாக்கெடுப்புகள் எனக் களேபரம் நடத்தியது. தன் 18,626 பக்க அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது. ஒரு நகைப்பிற்குரிய செய்தியை, ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த குழு தன் அறிக்கையில் வைத்திருந்தது. அது தங்கள் பிதாமகன் மோடியை மறந்துவிட்டு, தேசத்தில் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறையும் என உண்மையும் பேசியது.

அறிக்கையைப் பெற்ற வேகத்தில் ஒன்றிய அமைச்சரவை  பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கி விட்டது. அதை மக்களவைமாநிலங்களவையில் ஒன்றிய அரசு வைக்க வேண்டும், சட்டமாக்க வேண்டும். பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்ட சபைகளும் ஒப்புதல் வழங்க  வேண்டும்.

பா... ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்சட்டத் திருத்தம்  கொண்டு வர அரசியலமைப்புச் சட்டத்தில் 83 மற்றும் 172-இன் பிரிவுகளைத் திருத்த வேண்டும். ஆறு அல்லது  ஏழு திருத்த மசோதாக்களின் அடிப்படையில் ஒரே நாடு, ஒரே தேர்தலைக் கொண்டு வந்துவிடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு 362 வாக்குகள் தேவை. ஆனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு இருப்பதோ 292 வாக்குகள்தான். மாநிலங்கள் அவையிலும் இதே நிலைதான். மூன்றில் இரண்டு பங்கு 164  வாக்குகள் தேவை. ஆனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு இருப்பதோ 112 வாக்குகள்தான். என்ன மாயம் செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரே நாடு, ஒரே தேர்தல்கொண்டு வர பா... இரண்டு முக்கியக் காரணங்களைச் சொல்கிறது: ஒன்று, ஆண்டு முழுவதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், அரசு இயந்திரம் முடங்குகிறது. எதிர்க்கட்சிகள் திருப்பிக் கேட்கிறது: ‘புதிய திட்டங்கள் அறிவிக்கத்தானே தேர்தல் நடத்தை விதிகள்? அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே! கடந்த முறை பாராளுமன்றத் தேர்தல்கள் மட்டும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அன்று கூறிய பதில்தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்புப் பணிகள் பற்றாக்குறைஎன்பது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் போது இன்று எவ்வாறு அப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்?

இவர்களால் தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்படும், இலட்சக்கணக்கில் பங்கு பெறும் நீட், என்..டி. போன்ற தேர்வுகளையே  முறையாக  நடத்த முடிவதில்லையே என்ற வாதம் வைக்கப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவர பா..சொல்லும் இரண்டாவது காரணம், தேர்தல் செலவுகளைக் குறைக்கலாம் என்பது. பா... முன்பு ஒரே நேரத்தில் ஒன்றிய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்றது. தற்போது  உள்ளாட்சித்  தேர்தல்களை மட்டும், பொதுத் தேர்தல் முடிந்து 100 நாள்கள் கழித்து நடத்தலாம் என இறங்கி வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதிய 15 இலட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களும், அதே அளவு விவிபெட்களும் புதிதாக வாங்க வேண்டும். அவை ஒன்றின் விலை 17 ஆயிரம் ரூபாய் என்றால், எத்தனை கோடிகள் எனக் கேட்டால் மயக்கம் வருகிறது. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கும், விவிபெட்களுக்கும் ஆயுள் 15 வருடங்கள்தான்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் செலவு 3,870 கோடி. அது ஒன்றிய அரசின் செலவில் 0.02 சதவிகிதம் என்பது கணக்கீடு. ஒரு 95 கோடி மக்கள் தங்கள் சனநாயகக் கடமையைச் செய்ய இத்தொகை சிறிதளவுதான்  என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.. ஸ்டாலின் ஒரே நாடு, ஒரே தேர்தல் வழியே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்ற தந்திரமும் இதில் உள்ளது என்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது மாநிலங்களில் சட்டப் பேரவைகள் கலைக்கப்படும்  அல்லது பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்ற கூத்தும் உண்டு. மாநில அரசிற்கு முன்கூட்டியே சட்டப் பேரவையைக் கலைக்கும் மாநில அதிகாரம் பறிபோகிறது.

இந்தியாகூட்டணிக் கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா...வின் மறைக்கப்பட்ட செயல் திட்டங்கள் குறித்து  ஐயங்களை  எழுப்புகிறார்கள். ஒன்றிய அரசிற்கான தேர்தல்களும், மாநில அரசுகளுக்கான தேர்தல்களும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து நடக்கிறது. அதன் அடிப்படை ஒரே நாடு, ஒரே தேர்தலால் அடிபடும். கூட்டாட்சித் தத்துவம் விலக்கிக்கொள்ளப்படும். வருங்காலங்களில் மாநிலங்களே இல்லாத மாவட்டத் தலைவர்களின் ஒற்றை ஆட்சி முறை மாவட்டங்களில் நடத்தப்பட்டு, ஒரே தேசமாக அறிவிக்கப்படும். அதிபர் ஆட்சி முறை கொண்டு வரப்படும். இந்திய அரசியல் சாசனம் தூக்கி  எறியப்படும். மாநிலக் கட்சிகள் முடக்கப்படும். தேசத்தின் பன்முகத்தன்மைஒரே நாடு, ஒரே தேர்தலால்கேள்விக்குறியாக்கப்படும். ஒன்றிய அரசின் தொடர் அதிகாரக் குவிப்பைஒரே நாடு, ஒரே தேர்தல்உறுதிப்படுத்தும். ஒன்றியத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகளை, தேர்தல்களைக்   கேள்விகுறியாக்கும்.

அரசியல் சாசன நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான சஞ்சய் ஹெக்டேஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது அதிபர் முறை சனநாயகம் போல் ஆகிவிடும்என்கிறார். ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைச் செயல்திட்டமாக்கி, அதை நோக்கியே பா... தன் சதுரங்க ஆட்டக் காய்களை  நகர்த் துகிறது. மோடி என்ற ஒற்றைத் தலைவனைக் கட்டமைக்க முயல்கிறது. சனநாயகம், அரசியலமைப்பு என்பதைக் கேள்விகுறியாக்குகிறது

தேசம் காக்க, சனநாயகச் சக்திகளான நாம் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
ஒரே வழி இயேசு மட்டுமே!

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் இறை அமைதி உரித்தாகுக!

கடவுள் நம்மோடு உள்ளார்என்பதை நமக்கு உணர்த்தும் இம்மானுவேலும் இறைமைந்தனுமான இயேசு பாலனின் பிறப்பைக் கொண்டாடி நாம் தொடங்கியிருக்கின்ற யூபிலி - 2025 ஆண்டினை மையப்படுத்தி மூன்று கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

1. இயேசுவே எதிர்நோக்கு

நம்மைச் சுற்றியுள்ள எண்ணற்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் வருகின்ற யூபிலி ஆண்டின் மையக்கருத்தாகஎதிர்நோக்குஎன்ற பொருளையே நம் திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துள்ளார். உரோமை நகரில் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் நம் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவின்போது கொடுக்கப்பட்டSpes non Confunditஎன்ற தனது அதிகாரப்பூர்வத் திருப்பீடச் சுற்றறிக்கையில், “நம்பிக்கையோ, எதிர்நோக்கோ பொய்க்காது (உரோ 5: 5) என்னும் தூய பவுலடியாரின் வார்த்தையோடு தொடங்குகிறார். இந்தக் கிறித்தவ எதிர்நோக்கு என்பது நம்முன் நிற்கும் கணக்கிலடங்காச் சவால்களுக்கு மத்தியிலும், எதிர்காலத்தைக் குறித்த நம்பகமற்ற எதார்த்தத்திற்கு மத்தியிலும் நல்லதே நிகழும் என்னும் எதிர்பார்ப்போடு காத்திருப்பதைக் குறிக்கிறது.

கிறித்தவ எதிர்நோக்கு என்னும் புண்ணியம் நம்பிக்கை, அன்பு என்ற ஏனைய பிற புண்ணியங்களோடு உள்ளூறக் கலந்ததாக உள்ளது. இவை நாம் எதை எதிர்நோக்கியிருக்கிறோமோ அதன்மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன. எதிர்நோக்கே நமக்கு மீட்பை அருள்கிறது (உரோ 8: 24).

கிறிஸ்துமஸ் விழாவைப் பொருளுள்ள வகையில் கொண்டாட நாம் திருவருகைக் காலத்தில் பயணித்தோம். இந்தத் தயாரிப்பு வார்த்தை மனுவுரு ஏற்ற மெசியாவின் வருகையை ஒட்டிய நமது எதிர்நோக்கின் காத்திருப்பை அடையாளப்படுத்தியது. இந்த மனுக்குலத்தின் ஒரே எதிர்நோக்கும் நம்பிக்கையுமான அந்த ஒரே மெசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினர்கள் தொடங்கி, தூய திருமுழுக்கு யோவான் வரை அனைவரும் அறிவித்தனர். அந்த ஒரே மனிதரோடு, நம் மீட்பின் காரணரும் ஊற்றுமான இறைமகனோடு நாம் யூபிலி ஆண்டு 2025-இல் நுழைகிறோம். இது வரவிருக்கின்ற 2033 -ஆம் ஆண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட நமது மீட்பின் 2000 -ஆம் யூபிலியை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. உயிர்த்த இயேசுவே நம் எதிர்நோக்கு (காண். 1 கொரி 15:12). நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் இருள் நிறைந்த போராட்டங்களுக்கு இடையே, இயேசுவின் தோழமையில் நாம் மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணம் எதிர்நோக்கோடு எதிர்காலத்திற்குள் நுழைய நம்மை அழைக்கிறது.

2. இயேசுவே வாயில்

கடந்த 2015-இல் நாம் கொண்டாடிய சிறப்பு யூபிலி ஆண்டினைப்போல் அல்லாமல், வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டு யூபிலிக்கு உரோமையில் உள்ள புனிதக் கதவுகள் மட்டுமே திறக்கப்படும் என்பதை வத்திக்கான் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவற்றைத் திறந்து வைப்பார். முதலாவதாக, உரோமையில் உள்ள தூய பேதுரு பேராலயத்தின் யூபிலி புனிதக் கதவினை டிசம்பர் 24 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழிப்புத் திருப்பலியின்போது திறந்து வைத்துள்ளார். இதனால் 1500-ஆம் ஆண்டு தொடங்கி தொன்றுதொட்டு திரு அவை வரலாற்றில் திருத்தந்தையர்கள் அறிவித்த 25 -ஆம் அல்லது 50 -ஆம் யூபிலி ஆண்டுகளின் வரிசையில், 2025-ஆம் யூபிலி ஆண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 29 -ஆம் தேதி புனித யோவான் இலாத்தரன் பேராலயத்திலுள்ள புனிதக் கதவைத் திறந்துள்ளார். அதே நாளில், உலகளாவியத் திரு அவையின் அனைத்து மறைமாவட்டங்களிலும் அந்தந்தத் தல ஆயர் மறைமாவட்டப் பேராலயத்திலும், இணைப் பேராலயத்திலும் திருப்பலி நிறைவேற்றி யூபிலி ஆண்டினைத் தொடங்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார் (ஆயினும் இது அந்தந்தத் தலத்திரு அவையின் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம்).

அன்னை மரியா - இறைவனின் தாய்என்ற மாபெரும் பெருவிழாவைக் கொண்டாடும் ஜனவரி 01-ஆம் தேதி உரோமையிலுள்ள மரியன்னை பேராலயத்திலும், ஜனவரி 05 -ஆம் தேதியன்று புனித பவுல் பேராலயத்திலும் புனிதக் கதவு திறக்கப்படும். இந்த நான்கு புனிதக் கதவுகளையும் தாண்டி, உரோமையிலுள்ள ரெபிப்பியா சிறையிலும் புனிதக் கதவு திறக்கப்படும்.

சரி, திரு அவையின் பாரம்பரிய முறைப்படி யூபிலி ஆண்டில் புனிதக் கதவைத் திறப்பதன் நோக்கமும் காரணமும் என்ன? யோவான் நற்செய்தியில், இயேசுகதவுஎன்று அடையாளப்படுத்தப்படுகிறார். “நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வர் (யோவா 10: 9). இந்தநானே வாயில்என்னும் கூற்று, யோவான் நற்செய்தியில்நானே…’ என்று இயேசு மொத்தமாக ஏழு முறை அறிவிப்பதில் மூன்றாவது அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தநானே…’ அறிவிப்புகள் இயேசுவின் தனித்தன்மைக்கும் அடையாளத்திற்கும் குறிக்கோளுக்கும் சான்றாகக் கருதப்படுகின்றன. இதன் வழியாக மீட்பின் கருவூலமாகவும் அடித்தளமாகவும் விளங்கும் இயேசு, காணப்படுகின்ற கதவுகளுள் ஒருவராக அல்ல; மாறாக, ‘ஒரே ஓர் ஒப்பற்ற கதவுஅவர் மட்டுமே என்னும் கூற்று புலப்படுகிறது. மேலும், பசும்புல் வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும் நல்ல ஆயனாக மட்டுமல்ல, மீட்பு என்னும் ஆட்டுக் கொட்டிலுக்குள் நுழைவதற்கான ஒரே கதவும் அவரே என்பதும் இதனால் வெளிப்படுகிறது (யோவா 10: 9).

முடிவில்லாத வாழ்வை நாம் பெறுவதற்கான ஒரே வழி இயேசு மட்டுமே (யோவா 3:16). மாற்று வழி வேறு ஒன்றும் இல்லை. ‘நானே கதவுஎன்று அவர் சொல்வதிலிருந்து அவரே நம் மீட்பின் அடித்தளம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொள்பவரும் (எபி 11: 6), பாவங்களிலிருந்து மனந்திருந்துபவரும் (லூக் 13:3) அவருடையமந்தையில்பங்கேற்று, இயேசு என்னும்கதவின்வழியாக நுழைந்து மீட்பினைக் கண்டுகொள்வார். கிறிஸ்துவின் சீடர்களான நமக்கு அவரே ஆயனாகவும் ஆட்டுக் கொட்டிலின் வாயிலாகவும் விளங்கி, நம்மை அனைத்து நன்மைகளாலும் நிறைக்கின்றார்.

எனவே, கிறிஸ்துமஸ் திருவிழிப்புத் திருநிகழ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ள புனிதக் கதவு, 2025-ஆம் யூபிலி ஆண்டில் கிறிஸ்து என்னும் இம்மானுவேலோடு நாம் புனித ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதையும், இறையருளின் மீட்பின் ஆதாரமான இயேசுவோடு புனித வாழ்வுக்குள் நுழைகிறோம் என்பதையும், நம் அழைத்தல் வாழ்வுக்கு அடித்தளமான புனிதக் கதவாகிய இயேசுவோடு நுழைகிறோம் என்பதையும் இது எண்பித்துக் காட்டுகிறது. எனவே, இந்த யூபிலி ஆண்டு இறை இரக்கத் தையும், இறை ஆசிரையும் நம்மீது அபரிமிதமாகப் பொழியும் தருணம் என்றால் அது மிகையாகாது.

3. இயேசுவே அகரமும் னகரமும்

தாமேஅகரமும் னகரமும்என்று இயேசு திருவெளிப்பாட்டு நூலில் 1: 8, 21: 6 மற்றும் 22: 13 ஆகிய பிரிவுகளில் தம்மைத்தாமே அடையாளப்படுத்துகிறார்.           A மற்றும் ஆகிய எழுத்துகள் கிரேக்க மொழியின் எழுத்து வரிசையில் முதலும் முடிவுமாக விளங்குகின்றன. ஒரு பொருளின் முழுமையைக் குறிக்கவும், தொடக்கத்தையும் முடிவையும் அடையாளப்படுத்தவும் யூத சமய குருக்களிடையே கிரேக்க எழுத்துகளான     மற்றும் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் இயற்கையாகவே இருந்தது. இதைத் திருவெளிப்பாட்டு நூல் 22:13-இல், “அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானேஎன்று இயேசுதாமே சொல்வதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வோர் ஆண்டும் நாம் கொண்டாடும் திருவருகைக் காலம், நாம் தொடங்குகின்ற புதிய திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. அத்தோடு, பாஸ்கா மறைநிகழ்வுகளைக் கொண்டாடி தியானிக்கும் புதிய சுழற்சியை நாம் தொடங்குகின்றோம். சிறப்பாக இந்த யூபிலி ஆண்டில், கிறிஸ்துமஸ் விழாவின்போது நம் திருப்பயணத்தைத் தொடங்கி, கிறிஸ்து என்னும் புனிதக் கதவின் வழியாக யூபிலி ஆண்டில் நுழைந்து, அகரமும் னகரமுமான கிறிஸ்துவில் நம் நிறைவைக் காண்பது சாலச்சிறந்த அம்சமாக அமைந்துள்ளது.

ஏதென்ஸ் நகரின் அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று  “அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் (திப 17: 28) என்றுரைத்த வார்த்தைகள் மேற்கூறிய கருத்தை உண்மையாக்குகின்றன. இயேசுவே தொடக்கமும் முடிவும்; அவரே மீட்பும் அனைத்தும்; அவரே கடவுள்முன் நமக்குத் தீர்வு அளிப்பவர்; அவரே நம்மைப் புனிதப்படுத்தி அர்ச்சிப்பவர். இந்த 21-ஆம் நூற்றாண்டின் சவால்களின் பின்புலத்தில், இதுவே நம் சான்று வாழ்வுக்கான அழைப்பும் அறைகூவலும்! எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இருக்கவும், கிறிஸ்து என்னும் புனிதக் கதவுக்குள் நுழையவும், ‘அகரமும் னகரமுமாகக்கிறிஸ்துவில் நமது மண்ணகப் பயணத்தின் நிறைவை எய்திடவும் நாம் அழைக்கப்படுகிறோம்.

மனுவுரு ஏற்றுள்ள கிறிஸ்து இயேசு என்னும் எதிர்நோக்கு, புனிதக் கதவு என்னும் நல்ல ஆயன், ‘அகரமும் னகரமுமானஇறைமகன் 2025-ஆம் ஆண்டின் புதிய தொடக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்வாராக! உங்கள் அனைவருக்கும் 2025-ஆம் ஆண்டு ஒளிமயமான ஆண்டாக அமையட்டும்!

+ ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

news
சிறப்புக்கட்டுரை
‘நம் வாழ்வு’ என் நெஞ்சுக்கு நெருக்கமானது!

பொன்விழா காணும்நம் வாழ்வுவார இதழின் என் நெஞ்சுக்கு நெருக்கமான வாசகப் பெருமக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் புலர்ந்துள்ள புத்தாண்டின் இனிய நல் வாழ்த்துகளும் ஆசிரும்!

1975-ஆம் ஆண்டு பிறப்பெடுத்தநம் வாழ்வுஎன்னும் இந்த அழகிய நங்கை இன்று தனது 50-வது அகவையை எட்டிப் பிடித்திருக்கிறாள். காலங்கள் உருண்டோடினாலும், அதன் அழகும் வனப்பும் வசீகரமும் சிறிதேனும் குறையாது பேரழகு நங்கையாய் அனைவரையும் தன் இனிய தமிழால், தெளிந்த சிந்தனையால், ஆழமான கருத்துகளால், கூர்மையான தொலை நோக்குப் பார்வையால் இளமைத் துடிப்போடு இன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறாள்.

திரு அவைக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உண்மையையும் நீதியையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உரிமைக்கான குரலையும் பதிவு செய்யும் நோக்குடன் நன்மைகளை மேற்கோள்காட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டி எந்தச் சூழலிலும், எவருக்கும் எவற்றிலும் சமரசமின்றி உண்மையை உரக்கச் சொல்லிநல்லவர்களின் நாடித்துடிப்பாகஇவள் பயணித்து வருவது இவள் கண்ட சாதனை.

50 ஆண்டு அகவை என்பது எளிதான சாத்தியக் கூறு அல்ல; கரடுமுரடான பாதைகளை ஏற்ற இறக்கங்களோடு சவால்களைச் சந்தித்து நீதியின் தடத்தில் தடம் பிறழாது, யாவரும் போற்றும் வண்ணம் இன்னும் துடிப்போடு இவள் பயணித்துக் கொண்டிருப்பதுதான் இவள் கொண்ட பெருமை! இத்தகைய பயணத்தின் வெற்றி விழா பொன்விழாவாகக் கொண்டாடப்படும் இத்தருணத்தில், இவள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்பது நல்லதெனக் கருதுகிறேன்.

1970-களிலேயே தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆயர்கள், பேராயர் பெருமக்கள் கிறித்தவ மக்களுக்குச் சமூக மற்றும் அரசியல் தளத்தில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பதைக் காலத்தின் குறியீடாகக் கணித்திருக்கிறார்கள். அவர்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ‘கிறித்தவர்களை அரசியலுக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்கும்அறிமுகம் செய்யும் இலக்கோடு மக்களைச் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் ஆற்றல்படுத்தும் (Empower) நோக்குடன் இவ்விதழ் தொடங்கப்பட்டிருப்பது இதனுடைய பயண இலக்கைக் கூர்மைப்படுத்துகிறது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சற்றேனும் தளராது தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதேநம் வாழ்வின்முதல் வெற்றி!

இப்பயணத்தில்நம் வாழ்வுஇதழின் மேனாள் ஆசிரியர்கள், வெளியீட்டுச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய ஆயர் பெருமக்கள், இதன் தொடக்கக் காலத்தில் களப்பணியில் ஈடுபட்ட பெரியவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் யாவரும் இப்பெருமைக்குரியவர்களே!

இந்த இதழை ஏழு ஆண்டுகள், மூன்று மாதங்கள் இதன் ஆறாவது முதன்மை ஆசிரியராகப் பயணித்து வழிநடத்திய காலத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

அத்தருணத்தில் தமிழ்நாடு கடந்து உலகெங்கும் வாழும் எல்லாத் தமிழர்களின் கரங்களிலும் இவ்விதழ் சென்றடைய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். பல்வேறு மண்டலங்கள் உருவாக்கப்பட்டதும், துணை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதும் பொது இதழ் விற்பனை நிலையங்களில் இவ்விதழ் விற்பனைக்குக் களம் கண்டதும் வாசகர் வட்டங்கள், எழுத்தாளர் பயிற்சிப் பட்டறைகள், புதிய நூல்கள் வெளியீடுகள் எனப் பல்வேறு முயற்சிகள் நடந்தேறியதையும் எண்ணிப் பார்த்து மனநிறைவு அடைகிறேன். அத்தகைய பணிகள் இன்றும் தொடர்ந்து வருவதைக் காணும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வணிகமயமாகிப் போன பத்திரிகை உலகில், அரசியல் கட்சிகளைச் சார்ந்து மதிப்பீடுகளைக் காற்றில் பறக்கவிட்டு  விலைபோன பத்திரிகைகள் மத்தியில், ‘நம் வாழ்வுநம் ஆண்டவர் இயேசுவின் உரிமைக்குரலானஉண்மையை எடுத்துரைப்பதே எனது பணி, ‘உண்மைக்காகவே நான் அர்ப்பணம் ஆகிறேன்என்ற விழுமியங்களை உள்வாங்கி, உண்மையை உரக்கச் சொல்லி வருவது இவ்விதழின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அத்தகைய சிந்தனையில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மட்டுமல்லாது, மற்ற மத நண்பர்களும் சமூகச் சிந்தனையாளர்களும், ஏன் இறை நம்பிக்கையற்றவர்களும் கூட நம்முடன் பயணிப்பதும் இவ்விதழின் கருத்துகளை உள்வாங்குவதும் நீதிக்கான குரலில் நம்மோடு துணை வருவதும் இந்த இதழ் கண்ட சாதனையாகவே நான் கருதுகிறேன்.

இந்தச் சாதனைப் பட்டியல் நீள வேண்டும், வாசகர்கள் கூட வேண்டும், பத்திரிகை வளர வேண்டும், எல்லாருடைய கைகளிலும் இது தவழ வேண்டும், பலருடைய சிந்தனைகளில் மாற்றம் காண வேண்டும், மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் இளையோர் மத்தியிலும், அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் மலர வேண்டும் என்பதே  என் ஆவல். அத்தகைய எண்ணத்தில்நம் வாழ்வுஇதழின் பயணம் தொடர்ந்துகொண்டிருப்பது சமூக மாற்றத்திற்கான உறுதியான நம்பிக்கையைத் தருகிறது.

இத்தருணத்தில், இந்த அழகிய மங்கைக்கு மணிமகுடம் சூட்டும் வண்ணம் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் திருக்குழுமமும், தமிழ் நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம்நம் வாழ்வுபதிப்பகமும், வாசகப் பெருமக்களும் சந்தாதாரர்களும், ஒன்றிணைந்து பொன்விழா எடுத்து மகிழ்வதைத் தகுந்த நிகழ்வாகக் கருதுகிறேன்.

இம்மாதம் சனவரி 22, புதன்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு மதுரை - ஞானஒளிவுபுரம் தூய தே பிரித்தோ பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் பொன்விழாவிற்குநம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றேன்!

அணி திரண்டு வாரீர்! நல்லவர்களின் நாடித் துடிப்பான நம் வாழ்வை நம் இதயத்துடிப்பாக்குவோம்! உரிமைக்குரலான இவ்விதழை உலகோர் அனைவரும் காண உயர்த்திப் பிடிப்போம்!

அன்புடன் அழைக்கும்

மேதகு முனைவர் லூர்து ஆனந்தம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர்

தலைவர் - நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம், தமிழ்நாடு ஆயர் பேரவை.

news
சிறப்புக்கட்டுரை
விடுதியில் அவர்களுக்கு இடமில்லை!

ஊனாகி உயிராகி ஒளியானவர், வானாகி வளியாகி வழியுமானவர்! ‘நானே உலகின் ஒளிஎன்றவர், கோனாகி தாவீதின் குடிப்பிறந்தார். விண்ணுக்கு ஒளியாகி வழிகாட்டிட, வாக்கு மனு உருவாக மாபரன் இயேசு மண்ணுக்கு வந்தார். மனிதன் தெய்வமாக, தெய்வமே மனிதனாகப் பிறந்த நாள். மரியன்னை பெற்றெடுத்த மனிதநேயம் இப்பூமியில் பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா!

இயேசுவின் பிறப்பு நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட ஆள்கள், பொருள்கள், உரையாடல்களில் பொதிந்திருக்கும் சில உண்மைகளைப் பற்றி காண்போம்.

இயேசு பிறந்த இடம்

விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை (லூக் 2:7). வேறு யாருக்கு விடுதியில் இடம் இருந்தது? சீசரின் ஆள்களுக்கும் அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும்தான். ஆனால், இந்த சூசை, மரியா ஏழைக் குடும்பத்திற்கு இடமில்லை. இடமில்லை என்று சொல்லிவிட்டால், இறைவாக்கினர்கள் இயேசு பிறப்புப் பற்றி முன்னறிவித்த செய்திகள் வரலாற்றில் இடம் பெறாமல் போய்விடுமா என்ன?

அங்கு மாடடையும் தொழுவத்தில் இடம் கிடைக்க, வந்து விடுகிறார் இயேசு. ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு இங்குதான் நடந்தேறியது. பாருங்கள், நாம் அவருக்கு இடம் இல்லை என்று சொன்னாலும், இயேசு தாம் மிகவும் நேசித்த தம் அன்புச் சீடர்களிடம், “நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் (யோவா 14:2-3) என்கிறார். மேலும், “நான் போய் இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்என்றும் கூறுகிறார். என்னே இறைப்பேரன்பு!

குழந்தை இயேசுவைச் சுற்றிய துணி

குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் (லூக் 2:12) என்று வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தார்கள். இந்தத் துணி கிறிஸ்து இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மீட்பையும், வல்லமையையும் குறிக்கிறது. 1. பிறந்தபோது வல்லமையின் துணியாகவும், 2. இயேசு வளர்ந்தபின் வல்லமையின் துணியாகவும், 3. சிலுவைப் பாடுகளின்போது உரிந்துகொள்ளப்பட்டு பகிர்ந்துகொள்ளப்படும் துணியாகவும் இருந்தது.

குழந்தையின் மீது சுற்றப்பட்ட சாதாரண துணி, இரட்சிப்பும் வல்லமையும் நிறைந்த குழந்தையின் மீது சுற்றப்பட்டதால் அதுவும் வல்லமை மிக்கதாக மாறுகிறது. அதனால்தான் 12 ஆண்டுகளாக இரத்தப்போக்குடன் போராடிய பெண் (லூக் 8:44-46) இயேசு அணிந்திருந்த ஆடையின் ஓரத்தைத் தொட்டவுடன் குணமடைகிறாள். இங்கு வல்லமையின் துணியாகக் காட்டப்படுகிறது. மேலும், சிலுவையடியில் மீட்பின் ஆடையை நாம் அணிந்துகொள்ள, தம் ஆடை அகற்றப்பட்டு ஆடையில்லாத கோலத்தில் நிற்கிறார். போர்வீரர்கள் இயேசுவின் ஆடையின் மேல் சீட்டுப் போட்டு பகிர்ந்துகொள்ள பகிர்வின் ஆடையாகவும் மாறுகிறது.

தீவனத் தொட்டி

தீவனத் தொட்டி என்பது கால்நடைகள் (மிருகங்கள்) தீனி பெற இருக்கும் தொட்டி. மனிதன் தன் பாவத்தால் தரம் தாழ்ந்து, மிருகக்குணம் பெற்றதால், மனுகுலம் சீரடைய, மனிதனின் உணவாக (நற்கருணையாக) வந்ததன் அடையாளத்தையே தீவனத் தொட்டி உணர்த்துகிறது. “வாழ்வு தரும் உணவு நானே (யோவா 6:35) என்றவர் தீவனத் தொட்டியில் உணவாகக் கிடத்தப்பட்டார்.

இயேசுவின் பாதங்களும், காலடிகளும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, பெத்லகேம் மாடடையும் குடிலில் தம் பிஞ்சுப் பாதங்களைப் பதித்தார் இயேசு. இறைவனின் பாதப்பதிவுகள் மனுகுலத்திற்குச் சொந்தமான நாள். காலங்களையும் நேரங்களையும் கடந்த இறைவன், மனித நேரங்களுக்குள் நுழைந்த இரவு இந்தக் கிறிஸ்துமஸ் இரவு. பெயர்களை எல்லாம் கடந்த இறைவன்இம்மானுவேல்என்ற பெயர் பெற்ற நாள். கி.மு., கி.பி. என்று காலங்களைப் பிரித்து, சரித்திரமே வியந்த சரித்திரம் படைக்கப்பட்ட நாள். சரித்திரத்தையே மாற்றிப்போட்ட நிகழ்வுதான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு.

மேலும், பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கண்ணீரால் நனைக்கிறார் (லூக் 7:35). அதிக மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக்கூட தனக்குத் தகுதியில்லை எனத் தன் தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். தொழுகைக் கூடத் தலைவன் யாயீர் இயேசுவின் காலடிகளில் பணிகிறார் (மாற்கு 5:33). “நமது கால்கள் அமைதி வழியில் நடக்க, விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது (லூக் 1:79) என்கிறார் லூக்கா. இறுதி உணவின்போது இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவிநான் உங்களுக்குச் செய்தது போல், நீங்களும் செய்யுங்கள்என்று (யோவா 13:14) சொல்கிறார். ஒருவர் ஒருவருடன் பணிவோடும் தாழ்ச்சியோடும் நடந்துகொள்ள வேண்டுமென்பதையே இங்குக் குறித்துக் காட்டப்படுகிறது.

இவ்வாறு ஏழை, எளிய மக்களின் வாழ்வில் தினமும் மகிழ்ச்சியைக் காண நாமும் இயேசுவைப் போல் அன்பு, அரவணைப்பு, எளிமை, இரக்கம், பணிவு, பாசம், தாழ்ச்சி, பகிர்வு போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழ்வோம். இவ்வாறு இயேசுவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும், பொருள்களும், சொற்களும் அன்பு என்ற நுண்ணிய பொருளை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. நாமும் ஏழை, எளிய மக்களோடு இணக்கமாக வாழ முயல்வோம். நம்மிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்வோம்.

எதைக் கொண்டு வந்தோம் இவ்வுலகிற்கு? போகும்போது எடுத்துக் கொண்டு போக! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்ந்து, ஆர்ப்பரிப்போடு இக்கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
பெற்றோர் இருந்தும் அநாதைகளாய்...

மகிழ்வான குழந்தை வருங்கால தேசத்தின் பெருமைஎன்றார் காந்தியடிகள். ஒரு சிறு விதைக்குள் மிகப்பெரிய மரம் ஒளிந்திருப்பது போல், சிறு குழந்தை உலகை அசைக்கும் மிகப்பெரிய தலைவராக உருவாக முடியும். கலீல் ஜிப் ரான் கூறுவதுபோல, “நாம் அவர்களுக்கு உடலைத் தரலாம்; ஆனால், அவர்களிள் ஆன்மாக்களை அல்ல. ஏனென்றால், அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வசிக்கின்றன; அதை நீங்கள் இப்போது பார்க்க முடியாது, உங்கள் கனவில் கூட இல்லை.”

ஆம், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி உயர்வார்கள் என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர்கள் உயர்ந்து நிற்கும்போது, அதைப் பார்த்து மகிழக்கூட, கனவு கண்டு உருவாக்கிய உள்ளங்கள் இல்லாமல் போகலாம். ஆனால், குழந்தைகளின் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், அவர்களோடு தொடர்புடையோர் அனைவருக்கும் மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் உண்டு என்றாலும் பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ச்சியில் முழு தார்மீகப் பொறுப்பை ஏற்பவர்களாக உள்ளனர்.

கரு உருவானதிலிருந்து தொடங்கி, சமுதாயத்திற்குப் பங்களிப்பவர்களாய் குழந்தைகளின் வாழ்வு மலர்ந்திட, மணம் பரப்பிட முழுமுதற் காரணம் பெற்றோர்களே. இக்காலத்தில் பெற்றோர்கள் இருந்தும் அநாதைகள் பெருகி வருவது, நமது மனத்தை வருத்துவதாய் அமைகிறது. இந்நூற்றாண்டில் நாம்  இழைக்கும் சமூக அநீதிகளில் இதுவும் ஒன்றாய் இருக்கிறது.

உண்மையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகங்களில், உற்றார்-உறவினர்கள் மூலம் ஓரளவு அவர்களின் உடல் உளவியல் தேவைகள் கவனிக்கப்படுகின்றது. பல குழந்தைகள் அதை நன்றாகப் பயன்படுத்தி, வாழ்வை எதிர்கொண்டு வெற்றியடைகின்றனர். ஆனால், பெற்றோர்கள் இருந்தும் குழந்தைகள் தற்கொலைக்கும், தவறான வாழ்க்கைமுறைக்கும், போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி வாழ்வை இளம் வயதிலேயே இழந்து போகின்றனர். பெற்றோர்கள் தங்கள் ஆன்ம-உளவியல் கடமைகளை உணர்ந்து மகிழ்வான குழந்தைகளை உருவாக்கி, இச்சமுதாயத்தை வளமாக்கிட வேண்டும்.

உடல் தேவைகளை நிறைவு செய்தால் போதுமா? பணவசதி படைத்த பெற்றோர்கள் பணம், பதவி, புகழ், பட்டம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளை மட்டும் மிகச் சிறப்பாக நிறைவேற்றி விட்டுக் குழந்தைகளின் ஆன்மிக-உளவியல் தேவைகளில் அக்கறை இல்லாத காரணத்தால் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன குழந்தைகள்.

தகாத உறவுகளால் உடைந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள், தாய் தந்தையின் அன்பும் பாதுகாப்புமின்றி அன்பிற்காய், அரவணைப்பிற்காய், ஏங்கி ஆதரவின்றி இளம் வயதில் கவர்ச்சிவசப்பட்டு, காதல் என்ற பெயர் சொல்லி கடைசியில்  மடியும் குழந்தைகள்... அவர்கள் அனுபவிக்கும் மனவேதனைக்கு அளவே இல்லை.

தங்களது இலட்சியத்தைப் பிள்ளைகளின் மேல் திணிப்பதால், பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது, பெற்றோர்கள் இருந்தும் தேர்வு முடிவு வந்தவுடன் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் தற்கொலைக்குச் செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது மிகவும் கொடுமையாக உள்ளது.

கண்டும் காணாமல், கடமைகளைச் செய்யாதிருக்கும் பெற்றோர்கள் அதாவது, தொலைக்காட்சி மோகம், அலைப்பேசி தொடர்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், குடிவெறி போன்றவைகளால், குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் அவர்களின் உடல், உள்ள, ஆன்மிக, கலாச்சாரத் தேவைகளைக் கண்டும் காணாமல் அவர்களின் வளமான எதிர்காலத்தை நாசமாக்கும் பெற்றோர்கள்.

பிறருடன் ஒப்புமைப் பாராட்டி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி குழந்தைகளின் முழு வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும், அவர்களின் திறமைகள் பலவீனங்கள், பலங்களைக் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்ளாது அவமதித்து பிஞ்சிலே கருகச் செய்யும் பெற்றோர்களும் உண்டு.

இவ்வாறு பெற்றோர்கள் இருந்தும் அநாதைகளாய் ஆகும் குழந்தைகள் ஏராளம். ஆன்மிக- உளவியல் ரீதியில் சிந்தித்து நமது சிந்தனைகளில் தெளிவடைவதும், அதற்கு ஏற்றபடி நமது செயல் திட்டங்களை அமைத்துக்கொள்வதும் காலத்தின் கட்டாயம்.

உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாக வந்தவர்களே அன்றி, உங்களுடையவர்கள் அல்லர்என்கிறார் கலீல் ஜிப்ரான். அவர்களிடம் நமது எதிர்பார்ப்பைத் திணிப்பது மிகப்பெரிய பாவம். ஆகவே, சிந்தனையில் மாற்றம் கொள்வோம்.

குழந்தைகளை வாழ்விக்கும் சில பரிந்துரைகள்  

குடும்பச் செபமே ஆன்மிக உளவியல் மருந்து. அனுதினமும் முடிந்தால் வாரத்திற்கு மூன்று நாள்களாவது இரவில் ஒன்றாய் உணவருந்தி, அமர்ந்து செபிக்க வேண்டும். அதன்பின் குடும்பத்தில் உள்ளோரின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கவலைகள், பிரச்சினைகளைக் கலந்துரையாடுவது மிக மிக அவசியம். அதுவே ஆன்மிக-உளவியல் மருந்து.

அன்பு அதிர்வுகள் உண்மையானவை, ஆழமானவை, ஆன்மிகமானவை. உடலளவில் உடன் இருக்க இயலாத பெற்றோர்கள் அன்பால், செபத்தால், தியானத்தால் உளவியல் ரீதியாக ஆழமான உறவும், உடனிருப்பும் செய்திட முடியும். வழியின்றித் தொலைதூரத்தில் உள்ள பெற்றோர்கள் செபத்தின் மூலம், தியானத்தின் மூலம் அன்பு அதிர்வுகளை அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு நாம் தரும் அற்புதமான உளவியல் ஊக்கமருந்தாகும்.

உற்றுநோக்குதலும், உள்ளம் கலந்துரையாடல் போன்றவையே தீர்வுகள். தங்களது பொழுதுபோக்கு அம்சங்கள், தொலைப்பேசி, அலைப்பேசி தொடர்புகள், திரைப்பட மோகம் ஆகியவற்றைத் தியாகம் செய்துவிட்டு குழந்தைகளோடு உடனிருப்பு அவசியம். ‘உடனிருப்புஉடலளவில் இருப்பது அல்ல; மாறாக, அவர்களின் ஆன்மிக உளவியல், கலாச்சாரச் சமுதாயத் தேவைகளை உற்றுநோக்கி அதை நிறைவேற்றுவது!

பெற்றோர் இருந்தும் குழந்தைகள் அநாதைகளாவதைத் தவிர்த்திடுவோம்! இறைவன் கொடுத்த  தெய்வங்களை வாழவைப்போம்!

news
சிறப்புக்கட்டுரை
எங்கே பிறப்பார் இயேசு?

இயேசுவின் பிறப்பு மனுகுலத்திற்கு மாபெரும் நற்செய்தியாக விளங்குகிறது. இயேசுவின் பிறப்பு ஒட்டுமொத்த மானுடத்திற்கும் இறைவன் அளித்த கொடை. இதனை வெறுமனே மதம் சார்ந்த விழாவாகக் குறுகிய வட்டத்திற்குள் சுருக்குதல் நீதியாகாது. இயேசு மதங்களுக்குள் கட்டுப்பட்டு பிறந்தவர் அல்லர். கிறிஸ்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான மீட்பாகப் பிறந்தார்.

தெருத்தெருவாகப் பஜனைகள், திருவருகைக் காலத் தியானம், ஒப்புரவு அடையாளம், கிறிஸ்து பிறப்புக்கு முன் அலங்காரங்கள், குடில்கள், பரிசுப் பொருள்கள், பட்டாசுகள், பலகாரங்கள் என எத்தனையோ செயல்கள் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி இயல்பாக வருடந்தோறும் நடைபெறுகின்றன. ஆனால், கிறிஸ்து பிறப்பு விழா இப்படிக் கொண்டாடப்படுவதை இயேசு விரும்புவாரா? மனமாற்றமில்லாத கொண்டாட்டங்களை இயேசு விரும்பவில்லை. மனமாற்றத்தைத்தான் இயேசு விழாவாகக் கொண்டாட விரும்புவார்.

இயேசுவின் உடனிருப்பால் சக்கேயு மனம்மாறி அதைத் தன் செயலின் வழியாக வெளிக்காட்டினார். அதன் விளைவாக, சக்கேயுவுக்குப் புதுவாழ்வு கிடைத்ததுநாம் கொண்டாடும் கொண்டாட்டம் இயேசுவை நம்மில் பிறக்கச் செய்கிறது என்றால், நம்மில் இன்னும் ஏன் எந்த மாற்றமும் ஏற்படவில்லை? நமது பக்தி முயற்சிகள், திருப்பலிக் கொண்டாட்டங்கள் எல்லாம் அடுத்திருக்கின்றவரோடு நல்லுறவில் வாழ இயலவில்லையென்றால் பயனற்றதே.

சமுதாயத்தில் சுதந்திரமாக வாழமுடியாமல் குறிப்பிட்ட இன வரையறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் இருக்கின்றனர். தங்களின் அடிமை நிலையைக் கூட உணர இயலாமல், தொடர்ந்து  தங்களுக்கான உரிமைகளைக் கேட்கத் துணிவின்றி காலம் நகர்த்துகின்றனர். ஒருவர் பயன்படுத்தித் தூக்கி எறிந்த குப்பையைப் புதையலெனச் சேகரித்து அதை விற்று வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதரும் வாழ்கின்றனர். ஆதரவற்ற இல்லங்கள், இது போக வீட்டில் வைத்துக் கவனிக்க இயலாத தொற்றும் நோய் தாக்குதல் உள்ளவர்களைக் கவனிக்கும் இல்லங்களில் வசிப்போர், சிறைகளில் வாழ்வோர், தொடர் இழப்புகள், போர்கள், இயற்கைப் பேரிடர்கள் இவற்றினால் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்போர் என இயல்பாக வாழ இயலாத பலரும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு நினைத்ததுபோல் வாழும் வசதி கிடையாது. இச்சூழலில், குறிப்பிட்ட மக்கள் மட்டும் கொண்டாடுவதும், மற்றவர்கள் ஏக்கத்தில் வருந்துவதும்  கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டமாகுமா?

நம் இதயம்தான் இயேசு விரும்பும் கோவில். இவ்விதயக் கோவிலை அழகுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். அதைச் செய்யாமல், வெறுமனே வெளியிடங்களில் அழகான, அலங்காரச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறந்த கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டமாக அமையாது.

இயேசுவின் பிறப்பு அனைவருக்குமான நற்செய்தியாகும். ஆனால், நமது பாரம்பரியமான செயல்பாடுகளால் இயேசுவின் பிறப்பை ஒருசில வரையறைகளுக்குள் குறுகச் செய்துவிட்டோம். அனைத்து மக்களும் இணைந்து சகோதர உணர்வோடு விழாக்களைக் கொண்டாடும்போதுதான் விழா அர்த்தம் பெறுகிறது.

இணைந்து வாழும் மனிதரிடையேதான் இறைவன் பிறக்கின்றார். இதயம் இணைந்து மகிழும்போதுதான் அவர் நம்மில் நிறைகின்றார். வெற்று ஆடம்பரங்களைத் தவிர்த்து அர்த்தமுள்ள விதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட முயல்வோம். கிறிஸ்துவை நம் இதயக்குடிலில் ஏற்றுத் தாலாட்டி மகிழ்வோம்.