அமெரிக்காவின் இரகசியமாகத் தாக்கும் 13 விமானங்கள், 11,400 கிலோ மீட்டர் பறந்து ஈரானின் அணு உலைகள் உள்ள இடத்தில் குண்டு மழை பொழிந்து தகர்த்துவிட்டன. அதேபோல நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டுகள் வீசப்பட்டு மற்றோர் அணு உலையும் தகர்க்கப்பட்டது. இத்தகைய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கருவிகள் பயன்படுத்தப்பட்டு இன்றைய போர் முறையே மாறிவிட்டது. இந்த விமானங்களில் ஆறு குண்டுகள் மட்டும்தான் வீசின. மற்றவை எதிரியை ஏமாற்றுவதற்குப் பயன்பட்டன. இவற்றை இயக்கியவர்கள் முகம், ஒரு பெண் விமானியைத் தவிர, நமக்குத் தெரியாது. இத்தனை குண்டுகள் பொழிந்த விமானங்களில் எத்தனை அமெரிக்கர்கள் இருந்தார்கள் என்பதும் தெரியாது. ஆனால், ஒருசிலர் மட்டுமே சென்று இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தினர்.
உடனடியாக
ஈரான் பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின்
தளத்தைக் குறிவைத்துத் தாக்கியது. அதேசமயம் இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைகளைத் தொடுத்தது. இஸ்ரேலும்
அதன் பங்குக்கு ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களைத் தாக்கியது. இந்த
நிலையில் இரஷ்யாவும் இந்தப் போரில் தலையைக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி, இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்த போர் உலகப் போராக வெடிக்குமோ என்ற அச்சம் உலகை நடுங்க வைத்தது.
நல்ல
வேளையாக, ட்ரம்பின் அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான 12 நாள் போர் நின்று விட்டதாகத் தெரிவித்தது. அவர் அறிவித்த பிறகும்கூட ஏவுகணைகள் வீசப்படுவது இரு தரப்பிலும் நிற்கவில்லை. ‘நாங்கள் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளவில்லை’ என்று
ஈரான் முழங்கியது. இஸ்ரேலும்
பதில் தாக்குதலை நிறுத்தவில்லை. இறுதியில்
போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இந்த
12 நாள் போர் ஏன் வந்தது? யார் காரணம்? ஒரு சிறு நாட்டைச் சூழ்ந்திருக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட அரபு, இஸ்லாமிய நாடுகள் அவற்றின் வலிமையைக் காட்டுவதற்கா இந்தப் போர்? ஈரான்
அணுகுண்டு தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டதாக இஸ்ரேலும், உலக நாடுகளும் முடிவுக்கு வந்தது மட்டுமே காரணமா?
இஸ்ரேல்
மேல் பல நாடுகளுக்கும் மனத்தாங்கல்
இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். பாலஸ்தீனம் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பல முறை உள்ளாகியிருக்கிறது.
பெண்களும் குழந்தைகளும் குண்டு வீச்சால் இறப்பதும், கட்டடங்கள் தரைமட்டம் ஆவதும் அன்றாட நிகழ்ச்சிகள். பாலஸ்தீன மக்கள் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இஸ்ரேல் ஒரு சிறு நாடு என்ற அனுதாபம் இருந்தது போய், மக்கள் மத்தியில் அதன்மேல் வெறுப்பு அதிகமாகியது.
இஸ்ரேலுக்கும்,
அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான பகைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; இரண்டாம்
உலகப் போருக்குப் பிறகு நேச நாடுகளால் உருவாக்கப்பட்ட நாடு அது. வேகமாக வளர்ந்த நாடு நமக்கெல்லாம் ஆபத்தைக் கொண்டு வரும் என்று மற்ற நாடுகள் அச்சம் கொண்டன. எண்ணெய்
கிணறுகள் அரபு நாடுகளில் தோண்டப்பட்ட பிறகு அவற்றின் வறுமை போய், அங்கு வளம் கொழிக்கத் தொடங்கியது. பணக்கார
நாடுகள் அவற்றின் மேல் கண்வைத்தன. பாரம்பரியமாக
யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த பகையும் வலுப்படத் தொடங்கியது.
இந்தப்
பகைமைக்குக் காரணங்கள் பல. வரலாற்று ரீதியாகப் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியதும், யூதர்கள் தங்களுடைய தாய்மண்ணைத் தங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று ஆசைப்பட்டதும் காரணங்கள். இஸ்ரேல்,
பாலஸ்தீனம், எருசலேம் ஆகிய பகுதிகளுக்கு இசுலாமியர்களும், யூதர்களும், கிறித்தவர்களும்கூட உரிமை கொண்டாடியது மற்றொரு காரணம். இதற்கிடையில் வெளிநாட்டு ஆதிக்கமும் தூண்டுதலும் இந்த முரண்பாடுகள் உரசலாக மாறக் காரணம்.
இஸ்ரேல்
தனது அண்டை நாடுகளுடன் போர் பகைமை கொண்டது நீண்ட வரலாறு உடையது. 1948-இல்
‘இஸ்ரேல் சுதந்திர நாடு’ என்று அறிவித்தவுடன் அரபு நாடுகள் அதன்மேல் போர் தொடுத்தன. 1956-இல் சூயஸ் கால்வாய்க்கு உரிமை கொண்டாடி இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. 1967-இல் நடந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் எகிப்து, யோர்தான், சிரியா ஆகிய நாடுகளைத் தாக்கியது. யூதர்களின்
புனித நாளான ‘யாம் கப்பூர்’ அன்று எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கின. இதற்கிடையில்
லெபனானில் இஸ்புல்லாக்களின் தீவிரவாதத்தை எதிர்த்து இஸ்ரேல் அதன்மேல் 1982-இல் தாக்குதல் நடத்தியது. காசா பிரச்சினையில் அவ்வப்போது பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ்களுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இஸ்ரேல்,
பாலஸ்தீன முகாம்களைத் தாக்கி குழந்தைகளையும் பெண்களையும் அழிக்கின்றது. தரைவழி
தாக்கி தனது அதிகார வரம்பை அதிகரிக்கிறது. பாலஸ்தீனத்துக்கு
அனுப்பப்படும் உதவிகள் போகவிடாமல் தடுக்கின்றது. ட்ரோன்களை அனுப்பி வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளைக் கொல்கிறது. பாலஸ்தீனத் தீவிரவாதிகளான ஹமாஸ்களுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த மோதல்களில் 2023-இல் ஹமாஸ்கள் இஸ்ரேல் மேல் நிலம், கடல், ஆகாயம் மூலமாகத் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில்தான்
சென்ற ஜூன் 13 அன்று இஸ்ரேல், ஈரான்மேல் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் கொண்டு அத்துமீறி ஈரானின் இராணுவம், அணுசக்தி நிலையங்கள் மேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. அடுத்த
நாளே ஈரான் பதிலடி கொடுத்தது. அதிவேக ஏவுகணைகளைத் தொடுத்து, விடாது இஸ்ரேல்மேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் இரும்புக் குவிகை என்ற பாதுகாப்பு அரணை அமைத்திருந்ததால், அதை ஊடுருவி எந்த ஏவுகணையும் வரமுடியாது என்ற இறுமாப்பில் இருந்தது. ஆனால், இந்த ஒலியைவிட அதிவேகமாகப் பறந்து வரும் விமானங்கள், தொகுப்புக் குண்டுகளை வீசித்தாக்கின. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் குண்டுகளை எட்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்குக் குறிபார்த்துத் தாக்கும் திறனுடையவை. இதனால் இஸ்ரேலின் தாக்கும் சக்தி குறைந்தது. இருப்பினும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மேல் தாக்குதலைத் தொடர்ந்தது இஸ்ரேல். குறிப்பாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பதிலடியாக ஈரான் டெல் அவிவ், எருசலேம் முதலான நகரங்களைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது.
லெபனானின்
ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் அமைப்பு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கப் போவதாக எச்சரித்தது. அமெரிக்கா இதுவரையில் போரில் தலையிடாமல் இருந்தது. போர் தீவிரம் அடைந்த நிலையில், அமெரிக்கா ஈரானை எச்சரித்தது. அதனுடைய அணுசக்தித் தளங்களைத் தாக்கப் போவதாக எச்சரித்தது. தொடக்கத்தில் பார்த்தது போல ‘B2’ Stealth bombers அனுப்பி ஈரானின் அணுசக்தி நிலையங்களான போர்டோ, நார்டன்ஸ், எஸ்பகாம் ஆகிய இடங்களைத் தாக்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத்தளங்களைத் தாக்கியது. ஏற்கெனவே அது எச்சரித்திருந்ததால் சேதம் அதிகமில்லை. உடனே
24-ஆம் தேதி அன்று இரு நாடுகளுக்கு இடையே உள்ள போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். 24 மணி நேரத்திற்குள் இரு நாடுகளும் அவற்றின் தாக்குதலை நிறுத்திக்கொள்ளும் என்று அறிவித்தார். எனினும், இரு பக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஈரான் முதலில் ‘எந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை’ என்று
அறிவித்தது. இன்றைய நிலவரப்படி (25.06.2025) இரு நாடுகளுமே போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன என்று அறிகிறோம்.
டொனால்ட்
ட்ரம்ப் இந்தப் போரினாலும், போர் நிறுத்தத்தாலும் தனக்கே வெற்றி கிடைத்தது என்று முழங்குகிறார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறார். ஆனால், அவருடைய விமானங்கள் தாக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கக்
குண்டுகள் கான்கிரீட் பதுங்குக் குழிகளைத் துளைத்துக் கொண்டு தரைக்குக் கீழே உள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களை அழிக்கும் ஆற்றல் உடையவை. ஆனால், ஏற்கெனவே ஈரான் தயாரித்து வைத்திருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்பட்டுவிட்டதால், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். இந்தத் தகவலை அமெரிக்கச் செய்தியாளர்களே தெரிவிக்கிறார்கள். ஆகவே, 17,300 கோடி மதிப்புள்ள விமானங்கள் பொழிந்த குண்டுகள் வீண் என்றால், அவருடைய விமானத் தாக்குதலுக்கு வெற்றி இல்லை. சண்டையைத்
தூண்டி கடைசியில் அமைதியைக் கொண்டு வந்து விட்டதாகப் பறைசாற்றவே இந்த வெற்றி முழக்கமா?
தாக்குதலைத்
தொடங்கிய இஸ்ரேலுக்கு வெற்றியா? என்றால், உறுதியாக இல்லை. டெல் அவிவும், எருசலேமும் அழிவுற்றதே விளைவு. அணு ஆயுத அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறது. அவர்களுடைய
இரும்புக் குவியம் தகர்த்தப்படக் கூடியது என்று பாடம் கற்றதே மிச்சம்.
ஈரான்
பலத்த சேதத்தைச் சந்தித்தது என்பது உண்மை. பல இராணுவத் தளபதிகள்
கொல்லப்பட்டார்கள். ஈரானின் முதன்மை அணுசக்தி விஞ்ஞானிகள் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். டெஹ்ரான் சிதைந்துபோய்விட்டது. பல
விமானத் தளங்கள் அழிந்துபோய்விட்டன. அதனுடைய அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றல் வேண்டுமென்றால் மீட்டெடுக்கக்கூடியதாய் இருக்கலாம். ஆனால், ஈரான் தகர்ந்துபோய்விட்டது என்பது உண்மை.
இந்த
12 நாள் போரில் உயிரிழப்புகள் மிகக் குறைவு என்பது ஓர் ஆறுதல். இருந்தாலும், மக்கள் பீதியிலும் அச்சத்திலுமே வாழ்ந்தார்கள். உலகமும் இது ஒரு பெரும் போராக வெடிக்கும் என்று பயந்து கொண்டிருந்தது. நல்ல
வேளையாகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
கச்சா
எண்ணையின் விலை ஓரளவு கூடினாலும், மீண்டும் குறையத் தொடங்கியிருக்கிறது. கச்சா எண்ணைய் கொண்டு செல்லப்படும் கடற்பாதைகள் மூடப்பட்டால் எரிபொருள் கிடைக்காமல் போகும். அப்போது எல்லாருக்குமே பிரச்சினைதான். உலகின் எரிபொருள் தேவையில் ஈரான் மூன்றில் ஒரு பங்கைத் தயாரிக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு
ஓரளவு நிம்மதிதான். ஆனால், டெஹ்ரானும் டெல் அவிவும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
எந்தப்
போர் நடந்தாலும், யாரும் வெற்றி பெறப் போவதில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிட்டால் மனிதருக்கு மொழிகள் தேவையில்லை. மனிதர்கள் வாய் வழியாக எத்தனையோ பேசி மகிழ்கின்றனர். இருந்தாலும், இதயம் கூறுவது என்ன? என்பது வாய்வழிச் செய்தியாய் வெளிவருவதில்லை. மனத்தில் எத்தனையோ வஞ்சகம், பொறாமைக் குணங்கள் மறைந்திருக்கின்றன. இதயத்தின் மொழி புரிந்தால் மட்டுமே மனிதம் தழைக்கும். இதயத்திற்கு என என்ன தனிமொழி இருக்கிறது? இதயத்தின் மொழி அன்பு மட்டுமே. இந்த அன்பின் மொழி பேசும் மனநிலையில் உட்புகுவோம்.
தாய்
மகனை நோக்கி ‘மகனே, நீ படித்துப் பெரிய
ஆளாக வர வேண்டும்’ என்று எப்போதும் அறிவுரை கூறுவார். மகனோ படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தான். தாய்க்கு இது தெரியாது. தாய்க்காகப் படித்தான். அவனுடைய திறமைகளை வளர்க்க எண்ணும்போதெல்லாம் தாய், ‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்’
எனத் திட்டினார். மகனும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினான். பாவம், தான் படும்பாட்டைத் தன் மகனும் படக்கூடாது என எண்ணினார் தாய்.
இது மகனுக்குப் புரியவில்லை. நன்கு படித்தான். முதல் மாணவனாகத் திகழ்ந்தான். நல்ல வேலைக்குச் சென்றான். தாயைத் தனிமையில் விட்டுவிட்டான். தாயைக் குடைச்சல் கொடுக்கும் நபராகப் பார்க்க ஆரம்பித்தான். தாய் அன்பிற்காக ஏங்கினார். மகனைக் காணத் தவித்தார். ஆனால், அவனோ தாயிடம் தேவைக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் வேலையிலேயே கவனமாக இருந்தான். தாய்க்குப் புரிந்தது. மகனை மரக்கட்டையாய் வளர்த்ததை நினைத்து வருந்தினார். மகன் தாயின் அன்பைப் புரிந்துகொள்ளவில்லை. தாய் மகனின் ஆசைகளைப் புரிந்துகொள்ளவில்லை.
இதயத்தின்
மொழிகள் சரியாகப் புரியப்படவில்லை என்றால், உறவுகளில் சிக்கல் உண்டாகும். உலகில் எல்லாருக்கும் இதயத்தைப் புரிந்து பழகும் தன்மை வந்துவிட்டால், எவ்வளவோ சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். தலைவர்கள் தொண்டர்களாக இருக்க வேண்டும் என்னும் ஆசை நிறைவேறினால், மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும். ஆசிரியர்கள் நல்ல பெற்றோராகத் திகழவேண்டும் என்னும் மாணவர்களின் ஆசை நிறைவேறினால், சமூக அக்கறையுள்ள மனிதர்கள் உருவாவார்கள். பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் புரிந்துகொண்டால் உலகமே அன்பென்னும் இதயத்தின் மொழியைப் பேச ஆரம்பிக்கும். அன்பே அனைத்துமானால் காவலுக்கும் கண்டிக்கவும் யாரும் தேவையில்லை.
அன்பு
இன்று வெளிவேடங்களால் நம்பப்படுகிறது. அன்பின் மொழி இதயம் சார்ந்தது. வெளிவேடங்கள் இடம், பொருள், வசதி ஆகியவற்றைப் பார்த்து வரும் அன்பு ஆகும். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அன்பை யாரும் அழிக்க முடியாது. அன்பு வெளிக்காட்டப்படும் விதம் வெவ்வேறு வழிகளில் அமைந்தாலும், அன்பு உண்மையானது. அதனைப் புரியாதவருக்கு இதயத்தின் மொழி புரியவில்லை என்பது பொருளாகும். இதயம் பேசும் மொழிக்குப் பெரும் சத்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உண்டாக்கும் பாதிப்பு என்பது ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு பாதிப்பைவிட அதிகமாக இருக்கும். அன்பில் தோல்விக்கு இடமே இல்லை. அன்பு தோல்வியில் தற்கொலை செய்வது என்பது கோழைத்தனம். ஆம், தற்கொலைக்குத் தைரியம் வேண்டும். எனினும், அது பெரிய கோழைத்தனம். முதலில் தற்கொலை தன்மீது கொண்டுள்ள அன்பைக் கொலை செய்கிறது. பின்னர் நம்மீது அன்பு கொண்டுள்ளவர்களின் உள்ளத்தைச் சாகடிக்கிறது. “தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்”
எனும் இயேசுவின் அன்புக் கட்டளை இங்குப் பொருந்தும்.
அன்பு
ஒரு தீ போன்றது. தீ
எப்படித் தன்னில் விழும் அனைத்தையும் எரித்து ஒரே சாம்பல் ஆக்குகிறதோ அதுபோல அன்புத் தீ தன்னில் விழும்
அனைவரையும் ஒன்றென இணைக்கிறது. இது இதயத்தில் இடைவிடாமல் எரிந்து பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதைப் புரியாமல் ஏதேதோ காரணங்களால் இதயத்திற்குப் புறம்பாகச் செயல்படும் சூழல் உருவாகிவிடுகிறது. நாமும் சூழ்நிலைக் கைதியாக மாறிவிடுகிறோம். இதயத்தின் மொழிகளைப் புரிந்து செயல்படுவோம். மனிதரின் இதய மொழிகளை மதித்திடுவோம். மனிதத்தை வளர்த்திட முன்வருவோம்.…
அது ஒரு காட்சி அல்ல; ஓர் உணர்வு!
அது
ஒரு பார்வையல்ல; ஒரு மூச்சு!
தெருவோரத்தில்
வாழும் ஒவ்வொருவரும் ஒரு கதையோடு மட்டுமல்ல, கண்ணீரோடும் நிறைந்திருக்கிறார்கள். சாலையோரத்தில் விற்கும் பழக்கடைகளின் பின்னால் ஒரு வாழ்க்கை நிற்கிறதென்பதை உணராமல், அதை வாடையோடு மோதுகிறது மனிதகுலம். வலி அனைவருக்கும் பொதுவானது. பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் முதியவர் வரை. ஏன்?
புனித
அகுஸ்தின் இவ்வாறு கூறுவார்: “இயேசு பாவம் ஒன்றைத் தவிர மனிதரைப்போல் எல்லா வலிகளையும் தம் வாழ்வில் கொண்டிருந்தார்.”
வலி
வர்ணிக்க முடியாத சுனைநீராகப் பலரின் வாழ்வில் சுரந்துகொண்டே இருக்கிறது. வலியை வெளிக்கொணர்கிறது ஒரு கூட்டம். வலியை உள்நிறுத்தி உந்துகட்டையாக வாழ்வை நகர்த்திச் செல்கிறது மற்றொரு கூட்டம். வலி எவருக்கும் விதி விலக்கு அல்ல; பணம் இருப்பவர்கள் வலிக்குப் பதம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் பாதைக்காகத் தடம் பார்க்கிறார்கள்.
திருச்சியை
நெருங்கும் நெடுஞ்சாலையில், தூசி பறக்கும் ஒரு சாலையோரத்தில் தனியாக ஒரு பழக்கடை. அதன் அருகில் நிழலுக்காய் மாட்டியுள்ள பிளாஸ்டிக் தண்டு. அதன் கீழ் அமர்ந்திருக்கும் ஒரு முகம். அது முகம் அல்ல... ஒரு கதைக் கட்டம்!
‘என் பெயர் மாரியம்மா...’ என்று மௌனமாகக் கூறினார். “இது என் வாழ்வாதாரம். நான் தினமும் காலை 6 மணிக்குப் பழங்களை வாங்கி வருவேன். இங்கேயே வைத்து விற்கிறேன். அதிகம் விற்க முடியவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வழியோரத்தில் காத்திருப்பேன்.”
முடிவிலாக்
காத்திருப்பும், வாடிக்கையாளர் வருகிறாரோ என்ற ஆவலும், விற்பனை ஆகாத பழங்கள் சுருங்கும் வேதனையும், அவளது கண்களில் தெரிந்தது.
வாடிய
வாழ்வின் வாசல்,
அதுவே
வழியோரத்தில் பழம் விற்கும்
அம்மாவின்
கைகளில் - வாடுகிறது.
பூக்கள்போல
பழங்கள்...
வாடாதது
மட்டும் அவளது - நம்பிக்கையே!
ஒரு
வாடிக்கையாளர் வந்தால் போதும்,
அவள்
பிள்ளையின் வயிறு பசியறியும்!
யாரும்
பார்க்கவில்லை அவளது கண்ணீரை,
ஆனால், பார்த்தோம் பழங்களில் மட்டும் - விலையை!
- ஷெபி ஆர்லின் உணர்ச்சிக் கவிகள்
வழியோரங்களில்
வாழும் இவர்களுக்கு வீடு என்பது மழையில்லாத ஒரு மூலை. உணவு என்பது ஒருவன் கொடுத்தால் கிடைக்கும் பாக்கியம். அவர்கள் வாழ்வில் ‘இனிமேல் என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாது. அவர்கள் வாழும் நாள்கள், நம் காலணிகள் கீழ் அழியும் ஓர் உறவுமில்லா மண்ணாகவே இருக்கிறது.
சென்னை-விழுப்புரம் சாலையில் ஒரு பாட்டி பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடம் ஒரு சிறுமி வந்து, “பாட்டி, எனக்கு ரொம்பப் பசிக்குது. ஒரு பழம் குடுக்கலாமா?” என்று கேட்டார். அவரிடம் இருந்த இறுதி மூன்று பழங்களில் ஒன்றை எந்தவொரு முறுவலுமின்றி அந்தச் சிறுமிக்குக் கொடுத்தார்.
நானும்
அங்கே இருந்தேன். “பாட்டி, உங்களுக்கே விற்று வாழவேண்டிய நிலை இருக்கும்போது ஏன் இவ்வாறு?” என்று கேட்டேன். அவர் கூறினார்: “என் குழந்தைப் பருவத்தில் யாரும் எனக்குச் செய்யாத உதவியை இப்போது ஒரு பசிக்கு நான்தான் செய்யவேண்டும். அதிலே அளவு மிகுந்த சந்தோஷமிருக்குப்பா” என்றார்.
இந்த வார்த்தைகள் என் உள்ளத்தை நசுக்கின. அவர் விற்றது பழம் மட்டுமல்ல... மனிதத்துவமும் கூட!
வழியோரமாய்
ஒரு வலி; அது நாம் காணும் சாதாரண வாழ்க்கை அல்ல; அது சக்கரங்கள் ஓடும் நெடுஞ்சாலையின் ஓசையில் ஒளிந்திருக்கும் சத்தமற்ற கதைகள். நாம் பார்வையிட்டாலும் உணராத உண்மைகள்.
ஒரு
பழம் விற்கும் அம்மாவின் புன்னகையில், ஒரு கண்ணீர் இருக்கிறது. ஒரு சாலையோரத் தந்தையின் கண்களில், ஒரு கனவு களங்கமாய் காணப்படுகிறது. நாம் ஒரு நாளாவது அவர்களிடம் நின்று ஒரு பழம் வாங்கினாலோ, ஒரு பசிக்கு உணவு கொடுத்தாலோ, ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் கொடுத்தாலோ, அந்த வழியோர வலிக்குள் சிறு நிழல் கொடுக்க முடியும்.
நாம்
அவர்களுக்கு வாடிக்கையல்ல; வாழ்வாக இருக்கலாம். வழியோரமாய் நின்ற அந்த வலிக்கு நாம் ஒரு சந்தோசமான வழி தேடலாம், மகிழ்ச்சியான தடம் பதிக்கலாம்.
“வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கவே கூடாது என்று தோன்றுகிறது. பல இழப்புகளையும் ஏமாற்றங்களையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், என் 76-வது வயதில் எதிர்கொள்கின்ற இந்தப் பிரிதல் அப்படியோர் இரணத்தை மனத்திலே ஏற்படுத்துகிறது.
என்
மகள் திருமணம் செய்துகொண்டு, சென்றபோதுகூட இத்தனை வேதனையை நான் அடைந்ததில்லை. ஒருநாள் மகனும் மருமகளும் ‘வெளிநாடு செல்கிறோம்’ என்று
என்னிடம் தயக்கத்தோடு வந்து நின்றபோது, ‘சந்தோசமா போங்க’ என்று வாழ்த்திதான் அனுப்பினேன். வயோதிக நிலையில் மனைவி கனகமும் நானும் தனிமையில் இருந்தபொழுதுகளில் ஒருநாள்கூட இவ்வளவிற்கு மனம் வருந்தியதில்லை.
‘வீட்டுல ஒரு நாய் இருந்தா உங்களுக்குக் கொஞ்சம் நேரம் போகும்; கொஞ்சம் பாதுகாப்பாகவும் இருக்கும்’
என்று விருந்துக்கு வந்த என் மகள் ஒரு நாய்க்குட்டி கொடுத்துவிட்டுப் போனாள். தொடக்கத்தில் ‘நம்மையே நாம் பார்த்துக்கொள்ள முடியவில்லை; இதில் நாய் வேற?’ என்றுதான் எண்ணினேன்.
வாலாட்டி
நன்றியுணர்வை வெளிப்படுத்துவதில், சொன்னதைச் செய்ததில், பாதுகாப்பதில், பாசத்தை வெளிப்படுத்துவதில், கொடுப்பதைக் குறை சொல்லாமல் சாப்பிடுவதில் என்
பிள்ளைகளைவிட மேல் என்றுதான் சொல்வேன்.
நான்
தூரமாக வரும்போதே கேட் பக்கத்தில் ஓடிவந்து அணைத்துக்கொள்கிறது. யாராவது வந்தால் குரைத்தே சிக்னல் தருகிறது. என்னோடு விளையாடுகிறது. ‘வாக்’ போகிறது. பேப்பர் படிக்கும்போது பக்கத்திலேயே பேசாமல் படுத்துக்கொள்கிறது. என்னதான் என்னோடு இருந்தாலும், ஒருநாள் கூட வீட்டுக்குள் வந்ததில்லை. அந்தக் கட்டுப்பாட்டையும் அது தெரிந்து வைத்திருந்தது.
சென்ற
வாரம் திங்கள்கிழமை பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். காலில் சுளுக்கு. எழுந்து நடக்க முடியவில்லை. டாக்டர் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டார். என் மகள் ‘அப்பா! அம்மாவும் நீங்களும் கொஞ்சம் நாள் என்கூட வந்திருங்க. கால் சரியான பிறகு வீட்டுக்குப் போகலாம்’ என்றாள். என்னைப் பார்த்துக்கொள்கிற நிலையில் என் மனைவியும் இல்லை. அதனால் அவள் கூறியது சரியாகத்தான் பட்டது. ஆனால், நாயை என்ன செய்வது? என்பது பெரும் விவாதமாகவே இருந்தது. மகள் வீட்டுக்குக் கொண்டு போகலாமென்றால், ஏற்கெனவே அங்கு இரண்டு பெரிய நாய்கள் உள்ளன. கடித்தே இதனைக் கொன்றுபோடும். யாரிடமாவது கொடுத்துவிட லாமா? என்று மனைவி கேட்டாள். நம் காலடியிலேயே கிடந்தது மற்றொருவரின் காலடியைச் சுற்றி வருவதைப் பார்க்க எப்படி மனம் வரும்? ‘சாப்பாட்டில் விசம் கலந்து கொடுத்துவிட்டுக் குளத்துக் கரையில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டியதுதானே?’ என்றான் நலம் விசாரிக்க வந்த பக்கத்து வீட்டுக்காரன்.
‘இவர்களுக்கெல்லாம் எப்படிதான் இப்படிப் பேசமுடிகிறதோ?’ என்றிருந்தது. இந்த நாயை என்னதான் செய்வதென்று அறியாது நான் தவித்து உட்கார்ந்திருந்தபோது, என் வீட்டுக்குள் முதல்முறையாக வந்து என் காலடியில் படுத்துக்கொண்டது. அது ‘என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே’ என்று
சொல்வது போலிருந்தது. முதியவர்களை முதியோர் இல்லம் அனுப்புவதைப்போல, என் நாயைக் கடைசியாக நானே என் நண்பர் ஒருவரிடம் கனத்த இதயத்தோடு கொடுத்தனுப்பினேன்.
ஒருநாள்
நான் என் மகள் வீட்டில் இருக்கையில் என் நண்பன் மகன் போனில், ‘அங்கிள்! நீங்க கொடுத்த நாய் எங்கேயோ ஓடிப்போச்சு’ என்றான்.
அன்றைய நாள் மழை நாளில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல என் உயிர் அடித்துச் செல்லப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தேன். என் நாயைத் தேடிச்செல்ல எனக்கு வலுவில்லை. எனினும், என் நாய் என்னை ஒரு நாள் தேடிவரும் என்னும் நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறேன்.”
முதியவர்
தன்னோடு இருந்த நாய் இல்லாமல் வாழ முடியாத சூழல் உருவானதைப்போல, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல் இனி வாழவே முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கல்வி, மருத்துவம், ஊடகம், கட்டுமானம், அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால், இத் துறைகளில் பணி செய்கின்ற பலரும் தங்கள் பணியை இழக்கின்ற அபாயச்சூழல் நிலவுவதை உணர்கின்றனர்.
1930-ஆம் ஆண்டு
ஜான் மேனார்ட் கேய்னஸ் (John Maynard Keynes) ‘தொழில்நுட்ப
வேலையின்மைக் கோட்பாடு’
(Technological Unemploy ment
Theory) எனும்
கோட்பாட்டை முன்மொழிந்தார். அக்கோட்பாட்டின் அடிப்படைக்கூறு என்னவெனில் ‘தொழில்நுட்ப மாற்றம் வேலையிழப்புக்கு வழிவகுக்கும்’ என்பதாகும்.
சிலர் இக்கோட்பாட்டைக் காலாவதியானது என்று விமர்சிப்பதும் உண்டு.
எந்தவொரு
தொழில்நுட்ப வளர்ச்சியும் இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்: 1. தொழிலாளர்கள் முன்பு செய்த பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இடம்பெயர்வர் (Displacement Effect). 2. தொழில்நுட்ப
வளர்ச்சியினால் எழும் தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு கூடும் (Productivity Effect).
அண்மையில்
வெளியிடப்பட்ட ‘எதிர்கால வேலைவாய்ப்புக்கான அறிக்கை’
(Future of Jobs Report) 2020-இன்
அடிப்படையில் 2025-ஆம் ஆண்டிற்குள் 85 மில்லியன் பணியிடங்கள் காலியாகும் என்றும், 97 மில்லியன் பணியிடங்கள் புதிதாக உருவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
உலகத்தில்
எது மாறுகிறதோ இல்லையோ தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கின்றது. மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும், அதன் பரவலாக்கமும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. எனவே, வேலையிழப்பு அதிகமாக ஏற்படும் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோன்று புதிய வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
செயற்கை
நுண்ணறிவு நம் வேலைகளை எடுத்துக்கொண்டாலும், வேறு புதிய வேலை வாய்ப்புக்கான தளங்களை உருவாக்கித் தருகிறது. இவ்வேலைவாய்ப்புச் சூழலை எவ்வாறு நமதாக்கப் போகிறோம்? என்பதுதான் நம்முன் வைக்கப்படுகின்ற கேள்வி.
இன்றைய
சூழலில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஆசிரியர், ஏ.ஐ. தெரிந்த
ஆசிரியரிடம் தன் வேலையை இழப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஊடகவியலாளர், ஏ.ஐ. தெரிந்த
ஊடகவியலாளரிடம் தன் வேலையை இழப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஐ.டி. பணியாளர்
ஏ.ஐ. தெரிந்த மற்றுமோர்
ஐ.டி. பணியாளரிடம் தன் வேலையைப் பறிகொடுப்பார். எனவே, காலத்திற்கேற்ப நம் அறிவையும், நம் திறனையும் வளர்த்துக்கொள்வது (Upskilling) மிகவும்
முக்கியமானது. இல்லையேல் வேலையில்லாப் பட்டதாரி பட்டியலில் நம் பெயரும் இடம்பெற்று நம் வாழ்க்கையே நாய் பிழைப்பாக மாறக்கூடும்.
நெப்போலியன் போனபார்டே ஐரோப்பா முழுவதையும் ஆள்வதற்குக் கனா கண்டார். யுத்த வெறியில் கண்ட களங்கள் எல்லாம் வெற்றி வாகை! இரத்தவெறி ஏறியது. நெப்போலியனுக்கு வாட்டர் லூவில் நடந்த போர் சறுக்கலைத் தந்தது. அவர் தோல்வி எனும் காடியை ருசித்தார்; அது கசந்தது. மாவீரன் நெப்போலியன் தோற்றுப்போனார். தமிழ்நாடு தேர்தல் களம் என்பது பா.ச.க.வைப் பொறுத்தவரை நெப்போலியனின் வாட்டர்லூ போன்றதே.
தமிழ்நாட்டில்
பா.ச.க. எதிர்ப்பு
என்ற புயல் வீசுகிறது. மக்களின் பொதுக்கருத்தாக்கம் என்பது வளர்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த சமூக நீதி, வாழ்வாதாரப் பாதுகாப்பு, பொது அமைதி, மதநல்லிணக்கம் என்பதே. அது தமிழ்ச் சமூகத்தை அறம் சார்ந்த தார்மீகக் கோட்டில், கோட்பாட்டில் இணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதைக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறது. தமிழ்நாட்டு மக்கள் சகோதர-சகோதரிகளாக அன்பு வாழ்வு, அறவாழ்வு வாழ்கிறார்கள். இதற்கு நேர்மாறாக பா.ச.க.வோ இந்து மதம்
சார்ந்த உணர்ச்சிகளால் மக்களை அணிதிரட்ட முயல்கிறது. இந்து மத வெறியைத் தூண்டுகிறது.
மணிப்பூர்
பற்றி எரிகிறது. அங்கு இனக் கலவரம் 2023, மே முதல் இரண்டு
ஆண்டுகளாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய உள்துறை அமைச்சர் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு எனும் மாநிலத் தேர்தல்களில் முழு கவனம் செலுத்துகிறார். ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலில், 2031-தமிழ்நாட்டில் பா.ச.க.
ஆட்சி என்ற இலக்கில் செயல் திட்டங்களை வழிநடத்துகிறார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள்; ஆனால்,
உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதியாமல் மதுரையில் முருகன் மாநாடு நடத்த முனைகிறார்.
தமிழ்நாட்டின்
பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலுக்கு உள்துறை அமைச்சரே தன் கட்சி நிர்வாகிகளோடு மட்டுமல்ல, அனைத்து இந்துத்துவா அமைப்புகளோடும் ஆலோசனை நடத்துகிறார். ‘முருகன் மலையா? சிக்கந்தர் மலையா?’ எனக் கொளுத்திப் போடுகிறார்கள். மதுரை மண் அரசியல் என்பது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர் அவர்களை
அசைத்துப் பார்த்தது. இந்தியாவின் இரும்பு மங்கை எனும், இந்திரா காந்தி அவர்களைக் கறுப்புக்கொடி போராட்டத்தால் கலங்க வைத்தது. தமிழ்நாட்டு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதே தமிழ்நாட்டுக் கள நிலவரம். அ.தி.மு.க.வோ ஏதோ கட்டாயத்தால்
பா.ச.க.வோடு
கூட்டணி என அறிவித்துவிட்டது. பா.ச.க. தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசுபோல
என்.டி.ஏ. கூட்டணி
அரசு என்கிறது. ஆனால், எடப்பாடியோ “இல்லை, அ.தி.மு.க. ஆட்சிதான்” என்கிறார். வெற்றி வாய்ப்புகள் இல்லாத நிலையில், ‘எவர் ஆட்சி?’ என்ற விவாதம் நடக்கிறது. பா.ம.க.,
தே.மு.தி.க.
போன்ற கட்சிகள் தன் பேர வலிமையை வலுப்படுத்த ‘நாங்கள் கூட்டணிக் குறித்து முடிவு செய்யவில்லை’ எனப்
பா.ச.க.வுக்கே
போக்குக் காட்டுகிறார்கள்.
கடந்த
காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் எவருமே கூட்டணியில் இருந்தாலும், மோடி படம் போட்டு ஓட்டுக் கேட்கவில்லை. பா.ச.க.
தலைவர்கள் எவரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. கூட்டணித் தலைவர்கள் ‘பா.ச.க.
மூத்த தலைவர்கள் தங்கள் தொகுதிக்குப் பிரச்சாரத்திற்கு வந்து விடுவார்களோ?’ எனப் பயந்தார்கள். பா.ச.க.
தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கும் கட்சி என அறிந்தாலும், ஏதோ
அச்சுறுத்தல், சுயநலம் காரணமாகத் தேர்தல்
கூட்டு வைக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் பொதுக் கருத்திற்கு எதிராக நிற்கிறார்கள். சிறுபான்மையோர் நலன் என்பதில் கபட வேடம் தரிக்கிறார்கள்.
பா.ச.க. அரசியல்,
பொருளாதாரம், மதம் சார்ந்த நம்பிக்கையில் தன் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் நிற்கிறது. பா.ச.க.வின் கூட்டணிக் கட்சிகள் அதற்கு எதிர்மறைக்கொள்கை கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுகிறார்கள். இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாக் கதவுகளைத் திறந்த எம்.ஜி.ஆர். மாளிகைச் சொந்தங்களுக்கு நினைவு
இருக்கலாம். யூடியூப் சேனல்களில் தினம் பேசுகிற எமது பத்திரிகை நண்பர் காட்டமாகக் கூறினார்: “அந்தக் காலத்தில் அவ்வழிச் சென்ற நான்கு கால் பிராணிகள்கூட உள்ளே இழுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் வழிமாறிப் போனதாம்.” அட, நடிகர் மன்சூர் அலிகான்கூட கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி காண இயலவில்லை. அது கட்சியின் கொள்கைகள் நீர்த்துப்போனதன் விளைவு.
அரசியல்வாதிகள்
கெட்ட பின் ஞானம் பெறுவார்கள்; மாற்றுத் தேடுவார்கள். எடப்பாடி பழனிச் சாமியும் அப்படியே. எஸ்.டி.பி.ஐ.
மாநாட்டில் பேசுகிறார்:
“எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்
தேர்தல்களில் பா.ச.க.வுடன் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறேன். சூழ்நிலை காரணமாகப் பா.ச.க.வோடு கூட்டணி வைத்தோம். அவர்களின் கொள்கை சரியில்லாததால் வெளியே வந்தோம்” என்றார். அ.தி.முக.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வி
அடைய பா.ச.க.
கூட்டணிதான் காரணம் எனக் குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரோ, “நான் என் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பா.ச.க.
கூட்டணியால் சிறுபான்மையோர் வாக்குகள் கிடைக்காத காரணத்தால் தோற்றுப் போனேன்” என்றார்.
அ.தி.மு.க.
2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூட்டணிக் கணக்குகளைப் போட்டது. பா.ச.க.
வோடு கூட்டுச் சேர்ந்தால் இரண்டு கூட்டல் இரண்டு நான்கு அல்ல; அது இருக்கும் வாக்குகளுக்குப் பங்கமாகி, சிறுபான்மையோர் வாக்குகளைப் பெற முடியாமல், அது கழிவில் முடியும் என நம்பினர். எடப்பாடி
உள்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் “எக்காலத்திலும் பா.ச.க.வோடு கூட்டணி இல்லை” என்ற உறுதியில் நின்றனர். பா.ச.க.
வழக்கம்போல சாம, பேத, தண்டத்தைக் கையில் எடுத்து, எடப்பாடியாரை மிரட்டி தில்லி அழைத்தது. ‘பா.ச.க.-அ.தி.முக.
கூட்டணி’ என
அறிவித்தது. பா.ச.க.-அ.தி.மு.க. கூட்டணி அறிவிப்போடு
நிற்கிறது. இரு கட்சியினரும் இணைந்து போராட்டங்களோ, தேர்தல் பணிகளோ செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.
அ.தி.முக.விற்குப்
பா.ச.க. அழிக்கிற
மாநிலக் கட்சிகளின் பட்டியலில் நாமும் ஒன்றாகி
விடுவோமோ என்ற பெரும் பயம் ஒன்று உண்டு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ச.க.,
அ.தி.மு.க.
பொருந்தாக் கூட்டணி தோல்வியைத் தழுவும். அது கூடா நட்பின் பின்விளைவையே பிரதிபலிக்கும். தேர்தல் தோல்வியைத் தவிர்க்க, பா.ச.க.
மதம் சார்ந்த, மொழி சார்ந்த, சாதியக் கலவரங்களை முன்னெடுக்கலாம் என்பது சாமானியர்களின் கருத்து. இது அவர்கள்
தன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்குச் சொல்லித் தந்த அடிப்படை பாலப் பாடமாகும். தமிழ்நாடு அரசு தனது உளவு அமைப்புகள் வழி விழிப்புணர்வாகச் செயல்படவேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, அதில் சிறுபான்மையோரின் பாதுகாப்பும் உள்ளடங்கி உள்ளது.
இந்திய இந்துத்துவர்கள் பேசும் தேசியம், ‘இந்து தேசியம்’ என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் இந்து தேசியமே இவர்களின் இந்திய தேசியம்! இவர்கள் வலிந்து பேசும் தேசியம் எல்லாரையும் உள்ளடக்கிய தேசியமாக இருக்க முடியாது. இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர் ஆட்சியின்போது அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட (integrated) ஒன்று என்பதும், இந்நாடு கலாச்சார ரீதியாகப் பன்முகத் தன்மையுடையது என்பதும் உண்மையாயிருக்க, ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையிலான தேசியம், உள்ளடங்கிய தேசியமாக இருத்தல் எப்படிச் சாத்தியம்?
உண்மையான
தேசிய உணர்வு எல்லைகளைக் கடந்த ஒன்று. இந்துத்துவர் பேசும் ‘இந்து தேசியம்’ அல்லது கலாச்சாரத் தேசியம் அப்படியல்ல. பெரும்பான்மை மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு,
சிறுபான்மையினர் மத அடையாளங்கள் ஒதுக்கப்பட்டு
ஓரங்கட்டப்படலால், இத்தேசியம் மக்களை உள்ளடக்குவது அல்ல; இத்தேசியம்
சமூகத்தின் ஒருசாராரை ஒதுக்குவது. ‘ஒற்றுமை’ என்னும் பெயரில், ‘உள்ளடக்குவது’ என்னும்
பெயரில் பிரிவினையை வளர்க்கும் இவர்களின் அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
‘ஒற்றுமை’ என்ற கோஷத்தை மக்கள் முன்பு வைக்கும் இந்துத் தேசியர்களின் உள்நோக்கம் ஒற்றுமையல்ல, பிரிவினையே! கடந்த ஆண்டு நடந்து முடிந்த மராட்டிய மாநிலத்திற்கான தேர்தல் பாரதிய சனதா கட்சி எதிர்பாராத அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டபோது, இவ்வெற்றிக்கான காரணத்தைப் பாரதிய சனதாவினர் கூறியதை ஊடகவழி அறிந்தபோது வியப்பளித்தது. ‘இந்தியா’ கூட்டணியின் இந்து மதம் பற்றிய பொய்யான பிரிவினை பற்றிய பிரச்சினைதான் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் மீது அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அது என்ன பிரிவினை பற்றிய பிரச்சினை?
இந்து
மதம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போர் எப்போதுமே இந்து மதம் பேசும் சாதியத்தை எதிர்ப்பதில்லை. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பிளவைத் தர்மமாகக் கருதும் இவர்கள், சாதி உருவாக்கிய ஏற்றத்தாழ்வைச் சமூகநீதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிவர்த்திக்க முயன்ற அரசமைப்பையும் இந்துத்துவ அரசியலார் ஏற்றதில்லை. மண்டல் குழு பரிந்துரையைப் பெரிய அளவில் எதிர்த்து அரசியல் செய்தவர்கள் இவர்கள். சாதிய ஏற்றத்தாழ்வையும், சாதியப் பாகுபாட்டையும் கடுமையாக எதிர்த்த அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும், பிற சாதி ஒழிப்புப் போராளிகளையும் பிரிவினைவாதிகளாகவே இவர்கள் கருதினர்.
சாதி
ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரிக்கையை ‘இந்துகளைப் பிளவுபடுத்த முன்னெடுக்கப்பட்ட சதி’ என்கிற பிரச்சாரம் மக்களிடம் சரியாகச் சென்றதால், ‘இந்துகளின் ஒற்றுமையைக் குலைத்தோர்க்கு மக்கள் தோல்வியைக் கொடுத்தனர்’ என்றனர்
சனாதனிகள். அதாவது, உண்மையாகவே பிளவுபடுத்தும் சாதிய ஏற்றத்தாழ்வைச் சமன் செய்யும் நோக்கில் எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை இவர்கள் பார்வையில் பிரிவினை! சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்கள் பார்வையில் பிரிவினை! ஆனால், சாதியப் பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாட்டினையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஒற்றுமை (unity). பிரிவினை, ஒற்றுமை எனும் நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும் தேவைக்கேற்ப, நம் வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளும் வினோதப்போக்கினை இவர்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிப்போர் அறியலாம்.
திராவிடமும் பிரிவினையும்
அண்மையில்
நடிகர் கமல்ஹாசனின் ‘தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது’
என்று பேசிய பேச்சொன்று பெரும் சர்ச்சையானது. கன்னட நடிகர் திரு. சிவராஜ்குமார் முன்னிலையில், கமல் அவர்கள் எந்தவித உள்நோக்கமுமின்றி வெளியிட்ட இக் கருத்தைக் கன்னட மொழிக்கெதிரான மிகப்பெரிய அவமதிப்பான கருத்தாக எடுத்துக்கொண்டு வேகமாக எதிர்வினையாற்றினர். கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, ‘கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாது’
என்றார். தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறிய கமலின் திரைப்படம், கர்நாடகாவில் திரையிடப்படவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றமும் கமல்ஹாசனை மன்னிப்புக் கோரக் கேட்டுக்கொண்டது. இவர்களுக்கெல்லாம் மேலாக, கர்நாடகத்தின் பா.ச.க.
தலைவர்கள் கமலின் இக்கருத்துக்கு எதிராகத் திரண்டெழுந்தனர். இந்தியப் பண்பின் ‘ஒருமை’ பற்றி எப்போதும் பேசும் பாரதிய சனதா, கன்னடத்தை அவமதித்ததாக ஏன் பேசவேண்டும்?
“இந்தியக் கலாச்சாரம் தனித்த பண்புடையது; இப்பண்புகள் ஒன்றையொன்று சார்ந்தவை. இந்திய மொழிகள் வெவ்வேறு வகையாகப் பேசப்பட்டாலும், இம்மொழிகள் அடிப்படையில் ஒன்று” என்பார் கோல்வால்கர். அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை ஒற்றுமைக்கூறுகள் உள்ளன என்று கூறும் இந்த ‘ஒற்றைக் கலாச்சாரக் காவலர்கள்’
கமல் அவர்களின் மொழி பற்றிய கூற்றுக்கு ஏன் கடுமையான எதிர்வினை ஆற்றவேண்டும்? இந்த ஒரு மொழி, ஒரு கலாச்சாரக் காவலர்கள் கமல் கருத்தை மதித்திருக்க அல்லவா வேண்டும்!
‘மொழியால் பிரிவினை பேசுவோர்’
என்று நாளும் நம்மீது பழிதூற்றும் மதவாதிகள், கன்னட மொழியை இகழ்ந்ததாகக் கன்னட மொழிவெறியர்களோடு அணிசேர்ந்து கூச்சல் போடுவது போலித்தனமில்லையா? இரு மாநில மொழிகளுக்கிடையே எழும் முரண்கள் அல்லது மோதல்கள் ‘ஒரே தேசம்’ எனும் கருத்தியலுக்கு முரண் சேர்ப்பது என்ற கருத்தை மறந்துவிட்டார்களா? இக்கூச்சல் இவர்கள் முன்வைக்கும் இந்திய ஒருமைக்கு, ஒற்றுமைக்கு எதிரானது அல்லவா?
‘இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய்மொழி’
என்றும், இம்மொழி தேவபாஷை என்றும் கூறி வந்த வடவர்க்கு, கால்டுவெல் கண்ட திராவிடம், திராவிட மொழிகளின் தனித்த பண்பு, திராவிட மொழிகளுள் சீரிளமை குன்றாமல் தனித்தியங்கும் தன்மை தமிழுக்கு உண்டு என்று வரையறுத்ததால், கால்டுவெல் இன்றைய இந்துத்துவக் கருத்தியலாளர்க்குப் பிரிவினைவாதியாகக் கருதப்பட்டார். கால்டுவெல் உருவாக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல்லின் அறிவுப் பார்வையின் விளைவு. அன்றைய கோல்வால்கரிலிருந்து இன்றைய ஆர்.என். இரவி வரை திராவிடத்தைக் கண்ட கால்டுவெல் பிரிவினைவாதி. ஆரியம் வேறு, திராவிடம் வேறு. இரண்டும் வெவ்வேறு மொழிக்குடும்பங்கள். தனது நீண்ட நெடிய ஆய்வில் இதைக் கண்ட கால்டுவெல் பிரிவினை வாதியாகச் சித்தரிக்கப்படுகிறார். ‘ஒருமை’ பேசும் இந்துத்துவர்கள், கால்டுவெல் பேசும் உண்மையைப் ‘பிரிவினை’
என்கின்றனர். தமிழ், கன்னடம் எனும் குடும்ப மொழிகளின் தொடர்பை மகிழ்வோடு பேசும்போது, பிரிவினைக் கோஷமிடுகின்றனர். தமிழின் பெருமையை ‘வியந்து போற்றும்’
பிரதமர் மோடி, தமிழ்-கன்னட மொழிப் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை.
‘எல்லாருக்குமான நாடு’,
‘எல்லாருக்குமான வளர்ச்சி’
என்று நாவளவில் பேசிக்கொண்டு, நாளும் நடத்தும் பகையரசியலில் மத ரீதியான ஓர்மை
(Polarism) இருக்கிறதே
தவிர, ஒற்றுமைக்கான அல்லது உள்ளடக்குதலுக்கான எந்த முயற்சியும் இல்லை. உத்தரப்பிரதேச முதல்வர் அம்மாநிலத் தேர்தலின்போது ‘எண்பதுக்கும் - இருபதுக்குமான போட்டியில் வெல்லப்போவது யார்?’ என்று சவால் விட்டார். இச்சவாலில் இவர் யாரை ஓர்மைப்படுத்தினார்? யாரை ஒதுக்கிக்காட்டினார்?
தீவிரவாதத்தை
ஆதரிக்கும் நாடாகப் பாகிஸ்தானைத் தொடர்ந்து காட்டிவரும் இந்திய அரசு, பாகிஸ்தான் என்ற நிலப்பரப்பையும், அதனை ஆள்வோரை மட்டுமே எதிரிகளாகக் காட்டுவதோடு, இந்தியாவில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட இசுலாமியர் எதிர்ப்பை உறுதிப்படுத்தத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷம் என்பதையும் மறந்துவிடல் கூடாது. ஒரு பகை நாட்டைக் கட்டமைக்கும்போது, ஏற்கெனவே கட்டமைத்த பகைச்சமூகமே இங்கு முதன்மை பெறுதலை மறந்துவிடல் கூடாது.
அண்மையில்
நடைபெற்ற ‘சிந்தூர்’
ஆப்ரேஷனின் உள்ளடக்கம், இந்துப் பெண்களின் திலகம் அழிக்கப்பட்டது எனக் காட்டுவதோடு, இசுலாமியரைக்
குற்றவாளிகளாக்குவதே அவர்களின் உள்நோக்கம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. மதப் பெரும்பான்மையினரை ஓர்மைப்படுத்துதல், மத ரீதியாக மக்களை
ஒன்றுபடுத்துதல் என்பது நோக்கமாக இருந்தால் வரவேற்கலாம். இந்த நோக்கம் எல்லா மதத்தினருக்கும் உகந்ததே. மத ரீதியாக அம்
மதம் சார்ந்தோரை, அரசதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்காகச் செய்யப்படுமாயின் இதன் பெயர் ஒற்றுமை அல்ல. பெரும்பான்மை மதம் சார்ந்தோரை ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடுவது. இதைத்தான் மதவாத அரசியல் என்கிறோம்.