news
சிறப்புக்கட்டுரை
போர் இல்லாத புது உலகம் பிறக்கட்டும்!

நாம் வாழும் இந்த அழகிய உலகில் என்றுமில்லாத அளவுக்கு இன்று போர்மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அமைதியின் அரசர் இயேசு பிறந்த புண்ணிய பூமியில், இஸ்ரேல்-பாலஸ்தீன மக்களிடையே ஓயாத போர், கிறித்தவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நிகழும் யுத்தத்தால் இருதரப்பு மக்களிடையே பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில்பைரிக் விக்டரியை’… (Pyrrhic Victory) போரின் பாதிப்பிற்கிடையே கொண்டாடி வருகின்றனர். ஏன், ‘மதங்களின் பிறப்பிடம்என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது நாட்டின் மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத, இனக்கலவர வன்முறைகளால் பற்றியெரிந்து கொண்டு இருக்கின்றது. இவ்வன்முறையைத் தூண்டியதும், இதை நடத்துவதும் மாநில-ஒன்றிய அரசுகளே என்று சொல்லப்படுகின்றது. இத்தகைய அமைதியற்ற சூழ்நிலையில் அன்பின் அரசர், அமைதியின் மன்னன் இயேசுவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். அத்துடன் ஜனவரி 1, 2025 அன்று திரு அவைஉலக அமைதி விழாவை’… கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இனிய நன்னாளில், ‘எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களுக்கு அமைதி அருளும்என்னும் அருமையான மையக்கருத்தைத் தியானிக்கவும், செயல்படவும் திருத்தந்தை அழைக்கின்றார். புத்தாண்டில் நாம் மன்னிப்பைப் பெற்று, பிறருக்கு மன்னிப்பை வழங்கி, அமைதியின் தூதர்களாக வாழ்ந்து, எவ்வாறு போரில்லாத புத்துலகம் படைக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இப்பிரபஞ்சத்தைப் படைத்து, அதைப் பராமரிக்கப் படைக்கப்பட்ட மனிதன், கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு ஆளாகிறான் (தொநூ 3:14-19). ஆயினும், அன்பும் இரக்கமும் உள்ள கடவுள், ஒருபுறம் நீதியின் அடிப்படையில் தவறிழைத்த மனிதனுக்குத் தண்டனை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையில், பாவமன்னிப்பும் அமைதியும் வழங்கஅமைதியின் அரசரை’… அனுப்புவதாக (எசா 9:6) வாக்களிக்கின்றார். அவ்வாக்குறுதி தூய ஆவியினால் மரியா கருவுற்று (லூக் 1:31), இயேசுவின் பிறப்பால் (லூக் 2:11) நிறைவு பெறுகின்றது. “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14). கடவுள் வடிவில் விளங்கிய இவர் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனித உருவில் தோன்றி, தம்மையே நமக்காகச் சிலுவையில் தியாகமாகக் கையளித்தார் (பிலி 2:6-8). இவ்வாறு நாம் அனைவரும் அவரால் தூய்மையாக்கப்படுகின்றோம். அதனால் நாம் அவரது இறைத்தன்மையில் பங்குபெற்று (2பேது 1:4), அவரது சகோதரர்-சகோதரிகளாகின்றோம் (எபி 2: 11).

நாம் பிறரை மன்னித்து, மன்னிப்பைப் பெறும்போது, நமது மனச்சுமைகளை இறக்கி வைக்கின்றோம். இயல்பாகவே மன அமைதி பெறுகின்றோம். உடல் நோய்களும், மன நோய்களும் நீங்கி மகிழ்ச்சி அடைந்தவர்களாய், நமது விண்ணகத் தந்தையைப்போல நிறைவுள்ளவர்களாய், கடவுளின் மக்களாய் வாழ்வோம். இக்கருத்தை

மனநலம் மன்னுயிர்க் காக்கும் இனநலம்

எல்லாப் புகழும் தரும்’…(குறள் 457)

என்கிறார் திருவள்ளுவர். அதாவது மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாக விளங்கும். சமூக நலமே எல்லாப் புகழையும் (உலகுக்கு) வழங்கும். எடுத்துக்காட்டாக, ஒரு குளத்தில் கல் எறியப்படும்போது, தண்ணீரில் அலைகள் தோன்றி அழகூட்டுவதுபோல, ஒரு தனிமனிதனில் ஏற்படும் மன்னிப்பு, மன அமைதி ஆகிய பண்புகள் சமுதாயத்திற்கும் பரவி, நேற்றைய சமுதாயத்தைவிட இன்றைய சமுதாயம் மெருகடைகிறது.

2019-இல், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்திலிருந்த தெற்கு சூடான் பகுதியில் ஜனாதிபதி சால்வ கிர், மற்றும் அந்நாட்டு முக்கியத் தலைவர்களின் முன்பாக மண்டியிட்டு, அவர்களது பாதங்களை முத்திசெய்து, அந்நாட்டில் மன்னிப்பையும் அமைதியையும் கொண்டு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்அவரது இச்செயலால் தெற்கு சூடானில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதேபோல, அக்டோபர் 2024-இல் ஒரு செப வழிபாட்டின் வேளையில், திரு அவையின் தவறுகளுக்காக இறைவனிடமும், இறைமக்களிடமும் மன்னிப்புக் கேட்டு, உலக அமைதிக்காகச் செபித்தார். இவரது முயற்சியால் உலக மக்களிடையே ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

இருப்பினும், அமைதியின் அரசர் கிறிஸ்து பிறந்து 20 நூற்றாண்டுகளாகியும், அவர் பிறந்தது முதல் உயிர்த்தது வரை வாக்களித்தஅமைதி’… (யோவா 14:27) என்கிற மாபெரும் செல்வம் எட்டாக் கனியாகவே உள்ளது! நமது பாவ இயல்பால் இக்கொடையை நமதாக்கிக்கொள்ளவில்லை. எவ்வாறு  அமெரிக்காவில் உள்ள ஒரு மகன், தனது தாய்க்கு மாதம் தவறாது 1000 டாலர் நோட்டை அனுப்பினாலும், அதன் மதிப்பறியாதுபச்சைக் காகிதம் தானேஎன்று தனது சுருக்குப்பையில் போட்டுக்கொண்டு தாய் வறுமையில் வாடுகிறாரோ, அதேபோல, கிறிஸ்துவின் மதிப்பீடுகள் பெரும்பாலும் நமக்கு இன்றும்கருத்தியல்ரீதியாகத்தான்உள்ளதே தவிர, இன்னும் நம் வாழ்வின் நீரோட்டத்தில் கலக்கவில்லை.

நிறைவாக, நாம் சாதி, சமயம், இடம், இனங்களைக் கடந்து, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றோம். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கமிருக்கும். சிறார்கள் புதுப்பொலிவுடன் இருக்க புத்தாடை, விதவிதமான கேக்குக்காக ஏங்குவார்கள். நம் அகத்தில் நிறைந்துள்ள பகைமையை நீக்கி அன்பை விதைப்போமென்றால், கயமையை நீக்கி மன்னிப்பை அளிப்போமென்றால், நல்மனம் கொண்ட நமக்கு அமைதியும் மகிழ்ச்சியும் வழங்கும் நிலையில், நாம் போரில்லாத புத்துலகம் படைக்க முடியும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்- புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
அன்பின் மெழுகுதிரி உருகும்! அன்பு ஒருபோதும் அழியாது!

நம் ஒவ்வொருவரையும் இறைவன் அன்பு செய்வதற்காக அவர்தம் இறைநிலையை விட்டு விட்டு மனித நிலைக்கு உட்பட்டார். இந்த நிலையில் அவர் தம்மை மனித நிலைக்குத் தாழ்த்தி, தம் இறைநிலையை மனிதனுக்கு வழங்க முற்பட்டார். அந்த நிகழ்வையே நாம் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

கிறிஸ்துமஸ் அன்பை மையப்படுத்தும் விழா. இயேசு கிறிஸ்து அன்பால் மனுவுரு எடுத்ததை நினைவுபடுத்தும் விழா. “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார் (யோவா 3:16) என்பதை உலகினுக்கு வெளிக்காட்ட நினைத்த ஆண்டவரின் அன்பு விழா!

உண்மையான செல்வம் என்பது இந்த உலகத்தில் உள்ள பொருள் அல்ல; மாறாக, உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்.

திருவருகைக் காலம் கிறிஸ்துவின் வருகைக்கான தயாரிப்பு மற்றும் எதிர்பார்ப்புகளின் காலம். பல்வேறு மரபுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட ஆழமான ஆன்மீக அர்த்தத்தை இக்காலம் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று திருவருகைக் கால மெழுகுதிரிகளை ஏற்றுவது. நான்கு மெழுகுதிரிகளில், அன்பின் மெழுகுதிரி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது கடவுளின் எல்லையற்ற மற்றும் தியாக அன்பை நமக்கு நினைவூட்டுகிறது. நிபந்தனைகள் போட்டு மனிதர்களை நிர்ப்பந்திப்பதில்லை; கட்டுப்பாடுகள் போட்டுக் கதறவிடுவதில்லை; மாறாக, நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டு, நமக்காகத் தம்மையே தியாகம் செய்யும் அன்பே இயேசுவின் அன்பு. புனித பொனவெந்தூரார் கடவுள் மனிதனாய்ப் பிறக்கக் காரணம், “அவர் மனித குலத்தின் மீதும், படைத்த படைப்புகளின் மீதும் கொண்டுள்ள அளவு கடந்த அன்பேஎன்று கூறுகிறார். மேலும், “அன்பை அறியாதவனும் அன்பில்லாதவனும் இறைவனை உணர அல்லது காண வாய்ப்பே இல்லைஎன்றும் கூறுகிறார்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய 12 வயது மகள் என்று வாழ்ந்து வந்தனர். குடும்பத் தலைவர் ஒரு கல்லூரியில் உயிரியல் துறைப் பேராசிரியர். பூச்சிகளையும் புழுக்களையும் வைத்து ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் உடையவர். தன் இல்லத்திலேயே ஓர் அறையை ஒதுக்கி பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். ஒருமுறை அவருடைய மகள் பள்ளியில் தான் வரைந்த அழகான ஓவியத்தைத் தந்தையிடம் காண்பிக்கக் கொண்டு வந்தாள். தந்தையோ ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தார். தன் ஓவியத்தைப் பார்க்க எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும், தந்தையோ கொஞ்சமும் திரும்பிப் பார்க்கவில்லை; மாறாக, எரிச்சல்பட்டு தன் அறையை விட்டு வெளியேறும் படி கத்தினார். அழுதுகொண்டே தன் தாயிடம் வந்த அச்சிறுமி, “நான் ஒரு பூச்சியாகவோ அல்லது புழுவாகவோ பிறந்திருக்கக்கூடாதா? அப்போதாவது அப்பா என்னை நோக்கிப் பார்ப்பாரே!”என்றாளாம்.

அன்புக்காக ஏங்காத இதயம் இவ்வுலகில் ஏதுமில்லை. நண்பர்களுக்கிடையே நட்பாக, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே பாசமாக, வாலிப வயதினரிடையே காதலாக, இறைவனுக்கும் நமக்குமிடையே பக்தியாகக் காணப்படும் இவை அனைத்துமே அன்பின் பல்வேறு பரிமாணங்களே! மனிதனுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் நெருப்பாகிய இவ்வன்பைத் தூண்டி எழுப்பும்போது, அளவற்ற ஆற்றலைக்கொண்ட அணுசக்தியாக இவ்வன்பு மாறிவிடுகிறது.

உண்மையான அன்பிற்கு மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் எத்தகைய பிரிவினைச் சுவரையும் உடைக்கும் வல்லமை உண்டு. தனிமை உணர்வையும் தாழ்வு எண்ணத்தையும் தகர்த்தெறியும் ஆற்றல் அன்புக்கு உண்டு. அன்பின் இப்படிப்பட்ட மேலான ஆக்கச் சக்தியை உணர்ந்ததால்தான் புனித பவுல், “ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள்  செலுத்தவேண்டிய ஒரே கடனாக இருக்கட்டும் (உரோ 13: 8) என்றும், “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13: 10)  என்றும் கூறுகிறார்.

இந்த அன்பின் மெழுகுதிரி அன்னை மரியாவையும் அவர் கணவரான இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பையும் குறிக்கின்றது. ஆண்டவராம் மீட்பரைச் சந்திப்பதற்காகப் புனித யோசேப்பும் அன்னை மரியாவும் எவ்வாறு தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனரோ அவர்களைப் போன்று நம்மை மீட்க நமக்காக இந்த உலகில் பிறந்த இயேசு பாலனை வரவேற்க நம்மை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பதைச் சிந்திக்க அழைக்கும் நான்காம் வாரத்தில் கடவுளின் அன்பை ஆய்ந்தறிந்து, அன்றாட வாழ்வில் அனுபவிக்க இப்பகுதி அழைக்கிறது.

அன்பின் வாரத்தில் சிந்திக்க...

1. கடவுளின் அன்பு நிபந்தனையற்றது!

கடவுளின் அன்பு நமது தகுதியின் அடிப்படையில் அல்ல; மாறாக, அவரது எல்லையற்ற அருளை அடிப்படையாகக் கொண்டது. நாம் பாவிகளாய் இருந்தபோது கடவுள் நம்மை அன்பு செய்தார் (உரோ 5:8). “நீ என்னை அன்பு செய்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன்என்று சொல்பவன் மனிதன். இறைவனோ, “நீ என்னை அன்பு செய்யாவிட்டாலும், நான் உன்னை அன்பு செய்வேன்என்றுரைக்கிறார். “எனது எதிர்பார்ப்புகளின்படி வாழ்ந்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன்என்பவன் மனிதன். இறைவனோ, “எனது எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் சென்றாலும் உன்னை நான் அன்பு செய்வேன்என்கிறார். “நான் சொல்வதைக் கடைப்பிடித்தால்தான், நான் உன்னை அன்பு செய்வேன்என்பவன் மனிதன். “நான் சொல்வதை நீ கடைப்பிடிக்காவிட்டாலும் உன் மட்டில் என் அன்பு மாறாதுஎன்பவர் இறைவன். இந்த அன்பு நாம் தேடிக்கொண்டது அல்ல; இது கடவுளால் நமக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசு!

2. கடவுளின் அன்பு தியாகம் நிறைந்தது!

அன்பு என்பது உணர்வு மட்டுமல்ல; இது ஒரு செயல். எல்லைகள் வகுப்பது மனித அன்பு; எல்லாரையும் ஏற்பது கடவுளன்பு! தொல்லைகள் தருவது மனித அன்பு; தியாகத்தில் மிளிர்வது கடவுளன்பு! இந்தத் தியாக அன்பு, தன்னலமின்றி மற்றவர்களை நேசிப்பதன் மூலம் கிறிஸ்துவைப் பின்பற்ற நம்மை அழைக்கிறது. “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லைஎன்று இயேசு கூறுவதை யோவான் நற்செய்தியில் (13:15) வாசிக்கிறோம்.

இறையன்பின் முழுமை இயேசுவின் தற்கையளிப்பில்தான் நிறைவு அடைகிறது. சுயநலத்திற்காகப் பிறரைப் பலியாக்கத் துணியும் மனிதர்கள் வாழும் இவ்வுலகில், பிறருக்காக நம்மைப் பலியாக்கிட இறைவனின் அன்பு நம்மை அழைக்கிறது. இந்த அன்பின் வாரத்தில், தேவைப்படும் ஒருவருக்காகத் தியாகம் செய்யும் அன்பின் ஒரு செயலைச் செய்ய முயல்வோம்.

3. கடவுளின் அன்பு

மாற்றத்தை உருவாக்குவது!

கடவுளின் அன்பு நம்மை உருமாற்றி பிறரை அன்பு செய்ய அழைக்கிறது. 1யோவான் 4:19 -இல் கூறுவது போல், “அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.” நாம் ஏற்றுகின்ற அன்பு என்னும் மெழுகுதிரியின்  வெளிச்சம் பகைமை, வெறுப்பு, பிரிவு மற்றும் விரக்தி போன்ற அக இருளை அகற்றி அன்பு, அமைதி, மகிழ்ச்சி போன்ற இறையாட்சியின் விழுமியங்களால் ஒளிரும் மனிதர்களாக நம்மை மாற்றும் ஆற்றல் பெற்றது. அன்னை தெரசா கூறினார், “நம் எல்லாராலும் பெரிய காரியங்களைச் செய்துவிட முடியாது; ஆனால், சிறியவற்றை மிகுந்த அன்புடன் நம் அனைவராலும் செய்ய முடியும்.” அன்பின் எளிய செயல்கள் வாழ்க்கையை மாற்றும். இந்த அன்பின் வாரத்தில் இரக்கம், மன்னிப்பு போன்றவற்றின் மூலம் கடவுளின் அன்பைச் சுவைப்போம்.

4. கடவுளின் அன்பு நிரந்தரமானது!

புனித பவுல் கூறுவதுபோல், ‘அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது (உரோ 8:38-39) என்பதை ஒப்புக்கொள்வோம். இந்த நிரந்தர அன்பு, வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளிலும்கூட நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம் (1கொரி 13:10).

அன்பின் வாரத்தில் வாழ்வாக்க...

அன்பைப் பெறுங்கள்: கடவுளின் நிபந்தனையற்ற, தியாகம் நிறைந்த, மாற்றத்தக்க, மற்றும் நிரந்தரமான அன்பைப் பெறுவதற்கு உங்கள் இதயங்களைத் திறந்து, அன்பினை நன்றியுணர்வுடன் பெற முயல்வோம். திருப்பலி, திருவழிபாட்டுத் திருநிகழ்வுகள், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வு ஆகியவை வழியாகவும், நம் அருகில் இருப்பவர்கள் வாயிலாகவும் இறை அன்பைப் பெறுவோம்

அன்பை வெளிப்படுத்துங்கள்: திருவருகைக் காலம் என்பது இயேசுவின் அன்பு மாதிரியைப் பின்பற்றி, இரக்கம், தொண்டு மற்றும் பகிர்வு ஆகியவற்றின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் நேரம். குடும்பத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் வட்டாரத்தில், அன்பியத்தில், பங்கில், சமூகத்தில் என அனைத்துத் தளங்களிலும் எவ்வித நிபந்தனையும் பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் வேறுபாடுமின்றி அன்பு என்னும் இறையியல் பண்பை வெளிப்படுத்துவோம். குறிப்பாக, வாழ்வது ஒரு முறைதான் என்பதை நன்கு உணர்ந்து பகைமை பாராட்டாமல் மன்னிப்போம், மறப்போம்.

அன்பைக் கொண்டாடுங்கள்: கிறிஸ்து பிறப்பு அன்பைக் கொண்டாடும் காலம். வானதூதர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட முதன் முதலாக இடையர்களை அழைத்தார்கள். விண்மீன் ஞானிகளை இயேசுவின் பிறப்பினைக் கொண்டாட அழைத்தது. நாம் நான்காம் வாரம் ஏற்றுகின்ற மெழுகுதிரி அன்பைக் கொண்டாட அழைக்கிறது. எப்படிக் கொண்டாடுவது? அன்பு ஒரு செயல். எனவே, செயல்வழிக் கொண்டாடுவோம். இருப்பதை (அன்பை, செல்வத்தை, உணவை, அறிவை, ஆற்றலை, நேரத்தைஉடைமையை) இல்லாதவர்களோடு பகிர்வோம்! மனநிறைவோடு வாழ்வோம்

ஆகவே, அன்பின் வார மெழுகுதிரியை நாம் ஏற்றி அன்பைப் பெற்றுஅன்பை வெளிப்படுத்தி, அன்பைக் கொண்டாடுவோம்!

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துகளும் ஆசிரும்!

news
சிறப்புக்கட்டுரை
யூபிலி ஆண்டின் கிறிஸ்துமஸ்!

காரிருள் மறைய பேரொளி உதித்தது!

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளதுஎன்னும் எசாயாவின் இறைவாக்குப் பகுதி (எசா 9:2) கிறிஸ்துமஸ் நள்ளிரவன்று எல்லாத் திருவழிபாடுகளிலும் அறிவிக்கப்படும். அன்றைய இஸ்ரயேல் மக்களின் இருண்ட காலச்சூழல் போன்றே நம்முடைய இன்றைய உலகச் சூழலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. அடிமைத்தனமும் சந்தர்ப்பவாதங்களும், நாடுகளிடையே போர்களும் ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும், பேரழிவுகளும் அவற்றினால் புலம்பெயர்ந்து வாழ்வோரின் அடிமைத்தன வாழ்க்கை நிகழ்வுகளும், எதார்த்தங்களும் இவ்வுலகைச் சூழ்ந்திருக்கும் காரிருளாக, இருண்ட மேகங்களாக அமைந்திருப்பதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்அனைவரும் உடன்பிறந்தோர்என்னும் சமூகச் சுற்றுமடலில் குறிப்பிடுகிறார்.

எசாயாவின் இறைவாக்கு இஸ்ரயேல் மக்களின் இருளான, நம்பிக்கையற்ற, சோர்வான, மகிழ்ச்சியற்ற வாழ்விற்குப் புதிய விடியலைக் கொணர்ந்தது. ‘இருள்என்றாலே நம் அனைவருக்கும் மிகுந்த பயத்தை உருவாக்கும் சூழலில்காரிருள்என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் எசாயா, இஸ்ரயேல் மக்கள் மிகவும் துன்பமான வேதனை மிகுந்த சூழலில் வாழ்ந்தனர் என்றே உருவகப்படுத்துகின்றார். காரிருளை மறைக்க, பேரொளி அவசியமாகின்றது. அது சாதாரண ஒளி என்று குறிப்பிடாமல்பேரொளிஎன்று குறிப்பிட்டு மெசியாவின் மீட்பின் செயலானது இஸ்ரயேல் விரும்பும் விடுதலையை, நம்பிக்கையை, முழுமையான, நிறைவான வாழ்வை வழங்கிடும் என உறுதிப்படுத்துகிறார்.

காரிருள் இவ்வுலகின் இருண்ட சூழல்கள்

காரிருள் நம்மைச் சூழும்பொழுது நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நாம் அறிவதில்லை. அச்சூழல் நமக்கு மிகுந்த அச்சத்தைத் தருகின்றது. உள்ளத்தில் பதைபதைப்பும், அமைதியற்ற சூழலும் உருவாகின்றது. வாழ்வின் அடுத்த நகர்வை எப்படி அமைப்பது எனக் குழப்பமும் தெளிவின்மையும் உள்ளத்தை ஆட்கொள்கின்றது. குற்றங்களும், வன்முறைகளும், போர்க் குண்டுகளின் வீச்சுகளும் காரிருளில்தான் நடந்தேறுகின்றன. போர்ச்சூழலில் சிக்கியிருப்போர், புலம்பெயர்ந்தவர்கள், வீடுகளின்றித் தவிப்போர், சாலைகளில் உறங்குவோர், அடுத்த உழைப்பினை எதிர்நோக்கி உறங்குவோர் என அனைவரும் இவ்விருள் எப்பொழுது கடந்து செல்லும் எப்பொழுது வாழ்வு விடியும் எனக் காத்திருப்பது நிதர்சமான உண்மையே. காரிருள் எதிர்நோக்கைத் தருகிறது.

பேரொளி-இயேசு நம்பிக்கையின் கீற்று

யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய முன்னுரைப் பாடலானவாக்கு மனிதரானார்என்னும் இறைவார்த்தைகளில், இயேசுவை உண்மையான ஒளியாகப் பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றார். “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டாயிற்று (யோவா 1:9-10). உண்மையான ஒளியான இயேசுதாம் நம் கடவுள் யார் என்பதை நமக்குக் காட்டுகிறார்.

இறைவனின் முகம் இரக்கத்தின் முகம் என அறிவிக்கின்றார்; கடைநிலையில் இருப்போரைக் கண்ணுற்று, மனிதப் பார்வையை ஒளியேற்றி, எல்லா மனிதர்களையும் இறைவனின் சாயலாகக் காணும் உள்ளொளியை  வழங்குகின்றார். காரிருள் சூழ்ந்த இடத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக, இரவின் இருளை அகற்றிட இயேசு கன்னி மரியின் மகனாக மனுவுடல் எடுக்கிறார் என்கிறார்எத்தகைய இருள் சூழ்ந்த நிலையிலும் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மோடு உள்ளார் என்னும் நம்பிக்கையை விதைக்கிறார்.

இவ்வுலகின் காரிருளில் உள்ள பிரிவினைகளைவிட கிறிஸ்துவின் ஒளி மிகவும் பிரகாசமானது; இவ்வுலகை ஒளிர்விக்கக் கூடியதுஎனக் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் அனைவரின் உள்ளத்திலும் சமூகத்திலும் இருள் சூழ்ந்திருந்தாலும், இயேசுவின் ஒளியானது அவற்றினை முற்றிலும் வெல்லும். நமது குடும்ப உறவுச் சிக்கல்களினால், பொருளாதார ஏற்றத்தாழ்வினால், அரசியல் சூழ்நிலைகளால், சுற்றுச்சூழல்களின் சீரழிவினால் ஏற்படும் இருள் சூழ்ந்த சூழமைவைவிட இயேசுவின் ஒளி பிரகாசமானது என நம்பிக்கைகொள்வதுதான் கிறிஸ்து பிறப்பின் செய்தியாக அமைகிறது. எல்லாக் கருமேகங்களுக்கு இடையேயும் வெள்ளிக் கோடு  ஒன்று உண்டு என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவோம். இவ்விருள் சூழ்ந்த போராட்டங்களும், பிணக்குகளும், அச்சுறுத்தல்களும் அகன்றிட, அகற்றிட முயற்சி மேற்கொள்வோம். யூபிலி ஆண்டில் இயேசுவின் பேரொளியைத் தேர்ந்தெடுப்போம், வளர்த்திடுவோம், வழங்கிடுவோம்.

இயேசுவின் பேரொளியே இவ்வுலகின் இருளை அகற்றிவிடும் மாபெரும் சக்தி. அப்பேரொளியின் பாதை உண்மையை, அமைதியை, மகிழ்ச்சியை, நம்பிக்கையை, மன்னிப்பை, இரக்கத்தை, சகோதரத்துவத்தை வழங்கும் வாழ்வின் பாதையாக விளங்கிடும். ஆகவே, இறைநம்பிக்கையின் மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

நாம் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகக் கொண்டாடவிருக்கும் யூபிலி 2025 -ஆம் ஆண்டில் நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஒளியைத் தாங்கியவர்களாக அதனை இறுகப்பற்றியவர்களாகப் பிறரையும், இவ்வுலகையும் ஒளிர்விப்போம்.

இருள் சூழ்ந்த சூழலிலும் இயேசு என்னும் நம்பிக்கையின் ஒளி நம்மைத் தேடி வருகின்றது. அவரை வரவேற்போம். நம்முடைய வாழ்வு  புத்தாக்கம் பெறவும், இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பொருள்படவும், இயேசு என்னும் பாலகனை மையப்படுத்துவோம். அவரின் பேரொளியினால் ஒளிர்விக்கப்பெற்று, சகோதரத்துவத்தினால், சமத்துவத்தினால், அமைதியினால் நிரப்பிடுவோம்!

news
சிறப்புக்கட்டுரை
சட்டம் ஓர் இருட்டறைதானா?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மெகர் சந்த் மகாஜன், தன் சொந்த வாகனத்தில் டார்ஜிலிங் செல்கிறார். போக்குவரத்துச் சிக்னலைக் கவனிக்காமல், நீதிபதியே தவறு இழைக்கிறார். போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அபராதம்  விதிக்கிறார். நீதிபதியும் தவறை உணர்ந்து அபராதம் செலுத்த முனைகிறார். காவலர் சொல்கிறார்: “நீங்கள் நீதிமன்றத்தில்தான் நாளை அபராதம் கட்ட வேண்டும்.”

நீதிபதியும் மறுநாள் கூண்டு ஏறுகிறார். வழக்கம் போல் பெயர், தொழில் கேட்டவுடன், நீதிமன்றமே அதிர்ந்து, எழுந்து  நின்று வணங்குகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அனைவரையும் கையசைத்து அமரச் சொல்கிறார். வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி முதல் முறையாக அறியாமல் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு வழங்கும்  தன் அதிகாரம் கொண்டு தலைமை நீதிபதியை விடுவிக்கிறார். இதுபோல சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர்நிலை மனிதர்களை வரலாறு அடையாளங்காட்டியுள்ளது.

ஒருநாள் பெரும் வணிக வளாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தேன். பின் இருக்கைக் கார் கண்ணாடி திறக்கப்பட்டு, முகம் அறியாத ஒருவர் வணக்கம் கூறி, நகர்ந்து உட்கார்ந்து, ‘காருக்குள் வாருங்கள்என்றார். நாம் குழப்பத்தோடு பார்க்க, அவர் சொன்னார்: “நான் இந்த ஊரில் நீதிபதியாகப் பணியாற்றுகிறேன். நீங்கள் உள்ளே செல்லும் போது என் ஒட்டுநர் என்னிடம் சொன்னார், நீங்கள் தினகரன் நாளிதழில் விரும்பிப் படிக்கும் கட்டுரைகளை எழுதும் நம்மூர்காரர் இவர்தான்என்றார். நாம் சிரித்தவாறே அருகே அமர்ந்திருந்தோம். நீதிபதி சொன்னார்: “நாங்கள் நீதிபதியாக இருப்பதால் பொதுச் சமூகத் தொடர்புகளை அறுத்துக்கொள்வோம்.”

நாம் கை கூப்பி விடைபெற்றோம். அந்த நீதிபதி பணிமாறுதல் பெற்று, தொலைதூரம் சென்று விட்டார். அப்படிப்பட்ட அவர் தன் விடுமுறை முடிந்து, தான் பணியாற்றும் ஊருக்கு இரவு நேர அரசுப் போக்குவரத்துக் கழகப்  பேருந்தில் பயணிக்கிறார். பயணத்திலே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிகிறது. அவர் ஒரு நீதிபதி என்று அவரது உடலை அடையாளம் காண வந்த காவலர்கள் அதிர்கிறார்கள். இவ்வாறான நீதிபதிகள் சாமான்ய மக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கைகளை உறுதி செய்தனர்.

டான்சிவழக்கு அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  வரும்வரை எல்லாம் நீர்த்துப் போய், எந்த அடிப்படை அறனுமின்றி முதல்வராகத் தொடர்ந்தார் ஒத்தை ரூபாய் சம்பளம் வாங்கிய  செல்வி ஜெயலலிதா. அவரது சொத்துக் குவிப்பு வழக்குகூட ஜான் மைக்கேல் டி குன்ஹா என்ற நல்ல கிறித்தவ நீதிபதியிடம் சென்ற பின் நியாயம் கிட்டியது. நீதிபதி குமாரசாமியின் ஜெயலலிதா  குவித்த  சொத்துக் கணக்கீடு நகைப்பை நாடெங்கும் உண்டாக்கியது. நீதிபதி குன்ஹா, தன் குடும்ப நபர்களைத் தவிர, தன் மாமனாரிடம் மட்டுமே பேசக்கூடிய ஆளுமையாக இருந்தார். அவரது மாமனாரிடம்ஜெவுக்காகத் தூது போனது யார் என்பதை நாடறியும்.

இராமர் கோவில் வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்து தீர்ப்பானது, இராமர் கோவில் ஐந்து நூற்றாண்டுகளாக இராமரை அவ்விடத்தில் வைத்து வழிபட்டார்கள் என்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்ப்பு  வழங்கப்பட்டது. நீதிபதி சந்திர சூட் சொல்கிறார்: “நான் இந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு வழங்குவது என என் பிரார்த்தனையின்போது இறைவனிடம் கேட்டேன்இறைவனின் வழிகாட்டுதலில் தீர்ப்பு கிடைத்ததுஎன்கிறார். பொதுவெளியில் இறைவனே தீர்ப்புக்கு வழிகாட்டுவார் எனில், எதற்காக நீதிபதி சந்திர சூட் ஹார்வோர்டு சட்டப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று  சட்டம்  படித்தார் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துஷ் யந்த் தாவே ஒரு நேர்காணலில், “எனது  46 வருட சட்டப்பணி அனுபவத்தில் அதிகம் வெளியே தெரியக்கூடிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் அவர்களைப் பார்க்கிறேன். அவர் சுய விளம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார். தனது வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்குப் பிரதமர் மோடியை அழைத்து விளம்பரம் தேடுகிறார்என்கிறார்.

மேலும், “நீதிபதிகள் தங்கள் மதம் மற்றும் அரசியல் சார்புகளையும் அது சார்ந்த செயல்களையும் பொது வெளியில் பிரதிபலிப்பதின் மூலம், அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். பிரதமரைத் தன் வீட்டிற்கு அழைத்ததன் பேரில், நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசின் தாக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழலாம். இதனால் நீதிபதி சந்திர சூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தைச் சிதைத்து விட்டார்என்கிறார். ஆனால், பிரதமர் அலுவலகமோ, தலைமை  நீதிபதி சந்திர சூட் அவர்களின் துணைவியாரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார் என அறிக்கை தருகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தேர்தல் பத்திர வழக்கில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. தரவுகளைத் தர மறுத்த, தாமதப்படுத்திய, பாரத ஸ்டேட் வங்கி குறித்து, எந்தக் கண்டனங்களும் இல்லை. பணம் கொடுத்ததற்கும், வாங்கியதற்குமான உள்நோக்கம் ஆராயப்படவில்லை.

சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியைகிரிமினல்என வருணித்து விட்டு, அவர்மீது  எந்த நடவடிக்கையும் இல்லை; ஷிண்டே - பட்னாவிஸ் அரசாங்கத்தைச் சட்டவிரோதமானது என்று அறிவித்ததற்கும், ஆளுநரின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அறிவித்ததற்கும், அதன்பின் எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல் அரசைத் தொடர அனுமதித்ததற்கும், சட்டத்திற்குப் புறம்பாக சபாநாயகரிடம் திருப்பி அனுப்புவதையும், சட்டத்திற்குப் புறம்பான முடிவுகளை எடுக்க அனுமதித்ததையும் மறக்க முடியவில்லை.

அதானி எண்டர்பிரைசஸ்மீது  ஹிண்டன்பர் U.Sநீதிமன்றங்களில் வழக்குத் தொடரக் கேட்பதற்குப் பதிலாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை விசாரணையில் ஒரு பங்காக்கி அதானியைக் காப்பாற்றியதையும் பதிவு செய்ய வேண்டும். 370 சட்டப் பிரிவை நீக்க இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கலந்து ஆலோசிக்க வித்தியாச சூழ்நிலையை உருவாக்கிய சூட்  என்றும் நினைவில் இருப்பார். பீமா கோரேகான் வழக்கு, ஸ்டான் சுவாமி வழக்கு எனத் திருத்திய தீர்ப்புகள் வரலாற்றுப் புகழ்மிக்கவை.

தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறடி நீதி தேவதையின் சிலையில், கண்களில் கட்டப்பட்டுள்ள கறுப்புத் துணியை அகற்றி விட்டார். இதை நாம்  ஒரு புதிய குறியீடாகவும் புரிந்துகொள்ளலாம். இது குறித்து  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (எஸ்.சி.பி..) ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபில், “இந்த மாற்றத்திற்கான பின்னணி தெரியவில்லை. இது குறித்த முன்மொழிவு, எங்கள் கவனத்திற்கு  வரவில்லைஎன்கிறார்.

நீதிமன்றங்களின்  மீதான நம்பிக்கையைக் குடிமக்கள் மெல்ல இழப்பதால், நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. நீதித்துறை மீண்டெழுந்து, நீதியரசர்கள் அறம் சார்ந்த  தீர்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புவோம். நாம் நம் சனநாயகத்தின் நான்காவது தூண் வலுப்பெற தொடர்ந்து குரல் கொடுப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
காலத்தால் மறக்க முடியாத இருபெரும் ஆளுமைகள்! (நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் 1975 – 2025)

1. அருள்பணி. தாமஸ் கவான் டஃபி (நிறுவுநர் - திண்டிவனம் முப்பணி நிலையம்)

(22.01.1989)

அருள்பணி. தாமஸ் கவான் டஃபி சுவாமிகளின் பிறப்பு நூற்றாண்டு விழா 1989 ஜனவரி 5, 6 ஆகிய இரு நாள்களில் திண்டிவனம் கத்தோலிக்க நடுநிலையத்தில் எல்லா நிறுவனங்கள், பங்குகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான ஜனவரி 5-ஆம் தேதி பிற்பகல், 1000 ஆசிரியருக்கும் 300 வேதியருக்கும் கருத்தரங்கு  முப்பணி நடுநிலையத்தில்  (TNBCLC) தொடங்கியது.

தொடக்க உரையில் மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள், அயர்லாந்து நாட்டில் பிறந்த தாமஸ் கவான் டஃபி உண்மையை நேசித்தவர் என்றும், அதற்கு அடுத்தபடியாகத் தமிழகக் குழந்தைகளை நேசித்தார் என்றும் கூறினார். ஆசிரியர் பணியும் வேதியர் பணியும் இணைந்த விதத்தில் கல்வித்திட்டத்தை அமைக்கவும், அதற்கென ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தவும் அவர் பாடுபட்டார் என்றும் தெரிவித்தார். அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் அருள்பணி. மைக்கேல் கர்ட்டின் சுவாமிகளும், அருள்பணி. மரிய குழந்தை சுவாமிகளும் டஃபியின் வலது கரம்போல் விளங்கினர் என நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே அயர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் அண்ணன் மகள் மோரா கவான் டஃபி பேசுகையில் விழாவில் தான் கலந்துகொள்வது பற்றி அளவற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தார். வேதியர் கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற தாமஸ் கவான் டஃபியின் எண்ணத்தைப் பிரதிபலித்தார். அருளாளர் டஃபி காலத்தில் ஆசிரியப்பணி செய்தவர்களும், அப்போது மாணவர்களாக இருந்தவர்களும் டஃபி அடிகளுடன் தங்களுக்கு இருந்த அன்பின் உறவை, அவருடைய பண்புகளை இனிமையாகப் பசுமை உணர்வுடன் பகிர்ந்துகொண்டனர்.

மாலை 5.30 மணிக்கு ஆசிரியர்கள், வேதியர்கள், மாணவர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர், அருள்சகோதரர்கள், அருள்பணியாளர்கள்ஆயர்கள் அனைவரும் கையில் எரியும் மெழுகுதிரியுடன் பங்கு கோவிலிலிருந்து புறப்பட்டு புனித அன்னாள் உள்விடுதி வளாகத்திற்கு வந்து நற்கருணைப் பவனியில் கலந்துகொண்டனர்.

நற்கருணைப் பவனியில் முன்னரே மதியத்தில் அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி ஆர்.சி. ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது. டஃபியின் மிஷனரி பணி, கல்விப் பணி, சாரண இயக்கத்தில் ஈடுபாடு, ஆசிரியர்-வேதியர் பணி, அவர் ஏற்படுத்திய நிறுவனங்களின் மாதிரி அமைப்புகள், அவர் எழுதி வெளியிட்ட நூல்கள், பொன்மொழிகள் ஆகிய அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றன. அத்துடன் பூவிருந்தவல்லி விவிலிய நடுநிலையத்தினர் அமைத்த திருவிவிலியக் கண்காட்சியும் விழாவில் இடம் பெற்றது.

அடுத்த நாள் ஜனவரி 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4.30 வரை முப்பணி நடுநிலையத்தில் தியானமும் கருத்தரங்கும் நடைபெற்றன. கருத்தரங்கில் அருள்திரு. மு. வல்தாரிஸ், இன்றைய நடைமுறை வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளையும், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கூறினார்.

மாலை ஐந்து மணிக்கு புனித அன்னாள் உள் விடுதி வளாகத்தில் மேதகு கர்தினால் சைமன் லூர்துசாமி ஆண்டகை அவர்கள் தலைமையில் ஒரு பேராயர், ஐந்து ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலியில் சேலம் ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலிக்குப் பின்னர் இரவு 7 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவின் சிகரமாய்டஃபி முன்னோடிஎன்ற ஒலி - ஒளிக்காட்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களைச் சார்ந்த நடிகர்களும் கலைஞர்களும் பங்கேற்றனர். இறைவன் இயேசுவின் மீட்புப்பணியுடன் அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் வாழ்வைப் பின்னிப் பிணைக்கப்பட்டது அருமையான கலைவிருந்தாக இருந்தது.              

- குழந்தைசாமி

2. தந்தை காண்டிடோ வல்லோஜியா

மானுடத்தை நேசித்த மாண்புமிக்கவர்!

(05.06.1988)

1988 - ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள் மதியம் சுமார் 1.40 மணியளில் ஒரு வரலாறு வீழ்ந்தது! பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தில் ஏறக்குறைய 46 வருடங்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து, தாய்த் திரு அவைக்கு நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களை உருவாக்கிக் கொடுத்த இதயத்தந்தை காண்டிடோ வல்லோஜியாவின் கரங்கள் இறுதியாக அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தது அந்தக் கணத்தில்தான். அவரது இறுதிச்சடங்கிலே அவர் உருவாக்கிய குரு செல்வங்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களில் நீர் மல்க கல்லறையில் அவருக்கு இறுதிவிடை கொடுத்தார்கள். அவர் நேசித்த ஏழைகள், ஒரு நாள் முழுவதும் அவரது பூதவுடலைச் சந்திக்கக் கொண்டு வந்த பூமாலைகள் அவரது கல்லறையை நிறைத்துவிட்டன. அவர்மானுடத்தை நேசித்தார்; மனித மாண்பைப் போற்றினார்.”

இத்தாலி நாட்டிலே பிறந்து, சொந்தபந்தங்களையெல்லாம் துறந்து, இந்திய நாட்டில் புகுந்து பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தைத் தனது பணிவீடாகக் கொண்டு, மருத்துவமனைப் படுக்கையில் இருந்துகொண்டேஎன்னை எனது குருமடத்திற்கு அழைத்துப் போங்கள்என்று இறுதி மூச்சுவரை, நொடிக்கு மூன்று தடவை ஒரு மனிதர் சொன்னார் என்றால், அவர் தனது இதயத்தையே அந்த நிறுவனத்தில்தான் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

இருக்கின்ற இடத்தில் இயன்றதை, இயன்ற வரைக்கும் செய்ய வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவமே அவரை வாழும் வரை வளர விட்டது!

குருகுலம் என்ற நிறுவனத்தோடு மட்டும் தனது பாசப்பிணைப்பை நிறுத்திக் கொண்டவரல்லர் அவர். அந்த நிறுவனத்தில் உருவான ஒவ்வொரு குருவின்மேலும் அதே பாசத்தை வைத்திருந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சில நூற்றுக்கணக்கான குருக்களும், ஐந்து ஆயர்களுமே அதற்கு இறுதி சாட்சியம் தந்தனர். தான் பேராசிரியராக, அதிபராக, பொறுப்புகள் பலவற்றில் இருந்தபொழுதும் அவற்றையெல்லாம்அதிகாரங்களாகபார்த்து ஆட்டிப் படைத்தவர் அல்லர்; மாறாக அன்பால் அரவணைத்து, அழைத்து வழிநடத்திச் சென்ற ஓர் அன்னையைப் போன்றவர்.

திரு இருதயக் குருமடத்தின் ஒவ்வொரு கல்லும், மரமும் அவரது கடின உழைப்புக்கு, அவை அழியும் வரைக்கும் அத்தாட்சிப் பத்திரங்கள்!

அவர் குருமடத்திற்கு மட்டுமே குலவிளக்காய் திகழ்ந்து, தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ளவில்லை. அவரின் பார்வை பாமர மக்களின் பாடுகளை நோக்கித் திரும்பியது! சுற்றியுள்ள கிராமங்களில் வீடின்றித் தவித்தவர்களுக்காய் தந்தையின் கரங்களே குடிசை போட ஆரம்பித்தன! சமுதாயத்திலே ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்களுக்காகவே ஒரு காலனி! ஏழை மக்களின் உடல் பிணி போக்க இலவச மருந்தகம்! வேலை வாய்ப்பற்ற இளம்பெண்களுக்காக அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தையல்பயிற்சி நிலையமும், தட்டெழுத்துப் பயிற்சி நிலையமும்! வருடா வருடம் மும்மாரி தவறினாலும் ஏழைக் குழந்தைகளுக்குத் தவறாமல் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள்! ஆலயமின்றி தவித்த இடங்களிலெல்லாம் அழகிய ஆலயங்கள்! குற்றவாளிகளையும், குற்றவாளிகளாக்கப்பட்டவர்களையும் சிறையில் சென்று அணைத்துக் கொண்ட அவரது சிறை சந்திப்புகள்! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!

ஆக, மனிதர்கள் பிறந்து கொண்டேயிருப்பார்கள்! சந்ததிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்! இறந்த பிறகு பலரின் வாழ்க்கை வரலாறாக எழுதப் படும். ஆனால், வாழும் பொழுதே வரலாறு படைப்பவர்கள் ஒருசிலரே! அந்த ஒருசிலரில் இந்த மாமனிதர் முதல் மனிதர்!

- வில்லியம் சந்தானம்

news
சிறப்புக்கட்டுரை
ஆழ்கடலைச் சுரண்டும் திட்டம்

நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36.596 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்திற்கான கொள்கையின் கீழ் 9-வது ஏல அறிவிப்பை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 03.01.2024 அன்று வெளியிட்டிருக்கிறது. இந்த ஏல அறிவிப்பு திறந்தவெளி அனுமதிக் கொள்கையின் (Open Acreage Licensing Policy) கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 2014 -ஆம் ஆண்டு திறந்தவெளி அனுமதி என்ற புதிய அனுமதி வந்தது. இதுவரை 8 சுற்று ஏலங்கள் விடுக்கப்பட்டிருந்தன. அது டெல்டா பகுதிகள், விழுப்புரம், இராமநாதபுரம் பகுதிகளில் ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த 9-வது ஏலத்தில் தமிழ்நாட்டின் நான்கு வட்டாரங்களில் 32,485 சதுர கி.மீட்டர் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆழமற்ற கடற்பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும், ஆழமான இந்தியக் கடற்பகுதிகளில் 95 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் மூன்று தொகுதிகளும், சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் ஒரு தொகுதியும் அமைந்துள்ளன. இந்த நான்கு ஆழ்கடல் தொகுதிகளையும் கபளீகரம் செய்வதற்கு ரிலையன்ஸ், வேதாந்தா, .என்.ஜி.சி., பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.

சட்ட விதிகளிலிருந்து விலக்கு: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment) அறிக்கை 2020- இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி) ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவையில்லை) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை) சுற் றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தேவையில்லை. நில அதிர்வு சோதனையால் ஏற்படக்கூடிய தீங்குகளை மதிப்பிடல் வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் எப்படி எடுக்கப்படுகிறது?

ஹைட்ரோ கார்பன் நீரியல் விரிசல் முறை (Hydraulic fracturing) என்ற மிக ஆபத்தான முறையில் எடுக்கப்படுகிறது. பூமியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்தான் கடலுக்கடியிலும் பயன்படுத்தப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைத் தேடுவதற்கு நில அதிர்வு (Seismic Surveys), ஏர் துப்பாக்கிகள் (Air Guns) கடல் நீரில் 250 டெசிபல்களில் வெடிக்கும் பயன்பாடுதான் இந்தச் சோதனை. மேப்பிங் தொழில்நுட்பம் இது வரை வந்துவிட்ட நிலையில், கடல்நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கு இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பெரிய அளவிலான துல்லியமற்ற முறைகள் ஏன் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே பதில் இலாபமும் இலாப வெறியுமே. கடலின் அடியில் மணலுக்குக் கீழே பத்து கி.மீட்டரில் ஏர் துப்பாக்கிகள் செலுத்தப்படுகின்றன. மிகப்பெரிய இரைச்சலுடன் அவை அதிர்வலைகளை ஏற்படுத்தும். பத்து கி.மீட்டருக்குள் அவை புவியின் தன்மை, எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளை உறுதிப்படுத்தும். கனிமங்களின் இருப்பை உறுதிசெய்து திருப்பும் அதிர்வலைகளை அளவிடும் கருவிகள் ஏற்கெனவே அளவிடும் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும். உள் வாங்கும் (Receiver) கருவிகள் பெற்றுக்கொள்ளும். இந்தச் சோதனையில் ஒவ்வொரு 4 மற்றும் 10 வினாடிகளிலும் 24 மணி நேரத்தில் வாரத்தின் 7 நாள்களும் சத்த அலைகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்தச் சோதனை ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நீடிக்கலாம்.

திறந்தவெளிக் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கி.மீட்டர் தூரம் இந்த இரைச்சல் அதிர்வுகள் இருக்கும். இதனுடைய இரைச்சல் அளவைப் பொறுத்து பாலூட்டிகள், திமிங்கலங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் கேட்கும் திறன், ஒலி எழுப்பும் திறன், தன் இணையை, தனது உறைவிடத்தைத் தேடும் திறன் குறைந்தோ, முழுமையாகவோ பாதிக்கப்படும். இந்த அதிர்வுகளுக்கு முதலில் இரையாவது மிதவை வாழிகள் (Plankton).  ஒட்டு மீன்கள் (Crustaceans) இதனால் உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறைந்த சத்த அதிர்வுகளை எழுப்பி தொடர்புகொள்ளும் உயிரினங்கள் 100 மீட்டருக்கு அப்பால் கடலில் மேற்பரப்பிலிருந்து கடலுக்குள் விழும் உணவுகளைத் தனது உணர்திறன் ஆற்றலால் (sensitive acoustic system) புரிந்துகொள்ளும் கடல் உயிரினங்கள் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உட்படும். இது போன்று கடலுக்கு அடியில் பயன்படுத்தப்படும் வெளிச்சம், பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த வட்டாரத்தின் ஒட்டுமொத்த மீன் வளங்களையே அழித்துவிடும்.

பொதுவளங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயல்பாடும் எதிர்காலத் தலைமுறையினரின் உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நில அதிர்வுச் சோதனையிலிருந்து வெளிவரும் இரைச்சல் ஆய்வு கப்பலிலிருந்து 4000 கி.மீ. வரையிலும் கேட்பதாக அறியப்படுகிறது. நுண்புழுக்கள் மற்றும் கடல் நத்தைகளில் வளர்சிதைவு, உடல் குறைபாடுகள் இதனால் ஏற்படுகின்றன. பல்லுயிர் வகைகளின் செயல்பாடுகள் இதனால் மிகப்பெரிய பாதிப்படைகின்றன. தொடர்ந்து வெளிப்படும் ஒலிமாசால் செங்குத்தாக இடம்பெயரும் மிதவை உயிரினங்களின் (plankton) இடப்பெயர்ச்சி பாதிக்கப்படும்.

இந்தியாவின் அரபிக் கடலோரத்தில் கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை 22 மிக முக்கியமான மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டுகள் அல்லது மீன்பிடித்தளங்கள் இருக்கின்றன. வெட்ஜ்பேங்க் பவளப் பாறைத்திட்டு (7 00’- 8 20’ N, 76 30’- 78 00 E) கன்னியாகுமரியிலிருந்து தென்மேற்காக 36 மைல்தூரத்தில் 10,000 சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இலங்கையின் கொழும்பிலிருந்து 115 கடல் மைல் தொலைவிலிருக்கிறது. உலகின் மூன்றாவது மீன் வளமிக்கப் பரப்பாக இருக்கிறது.

வெட்ஜ்பேங்கில் மீன்பிடிக்கச் சிறந்த காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை. இந்தக் காலகட்டத்தில் நெய்மீன், கலவா, சேமீன், சுறா போன்ற மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். வெட்ஜ்பேங்க் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்குச் சிறந்த இடம். இங்கே மீன்பிடிக்க வெளிநாட்டுக் கப்பல்களுக்கும் இழுவை மடிகளுக்கும் தடையில்லை.

வெட்ஜ்பேங்கை ஒட்டியே மேற்கொள்ளப்போகும் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளால் எண்ணெய் கசிவோ, கடல் மாசுபாடுகளோ, விபத்துகளோ ஏற்படின் அது  சென்னையைப் போல 15 முதல் 20 பரப்பளவுள்ள நிலப்பரப்பு கொண்ட வயல்வெளிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதற்குச் சமமாகும்.

வெட்ஜ்பேங்க் ஒரு நிரந்தர மீன்வங்கி. கடலன்னை அளித்திருக்கும் ஓர் அமுதசுரபி. முட்டாள்தனத்தினாலும் பேராசையினாலும் இந்த அமுதசுரபியை அழித்திட ஒன்றிய அரசு முயல்கிறது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக மூன்று எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளை வழங்குவதற்கான ஒன்றிய அரசின் முன்மொழிவிலிருந்து வெட்ஜ்பேங்க் எதிர்கொள்ளப்போகும் அச்சுறுத்தல் புலப்படும்.

வெட்ஜ்பேங்கைச் சார்ந்திருக்கும் இரண்டு இலட்சம் மீனவர்களும் தற்கொலை செய்ய நேரிடும். ஏற்கெனவே 100 வருடங்கள் நமக்குச் சொந்தமான வெட்ஜ்பேங்க் மீன்தளத்திலிருந்து இலங்கையும் வெளிநாட்டுக் கப்பல்களும் மட்டுமே இழுவை மடியைக் கொண்டு நமது மீன்வளத்தை வேட்டையாடி, பவளப்பாறைகளை அழித்துக் கொண்டிருக்கின்றன.

மீன்பிடித்தல் சம்பந்தமான அனைத்துத் தொழில் வளர்ச்சிக்கும், மீன்வள வளர்ச்சிக்கும், மீன் பிடித்தத்திற்கும் ஆய்வுகளை மேற்கொள்ள மறுக்கும் அரசு, கடல்வளங்களைச் சுரண்டி ஆழ்கடல் கனிமங்களை, எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாயுக்களை எடுப்பதற்கு அதீத ஆர்வம் காட்டுவதிலிருந்தே இதன் உண்மை புலப்படும். இத்தகைய திட்டங்கள் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்திற்காகவே அன்றி, இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காக அல்ல!