news
ஆன்மிகம்
அன்னை மரியா பாஸ்கா மறைப்பொருள் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 51)

1. இயேசுவைக் கல்லறைக்குள் வைத்தபின்மரியா மட்டுமே வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த உயிர்ப்பு அறிவிப்புச் செய்தியைப் பெறுவதற்காக தன்னையே தயாரித்துக் கொண்டு, நம்பிக்கையின் சுவாலையை அணையாது காப்பதில் நிலைத்திருக்கிறார் (Address at the General Audience, 3 April 1996; in <> English Edition, 10 April 1996, p.7). புனித சனி அன்று உணரப்பட்ட இந்த எதிர்பார்ப்பானது, ஆண்டவரின் அன்னையின் நம்பிக்கையில் மிகவும் உன்னதமான தருணங்களில் ஒன்றாகும்: உலகைச் சூழ்ந்திருக்கும் இருளில், அவர் தன்னை வாழ்வின் இறைவனிடம் முற்றிலும் ஒப்படைத்து, தன் மகனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, இறைவாக்குறுதிகள் நிறைவேறுமென நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

நற்செய்தி நூல்கள் உயிர்த்த ஆண்டவரின் பல்வேறு காட்சிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆனால், இயேசுவுக்கும் அவரது தாய்க்கும் இடையே எந்தவிதமான சந்திப்பும் நடந்ததாகக் குறிப்பிடவில்லை. நற்செய்தியாளர்களின் இந்த அமைதியானது, உயிர்ப்புக்குப்பின் கிறிஸ்து மரியாவுக்குத் தோன்றவில்லை என்ற முடிவுக்கு இட்டுச் செல்லக்கூடாது; இருப்பினும், நற்செய்தியாளர்கள் ஏன் அந்தவொரு நிலைப்பாடு எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களைத் தேட அந்த அமைதியானது நம்மை அழைக்கின்றது.

உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தவர்களுள் மரியா எவ்வாறு இல்லாமல் இருக்க முடியும்?

விடுபட்டதற்கான காரணங்களைக் கணித்தால், இந்த அமைதியானது நமக்கு மீட்பளிக்கத் தேவையானவை பற்றிய உண்மை மட்டுமேசாட்சிகளாக கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களின்வார்த்தையிலே தரப்பட்டிருக்கக் கூடும் என்பது தெளிவாகும் (திப 10:41). அதாவது, “மிகுந்த வல்லமையோடு (திப 4:33) ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு அவர்களின் சாட்சியைப் பதிவுசெய்த திருத்தூதர்கள் அவர்களுக்குத் தோன்றுமுன், உயிர்த்த ஆண்டவர் பல நம்பிக்கைக்குரிய பெண்களுக்கு அவர்களது திரு அவை சார்ந்த பணியின் நிமித்தம் தோன்றினார் என்பதையும் பதிவு செய்திருக்கின்றனர்: “என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் (மத் 28:10).

புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் உயிர்த்த தன் மகனுடனான அன்னையின் சந்திப்பைப் பற்றிப் பேசவில்லையெனில், அத்தகைய சாட்சியம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலை மறுத்தவர்களால் மிகவும் சார்புடையதாகக் (Biased) கருதப்பட்டிருக்கலாம். அதனால் அது நம்பத்தகுந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது என்ற காரணத்தினாலேயே இந்த அமைதி நிலவலாம்.

2. மேலும், நற்செய்தி நூல்கள் உயிர்த்த இயேசுவின் ஒருசில காட்சிகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. உயிர்ப்பு நாளுக்குப்பின் அந்த நாற்பது நாள்களில் என்னவெல்லாம் நடந்தன என்பது பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு நிச்சயமாக அவைகளில் கிடையாது. புனித பவுல், “அவர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார் (1கொரி 15:6) என்பதை நினைவுகூர்கின்றார். மிகப்பலரால் அறியப்பட்ட ஒரு விதிவிலக்கான நிகழ்வை நற்செய்தியாளர்கள் குறிப்பிடாமல் விடுத்ததை நாம் எவ்வாறு விளக்குவது? உயிர்த்த ஆண்டவர் அளித்த பிற காட்சிகள் நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளாக இருந்தபோதிலும், அவை ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கு இதுவே தெளிவான சான்றாகும். முதல் சீடர்களின் சமூகத்தில் அன்னை மரியா வீற்றிருந்த நிலையில் (திப 1:14), இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த தன் மகனைச் சந்தித்தவர்களிடமிருந்து அவர் எவ்வாறு விலக்கப்பட்டிருக்க முடியும்?

3. உண்மையிலேயே உயிர்த்த இயேசு முதன்முதலில் தோன்றிய நபர் அவரது அன்னையாகவே இருந்திருக்கக்கூடும் என்று கருதுவது நியாயமானதே. விடியற்காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்களின் குழுவில் மரியா இல்லாதிருந்தது (மாற் 16:1; மத் 28:1), அவர் அதற்கு முன்பாகவே இயேசுவைச் சந்தித்துவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டக்கூடும் அல்லவா! சிலுவையின் அடியில் உண்மையுள்ளவர்களாய் நின்று, நம்பிக்கையில் மிகுந்த உறுதி கொண்டவர்களாய் விளங்கிய பெண்களே இயேசுவின் திருவுளப்படி உயிர்த்தெழுதலின் முதல் சாட்சிகளாக இருந்தனர் என்ற உண்மையும் இந்த அனுமானத்தை உறுதிப்படுத்துகிறது.

உண்மையிலேயே, உயிர்த்த ஆண்டவர் அவர்களுள் ஒருவரிடம், அதாவது மரிய மதலேனிடம் திருத்தூதர்களுக்கு உயிர்ப்புச் செய்தியைச் சொல்வதற்கான பணியை ஒப்படைக்கின்றார் (ஒப்பிடுக. யோவா 20:17-18). இந்த உண்மையும் ஒருவேளை இயேசு மிகவும் நம்பிக்கையோடிருந்து தாம் பலவாறு சோதிக்கப்பட்டபோதும் அந்த நம்பிக்கையை குறைவுபடாமல் காத்துக்கொண்ட அவருடைய தாய்க்குத்தான் தம்மை முதலில் காட்டியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இறுதியாக, கல்வாரி மலையில் அன்னை மரியாவின் தனித்துவமான மற்றும் சிறப்பான உடனிருப்பும், சிலுவையில் தன் மகனின் பாடுகளோடு அவர் கொண்டிருந்த முழுமையான பிணைப்பும், மறைப்பொருளில் அவரது பங்களிப்பும் மிகச் சிறப்பான முறையில் அமைந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த செடூலியஸ் (Sedulius) என்ற எழுத்தாளர், உயிர்த்தெழுந்த மகிமை நிறைந்த வாழ்வில் கிறிஸ்து முதலில் தம் தாய்க்கே தோன்றினார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். உண்மையில், கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பின்போது அவர் உலகிற்குள் நுழைவதற்கான வழியாக இருந்த அன்னை மரியா, கிறிஸ்துவின் மகிமையுள்ள வருகையின் தூதராக மாறுவதற்காக, உயிர்த்தலின் வியத்தகு செய்தியைப் பரப்பவும் அழைக்கப்பட்டார். இவ்வாறு அவர் திளைத்த மகிமையில் உயிர்த்தெழுந்தவரின் திரு அவையின் மகிமைக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.

4. உயிர்த்தவருக்காகக் காத்திருந்து, அவரது உயிர்ப்புக் காட்சியின்போது சீடர்களின் குழுமத்தில் அவரைச் சந்திக்கின்ற திரு அவையின் மாதிரியாகவும் உருவகமாகவும் திகழும் அன்னை மரியா, பாஸ்கா மகிழ்ச்சியின் நிறைவில் தானும் அகமகிழும் பொருட்டு, உயிர்த்த தன் மகனுடன் ஒரு தனிப்பட்டச் சந்திப்பைக் கொண்டிருந்தார் என்று கருதுவது மிகவும் ஏற்புடையதே.

ஆண்டவரின் அன்னை உலக மாந்தர் அனைவருக்கும்மகிழ்ச்சியின் காரணியாக (Cause of joy) விளங்குகிறார்

புனித வெள்ளியன்று கல்வாரியிலும் (ஒப்பிடுக. யோவா 19:25), பெந்தகோஸ்தே நாளில் மேலறையிலும் (உக. திப 1:14) வீற்றிருந்த கன்னி மரியா, கிறிஸ்து உயிர்த்தெழுந்ததன் சிறப்பான சாட்சியாகவும் இருந்திருக்கக்கூடும். இதன் வழியாக, பாஸ்கா மறைப்பொருளின் அனைத்து முக்கியத் தருணங்களிலும் அவரது பங்கேற்பு முழுமை பெறுகிறது. உயிர்த்த இயேசுவை வரவேற்கும் அன்னை மரியா, இறந்தோரின் உயிர்த்தெழுதலின் மூலம் நிறைவடைய விரும்பும் மனிதகுலத்தின் அடையாளமாகவும் முன்காட்டியாகவும் திகழ்கிறார்.

பாஸ்கா காலத்தில் கிறித்தவச் சமூகம் ஆண்டவரின் அன்னையை நோக்கி, “விண்ணக அரசியே, மகிழ்வீராக. அல்லேலூயா! என்று கூறி அகமகிழ அழைப்புவிடுக்கிறது. இதன்மூலம், கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பின்போது வானதூதர் அன்னையிடம் கூறியமகிழ்வீராகஎன்ற வார்த்தையைக் காலமெல்லாம் தொடரச்செய்து, உலக மாந்தர் அனைவருக்கும் அன்னை மரியாபேரின்பத்தின் காரணியாகமாறுவதற்காக, இயேசுவின் உயிர்த்தெழுதலில் அவர் அடைந்த மகிழ்ச்சியை அது நினைவுகூர்கிறது.

news
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 07

சிறையில் தோமாவைச்  சந்தித்த காத், அவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவர் அணிவதற்கு விலையுர்ந்த ஆடை ஒன்றைக் கொடுத்து, அவர் பாதங்களில் விழுந்து, “கடவுளின் மனிதரே! என் சகோதரன் பெருங்குற்றம் ஏதேனும் செய்திருந்தால், அவருக்குத் தேவையான மன்னிப்பைக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொடுங்கள்என வேண்டினான்.

விண்ணகச் செல்வத்தின்முன் உலகச் செல்வங்கள் ஒன்றுமேயில்லைஎன்ற தோமா, ஹப்பான்  பின்தொடர சிறைச்சாலையை விட்டு வெளியே வருகையில், எதிரே அரசன் கொண்டோபரஸ் அவரைச் சந்திக்க விரைந்து வந்தான். தன்னுடைய செல்வத்தை வீணாக்காமல் ஏழைகளுக்கு அளித்துமண்ணகப் புண்ணியங்களால் விண்ணகத்தில் தோமா தனக்கான அரண்மனை கட்டியிருப்பதை உணர்ந்து நெகிழ்ச்சியுற்றிருந்த அவன், தோமாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்: “கடவுளின் ஊழியரே, இப்போது எனக்குத் தேவையானது உம் மன்னிப்பு ஒன்றே. என் குற்றங்களை மன்னியும். உம்மைத் துன்புறுத்தியதற்காக என்னை மன்னித்து, எனக்காகக் கடவுளிடம் செபியும். உம்முடைய கடவுளின் அடிமையாக என்னை ஏற்றுக்கொண்டு, எனக்காக நீர் விண்ணகத்தில் கட்டியுள்ள அரண்மனைக்குள் நான் வசிக்க வழி செய்யும்என்றான்.

கடவுள் உன்மீது மிகுந்த கருணை கொண்டவராக இருக்கவே விண்ணக வெளிப்பாட்டை உமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவை நம்பி திருமுழுக்குப் பெறுங்கள். முடிவில் அவரின் நீடித்த அரசில் நீர் என்றும் பங்கு பெறுவீர்என்றார்.

 இதைக் கேட்டுக் கொண்டிருந்த காத், “என் சகோதரனுக்காக நீர் கட்டிய அரண்மனையை நான் விண்ணகத்தில் கண்டேன். அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்என்றான். உடனே தோமா, “உம் சகோதரன் விரும்பினால் அதை அவரிடம் நீர் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்என்றார்.

உடனே அரசன், “கடவுள் சித்தமானால் அந்த அரண்மனை எனக்கென இருக்கட்டும். என் தம்பிக்காக நீர் மற்றோர் அரண்மனை கட்டித்தாரும். இல்லாவிடில், எங்கள் இருவருக்குமே அதே அரண்மனையில் இடம் கிடைக்க உதவி செய்யும்என்று வேண்டினான்.

அவ்விருவருக்கும் தோமா கூறினார்: “உலகம் தொடங்கிய நாள் முதல் எண்ணற்ற அரண்மனைகள் விண்ணகத்தில் தயாராக உள்ளன. அவற்றை பொருள் கொடுத்து வாங்க முடியாது. உங்கள் நம்பிக்கையாலும், தானதர்மங்களாலுமே வாங்க முடியும். மற்ற செல்வங்கள் எல்லாம் விண்ணகத்தில் பின்தொடராதுஎன்றார்.

அரசனின் மனமாற்றத்திற்காகத் தோமா கடவுளுக்கு நன்றி கூறி செபித்தார். “ஆண்டவராகிய இயேசுவே! உண்மையில் ஆண்டவராகிய நீர் இந்த அரசனையும், இவர் சகோதரனையும் ஏற்றுக்கொள்ளும். இப்போது இவர்கள் உமக்காகத் துன்புறவும்  வெறுக்கப்படவும் உயிர் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். உம்முடைய மீட்பை நாங்கள் பெற்றுக்கொள்ள உம் இரக்கத்தைப் பொழியும்என்றார்.

இந்நிகழ்வு நடந்து ஏழு நாள்களுக்குப் பின்னர் இருவருக்கும் தோமா திருமுழுக்கு அளித்தார். அவர்கள் தலையில் எண்ணெய் பூசி அவர்களை உறுதிப்படுத்தினார். அரசனைத் தொடர்ந்து அன்று பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஆண்கள் மட்டுமே 40,000 பேர் தோமாவிடம் திருமுழுக்குப் பெற்றனர். அன்று ஏராளமான நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்தட்சசீலத்தில் தங்கியிருந்த தோமாவின் பணிகள் நகர்ப்புறங்கள், கிராமங்கள், ஊர்கள் என எல்லா இடங்களிலும் பரவின. அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டங் கூட்டமாக அவரைத் தேடிவந்து, அவரின் போதனைகளைக் கேட்டனர். போதிப்பதோடு செபித்தார், பாடல்கள் பாடினார், அம்மக்களுக்கு ஆசிர் வழங்கினார்.

தோமா சமவெளிப் பகுதிகளில் போதிக்கையில் அவர் முகத்தைப் பார்த்தபடி போதனையைக் கேட்க மக்கள் முண்டியடித்து நின்றனர். இதனால் முன்புறம் நிற்பவர்கள் தலைகள் மறைத்த காரணத்தால், பின்னால் நிற்பவர்கள் தாங்கள் நின்ற இடங்களிலிருந்து தங்கள் முன்னங்கால்களை அழுத்தி, குதிகால்களை உயர்த்தி நின்று, அவர் முகத்தைப் பார்த்தபடி பேச்சைக் கேட்டனர்.

இதைக் கவனித்த தோமா, அந்த மக்களிடம் அவர்களின் ஆர்வமிக்க செயலை ஒப்பிட்டுப் பேசினார்: “இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, என் பேச்சைக் கேட்பதில் உங்களின் ஆர்வம் எனக்குப்  புரிகிறது. என்னைப் பார்ப்பதற்கே உங்களை உயர்த்திக்கொள்கிறீர்கள். அதிக உயரத்தில் இருக்கும் ஆண்டவரைப் பார்க்க நீங்கள் உங்களை இன்னும் அதிகமாக உயர்த்திக்கொள்ளவேண்டும். அழிந்து போகும் உலகச் செல்வங்களின்மீது பற்று வைக்காதீர்கள். நீங்கள் பற்று வைக்கவேண்டியது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமீதே. அவரை நம்பினால் அவர் உங்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்பார். ஆன்மாவுக்கு இளைப்பாற்றி தருபவர் அவரே. உங்கள் மனம் மற்றும் உடல் நோய்களை நல்ல மருத்துவராக நின்று அவரே குணப்படுத்துவார்எனப் போதித்தார்.

இவ்வாறு அம்மக்களிடம் போதித்த தோமா மேலும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி, அவர்களின் நம்பிக்கை வாழ்விற்கான அடிப்படையை உணர்த்தினார். தோமாவின் போதனைகளைக் கேட்ட மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நம்பிக்கை மேலும் அதிகரித்தது. மனம் வருந்திய அவர்கள் தங்கள் பாவங்களை எண்ணி அழத்  தொடங்கினார்கள். தோமாவிடம் தங்களின் பாவ மீட்பு குறித்து கேள்விகளையும் எழுப்பினர்.

கடவுளின் தூதரே, நாங்கள் உண்மையான கடவுளிடம் நம்பிக்கை வைத்ததில்லை. இப்போது எங்களை நாங்கள் உணர்ந்துவிட்டோம். எங்களுடைய பழைய குற்றங்களை எல்லாம் மறந்து, மன்னித்து, எங்களை அவர் ஏற்றுக்கொள்வாரா?” என்று கேட்டனர். தோமா அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கினார். அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் திரளாக ஆர்வமுடன் அவரைப் பின்தொடர்ந்தனர்.

தட்சசீலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று தோமா தம் போதனையைத் தொடர்ந்தார்அவர் போகும் வழிகளில் எல்லாம் அவரைக் காண மக்கள் கூட, அங்கே ஏராளமான நோயாளிகள் குணம்பெற்றனர். பேய் பிடித்த அநேகரின் அசுத்த ஆவியை ஓட்டி, அவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். இவ்விதம் மக்களைச் சந்தித்துப் போதித்து, அவர்களை நலப்படுத்தி நடந்த தோமாவின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவியது.

தோமா தான் சென்ற இடங்களில் தனக்குப் பின் மறைபரப்புப் பணியைத் தொடர உதவியாளர்களை நியமித்தார். அவர்கள் இயேசுவின் போதனைகள், மறைபொருள் பற்றிய அறிவில் ஆர்வமும் பழக்கமும் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள். திருமுழுக்கு கொடுப்பது, எண்ணெய் பூசுவது, போதிப்பது, சபையை வழிநடத்துவது போன்றவற்றில் பயிற்சி பெற்றார்கள்.

தட்சசீல நகரில் கிறித்தவர்கள் பெருமளவில் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்று 1935-ஆம் ஆண்டில் அந்நகரில் கிடைத்தது. கொண்டோபரஸ் மன்னனின் அரண்மனை இருந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு முன் ஒரு விவசாயி கருங்கல்லாலான ஒன்றரை அங்குலம் நீளமுள்ள சிலுவை ஒன்றைக் கண்டறிந்தான். அதுபோன்ற கருங்கல்  சிலுவைகளைக் கிறித்தவ மக்கள் அக்காலத்தில் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தட்சசீலத்தில் தங்கியிருந்து போதித்ததன் விளைவாகக் கொண்டோபரஸ் ஆளும் மண்ணில் கிறித்தவர்கள் பெருகினர். அவர்களில் பார்த்தியர்கள் மட்டுமின்றி யூத, கிரேக்க, பெர்சிய இனத்தவரும், புத்த, சமண, சைவ, வைணவ சமயத்தைச்  சார்ந்தவர்களும் அடங்குவர். இவ்வாறு இறைச்சமூகத்திற்குள் இணையும் ஆன்மாக்களின் எண்ணிக்கை பெருகலாயிற்று. அதனால் கிறித்தவ மக்களுக்கான சபை அங்கே உருவாயிற்று.

அரசன் கொண்டோபரசையும் அவன் இளவல் காத்தையும் மனம் திருப்பிய தோமா, தட்சசீல நகரை விட்டு நீங்கி தன் பயணத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தட்சசீலத்தில் பணிசெய்த அவர், அந்நகரை விட்டு வெளியேறிய அன்று அங்குள்ள கிறித்தவர்கள் கண்ணீர் மல்க அவருக்கு விடைகொடுத்தனர். இனி கடவுளின் அன்பரும் தூதருமான தோமாவைக் காணமுடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. முழங்காலில் இருந்து அவர் பாதங்களை வணங்கிய அந்நகர் நம்பிக்கையாளர்கள், தாங்கள் அவருக்காகச் செபிப்பதாகவும், தங்கள் செபம் அவர் செல்லுமிடமெங்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

தோமா தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்ற சில ஆண்டுகளிலேயே மன்னன் கொண்டோபரஸ் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவனுடைய இறப்பு கி.பி. 50-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அவனுடைய இறப்பிற்குப்பின் பலவீனமடைந்த பார்த்தியா அரசு ஆசியாவின் பழங்குடி இனத்தவரான குஷானர்களால் கைப்பற்றப்பட்டது. குஷானர்கள் முதலில் காந்தகாரைக் கைப்பற்றினர். பின்னர் பார்த்தியா தேசத்தையும், அவர்கள் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர். தட்சசீலமும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

பிற்காலத்தில், குஷான வம்சத்தின் மூன்றாம் அரசரான கனிஷ்கரின் ஆட்சியில், பெஷாவர் எனும் புருஷபுரம் தலைநகராக விளங்கியது. பல போர்களை நடத்தி வெற்றி கண்டவனாக நீண்ட காலம் அவன் அரசாட்சி செலுத்தினான். புத்த மதத்தை தீவிரமாகப் பின்பற்றிய கனிஷ்கர் மற்ற மதங்களை வெறுத்தான். அதனால் புத்த சமயம் தவிர, மற்ற சமயங்களின் வளர்ச்சிக்கு அங்கே தடை ஏற்பட்டது. இதனால் திரு அவையும் அங்கே வளர்ச்சி காணாமல் போயிற்று. அங்கிருந்து கிறித்தவர்கள் பாரசீகத்திற்கோ, அரேபியாவிற்கோ சென்று கலந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தட்சசீலத்தில் கிறித்தவம் நிலைக்காமல் போனதற்கு கனிஷ்கரின் புத்தமதத் தீவிரப்போக்கே காரணம் என்று கூறலாம்.

தட்சசீலத்திலிருந்து தோமா புறப்படும் முன்னே சீடர்கள், மூப்பர்கள், உடல் உழைப்பாளர்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்துப் பேசி, தட்சசீலத் திரு அவையைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பினை சாந்திப்பாஸ் என்ற திருத்தொண்டரிடம் ஒப்படைத்திருந்தார் தோமா. புறப்படும் முன்னர் அங்குள்ள மக்களிடம் விடைபெற்றுக் கொண்டார்: “கடவுள்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள நீங்கள் அவர்மீது நம்பிக்கைப் பற்றுதலோடு வாழுங்கள். நான் அறிவித்த இயேசு உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார். எல்லாராலும் நீங்கள் கைவிடப்பட்டாலும், அவர் உங்களைக் கைவிடமாட்டார். நான் உங்களை விட்டு வேறிடம் செல்கிறேன். உங்களை இனி நான் பார்க்கப் போவதில்லை. எனக்குப் பதிலாகத் திருத்தொண்டர் சாந்திப்பாஸ் இயேசுவை உங்களுக்குப் போதிப்பார். என்னையும்திருத்தொண்டர் சாந்திபாசை விடவும் இயேசுவே உங்களுக்கு முக்கியம். எனவே, உங்கள் நம்பிக்கையை ஆண்டவர் இயேசுவின்மீது மட்டுமே வையுங்கள்என்று கூறி மக்களை ஆசிர்வதித்தார்.

தட்சசீலத்தை விட்டு நீங்கிய தோமா அடுத்து காந்தாரம் செல்ல முடிவெடுத்தார். காந்தாரம் என்பது இன்றைய பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிக்கும், ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையே பெஷாவர் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இன்றைய ஆப்கானிஸ்தானில்காண்ட கார்என்றழைக்கப்படும் பகுதி இது. வேதகாலத்தில் இதிகாசங்களில் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தாரம் நகரும் தட்சசீலத்தைப் போன்றே பாரசீக மன்னன் டோரிஸ், பின்னர் அலெக்சாண்டர் ஆகியோரின் ஆளுகைக்கு உட்பட்டது. கிரேக்கக் கலைகள் இங்கு கலக்க இந்திய - கிரேக்க கலப்பு ஓவியக் கலையானகாந்தாரக் கலைபுகழ் பெற்று விளங்கிற்று. தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்ட தோமா காந்தாரம் நோக்கி சீடர்களுடன் கால்நடையாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க!

அருள்மிகப் பெற்ற மரியே வாழ்கஎன்பது மரியாவை வாழ்த்தும் ஒரு செபம் மட்டுமல்ல; இந்தச் செபம் இறைவனின் அருளைப் பெற்ற மரியாவின் வாழ்வை நமக்கு நினைவுபடுத்துகிறது. இறைவன் மரியாவைத் தேர்ந்தெடுத்து, தமது மீட்புத் திட்டத்தில் பங்குகொள்ள அழைத்தார். அந்த அழைப்பை நிறைவேற்றத் தேவையான அருளையும் அவருக்கு வழங்கினார்.

மரியா  இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அவர் இறையருளுடன் இணைந்து வாழ்ந்தார். அவர் பெற்ற அருளைப் பிறருடன் பகிர்ந்தார். துன்பங்களின் நடுவிலும் இறைவன்மீது நம்பிக்கை வைத்தார். இறுதியில், அவர் இயேசுவை நோக்கி மக்களை வழிநடத்தினார். ‘அருள்மிகப் பெற்ற மரியே வாழ்கஎன்ற செபம் மரியாவைப் பற்றிய செபமாக மட்டும் அமையவில்லை; அது நமது கிறித்தவ வாழ்வின் ஆணிவேராக அமைகிறது.

வானதூதரின் வாழ்த்து

வானதூதர் கபிரியேல் மரியாவை வாழ்த்துகிறார்: “அருள்மிகப் பெற்றவரே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் (லூக் 1:28).  ‘அருள்மிகப் பெற்ற மரியேஎன்று நாம் கூறும்போது, ‘இறையருளால் நிறைந்த மரியேஎன்று பொருள் கொள்ளலாம். மரியா பெற்ற இறையருள் அவரது சொந்த முயற்சியால் கிடைக்கவில்லை. இறைவன் தமது அன்பால் மரியாவுக்கு அருளைக் கொடுத்தார். இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். இறைவன் அவரை அழைத்தார். அந்த அழைப்பை நிறைவேற்றத் தேவையான அருளையும் வழங்கினார். திரு அவையின் மறைக்கல்வி எண் 488 கூறுவது போல், இறைவன் தம் திருமகனின் தாயாக இருப்பதற்காக மரியாவைத் தொடக்கத்திலிருந்தே தேர்ந்தெடுத்தார். மரியாவின் அழைப்பு கிறிஸ்து ஆற்றிய மீட்புப் பணியோடு நெருங்கிய தொடர்புடையது.

அருள் என்பது இறைவனின் இலவசமான கொடை

அருள் என்பது நாம் சம்பாதிக்கும் ஒன்று அல்ல; நமது அறிவாலும் திறமையாலும் செல்வத்தாலும் பதவியாலும் அருளைப் பெறமுடியாது. அருள் என்பது இறைவன் தமது அன்பால் நமக்குக் கொடுக்கும் இலவசமான கொடை. திருமுழுக்கின் வழியாக இறைவனின் பிள்ளைகள் என்ற அருளைப் பெறுகிறோம். மரியா பெற்ற இறையருள் அவரை மற்றவர்களைவிட உயர்ந்தவராகக் காட்டவில்லை; மாறாக, அந்த அருள் அவரை இறைவனுக்கும் பிறருக்கும் அர்ப்பணிக்கச் செய்தது. எனவே, ‘நான் எவ்வளவு அருளைப் பெற்றுள்ளேன்?’ என்று மட்டும் நாம் கேட்கக்கூடாது; ‘நான் பெற்ற இறையருளை எவ்வாறு பயன்படுத்துகிறேன்?’ என்று நாம் கேட்கவேண்டும்.

அருளைப் பெற்ற மரியா-அருளைப் பகிர்ந்தார்

மரியா இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்ட உடனே எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றார் (லூக் 1:39-45). மரியா தன்னைப் பற்றியும், தனக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றியும் மட்டும் சிந்திக்கவில்லை. எலிசபெத்தின் நிலையை அவர் உணர்ந்தார். அவருக்கு உதவி தேவை என்பதை அறிந்து, தாமதிக்காமல் அவருடைய இல்லத்திற்குச் சென்றார். மரியா பெற்ற இறையருள் அவரைத் தன்னுள் வைத்துக்கொள்ளச் செய்யவில்லை; மாறாக, அந்த அருள் அவரைப் பிறரின் தேவையை உணர்ந்து அவர்களுக்காகச் செயல்படத் தூண்டியது. அவர் இறைவனிடமிருந்து பெற்ற அருளைத் தனது வாழ்வின் மூலம் வெளிப்படுத்தினார். அவரது வருகை எலிசபெத்திற்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.

மரியாவின் வாழ்க்கை ஒரு முக்கியமான உண்மையை நமக்குக் கற்றுத்தருகிறது. இறையருள் நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பதில்லை, அது நம்மை அவர்களுடன் இணைக்கிறது. இறையருளை உணர்ந்தவர் பிறருடைய துயரத்தைப் புறக்கணிக்க முடியாது. பிறருடைய தேவையை உணர்ந்தவர் உதவ முன்வருவார். அன்பு செயலில் வெளிப்படும். மரியா எலிசபெத்திடம் சென்றது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; அவர் பெற்ற இறையருள் அவரைச் சேவைக்குத் தூண்டியது. இதனால் அருள் என்பது தனிப்பட்ட அனுபவமாக மட்டும் இருக்கக் டாது என்பதை அறிகிறோம். அது நமது வாழ்வின் வழியாகப் பிறருக்குச் சென்றடையவேண்டும். நாம் பெற்ற அருள் பிறருக்கு ஆறுதலாக மாறும்போது, நமது வாழ்வு இறையருளின் கருவியாக மாறுகிறது.

மரியன்னையே கடவுள் நமக்குத் தந்த அருள்

அன்னை மரியா இறைவன் மனிதகுலத்திற்குக் கொடுத்த அரிய கொடை. அவரது தூய்மையான வாழ்வும், இறைவன்மீது கொண்ட ஆழமான நம்பிக்கையும் நமக்கு முன்மாதிரியாக உள்ளன. அன்னை மரியா இறைவனின் மீட்புத் திட்டத்தில் சிறப்பான பங்கு பெற்றவர். இயேசுவின் தாயாக இருப்பதற்கு இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். மரியா வழியாக இறைவன் தமது மகனாகிய இயேசுவை உலகிற்கு அளித்தார். இதனால் மரியா இறைவனின் அளவற்ற அன்பையும் அருளையும் நமக்கு நினைவூட்டும் தாயாகத் திகழ்கிறார். மரியா தனக்குக் கிடைத்த சிறப்பைத் தனது பெருமையாகக் கருதவில்லை. அவர் தன்னை இறைவனிடம் முழுமையாக அர்ப்பணித்தார். “என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றதுஎன்று அவர் பாடினார். இந்தப் பாடல் மரியாவின் தாழ்மையையும் இறைநம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. இறைவன் தனக்குச் செய்த அரும்பெரும் செயல்களுக்காக அவர் இறைவனைப் போற்றினார். மரியாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். இறைவனின் அருளைப் பெற்றவர் தாழ்மையுடன் வாழவேண்டும்; பெற்ற அருளுக்காக இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்; அந்த அருளைப் பிறருடன் பகிரவேண்டும்.

அருள் என்பது துன்பமின்மை அல்ல!

மரியாஅருள்மிகஎன்று அழைக்கப்பட்டார். ஆனால், அவரது வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் போகவில்லை. ஏரோதுவின் அச்சுறுத்தல், எகிப்திற்குச் சென்ற பயணம், இயேசுவின் பாடுகள், கல்வாரியில் சிலுவையின் அடியில் நிற்றல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டார். அருள், துன்பத்தை எப்போதும் அகற்றுவதில்லை. ஆனால், இறையருள் துன்பத்தின் நடுவில் நம்மைத் தாங்குகிறது. சிலுவையின் அடியில் மரியா நின்றார். அவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் இறைவனை விட்டு விலகவில்லை. அவர் நம்பிக்கையில் நிலைத்தார்.

நான் இறைவனின் அருளை உணர்கிறேனா?

நான் பெற்ற இறையருளைப் பிறருடன் பகிர்கிறேனா?

துன்பத்தின் நேரத்திலும் இறைவனை நம்புகிறேனா?

என் வாழ்க்கையில் இயேசு மையமாக இருக்கிறாரா?

இறுதியாக, ‘அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க!’ என்பது ஒரு செபத்தின் தொடக்கம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கைப் பாதை. நாம் பல்வேறு சவால்கள், குடும்பப் பிரச்சினைகள், நோய்கள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றை எதிர்கொள்கிறோம். இத்தகைய சூழலில் மரியாவின் வாழ்க்கை நமக்கு ஆறுதலையும் வழிகாட்டுதலையும் அளிக்கிறது. அவரது பணிவு, இறைநம்பிக்கை, பொறுமை, செப வாழ்க்கை மற்றும் இறைவனின் திருவுளத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை ஒவ்வொரு கிறித்தவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன. கிறித்தவர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் அன்னை மரியாவின் பெயர் சக்தியையும், அவர்கள் வாழ்வில் நம்பிக்கையை இழந்த நேரங்களில் நம்பிக்கையையும் தருகிறது.

அருள்மிகப் பெற்ற மரியே வாழ்கஎன்று நாம் ஒவ்வொரு முறையும் செபிக்கும்போது, மரியாவை மட்டும் போற்றுவதில்லை; மரியாவின் வழியாகச் செயல்பட்ட இறைவனின் அருளையும் மகிமைப்படுத்துகிறோம். அதேவேளை, மரியாவைப் போல இறைவனின் வார்த்தையை ஏற்று வாழவும், கிறிஸ்துவை உலகிற்குச் சாட்சியாக அறிவிக்கவும் நம்மை அர்ப்பணிக்கிறோம்.

அன்னை மரியாவின் வாழ்க்கை முழுவதும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டதாக இருந்தது. அவர் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தவில்லை. எப்போதும் தன் மகனாகிய இயேசுவை நோக்கியே மக்களை வழிநடத்தினார். எனவே, மரியாவைப் போற்றுவது கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நம்பிக்கை வாழ்வில் வளர நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாமும் இறைவனின் அருளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் பெற்ற இறையருளைப் பிறருடன் பகிரவேண்டும். துன்ப நேரங்களிலும் இறைவன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அன்னை மரியாவின் வழியாக இயேசுவை இன்னும் ஆழமாக அறிந்து, அவரை அன்பு செய்து, அவரைப் பின்பற்றி வாழ்வோம்.

news
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 06

சிறிது காலம் கழித்து அரசன் வீரன் ஒருவனை அனுப்பி தோமாவிடம், “அரண்மனை கட்டும் பணி எந்த நிலையில் இருக்கிறது?” என்பது குறித்து விசாரித்து வரக் கூறினான். தோமா அவனிடம்அரண்மனைக்கான பெரும் பகுதி வேலைகள் முடிந்துவிட்டன. இன்னும் மேற்கூரை அமைக்க வேண்டியதுதான் பாக்கிஎன்று கூறி அனுப்பினார். மனம் மகிழ்ந்த அரசன் மேலும் நிறைய பணத்தைக் கொடுத்தனுப்பினான். ஏழைகளுக்கு உதவ இறைவன் கொடுத்த வாய்ப்பாக இதனைக் கருதிய தோமா, இறைவனுக்கு நன்றி கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்ட தோமா, மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினார்.

ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் ஆகியோரைச் சந்தித்து உதவிகள் செய்யலானார். மேலும், அவர்களிடம் இறைவன்தாமே அந்த மக்களுக்கு உதவிகள் வழங்குகிறார் என்பதையும் அறிவுறுத்தினார்இயேசு பற்றிய தோமாவின் போதனைகளால் ஏராளமான மக்கள் கிறித்தவச் சமயத்தைத் தழுவினர்.

அரண்மனைப் பணி முடிவடைவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. மன்னன் கொண்டோபரஸ் தோமாவைச் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகவிருந்தது. தோமா கட்டிய அரண்மனையைக் காண அவன் தலைநகருக்கு ஆவலோடு புறப்பட்டு வந்தான். தன் வீரர்களை அனுப்பி அரண்மனை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்து வரக் கூறினான். அதற்குள் அரசன் வருகையை அறிந்த அவன் நண்பர்கள் சிலர் அரசனை அணுகி, “அந்த ஏமாற்றுக்காரன் உம்மை மோசம் செய்து விட்டான்எனக் கூறவும் கொண்டோபஸ் அதிர்ச்சியடைந்தான்.

ஆம் அரசே, நீர் எதிர்பார்த்ததுபோல் அரண்மனை கட்டும் பணி எதுவும் அங்கே நடைபெறவில்லை. உங்களுக்கு அவன் வாக்களித்தபடி அரண்மனை கட்டவுமில்லைஎன்றனர் நண்பர்கள்.  “இது உண்மையா? அந்த மனிதன் இப்பொழுது எங்கேநான் கொடுத்த பணத்தை என்ன செய்தான்? இத்தனை காலமாக இங்கே என்ன செய்து கொண்டிருந்தான்? என் பணத்தில் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா?” எனக் கோபத்தோடு அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.

நீர் நினைப்பதுபோல் உம்முடைய பணத்தில் அந்த மனிதன் இன்பமாக வாழவில்லை; மாறாக, ஊர் ஊராகச் சென்று ஏழை மக்களுக்கு உங்கள் பணத்தில் உதவிகள் செய்கிறான். எளிமையான மனிதனாக அடிக்கடி உபவாசம் இருக்கிறான். வெயில் காலம், குளிர் காலம் இரண்டிலும் ஒரே உடைதான் உடுத்துகிறான். ரொட்டி மற்றும் உப்பு மட்டுமே உண்கிறான். மற்றவர்களிடமிருந்து ஒருபோதும் பணம் வாங்கியதில்லை. தன்னிடமிருக்கும் பணத்தைப் போகிற வழியிலெல்லாம் ஏழை மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறான். இதைவிட முக்கிய விசயம், அவன் ஊர் ஊராகச் சென்று ஒரு புதுக் கடவுளைப் பற்றிப் போதிக்கிறான். நோயாளிகளைக் குணப்படுத்துவதும், பேய்களை ஓட்டுவதுமாகப் புதுமைகள் செய்வதால், மக்கள் அவனைத் தேடிச் செல்கின்றனர். அவனைப் பார்த்தால் மந்திரவாதிபோல் தெரியவில்லை. அவன், தான் போதிக்கும் கடவுளின் முக்கியச் சீடனாக இருப்பான் போலிருக்கிறதுஎன்றனர் அரசனின் நண்பர்கள்.

பொங்கி வந்த சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட அரசன், தன் வீரர்களிடம் தோமாவை எங்கிருந்தாலும் அழைத்து வரக் கட்டளையிட்டான். தோமா வந்ததும், “நான் கேட்டுக் கொண்டபடி அரண்மனை கட்டப்பட்டு விட்டதா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பினான். “ஆம்என்றார் தோமா. ஒரு கணம் அரசன் குழம்பிப் போனான். இல்லாத ஒன்றை இந்த மனிதர் எந்த எண்ணத்தோடு உண்டு என்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை.

அரண்மனையை இப்போது நான் பார்க்க முடியுமா?” எனக் கேட்ட அரசனிடம், “இப்போது முடியாதுஎன்றார் தோமா. அரசனுக்குக் குழப்பம் மேலும் அதிகரித்தது. இந்த மனிதர் எந்தத் தைரியத்தில் இப்படிப் பொய் சொல்கிறார்என்று நினைத்தவனாய் தொடர்ந்து, “சரி, எப்போதுதான் நான் பார்ப்பது?” என்ற கேள்விக்கு தோமா கூறிய பதில் அரசனை கடுங்கோபம் அடையச் செய்தது.

நீங்கள் உயிரோடு இருக்கும்வரை அரண்மனையைக் காண முடியாது. நீங்கள் இறந்த பின்னரே அதைக் காண முடியும்என்று தோமாவின் பதில் அளவுக்கதிகமான சினத்தை ஏற்படுத்த, தோமாவை உயிரோடு தோல் உரித்துக் கொன்று போட முடிவு செய்தான் கொண்டோபரஸ்.

சினம் தலைக்கேறிய அரசன் தன் வீரர்களிடம் தோமாவைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அவ்வாறே வீரர்கள் தோமாவைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயல்கையில், “சற்றுப் பொறுங்கள்எனக் கூற, தாமதித்த வீரர்களிடம்இந்த மனிதனை அயல்நாட்டிலிருந்து அழைத்து வந்தானே வணிகன் ஹப்பான், அவனையும் சிறையில் அடையுங்கள்; இருவருக்குமே ஒருசேர பாடம் புகட்டுகிறேன்என்றான் அரசன்.

அரசன் கட்டளைப்படியே ஹப்பானும் சிறைக்குள் தள்ளப்பட, அஞ்சி நடுங்கிய அவனிடம் தோமா, “பயப்படாதே, இயேசு கிறிஸ்துவை நம்பு; எந்தத் தீங்கும் நேராதுஎன்று தைரியமூட்டினார்.

தோமாவும் ஹப்பானும் சிறையில் அடைக்கப்பட்ட அன்றிரவு அரசன் கொண்டோபரஸ்,      வெகு நாள்களாக நோயுற்றுப் படுக்கையில் கிடக்கும் தன் தம்பி காத் என்பவனைக் காணச் சென்று அவனுக்கு ஆறுதலும் தைரியமும் கூறிக் கொண்டிருந்தான். தன் அண்ணனிடம் சிரமப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த காத், திடீரென தன் பேச்சை நிறுத்தினான். கண்மூடிக் கிடந்த தன் தம்பியை அரசன் எழுப்பிப் பார்க்கையில், அவன் மூச்சு நின்று போயிருந்தது. தன் கண்ணெதிரேயே தன் தம்பியின் உயிர் பிரிந்து போனதைக் கண்ட அரசன் பயத்திற்குள்ளானான். அப்போது அவன் அடைந்த வேதனை அளவில்லாமல் போனது.

தன் தம்பிமேல் அளவு கடந்த பாசம் கொண்ட அரசன் தங்கள் வழக்கப்படி மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடித்து நான்காம் நாள் அவனை அடக்கம் செய்ய பெரிய கல்லறை ஏற்பாடு செய்து கொண்டிருந்தான். பாத்தியா தேசமே சோகத்தில் ஆழ்ந்திருக்க, இளவரசன் காத் இறந்த நான்காம் நாள் அவனுடைய உடல் சுத்தம் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தப்பட்டு, இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில், அவன் மீண்டும் உயிர்ப்பெற்றெழுந்து அமர்ந்ததைக் கண்ட மக்களில் பலர் அச்சத்தால் அந்த இடத்தை விட்டு ஓடிப்போனார்கள். அதிசயித்துப் போய் நின்ற மக்களிடையே ஆச்சரியத்தால் அரசன் கொண்டோபரஸ் வாயடைத்துப் போயிருந்தான். இறப்பின் எல்லையைத் தொட்டு மீண்டும் வந்த காத், தன் அரசன் சகோதரனிடம் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்க, அரசனும் அதைக் கேட்கலானான்.

நான் இறந்த பிறகு வானதூதர்கள் என்னை விண்ணகத்திற்குக் கொண்டு சென்று, அங்கே பொன்னாலும் வெள்ளியாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட மிக நேர்த்தியான அரண்மனை ஒன்றைக் காண்பித்தார்கள். நான் அந்த அரண்மனையைப் பார்த்து வியந்து நிற்கையில், அவர்கள் என்னிடம்இது தோமாவால் உன் சகோதரனுக்காகக் கட்டப்பட்ட அரண்மனைஎன்றனர்.” அவன் கூறிக்கொண்டே போகையில் இடைமறித்த அரசன், “என்ன சொல்கிறாய்? விண்ணகத்தில் எனக்கான அரண்மனையா? தோமா கட்டியதா?” என்று வினா எழுப்பியவனுக்கு மூளையில் பொறி தட்டியது போலிருந்தது. தான் கேட்டபோது அரண்மனையைக் கட்டி முடிந்து விட்டதாகவும், தான் உயிரோடு இருக்கும்வரை அதனைக் காண முடியாது, இறந்த பின்னரே காணமுடியும் என தோமா கூறியது இதைத்தானோ? என்று யோசிக்கலானான்ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல், “பிறகு என்ன நடந்தது?” என்று தன் தம்பியிடம் வினவினான்.

காத் தொடர்ந்தான்... “இந்த அரண்மனையில் நான் வாழ்வதற்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொண்டேன். ‘அது இயலாதுஎன்று வானதூதர்கள் மறுத்துவிட்டனர்என்றான்.

இதைக் கேட்ட அரசன், “ஏன் முடியாது என்று கூறினார்கள்? காரணம் ஏதாவது கூறினார்களா?” எனக் கேள்வி எழுப்பினான். உடனே காத், “ஆம் கூறினார்கள். இப்போதைக்கு உன் சகோதரன் இந்த அரண்மனையை உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக இருக்கிறார். நீர் வேண்டுமானால் நேரில் சென்று உன் சகோதரரைச் சந்தித்து அவருக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்பை ஈடு செய்துவிட்டு அவரின் அனுமதி பெற்று வாரும், உண்மையில் நீர் உயிர் பிழைக்க வைக்க நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம் என்று கூறி என்னை உயிர் பிழைக்கவும் வைத்துவிட்டனர். கடவுளின் மனிதர் தோமா உனக்காகக் கட்டிய அரண்மனை உமக்கே சேரவேண்டும். உனக்காக அழகிய அரண்மனையைத் தயார் செய்து வைத்திருக்கும் தோமாவை நீர் சிறையில் அடைத்திருக்கிறீரே...” என்று சொல்லி முடித்தவன், அரசனின் அனுமதியையும் எதிர்பாராமல் தோமா அடைபட்டிருக்கும் சிறைச்சாலையை நோக்கி ஓடினான்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
இயேசு தம் சீடரை நோக்கி ‘இதோ உன் தாய்’ என்றார் (யோவா 19:26-27 a) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 48

1. இயேசுவினுடைய சிலுவையின் அடியில் மரியா மற்றும் பிற பெண்கள் இருந்ததை நினைவுகூர்ந்த பிறகு நற்செய்தியாளர் யோவான், “இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ‘அம்மா, இவரே உம் மகன்என்றார். பின்னர் தம் சீடரிடம், ‘இவரே உம் தாய்என்றார் (யோவா 19:26-27) என்று கூறுகின்றார்.

நெஞ்சை நெகிழவைக்கும் குறிப்பிடத்தக்க இந்த வார்த்தைகள் ஒரு திருவெளிப்பாட்டுக் காட்சியாக (Revelation Scene) இருக்கின்றன. இவ்வார்த்தைகள் இறந்து கொண்டிருக்கின்ற கிறிஸ்துவின் ஆழமான உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், கிறித்தவ நம்பிக்கை மற்றும் ஆன்மிகத்தின் அர்த்தத்திற்கானதொரு மிகப்பெரிய பொருளைக் கொண்டுள்ளன. தமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் தம் தாயிடமும், தாம் அன்பு செய்த சீடரிடமும் பேசுகின்றபோது, சிலுவையில் அறையப்பட்ட மீட்பர், மரியாவுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்துகின்றார்.

சில வேளைகளில், இது இயேசு - தமக்குப் பிறகு யாரைத் தமது அன்புச் சீடரிடம் ஒப்படைக்கின்றாரோ, அது தன் தாய்மீது கொண்ட மகனுக்குரிய கடமையின் வெளிப்பாடு என்று மட்டுமே பொருள்படுத்தப்படுவதால் இந்த வார்த்தைகள் ஒரு குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிலையற்றத் தேவையையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையில், பல திரு அவைத் தந்தையர்களின் விளக்கங்களாலும், பொதுவான திரு அவைக் கருத்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட இயேசு கூறிய வார்த்தைகளைக் கவனமாக ஆய்வு செய்யும்பொழுது, மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்கைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இயேசுவின் இரண்டு வகையான ஒப்படைப்புகளுமே  நமக்கு அமைகின்றன.

இயேசு யோவானிடம் மரியாவை  ஒப்படைத்து அவரது தியாகத்தை முழுமையாக்குகின்றார்

தாம் இறக்கும் நேரத்தில் இயேசுவின் வார்த்தைகள், உண்மையில் அவரின் முதல் நோக்கமானது அவரது அன்னையை யோவானிடம் ஒப்படைப்பது அல்ல; மாறாக, அவருக்கு ஒரு புதிய தாய்மைப் பங்கைக் (Maternal Role)  கொடுக்கவே என்பதைக் காட்டுகின்றது. மேலும், இந்தப் பெயரெச்சமாகிய (Epithet) பெண்ணேஎன்ற வார்த்தையைதாய்என்ற அவரது நிலையின் ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்ற நிகழ்வாகிய கானாவூர் திருமணத்திலும் இயேசு பயன்படுத்துகின்றார். இவ்வாறு மீட்பரின் வார்த்தைகள் தாய் - மகன் இவர்களுக்கு இடையேயான அன்பின் சாதாரணமானதோர் உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; மாறாக, அவ் வார்த்தைகள் மரியாவை ஒரு மிக உயர்ந்த நிலையில் வைப்பதற்கே என்பதைக் காட்டுகின்றன.

2. இயேசுவின் இறப்பு மரியாவுக்கு ஆழமான துக்கத்தை ஏற்படுத்தினாலும், அது அவரது அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை: உண்மையில், பொது வாழ்வைத் தொடங்குவதற்காக நாசரேத்திலிருந்து விலகிச் சென்றதன் வழியாக, இயேசு அவரின் தாயை ஏற்கெனவே தனிமையில் விட்டுவிட்டார். மேலும், சிலுவையின் அடியில் அவரது சொந்தச் சகோதரியும், குளோப்பாவின் மனைவியுமான மரியாவின்   உடனிருப்பானது, மரியா அவரது குடும்பத்தோடும் உறவினர்களோடும் நல்லதோர் உறவு வைத்திருந்தார். அவருடைய மகனின் இறப்பிற்குப் பிறகு அவர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு  நம்மை இட்டுச்செல்கின்றது

அதேநேரத்தில், இயேசுவின் இந்த வார்த்தைகள் அவரது மீட்புப் பணியின் சூழலில் அவற்றின் உண்மையான  அர்த்தத்தைப் பெறுகின்றன. மீட்புப் பலியின் நேரத்தில் பேசப்பட்ட இந்த வார்த்தைகள் குறிப்பாக, இந்த உன்னதமான சூழலிலிருந்து அவற்றின் உயர்ந்த மதிப்பைப் பெறுகின்றன. உண்மையில், இயேசு தம் தாயிடம் கூறிய வார்த்தைகளுக்குப் பிறகு, நற்செய்தியாளர் ஒரு முக்கியமான சொற்றொடரைச் சேர்க்கிறார்: “அனைத்தும் நிறைவேறிவிட்டன என்பதை அறிந்த இயேசு...” (யோவா 19:28). இதன் மூலம் அவர் தம் தாயை யோவானிடமும், அவர் மூலமாக எல்லா மனிதர்களிடமும் ஒப்படைத்து, தம் தியாகத்தை நிறைவுசெய்தார் என்பதை வலியுறுத்த விரும்பியது போலும் உள்ளது.

3. இயேசுவின் வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மை யாதெனில், சீடருடனான உறவில் மரியா பெற்ற புதிய தாய்மை, எல்லா மக்களுக்காகவும் தம் உயிரை அர்ப்பணிக்க இயேசுவைத் தூண்டிய மாபெரும் அன்பின் மற்றோர் அடையாளமாகும். கல்வாரியில் இந்த அன்பு, ஒரு தாயை அதாவது அவரின்  தாயைப் பரிசாக அளிப்பதன் மூலம் வெளிப்படுகிறது. இவ்வாறு அவர் நமது தாயாகவும் ஆகிறார்.

மரபுப்படி, புனித கன்னி மரியா உண்மையில் யோவானைத்தான் தன் மகனாக அங்கீகரித்தார் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்; ஆனால், இந்தச் சிறப்புரிமையானது, தொடக்கத்திலிருந்தே கிறித்தவர்களால் முழு மனிதகுலத்துடனான ஓர் ஆன்மிகப் பிறப்பின் அடையாளமாகவே பொருள்கொள்ளப்பட்டு வருகிறது.

மரியாவின் உலகளாவிய தாய்மையானது, அந்த கானாவூர் திருமணத்தின் மற்றும் கல்வாரியின் பெண்ணான, வாழ்வோர் அனைவரின் தாயாகிய (தொநூ 3:20) அந்த ஏவாளை நினைவுபடுத்துகின்றது. இருப்பினும், ஏவாள் இந்த உலகில் பாவத்தைக் கொண்டுவரக் காரணமானபொழுது, புதிய ஏவாளாகிய மரியாவோ  மீட்பின் நிகழ்வில் ஒத்துழைக்கின்றார். இவ்வாறு, அன்னை மரியாவில்பெண்ணானவள்மறுசீரமைக்கப்படுகின்றாள் மற்றும் அவரது தாய்மையானது கிறித்தவர்கள் மத்தியில் புதிய வாழ்வை எடுத்துச் செல்கின்றது.

இந்தப் பணியின் காரணமாக, அந்த அன்னை தன் ஒரே மகனின் மரணத்தை ஏற்கும் வேதனை மிகுந்த தியாகத்தைச் செய்யும்படி கேட்கப்படுகிறார். ‘அம்மா, இவரே உம் மகன்என்ற இயேசுவின் வார்த்தைகள், முந்தைய உறவை விரிவுபடுத்தி, விரிவாக்கவிருந்த புதிய தாய்மை உறவை மரியா உணர்ந்துகொள்ள உதவுகின்றன. எனவே, இந்தத் திட்டத்திற்கு அவர் அளித்தஆம்என்பது, இறைவிருப்பத்திற்கு இணங்குவதன் மூலம் அவர் தாராளமாக ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் தியாகத்திற்கான சம்மதமாகும். கடவுளின் திட்டத்தில் மரியாவின் தாய்மை ஆரம்பத்திலிருந்தே முழு மனிதகுலத்திற்கும் விரிவடைய விதிக்கப்பட்டிருந்தாலும், கல்வாரியில் கிறிஸ்துவின் தியாகத்தின் மூலமாக மட்டுமே அதன் உலகளாவிய பரிமாணம் வெளிப்படுகிறது.

மரியா அனைத்துச் சீடர்களின் தாயாகின்றார்

இயேசுவின்அம்மா, இதோ உம் மகன்என்ற வார்த்தைகள், அவை குறிப்பிடுவதையே மெய்ப்பிக்கின்றன. அதன் மூலம் மரியா யோவானுக்கும், இறையருள் என்னும் கொடையைப் பெறவிருந்த சீடர்கள் அனைவருக்கும் தாயாகிறார்.

4. சிலுவையில் இயேசு, மரியாவின் உலகளாவிய தாய்மையை முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால், அவருக்கும் - அன்புக்குரிய சீடனுக்கும் இடையே ஓர் உறுதியான தாய் - மகன் உறவை ஏற்படுத்தினார். ஆண்டவரின் தெரிவில், இந்தத் தாய்மை தெளிவற்ற முறையில் விளக்கப்படக் கூடாது. அதற்கு மாறாக, தனிப்பட்ட முறையில் கிறித்தவர்களோடு மரியா கொண்டிருந்த நெருக்கமான, தனிப்பட்ட உறவைச் (Intense, personal relationship) சுட்டிக்காட்டவேண்டும் என்ற அவரது அக்கறையை நாம் காணலாம்.

நாம் ஒவ்வொருவரும், மரியாவின் உலகளாவிய தாய்மை எனும் உறுதியான உண்மையின் வழியாக, அவரைத் தமது சொந்தத் தாயாக முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவருடைய தாய்மை அன்பிற்கு நம்பிக்கையுடன் நம்மையே கையளிப்போம்.

மூலம்: Pope John Paul II, To the disciple He said, “Behold your mother”, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 30 April 1997, p.11.

news
ஆன்மிகம்
மரியாவின் ஒத்துழைப்பானது முற்றிலும் தனித்துவமிக்கது! (யோவா 19:25-26) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 47

1. கிறிஸ்துவினுடைய மீட்பின் தியாகத்துடன் தொடர்புள்ள மரியாவின் பங்களிப்பைத் தீவிரமாக ஆராய்ந்து, மீட்புப்பணியில் மரியாவின் ஒத்துழைப்பையொட்டிய சிந்தனையைத் திரு அவையானது பல நூற்றாண்டுகளாகச் சிந்தித்து வருகின்றது. புனித அகுஸ்தினார் ஏற்கெனவே கன்னி மரியாவுக்கு மீட்பராம் கிறிஸ்துவுடனான மரியாவின்  ஒத்துழைப்பை வலியுறுத்துகின்ற மீட்பில்இணை மீட்பாளர்என்ற அடைமொழியை வழங்கினார் (ஒப்பிடுக. De Sancta Virginitate, 6; PL 40, 399). ஆனால், இது கிறிஸ்துவாம் மீட்பருடனான கீழ்நிலைச் (subordinate) செயலை வலியுறுத்துகின்றது.

15-வது நூற்றாண்டிலிருந்து இச்சிந்தனையானது உருவாகிய விதம் இதுதான். கன்னி மரியாவை கிறிஸ்துவின் நிலையில் வைக்க விரும்பியதைக் கண்டு சிலர் அஞ்சினர். உண்மையில் திரு அவையின் போதனையானதுமீட்பரின் ஒத்துழைப்பாளர்என்கின்ற வகையில் மரியாவின்  கீழ் நிலையை விளக்கிமீட்புப் பணியில் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகின்றது.

மேலும், “நாங்கள் இறைவனின் பணியாளர்கள் (1கொரி 3:9) என்று திருத்தூதரான புனித பவுல் கூறுவதிலிருந்து, கடவுளுடன் ஒத்துழைப்பதற்கான உண்மையான சந்தர்ப்பத்தை மனிதனுக்கு அவர் வழங்குகின்றார் என்பதை நாம் அறியலாம். எந்தவொரு சமத்துவத்தையும் வெளிப்படையாகவே புறந்தள்ளும் நம்பிக்கையாளர்களின் இத்தகைய ஒத்துழைப்பானது நற்செய்தி அறிவிப்பில் வெளிப்படுத்தப்பட்டு, அந்நற்செய்தியானது மனித இதயங்களில் வேரூன்றுவதற்கான அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது.

மரியாவின்  ஒத்துழைப்பு யாராலும் செய்ய முடியாத தனித்துவமிக்கது

2. எது எப்படி இருப்பினும் மரியாவுக்கு உடன் உழைப்பாளர் அல்லது ஒத்துழைப்பாளர் (co-operator) என்கிற அடைமொழியானது மிகவும் பொருந்தும். மீட்புத் திட்டத்தில் கிறித்தவர்களின் ஒத்துழைப்பு கல்வாரி நிகழ்விற்குப் பிறகு நடைபெறுகிறது. அதன் பலன்களை அவர்கள் தங்கள் செபத்தினாலும் தியாகத்தினாலும் பரவச் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், மரியா தனது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளின்போதும்கிறிஸ்துவின் தாய்என்கிற நிலையில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு ஒத்துழைத்தார். இதனால் அவரின் ஒத்துழைப்பானது கிறிஸ்துவின் மீட்புப் பணிகளை முழுவதுமாகத் தாங்குவதாக அமைகிறது. மனிதகுலம் அனைத்திற்குமான மீட்பின் காரணமான கிறிஸ்துவின் மீட்பளிக்கும் தியாகத்துடன்உடன் உழைப்பாளர்அல்லதுஒத்துழைப்பாளர்என்கின்ற நிலையில் மரியா மட்டுமே அதோடு தொடர்புடையவர் ஆகின்றார்.

கன்னி மரியாவுக்கான ஒத்துழைப்பாளர் என்கிற பங்கானது அவர் இறைவனின் தாய் என்பதில் அடங்கியிருக்கின்றது. மனித மீட்பிற்குக் காரணமானவரைப் பெற்றெடுத்து, வளர்த்து, அவரைக் கோவிலில் அர்ப்பணித்து, அவர் சிலுவையில் இறந்தபொழுது அவரோடு துன்புற்றதன் வழியாகமீட்பருடைய பணியில் முற்றிலும் தனிச்சிறப்புமிக்க வகையில் அவர் ஒத்துழைத்தார்என்று வத்திக்கான் சங்கம் குறிப்பிடுகின்றது (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 61). இறைவனின்  மீட்புப் பணியில் அவருடன் ஒத்துழைப்பதற்கான அழைப்பானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதில் மீட்பரது தாயான மரியாவின்   பங்களிப்பானது யாராலும் செய்ய முடியாத தனித்துவமிக்க நிகழ்வாகும் (unique and unrepeatable fact).

மரியா தனித்தன்மையோடு இருந்தபோதிலும், அவரும் இறைவனின் மீட்பைப் பெற்றுக்கொள்பவராக இருக்கின்றார். மரியா தூய ஆவியின் அருளால் நிரப்பப்பட்டு, அவரது அமல உற்பவத்தில்சிறப்பானதொரு வகையில்(Bull Ineffabilis Deus, in Pius IX, Acta, 1, 605)  கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்.

3. இக்கூற்றானது, இப்பொழுது நம்முள் ஒரு கேள்வியை எழுப்புகின்றது: மீட்புத் திட்டத்தில் மரியாவின் தனித்துவமான ஒத்துழைப்பின் பொருள் என்ன? இக்கேள்வியானது, கானாவூர் திருமண நிகழ்வு மற்றும் சிலுவையின் அடியில் இயேசு அவரைபெண் (யோவா 24: 19-26) என்று அழைக்கும் இவ்விரு மிக முக்கிய நிகழ்வுகளிலும்  மீட்பரின் தாய்க்கான கடவுளின் குறிப்பிடத்தக்கதொரு நோக்கத்தின் பின்னணியில் புரிந்துகொள்ளப்படவேண்டும். மீட்புப் பணியில் மரியா ஒரு பெண்ணாக இணைக்கப்படுகின்றார். மனிதனை ஆணும்-பெண்ணுமாகப் படைத்த இறைவன் (தொநூ 1:27), புதிய ஆதாமுடன் ஒரு புதிய ஏவாளையும் மீட்பின் திட்டத்தில் இணைக்க விரும்புகிறார்நமது முதல் பெற்றோர் பாவத்தின் வழியைத் தேர்ந்தெடுத்தனர். ஒரு புதிய இணையான அதாவது, இறைமகன் அவரது தாயின் ஒத்துழைப்போடு மனிதகுலம் முழுவதையும் அதன் தொடக்க மாண்பு நிலைக்கே மீண்டுமாக உருவாக்குகிறார்.

இவ்வாறு, புதிய ஏவாளாகிய மரியா திரு அவையின் நிறைவான மற்றும் நிலையான சின்னமாகின்றார். இறைத்திட்டத்தில், இறைவனுடைய மீட்பின் தேவையில் இருந்த மற்றும் சிலுவையின் அடியில் மீட்கப்பட்ட மனிதகுலத்தை மரியா பிரதிபலிக்கின்றார் மற்றும் மீட்புப் பணியில் தன்னையே இணைத்துக்கொண்டு தனது பங்களிப்பை அளிக்கத் தூண்டப்படுகின்றார்.

அருள்நிலை அடிப்படையில் மரியா நம் தாய்

4. இக்கோட்பாட்டை மனத்தில் கொண்டே திருச்சங்கமானது தனது வரையறுக்கப்பட்ட படிப்பினை மற்றும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மீட்பரின் பிறப்பிற்கு மட்டுமல்லாமல், உலக இறுதிவரை கிறிஸ்துவின் மறையுடலாகிய திரு அவையின் வாழ்க்கைக்கும் இறைவனின் மீட்புத் திட்டத்திலே கன்னி மரியாவின் பங்களிப்பையும் தனித்துவமிக்க ஒத்துழைப்பையும் வலியுறுத்துகின்றது. திரு அவையில்மரியா ஒத்துழைத்தார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 63) மற்றும் இறைவனின் மீட்புப் பணியில் இன்றும்ஒத்துழைக்கின்றார் (Ibid.  எண். 53).

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வில் கூட கன்னி மரியா, “பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தன் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தன்னையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு கிறிஸ்துவுடனும் அவருக்குக் கீழும், எல்லாம்வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்ல; மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் (Ibid.எண். 56) என்று திருச்சங்கம் கூறுகின்றது.

இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மரியாவை  ‘இறைவனின் தாய்என்று மட்டும் கூறவில்லை; மாறாக, அவரது கீழ்ப்படிதல், நம்பிக்கை மற்றும் அவருள் எரிந்துகொண்டிருக்கும் அன்பு ஆகிய பண்புகளோடுஒரு தனித்துவமான வகையில் தாராளமான இணையாகஅவரை முன்னிறுத்துகின்றது. ஒத்துழைப்பின் விழுமிய கனி என்பது மரியாவின்  தாய்மையே என்பதையும் திருச்சங்கம் பதிவு செய்கிறது: ‘இத்தகு காரணங்களால்தான் அன்னை மரியா நம் அனைவரின் தாயாக அருள்நிலையில் திகழ்கின்றார் (Ibid.  எண். 61).

ஆகவே, தனது வாழ்நாள் முழவதும் இறைவனது மீட்புத் திட்டத்தில் உடனுழைத்து, இன்னும் சிறப்பாகக் கல்வாரியின் இறுதிநிலை வரை இறைவனது மீட்புத்திட்டத்தில் தன்னையே கரைத்துக்கொண்ட கன்னி மரியாவின் உதவியை நாம் நம்பிக்கையோடு வேண்டி, அவர் பக்கம் திரும்பலாம். ஏனெனில், அவரே இறைவனால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தனித்துவமிக்க மாதிரி, மீட்பின் உடன் ஒத்துழைப்பாளர் மற்றும் உடன் உழைப்பாளர் ஆவார்.

மூலம்: John Paul II, Mary’s co-operation is totally unique, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 16 April 1997, p. 7.