news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக! – 03

நம்பிக்கை ஒளி நம்மில் சுடர்விடும்பொழுது பேரன்பு அனுபவம் மேலோங்கும். அப்பொழுது ஆற்றல்மிக்க செயல்கள் நன்மைகள் என ஒளிரும். நாமும் அன்பின் நற்செய்தியை முழக்கமிட ஆற்றல் பெறுகிறோம். நற்செய்தியின் சுருக்கம் பின்வரும் இயேசுவின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது: “தம் ஒரே மகனில் நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வைப் பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16). திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம் இந்த நற்செய்தியை நம் வார்த்தையாலும் வாழ்வாலும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்தப் பொறுப்பினை நிறைவேற்ற அருள் அளிக்கும் இறைவன் உடனிருந்து செயலாற்றுகிறார். உலகிற்கு ஒளியாகத் திகழ அருள் வழங்குகின்றார்.

புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோலகடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார் (பிலி 2:13). “உமது முகத்தின் ஒளி என்மீது வீசச் செய்யும் ஆண்டவரேஎன்று செபித்து ஆற்றல் பெறுவோம். நான் இறைவனின் பிள்ளை, இறையாட்சிப் பணியாளர் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் பொழுது இறைநம்பிக்கை நம்மில் நங்கூரமாக நிலைக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்நாமெல்லாம் உடன்பிறப்புகள்என்று உரக்க உரைத்தார். இன்றைய நம் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களும்திரு அவை உலகளாவிய குடும்பம்என்று வலியுறுத்துகின்றார். நாமும் நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்து (எபி 12:2), ஒளியின் செயல்களை ஆற்றி உலகில் ஒளியாகும் பேறு பெற்றவராவோம்.

மே 23 - வெள்ளிக்கிழமை இடைக்காட்டூர் இயேசுவின் திரு இருதய திருத்தலத்திற்குச் சென்றிருந்தேன். திருப்பலி முடிந்த பின்பு ஆலயத்திலிருந்து வெளியில் வந்தேன். ஒரு தாய் தன் மகனுடன் உணவுப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்தார். அங்கு சென்று இரண்டு வடைகள் வாங்கினேன். ரூபாய் எடுத்துக்கொடுக்க முயன்றபொழுது பணம் அறையிலேயே வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தேன். அந்த வடைகளைத் திரும்பக் கொடுத்து, ‘பின்பு வாங்கிக் கொள்கிறேன்என்று கூறிவிட்டு கெபியில் அமர்ந்து செபித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தாய் தன் மகனிடம் வடைகளைப் பொட்டலமாகக் கொடுத்து அனுப்பினார்கள். எவ்வளவோ மறுத்தும், கட்டாயமாகக் கொடுத்துவிட்டார்கள். செபம் முடிந்தபின் அறைக்குச் சென்று ரூபாய் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டார்கள். ‘ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராகஎன்று கூறிவிட்டுத் தொடர்ந்து செபித்தேன். “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்...... மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:35,40) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய இந்த எளிய சகோதரியை நன்றியோடு நினைத்து, ஆண்டவரிடம் ஒப்படைத்துச் செபித்தேன்.

வலிமையற்ற என் கால்களைக் கொண்டு பேருந்தில் பயணம் செய்வது கடினமாக இருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து காரில் வந்த என் உறவினர் என்னைச் சந்தித்தார்கள். எனது நிலை அறிந்து, மதுரைக்கு வருவது தேவையில்லை என்றாலும் கூட, எனக்கு உதவும்படி மதுரை வந்து என் இல்லத்தில் விட்டுச் சென்றார்கள். இவற்றையெல்லாம் நினைக்கும்பொழுது திபா 37:5 வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.”

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும் என்பது வாழ்வின் பேருண்மை. நம்பிக்கைக்குரிய இயேசுவிடம் சரணடைவோம். அவரது அன்பின் சாட்சிகளாவோம், இறையாட்சி மலரச் செய்வோம்.

news
ஆன்மிகம்
திருமுழுக்கு வழங்கும் உறவுகள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 21)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

மார்த்தா: “தந்தையே, மனம் இயல்பாகவே புறம்நோக்கி இயங்கக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய புறம்நோக்கிய மனம் பொருளைச் சேகரிப்பதிலும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதிலும்தான் அதிக அக்கறை காட்டுகிறதேயொழிய, உறவுகளைப் பற்றியோ, பிறர்நலத்தைப் பேணுவது குறித்தோ அதிகம் அக்கறை காட்டுவதில்லை. திருமுழுக்கு அருளடையாளத்தின் நோக்கம் புறம்நோக்கிய மனத்தை அகம்நோக்கித் திருப்பி, உறவை நோக்கித் திருப்புவதாகும். இது குறித்து நாம் கடந்த சில கட்டுரைகளில் விவாதித்தோம்.”

அருள்பணி: “தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் மகிழ்வைத் தேடுவதற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமையும் கடமையும் உண்டு என்றாலும், பொருளை நோக்கி நகர்ந்துதான் அவற்றை அடையமுடியும் என்று மனம் நினைப்பது தவறான ஒன்று. இது நாம் ஏற்கெனவே சிந்தித்த மனத்தின் தன்மையாகிய மாயையோடு தொடர்புடையது. மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களது மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் உறவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.”

அன்புச் செல்வன்: “இன்று வெளிவரும் பல்வேறுவிதமான சமூகவியல் ஆய்வுகளின்படி, ஒரு மனிதரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தின் பங்கு 20 விழுக்காடு மட்டுமே! உறவுதான் 80 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உறவு தன்னோடு உறவு, பிறரோடு உறவு, இயற்கையோடு உறவு, கடவுளோடு உறவு என்று நான்கு நிலைகளில் பரிணமிக்கவேண்டும். எந்த ஒரு மனிதர் இந்த நான்கு வகையான உறவுகளில் ஒரு சேர வளர்கிறாரோ, அம்மனிதர் உண்மையான பாதுகாப்பு உணர்வை அனுபவிப்பதோடு, நிலையான மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்.”

அருள்பணி: “இத்தகைய உறவை நோக்கி ஒரு மனிதர் நகர்வதற்கு உதவி செய்யும் பொருட்டு கொடுக்கப்படும் அருளடையாளமே திருமுழுக்கு! திருமுழுக்கு நிகழ்வின்போது கேட்கப்படுகின்ற ‘சாத்தானையும் அவனது செயல்பாடுகளையும் விட்டு விடுகிறீர்களா?’ என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிவினையின் பிதாமகன் சாத்தான். எனவே, சாத்தானை விட்டுவிடுவது என்பது உறவிற்கு எதிரான பிரிவினை எண்ணங்களை விட்டு விடுவதாகும். அதேபோல ‘கடவுளை நம்புகிறாயா?’ என்கின்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது. கடவுளை நம்புவது என்பது உறவை நோக்கித் திரும்புவதாகும். கடவுள் என்றாலே உறவு மற்றும் அன்பின் இருப்பிடம்தானே!”

கிறிஸ்டினா: “திருமுழுக்கு அருளடையாளம் நமக்கு எத்தகைய உறவுகளைப் பெற்றுத்தருகிறது என்பது குறித்துக் கூறுங்கள் தந்தையே!”

அருள்பணி: “புனித பிரான்சிஸ் சலேசியார் (St. Francis de Sales) திருமுழுக்கு வாங்கிய குழந்தையைப் பார்த்து இவ்வாறு கூறுவாராம்: ‘என் மகனே, நீ வானதூதரின் தோழன்; இயேசுவின் சகோதரன்; தூய ஆவியின் கோவில்; கத்தோலிக்கத் திரு அவையின் அங்கம்; இறைவனின் பிள்ளை.’ திருமுழுக்கு அருளடையாளம் பெற்றுத்தரும் அற்புதமான உறவு கொடைகள் இவை. புனித சலேசியாரின் இக்கூற்றை நாம் கூர்ந்து நோக்கினோம் என்றால், திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாக மண்ணக உறவுகளை மட்டுமல்ல, விண்ணக உறவுகளையும் நாம் பெற்றுக் கொள்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரியவரும்.”

மார்த்தா: “தந்தையே, ஒவ்வோர் உறவாக எடுத்து விளக்குங்களேன்!”

அருள்பணி: “முதலாவதாக, திருமுழுக்கின் வழியாக நாம் வானதூதர்களின் தோழர்களாக மாற்றப்படுகின்றோம். வானதூதர்கள் என்பவர்கள் கடவுளின் பணியாளர்கள்; கடவுளின் பாதுகாப்பையும், வழிநடத்துதலையும் ஒவ்வொரு மனிதருக்கும் எடுத்துச் செல்லக்கூடிய பணியைச் செய்பவர்கள். திருமுழுக்குப் பெறும் ஒவ்வொரு குழந்தையும், வானதூதர்களைப் பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் பெறுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தோபித்து. தோபித்து மகன் தோபியா நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டபோது அவனுக்குத் துணையாகச் சென்றவர் இரபேல் என்ற வானதூதர்.”

மார்த்தா: “தந்தையே, வானதூதர்கள் மூன்று விதமான பணிகளைச் செய்வது குறித்து திருவிவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அ) பாதுகாக்கும் பணி: ‘நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார் (திபா 91:11); ‘என் தூதர் உங்களோடு இருக்கிறார்; அவரே உங்கள் வாழ்வைப் பாதுகாப்பார் (பாரூக் 6:6). ஆ) பரிந்து பேசும் பணி: ‘இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள், இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (மத் 18:10). இவ்வசனம் நம் வானதூதர்கள் இறைப் பிரசன்னத்திலிருந்து நமக்காகப் பரிந்து பேசுவதை எடுத்துரைக்கிறது. இ) வழிநடத்தும் பணி: மரியா, யோசேப்பு, ஞானியர் ஆகியோருக்கு வானதூதர்கள் கடவுளின் செய்தியைக் கொண்டு வந்து, அவர்களை வானதூதர்கள் வழிநடத்தியது நாம் அறிந்ததே!”

அகஸ்டின்: “அன்று மட்டுமல்ல, இன்றும் வானதூதர்கள் நம் தோழர்களாக இருந்து நம்மை வழிநடத்துகின்றனர் என்ற செய்தியை அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘Angels in my Air’ என்பதாகும். இதை எழுதியவர் லோர்னா பைரன் (Lorna Byrne) என்பவர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு விதவை இவர். இவர் எழுதிய இப்புத்தகம் வெளியிட்ட சில நாள்களிலேயே இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையானது. ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் புத்தகம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்: ‘நாம் வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் தனியே இருப்பதில்லை; ஒரு வானதூதர் நம்மோடு இருக்கிறார்.’ லோர்னா வானதூதர்களை தனது ஊனக்கண்களால் பார்ப்பதாகவும், மற்ற மனிதர்களுடன் பேசுவது போலவே அவர்களுடன் உரையாடுவதாகவும் கூறுகிறார். வானதூதர்கள் நம் மிகச்சிறந்த தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கின்றார். “

அருள்பணி: “திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் (இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் தொடங்கியவர்) ஒருமுறை புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மறைமாவட்ட ஆயருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆயர், ‘திருத்தந்தையே, என் பொறுப்பு மிகப் பெரியதாக இருக்கின்றது; என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றாராம். அதற்குத் திருத்தந்தை, ‘நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதே போன்றுதான் எனது பெரும்பொறுப்பை நினைத்துத் தூக்கமின்றித் துன்பப்பட்டேன். ஒருமுறை இவ்வாறு நான் தூக்கமின்றிப் படுக்கையில் புரண்டபோது வானதூதர் என்னிடம், ‘யோவானே, நீ திரு அவையை நடத்துவதாக நினைத்துக்கொள்ளாதே! உன்னைப் பற்றி பெரிய அளவில் எண்ணிக் கொள்ளாதே. திரு அவையை வழிநடத்துவது தூய ஆவியார் என்பதை மறந்துவிடாதே என்றார். அன்று முதல் நான் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தேன் என்றாராம். இன்றும் வானதூதர்களின் செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஓர் உதாரணம். நம் ஒவ்வொருவருக்குமே வான தூதர்களின் தோழமை கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அவர்களது குரலுக்குச் செவி கொடுக்கின்றோமா என்பதுதான் நமக்கு முன்னால் உள்ள கேள்வி!”

கிறிஸ்டினா: “திருமுழுக்கு நம்மை இயேசுவின் சகோதரர்களாக்குகிறது என்று சொன்னீர்கள் தந்தையே! அதை விளக்க முடியுமா?”

அருள்பணி:  “இயேசு கடவுளின் மகன் என்ற முறையிலும், நாமும் கடவுளின் மகன் / மகள் என்ற முறையிலும் இயேசுவின் சகோதரர்களாக திருமுழுக்கின் வழியாக மாற்றப்படுகின்றோம். ‘தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர்-சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை (எபி 2: 11) என்று எபிரேய நூலாசிரியர் கூறுவது நினைவுகூரத்தக்கது. மேலும் இயேசு, ‘என் தந்தையும், உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் (யோவா 20:17) என்று கூறியது நினைவுகூரத்தக்கது. அதுபோல, இறைவனின் திருவுளப்படி அவர் செயல்பட்டதுபோல் யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்கள் எல்லாருமே அவரது சகோதர-சகோதரிகள் என்பதை இயேசுவே சுட்டிக்காட்டியிருக்கிறார் (மத் 12:50). இத்தகைய சகோதர பாசத்தின் பொருட்டே இயேசு நம்மை மீட்பதற்காகச் சிலுவையில் அறையுண்டார். சகோதர அன்பிற்காக அவர் கொடுத்த மாபெரும் விலை அது!”

மார்த்தா: “தந்தையே! சில கத்தோலிக்கக் கிறித்தவர்கள் பெந்தகோஸ்து கிறித்தவர்களால் தூண்டப்பட்டு ‘இயேசப்பா என்று கூறுகிறார்களே! இது சரிதானா?”

அருள்பணி: “அப்படியானால் இயேசு ‘தந்தை என்று அழைத்த தந்தையாகிய கடவுள் நமக்கெல்லாம் தாத்தாவா? உணர்வுப்பூர்வமாகச் சொல்லப்படும் இத்தகைய வார்த்தைகள் தவறான இறையியலை நமக்குத் தந்துவிடுகின்றன. இவற்றின் மட்டில் நாம் கவனமுடன் இருப்பது அவசியம்.”

(தொடரும்)

news
ஆன்மிகம்
மணப்பெண்ணுக்குரிய அன்போடு மரியா கடவுளுக்குப் பதிலளிக்கின்றார்! (Mary response to god with spousal love) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 18

மக்களுடனான கடவுளின் உடன்படிக்கையைக் கொண்டாடுகின்ற திருமண விருந்திற்காக அழைக்கப்பட்ட மனுக்குலம் அனைத்தையும் ஒரு புதியசீயோனின் மகளாகமரியா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

1. “மேன்மைப்படுத்தப்பட்ட சீயோனின் மகளான மரியா (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 55), கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வான தூதரால் வாழ்த்தப்பட்டு, மனுக்குலத்தின் பிரதிநிதியாகக் கடவுளுடைய மகனின் மனுவுருவாதலுக்காக அவரின் சொந்த இசைவைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார்.

வானதூதர் அவரிடம் கூறிய முதல் வார்த்தையே மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பாகும். ‘CHARIEஎன்பதன் அர்த்தம்மகிழ்ந்திடுஆகும். இந்தக் கிரேக்கச் சொல்லானது இலத்தீன் மொழியில்AVEஎன்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்குரியதான இந்தச் சாதாரண சொற்றொடர் வானதூதரின் கருத்தோடும் இந்த நிகழ்வு நடந்த இடத்தின் சூழலமைவோடும் முழுமையாக ஒத்துப்போவதாகத் தெரியவில்லை.

உண்மையில், ‘CHAIREஎன்பது கிரேக்கர்களால் வாழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதொரு சொல்லாடலாகும். ஆனால், சிறப்புமிக்கதொரு சூழலமைவில் கூறப்பட்ட இந்த வார்த்தையானது வழக்கமானதொரு சந்திப்புச் சூழலில் கூறப்படும் வாழ்த்துச் சொல்லிலிருந்து மாறுபட்டதாகும். அதேநேரத்தில், மனித வரலாற்றில் தனிச் சிறப்புடையதொரு செய்தியைக் கொண்டு வருகின்றோம் என்பதை வானதூதர் அறிந்திருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வகையில், ஒரு சாதாரண மற்றும் எளிமையானதொரு வாழ்த்தானது அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாததொன்றாகவே இருக்கின்றது. அதற்குப் பதிலாக, ‘CHAIREஎன்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைக் குறித்துக்காட்டுகின்றREJOICEஅதாவதுமகிழ்ந்திடுஎனும் சொல்லே இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்கான பொருத்தமானதொரு சொல்லாகத் தோன்றுகின்றது. குறிப்பாக, கிரேக்கத் திரு அவைத் தந்தையர்கள் தொடர்ச்சியாக இறைவாக்கினர்களின் வாக்குகளைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுகின்றவாறு, மகிழ்வதற்கானதோர் அழைப்புதான் மீட்பரின்  வருகைக்கான அறிவிப்பிற்கு மிகவும் பொருத்தமான அர்த்தமாக இருக்கின்றது.  ‘மகிழ்ந்திடு; ஏனெனில், ஆண்டவர் அரும்பெருஞ் செயல்களைச் செய்துள்ளார்!’

2. இறைவாக்கினர்களின் வாக்குகளுள் முதலாவதாக இறைவாக்கினர் செப்பனியாவைப் பார்ப்போம். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் ஏடானது இறைவாக்கினர் செப்பனியாவின் இறைவாக்கோடு ஒத்துப்போவதைக் காட்டுகின்றது: “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி (செப் 3:14). இங்கே மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பு இருக்கின்றது: “உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி (செப் 3:14,14). ஆண்டவரின் பிரசன்னமும் இங்கே குறிக்கப்படுகின்றது: “இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய் (செப் 3:15). அஞ்சக்கூடாது என்பதற்கானதோர் அழைப்பு இங்கே இருக்கின்றது: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம் (செப் 3:16). இறுதியாக, மீட்பிற்கான கடவுளின் தலையீட்டிற்கான வாக்குறுதியும் இங்கே இருக்கின்றது: “உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்  (செப் 3:17). இவ்வாறு, ஆண்டவர் அவரின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விரும்பியதால் மகிழ்வதற்கான எல்லாக் காரணங்களும் பெற்றுள்ள மரியாதான்சீயோனின் மகள்என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கான எண்ணற்ற ஒப்பீடுகள் சீரான இடைவெளியில் இருக்கின்றன.

வேறொரு மாறுபட்ட சூழலாக இருந்தாலும், இதேபோன்றதொரு மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பானது யோவேலின் இறைவாக்கிலும் வருகின்றது: “நிலமே, நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்!... இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கின்றேன் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள் (யோவே 2:21-27).

3. எருசலேமில் இயேசு நுழைவதோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் செக்கரியாவின் இறைவாக்கும் இங்குக் குறிப்பிடத்தக்கதொன்றாகும் (மத் 21:5; யோவா 12:15). இதில் மகிழ்ச்சிக்கான காரணமாக மெசியாவாகிய அரசரின் வருகையானது பார்க்கப்படுகின்றது: “மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமல் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க்கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் முதல் மறு கடல் வரை, பேராறு முதல் நிலவுலகின் எல்லைகள் வரை செல்லும் (செக் 9:9-10).

இறுதியாக, இறைவாக்கினர் எசாயா புத்தகத்தில் மகிழ்ச்சிக்கான அறிவிப்பானது தெய்வீக ஆசிர்வாதத்தின் அடையாளமான அதன் எண்ணற்ற தலைமுறையிலிருந்து தோன்றும் புதிய சீயோனின் எழுச்சியில் கூறப்படுகிறது: “பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள் என்கிறார் ஆண்டவர் (எசா 54:1).

இவ்வாறு, மகழ்ச்சிக்கானதோர் அழைப்பின் காரணங்களாக இம்மூன்றும் இருக்கின்றன. அவரின் மக்கள் மத்தியில் கடவுளின் மீட்புப் பிரசன்னம், மெசியாவாகிய அரசருடைய வருகை மற்றும் பெருந்தன்மையும் வளமையுமிக்க அவரின் மாட்சி இவையனைத்தும்  மரியாவில்  நிறைவேற்றம் பெற்றன. அவை கருத்தரித்தலின் அர்த்தத்தை திரு அவையின் பாரம்பரியத்தினால் வானதூதரின் வாழ்த்தொலிக்கு அடைமொழியாக்கப்பட்டதை நியாயப்படுத்துகின்றன.

மெசியாவினுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்கான ஒப்புதலைக் கொடுப்பதற்கு மரியாவை அழைத்ததன் வழியாகவும், ஆண்டவரின் தாயாக இருப்பதற்கான மிகவும் உன்னதமான தகுதியை அவளிடம் அறிவித்ததன் வழியாகவும் வானதூதர் அவரை மகிழ்வதற்கு அழைக்கின்றார். இதையே இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் நமக்கு இவ்வாறு கூறுகின்றது: “இறுதியாக, சீயோனின் மாண்புமிக்க மகளான அவரோடு, வாக்குறுதியை எதிர்ப்பார்த்திருந்த நீண்ட காலம் முடிந்து புதிய திட்டம் உருவாக்கப் பெறுகிறது. இத்திட்டத்திலே மனிதரைப் பாவத்தினின்று தம் உடலில் நிகழ்ந்த மறைநிகழ்ச்சிகள் வாயிலாக மீட்க இறைமகன் அவரிடமிருந்தே மனித இயல்பை எடுத்துக் கொண்டார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 55).

4. கிறிஸ்து பிறப்பின் அறிவிப்புப் பற்றிய திருவிவிலியப் பகுதியானது ஆழமானதொரு மகிழ்ச்சிக்குக் கடவுளால் அழைக்கப்பட்ட புதியசீயோனின் மகளில்மரியாவைக் கண்டுகொள்ள நம்மை அழைக்கின்றது. இது மெசியாவின் தாய், உண்மையில் கடவுளுடைய மகனின் தாய் என்கின்ற  அவரின் சிறப்பானதொரு பங்கை வெளிப்படுத்துகின்றதுதாவீதின் மக்களுடைய சார்பாக நின்று அந்தக் கன்னி வானதூதரின்  செய்தியை ஏற்கின்றார். ஆனால், மனுக்குலம் அனைத்தின் சார்பாக அவர் ஏற்றார் என்றும் நாம் கூறலாம். ஏனென்றால், பழைய ஏற்பாடானது தாவீதின் வழிவந்த மெசியாவின் பங்கை எல்லா நாடுகளுக்கும் விரிவுபடுத்துகின்றது (ஒப்பிடுக. திபா 2:8; 71s72d, 8). தெய்வீக எண்ணத்தில், அவருக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவிப்பானது உலக மீட்பிற்கானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது.

இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியை மரியா வரவேற்கின்றார்!

கடவுளின் திட்டத்தினுடைய இந்த உலகளாவிய பார்வையை உறுதிப்படுத்துவதற்கு சீயோன் மலைமேல் எல்லா மக்களும் கொண்டாடவிருக்கின்ற (ஒப்பிடுக. எசா 25:6) அந்த மாபெரும் விருந்து மற்றும் கடவுளுடைய அரசின் இறுதி விருந்தை அறிவிக்கின்ற அந்த நிகழ்வோடும் (ஒப்பிடுக. மத் 2:1-10) மீட்பானது ஒப்பிடப்படும். அநேக பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு இறைவார்த்தைகளை நாம் நினைவுகூர முடியும்.

சீயோனின் மகள்என்கின்ற வகையில், கடவுள் மனுக்குலம் அனைத்தோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் கன்னியாக மரியா இருக்கின்றார். இந்நிகழ்வில் மரியாவின் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கானது தெளிவாக இருக்கின்றது. இந்தச் செயலை ஒரு பெண்ணானவள் செய்கின்றாள் என்பது இங்குத் தனிச்சிறப்புமிக்கதாகும்.

5. புதியசீயோனின் மகள்என்கின்ற வகையில், உண்மையில் மரியா கடவுளோடு திருமண உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்குப் பொருத்தமான ஒருவராக இருக்கின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் எந்தவொருவரைக் காட்டிலும் மரியாவால் ஆண்டவருக்கு மணவாட்டியின் உண்மையான இதயத்தைக் கையளிக்க முடியும்.

மரியாவைப்  பொறுத்தவரைசீயோனின் மகள்என்பது ஒரு கூட்டுப்பொருள் மட்டுமல்ல, மனிதகுலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர் மற்றும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது இறையன்பின் முன்மொழிதலுக்கு மணமகளுக்கு உரித்தான அன்பினால் அவரின் தனிப்பட்ட பதிலை அளிக்கின்றார்.

இவ்வாறு, முற்றிலும் சிறப்பான வகையில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியானது  கடவுளுடைய திட்டத்தின் நிறைவு இங்கு முழுமைக்கு வருவதால் ஏற்படும் மகிழ்ச்சியால் அதை அவர் வரவேற்கின்றார்.

மூலம்: John Paul II, Mary responds to God with spousal love, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 8 May 1996, p. 11.

news
ஆன்மிகம்
நல்ல நிலத்தில் விழுந்த விதை (நீங்கா நினைவுகள் – 7)

என் இதயத்திற்கேற்ப உழைப்பாளர்களை நான் உங்களுக்கு அளிப்பேன்என்ற இறைவார்த்தைக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் 2013, மார்ச் 13-ஆம் நாளன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். இறந்தாலும் நம் நினைவுகளிலும் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இயேசுவின் நற்செய்தி விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் இந்த நவீன காலகட்டத்தில் தன் செயல்கள் வழியாக மெய்ப்பித்தவர்.

கொடையாகப் பெற்றீர்கள், கொடையாக வழங்குங்கள்என்ற இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி தன் வாழ்வால் நற்செய்தி அறிவித்தவர். வரலாற்றையே மாற்றி எழுதும் வகையிலும், தான் தேர்ந்தெடுத்த முதல் நாளிலே இவரைப் பற்றி அறிய வியக்கும் வகையில் முந்தைய திருத்தந்தையர்களின் பெயரைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையின் வடிவமாக, அமைதியின் தூதுவராக வாழ்ந்து காட்டிய புனித பிரான்சிஸ் அசிசியாரின் பெயரைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தும் காட்டினார்.

தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டுப் போரால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைக் காணவந்த அந்நாட்டு மன்னரின் காலடியில் மண்டியிட்டுப் போரை நிறுத்தும்படி மன்றாடினார். இஸ்ரேல்-பாலஸ்தீனம், இரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக அமைதிக்கான போர்க் குரல் எழுப்பியவர் திருத்தந்தை பிரான்சிஸ்திருத்தந்தைக்கு என்று ஒதுக்கப்பட்ட மாளிகை, ஆடம்பர உடைகள், காலணிகள், உணவுகள் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தாமல், பணியாளர்களின் பணியாளராக, எளிமையின் சின்னமாக, ‘நான் ஒரு பாவி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்என்று தலையைத் தாழ்த்தி வணங்கியபோது உலகமே வியப்புற்றது.

ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கின்றீர்கள் (யோவா 12:14) எனும் வாக்கிற்கிணங்க, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எய்ட்ஸ் நோயாளிகளான பெண்கள், ஆண்கள், சிறைக்கைதிகள், கைவிடப்பட்டவர்கள் என ஏழைகளின் பாதங்களைக் கழுவிகிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்என்று முதன்முதலில் நிரூபித்துக்காட்டியவர்.

காணாமல் போன ஆட்டைத் தேடிச்சென்ற நல்லாயனைப்போல சமூகத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட காயப்பட்டோரைத் தேடிச்சென்று காயங்களுக்கு மருந்திடுவதே அருள்பணி என்றும், அருள்பணியாளர்கள், துறவிகள் தங்களது நிறுவனங்களை விட்டு வெளியேறி, எளியோர் மத்தியில் அன்பைப் பகிர்வதே மேன்மையான மேய்ப்புப்பணி என்று வாழ்ந்து காட்டியவர்.

தற்கால சூழலில் கேள்விக்குள்ளான சில அறநெறிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர். “வெவ்வேறு பாலின இயல்புகளைத் தீர்ப்பிட நான் யார்? கடவுள் மட்டுமேஎன்று குறிப்பிட்டவர். “நற்கருணை என்பது தூயவருக்கு அளிக்கப்படும் பரிசு அன்று; மாறாக, பலவீனமானவர்களுக்கும் அளிக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து மற்றும் ஊட்டச்சத்துஎன்று கூறி உயர்ந்து ஓங்கிய மாமனிதர்.

திரு அவையில் நிகழும் பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு மட்டுமே சிறப்பு இருக்கைகள் தரப்பட்டிருக்கும். ஆனால், அருள்சகோதரிகள், பெண்கள் இதில் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அமர்த்தப்படுவார்கள். பெண்களைப் பங்குகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க யோசிக்கும் இந்தக் காலகட்டத்தில், முற்போக்குச் சிந்தனையாளரான நம் திருத்தந்தை பிப்ரவரி 2021-இல் பொதுச் செயலகத்தின் இரண்டு துணைச் செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நந்தினி பென்னாட்டை நியமித்தார். 2025, சனவரி 6-இல் சகோதரி பிரம்பில்லாவைப் பத்திதான் பேராலய முதல்வராகவும், சகோதரி இராபில்லா பெற்றினேன் அவர்களை நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராகவும் பதவியேற்க வைத்தார். இவ்வாறு பெண்களை மாண்புடன் நடத்தி திரு அவையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தார். திரு அவையின் மையம் பொதுநிலையினர். அவர்களுக்கே நம் பணி. அவர்களுக்காகவே நாம் அழைக்கப்பட்டு இருக்கின்றோம் என்று பொதுநிலையினரை முன்நிறுத்தி, பொதுநிலையினருக்கும் நிர்வாகப் பொறுப்பை வழங்கிய முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இறைவனின் தாயான அன்னை மரியாவைத் தன் வாழ்விலும் தாயாக ஏற்று, அவரை அன்பு செய்து எல்லாத் திருத்தந்தையர்களும் புனித பேதுருவின் பேராலயத்திற்குள்தான் அடக்கம் செய்யப்படுபவர் என்ற நிலையை மாற்றி, தான் எப்பொழுதும் செபம் செய்யும் சாந்தா மரியா பேராலயத்தில் மிகவும் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதல் திருத்தந்தை.

உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்என்ற இறைவார்த்தைக்கிணங்க இந்த 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இறந்தாலும், மக்களின் மனங்களில் திரு அவையின் கோட்பாடுகளைக் காப்பதில் இரும்புக் கரம் கொண்டவர். ஏழை எளிய மக்களை, ஒதுக்கப்பட்டுள்ளோரை அரவணைப்பதில் எளிமையும் தாழ்ச்சியும் கொண்டு வாழ்ந்தவர். இவர் மாமனிதர், வாழும் புனிதர், சிறந்த நல்லாயன், நீதியின் திருத்தந்தை, ஈகையின் திருத்தந்தை, நம்பிக்கையின் திருத்தந்தை மற்றும் மதங்களைக் கடந்து எல்லார் உள்ளங்களிலும் இடம்பெற்ற திருத்தந்தை இறந்தும் வாழ்கிறார்.

news
ஆன்மிகம்
“வீழ்ந்தோர் இறைவேண்டலால் எழுவர்!” (சிறைப்பணி ஞாயிறு - ஆயர் மடல்)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

காணாமல் போனவர்களைத் தேடி மீட்க வந்த நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்களுக்கு அருளும் இரக்கமும் அமைதியும் உண்டாவதாக! நமது கத்தோலிக்கத் திரு அவை சிறைப்பணி ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது கிறித்தவ நம்பிக்கையின் அடிப்படையான கோட்பாடு அனைவருக்கும் மீட்பு உண்டு என்ற நம்பிக்கைதான்.

இந்த ஆண்டின் சிறைப்பணி ஞாயிறு கருப்பொருள்வீழ்ந்தோர் இறைவேண்டலால் எழுவர்என்பது. கடவுளின் அருளாலும், திரு அவையின் ஆதரவுடனும் சிறைவாசிகள் மீண்டெழுவது இப்பொழுது இயலும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது இந்தக் கருப்பொருள். கண்டனம் செய்வதற்கு விரைவாகவும், மன்னிக்க மெதுவாகவும் இருக்கும் உலகில், நற்செய்தி நம்மை ஓர் உயர்ந்த உண்மைக்கு அழைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எவ்வளவு தூரம் விழுந்துவிட்டாலும், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர். அவருடைய இரக்கமும் நமது இறைவேண்டலும் அவர்கள் மாற்றத்தை அடைய உதவிபுரியும்.

மீட்பிற்கான அழைப்பு

படைப்பின் தொடக்கத்திலிருந்தே உடைந்தவர்களிடம் கடவுளின் அசைக்க முடியாத அன்பைக் காண்கிறோம். ஆதாமும் ஏவாளும் வீழ்ந்திருந்தும் கைவிடப்படவில்லை. அரசர் தாவீது கடுமையான பாவம் செய்தபோதிலும், மனந்திரும்பி கடவுளின் இதயத்திற்கு ஏற்ற மனிதரானார். ஒரு காலத்தில் கிறித்தவர்களைத் துன்புறுத்திய புனித பவுல், பிற இனத்தாரின் சீடரானார். ஊதாரி மகன் மன்னிக்கப்படவில்லை; ஆனால், கொண்டாடப்பட்டார். இவை வெறும் கடந்தகால கதைகள் மட்டும் அல்ல; அவை தெய்வீகமானவை. இது நம்பிக்கையும் மனந்திரும்புதலும் ஆகும். எசேக்கியேல் இறைவாக்கினர் மூலம் கடவுள் அறிவிக்கிறதுபோல், “தீயோர் சாக வேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே, உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள் (எசேக் 33:11).

இயேசு கிறிஸ்து: இரக்கமுள்ளவர் மற்றும் மறு சீரமைப்பு செய்பவர்!

தமது பொது வாழ்வில் இயேசு புறந்தள்ளப்பட்ட மக்களிடையே பாவிகள், வரிவசூலிப்பவர்கள், குற்றவாளிகளோடு நடந்தார். சிலுவையிலிருந்து மனந்திரும்பிய ஒரு கள்வனிடம் மன்னிப்பு வார்த்தைகளைப் பேசினார்: “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் (லூக் 23:43). வரி வசூலிப்பவர்களுடன் அவர் உணவருந்தினார். விபச்சாரப் பெண்ணை மன்னித்தார். இழந்து போனதைத் தேடினார். இழந்துபோன நாணயம், காணாமற்போன ஆடு, இழந்துபோன மகன் போன்ற உவமைகள் மூலம் அவர் தந்தையின் இதயத்தை வெளிப்படுத்தினார். “மனம் மாற தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7); “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்.”

இறைவேண்டலின் இறகுகள்

இறைவேண்டலும் உண்ணாநோன்பும் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கு அடித்தளமாகும். இறைவேண்டல் மூலம்தான் இதயங்கள் மென்மையாகின்றன. மனச்சாட்சிகள் விழித்தெழுந்து, அருளைப் பெறுகின்றன. உலகெங்கிலும் உள்ள சிறைவாசிகளின் நலனுக்காக நற்கருணைநாதர் முன் தன்னார்வலர்கள் பரிந்து பேசுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கான இந்த இடைவிடாத இறைவேண்டலில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். இணைய வழியில் அல்லது ஆன்மிக வகையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காகத் தொடர் நோன்பு, தொடர் திருப்பலி, தொடர் செபமாலை மற்றும் இறைஇரக்க வழிபாடுகளையும் சிறைப்பணி ஏற்பாடு செய்கிறது. உங்கள் அன்றாட இறைவேண்டல்கள் மற்றும் ஆன்மிக முயற்சிகள்... குறிப்பாக, பயங்கரவாதிகள் போன்ற கடுமையான குற்றவாளிகளுக்கு அவர்களைக் கருணையை நோக்கி உயர்த்தும் சிறகுகளாக அமைகின்றன.

தண்டனைக்குப் பின்னால் நம்பிக்கை...

திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை கூறியது: “ஆண்டவர் மறு ஒருங்கிணைப்பில் வல்லவர்; அவர் நம்மைக் கையைப் பிடித்து மீண்டும் சமூகத்திற்குள் கொண்டு வருகிறார்.” சிறையில் அடைக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும், அவர்களுக்குச் சேவை செய்பவர்களுடனும் நம்பிக்கையுடன் ஒன்றாக நடப்போம். புனித கதவைப்போல நம் இதயங்கள் அகலத் திறக்கட்டும். அதனால், யாரும் விலக்கப்பட மாட்டார்கள்; மேலும், அனைவரும் கடவுளின் மாற்றும் அன்பை அறியட்டும். இந்தச் சிறைப்பணி ஞாயிறு நம் தைரியத்தைப் புதுப்பிக்கட்டும். மறக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்யவும், குரலற்றவர்களுக்காக வாதிடவும், பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நற்செய்தியை அறிவிக்கவும்தான். திரு அவை கண்டனம் செய்வதற்கான நீதிமன்ற அறை அல்ல; மாறாக, குணப்படுத்துவதற்கான மருத்துவமனை. கிறிஸ்துவின் வார்த்தைகளை எதிரொலிப்போம்: “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் (யோவா 8:11).

ஆசிரும் நன்றியும்!

தாராளமான எனது சகோதர ஆயர்களுடன் சேர்ந்து, அனைத்து மறைமாவட்டங்களுக்கும், முக்கிய மேலதிகாரிகளுக்கும் மற்றும் உங்கள் தொடர்ச்சியான இறைவேண்டல்களுக்கும் ஆதரவிற்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இழந்தவர்களைத் தேட வந்த இயேசு உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக! சிறைவாசிகளின் மறுவாழ்வில் அயராத சேவை செய்த அனைத்துச் சிறைப்பணி தன்னார்வலர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியச் சிறைப்பணியின் பாதுகாவலர்களான புனித மாக்சிமில்லியன் கோல்பே மற்றும் வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் வான்துவான் ஆகியோர் இந்தப் பணிக்காகப் பரிந்து பேசட்டும். நமது அன்னையாம் தூய கன்னி மரியா உங்களை எப்போதும் பாதுகாத்து வழிநடத்தட்டும்!

news
ஆன்மிகம்
இளையோர் ‘இயேசு அனுபவம்’ பெற... (22-வது இளைஞர் ஞாயிறுக்கான ஆயரின் சுற்றுமடல்)

தமிழ்நாடு திரு அவை ஆகஸ்டு முதல் ஞாயிறை (03.08.2025) இளைஞர் ஞாயிறாகக் கொண்டாடுகின்றது. இவ்வாண்டின் இளைஞர் ஞாயிறின் கருப்பொருளாக, “நீங்களும் சான்று பகர்வீர்கள்; ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள் (யோவா 15:27) எனும் இயேசுவின் ஆற்றலூட்டும் வார்த்தைகளை மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

இளைஞர் இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரோடு தங்கி, அவரின் பணிவாழ்வில் உடன் பயணித்து, அவரது இறையாட்சிக் கொள்கைகளைத் தமதாக்கி, அவரது பார்வையைக் கொண்டவர்கள் தாம் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பை உடனுணர்ந்த பிறகு இச்சீடர்கள், தங்கள் வாழ்வால் இயேசுவிற்குச் சான்றுபகர்ந்தார்கள். குறிப்பாக, தேவையிலிருப்பவர்களுக்குப் பணியாற்றுதல், ஏழைகள், கைம்பெண்கள், பிற இனத்தார் போன்றோருக்கு முன்னுரிமை கொடுத்தல், தயக்கமின்றித் துணிவுடன் உண்மையை எடுத்துரைத்தல், நோயுற்றோரை நலமாக்குதல், பிரிவினைகளை அகற்றி வாழ்தல், பெண் சீடர்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பணிகளாலும் பண்பாலும் சீடர்கள் சான்று பகர்ந்தார்கள். ஆட்சியாளர்களின் தீங்கிழைக்கும் ஆட்சி முறைக்கு எதிரான, முரண்பட்ட ஆளுமைகளாய் நயன்மை காத்தார்கள். தங்களின் நேர்மையான நிலைப்பாட்டிற்காக இன்னுயிரையும் இழக்க அவர்கள் தயங்கியதில்லை. எனவேதான், இயேசுவின் சீடர்களாய் வாழஇயேசு அனுபவம்பெற்றிருப்பதோடு, இயேசுவிற்குச் சான்று பகரும் வாழ்க்கைமுறையும் அடிப்படைத் தேவையாகிறது. இயேசு அனுபவமும் சான்று பகரும் வாழ்வுமே உண்மையான சீடத்துவ வாழ்வின் இரு இணைபிரியா, ஒன்றையொன்று நிறைவு செய்யும் பக்கங்கள்.

இயேசுவுடன் உடனிருத்தல்

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நண்பர்கள் என்றேன் (யோவா 15:15) என இயேசு இன்று இளைஞர்களுக்காக நட்பிற்கான அழைப்பை விடுக்கிறார். அதோடு, “வந்து பாருங்கள் (யோவா 1:36) என இளைஞர்களை அவரோடு தங்கி வாழ அழைக்கிறார். சான்று பகரும் சீடத்துவ வாழ்விற்கு இயேசுவோடு உடனிருக்கும் அருள்வாழ்வே அடித்தளமாகும். இதை உணர்ந்துதான் தமிழ்நாடு திரு அவையின் இளைஞர் பணிக்கான கொள்கையின் முதல் முன்னுரிமையாக அருள்வாழ்வும் இறைநம்பிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இயேசுவோடு உடனிருக்கும் ஆழமான அருள்வாழ்வை வளர்க்க இளைஞர்கள் இறைவார்த்தையை வாசித்து, உள்வாங்கி, இக்காலச்சூழலுக்கு ஏற்ப புரிந்து வாழ்ந்து காட்டலாம்; அருளடையாளங்களின் பொருளுணர்ந்து, அவை விடுக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம்; ஆழ்நிலைத் தியானம், இயற்கைத் தியானம், இனிய இசை தியானம், திருச்செபமாலை, புதுமையான இறைவேண்டல்கள், இளைஞர் திருப்பலி, ஆற்றுப்படுத்தும் ஒப்புரவு போன்ற அருள்வாழ்வு பயிற்சிகள் வழியாகவும் இயேசு அனுபவம் பெறலாம். இளைஞர் இயேசுவின் ஆளுமையையும் செயல்பாடுகளையும், வாழ்வியல் முறைகளையும், வாழ்வின் மதிப்பீடுகளையும், உறவுகொள்ளும் முறையையும், உதவி செய்யும் பாங்கினையும் தன்வயப்படுத்தியும் இயேசுவோடு உடனிருக்கலாம். இவ்வாறு இளைஞர் இயேசு என்னும் திராட்சைச் செடியின் கிளைகளாய் இளைஞர்கள் இணைந்திருக்கவேண்டும். உயிரோட்டமான இணைவே கனிகள் ஈவதற்கான உயிராற்றல் என்பதை நெஞ்சில் நிறுத்தவேண்டும்.

சான்று பகர்தல்

இயேசுவோடு உடனிருந்து உயிரியக்கம் பெறும் இளைஞர்கள் தாங்கள் வாழும் சமூகத்தில் உயிராற்றலோடு ஈடுபடுவார்கள். “இளைஞர் தெருக்களில் களமாடுகிறார்கள்; மாற்றத்தின் மிக முக்கிய ஆதரவாளர்களாக இருக்க விழைகின்றனர்; இயேசு வெறும் பார்வையாளர் அல்லன் அவர் ஈடுபட்டார். எனவே, ஏதோ ஒரு வழியில் பொதுநலனுக்காகப் போராடுங்கள், ஏழைகளுக்குப் பணியாற்றிடுங்கள். அன்பும் பணியாற்றும் பண்பும் கொண்ட புரட்சியின் முதன்மையான செயல்பாட்டாளர்களாக இருங்கள் (கிவா 174) என்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்கிறிஸ்து வாழ்கிறார்என்ற திருத்தூது ஊக்கவுரை வழியாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

இளைஞர்களே! நீங்கள் கடவுளின் அன்பைத் தழுவிக்கொள்ளவும், நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாக வாழவும் பிளவுபட்ட உலகில் அமைதிக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பணியாற்றுவதற்கான அழைப்பிற்குப் பதிலுரைக்க அஞ்ச வேண்டாம்எனத் திருத்தந்தை லியோ அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவோடு உடனிருந்து, அவரது அனுபவத்தில் வேரூன்றிய இளைஞர்கள், தங்கள் வாழ்க்கை நிலைகளுக்கும் தனியழைப்பிற்கும் ஏற்ப சமூகத்தில் ஈடுபட்டு, சமூக நீதிச் செயல்பாடுகளில் களமாட வேண்டும். ஆண், பெண் நிகர்நிலையைப் பேணிக்காக்கப் பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம், பாலியல் கொடுமைகள் போன்றவற்றிற்கெதிராக அறச்சீற்றத்துடன் பல முன்னெடுப்புகளை எடுப்பதோடு பெண்ணுரிமையைப் பேணுதல், பெண்களின் மாண்பைப் போற்றுதல், சமவாய்ப்பு போன்ற மாற்றநிலை நோக்கிப் பயணிக்கவேண்டும். சாதியத்தால் பிளவுபட்டுக் கிடக்கும் திரு அவையையும் சமூகத்தையும் கேள்விகேட்டு, இளைஞர் இயேசுவின் அன்புநெறியிலும் சமன்மைப் பாதையிலும் இயங்கும் புதிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். மது, போதைப்பொருள்களால் மாண்பிழந்து தள்ளாடும் இளைஞர், மாணாக்கர் சமூகத்தை நெறிப்படுத்தி, போதையில்லாப் புதிய இளைஞர் பண்பாடு, போதை நோய்க்கான மருத்துவம், போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கங்களோடு போராட வேண்டும். இளைஞர் உலகை வீழ்த்தும் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், அறநெறியற்ற ஊடகப் பயன்பாடு, இணையவழி அச்சுறுத்தல்கள் போன்ற எண்மின் படையெடுப்புகளை வீழ்த்த அறநெறியுடன் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

உறவுகளையும் வளங்களையும் பாதுகாப்பையும் அழித்து, சொல்லொண்ணாத் துயரத்தில் குற்றுயிராக்கும் போர்களுக்கெதிராகவும் நாடுகளின் முதலாளித்துவப் போக்கிற்கெதிராகவும், பொதுமையில் வேரூன்றும் நிலையான அமைதியை நிலைநாட்டும் இறையாட்சியின் தலைவர்களாக இளைஞர்கள் உயர வேண்டும். பகட்டையும் கவர்ச்சியையும் புறந்தள்ளி, கொள்கையுள்ள அரசியலை இனம்காணவும், தாங்கள் வாழும் பகுதியில் அரசியல் தன்மையோடு இளைஞர்கள் செயல்பட வேண்டும். இயற்கை வளங்களைச் சூறையாடும் திட்டங்களையும் சட்டங்களையும் முதலாளித்துவ அமைப்புகளையும், அறிவுக்கூர்மையுடனும் அரசியல் ஆற்றலோடும் இளைஞர்கள் அகற்றவேண்டும்.

மலைவாழ் மக்களுக்கான நீதிப்பணிக்காக உயிர் விட்ட அருளாளர் இராணி மரியா, பழங்குடியினரின் உரிமைகளுக்காக உயிர்நீந்த அருள்பணி. ஸ்டேன் சுவாமி, ஊழலுக்கெதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளம் அருளாளர் ஃபுளோரிபர்ட் ப்வானா சூய் (Floribert Bwana Chui), நாட்டுரிமைக்காகப் போர்புரிந்த இளம் வீராங்கனை புனித ஜோன் ஆஃப் ஆர்க், ஊடகத் துறையில் கிறித்தவ மனநிலையோடு செயலாற்றிய அருளாளர் கார்லோ அக்குத்திஸ், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்ததால் கொலை செய்யப்பட்ட பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரையும் உங்கள் சான்று வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

இளைஞர் இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், எல்லாப் பங்குகளிலும் இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டுச் செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். பங்குகள், மறைவட்டங்கள், மறைமாவட்டங்கள் ஆகிய தளங்களில் இளைஞர்களுக்கான உருவாக்கப் பயிற்சிகளான தலைமைத்துவம், ஆளுமை, சமூகப் பகுப்பாய்வு போன்றவை வழங்கவேண்டும். எல்லா மறைமாவட்டங்களிலும் பயிற்சிபெற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து, பங்குச் சந்திப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். அக்குழுக்கள் வழியாகப் பங்கு இளைஞர் இயக்கங்களை ஒருங்கிணைத்து, உயிரூட்டி, ஆற்றல்படுத்த வேண்டும்.

22-வது இளைஞர் ஞாயிறன்று (03.08.2025) போதைப்பொருள்களுக்கெதிராக விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்திடவும், குருதிக் கொடையாளர் பட்டியலை எல்லாப் பங்குகளிலும் உருவாக்கி, தமிழ்நாடு அளவில் தொகுத்திடவும், பங்களவில் ஏழை மாணவர் ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கிடவும், மறைமாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திடவும், மதுக் கடைகளை அகற்றக் கோரியும், போதைப் பொருள்கள் விற்பனையைத் தடைசெய்யக் கோரியும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்குக் கோரிக்கை மனு வழங்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இறையாசியும் அன்னை மரியாவின் வழிநடத்துதலும் உங்கள் அனைவரோடும் இருப்பனவாக!