தேனி மாவட்டத்திலுள்ள தே. சிந்தலைச்சேரி என்னும் கிராமத்தில் 09-09-1948-இல் பிறந்தேன். என் அப்பா திரு. சவரிமுத்து பள்ளி ஆசிரியராகவும், அஞ்சலக மேலதிகாரியுமாக இருந்தார். என் அம்மா திருமதி. சலேத்தம்மாள் ஓர் இல்லத்தரசி. எனக்கு இரண்டு அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. என் குடும்பத்தில்தான் நான் இன்றுவரை பின்பற்றும் நல்ல மதிப்பீடுகளையும் நல்ல பண்புகளையும் கற்றுக்கொண்டேன்.
என்னைச் செதுக்கிய
சிற்பிகள்
எனது
வாழ்க்கை உயர்ந்த குறிக்கோளுடன் அமைய உதவிய மூன்று முக்கியமானவர்களை இங்குப் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
1. அருள்தந்தை மாத்யூ
டி
முட்டம்
சே.ச.
பல ஆண்டுகள் சிந்தலைச்சேரியில் பங்குத் தந்தையாகப் பணியாற்றியவர். நான் இயேசு சபைக் குருவாக வேண்டும் என்ற கனவுக்கு வடிவம் கொடுத்தவர் தந்தை முட்டம் அவர்கள்தான்.
2. திருச்சி
புனித வளனார் கல்லூரியின் அன்றைய தாவரவியல் துறையின் தலைவர் அருள்தந்தை
கே.எம்.
மாத்யூ,
சே.ச.
அவர்கள். நான் தாவரவியல் பாடத்தை விரும்பிப் படித்ததற்கும், அதில் பல விருதுகள், பரிசுகள்,
புதிய கண்டுபிடிப்புகள் என உலக அளவில்
புகழ் பெற்றிருப்பதற்கும் அன்று தந்தை கே.எம். மாத்யூ
அவர்களிடம் நான் கற்றப் பாடங்களே காரணம்.
3. எனது
இன்றைய ஆய்வு வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட மற்றொரு மறக்க முடியாத மனிதர் பேராசிரியர் பாபு அவர்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக அமைந்தவர்தான் முனைவர் பாபு. உடன் பணியாற்றுபவர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் உற்ற நண்பரைப்போல விளங்கியவர். எனது முனைவர் பட்ட ஆய்வு மிகச்சிறப்பாக அமையக் காரணம் பேராசிரியர் பாபு அவர்கள் எனக்களித்த அளவற்ற ஆதரவு, வழங்கிய பங்களிப்பு, என்பால் காட்டிய அன்பு, அக்கறை மற்றும் நட்புறவு ஆகியவைதாம். அவரிடம் நான் கற்றுக் கொண்ட யுக்திகள் எண்ணற்ற மாணவர்களை ஆய்வில் ஈடுபடுத்த உதவின.
என்னை வழிநடத்திய
கனவு
சிறுபிள்ளையாக
இருக்கும்பொழுதே தினமும் காலை 5.30 மணி திருப்பலியில் தவறாது கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அதேபோன்று, மாலை நேர செப வழிபாட்டிலும் தவறாது கலந்துகொள்வேன். குருத்துவ வாழ்வில் இணைந்து இறைவனின் அருள்பெற்று ஏழை, எளிய மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்ற எண்ணம் எனது எட்டாவது வயதிலேயே எனக்கு ஏற்பட்டது.
அந்த
வயதில் எனக்கு ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவு இரண்டு நாள்கள் தொடர்ந்தது. முதல் நாள் கனவு கீழ்வருமாறு இருந்தது. நான் எனது அப்பாவோடு ஊரில் உள்ள நடுத்தெருவில் நடந்து சென்றேன். அப்படி நடந்து சென்ற பொழுது எனது அருகில் அன்னை கன்னி மரியா திடீரென வந்து கூடச் சேர்ந்து நடந்தார்கள். பின்பு தெருவின் முடிவை எட்டிய பொழுது உலக உருண்டை எனக்கு முன் தென்பட்டது. இத்தோடு முதல் நாள் கனவு முடிந்துவிட்டது.
பின்பு
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் கனவு தொடர்ந்தது. நானும், அன்னை மரியாவும் அந்த உலகை உருண்டை மேல் நடந்து செல்கிறோம். என் அப்பா என்னோடு வரவில்லை. உச்சியை அடைந்தபொழுது சிலுவையில் அறையுண்ட இயேசு காட்சி அளிக்கிறார். உடனே திரும்பிப் பார்த்தேன், அன்னை மரியாவைக் காணவில்லை. நானும் இயேசுவும் மட்டும்தான் அங்கிருந்தோம்.
அன்றிலிருந்து
இறைவன் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கின்றார் என்று அதனைத் தேடிக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். குறிப்பாக, இறைவனோடு செபம் வழியாகப் பேசுவது எனது அன்றாடப் பழக்கமாகிவிட்டது.
அன்றாடம் நினைவுகூரும்
இறைவார்த்தைகள்
“உன் செல்வம் எங்குள்ளதோ, அங்கேதான் உன் இதயமும் இருக்கும். இந்த உலகில் நீ சேர்த்து வைப்பதைப்
பூச்சிகள் வந்து அழித்துவிடும். ஆனால், விண்ணுலகில் நீ சேர்த்து வைப்பதை
எவராலும் அழிக்க முடியாது”
என்ற இறைவார்த்தைகள் நான் எட்டு வயது சிறுவனாக இருந்தபொழுதே எனது மனத்தில் ஆழப் பதிந்துவிட்டன. இவையே என்னை இன்றும் வழிநடத்துகின்றன.
அதேபோன்று
“வீண், முற்றும் வீண்; எல்லாமே வீண்-இறைவனை நேசிப்பதையும் அவருக்குப் பணிவிடை செய்வதையும் தவிர...” என்ற இறைவார்த்தைகளும் இளம் வயதிலேயே என் உள்ளத்தில் வேரூன்றி எனது வாழ்க்கைப் பாதையைச் சரியான விதத்தில் அமைத்துக்கொள்ள பெரிதும் உதவின. இன்றும் இவையே எனக்கு ஒளியாய் இருக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள டிரோஜா என்னும் பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி அலங்காரம் செய்து, தங்கள் வீட்டில் வைத்து வாழ்ந்து வருகின்றனர். இறப்பு என்பது, வாழ்க்கையில் நீண்டதொரு பயணம் என்று நம்புகின்றனர். சிதிலமடைந்த உடல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் சீரமைத்து, புத்தாடை உடுத்தி அழகுபடுத்தி, முக்கியமான விழாக்களின்போது உணவும் படைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் துணை இறக்கும்வரை இல்லங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றனர்.
இறந்தவர்களின்
உடல்களுடன் அவ்வப்போது குடும்பமாக உரையாடி தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொள்கின்றனர்.
தங்கள் குடும்பத்தில் புதிதாகப் பிறந்தவர்களிடம் அறிமுகம் செய்து, குடும்பத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக்கூறி, புதிய தலைமுறையினரின் வாழ்வுக்குக் கலங்கரை தீபமாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இறந்தோரின் ஆவி, அவரது உடல் ஆடம்பரத்துடன் மறுவாழ்வுக்காகப் புதைக்கப்படும்வரை அவர்களை வழிநடத்துவதாகவும் நம்புகின்றனர். டிரோஜா பழங்குடி மக்களின் சிந்தனைப்படி இறப்பு இழப்புமல்ல; முடிவுமல்ல! நிறைவான, நிலைவாழ்வுக்கான வழியாகும்.
மரணத்தைப்
பற்றி வெகுஜன மக்களின் பார்வை: மனித வாழ்வின் நிலையாமையை ஒரு பழமொழி இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறது:
‘கண் திறந்தால் பிறப்பு!
கண்
மூடினால் இறப்பு!
கண்ணிமைப்
பொழுதுதான் வாழ்வு!’
இரத்தினச்
சுருக்கமாக, கருவறையிலிருந்து இறங்கி கல்லறை நோக்கிப் பயணிப்பதுதான் வாழ்க்கை. நம் வாழ்வு நிலையில்லாதது; நீர்க்குமிழி போன்றது; முடியப்போகும் பயணத்தைப் போன்றது; நிழலைப்போல மறைவது. நமக்கும் ஒருநாள் இல்லாத மறுநாள் வரும். ஒவ்வோர் இறப்பு ஊர்வலமும் நமது இறுதி ஊர்வலத்தின் ஒத்திகை என்று எத்தனையோ வகைகளில் விளக்கினாலும், அதை ஏற்றுக்கொள்ள நமது மனது மறுக்கின்றது.
‘மரணம் மற்றவர்களுக்குத்தானே ஒழிய, நானோ சாகா வரத்துடன் வந்திருக்கிறேன்’ அல்லது
‘இப்போது எனக்கு எதுவும் நடக்காது’
என்ற மனநிலையில்தான் நாம் வாழ்கின்றோம். வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட தூக்கத்தில் நாம் காண்கிற தொடர் கனவு. மரணம்தான் அதன் விளிம்பு என்கிறது ஜென் தத்துவம். அதனால் பயமெல்லாம் தேவையில்லை. பிறக்கும்போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதியாகும். எனவேதான் ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு’…
என்கிறார் திருவள்ளுவர்.
எப்போதோ பயின்றது
வாழ்க்கை,
மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம்: ‘என்னை மக்கள் ஏன் நேசிக்கிறார்கள்? உன்னை ஏன் வெறுக்கிறார்கள்?’…அதற்கு மரணம் சொன்னதாம்: ‘ஏனெனில்,‘நீ ஓர் அழகான
பொய்; நான் ஒரு கசப்பான உண்மை.’
எவ்வித
அச்சமுமின்றி ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் வானில் பறக்கும் மனிதன், ஆறடி ஆழ்குழியைக் கண்டதும் அஞ்சுகிறான். மனித வாழ்வு நிலையற்றது என்று தெரிந்திருந்தும் ஓய்வின்றி ஓடியோடி உழைத்துச் செல்வம் சேர்க்கின்றான். ஏக்கர் ஏக்கராக இடம் வாங்கப்போகிறேன் என்று எண்ணி மகிழ்ந்தவனைப் பார்த்துச் சுடுகாடு சிரித்துக்கொண்டு, ‘உன்னையே வாங்கப்போவது நான்தானே நண்பா!’… என்றதாம். ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’…
என்பது நிதர்சனமான உண்மை.
ஒருவேளை
மருத்துவத்தின் அபார வளர்ச்சியால் வாழ்க்கையைக் கொஞ்ச காலம் நீடித்து இறப்பை ஒத்திப்போடலாமே ஒழிய, அதை நாம் தவிர்க்க முடியாது. இதற்காக மரணத்தைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. வாழ்பவர்களைவிட இம்மண்ணில் வாழ்ந்து இறந்தவர்கள்தாம் அதிகம். ஒருநாள்தான் தனது ஆயுள் என்பதால், ஈசல் சோகத்திலும் இருப்பதில்லை. நூறாண்டு காலம் என்பதால் ஆமை தலைக்கனத்துடன் திரிவதுமில்லை.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ், தான் விஷம் வைத்துக் கொல்லப்படுவதற்கு முன் தன்னைக்
காப்பாற்ற வந்த நண்பன் கிரீட்டோவிடம், “மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே; நீ இருக்கும் வரை
மரணம் வருவதில்லை; அது வரும்போது நீயே இருக்கப்போவதில்லை. பிறகு ஏன் கவலை? நான் இறந்துவிடப் போகிறேன் என்று எவரும் எனக்காகக் கவலைப்பட வேண்டாம். என் உடலை எரிப்பதா? புதைப்பதா? என்ற குழப்பமும் வேண்டாம். அது வெறும் உணர்வற்ற சடலம்தானே! அதை என்ன செய்தால் என்ன?…” என்று சாக்ரடீஸ் கூறுகின்றார்.
ஓர்
உலகப் புகழ்பெற்ற லெபனான் நாட்டு பன்முகத்திறமை வாய்ந்த எழுத்தாளர் கலீல் ஹிப்ரான், “வாழ்க்கையைச் சரியாக வாழத் தெரிந்தவர்கள் மரணத்தையும் சரியாகப் பார்க்கிறார்கள். பகலில் பார்க்கத் தெரியாத ஆந்தைக்கு ஒளியின் உன்னதம் எப்படிப் புரியாதோ, அப்படி வாழ்வையே சரியாக வாழாதவர்களுக்கு மரணத்தின் உன்னதம் எப்படிப் புரியும்?” என்கிறார்.
எதிர்மாறாக,
மரணத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது மோரி என்னும் எழுத்தாளர் மரணத்தின் அர்த்தத்தையும் அவசியத்தையும் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்: “நீ இறப்பதற்குக் கற்றுக்
கொண்டாயானால், வாழ்வது எப்படி என்று கற்றுக் கொள்வாய். பிறப்பைப்போல இறப்பும் ஒன்றின் தொடக்கமும் தொடர்ச்சியும் ஆகும். உதிர்ந்த சருகு வழிவிட்ட இடத்திலிருந்து புதிய தளிர் துளிர்ப்பதுபோல, மரணத்திற்குப் பிறகும் மண்ணகத்தில் நமது வாழ்வு தொடர்கின்றது. இறப்பு என்னும் வாயிற்படி வழியாக, அது நிலைவாழ்வில் நிறைவு பெறுகிறது என்பதைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க முயலும்.”
மண்ணகத்தில் தொடர்
வாழ்வுக்கான
வித்துகள்
1) ஒவ்வொருவரும்
இறைவனின் படைப்புத் திட்டத்தில், உடன் படைப்பாளியாகச் செயல்பட்டுக் குழந்தையை உருவாக்குகின்றோம். அதற்கு இரத்தமும் - சதையும், இருதயமும் - எலும்பும் கொண்ட உடலை மட்டும் கொடுப்பதில்லை; அக்குழந்தை பெற்றோரின் பண்புநலன்களையும் உள்வாங்கி, அவர்களின் நகலாக, வாரிசாகத் தோன்றுகின்றது. பெற்றோர் தங்கள் மறைவிற்குப் பிறகும் தங்கள் பண்புகள், குணநலன்களுடன் தங்கள் வாழ்வைத் தங்கள் வாரிசுகள் வழியாகத் தொடர்கின்றனர். பிள்ளைகள் வழியாகவே ஒருவரது தகைமை வெளிப்படும் என்கின்றது சீராக்கின் ஞானம் (11:28).
2) ஒருவன்
பெயரளவுக்குக் கிறித்தவன் என்பதால், அவனுக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வந்துவிடப் போவதில்லை. நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில் இயேசு கூறியது போன்று, அன்புக் கட்டளைக்குச் செயல் வடிவம் கொடுக்கும்போது (லூக் 10:27-28) நாம் இறந்தும் வாழ்கிறோம். இதற்கு அன்னை தெரசா சிறந்த எடுத்துக்காட் டாகும். அதேபோன்று, அண்மையில் மறைந்த ரத்தன் டாட்டா, தான் பெற்ற செல்வத்தை ஏழைகள், அனாதைகளுக்கு விட்டுச்சென்றதால், இறந்தும் இறவாது அவர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திரு அவையின்
கண்ணோட்டத்தில்
ஒவ்வோர்
ஆண்டும் நவம்பர் 2-ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நமது பாசமிகு சொந்தங்களை எண்ணி அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்து மனித பலவீனத்திலே அவர்கள் செய்த தவறுகளைக் களைந்து, நித்தியப் பேரின் பத்தில் இறைவனுடன் இணைந்து வாழவேண்டுகிறோம். “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் பெருமூச்சுவிடுகிறோம்”… (2கொரி
5:12); “நமக்கோ விண்ணகமே தாய்நாடு”
(பிலி 3:12); “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. உயிர்நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்பது என் ஆவல்”
(பிலி 1:21-23).
ஒருவனின்
பிறப்பைப் பற்றிக் கணிக்கத் தெரிந்த நமக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. திருடனைப்போல இரவில் வரும் - மானிட மகனைச் சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் காண்கிறோம். மேலும், புனித யோவான் நற்செய்தியில், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்”
(யோவா 11:25) என்று இயேசு கூறுகிறார். தம் இறப்பின் வழியாக நமது சாவை அழித்து, தம் உயிர்ப்பினால் வாழ்வு அளிப்பவர் (2திமொ 1:10) இயேசு என இறந்தோருக்கான மன்றாட்டில்
செபிக்கிறோம்.
எவ்வாறு
பாம்பின் விஷத்தைக் கொண்டு விஷத்தை அகற்றுகின்றோமோ, முள்ளை முள்ளால் எடுக்கின்றோமோ அதுபோல கிறிஸ்துவின் மரணம் நம் மரணத்தை அழித்து, நமக்கு நிலைவாழ்வு அளிக்கின்றது. நிலைவாழ்வு என்பது இறைவனை ஏற்று அவருடன் வாழும் அன்புறவாகும். எனவே, “உன்னைப் படைத்தவரை நீ மறவாது, நீ
முடிவற்ற ஓய்விற்குச் செல்லும் முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பும் முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை” என்கிறார் சபை உரையாளர் (12:6-7).
முடிவில்லாத
தண்டனை என்பது இறைவனின் அன்பைப் புறக்கணித்து, அவருடன் கொண்டிருந்த உறவைத் துண்டித்துக் கொள்வதாகும். இரும்பை அதன் துருவைத் தவிர, வேறு யாரும் அழிக்க இயலாது. அதுபோல, உனது எண்ணம், சிந்தனை, செயலைத் தவிர யாரும் உன்னை அழிக்க முடியாது.
வேறு
வார்த்தைகளில் கூறினால், நரகம் என்பது இறைவன் இல்லாத இருளடைந்த உலகமே தவிர வேறில்லை. நிலைவாழ்வை நமதாக்கிக்கொள்வதும் புறக்கணிப்பதும் நம் கையில்தான் உள்ளது.
முடிவாக,
இம்மண்ணக வாழ்வும் விண்ணக வாழ்வும் இரட்டைக் குழந்தைகளாகும். ‘நீ பிறந்ததும் அழுதாய்
மகனே! ஆனால், பிரபஞ்சம் மகிழ்ந்தது. உன் வாழ்க்கையை நினைத்து மற்றவர் அழ, நீ மகிழ்வோடு சாதல்
வேண்டும்’… என்கிறது
ஒரு பழமொழி. ஒவ்வொருவருக்கும் இறைவன் பரிசாக வழங்கிய வாழ்வை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து, நிலைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.
ஓர்
அருமையான பழமைவாய்ந்த கதையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்: ஒரு மகாராஜா ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் மங்கள இசையுடன் தனது ஈமச்சடங்குகளைத் தானே கொண்டாடுவார். கூடவே ‘நான் இந்த நாளை முழுமையாக வாழ்வேன்’
என்று செபிப்பாராம்.
இளவரசன்
தன் தந்தையிடம், ‘ஏனப்பா நீங்கள் இறக்கும் முன்னே ஒவ்வொரு நாளும் உங்கள் ஈமச்சடங்கை நீங்களே செய்கிறீகள்?’ என்று கேட்டானாம்.
அதற்கு
அவர், ‘மகனே, இந்த மகாராஜா செய்வது என்னவென்றால், தன் நிலையாமையை நித்திய வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் இன்றே அவரது இறுதி நாள் என்பதுபோல வாழ்வார்’…
என்றாராம்.
என்ன
நேயர்களே, இந்த மகாராஜாவைப்போல நாமும் வாழ்வோமென்றால், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் இறப்பு என்பதே இல்லை.
இசை முறிந்தது; ஆனால், இசை மையம் முறியவில்லை!
இத்தாலியின்
புகழ்பெற்ற வயலின் கலைஞர் நிக்கோலோ பகனினி, பாரிஸின் பிரசித்திப்பெற்ற இசை மண்டபத்தில் மேடைக்குச் சென்றபொழுது, பரவசமடைந்த கூட்டம் எழுந்து நின்றது. அவரின் கைகளில் வழிந்த இசை, அரங்கின் மௌனத்தைக் கிழித்தெறிந்து ஒளிரும் ஒலியாகப் பறந்தது. அந்த அற்புதத் தருணத்தில், எதிர்பாராத விதமாக வயலினின் ஒரு சரம் முறிந்தது.
ஆனால்,
பகனினி இசை நிற்கவில்லை. மூன்று... இரண்டு... இறுதியாக ஒரே ஒரு சரம்தான் மீதமிருந்தது. அவ்வளவிலேயே பகனினி மெதுவாகக் கூறினார்: “இப்போது நீங்கள் கேட்கப்போகிறீர்கள்... பகனினியின் ஒரே ஒரு சரத்தின் நாட்டியம்!” அந்த ஒரு சரத்தின் நடனத்தில், ஒரு முழு இசை விருந்து அரங்கேறியது. தெளிவான ஒலி, நேர்த்தியான நுணுக்கங்கள், உயிரோட்டமுள்ள இசை. இந்த அற்புத நிகழ்வில் ஓர் ஆழமான உண்மை ஒளிந்திருக்கிறது.
“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்” (லூக்கா
4:18).
நமது
வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முறிகின்ற உறவுகள், தோல்வியடையும் கனவுகள், குறைந்து போகும் நம்பிக்கைகள் போன்ற ‘சரங்கள்’ முறிகிறபோது, தூய ஆவியால் உந்தப்படுகிற செயல்திறன்தான் நமது வாழ்வின் உன்னதமான இசை. தூய ஆவியின் பணி நம் வாழ்வில் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பகனினியின் இசைபோல, தூய ஆவியின் தீண்டலால் நம் வாழ்வும் ஓர் இசையாகவே மாறும் என்கிற கருத்தியல் சிந்தனையோடு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை யோவான் 20:19-23 திருவிவிலியப் பின்னணியைக் கொண்டு நிகழ்த்தினார்.
பெந்தகோஸ்து
- உதிர்ந்த
பயத்திலிருந்து
பிறந்த
புதிய
உரம்!
இயேசுவின்
மரணத்திற்குப் பிறகு பயத்துடன் மேலறையில் ஒளிந்திருந்த சீடர்கள், நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், அந்த அமைதியைக் கிழித்து ஒரு வலிமையான காற்று எழுந்தது. அந்தக் காற்று தூய ஆவியின் வருகையை அறிவித்தது. அவர்கள்மீது அக்கினி நாவு வடிவில் இறங்க, அவர்கள் பேசத் தொடங்கினர் - புதிய உற்சாகத்துடன், புதிய மொழிகளில். “அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்” (திப
2:4). பெந்தகோஸ்து அன்று கடவுள் தமக்கே உரிய வழியில் ஒரு புதிய உடன்படிக்கையை ஆரம்பித்தார் - அன்பின் மொழியில், உண்மையின் அறிவுறுத்தலில், அமைதியின் ஆவியோடு.
மூச்சு ஊதிய
இயேசு
- புதிய
திரு
அவையின்
பிறப்பு
யோவான்
நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களின் மீது மூச்சு ஊதுகிறார். “அவர் அவர்கள்மேல் மூச்சு ஊதினார்; ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்” (யோவா
20:22). இது தொடக்க நூலில் கடவுள் மனிதனுக்குள் உயிர்மூச்சு ஊதிய தருணத்தை நினைவுபடுத்துகிறது: “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்”
(தொநூ 2:7). இப்போது இயேசு புதிய மனிதனுக்கு, புதிய திரு அவைக்கு, புதிய ஆவியால் புதிய உயிரை அளிக்கிறார்.
ஒரு சிறுவனின்
தாளத்தில்
இசைமுனிவரின்
கருணை
போலந்து
நாட்டின் பியானோ மேதை இக்நேஸ் படெரெவ்ஸ்கி ஒரு நிகழ்ச்சியில் ஐந்து வயது சிறுவன் மேடையில் பியானோ வாசிக்க முயன்றபோது அவரை நிறுத்தவில்லை. மாறாக, அவர் அருகே வந்து, “வாசிக்கத் தொடரு, நிறுத்தி விடாதே” என்றார். பின்னர் தனது கைகளால் சிறுவனின் மெலிதான இசையை வலிமைமிக்க இசையாக்கினார். இது தூய ஆவியின் செயலுக்கு ஒப்பாகும். நமது சிறு முயற்சிகளை அவர் கருணையுடன் இணைத்து, மகத்தான பணி ஆக்குகிறார். “ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்லர்; மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்”
(மத் 10:20).
நீங்கள் தனிமையில்
இல்லை
- உங்கள்
துணையாக...
இயேசு
தம்முடைய சீடர்களிடம் உரைத்தார்: “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்”
(யோவா 14:18). இயேசு தமக்குப் பின் மற்றொரு துணையாளராகத் தூய ஆவியை அனுப்புவதாக உறுதி அளிக்கிறார்: “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்க ளுக்கு அருள்வார்”
(யோவா 14:16). தூய ஆவி இறைவனின் பணி தொடரும் சக்தியாகவும், உண்மையின் வழிகாட்டியாகவும், நம்மை வழிநடத்தும் ஆற்றலாகவும் இருக்கிறார்.
அமைதி - பழிவாங்கும்
பதில்
அல்ல;
இரக்கத்தின்
ஒலி!
உயிர்த்தெழுந்த
இயேசு தம்மை மறுத்த சீடர்களிடம் “உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்” எனக்
கூறினார். அவர்களின் காயங்களை, குற்ற உணர்வைப் பழிவாங்காமல், அமைதியால் குணமாக்கினார். அந்த நாள் மாலையில், சீடர்கள் இருந்த இடத்தில் இயேசு வந்து, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார் (யோவா 20:19). இது தோல்வியையும் தனிமையையும் தாண்டும் அன்பின் ஒலி! நாமும் நம் பாதிப்புகளை மறைக்காமல், அவற்றை இறைவனின் கருணையின் சாட்சியாக்க அழைக்கப்படுகிறோம்.
நமக்கான அழைப்பு
- உலகிற்குள்
ஓர்
இசை
இயேசுவின்
பணி, அவரது சீடர்களின் மூலம் உலகிற்கு ஒப்படைக்கப்பட்டது. இன்று அந்தப் பணி நமக்கும் ஓர் அழைப்பு. ஒளியைக் கொண்டு செல்ல, இரக்கத்தை வெளிப்படுத்த, நம்பிக்கையை எழுப்ப! “ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்”
(1கொரி 12:13). நாம் அனுப்பப்படுகிறோம் - இசைபோல, ஒலிபோல, நம்பிக்கைபோல!
ஒரு சரம்
போதும்...
இசை
தொடங்கட்டும்!
பகனினியின்
ஒரே சரம், சிறுவனின் எளிய சுருதி, பெந்தகோஸ்துவின் அக்கினி நாவுகள், இயேசுவின் மூச்சு... இவை அனைத்தும் ஓர் உண்மையை எடுத்துக்காட்டுகின்றன: முடிவுகள் அல்ல வாழ்வின் இசை; முறிவுகள் அல்ல ஊக்கம்; தனிமை அல்ல உறவு; தூய ஆவி உண்டு - அதுவே நம் இசை!
இயேசுவின்
உயிர்த்தெழுதல் - வெற்றியின் நிறைவு அல்ல; மாறாக, இரக்கத்தின் தொடக்கம். தூய ஆவியின் மூச்சு நம் குறைவுகளை ஈர்த்தெடுத்து வாழ்வின் இசையாக்கும் ஒரு புனிதத் தொடக்கம். நாம் ஒவ்வொருவரும் ஒரு சரத்தால் ஆனாலும், ஒற்றுமை என்னும் இசையை வாசிக்க அழைக்கப்படுகிறோம். “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலக மாட்டேன்”
(எபி 13:5).
உரையின் ஒலி,
நமது
வழி!
இவ்வாறு,
கடவுள் தமது காயங்களை மறைக்கவில்லை; அவற்றை இரக்கத்தின் அடையாளமாகக் காட்டினார். நாமும் நம் பாதிப்புகளை மறைக்கும் பழக்கத்திலிருந்து வெளிவந்து, அன்பின் சாட்சிகளாக இருப்பதற்கே அழைக்கப்படுகிறோம். தூய ஆவியின் சுவாசம், நம்மை இந்த அமைதிக்கும் தோல்வியைத் தாண்டும் அன்பிற்கும் சாட்சிகளாக மாற்றட்டும்.
திருத்தந்தையின்
இந்த மறைக்கல்வி உரை, வாழ்வின் துன்ப தருணங்களிலும் நம்முள் உறைந்து இருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல், வெற்றியின் நிறைவு அல்ல; இரக்கத்தின் தொடக்கம். அந்த நம்பிக்கையே உலகிற்கு இன்று மிக அவசியம். நாமும் அந்த அமைதியின் தூதராய் அமைவோம்.
திருத்தந்தையின்
மறைக்கல்வி உரையின் ஒலி, இப்போது நம்முடைய இதயத்தில் ஒலிக்கட்டும். நாம் அவரின் இசையின் கருவியாக என்றும் மாறிட!
மார்த்தா: “தந்தையே, திருமுழுக்கின்போது குழந்தைகளுக்குப் பெயர் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன?”
அருள்பணி: “பெயர் என்பது பல உண்மைகளைத் தன்னிலே
தாங்கியதாக இருக்கிறது. முதலாவதாக, பெயர் என்பது ஒரு நபரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக, பெயர் என்பது ஒரு மனிதரின் சுய அடையாளத்தோடு (self-identity) தொடர்புடையது. மூன்றாவதாக, பெயரைக் கூறிக் கூப்பிடுவது
உறவு நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியில் பார்க்கும்போது, திருமுழுக்கின்போது
ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பது கீழ்க்காணும் உண்மைகளைச் சுட்டிநிற்கிறது: அ) திருமுழுக்கு
அருளடையாளமானது ஒரு குழந்தை கடவுளின் பிள்ளை என்ற உண்மையைச் சுட்டி நிற்கிறது; ஆ) இதன்
காரணமாக ஒரு தனித்தன்மைமிக்க புதிய அடையாளத்தைக் குழந்தை பெற்றுக்கொள்கிறது; இ) இறுதியாக,
திருமுழுக்கின் வழியாக ஒரு குழந்தை கடவுளுடனும் கிறித்தவச் சமூகத்துடனும் உறவுக்குள்
நுழைகிறது.”
அகஸ்டின்: “தந்தையே! திருமுழுக்கு நிகழ்வின்போது
ஞானப்பெற்றோர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?”
அருள்பணி: “கடந்த கட்டுரைகளில் நாம் பேசி வந்த
அற்புதமான கொடைகள் திருமுழுக்குப் பெறும் குழந்தைகள்மீது பொழியப்பட்டாலும், அக்குழந்தைகளுக்கு
அவை பற்றிய விழிப்புணர்வு எதுவும் இல்லை. தாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகள் மட்டில் அக்குழந்தைகள்
விழிப்புணர்வு இல்லாமல் இருந்து, வாழ்வைச் சராசரித்தனமாக ஆக்கி தம் வாழ்வையே தொலைத்துவிடுவதற்கான
வாய்ப்பு உண்டு. எனவே, ஞானம் நிறைந்த, கடவுளுடனான உறவில் ஆழம் கண்ட நபர்கள் அக்குழந்தைகளுக்கு
ஞானப்பெற்றோராகக் கொடுக்கப்படும்போது, குழந்தைகள் வளர வளர பெற்றுக்கொண்ட கொடைகள் மட்டில்
ஞானப்பெற்றோர் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர். குழந்தைகள் கடவுளுடனான உறவிலும்
பிறரோடுடனான உறவிலும் நாள்தோறும் வளர்ந்து, தங்களது வாழ்வின் முழுமையைக் கண்டு கொள்வதற்கான
வழிவகைகளை ஏற்படுத்துவது ஞானப்பெற்றோரின் கடமை.”
அன்புச் செல்வன்: “தந்தையே, நீங்கள் கூறுவதன் பின்னணியில்
ஏன் திருமுழுக்கு நிகழ்வின்போது, ஞானப்பெற்றோரின் கையில் எரிகின்ற மெழுகுதிரி கொடுக்கப்படுகிறது
என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எரிகின்ற மெழுகுதிரி கடவுள்மீதான நம்பிக்கைக்கு
அடையாளமாக இருக்கிறது. திரு அவையின் பிரதிநிதியாக இருக்கின்ற குருவானவர் கடவுள்மீதான
நம்பிக்கையை ஞானப்பெற்றோரிடம் கொடுத்து, அதைக் குழந்தைக்குக் கொடுக்க அறிவுறுத்துகிறார்.”
அகஸ்டின்: “தந்தையே! சிலர் குழந்தைகளுக்குத்
திருமுழுக்கு வழங்கப்படுவது குறித்துக் கேள்விகள் எழுப்புவதை நான் கேட்டிருக்கின்றேன்.
திருமுழுக்குக் குறித்த தெளிவும், அது வழங்கும் அருள்கொடைகள் குறித்த புரிதலும் குழந்தைகளுக்கு
இருப்பதில்லை. எனவே, வளர்ந்த பிறகு அவை குறித்த தெளிவுகளை அவர்கள் பெற்றுக்கொள்ளும்போது
திருமுழுக்கு பெறலாமே என்கின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
அருள்பணி: “நான்கு அல்லது ஐந்து வயதில் எந்தக்
குழந்தைக்கும் கல்வியின் தேவை பற்றி விழிப்புணர்வு இருப்பதில்லை. எனவே, கல்வியின் முக்கியத்துவத்தை
அவர்கள் புரிந்து கொண்ட பின்பு அவர்களாகவே பள்ளியில் சேர்ந்து கொள்ளட்டும் என்று நான்
கூறினால், அது எத்தகைய முட்டாள்தனமான வாதம் என்பது நமக்குத் தெரியும். இத்தகைய வாதமே
மேற்கண்ட வாதம். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைகின்றவரை, அவர்களுக்குத் தேவையான
நல்லவற்றைத் தேர்ந்து கொடுக்கின்ற உரிமையும் கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு.”
கிறிஸ்டினா: “திருமுழுக்கு அருளடையாளத்தில் இவ்வளவு
அற்புதமான செய்திகள் இருக்கின்றனவா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால், இன்று
பல வேளைகளில் திருமுழுக்கு அருளடையாளம் ஒரு வெற்றுச் சடங்காகவும், ஆடம்பரக் கொண்டாட்டமாகவும்
மாறிவிட்டதே!”
அன்புச் செல்வன்: “நான் வாசித்த ஒரு நிகழ்வு என் நினைவிற்கு
வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஆயராக இருந்தவர் புனித பேட்ரிக் (பத்ரீசியார்). அவர்
ஒருமுறை அரசராக இருந்து கிறித்தவ மதத்தைத் தழுவிய ஆங்குஸ் (íngus) என்ற அரசருக்குத் திருமுழுக்குக்
கொடுத்தார். திருமுழுக்கு நிகழ்வின்போது ஆயர் தவறுதலாகத் தனது செங்கோலை மன்னரது பாதத்தின்மீது
வைத்துவிட்டார். அந்தச் செங்கோல் மிகவும் எடையுள்ளதாக இருந்தது மட்டுமல்லாமல், அதன்
அடிப்பகுதி மிகவும் கூர்மையான நுனியைக் கொண்டாதாகவும் இருந்தது. எனவே, செங்கோல் மன்னரது
பாதத்தில் வைக்கப்பட்டபோது, அது அவரது பாதத்தில் காயத்தை ஏற்படுத்தி, அக்காயத்திலிருந்து
இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. மிகவும் வலியோடு மன்னர் ஆங்குஸ் திருமுழுக்கு நிகழ்வில்
பங்கெடுத்துக் கொண்டிருந்தார். திருமுழுக்கு முடிந்த பின்னர்தான் ஆயர் பேட்ரிக் மன்னரது
காயத்தையும், அதிலிருந்து வழிந்தோடிய இரத்தத்தையும் கவனித்தார். தனது கவனமின்மையை நினைத்து
வருத்தப்பட்ட ஆயர் மன்னரிடம், ‘இதை ஏன் நீங்கள் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை?’ என்று
கேட்க, மன்னர் ‘இதுவும் திருமுழுக்குச் சடங்கின் ஒரு பகுதியென நினைத்தேன்’ என்று பதில் தந்தாராம்.”
அருள்பணி: “ஆம், இன்றுகூட பலருக்குத் திருமுழுக்குச்
சடங்கு குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை. இத்தகைய தெளிவற்றப் புரிதல்கள் காரணமாக,
திருமுழுக்கு அருளடையாளம் வெற்றுச் சடங்காகச் சுருங்கி, சடங்காச்சாரமாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது. திருமுழுக்கு அடையாளம் வெற்றுச்சடங்காக மாறி வருவதற்கான ஒருசில காரணிகளை
நாம் பார்க்கலாம்: அ) குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் இதை ஒரு பெயர் வைக்கும்
சடங்காக மட்டுமே கருதுகின்றனர். இதன் ஆன்மிக முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஆ) போதுமான அளவு தயாரிப்பு இருப்பதில்லை. பெரும்பாலும், ஞாயிறு அன்று இவ்வருளடையாளம்
கொண்டாடப்படுவதன் காரணமாகவும், அன்றைய தினத்தில் குருக்களுக்குப் பல வேலைகள் இருப்பதன்
காரணமாகவும் இந்நிகழ்வை அவசரகதியில் நிகழ்த்திவிடுகின்றனர். குழந்தையின் பெற்றோரும்
ஞானப்பெற்றோரும் தங்களையே போதுமான அளவிற்குத் தயாரிப்பதில்லை. தயார் நிலையில் உள்ள
உள்ளத்தில்தான் கடவுளின் அருள் பொங்கிப் பாயும் என்பது நம் மனத்தில் நிறுத்த வேண்டிய
ஒன்று. இ) உறவினர் அல்லது நண்பர்கள் என்பதற்காக ஆன்மிகம் பற்றிய கொஞ்சங்கூட விழிப்புணர்வு
இல்லாத நபர்கள் ஞானப்பெற்றோராக நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் குழந்தையின் தொடர் ஆன்மிக
வளர்ச்சியில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இதன் காரணமாக, தற்போது ஞானப்பெற்றோர்
செயல்பாடு ‘ஒரு திருவழிபாட்டுப் பொய்’ (a liturgical
lie) என்று அழைக்கப்படுகிறது. காரணம் பல
ஞானப்பெற்றோர் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சமேனும் நிறைவேற்றுவதில்லை.’
மார்த்தா: “புகைப்படம் எடுப்பதற்கும், வீட்டில்
விருந்து கொடுப்பதற்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பலர் திருமுழுக்கு நிகழ்விற்குக்
கொடுப்பதில்லை.”
அருள்பணி: “அண்மைக்காலம் வரை திருமுழுக்கு நிகழ்வை
Christening ceremony என்று
ஆங்கிலத்தில் குறிப்பிடுவது வழக்கம். Christen என்றால் ‘கிறிஸ்துவைப்போல் ஆக்குதல்’ (make it Christ) என்று பொருள்.”
அன்புச் செல்வன்: “தந்தையே, எனக்கு ஓர் ஒப்புமை தோன்றுகிறது.
Ligten என்ற
ஆங்கில வார்த்தை ‘make
it light’ என்று
அர்த்தம் பெறுகிறது. Brighten என்ற ஆங்கில
வார்த்தை ‘make
it bright’ என்று
அர்த்தம் பெறுகிறது. எனவே, Christen என்ற வார்த்தை ‘make it Christ’ என்ற அர்த்தம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எத்துணை
அற்புதமான வார்த்தை அது!”
அருள்பணி: “ஆம்! இதன் காரணமாகவே இரெய்மண்ட் ப்ரௌன்
(Raymond E. Brown)
என்ற இறையியலாளர், ‘ஒருவரது திருமுழுக்கு நாள் அவரது குருத்துவத் திருநிலைப்பாட்டு
நாளைவிட முக்கியமானது’ என்கின்றார்.”
(தொடரும்)
“ஒரு திருடனின் ஆயுதம்
ஒரு
கூர்மையான சக்தி;
ஓர்
அரசியல்வாதியின் ஆயுதம்
தனது
செருக்குப் பிடித்த பணம்;
ஓர்
ஆசிரியரின் ஆயுதம்
தூய்மையான
ஞானம்; ஆனால்,
ஒரு
கத்தோலிக்கரின் ஆயுதம்,
வல்லமை
மிக்க செபமாலை!”
இப்பொழுது
நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். செபமாலை கண்டுபிடித்து ஏறக்குறைய 700 முதல் 800 ஆண்டுகள் ஆகின்றன. முதன்முதலில் செபமாலை என்பது 13-ஆம் நூற்றாண்டில் புனித தோமினிக் அவர்களுக்குப் புனித கன்னி மரியா காட்சி அளித்தார். அந்தக் காட்சியில் மாதா புனிதரிடம், ‘செபமாலை ஓர் ஆன்மிக ஆயுதம்’ என்று உணர்த்தினார். இந்த ஆயுதத்தை அல்பிஜென்ஸ் என்னும் கூட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தினர்.
முதலில்
நாம் ‘அல்பிஜென்ஸ்’ என்றால்
யார் எனக் காண்போம். அல்பிஜென்ஸ் என்பது அல்பி என்னும் நகரத்திலிருந்து உருவாகியது. இவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாமல் ஓர் இறைவனின் தூதராக ஏற்றுக்கொண்டார்கள். மேலும், கடவுளின் சிலுவைப் பாடுகள், நற்கருணை, கடவுளின் விண்ணேற்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், பல அவதூறுகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
இந்த அவதூற்றைப் பல கத்தோலிக்கரும் நம்பி
அவர்களைப் பின்தொடரத் தொடங்கினார்கள். அதைப்பார்த்து மனம் நொறுங்கிய கன்னி மரியா, புனித தோமினிக் மூலமாகச் செபமாலை என்னும் வல்லமையுள்ள ஆயுதத்தை அறிமுகப்படுத்தினார். புனித தோமினிக் செபமாலையை மதம் மாறிய கத்தோலிக்கரிடமும் அல்பிஜென்ஸிடமும் போதித்தார். அப்பொழுது பல மக்கள் மனம்
மாறினார்கள். தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். இந்த மனமாற்றத்தின் முக்கியக் காரணம் மறையுண்மைகள். இந்த மறையுண்மைகள் நேரடியாக அல்பிஜென்ஸ்களின் அவதூறை முறியடித்தது. அதன் பிறகு அல்பிஜென்ஸை செபமாலை மூலம் புனித தோமினிக் வென்றார்.
1569-ஆம் ஆண்டு
திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Papul Bull Consueverunt romaniiontifices) என்னும் செபமாலையின் கட்டமைப்பை உருவாக்கினார். லெப்பான்டோ போரில் 1571-ஆம் ஆண்டில் நடந்த இந்தப் போரில் உள்ள கத்தோலிக்க வீரர்களின் எண்ணிக்கை குறைந்தது. அப்பொழுது அவர்கள் செபமாலையைச் செபித்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அதனால் அந்நாளை (அக். 7) திருத்தந்தை பயஸ் வெற்றியின் மாதா திருநாளாக மாற்றினார். அந்நாளைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை கிரகோரி XIII செபமாலையின்
மாதா திருவிழாவாக மாற்றினார். திருத்தந்தை புனித
இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘ஒளியின் மறையுண்மைகளை’ 2022-ஆம்
ஆண்டு அறிமுகப்படுத்தினார். பிறகு 2002-2003 ஆண்டை, செபமாலையின் ஆண்டாகப் பெயர் சூட்டினார். மேலும், செபமாலை கூறுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்த செபம் என்றும் கூறினார்.
இப்பொழுது
நாம் செபமாலையின் ஓர் அற்புதத்தைப் பார்ப்போம்! 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது எட்டு சேசு சபை அருள்பணியாளர்கள் ஜப்பானில் குருத்துவப் பணி செய்துகொண்டு இருந்தனர். அப்பொழுது ஒருநாள் அணுக்கரு குண்டு ஹிரோசிமாவில் வெடிக்கப் போகின்றது என அறிந்து அச்சம்
கொண்டு இருந்தனர். ஏனென்றால், அவர்களின் பங்கும் ஆலய விடுதியும் ஹிரோசிமாவும் ஒரு கி.மீ. தொலைவில்
உள்ளன. அதனால் அவர்கள் செபமாலை செபிக்கத் தொடங்கினர். அந்தக் குண்டு வெடித்தப் பின்பு, அவர்கள் அருகில் இருந்த வீடு மற்றும் அனைத்துக் கட்டடமும் சிதைந்தன. ஆனால், சிப்பியில் பத்திரமாக இருக்கும் முத்தைப் போல் அவர்களுக்கும், அவர்கள் இருந்த கட்டடத்திற்கும் ஒன்றுமே ஆகவில்லை. இந்நாள்வரை
எப்படி அணுக்கதிரிலிருந்து அவர்கள் தப்பினர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நாம்
செபமாலையைச் சாதாரணமாக எண்ணக்கூடாது. அது அசாதாரணமானது; தினமும் ஒரு செபமாலை செபியுங்கள், பிறருக்கும் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். செபமாலையைச் செபிக்கும் போது நமது புனித கன்னி மரியா உடன் வருவார் என்று உணர்ந்து செபிப்போம். புனித கன்னி மரியாவின் முழு ஆசிரைப் பெறுவோம். நாமும் நமது பிரச்சினைகளை, லெப்பான்டோ போர் வீரர்களைப் போன்று செபமாலையால் கையாள்வோம். புனித தோமினிக் அல்பி ஜென்ஸ்சியர்களை வீழ்த்தியதுபோல, நாமும் நமது பிரச்சினைகளை வீழ்த்துவோம்.
(சென்ற இதழ் தொடர்ச்சி...)
பிற
இனத்தாரிடையே தூதுரைப் பணியாற்றுவோரை இங்கே சிறப்பாக நினைவுகூர்கிறேன். இயேசு ஆண்டவரின்
அழைப்பை ஏற்று, கிறிஸ்துவில் இறைத்தந்தை வெளிப்படுத்திய அன்பை அறிவிக்க நீங்கள் அனைத்து
நாடுகளுக்கும் பயணித்துள்ளீர்கள். இதற்காக நான் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்,
நன்றி கூறுகிறேன். “உயிர்த்த கிறிஸ்து, எல்லா மக்களினத்தார்க்கும் நற்செய்தி அறிவிக்கிற
கட்டளையைத் தம் சீடர்களுக்குத் தந்து அனுப்பியதும்...” (மத் 28:18-20), அவர்கள் அதனை
ஏற்றுச் செயல்பட்டது போன்று, உங்கள் தூதுரைப்பணி ஒரு பதிலிறுப்பே ஆகும். இவ்வாறு தூய
ஆவியாரின் வல்லமையால் உந்தப்பட்டு, எல்லா மக்களினத்தாரிடையேயும் தூதுரைப் பணியாற்றி
இயேசு ஆண்டவர் நமக்குத் தந்துள்ள உயர்ந்த எதிர்நோக்கிற்கு உலகிலே சான்றுபகர அழைப்புப்
பெற்றுள்ள திருமுழுக்குப் பெற்ற அனைவரோடும் நீங்களும் சிறந்த அடையாளங்களாய் விளங்குகிறீர்கள்.
இந்த
எதிர்நோக்கு ‘எட்டக்கூடிய தொலைவு’ என்று இவ்வுலகு காட்டும் நிலையற்றவைகளைத்
தாண்டி, இப்போதே நாம் பங்கேற்கிற தெய்வீக உண்மைகளை நோக்கிய கதவுகளைத் திறந்து வைக்கிறது.
புனித ஆறாம் பவுல் குறிப்பிடுவதுபோல, கிறிஸ்து தரும் மீட்பை இறை இரக்கத்தின் கொடையாக
புனித திரு அவை அனைவருக்கும் வழங்குகிறது. “அம்மீட்பு, பொருள் மற்றும் ஆன்மிகத் தேவைகளை
மட்டும் சார்ந்தது அல்ல; இம்மைக்குரிய ஆசைகள், போராட்டங்கள், எதிர்பார்ப்புகள், செயல்பாடுகள்
ஆகியவற்றையும் உள்ளடக்கியது அல்ல; மாறாக, இத்தகைய எல்லைகளையெல்லாம் தாண்டி, ‘இறைவன்
என்ற முழுமையில் ஒன்றிணைதல்’ என்கிற நிறைவுக்கு இட்டுச்செல்வதாகும்.
ஆக, மீட்பு என்பது நிறைவு காலத்தை நோக்கியது; அனைத்தையும் கடந்தது. அது இம்மை வாழ்வில்
தொடங்கித் தொடர்கிறது; எனினும், அது நிலை வாழ்வில் நிறைவு பெறுகிறது” (இன்றைய உலகில் நற்செய்திப்பணி எண். 27).
உலகின்
பல முன்னேறிய நாடுகளில் பின்வரும் சமூக அவலங்கள் மலிந்து காணப்படுகின்றன: பரவலான குழப்ப
உணர்வு, தனிமை, முதியோரின் நியாயமான தேவைகளைக் கண்டுகொள்ளாமை, தேவையில் உழலும் அடுத்தவர்க்கு
உதவுவதில் காட்டும் தயக்கம் என்பன அவை. இத்தகைய சூழமைவுகளில், கிறித்தவக் குழுமங்கள்
எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, புதிய மானுடத்தை உருவாக்குவதில் முன்னோடிகளாக விளங்க
முடியும். இது உன்னதமான செயல்முறை அல்லவா! தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில்
‘நெருக்கமான உறவு நிலை’ மறைந்து வருகிறது. நாம் அனைவரும் ஒருவர்
ஒருவரோடு தொடர்பில் இருக்கிறோம்; ஆனால், உறவில் இல்லை. செயல்திறன் பற்றிய எண்ணமே நம்மை
ஆட்கொண்டுள்ளது. இவ்வுலகு சார்ந்த பொருள்கள் மேலுள்ள பிடிப்பும் பேரார்வமும் நம்மைச்
சுயநலவாதிகளாக மாற்றி, பிறர்நலம் பேண இயலாதவர்களாய் ஆக்கி விடுகிறது. குழும வாழ்வில்
நாம் பெறும் நற்செய்தி அனுபவம் நம்மில் முழுமைபெற்ற, மீட்படைந்த, நலமான மனிதப் பண்பை
மீட்டெடுக்க இயலும்.
இதற்கு,
யூபிலி பற்றிய அதிகாரப்பூர்வ ஆணை மடலில் 7 முதல் 15 வரையுள்ள எண்களில் குறிப்பிட்டுள்ள
பணிகளைச் செயல்படுத்த மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். அவற்றைச் செயல்படுத்தும்போது
ஏழையரிலும் ஏழையர், வலுவற்றோர், நோயுற்றோர், முதியோர் மற்றும் பொருள் முதன்மையிலும்
நுகர்வுச் செயல்பாடுகளிலும் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டோர்
ஆகியோர்மேல் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும். இதனைக் ‘கடவுளின் பாணி’யில் செய்யவேண்டும். அதாவது, அவர்களின் வாழ்விடச் சூழல்களில்
அவர்களுடன் நெருக்கமாகவும் மென்மையுடனும் பழகி, பரிவிரக்கம் காட்டி, அவர்களுடன் தனிநபர்
உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்கள் 127-128). நாம் எதிர்நோக்குடன்
வாழ்வது எப்படி என்பதைப் பல சமயங்களில் அவர்கள்தான் கற்றுத்தருகிறார்கள். தனிநபர் உறவுகளின்
வழியாக, இரக்கம் வழிந்தோடும் இறைவனின் பேரன்பை அவர்களுக்குக் கொண்டுசேர்க்க இயலும். அப்போது ‘கிறிஸ்துவின் இதயத்தினின்று பொங்கி வழியும்
அன்பே, தொடக்க நற்செய்திப் போதனையின் மையம்’ என்பதை
நாம் உணர்வோம்.
நாம்
இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை, இயேசுவின் அணைகடந்த அன்பு எனும் மூலத்திலிருந்து
பெற்று எளிதாகப் பிறருக்கு வழங்க முடியும் (1பேது 1:21). இவ்வாறு, நாம் கடவுளிடமிருந்து
பெற்றுள்ள அதே ஆறுதலைப் பிறருக்குக் கொண்டுசேர்க்க முடியும் (2பேது 1:3-4). இயேசுவின்
இறை-மனித இதயத்தின் வழியாக இறைவன் அனைவரையும் அவரது அன்பின்பால் ஈர்த்து, ஒவ்வொருவரின்
இதயத்துடன் பேச விரும்புகிறார். “இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்துடன், இறைத்தந்தையின்
அன்புடன் இவ்வுலகம் முழுவதையும் அரவணைத்துக்கொள்ளும் அடையாளங்களாக விளங்கும் தூதுரைப்
பணியைத் தொடரவே நாம் அனுப்பப்பெற்றிருக்கிறோம்”
(திருத்தந்தையின் தூதுரைக் கழகங்களின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ஆற்றிய உரை
3-6-2023).
3. எதிர்நோக்கின் தூதுரைப்
பணியைப் புதுப்பித்துக்கொள்வோம்
எதிர்நோக்கின்
தூதுரைப் பணியின் அவசரத்தை எதிர்கொள்ளும் கிறிஸ்துவின் சீடர்கள், அப்பணியில் ‘நிபுணத்துவம்
பெற்ற சிற்பிகளாவது எப்படி?’ என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மேலும், கவனம் சிதறிய,
மகிழ்ச்சி இழந்த மனித இனத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். இந்த
இலக்கை அடைய ஒவ்வொரு திருப்பலிக் கொண்டாட்டத்திலும் குறிப்பாக, வழிபாட்டு ஆண்டின் உச்சமாகிற
உயிர்ப்புப் பெருவிழாவின் முத்திருநாள்களிலும், நம் உயிர்ப்பு அனுபவத்தைப் புதுப்பித்துக்கொள்ள
வேண்டும். கிறிஸ்துவின் மீட்பளிக்கும் இறப்பு-உயிர்ப்பில் என்றும் நிலைத்திருக்கிற
‘வசந்த கால’ வரலாற்றை அடையாளப்படுத்தும் ஆண்டவரின்
பாஸ்கா கடத்தலில் நாம் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். இதன் விளைவாக அனைவருடனும் பகிர்ந்துகொள்ள
எதிர்நோக்கின் நிறைவினால் நிரம்பி வழியும் ‘வசந்த கால’ மனிதர்களாக
உருவாகிறோம்.
நாம்
கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டிருப்பதாலும், ‘சாவும் வெறுப்பும் மனித வாழ்வைத் தீர்மானிப்பவை
அல்ல’ என்பதை உணர்ந்திருப்பதாலும் இது சாத்தியமாகிறது.
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் அருளடையாளங்களிலும் நிகழ்த்தப்படும் மறைபொருள்களிலிருந்து,
உலகளாவிய பாஸ்கா நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றத் தேவைப்படும் ஆர்வம், வேகம், மனவுறுதி,
பொறுமை ஆகியவற்றைத் தூய ஆவியாரின் வல்லமை வழியாகப்
பெற்றுக்கொள்கிறோம். “உயிர்த்து மாட்சியடைந்த இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கின்
ஊற்று; அவர் நம்மிடம் ஒப்படைத்துள்ள தூதுரைப் பணியைத் தொடர்ந்தாற்றத் தேவைப்படுகிற
அனைத்தையும் தந்து உதவிடாமலிரார்” (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்
275).
கிறித்தவர்களாகிய
நாம், இறைவனிடமிருந்து பெற்றிருக்கிற கொடையும் பணியுமாகிற எதிர்நோக்கிற்குச் சான்றுபகர
அவருடன் ஒன்றித்து அவரில் வாழ்கிறோம். இறைவேண்டலில் ஊன்றியிருப்போரே எதிர்நோக்கின்
பணியாளர்கள்! ஏனெனில், வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் வான்துவான் கூறுவதுபோல,
“இறைவேண்டல் செய்பவரே எதிர்நோக்குபவர்.” வான்துவான் தன் நீண்ட சிறையிருப்புக் காலத்தில்
இறைவேண்டலில் பிரமாணிக்கமாய் இருந்தார்; நற்கருணை கொண்டாட்டத்தில் உறுதியாக இருந்தார்;
இவ்விரண்டிலிருந்தே உரிய ஆற்றல் பெற்று எதிர்நோக்கில் தொடர்ந்து நிலைத்திருந்தார்.
இறைவேண்டல்தான் தூதுரைப் பணியின் முதன்மைச் செயல்பாடு; அதுவே எதிர்நோக்கின் முதன்மை
ஆற்றலுமாகும். இதனை நாம் மறவாதிருப்போமாக!
எனவே,
ஆண்டவரின் அருள்வாக்கை குறிப்பாக, சிறந்த சுருதி இசைவு கொண்டவையும், தூய ஆவியாரே உருவாக்கியவையுமான
திருப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட இறைவேண்டலில், எதிர்நோக்கின் தூதுரைப் பணியைப்
புதுப்பித்துக்கொள்வோமாக. இடுக்கண்கள் மத்தியில், நம்மைச் சுற்றிக் காணப்படும் எதிர்நோக்கின்
அறிகுறிகளைத் தேர்ந்து தெளிந்திட திருப்பாக்களே நம்மைப் பயிற்றுவிக்கின்றன. மக்களினத்தார்
அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும் என்ற நிலையான தூதுரைப் பணி ஆவலைக் கொண்டிருக்கத்
துணைநிற்கின்றன. இறைவேண்டல் செய்வதன் வழியாக, இறைவன் நமக்குள் ஏற்றி வைத்திருக்கும்
எதிர்நோக்கின் சுடரை உயிரோட்டத்துடன் வைத்திருப்போம். இதனால் அச்சுடர் பெருநெருப்பாக
மாறும். இந்தச் சுடரின் தீ நம்மைச் சுற்றி வாழும் அனைவரிலும் ஒளியேற்றி அவர்களைக் கதகதப்பாக
வைத்திருக்கும். இறைவேண்டல் தூண்டியெழுப்புகிற நமது தெளிவான செயல்பாடுகளும், கருத்துணர்த்தும்
செயற்குறிப்புகளும்கூட அவர்களில் ஒளியேற்ற உதவும்.
நிறைவாக,
கிறித்தவ எதிர்நோக்கு போன்று நற்செய்தி அறிவிப்புப்பணியும் குழுமப் பண்புடையதாகும்.
இப்பணி தொடக்கத்தில் நடைபெறும் நற்செய்திப் போதனை, அதைத் தொடர்ந்து நிகழும் திருமுழுக்கு
வழங்குதலுடன் முடிவுறுவதில்லை; மாறாக, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருடனும் இணைந்து
நற்செய்திப் பாதையில் பயணிப்பதன் வழியாகக் கிறித்தவக் குழுமங்களைக் கட்டியெழுப்புவதில்
தொடர்கிறது. இன்றைய சமுதாயத்தில் திரு அவையின் உறுப்பினர் என்ற நிலை, ஒரே முறையில்
அடைந்துவிடக்கூடிய ஒன்றல்ல; அதனால்தான், கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையில் அவர்களை
வளர்த்து முதிர்ச்சியடைய செய்கிற அனைத்துத் தூதுரைப்பணிச் செயல்பாடு “திரு அவையின்
அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒரு வகைமுறையாக உள்ளது”
(நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 15) என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு ஒன்றிணைந்த இறைவேண்டலும்
செயல்பாடும் தேவை.
திரு
அவையின் தூதுரைப் பணிச் செயல்பாடு, கூட்டொருங்கியக்கமாகச் செயல்வடிவம் பெற வேண்டும்
என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். திருமுழுக்குப் பெற்றவர்களின் ‘தூதுரைப் பணிப்
பொறுப்பு’ மற்றும் ‘புதிய தனித்திரு அவைகளுக்கு
நல்கும் ஆதரவு’ ஆகிய இரண்டிற்கும் திருத்தந்தையின்
திருத்தூதுக் கழகங்கள் செய்து வரும் உதவிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அன்புப்
பிள்ளைகளே, இளையோரே, வயது வந்தோரே, முதியோரே! உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் சாட்சியவாழ்வு, இறைவேண்டல், தியாகம், தாராளப் பண்பு ஆகியவற்றின் மூலம் திரு
அவையின் நற்செய்தி அறிவிக்கும் பணியில் தீவிரமாகப் பங்குபெறுங்கள். உங்களின் இந்தப்
பங்கேற்பிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புச்
சகோதரிகளே, சகோதரர்களே! எதிர்நோக்கில் ஊன்றி நின்ற இயேசு கிறிஸ்துவின் அன்னையாகிற மரியாவின்பால்
நம் பார்வையைத் திருப்புவோம். இந்த யூபிலி ஆண்டிற்கும் வரவிருக்கும் ஆண்டிற்கும் நாம்
செய்யும் இறைவேண்டல்களை அவரிடம் ஒப்படைப்போம். “கிறித்தவ எதிர்நோக்கின் ஒளி ஒவ்வொருவரையும்
ஒளிர்விப்பதாக! இதுவே அனைவருக்கும் நாம் வழங்கும் இறையன்பின் செய்தி. திரு அவை, மாந்தர்
உலகின் அனைவருக்குமான இறையன்பின் நற்செய்திக்கு, ஒவ்வொரு பகுதியிலும் சான்று பகர்வதாக!”
(யூபிலி பற்றிய ஆணை மடல்: ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’. எண்: 6) - திருத்தந்தை
பிரான்சிஸ்