(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அருள்பணி: “கடந்த நமது உரையாடல்களில் திருமுழுக்கு
அருளடையாளம் குறித்து பல்வேறு கருத்துகளை நாம் பகிர்ந்து கொண்டோம். இன்றைய நமது உரையாடலில்
ஒப்புரவு அருளடையாளம் குறித்துப் பேசலாம்.”
அகஸ்டின்: “தந்தையே, ஒப்புரவு அருளடையாளத்தைப்
பற்றி எனக்கு ஒரு கேள்வி உண்டு. ‘ஒப்புரவு என்கின்ற அருளடையாளம் தேவைதானா?’ என்பதே
அக்கேள்வி.”
அருள்பணி: “ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை
நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், பாவம் என்பது என்ன? பாவம் நம் வாழ்வை எவ்வாறு
பாதிக்கிறது? பாவத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில்
தேடுவது இன்றியமையாதது. பாவம் என்பது என்ன?”
அகஸ்டின்: “கடவுளின் கட்டளைகளை மீறுவதே பாவம்’ என்று மறைக்கல்வி வகுப்பில் படித்ததாக நினைவு.”
அருள்பணி: “உண்மைதான்! எனினும், ‘கடவுளின் கட்டளைகள்’ எவையெவை என்பது குறித்த தெளிவு நம்மிடம் இருந்தாலும், கடவுள்
மனிதர்களாகிய நமக்குக் கட்டளைகளைக் கொடுத்ததன் நோக்கம் என்ன என்கின்ற தெளிவு நம்மிடம்
பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே, கடவுள் தந்த கட்டளைகளின் நோக்கம் என்பது குறித்து
இன்றைய நாளில் நாம் உரையாடலாம்.”
கிறிஸ்டினா: “கடவுளின் கட்டளைகளுக்கென்று நோக்கம்
இருக்கிறதா? என்ன நோக்கம் தந்தையே?”
அருள்பணி: “ஒரு சிறிய உதாரணம்! ஒருவர் கடைக்குச்
சென்று ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்பெட்டியோடு ஒரு கையேட்டையும்
(User Manual)
வழங்குவார்கள். அதில் குறிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அப்பெட்டியை இயக்கும்போது
மட்டுமே அது அவருக்குப் பயன்தரக் கூடியதாக இருக்கிறது. அதற்கு மாறாக இயக்கினார் என்றால்
(உதாரணமாக, மின் இணைப்பை மாற்றிக் கொடுப்பது, சுகாதாரமற்ற முறையில் கையாள்வது) அது
குளிர்சாதனப் பெட்டியைப் பாழடையச் செய்வதோடு, அவருக்கும் பாதகமாக மாற வாய்ப்புண்டு.
அதுபோல, இந்த உலகில் இருக்கும் ஒவ்வொன்றையும் எவ்வாறு கையாள்வது என்பதற்கான வரையறைகளும்
வழிமுறைகளும் உள்ளன.”
அன்புச்செல்வன்: “எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது.
தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெரிய இயந்திரம் பழுதாகி விட்டது. அதை இயக்குபவர் அதற்குரிய மின்சாரப் பொத்தானை அழுத்தியும்
அது இயங்கவில்லை. தொழிற்சாலையின் உற்பத்திக்கு இந்த இயந்திரத்தின் செயல்பாடு மிகவும்
முக்கியமானதாக இருந்தது. இவ்வியந்திரத்தின் பகுதியாக ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அச்சக்கரம்
இயங்க மறுத்தது. இதன் காரணமாகவே ஒட்டுமொத்த இயந்திரமும் இயங்கவில்லை. பல தொழிலாளர்கள்
இணைந்து அச்சக்கரத்தை நகர்த்த முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. வேறு வழியில்லாமல்
மேலதிகாரி அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தோடு தொடர்புகொண்டு, பிரச்சினையை எடுத்துக்கூறி
அதனைச் சரிசெய்ய ஒரு நபரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அந்நிறுவனமும் ஒரு நபரை அனுப்பியது.
வந்த நபர் இயந்திரத்தைக் கூர்ந்து நோக்கினார்.
தன்னிடமிருந்த ஒரு சிறிய சுத்தியலால் சக்கரத்தின் ஓர் இடத்தில் இலேசாகத் தட்டினார்.
பின்பு மின்சாரப் பொத்தானை அழுத்தியவுடன் அது இயங்க ஆரம்பித்தது. வந்த நபர் மேலதிகாரியிடம்,
‘இயந்திரத்தைச் சரிசெய்ததற்கான செலவு ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்’ என்று கூறினார். அதிர்ச்சியடைந்த மேலதிகாரி, ‘ஒரு சிறிய
சுத்தியலை வைத்து இலேசாகத் தட்டியதற்காகவா ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்?’ என்று கேட்டார்.
அந்த நபர், ‘இந்தப் பணம் சுத்தியலை வைத்துத் தட்டியதற்காக அல்ல; எங்குத் தட்ட வேண்டும்
என்று தெரிந்து வைத்திருப்பதற்காக!’ என்றாராம்.”
அருள்பணி: “ஓர் இயந்திரம் நமக்குப் பலன்தரக்
கூடியதாக இருக்க வேண்டுமெனில், அது எப்படி இயங்குகிறது என்கின்ற தெளிவு நம்மிடம் இருப்பது
அவசியம். ஓர் இயந்திரத்தை எப்படியும் இயக்கலாம் என்ற ரீதியில் அணுகினோம் என்றால், அது
சிக்கலைத்தான் கொண்டு வரும். நீங்கள் கூறிய கதையில், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அந்தப்
பெரிய இயந்திரத்தைப் பற்றிய தெளிவு இல்லை. எனவே, அதில் பிரச்சினை வந்தபோது கையாளத்
தெரியவில்லை. அதைச் சரிசெய்ய வந்த நபருக்கு அந்த இயந்திரம் செயல்படும் விதம் தெரிந்திருந்தது.
எனவே, அவரால் பிரச்சினையை எளிதில் சரிசெய்ய முடிந்தது. இது இயந்திரத்திற்கு மட்டுமல்ல,
மனித வாழ்விற்கும் பொருந்தும்! வாழ்வு என்கின்ற மாபெரும் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது
என்கிற தெளிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கடவுள் ஒரு கையேட்டை நமக்குக்
கொடுத்துள்ளார். அவற்றையே நாம் ‘கட்டளைகள்’ என்று
அழைக்கின்றேம். ஓர் இயந்திரத்தைச் சரியாக இயக்குவதற்கென்று கையேடு இருப்பதுபோல, வாழ்வைச்
சரியாக வாழ கடவுளால் கொடுக்கப்பட்ட கையேடுதான் கட்டளைகள் என்பவை!”
மார்த்தா: “எனவே கட்டளைகளை ‘வாழ்க்கைக் கையேடு’ என்று அழைக்கலாம்.”
கிறிஸ்டினா: “தந்தையே! கட்டளைகளைப் பற்றிய புதிய
பார்வையாக இது தெரிகிறது. கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்!”
அருள்பணி: “வாழ்க்கை இரண்டு நிலைகளில் இயங்குகிறது.
ஒன்று, மேலோட்டமான நிலை; மற்றொன்று, ஆழமான நிலை. மேலோட்டமான நிலையில் பார்க்கும்போது,
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தனித்தனியானவையாக, ஒன்றிலிருந்து மற்றவை மாறுபட்டவையாகத்
தெரிகின்றன. ஆனால், ஆழமான நிலையில் அவற்றின் தன்மை வேறு! அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவையாக
இருக்கின்றன.”
அன்புச்செல்வன்: “நீங்கள் இதைக் கூறும்போது எனக்கு ஓர்
உதாரணம் மனத்தில் தோன்றுகிறது. ஒரு மரத்தை எடுத்துக்கொண்டோமென்றால் மேலோட்டமாகப் பார்க்கும்போது
அது தனியே இருக்கின்ற ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், கொஞ்சம் கூர்ந்து நோக்கினோம் என்றால்,
அது சுற்றியுள்ள எல்லாவற்றோடும் இணைந்து இருக்கிறது. மரத்தின் இலைகள் காற்றிலிருந்து
கார்பன்-டை-ஆக்ஸைடைப் பெற்றும், காற்றிற்கு ஆக்ஸிஜனைக் கொடுத்தும் காற்றோடு இணைந்திருக்கின்றன;
கிளைகள் சூரியனின் கதிர்களை உள்வாங்கி ஒளியோடு இணைந்துள்ளன; மரத்தின் வேர்கள் மண்ணோடும்
நீரோடும் இணைந்திருந்து, அவற்றிலிருந்து சத்துகளைப் பெறுவது மட்டுமல்லாமல், மண்ணுக்கு
உறுதித்தன்மையைத் தருகின்றன. மேற்கண்ட தொடர்பும் இணைப்பும் இல்லையேல் அந்த மரம் உயிரோடு
நீடிக்க முடியாது. இவ்வாறு மேலோட்டமாகப் பார்க்கும்போது, தனியே இருப்பதாகத் தெரிகின்ற
ஒன்று சுற்றியுள்ளவற்றோடு இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றது.”
அருள்பணி: “நல்ல உதாரணம்! இது மரத்திற்கு மட்டுமல்ல,
மனிதர்கள் உள்பட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். இவ்வாறு இணைந்தும்
பிணைந்தும் இருப்பதையே நாம் ‘உறவு’ என்று அழைக்கின்றோம். எனவே, பிரபஞ்சத்தின்
அடிப்படைத்தன்மையே உறவு அல்லது அன்பு என்று கூறலாம். உறவி(வா)ல் மட்டுமே உயிர்கள் வாழமுடியும்
என்பது பிரபஞ்ச நியதி. எனினும், ஏராளமான மனிதர்கள் ஆழமான பார்வையோடு வாழ்வை அணுகுவது
கிடையாது. மேலோட்டமான பார்வை கொண்டு ‘நீ வேறு, நான் வேறு’ என்ற
மனநிலையோடு வாழ்கின்றனர். இத்தகைய மனநிலை மனித வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு
வருகிறது.”
அகஸ்டின்: “என்னென்ன பிரச்சினைகள் தந்தையே?”
அருள்பணி: “மேலோட்டமாக வாழும் நிலையே நம்மைப்
பாதிக்கும் பாவங்களுக்கான முக்கியமான காரணம் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இத்தகைய மேலோட்டமான நிலை கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்து நாம் அடுத்தமுறை பேசலாம்.
இப்பொழுது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், மேலோட்டமாக வாழும் மனிதர்களை ஆழமான
நிலை நோக்கி (அதாவது உறவை நோக்கி) நகர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டவையே கட்டளைகள் என்பவை.
கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள ‘பத்து கட்டளைகள்’ மனிதர்களை
உறவை நோக்கி நகர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டவை. முதல் மூன்று கட்டளைகள் கடவுளோடுடனான
உறவை ஆழப்படுத்துவது குறித்தும், அடுத்த ஏழு கட்டளைகள் பிறரோடுடனான உறவை ஆழப்படுத்துவது
குறித்தும் பேசுகின்றன.”
மார்த்தா: “தந்தையே, இப்போது நீங்கள் கூறிய விளக்கத்திலிருந்து
பாவம் என்றால் என்ன என்பதற்கான ஒரு தெளிவு கிடைக்கின்றது. பாவம் என்பது மேலோட்டமான
மனநிலையோடு நமது தனிமனிதத்தன்மைகளுக்கு அதீத அழுத்தம் கொடுப்பதன் காரணமாக உறவிலிருந்து
அந்நியப்பட்டு வாழ்வதாகும்; கடவுளோடு உள்ள உறவில் இருந்தும், சகமனிதர்களோடு உள்ள உறவில்
இருந்தும் அந்நியப்பட்டு, நம் வாழ்வும் பிறர் வாழ்வும் சீர்கெட்ட நிலையாகும். இந்நிலை
மாறி மகிழ்வான வாழ்வு வாழ வேண்டுமென்றால், ஒரு மனிதர் கட்டளைகளின் பின்னணியில் தன்னையே
உறவிலிருந்து துண்டித்துக் கொண்ட நிலையிலிருந்து வெளியேறி மீண்டு வரவேண்டும். இதுவே
ஒப்புரவு என்பது. அப்படித்தானே?”
அருள்பணி: “ஆம்!”
(தொடரும்)
“விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத் 12:50). பேரொளியாம் இறைவனின் விருப்பப்படி வாழ்பவரே ஒளியின் மக்கள். அவர்களால் மட்டுமே ஒளியின் செயல்களைச் செய்யமுடியும்; பேரொளியின் சுடராக ஒளிவீச முடியும்; அவர்களின் செயல்கள் இரக்கச் செயல்களாகவே இருக்கும்.
“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”
(லூக் 6:36.) என்று இயேசு அறிவுறுத்துகிறார். இறைத்தந்தையின் மக்களாக வாழ்வதற்கு அடிப்படைப் பண்பு, அன்பில் இணைந்த இரக்கம்.
நம்
தந்தையாம் இறைவன் இரக்கம் நிறைந்தவர், பேரன்பு காட்டுகிறவர். நாம் இரக்கச்செயல்கள் புரிந்து, அவரை மாட்சிப்படுத்த வைகறை தோறும் தம் பேரன்பால் நம்மை நிரப்புகிறார். இரக்கம் நிறைந்த அன்பு சமத்துவச் சமுதாயத்தை
உருவாக்கும்; சகோதரத்துவ உணர்வில் மாந்தர் அனைவரையும் உடன்பிறப்புகளாக உருமாற்றும்.
பேருந்தில்
பயணம் செய்யும்போது இந்தச் சகோதரத்துவத்தை நாம் அனுபவிக்கின்றோம். வயோதிகர், ஊனமுற்றோர், கர்ப்பிணி மகளிர், குழந்தையை வைத்திருப்போர் ஆகியோரைக் கண்டதும் நன்மனமுடையோர் உடனே எழுந்து இடம் அளிப்பர். ஒருநாள் நான் பேருந்தில் ஏறி அமர
இடம் தேடும் முன்பே, ஒரு சகோதரர் எழுந்து என்னை அமரச் செய்து வசதியாகப் பயணம் செய்ய உதவினார். இறங்கி இரண்டு பைகளைத் தூக்கிகொண்டு நடந்து வந்தேன். எதிர்ப்புறம் நின்ற ஓர் ஆசிரியை உடனே வந்து, என்னுடைய பைகளைப் பெற்றுக் கொண்டு, நான் சாலையைக் கடந்து என் இல்லம் செல்ல உதவினார். இவருடைய நன்மனம் கொண்ட நற்செயல்
என்னை மகிழ்ச்சிப்படுத்தியது; மனதார அவர்களை வாழ்த்தி நன்றிகூறினேன். இத்தகையோரைப் பார்த்துதான் இயேசு இறுதிநாளில் கூறுவார், “மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:40) என்று.
நம்
இரக்கச்செயல்களைக் கொண்டே நாம் இறுதித்தீர்ப்பு பெறுவோம் என்பது இயேசுவின் போதனை மட்டுமல்ல, வாக்குறுதியும் கூட. அதே நேரத்தில் இரக்கமற்றவனுக்கு இரக்கமற்றத் தீர்ப்புதான் கிடைக்கும் என்பதை மத் 25:41-46-இல் நாம் உணர்த்தப்படுகின்றோம். திருப்பாடலில் செபித்து நாம் உறுதி கூறுகின்றோம்: “ஆண்டவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்” (திபா
103:4-5). இறைப் பேரன்பை அனுபவிக்கும் நாம் இரக்கமுடையவர்களாக, வாழ்வளிக்கும் வள்ளல்களாக, வழிநடத்தும் விண்மீன்களாக வாழ்ந்து பிறரையும் வாழ்விப்போம்.
இத்தகைய
நிலையில் நாம் நடந்துசெல்லும் பாதை ஒளியின் பாதை, உண்மையின் பாதை, நன்மை நிறைந்த பாதை. அதுவே வாழ்விக்கும் இரக்கம் நிறைந்த பாதை. இத்தகைய பாதையில் நடப்பவர்கள் இடறிவிழ மாட்டார்கள். இயேசுவின் கரத்தை ‘சிக்’கெனப் பற்றிக்கொண்டு நடப்பவர்கள், நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம் மேற்கொண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ்பவர்கள், விண்ணகச் செல்வத்தை மட்டுமே சேர்க்கும் ஏழையர் உள்ளத்தோர்... இவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் நம்பிக்கையாளர்கள்.
தூய
ஆவியின் ஆலயமாகிய நம் உடல் ஒளியைத் தாங்கும் விளக்குதான். விளக்காகிய நம்மில் அருளாகிய எண்ணெய் ஊற்றி, சுடர்விடும் ஒளியை ஏற்றுபவர் பேரொளியாம் இறைத்தந்தையே! எனவேதான் அவரிடம் செபிக்கின்றோம்: “ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்; என் கடவுளே, நீர் என் இருளை ஒளியாக்குகின்றீர்” (திபா
18:28).
எது துக்கச் சேதி?
பிறப்பு
மகிழ்வான செய்தி! இறப்போ துக்கச் செய்தி! நமக்குத் தெரியும், பிறப்பவர் கண்டிப்பாக இறந்தாக வேண்டும் என்று. பிறப்பின் முடிவு இறப்பிலுள்ளது. அப்படியென்றால், இறப்பு பிறப்பின் மகுடம்தானே! மகுடம் சூட்டும் நாளை மகிழ்வான நாளாகக் கொண்டாடுவதுதானே இயல்பு! அப்படியெனில், இறப்பில் நம்மில் பலர் அழுகிறோம், புலம்புகிறோம், ஏன் ஒப்பாரி வைக்கின்றோம்? இறப்பு அன்பை முறித்துவிடுவதாலா? ஏன், இறப்பிற்குப் பின்பும் நீ
அன்பு செய்யலாமே! ஒருவேளை இறந்தவரைக் காண முடியாது, அவரோடு பேச முடியாது, அவரின்றிக் குடும்பம் பொருளாதாரத்தில் சிதைந்துவிடும், அவரின்றி மறுபடியும் தலை தூக்குவது கடினம் என்ற நினைவுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துவதாலா?
இறப்பும் சோகமும்
மனித
இயல்பில் இறந்தவர் மாயமானவர் போலாகிறார். அவரில்லாது தலை தூக்குவது கடினம். அதிலும் கணவன் இளம் வயதில் இறந்துவிடின், மனைவி ‘விதவை’ எனக் கணிக்கப்படுவதும், அது அவளுக்கு வந்த சாபம் எனக் கூறுவதும், பூவும் பொட்டும் வைக்க அனுமதி மறுப்பதும் நம் சமூகம் செய்யும் அபத்தம். பல நல்ல நிகழ்வுகளில்
அவர்கள் அழைக்கப்படுவதில்லை. அவர்கள் பிரசன்னமே அபசகுனமாகக் கருதப்படுகிறது. இறப்பு தரும் வேதனைகள் சொல்லிலடங்கா!
இன்னும்
ஒருசிலரது இறப்பு நல்லதாகப் பார்க்கப்படுகிறது. பல குடும்பங்களில் அப்பா
- குடிகார மனிதன், அடித்துத் தொல்லை தருகின்ற மனிதன் இறந்துவிட்டான் என்று ஆறுதல் அடைகிறது. சமுதாயமும் இம்மனிதன் தொல்லை எனக்கூறி தம்மைச் சமாதானப்படுத்திக்கொள்கிறது.
இறப்பு விடுதலையா?
ஆனால்,
இறப்பு சாபமா? அல்லது இழப்பா? அல்லது சோகமா? வாழ்வின் இரு பாகங்கள்தான் பிறப்பும் இறப்பும். ஒளியில் மட்டுமல்ல, இருளிலும் நன்மையுண்டு. மகிழ்வில் மட்டுமல்ல, துன்பத்திலும் நன்மையுண்டு. உடல் நலனில் மட்டுமல்ல, நோயிலும் நன்மை உண்டு. உண்மையில் துன்பத்திலிருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
நோயுறும்போதுதான் அயலாரின் நோயின் கனாகனம் தெரியும். நாம் அவரைப் புரிந்துகொள்ள நல்ல தருணம் அதுதான். ஒளி நல்லது; ஆனால், இருள் நல்லதல்ல என்று யார் கூறினது? ‘இருளிலிருந்து ஒளிக்கும்’
எனும்போது இருளைத் துயரத்திற்கும், ஒளியைத் துயரத்திலிருந்து பெறுகின்ற
விடுதலைக்கும் ஒப்பிடுகிறோம்.
இருளின் பொருள்
பகலில்
பார்க்க முடியாத நிலவை இருளில் பார்க்கிறோம். அவ்வாறே விண்மீன்களைப் பார்க்கிறோம். இரவில் நிசப்தமான அந்தப் பொழுதில் எழுதுகிறோம், சிந்திக்கிறோம், நிம்மதியாகத் தூங்குகிறோம். இருளில் பயணம் செய்து காலையில் வேலைக்குப் போகிறோம். இரவில்தான் பலவற்றைக் கண்டுபிடிக்கிறோம்.
இயேசுவும்
துன்பங்கள் பற்றியும், பாடுகள் பற்றியும், அவரது இறப்பு பற்றியும் முன்மொழிகின்றார். இறப்பு மீட்பின் சாரமாகவும், பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் உடையதாகவும் காண்கின்றார் (மாற் 8:31). பேதுரு இந்தக் கருத்தையும் சிந்தனைகளையும் ஒத்துக்கொள்வதில்லை. அவர் இயேசுவைத் தனியே அழைத்து அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். இயேசு, “என் பின்னாலே போ, சாத்தானே! நீ கடவுளுக்கு ஏற்புடையதை
எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவற்றைப் பற்றியே சிந்திக்கிறாய்” என்று
கடிந்துகொண்டார் (மாற் 8:32-33; மத் 16:21-28; லூக்கா 9:22-23).
தவறு
செய்யும் மனிதன் முழுவதும் தீயவனல்ல; அவன் மனம் திரும்பிப் புனிதனாகலாம். தீமை என்று நாம் கருதும் பலவை நன்மைத்தனத்திற்கு வாய்க்காலாக அமைகின்றன. நீதிமானிலும்
கறையுண்டு, பாவியிலும் நன்மைத்தனம் உண்டு. இரண்டும் கலந்ததுதான் மனிதம் அல்லது மனித வாழ்வு.
உதிரும் இலை
இப்போது
இறந்தோரைப் பற்றிச் சிந்திப்போம். கவிஞர் வைரமுத்து உதிரும் இலை பற்றி மிக ஆழமாக எழுதுவது நமக்கு உதவியாக இருக்கலாம். உதிர்ந்து வாடி கீழே விழப்போகும் இலையின் உற்சாகமான வார்த்தைகளைக் கவனிப்போம்:
‘உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி
நிற்கிறேன்.
உரசும்
காற்று உணர்ச்சிவசப்பட்டாலோ
முத்து
மழைத்துளியென்பது
மூக்கில்
விழுந்தாலோ
என்
கிளையில் ஒரு பறவை
சில்லென்றமர்ந்து
சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ
நான்
விழுந்து விடுவேன்
இந்தச்
சாவை முன்னிட்டு
என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்
பிறந்த
நாள் முதல்
பிரிந்திருந்த
தாய்மண்ணை
முதன்
முதலில் முத்தமிடப் போகிறேன்.
அப்படியானால்
வாழ்வு குறைகுடமா?
சாவு
நிறைகுடமா?
வாழ்வு
தராத வரம் ஒன்றைத்
தாய்மண்ணே
நீ வழங்கவந்தாய் எனக்கு!’
என்று
எழுதும் இக்கவிஞர் மற்றொரு நிலைக்கு நம்மை அழைத்துச்செல்கிறார்.
இயேசுவும் கல்லறையும்
இயேசுவின்
சாவும் இந்த நிறைவை அறிவிக்கிறது. “எல்லாம் நிறைவேறிற்று” என்ற
கூற்று அவரது பணியின் சாரத்தை அறிவுறுத்துகிறது. இறப்பில் பணியின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது. இயேசுவின் இறப்பு நமது மீட்பாக அமைகிறது. கிறிஸ்துவில் அனைவரும் உயிர்த்தெழுவர் (1கொரி 15:22,23). இறப்பின் வழியாக நாமும் மாற்றுரு பெறுவோம், அழியாமையையும் சாகாமையையும் அணிவோம் (1கொரி 15: 52-56). இயேசுவின்
சாவு சாவையும் வென்றது; பாவத்தையும் வென்றது (1கொரி 15:54-55).
எனவே,
கல்லறைகள் நம்பிக்கையின் அடையாளங்கள். உயிர்த்தெழுதலை நினைவூட்டும் சின்னங்கள். நமது முன்னோர்கள் துயில்கொள்ளும் இடம். உறவு ஒன்றிப்புக்கான தோட்டம்.
“இறப்பு விண்ணக மாளிகையைத் திறக்கும் தங்கத் திறவுகோல்”
என்று ஜான் மில்டன் கூறுகிறார்.
‘சமரசம் உலாவும் இடமே!
பேதமில்லாமல்
எல்லாரும்
முடிவில்
சேர்ந்திடும் காடு;
தொல்லையின்றியே
தூங்கிடும் வீடு;
ஆவிபோனபின்
கூடிடுவார் இங்கே!’
என்ற
கல்லறை குறித்த பாடல் எப்போதும் காதுகளில் ஒலிக்கட்டும்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 2-ஆம் ஞாயிறை ‘தலித் விடுதலை ஞாயிறு’ என இந்திய ஆயர் பேரவையும் (CBCI), இந்தியத் திரு அவைகளின் தேசியப் பேரவையும் (NCCI) இணைந்து சிறப்பிக்கின்றன. இந்த நாளை அனைத்துப் பங்குகளிலும், துறவற மையங்களிலும் திருப்பலி, செப வழிபாட்டிலும் கொண்டாடுவோம்.
‘விளிம்புகளிலிருந்து தொடங்குகிறது எதிர்நோக்கின் யூபிலி’ எனும் இந்த ஆண்டின் தலைப்பு, தம் மீட்புப் பணியை எப்போதும் விளிம்புநிலை மாந்தரிடமிருந்தே தொடங்கும் நல் இறைவனை மீண்டும் கண்டடைய நம்மை அழைக்கிறது.
ஒடுக்கப்பட்டவர்களின்
அழுகுரலைக்
கேட்கும்
இறைவன்
(விப
3:7-10)
திருமுழுக்கு
மூலம் ‘இறைவனின் மக்கள்’ எனும் மாண்பைப் பெற்ற பின்னரும், தலித் கிறித்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள்; அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. திரு அவைக்குள்ளும் சாதி அடிப்படையிலான ஒடுக்கு முறைகள் நடந்தேறி வருகின்றன. பங்குத் திரு விழாக்களிலும், பங்குப் பேரவைகளிலும் பங்கேற்கும் சம உரிமை அவர்களுக்கு
மறுக்கப்படுகிறது; கல்லறைகளிலும் சாதியப் பிரிவினையும் ஒதுக்குதலும் நிகழத்தான் செய்கின்றன. ஆயர் பேரவையின் பல நல்ல முன்னெடுப்பு
களுக்குப் பின்னரும், இந்த அவலங்கள் தொடரத்தான் செய்கின்றன.
ஒடுக்கப்பட்டவர்களின்
அழுகுரலைக் கேட்கும் இறைவன்மீது தலித் கிறித்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சில நேரங்களில், சில இடங்களில் அவர்களின் அழுகுரலை உரிமைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கச் செய்கின்றது. விளிம்புகளில் தொடங்குகிறது நம்பிக்கையின் யூபிலி என்பதற்கு இதுவே அடையாளமாகவும் சான்றாகவும் விளங்குகிறது.
சகோதரத்துவ ஒற்றுமை
பற்றிய
திருப்பாடல்
(திபா
133)
• திரு அவை ஒரு படிநிலைச் சமூகம் அல்ல; இது சமத்துவம் மிக்க ஒரு குடும்பம். பிரிவினைச் சுவர்கள் சகோதர ஒற்றுமைக்கும் திரு அவைக்கும் மாறானவை.
• சாதியப் பாகுபாட்டின் எந்த வடிவமும் நற்செய்திக்கு முரணான குறியீடு எனத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் 2003-இல் இந்திய ஆயர்களை எச்சரித்தார்: “சாதி அடிப்படையிலான முற்சார்பின் எந்த ஒரு சாய லும் உண்மையான ஆன்மிகத்திற்கு அச்சுறுத்தலாகவும் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குத் தடையாகவும் அமைகிறது.”
• திரு அவைக்குள் சாதி நுழையும்போது, கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார் - இந்த முறை கல்வாரி மலையில் அல்ல; நம் திரு அவைச் சமூகங்களில்.
நம்பிக்கை நம்மை
ஒரே
குடும்பமாக
மாற்றுகிறது
(கலா
3:23-29)
இன்றைய
காலகட்டத்தில் பவுல் நம்மிடையே இருந்தால், அவர் இவ்வாறு கூறியிருக்கலாம்: “தலித்தும் இல்லை; தலித் அல்லாதவரும் இல்லை - நீங்கள் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாக இருக்கிறீர்கள்.”
தூய
பவுலின் இந்த அறிவிப்பு, திரு அவை வாழ்ந்து காட்டவேண்டிய ஓர் ஆன்மிக உண்மை. இன்னும் நாம் அந்த ஆன்மிக உண்மையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதை, 2007-இல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் வெளிப்படுத்தியது.
தலித்
கிறித்தவர்கள், பொதுச்சமூகத்தில் மட்டுமல்ல, திரு அவைக்குள்ளும் பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை அந்த ஆணையம் ஆவணப்படுத்தியது.
இட
ஒதுக்கீட்டிற்குத் தகுதிபெறும் பட்டியலிடப்பட்ட சாதி (Scheduled Caste) அந்தஸ்தை,
தலித் கிறித்தவர்களுக்கு அரசு மறுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றொரு கொடுஞ் செயலாகும்.
சமாரியப் பெண்ணுடன்
இயேசு
(யோவா
4:1-9)
இயேசு
ஒரு சமாரியப் பெண்ணைச் சந்திக்கிறார். ஒரு பெண்ணாகவும், தீண்டத்தகாத இனத்தைச் சார்ந்தவராகவும் இரட்டைப்
புறக்கணிப்புக்குள்ளானவர்
இந்தச் சமாரியப் பெண். யூதரும் சமாரியரும் கிண்ணத்தில் நீர் அருந்துவதுமில்லை, பகிர்வதுமில்லை. ஆனால், இயேசு, “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்ற ஓர் எளிய வேண்டுகோளால் அந்தத் தீண்டாமைத் தடையை உடைத்தெறிந்தார். அந்தத் தருணத்தில் இயேசு ஒரு சமூக எல்லையைக் கடந்தார். புறக்கணிக்கப்பட்ட சமாரியப் பெண்ணிடம் இயேசு உரையாடியதன் மூலம், தமது இறைமையை அப்பெண்ணுக்கு வெளிப்படுத்தினார். நம் ஆண்டவரின் இறைவெளிப்பாடு விளிம்புகளில் நிகழ்கிறது.
இறைவாக்குரைக்க
அழைக்கப்பட்டுள்ள
திரு
அவை
சாதியப்
புறக்கணிப்பை/பாகுபாட்டை ஒரு தீவிரமான சமூகப் பாவமென 2016-இல் வெளியிடப்பட்ட தலித் கிறித்தவர்களின் அதிகாரப்படுத்துதலுக்கான இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI Policy of Dalit Empowerment in the Catholic Church in India)
குறிப்பிடுகிறது. இந்தியக் கத்தோலிக்கர்களில் 65% பேர் தலித்துகள் என்பதை அந்தக் கொள்கை வரைவு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அவர்கள் திரு அவையின் தலைமைப் பணிகளிலும் கல்வியிலும் மறைப்பணி அமைப்புகளிலும் குறைவாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
தலித்
விடுதலைக்கான எந்த ஒரு செயல்திட்டமுமின்றி, தலித் விடுதலை ஞாயிறைச் சிறப்பிப்பது ஒரு வெற்றுச்சடங்கும் பாசாங்குமாகும். விடுதலையைப் போதிப்பது மட்டுமல்ல, அதை வாழ்ந்து காட்டுவதும் திரு அவையின் பொறுப்பே.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் ‘Fratelli Tutti’-இல்
ஒரு மாபெரும் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்: “அன்பு வட்டத்திலிருந்தும் சகோதரத்துவ வட்டத்திலிருந்தும் யாரும் விலக்கப்படமுடியாது” (பத்தி
97). இப்பேருண்மையை வாழ்ந்து காட்ட வேண்டியது திரு அவையின் கடமை.
அக்டோபர்
2025-இல் வெளியான ‘Dilexi Te’ என்ற புதிய நன்மதிகூறல் மடலில், திருத்தந்தை பதினான்காம் லியோ ஓர் அருமையான செய்தியை நினைவூட்டுகிறார்: “எனவே, ஏழைகளுக்கான அன்பு அவர்களின் ஏழ்மை எந்த வடிவத்தில் இருந்தாலும், இறைவனுடைய இதயத்திற்கு உண்மையாய் வாழும் திரு அவையின் நற்செய்தி அடையாளமாகும்” (பத்தி
103). இந்த நினைவூட்டலை இந்தியப் பின்னணியில் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: ‘தலித்துகளுக்கான அன்பு... இறைவனுடைய இதயத்திற்கு
உண்மையாய் வாழும் திரு அவையின் நற்செய்தி அடையாளமாகும்.’
எதிர்நோக்கின்
யூபிலி
திருவிவிலிய
யூபிலி காலத்தில் கடன்கள் மன்னிக்கப்பட்டன; அடிமைகள் விடுதலை அடைந்தனர்; மூல உரிமையாளர்களிடம் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. சமத்துவமும் புதுப்பித்தலும் நிலவும் காலமே யூபிலியாகும்.
இன்று
நாம் கொண்டாடும் ‘எதிர்நோக்கின் யூபிலி’ அரண்மனைகளிலோ, பேராலயங்களிலோ அல்ல; விளிம்புகளில்! தலித் கிறித்தவர்கள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் தொடங்குகிறது.
“ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது, ஒடுக்குதல் எனும் பாவத்திலிருந்து ஒடுக்குவோர் பெறும் விடுதலையும் ஆகும்” என்கிறார் விடுதலை இறையியலாளர் குஸ்தாவோ குடியெரெஸ். இவர் கூறியதுபோல், தலித்துகள் விடுதலையடையும்போது, முழு திரு அவையும் விடுதலை பெறுகிறது. விளிம்பில் கிடப்பவர்கள் எழுந்து, நிமிர்ந்து நிற்கும்போது, மையம் தன் ஆன்மாவை மீண்டும் கண்டடைகிறது.
மனமாற்றத்திற்கான
அழைப்பு
இன்றைய
திருப்பலி ஒரு மனமாற்றத்தின் (மெட்டானோயா) தருணம். இதயங்கள் இறைவனிடம் திரும்பும் நேரம். கிறிஸ்துவின் மறையுடலான திரு அவையில் சாதியம் நிலைத்திருக்கக் காரணமாக இருந்த நம்முடைய மௌனம் மற்றும் பங்களிப்பிற்காக மனம் வருந்துவோம், மனம் திருந்துவோம்.
வேடிக்கைப்
பார்ப்பவர்களாகவோ, வெறும் பார்வையாளர்களாகவோ இராது, அனைவரும் சமப் பங்கேற்பாளர்களாகத் திகழும் பங்குத்தளங்களைக் கட்டியெழுப்ப உறுதி கொள்வோம்.
இறுதியாக...
இந்தத்
தலித் விடுதலை ஞாயிறு உண்மையிலேயே ஓர் எதிர்நோக்கின் யூபிலியாக அமையுமாறு இறைவேண்டல் செய்வோம். நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த இறையாட்சி, விளிம்புகளிலிருந்து விடியட்டும்.
“நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்” (திருப்பாடல்
40:1-2) என ஒவ்வொரு தலித் கிறித்தவனும் மகிழ்ச்சிப்பண் பாடும் தருணம் விரைந்து நெருங்கட்டும்!
புறக்கணிப்போ
புறம்தள்ளுதலோ இல்லாத ஒரு குடும்பமாக, கிறிஸ்துவின் அன்பினால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாக, அனைவரும் சம உரிமையுடனும் சமமாண்புடனும்
வாழ வகை செய்யும் இறையாட்சியின் உயிருள்ள அடையாளமாக நம் திரு அவை மாறட்டும்!
மரியாவின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிவிப்பின் வழியாகத் திரு அவையானது, கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதோடு அதன் சக்தியிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.
1. மரியா
தாயின் கருவில் உருவானதிலிருந்தே முற்றிலும் புனிதமானவர் என்ற கோட்பாடானது அது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, புனித பவுல் அடியாரின் முதல் பாவம் மற்றும் பாவத்தின் பொதுத் தன்மையைப் பற்றிய கருத்துகளினாலும், அதன் மீதான புனித அகுஸ்தினாரின் குறிப்பிடத்தக்க விளக்கங்களினாலும் மேற்கத்திய திரு அவையில் ஒருவித எதிர்ப்பைச் சந்தித்தது.
முற்றிலும்
புனிதத்துவமிக்க மகனின் தாய் என்கின்ற நிலையை அடைவதற்காக மரியாவிற்கு முற்றிலும்
தூய்மையான மற்றும் சிறப்புமிக்க புனிதத்துவமானது தேவையான ஒன்றாக இருந்தது என புனித அகுஸ்தினார்
உணர்ந்தார். இதன் காரணமாகத்தான், பெல்லாஜியுஸ் உடனான கருத்து வேறுபாட்டில் (Pelagius controversy)
மரியாவின் புனிதத்துவமானது, சிறப்புமிக்க அருளின் கொடையாக இருக்கிறதென்று வலியுறுத்தி இவ்வாறு கூறுகின்றார்: “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக யாரை நான் எந்த வகையிலும் பாவத்தோடு தொடர்புபடுத்திக் குறிப்பிடுவதற்கு விரும்பவில்லையோ, அந்தக் கன்னி மரியாவுக்கு நாங்கள்
விலக்களிக்கின்றோம். உண்மையில் பாவமற்றவரைக் கருத்தரித்துப் பெற்றெடுத்தவர், பாவத்தின்மீது முழுமையான வெற்றிகொள்ளும் நிமித்தம் சிறப்பானதோர் அருள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது என்பது நமக்குத் தெரியாதா?” (De natura
et gratia, n. 42).
‘ஆண்டவரின் தாய்’ என்பதனால் அவருக்கு வழங்கப்பட்ட உயர் மதிப்பினால் அவரில் எந்தவித தனிப்பட்டதொரு பாவமில்லாத் தன்மையையும் அவருக்குரிய புனிதத்துவத்தையும் புனித அகுஸ்தினார் வலியுறுத்துகின்றார். இருப்பினும், கருத்தரித்தலின் போதான முற்றிலும் பாவமில்லாத் தன்மை பற்றிய கோட்பாட்டுக்கும், ஆதாமின் வழி வந்தோர் அனைவருக்குமான மீட்பு பற்றிய கோட்பாட்டுக்கும் இடையே எவ்வாறு பொருத்தப்பாட்டை உருவாக்குவது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது, மரியா எவ்வாறு அவர் தாயின் கருவில் உருவானபொழுதே கிறிஸ்துவின் மதிப்பினால், மீட்பின் அருளால் பயனடைந்தார் என்பதை விளக்குவதன் வழியாக, பிற்காலத்திய திரு அவையின் மிகச் சரியான புரிதலின் வழியாக முடிவுக்கு வந்தது.
‘டன்ஸ் ஸ்காட்டஸ்’(Duns Scotus) அமல உற்
பவம்
பற்றிய
மறுப்புகளை
வெற்றி
கொண்டார்
2. 9-வது நூற்றாண்டில்
முதலில் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்திலும், பின் இங்கிலாந்திலும் மேற்கத்திய நாடுகளில் அமல உற்பவத் திருவிழாவானது அறிமுகப்படுத்தப்பட்டது.
கி.பி. 1128-ஆம் ஆண்டில் எட்மெர் என்கின்ற கான்டர்பெரி நகரத்துத் துறவி ‘அமல உற்பவம்’ பற்றியதொரு கட்டுரையை எழுதும்பொழுது, அமல உற்பவத் திரு விழாவுக்கான திருவழிபாடானது குறிப்பாக, “தூய்மை நிறை எளிமையான மற்றும் மிகவும் தாழ்ச்சி மிகுந்த கடவுளுக்கான பக்தியானது யாரில் காணப்பட்டதோ...” (Tract. De conc. B.M.V., 12) என்கின்ற
பகுதியானது ஓரங்கட்டப்பட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்றார். இந்த விழாவை மீட்டெடுக்க விரும்பிய அந்தப் பக்திமிகு துறவி மனுக்குலம் அனைத்தின் மீதான முதல் பாவத்தின் கடத்தல் கொள்கையை அடிப்படையாக வைத்து அமல உற்பவத்தின் சிறப்புச் சலுகை பற்றிய புனித அகுஸ்தினாரின் மறுப்புகளைப் புறந்தள்ளினார். இதை
விளக்குவதற்காக அவர் ஒரு கஷ் கொட்டையின் உருவத்தை (image of a chestnut) பொருத்தமாகப்
பயன்படுத்தினார். அதாவது, “அது கருத்தரிக்கப்பட்டு, ஊட்டமளித்து, அதன் துளையின் அடியில் (beneath its bur) உருவாகிறது, இன்னும்
அது குத்தப்படாமல் பாதுகாக்கப்படுகிறது”(Tract. 10).
முதல்
பாவத்தைக் கடத்த வேண்டிய படைப்பு செயலில் கூட, மரியா கடவுளின் வெளிப்படையான விருப்பத்தால் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார், “அவர் வெளிப்படையாக இதைச் செய்ய முடிந்தது மற்றும் அவ்வாறு செய்ய விரும்பினார். அவர் விரும்பியதால் அதைச் செய்தார்”
(ibid) என்று
எட்மெர் வாதிடுகிறார்.
எட்மெர்
இவ்வாறு வாதிட்டாலும், 12-வது நூற்றாண்டு இறையியல் வல்லுநர்கள் புனித அகுஸ்தினாரின் கருத்துகளைத் தமதாக்கிக்கொண்டனர். பாவத்தின் நிபந்தனைகள் எல்லா மனிதருக்கும் பொதுவானதொன்றாக இல்லையென்றால், கிறிஸ்துவால் கிடைக்கும் மீட்பானது அனைவருக்குமானதொன்றாக இருக்காது என்று வாதிட்டனர். மேலும், மரியா முதல் பாவம் அறியாதவராக இருந்திருந்ததால், அவர் மீட்கப்பட்டிருக்க மாட்டார் என்றும் கூறினார்கள். உண்மையில், மீட்பு என்பது பாவநிலையில் இருப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதில்தான் இருக்கின்றது என்பதே அவர்களின் வாதமாகும்.
3. 12-வது நூற்றாண்டு
இறையியல் வல்லுநர்களைப் பின்பற்றி டன்ஸ்காட்டஸ் அமல உற்பவக் கோட்பாடு பற்றிய இந்த மறுப்புகளை வெற்றி கொள்வதற்கான வழியைக் கண்டுபிடித்தார். உண்மையான, நடுநிலையாளரான கிறிஸ்து, மரியாவை முதல் பாவத்திலிருந்து பாதுகாத்ததன் வழியாக மரியாவில் அவரின்
நடுநிலையாளருக்கான உயர் நிலைச் செயலைச் செய்தார்.
இவ்வாறு,
கிறித்தவ இறையியலில் பாதுகாத்தல் வழியாக மீட்பு என்கின்றதொரு கருத்துருவாக்கத்தைப் புகுத்தினார். இதன்படி மரியா இன்னும் கூட மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் மீட்கப்பட்டார். பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதனால் அல்ல; மாறாக, பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதனால் அவர் மீட்கப்பட்டார்.
இதன்
காரணமாகவே டன்ஸ்காட்டஸ் பிற்காலத்தில் ‘அமல உற்பவக் கோட்பாட்டின் வல்லுநர்’
என்று அழைக்கப்பட்டார். மேலும், இவரின் சிந்தனையானது இறையியல் வல்லுநர்களால் நன்கு வரவேற்கப்பட்டது. குறிப்பாக, 14-வது நூற்றாண்டின் தொடக்கம் முதலே பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்தவர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 1477-இல்
திருத்தந்தை நான்காவது சிக்ஸ்துஸால் அமல உற்பவ விழாவிற்கான திருப்பலியானது அங்கீகரிக்கப்பட்டபின் இக்கோட்பாடானது பல்வேறுபட்ட இறையியல் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமல
உற்பவம் பற்றிய திருவழிபாடு மற்றும் கோட்பாட்டின் இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது திரு அவையின் ஆசிரியம் மரியாவின் சிறப்பு அம்சங்களை வரையறுப்பதற்கான வழியைத் தயார் செய்தது. ஆனால், கோட்பாட்டுப் பிரகடனமானது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் செய்யப்பட்டது.
இது திரு அவையின் அடிப்படைச் சிந்தனையின் வழியாக நிகழ்ந்தது. கிறிஸ்துவின் தாயாகிய மரியா, அவரின் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே முற்றிலும் தூயவராக இருக்க வேண்டியிருந்தது.
4. மரியாவுக்கு
வழங்கப்பட்ட இந்தச் சிறப்புச் சலுகை, கிறிஸ்துவின் மீட்புச் செயலானது நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது என்பதை உறுதி செய்வதையும் யாரும் கவனிக்க மறந்துவிடக்கூடாது. மரியாவில் முற்றிலுமாக இருந்த பாதுகாத்தல் பற்றிய இந்தப் பகுதியானது மனிதனைப் பாவத்திலிருந்து விடுவிப்பதிலும், அவனுடைய வாழ்வில் அதன் தாக்கத்தினை வெற்றி கொள்வதற்கான அருளையும் சக்தியையும் கொடுக்கும் கிறிஸ்துவின் மீட்பிற்கான தலையீட்டிலும் இருக்கின்றது.
அமல
உற்பவக் கோட்பாடானது அருளின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இவ்வகையில், மரியாவின் அமல உற்பவக் கோட்பாடானது மீட்பராம் கிறிஸ்துவின் அருளின் தாக்கத்தை மங்கச் செய்யாமல், வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்த உதவுகின்றது.
ஆண்டவருடைய
அருளின் உதவியினால் கிறித்தவர்களின் வாழ்வில் எதை அடைவதற்கு அழைக்கப்பட்டார்களோ, அந்த முழுமையான புனிதத்துவத்தின் அடையாளமாகவும் (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 65) கிறிஸ்துவினால் முதலில் மீட்கப்பட்டவராகவும், ஒரு நொடி கூட தீமை மற்றும் பாவத்தின் சக்திக்கு உட்படாத சிறப்புச் சலுகையைப் பெற்றவராகவும் மரியாவைப் பார்க்கின்றனர்.
மூலம்:
John Paul II, Christ’s grace preserved Mary from sin, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 12 June 1996, p. 11.
சென்ற இதழ் தொடர்ச்சி...
கிரகோரியன் திருப்பலி
என்றால் என்ன?
இறந்தோருக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கம் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி, இறந்தோரின் ஆண்டு
நினைவு நாள் திருப்பலி ஆகியவற்றோடு முடிவுறுவது இல்லை; மாறாக, இறந்தவர்களுக்காக நவநாள்
திருப்பலி ஒப்புக்கொடுப்பது மற்றும் கிரகோரியன் திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஆகியவையும்
இதில் அடங்கும். இதில் நவநாள் என்பது தொடர்ச்சியாக ஒன்பது நாள்கள் திருப்பலியை இறந்தவரின்
ஆன்மாவிற்காக ஒப்புக்கொடுப்பதாகும்.
கிரகோரியன்
திருப்பலி என்பது ஒருவர் இறந்தவுடன் தொடர்ந்து 30 திருப்பலிகளை ஒப்புக்கொடுத்து, கழுவாய்நிலையில்
இருக்கிற ஓர் ஆன்மாவை விரைந்து விண்ணகம் சேர்த்திட இறைவனிடம் இறைஞ்சுகிற ஒரு பாரம்பரிய
முறையாகும்.
கிரகோரியன்
திருப்பலி என்ற இந்தப் பெயரானது கி.பி. 590 முதல் 604 வரை திருத்தந்தையாக இருந்த புனித
பெரிய கிரகோரியாரின் நினைவாகவே கொடுக்கப்பட்டது. ஏனெனில், ஆன்மாக்களைக் கழுவாய்நிலையில் இருந்து மீட்பதற்காக நிறைவேற்றப்படும் இந்தக் கிரகோரியன்
திருப்பலி என்ற இந்தப் பக்தி முயற்சி பரவ இவர் பெரும் தொண்டாற்றினார். இவர் உரோமை நகரில்
உள்ள புனித ஆண்ட்ரூ இல்லத்தில் இறந்த துறவியான யுஸ்துஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக
30 நாள்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். முப்பதாம் நாள் திருப்பலி முடிவில்
இறந்த யுஸ்துஸ் தனது சக துறவிக்குத் தோன்றி, தான் கழுவாய்நிலையின் அணையா நெருப்பிலிருந்து
மீட்கப்பட்டதை அறிவித்தார் என்பதை புனித பெரிய கிரகோரியார் தனது ‘உரையாடல்கள்’ (Dialogues)
எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
இறந்தோருக்கான திருப்பலி
மற்றும் காணிக்கைகள் குறித்த திரு அவைச் சட்டப் பார்வை
திரு
அவைச் சட்ட எண். 945 கிறித்தவ நம்பிக்கையாளர்களின் கருத்துகளுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க
அதிலும் குறிப்பாக, காணிக்கை எதுவும் பெறாமல் வறியவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க
மிகவும் அறிவுறுத்துகிறது. இந்த ஆண்டு திருப்பலி குறித்து அருள்பணியாளர்களுக்கான வத்திக்கான்
நகரத்திலிருக்கும் திருப்பீடப் பேராயம் வெளியிட்ட ‘secundum Aroatum’ என்ற ஆவணம் ஏழைகளுக்காக
அவர்களுடைய கருத்துகளுக்காக அவர்களிடம் எந்தவிதத் திருப்பலிக்கான கட்டணமும் பெறாமல்
அருள்பணியாளர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் தேவையையும் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது.
இது ஏழைகள், அவர்கள் குடும்பத்திலிருந்து இறந்துபோன அவர்களுடைய உறவினர்களுக்காக அருள்பணியாளர்கள்
திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் தேவையை உணர்த்துகிறது.
திரு
அவைச் சட்ட எண். 948, ‘தனிப்பட்ட காணிக்கைகள் சிறியதாக இருந்தாலும், எத்தனை கருத்துகளுக்காக
அளிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அத்தனை கருத்துகளுக்காகத் தனிப்பட்ட திருப்பலிகள்
ஒப்புக்கொடுக்க வேண்டும்’ எனவும் விளக்குகின்றது. இது ஒரு மேல்வரிச்சட்டம்
என்றாலும், திருப்பலியின் விலைமதிப்பற்ற தன்மையினாலும் குறைந்து வரும் அருள்பணியாளர்களின்
எண்ணிக்கைக்கு மத்தியில் பெருகிவரும் மக்களது ஆன்மிகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு
திரு ஆட்சிப்பீடமானது 1991-ஆம் ஆண்டு ஓர் ஆணையை வெளியிட்டது. Mos iugiter (ííS 83 (1991) 436-446) என்று அழைக்கப்பட்ட திரு ஆட்சிப்பீடத்தின் அந்த ஆணை திரு
அவைச் சட்ட எண் 948 வரையறுத்த கடுமையான சட்டத்தைத் திருத்தியமைத்து பின்வரும் நிபந்தனைகளின்
அடிப்படையில் திருப்பலியில் திரள்தொகுப்பு கருத்துகளுக்கு அனுமதி வழங்கியது:
1.
கூட்டுத்திருப்பலி கருத்துகள் (pluri-intentioral mass
of collective mass Intentiobs)
கொண்டாடப்படுவதற்கு முன்பு நன்கொடையாளர்களுக்கு அவர்களின் திருப்பலிக்கான கருத்துகள்
ஒரே திருப்பலியில் இணைக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டு அவர்களது ஒப்புதலைப் பெறுதல்
வேண்டும்.
2. இத்தகைய திருப்பலிகள் நடைபெறும் நேரம், இடம் கண்டிப்பாக இத்தகைய திருப்பலியை ஒப்புக்கொடுக்க
விரும்புகிறவர்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும். அதேபோல இத்தகைய கூட்டுக் கருத்து திருப்பலிகளின்
எண்ணிக்கை வாரத்திற்கு இரண்டுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
3.
திருப்பலியை நிறைவேற்றுபவர் ஒரு திருப்பலிக்கு உரிய காணிக்கையைத் தனக்கென எடுத்துக்
கொண்டு மீதமிருக்கிற கருத்துகளை ஆயர் வரையறுத்துள்ள நோக்கத்திற்காக அனுப்புதல் வேண்டும்
என்றெல்லாம் வரையறுத்துள்ளது.
இறந்த ஆன்மாக்களுக்கான
புகழ்பெற்ற செபம்
புனித
ஜெர்த்ரூத் அவர்களின் செபம்தான் இறந்தவர்களுக்காகக் கூறப்படும் செபங்களில் மிகவும்
பிரபலமான செபம். புனித ஜெர்த்ரூத் அம்மா 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெனடிக்டைன்
சபையைச் சேர்ந்த துறவி மற்றும் இறை உணர்வாளர். இந்த இறைவேண்டலை பக்தியோடு இறைவேண்டல்
செய்கிற ஒவ்வொரு முறையும் 1000 ஆன்மாக்கள் கழுவாய்நிலையிலிருந்து விடுவிக்கப்படும்
என்று இயேசு கிறிஸ்துவே இவருக்கு வாக்குறுதி தந்ததாகக் கூறப்படுகின்றது.
அந்த
இறைவேண்டல் பின்வருமாறு: ‘என்றென்றும் வாழும் கடவுளே! எங்கள் ஆண்டவரும் உமது அன்பு
மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத் திரு இரத்தத்தை, இந்த நேரத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்
எல்லாத் திருப்பலிகளோடும் சேர்த்து, கழுவாய்நிலையில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும்,
உலகெங்கும் உள்ள பாவிகளுக்காகவும், திரு அவையில் உள்ள பாவிகளுக்காகவும், எந்தன் இல்லத்திலும்
குடும்பத்திலுள்ள பாவிகளுக்காகவும் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.’
குடும்ப
உறுப்பினர்களோடு இணைந்து ஒரு பத்து மணி செபமாலையாக புனித ஜெர்த்ரூத் அம்மாளின் இந்த
அற்புதமான செபத்தை இறைவேண்டல் செய்வது ஓர் அலாதியான அனுபவத்தையும் ஆறுதலையும் நமக்குப்
பெற்றுத்தரும்.
இறந்து
கழுவாய்நிலையில் இருக்கிற நம் நேசத்துக்குரியவர்களால் எந்த ஒரு பிறரன்புச் செயலும்
செய்ய முடியாது. எனவே, அவர்களின் மீட்புக்காக
உயிரோடு இருக்கிற நாம் பிறரன்புச் செயல்களைச் செய்யலாம். நமது செயல்கள் அவர்களின் பாவங்களுக்குப்
பரிகாரமாக அமையும். இவர்களுக்காக இறைவேண்டல் செய்வது மிகச் சரியான வழி, கிறிஸ்துவின்
தியாகத்தை உள்ளடக்கிய திருப்பலியே ஆகும்.
ஓர்
அருள்பணியாளர் திருப்பலியை ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக ஒப்புக்கொடுக்கிறபோது, அது
நாம் அந்த நபர்மீது கொண்டிருக்கிற அன்பில் வேரூன்றி, கடவுளிடம் அளிக்கப்பட்ட கிறஸ்துவின்
நிறைவான இறைவேண்டலாக மாற்றம் பெறுகின்றது. இறைவேண்டல், ஒறுத்தல் முயற்சிகள், தானம்
செய்தல் போன்ற பல காரியங்களில் நாம் ஈடுபடலாம் என்றாலும், கிறிஸ்துவின் தியாகப்பலிக்கு
ஈடாக பலன் தரக்கூடிய ஒன்று இருக்க முடியாது. நம் நேசத்துக்குரியவர்கள் இறந்துபோகிறபோது
அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கிற திருப்பலியையும் இறைவேண்டலையும்விட ஆறுதலையும் அமைதியையும்
எந்த ஓர் அனுதாப அட்டையோ அல்லது சூட்டப்படும் மலர்களோ கொடுத்துவிட முடியாது. எனவே,
திருப்பலி மற்றும் இறைவேண்டல்களை ஒப்புக்கொடுப்பதன் வழியாக அவர்கள் நிறை வாழ்வைப் பெற
நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.