திரு அவை என்கிற சங்க ஏட்டின் எண் 31-இல் குருகுலத்தாரும், திரு அவையின் இசைவு பெற்ற துறவற நிலையினரும் நீங்கலாக ஏனைய கிறித்தவ நம்பிக்கையாளர்களைக் குறிப்பதே ‘பொதுநிலையினர்’ என்ற சொல். திரு அவைச் சட்டம் 225:2 மற்றும் கத்தோலிக்கக் கிறித்தவ மறைக்கல்வி ஏட்டின் எண் 897 ஆகியவற்றிலும் ‘பொதுநிலையினர்’ என்ற சொல் இவ்வாறே விளக்கப்படுகிறது. ஆன்மிகம் என்பது மனிதனின் அக மற்றும் புற வாழ்வைக் குறிப்பிடும் சொல். நற்செய்தி மதிப்பீடுகளுக்கு ஏற்பவும் (Gospel Values and Charisms), தனி வரங்களுக்கு ஏற்பவும் வாழும் புனித வாழ்வே ஆன்மிக வாழ்வாகும்.
மனிதனின்
சிந்தனை, சொல், செயல் இவற்றை நிர்ணயிக்கும் அகக் காரணிகள் ஆன்மிகத்தை இயக்கும் சக்திகளாகும். கிறித்தவ இறைநம்பிக்கை, பிறரன்பு இவை இரண்டும் ஆன்மிகத்தின் முக்கியப்
பரிமாணங்களாகும்.
பொதுவான
கிறித்தவ ஆன்மிகம் என்பது கிறிஸ்துவை ‘மீட்பர்’ என அறிவித்து, அவரை
அனுப்பிய தந்தையைக் கடவுளாக ஏற்று, அவரால் படைக்கப்பட்ட மனிதரைச் சகோதர அன்புடன் நேசித்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ்வதாகும்.
பொதுநிலையினரின்
ஆன்மிகம் என்பது திருமண
மானவர்கள் தங்களது திருமண வார்த்தைப்பாடுகளுக்குப் பிரமாணிக்கமாக வாழ்வதும், வார்த்தையாலும் வாழ்க்கையாலும் கிறிஸ்துவுக்கு உயிருள்ள சாட்சிகளாக வாழ்வதுமாகும். திருமணமாகாதவர்கள் கிறித்தவ நம்பிக்கை, பிறரன்பு இவற்றைக் கடைப்பிடித்து, அருளடையாளங்களின் மூலம் தங்களது ஆன்மிக வாழ்வில் இறையனுபவத்தைப் பெறுவதாகும்.
இல்லற
வாழ்வில் இறை வெளிப்பாட்டையும் இறைப் பாதுகாப்பையும் உணர்ந்து வாழ்வதுதான் பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.
பொதுநிலையினர்
திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் வழியாகவும், நற்கருணை மற்றும் ஒப்புரவு அருளடையாளங்களின் மூலமும் ஆன்மிக எழுச்சி பெற்று, கிறிஸ்துவின் போதிக்கும் பணியிலும், புனிதப்படுத்தும் பணியிலும், ஆளும் பணியிலும் அருள்பணியாளர்களின் வழிநடத்துதலில் பங்கேற்றுத் தமது கிறித்தவக் கடமைகளை நிறைவேற்றுவதே பொதுநிலையினர் ஆன்மிகத்தின் மற்றொரு பரிமாணம்.
பொதுநிலையினரின்
ஆன்மிகத்தின்
தனித்தன்மைகள்
1) பொதுநிலையினர்
உலகக் காரியங்களில் ஈடுபட்டு உழைக்கும்போது கிறிஸ்துவின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, நேர்மை, பணிவு, துணிவு, உள்ளத்தூய்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து மறு கிறிஸ்துவாக வாழ்வதாகும்.
தொடக்கத்
திரு அவையில் முதல் பொதுநிலையினர் மற்றும் மறைச்சாட்சிப் புனிதருமான ஸ்தேவான் (திப 7:60) முதல் இக்காலத் திரு அவையில் பொதுநிலையினரின் புனிதரான தேவசகாயம் வரை எத்தனையோ பொதுநிலையினர், கிறித்தவ நம்பிக்கைக்காகத் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர் என்று திரு அவை வரலாறு கூறுகின்றது.
புனித
பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் (4:8-9) கூறியிருப்பதுபோல, பொதுநிலையினராகிய நாம் உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்பு உடையவை எவையோ, போற்றுதற்குரியவை
எவையோ அவற்றையே மனத்தில் நிறுத்தி, சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்துவதே பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.
பொதுநிலையினரின்
ஆன்மிகம் அருள்பணியாளர்களின் மற்றும் துறவறத்தாரின் ஆன்மிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அருள்பணியாளர்கள் தங்கள் வார்த்தைப்பாட்டிற்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்து, தங்களது அருள்பணிகளை ஆற்றுவதில்தான் அவர்களின் ஆன்மிகம் உள்ளது. துறவறத்தார் தங்களது வார்த்தைப்பாட்டிற்கு ஏற்ப தூயவாழ்வு வாழ்ந்து தங்களது தனிவரத்திற்கேற்ப நற்செய்திப் பணியாற்றுவதே அவர்களின் ஆன்மிகமாகும்.
அருள்பணியாளரும்
துறவறத்தாரும் பொதுநிலையினரும் கிறித்தவ ஆன்மிகத்தைக் கடைப்பிடித்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் புனித வாழ்வு வாழ - மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் கிறித்தவ ஆன்மிகமாகும். அதுவே, கிறிஸ்துவின் ஆன்மிகமும் ஆகும்.
எனவே,
புனித மாற்கு நற்செய்தியில் (16:17-18) கூறப்பட்டுள்ளதுபோல, முழு நம்பிக்கையுடன், புனித பவுல் 1கொரிந்தியர் 13:4-8-இல் கூறியிருக்கும் அன்பின் பண்புகளை வாழ்ந்து காட்டி, புனித மத்தேயு 25 35, 36 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட் டுள்ள அறச்செயல்கள் அனைத்தையும் வாழ்க்கை நெறியாக்கி, இறைவனின் ஆசிர் பெற்றவர்களாய் நிலைவாழ்வைப் பெறத் தகுதியான புனித வாழ்வு வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிக வாழ்வு.
புனித
பவுல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிறித்தவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தும் இன்று வாழும் நமது வாழ்வுக்கும் பொருந்துமானால், அதைக் கடைப்பிடித்து, “இனி வாழ்வது நானல்ல; கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” என்று
துணிவுடன் கூறும் அளவுக்கு நமது வாழ்வு நம்பிக்கை, அன்பு, நிறைந்த வாழ்வாக இருந்தால், அதுவே பொதுநிலையினராகிய நமது ஆன்மிகம் ஆகும்.
புனித
மாற்கு நற்செய்தியில் (16:17-18) இயேசு குறிப்பிடும் நம்பிக்கை கொண்டோராய் வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகத்தின் அளவுகோல். அதாவது, “நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும்அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்; கொல்லும் நஞ்சைக் குடித்தாலும், அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. அவர்கள் உடல்நலமற்றோர்மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்.” நாம் இத்தகைய இறைநம்பிக்கையுடன் வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.
புனித
மத்தேயு நற்செய்தியில் (25:35,40) நமது ஆண்டவர் இயேசு கூறுவதுபோல, “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமையோடு பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், தணித்தீர்கள்; அந்நியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையிலிருந்தேன், என்னைத் தேடிவந்தீர்கள்’ என்பார்.
‘மிகச் சிறியோராகிய என் சகோதர-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்” என்பார்.
தூய
ஆவியாரின் துணையுடன் ஊனியல்பின் செயல்களான பரத்தமை, கெட்டநடத்தை, காம வெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவற்றை விலக்கி (கலா 6:19-21), தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா 6:22) நிறைந்த தூய வாழ்வு வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகம்.
பொதுநிலையினரின்
புனிதர் தேவசகாயம் போல மறைச்சாட்சியாக வாழ்வதுதான் முழுமையான சாட்சிய வாழ்வு, நமது கிறித்தவ நம்பிக்கை, பிறரன்புடன் தூய வாழ்வு வாழ்வது; அதுவே பொதுநிலையினரின் ஆன்மிகம்.
1. இயேசுவின் பிறப்பானது தூய ஆவியானவர் மற்றும் கன்னித் தாயின் ஒத்துழைப்பால் நிகழ்ந்திருந்தாலும், இப்பிறப்பு நிகழ்வானது மற்ற மனிதர்களின் பிறப்பைப் போன்றே கருத்தரித்தல், கர்ப்பத்தில் தாங்குதல் மற்றும் மகப்பேறு போன்ற கட்டங்களைக் கடந்துதான் நிகழ்ந்தது. மேலும், மரியாவின் தாய்மை என்பது வெறும் குழந்தையைப் பெற்றெடுக்கும் மனித உடல் சார்ந்த செயல்முறையோடு மட்டும் நின்றுவிடவில்லை; மாறாக, மற்ற எல்லாத் தாய்மார்களுக்கும் நிகழ்வது போலவே, தன் மகனின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவரும் ஓர் இன்றியமையாத பங்களிப்பை வழங்கினார்.
ஒரு
தாய் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் மட்டுமல்ல; அக்குழந்தையை வளர்ப்பவள் மற்றும் கற்பிப்பவள். உண்மையில், இறைவனின் திட்டத்தின்படி குழந்தைக்குக் கல்வி புகட்டும் பணியானது, குழந்தையைப் பெற்றெடுக்கும் செயலின் இயல்பான தொடர்ச்சியே என்று நாம் உறுதியாகக் கூறலாம். மரியா இயேசுவைக் கருத்தரித்ததாலும், பெற்றெடுத்ததாலும் மட்டுமல்ல; மாறாக, அவரின் மனித வளர்ச்சியில் அவருக்குத் துணையாய் இருந்ததாலும் ‘இறைவனின் தாய்’
(Theotokos) என்று அழைக்கப்படுகின்றார்.
மரியா ஆசிரியையாக
இருப்பதற்கு
மிகவும்
பொருத்தமானவர்
2. தெய்வீகத்தின்
முழுமையை இயேசு தம்முள் கொண்டிருந்ததால், அவருக்கு ஆசிரியர்கள் தேவையில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், மனுவுருவாதலின் மறைபொருள், பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நம்மைப் போலவே மனித நிலையில் இறைமகன், இந்த உலகிற்கு வந்தார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. எபி 4:15). ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுவதைப் போலவே, இயேசுவின் வளர்ச்சிக்கும் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது வரை (ஒப்பிடுக. லூக் 2:40) அவருடைய பெற்றோரின் கல்விசார் உருவாக்கமும் தேவைப்பட்டது.
இயேசுவின்
குழந்தைப் பருவம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் விவரிக்கும் லூக்கா நற்செய்தியானது, நாசரேத்தில் இயேசு யோசேப்புவிற்கும் மரியாவிற்கும் கீழ்ப்படிந்திருந்தார் என்று கூறுகின்றது (ஒப்பிடுக. லூக் 2:51). இச்சார்பு நிலையானது, அவரின் தாய் மற்றும் கடவுளின் திட்டத்திற்குத் திறந்த மனதோடிருந்து தந்தை என்கின்ற முறையில், அவரின் கடமையைச் செய்த யோசேப்புவிற்கு இயேசு கீழ்ப்படிந்திருந்தார் என்பதைக் காட்டுகின்றது.
3. கடவுள்
மரியாவிற்குக் கொடுத்த சிறப்புக் கொடைகள், தாய் மற்றும் ஆசிரியராக இருந்து அவர் தனது பணியைச் செய்ய மிகவும் உதவியாக இருந்தன. அன்றாட வாழ்க்கையின் உறுதியான சூழ்நிலைகளில், இறைவனைப் பின்பற்றுவதற்கும் பின்தொடர்வதற்கும் இயேசுவுக்கு மரியா கற்றுக் கொடுத்திருக்கவேண்டும். மேலும், கடவுளுக்கும், தனது சகோதர-சகோதரிகளுக்குமான உண்மையான அன்பின் முன்மாதிரிக்கானதோர் எடுத்துக்காட்டான வாழ்வையும் மரியாவிடம் இயேசுவால்
காண முடிந்தது.
மரியாவின்
தாய்மைநிறை உடனிருப்புடன், கல்வி சார்ந்தவைகளில் தேவையான சமநிலையை வழங்கிய ஒரு நியாயமான மனிதரான (மத் 1:19) யோசேப்புவின் பங்களிப்பின்மீதும் இயேசு நம்பிக்கையோடிருக்கலாம். ஒரு தந்தையாகத் தனது பங்கைச் செய்த யோசேப்பு, நாசரேத்தில் உள்ள தனது வீட்டை, மனிதகுல மீட்பரின் வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முதிர்ச்சிக்கும் ஏற்றதொரு சூழல் உள்ளவாறு மாற்றுவதில் அவர் தனது மனைவியுடன் ஒத்துழைத்தார். பின்னர் தச்சுத் தொழிலை அவருக்குக் கற்றுக் கொடுத்ததன் வழியாக, யோசேப்பு இயேசுவை உழைப்பாளர் உலகிலும் சமூக வாழ்விலும் ஆர்வத்துடன் ஈடுபட உதவினார்.
4. நற்செய்தியில்
மரியாவைப் பற்றி ஒருசில கூறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளதால், மரியா தனது தெய்வீக மகனுக்குக் கற்பித்த வழிகளை நாம் நன்கு அறிந்து அவரை முழுமையாகப் பாராட்ட இயலவில்லை. உண்மையில், மரியா யோசேப்புவுடன் இணைந்து மோயிசனின் சடங்குகள் மற்றும் பரிந்துரைகளையும், சங்கீதங்களைப் பயன்படுத்தி உடன்படிக்கையின் கடவுளிடம் செபிக்கவும், எகிப்திலிருந்து வெளியேறியதை மையமாகக் கொண்ட இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றையும் இயேசுவிற்கு அறிமுகப்படுத்தினார். மரியாவிடமிருந்தும் யோசேப்புவிடமிருந்தும் தொழுகைக்கூட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும், பாஸ்கா விழாவிற்காக வருடாந்திரத் திருப்பயணம் செய்யவும் இயேசு கற்றுக்கொண்டார்.
இவ்வாறு,
இயேசுவின் செயல்பாடுகளை வைத்து, மரியாவின் போதனை ஆழமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்றும், இயேசுவின் மனித உளவியலில் நல்லதொரு வளர்ச்சியைக் கண்டது என்றும் உறுதியானதொரு முடிவுக்கு நம்மால் வரமுடியும்.
உண்மைப் பெற்றோரின்
முன்மாதிரிகள்
யோசேப்பு-மரியா
5. தனித்துவமிக்கவரான
இயேசுவைப் பொறுத்தவரை, மரியாவின் கல்விப்பணி மற்ற தாய்மார்களின் பங்களிப்போடு ஒப்பிடுகையில் பல சிறப்பு அம்சங்களை
நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. தனது மகனிடம் ஏற்கெனவே இயல்பாகவே அமைந்திருந்த வளர்ச்சிக்கு இன்றியமையாத மதிப்புகளும் ஆற்றல்களும் வளர்வதற்கான சாதகமான சூழலை மட்டுமே அவர் ஏற்படுத்தித் தந்தார். எடுத்துக்காட்டாக, இயேசுவிடம் எவ்வகையான பாவமும் இல்லாதிருந்ததால், மரியாவிடமிருந்து எப்போதும் நேர்மறையான ஒரு மனப்பாங்கை வேண்டி நின்றது. இது எவ்வகையான திருத்தத்திற்கோ மற்றும் தலையீட்டிற்கோ இடமில்லாமல் செய்தது.
மேலும்,
இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரம்-மரபுகளை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது அவருடைய தாய் என்றாலும்கூட, உலகில் உண்மையைப் பரப்பவும், தந்தையின் விருப்பத்தை முற்றிலும் பின்பற்றவும் எருசலேம் ஆலயத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இறைமகன் பற்றிய முழு விழிப்புணர்வைப் பெற்றிருந்ததையும் அவரே வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு தன் மகனின் ஆசிரியையாக இருந்து, மரியா அவர் பெற்றெடுத்த இறைமகனின் தாழ்ச்சிமிகு சீடராகின்றார்.
கன்னித்தாயினுடைய
பணியின் முக்கியத்துவம் என்னவென்றால், இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து வளர் பருவத்தை அடையும் வரை தனது மகன் இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளரவும் (லூக் 2:52) மற்றும் அவரின் பணி வாழ்வுக்குத் தயாராகவும் அவர் உதவினார்.
எனவே,
மரியா மற்றும் யோசேப்பு இவர்கள் இருவரையும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் முன்மாதிரியாகக் காணலாம். இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பெரும் சிரமங்களில் யோசேப்புவும் மரியாவும் பெற்றோருக்குத் துணைநின்று, குழந்தை வளர்ப்பில் சரியான மற்றும் பயனுள்ள உருவாக்கத்திற்கான வழியை அவர்களுக்குக் காட்டுகின்றார்கள். அவர்களின் கல்வி அனுபவமானது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் தங்கள் குழந்தைகளின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் தங்களை அர்ப்பணிப்பதற்காக அழைக்கப்படும் கிறித்தவப் பெற்றோருக்கு ஒரு திடமான முன்னுதாரணமாகும். இதனால் கிறித்தவப் பெற்றோர் மனிதனுக்குத் தகுதியான மற்றும் கடவுளின் திட்டத்திற்கேற்ற வாழ்க்கையை
வாழ்வார்கள்.
மூலம்:
John Paul II, Blessed Virging Is Model of Perfect Love, in «L’Osservatore
Romano», Weekly Edition in English, 11 December 1996, p. 11.
“அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்” (1யோவா1:7).
ஒளி
உள்ள இடத்தில் உண்மை நிலைக்கும். இறைவார்த்தையே உண்மை. இயேசுவே இதனைத் தம்
செபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்
(யோவா 17:17).
“நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் ஒளியாக இறைவார்த்தை காட்டும் வழியில் மட்டுமே நடப்பர்”
(திபா 119:105).
இதனைத்
தெளிவாக வெளிப்படுத்துகின்றது “என் காலடிக்கு உன் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே” என்ற இறைவார்த்தை.
நம்
தலைவரும் மீட்பருமாகிய இயேசு ஆண்டவர் கூறுகிறார்: “நானே உலகில் ஒளி; என்னைப் பின்செல்பவர் இருளில் நடவார்; உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார்.”
பின்வரும்
வார்த்தைகளில் இயேசு நம்முடைய
கடமையையும் உரிமையையும் உறுதிப்படுத்துகிறார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்....” “உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க”(மத் 5:14, 16).
இறைவனை
முற்றிலும் சார்ந்து, உண்மையாம் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே ஒளியாகச் சுடர்விட முடியும். திருமுழுக்கின் கடமையை நிறைவேற்ற முடியும். இறைத்தந்தை கொடையாக வழங்கும் உரிமையை அனுபவிக்க முடியும்.
திருமுழுக்கின்
கடமை என்ன? உரிமை என்ன? என்பதைத் தெளிவாக நாம் உணர்ந்து அறிந்திருந்தோம் என்றால், நம்பிக்கை நிறைந்த இறைத்தந்தையின் மக்கள் என்பதில் மகிழ்ந்து பெருமை கொள்வோம்.
எதிர்நோக்குடன்
உடன் பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் அனைவருமே உடன்பிறப்புகள் என்ற உண்மையைக் கண்டுகொண்டு, அன்புறவில் வாழ்வோம், வளர்வோம்.
திருமுழுக்கின்
முதல் கடமை, அனைத்திற்கும் மேலாக இறைவனின் பேரன்பை அனுபவித்து, அவர் விருப்பத்தை நிறைவேற்றும் அன்பு மக்களாக வாழ்ந்து நன்மை மட்டுமே செய்வது. இயேசுவின் சீடராக அவரைச் சார்ந்து வாழும் ஏழையர் உள்ளத்தினராக எளிய வாழ்க்கை வாழ்வேன் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வது. கத்தோலிக்கத்
திரு அவையின் உண்மையான உறுப்பினர் எனத் தன் செயல்களின் மூலம் அனைத்து நம்பிக்கையாளர்களுடன் அன்புறவில் வாழ்வது. புனித பவுலடியார் கூறுவதுபோல் நம்மேல் சுமத்தப்பட்ட கடமை. இறைச்சமூகத்திலும் இயேசு
கிறிஸ்துவை அறியாதவர்களிடமும் நற்செய்தி அறிவிக்கும் பணியைச் சொல்லிலும் செயலிலும் முழுமையாக, பொறுப்பு நிறைந்த அர்ப்பண உணர்வுடன் செய்தல்.
மறைத்தூதுப்பணி
ஞாயிறு அன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மறைத்தூதுப் பணிக்காகவும், மறைத்தூதுப் பணியாளர்களுக்காகவும் செபிப்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமை என்பதைப் பொறுப்புடன் உணர்வோம்.
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்”
(மாற்16:15). “உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்” (மத்
28:20) என்ற இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துச் செயல்படுவோம். தந்தையாம் இறைவனை மாட்சிப்படுத்துவோம். தலைவராம் இயேசுவின்
சீடராவோம். தூய ஆவியாரால் இயக்கப்படுவோம்; இறையாட்சி மலர நம்மை அர்ப்பணிப்போம்.
நமது நலனுக்காக மனிதராகப் பிறந்த மூவொரு இறைவனின் இரண்டாவது நபராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்ததால், கன்னி மரியா உண்மையிலேயே ‘இறைவனின் தாய்’ என்று எபேசு திருச்சங்கமானது கற்பிக்கின்றது.
1. மீட்பரது
பிறப்பின் மறைபொருளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தோமானால், அது கிறித்தவர்கள் கன்னி மரியாவை இயேசுவின் தாயாக அழைப்பதோடு மட்டுமல்லாமல், அவரை ‘இறைவனின் தாய்’ என்று அங்கீகரிக்கவும் வழிவகுத்திருக்கிறது. கி.பி. 431-இல்
எபேசு திருச்சங்கத்தால் ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ என்று ஆர்ப்பரிப்போடு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கிறித்தவத்தின் தொடக்க கால நூற்றாண்டுகளிலிருந்தே இந்த மறையுண்மையானது கிறித்தவ நம்பிக்கையின் பாரம்பரியத்தைச் சார்ந்தது எனக் கருதப்பட்டது.
முதல்
கிறித்தவக் குழுமத்தில், இயேசு தந்தையாம் கடவுளின் மகன் என்பதைச் சீடர்கள் அதிகம் அறிந்ததால், கன்னி மரியா இறைவனின் தாய் அதாவது ‘Theotókos’ என்பது அவர்களுக்கு
மிகவும் தெளிவானது. இப்பெயரானது நற்செய்திகளில் வெளிப்படையாகத் தெரியவில்லையென்றாலும், அவற்றில் ‘இயேசுவின் தாய்’ என்பது குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இயேசுவே கடவுள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
(யோவா 20:28; ஒப்பிடுக 5:18; 10:30-33). எப்படியாயினும் கன்னி மரியா ‘கடவுள் நம்மோடு’
(மத் 1:22-23) என்ற பொருளில் ‘இம்மானுவேலின் தாய்’ என்றும் வழங்கப்படுகின்றார். ஏற்கெனவே மூன்றாம் நூற்றாண்டில், பழங்காலத்தில் எழுதப்பட்டதோர் ஏட்டிலிருந்து, பின்வரும் செபத்தை எகிப்திலிருந்த கிறித்தவர்கள் அன்னை மரியாவை நோக்கிச் செபித்ததாக அறியலாம்.
Theotókos என்ற சொல்லானது இந்தப் பழமையான ஆவணத்தில் முதல்முறையாக வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சமயங்களின் புராண இலக்கியங்களில், ஒரு குறிப்பிட்ட பெண் தெய்வமானது ஏதாவதொரு தெய்வத்தின் தாயாகக் காண்பிக்கப்படுவது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, சேயுஸ் (Zeus) எனப்படும்
தெய்வமானது ‘ரேயா’
(Rhea) என்னும்
பெண் தெய்வத்தை அதன் தாயாகக் கொண்டிருந்தது. இந்த வழக்கமானது, இயேசுவின் தாயான கன்னி மரியாவுக்கு Theotókos அதாவது
‘இறைவனின் தாய்’ என்கிற பெயரைக் கொடுக்கப் பெரிதும் உதவியது. எனினும், ‘இறைவனின் தாய்’ என்னும் பெயரானது அதற்குமுன் யாருக்கும் கொடுக்கப்பட்டதில்லை.
எபேசு திருச்சங்கமானது
மரியாவை
இறைவனின்
தாயாக
அறிவித்தது
2. நான்காவது
நூற்றாண்டில் Theotókos அதாவது
‘இறைவனின் தாய்’ என்ற சொல்லானது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெகு மக்கள் பக்தியிலும் இறையியலிலும் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல்லாடலானது இன்று திரு அவையினுடைய நம்பிக்கையின் மிகப்பெரிய சொத்தாகிவிட்டது. ஆகவே,
கி.பி. 5-வது நூற்றாண்டில் ‘இறைவனின் தாய்’ என்ற தலைப்பின் சரியான தன்மை குறித்து நெஸ்டோரியுஸ் சந்தேகம் எழுப்பியபோது எழுந்த பெரும் எதிர்ப்பு இயக்கத்தை (protest movement) ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், மரியா மனிதராகிய இயேசுவின் தாய் மட்டுமே என்ற நிலைப்பாட்டின் பக்கமாக, மரியா ‘கிறிஸ்துவின் தாய்’ என்பது மட்டுமே கோட்பாட்டு முறையில் சரியானதொரு பொருளாக இருக்க முடியும் என்பதில் நெஸ்டோரியுஸ் உறுதியாய் இருந்தார். கிறிஸ்துவின் ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அவருக்கிருந்த சந்தேகமும், தெய்வீக மற்றும் மனித இயல்புகளுக்கிடையேயான வேறுபாட்டைப் பற்றிய அவரின் தவறான விளக்கமும் நெஸ்டோரியுஸ் இப்பிழையைச் செய்ய வழிவகுத்தது. கி.பி. 431-இல்
கூடிய எபேசு திருச்சங்கமானது அவரது ஆய்வறிக்கையைக் கண்டித்ததுடன், இயேசு கிறிஸ்துவில் உள்ள தெய்வீக மற்றும் மனித இயல்புகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி மரியாவை, ‘இறைவனின் தாய்’ என்று அறிவித்தது.
3. Theotókos என்ற சொல்லாடலானது ‘இறைவனைப் பெற்றெடுத்தவர்’ என்று
பொருள்படும். முதல் பார்வையில், இது நமக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ‘உண்மையில் ஒரு மனித உயிரினம் எவ்வாறு இறைவனைப் பெற்றெடுக்க முடியும்?’ என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றது. இக்கேள்விக்கான திரு அவையின் நம்பிக்கை சார்ந்த பதில் தெளிவாக உள்ளது. அதாவது, மரியாவின் தெய்வீகத் தன்மை என்பது இறைமகனைப் பெற்ற பெண்ணை மட்டுமே குறிக்கின்றதேயொழிய, அவரது தெய்வீகப் பிறப்பைக் குறிக்கவில்லை.
இறைமகன்
தந்தையாம் கடவுளால் அற்புதமான விதத்தில் படைக்கப்பட்டார் மற்றும் எல்லா விதத்திலும் அவருடன் ஒத்திருக்கிறார். இந்த உண்மையில், இயேசுவின் இந்த அற்புதமான பிறப்பில் மரியாவுக்கு எந்தவிதமான பங்குமில்லை. இருப்பினும், 2000 வருடங்களுக்கு முன்பாக இறைமகன் நமது மனித இயல்பை ஏற்று மரியாவின் கருவில் உருவாகிப் பிறந்தார் என்பது முக்கியக் கருத்தாகும். இவ்வாறாக, ‘இறைவனின் தாய்’ என்று மரியாவை அறிவிப்பதில் திரு அவையானது ‘கடவுளாம், வார்த்தை மனுவுருவானவரின் தாய் அவர்’
(Mother of the Incarnate Word, who is God) என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. எனவே, அவரது தாய்மையானது மூவோர் இறைவனுக்கும் விரிவுபடுத்தப்படவில்லை. மாறாக, இரண்டாவது ஆளாகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியது. மனித அவதாரம் எடுப்பதில், அம்மனித இயல்பை அவர், அவரிடமிருந்தே (மரியாவிடமிருந்தே) எடுத்தார்.
தாய்மை
என்பது இரு நபர்களுக்கிடையே உள்ள உறவாகும். ஒரு தாய் என்பவள் ஒரு நபருக்கு அவரது உடலைக் கொடுத்த தாய் மட்டுமல்ல; மாறாக, அவரைத் தோற்றுவித்தவர் (அதாவது, அவரைப் பெற்றெடுத்தவர்). இவ்வாறாக, இயேசுவுக்கு அவரது மனித இயல்புக்கேற்ப அவரைப் பெற்றெடுத்ததனால் மரியா இறைவனின் தாயாவார்.
ஆசிர்வதிக்கப்பட்ட
கன்னி
மரியாவின்
ஒப்புதலானது
இயேசுவின்
மனுவுருவாதலுக்கு
முந்தியுள்ளது!
4. மரியாவை
‘இறைவனின் தாய்’ என்று அறிவிக்கும் இந்த ஒரே சொல்லாடலில் மகனையும் தாயையும் பற்றிய தமது நம்பிக்கையைத் திரு அவை வெளிப்படுத்துகிறது. இந்த ஒற்றுமையை மரியாவின் தெய்வீகத் தாய்மையை அறிவிப்பதில், ஏற்கெனவே எபேசு திருச்சங்கத்தில் பங்கெடுத்த திருச்சங்கத் தந்தையர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையின் மீதான தங்களது நம்பிக்கையை வலியுறுத்த விரும்பியதில் காணலாம்.
இந்தச்
சொல்லாடலால் மரியாவை அங்கீகரிப்பதற்கான தகுதியைப் பற்றிய பண்டைய மற்றும் அண்மையில் மறுப்புகள் இருந்தபோதிலும், எல்லாக் காலத்திலும் உள்ள கிறித்தவர்களுக்கும் இந்தத் தாய்மையின் அர்த்தத்தைச் சரியாக விளக்கியதன் வழியாக, கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா மீதான அவர்களது நம்பிக்கையின் சிறப்புமிக்கதொரு வெளிப்பாடாக இச்சொல்லாடலை உருவாக்கினர்.
ஒருபுறம்,
திரு அவையானது Theotókos-ஐ
மனுவுருவாதலின் உண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அங்கீகரிக்கின்றது. ஏனெனில், புனித அகுஸ்தினார் கூறுவதைப்போல, “தாய் கற்பனையாக இருந்தால், கிறிஸ்துவின் சதையும் உயிர்த்தெழுதலின் வடுக்களும் கற்பனையானதாகவே இருந்திருக்கும்” (Tract. in Ev. Ioannis, 8, 6-7); மறுபுறம், திரு அவையும் அவரது மகனாக இருக்க விரும்பியவரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட மகத்துவமிக்க மாண்பை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் கொண்டாடவும் செய்கின்றது.
‘இறைவனின் தாய்’ என்ற சொல்லாடலானது மனுவுருவாதல் வழியாகத் தாழ்நிலையில் இருந்த மனிதனை, இறைமகன் என்னும் தெய்வீக நிலைக்கு உயர்த்திய கடவுளின் இறைவார்த்தையைக் குறிக்கின்றது. நாசரேத்து மரியாவுக்கு வழங்கப்பட்ட உயர் மதிப்பின் வெளிச்சத்தில் இந்தச் சொல்லாடலானது பெண்ணின் பெருமையையும், அவர் பெற்ற உயர்ந்ததோர் அழைத்தலையும் பறைசாற்றுகின்றது. இறைவன் உண்மையில் மரியாவை ஒரு
சுதந்திரமுள்ள மற்றும் பொறுப்பானதொரு நபராகக் கருதுகிறார்; மேலும், அவர் அவரது சம்மதத்தைப்
பெறுகின்றவரை அவரது மகனின் மனுவுருவாதலை நிறைவேற்றவில்லை. எகிப்தில் வாழ்ந்த பண்டைய கிறித்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைமக்கள் தங்களை அவரிடம் ஒப்படைப்பார்களாக; ஏனெனில், இறைவனின் அன்னையாகத் திகழும் அவர், தமது இறைமகனிடமிருந்து தீமையிலிருந்து விடுதலை பெறும் அருளையும், முடிவில்லா மீட்பையும் பெற்றுத் தர வல்லவர் ஆவார்.
மூலம்:
John Paul II, Church proclaims Mary Mother of God, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 4 December
1996, p. 11.
உறவுக்குக் கைகொடுத்தார்; மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார்; அன்புக்கு ஒளி கொடுத்தார்; உலக அமைதிக்கு வழிவகுத்தார்; மீட்புக்கு உயிர் கொடுத்தார்; இறையாட்சிக்கு விதை விதைத்தார்.
“உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல; தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” என்கிறது யோவான் நற்செய்தி. மீட்பு என்பதற்கு உண்மையான பொருளே முழுமையான விடுதலை என்பதுதானே! கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மரித்தது எல்லாமே மானுட மீட்புக்காகத்தான்.
இறைத்தூதராக
மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரசக் குலத்திலேயே அவதரித்திருக்கக் முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையிலிருந்து மக்களை மீட்பதற்காகத்தான் ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.
அறியாமை
இருளிலிருந்து மீண்டு, மனிதர் ஞானஒளி பெற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயருக்கும் பரிசேயருக்கும் தமது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்துப் பதிலடி கொடுத்தார். பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஒரு விபச்சாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயருக்கு, “உங்களில் பாவம் செய்யாதவன், முதலில் இவர்மீது கல் எறியட்டும்” என்று
கண்டனம் தெரிவித்தார்.
யூதக்குலம்
என்ற உயர் குடியில் பிறந்தாலும் அடிமைத்தளையிலிருந்து மனிதரை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட பிற இனத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளியரோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார். இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரியிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய
அந்தக் கொள்ளையருக்குச் சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார்.
பகைமை,
வெறுப்பு வேற்றுமைகளிலிருந்தெல்லாம் மனிதகுலத்தை மீட்டு, அவர்களிடையே
அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளைத் தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்! மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடைமைச் சிந்தாத்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்துதாம் என்பதை யாரும் மறுக்க முடியுமா? பசியிலிருந்தும் பட்டினியிலிருந்தும் மனிதரை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும் மீனையும் ஆசிர்வதித்து, அதை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கக் கூறினார். இவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில்; இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில்; திருமுழுக்கு யோர்தான் நதியில்; தமது சீடரைத் தேர்ந்தெடுத்தது கடற்கரையில்; கெத்சமெனித் தோட்டத்தில்தான் செபித்தார்; கெடுதலான அலகையை மலையில்தான் சபித்தார்; வானத்துப் பறவைகளைப் பார்க்கக் கூறினார்; வளர்ந்து நிற்கும் நெற்கதிரை
நோக்கக் கூறினார்; இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை
நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.
அநீதிகள்,
அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும் நேர்மையையும் நியாயத்தையும் மீட்கத்தானே அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, ‘நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய்?’ என்று போர்க்குரல் எழுப்பினார்.
கயவரின்
நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே
கொடூரமான முள்முடியையும், அவமானகரமான சிலுவைச் சாவையும் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க ஏற்றுக்கொண்டார். இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில்,
“அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என்று கூறப்பட்டிருக்கிறது.
குறைந்த
வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும்,
உயர்ந்த சமூகப் போராளியாகவும், குவலயத்தில் வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. எனவே, அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும்
பெறுவோம்.
1. இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியில் லூக்கா நற்செய்தியாளர் அந்நிகழ்வின் மறைபொருளை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நமக்கு எடுத்துக் கூறுகிறார்.
முதலில்,
நற்செய்தியாளர் தாவீதின் வழிமரபினரான யோசேப்புவையும், அவரின் மனைவி மரியாவையும் “கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு...” (லூக் 2:5) செல்லப் பணித்த அகுஸ்துஸ் சீசரால் ஆணையிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அந்தப்
பயணமும் இயேசுவின் பிறப்பும் எத்தகைய சூழலில் நிகழ்ந்தவை என்பதைப் பற்றி நமக்குக் கூறுகையில், நற்செய்தியாளர் லூக்கா மெசியாவின் அரசைப் பற்றிய சில அடிப்படைப் பண்புகளாகிய துன்பம் மற்றும் ஏழ்மை போன்ற சூழ்நிலையோடு நமக்குக் கூறுகின்றார். அதாவது, அவரின் அரசு பற்றி அவரே அவரது பொதுவாழ்வில் கூறுகின்றவாறு, எந்தவிதமான உலகுசார்ந்த மரியாதையோ அல்லது அதிகாரமோ இல்லாததோர் அரசாகும்: “மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை”
(லூக் 9:58).
2. இயேசுவின்
பிறப்பு பற்றிய நற்செய்தியாளர் லூக்காவின் விவரிப்பானது ஒருசில முக்கியமில்லாத குறிப்புகளைக் கொண்டிருக்கின்றது. அவை
இயேசுவினுடைய பிறப்பின் மறையுண்மைகளையும் மற்றும் இறைமகனைப் பெற்றெடுத்தவரின் உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும், வாசிப்பவர் களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும் எழுதப்பட்டிருக்கலாம்.
பிறப்பு
பற்றிய விவரிப்பானது சாதாரண முறையில் கூறப்பட்டிருந்தாலும், மரியாவை அவர் மனத்தில் இருத்தித் தியானிப்பவராக மற்றும் கிறிஸ்துவின் மறையுண்மைகளில் மிக நெருக்கமாகப் பங்கெடுப்பவராகப் பதிவுசெய்கின்றது. “அவர்தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்...” (லூக் 2:7). மரியாவின் இச்செயலானது
ஏற்கெனவே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது வெளிப்படுத்தப்பட்ட “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்ற வார்த்தைபடி கடவுளின் திட்டத்தில் துணை நிற்பதற்கான அவரின் தீர்க்கமான மனநிலையைக் குறிக்கின்றதொன்றாகவே இருக்கின்றது.
மரியா தனது
மகனின்
மீட்புப்
பணியைப்
பகிர்ந்து
கொள்கின்றார்
மரியா
மகப்பேற்றை ஒரு முழுமையான ஏழ்மை கோலத்தில் அனுபவிக்கின்றார். புதிதாகப் பிறக்கின்ற ஒரு குழந்தைக்குத் தாய்மார்கள் வழக்கமாகக் கொடுக்கின்ற ஒன்றைக்கூட அவரால் இறைமகனுக்குக் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக ‘மிக மிக உயர்ந்தவரின் மகன்’ என்ற கௌரவத்திற்கு மாறான புதுமையானதொரு தொட்டிலாகிய ‘ஒரு தீவனத் தொட்டியில்’ மரியா
அவரைக் கிடத்த வேண்டியதாயிற்று.
3. “விடுதியில் அவர்களுக்கு
இடமில்லை” (லூக்
2:7) என்று லூக்கா நற்செய்தி கூறுகின்றது. இந்த வார்த்தையானது, யோவான் நற்செய்தியின் முகவுரையை நமக்கு நினைவுபடுத்துகின்றது: “அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவா
1:11). மேலும் இது அவர் தமது பூவுலக வாழ்வின் பொழுது எதிர்கொள்ளப் போகின்ற அநேகப் புறக்கணிப்புகளை முன்னறிவிக்கின்றதொன்றாகவே அமைகின்றது. “விடுதியில்
அவர்களுக்கு இடமில்லை”
(லூக் 2:7). இங்கு ‘அவர்களுக்கு’ என்ற
சொல் மகன் மற்றும் தாயை இந்தப் புறக்கணிப்பில் இணைக்கின்றது. மேலும், மரியா எவ்வாறு ஏற்கெனவே அவரது மகனின் பாடுகளோடு இணைக்கப்படுகின்றார் மற்றும் மீட்புப் பணியைப் பகிர்கின்றார் என்பதையும் காட்டுகின்றது.
‘தமக்குரியவர்களாலேயே’ புறக்கணிக்கப்பட்டு
ஒன்றும் அறியாதவர்கள், காட்டுமிராண்டிகள் மற்றும் கரடுமுரடானவர்கள் என்று கூறப்பட்ட ஆனால், மெசியாவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை முதலில் பெற கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஆடு மேய்ப்பவர்களால் வரவேற்கப்படுகின்றார். வானதூதர் அவர்களுக்குக் கொடுக்கின்ற செய்தியானது மகிழ்ந்து களிகூர்வதற்கானதோர் அழைப்பாகும். ‘அஞ்சாதீர்கள்’ என்று
சொல்லி அனைத்து பயங்களையும் வெற்றிகொள்ளுங்கள் என்ற அழைப்போடு, “இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்
2:10) என்றும் கூறுகின்றார்.
உண்மையில்,
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியாவுக்கு இருந்ததைப்போலவே மனிதர்களுக்கான கடவுளது நல்லெண்ணத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாகவே இயேசுவின் பிறப்பு, ஆடு மேய்ப்பவர்களுக்கு (இடையர்களுக்கு) அமைகின்றது. பெத்லகேம் குகையின் ஏழ்மையில் தியானிக்கப்படும் தெய்வீக மீட்பரில், மனுக்குலத்தின் நம்பிக்கையாக இருக்கின்ற ஒருவரை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான ஓர் அழைப்பாக இதை நாம் காணமுடியும்.
வானதூதரின் பாடல்:
“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கூறுகின்றது. இது “நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள்”
(லூக் 2:14) என்றும் மொழிபெயர்க்கப்படலாம். இப்பாடல் மரியா அவரது பாடலில் (Magnificat) கூறியதை
இடையர்களுக்கு வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பிறப்பு கடவுளின் இரக்கம் நிறைந்த அன்பின் அடையாளமாக இருக்கிறது. அதுவே தாழ்நிலையில் இருந்தோருக்கும் ஏழைகளுக்கும் சிறப்பான விதத்தில் காட்டப்படுகின்றது.
4. இடையர்கள்
வானதூதரின் அழைத்தலுக்கு ஆர்வத்தோடும் உடனடியாகவும் பதிலளிக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” (லூக்
2:15).
அவர்கள் வீணாகத்
தேடவில்லை:
“மேலும் அவர்கள்.... மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்” (லூக்
2:16). அவர்களுக்குத்
திருச்சங்கம் நினைவுகூர்வதைப் போன்று, “இறைவனின் தாய் அவரின் தலைச்சன் மகனை மகிழ்ச்சியோடு காண்பித்தாள்” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 57). இதுதான் அவர்களது வாழ்வின் முக்கியமானதொரு தருணமாக இருந்தது.
மரியா இந்த
நிகழ்வுகளை
அவரது
மனத்தில்
தியானித்தார்
“பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை...” (லூக் 2:17) தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இடையர்களுக்கு இயல்பாகவே இருந்தது. தாயை அவரது மகனோடு சந்தித்த அந்த அற்புதமான அனுபவத்திற்குப் பிறகு, அந்த இடையர்கள் எல்லாக் காலத்தையும் சார்ந்த நற்செய்தி அறிவிப்பாளர்கள் இயேசுவை நன்கு தெரிந்துகொள்வதற்கும் மற்றும் அவரது மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்ற மகிழ்ச்சியான அறிவிப்பாளர்களாக மாறுவதற்கும் உரிய வழிமுறைகளையும், அவர்கள் மரியாவோடு ஆழமான ஆன்மிக உறவு கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய
வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளோடு, நற்செய்தியாளர் லூக்கா “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக்
2:19) என்று கூறுகின்றார்.
இடையர்கள்
பயத்திலிருந்து வியப்பிற்குக் கடந்து சென்றபொழுது, நம்பிக்கையின் காரணமாக மரியா அவரது மகனோடு தொடர்புடைய நிகழ்வுகளின் பதிவுகளை மனத்தில் வைத்திருந்தார். மேலும், அவைகளைப் பற்றி இதயத்தில் அதாவது, அவரது இதயத்தின் ஆழத்தில் தியானித்ததனால் அவைகளைப் பற்றிய அவரின் புரிதலை ஆழப்படுத்தினார்.
இவ்வகையில்,
மீட்பின் மறைபொருளைச் சிறப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அதனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைத்துக் காலங்களைச் சார்ந்த மக்களிடமும் புதுப்பிக்கப்பட்ட முயற்சியுடன் அதனைப் பறைசாற்றுவதற்கும் ஏதுவாக மற்றொரு தாயான திரு அவையானது தியானம் மற்றும் இறையியல் சிந்தனை ஆகிய கொடையையும் பணியையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
மூலம்:
Pope John Paul II, Nativity shows Mary’s closeness to Jesus, in
«L’Osservatore Romano», 27 Novembre 1996, p.11.