news
ஆன்மிகம்
கிறிஸ்து என்னும் ஆற்றல் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 7)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்:தந்தையே, சென்ற வாரம் நீங்கள் ஆன்மிகம் தொடர்பான காரியங்களை அறிவின் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சிப்பது சரி என்று சொன்ன அதேவேளையில், அறிவை அதீதமாகத் தூக்கிப்பிடிப்பது எவ்வளவு தவறானது என்பதையும் சிறப்பாக விளக்கினீர்கள். எனினும், இன்றைக்கு இருக்கின்ற பல இளைஞர்களின் பிரச்சினை என்னவென்றால், தங்களின் அறிவுக்கு ஒன்று எட்டவில்லை என்றால், அத்தகைய காரியம் ஒன்றே இல்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். எனக்கு ஓர் உதாரணம் நினைவிற்கு வருகிறது. ஒரு நபர் கண்தெரியாத மனிதர் ஒருவரிடம், ‘அதோ! தூரத்தில் உள்ள மலை எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்றாராம். அதற்கு அந்தக் கண் தெரியாதவர், ‘மலையா? அத்தகைய ஒன்றை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் என்னிடம் பொய் சொல்கிறீர்கள்என்றாராம்.”

அருள்பணி:மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தனக்குத் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால், அத்தகைய ஒன்றே இல்லை என்று சொல்வது அபத்தமானது.”

அகஸ்டின்: அப்படியென்றால், ஆன்மிக வாழ்வைப் பொறுத்தமட்டில் எங்களுக்குச் சொல்லப்படுகின்றவற்றை நாங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டுமா?”

அருள்பணி:அப்படிச் சொல்லவில்லை. நம் ஆன்மிக வாழ்வின் அங்கங்களைப் புரிந்துகொள்ள அறிவைப் பயன்படுத்துவது தவறில்லை என்றாலும், அறிவின் எல்லைக்குள்ளேயே நாம் சிறைப்பட்டுவிடக்கூடாது என்றுதான் சொல்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் இன்றைய சூழ்நிலையில் ஆன்மிகத்தைப் பற்றிய ஏராளமான ஆய்வுகளை உளவியலும் அறிவியலும் மேற்கொள்கின்றன. இவை அனைத்துமே  ஆன்மிகத்தை அறிவின் கண்கொண்டு அணுகுவதற்கான முயற்சியே! அறிவின் கண்கொண்டு ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது என்றாலும், அது போதுமானது அல்ல; அது நம் வாழ்வை உயர்த்தப்போவதில்லை. ஆன்மிகத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, கொஞ்ச நேரமாவது அமைதியாக இருந்து நம் அறிவையும் தாண்டிச் செல்ல முனைவது மிகவும் அவசியமானது. அத்தகைய முயற்சியே ஆன்மிகம் சுட்டிக்காட்டும் அனுபவத்தை நாம் நமதாக்குவதற்கு உதவியாயிருக்கும். இத்தகைய ஆன்மிக அனுபவமே நம் வாழ்வின் ஆழத்தையும் மகிழ்வையும் கூட்டும்.”

மார்த்தா:பாதர், நான் ஓர் உதாரணம் சொல்லலாமா? பிரியாணி பற்றிய எல்லாச் செய்திகளையும் பிறரிடமிருந்தும் இணையத்திலிருந்தும் சேகரிப்பதால் நம் வயிறு நிரம்பிவிடாது. பிரியாணி பற்றிய தகவல்கள் நமக்குத் தேவை என்றாலும், அதைத் தயாரித்து உண்பதே சிறந்ததாகவும் பயன்தருவதாகவும் இருக்கும்.”

கிறிஸ்டினா: தந்தையே, ஆன்மிகத்தைப் பற்றி இன்று உளவியலும் அறிவியலும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்வதாகச் சொன்னீர்கள். நாங்கள் சென்ற வாரம் கேட்ட கேள்வியைக் குறித்து, அதாவது 2000  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிறிஸ்து எவ்வாறு இப்பொழுது ஆலயத்தில் பிரசன்னமாயிருக்கிறார் என்பது குறித்து இன்றைய அறிவியல் பின்னணியில் நாம் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு உண்டா தந்தையே?”

அருள்பணி: நம் ஆலயங்களில் கிறிஸ்துவின் பிரசன்னம் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வை நாம் நம் கண்முன் கொண்டு வரலாம். ஆய்விற்குச் செல்வதற்கு முன்பாக ஓர் உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களாகிய நமக்கு இருவகையான உடல்கள் உள்ளன. ஒன்று சதை உடல் (gross body); மற்றொன்று ஆற்றல் உடல் (enegry body). சதை உடலை உயிரோடும் உயிர்ப்போடும் வைத்திருப்பது ஆற்றல் உடலே! ஆற்றலை உடலில் அதிகமாக ஆக்குகின்றபோது, வெறுமனே உயிரோடு இருக்கிற உடல், உயிரோட்டமானதாக மாறிவிடுகிறது. குழந்தைகள் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான காரணம் அவர்களது உடலில் ஆற்றலின் அளவு அதிகமாக இருப்பதே!”

கிறிஸ்டினா:இதற்கும் இயேசுவின் பிரசன்னத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”

அருள்பணி:இராபர்ட் தே கிராண்டிஸ் என்கின்ற அமெரிக்காவைச் சேர்ந்த அருள்பணியாளர் தனதுHealing Through the Eucharistஎன்ற புத்தகத்தில் குறிப்பிடும் நிகழ்வு இது. அமெரிக்காவின் விண் வெளித்துறை நாசா! (NASA - The National Aeronautics and Space Administration). அங்கு ஆராய்ச்சி அறிவியலாளராக (research scientist) ஒரு நபர் பணி செய்து வந்தார். அவரது ஆராய்ச்சியின் ஒரு முக்கியப் பகுதி, விண்வெளிக் கலன்களில் பயணம் செய்யும் மனிதர்களின் ஆற்றல் உடலைப் பூமியிலிருந்தபடியே ஆய்வு செய்வது. அதன் மூலம் அவர்கள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது. தன் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளின் ஆற்றல் உடல் சார்ந்த பரிமாணங்களை ஆய்வு செய்து வந்தார். இந்த ஆற்றல் உடலை Kirlian கேமரா வழியாகப் புகைப்படம் எடுக்க முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தனது ஆராய்ச்சியில்   மனிதர்களது சதை உடல் இறப்பதற்குச் சில மணித்துளிகள் முன்பாக ஆற்றல் உடல் முழுவதுமாக மறைவதைக் கண்டுபிடித்தார். அதாவது, ஆற்றல் உடல் மறைந்த சில நிமிடங்களில், ஒரு மனிதர் முழுவதுமாக இறக்கிறார் என்பதே அவரது கண்டுபிடிப்பு. இதைப் பல்வேறு ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினார். ஒருமுறை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் தன் உதவியாளரோடு, மரணப்படுக்கையில் இருந்த நோயாளி ஒருவர்மீது தன் பரிசோதனையை மேற்கொண்டிருந்தார். நோயாளி இருந்த அறைக்கும், தான் இருந்த அறைக்கும் இடையே கண்ணாடி தடுப்பு வைத்துக்கொண்டு அந்நோயாளியின் ஆற்றல் உடல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அந்நோயாளியின் ஆற்றல் உடல் முழுவதுமாக மறைவதைக் கண்டார். இன்னும் ஒருசில நிமிடங்களில் அந்த நோயாளி இறந்து விடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த இடைவெளியில் அந்நோயாளியின் அறைக்கு ஒருவர் வருவதைப் பார்த்தார். அவரது சட்டைப் பையிலிருந்து அதீதமான ஒளி வருவதை அவரது கேமரா பதிவு செய்தது. அந்நபர் தன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தபோது, வேறொன்றும் தெரியாத அளவிற்கு ஒட்டுமொத்த அறையே மிகப் பிரகாசமான ஒளியினால் நிரம்புவதை அவரது கிர்லியன் கேமரா பதிவு செய்தது. மேலும், நோயாளியின் மறைந்த ஆற்றல் உடல் மீண்டும் வளர ஆரம்பிப்பதையும் பார்த்தார்.”

மார்த்தா: என்ன ஆச்சரியம்! அங்கு என்ன நடந்தது பாதர்?”

அருள்பணி:அந்த அறிவியலாளர் நோயாளியின் அறைக்குச் சென்றபோது, ஒரு குருவானவர் கிறித்தவரான அந்த நோயாளிக்கு நற்கருணை வழங்கியதை அறிந்துகொண்டார். அங்கு மிக ஆற்றலோடு ஒளிவீசுவதற்குக் காரணமாய் இருந்தது அவர் கொண்டு வந்த நற்கருணையே என்பதையும் புரிந்துகொண்டார். இத்தகைய ஆய்வுக்குப்பின் அந்த அறிவியலாளரின் வாழ்வே மாறிவிட்டது. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர் குருவாக மாறுவதற்காகக் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாராம்.”

அகஸ்டின்:நற்கருணையில் இயேசுவின் ஆற்றல் உடல் மிகவும் வலிமையோடு பிரசன்னமாய் இருந்து, நம் ஆற்றலையும் வல்லமையையும் அதிகமாக்குகிறது என்பதை மிகத் தெளிவாக இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது தந்தையே!”

(தொடரும்)

news
ஆன்மிகம்
பெற்றால் மட்டும் போதுமா? (வாழ்வு வளம் பெற – 32)

பலரும் முதலில் சிறிது அதிர்ச்சியுடனே இதனைக் கேட்கிறார்கள். “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்; அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களே தவிர, உங்களிடமிருந்து வருவதில்லைஎன்ற கலீல் ஜிப்ரானின் சொற்களைச் சிறிது அதிர்ச்சியில்லாமல் யாரால் கேட்க இயலும்?

என் குழந்தை, என் பிள்ளைஎன்று பெருமிதமும் பூரிப்பும் பொங்கக் கொஞ்சும் தாயிடம், “இத பாரும்மா, இது உன் பிள்ளை இல்லஎன்று யாராவது சொன்னால், அவரது உணர்வுகள் என்னவாக இருக்கும்?

சரி. அப்படியானால் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் யாருடைய குழந்தைகள்? அவர்கள் யாரிடமிருந்து வருகிறார்கள்? குழந்தைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகளே! அவர்கள் அனைவரும் கடவுளிடமிருந்தே வருகிறார்கள்.

கடவுள் தம் குழந்தை ஒன்றைப் பத்திரமாய்ப் பாதுகாத்து, தகுந்த முறையில் வளர்த்தெடுப்பதற்காகச் சிறிது காலம் ஒரு கணவன்-மனைவியிடம் தருகின்ற தருணத்தில் அவர்கள் பெற்றோர்களாகிறார்கள். ஆனால், அவர்கள் கையில் பச்சிளங்குழந்தை ஒன்று தரப்படும்போதுதான் விழித்துக் கொண்டு, ‘கணவன்-மனைவிஎனும் நிலையிலிருந்துபெற்றோர்நிலைக்கு உயர்ந்து விட்டோம் என்பதைப் புரிந்துகொள்கின்றனர்.

குழந்தை நல்ல முறையில் வளரச் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பது மிகப் பலருக்குப் புரியாத புதிராகவே உள்ளது. எந்தவிதமான திட்டமிடலும், தயாரிப்புமின்றி குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, தங்களுக்குத் தெரிந்ததை, தாங்கள் பார்த்ததை, தாங்கள் கேள்விப்பட்டதைச் செய்கிறார்கள். இதில் உள்ள ஒரு பேராபத்து என்ன? தங்கள் பெற்றோரால் தாங்கள் வளர்க்கப்பட்ட பாணியிலேயே மிகப்பலர் தங்கள் பிள்ளைகளை வளர்க்க முயல்கிறார்கள். தான் சிறுவனாக இருந்தபோது தன் தந்தையால் கொடூரமாய் அடித்து உதைக்கப்பட்ட ஆண் ஒரு தந்தையாய் ஆகும்போது அறிந்தும் அறியாமலும் தன் பிள்ளையை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்துகிறான். மிகச்சிலரே தாங்கள் வளர்க்கப்பட்ட விதம் சரியானதே அல்ல; அது கொடுமையானது. எனவே என் குழந்தைகள் யாரும் அவ்விதத்தில் வளர்க்கப்படக் கூடாது என்று புரிந்துகொண்டு மாறுகின்றனர்.

உளவியலாளர்கள் மூன்று விதமான பிள்ளை வளர்க்கும் பாணிகளைக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு பாணியில் வளர்க்கப்படும் குழந்தைக்குப் பின்னாளில் என்ன நேர்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இம்மூன்றில் மிகவும் ஆபத்தானது முதலாவது பாணிதான். இதனைசர்வாதிகாரப் பாணிஅல்லதுகொடுங்கோலன் பாணிஎன்று அழைக்கலாம். இந்தப் பாணியைப் பின்பற்றும் பெற்றோர் சிறைக் காவலர் போலவும் அவர்களின் பிள்ளைகள் தினமும் அவர்களால் அடித்து உதைக்கப்படும் கைதிகள் போலவும் ஆகிவிடுகின்றனர்.

பிள்ளைகள் சிறிய தவறு செய்தாலும் கூட இவர்கள் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறார்கள். பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தாங்களே தீர்மானித்து அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் ஒழுங்குகளைப் பிள்ளைகள் ஏன் பின்பற்ற வேண்டும் என்று ஒருநாளும் இவர்கள் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்வதே இல்லை. “சொன்னா செய்டா. ஏன், எதுக்குன்னு கேட்கக் கூடாது. அப்படியே நான் சொன்னாலும் உனக்குப் புரியுமாடா? சின்னப் பய நீ. உனக்கென்னடா தெரியும்?” என்று தங்கள் பிள்ளைகளை மிரட்டுகிறார்கள்.

இவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்வதைப் பார்த்து யாராவதுபெத்த பிள்ளைய எப்படிக் காட்டடி அடிக்கிறான் பாரு! இவனெல்லாம் ஒரு மனுஷனா?” என்பது போல பேசினால் இவர்கள் என்ன சொல்வார்கள்? “நீ உன் வேலையைப் பாத்துட்டு போ. என் பிள்ளைய எப்படி வளர்க்கிறதுன்னு எனக்குத் தெரியும். அடிச்சு வளர்க்காத பிள்ளை படிக்காது, பணியாது. அது உனக்குத் தெரியுமா? இப்போ கண்டிப்பா, கடுமையா இருந்தாதான் பிள்ளை ஒழுக்கமான, கட்டுப்பாடுள்ள குழந்தையா வளரும்என்பார்கள்.

ஆனால், அது நிகழ்வதே இல்லை. இந்தப் பாணியில் வளர்க்கப்படும் குழந்தைகள் அந்தச் சிறு வயதில் மிகுந்த வலி, வேதனை, பயம், அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகளை அனுபவிக்க நேர்கிறது. இத்தகைய தந்தையிடமிருந்து முடிந்தபோதெல்லாம் ஓடித் தப்பிப்பது, முடியாதபோது பல்லைக் கடித்துக்கொண்டு அடி, உதையை வாங்கிக்கொள்வது என்றே வளர்கிறார்கள். தன்னை இப்படி நடத்தும் தந்தை அல்லது தாய்மீது மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் பகையையும் வளர்த்துக்கொண்டே வளர்கிறார்கள்.

கொஞ்சம் வளர்ந்து வயதுக்கு வந்து, உடலில் வலிமை ஏறியதும், இத்தனை நாளும் அடித்து, உதைத்த தந்தையின் கையைப் பிடித்துத் தடுப்பார்கள், திருப்பி அடிப்பார்கள். வன்முறைக்கு மீண்டும் மீண்டும் பலியாகி உடலும் மனமும் மரத்துப் போவதால் எளிதில் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். குற்றவாளிகளாய் மாறுவார்கள். எனவே, இது எந்த விதத்திலும் நன்மை விளைவிக்காத, முற்றிலும் தவறான வளர்ப்பு முறை.

பிள்ளை வளர்ப்பதில் இரண்டாவது பாணி இதற்கு முற்றிலும் மாறானது. பிள்ளைகளை ஆணையிடும் அரசர்களாக்கி, அவர்கள் முன் கைகட்டிச் சேவகம் செய்யும் அடிமைகள் போல பெற்றோர் ஆகிவிடும் பாணி. இத்தகைய பெற்றோர் பிள்ளை என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்கள். “பிள்ளை கேட்கிறதை வாங்கித் தர முடியாட்டி நான் ஏன் சம்பாதிக்கணும்? ஆசைப்பட்டு பிள்ளை கேட்கிறதை வாங்கிக் கொடுக்கத்தானே நாங்க இருக்கோம்?” இதைப் புரிந்துகொள்ளும் பிள்ளை, தான் கேட்டதை வாங்கித் தராவிட்டால் அழுது, அடம்பிடித்து எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.

இந்த முறையில் வளர்க்கப்படும் பிள்ளை, சிறு வயதிலேயே தந்தையை, தாயைக் கடுமையாகத் தாக்குவதைப் பார்க்கலாம். இத்தகைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வசவுகளையும் வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு என்ன சொல்வார்கள்? “பிள்ளை தானேங்க? இந்த வயசுல எது சரி, எது தவறுன்னு அதுக்குத் தெரியுமா என்ன? நாமதான் பொறுத்துப் போகணும். வளர்ந்த பிறகு எல்லாம் சரியாயிடும்என்பார்கள்.

சரியாகுமா? இல்லவே இல்லை. வீட்டில் எந்த ஒழுங்குகளும் எல்லைகளும் இல்லாதது போல் வெளி உலகிலும் இருக்கும் என்று நினைக்கும் இந்தக் குழந்தைகள், வீட்டில் செய்யும் அராஜகங்களை வெளியிலும் செய்து வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். தான் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்ட பெற்றோரைப் போல ஏன் மற்றவர்கள் இல்லை என்று குழம்புவார்கள். ‘வெளி உலகில் தான் நினைத்ததை எல்லாம் செய்ய இயலாது. கேட்டதை எல்லாம் பெற இயலாதுஎன்பதைப் புரிந்துகொள்ளவே வெகுகாலம் ஆகலாம். அதற்குள் தங்கள் பிடிவாதத்தின் விளைவுகளைச் சந்தித்துச் சோர்ந்து போவார்கள். எந்த வேலையிலும் நிலைக்க மாட்டார்கள். அதற்கு அதிகாரிகளையும் உடன் பணியாற்றுவோரையும் குறை சொல்லிக் குற்றம் சாட்டுவார்கள். எனவே, இதுவும் ஆபத்தானதுதான்.

மூன்றாவது பாணியே பிள்ளைகளைச் சரியாக வளர்க்க உதவுகிறது. இதைப் பின்பற்றும் பெற்றோர் பிள்ளைகள்மீது தங்களுக்குள்ள அன்பைச் சொல்லிலும் செயலிலும் காட்டுவார்கள். ஆபத்துகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பார்கள். ஆனால், முக்கியமான காரியங்களில் இவர்கள் தெளிவான ஒழுங்குகளை ஏற்படுத்துவார்கள். இந்த ஒழுங்குகளுக்கான காரணங்களைப் பிள்ளைகள் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவாய், பொறுமையாய் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வார்கள்பிள்ளைகள் இந்த ஒழுங்குகளை மீறினால் கண்டிப்பார்கள். கண்டனத்திற்கும் பயனில்லை என்றால் தண்டிப்பார்கள். ஆனால், ‘அந்த மூலையில் போய் நிற்க வேண்டும், ‘இன்று உனக்கு ஐஸ்கிரீம் இல்லை, ‘அறையை விட்டு அரை மணி நேரம் வெளியே வரக்கூடாதுஎன்பது போன்ற சின்னச் சின்ன தண்டனைகளைத்தான் தருவார்கள். இவற்றையும் கூட என் பிள்ளையைத் தண்டிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் தருவார்கள். தண்டனையே இல்லையென்றால் தொடர்ந்தும் தயக்கமின்றியும் தவறுகளைச் செய்யும் தறுதலையாகத் தன் பிள்ளை மாறிவிடக் கூடாது என்ற புரிதலில்தான் இதனைச் செய்வார்கள்.

எனவே, சரியான இந்த மூன்றாம் பாணியில் நிறைய பாசமும், அக்கறையும் உள்ளது போல், தவறுகள் செய்யும்போது தண்டனைகளும் உள்ளன. இந்தப் பாணியில் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து, குற்றங்களைத் தவிர்க்கும் நல்ல மனிதர்களாக வளர்கிறார்கள்.

இந்தச் சரியான வளர்ப்பு முறை பற்றிய புரிதலும், ‘இதை மட்டுமே நாம் கடைப்பிடிப்போம்என்ற உறுதியும் கணவன்-மனைவி இருவருக்கும் வேண்டும். தாயின் வயிற்றில் பிள்ளை இருக்கும்போதே இருவரும் இது பற்றிப் பேசித் தீர்மானிக்க வேண்டும். இது போன்ற புரிதலும், உறுதியான தீர்மானமும் இல்லையென்றால், கணவன்-மனைவி இருவரும் எந்தெந்த முறையில் வளர்க்கப்பட்டார்களோ அதையே பின்பற்றத் தொடங்கி விடுவார்கள். பிள்ளைப்பேறு தரும் மகிழ்ச்சியை மழுங்கடிக்கும் விதத்தில் பிள்ளை வளர்க்கும் முறை பற்றிய விவாதங்களும் சண்டைகளும் நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

ப்ரெனீ ப்ரவுன் என்ற அமெரிக்கப் பெண்மணி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உளவியல் கற்பிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், பேச்சாளர். அவருடைய நூல்கள் ஒன்றில் இதனைக் காணலாம். “ ஹோல்ஹார்ட்டட் பேரன்ட்டிங் மேனிஃ பெஸ்ட்டோ (The Wholehearted Parenting Manifesto) என்று அவர் அழைக்கும் இது பெற்றோர் தன் பிள்ளையிடம் தெரிவிக்கும் ஒரு பிரகடனம் போல் அமைந்துள்ளது. அதில் உள்ள முக்கியமான வரிகள் இவை:

என் மகனே / மகளே, எல்லாவற்றிற்கும் மேலாக நீ புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புவது என்ன தெரியுமா? அன்பை நிறையப் பெறுவதற்கு உனக்குத் தகுதியிருக்கிறது. நான் உன்னைப் பெரிதும் அன்பு செய்கிறேன்.”

என்மீது நானே இரக்கத்தோடு நடந்துகொள்வதை நீ பார்க்கும்போது அன்பு, சொந்த உணர்வு, மகிழ்ச்சி மூன்றையும் நிறையப் பெற உனக்குத் தகுதி உள்ளது என்பதை நீ புரிந்துகொள்வாய். வாழ்வில் நல்லவை யாவையும் பெற உனக்கு முழுத் தகுதியுள்ளது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே நீ அனைவரையும் அணுக வேண்டும் என நான் விரும்புகிறேன்.”

நம் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும், என்ன பிரச்சினை என்றாலும் மற்ற அனைவரும் உடனிருப்போம். நமது மகிழ்ச்சிகளையும் போராட்டங்களையும் தயக்கமின்றி நமக்குள் பகிர்ந்து கொள்வோம். பெற்றோர் நாங்களும், எங்கள் குழந்தையாகிய நீயும் ஒருநாளும் தாண்டக்கூடாத எல்லைகளை நாம் வகுத்துக் கொள்வோம். இவற்றை எப்போதும் மதித்து நடப்போம். கடினமாக உழைப்போம். நம்பிக்கையோடு எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். விடாமுயற்சியோடு செயல்படுவோம். அதேவேளையில், ஓய்வும் விளையாட்டும் உல்லாசமும் குடும்பத்தில் நம் அனைவருக்கும் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்வோம்.”

நான் தவறுகள் செய்தால் உடனே எப்படி மன்னிப்பு வேண்டுகிறேன், செய்த தவறுக்கு எப்படிப் பரிகாரம் செய்கிறேன் என்பதை நீ பார்ப்பாய். எனக்கு என்ன தேவை என்பது பற்றியும், என் மனத்தில் உள்ள உணர்வுகள் பற்றியும் தடையின்றி மனம் திறந்து நான் பேசுவதை நீ பார்ப்பாய். உன் செயல்களுக்கு நீதான் பொறுப்பு என்பதைக் கற்றுக்கொள்வாய்.”

நீ மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதே எப்போதும் என் விருப்பம். நமக்கு மகிழ்வூட்டும் காரியங்களுக்காக நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம். என்ன நடக்கும் என்று தெரியாத வேளைகளிலும், நமக்குத் தேவையானவை கிடைக்காத தருணங்களிலும் நாம் துணிவோடும் நம்பிக்கையோடும் செயல்படுவோம். நமக்குத் துயரம் தருபவை நம் வாழ்வில் நிகழும்போது நாம் சேர்ந்து அழுவோம். நமக்கு அச்சமூட்டும் காரியங்களைச் சேர்ந்து எதிர்கொள்வோம். வலிக்கிறது என்று நீ அழும்போதெல்லாம் உன் வலியை என்னால் அகற்ற இயலாவிட்டாலும், உன்னோடிருந்து உன் வலியை உணர முயல்வேன்.”

நாம் சேர்ந்து சிரிப்போம்; பாடுவோம்; ஆடுவோம். நாம் நாமாக இருக்க நம் குடும்பத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு. என்ன நேர்ந்தாலும் நாங்கள் உன் பெற்றோர். இது எப்போதும் உன் வீடு, உன் குடும்பம்.”

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)

news
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 06

5. மரியாவை மேன்மைப்படுத்துவதென்பது இயேசுவிடம் செல்வதாகும்

1. மீட்பின் வரலாற்றில் கன்னி மரியாவின் ஆளுமை மற்றும் பங்களிப்பு பற்றிய கிறித்தவக் குழுமத்தினுடைய சிந்தனையானது தொடக்க காலத்திலிருந்தே எவ்வாறு உருவானது என்பதை நமது முந்தைய மரியன்னை மறைக்கல்வியில் விவரித்தோம். இக்கட்டுரையில் திரு அவையின் மரியன்னை அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.

மரியியல் சிந்தனை மற்றும் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருக்கின்ற மரியா பக்தியினுடைய வளர்ச்சியானது, திரு அவையினுடைய மரியியல் பார்வையை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வெளிப்படுத்துவதில் உதவியிருக்கின்றது. உண்மையில், கன்னி மரியா, கிறித்தவ விசுவாசத்திற்கான அடித்தளம் மற்றும் திரு அவை அனுபவமான (ecclesial experience) கிறிஸ்துவோடு எல்லா வகையிலும் தொடர்புடையவராக இருக்கின்றார். மேலும், அவர் கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கின்றார். ஆகவேதான், மீட்புப் பணியில் யார் அவருடைய தாய்க்கு மிகச் சிறப்பான பங்கை ஒதுக்கினாரோ, அந்த இயேசுவுக்குப் பணிந்து மரியாவைக் கிறித்தவர்கள் வணங்கினார்கள், அன்பு செய்தார்கள் மற்றும் ஆர்வத்தோடும் மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் மரியாவிடம்  செபித்தார்கள். கிறிஸ்துவுக்கான சிறப்புமிக்க வழியாக அவரைக் கண்டு ஒப்புயர்வற்ற இணைப்பாளராகிய (Supreme Mediator) மரியாவுக்கு  அவர்கள் விசுவாசம் மற்றும் பக்தியில் அவருக்கென ஒரு முக்கியமான இடத்தை ஒதுக்கினார்கள்

இவ்வாறாக, திரு அவையினுடைய மரியியல் கூற்றானது கிறித்தவ மக்களுடைய அனுபவத்தில் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இது நம்பிக்கை கொண்டோர்களுடைய  இதயங்களில் அவர் இருக்கின்றார் என்பதற்குச் சான்றாகப் பல வகைகளில் வெளிப்படுத்தப்படுகிறதுஇது ஏதோ ஒரு மேலோட்டமான உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; மாறாக கிறிஸ்துவோடு இன்னும் அதிகமானதொரு நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதற்காக, இயல்பாகவே மரியாவை நோக்கித் திரும்புவதற்கான நேற்றைய மற்றும் இன்றைய கிறித்தவர்களைத் தூண்டுகிற, நம்பிக்கையில் வேரூன்றிய ஓர் ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்பாகும்.

2. மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த கிறித்தவக் குழுமங்களால் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காகஇறைவனின் தாயைநோக்கி எழுப்புவதற்காக எழுதப்பட்ட மிகப் பழமையான செபத்திற்குப் பிறகு, ஆண்டவரை நோக்கிய அவருடைய பரிந்துரையில் மிகவும் ஆற்றல் மிக்கவராக யாரைக் கிறித்தவர்கள் கருதினார்களோ, அவரை நோக்கியே அநேக வேண்டுதல் செபங்கள் எழுப்பப்பட்டன.

கிறித்தவ மக்கள் மரியாவிடம் ஆழமான பக்தியை வெளிப்படுத்தினார்கள்

இன்றுஅருள் நிறைந்த மரியேமிகவும் பொதுவான செபமாக இருக்கிறது. இதனுடைய முதல் பகுதியானது நற்செய்தியிலிருந்து அதனுடைய வார்த்தைகளைக் கொண்டுள்ளது (ஒப்பிடுக. லூக் 1:28-42). கிறித்தவர்கள் அவர்களுடைய சிறுவயதிலிருந்தே வீட்டில் இந்தச் செபத்தைச் சொல்வதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், வாழ்க்கை முழுவதுமே பாதுகாக்கப்பட வேண்டியதோர் உன்னதமான கொடையாக அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அநேக முறை செபமாலையில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற இந்தச் செபம் அநேக நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி மறையுண்மைகளைச் செபத்தோடு தியானிப்பதற்குள் நுழைவதற்கும் மற்றும் சில வேளைகளில் இயேசுவினுடைய தாயோடு நெருங்கிய தொடர்பில் நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கும் உதவுகிறது.

இடைக்காலங்களிலிருந்தே கிறித்தவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் அவர்களைப் பாதுகாப்பதற்கும் வழிநடத்துவதற்கும் ஆண்டவருடைய புனிதத் தாயிடம் வேண்டுகின்ற அனைத்து நம்பிக்கையாளர்களுடைய மிகப் பொதுவான செபமாகவும்அருள் நிறை மரியேசெபமானது இருந்து வந்துள்ளது (ஒப்பிடுக. மரியன்னை வழிபாடு, எண்கள். 42-55).

கிறித்தவர்களும் மரியா மீதான அவர்களுடைய அன்பை பாடல்கள், செபங்கள் மற்றும் எளிய அல்லது சில சமயங்களில் மிகப்பெரிய அளவிலான தரமான கவிதைகளை மனுக்குலத்திற்காக சிலுவையில் அறையப்பட்டவரால் தாயாகக் கொடுக்கப்பட்டவருக்கான அன்பினால் உந்தப்பட்டு பல்வேறுபட்ட அவர்களுடைய பக்தி முயற்சிகளை அதிகரிப்பதன் வழியாக வெளிப்படுத்தினார்கள். அவற்றில்Akathist Hymnமற்றும்Salve Regina   போன்ற பாடல்கள் நம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கை வாழ்வை ஆழமாகப் பதிவு செய்தன.

மரியா பக்தியினுடைய மறுவடிவமாக, மரியாவினுடைய ஆன்மிக அழகை ஒட்டுமொத்த மனுக்குலமும் பாராட்டுவதற்குத் தூண்டிய  மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட விவரிக்க முடியாத வளமையான ஓவியங்கள் இருக்கின்றன. ஓவியர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் கன்னி மரியாவினுடைய பெருமையை அநேக வழிகளில் வெளிக்கொணர்வதில் நமக்கு மிகச்சிறந்த படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அவை மீட்பினுடைய பணியில் அவருடைய மேன்மையான பங்களிப்பினுடைய அர்த்தம் மற்றும் மதிப்பை மிகச் சிறப்பாக நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.

மரியாவில், கடவுளுடைய திட்டத்தோடு ஒத்துப் போகக்கூடிய ஒரு புதிய மனுக்குலத்தினுடைய நிறைவை கிறித்தவக் கலை வடிவமானது கண்டு கொள்கின்றது. இதன் காரணமாகவே, அது மனுக்குலம் முழுமைக்கும் ஒரு மேன்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது.

3. சிறப்பானதோர் அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட கிறித்தவர்களால் இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ள முடியாமல் இருத்தலாகாது. உண்மையில், துறவற சபைகள் (Religious Orders and Congregations), அர்ப்பண வாழ்வை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் (Institutes or Associations of Consecrated life)   மரியா குறிப்பிடத்தக்க வகையில் வணக்கம் செய்யப்பட்டார். பெண் துறவிகளுடைய சபைகள் மட்டுமல்ல, பல துறவற சபைகள் அவர்களுடைய சபையின் பெயரில் மரியாவினுடைய பெயரையும் இணைத்துள்ளார்கள். இருந்த போதிலும், அதனுடைய வெளி அர்த்தங்களைவிட, பல துறவற சபைகள் மற்றும் திரு அவையினுடைய இயக்கங்கள் மரியா ஆன்மிகத்தைக் கொண்டவைகளாக இருக்கின்றன. மேலும், அவர்கள் மரியாவுடன் சிறப்பான உறவை முழுமையாக மற்றும் உண்மையாக வாழ்ந்து, அவர்களுடைய தனிவரத்தைக் கொடுப்பவராக அவரைத் தெரியும்படிச் செய்கின்றார்கள்.

சிறப்பான விதத்தில் தூய ஆவியாரினால் உதவி செய்யப்படுகின்ற மக்களுடைய வாழ்வில் மரியாவோடு இணைந்த இந்த வாழ்வானது எவ்வாறு ஒரு கிறித்தவன் அவனுடைய ஆழ்மனத்தில் மரியாவினுடைய தலையீட்டை அனுபவிக்க முடியும் என்பது போன்ற ஞான வாழ்வின் கூறுகளை உருவாக்கியிருக்கிறது.

மரியாவோடு  இணைந்த இந்த வாழ்வானது அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட கிறித்தவர்களை மட்டுமல்ல; மாறாக, எளிமையான நம்பிக்கையாளர்களையும் மற்றும் திரு அவையினுடைய வாழ்வோடுதூரத்துதொடர்பை மட்டுமே வைத்திருக்கின்றவர்களையும் அவரோடு பிணைக்கின்றது. வருடம் முழுவதும் அநேக நம்பிக்கையாளர்களை ஈர்க்கின்ற மரியன்னை திருத்தலங்கள் ஆண்டவருடைய தாயின்மேல் கிறித்தவ மக்கள் வைத்திருக்கின்ற ஒரு பொதுவான மரியாதையின் அடையாளமாக இருக்கின்றன.

மரியன்னை பக்தியினுடைய அரண்களாகத் திகழ்கின்ற புகழ்பெற்ற இடங்களில் சில: லூர்து நகர், பாத்திமா நகர், லொரேத்தோ, பொம்பெய், கொத லூப்பே மற்றும் செஸ்தோகோவா. மற்றவைகள் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் மட்டுமே தெரிந்தவைகளாக இருக்கின்றன. அவற்றிலெல்லாம், மரியாவிடம்  தஞ்சமடைவதோடு தொடர்புடைய நிகழ்வுகளின் நினைவானது, கடவுளுடைய அருளுக்கு நம்முடைய இதயங்களைத் திறந்து அவருடைய தாய்மைநிறை அன்பின் செய்தியை அறிவிக்கின்றது

மரியாவினுடைய பரிந்துரை வழியாக மனிதனை அடைகின்ற கடவுளுடைய இரக்கத்தின் ஓர் அற்புதமான சாட்சியாக இந்த மரியன்னை திருத்தலங்கள் இருக்கின்றன. உடல் சார்ந்த குணப்படுத்தும் அற்புதங்கள், ஆன்மிக மீட்பு மற்றும் மனமாற்றம் போன்றவை, ஆவியிலும் கிறிஸ்துவோடும் மரியா ஓர் உதவியாளராக மற்றும் தாயாக இருந்து அவருடைய பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார் என்பதற்கான சிறந்த அடையாளங்களாகும். மரியியல் கூறானது திரு அவையினுடைய ஒட்டுமொத்த வாழ்விலும் ஊடுருவிப் பரவியிருக்கிறது.

4. மரியன்னை திருத்தலங்கள் நற்செய்தியை அறிவிக்கும் மையங்களாக விளங்குகின்றன. உண்மையில், திரு அவையில் இன்றும், பெந்தகோஸ்தே நாளுக்காகக் காத்திருந்த அந்தத் தொடக்கக் குழு மத்தைப்போல, மரியாவோடு  இணைந்த செபமானது அநேகக் கிறித்தவர்களை நற்செய்திப் பணிக்கும் அவர்களுடைய சகோதர- சகோதரிகளுக்கான அன்புப் பணிக்கும் தூண்டுகிறது. இங்கு அன்புப் பணி மற்றும் இரக்கத்திற்கான பணியைச் செய்வதில் மரியன்னை பக்தி ஏற்படுத்தியிருக்கின்ற மிகப் பெரிய தாக்கத்தை நான் நினைவுகூர விரும்புகிறேன். அதாவது, மரியாவினுடைய  உடனிருப்பால் தூண்டப்பட்டு, கன்னி மரியாவினுடைய  தாய்மை பாதுகாப்பின் அடையாளமாகவும் தந்தையினுடைய இரக்கத்தின் உயிரோட்டமான உருவாகவும்  எளியோருக்காக இருந்திட விரும்பி ஏழைகளுக்காக, நலிந்தோருக்காக மற்றும் நோயாளர்களுக்காகத் தங்களையே அர்ப்பணிப்பதற்கான தேவையை நம்பிக்கையாளர்கள் மிகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

இவை அனைத்திலுமிருந்தும் திரு அவையினுடைய ஒட்டுமொத்த வாழ்விலும் மரியியல் கூறானது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மிகத்தெளிவாகக் காண முடியும். இறைவார்த்தையினுடைய அறிவிப்பு, திருவழிபாடு, வேறுபட்ட அன்பின் மற்றும் கலாச்சாரத்தின் தோற்றங்களும், வளமைக்கான மற்றும் புதுமைக்கான தருணங்களை மரியாவில் காண்கின்றன.

கடவுளின் மக்கள், அவர்களுடைய மேய்ப்பர்களின் வழிநடத்துதலின் கீழ், மரியாவினுடைய  முகத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கிய கிறித்தவ நம்பிக்கையைத் தூண்டுகின்ற தூய ஆவியானவருடைய செயலை இந்த நிகழ்வில் உணர்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மரியன்னை திருத்தலங்களில் அற்புதங்களைச் செய்கிறவர் தூய ஆவியானவர்தான். அவர்தான் மரியா பற்றிய அறிவிலும், மரியாவுக்கான அன்பிலும் ஊக்கமூட்டி, வரலாற்றில் கடவுளுடைய அடையாளங்களை எவ்வாறு அறியலாம் மற்றும் புதிய மானுடத்தினுடைய வடிவமைப்பாளராக ஒவ்வோர் ஆண் மற்றும் பெண்ணை ஆக்குகின்ற அறிவை எவ்வாறு பெறலாம் என்பதைப் புகழ்ச்சிப் பாடல் பாடிய கன்னியிடமிருந்து (Virgin of the Magnificat) கற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையாளர்களை அழைத்துச் செல்கிறார்.

மூலம்: Pope John Paul II, To Honour Mary is to go to Jesus, in L’Osservatore Romano, Weekly Edition in English, 22 November 1995, p.11.

news
ஆன்மிகம்
நற்பணியே இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 32)

இறைவேண்டல் பற்றிய நமது பார்வையை விரிவுபடுத்த அழைப்பு விடுக்கிறது திருவிவிலியம். நமது மரபார்ந்த பார்வையையும் கடந்து, நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் இறைவேண்டல் ஊடுருவ வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இறையியல் பாடம். அந்த வகையில் நாம் செய்கிற பணியை நன்றாக, நேர்மையாக, நேர்த்தியாகச் செய்து முடிக்கும்போது, அதுவே ஒரு சிறந்த இறைவேண்டல் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு (யோவா 4:34) என்று சொல்லித் தம் சீடரை வியக்க வைத்தார் இயேசு. அது மட்டுமல்ல, தமது பணி வாழ்வின் இறுதியில், “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன் (யோவா 17:4) என்று சொன்னதன் வழியாகக் கடவுள் தந்த வேலையை நன்கு செய்து முடிக்கும்போது நாம் கடவுளை மாட்சிப்படுத்துகிறோம் என்னும் வியப்பான இறையியல் செய்தியையும் நமக்குத் தந்துள்ளார்.

நாம் செய்யும் வேலைகள், பணிகள் கடவுள் தந்தவை என்பது நல்ல பார்வை அல்லவா! பணி பற்றிய இயேசுவின் இந்தப் பார்வையை உள்வாங்கியவர் பவுலடியார். எனவேதான், “ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம் (திப 20:24) என்று பெருமிதத்துடன் கூறினார். இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்ட வேலைகள் மட்டுமல்ல, யார் என்ன வேலை செய்தாலும், அந்த வேலையை நன்கு ஆற்றும்போது, அவர்கள் கடவுளைப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பது நம் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும். உரோமை அரசில் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றி எழுதும் பவுல், “அவர்கள் தங்கள் பணியை ஆற்றும்போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள் (உரோ 13:6) என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.

இதன் காரணமாகவே, “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள் (கொலோ 3:23-24) என்று அறிவுறுத்தினார்.

எனவே, நல்ல மனத்தோடு, நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்னும் போதனையைத் திருவிவிலியத்தின் பல இடங்களில் காண்கிறோம். “மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக்கொள்பவர்களாயிராமல், கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றி, கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள் (எபே 6:6-7) என்பது எபேசியர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை.

மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல், ஆண்டவருக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள் (கொலோ 3:22) என்பது அடிமைகளுக்கு வழங்கப்பட்ட போதனை.

வேலையின்போது நேர மேலாண்மை பற்றிக் கூட திருவிவிலியத்தில் வாசித்து வியக்கிறோம். “குறித்த காலத்திற்கு முன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள். அவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார் (சீஞா 51:30) என்னும் சீராக்கின் ஞானநூலின் அறிவுரை நம் அனைவருக்கும் பொருந்தும்.

வேலையும், இறைவேண்டலும் இணைந்தே செல்கின்றன என்பதே நம் திரு அவையின் மரபாக இருந்து வருகிறது. கிறித்தவ வாழ்வின் முன்னோடியான புனித பெனடிக்ட், ‘மன்றாடு, உழை என்பதையே துறவிகளின் இலக்காக முன்வைத்தார். ஆறாம் நூற்றாண்டிலிருந்து பெனடிக்டைன் துறவியர் எட்டு மணி நேரம் இறைவேண்டல், எட்டு மணி நேரம் வேலை என்பதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தப் பார்வையையே கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியும் முன்வைக்கிறது. கடவுளின் கொடைகளைப் பயன்படுத்துவதால், உழைப்பு மீட்பின் வழியாகவும் இருக்கிறது. மானிட வேலையின் இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இயேசுவின் பாடுகளில் நாம் பங்கேற்று அவரது மீட்புப் பணியில் ஒன்றிக்கிறோம் (கதிம 2427) எனச் சொல்லி மனிதரின் வேலையை அருள் வாழ்வுத் தளத்திற்கு உயர்த்துகிறது.

கடவுளின் பணி (Opus Dei) என்னும் பொது நிலையினருக்கான இயக்கத்தைத் தோற்றுவித்த புனித ஜோஸ் மரிய எஸ்க்ரிவா அதன் உறுப்பினர்களுக்குத் தந்த அறிவுரை: “உங்களது அன்றாட வேலைகளோடு விண்ணக நோக்கத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான். எந்த வேலையைச் செய்தாலும், உள்ளார்ந்த அன்புடன் செய்யும்போது, அது புனிதமாகிறது என்பதே புனித குழந்தை தெரேசாவின் பார்வையாக அமைந்திருந்தது.

நாம் செய்கிற அனைத்து வேலைகளையும் ஆண்டவருக்காக, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் செய்யும்போது, நமது வேலையே இறைவேண்டலாக மாறுகிறது. “ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும் (சீஞா 35:16) என்னும் இறைமொழிக்கேற்ப, நமது பணிகளை இறைத் திருவுளத்திற்கு ஏற்றவாறு ஆற்றுவோம். அப்போது நமது பணிகளே நம் இறைவேண்டலாக மாறும்!

news
ஆன்மிகம்
தெய்வீகத் தடங்கள் – 15

அருங்குறிகளும், புதுமையான நிகழ்ச்சிகளும் என்னைச் சுற்றிலும் நடந்துகொண்டே இருக்கின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கையில் உறுதிப்பாட்டோடு நிற்கும்போது நான் பல புதுமைகளை, அருங்குறிகளைச் சந்திக்க முடிந்தது. நான் உயிரோடு இன்னும் இருப்பதே இதற்குச் சான்று. மேலும், எனது வலது தோள், முழங்கை, முன்னங்கை, விரல்கள் ஆகியவற்றை இட வலமாகச் சுற்ற முடிந்ததும் தொடர்ந்து புதிப்பித்தல் உடலில் தானாக நடப்பதற்கு அத்தாட்சிகள்.

இடக்கையைப் போலவே வலக்கையும் செயல்பட முடியும்போதுதான் நான் முழுமையடைவதாக உணர்வேனோ? நான் அப்படி நினைக்கவில்லைபுத்துயிர் பெற்ற கைக்குச் சில குறைபாடுகள் இருக்கும். ஆனால், இந்தக் குறைபாடுகள் என் திறன்களைக் குறைப்பதில்லை. எழுதுதல், கணிப்பொறியைப் பயன்படுத்துதல், கருவிகளைக் கையாளுதல், கூடைப்பந்து விளையாடுதல், நீந்துதல், காரோட்டுதல் ஆகியவற்றிற்கு நான் இடது கையையே பயன்படுத்துகிறேன். அதுவே போதுமானதாக இருக்கிறது.

என்மேல் இரக்கமுள்ளவர்கள் ஒருவேளை எனது முகக்குறிகளைக் கண்டு எனக்காக வருந்தலாம். நான் என் வலக்கையையும் இடக்கையைப் போலவே பயன்படுத்தினால்தான் நான் முழுமைபெற்றிருப்பதாக அவர்கள் நினைக்கலாம்.

எப்படியிருப்பினும் உண்மையான அருங்குறிஆம்என்று சொல்லி, மெய் நிலையை அதன் அத்தனை உள்பொருள்களுடனும் ஏற்றுக் கொள்ளும் துணிவும் வலிமையும் நான் கொண்டிருப்பதுதான் என்று நம்புகிறேன். உடைந்து போனதான்என்ற என்னை ஒன்றுசேர்க்கும் திறன் அது என ஆன்மாவுக்குள் ஏற்படும் முரண்படும் மெய்நிலைகளை அறிவதன் மூலம் அனைத்துத் திறன்களையும் திரட்டும் ஆற்றலும், உலகப் பார்வைகளை ஒதுக்கித்தள்ளும், ஆன்மாவுக்கு ஊறுவிளைவிக்கும் கூறுகளை இல்லாமல் செய்து, வாழ்வுக் கொள்கைகளையும், ஆழமான நம்பிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்றவும், தேவையான உள் ஆற்றல் பெற்றிருப்பதும், என் வாழ்க்கைப் பயணத்தின் தொடுவானத்தில் காணப்படும் தெய்வீகத் தடங்களில் கண்பதிக்கும் திறனும் என் வாழ்க்கையில் நடந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள்.

என் வாழ்க்கைக்குள் வந்தவர்கள் என்னைச் சுற்றி நடப்பனவற்றை எப்படிப் பாராட்டுவது என்று எனக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறார்கள். என்னுடைய கையில் முன்னேற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்பதை நான் அறிகிறேன். என்றாலும் எந்த வழியிலும் நான் நசுக்கப்பட அனுமதிப்பதில்லை. இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். வாழ்நாள் முழுவதும் கூட ஆகலாம். எனினும், ‘இரவு எவ்வளவுதான் நீண்டதாக இருந்தாலும், விடிந்தே தீரும்என்று எனக்குத் தெரியும்.

முடிவுரை

இந்தப் பக்கங்களைப் புரட்டியபோது உங்களுக்கு, உங்கள் அனுபவங்களும் நினைவுக்கு வந்திருக்கும். அவற்றில் சில உங்களுள் ஓர் உயிர் நரம்பினை மீட்டியிருக்கும். அது உலகத்தையே வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் தூண்டியிருக்கும். இறையருளால் உருவாக்கப்படும் அந்த நிகழ்வுகள், அனுபவங்கள், மனத்தில் அடைபட்டுக்கிடக்கும் அந்தக் கணங்கள் உங்களுக்கும் எனக்கும் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தந்திருக்கும். மேலும், அவை நமக்காக வாழ்க்கை தரவிருக்கும் அனைத்தையும் விரும்பி ஏற்கும் ஆன்மிக ஆற்றலால் நம்மை நிரப்பும். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து புனித பவுலோடு சேர்ந்து, “நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாகஎன்று உறுதி கொள்வோம்.

பந்தயத்தில் ஓடுவது என்றால் என்ன? பந்தயத்திலோ, மாரத்தானிலோ ஓடுவதற்கு முன்கூட்டிய திட்டமிடல் வேண்டும். ஓடும்போது இடர்ப்பாடுகள் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி மனத்தை ஆயத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிகொள்ள ஓட்டக்காரருக்குத் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வேண்டும். மேலும் அதேசமயம் வெளியிலிருந்து வருகிற வெறுப்புணர்வுகளையும், மனத்தளர்ச்சி ஏற்படுத்தும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஓடுகின்றவர் தான் கண்ணால் காணமுடியாத ஆன்ம சக்தியாகிய கடவுள், அவருக்கு அவர் முயற்சிகளில் துணை நிற்பார் என்ற உறுதியான நம்பிக்கையும் வேண்டும். அதோடு கூட பாப் காஃப் சொல்வது போல, “உறுதியற்றதை அணைத்துக் கொள். நம்முடைய வாழ்க்கையின் மிக அழகான இயல்களின் சிலவற்றிற்குத் தலைப்புகள் பின்னரே தரப்படும்.”

இவ்வாறு ஓட்டக்காரர் அறிவு, உடல் ஆகியவற்றின் கூட்டுச் சக்தியால் ஆர்வத்தோடு தொடு கோட்டை நோக்கி ஓடுவார். நமது வாழ்க்கைச் சூழல்களிலும் இந்த மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது உறுதியாக, நல்ல பயனை விளைவிக்கும்.

மனித இனம் தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய உலகில், உடனடியான வெகுமதிக்காகவும், விளைவுக்காகவும் ஏங்கும் உலகில், வெற்றிக்காகப் பொறுமை இழந்து நிற்கும் உலகில், என் வாழ்க்கையின் தொடுவானத்தில் தெய்வீகக் குறுக்கீடுகளின் வழியாகச் சமனமடைந்து, கடவுளின் நேரம் விடிவதற்காக நான் காத்திருக்கப் பழகிவிட்டேன். அவருடைய அந்த நேரத்தில் எல்லாமே அழகாக இருக்கும்.

பாதை அழகாக  இருந்தால் அது எங்கே இட்டுச் செல்கிறது என்று கேட்காதே. ஆனால், இலக்குகள் அழகாக இருந்தால், பாதையைப் பற்றிக் கவலைப் படாதே; நடந்து கொண்டே இருஎன்று சொல்வார்கள். இறுதி முடிவு சிறப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த இலக்கிற் காக நான் பொறுமையோடு தாங்கிக் கொள்வேன். ஏனென்றால், விபத்துகளின் வழியாகக் கூட அருங்குறிகளை நிகழ்த்துகின்ற இறைவனில் நான் நம்பிக்கை கொள்கிறேன்.

நம்பிக்கையோடு தடங்களில் நடை போடுதல்,

மாதங்களாய் ஆண்டுகளாய்

பரந்த தொடுவானத்தில் தெய்வீகத் தடங்களில் நடத்தல், அடி எடுத்து வைத்தல்!

ஆம்! அடி எடுத்து வைப்பது,

அந்தப் பயணம் கண்ணீர்ப் பயணம்!

ஏனென்றால், பத்தாம் ஆண்டில்

அடி எடுத்து வைக்கிறேன்.

இன்னும் எத்தனை மாதங்கள் ஆண்டுகள்

கடக்க வேண்டும் என்று அறியேன்

ஆனால், ஒன்று உறுதி;

நான் எப்போதும் ஆசிருடன் இருப்பேன்.

ஏனென்றால், படைத்தவர் என் உடைந்த எலும்புகளை ஒன்றுசேர்த்து

அடியெடுத்து வைப்பதைத் தொடரத்

தம் தெய்வீக அருளை உறுதி செய்திருக்கிறார்.

ஆம், தடங்களில் அடி எடுத்து வைக்கக் கடினமாக இருக்காது. ஏனென்றால், ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் புதிய நம்பிக்கை பிறக்கிறது.

உறுதி! அனைத்து இடரையும் மன உறுதியோடு தாங்கி, வாழ்க்கையின் பாதையில் மைல்கள் பல நடப்பேன். தடைக்கல் கண்டு அஞ்சமாட்டேன். ஏனென்றால், படைத்தவர் உறுதியாகத் திறப்பார்.

பாரீர், எல்லாச் சுமையும் பரிசாய் இலகுவாகும்

அவர் துயர் துடைக்கும் கைப்பற்றி நான் மகிழ்ச்சியாய் நடப்பேன்.

முயற்சியைத் தொடர்வதன்றி எனக்கு வேறென்ன வேண்டும்? ஏனென்றால், அவர் அருள் எனக்கு நங்கூரமாய் இருக்கும்!

news
ஆன்மிகம்
அழியாத உடல் பேசும் தெய்வீகத் தியாகம் (டிசம்பர்-3 புனித பிரான்சிஸ் சவேரியார் அவர்களின் திருவிழா சிறப்புக் கட்டுரை)

2024-ஆம் ஆண்டு புனித சவேரியாரின் உடல் விசுவாசிகளின் பார்வைக்கு நவம்பர் 21 முதல் கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 472 ஆண்டுகள் ஆகியும் அழியாத உடல், இந்தியத்  திரு அவையை அழியாத, ஆழமான, அர்ப்பணமுள்ள விசுவாசத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அழியாத உடல் பேசும் தெய்வீகத் தியாகத்தை அறிந்து, உணர்ந்து, வணங்கி விசுவாசத்தில் வேரூன்றுவோம். இப்புனிதரைப் போல இறை-மனிதத் தோழமை உறவு, பங்களிப்பு, நற்செய்திப் பணியிலும் வளர்ந்திடுவோம்!

அழியாத ஆன்மாவும் அழியாத உடலும்உடல் அழிவது இயற்கை; ஆன்மா அழியாதது என்பது நம்பிக்கைஒரு சிலர் தாங்கள் செய்த தியாகச் சேவையால் அழியாத உடலைப் பெற்று திரு அவையின் நம்பிக்கைக்குச் சாட்சியாகின்றனர். 472 வருடங்கள் கடந்தும் உடல் அழியா வரம் பெற்ற புனிதர் தூய சவேரியார். நம் தாய்த் திருநாடு இவரின் தியாகச் சேவையையும், அழியாத உடலையும் பெற்றிடக் கொடுத்து வைத்திருக்கிறது. இந்த அழியா உடலுக்கு அப்பால், அவர் செய்த தியாகங்கள் நமது உடலையும் உதிரத்தையும் உலுக்கிப் போடுகிறது.

துறவு வாழ்வில் தியாகம்: ஸ்பெயின் நாட்டில்  நவாரே என்ற ஊரில் 1506, ஏப்ரல் 7-ஆம் தேதி அரண்மனையில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், 1534-ஆம் ஆண்டு இயேசு சபையைத் தொடங்குவதில் புனித இஞ்ஞாசியாரோடு சேர்ந்து முக்கியப் பங்கு வகித்தவர். புனித இஞ்ஞாசியாரிடமிருந்து நேரடியாகப் பெற்ற ஆன்மிகப் பயிற்சிகள் வழியாகத் தான் பெற்ற தெய்வீகத் தியாகமே இவரது அழியாத உடலின் அடித்தளமானது. இயேசு சபையில் சேர்ந்து முற்றிலும் ஏழ்மையில் இயேசுவைப் பின்பற்றுகிறார். இவரிடம் இருந்த சொத்தே பாடுபட்ட சுரூபம், குருக்களின் கட்டளைச் செபம், மாற்று உடை, குறிப்பேடு மட்டுமே.

கீழ்ப்படிதலைப் பொருத்தமட்டில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், புனித இஞ்ஞாசியாருக்கு இவர் எழுதிக் கொடுத்தது யாதெனில், “உலகின் எந்தப் பகுதியில் நான் இருந்தாலும், என் தலைவர் இஞ்ஞாசியாருக்கு எல்லாவற்றிலும் நான் கீழ்ப்படிவேன் என்றும், அத்தோடு இன்னும் இரண்டு வார்த்தைப்பாடுகளின்படி தவறாமல் நடப்பேன்என்பதுமாகும். கற்பு வார்த்தைப்பாட்டைப் பொறுத்தமட்டில் புனித இஞ்ஞாசியார் இட்டக் கட்டளைக்கு முழுமையாக எந்நேரத்திலும், எச்சூழ்நிலையிலும் தயாராக இருந்ததே துறவு வாழ்வில் தியாகத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

தோழமையில்  தியாகம்: புனித இஞ்ஞாசியாருக்குக் கிடைத்த முதல் தோழமை புனித பீட்டர் பேபரும், புனித சவேரியாரும். புனித இஞ்ஞாசியார், புனித பீட்டர் பேபரிடம் மரியாதை வைத்திருந்தார் என்றால், புனித பிரான்சிஸ் சவேரியாரிடம் பாசமும், அதிக அன்பும் கொண்டிருந்தார். தன்னைவிட 15 வயதிற்குக் குறைவாக இருந்தாலும், சக தோழமையின் ஆழம், அகலம் அதிகமாகவே இருந்தது. புனித இஞ்ஞாசியார் இவரைத் தனது செயலராகவும், உற்ற நண்பராகவும் வைத்திருந்தார். 1530 முதல் 1535 வரை இவர்களிடமிருந்த ஆழமான தோழமை தனக்குப் பின் சரியான தலைவராகக்கூட இவரை நினைத்திருக்கலாம். புனித சவேரியாரைப் பற்றி பல இடங்களில் இஞ்ஞாசியார் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

புனித சவேரியாருக்கு மட்டும் இஞ்ஞாசியார் எழுதிய கடிதங்களில்இயேசு சபைத் தலைவர்என்று குறிப்பிடாமல், ‘இனிகோஎன்று செல்லமாக, பாசமாக, தனது கையொப்பத்தை வைத்து எழுதுகிறார். 1540-ஆம் ஆண்டு  புனித  இஞ்ஞாசியார் இந்தியாவுக்குச் சவேரியாரை அனுப்பிட அழைப்பு விடுத்தவுடன், ‘உடனே தயார்என்று சொல்லிப் புறப்படுகிறார் சவேரியார். இங்கு புனித இஞ்ஞாசியார் தனது இதயத்தைக் கிழித்தது போன்ற உணர்வு இருந்ததாகச் சொல்கிறார். தன் தோழர் புனித இஞ்ஞாசியாருக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு என்று வந்தாரோ, அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு. அதன்பின் இருவரும் இறுதிவரை சந்திக்கவே இல்லை. இதயங்கள் உடைய உதயமானதுதான் இந்தியத் திரு அவை.

பணிவாழ்வில் தியாகம்: உரோமையில் 1537, ஜூன் 24 -ஆம் தேதி அன்று வெனிஸ் மறைமாவட்ட ஆயரால் புனித இஞ்ஞாசியாருடன் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் புனித சவேரியார். 1534, ஆகஸ்டு மாதம் முதல் இவர் செய்த பணி நோயாளிகளின் படுக்கைகளை ஒழுங்குபடுத்தி, அவர்களைக் குளிப்பாட்டி உணவூட்டி விடுவது, சிறுநீர் மற்றும் மலச்சட்டிகளைத் துப்புரவு செய்வது, தரையைப் பெருக்கி சுத்தம் செய்வது, ஆதரவற்று இறந்தவர்களுக்குக் கல்லறை தோண்டி, அவர்களை அடக்கம் செய்வது, இரவில் நோயாளிகளுக்குப் பக்கத்தில் கண்விழித்து உதவுவது போன்றவை. கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இப்பணிகளைச் செய்யும் அளவிற்கு மிகுந்த தாழ்ச்சியையும், தியாகத்தையும் பெற்றிருந்தார்.

மறைபரப்புப் பணிக்காக  கோவா வந்தடைந்த நம் புனிதர் கால்நடையாகவே தன் பணியைச் செய்கிறார். அவர் நடந்தது மட்டும் இலட்சக்கணக்கான மைல் தூரம். திருமுழுக்குக் கொடுத்துக் கொடுத்து கைகள் வலிப்பதாகக் கடிதம் எழுதுகிறார். திருத்தந்தையின் தூதராக வந்தவர் இங்கே மிக ஏழ்மையில் பணிசெய்துள்ளார். அதற்குச் சாட்சியாக மணப்பாடு குகைக்கோவிலில் உருவாகும் நன்னீர் ஊற்று இன்றும் சான்று பகர்கிறது.

ஜப்பானிலிருந்து சவேரியார் எழுதிய கடிதம் ஒன்றில்என் தந்தைக்குப் பெரும் நன்றியுணர்வோடு மண்டியிட்டு எழுதுகிறேன். கடவுளின் சித்தத்தை அறியவும், துணிவோடு அதைச் செயல்படுத்தவும் செபிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். நீவிர் வாழ்க! - வெகு தொலைதூர நாடு கடந்து வாழும் தங்களின் மிகச்சிறிய மகன்என்று குறிப்பிடுகிறார். இறுதியாக, சீனாவில் பணியாற்ற விரும்பி சாங்சோங் தீவில் இருந்தபோது உடல் நலக்குறைவால் 1552, டிசம்பர் 3-ஆம் தேதி இறைப்பதம் அடைந்தார். 46 வயதில் இறைபதம் அடைந்து அழியா உடல் பெற்ற இவர் புனித இஞ்ஞாசியாருக்கு மிஞ்சிய சீடனாகிறார்.