news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக! – 04

எழுந்து ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!” (எசா 60:1). உண்மையான இறைவார்த்தையில் (யோவா 17:17) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒளி வீசி, இறைவனின் மாட்சி தம்மேல் உதித்திருப்பதை உணரமுடியும். உலகின் ஒளியான இயேசுவில் நிறைந்த நம்பிக்கை வைப்போம். இந்த நம்பிக்கை ஒளி எங்கும் ஒளிர வேண்டும் என்றால், நாம் அனைவரும் இயேசுவோடு இணைந்து, அகில உலகக் குடும்பமாக,  நல்மனமுடைய மக்களாக, அமைதியின் தூதுவர்களாக, ஒருமனப்பட்ட சமத்துவச் சமுதாயமாக, சகோதர உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும்.

இந்த ஒன்றுபட்ட வாழ்வின் மேன்மையை வெளிப்படுத்தி தந்தையிடம் இயேசு மன்றாடினார். “நாம் ஒன்றாக இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை அவர்களுக்கு அளித்தேன் (யோவா 17:22). இந்த மாட்சிதான் ஒவ்வொருவரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி. இறைவார்த்தையே நம் ஆற்றல். எழுச்சியுடன்  பணியாற்ற நம்மைத் தூண்டும் உந்துசக்தி. உயர்ந்த இலக்கினை நோக்கி நம்மை வழிநடத்தும் ஒரே வழி. நமது வாழ்வும் உன்னத வழியும் உண்மையுமான இயேசு கூறுகிறார்: “தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு அண்மையில் உள்ளது (லூக் 21:28).

இயேசுவின் வார்த்தை ஒளிமயமானது. நம்மில் செயலாற்றும் வல்லமை கொண்டது. புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோலகடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார் \"(பிலி 3:13). வல்லமையுடன் புரியும் பணி நூறு மடங்குப் பலன் தருவது உறுதி. ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் சவால் நிறைந்த செயல்களும் நம்மை ஒளியாக ஒளிரச்செய்யும். இந்த உண்மையை என் வாழ்வில் நிறைவேற்ற அருள்கூர்ந்த ஆண்டவரின் வியத்தகு செயல்களை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

2000-ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டவரின் மேன்மை மிக்கச் செயலை, அதிசயங்களை அனுபவித்த காலம். சாம்பியா நாட்டின் தலைநகரான லுசாகாவில் அமலவை சகோதரிகளாகிய நாங்கள் மறைமாநில மேய்ப்புப்பணி நிலையத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்தோம். அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்த இயேசு சபைக்குரு ஒருவர்இந்தப் பணி செய்யவா இங்கு வந்தீர்கள்?” என்று சவால் நிறைந்த வார்த்தைகளைக் கூறினார். இந்தச் சவாலை ஏற்று இறையுதவியை நாடினோம். அதே நேரத்தில் அந்த மறைமாநிலத்தின் பேராயர் மேதகு மெடார்டோ மசோம்ப்வே அவர்கள், யூபிலி ஆண்டின் நினைவாக ஆதரவற்ற அனாதைகளாக உள்ள சிறுமிகளுக்கு ஓர் இல்லம் அமைத்து அவர்களைப் பராமரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். நாங்கள் அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டோம். இறைவனுடைய பராமரிப்பும் பாதுகாப்பும் மிகத் துரிதமாகச் செயல்பட்டது. மர்ஃபி என்ற ஆங்கிலேயர் உதவிக்கரம் நீட்டினார். தூதரகங்களைச் சந்தித்து உதவிபெற உறுதுணையாய் இருந்தார். நார்வே தூதரகம் ஐந்து வீடுகளை அமைக்க உடனே நிதிஉதவி செய்தது. ஓர் இல்லத்தில் 10 சிறுமிகள் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 5 தாய்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்குத் தேவையான கோழிப்பண்ணை அமைக்க கனடா தூதரகம் உதவியதும், காய்கறித் தோட்டம், மீன் குளம் போன்றவற்றை அமைக்க இந்தியத் தூதரகம் உதவியது.

அனைத்தும் மிக விரைவிலேயே தயாராகின. பங்குகளைத் தொடர்புகொண்டு சிறுமிகளை இல்லத்திற்கு அழைத்து வந்தோம். இப்படி ஓர் இல்லம் உருவாகி உள்ளதை அறிந்த மக்கள் மிகத் தாராளமாகப் பொருளுதவியும் நிதியுதவியும் அளித்து மகிழ்ந்தனர். “ஆண்டவரே, உம்மைப் போற்றி நன்றிகூறுகிறோம்; ஏனெனில் நீர் நல்லவர்; உமது பேரன்பு என்றென்றும் நிலையாய் உள்ளதுஎன்று நன்றிப்பா இசைத்து மகிழ்ந்து ஆண்ட வரிடம் சரணடைகின்றோம். இத்தகைய வகையில் தான், நம்மைத் தம் சீடர்களாக, உலகின் ஒளியாக உருமாற்றி, தந்தையை மாட்சிப்படுத்தும் வகையில், இயேசு ஆண்டவர் நம்மோடு இருந்து செயலாற்றுகின்றார். இறையாட்சிக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்ட நாம் வாழ்வைப் பற்றிய வார்த்தையை உலகில் ஏந்தி நின்று உலகில் சுடர்விடும் ஒளியாகத் திகழ்வோம்.

news
ஆன்மிகம்
துகிலும் தூய்மையும் (சதுக்கத்தின் சப்தம் – 6)

இயேசு, தனது இறுதி இராவுணவின்போது, தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவருக்கு ஓர் அப்பத்துண்டை வழங்கும் தருணமானது, தன்னைப் பகிர்வதற்கான ஓர் அடையாளம் மட்டுமல்லாமல், தன்னைச் சீடர்கள் கைவிட்டுவிடாமல் இருப்பதற்கான அன்பின் கடைசி முயற்சியாகும் என்பதை மிகவும் அதிர்ச்சியூட்டுகின்ற மற்றும் ஒளியூட்டுகின்ற அடையாளச் செயல்களில் ஒன்றைக் கருவியாகக் கொண்டு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்டார்.

நற்கருணையின் மகத்துவத்தில் மானுடன்

1979-ஆம் ஆண்டு, தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னதாக, பேராயர் ஃபுல்டன் ஜே ஷீன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர் அவரிடம், “பேராயராகிய உங்களின் செயல் மற்றும் வாழ்க்கை பல மில்லியன் மக்களுக்கு ஊக்கமளித்துள்ளன. அதுபோல் உங்களுக்கு ஊக்கமளித்தவர் யார்? திருத்தந்தையா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராயர், “எனக்கு ஊக்கமளித்தது திருத்தந்தையோ, கர்தினாலோ, ஆயரோ, குருக்களோ அல்லது அருள்சகோதரிகளோ அல்ல; மாறாக அது ஒரு பதினோரு வயது சிறுமிஎன்று தனது அனுபவ நிகழ்வினைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

1940-களின் முடிவில், சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, கிறித்தவ ஆலயங்களைத் தாக்கிய அவர்கள் ஒரு குருவானவரை அவருடைய அறையிலேயே சிறை வைத்தனர். அக்குருவானவர் சன்னலின் வழியாகப் பார்த்தபோது, ஒரு காவலன் ஆலயத்திற்குள் சென்று, புனித இயேசுவைத் தாங்கிய நற்கருணைப் பேழையைத் தரையிலிட்டு உடைத்துச் சிதைத்தான். அந்த நேரத்தில் ஆலயத்தின் பின்புறம் செபித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, காவலர்கள் உள்ளே வந்ததும் மறைந்துகொண்டாள். அந்த இரவு தொடங்கி ஒவ்வொரு நாளும் அவள் வந்து, ஒருமணி நேரம் செபித்துப் பின், அவள் அந்தச் சிதைக்கப்பட்ட இடத்தில் கிடக்கும் திவ்விய நற்கருணையிலிருந்து ஒவ்வொன்றாக, ஒவ்வொரு நாளும் உட்கொண்டு வந்தாள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் காவலன் ஒருவனிடம் அகப்பட்ட அவளை, காவலன் துப்பாக்கி முனையில் அடித்துக்கொன்றான். இதைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த குருவானவரே அதற்குச் சாட்சி என்றும், அதனால் மிகவும் ஆழமாகத் தூண்டப்பட்ட நான் ஒரு முடிவை எடுத்தேன்: “நான் என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது, இயேசுவின் முன், திவ்விய நற்கருணையின் முன் செபிக்க வேண்டும்என்பதுதான் என்று கூறினார்.

இதை என் நினைவாகச் செய்யுங்கள்:

நற்செய்தியாளர் யோவான், தனது ஆழ்ந்த ஆன்மிக உணர்திறனுடன், இந்நிகழ்வை நமக்கு விவரிக்கிறார். “இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், அவர்கள் மேல் இறுதிவரை அன்பு செலுத்திய இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவிஇதை என் நினைவாகச் செய்யுங்கள்என்று தன்னையே பகிர்ந்து சென்றார் (யோவா 13).

இறுதிவரை அன்பு செலுத்துதல் என்பது கிறிஸ்துவின் இதயத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல். நிராகரிப்பு, ஏமாற்றம், நன்றியின்மைக்கு முன்னால் நிற்காத நிலையான அன்பு இயேசுவின் அன்பு. இயேசுவுக்கு அவரது நேரம் தெரியும். ஆனால், அவர் அதை எண்ணி வருந்தவில்லை, மாறாக அதனை அவர் தேர்ந்தெடுக்கிறார். தனது அன்பானது, மிகவும் வேதனையான காயத்தை, துரோகத்தின் வழியாகக் கடந்து செல்லவேண்டும் என்ற சூழலை அவர்தான் அங்கீகரிக்கிறார்.

பின்வாங்குதல், குற்றம் சாட்டுதல், தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்குப் பதிலாக, அவர் தொடர்ந்து அவர்களை அன்பு செய்கின்றார். அவர்களின் காலடிகளைக் கழுவி தன் துகிலால் துடைக்கிறார், அப்பத்துண்டைத் திராட்சை இரசத்தில் நனைத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் (யோவான் 13:26) என்று தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென அறிவிக்கின்றார் இயேசு.

பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்:

எளிய மற்றும் தாழ்மையான செயல்களின் வழியாக, இயேசு தனது அன்பை முன்னோக்கியும் அதன் ஆழத்திற்கும் கொண்டு செல்கிறார். என்ன நடக்கிறது என்பதைப் புறக்கணிப்பதற்காக அல்ல; மாறாக, என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாக, துல்லியமாகக் காண்பதால் அவ்வாறு செய்கின்றார். தீமையில் நாம் தொலைந்து போனாலும், மற்றவரின் சுதந்திரத்தை, மென்மையான அடையாளச் செயல்களின் ஒளியால் அடைய முடியும் என்பதை வலியுறுத்துகிறார். ஏனெனில், உண்மையான மன்னிப்பு மனந்திரும்புதலுக்காகக் காத்திருக்காது, மாறாக, ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே, இலவசமாகக் கொடையாக வழங்கப்படுகிறது என்பதைத் தனது செயல்களால் எடுத்துரைக்கின்றார். இயேசுவின் இத்தகைய மனநிலையானது, யூதாசுக்குப் புரியவில்லை. “அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான் (யோவா 13:27) என்று நற்செய்தி கூறுகிறது. அந்த அப்பத்துண்டுதான் நமது மீட்பு.

நமது வாழ்விலும் கடவுளை நாம் நிராகரிக்கும் நேரத்தில் கூட, கடவுள் நம்மை அடைவதற்காக எல்லாவற்றையும் - முற்றிலும் எல்லாவற்றையும் நமக்காகச் செய்கின்றார் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசு நமக்காக நிறைவேற்றும் மறைபொருள் இதுதான், இம்மறைபொருளில் நாமும் சில நேரங்களில் பங்கேற்க ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறோம்.

தி ஸ்டோல் அண்ட் தி டவல்

தி ஸ்டோல் அண்ட் தி டவல் (The Stole and the Towel) என்பது ஒரு புத்தகத்தின் தலைப்பு, இது 58 வயதில் வயிற்றுப் புற்றுநோயால் இறந்த இத்தாலிய ஆயர் டோனினோ பெல்லோவின் செய்தித் தொகுப்பு. 1993-ஆம் ஆண்டு புனித வியாழன் அன்று, தனது மரணப் படுக்கையில் இருந்தபோது, அவர் தனது மறைமாவட்டத்தின் குருக்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில்தி ஸ்டோல் அண்ட் தி டவல்பிணைக்கப்பட வேண்டும் என்று அவர் அவர்களை வலியுறுத்தினார். ‘தி ஸ்டோல்என்பது நாம் கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதைக் குறிக்கிறது, மேலும்தி டவல்என்பது நாம் நமது சேவையின் மூலம் மனிதகுலத்துடன் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. நற்கருணைப் பிரசன்னத்தில் இறைவனுடன் ஒன்றுபடவும், மக்கள் தங்கள் ஊழியராகக் குருக்கள் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார்.

ஏன் இந்த உணவு?

ஏன் இயேசு, தம்மை நினைவுகூர ஓர் உணவினைத் தேர்ந்தெடுத்தார்? ஏனெனில் நாம் ஒருபோதும் சாப்பிடுவதை மறக்கமாட்டோமென்பது உறுதி! உணவின் வழி மகிழ்ச்சி, நட்பு, மற்றும் உணர்வை ஒன்று சேர்க்கிறது. ஆனால், ஒரு நல்ல உணவை உருவாக்க, பலியீடு, பரிவு, கவனம் ஆகியவை தேவைப்படுகிறது. அந்த உணவு நமக்குள் உயிரணுக்களாக உடைந்து, கலந்து, சிதைந்து ஆற்றலை அளிக்கிறது.

நற்கருணை என்பது, நம்மால் கொண்டாடப்படவும், அவரை நினைவுகூரவும் இறைமகன் இயேசுவால் விட்டுச் சென்ற மிகப்பெரிய தடம். சமாரியாவில் அது தண்ணீர், கானாவில் அது திராட்சை இரசம், நகர்ப்புறத்தில் ஒரு சிறுவனின் அப்பமும் மீனும், கடற்கரையில் மீண்டும் பேதுருவுக்காக, கனானிய பெண்ணுக்கும் இலாசருக்கும், மேலும், எம்மாவு செல்லும் பயணத்தில் என அப்பம் இயேசுவின் மறு உருவானது. உணவின் மகத்துவம், பங்கேற்பும் நன்றியும் என்பதை மார்த்தாவின் கவனிப்பிலும் பேதுரு மாமியாரின் விருந்திலும், சிமியோனின் வீட்டில், “அவர்களுக்குச் சாப்பிடக் கொடுங்கள்என்ற உத்தரவிலும் பிரதிபலிக்கிறது.

உணவான, மனுவான இறைவன்

2015-ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் உள்ள குர்ரான்  - ஃப்ரோம்ஹோல்ட் சீர்திருத்த விடுதிக்குச் சென்ற, மறைந்த நம் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ், “வாழ்க்கை என்பது, நமது வரலாற்றில் கலந்த தூசித்தடங்களில் நம்முடைய கால்களை மாசுபடுத்திக்கொள்வதே. ஆகவே, நாம் அனைவரும் சுத்தம் செய்யப்பட வேண்டியவர்கள், கழுவப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்என்றார். பாவத்தின் கறைபடிந்த நம் வாழ்வின் பக்கங்களை, இயேசுவின் செந்நீர்த்துகில் கொண்டு தூய்மையாக்குவோம்.

news
ஆன்மிகம்
கொடியும் கொடிமரமும்

ஒருநாள் ஒரு நகர்ப்புற ஆலயத்தில் மாலைத் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, கோவிலில் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னிடம் செபிக்கக் கேட்டவர்களுக்காக வேண்டிக் கொண்டிருந்தேன். அத்தருணத்தில் ஒருவர் பீடமுற்றத்தில் சோடித்து வைக்கப்பட்டிருந்த இயேசுவின் உயிர்த்த சுரூபத்தின் முன்நின்று பக்தியோடு செபித்துவிட்டு, இயேசுவின் பாதம், கரங்கள் என்று ஒவ்வொரு பாகமாகத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததால் பராக்குக்கு ஆளானேன். பழைய மனிதனுக்குரிய, பாவ நிலையைக் களைந்துவிட்டு புதிய மனிதனாகப் பாஸ்கா காலத்தில் மாறிய அவர், புது மனிதனாக வாழ முற்பட்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

அவர் வெளியே சென்றபின், நான் மாதா கெபியின் முன்சென்று செபித்துவிட்டுத் திரும்பும்போது, அதே ஆள் கோவிலின் முன்பு நிறுவப்பட்டிருந்த பொன், வெள்ளி, உலோகத் தகடு சுற்றப்பட்டுபளபளஎன மின்னொளியில் மிளிர்ந்த கொடிமரத்தையும் மாறி மாறித் தொட்டுக் கும்பிட்டு விட்டு, தன் பையனையும் அவ்விதம் செய்யும்படி பணித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதை? ஏன்? எதற்காகக் கும்பிடுவது? என்ற விஷயத்தில் இன்னும் பழைய மனிதனாகவே இருக்கிறாரே? என வருந்தினேன். ஆனால், அவரிடம் உடனே என்ன, எப்படிச் சொல்வது? என்று வகையறியாமல் அமைதியாக குருவின் இல்லத்துள் சென்றுவிட்டாலும், இது பற்றிய உண்மை எதுவாக இருக்கும் என்ற சிந்தனை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சிலருக்குவணக்கம்எனக் கூறி வாழ்த்துகிறோம் அல்லது மிகவும் மரியாதைக்குரிய ஒருவராக இருந்தால் கைகூப்பி கும்பிடுகிறோம். நமக்கும் மற்றவர்கள் இவ்விதமே செய்கின்றனர். கும்பிடுகிற செயல் மட்டும் ஏதாவது ஒருவகையில் ஆன்ம வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கும் அல்லது மிகவும் எளியவர் ஒருவர் வசதி படைத்தவரிடம் உதவி எதிர்பார்த்துச் செய்கின்ற செயலாக இருக்கும். ஆனால், காலில் விழுந்து கும்பிடுவது தவிர, உயிருள்ள மனிதரை யாரும் தொட்டுக் கும்பிடுவது இல்லை.

ஆனால், ஓர் உயிரற்றப் பொருளுக்கு வணக்கம் செலுத்துவதோ, அதை கைகூப்பிக் கும்பிடுவதோ சில நேரங்களில் மட்டுமே. உதாரணமாக, நமது தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதும், திருவுருவங்களைக் கும்பிடுவதும்! ஒன்று, நாட்டுப்பற்றை, தேசபக்தியை வெளிப்படுத்தும் செயல். மற்றொன்று, புனிதர் அல்லது புனிதைமீது நம் பக்தியைக் காட்டும் செயல். அதுபோல புனித இடங்கள் என நாம் நம்புகிற இடங்களிலிருந்து கொண்டு வருகின்ற பொருள்களை வணக்கத்தோடு, மறையாட்டியோடு வைத்துக் கொள்கிறோம். அவை உணவுப்பொருளாய் இருந்தால் அவைகளை மரியாதையோடு உண்டு மகிழ்கிறோம். (.ம்) திருவிழா - மிட்டாய்.

அதேநேரத்தில் தேசியக் கொடியைக் கம்பத்தில் பறக்கவிட்டால்தான் வணக்கம் செலுத்துவோமே தவிர, அதை மடித்துப் பெட்டிக்குள் வைத்தபின் வணக்கம் செய்வதில்லை. அதுபோல, கொடிக்கு மட்டும்தான் வணக்கமே தவிர, கொடியைத் தாங்கும் கொடிமரத்திற்கோ, கொடிக் கம்பத்திற்கோ யாரும் (salute) வணக்கம் செலுத்துவதில்லை. கொடிமரம்/கம்பம் முக்கியத்துவம் பெறுவது அந்த மரத்திலோ அல்லது கம்பத்திலோ இருந்து கொடி எப்பொழுது பறக்கிறதோ அப்பொழுது மட்டும்தான்! அதுவும் கூட திரு விழாக் கொடியோ, தேசியக் கொடியோ, கட்சிக்கொடியோ, மன்றக்கொடியோ பறக்கின்றது என்றால், அந்தக் கொடிக்கு மட்டும்தான் வணக்கமும் கும்பிடுவதும் இருக்குமே தவிர, கொடிமரத்திற்கோ/கம்பத்திற்கோ அல்ல; ஏறக்குறைய பூவும் நாரும் போலதான்.

அண்மைக்காலத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் பிற மதத்தவரைப் பின்பற்றி கொடிமரத்திற்கும் கூட மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து, அது பயன்படும் திருவிழா நாள்களில் மட்டுமல்லாமல், மற்ற நாள்களிலும் கொடியில்லாதபோதும் அந்த மரத்திற்கு / கம்பத்திற்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அதைச் சுற்றி வருவதும் கும்பிடுகிற பழக்கமும் நமது மக்களில் சிலரிடையே புகுந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல, வருத்தத்திற்கும் உரியது! அதோடு ஒருவரைப் பார்த்து ஒருவர், ஒவ்வொரு கோவிலிலும் இக்கொடிமரத்தை பொன், வெள்ளி, உலோகத் தகடுகளால் அழகுப்படுத்திப் பெருமை தேடுவதோடு, பரிதாபத்திற்குரிய வகையில் அந்த மரத்தைத் தொட்டு கும்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றித் திரு அவைத் தலைவர்களும் எதுவும் கூற இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான், ஊர் ஊராக இந்த நோய், அதாவது கொடிமரத்தை பொன், வெள்ளி, தகடுகளால் அழகுபடுத்தும் நோய் பரவிக் கொண்டே இருக்கிறது.

கொடி, கொடிமரம் இதைப்பற்றித் திரு அவையின் தெளிவான போதனை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், வாடிக்கை, வழக்கம் என்ற பெயரிலும் அங்கு எப்படி? இங்கு அப்படி? என்ற பிறர் சொல்வதைக் கேட்டும், அநேகச் சடங்கு முறைகள்இவை சரிதானா? அர்த்தமுள்ளவையா?’ எனக் கேட்கக்கூடிய அளவுக்குப் புகுந்துவிட்டன. ஒரு திருவிழாவுக்குரிய நவநாள்களில் ஆரம்ப அடையாளமாக மட்டுமே கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. கொடிமரத்தில் ஏற்ற அக்கொடியைப் பறக்க விடுவதும் ஓர் அடையாளச் செயலே என்பதை குரு அக்கொடியை அர்ச்சிக்கும்போது, ‘இக்கொடி உயர ஏற்றப்படுவதுபோல மக்களுடைய உள்ளங்களும் விண்ணகம் நோக்கி உயர்த்தப்படுவனவாக! இந்த நவநாள்களில் இக்கொடியைக் காண்போர் அனைவரும் தங்கள் பாதுகாவலர் / பாதுகாவலியை நினைவுகூர்ந்து அவர்தம் மாதிரியைப் பின்பற்றி உமக்கு உகந்தவர்கள் ஆவார்களாகஎன்ற செபத்திலிருந்து அறியலாம்.

இந்தக் கொடியின் ஆயுள், அது கொடிமரத்தில் ஏற்றப்பட்ட நாளிலிருந்து விழா முடிவில் இறக்கப்படும் நாள் வரையில்தான். கொடி ஒரு திருப்பண்டம் (relics) அல்ல; எனவே, அதைத்திருக்கொடிஎன்று குறிப்பிடுவதும் பொருத்தமானதல்ல. அர்ச்சிக்கப்பட்ட எல்லாப் பொருளும் திருப்பொருள் ஆகிவிடுவதில்லை; கொடிமரமும் முக்கியத்துவம் பெறுவது அதில் ஏற்றப்படும் கொடியினால்தானே தவிர, அந்தக் கொடிமரமும், கல்தூணோ, பொன், வெள்ளி, தகடுகளால் சுற்றப்பட்டதோ என்பதெல்லாம் எந்த வகையிலும் முக்கியமானவை அல்ல; பொருளற்றதும் கூட (immaterial). ஏனெனில், கொடியும் கொடிமரமும் நமது உள்ளங்களை விண்ணகம் நோக்கி உயர்த்தப்பட தூண்டவும், அதற்கு உதவியாக நடைபெறும் நவநாள் வழிபாடுகளில் தகுதியோடு பங்குபெற்றுப் பயனடையத் தூண்டவுமே!

ஒரு திருவிழா முடிந்து அடுத்த ஆண்டு திருவிழா வரைக்கும் அந்தக் கொடியோ, கொடிமரமோ யாருக்கும் எவ்விதத்திலும் அடையாளமாகவோ, உண்மையாகவோ பயன்படுவதில்லை. எனவே, பல இடங்களிலோ, சில இடங்களிலோ இப்படிச் செய்கிறார்கள் என்பதற்காகக் கொடிமரத்திற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும், இத்தகைய கொடிமரத்தைத் தொட்டுக் கும்பிடுவதும் சரியா? என்ற கேள்வியும் எழும்புகிறது.

மேலும், திருவிழாவை முன்னிட்டு மட்டும் புனிதப்படுத்தப்படுகிற கொடியையோ, கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிடலாம் என்பது சரியென்றால்அதே திருவிழா சமயத்தில் புனிதப்படுத்தப்படுகிற புனிதரோ/புனிதையோ பவனி வருகின்ற தேர், சப்பரம் இவைகளையும் மற்ற நாள்களிலும் அவ்விதம் தொட்டுக் கும்பிட வேண்டுமா? என்ற கேள்வியும் சரிதானே! ஏற்கெனவே பல இடங்களில் கொடிமரத்திற்கு பொன்/வெள்ளி தகடுச் சுற்றி வைத்திருப்பதுபோல இனி சப்பரத்திற்கும் தேருக்கும்... ஏன் கொடிக்கும்கூட அவ்வித முக்கியத்துவம் கொடுத்துவிடாமல் தடுக்க வேண்டியது அந்தந்த இடத்தில் உள்ள அருள்பணியாளரும், அவருடைய ஆயரும்தானே தவிர வேறு யார்?

நமது வேதம், தொட்டுக் கும்பிடுவதில் திருப்தி அடைகிற வேதம் அல்ல; நமது நம்பிக்கையும் கூடத் தொட்டு கும்பிடுவதில் அல்ல; மாறாக, நாம் நம்புகிற உண்மைகளை வாழ்வில் ஏற்று, வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதானே உண்மை! எனவே, கொடியோ கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிட்டு அவைகளைக் கறைபடுத்துவதற்குப் பதில், சரியில்லாத (மூட) நம்பிக்கை எனும் கதைகளை இறைவார்த்தைகளைக் கொண்டு நீக்கி, இறைவார்த்தைகளின்படி வாழ்ந்து இயேசு (லூக் 11:28) கூறுவதுபோல பேறுபெற்றோரோடு இணைவோம். லூக்கா 8:21-இன்படி இயேசுவின் தாயும் சகோதரருமாய் திகழ்வோம்.

news
ஆன்மிகம்
புனித தேவசகாயம் ‘பொதுநிலையினரின் பாதுகாவலர்’

புனித தேவசகாயம் இந்தியத் திரு அவையின் முதல் மறைச்சாட்சி; முதல் பொதுநிலைப் புனிதர்; இன்றுபொதுநிலையினருக்குப் பாதுகாவலர்என்ற பெருமைகளுக்கு மகுடம்  சூடக்கூடியவர் நம் புனிதர் புனித தேவசகாயம். எட்டு மாதங்கள் தன்னைத் தயாரித்துகடவுள் என் உதவி (துணை) என்று நீலகண்டபிள்ளையாக இருந்த இந்துமத அரண்மனைக் காப்பாளர் திருமுழுக்குப் பெற்ற ஏழே ஆண்டுகளில், தன்னைக் கிறிஸ்துவுக்காகக் குண்டுகளினால் குருதி சிந்திப் பலியானார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கடவுள் என்பது மன்னர்களின் ஆட்சியில் புதிதல்ல; அதிலும், அவர்களையே கடவுள் என்பது வரலாற்றிற்கு அப்பாற்பட்டது அல்லஆனால், “கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை (8:4), “நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து...” (8:6) என்று கொரிந்து மக்களுக்குப் புனித பவுலடியார் கூறுவது போல, இவரும் ஆண்டவர் இயேசுவையே ஒரே கடவுளாக, வாழ்வின் ஊற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்தார்.

வாழ்க்கை வாழ்வதற்கேஎன்ற அதிநவீன காலத்தில், ‘வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்ந்தோம்?’ என்று அலசி ஆராய வேண்டும். வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், இன்றும் பல உள்ளங்களில் வாழ்கிறோம் என்பது வாழ்வின் உச்சத்தின் பொருளமைந்த இறையருள்.

1712-இல் பிறந்த இவர், 1745-இல் திருமுழுக்குப் பெற்ற புனித தேவசகாயம், திருமுழுக்கு அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தன்னுடைய மறைச்சாட்சி பணியைத் தொடர்ந்தார். தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைக் கிறிஸ்துவுக்காகத் தொடங்கிய இவருக்கு முட்டுக்கட்டுகள் ஏராளம். துன்பமும் வேதனையும் அதிகரிக்கத் தொடங்கின. மனித வாழ்வின் இறுதியும், புனித வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. கருக்கலுக்கும் காரிருளுக்கும் நடுவில் நள்ளிரவில் குண்டின் ஓசையும், குருதியின் ஓட்டமும்தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்என்ற இயேசுவின் வார்த்தையைத் தன்னில் உட்கொண்டு, “இயேசுவே என்னை மீட்டருளும்என்ற உச்சரிப்பில் நம் புனிதர் 1752, ஜனவரி 17 அன்று மரணத்தைத் தழுவினார்.

நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல; மாறாக, அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார் (1யோவா 4:10) என்கிற செய்தியே நம் நம்பிக்கையின் மையமாக இருப்பதாக என்று மொழிந்த திருத்தந்தை பிரான்சிஸ் மே 15, 2022 உரோமையில் இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இந்தியர்களின் மகிழ்ச்சியும், ஆன்மிக அருளும் பெருகிவரும் இச்சூழலில், இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CCBI) கோரிக்கையின் பேரில், திருவழிபாடு மற்றும் அருளடையாளங்களுக்கான வத்திக்கான் ஆணையம், புனித தேவசகாயம் அவர்களைஇந்தியாவின் பொதுநிலையினரின் பாதுகாவலர்எனும் திருத்தந்தையின் ஆணையை 2025, ஜூலை 16 அன்று வெளியிட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் 15 அன்று வாரணாசி புனித மரியன்னை பேராலயத்தில் முறையாக அறிவிக்கப்பட உள்ளது

கிறித்தவர்கள் ஒன்றில் தங்களது மதத்தைக் கைவிடவேண்டும்; இன்றேல் துன்புறுத்தப்பட வேண்டும் என்றால், நானும் ஒரு கிறித்தவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னிடமிருந்து துன்புறுத்தலைத் தொடங்குங்கள்என்று மொழிந்த நம் புனிதர், நமக்கெல்லாம் பாதுகாவலராகத் திரு அவையால் உயர்த்தப்பட்டுள்ளார்.

நம்மில் ஒருவர் நமக்குப் பாதுகாவலர் என்ற பெருமகிழ்வில் நாமும் பயணிப்போம், புனிதர்களாவோம்!

news
ஆன்மிகம்
இளம் புனிதர் கார்லோ அக்குதிஸ்

புனிதர்கள் என்பவர்கள் பழங்காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது நவீன உலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் என்று பலர் நினைக்கலாம். ஆனால், புனித கார்லோ அக்குதிஸ் அதற்கு முற்றிலும் மாறுபட்டவர். இணைய யுகத்திலும் புனிதர்கள், அசாதாரணமான விசுவாசத்தைக் கொண்ட சாதாரண இளைஞர்களாக இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

கார்லோ அக்குதிஸ் மே 3, 1991 அன்று இலண்டனில் பிறந்தார். மதம் சாராதப் பெற்றோருக்குப் பிறந்தாலும், சில வாரங்களிலேயே அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. பின்னர், அவருடைய குடும்பம் இத்தாலியின் மிலான் நகருக்குக் குடிபெயர்ந்தது. பெற்றோர் வேலைக்குச் சென்றதால், கார்லோ பெரும்பாலும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே அவர் கத்தோலிக்க நம்பிக்கையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பராமரிப்பாளர்களில் ஒருவர் அவரின் கத்தோலிக்க நம்பிக்கை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்து, அவருடைய இறைநம்பிக்கைக்கு உறுதுணையாக இருந்தார்.

இளம் வயதிலேயே இறை நம்பிக்கை

மூன்று வயதில் கார்லோவின் தாத்தா இறந்தபோது, அவர் கனவில் வந்து தனக்காகச் செபிக்கக் கூறினார். சிறிது காலத்திற்குப் பிறகு, தனது பாட்டியிடம் தனது மேலாடையை அணிந்துகொண்டு ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்று கார்லோ கூறினார். காரணம் கேட்டபோது,  “தாத்தா இயேசுவைப் பார்க்கச் சென்றுவிட்டார், அவருக்காகச் செபிக்க வேண்டும்எனப் பதில் அளித்திருக்கிறார்.

ஒருமுறை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் சில குழந்தைகள் அவரைத் துன்புறுத்தியபோது, அவர் கனிவாகவே நடந்துகொண்டார். “கோபப்பட்டால் இயேசு மகிழ்ச்சியடையமாட்டார்என்று அவர் கூறினார். இந்தக் கனிவான குணம் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்பட்டது.

விடுமுறைக்குப் பிறகு, உள்ளூர் தேவாலயத்திற்கு வரும் வயதான பெண்களுடன் சேர்ந்து அவர் செபமாலை சொல்வார். பள்ளிக்குச் செல்லும்போது சாலையில் வேலை செய்பவர்களின் பெயர்களைத் தெரிந்துகொண்டு, ஒவ்வொரு காலையிலும் அவர்களை வாழ்த்துவார்; அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகக் கூறுவார்.

ஏழு வயதில் முதல் நற்கருணை பெற்ற பிறகு, கார்லோ அடிக்கடித் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நற்கருணை முடிவில்லா வாழ்விற்கு வழி எனத் திடமாக நம்பினார். நற்கருணை வழிபாட்டிலும் ஆர்வமாகக் கலந்துகொள்வார். அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையும் இடைவிடாத கேள்விகளும் அவருடைய தாயாரை மீண்டும் கத்தோலிக்க நம்பிக்கைக்குத் திரும்பச் செய்தது. அவருடைய வீட்டில் பணி செய்த இராஜேஷ் மோகூர் என்பவருடன் கார்லோ நட்புக்கொண்டு, அவருக்குத் திருமுழுக்குப் பெற உதவினார். அக்குதிஸ் பேசியதைக்கேட்டு மோகூரின் நண்பரும் தாயாரும்கூட கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறினர்.

இணைய யுகத்தின் பயன்பாடு

இளைஞனாக இருந்த கார்லோவுக்குக் கணினி அறிவியல் மற்றும் நிரலாக்கம்மீது ஆர்வம் இருந்தது. தானாகவே நிரலாக்கம் கற்றுக்கொண்டார். சாக்ஸபோன் வாசிப்பதையும், ஹேலோ, சூப்பர் மாரியோ, போக்கெமான் போன்ற வீடியோ கேம்கள் விளையாடுவதையும் அவர் விரும்பினார். ஆனால், அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காக, வாரத்திற்கு ஒரு மணிநேரம் மட்டுமே விளையாடுவார்.

பன்னிரண்டாவது வயதிலிருந்து தனது நண்பர்களுடன் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். புனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. குறிப்பாக, புனித பிரான்ஸிஸ் அசிசியார், புனித பதுவா அந்தோனியார், புனித பிரான்சிஸ்கோ, புனித யசிந்தா மார்டோ மற்றும் புனித டொமினிக் சாவியோ ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்.

பதின்மூன்று வயதில், அற்புதங்களுக்கான இணையப்பக்கத்தையும், பின்னர் தன்னார்வத் தொண்டுக்கான இணையதளத்தையும் உருவாக்கினார். தன்னுடைய நிரலாக்கத் திறமையைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் நடந்த திருவுடல் அற்புதங்கள் மற்றும் அன்னை மரியாவின் காட்சிகள் பற்றிய தகவல்களைப் பட்டியலிட்டு ஓர் இணையதளத்தை உருவாக்கினார். இரண்டாண்டுகள் உழைத்து அந்த இணையதளத்தை 2006 அக்டோபர் 4 அன்று வெளியிட்டார்.

இளவயது மரணம் மற்றும் புனிதர் பட்டம்

இணையதளத்தை வெளியிடுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு கார்லோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் பரோடிடிஸ் என்று கண்டறியப்பட்டாலும், அவருடைய நிலைமை மோசமானதுபிறகு அவருக்குக் கடுமையான இரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபோது, அவர் தனது வலிகளைத் திருத்தந்தை மற்றும் திரு அவைக்காக ஒப்புக்கொடுத்தார்.

தன்னுடைய வலியைக் குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, ‘என்னைவிடப் பலர் அதிகமாகத் துன்புறுகிறார்கள்என்று பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனது தாயாரிடம், அம்மா, பயப்படாதீர்கள். மரணம் முடிவில்லா வாழ்க்கைக்குப் போகும் பாதை. நாம் முடிவில்லா வாழ்வை வாழத் தயாராக வேண்டும் என்று கூறி அவரைத் திடப்படுத்தினார். 2006 அக்டோபர் 12, அன்று, தனது 15 வயதில் அவர் மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கில், பல இளைஞர்களும், திரு அவையை விட்டுச் சென்றவர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

அருளாளர் மற்றும் புனிதர் பட்டம்

கார்லோ அக்குதிஸின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய புனிதர் பட்டத்திற்கான பணிகள் தொடங்கின. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன், கணையப் பிறவிக் குறைபாட்டிலிருந்து குணமடைந்தது, கார்லோவின் பரிந்துரையால் நடந்த அற்புதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அற்புதம் காரணமாக, 2020-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ், கார்லோவை அருளாளர் என்று அறிவித்தார்.

மேலும், 2022-ஆம் ஆண்டு கோஸ்டா ரிகாவில் ஒரு பெண்ணின் மூளை இரத்தக்கசிவு, கார்லோவின் பரிந்துரையால் குணமானது. இந்த அற்புதங்கள் திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டதால் அவரது புனிதர் பட்டத்திற்கான நிகழ்வு 2025 மே மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு, இந்த நிகழ்வு தள்ளிப் போவதற்குக் காரணமாய் அமைந்தது. சிறு தாமதத்திற்குப் பின், 2025 செப்டம்பர் 7, வத்திக்கானில் திருத்தந்தை லியோ அவரைப் புனிதர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்று, புனித கார்லோ அக்குதிஸ் இளம் கிறித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

news
ஆன்மிகம்
அனைத்தறன் (Integrity)

யாரை அன்புகூர்கிறோம்?

நீங்கள் நிறையப் பணம் வைத்திருப்பதால் உங்களை உண்மையாக எல்லாரும் நேசிப்பதில்லை; நீங்கள் செல்வாக்கு உடையவர்களாகவோ, மிகுந்த திறமை பல உடையவராகவோ இருப்பதால் மக்கள் உங்களை அன்பு செய்வதில்லை; மாறாக, உங்கள் மதிப்பீடுகள், பண்புகள், நன்மைத்தனங்கள் உங்கள் எளிமையைப் பார்த்து அன்பு செய்பவர்களே உண்மையான அன்பு செய்கிறவர்கள்.

இரத்தன் டாடா

பில்கேட்ஸ் உலகில் மிகப்பெரிய பணக்காரர். அவர் வியப்புறும் ஒரு மனிதரைப் பற்றிக் கூறியது எல்லாரையும் கவர்ந்தது. ‘நீங்கள் வியப்புறும் ஒருவரைப் பற்றிக் கூறுங்கள்?’ என்றபோது, “எனது இந்திய நண்பர் இரத்தன் டாடா! இவர் ஓர் அற்புதமான மனிதர். பெரிய பணக்காரர் எனினும், பணக்காரர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. காரணம், தனது வருமானத்தில் 67% ஏழைகளுக்குக் கொடுக்கிறார். வயோதிகர்களுக்கான இல்லங்களைத் திறந்து அவர்களைக் கண்காணித்து வருகிறார். ஏழைகளுக்கு உணவும் உடையும் கொடுக்கிறார். குறைந்த வருமானம் உள்ளவர்களும் கார் வாங்க வேண்டும் என்ற நோக்குடன் மிகக் குறைந்த விலையில் வாகனங்களைத் தயாரிக்கிறார். இலாபம் ஈட்டுவது இவரது நோக்கமல்ல; மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே இவரது முதல் விருப்பம். எளிமையான வாழ்வு, யாரையும் ஏமாற்றுவதில்லை, எவருக்கும் தீங்கு செய்வதில்லை. இவர் ஒரு நேர்மையாளர்; மனிதரை அன்பு செய்யக்கூடியவர்இவரை எல்லாரும் மதிக்கின்றனர். அன்பு செய்கின்றனர்என்று பதிலளித்தார்.

இது பற்றி இரத்தன் டாடாவிடம் கேட்டபோது,  “நாம் இறப்பிற்குப் பிறகு எதையும் எடுத்துச் செல்வதில்லை. ஆகவே, இருக்கும் வரையில் எல்லாருக்கும் நன்மை செய்வோம்என்பது இவரது பதில்இவரது இறப்பு இந்தியாவிற்குப் பேரிழப்பு.

அன்னை தெரசா

இதே கருத்தை அன்னை தெரசா மற்றொரு விதமாகக் கூறுவார்: எரியும் திரியிலிருந்து மற்றொரு திரியை ஏற்றுகையில், எரியும் திரி குறைந்துவிடாது; மாறாக, வெளிச்சம் இன்னும் அதிகமாகும். அதேபோல நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்தால் பிறரது வாழ்வு ஒளியைப் பெறும், நாமும் மகிழ்வாக இருக்கலாம்.”

நேர்மையாளர் எதிர்கொள்ளும் தீங்கு: மனித மதிப்பீடுகள் அவன் மாண்புடன் வாழ உதவுகின்றன. அதைத் தீயவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. “நல்லவர்களின் நாணயமான வாழ்க்கை எங்களுக்குப் பெருஞ்சுமையாக உள்ளதுஎன எதிரிகள் கூறுவதாகத் திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

சாலமோனின் ஞானம் 2:12: “நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில், அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள் (14), “அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது. அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது (20), “இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம் (21), “தீயவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டதுஎன்று கூறுவதைக் கவனிப்போம். இவ்வாறு உலகப்போக்குடன் வாழ்க்கை நடத்தும்போது மதிப்பீடுகள், உயர்பண்புகள், நல்ல மனத்துடன் நேர்மை வாழ்வு வாழ்வது கடினமாகிறது. இதைத்தான் இயேசுகுறுகலான பாதை வழியாகச் செல்லுங்கள்என்கிறார். “வாழ்வுக்குச் செல்லும் வாயில் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே (மத் 7:13-14). இயேசுவின் போதனை இறையாட்சி பற்றியது; நேர்மையாளரே இங்கு நுழைய முடியும்.

நேர்மையாளர் யார்?

நேர்மையைப் பற்றி, ஒழுக்கமுடைமை பற்றி, பண்புகளையெல்லாம் உள்ளடக்கிய தனிப்பண்பு பற்றிச் சிந்திப்பது நல்லது.

தனக்கு உண்மையாகவும் சிந்தனை, சொல், செயலில் ஒருமைப்பாட்டையும் கொண்டிருப்பதை நேர்மை (INTEGRITY) எனலாம். நல்லவர்கள் நல்ல கொள்கைகளில், சிறப்பான செயல்பாடுகளில் எந்தப் பேரமும் பேசமாட்டார்கள். இவைகள்தான் இவர்களைச் சிறப்பானவர்களாக மாற்றுகின்றன. கொண்ட கொள்கையில் நிலைத்திருந்துநீதிபிறழாமல் வாழும் இச்சிறப்பான பண்புக்கு ஈடு இணை இல்லை. அவரை அறநெறியாளர் என்பர். மாசற்றவர் என்பர். உண்மைக்கு உயிரைக் கொடுப்பவர் என்பர்.

நேர்மையாளரின் பண்புகள்:

1. சமமாக நடத்துபவர்: நேர்மையாளர் உள்ளத்தில் கபடற்றவர்; போலித்தனம் இல்லாதவர்; நீதியோடும் நேர்மையோடும் செயல்படுபவர். அவர் அஞ்சாதவர்; எல்லாரையும் மதித்து மாண்பைப் போற்றுபவர்; எல்லாரிடமும் நீதிநெறி பிறழாமல் நடப்பவர். வன்முறைக்கோ, வற்புறுத்துதலுக்கோ இணங்காமல், ஆணவத்தோடு செயல்படாமல் இருப்பவரை நேர்மையாளர் எனலாம். இவரை வழிநடத்துவது அறமே. இவரிடம் காண்பது சமத்துவம்.

2. நேர்மையோடு செயல்படுபவர்: இவர்கள் பணத்துக்காகவோ, சலுகைக்காகவோ விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கைகளில் சிறப்போடு செயல்படுபவர்கள். நல்லறம் காப்பது இவர்களின் செயல்பாடாகும்.

3. நேர்மையாளர்களை மக்கள் நம்புவர்:  நடுநிலை நின்று பிறழாமல், மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கிழைக்காது வாழ்வோர் மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவர்களாயிருப்பர். தன்னில் நேர்மையுடனும், பிறருக்கு உண்மையுடனும் வாழ்பவரை உலகம் போற்றும். நல்ல மரம், நல்ல நிலம், நல்ல நீர், நல்ல சூழல் இருக்கையில் நல்ல பலனைத் தரும். நல்ல மனிதனும் அவ்வாறே. நல்ல மனிதனைச் சுற்றி நம்பிக்கை வளரும்.

4. நல்ல மனிதர் யாருக்கும் அஞ்சார்: பணம், பதவி, அதிகாரம் அவனை எச்சரிக்கலாம், அவரைப் பயமுறுத்தலாம். ஆனால், அவர் நல்லது செய்வதில், நீதியானதைச் செய்வதில் பேரம் பேசுவதில்லை. அவர் அலைக்கழிக்கப்படலாம், பல இடங்களுக்கு மாற்றப்படலாம். நீதிக்காக எத்துயரையும் தாங்கும் நிலைப்பாடு அவரிடம் உண்டு. இவர்கள் தவறு செய்யும்போது அதற்காக மனம் வருந்தத் தயங்கார்.

5. தனது குற்றத்தை ஒத்துக் கொள்வர்:  வகுப்பில் காலம்தாழ்த்தி வந்த மாணவனுக்குத் தண்டனை வழங்கினார் அந்த ஆசிரியர். ஒருநாள் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தபோது அச்சிறு மாணாக்கன் பல வீடுகளில் காலை செய்தித் தாளைப் போட்டுவிட்டு, நடக்க முடியாத தன் அம்மாவைச்  சக்கர நாற்காலியில் ஓட்டி வந்து, உணவு கொடுத்துவிட்டுப் பள்ளிக்கு வருகையில், காலம் தாழ்த்தி வந்தான். ஆசிரியர் எந்தப் பிரம்பால் அவனை அடித்தாரோ, அதே பிரம்பை அவனிடம் கொடுத்துத் தன்னை அடிக்கக் கூறினார். தான் செய்த தவற்றிற்கு மன்னிப்புக் கோரினார். இதைக் கண்ட வகுப்பில் இருந்த மாணாக்கர் அனைவரும் அவரைப் பாராட்டி வியந்தனர்.

வள்ளுவர் தரும் விளக்கம்

மனத்தில் குற்றமில்லாதவன், தீய எண்ணங்களைக் கொண்டிராதவன் எல்லா அறங்களையும் கொண்டவனாகிறான். இவனையே அனைத்து அறங்களையும் உடையவன் (MAN OF INDEGRITY) என்று வள்ளுவர் கூறுகிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள் 34).

மேலும் வள்ளுவர்,

அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல (குறள் 39)

என்பார். ஆனால், அப்படிப்பட்டவரை இவ்வுலகம் கொன்றுவிடும். ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி... ஏன் நம்பிரான் இயேசுவும் கொல்லப்பட்டது இதனாலேதான். நற்செயல்களுக்காக வாழ்பவர் தீயோரின் மனசாட்சியைத் துன்புறுத்துவர். மேலும்,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996) 

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, நல்ல பண்பு உடையவர்களின் ஒழுக்கத்தால் இவ்வுலகம் நடைபெறுகிறது. அவர்கள் இல்லையெனில் உலக ஒழுக்கம் மண்ணில் புதைந்துவிடும். இயேசுவின் போதனை, வாழ்வு, இறப்பு எல்லாம் இதற்குச் சான்று.