news
ஆன்மிகம்
துறவு அவைகளின் முன்னோடித்தன்மை! (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 08)

திரு அவையின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூய ஆவியார் அதற்குத் தருகின்ற அருங்கொடைகள் மிகப்பல. அவற்றுள் தனிச் சிறப்பு வாய்ந்தது துறவு வாழ்வுக்கான அழைப்பு. தனது தனியாள் சுதந்திரத்தையும் சொகுசுகளையும் திருமண வாழ்வையும் விட்டுவிட்டு பணிவு, எளிமை, மணத் துறவு எனும் உறுதியேற்புகளைச் செய்து இறையாட்சிப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்து, சகோதரக் குழுமங்களாக வாழ்வோரே கிறித்தவத் துறவியர்.

இந்தத் துறவு வாழ்வு எனும் அருங்கொடையினால் திரு அவை அடைந்துள்ள வளர்ச்சிகள் மிகப்பல. அதன் வழியாக தூய ஆவியார் ஒவ்வொரு காலத்திலும் திரு அவையைப் புதுப்பித்துள்ளார். அதன் மாற்றுப் பண்பாட்டு வாழ்க்கை முறை வழியாக உலகப்போக்கில் செல்ல திரு அவைக்கு எப்போதும் ஏற்படும் சோதனையை எதிர்த்து நிற்கும் ஆற்றலைத் தருகின்றார்.

தங்கள் தனித்தன்மை வாய்ந்த இறைவேண்டல் முறைகள், மக்கள்பணி என்பனவற்றின் வழியாகப் பல்வேறு துறவு அவைகள் கிறித்தவச் சீடத்துவத்தின் அழகையும் புனிதத்தையும் வெளிப்படுத்துகின்றன. பல வேளைகளில் முக்கிய வரலாற்று மாற் றங்களையும், அவற்றின் வழியாக தூய ஆவியார் தரும் தூண்டுதல்களையும் முதலில் இனம்கண்டவர்கள் துறவியரே. காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப திரு அவை மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்பவர்களும், முன்னின்று சிறப்பாகச் செய்து வருபவர்களும் அவர்களே.

துறவு அவைகள் இறைவாக்கு உரைக்கும் தங்களது குரலால், அவை திரு அவையையும் சமூகத்தையும் நோக்கிக் கேள்விகள் எழுப்ப அழைக்கப்பட்டுள்ளன (இஅ 65).

இறைவாக்குத் தன்மையுடைய அவர்களது குரலும் செயல்பாடுகளும் திரு அவைக்கு இன்றும் மிகவும் அவசியமே. சிறப்பாக, பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குழுமங்களில் அவர்கள் கடைப்பிடித்துள்ள கூட்டியக்க வாழ்வு மற்றும் தெளிதேர்வு நடைமுறைகளிலிருந்து திரு அவையும் கூட்டொருங்கியக்கப் பாதையில் நடக்கப் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதற்கு எடுத்துகாட்டுகளாக தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும், அமைப்புகளைப் புதுப்பிக்கவும் தங்கள் பணிகளிலும் ஏழைகளுடனான உடனிருப்பிலும் புது முறைகளைச் செயல்படுத்த தங்கள் மாநில மற்றும் பொதுப்பேரவைகளில் அவர்கள் செய்யும் தெளிதேர்வுமுறை, தனி உறுப்பினர்களுடைய திறமைகளையும், தங்கள் துறவு அவைக்குப் பொதுவான மறைத்தூதுப் பணியையும் ஒத்திசைவாக்கல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும், அவற்றுள் சிலவற்றில் காணப்படும் நலமான உரையாடலுக்கு வாய்ப்பளிக்காத ஆதிக்க அதிகார நடைமுறைகள் கவனமாகத் தவிர்க்கப்படவேண்டும்.

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. ஆயருக்கும் துறவியருக்கும் இடையிலான உறவு பற்றிய ஆசிரிய ஏட்டைத் (Mutual relationship 1978) திருத்தி எழுதுவதற்கான காலம் கனிந்துள்ளது. அத்தகைய திருத்தம் அதனுடன் தொடர்புடைய அனைவருடனும் கலந்தாய்வு செய்து, கூட்டொருங்கியக்க முறையில் செய்யப்பட வேண்டும்.

2. ஆயர்கள் பேரவைகளுக்கும் துறவு அவைகள் மற்றும் திருத்தூது வாழ்வு கழகங்களின் பேரவைகளுக்கும் இடையே சந்திப்பையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

3. அருள்பணித் தலைவர்களும் துறவு அவை மற்றும் திருத்தூதுக் கழகங்களின் பொறுப்பாளர்களும் பொதுவான மறைத்தூதுப் பணிக்கெனத் தங்கள் வளங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் தங்களுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

news
ஆன்மிகம்
சாத்தான் மீதான மரியாவின் நிபந்தனையற்ற பகைமை (Mary’s enmity towards satan was absolute) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 21

தனது மகனின் மீட்புப் பணியில் மரியாவின் ஒத்துழைப்பானது, அவர் பாவத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவராகவும், கிறிஸ்துவின் அருளை முழுவதும் பகிர்ந்துகொள்ள கூடியவராகவும் இருக்கவேண்டுமென்பது பொருத்தமுள்ளதாகும். 

1. கிழக்கத்தியத்  திரு அவையின் (Eastern Church) கோட்பாட்டுச் சிந்தனையில் ‘அருள் நிறைந்தவர் என்பது முந்தைய மறைக்கல்வியில் கூறியதைப் போன்று, மரியாவின் வாழ்வு முழுவதும் அவர் அனுபவித்த தனித்துவமான புனிதத்தின் வெளிப்பாடே என்று ஆறாம் நூற்றாண்டு முதலே அதற்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் ஒரு புதியதொரு படைப்பைத் தொடங்கி வைக்கின்றார்.

கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பற்றிய தூய லூக்கா நற்செய்தியோடு, திரு அவையின் பாரம்பரியம் மற்றும் ஆசிரியம் போன்றவை திருவிவிலியத்தின் முதல் நூல் என்றழைக்கப்படும் தொடக்கநூலில் மரியாவின்  அமல உற்பவத்தின் உண்மைத் தன்மைக்கான திருவிவிலிய மூலத்தைக் கண்டன. ‘அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற பழைய கிரேக்க மொழி திருவிவிலியத்தை (Septuagint or Greek Old Testament) அடிப்படையாகக் கொண்டு தனது குதிங்காலினால் பாம்பை நசுக்குவதைப் போன்ற அமல உற்பவ மாதாவின் சித்தரிப்புகள் (depictions) பல உருவாக இந்தத் திருவிவிலிய வாசகம்தான் காரணமாக இருந்தது.

இதற்கு முன்பு இந்த மொழிபெயர்ப்பானது எபிரேய மொழியில் உள்ள திருவிவிலியத்தோடு ஒத்துப்போகவில்லையெனவும், எபிரேய திருவிவிலியத்தின் அடிப்படையில் பாம்பின் தலையை நசுக்குவது பெண்ணல்ல; மாறாக, அவளது பிள்ளை எனவும் காணமுடியும். இந்த எபிரேய ஏடு சாத்தான் மீதான வெற்றியை மரியாவுக்கு  அல்ல; மாறாக, அவரின் மகனுக்கே குறித்துக் காட்டுகின்றது. இருப்பினும், திருவிவிலியக் கருத்தானது பெற்றோருக்கும் பிள்ளைக்குமிடையேயான ஓர் ஆழமான ஒற்றுமையை ஏற்படுத்துவதால், தலையை நசுக்குவதைப் போன்ற அமல உற்பவியின் சித்தரிப்பானது, அவர் அதை அவரின் சொந்த வல்லமையினால்  அல்ல; மாறாக, அவரின் மகனுடைய அருளின் வழியாகவே செய்தார் என்பது அதன் மூலத்தோடு ஒத்துப்போகின்றது.

தீமையை எதிர்ப்பதற்கான ஆற்றல் மரியாவுக்குக் கொடுக்கப்பட்டது

2. அதே திருவிவிலிய ஏடானது ஒரு பக்கம் பெண்ணுக்கும் அவரின் வழித்தோன்றலுக்கும் இடையேயான பகைமையையும், மறுபக்கம் பாம்புக்கும் அதன் வழித்தோன்றலுக்கும் இடையேயான பகைமையையும் எடுத்துக் கூறுகின்றது. மரியாவின் சொந்தப் புனிதத்தன்மை பற்றிய பிரச்சினையை எடுத்துக்கொண்டால், தனிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்ற இந்தப் பகைமையானது வெளிப்படையாகவே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.  பாம்பிற்கும், அதன் வழித்தோன்றலுக்கும் இடையேயான சரிசெய்ய முடியாத பகையாளியாக இருப்பதற்காக மரியா பாவத்தின் எல்லாச் சக்திகளிலுமிருந்து விடுபட்டவராக இருக்கிறார். அதுவும் அவரின் பிறப்பிலிருந்தே அவ்வாறு இருந்தார்.

இதைப் பொறுத்தவரை, அமல உற்பவக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 1953-ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதரால் (Pius XII) வெளியிடப்பட்ட (Fulgens corona) என்ற சுற்றறிக்கை இவ்வாறு கூறுகிறது: “அவருடைய பரம்பரையின் பாவக்கறைகளினால் கருத்தரித்தலில் அவர் தீட்டாக்கப்படிருந்ததன் காரணமாக, கன்னி மரியா குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அந்தத் தெய்வீக அருளின்றி விடப்பட்டிருந்தால், எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இந்தக் காலத்திலாவது, தொடக்க காலத்திலிருந்து அமல உற்பவக் கோட்பாடு வரையறுக்கப்படும் வரை பேசப்பட்ட அவருக்கும் அந்தப் பாம்பிற்குமிடையேயான நிரந்தர பகை இருந்திருக்காது.  மாறாக, அது ஒரு வகையான அடிமைத்தனமாகவே இருந்திருக்கும் (ஒப்பிடுக. AAS 45 [1953], 579).

இவ்வாறு, பெண்ணுக்கும் சாத்தானுக்குமிடையே வைக்கப்பட்ட இந்தத் தனிப்பட்டப் பகைமையானது மரியாவின்  அமல உற்பவத்தைத் தேவையான ஒன்றாக்குகிறது. அதாவது, அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே (கருவாக உருவான முதல் நொடியிலிருந்தே) பாவத்திலிருந்து முழுமையானதொரு விடுதலை தேவையானதொன்றாக இருந்தது. மரியாவின் மகன் சாத்தானை நிரந்தரமாக வெற்றி கொண்டு முன்னதாகவே மரியாவை ஆதிப் பெற்றோரின் பாவத்திலிருந்து (original sin) பாதுகாத்து, அவரின் தாயை அந்த மீட்பின் அனைத்துக் கொடைகளாலும் நிரப்பினார். அதன் விளைவாக, சாத்தானை எதிர்கொள்வதற்கான ஆற்றலை அவரின் மகன் அவருக்குக் கொடுத்தார். இவ்வாறு அவருடைய மீட்புப் பணியின் குறிப்பிடத்தக்க அநேகப் பலன்களை அந்த அமல உற்பவ மறைபொருளினால்  நாம் அடைகின்றோம்.

3. ‘அருள் நிறைந்தவரே என்ற சிறப்பு அடைமொழியும் விலக்கப்பட்ட நற்செய்தியும் மரியாவின் சிறப்புமிக்க புனிதத்தன்மை மற்றும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தான முழு விடுதலை இவைமீது நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது கடவுளால் மரியாவுக்கு வழங்கப்பட்ட தனித்துவமான சலுகையை, கடவுளுடனான நட்பின் கனியாகவும், அதன் விளைவாகப் பாம்பிற்கும் மனிதர்களுக்கும் இடையே ஆழமான பகைமையை ஏற்படுத்துவதாகவும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றது.

சூரியனை ஆடையாக உடுத்திய ஒரு பெண் (திவெ 12:1) பற்றிப் பேசுகின்ற திருவெளிப்பாட்டு நூலின் 12-வது அதிகாரமானது, அமல உற்பவக் கோட்பாட்டிற்கான திருவிவிலியச் சான்றாக அடிக்கடி மேற்கோள்காட்டப்படுகிறது. தற்போதைய திருவிவிலிய விளக்கங்கள், இந்தப் பெண்ணில் கடவுளுடைய மக்களின் குழுமமானது உயிரோடு எழுந்த மெசியாவை வலியோடு பெற்றெடுப்பதைக் காண்பதில் உடன்படுகின்றன.

இருப்பினும், இந்தக் கூட்டு விளக்கத்தோடு அந்தக் கோட்பாட்டு ஏடானது தனிப்பட்ட ஒருவரையும் பரிந்துரைக்கின்றது: “எல்லா நாடுகளையும் இரும்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்திற்குப் பறித்துச் செல்லப்பெற்றது (திவெ 12:5). குழந்தை பிறப்பைப் பற்றிய இந்தக் குறிப்புடன், சூரியனை ஆடையாக அணிந்த பெண் மெசியாவைப் பெற்றெடுத்தப் பெண்ணான மரியாவுடன்  ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் அடையாளம் காணப்படுகிறார் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. அந்தப் பெண் குழுமமானது உண்மையில் இயேசுவின் தாயான அந்தப் பெண்ணின் இயல்புகளோடு விவரிக்கப்படுகிறது.

அவரின் தாய்மையோடு அடையாளப்படுத்தப்பட்ட “அந்தப் பெண் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும்துயருடன் கதறினார் (திவெ 12:2) என்ற குறிப்பானது, சிலுவையின் அடியில் நிற்கும் இயேசுவின் தாயைக் குறிக்கின்றது (ஒப்பிடுக. யோவா 19:25). இங்கு அவர் வாளினால் குத்தப்பட்ட ஆன்மாவோடு சீடர்களின் குழுமத்தைக் கட்டியெழுப்புவதற்காக அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்கின்றார் (ஒப்பிடுக. லூக் 2:35). துன்பங்களுக்கிடையிலும் “அவர் சூரியனை ஆடையாக உடுத்தியிருந்தார் - அதாவது, அவர் அந்தத் தெய்வீக சிறப்புகளைப் பிரதிபலிக்கின்றார். தம் மக்களுடனான கடவுளின் மண உறவின் ‘மிகப்பெரும் அடையாளமாக அவர் தோன்றினார். 

அமல உற்பவத்தின் சிறப்பை இவ்வகையான உருவகங்கள் நேரடியாகக் குறித்துக் காட்டாவிட்டாலும், கிறிஸ்துவின் அருள் மற்றும் தூய ஆவியாரின் சிறப்புகளோடு மரியாவைச் சூழ்ந்திருக்கும் தந்தையின் அன்பு கரிசனையின் வெளிப்பாடாகவும் இருக்கக்கூடுமென விளக்கப்படலாம்.

இறுதியாக, மரியாவின் ஆளுமையினுடைய திரு அவையியல் பரிணாமத்தை நாம் குறிப்பாக, இன்னும் அதிகமாகக் கண்டுகொள்வதற்கு இந்தத் திருவெளிப்பாட்டு நூல் நம்மை அழைக்கின்றது. சூரியனை ஆடையாக உடுத்திய அந்தப் பெண் தனிப்பட்ட அருளின் ஒழுக்கத்தினால் புனித கன்னி  மரியாவில்  உணரப்பட்ட திரு அவையின் புனிதத்துவத்தைப் பிரதிபலிக்கின்றார்.

4. திரு அவையின் பாரம்பரியம் மற்றும் ஆசிரியத்தினால் அமல உற்பவக் கோட்பாட்டிற்கான தளமாக மேற்கோள்காட்டப்படும் திருவிவிலிய உறுதிப்பாடுகள் பாவத்தின் பொதுத்தன்மையை உறுதிப்படுத்தும் திருவிவிலிய ஏடுகளை முரண்படச் செய்வதாகத் தோன்றுகிறது.

பழைய ஏற்பாடானது “பெண்ணிடமிருந்து பிறந்த...” (திப 50(51)7;யோபு 14:2) ஒவ்வொருவரிலும் பாவ மாசானது பாதிப்பு ஏற்படுத்துவதைப் பற்றிப் பேசுகின்றது. புதிய ஏற்பாட்டில், ஆதாமினுடைய பாவத்தின் விளைவாக “எல்லா மனிதர்களும் பாவம் செய்தார்கள் என்று தூய பவுல் கூறுகின்றார். மேலும், “ஒரு மனிதனுடைய பாவமானது எல்லா மனிதர்களையும் பாவத்திற்கு இட்டுச் சென்றது (உரோ 5:12;18) என்றும் கூறுகின்றார். ஆகவே, மறைக்கல்வி ஏடு கூறுகின்றவாறு ஆதிப் பாவமானது ‘வீழ்ச்சியுற்ற நிலையில் நாம் காண்கின்றவாறு ‘மனித இயல்பைப் பாதித்தது.’ ஆகையினால் தொடக்கத்தில் இருந்த புனிதத்துவம் மற்றும் நீதி நிலையிலிருந்து கைவிடப்பட்டதொரு மனித இயல்பைக் கடத்துவதினால் அதாவது, மனுக்குலம் அனைத்திற்கும் பரப்புவதனால் பாவமானதும் அனைவருக்கும் கடத்தப்படுகின்றது (Catechism of the Catholic Church, எண் 404). 

எவ்வாறாயினும், தூய பவுலடியார் இந்த உலகளாவியச் சட்டத்திற்கு ஒரு விதிவிலக்கைத் தருகின்றார். அதாவது, கிறிஸ்து ‘பாவம் அறியாதவராயிருந்தும் (2 கொரி 5:21), “பாவம் பெருகிய இடத்தில் (உரோ 5:20) அவரால் அருளைப் பொங்கிவழியச் செய்ய முடிந்தது என்று கூறுகின்றார்.

புனித எரோணிமுஸ் மரியாவைப்  புதிய ஏவாளாகக் காட்டுகின்றார்

இந்தக் கூற்றுகள் மரியா பாவம் நிறைந்த மனிதகுலத்தோடு தொடர்புடையவராக இருந்தார்  என்றதொரு முடிவிற்கு நம்மை இட்டுச்செல்ல வேண்டிய அவசியமில்லை. தூய பவுல் அடியாரால் நிலைநிறுத்தப்பட்ட ஆதாம் மற்றும் கிறிஸ்துவுக்கு இடையேயான ஒப்புமையானது ஏவாள் மற்றும் மரியாவுக்கிடையேயான ஒப்புமையோடு நிறைவு பெறுகின்றது. பாவத்தினுடைய நாடகத்தில் பெண்ணின் பங்கானது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு மனுக்குல மீட்பிலும் முக்கியமானதாகும்.

புனித எரோணிமுஸ் மரியாவை அவரின் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் ஏவாளுடைய அவநம்பிக்கை மற்றும் கீழ்ப்படியாமையை ஈடு செய்ய வந்த புதிய ஏவாளாகக் காட்டுகின்றார். மீட்புத் திட்டத்தினை நிறைவேற்றும் இப்பணிக்குப் பாவமற்ற நிலையானது தேவைப்படுகிறது. எவ்வாறு புதிய ஆதாமாகிய கிறிஸ்து, பாவம் அறியாதவராக இருந்தாரோ, அதேபோல புதிய ஏவாளாகிய மரியாவும் பாவத்தை அறியாதவராக இருந்தார் மற்றும் இவ்வாறு மீட்புப் பணியில் ஒத்துழைப்பதற்கான தகுதியையும் பெறுகின்றார்.

வெள்ளப்பெருக்கைப்போல மனுக்குலத்தை அழித்தொழிக்கும் பாவமானது, மீட்பர் மற்றும் அவரது உண்மையுள்ள ஒத்துழைப்பாளரான மரியா முன் நிறுத்தப்படுகிறது. கணிசமான வித்தியாசத்துடன், தெய்வீகமானவரிடமிருந்து பெறப்பட்ட அவருடைய மனித இயல்பால் கிறிஸ்து அருளின நற்பண்புகளால் எல்லாவற்றிலும் புனிதமானவராக இருக்கின்றார். அருளினால் பெறப்பட்ட மீட்பரின் நற்பண்புகளால் மரியா எல்லாவற்றிலும் புனிதமானவராகவே என்றென்றும் இருக்கின்றார்.

மனிதகுலத்தை மூழ்கடிக்கும் ஒரு பெருவெள்ளம்போல பாவம், மீட்பர் மற்றும் அவரது உண்மையுள்ள ஒத்துழைப்பாளரின் முன் நிற்கிறது. ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் கிறிஸ்து தமது மனிதத்தன்மையில் தெய்வீக நபரிடமிருந்து பெறப்பட்ட அருளின் மூலம் முற்றிலும் புனிதமானவராக இருக்கின்றார்; மீட்பரின் நற்பண்புகள் மூலம் பெறப்பட்ட அருளினால் மரியா முற்றிலும் தூய்மையுள்ளவராக இருக்கின்றார்.

மூலம்: John Paul II, Mary’s enmity towards satan was absolute, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 5 June 1996, p. 11.

news
ஆன்மிகம்
மக்களிடையே எதிர்நோக்கின் தூதுவர்களாக... நற்செய்திப் பணியாளர்களாக... (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 25-01-2025 அன்று வழங்கிய தூதுரைப்பணி ஞாயிறு செய்தி 2025)

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே!

2025 யூபிலி ஆண்டின் மையச்செய்திஎதிர்நோக்குஎன்பதாகும். இவ்வாண்டின் தூதுரைப்பணி ஞாயிறுக்கு நான் தேர்ந்துள்ள செயல்நோக்கமும் அதுவே. மக்களிடையே எதிர்நோக்கின் தூதுவர்களாக...… நற்செய்திப் பணியாளர்களாக...’

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி எதிர்நோக்கின் தூதுவர்களாக, அதனைக் கட்டியெழுப்புகிறவர்களாக, ஒவ்வொரு கிறித்தவரும், திருமுழுக்குப் பெற்ற குழுமமாகிற திரு அவையும் பெற்றுள்ள அழைப்பை இது நினைவூட்டுகிறது. இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் அருளின் விளைவாக இது சாத்தியமாகும். “அவர்தம் பேரிரக்கத்தின்படி, இறந்தோரிடமிருந்து எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு, குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம் (1பேது 1:3-4).

நம் கிறித்தவத் தூதுரைப்பணியின் அடையாளத்துடன் தொடர்புடைய சில முக்கியக் கூறுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தெளிவற்று, அச்சமூட்டும் முறையில் இவ்வுலகைக் கவ்வி நிற்கும் ஒளிமறைவுப் பகுதியில் ஒளிர்ந்து, மக்களின் எதிர்நோக்கிற்குப் புத்துயிரூட்ட திரு அவை பணிக்கப்பட்டுள்ளது. புதிய நற்செய்தி அறிவிக்கும் பணிச் செயல்பாடுகளின் காலத்தைப் பற்றியெரியும் ஊக்கத்துடன் தொடங்கித் தொடர, இறையாவியாரின் தூண்டுதலுக்கு நம்மை உட்படுத்திட இக்கூறுகள் உதவும்.

1. நமது எதிர்நோக்காகிற கிறிஸ்துவின் அடிச் சுவடுகளில்...…

கி.பி. 2000-ஆம் புனித ஆண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, மூன்றாம் நூற்றாண்டில் கொண்டாடப்பெறும் இந்தச் சாதாரண யூபிலி ஆண்டில், நம் பார்வையைக் கிறிஸ்துவின்மீது பதியவைப்போம். ஏனெனில், “அவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (எபி 13:8). வரலாற்றின் மையம். வரலாற்றில் என்றும் பிரசன்னமாயிருக்கிற அவர்இன்றுமறைநூல் வாக்கு நிறைவேறியதாக நாசரேத்துத் தொழுகைக்கூடத்தில் முழங்குகிறார். இவ்வாறு மனித இனம் முழுமைக்கும் இறையாட்சியின் நற்செய்தியை முழக்கமிட்டு அறிவித்து, ‘ஆண்டவர் அருள் தரும் ஆண்டினைதொடங்கிவைக்க தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பெற்று, இறைத்தந்தையால் அனுப்பிவைக்கப்பெற்றவர்தாமேஎன்பதை வெளிப்படுத்துகிறார் (லூக்கா 4:16-21).

உலகம் முடிவுவரை நீடிக்கும்இன்றுஎன்ற இந்த மறைபொருளில் அனைவருக்கும் குறிப்பாக, ‘இறைவன் ஒருவரே தம் எதிர்நோக்குஎன்று நம்பியிருப்போருக்கு, ‘கிறிஸ்துவே மீட்பின் நிறைவுஎன்ற உண்மை நீடிக்கிறது. இவ்வுலகில் வாழ்ந்தபோது, “அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து, அனைவரையும் குணமாக்கி, எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38). இவ்வாறு தேவையில் உழல்வோர் அனைவருக்கும், அவர்கள் இறைவனில் கொண்டிருந்த எதிர்நோக்கை மீட்டுத் தந்தார். கெத்சமெனித் தோட்ட மனப்போராட்டத்தின் கடுந்துயர், சிலுவையில் தொங்கியபோது அனுபவித்த தாங்கொணா வேதனை ஆகிய மனத்தளர்ச்சிக்கும் நம்பிக்கை இழப்பிற்கும் இட்டுச்செல்லும் நெருக்கடியான தருணங்களில்கூட, பாவம் தவிர பிற மனித வலுவின்மைகள் அனைத்தையும் அவர் அனுபவித்தார். மனுக்குலத்தை மீட்கும் இறைத்திட்டத்தை, கீழ்ப்படிதலுடன் நம்பி, அனைத்தையும் இறைத்தந்தையிடம் ஒப்படைத்தார். இறைவன் வாக்களிக்கும் வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டம் அது (எரே 29:11). இவ்வாறு அவர் எதிர்நோக்கின் இறைத்தூதரானார். இறைவன் தந்த தூதுரைப் பணியைத் தீவிர சோதனைகள் நடுவிலும், காலங் காலமாகச் செயல்படுத்திவரும் அனைவருக்கும் சிறந்த மாதிரியானார்.

தமது மறைமுக உடனிருப்பை உறுதிசெய்து, எல்லா மக்களினத்தார்க்கும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பிய தம் சீடர்கள் வழியாக, மானிடர் அனைவருக்குமான எதிர்நோக்கின் திருப்பணியை ஆண்டவர் இயேசு தொடர்கிறார். ஏழையர், பாதிக்கப்பட்டோர், மனத்தளர்ச்சியுற்றோர், ஒடுக்கப்பட்டோர், நசுக்கப்பட்டோர் ஆகியோர் பக்கம் சாய்ந்து நின்று, அவர்களைத் தூக்கி நிறுத்தி, அவர்களுக்குஆறுதல்என்னும் மருந்திட்டு, ‘எதிர்நோக்குஎனும் குணமளிக்கும் எண்ணெய் ஊற்றிக் கண்காணிக்கிறார்.

கிறிஸ்துவின் தூதுரைப் பணியைத் தொடர்ந்தாற்றும் சீடர்களின் குழுமமாகிய திரு அவையும், தம் ஆண்டவரும் தலைவருமான அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் காட்டிய அதே பணியார்வத்துடன் தன்னை அர்ப்பணித்து, அனைத்து நாடுகளிலும் அந்தத் தூதுரைப் பணியைத் தொடர்கிறது. சமய வதைகள், கொடுந்துன்பங்கள், இன்னல்கள், தம் உறுப்பினர்களின் மனித வலுவின்மையால் விளையும் குறைபாடுகள் மற்றும் தோல்விகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலையிலும் கிறிஸ்துவின் அன்பினால் தொடர்ந்து உந்தப்பட்டு, அவருடன் இணைந்து தம் தூதுரைப்பணியில் பயணிக்கிறது.

இப்பயணத்தில் அவரைப் போன்று, அவருடன் துன்புறும் மனித இனத்தின் வேண்டுகோளுக்குச் செவிமடுக்க வேண்டும். மீட்பிற்காக உறுதியான எதிர்நோக்கோடு காத்திருக்கும் ஒவ்வொரு படைப்புயிரும் எழுப்பும் ஆழ்ந்த பெருமூச்சின் ஒலியைக் கவனமுடன் செவிமடுத்துக் கேட்க வேண்டும். இத்தகையநகர்வற்ற நிலையை விட்டுவிட்ட, தன் ஆண்டவருடன் உலகின் வீதிகளில் நடமாடுகிற, உயிரோட்டத்துடன் தூதுரைப்பணி செய்யும் திரு அவைதான் உண்மைத் திரு அவை (ஆயர் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் மறையுரை, 27.10.2024). இத்தகைய திரு அவையைத்தான், தம் அடிச்சுவடுகளை எப்பொழுதும் என்றென்றும் பின்பற்ற அதன் தலையாகிய கிறிஸ்து அழைக்கிறார்.

நம் வாழ்விடங்களில், அவற்றின் சூழ்நிலைகளில் அவருடன், அவரில், அனைவருக்கும் எதிர்நோக்கின் அடையாளங்களாகவும் தூதுவர்களாகவும் ஆவதற்கு எழுச்சியூட்டப் பெறுவோமாக! திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் தூதுரைப் பணியாளர்கள் என்ற முறையில் அவர் வாக்களித்த எதிர்நோக்கு உலகெங்கும் ஒளிர்ந்திடச் செய்வோமாக!

2. கிறித்தவர்கள்: மக்களிடையே எதிர்நோக்கை எடுத்துச்சென்று அவர்களில் அதனைக் கட்டியெழுப்புபவர்கள்...

கிறிஸ்து ஆண்டவரைப் பின்பற்றும் கிறித்தவர்கள், தாங்கள் வாழும் அன்றாடச் சூழமைவுகளில், எதிர்நோக்கின் நற்செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள்  எதிர்நோக்கை மக்களிடையே எடுத்துச் சென்று, அவர்களில்  அதனைக் கட்டியெழுப்புகிறார்கள். “மகிழ்வும் எதிர்நோக்கும் இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பாக, ஏழையர் மற்றும் துன்புறுவோர் அனைவரின் வாழ்விலும் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும்-எதிர்நோக்கும், ஏக்கமும்-கவலையும் கிறித்தவர்களுக்கும் முற்றிலும் உரியனவே; கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயங்களில் உண்மையான மனிதக்கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன (இன்றைய உலகில் திருச்சபை, எண் 1).

கிறித்தவக் குழுமங்களின் ஒவ்வொரு காலகட்ட உணர்வை வெளிப்படுத்தும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் புகழ்பெற்ற இந்த அறிக்கை, திரு அவையின் உறுப்பினர்களைத் தூண்டியெழுப்பி, அனைத்துச் சகோதரர் - சகோதரிகளோடும் இணைந்து பயணிக்க நமக்கு உதவுகிறது.

(தொடரும்)

news
ஆன்மிகம்
திருமுழுக்கு: சில கேள்விகள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 24)

அன்புச்செல்வன்: தந்தையே! திருமுழுக்குக் குறித்த அற்புதமான பல தெளிவுகளை எங்களோடு உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டு வருகிறீர்கள். மிகவும் நன்றி! திருமுழுக்குக் குறித்து சில கேள்விகள் எங்களிடம் உள்ளன. அவற்றைக் கேட்க விரும்புகிறோம். சில கிறித்தவர்கள் பக்தியான சில அருள்பணியாளரிடம் அருளடையாளங்களைப் பெற்றால்தான் பலன் உண்டு என்று அருள்பணியாளர்களையும் இடங்களையும் தேர்வு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?”

அருள்பணி:இதற்கு நான் என் பதிலைத் தருவதைவிட  திரு அவையின் மறைவல்லுநராகக் கருதப்படும் புனித இசிதோரின் (St. Isidore) கருத்தைத் தர விரும்புகிறேன்: ‘திருமுழுக்கு மனிதர்களது செயல்பாடு அல்ல; மாறாக, கிறிஸ்துவின் செயல்பாடு. எனவே, ஒரு கொலையாளியால் திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றப்பட்டாலும், அதனால் திருமுழுக்கு அருளடையாளத்தின் தன்மை பாதிக்கப்படாது.’ புனித இசிதோர் சொல்லும் கருத்து என்னவெனில், திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவது கடவுளே! அருள்பணியாளர்கள் அவர்களது பிரதிநிதிகளே! பிரதிநிதிகள் குறைவுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக அருளடையாளத்தில் குறைவு வந்துவிடுவதில்லை. அருளடையாளக் கொண்டாட்டத்தின் வழியாகப் பெறப்படும் கொடைகளும் வரங்களும் அதைப் பெறுபவர்களது மனநிலையையும் உளப்பாங்கையும் பொறுத்ததே அன்றி, அவ்வருளடையாளக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் அருள்பணியாளர்களின் புனிதத்தைப் பொறுத்தது அல்ல; காரணம், அருளடையாளத்தை நிகழ்த்துபவர் கடவுளே! இக்கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமான தளத்தில், ‘இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர் யார்?’ என்கின்ற பின்னணியில் நாம் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கலாம்.”

மார்த்தா:இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தது புனித திருமுழுக்கு யோவான்தானே?”

அருள்பணி:வெளிப்படையாகப் பார்ர்க்கும்போது இயேசுவுக்குத் திருமுழுக்கு யோவான் திருமுழுக்கு கொடுத்தார் என்பது நாம் அறிந்ததே! எனினும், நான்கு நற்செய்திகளையும் கூர்ந்துநோக்கினோம் என்றால், அங்கு ஒரு சிறிய வித்தியாசம் தென்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மத்தேயு, மாற்கு நற்செய்தியாளர்களின் கருத்துப்படி திருமுழுக்கு யோவானே இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார் (மத் 3: 13-19, மாற் 1:9). ஆனால், லூக்கா மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் இதில் சற்று முரண்படுவதாகத் தெரிகிறது. இயேசு திருமுழுக்குப் பெறுவதற்கு முன்பாகவே திருமுழுக்கு யோவான் ஏரோதால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாக லூக்கா எழுதுகிறார். திருமுழுக்கு யோவான் ஏரோதால் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை எழுதிவிட்டு (லூக் 3: 20), இயேசுவின் திருமுழுக்குக் குறித்து லூக்கா எழுதுகிறார் (லூக் 3: 21,22). மேலும், இயேசு திருமுழுக்குப் பெற்றதாக லூக்கா குறிப்பிடுகிறாரேயொழிய, அதைக் கொடுத்தது யார் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அதுபோல யோவான் நற்செய்தியிலும் திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறாரேயொழிய, இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவராகக் குறிப்பிடப்படவில்லை. நான்காம் நற்செய்தி யில் இயேசு திருமுழுக்குப் பெற்றதற்கான சாட்சியாக மட்டுமே திருமுழுக்கு யோவான் சுட்டிக் காட்டப்படுகிறார் (யோவா 1: 32-34).”

மார்த்தா: ஆச்சரியமாக இருக்கிறது! நான் பலமுறை நற்செய்திகளை வாசித்திருக்கிறேன், வாசிக்கக் கேட்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள் கூறுகின்ற அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்ததில்லை. லூக்கா மற்றும் யோவான் இவ்வாறு முரண்படுவதற்கான காரணம் என்ன தந்தையே!”

அருள்பணி:இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, லூக்கா தனது நற்செய்தியை எழுதிய காலகட்டத்தில் யூதேயாவில் ஒரு குழுவினர் திருமுழுக்கு யோவானே மெசியா என்கிற கருத்தைப் பரப்பி வந்தனர். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள்இயேசுவே மெசியாஎன்று ஒரு பக்கம் போதித்துக்கொண்டிருக்க, மற்றொரு குழுவினர்திருமுழுக்கு யோவானே யூதர்கள் எதிர்பார்த்த மெசியாஎன்று கூறி, அவர் பெயரால் திருமுழுக்குக் கொடுத்து வந்தனர் (திப 19: 3). இதற்கு அவர்கள் கையில் எடுத்த வாதங்களுள் ஒன்று, இயேசுவுக்கே திருமுழுக்குக் கொடுத்தவர் யோவான் என்பது!”

கிறிஸ்டினா:அதாவது திருமுழுக்குப் பெற்ற இயேசுவைவிட திருமுழுக்குக் கொடுத்த யோவான் பெரியவர் என்ற வாதம்?”

அருள்பணி: ஆம், எனவே, ‘இயேசுவே மெசியாஎன்பதைத் தூக்கிப்பிடிக்கும் விதமாக லூக்காவும் யோவானும் இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தது, திருமுழுக்கு யோவான் என்கின்ற கருத்தைத் தவிர்த்து விட்டனர். மேற்காணும் பிரச்சினையின் காரணமாகவே யோவான் நற்செய்தியாளர்அவர் ஒளியல்ல! மாறாக, ஒளியைக் குறித்துச் சான்றுபகர வந்தவர் (யோவா 1:8) என்று திருமுழுக்கு யோவானைக் குறித்து எழுதுகிறார். மேலும், திருமுழுக்கு யோவானேநான் மெசியா அல்ல (யோவா 1:19) என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் யோவான் எழுதுகிறார்.”

அகஸ்டின்:இரண்டாவது காரணம் என்ன தந்தையே?”

அருள்பணி:மேலே நாம் விவாதித்த காரணம்! திருமுழுக்குக் கொடுப்பவர் உண்மையில் கடவுள் தாம் என்ற இறையியல் உண்மையை ஆழமாக எடுத்துரைக்கவே! அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்குக் கடவுள் தம் கருவிகளாகப் பல்வேறு மனிதர்களைப் பயன்படுத்தினாலும், அருளடையாளச் செயல் பாடுகளின் தொடக்கக் காரணராகவும், அதை நிறை வேற்றுபவராகவும் இருப்பவர் கடவுள் மட்டுமே!”

அகஸ்டின்:தந்தையே, திருமுழுக்குக் குறித்து என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. பாவிகளாகிய நாம் நம் பாவங்கள் கழுவப்படுவதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றோம். ஆனால், பாவமே அறியாத இயேசு ஏன் திருமுழுக்குப் பெறவேண்டும்?”

அருள்பணி:உனது கேள்விக்குப் பதிலாகத் திரு அவையின் புகழ்பெற்ற ஆயரும் அறிஞருமாகிய புனித அம்புரோசியாரின் கருத்தைக் கொடுக்க விரும்புகின்றேன்: ‘நம் ஆண்டவராகிய இயேசு திருமுழுக்குப் பெற்றது தம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதற்காக! பாவமே அறியாத இயேசுவின் உடலைத் தொட்ட நீர் புனிதப்படுத்தப்படுவதால், அது பாவிகளின் பாவங்களைப் போக்கும் ஆற்றலைப் பெற்ற ஒன்றாக மாறுகிறது.’  (‘The Lord was baptized, not to be cleansed Himself, but to cleanse the waters, so that those waters, cleansed by the flesh of Christ which knew no sin, might have the power of Baptism’)”

மார்த்தா:என்னவோர் அருமையான சிந்தனை! திருமுழுக்குக் குறித்து என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. பெந்தகோஸ்து கூட்டத்தார் முழுக்கு ஞானஸ்நானம் என்ற ஒன்றைப் பற்றிக் கூறி கத்தோலிக்கரிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்களே! இது பற்றி விளக்கம் அளிக்க முடியுமா, தந்தையே?”

அருள்பணி:இரண்டு காரியங்களை நாம் சிந்திக்கலாம். முதலாவதாக, உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கிதான் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித் துத் திருவிவிலியத்தில் எந்தத் தெளிவான குறிப்பும் கிடையாது. ‘திருமுழுக்குப் பெற்றவுடன் இயேசு தண்ணீரைவிட்டு வெளியேறினார் (மத் 3:16) என்ற இறைவசனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பல பிரிவினை சபையினர் இயேசு தண்ணீரில் மூழ்கிதான் திருமுழுக்குப் பெற்றார் என்று வாதாடுகின்றனர். இது யூகத்தின் அடிப்படையில் ஊதிப் பெரிதுபடுத்தப்படும் ஒரு காரியம். இரண்டாவதாக, உடல் அழுக்கைப் போக்கவேண்டும் என்றால், ஒட்டுமொத்த உடலுமே குளிக்கவேண்டும். திருமுழுக்கு என்பது உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது நம் ஆன்ம அழுக்கைப் போக்கும் செயல். எனவே, உச்சந்தலையில் தண்ணீர் ஊற்றுவது போதுமானது. தொடக்கக் கிறித்தவர்கள் வாழ்ந்த சுரங்க இல்லங்களில் (catacombs) செதுக்கி வைக்கப்பட்டிருந்த சிற்பங்களில், யோவான் இயேசுவின் தலைமேல் தண்ணீரை ஊற்றுவதுபோல்தான் வடிவமைத்திருக்கிறார்கள்.”

அன்புச்செல்வன்:எனக்கு ஒரு துணுக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு கத்தோலிக்கக் குருவானவரும், பெந்தகோஸ்து போதகர் ஒருவரும் முழுக்கு ஞானஸ்நானம் பற்றி வாதாடிக் கொண்டிருந்தார்களாம்; உடல் முழுவதுமாகத் தண்ணீரில் மூழ்கினால்தான் திருமுழுக்குச் செல்லுபடியாகும் என்று பெந்தகோஸ்து போதகர் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் போதகரைப் பார்த்து, ‘திருமுழுக்குப் பெறுபவர் தண்ணீரில் நெஞ்சுவரை நின்று நீங்கள் அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தால் அது செல்லுபடியாகுமா?’ என்று கேட்க, அந்தப் போதகர்செல்லுபடியாகாதுஎன்றார். குருவானவர், ‘கண்கள் வரை நின்றால் அது செல்லுபடியாகுமா?’ என்று கேட்க, போதகர் அதே பதிலைக் கொடுத்தார். ‘நெற்றிவரை ஒருவர் நீரில் நின்றார் என்றால் அப்பொழுது திருமுழுக்குக் கொடுக்கலாமா?’ என்று கேட்க, அந்தப் போதகர்தண்ணீர் உச்சந்தலையில்பட்டால்தான் அந்தத் திருமுழுக்குச் சரியானதாக இருக்கும்என்ற பதிலைக் கொடுத்தார். குருவானவர்அதைத்தானே நாங்கள் செய்கிறோம்என்றாராம். அந்தப் போதகரால் அதற்குமேல் பதில் பேச முடியவில்லை.”

அருள்பணி:ஆம்! தண்ணீர் ஊற்றுவது ஓர் அடையாளச் செயல்பாடே!”                

(தொடரும்)

news
ஆன்மிகம்
கரையும் பிஞ்சு இதயங்கள் கரையாத அதிகாரக் கர்வங்கள்!

மீண்டும் மீண்டும் ஒலிக்கும் சப்தங்கள்; மீண்டும் மீண்டும் விழும் குண்டுகள்; பதற்றத்துடன் துடிக்கும் இதயங்கள்; எப்போது? இங்கே? என்ற அச்சமிகு எண்ணங்கள். இத்தகைய சூழலில், “போர் ஒரு முடிவல்ல; ஆயுதம் வெற்றியை அளிக்காது, பசியை ஆயுதமாக்காதீர்கள். இத்தனைகளுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் சிதறுகிறது மனித உடல்கள்என ஒலிக்கிறது திருத்தந்தையின் குரல்.

கோவிலென்பேன், பள்ளிக்கூடமென்பேன், மருந்தகமென்பேன் - எல்லாம் உயிர் காக்ககூடியவை. ஆனால், இங்கேதான் இப்போது உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்எனும் திரு. இறையன்பு அவர்களின் வார்த்தைகள் நினைவலைகளில் அசைவாடுகிறது. வயிற்றுப்பசி, செவிப்பசியை மூடிக்கொள்ளும். ஆனால், செ  ருக்கு செவியையும், கர்வம் கண்களையும் அடைத்துவிடுகிறது. கிழிந்த உடல்களின் புகைப்படங்களையும் உணர்ச்சிநிறை வார்த்தைகளையும் தன்னில் பதிவு செய்கின்றபொழுது காகிதங்கள் கூட கரைகின்றன. ஆனால், சுற்றமும் நட்பும் வார்த்தையோடும் வேடிக்கையோடும் நின்றுவிடுகிறது.

பசியை ஒருபோதும் ஆயுதமாக்காதீர்கள்என்றார் திருத்தந்தை லியோ. ஆனால், மனித ஆதங்கம், “சகோதரருக்குப் போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதபோது, அவர்கள் உடலுக்குத் தேவையான எவற்றையும் கொடாமல் அவர்களைப் பார்த்து நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக்கொள்ளுங்கள் என்பார் என்றால் என்ன பயன்?” (யாக் 2:15-16) என்ற வார்த்தைகளோடு நின்றுவிடுகிறது.

பசி வெறும் உணவு பற்றாக்குறை அல்ல; இது ஓர் ஆயுதம் இல்லாப் போர். உயிர் வாழ்வதற்கான போராட்டம். அநியாயமும் சுயநலமும் நிறைந்த பேராசையின் உச்சம். பசியின் மத்தியில் உணவுப் பகிர்வு இறைவார்த்தையை நம் வாழ்வாக்குவது (எசாயா 58:5).

பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதுதான் இறைவன் விரும்பும் நோன்பு. கடவுளைத் தொழுகின்ற மனிதச் சமூகம் கருணையின்றி கருத்துப் பரிமாற்றம் செய்கிறது. இத்தனைக்கும் காரணம் என்ன?

காரணம் என்ன என்பதைவிட, யார் என்பது தான். யார் பெரியவர்? என்ற அதிகார மோகம். சவுல் தாவீதின்மீது கோபம் கொண்டு கொல்லத் திட்டமிட்டார். காரணம், சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் (1சாமு 18:7) என்ற புகழ்ச்சிப் பாடலில் அமைதியைவிட அதிகாரமும் அநீதியும் மேலோங்கிக் காணப்படுகிறது. எவன் ஒருவன் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறானோ, அவனே உண்மையின் தோழன்.

இன்று மிருகங்களைப் பாதுகாக்க எழும் கூட்டம் மனிதர்களைக் காக்க கண்மூடுவது ஏன்? எழுதும் பேனாவும் கண்ணீர் சிந்துகிறது. பிஞ்சு இதயங்களின் குருதியும் குரலும் வழி தேடுகிறது. ஆனால், மனிதன் கரம் கொடுக்க மறுக்கிறான். கருணை காட்ட கடினம் ஏன்?

news
ஆன்மிகம்
செபமாலை:அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான பாலம்!

அக்டோபர் மாதம் என்றாலே நம் தாய் மரியாவின் வெற்றியின் மாலை - செபமாலையைச் செபிக்கும் மாதம்.  மனிதகுலத்தின் வரலாற்றில் அறிவியல் மற்றும் நம்பிக்கை எப்போதும் இணைந்து பயணித்துள்ளன. அறிவியல் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு வழிகாட்டி ஆகும். அதேசமயம், நம்பிக்கை மனித மனத்தை அமைதியுடன், உறுதியுடன் வாழச் செய்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே பாலமாக விளங்குவது செபமாலை. அது ஒருபக்கம், ஆன்மிக வாழ்வை வளப்படுத்தும் வழிமுறையாகவும்; மறுபக்கம், வரலாற்றின் பல சோதனைகளில் வெற்றியை வழங்கிய ஆற்றலாகவும் திகழ்கிறது.

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான லூயி பாஸ்டர் கூட தனது வாழ்வில் செபமாலையின் சக்தியை நம்பியிருந்தார் என்பது அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே முரண்பாடு இல்லை என்பதற்குச் சாட்சியாகும். குடும்பம், சமூகம், திரு அவை ஆகியவற்றின் ஆன்மிக ஒன்றிப்பை உறுதிப்படுத்தும் கருவியாகச் செபமாலை இன்றுகூட வாழ்வில் பெரும் பொருள்கொண்டதாக இருக்கிறது.

லூயி பாஸ்டர் மற்றும் செபமாலை அனுபவம்

19-ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க நுண்ணறிவியலாளர், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயி பாஸ்டர் (1822-1895) தனது 25-வது வயதில் வெறி நாய்க்கடிக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்தார். ஒருநாள் பாரிஸ் நகரத்தை நோக்கித் தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது, அவர் கையில் செபமாலை வைத்துச் செபித்துக் கொண்டிருந்தார். அதே வண்டியில் அமர்ந்திருந்த ஒரு பல்கலைக்கழக மாணவன் பாஸ்டரைப் பார்த்துக் கேட்டான்: “சார், இன்னும் இந்தச் செபமாலை செபிப்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” பாஸ்டர் சிரித்தார், “ஆம்.”

மாணவன் சோகமாக, “இது ஒரு மூடநம்பிக்கை. அறிவியலையும் அறிவையும் கற்றுக் கொள்ளுங்கள்என்று கூறி, செபமாலையை அவரிடம் இருந்து வெளியே எறியுமாறு கேட்டான். பாஸ்டர் வருத்தமடைந்தார். மாணவன் பாஸ்டரின் முகவரியைக் கேட்டுப் பெற்றுக்கொண்டான். சில நாள்கள் கழித்து அந்த மாணவன் தன்னிடமிருந்த முகவரியைப் பார்த்தபோது அதில்அறிவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர், லூயி பாஸ்டர், பாரிஸ், பிரான்ஸ்என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

வரலாற்றில் செபமாலை

செபமாலை சொல்லும் வழக்கம் 13-ஆம் நூற்றாண்டிலிருந்து பரவ ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும்அல்பிஜீயன்ஸ்என்ற தப்பறைக் கொள்கை திரு அவைக்கு அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. டொமினிக் என்ற சாமிநாதர் இதை எதிர்த்துப் போராடினார். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. அப்போது மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, “இந்தச் செபமாலையை வைத்து நம்பிக்கையோடு செபி, வெற்றி கிடைக்கும்என்று கூறினார். டொமினிக் அதற்கேற்ப செபமாலை செபித்ததால், பலர் மனமாற்றம் அடைந்து இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டனர். இதனால் செபமாலை சொல்லும் வழக்கம் பரவியது.

இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் முதல் ஞாயிறன்று கொண்டாடும் வகையில் 1716-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ஆம் கிளமெண்ட் இதை உரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார். 1913-இல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியா தன்னைசெபமாலை அன்னைஎன்று அறிமுகம் செய்து கொண்டார்.

புனிதர்கள் மற்றும் செபமாலை

புனிதர் ஆலன் ரோச் செபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகரித்தார். 1571-ஆம் ஆண்டு கிறித்தவர்கள் இஸ்லாமியப் படையைச் செபமாலையின் துணையால் வெற்றி கொண்டனர். இதற்குப் பிறகு செபமாலைமீது மக்களின் நம்பிக்கை அதிகரித்தது.  1715-ஆம் ஆண்டு திருத்தந்தை செபமாலை விழாவைத் திரு அவையின் விழா அட்டவணையில் சேர்த்தார். 1858 மற்றும் 1917-ஆம் ஆண்டுகளில் லூர்து, பாத்திமா நகரங்களில் மரியா சிறுமிகளுக்குக் காட்சி கொடுத்து, செபமாலை சொல்லும் நன்மைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கினார்.

செபமாலை சொல்லும் விதி மற்றும் அர்த்தம்

செபமாலை சொல்லும்போது ஒரே வார்த்தையை மறுமுறை மட்டுமல்ல, இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பை மரியாவின் வாழ்க்கையுடன் இணைத்துத் தியானிக்கிறோம். தூய லூயிஸ் தே மாண்ட்போர்ட் கூறுகிறார்: “செபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலும் நீங்கும்; இறையருள் மேலும் பெருகும்.” திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் கூறுகிறார்: “செபமாலை சாதாரண விடயம் அல்ல; அதைச் சொல்லிச் செபிக்கும்போது மீட்பின் வரலாற்றை நினைவுகூர்கின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குக் கூறிய செபத்தையும், வானதூதர் கபிரியேல் மரியாவிற்குக் கூறிய மங்கள வார்த்தையையும் நினைவுகூர்கின்றோம்.”

செபமாலையின் மூன்று பண்புகள்

செபமாலை கிறித்தவ வாழ்வின் ஆற்றலும் ஆறுதலுமாக இருக்கிறதுஅது வெற்றி, விசுவாசம், விண்ணக வாழ்வு ஆகியவற்றின் முத்திரையாக நம்மை இறைவனின் அருளுக்கு அருகில் கொண்டு செல்லும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளது. அவைகளைக் கீழே காணலாம்திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தில் (Rosarium Virginis Mariae, ghf« 41) இவ்வாறு கூறுகிறார்: “குடும்பமாகச் சேர்ந்து சொல்லப்படும் செபமாலை நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வளர்க்கும். அது குடும்ப உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கி அன்பு, மன்னிப்பு, சமாதானம் நிறைந்த உறவை உருவாக்குகிறது.”

வெற்றி மாலை

1571-ஆம் ஆண்டு கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே இலாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறித்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறித்தவர்கள் தங்களுடைய கைகளில் செபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் செபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறித்தவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை, ‘அன்னை மரியின் வெற்றியின் விழாஎன்று கொண்டாடப் பணித்தார். “இப்போர் உங்களுடையது அல்ல; அது கடவுளுடையது (2குறி 20:15). செபமாலையும் இறைவனின் வார்த்தையும் இணைந்து, கிறித்தவர்களுக்கு வெற்றியின் அடையாளமானது.

நம்பிக்கையின் மாலை

எங்கள் ஊரில் என் அம்மாச்சி ஒரு செபமாலையைக் கையில் கொடுத்துவிட்டு, “நல்லாச் செபி; இந்தச் செபமாலையைப் பட்டினியா போட்டுடாதப்பாஎன்று சொல்லி தன் நம்பிக்கையை எனக்குச் சொன்னார்கள். செபமாலை சொல்லும் பழக்கம் அது ஓர் உணவு மற்றும் வாழ்க்கையின் விசுவாச முறை. “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்என்று செபமாலையைக் குறித்து வீரமாமுனிவர் கூறுவார். ஆம், செபமாலையை நாம் இடைவிடாது, நம்பிக்கையோடு செபிக்கின்றபோது, அதனால் மீட்புப் பெறுகின்றோம் என்பது உறுதி. “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் (மத்தேயு 21:22). செபமாலை சொல்லும்போது இறைவனின் வார்த்தை நம்மை ஆற்றலூட்டுகிறது, நம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

விண்ணக மாலை

ஒரு மானிடன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நல்சுகத்திற்கும் ஆறுதலுக்கும் சுப நிகழ்வுகளுக்கும் சொல்லப்படும் செபம் இந்தச் செபமாலைதான். செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும் இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்குபெறுவர். ஆன்மாவை விண்ணகத்திற்குப் போகத் தூய்மையாக்கும் மிகப்பெரிய கருவி செபமாலை. செபமாலையுடன் இறைவார்த்தை சேரும்போது, அது ஆன்மாவை விண்ணக வாழ்விற்கு வழிநடத்தும் அருள்கருவியாகிறது.

செபமாலையை வாழ்வியலாக்கும் வழிமுறைகள்

மறைமாவட்டத்திலும் பங்குகளிலும் பணி செய்யும் தளங்களிலும் செபமாலை செய்யும் பழக்கத்தைச் செயலாக்கும் முறைகள்:

1. செபமாலை பற்றிய கவிதை, கட்டுரை, பாடல், நாடகம் மற்றும் வினாடி-வினா போன்ற போட்டிகளை நடத்தலாம். 2. வீடுகளில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி வித்தியாசமான செபமாலை செய்யலாம். 3. ஒவ்வொரு வருடமும் மறைக்கோட்ட அளவிலான செபமாலை மாநாடு நடத்தலாம். 4. மரியாயின் சேனையினர் மருத்துவ மனைகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் சென்று செபிக்கலாம் 5. பங்கிலே யூடியூப் சேனல் வைத்து தங்களின் பங்கு மக்களைச் செபமாலை சொல்லி, செபமாலை குறித்து நாடகம் நடித்து, பாடல் பாடி யூடியூப் சேனலுக்கு அனுப்பலாம். 6. இரவில் ஒளிரும் செபமாலையைக் கையில் ஏந்தி ஒளியும்-ஒலியும் செபமாலை செய்யலாம். 7. அன்பியம் வாரியாகச் செபமாலை கலந்துரையாடல் செய்யலாம். 8. மிகப்பெரிய செபமாலை செய்து, ஆயரால் அர்ச்சிப்பு செய்து மறைமாவட்டம் முழுவதும் செபமாலை வலம் வரலாம். 9. மரியாயின் சேனையினர் ஒன்றாகச் சேர்ந்துசெபமாலைஎன்ற மாதா பத்திரிகையை நடத்தலாம். 10. செபமாலையைக் கையில் ஏந்திசெபமாலை ரேலிநடத்தி, செபமாலை நடைப் பயணம் நடத்தலாம். இத்தகைய அன்றாடச் செயல்பாடுகள் செபமாலையின் ஜெயத்தையும், வாழ்வில் வரும் தடைகளைத் தாண்டிச்செல்லும் அருளையும் உணரச் செய்கிறது செபமாலை.

ஆகவே, செபமாலை என்பது ஒரு பழமையான வழிபாட்டுமுறையோ, பாரம்பரியச் சின்னமோ அல்ல; அது நம்பிக்கையின் உயிர்ப்பும், வாழ்க்கையின் அர்த்தமுமாகும். வரலாற்றில் கிறித்தவர்களுக்கு வெற்றியும், குடும்பங்களுக்கு ஒன்றிப்பும், தனிநபர்களுக்கு அமைதியும் வழங்கிய இந்தச் செபம், இன்றைய காலத்திலும் அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே பாலமாகத் திகழ்கிறது.

கையில் ஏந்தப்படும் மணிகள் ஒவ்வொன்றும், நம் இதயத்தை இறைவனிடத்திற்கும் அன்னை மரியாவிடத்திற்கும் நெருங்கச் செய்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, சமூக வாழ்விலோ, உலகளாவிய சவால்களிலோ, செபமாலை நமக்கு வலிமையும் நம்பிக்கையும் தந்து, விண்ணக வாழ்விற்குத் திசைதிருப்புகிறது. ஆகவே, செபமாலை என்பதுவெற்றியின் மாலை, நம்பிக்கையின் மாலை, விண்ணகத்தின் மாலைஎன்று சொல்லப்படும் அளவிற்கு ஆன்மிக வாழ்வின் புதையல் இச்செபமாலை.