‘மனுவுருவாதல்’ (incarnation) என்னும் மிகப்பெரிய மறைபொருளுக்கு முன்பு அன்னை மரியா ‘ஆம்’ என்று கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, மனுக்குலத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார்.
1.
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பைப் பற்றிய தனது கருத்தில் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது,
இறைத்தூதரின் வார்த்தையை நம்பி அதற்குத் தனது ஒப்புதலைத் தெரிவித்த மரியாவின் மதிப்புமிக்க
பதிலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. இதுபோன்ற நற்செய்தி விவரிப்புகளில் நிகழ்வதைப்
போலல்லாமல், இது இறைத்தூதரால் வெளிப்படையாகவே அறிவிக்கப்படுகின்றது: “ஒரு பெண்ணால்
சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர்
ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன் நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம்
நிறை தந்தை ஆவல் கொண்டார்” (இறைத்திட்டத்தில் திருச்சபை எண்.
56).
‘இறைத்திட்டத்தில்
திருச்சபை’ என்னும் இந்த ஏடானது புனித எரோணிமுஸ்
விவரிக்கும் ஏவாளுக்கும் மரியாவிற்கும் இடையேயான வேற்றுமையை நினைவுகூர்கின்றது: “முந்தையவள்
அதாவது ஏவாள், ஒரு தூதரின் (சாத்தானின்) வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டதனால் இறைவனின்
வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அவரை விட்டு விலகிச் சென்றாள். ஆனால், மரியாவோ ஓர் இறைத்தூதரின்
அறிவிப்பிலிருந்து நற்செய்தியைப் பெற்று, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் இறைவனையே
பெற்றெடுத்தார். மேலும், ஏவாள் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் அளவுக்குச் சாத்தானால்
ஏமாற்றப்பட்டாள். ஆனால், மரியாவோ இறைவனுக்குக் கீழ்ப்படிவதென உறுதி செய்துகொண்டார். இதன் வழியாக மரியா ஏவாளுக்காக இறைவனிடம் பரிந்து
பேசுபவரானார். ஒரு கன்னியால் (ஏவாள்) மனித இனம் முழுவதுமே மரணத்திற்கு உட்படுத்தப்பட்டதைப்
போன்றே, மற்றொரு கன்னியால் (மரியா) அது மீட்கப்பட்டது. இவ்வாறு ஒரு கன்னியின் கீழ்ப்படியாமையானது
மற்றொரு கன்னியின் கீழ்ப்படிதலால் சமன் செய்யப்பட்டது...” (Adv. Haer., V, 19, 1).
சுதந்திரமானதொரு நம்பிக்கை
மற்றும் கீழ்ப்படிதல் வழியாக மரியா இறைத்திட்டத்திற்கு ஒத்துழைத்தார்
2.
இறைவனின் திட்டத்திற்கான அவரது முழுச் சம்மதத்தைத்
தெரிவிப்பதில், மரியா இறைவனுக்கு முன் முற்றிலும் சுதந்திரமுள்ளவராக இருந்தார். அதே
நேரத்தில், அவரது பதிலில் முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் இருப்பதையும் தனிப்பட்ட
முறையில் மரியா உணர்ந்திருந்தார்.
இறைவன்,
முழு மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் ஒரு பெண்ணின் கரங்களில் வைக்கின்றார். இவ்வகையில்,
உலக மீட்பிற்காக இறைவன் தமது அன்பில் தயாரித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்திட்டமே
மரியாவின் ‘ஆம்’ என்கிற
சம்மத மொழியாகும்.
மீட்பின்
இறைத்திட்டத்திற்கான மரியாவின் சுதந்திரமான சம்மதத்தில் உள்ள முழு மனிதகுலத்திற்குமான
தீர்க்கமான மதிப்பைச் சுருக்கமாகவும் திறம்படவும் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி
ஏடானது கூறுகின்றது: “கன்னி மரியா சுதந்திரமான நம்பிக்கையோடும் கீழ்ப்படிதலோடும் மனுக்குல
மீட்பில் ஒத்துழைத்தார். மனுக்குலம் அனைத்தின் சார்பாகவும் அவர் ‘ஆம்’ என்று கூறினார். அவரின் கீழ்ப்படிதலினால், வாழ்வோர் அனைவரின்
தாயாகிய புதிய ஏவாள் ஆனார்” (Catechism of the Catholic Church, n. 511).
3.
தனது நன்னடத்தை வழியாக, நம் வாழ்விற்கான இறைவனின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நமது
தீவிரமான பொறுப்பை மரியா, நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகிறார். இறைத்தூதரின்
வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் இறைவனுடைய மீட்பின் விருப்பத்திற்கு முற்றிலும்
கீழ்ப்படிதலில், “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி அவர்கள் நடக்கும்படி” (லூக் 11:28) ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் (blesseds) என்று ஆண்டவர் குறிப்பிடுகிறவர்களுக்கு
மரியா முன்மாதிரியாகின்றார். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று
தன் தாயை அறிவித்த கூட்டத்திலிருந்த அந்தப் பெண்ணிடம் இயேசு மரியாவின் ஆசிர்வாதத்திற்கான
உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அவரது
விருப்பமே இறைவனின் தாயாக இருப்பதற்கான அந்த அழைத்தலை அவர் ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது.
இயேசு
கூறும் இந்தப் புதிய ஆன்மிகத் தாய்மையானது (new spiritual motherhood) அனைத்திற்கும் மேலாக மரியாவுடன் தொடர்புடையது
என்பதை ‘மீட்பரின் தாய்’ என்கின்ற திருமடலில் நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
உண்மையில், இறைவனின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களில் மரியா முதன்மையானவர்
அல்லவா! ஆகவே, கூட்டத்திலிருந்த பெண்ணிற்கு இயேசு அளித்த ஆசிர்வாதம் முதலில் மரியாவைத்தானே
குறிக்கும்! (மீட்பரின் தாய், எண். 20). இவ்வாறு, மரியா அவருடைய மகனின் முதல் சீடராக
(ஒப்பிடுக. ibid) அறியப்படுகிறார். மேலும், அவரது முன்மாதிரியால் ஆண்டவரின்
அருளுக்குத் தாராளமாகப் பதிலளிக்க அனைத்து நம்பிக்கையாளர்களையும் அழைக்கின்றார்.
4.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் அவரது பணியில் மரியாவின்
முழு அர்ப்பணிப்பு பற்றி இவ்வாறு விளக்குகின்றது: “பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு
கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தன் மகனுக்கும் அவரின் பணிக்கும் தன்னையே ஆண்டவரின்
அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்” (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண்.
56).
மரியாவைப்
பொருத்தவரை, இயேசுவுக்கும் அவரது பணிக்குமான அவரின் அர்ப்பணிப்பு என்பது தன் மகனுடனான
நெருங்கிய உறவு, அவரை ஒரு மனிதனாக வளர்ப்பதில் தாய்மையுள்ளம் கொண்ட ஈடுபாடு மற்றும்
அவரது மீட்புப் பணியில் அவரின் ஒத்துழைப்பு போன்றவைகளாகும்.
மரியா மனுக்குலம் அனைத்திற்குமான
மீட்பின் காரணமானார்
மீட்புப்
பணியில் இயேசுவிற்கு ஒத்துழைப்பதில் மரியா ‘அவருக்குக் கீழ்நிலையில் இருந்து’ சிறப்பான வகையில் அதைச் செய்கின்றார். அதாவது, அருளின்
பயனான கீழ்ப்படிதலின் நிலையில் இருந்து அதைச் செய்கின்றார். இருப்பினும், இது ஓர் உண்மையான
ஒத்துழைப்பாகும். ஏனெனில் இது ‘அவரோடு’ நிறைவேற்றப்பட்டிருக்கிறது மற்றும்
இது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பிலிருந்து மீட்புப் பணியில் அவரது தீவிரமான பங்களிப்பையும்
உள்ளடக்கியதாகும். எனவே, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது மிகச் சரியாக, “இவ்வாறு
அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் கையில் மரியா செயலற்ற ஒரு கருவியல்ல; மாறாக, நம்பிக்கையாலும்
கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர்” எனத் திருத்தந்தையர் கருதுவது சரியே. தூய எரோணிமுஸ் கூறுவதுபோல,
“மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறை வாழ்வு பெறக் காரணமானார்” (Adv. Haer., III, 22,4).
நமது
முதல் பெற்றோரின் பாவத்திற்கு எதிரான கிறிஸ்துவின் வெற்றியுடன் தொடர்புடைய மரியா உண்மையில்
வாழ்வோரின் தாயாகத் தோன்றுகின்றார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 56). இவ்வாறு
இறைத்திட்டத்திற்குக் கீழ்ப்படிவதைச் சுதந்திரமாக ஏற்றுக்கொண்ட அவரது தாய்மையானது மனுக்குலம்
அனைத்திற்கும் வாழ்வின் ஊற்றாகின்றது.
மூலம்:
John Paul II, Mary, the new Eve, freely obeyed God, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 25 September 1996, p. 19.
அருள்பணியாளர்கள் மிகச் சிறந்தவர்களாக அப்பழுக்கற்றவர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நம்மில் பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்களைப்போல அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகக் கடினமானவை. அருள்பணியாளர்களின் வாழ்வு பெரும் விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் உள்ளாக்கப்படுகிற காலம் இது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொய்கள் மற்றும் வதந்திகள் எனும் சேற்றில் சிக்கிக் கிடக்கிறார்கள்.
1964-ஆம்
ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மறைமாவட்டங்களிலிருந்து வத்திக்கானுக்கு அனுப்பப்பட்ட
அறிக்கைகளின் அடிப்படையில் 69,063 அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி நிலையை விட்டு
வெளியேறியிருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டுவரை ஆண்டுதோறும் 26 விழுக்காடு
அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி நிலையிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
அதே
நேரத்தில், அருள்பணியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் அதே அருள்பணி நிலைக்குத்
திரும்பி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது என்று இணையதளத்தில் வாசிக்க நேரிட்டது.
உணர்ச்சி
ரீதியான உறுதியற்ற சூழ்நிலைகள், மணத்துறவு, நம்பிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி, மனச் சோர்வு,
திரு அவைத் தலைவர்களோடு ஏற்படும் கருத்து வேறுபாடு, மீளமுடியாத பிற காரணிகள் மற்றும்
இன்னும் பிற காரணிகள் அருள்பணி நிலையிலிருந்து விலகுவதற்குக் காரணிகளாக இருக்கின்றன.
நம்பிக்கைப் பயணத்தில் யூதாஸ் விழலாம்; தோல்வி அடையலாம்; பேதுரு விழலாம்; அருள்பணியாளர்களும்
விழலாம்; தோல்வி அடையலாம்.
அமெரிக்க
இறையியலாளரான ஸ்காட்ஹான் ஏப்ரல் 25-ஆம் தேதி 2001-ஆம் ஆண்டு EWTN தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் நடத்திய உரையில், தனது ஆன்மிக வழிகாட்டியிடமிருந்து கேட்ட திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் பற்றிய ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.
இளைஞர்
ஒருவர் அருள்பணியாளராக ஆக வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அதனால் அவருடைய
ஆயர் அவரைப் படிப்பதற்காக உரோமைக்கு அனுப்பினார். அவர் படித்து முடித்ததும் அருள்பணியாளராகத்
திருநிலைப்படுத்தப்பட்டார். சில வருடங்கள் தனது மறைமாவட்டத்தில் பணியாற்றினார். அவருடைய
ஆயர் அவரை மேற்படிப்பிற்காக மீண்டும் உரோமைக்கு அனுப்பினார். அங்கு அவர் படித்துக்கொண்டிருந்த
போது, தினமும் செபம் செய்வதற்காக அருகிலிருந்த ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். அந்த
ஆலய வாசலில் பிச்சைக்காரர்கள் குழு யாசகம் கேட்டு அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரைக்
கண்டதும், ஏதோ விவரிக்க முடியாத ஒருவிதமான சங்கடம் அந்த அருள்பணியாளருக்கு ஏற்பட்டது.
அவர்
அந்தப் பிச்சைக்காரரிடம் சென்று, “உங்களை எனக்குத் தெரியும். நாம் இருவரும் சேர்ந்து
தானே குருமடத்தில் படித்தோம்” என்று கேட்டார். அவர், ‘ஆமாம்’ என்று கூறியதோடு “நானும் உங்களுடன் உரோமையில் படித்தேன்,
திருநிலைப்படுத்தப்பட்டேன்” என்று சோகத்துடன் தெரிவித்தார். திகைத்துப்போன
அருள்பணியாளர், “உங்களுக்கு என்னதான் நடந்தது?” என்று கேட்டார். அதற்கு அவர், “என்
வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்தேன். இறுதியில் அருள்பணியாளர்
பணியைத் துறந்துவிட்டேன். அருள்பணியாளர் பொறுப்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. நான்
எல்லாவற்றையும் இழந்து, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்” என்று கூறினார். அந்த அருள்பணியாளரால் அந்தப் பிச்சைக்காரரை
மறக்கமுடியவில்லை. அவருக்காகத் தொடர்ந்து செபம் செய்தார். அவர் படிப்புப் பயிற்சி முடிவுக்கு
வந்துகொண்டிருந்தது.
மாணவர்கள்
அனைவரும் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களிடமிருந்து தனிப்பட்ட ஆசிர்வாதங்களைப்
பெற அழைக்கப்பட்டனர். அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால்,
இந்த அருள்பணியாளர் ஆசிர்வாதம் பெறுவதற்காக மண்டியிட்டபோது, மனம் முழுவதும் அந்தப்
பிச்சைக்காரரைப் பற்றியே நிறைந்திருந்தது. அதனால் அவர் திடீரென்று, “புனித தந்தையே,
உரோமையில் ஓர் ஆலயத்திற்கு வெளியே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்காக இறைவேண்டல்
செய்யுங்கள். அவர் ஓர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்; ஆனால், பணியைத்
துறந்துவிட்டார். அவருடைய அருள்பணிப் பொறுப்பும் நீக்கப்பட்டுவிட்டது” என்று கூறி விட்டார்.
கோபமடைந்த
உதவியாளர்கள் அவரை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியதால், அவர் பேசி முடிப்பதற்குக்கூட
நேரம் கிடைக்கவில்லை.
சில
நாள்களுக்குப் பிறகு வத்திக்கானைச் சேர்ந்த பணியாளர்கள் அந்த அருள்பணியாளரைத் தொலைப்பேசியில்
தொடர்புகொண்டனர். அவரும், அந்தப் பிச்சைக்காரரும், அதாவது மேனாள் அருள்பணியாளரும் திருத்தந்தையுடன்
இரவு உணவு உண்ண அழைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் அருள்பணியாளரிடம் தெரிவித்தனர். உற்சாகமும்
ஆவலும் அடைந்த அவர், தன் வகுப்புத் தோழரைக் கடைசியாகப் பார்த்த ஆலயத்திற்கு விரைந்தார்.
அங்கே சில பிச்சைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். அவருடைய மேனாள் வகுப்புத் தோழரும் அந்தச்
சிலரில் ஒருவராக இருந்தார்.
இவர்
அந்த மனிதரை அணுகி, “நான் திருத்தந்தையைச் சந்தித்தேன்; அவர் உங்களுக்காகச் செபிப்பதாகக்
கூறினார். அது மட்டுமல்ல, அவர் நம்மை இரவு உணவிற்காகத் தனது தனிப்பட்ட இல்லத்திற்கு
அழைத்துள்ளார்” என்றார்.
“நடக்காத
காரியம். என்னைப் பாருங்கள்... நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். நான் நீண்ட
காலமாகக் குளிக்கவில்லை. என் உடைகளும் அழுக்கான நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில்
அவரை நான் எப்படிச் சந்திக்க முடியும்?” என்று கேட்டார்.
சூழ்நிலையின்
தீவிரத்தை உணர்ந்த அருள்பணியாளர், “நான் உங்களுக்காக ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அங்கே நீங்கள் குளித்து சவரம் செய்துகொள்ளலாம். உங்களுக்குப் பொருந்தக்கூடிய உடைகளும்
என்னிடம் உள்ளன” என்றார்.
அந்தப்
பிச்சைக்கார அருள்பணியாளர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் திருத்தந்தையுடன் இரவு
உணவு உண்ணப் புறப்பட்டனர்.
இருவரும்
புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய வாயில்கள் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்குத் திருத்தந்தையின்
போலந்து நாட்டைச் சார்ந்த செயலாளரான மான்சிக்னோர் டிசிவிஸ் அவர்களை வரவேற்றார். அவர்
அவர்களை உணவு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்குத் திருத்தந்தை அவர்களுக்காகக் காத்திருந்தார்.
அறிமுகங்களுக்குப் பிறகு, அவர்கள் ஓர் அருமையான உணவை உண்ண அமர்ந்தனர். உணவு முடிந்ததும்,
திருத்தந்தை தனது செயலாளருக்குச் சைகை காட்டினார். அவர் எழுந்து அருள்பணியாளரைத் தன்னைப்
பின்தொடரும்படி சைகை காட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேறினார். பிச்சைக்காரரான அருள்பணியாளரும்
திருத்தந்தையும் தனிமையில் உரையாடினர்.
சுமார்
15 நிமிடங்களுக்குப் பிறகு திருத்தந்தை அவர்களை மீண்டும் உள்ளே அழைத்தார். அவர்களுக்கிடையான
உரையாடல் யாரும் அறியாத இரகசியமாகவே புதைக்கப்பட்டது. என்ன நடந்தது என்பது பற்றி எதுவும்
பேசப்படவில்லை.
புனித
பீட்டர் சதுக்கத்தைக் கடந்து சென்ற போது, மிகுந்த ஆர்வம் மேலிட அந்த அருள்பணியாளர்,
தான் அறைக்கு வெளியே இருந்தபோது ‘என்ன நடந்தது?’ என்று அந்தப் பிச்சைக்கார அருள்பணியாளரிடம்
ஆவலுடன் கேட்டார்.
கண்ணீரோடு
பேச ஆரம்பித்தார். “நாங்கள் தனியாக இருந்தபோது திருத்தந்தை என்னை நோக்கித் திரும்பி,
‘அருள்பணியாளரே, நான் உங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புகிறேன்’ என்றார். நான் பெரும் குழப்பத்துடனும் வேதனையுடனும் ‘என்னால்
முடியாது; நான் இப்போது அருள்பணியாளராக இல்லை’ என்று
பதிலளித்தேன். திருத்தந்தை என்னை அன்புடனும் கருணையுடனும் பார்த்தார். பிறகு அவர் தனது
வலது கையை உயர்த்தி, விரலை அசைத்து, ‘ஒருமுறை அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டால்
எப்போதும் அருள்பணியாளர்தான்’ என்று கூறினார். என்னுடைய பிரச்சினையைத்
திருத்தந்தையுடன் பகிர்ந்துகொண்டேன். திருத்தந்தையிடம் பாவ சங்கீர்த்தனம் செய்தேன்.”
நீண்ட
மௌனத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்தார்... “உரோமையின் ஆயர் மற்றும் கத்தோலிக்கத் திரு
அவையின் தலைவர் என்ற முறையில் உங்கள் அருள்பணி தகுதிகளை உங்களுக்கு மீண்டும் வழங்குகிறேன்’ என்றார் திருத்தந்தை. நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு
அழுதேன். மீண்டும் திருத்தந்தை என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய கோரிக்கை வைத்தார்.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்தார். செபம் மற்றும்
தியானத்திற்காகச் சிறிது நேரம் ஒதுக்கிய பிறகு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்
கூறினார்: ‘நீங்கள் இங்கிருந்து சென்றதும், நீங்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஆலயத்திற்குச்
சென்று, அந்தப் பங்குத்தந்தையைச் சந்திக்கவேண்டும்; அங்கு உங்களை உதவி பங்குத்தந்தையாக
நியமனம் செய்யச் சொல்கிறேன். ஆலய வாசல்களில் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களைக் கவனிக்கும்
சிறப்புப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும்’ என்றார்.”
அருள்பணியாளர்
திரு அவைச் சட்டங்கள் மற்றும் தார்மிகக் கடமைகளின்படி வாழவேண்டும் என்பது உண்மை. அருள்பொழிவு
அருள்சாதனம் நிரந்தரத் தன்மையுடையது என்பதற்காகத் தனிப்பட்ட விருப்பம் போல் வாழலாம்
என்பதல்ல.
அருள்பணியாளர்
எப்படி அருள்பணி நிலையிலிருந்து வெளியேறினார்? என்ன செய்தார்? என்பதும் இதில் அடங்கும்.
இரக்கமுள்ள தந்தையைப் போலவே ஞானத்துடனும் ஆன்மிகப் பொறுப்புடனும் திரு அவை எப்போதும்
கதவைத் திறந்து வைத்திருக்கிறது; வைத்திருக்கவேண்டும். ஓர் அருள்பணியாளர் மனிதனைப்
பிரதிநிதிப்படுத்துகிறார். அவரது தகுதி மனிதர்களுக்குச் செய்கிற நலமான பணியால்தான்
அளவிடப்படுகிறது.
தவக்காலம் மனிதர்களுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட பொன்னான, பொக்கிசமான நாள்கள் என்று கூறினால் அது மிகையாகாது என எண்ணுகிறேன். ஏனென்றால், தவக்காலம் என்பது அருளின் காலம்; ஆசிர்வாதத்தின் காலம்; இரக்கத்தின் காலம்; ஈகையின் காலம்; மன்னிப்பின் காலம்; மனமாற்றத்தின் காலம்; பரிவின் காலம்.
‘தவக்காலம்’ கரடுமுரடான வாழ்வைச் செதுக்கி, நல்ல வடிவத்தை உருவாக்கும்
உன்னதமான காலம். கல்லான இதயத்தைக் கனிவுள்ள இதயமாக மாற்றும் சிறந்த காலம். உடைகளைக்
கிழித்துக் கொள்ளாமல் உள்ளத்தைக் கிழித்துக்கொள்ளும் அருமையான காலம்.
தவக்காலத்தின்
மிக முக்கிய நோக்கங்களாக மூன்றினைக் குறிப்பிடலாம். அவை செபம், தவம், தர்மம் ஆகியவை
ஆகும். செபத்தால் மனிதன் கடவுளோடு நெருக்கமான உறவை ஏற்படுத்தித் தன்னைப் புதுப்பித்துக்
கொள்கிறான். தவத்தால் தன்னைப் பற்றி ஆழமாகப் புரிந்து, தெரிந்து தனது பலவீனத்தை வெல்வதற்கு
முயற்சிகளை மேற்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். தர்மத்தால் இயலாதவர்கள்,
இல்லாதவர்கள், முடியாதவர்கள், ஏழைகள் யாவருக்கும் ஒறுத்தல் வழியாக, உண்ணாநோன்பு வழியாக
உணவை, உடைமையை, பொருளைப் பகிர்ந்து கொடுத்து,
பிறரன்பையும் இறையன்பையும் அனுபவிக்கும் அருமையான காலம். தவக்காலம் மனிதனை மனிதனாய்
மாற்றும் சிறந்த மனிதநேய காலம்.
தவக்காலம்
மனமாற்றத்தின் காலம். மனம் மாறுவது என்பது மேலோட்டமான மாற்றம் அல்ல; வேரோட்டமான மாற்றம்.
மனம் மாறி ஒரு புதிய மனிதனாக, சிறந்த மனிதனாக உருவாகுவதே தவக்காலத்தில் கொடுக்கப்படும்
சிறந்த அழைப்பு. பழைய பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து புதிய, புனிதமான நிலைக்கு வருவதுதான்
மனமாற்றம். எனது பாவப் பழக்கவழக்கங்கள், பலவீனங்கள், குற்றங்குறைகளைச் செபம், தவம்
வழியாக உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, விடுதலை பெற்ற மனிதனாக வாழ்வது. மந்தமான மனநிலையிலிருந்து,
ஊதாரி மகனைப் போல அறிவுத் தெளிவு பெற்று இறைவனிடம் திரும்பி வருவதும், திருந்தி வாழ்வதும்
தவக்காலத்தின் மிக முக்கியமான பண்பாகும்.
தவக்காலம்
மன்னிப்பின் காலம். நாம் எல்லாரும் பலவீனமானவர்கள், பாவம் செய்யக்கூடியவர்கள், தவறக்கூடியவர்கள்,
தவறு செய்யக்கூடியவர்கள். எனவே, பிறரைக் காயப்படுத்துவது மனித குணமாக மாறிவிட்டது.
இதனால் இறைவனோடும்-இயற்கையோடும் தன்னோடும்-பிறரோடும் உள்ள உறவை முறித்து வாழ்கிறோம்.
எனவே, இக்காலம் ஒருவரையொருவர் சந்தித்து ஒப்புரவாகி, மன்னித்து உறவைப் புதுப்பிக்கும்
காலம். உறவுகள் ஊனமாகிவிட்டால் வாழ்வும் ஊனமாகிவிடும். எனவே, மன்னித்து உறவுகளைப் புதுப்பித்து,
புதியதொரு வாழ்க்கை வாழ்வதே தவக்காலத்தின் மிகச்சிறப்பு.
தவக்காலம்
சடங்கு, சம்பிரதாயங்கள், கொண்டாட்டங்கள் வழிபாடுகளோடு முடிந்து விடக்கூடாது; மாறாக,
தவக்காலத்தின் நோக்கங்களும், கடவுளின் ஏக்கங்களும் நிறைவேறுவதாக அமையவேண்டும். இறைச்சியை,
முட்டையைத் தவிர்ப்பதால் புனிதத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. எல்லாரிடமும் நல்லுறவை
ஏற்படுத்தி, அன்பு செய்வதன் வழியாகத் தவக்காலத்தின் பலனை அனுபவிக்கலாம்.
எல்லாவற்றிற்கும்
மேலாக ஆடையில்லாதவர்களுக்கு ஆடை கொடுப்பதும், பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதும்,
தாகமாய் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதும்,
இருக்க இடமில்லாதவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதும், சிறையில் இருப்பவர்களைக்
காணச் செல்வதும், அந்நியரை வரவேற்பதும், தவக்காலத்தில் சேமிக்கும் பணத்தை ஏழைகளுக்குக்
கொடுத்து நிறைவு காண்பதிலும்தான் தவக்காலம் நிறைவடைகிறது. எனவே, தவக்காலத்தில் தவமிருப்போம்;
இறைவேண்டலில் நிலைத்திருப்போம்; ஏழைகளுக்குக் கொடுப்பதில் மகிழ்வடைவோம்; உயிர்ப்புப்
பெருவிழாவை உயிராற்றல்மிக்க உணர்வோடு கொண்டாடுவோம்.
• திரு அவையின் கடந்தகால வரலாற்றிலிருந்து இன்றுவரை ஏழைகள் மீதான அன்பும் அக்கறையும் ஒரு முகாமையான தொடர் கதையாகவே இருந்து வந்திருக்கிறது. இது நிறுவனங்களின் வெறும் மனிதாபிமான செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
• மீண்டும் ‘நல்ல சமாரியர்’
உவமை - இந்த உவமையில் ‘யாரோடு உங்களை இணைத்துப் பார்க்கிறீர்கள்?’ என்ற வினாவைத் திருத்தந்தை எழுப்புகிறார். இன்றும் இந்த உவமை அதிகம் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.
• நமது பல முன்னேற்றம், வளர்ச்சியின்
மத்தியில் ஏழைகளைப் பொறுத்தமட்டில் நாம் படிப்பற்ற அறிவிலிகளாகவே (illiterate) இருக்கிறோம்.
• ஏழைகளைச் சமுதாயப் பிரச்சினைகளாக, நமக்குத் தொந்தரவு தருகிறவர்களாகப் பார்க்கிறோமா? அப்படியானால் நம் சமுதாயம் ஒரு சீக்குப் பிடித்த சமுதாயம் அல்லது கிறித்தவ நம்பிக்கையில், ஏழைகளை என்னைப் போல ஒருவராக, கடவுளின் சாயலாக, மனித மாண்பு கொண்டவர்களாக, இயேசுவால் மீட்கப்பட்டவர்களாக, கடவுளால் தொடர்ந்து அன்பு செய்யப்படுகிறவர்களாகப் பார்க்கிறோமா? ‘நீரும் போய் அவ்வாறே செய்யும்’
என்பது (லூக் 10:37), இயேசுவிடமிருந்து உரிமையுடன் எழும் அன்புக் கட்டளை என்பதைத் தினமும் நாம் நினைவுகூரவேண்டும்.
இன்றைய திரு
அவையின்
தவிர்க்க
முடியாத
சவால்
• ஏழைகளின் இன்றைய நிலைக்கு அவர்களே காரணம் என்பதைத் திருத்தந்தை புனித பெரிய கிரகோரியார் துணிச்சலோடு கண்டனம் செய்கிறார்.
•
நற்செய்தியின்
கடமைகள் பற்றி ஏழைகள் நமக்குக் கற்றுத்தர அதிகம் இருக்கிறது.
• செல்வச் செழிப்பில் வாழ்ந்த செல்வந்தன், ஏழை இலாசருக்கு நீதி வழங்கவில்லை, அவனுக்குப் பரிவு காட்டவில்லை. எனவே, அவன் இறந்த பின்பு பாதாளத்தில் புதைக்கப்பட்டான் (லூக் 16: 19-31).
• கிறித்தவர்களாகிய நமக்கு ஏழைகள் ஒரு சமுதாய வகை (Sociological Category) அல்ல;
மாறாக, கிறிஸ்துவின் சதை (Body of Christ).
• கிறித்தவச் சமயத்தைத் தனிமனிதருக்கானது என்ற சுருக்கிய தளத்தோடு முடக்கிவிடக்கூடாது. குடிமைச் சமூகத்தில் எழும் மக்களுடைய பிரச்சினைகளில் சமயம் ஈடுபட வேண்டும். ஏழைகளுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது அரசின் கடமை அல்லது சந்தைப் பொருளாதாரம் கவனித்துக்கொள்ளும் என ஒதுங்கிவிடக் கூடாது.
இன்று தர்மம்
செய்வது...
• எனது ஊக்க உரையை நிறைவு செய்வதற்கு முன், தர்மம் செய்வது குறித்து ஒன்று சொல்ல விழைகிறேன். தர்மம் உலக ஏழ்மையைத் தீர்க்காது; ஆயினும், தர்மம் செய்வது தற்போது ஏழைகளோடு தொடர்புகொள்ள, அவர்களைச் சந்திக்க, அவர்கள் நிலைக்கு இறங்கிவர ஒரு வாய்ப்பைத் தரும்.
• ஏழைகளுக்கு முன்னால் சற்று நேரம் நிற்க, அவர்களது கண்களைப் பார்க்க, அவர்களைத் தொட, நம்மை அவர்களோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்புத் தருவது தர்மம். தர்மம் கடினமான இதயத்தை மென்மையாக்கும்.
• “தர்மம் இறைவேண்டலின்
இறக்கை. உனது இறைவேண்டல் இறக்கையோடு இணைத்துச் செய்யப்படவில்லையெனில், அது பறப்பது அரிதாகிவிடும்” என்கிறார்
ஜான் கிறிஸ்சோஸ்தம்.
• “கருணை நிறைந்தவர்
தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர். அவரே ஆசி பெற்றவர்”
(நீமொ 22:9).
• கிறித்தவர்கள் தர்மம் செய்வதை நிறுத்திவிடக் கூடாது. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட தர்மம் செய்வது சிறந்தது.
• ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறிய உதவிகளால் ‘நான் உன் மீது அன்பு செலுத்தி வருகிறேன்’
(திவெ 3:9) என்று இயேசு சொல்வதை ஏழைகள் உணர்வார்கள்.
சில அல்லது பல கிறித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு புதிராகவும் அதிர்ச்சியாகவும் தோன்றலாம். ஆனால், முதல் ஏற்பாட்டின் பக்கங்களை நாம் புரட்டினோம் என்றால், யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு தெளிவாக வெளிப்படும்.
அரசியலாக்க ஈடுபாடு
உள்ளவரா
யாவே
கடவுள்?
யாவே
வரலாற்றின் கடவுள்! அவர் வரலாற்றில் செயல்பட்டார், வரலாற்றை வழிநடத்தினார், வரலாற்றை உருமாற்றினார். மக்களை ஓர் உடன்படிக்கைச் சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவாக வரலாற்றை வழிநடத்தினார். உடன்படிக்கை என்பது ஓர் ஒப்பந்தமோ, உடன்பாடோ அல்ல; ஒப்பந்தம்-உடன்பாட்டின் நோக்கம் நிறைவேறியவுடன் அது நிறுத்தப்படலாம். மாறாக, உடன்படிக்கை என்பது ஒப்பந்தம்-உடன்பாட்டில் இருந்து வேறுபட்டது. அடிப்படையில் மக்களுடன் கடவுள் கொண்டுள்ள பிணைப்பு மற்றும் நீண்டகால உறவாகப் பரிணமிப்பது உடன்படிக்கையாகும். கடவுள் இந்த உடன்படிக்கை உறவை வரலாற்று ரீதியாக இஸ்ரயேலர்கள் மூலம் ஏற்படுத்தினார்.
உடன்படிக்கைச்
சமூகம் என்பது ஒரு சமத்துவச் சமுதாயமாகும். அங்கு அனைவரும் மனித மாண்போடு வாழ்வர். மனித மாண்பு என்பது
ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்த விதமாகக் கொடுக்கப்பட்ட கொடையாகும். ஏனென்றால், மனிதர் கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27). கடவுளின் சாயலும் உருவும்தான் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுக்கப்பட்ட மாண்பாகும்.
மாண்பு
என்பது ஒருவருடைய அல்லது ஒரு குழுவின் வாழ்க்கையைப் பகுத்தறிந்து, முடிவெடுக்கும் மற்றும் செயல்படுத்தும் ஆற்றலில் உறுதியாக வெளிப்படுகிறது. உடன்படிக்கை உறவுச் சமூகத்தில் பிணைக்கப்பட்டு, மாண்புநிறை மனிதர்களாக வாழ்வதற்கு, மக்களுக்குச் சக்தியளிக்கும் வரலாற்று நிகழ்வுகளில் கடவுள் பங்கேற்று, மக்களை ஆற்றல்படுத்துவதுதான் கடவுளின் அரசியலாக்க ஈடுபாடாகும்.
வரலாற்றை மாற்றியமைக்கும்
கடவுள்
அரசியலாக்க
ஈடுபாடு என்பது தனக்கும்-மற்றவர்களுக்கும் மாண்புநிறை வாழ்வை அளிக்கும் ஆற்றலாகும். தமது மீட்புத் திட்டத்தை இஸ்ரயேலர் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தச் செயல்பட்டவர் யாவே. ஒரு குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டவர் நமது வரலாற்றின் கடவுள் யாவே ஆவார். பல நாடுகள், இனங்களின்
மூதாதையராகிட ஆபிரகாம் தேர்ந்தெடுக்கப்பட்டது (தொநூ 17:5) மக்களைச் சக்திப்படுத்தும், கடவுளின் அரசியலாக்க நடவடிக்கை ஆகும். ‘ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் கடவுள்’ என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவது (1குறி 29:18; 2குறி 30:6; மத் 22:32; மாற் 12:26) கடவுள் இஸ்ரயேலை விரும்பித் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.
‘நிலமில்லாதவர் முகமில்லாதவரே’ என்பதற்கேற்ப,
நிலம் ஒருவரது மாண்பின் அடையாளமாக உள்ளது. கடவுள் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் மாண்பு கொண்ட மக்களாக மாற்றிட நிலத்தை அவர்களுக்கு வழங்குவது, மக்களின் மாண்புநிறை வாழ்விற்குச் சக்தி அளிக்கும் அரசியலாக்கச் செயல்பாடாகும். வாழ்ந்திட வாழ்வாதாரம், கண்டிட நிலம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.
நிலமற்றவராக,
நிலம் பறிக்கப்பட்டவராக ஒருவரோ, ஒரு குழுமமோ இருக்கும்போது அவர்களது தான்மையும் மாண்பும் பறிக்கப்படுகின்றன. உரிமை பறிக்கப்பட்ட மக்களை அடிப்படை உரிமையான நிலம் பெறச்செய்து, சுதந்திர மக்களாக்கிடும் கடவுளின் வரலாற்று ஈடுபாடு ஓர் அரசியலாக்கச் செயல்பாடாகும். மூதாதையரான ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு போன்றோருக்கு நிலம் வழங்கி, மாண்பு நிறைந்த தலைமுறையாக அவர்களை மாற்றியது கடவுளின் அரசியலாக்கச் செயல்பாடே!
ஆற்றல்படுத்தும்
விடுதலைக்கான
அரசியலாக்கச்
செயல்பாடு
தங்களது
மாண்பு, தான்மையை இழந்து அடிமைகளாக எபிரேயர்கள் எகிப்தில் தவித்துக்கொண்டிருந்தபோது, யாவே அவர்களின் வரலாற்றில் பங்கு பெற்று, மோசே மூலம் அவர்களைச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட நாட்டிற்கு அழைத்து வந்தார் (விப 3:6-17). கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக யாவே அவர்களைக் கானான் நாட்டில் குடியமர்த்தினார். எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குக் கானான் நாட்டில் நிலம் தந்து அவர்களைச் ஆற்றல்படுத்தப்பட்டவர்களாக மாற்றிய கடவுளின் ஈடுபாடு ஓர் அரசியலாக்கச் செயல்பாடே!
யாவேயின் உடன்படிக்கைச்
சமூகம்
தனிநபர்களுடன்
நோவா (தொநூ 6:18), ஆபிரகாம் (15:18), ஈசாக் (17:21), யாக்கோபு (28,35) போன்றவரோடு கடவுள் செய்த உடன்படிக்கையை அறிவோம். ஆனால், இஸ்ரயேலர் என்ற மக்களோடு ஒரு குழுமமாக யாவே உடன்படிக்கை செய்தார் (விப 19-20). பிறகு அவர்களை ஒரு மாறுபட்ட (Contrast Community) மற்றும்
எதிர் பண்பாட்டுச் சமுதாயமாக (Counter-Cultural Community) வாழப்
பணித்தார்.
மோசே
மூலம் கொடுக்கப்பட்ட மனிதநேயப்படுத்தும் வழிமுறைகள், நெறிமுறைகள், சட்டங்கள், கோட்பாடுகள் வழியாக அவர்களை வழிநடத்தினார் (இச 6-30). இஸ்ரயேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்களைக் கானானில் எதி-கலாச்சார-தனித்துவமான உடன்படிக்கைச் சமூகமாக மாற்றியது கடவுளின் அரசியலாக்க ஈடுபாட்டில் எழுந்த ஆற்றல்படுத்தும் செயல்பாடாகும்.
மீறப்பட்ட உடன்படிக்கையும்
ஆற்றல்
இழந்த
மக்களும்
இஸ்ரயேலர்கள்
பழங்குடிக் கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து (Tribal Confederation) விலகி, முடியாட்சி
முறைக்கு மாற விரும்பியபோது, அரசர்கள் தங்கள் அரசராகிய யாவே கடவுளின் சார்பாக ஆட்சி செய்யப் பணிக்கப்பட்டனர். மன்னராட்சி முறை சீரழிந்து, அநீதி, சுரண்டல், வறுமை மற்றும் சமத்துவமின்மையை உருவாக்கியபோது, அவர்களை மீண்டும் உடன்படிக்கைச் சமூகத்திற்குக் கொண்டுவர கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பிச் செயல்பட்டார்.
அதிகாரம் அளித்திடும்
கடவுளின்
அரசியலாக்க
நடவடிக்கை
பாலஸ்தீனத்தில்
இஸ்ரயேலர்கள் வறியவர்களாகவும் சுரண்டப்பட்டவர்களாகவும் அதிகாரம் இழந்தவர்களாகவும் மாற்றப்பட்டபோது, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் சார்பாகவும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகவும் கடவுளின் குரல் சிங்கம் போல ஓங்கி ஒலித்தது. இறைவாக்கினர்கள் மூலம், கடவுள் தமது மக்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களைச் சமத்துவம், நீதி, மாண்பு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
அரசியலாக்கப்
பணிக்கான
கடவுளின்
அழைப்பு
மக்களுக்குச்
சக்தி அளிப்பதற்காக நமது வரலாற்றில் அரசியலாக்கப் பணியில் ஈடுபட்ட கடவுளை
நாம் இனங்கண்டு கொள்ளவேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் உறுதியான வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தமது துடிப்பான ஈடுபாட்டின் மூலம் கடவுள் மனிதரின் மீட்பைச் செயல்படுத்தினார்.
அதே
கடவுள், கிறித்தவர்களைப் புதிய உடன்படிக்கைச் சமூகமாகவும், இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்களாகவும் உறுதிப்படுத்தவும்
விரும்புகிறார். இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்கள் என்ற நமது கிறித்தவ அடையாளத்தையும் மனித மாண்பையும் சிதைத்திடும் அடக்குமுறை மற்றும் சமூக விரோதச் சூழலில் நாம் அரசியலாக்க ஈடுபாடு, அக்கறை இல்லாமல் இனியும் ஒதுங்கி இருக்க முடியாது. யாவே கடவுளின் அரசியலாக்கப் பணியைச் சரியாகத் திருவிவிலிய ஒளியில் புரிந்துகொண்டு, இன்றைய சூழலில் சரியான அரசியலாக்கப் பணியில் கிறித்தவர்கள் முழுமூச்சாகக் களமிறங்கிட வேண்டும். காலம் தாழ்த்திக்கொண்டே சென்றால் இந்தியாவில் கிறித்தவ இருப்பிற்கே ஆபத்துகளைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
கிறித்தவராகிய
நம்மை மட்டுமல்ல, பிறரையும் ஆற்றல்படுத்தி மாண்புநிறை மனிதராக, இந்தியக் குடிமக்களாக வாழ்ந்திடச் செய்யும் அரசியலாக்கப் பணியில் நாம் அணிவகுக்கவேண்டும். யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு நம்மை வழிநடத்தட்டும், ஆற்றல்படுத்தட்டும், மாண்புநிறை கிறித்தவராக இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்திடும் சாத்தியங்களை உருவாக்கட்டும்.
தாக்கம் (Impact) என்பது ஒரு செயலால் ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதில் நேர்மறையான தாக்கம் என்பது ஒருவரின் செயலின் மூலம் சமூகத்திற்கோ, தனிநபரின் வாழ்வின் நலனுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ நல்ல ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துவதாகும்.
அதேபோல்,
கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆவிக்குரிய வாழ்வில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். இதற்காகவே வாழ்வின் நிகழ்வுகளில் நம்முடைய நம்பிக்கை, நடத்தை, தூய்மையான வாழ்வு முக்கியம்.
கிறித்தவ
வாழ்வின் தாக்கம் குடும்பத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். இதற்கு ஆதாரமாக திமொத்தேயுவின் வாழ்வில் காணலாம். “வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்” (2திமொ
1:5). திமொத்தேயுவின்
பாட்டி மற்றும் தாய் கடவுள்மீது உண்மையான நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். அவர்கள் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியதின் மூலம், போலித்தனமற்ற பக்தி, கடவுளைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தூய உள்ளம் கொண்ட வாழ்க்கை ஆகியவற்றை முன்னுதாரணமாகக் காட்டினர். மேலும், அவர்கள் திருவிவிலியத்தைத் தியானித்து, அதை குழந்தைப் பருவத்திலிருந்தே திமொத்தேயுவுக்குத் தொடர்ந்து கற்பித்தனர். இதன்மூலம் அவரது குணம் வடிவமைக்கப்பட்டு, உண்மையான நம்பிக்கை உறுதியாக நிலைநாட்டப்பட்டது. இதே நம்பிக்கைதான் அவரைத் திருத்தூதர் பவுலுடன் நம்பிக்கையுள்ள உடன் பணியாளராக வளரச் செய்தது.
இவ்வாறு
திமொத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி மற்றும் தாயின் நம்பிக்கை ஓர் ஆழமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் மற்றும் பெரியவர் தமது வாழ்வின் மூலம் கிறித்தவத் தாக்கம் குழந்தைகளுக்குள் ஏற்படவேண்டும். இவ்வாறு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக மாறும்பொழுது, அந்தக் குழந்தைகளும் சமூகத்தில் தானியேல் மற்றும் பவுலைப் போன்று ஒவ்வொருவரின் மத்தியிலும் கிறித்தவத் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ஆகவே,
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் அதிக ஊக்கத்தை அளிக்கிறார்கள் என்பதை நினைவில்கொண்டு, நம் சொந்த ஆன்மிகப் பயணத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைக் கவனிக்கவேண்டிய நேரம் இதுதான்.
நாம்
வாழும் இவ்வுலகில் கிறிஸ்துவின் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம் வாழ்வானது உவர்ப்புள்ள உப்பைப்போல, கிறிஸ்துவின் சுவையை வெளிக்கொணரும்படி இருக்கவேண்டும். அதற்கான எளிதான வழிகளில் ஒன்று, கடவுளை நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் முதன்மைப்படுத்துவது. நம் எண்ணங்கள், நோக்கங்கள், ஆசைகள், அதிகாரங்கள், செல்வங்கள், செயல்கள், திட்டங்கள், உறவுகள், உரையாடல்கள், வேலை மற்றும் அட்டவணை ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தையும் அவருக்கே கொடுக்கவேண்டும்.
அன்பு
நிறைந்த அன்றாட வாழ்க்கையின் மையத்தில் கடவுளை வைத்திருப்பதன் மூலம் நாம் உரையாடுகின்ற, செயல்படுகின்ற ஒவ்வொன்றிலும் தூய்மை நிறைந்திருக்கும். இவை அனைத்திற்கும் கடவுளே ஆதாரமாக இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கடவுளின் அரசிற்காக நம் வாழ்வின் வழியாக ஒரு தாக்கத்தை அனுபவிக்கும். திருமுழுக்கு யோவான் போலவே, நாமும் எந்தவோர் இடத்திலும் இயேசுவைச் சுட்டிக்காட்டுவோம். இது என்னைப் பற்றியது அல்ல; இது அவரைப் பற்றியது என்று மனதாரச் சொல்வோம்.
நம்
வாழ்வில் எந்தவொரு தாக்கம் ஏற்பட்டாலும் அது கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். அந்தத் தாக்கம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், கிறிஸ்துவை முன்னிறுத்துவதாக இருக்கவேண்டும். அதற்கான சிறந்த உதாரணம் தபித்தா. யோப்பா நகரில் வாழ்ந்த தபித்தா மிகவும் எளிமையான பெண் சீடர். நன்மை செய்வதிலும், இரக்கச்செயல்கள் புரிவதிலும் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார். ஆனால், இவரது எளிமையான வாழ்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் இறந்தபோது இவரின் நற்செயல்களின் சாட்சிகள் பேதுருவை அழைத்து வரச்செய்து, இறந்த தபித்தாவை உயிர்த்தெழச் செய்தனர். அந்த நிகழ்வு யோப்பா நகர மக்களில் பலரையும் கிறிஸ்துவுக்குள் நம்பிக்கை கொள்ளச் செய்தது (திப 9:36-42).
இவ்வாறுதான்
நம்மில் உள்ள கிறித்தவ ஒளியானது மனிதர்முன் ஒளிவீச வேண்டும். அப்பொழுது அவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு நம் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16). அவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தேயு 28: 19-இல் கூறப்பட்டுள்ளபடி, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்ற
இயேசுவின் கட்டளை இயல்பாகவே நிறைவேறும்.
இவ்வாறு,
ஒரு சீடனின் கிறித்தவச் சாட்சிய வாழ்க்கை மற்றொருவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது பெருகி இரட்டிப்பாகும். இரண்டு நான்காக, நான்கு எட்டாகும்போது, சீடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டே போகும். நம் கிறித்தவத் தாக்கத்தின் மூலம் இவ்வுலகில் எத்தனை ஆன்மாக்கள் கடவுளின் அரசிற்குள் வரப்போகின்றன என்பதையும், அதன் விளைவாக, கடவுளுடைய அரசிற்குள் படையெடுத்து வரும் கூட்டத்தால் விண்ணரசு எவ்வளவோ மகிமையானதாக மாறும்! அதை நினைத்துப் பார்க்கும்போது, நம் சாட்சிய வாழ்க்கை மூலம் கடவுளின் அருளின் வழியாக நாமும் பங்கு பெற்றிருப்பதில் ஆன்மிக மகிழ்ச்சி கொள்வோம். அப்பொழுது இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து, “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” (மத்
25:21) என்று கூறி, நம்மை மேன்மையுள்ள இடத்திற்கு உயர்த்துவார். உலகிற்குக் கிறிஸ்துவின் தாக்கத்தை உருவாக்குவோம். கிறிஸ்துவிற்கு ஆன்மாவை அறுவடை செய்வோம்!