கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம் கூறிய ‘அருள் நிறைந்தவளே’ என்ற வார்த்தைகளின் ஆழத்தைத் திரு அவையின் சிந்தனையானது பின்வருமாறு விவரிக்கின்றது:
1. மரியா
‘அருளால் நிறைந்தவர்’ என்பது
‘பாவத்தின் எல்லாக் கறைகளிலிமிருந்தும் விடுவிக்கப்பட்டவர் மற்றும் முற்றிலும் புனிதமானவர்’, ‘கருவான
முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்தார்’, ‘தனிப்பட்டதொரு
புனிதத்துவத்தின் சிறப்புகளால் அவருடைய கருத்தரித்தலின் தொடக்கத்திலிருந்தே வளமைப்படுத்
தப்பட்டார்’ என்று
அங்கீகரிக்கப்பட்டிருந்தது
(இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56).
இந்த
அங்கீகாரத்திற்கு ‘மரியா அமல உற்பவி’ என்ற கோட்பாட்டின் (Dogma of immaculate
conception) அறிவிப்பிற்குக் காரணமான கோட்பாட்டு அடிப்படையிலான சிந்தனையின் நீண்டதோர் உருவாக்கம் தேவைப்பட்டது. கிறிஸ்து பிறப்பில் வானதூதரால் மரியாவிடம் கூறப்பட்ட ‘அருளின் முழுமையினால் உருவாக்கப்பட்டவர்’ என்ற
சொல்லாடலானது முன்னறிவிக்கப்பட்ட அவருடைய தாய்மையின் பொருட்டு நாசரேத்தூர் இளம் பெண்ணுக்குக் காட்டப்பட்ட சிறப்புமிக்கக் கடவுளின் கருணையைக் குறிக்கின்றது. இருப்பினும், இது மரியாவில் இருந்த
தெய்வீக அருளின் தாக்கத்தையே நேரடியாகக் குறிக்கின்றது. மரியா இயல்பிலேயே அருளால் என்றும் நிறைக்கப்பட்டிருந்தார் மற்றும் அதனாலேயே தூயவரானார். ‘Kecharitoméne’ என்ற
அடைமொழியானது மிகவும் ஆழமானதோர் அர்த்தத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது பற்றிய திரு அவையின் புரிதலை ஆழப்படுத்துவதில் தூய ஆவியானவர் தொடர்ந்து செயல்படுத்துகின்றார்.
புனிதப்படுத்தும்
அருளானது
மரியாவை
ஒரு
புதுப்படைப்பாக்கியது
2. ‘அருளாள் நிறைந்தவரே’ என்கின்ற
வானதூதரின் வாழ்த்தொலியானது கிட்டத்தட்ட மரியாவின் பெயராகவே பயன்படுகின்றது. கடவுளின் பார்வையில் இதுதான் மரியாவின் பெயராகும். செமிடிக் இனத்தவரின் வழக்கத்தில் (Semitic) ஒரு
நபரின் அல்லது பொருளின் பெயரானது எதைக் குறித்துக் காட்டுகின்றதோ, அதுவே அந்த நபரின் அல்லது பொருளின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றது. அதன்
விளைவாக, ‘அருளால் நிறைந்தவர்’ என்கின்ற
இந்தச் சிறப்புச் சலுகையானது அருளினாலும் கருணையினாலும் உருவாக்கப்பட்டவர் என்று வரையறுக்கப்படும் அளவுக்கு நாசரேத்தூர் இளம் பெண்ணின் ஆளுமையில் மிக ஆழமானதொரு நிலையையே காட்டுகின்றது.
அதேநேரத்தில்,
மரியா “தூய ஆவியாரால் வடிவமைக்கப்பட்டவர்’ மற்றும்
‘ஒரு புதிய உயிரினமாக உருவானவர்’
என்பதை உறுதிப்படுத்தி, திரு அவைத் தந்தையர்கள் அவரை ‘முற்றிலும் புனிதமானவர்’ என்று
அழைத்தபோது, இந்த உண்மையைக் குறிப்பிட்டதாக இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மீண்டும் நினைவுகூர்கின்றது” (இறைத்
திட்டத்தில் திரு அவை, எண். 56).
தனிப்பட்ட
புனிதத்துவத்தை உருவாக்கும் ‘புனிதப்படுத்தும் அருள்’ என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்ட அருளானது, மரியாவில் புதிய
படைப்பைக் கொண்டுவந்தது. மேலும், அவரைக் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக இணங்கச் செய்தது.
3. இவ்வாறு,
கோட்பாட்டுச் சிந்தனையானது Doctrinal reflection
மரியாவுக்கு ஒரு முழுமையான புனிதத்தன்மையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அது முழுமையானதாக இருக்க அவருடைய வாழ்க்கையின் தொடக்கத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும் எனலாம்.
கி.பி. 550 முதல்
650 வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனத்தின் லிவியாஸ் நகரத்தில் வாழ்ந்த தெயோடோக்னோஸ் என்பவர் முதல் தூய்மையை (original
purity) நோக்கி தனது சிந்தனையை நகர்த்துகின்றார். மரியாவை ‘தூயவர்’ மற்றும் ‘அழகின் முழுமை’,
‘களங்கமற்றவர்’ மற்றும்
‘மாசற்றவர்’ எனச்
சித்தரித்து, அவரின் பிறப்பிலும் இந்த வார்த்தைகளை அவர் குறிப்பிடுகின்றார்: “மாசற்ற மற்றும் களங்கமற்றவரான அவர் ஒரு கெருபீம் (cherubim) போல பிறந்தார்”(Panegyric for the feast of the
Assumption, 5/6).
முதல்
மனிதனின் படைப்பை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்ற இந்தச் சொல்லாடலானது அதாவது, பாவத்தால் கறைப்படுத்தப்படாமல் ஒரு களிமண்ணால் உருவாக்கப்பட்டார் என்பது, மரியாவினுடைய பிறப்பின்
அதே பண்புகளைக் குறித்துக் காட்டுகின்றது: கன்னியின் பிறப்பும் ‘தூய்மையானதாக மற்றும் மாசற்றதாக’
அதாவது, எந்தவொரு பாவமும் அற்றதாக இருந்தது. மரியாவை ஒரு தேவதையுடனான ஒப்பீடென்பதும் அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே மரியாவின் வாழ்வு குறித்துக்காட்டுகின்ற தலைசிறந்த பண்புகளை வலியுறுத்துகின்றது.
தெயோடோக்னோஸின்
இந்த உறுதியான நிலைப்பாடானது, ஆண்டவருடைய தாயின் மறையுண்மை பற்றிய இறையியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கதொரு நிலையைக் குறிக்கின்றது. கிரேக்க மற்றும் கிழக்கத்திய திரு அவைத் தந்தையர்களும் கருவுறுதலுக்கு முன்போ (St. Gregory Nazianzen,
Oratio 38, 16) அல்லது கருவுறுதலின்பொழுதோ (St. Ephrem, Severian of Gabala, James of Sarug) கடவுளின் அருளினால் மரியாவில் கொண்டுவரப்பட்ட அந்தப் புனிதமாக்குதலை ஒத்துக் கொள்கின்றார்கள்.
4. லிவியாஸ்
நகரத்தில் வாழ்ந்த தெயோடோக்னோஸ், மரியாவினுடைய வாழ்வின் தொடக்கத்திலி ருந்தே அவரிடம் தூய்மை இருந்திருப்பதை விரும்புவதாகத் தெரிகின்றது: “மனுக்குலமானது அதன் தொடக்கத்திலிருந்த அந்த அழகை மரியாவின் அமல உற்பவப் பிறப்பில் இன்று அதன் நிறைவை அடைகின்றது. உண்மையில், மீட்பரின் தாயாவதற்காக முன்குறித்து வைக்கப்பட்டவர் முற்றிலும் தூயவராகவும், மாசற்ற தொடக்கத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டியதாயிற்று. மனுக்குலத்தின் இயல்பான ஈர்ப்பையும் சிறப்பையும் பாவத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்வானது மங்கச்செய்தது. ஆனால், அழகில் சிறந்தவரான அந்தத் தாய் பிறந்தபொழுது இந்த இயற்கையானது மரியாவில் அதன்
தொடக்ககாலச் சிறப்பைத் திரும்பவும் பெறுகின்றது. மேலும், உண்மையில் கடவுள் நிலைக்குப் பொருத்தமான மிகச்சிறந்ததொரு மாதிரிக்கு ஏற்றாற்போல உருவமைக்கப்படுகின்றது. நம்முடைய இயல்பின் மறுமலர்ச்சியானது இன்று தொடங்குகின்றது. மேலும், முழுமையாகத் தெய்வீக உருமாற்றத்திற்குட்பட்ட பழைய உலகானது இரண்டாவது படைப்பின் முதற்கனியைப் பெறுகின்றது.”
தொடக்கத்திலிருந்த
அந்தக் களிமண்ணின் உருவத்தை மீண்டும் பயன்படுத்தி அவர் இவ்வாறு கூறுகின்றார்: “கன்னி மரியாவின் உடலானது கடவுளால் பண்படுத்தப்பட்ட நிலம் போன்றதாகும்; கிறிஸ்துவால் தெய்வீகப்படுத்தப்பட்ட ஆதாமின் முதற் கனியாகும்; உண்மையில் முந்தைய அழகையொத்த உருவம், இறை ஓவியரால் உருவாக்கப்பட்ட களிமண்ணாவார்.”
மரியாவின் தொடக்கநிலைத்
தூய்மையே
மீட்பின்
தொடக்கமாகும்
இவ்வாறாக,
மரியாவின் தூய்மையான அமல உற்பவமானது புதிய படைப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகின்றது. இது மனுக்குலமனைத்திற்கும் கடவுளால் விரும்பப்பட்ட அபரிமிதமான அருளின் காலத்தைச் சுட்டிக்காட்டுகின்ற கிறிஸ்துவின் தாயாவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கும் வழங்கப்பட்ட தனிப்பட்ட சிறப்புரிமை பற்றியதாகும்.
மேலும்,
8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் நகரத்துப் புனித ஜெர்மானுஸ் மற்றும் புனித ஜான் தமாசேனே போன்றவர்கள் மீண்டுமாக இந்தக் கோட்பாட்டைக் கையிலெடுத்து மரியாவின் தொடக்கநிலைத் தூய்மையையே உலக மீட்பின் தொடக்கமாகக் காட்டி அதனை வெளிப்படுத்து கின்றது. இந்த வகையில், திரு அவையின் பாரம்பரியமானது வானதூதரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட ‘அருளால் நிறைந்தவரே’ என்பதன்
உண்மையான அர்த்தத்தைத் தனதாக்கி, அதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. மரியா புனிதப்படுத்துகின்ற அருளின் நிறைவாக இருக்கின்றார். அதுவும் அவரின் தொடக்கம் முதலே அவ்வாறு இருக்கின்றார். எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதத்தின்படி இந்த அருளானது, கிறிஸ்துவில் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது (எபேசியர் 1:6).
மரியாவின்
தொடக்கநிலைத் தூய்மையானது அளவிட முடியாத கொடையின் மாதிரியையும், உலகில் கிறிஸ்துவின் அருளினைப் பகிர்ந்து வழங்குவதையும் குறிக்கின்றது.
மூலம்:
John Paul II,
Mary was conceived without original sin, in «L’Osservatore Romano», Weekly
Edition in English, 22
May 1996, p. 11.
‘இறைவனால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகத்தான் அன்னையரைப் படைத்தார்’ என்பது சீனப் பழமொழி. அன்னையர்களின் தன்னலமற்ற அன்பு, பராமரிப்பு, தியாகம் ஆகியவற்றை உணர்த்தவே இவ்வாறு சொல்வதாகப் புரிந்து, இச்சொற்றொடரின் பின்புலம் அறியும் எவரும் தாயன்பைக் கட்டாயம் கொண்டாடுவர்.
இறைவனைத்
தந்தையாகவே புரிந்து போதித்த கிறித்தவமும் இன்று அன்னையாகவும் தந்தையாக வும் கடவுளை ஏற்று, ‘இறைத்தந்தாய்’ (தந்தை
+ தாய்) என்று கொண்டாடுகின்றது. நாம் இந்த உலகத்திற்கு வரவும் வாழவும் நம் தந்தை மற்றும் தாயிடம் பொறுப்பினைக் கடவுள் பகிர்ந்து தந்திருக்கிறார். ஈரைந்து மாதங்கள் தாய் குழந்தையைக் கருவில் சுமப்பார்; தந்தை அவரையும் சேர்த்து உயிருள்ளவரை இருவரையும் மனத்தில் சுமப்பார் என்பதுதான் உண்மை. இந்த மாதம் நாம் இறையன்னையின் புகழ்பாட வாய்ப்புப் பெற்ற மாதம். ஆதலால், நம் அன்னையைப் பற்றியும், அன்னையாக நம்மைப் பற்றியும் சிறிது உளவியல் சார்ந்து சிந்திப்போம்.
ஒரு
மனிதனின் உடல், உள்ள, ஆன்மிக நலனுக்கு யார் பொறுப்பு என்று பார்ப்பதற்குப் பதிலாக, இயற்கையாக இறைவன் எப்படி அதற்கு வகை செய்திருக்கிறார் என்று கேட்பது நலம் பயக்கும். பெற்றோரை ஆதாரமாகவும், சமூகம் முழுமையையும் அடித்தளமாகவும் வைத்துப் பின்னப்பட்ட தேவைகளின் தொடக்கம், குழந்தை கருவுருவாவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கின்றது என்று அறிந்தபோது ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியவில்லை.
பொதுவாக,
280 நாள்கள் அல்லது ஏறக்குறைய 40 வாரங்கள் நாம் நமது தாயின் கருவறையில் குடி கொள்கிறோம். முழுமையாக 9 முதல் 10 மாதங்களாகவும் அல்லது சில காரணங்களினால் மாறும் இந்த நாள்கள் மிக மிக முக்கியமான அடித்தள நாள்களாக அமைகின்றன. ஆம், உயிர் உருவாக 9 மாதங்களுக்கு முன்பாகப் பெற்றோரின் வழியாக ஏற்படும் உளவியல் தாக்கம் இந்த நாள்களில் இன்னும் வலிமையானதாகின்றது. மூளை முழு வளர்ச்சியடைய காலம் எடுத்துக்கொண்டாலும், அது தன் தாயின் வயிற்றிலிருந்தவாறே தன்னைச்சுற்றி நடப்பவற்றைக் கவனிக்கின்றது.
ஆக,
அவை நல்லவைகளாக இருந்தால் பின்னாள்களில் நேர்மறையான தாக்கத்தினையும், தீயவையாக இருந்தால் எதிர்மறையான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. கரு அனைத்தையும் துரிதமாகக் கற்கும் திறன் படைத்தது என்று உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நாள்களில் தன்னைச்சுற்றி நடக்கும் அனைத்தையும் கரு கூர்ந்து கவனிக்கின்றது. எனவே, தாயின் நாள்களில் தாயின் மகிழ்ச்சி கருவின் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளில் ஒன்று.
அடுத்து,
மிகவும் முக்கியமானது நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொள்ளுதல். தான் கருவுற்றிருப்பதை அறியும் தாயும், அவர் வழியாக அவ்வுயிரினைப் பற்றி அறியும் அவரது தந்தையும், அவர்கள் வழியாக அச்செய்தியினை அறிந்துகொள்ளும் குடும்பமும் சமூகமும் அந்தக் குழந்தையின் வரவை மகிழ்வோடு ஏற்கவேண்டும். இதில் ஏற்படும் பிழை பின்னாள்களில் (சமூக வெறுப்பு சுயவெறுப்பாக மாறி) தற்கொலை எண்ணமாகக்கூட வாய்ப்புள்ளது.
அடுத்தது
நிர்ப்பந்தக் கோளாறு. பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிய தாமாக ஆசைப்படுதலாகும். கரு உருவாகும்போதே இது நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை அறிந்தவர்களும் கூட இதில் பிழை செய்கிறார்கள். தன்னைத் தன் பாலினமாகப் பாவிக்காமல், இவர்கள் பிறந்த பின் குணத்தாலும் செயல்களாலும் மாறிய ஒரு வாழ்க்கையைப் பிரதிபலித்து, பெரும்பாலும் சமூக நகைப்பிற்கு உள்ளாகிறார்கள். சுயவெறுப்பு, வெறுமையுணர்வு, சமூகவிரோத நடத்தை, கைவிடப்பட்ட எண்ணம் போன்றவற்றின் விதைகள் இந்தக் காலத்தில்தான் உருவாகின்றன. தாயும் அவர் சார்ந்த சமூகமும் கொண்டுள்ள நல்ல நேர்மறையான நம்பிக்கைகளும், தாய்க்கும் அதன் கருவுக்கும் கொடுக்கப்படும் நல்ல அன்பும் செபங்களும் குழந்தையின் எதிர்கால உளவியல் வாழ்க்கைக்கு நல்ல தூண்டல்களாகும்.
குழந்தை
பிறந்த முதல் ஒன்பது மாதங்களை உளவியலாளர்கள் தாயோடு உடல் சார்ந்த பிணைப்பு நாள்களாகக் கணிக்கிறார்கள். ‘மனோ பகுப்பாய்வுக் கோட்பாட்டின் தந்தை’ என்றழைக்கப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு இந்நாள்களை ‘சிம்பயாடிக் யூனியன்’ அதாவது ‘சகவாழ்வு நாள்கள்’ என்கிறார். அதாவது, குழந்தை தன் தாயிலிருந்து வேறுபட்டவர் என்பதை இன்னும் உணரவில்லை; தாய் தன் உடலின் ஓர் உறுப்பு என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நாள்களில்தான் தாயின் உடனிருப்பு ஒரு குழந்தைக்குத் தேவை.
பொதுவாகவே,
தாய் தன் குழந்தையின் கண்களைக் கூர்ந்து பார்ப்பது மிகவும் சிறப்பானது. காரணம், குழந்தைகள் உணர்வுகளைக் கற்கும் பாடசாலை அதுதான். தாயின் கண்கள்தான் குழந்தை உலக மனிதர்களைப் படிக்கும் புத்தகம். குழந்தையின் கண்களும் தாயின் கண்களும் பார்க்கும்போது இருவரின் இதயமும் ஆக்சிடோசின் என்ற சுரப்பி மூலம் இணைகின்றன. குழந்தை தன் தாயின் பிரமிப்பினை உணரவேண்டியது அவசியம். இந்த ஆக்சிடோசின் செய்யும் வேலை என்ன தெரியுமா? எத்தனை பெண்கள் இருந்தாலும், ‘என் தாய்தான் அழகானவள்’
என்ற உணர்வைக் குழந்தைக்கும், எத்தனை குழந்தைகளிலும் ‘என் குழந்தைதான் அழகானது’ என்ற எண்ணத்தைத் தாய்க்கும் தருகின்றது.
இப்படித்
தாயின் உடனிருப்பில் குழந்தை வளர வாய்ப்பின்றி குழந்தைப்பருவத் தேவைகள் மறுக்கப்பட்டதென்றால், தாயின்றி அழுத அனுபவங்கள் பின்னாள்களில் அவர்களை யாரையும் நம்ப விடுவதில்லை. தகுந்த நேரங்களில் தாயின் கண்களைக் காணாததால், மற்றவர்களின் உணர்வுகளை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. தேவையில்லாமல் கோபமடைவதும் சண்டையிடுவதும் இவர்களின் பொதுவான குணங்களாகின்றன. குற்றச் செயல் புரிவதும், ‘எனக்கென்று யாருமில்லை’ என்று
உணர்வதும் இவர்களின் பிரதானமாகிறது.
உடல்
சார்ந்த உடனிருப்பு ஒன்பது மாதமென்றாலும், உணர்வு சார்ந்த உடனிருப்பு முதல் ஏழு ஆண்டுகள் என்றும் சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஏழு ஆண்டுகளில் தன் தாய் பார்த்து உறங்கவேண்டும், எழுந்தவுடன் தன் தாய் வேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அழுதாலும் சிரித்தாலும் அவர்கள் அறியப்படுத்த விரும்பும் முதல் நபர் தாய்தான். பரந்தவெளியில் வேகமாக ஓடும் குழந்தை நின்றவுடன் திரும்பித் தேடிப் பார்ப்பது தன் தாயைத்தான். அவர்களின் உணர்வுத்தேடல் வெற்றியடையவில்லை என்றால், அது அதிக பய உணர்வைக் குழந்தைக்குள்
உண்டாக்குகின்றது. ஏழு ஆண்டுகள் என்று சொன்னாலும், அண்மைக்காலத்தில் சில உளவியலாளர்கள் தாய்-சேய்க்கான இந்த உணர்வுப் பிணைப்பு இறுதிமூச்சு வரையும் நீடிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
உலகத்
தாய்மார்களுக்கே இப்படியென்றால், உலகத்தினைப் படைத்த உன்னதரின் தாயாம் நம் அன்னை மரியாவுக்கு எவ்வளவு மகத்துவம் கொடுக்கப்பட வேண்டும்! மாபரனை உலகிற்குக் கொண்டுவரும் கருவியாக மட்டும் நாம் அவரைக் குறுக்கிவிட முடியுமா? சிலுவையில் செந்நீர் சிந்தும்போதும், ‘மக்களின் மீட்பே என் தியாக வாழ்வின் இலக்கு’ என்று அமைதி காக்க வைத்தது நம் அன்னை கூறிய அல்லது வாழ்ந்த தியாகப் பாடத்தின் விளைவல்லவா!
மகத்துவமாய்
பிறந்தாரென்று மகிழ்ந்த நேரத்தில், வாளொன்று உன் இதயத்தைத் தாக்குமென்று குழந்தையான இயேசுவைக் கையில் வைத்திருந்த போது அறிந்த இந்த அன்னையின் மனம் உயிரற்ற அன்பு மகனைச் சிலுவையின் நிழலில் தாங்கிச் சந்தித்த வேதனைகளைத் தன் மகனுக்கும் மற்றவருக்கும் கடத்தாமல் தனக்குள்ளேயே தாங்கிக் கொண்ட வேதனையின் ஆழம், இயேசுவுக்காக மட்டுமே என்று என்னால் எப்படிக் கடந்துபோக முடியும்? அது நிச்சயமாக எனக்காகவும், என் மீட்புக்காகவும்தான். அதனால்தான் கானாவூரில் தானே முன்சென்று தேவையில் வாடுவோரின் கவலையை நீக்குகிறார் இறையன்னை. காரணம், இந்த அன்னை கருணையின் வடிவமே!
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற மையச் சிந்தனையோடு கிறிஸ்து பிறப்பின் 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலி கத்தோலிக்கத் திரு அவையில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன் சிறப்பு நிகழ்வுகளுள் ஒன்று பாவத் தண்டனைக் குறைப்பு அல்லது நீக்குச் சலுகையைப் (Indulgence) பெறுவதாகும். இது ‘பேறுபயன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இச்சலுகையின் தோற்றம், உள்ளடக்கம் மற்றும் சர்ச்சைகள், அதைப் பெறுவதற்கான நிபந்தனைகள், இக்காலச்சூழலுக்கு அதன் பொருந் துமைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.
தோற்றமும் பரவலும்
பாவத்தண்டனை
நீக்குச் சலுகை பாவக் கழுவாய் அருளடையாளம் (Scraments of penence)
மற்றும் இறுதித் தூய்மையுறு நிலை (purgatory) பற்றிய இரண்டு கத்தோலிக்க மறைப்படிப்பினைகளிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அப்படிப்பினைகளைச் சுருக்கமாக இவ்வாறு கூறலாம்: பாவப்பழி (guilt of sin) பாவக் கழுவாய்
அருளடையாளத்தில் வழங்கப்படும் மன்னிப்பினால் முழுமையாக நீக்கப்படாமல் ஓர் இம்மைசார் தண்டனை (temporaral punishment) எஞ்சியிருக்கிறது; அத்தண்டனையை ஒருவர் அனுபவிக்கும் நிலை அல்லது முறை இறுதித் தூய்மையுறு நிலையாகும். அத்தண்டனைக் காலத்தை ஒருவர் தனக்காகவோ அல்லது இறந்தோருக்காகவோ சில பரிகாரச் செயல்பாடுகளின் வழியாகக் கிறிஸ்து மற்றும் தூயவர்களுடைய நற்பேறுபலன்களின் உதவியால், குறைக்கவோ முற்றிலுமாக நீக்கவோ முடியும். பாவங்களுக்குரிய இம்மைத் தண்டனையிலிருந்து பகுதியாகவோ முழுமையாகவோ விடுவிப்பதைப் பொறுத்து, பாவத்தண்டனைக் குறைப்பு பகுதி அளவானது (Partial) அல்லது
முழுமையானது (Plenary) எனப்படும்.
11, 12 ஆகிய நூற்றாண்டுகளில்
இறுதித் தூய்மையுறு நிலை பற்றிய நம்பிக்கை அதிகமாகப் பரவியபொழுது, பாவத்தண்டனை நீக்குச் சலுகையைப் பெறுவதும் தீவிரமடைந்தது. இச்சலுகை பற்றிய மறைப்படிப்பினைகள் முதன்முதலாக 1343-இல் திருத்தந்தை 6-ஆம் கிளமெண்ட் அவர்களால் தொகுக்கப்பட்டன. மார்ட்டின் லூதர் காலத்தில் (1483 - 1546) உரோமை புனித பேதுரு பசிலிக்காவின் கட்டுமானப் பணிக்கு, திருத்தந்தை சார்பாக நிதி திரட்டுவதற்குப் பாவத்தண்டனை நீக்குச் சலுகைச் சான்றிதழ்கள் பணத்திற்கு விற்கப்பட்டன. அப்பொழுதிலிருந்து பாவ மன்னிப்பைப் பணத்திற்கு விற்கலாம் வாங்கலாம் என்ற வழக்கம் நடைமுறையானது.
16-ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த ஜொஹன் டெட்சல் (Jojann Tetze) என்ற
தொமினிக் துறவு அவை அருள்பணியாளர் பாவத்தண்டனை நீக்குச் சலுகையைத் தீவிர மாக ஆதரித்து விளம்பரப்படுத்தினார். அவரது இக்கூற்று தீவிரமாகப் பரப்பப்பட்டு எங்கும் மேற்கோளிடப்பட்டது: ‘பணப் பெட்டியில் (ஆலய உண்டியல்) விழும் ஒரு நாணயத்தின் ஓசை எழுந்ததும் இறுதித் தூய்மையுறு நிலையில் துன்புறும் ஓர் ஆன்மா (விண்ணகம் செல்வதற்காக) துள்ளி எழும்.’
இறைவனின்
இரக்கத்தால் பெறப்படும் பாவ மன்னிப்பைப் பணத்திற்கு வாங்க முடியும் என்ற போக்கு மார்ட்டின் லூதரால் கண்டிக்கப்பட்டது. திரு அவையைச் சீர்திருத்த அவர் வெளியிட்ட 95 ஆய்வுரைகளுள் பாவ மன்னிப்பு நீக்குச் சலுகையும் ஒன்றானது. சீர்திருத்த இயக்கத்திற்கு எதிர்வினையாற்றிய திரிதெந்தின் பொதுச் சங்கம் (1945-1563) பாவத்தண்டனை நீக்குச் சலுகையை வியாபாரமாகக் கருதாமல், இறைஇரக்கத்தின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டுமென்றும், அதைப் பெறுவதற்கு உண்மையான மனமாற்றமும், நற்செயல்கள் புரிவதும் அவசியம் என்றும் வலியுறுத்தியது.
இன்றைய நடைமுறை
1967-இல் திருத்தந்தை
புனித 6-ஆம் பவுல் பாவத்தண்டனைக் குறைப்பு அ) நீக்குச் சலுகையின்
புதிய புரிதலைப் பற்றிய மறைப்படிப்பினையை வெளியிட்டார். அதனைத் தழுவி 1999-இல் திருத்தந்தைசார் பாவக் கழுவாய் பேராயம் பாவத் தண்டனைக் குறைப்பு, ஆ) நீக்குச் சலுகையின்
விரிவான விதிமுறைகளை (Manual of Indulgences) வழங்கியது.
இவ்விதிமுறைகளே கத்தோலிக்கத் திரு அவையில் நடைமுறையில் உள்ளன.
2025 - யூபிலி ஆண்டில்
இச்சலுகையைப் பெறுவதற்காகத் திருத்தந்தை பிரான்சிசின் ஆணையோலை (எதிர்நோக்கு ஏமாற்றம் தருவதில்லை, 9 மே, 2024), திருத்தந்தைசார் பாவக் கழுவாய் பேராயத்தின் குறிப்பாணை (13 மே, 2024), இந்திய ஆயர்கள் பேரவையின் (இலத்தீன்) சுற்றுமடல் (17, செப்டம்பர் 2024) ஆகிய ஆவணங்களில் அடங்கியுள்ள பொதுவான நிபந்தனைகளாவன:
• மறைமாவட்ட ஆயரால் அறிவிக்கப்பட்டுள்ள ஆலயம் அல்லது திருத்தலத்திற்குத் தனியாகவோ குழுவாகவோ செல்லவேண்டும்.
• பாவ அறிக்கை அருளடையாளத்தைப் பெற்று அருள்நிலையில் இருக்கவேண்டும்.
• திருப்பலியில் பங்கேற்று நற்கருணை அருந்தவேண்டும்.
• திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபிக்க வேண்டும்.
• இவற்றுடன் செபம், தவம், தர்மம் உள்ளிட்ட பல செயல்பாடுகளையும் மறைமாவட்ட ஆயர்கள்
தங்கள் சுற்றுமடல்களில் சேர்த்துள்ளனர்.
சர்ச்சைகள்
இச்சலுகையைப்
பற்றி நிலவும் சில முக்கியச் சர்ச்சைகளாவன:
1. இச்சலுகைக்குத்
திருவிவிலியத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.
2. இரண்டாம்
வத்திக்கான் சங்கத்தின் எந்த ஆவணத்திலும் இச்சலுகையைப் பற்றிய படிப்பினை இல்லை.
3. கீழை
மரபுறுதித் திரு அவைகளின் மறைப் படிப்பினைகளிலும் இச்சலுகையைப் பற்றிய படிப்பினை இல்லை.
4. சீர்திருத்த
மற்றும் பிற கிறித்தவ அவைகள் இச்சலுகையை ஏற்பதில்லை.
5. 1983-ஆம் ஆண்டின்
இலத்தின் கத்தோலிக்கத் திரு அவைச் சட்டத்தொகுப்பில் இச்சலுகையைப் பற்றி ஆறு சட்டங்கள் (சச 992 997) இடம்பெற்றிருக்க, அதற்கு இணையாக 1990-இல் பிரகடனப்படுத்தப்பட்ட கீழைக் கத்தோலிக்கத் திரு அவைச் சட்டத் தொகுப்பில் ஒரு சட்டம்கூட இல்லை.
6. பாவ
அறிக்கை (auricular confession) அருளடையாளத்தின் பயன்பாடு மங்கிவரும் நிலையில், அதை இச்சலுகையைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக வைத்திருத்தல். மேலும், இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமென்று யூபிலி ஆலயங்களில் அறிவிக்கும்பொழுது, அது திரு அவைச் சட்டம் 916-க்கு முரணானது என்பதை அறியாதிருத்தல் (சட்டம் 916-இன்படி கனமான ஒரு காரணமிருந்து மற்றும் பாவ அறிக்கையிடும் வாய்ப்பு இல்லாதிருக்கும் சூழ்நிலையில் ஒருவர் கூடிய விரைவில் பாவ அறிக்கை செய்யும் எண்ணத்தை உள்ளடக்கிய நிறைவான மனத்துயரை வெளியிட்டுத் திருப்பலியில் பங்கேற்று ஆண்டவரின் உடலைப் பெறலாம்).
7. இறுதித்
தூய்மையுறு நிலை பற்றிய கத்தோலிக்கப் படிப்பினைக்கு எதிராகப் பல கேள்விகளும் விவாதங்களும்
வைக்கப்படும் நிலையில், அதனுடன் இச்சலுகையைத் தொடர்புபடுத்தியிருத்தல்.
8. சிலுவை
அடையாளம் வரைதல், செபமாலை சொல்லுதல், சிலுவைப்பாதை செய்தல், திருவிவிலியத்தை வாசித்தல் போன்ற வழக்கமான பக்தி முயற்சிகளையும் இச்சலுகையை முழுமையாகவோ பகுதியாகவோ பெறுவதற்கான வழிமுறைகளாகக் கோர்த்து வைத்திருத்தல்.
இன்றைய பொருந்துமை
பாவத்தண்டனைக்
குறைப்பு அல்லது நீக்குச் சலுகை இக்காலச் சூழலில் ஈடுபாடுள்ள நம்பிக்கை வாழ்க்கை முறையை வலுப்படுத்துகிறதா? என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுப்பப்படுகிறது. குறிப்பாக, லேவியர் புத்தகம் 25-ஆம் அதிகாரத்தில் யூபிலி ஆண்டின் நிகழ்வுகளாகக் கூறப்பட்டுள்ள அடிமைகளுக்கு விடுதலை, சொத்துகள் மீட்பு மற்றும் பூமிநலன், லூக்கா நற்செய்தி 4-ஆம் அதிகாரத்தில் இயேசு அறிவித்துள்ள அருள்தரும் ஆண்டிற்கான அறிக்கையின் விழுமியங்கள், மத்தேயு நற்செய்தியின் 25-ஆம் அதிகாரத்தில் பொதுத் தீர்வையின் பொழுது நிலைவாழ்வைப் பெறுவதற்காகச் செய்திருக்க வேண்டிய அறச்செயல்கள் ஆகியவற்றின் பின்புலத்திலும், மேற்கூறப்பட்டுள்ள சர்ச்சைகளின் தாக்கத்தாலும், இச்சலுகை திரு அவையின் இன்றைய வாழ்வுக்கும் பணிக்கும் உகந்த பொருந்துமையைக் கொண்டிருக்கிறது என்று கூறுவது கடினம். எனவே, இச்சலுகையைப் பற்றிய மரபுசார்ந்த படிப்பினையையும் இன்றைய திரு அவைக்கு அதன் பொருந்துமையையும் மறு ஆய்வு செய்வது அவசியமெனக் கருதப்படுகிறது.
“கல்வாரியில்
பொன்னான
மேனி
புண்ணாக
நொந்து
பூவாகத்
துடிக்கும்
ஓர்
உள்ளம் காண்போம்;
‘அம்மா’ என்றழைக்க
ஒரு
குழந்தையில்லாமல்
மான்போன்ற
கண்களில் கண்ணீர் பெருகி
கன்னத்தில்
ஆறாக
ஓடக்
கண்டோம்!”
இறைவனுக்கு
இணையாகி, வானிற்கு நீராகி, பேரன்பிற்கு இலக்கணமாகத் திகழும் அன்னை மரியாவின் வேதனையிலும் வீரத்தைக் காட்டிய நாள்தான் செப்டம்பர் 15. இந்நாளில் தான் நமது திரு அவை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் புனித வியாகுல அன்னை திருவிழா. வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு பரந்த கருணை, அன்பை மட்டும் அள்ளிக் கொடுக்கும் பரிவு... இவைதான் ஒரு தாயின் உள்ளம். அத்தகைய தாயாம் அன்னை மரியாவின் வியாகுலத்தை, வீரத்தைக் கொண்டாடும் நாள்தான் இந்நாள்.
இந்நாளில்
தம்மையே வெறுமையாக்கி, அடிமை போன்று சிலுவைச் சாவை ஏற்ற கிறிஸ்துவைப் பின்பற்றி, தன்னையே பல்வேறு துன்பங்களுக்குள் உட்படுத்திக் கொண்டு இறைத்திருவுளத்திற்கேற்ப வாழ்ந்து காட்டிய நம் தாய் அன்னை மரியாவைப் போல் வாழ நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.
அன்னையின் வியாகுலத்திற்குக்
காரணங்கள்
• மீட்கும் திருவுளத்திற்குத் தன்னைக் கையளித்தது.
•
மீட்பராகிய இயேசுவுடன் கொண்டிருந்த இணைபிரியா உறவு,
•
மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த நாம் மீட்படைய வேண்டும் என்ற தாய்மை உணர்வு.
நம் தாய்
மரியா
பட்ட
துன்பங்கள்
‘ஏழு’
• “உமது உள்ளத்தையும்
ஒரு வாள் ஊடுருவும்”
என்று சிமியோன் உரைத்த இறைவாக்கால் (லூக் 2:25-35) எதிர்காலத்தைப் பற்றிய அச்ச நிலை.
•
“இரவிலேயே எகிப்திற்குப் புறப்பட்டு போ”
(மத் 2:13-15) என்ற வார்த்தையைக் கேட்டு, எங்கே போவோம்? எப்படித் தங்குவோம்? என்ற அகதிகளின் மன நிலை.
• குழந்தையைக் காணாது தேடுதலில் (லூக் 2:41-50) மகனைத் தொலைத்துவிட்ட தாயின் பதறும் நிலை.
•
கல்வாரிப் பாதையில் மகனைச் சந்தித்தபோது (லூக் 23:27-31) கண்ணீரால் மகனுக்குத் துணிவூட்டும் தாயின் எல்லையற்ற பரிவின் நிலை.
•
சிலுவையடியில் நிற்கும்போது (யோவா 19:25-30) துன்பத்திலும் துவளாமல், துணிவோடு நிற்கும் வீரத்தாயின் நிலை.
• மரித்த மகனை மடியில் சுமக்கையில் (லூக் 23: 50-54) வாழ்வே இருண்ட கையறுநிலை.
• கல்லறையில் அடக்கம் செய்கையில் (யோவா 19:38-42) தனிமையில் தவித்த வெறுமை நிலை.
அன்னை
சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி, பாடுகளையும் துன்பங்களையும் துணிவுடன் தாங்கும் உறுதியைத் தெளிவாக நமக்குக் கற்றுத் தருகின்றார். இத்தகைய துன்பங்களின் ஊடான வாழ்க்கைப் பயணமே அன்னைக்கு விண்ணேற்பைப் பெற்றுத் தந்தது. நாமும் நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல்வேறு துன்பங்களைப் பொறுமையோடு சகித்து வாழும்போது, நமக்கும் விண்ணேற்பு நிச்சயம் உண்டு. அன்னை தன் பாடுகள் அனைத்தையும் நமக்கு மீட்பாக மாற்றிக்கொடுத்ததுபோல, நாமும் பிறர்நலத்திற்காகச் சுய நலம் மறந்து நமது அன்பை, நமது சேவையை, உதவியை, இரக்கத்தை, நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பிறருக்காகக் கொடுத்து வாழ்வோம்.
“உன்னைக்கொடு; உலகை வெல்வாய்! உன்னை இழ; எல்லார் உள்ளத்திலும் வாழ்வாய்”
என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்து சிறந்த புனித அன்னை தெரசா, பிறர்நலம் போற்றி வாழ்ந்து தன் இறப்பின்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டாக்டர் அப்துல் கலாம் போன்று தன்னலம் கருதாது வாழ்ந்து நாமும் பிறர்நலம் போற்றி வாழ்வோம். இந்நாளில் இறையாசிரும், அன்னையின் அருள்வளமும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்த அன்னையிடம் வேண்டுவோம்.
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச்செல்வன்: “தந்தையே, கடந்த இரு முறை நாம் கூடியபொழுது திருமுழுக்கு தரும் உறவுகள் குறித்துச் சிந்தித்தோம். உறவுகள் குறித்து நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நான் வாசித்த ஒரு கதை என் நினைவிற்கு வந்தது. காடு ஒன்றில் முள்ளம்பன்றிகள் கூட்டமாக வசித்து வந்தன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குளிர் அதிகமாக இருந்ததன் காரணமாக, முள்ளம்பன்றிகள் ஒவ்வொன்றாக இறக்க ஆரம்பித்தன. எனவே, அந்தக் கூட்டத்தின் தலைவன் அனைத்து முள்ளம்பன்றிகளையும் அழைத்து, ‘கடுமையான குளிரை எதிர்கொண்டு நாம் உயிர்வாழ வேண்டுமெனில், இரவு நேரத்தில் நாம் மிக நெருக்கமாகக் கூடிவந்து நம் உடலில் வெப்பம் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று ஆலோசனை கூறியது. தலைவனின் ஆலோசனையை ஏற்று முள்ளம்பன்றிகள் இரவு நேரத்தில் மிகவும் நெருக்கமாகக் கூடிவந்தன. உடனே முள்கள் ஒன்றினை மற்றொன்று காயப்படுத்த, அதைப் பொறுக்க முடியாத சில முள்ளம்பன்றிகள் தனியே விலகிச் சென்றன. அவை குளிரால் சாகநேரிட்டது. இதைப் பார்த்த அக்கூட்டத்தின் தலைவன் இவ்வாறு மீண்டும் பேசினான்: ‘நண்பர்களே! நமக்கு முன்னால் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, நெருங்கி வருவதால் ஏற்படும் ஒருசில சங்கடங்களைப் பெரிதுபடுத்தாமல் உயிர்வாழ்வது; மற்றொன்று, சங்கடங்களைத் தவிர்ப்பதாக எண்ணிக்கொண்டு வாழ்வை இழப்பது.’
என்னைப்
பொறுத்தவரை, உறவைப் பொறுத்த அளவில் நமக்கு முன்னாலும் இரண்டு வழிகள்தான் உள்ளன: அ) அன்பின் பொருட்டு
சங்கடங்களை ஏற்று வாழ்வை நிறைவாக வாழ்வது; ஆ) சுகபோக வாழ்விற்காக
அன்பைத் தவிர்த்து வாழ்வை வெறுமையாக வாழ்வது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், எந்த வகையான உறவை எடுத்துக்கொண்டாலும், அதில் சிக்கல்களும் போராட்டங்களும் உள்ளன. இத்தகைய சிக்கல்களையும் போராட்டங்களையும் பெரிதுபடுத்தாமல், ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய மனப்பக்குவத்தை நம்மில் உருவாக்கிக்கொள்வது அவசியம். ‘உறவுகள்
இருந்தாலும் பிரச்சினை, இல்லாவிட்டாலும் பிரச்சினை’
என்பதுதான் மானிட வாழ்வு.”
அருள்பணி:
“நீங்கள் கூறுவதைப் பார்த்தால் உறவிலேயே பிரச்சினை இருக்கிறது என்பதுபோல இருக்கிறது. அது உண்மையல்ல! உறவில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம் அணுகுமுறையால் வருபவை. உறவு வாழ்வில் சரியான அணுகுமுறை கொண்ட மனிதர்கள் உறவைக் கொண்டாடுகின்றனர். சரியான அணுகுமுறை கொள்ளாத மனிதர்கள் திண்டாடுகிறார்கள்.”
மார்த்தா:
“கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா, தந்தையே?”
அருள்பணி:
“ஒவ்வொரு உறவிலும் உரிமைகளும் உண்டு, கடமைகளும் உண்டு. நம் உறவுகளின் மட்டிலான கடமைகளை நாம் சரியாகச் செய்யாததாலும், அக்கடமைகளைச் செய்தாலும், அவற்றைச் சரியான மனநிலையோடு செய்யாததாலும், உறவுகள் இன்று பிரச்சினைக்குரியவையாக மாறிவருகின்றன. நம் உறவுக் கடமைகளைச் சரியான மனநிலையோடு செய்தோமென்றால், உறவுகள் தரும் உரிமைகளை நிறைவாக நம்மால் அனுபவிக்க முடியும். ஆனால், பலரது பிரச்சினை என்னவென்றால், உறவுகள் தரும் உரிமைகளையும் மகிழ்வையும் அனுபவிக்க விரும்புகின்றனர். ஆனால், உறவுக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய விரும்புவதில்லை. அப்படியே செய்தாலும், அவற்றைச் சரியான மனநிலையோடு செய்வதில்லை.”
கிறிஸ்டினா: “தந்தையே! திருமுழுக்கு அருளடையாளம் வழங்கக்கூடிய ஒரு மாபெரும் கொடை ‘கடவுளின் பிள்ளை’ என்கின்ற கொடை! அது குறித்து உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.”
அருள்பணி: “திருமுழுக்கு அருளடையாளம் வழியாக நாம் ஒவ்வொருமே கடவுளின் மகனாக, மகளாக மாற்றப்படுகிறோம். இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றபோது ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ (மத்
3: 17) என்று தந்தையாகிய கடவுள் கூறிய வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம். திருமுழுக்குப் பெறும் ஒவ்வொரு மனிதரும் கடவுளது சொந்தப் பிள்ளையாகத் தத்து எடுக்கப்படுகின்றனர். திருமுழுக்கு நிகழ்வை நாம் ‘இரண்டாம் பிறப்பு’ என்றுகூடக் கூறலாம். அதாவது, முதல் பிறப்பில் நம் பெற்றோர்களுக்கு நாம் பிறந்தோம்; திருமுழுக்கில் நாம் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, புனித மாக்ஸி மிலியன் கோல்பே (St. Maximilian Kolbe) ‘திருமுழுக்கு
என்கின்ற நீராட்டால் ஒவ்வொரு குழந்தையும் மறுவுரு பெறுகிறது’
என்றார்.”
அருள்பணி: “அதேபோல புனித வின்சென்ட் பெரர் (St. Vincent Ferrer) ‘திருமுழுக்கு
நிகழ்வின்போது திரு அவை என்ற கருவறையில் ஆதாமின் பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகளாக உருமாற்றம் பெறுகின்றனர். இதைத் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மனத்தில் நிறுத்துவது அவசியம்’ என்கின்றார்.”
அகஸ்டின்:
“நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம் என்பதன் பொருள் என்ன தந்தையே?”
அருள்பணி:
“ஏனைய உறவுகளுக்கு இருப்பது போலவே இந்த உறவுக்கும் உரிமைகளும் உண்டு; கடமைகளும் உண்டு. இரண்டு உரிமைகள், இரண்டு கடமைகளைப் பற்றி நாம் பார்க்கலாம். முதலில் உரிமைகளைப் பற்றிப் பார்க்கலாம். முதலாவதாக, நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில் எந்நாளும் நம் சார்பாகச் செயல்படும் கடவுளை ந(h)ம்
தந்தையாகப் பெற்றுக் கொள்கிறோம். கிறித்தவர்களாகிய நாம் எந்தக் காலத் திலும், ‘எனக்கென்று யாரும் இல்லை; நான் தனியாகத் துன்பப்படுகின்றேன்’ என்று
கூறவே கூடாது. நம் தந்தையாகிய கடவுள் நம் கூடவே இருந்து நம் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை நமக்குத் தருகின்றார்.”
மார்த்தா:
“தந்தையே! புலனத்தில் (Whats app) நான்
வாசித்த செய்தி ஒன்றை நினைத்துப் பார்க்கின்றேன்: ‘உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் வருகின்றபோது கடவுளை நோக்கி, ‘கடவுளே, எனக்குப் பெரிய பிரச்சினை இருக்கின்றது’ என்று
கூறாதீர்கள்; மாறாக, பிரச்சினையைப் பார்த்து ‘என்னோடு பெரிய கடவுள் இருக்கிறார்’ என்று
கூறுங்கள். நானும் இவ்வாறு ஒருசில முறை கூறியிருக்கிறேன். பிரச்சினையின் கனாகனம் பல மடங்கு குறைந்திருப்பதை
உணர்ந்தும் இருக்கின்றேன்.”
கிறிஸ்டினா:
“அடுத்த உரிமை என்ன தந்தையே!”
அருள்பணி:
“தந்தையின் தன்மை கள் மகனுக்கு வந்தடைகின்றன என்கிறது உளவியல். தந்தையின் சொத்துகள் மகனுக்கு வந்தடைகின்றன என்கிறது சமூகவியல். எனவே, கடவுள் தம்மிடம் உள்ள அத்தனை தன்மைகளையும் கொடைகளையும் நமக்கு வாரி வழங்குகின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட மானிட வாழ்வை நலமாகவும் வளமாகவும் நிறைவாகவும் நாம் வாழும் பொருட்டு கடவுள் தம் கொடைகள் யாவற்றையும் நமக்குத் தருகிறார். ஊதாரி மைந்தன் உவமையில் தந்தை தன் மூத்த மகனைப் பார்த்து, ‘மகனே, என்னுடையதெல்லாம் உன்னுடையதே’ (லூக்
15: 31) என்று கூறியது நினைவுகூரத்தக்கது. கடவுளது அருள் வளங்களும் ஆற்றல்களும் நமக்குத் திறந்த பெட்டகமாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் கொடுக்கப்பட்ட அருள்வளங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவதில்லை. நாம் கடவுளின் மகன், மகள் என்கின்ற உண்மையை உணராததன் காரணமாகவும், மகன் தன்மைக்கு ஏற்ப வாழாததன் காரணமாகவும், கடவுள் வழங்கக்கூடிய கொடைகளை
நமதாக்க மறந்து விடுகிறோம் அல்லது மறுத்து விடுகின்றோம்.”
அகஸ்டின்:
“கடவுளுக்கும், நமக்கும் இடையேயான தந்தை-மகன் உறவில் நமக்குள்ள கடமைகள் எவையெவை தந்தையே!”
அருள்பணி:
“முதலாவதாக, நாம் கடவுளின் மகனாக, மகளாக இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம். நம்மில் பலருக்கு நினைவு மறதி நோய் (amnesia) உண்டு. ‘நம் உண்மை இயல்பு என்ன?’, ‘நாம் யாரிடமிருந்து வந்திருக்கின்றோம்?’, ‘கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு என்ன?’ என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம்.
இரண்டாவதாக,
மகனுக்கு, மகளுக்குரிய மனப்பக்குவங்களை நமக்குள் வளர்த்துக்கொள்v வது. ஊதாரி மைந்தன் உவமையில், தன்னுடையது எல்லாம் தன் மகனுக்கும் சொந்தமானது என்று தந்தை நினைத்திருந்தாலும், மூத்த மகனுக்கு அத்தகைய மனப்பக்குவம், அதாவது மகனுக்கு உரிய மனப்பக்குவம் இல்லை. தன்னை ‘அடிமை’
(லூக் 15:29) போன்றுதான் நினைத்திருந்தான். எனவேதான், ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட எடுத்து தன் நண்பர்களுடன் விருந்து கொண்டாடத் தயங்கியிருந்தான்.
இதற்கு
நேர்மாறாக மகனுக்குரிய தன்மையை முழுமையாக உணர்ந்து இருந்தவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. தம் குருத்துவச் செபத்தில் ‘என்னுடையதெல்லாம் உம்முடையதே! உம்முடையதும் என்னுடையதே’ (யோவா
17:10) என்கின்றார். தந்தையின் செல்வங்களைத் தமதாக்கி, வாழ்வை முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்ந்தார்.”
(தொடரும்)
2019-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை இறைவார்த்தை ஞாயிறாகக் கொண்டாட நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் 2025, சனவரி 26 அன்று ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறை “உமது வார்த்தையால் நான் நம்பிக்கை கொள்கிறேன்” (திபா 119:74) என்ற மையக்கருத்தில் உலகம் முழுவதும் கொண்டாடினோம். தமிழ்நாடு திரு அவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளில் ஒன்றான திருவிவிலிய மாதம் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. திருவிவிலிய மாதத்தில் தமிழ்நாடு திருவிவிலிய அருள்பணிக் குழுவின் இணைந்து திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதலில் எல்லா மறைமாவட்டங்கள், பங்குகள், கிளை ஆலயங்கள், துறவற இல்லங்கள், பயிற்சியகங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் இந்த மாதம் மிக நேர்த்தியாகச் சிறப்பிக்கப்படுவது தமிழ்நாடு திரு அவையின் தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.
செய்தி
ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகை ஊடகங்கள், இணையவழி ஊடகங்கள், சமூகத் தொடர்பு ஊடகங்கள் வழியாகவும், நேரடி வகுப்புகள் மற்றும் பல்வேறு திருவிவிலியப் போட்டிகள் மற்றும் பரிசளிப்புகள் வழியாகவும் எல்லா மறைமாவட்டங்களிலும் திருவிவிலிய மாதமாகச் செப்டம்பர் மாதம் சிறப்பிக்கப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது; பயன் தரவல்லது.
2025-ஆம் ஆண்டு
யூபிலி ஆண்டை எதிர்நோக்கின் திருப்பயணியாகக் கொண்டாடும் நமக்கு இந்த ஆண்டின் மையப்பொருளான (திபா 119:74) கிறித்தவ வாழ்வின் நோக்கத்தையும் நம் தொடர் பயணத்தையும் நமது இலக்கையும் தெளிவுபடுத்துகிறது (திபா 119). ஆண்டவரின் திருச்சட்டத்தின் மேன்மையையும், அதில் நாம் கொள்ள வேண்டிய ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் அதன் அடிப்படையிலான எதிர்நோக்குப் பயணத்தையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது (திபா
119:43,49,74,81,95, 114,116,14,7, 166) என
இந்தத் திருப்பாடலின் (119) பல இடங்களில் கிறித்தவ
நம்பிக்கை வாழ்வு என்பது ஆழமான, பற்றுறுதிமிக்க நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அன்பும் இணைந்து வாழ்வு என்பதை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. எடுத்துக்காட் டாக “உன் நீதிநெறிகளின்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்”(திபா
119:43) எனவும் நிறைவாக “உன் கட்டளைகளை விரும்புகிறேன்” (119:127) எனவும்
மொழிகிறது. இதன் அடிப்படையாக எதிர்நோக்கு வாழ்வியல் என்பது “காத்திருப்பது மட்டுமல்ல; எதிர்நோக்கி இருப்பது மட்டுமல்ல; நாம் நம்பும் கடவுளின் நீதிநெறிகளைச் செயல்படுத்துவதே உண்மையான கிறித்தவ நம்பிக்கை வாழ்வு” என் பதைத் தெளிவுபடுத்துகிறது.
தமிழ்நாடு
திரு அவை திருவிவிலியத்தை இலட்சக்கணக்கில் அச்சடித்து அதனை எல்லா இடங்களுக்கும் மக்களுக்கும் வழங்கியுள்ளது என்பது நமக்குப் பெருமைதான். ஆனால், திருவிவிலிய மாதத்தின் நோக்கம் அது மட்டுமல்ல, கடவுளின் நீதிநெறிகளை நம்புகின்ற தமிழ்நாடு திரு அவை அதன் பணியாளராக மாற வேண்டும், நம்புவதை அறிவிக்க வேண்டும், அவற்றைச் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்தும் கடவுளின் நீதிநெறிகளை மட்டுமே உலகிற்கு அறிவிக்கவேண்டும். வெற்று அறிவிப்புகள் வேண்டாம். வாக்கு உயிர் பெறட்டும், நம்மிடையே குடிகொள்ளட்டும்.