news
ஆன்மிகம்
பெண்களுக்கு நலம் தரும் மாதம் எது? (கண்டனையோ, கேட்டனையோ! – 37)

The Cure of Ars என்ற தலைப்பில் அமெரிக்கக் கத்தோலிக்க டி.வி. சேனல் EWTN தயாரித்து வெளியிட்டுள்ள புனித ஜான் மரிய வியான்னி குறித்த ஒன்றரை மணி நேர docudrama-வை அண்மையில் பார்த்து மகிழ்ந்தேன்.

வியான்னி புனிதராக்கப்பட்ட 100-வது ஆண்டு நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மே 31-அன்று வெளியாகி, தற்போது EWTN இணையதளத்தில் கிடைக்கும் இந்தப் படத்தை  https://ondemand.ewtn.com/Home/Series/ondemand/video/en/the-cure-of-ars என்ற இணைப்பில் இலவசமாகக் காணலாம்.

docudrama என்பது விவரிப்பு, காட்சிப்படுத்தல்கள் என இரண்டும் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கலவை சினிமா விலங்கு. இந்தக் கதை கேத்தரின் என்ற ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் வியான்னியின் காலத்தில் ஆர்ஸ் நகரில் வாழ்ந்த அழகான, சற்று எதிர்மறை எண்ணம் கொண்ட கிறித்தவப் பெண். தொடக்கத்தில் அவருக்கு வியான்னியைப் பிடிக்கவில்லை. ‘ஏன் இந்த மனிதர் எப்போதும் மறையுரை மேடையில் நின்று திட்டிக்கொண்டே இருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு மிகுந்த தயக்கத்துடன் அவர் புதிய அருள்பணியாளரை அணுகுகிறார்.

வியான்னி பேசும்போது, கேத்தரின் பெரும்பாலும் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு நிற்பதாகக் காட்டுவது ஒரு நல்ல யுத்தி. “நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்; நான் மாறமாட்டேன் என்கிற உடல்மொழி. வியான்னியின் நகைச்சுவைக்குகெக்கேப்பிக்கே என்று சிரிக்கும் மற்ற பெண்களை அவர் முறைக்கிறார்.

ஒரு காட்சியில், கேத்தரினும் அவரது தோழியும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். வியான்னி அவர்களை அணுகி, “பெண்களுக்கு மிகவும் நலம் பயக்கும் மாதம் எது தெரியுமா?” என்று கேட்கிறார். அவர்கள், “தெரியவில்லை என்கிறார்கள். வியான்னிபிப்ரவரி மாதம் என்கிறார்.

ஏன்?”

ஏனெனில், பிப்ரவரியில்தான் புறணி பேசுவதற்குக் குறைவான நாள்கள் உள்ளன என்கிறார்.

மற்றொரு காட்சியில், ஒரு பெண்கள் குழுவை ஏற்படுத்தி, ஞாயிறு மாலையில் அவர்களுக்குப் புனிதர்கள் குறித்து வியான்னி வகுப்பு எடுக்கிறார். கேத்தரினும் அதில் இருக்கிறார். வேண்டா வெறுப்பாக, வெற்றுப் பார்வைப் பார்த்துக்கொண்டு.

வகுப்பின் துவக்கத்தில் வந்திருக்கும் எல்லாப் பெண்களுக்கும் நன்றி சொல்லும் வியான்னி, “கேத்தரினையும் அவர் தோழியையும் இந்த வகுப்பிற்கு வரச் சொன்னதன் காரணம் என்ன தெரியுமா?”

அவர்கள் தெரியாமல் விழிக்கிறார்கள். வியான்னி, “அப்படியாவது இந்தப் பையன்கள் கோவில் பக்கம் வருவார்கள் என்பதற்காகத்தான் என்று கூற,… பெண்கள் மீண்டும்கெக்கேப்பிக்கே!’

சும்ம இருங்கடி; அவர்தான் கலாய்க்கிறார்னா, இவங்க வேற…” என்பதுபோல கேத்தரின் அவர்களைப் பார்ப்பார்.

ஆர்ஸ் நகரில் ஆண் குழந்தைகளுக்குப் பள்ளி இருந்தது. பெண்களுக்கு இல்லை. வியான்னி பெண்களுக்கு என்று பங்கில் ஒரு பள்ளி தொடங்கத் திட்டமிடும்போது கேத்தரினை அழைத்து, “நீ இந்தப் புதிய பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்று கேட்பார். கேத்தரினால் நம்ப முடியாது, “ஏன் நான்?”

ஏனென்றால், நீ ஓர் இறைப் பற்றுள்ள பெண். அறிவாளியும் கூட. என் செலவிலேயே உனக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படும்.”

1824-இல்La Providence என்ற பெயரில் பள்ளி செயல்படத் தொடங்குகிறது. நிறைய பெண்கள் உடனடியாகச் சேர்கிறார்கள். சுற்றுப்பட்ட கிராமங்களில் திரிந்துகொண்டிருந்த குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்று வியான்னி வலியுறுத்த, பள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி என்றால் ஒன்றும் பிரமாதமான கட்டடம் கிடையாது. கீழே மாணவர்களுக்கு ஒரு பெரிய ஹால், மேலே ஆசிரியர்களுக்கு இரண்டு சிறிய அறைகள். ‘Chateau என்றால் பிரெஞ்சு மொழியில் பணக்காரர் வசிக்கும் அரண்மனை போன்ற வீடு. பள்ளி நிதி உதவி கேட்டு அவர்from one chateau to another chateau அலைந்ததாகப் படத்தின் விவரணம் சொல்கிறது.

ஒருநாள் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப் போதுமான மாவு இல்லை. பரணில் சேர்த்து வைத்திருந்த தானியங்கள் எல்லாம் காலி. கேத்தரின் வியான்னியிடம் வந்து கூறுகிறார். “சரி, நீங்கள் போய் இருக்கிற மாவைக்கொண்டு அப்பம் சுடுங்கள். நான் குழந்தைகளோடு இணைந்து இறைவேண்டல் செய்கிறேன் என்று வியான்னி கூறுவார். மனச்சோர்வுடன் கேத்தரின் பள்ளி சமையலறைக்குத் திரும்பிச் செல்ல... என்ன ஆச்சரியம்! மாவு பெருகிக்கொண்டே போய், தேவைக்கும் அதிகமான அப்பங்கள் அன்று சுட முடிகிறது.

படத்தில் இடம்பெறும் மற்றொரு முக்கியப் பெண் கதாபாத்திரம் Mademoiselle d’Ars என்ற சீமாட்டி. ஏராளமான ஆடைகளுடனும் எப்போதும் ஒரு பணியாளருடனும் நடக்கும் பெண்; செல்வந்தர்; சிறந்த நம்பிக்கையாளர். பல வருடங்கள் காலியாக இருந்த ஆர்ஸ் பங்கிற்கு வியான்னி அனுப்பப்பட, இந்தச் சீமாட்டி ஆயருக்குத் தொடர்ந்து எழுதிய கடிதங்களும் ஒரு காரணம். அருள்பணியாளரின் வீட்டைத் தூய்மைப்படுத்தி, அறைக்குத் தேவையான மேசை, நாற்காலிகள், படுக்கை, உணவு என எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்து, இளம் வியான்னியை ஒரு தாய்போல பார்த்துக்கொள்கிறார். ஆலயத்தைச் சீரமைக்க வேண்டும் என்று கூறி வியான்னி அவர் வீடு சென்று கேட்கும்போது, பாரிசிலிருக்கும் தன் சகோதரனிடம் கூறி ஒரு பெரிய தொகையை நன்கொடையாகப் பெற்றுத் தருகிறார். ஒழுங்காகச் சாப்பிடச் சொல்லி, ஓய்வெடுக்கச் சொல்லி அவ்வப்போது வியான்னியைக் கண்டிக்கிறார்.

ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு வராமல், வயலில் வேலை செய்யும் விவசாயிகளை வியான்னி மறையுரையில் கண்டிக்க, சீமாட்டி விவசாயிகள் சார்பாக நின்று வியான்னியிடம் விவாதிக்கிறார்: “விவசாயிகள் அப்பாவிகள். வானம் எப்போது என்ன செய்யும் என்று தெரியாத சூழலில், சிலசமயம் அவர்கள் ஞாயிறு கூட வேலைக்குச் செல்ல வேண்டி வரும். அதற்காக அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவர்கள் நமக்கு உணவு தருபவர்கள்?” என்கிறார்.

வியான்னி, “அவர்கள் ஆறு நாள்கள் வேலை செய்யட்டும் அம்மா. ஆனால், ஏழாம் நாள் கடவுளின் நாள். அன்று அவர்கள் திருப்பலிக்கு வரவேண்டும். பிறகு வீட்டிற்குச் சென்று, குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகளுடன் பேச வேண்டும். கால்களை உயர்த்திப் போட்டுச் சற்றுக் கண்ணயர  வேண்டும். மாலை கதிரவன் சாய, ஆலய மணி அடிக்கும்போது, எல்லாரும் சேர்ந்து இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கூறுவார்.

அதற்குச் சீமாட்டி, “அதெல்லாம் சரி, பங்கு மக்களின் கால்களுக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்கிறாய். ஆனால், உன் கால்களுக்கு நீ ஓய்வு கொடுப்பதில்லையே! அந்த நாள் எப்போது வரும் என்று நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி மடக்குவதும், பதில் தரமுடியாமல் வியான்னி சிரித்து மழுப்புவதும் அழகாகப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வியான்னியின் அற்புதம் செய்யும் ஆற்றல், சாத்தானுடனான அவரின் பிரபல போராட்டங்கள் கூட மிகவும் அடக்கமான தொனியில் கூறப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் பேய் நம் ஊர் சினிமாக்களைப் போல முடியை விரித்துப் போட்டுக்கொண்டு, நாக்குச் சரிந்த நிலையில் வருவதில்லை. அதன் இருப்பு குறிப்பாக உணர்த்தப்படுகிறது. வியான்னி படுக்கையில் திருவிவிலியத்தை வாசித்துக் கொண்டிருக்க, முதலில் கதவில் ஒரு முரட்டு தட்டல்! பிறகு அறை ஓரத்தில் இருக்கும் மர நாற்காலி ஒரு வேகச் சுழற்றலில் அவருக்கு முன்வந்து நிற்கிறது. அடுத்த நாள் காலையில் பாதி எரிந்த நிலையில் வீட்டிற்குள் கிடக்கும் அவரது படுக்கை. முந்தின இரவு சாத்தான் வியான்னிக்குக் கொடுத்த துன்புறுத்தல்களுக்கு அடையாளமாக இது காட்டப்படுகிறது. வியான்னி சாத்தானைLE GRAPPIN என்ற பெயர் வைத்துக் கூப்பிடுகிறார். “, நீதானா? சரி, நல்லது. நீ என்னைத் துன்புறுத்த வந்தால், ஏதோ ஒரு பெரிய பாவி மனம் மாறுகிறான் என்று அர்த்தம். எனக்கு மகிழ்ச்சிதான் என்று புன்னகையோடு பேயை எதிர்கொள்கிறார்.

புதுமைகளும்கூட அப்படித்தான். பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் காட்டப்படுகின்றன. ஒரு காட்சியில், ஒப்புரவு அருளடையாளத் தொட்டியிலிருந்து திடீரென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் வியான்னி, அங்கு வரிசையில் காத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவரிடம், “கவலைப்படாதே. உன் கணவர் மீட்கப்பட்டு விட்டார் என்பார். அப்பெண் அழுது, “அது எப்படி முடியும்? அவர் தற்கொலை செய்து கொண்டு அல்லவா இறந்துபோனார்?” என்கிறாள்.

வியான்னி, “ஆம், தெரியும். ஆனால், பாலத்தின் தடுப்புச் சுவருக்கும் ஆற்று நீருக்கும் இடையில் உன் கணவர் தன் தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க  ஓர் அவகாசம் கிடைத்தது. கடவுளால் எல்லாம் முடியும். உன் கணவர் இப்போது துயருறு நிலையில் இருக்கிறார். அவருக்காக வேண்டிக்கொள் என்பார்.

படத்தில் நான் மிகவும் இரசித்தது, ஜான் மரிய வியான்னியை ஏதோ அருங்காட்சிப் பொருள் போலக் காட்டாமல், ஓர் அசல் பங்கு அருள்பணியாளராகக் காட்டியுள்ள விதம். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் ஒரு பங்குப் பணியாளரின் ஆர்வங்கள், ஆசைகள், சவால்கள், சந்தோஷங்கள் ஒன்றும் பெரிதாக மாறவில்லை என்பது வியப்பாக உள்ளது. பங்குப் பொறுப்பெடுத்த உடனேயே முதல் வேளையாக, கோவிலைப் பழுதுபார்க்க வேண்டும் என்று நன்கொடை கேட்க வியான்னி கிளம்புகிறார். ஊரில் பெரிய ஆதரவு இல்லை என்பதால், அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் லியோன் நகருக்கு நடந்துபோய், அங்குத் தனக்குத் தெரிந்த ஒரு பணக்காரக் குடும்பத்திடம் உதவி கேட்கிறார். கோவில் கட்டுவது, கெபி கட்டுவது என்று ஏதாவது ஒன்றை ஆரம்பித்து விட்டு, நன்கொடை இரசீது புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு, ஊர் ஊராக அலைந்து, வேலை பார்க்கும் இன்றைய பங்கு அருள்பணியாளர்கள் வியான்னியோடு எளிதில் பொருந்திப்போகிறார்கள்.

ஒரு வேலையை முடித்த பிற்பாடு, உடனேயே அடுத்த வேலையை ஆரம்பிக்கிறார். ஒவ்வொன்றிற்கும் நிதிதிரட்ட அலைகிறார். மறைக்கல்வி வகுப்புகள், பக்தி இயக்கம் ஆரம்பிக்கிறார். மறைக்கல்வி வகுப்புகள் நடத்த அவர் எடுத்தடைரி குறிப்புகள் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இப்போது போலவே அப்போதும் ஆண்கள் கோவிலுக்கு வருவது குறைவாக இருந்திருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள்!

காசு இருக்கிறதா? நடத்த முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்காமல் பள்ளிக்கூடம் தொடங்குகிறார். ஞாயிறு மறையுரையைச் சனிக்கிழமையே முழுவதும் எழுதி, மனப்பாடம் செய்தும்கூட, அடுத்த நாள் மறையுரை வைக்கும்போது, திடீரெனப் பாதியில் எல்லாம் மறந்து விட, முடிக்காமலேயே இறங்கி வருகிறார் (எனக்குப் பலமுறை இது  நடந்துள்ளது).

விழாக்கள், குறிப்பாக ஊர்வலங்கள் நடத்துவது அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்துள்ளது. எந்தப் பங்கு அருள்பணியாளருக்கு அவை பிடிக்காது? ஆர்ஸ் பங்கில் முதலில் கார்ப்பஸ் கிறிஸ்டி திரு விழாவை நடத்தியது வியான்னிதான். அவரால்தொழில் பாதிக்கப்பட்ட மதுக்கடை உரிமையாளர்கள் கூட்டம் போட்டு, அவரைப் பங்கிலிருந்து வெளியேறச் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். பொறாமையால் தூண்டப்பட்ட அருகாமைப் பங்கு அருள்பணியாளர்கள், வியான்னிக்கு எதிராக ஆயருக்கு எழுதும் ஒரு கடிதம் எப்படியோ வியான்னியிடமே கிடைத்துவிட, வியான்னியும் அதில் கையெழுத்திடுகிறார். “இதுதான் சரியான முடிவு. நான் பங்கில் இருக்கத் தகுதியற்றவன். ஆயர் என்னை ஏதாவது ஒரு தியான இல்லத்திற்கு அனுப்பினால், நான் அங்கு போய், என் ஆன்மாவிற்காக இறைவேண்டல் செய்த வண்ணம் இறந்து போவேன் என்கிறார்.

பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலராக இருந்த வியான்னியை, 2009-ஆம் ஆண்டு எல்லா அருள்பணியாளர்களுக்கும் பாதுகாவலராகத் திருத்தந்தை பெனடிக்ட் அறிவித்தார். அதைத் திரு அவை செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

பங்கு அருள்பணியாளர்களுக்கு என்று ஒரு தனித்த அடையாளம் இருக்கிறது. புனித ஜான் மரிய வியான்னி அதன் மிகச்சிறந்த முன்மாதிரி!

news
ஆன்மிகம்
விதைகள் அழிவதில்லை; விருட்சமாகிறது!

கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடியாவிட்டால் அது எந்தப் பலனும் தராது. மனிதன் வாழ்வும் தனது இலக்கை அடைய சில நேரங்களில் விழ வேண்டும், மடிய வேண்டும். ஆனால், நிரந்தரமாக மடிந்து விடுவதில்லை. கிறிஸ்து மடிந்தார்; ஆனால், உயிர்த்தெழுந்தார். காரணம், அவர் தமக்காக வாழவில்லை; தம் மக்களுக்காக வாழ்ந்தார்.

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றிஎன்ற மாணிக்கவாசகரின் வரிகள் மீண்டும் உயிர் பெறுகின்றன சில தலைவர்களால்! சில நேரம் மனிதநேயம் மறைந்து, மதநேயம் இரக்கமற்று, நீதியற்று, இதயத்தில் சற்றும் ஈரமில்லாமல் ஒருசாரார் நாற்காலியைத் தக்கவைக்க நீதியைப் பொய்மையாகவும், பொய்மையை மெய்மையாகவும் வார்த்தைகளால் அசைபோடும் சில தலைவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்து இறந்தார்; ஆனால், உயிர்பெற்றார்! கிறித்தவமும் இறப்பதாய் நம் கண்களுக்குப் புலப்படும்; ஆனால், கிறித்தவர்களின் இறப்பு, மறைப்பணியாளர்களின் இரத்தம் சிந்துதல் காலத்தின் களைகளை அகற்றி கதிரவனாய் ஒளி கொடுக்கிறது. இதைத்தான் திரு அவையின் தந்தையர்களில் ஒருவரான தெர்த்தூலியன்,  “மறைச்சாட்சிகளின் இரத்தம், திரு அவையின் வித்து - விதைஎன்பார்.

ஏதென்ஸ் நகரத்தில் தொற்றுநோய் பலவீனப்படுத்தியதுபோல் என் பக்கத்து நகரத்தையும், இல்லை என் பக்கத்துத் தோட்டத்தை மதநோய் மனிதநேயமற்று பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும். போர் என்பது மனிதநேயத்தின், மனிதகுலத்தின் தோல்விஎன்றார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். ஆனால், நாடுகளுக்கு இடையே என்பதைவிட, மனிதநேயத்தை விடுத்து மதநேயத்தைத் திணித்து நாட்டிற்குள் உள்ளேயே மனித சித்திரவதை நடைபெறுவது இதயம் கிழிந்து, குருதி பெருக்கெடுத்து, வலியின் உச்சத்தில் மனிதர்கள் இறந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இம்மாதத்திற்கான இறைவேண்டல் கருத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்: “இன, அரசியல், மத கருத்தியல் காரணங்களால் ஏற்படும் உள் மோதல்களைத் தவிர்க்க இறைவேண்டல் செய்யவேண்டும். மோதலுக்குப் பதிலாக உரையாடல், இரக்கம் மற்றும் உடன்பிறந்த உறவைப் பின்பற்ற வேண்டும். உண்மையான அமைதி என்பது நமது இதயத்தில் தொடங்குகிறது. மேலும், நீதியை மேம்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும், ஒன்றிப்பை வளர்ப்பதிலும் அனைவரும் இணைய வேண்டும்.”

ஏதோ எங்கோ என்பது மாறி, இப்போது இங்கே என்ற பதற்றம் நம்மிடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பயணம் என்பது தன்னைச் சார்ந்து பயணிப்பது அல்ல; மாறாக, பிறருக்காகப் பிறரோடு பின்னிப் பிணைந்து பிறரைச் சந்திப்பதற்காகவும், பொதுவான இலக்கை அடைவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளோம் என்று இளைஞர்களுக்கான செய்தி மடலில்ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்என்ற திருப்பாடல் வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஒன்றித்துப் பயணிக்க அழைப்பு விடுக்கின்றார் திருத்தந்தை.

விதை அழிந்து முளைத்து மரமாக, கிளையாக ஒன்றித்து இருக்கும்பொழுது தான் அது விருட்சமடைந்து பலம் பெற்று வலுப்பெறுகிறது. சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதா? இல்லை இல்லை... நாம் சற்று பழைய குப்பைகளை அகற்றிவிட்டு, மீண்டும் புதிய குப்பைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதா? மனிதநேயம் என்கின்றபொழுது மரணத்தின் பிடியில் சிலர் தங்களை அர்ப்பணிப்பதும், சவால்களைச் சந்திப்பதும் கடந்து செல்லும் பாதையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், விதை ஒருபோதும் அழிந்துவிடுவதில்லை; மடிகிறது... மீண்டும் எழுகிறது, விருட்சமாகிறது. மதத்தைப் பார்க்காதே. மனிதம் பிறக்கட்டும், மனிதநேயம் வளரட்டும்!

news
ஆன்மிகம்
திரு அவையும் திருத்தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும்

திருத்தலங்கள் பற்றிய திரு அவை ஆவணங்களில் காணப்படும் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்

1. ஓர் ஆலயம் அல்லது ஒரு சிற்றாலயம்திருத்தலம்என்று அழைக்கப்படுவதற்குத் தலத் திரு அவையினுடைய மேலதிகாரியின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.

2. மறைமாவட்டதில் உள்ள ஒவ்வொரு திருத்தலத்திற்கும் மறைமாவட்ட ஆயரால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் (statues) இருக்க வேண்டும். அதில் அத்திருத்தலத்தின் நோக்கம், அதிபரின் அதிகாரம், சொத்துகளின் உடைமையுரிமை மற்றும் நிர்வாகம் போன்றவை வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும்.

3. ஒரு திருத்தலம் தேசியத் திருத்தலம் (National shrine) என்று அழைக்கப்படுவதற்கு அந் நாட்டு ஆயர் பேரவையின் அங்கீகாரமும், சர்வதேசத் திருத்தலம் (International shrine) என்று அழைக்கப்படுவதற்கு உரோமைத் திரு ஆட்சிப் பீடத்தின் அங்கீகாரமும் தேவை.

4. திருத்தலங்களில் தரமான, எளிமையான திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். திருத்தப்பட்ட  திருவழிபாட்டு நூலில் (General Instruction of the roman mission, 2000) உள்ள விதிமுறைகளின்படி திருவழிபாடு நடத்தப்படவேண்டும்.

5. திருத்தலங்களில் ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மனத்துயர் வழிபாடு நடத்தி, திருப்பயணிகளைத் தகுந்தமுறையில் தயாரித்து, ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கப் போதுமான இடத்துடன் கூடிய ஒப்புரவுச் சிற்றாலயம் இருப்பது விரும்பத்தக்கது. திருப்பயணிகளின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு மொழிகளைத் தெரிந்த ஒப்புரவுத் திருப்பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

6. நோயாளிகள் பலர் திருத்தலங்களை நாடி வருவதால், அவர்களைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, திருச்சடங்கு நூல் விதிமுறைகளின்படி திருப்பலியில் நோயில் பூசுதல் அருளடையாளத்தை வழங்கலாம்.

7. திருத்தலங்களில் நடைபெறும் திருப்பயணிகளின் வழிபாட்டு நிகழ்வுகளில் திருப்புகழ்மாலை (Liturgy of the hours) குறிப்பாக, காலைத் திருப்புகழ் (Lauds) மற்றும் மாலைத் திருப்புகழ் (vespers) கொண்டாட்டத்திற்குத் திருத்தல அதிபர் ஏற்பாடு செய்யவேண்டும்.

8. இறைவார்த்தையை அறிவிக்கும் வாய்ப்பைத் திருத்தலங்கள் விவேகத்துடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மலைப்பொழிவின் போதனைகள், இறைவனின் எல்லையற்ற அன்பு மற்றும் பராமரிப்பு, அன்புக் கட்டளை, மீட்பளிக்கும் சிலுவையின் அருள், மனமாற்றத்திற்கான அழைப்பு, திருவிவிலிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும் சீடத்துவம் போன்ற தூதுரைகள் இந்த அறிவிப்பில் இடம்பெற வேண்டும்.

9. திருத்தலங்களின் பிறரன்புப் பணிகள் கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துவதால், அங்கு வருகை தரும் ஏழைகள், எளியோர், முதியோர், நோயாளிகள், விளிம்பு நிலையினர் போன்றோருக்கு உரிய விருந்தோம்பலும் கவனிப்பும் அளிக்கப்படவேண்டும்.

10. திருத்தலங்களில் குறிப்பாக, மரியன்னைக்கு உரியவற்றில் கிறித்தவ ஒன்றிப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும், பிரிந்திருக்கும் திரு அவைகளின் கிறித்தவர்களை ஒருங்கிணைத்து, கிறித்தவ ஒன்றிப்பு வாரம் மற்றும் உயிர்ப்பு, தூய ஆவியாரின் விழாக்களின்பொழுது சேர்ந்து செபிப்பது விரும்பத்தக்கது.

இறுதியாக, சட்ட முறையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு திருத்தலம், திருப்பயணிகளின் அருள்பணிகளுக்கு இடையூறு இல்லாமல், விதிவிலக்காக, பங்கு ஆலயமாகவோ அல்லது அதன் கிளைக் கோயிலாகவோ செயல்படலாம். ஆனால், ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு பங்கு ஆலயத்தையோ, அதன் கிளைக்கோவிலையோ அல்லது ஒரு சிற்றாலயத்தையோதிருத்தலம்என்று தன்னிச்சையாக அறிவித்து விளம்பரம் செய்வது திரு அவைச் சட்டங்களுக்கு முரணானது மட்டுமல்லாமல், மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதும் ஆகும்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
புயலும் போதனையும் - சதுக்கத்தின் சப்தம் – 5

அமைதி திடீரெனக் குழப்பமாக மாறும் சில தருணங்களில் வாழ்க்கை நிச்சயமற்றது, நிம்மதியற்றது என்பது பலமுறை கூறப்படும் ஓர் உண்மைதான். அது ஓர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது நிகழலாம். எதிர்பாராத விதத்தில் மற்றொரு வாகனம் நம் பாதையில் நுழையலாம் அல்லது நாம் மகிழ்ச்சியுடன் வேலையில் இருக்கும்போது திடீரெனத் தீக்கூடல் அலைமோதல் ஏற்பட்டு, அனைவரும் பதற்றத்துடன் எழுந்து, அவசரநிலை என்னவென்று கலக்கம் அடையலாம்.

உண்மையாகவே வாழ்க்கை மிக நிச்சயமற்றது! மேலும், அமைதி குழப்பமாக மாறும்போது அது மிகவும் உணரப்படுகிறது என்ற கருத்தியலை மத்தேயு 8:23-27 பகுதியை மையமாகக் கொண்டு நம் திருத்தந்தை 14-ஆம் லியோ தனது புதன் மறைக் கல்வி உரையில் எடுத்துரைத்துள்ளார்.

வாழ்க்கையின் புயல்களுக்குத் தயாராகுங்கள்!

ஒரு மாலைப்பொழுதில் ஒரு குடும்பம் செபத்திற்குப் பிறகு ஒன்றாக இரவு உணவை அனுபவித்துக்கொண்டிருந்தது. தந்தை தனது குழந்தைப்பருவத்தின் வேடிக்கையான கதைகளைப் பகிர்ந்து கொண்டார். தாயும் குழந்தைகளும் தந்தையின் வேடிக்கையான மற்றும் வீரக் கதையை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அது ஒரு சாதாரண, அமைதியான மாலை நேரம். திடீரென்று தொலைப்பேசி ஒலித்தது. தந்தை பதிலளித்தார். அவரது புன்னகை மறைந்தது. அவர் அமைதியான பயத்துடனும் சோகத்துடனும் தனது மனைவியைப் பார்த்தார். மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அவரது சகோதரர் ஒரு விபத்தில் சிக்கினார். அந்தச் செய்தி எல்லாவற்றையும் மாற்றியது. சிரிப்பு மறைந்துவிட்டது, உணவு தொடப்படவில்லை. சாதாரண மாலைப்பொழுதாக இருந்த ஒன்று கண்ணீர் மற்றும் கேள்விகளின் இரவாக மாறியது.

எந்த எச்சரிக்கையும் இல்லாமல் புயல்கள் நம் வாழ்வில் இப்படித்தான் வருகின்றன. தயாராக நேரமில்லை; சிந்திக்க நேரமில்லை. இதைத்தான் நற்செய்தி நமக்குக் கூறுகிறது. கடலில் ஒரு பெரிய புயல் எழுந்தது. அது திடீரென ஏற்பட்ட புயலாக இருந்திருக்கும்; சீடர்கள் இயேசுவுடன் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அடுத்த கணம் அலைகள் படகில் மோதின. அவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்தார்கள். புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சீடர்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுடன் இருந்தார்கள்; அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்; எனினும், புயல் வந்தது. இந்த நற்செய்தி கலிலேயா கடலை மட்டும் பற்றியது அல்ல; இது நமது வீடுகள், நமது குடும்பங்கள், நமது குழந்தைகள், நமது ஆரோக்கியம், நமது அமைதி பற்றியது. ஒரு தொலைப்பேசி அழைப்பு, ஒரு மருத்துவ அறிக்கை, ஓர் உடைந்த உறவு போன்ற அனைத்தும் மூழ்கி வருவதுபோல் உணர்கிறது.

எங்கே நமது நம்பிக்கை?

இயேசு படகில் இருந்தார். அவர் தூங்குவதுபோல் தோன்றினாலும், அவர் அங்கே இருந்தார். அவரது மௌனம் அவர் இல்லாதது அல்ல; சீடர்கள், “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றுங்கள்என்று கூக்குரலிட்டபோது, அவர் எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். மிகுந்த அமைதி நிலவியது. பழைய ஏற்பாடு இதுபோன்ற ஒரு காட்சியை நமக்குத் தருகிறது. இஸ்ரயேலர்கள் திடீரென்று செங்கடலுக்கும் பார்வோனின் படைக்கும் இடையில் சிக்கிக்கொண்டனர். படை வருவதை அவர்கள் பார்க்கவில்லை. ஆனால், கடவுள் ஒரு பாதையைத் திறந்தார். அங்கு யாரும் இல்லை. அவர்கள் புரிந்துகொண்டதால் அல்ல; மாறாக, அவர்கள் நம்பியதால்!

புனித எலிசபெத் ஆன் செட்டனும் திடீர் புயல் ஒன்றைச் சந்தித்தார். அவரது கணவர் மிகவும் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டார், அவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். வறுமை, தாழ்வு, நிராகரிப்பு, வலி இருந்தபோதிலும், அவர் இயேசுவைப் பற்றிக்கொண்டார். அவர் ஒருமுறை, “துன்பங்கள் சொர்க்கத்திற்குப் படிக்கட்டுகள்என்று கூறினார்.

புயல்களை நம்மால் தடுக்க முடியாமல் போகலாம். ஆனால், நம் இதயங்களை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். புயலுக்கு முன்பும், புயலின்போதும், புயலுக்குப் பின்னரும் ஒன்றாகச் செபிக்கும் குடும்பம்தான், பெரும் புயலிலிருந்து தப்பிப் பிழைக்கும் குடும்பம். எல்லாம் திடீரென்று மாறினாலும், உங்கள் படகில் யார் இருக்கிறார்கள்? என்பதை மறந்துவிடாதீர்கள்.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் (யோசு 1:9) என்கிற இறைவார்த்தை நம்முடைய உள்ளமும் உலகமும் கடும்புயலால் சுழன்று கொண்டிருக்கும்போது, நம்மை மூழ்கச் செய்யக்கூடிய சூழ்நிலையில்கூடஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்?” என்று கேட்கத் தூண்டுகிறது. இருள்மிக்க சோதனைகள், நம்பிக்கையைப் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் அல்லது நம்முடைய நம்பிக்கைக்கே ஆபத்தான நெருக்கடிகளாக அவை இருக்கலாம். அதேபோல், பரிமாற்றங்களின் காற்று, புயலான சூறாவளியாகக் கத்திக்கொண்டே திரு அவையின் நாவாயைச் சுழற்றி வீசக்கூடும். ஆனால், இது நாம் புது ஒளியுடன் புத்துருவாக்கப்பட்ட திரு அவைக்குள் நுழையும் முன் கடந்து செல்ல வேண்டிய புயலான பயணம் மட்டுமே.

ஆண்டவர் அங்கே இருக்கிறார், நாம் பயப்படத் தேவையில்லை!

எந்தவொரு காரணமாக இருந்தாலும் சரி, நம் வாழ்க்கை கடவுளை நோக்கித் திசைதிருப்பப்பட வேண்டியது அவசியம். இல்லையென்றால், நாமும் எளிதில் கவனச்சிதறலுக்கு உள்ளாகி, நம்முடைய இலக்கையும் திசையையும் இழந்துவிடுவோம். முக்கியமாக, வாழ்க்கையின் புயல்களில் நாம் இயேசுவை நோக்கிக் கண்களைக் குவித்து, அவரை நோக்கியே பயணிக்க வேண்டும். நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து, உவர்நீரில் மூழ்கிடச் செய்யாமல் காக்கக்கூடியவர் இயேசு மட்டுமே. நம்மை அவரிடம் அருகில் வரச்செய்ய தொடர்ந்து அழைக்கும் கடவுளின் குரலுக்குப் பதிலளிப்பதில் நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்கின்றோம்?

இயேசுவின் சீடர்கள் புயலின் நடுவே ஒரு தேர்வில் இருந்தார்கள்!

அவர்கள் படகில் இருந்துகொண்டு ஆண்டவரை நம்புவார்களா? அல்லது படகை விட்டுத் தப்பிக்க முயற்சிப்பார்களா? அவர்கள் பயத்தில் இருந்தும் நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் படகை விட்டு வெளியேறியிருந்தால், அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டு நீரில் மூழ்கியிருக்க வாய்ப்பு அதிகம். அந்தப் படகும், அதிலுள்ள சீடர்களும் ஓர் ஆழமான அடையாளத்தையும் கொண்டுள்ளன. படகு என்பது திரு அவையைக் குறிக்கிறது. அதிலுள்ள சீடர்கள் நம்மைக் (புனித மக்களை) குறிக்கின்றனர். அந்தப் படகில் இயேசு அவர்களுடன் இருந்தார்... புயலின் நடுவிலும்கூட. நாம் இயேசுவைப்போலவே நம்பிக்கையுடன் நிற்க முடிகிறதா? நம் வாழ்க்கையில் நம்மை மீட்ட ஆண்டவர், சீடர்களுக்காகப் புயலை எப்படி அமைதிப்படுத்தினார் என்பதைப் பார்த்தபோது, நாம் ஓர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவுடன் நாம் அனைத்தையும் வெல்ல முடியும்; நாம் செய்ய முடியாததை அவர் செய்கிறார். ஆண்டவர் நம்மை நம்பிக்கையின் பாதையில் வலிமையடையச் செய்கிறார். எந்தவோர் இடையூறும் துன்பங்களும் வந்தாலும், நாம் இடைவிடாமல் பயணிக்கச் செய்கிறார். நம் வாழ்வின் வழியில் நாம் கடவுளைப் போற்றும் தூய்மையான வாழ்க்கையை நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

வாழ்க்கையின் குழப்பமான தருணங்களில்தான் சீடர்கள் இயேசுவை ஆழமாக அறியத் தொடங்கினார்கள். அவ்வாறே, நாமும் குழப்பத்திலும் துன்பத்திலும் ஆபத்தான நிலைகளிலும் கடவுளைச் சந்திப்போம். அதுவே அவருடன் ஆழமான அனுபவம் பெறும் தருணமாக அமையும்.

மரண பயத்தைத் தவிர, மற்ற எந்தப் பயத்தையும்விட வலிமையானது எது?

அன்பில் பயமில்லை முழுமையான அன்பு பயத்தைத் துரத்தும் (1யோவா 4:18); “அன்பு மரணத்தைவிட அதிகமான வலிமையானது (இபா  8:6). இயேசுவின்மீது கொள்ளும் தன்னிகரற்ற அன்பே நமது எல்லாவித பயத்தையும் போக்கவல்ல வலிமையான ஆயுதம்!

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக! – 03

நம்பிக்கை ஒளி நம்மில் சுடர்விடும்பொழுது பேரன்பு அனுபவம் மேலோங்கும். அப்பொழுது ஆற்றல்மிக்க செயல்கள் நன்மைகள் என ஒளிரும். நாமும் அன்பின் நற்செய்தியை முழக்கமிட ஆற்றல் பெறுகிறோம். நற்செய்தியின் சுருக்கம் பின்வரும் இயேசுவின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது: “தம் ஒரே மகனில் நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வைப் பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16). திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம் இந்த நற்செய்தியை நம் வார்த்தையாலும் வாழ்வாலும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்தப் பொறுப்பினை நிறைவேற்ற அருள் அளிக்கும் இறைவன் உடனிருந்து செயலாற்றுகிறார். உலகிற்கு ஒளியாகத் திகழ அருள் வழங்குகின்றார்.

புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோலகடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார் (பிலி 2:13). “உமது முகத்தின் ஒளி என்மீது வீசச் செய்யும் ஆண்டவரேஎன்று செபித்து ஆற்றல் பெறுவோம். நான் இறைவனின் பிள்ளை, இறையாட்சிப் பணியாளர் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் பொழுது இறைநம்பிக்கை நம்மில் நங்கூரமாக நிலைக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்நாமெல்லாம் உடன்பிறப்புகள்என்று உரக்க உரைத்தார். இன்றைய நம் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களும்திரு அவை உலகளாவிய குடும்பம்என்று வலியுறுத்துகின்றார். நாமும் நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்து (எபி 12:2), ஒளியின் செயல்களை ஆற்றி உலகில் ஒளியாகும் பேறு பெற்றவராவோம்.

மே 23 - வெள்ளிக்கிழமை இடைக்காட்டூர் இயேசுவின் திரு இருதய திருத்தலத்திற்குச் சென்றிருந்தேன். திருப்பலி முடிந்த பின்பு ஆலயத்திலிருந்து வெளியில் வந்தேன். ஒரு தாய் தன் மகனுடன் உணவுப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்தார். அங்கு சென்று இரண்டு வடைகள் வாங்கினேன். ரூபாய் எடுத்துக்கொடுக்க முயன்றபொழுது பணம் அறையிலேயே வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தேன். அந்த வடைகளைத் திரும்பக் கொடுத்து, ‘பின்பு வாங்கிக் கொள்கிறேன்என்று கூறிவிட்டு கெபியில் அமர்ந்து செபித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தாய் தன் மகனிடம் வடைகளைப் பொட்டலமாகக் கொடுத்து அனுப்பினார்கள். எவ்வளவோ மறுத்தும், கட்டாயமாகக் கொடுத்துவிட்டார்கள். செபம் முடிந்தபின் அறைக்குச் சென்று ரூபாய் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டார்கள். ‘ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராகஎன்று கூறிவிட்டுத் தொடர்ந்து செபித்தேன். “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்...... மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:35,40) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய இந்த எளிய சகோதரியை நன்றியோடு நினைத்து, ஆண்டவரிடம் ஒப்படைத்துச் செபித்தேன்.

வலிமையற்ற என் கால்களைக் கொண்டு பேருந்தில் பயணம் செய்வது கடினமாக இருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து காரில் வந்த என் உறவினர் என்னைச் சந்தித்தார்கள். எனது நிலை அறிந்து, மதுரைக்கு வருவது தேவையில்லை என்றாலும் கூட, எனக்கு உதவும்படி மதுரை வந்து என் இல்லத்தில் விட்டுச் சென்றார்கள். இவற்றையெல்லாம் நினைக்கும்பொழுது திபா 37:5 வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.”

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும் என்பது வாழ்வின் பேருண்மை. நம்பிக்கைக்குரிய இயேசுவிடம் சரணடைவோம். அவரது அன்பின் சாட்சிகளாவோம், இறையாட்சி மலரச் செய்வோம்.

news
ஆன்மிகம்
திருமுழுக்கு வழங்கும் உறவுகள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 21)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

மார்த்தா: “தந்தையே, மனம் இயல்பாகவே புறம்நோக்கி இயங்கக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய புறம்நோக்கிய மனம் பொருளைச் சேகரிப்பதிலும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதிலும்தான் அதிக அக்கறை காட்டுகிறதேயொழிய, உறவுகளைப் பற்றியோ, பிறர்நலத்தைப் பேணுவது குறித்தோ அதிகம் அக்கறை காட்டுவதில்லை. திருமுழுக்கு அருளடையாளத்தின் நோக்கம் புறம்நோக்கிய மனத்தை அகம்நோக்கித் திருப்பி, உறவை நோக்கித் திருப்புவதாகும். இது குறித்து நாம் கடந்த சில கட்டுரைகளில் விவாதித்தோம்.”

அருள்பணி: “தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் மகிழ்வைத் தேடுவதற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமையும் கடமையும் உண்டு என்றாலும், பொருளை நோக்கி நகர்ந்துதான் அவற்றை அடையமுடியும் என்று மனம் நினைப்பது தவறான ஒன்று. இது நாம் ஏற்கெனவே சிந்தித்த மனத்தின் தன்மையாகிய மாயையோடு தொடர்புடையது. மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களது மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் உறவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.”

அன்புச் செல்வன்: “இன்று வெளிவரும் பல்வேறுவிதமான சமூகவியல் ஆய்வுகளின்படி, ஒரு மனிதரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தின் பங்கு 20 விழுக்காடு மட்டுமே! உறவுதான் 80 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உறவு தன்னோடு உறவு, பிறரோடு உறவு, இயற்கையோடு உறவு, கடவுளோடு உறவு என்று நான்கு நிலைகளில் பரிணமிக்கவேண்டும். எந்த ஒரு மனிதர் இந்த நான்கு வகையான உறவுகளில் ஒரு சேர வளர்கிறாரோ, அம்மனிதர் உண்மையான பாதுகாப்பு உணர்வை அனுபவிப்பதோடு, நிலையான மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்.”

அருள்பணி: “இத்தகைய உறவை நோக்கி ஒரு மனிதர் நகர்வதற்கு உதவி செய்யும் பொருட்டு கொடுக்கப்படும் அருளடையாளமே திருமுழுக்கு! திருமுழுக்கு நிகழ்வின்போது கேட்கப்படுகின்ற ‘சாத்தானையும் அவனது செயல்பாடுகளையும் விட்டு விடுகிறீர்களா?’ என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிவினையின் பிதாமகன் சாத்தான். எனவே, சாத்தானை விட்டுவிடுவது என்பது உறவிற்கு எதிரான பிரிவினை எண்ணங்களை விட்டு விடுவதாகும். அதேபோல ‘கடவுளை நம்புகிறாயா?’ என்கின்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது. கடவுளை நம்புவது என்பது உறவை நோக்கித் திரும்புவதாகும். கடவுள் என்றாலே உறவு மற்றும் அன்பின் இருப்பிடம்தானே!”

கிறிஸ்டினா: “திருமுழுக்கு அருளடையாளம் நமக்கு எத்தகைய உறவுகளைப் பெற்றுத்தருகிறது என்பது குறித்துக் கூறுங்கள் தந்தையே!”

அருள்பணி: “புனித பிரான்சிஸ் சலேசியார் (St. Francis de Sales) திருமுழுக்கு வாங்கிய குழந்தையைப் பார்த்து இவ்வாறு கூறுவாராம்: ‘என் மகனே, நீ வானதூதரின் தோழன்; இயேசுவின் சகோதரன்; தூய ஆவியின் கோவில்; கத்தோலிக்கத் திரு அவையின் அங்கம்; இறைவனின் பிள்ளை.’ திருமுழுக்கு அருளடையாளம் பெற்றுத்தரும் அற்புதமான உறவு கொடைகள் இவை. புனித சலேசியாரின் இக்கூற்றை நாம் கூர்ந்து நோக்கினோம் என்றால், திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாக மண்ணக உறவுகளை மட்டுமல்ல, விண்ணக உறவுகளையும் நாம் பெற்றுக் கொள்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரியவரும்.”

மார்த்தா: “தந்தையே, ஒவ்வோர் உறவாக எடுத்து விளக்குங்களேன்!”

அருள்பணி: “முதலாவதாக, திருமுழுக்கின் வழியாக நாம் வானதூதர்களின் தோழர்களாக மாற்றப்படுகின்றோம். வானதூதர்கள் என்பவர்கள் கடவுளின் பணியாளர்கள்; கடவுளின் பாதுகாப்பையும், வழிநடத்துதலையும் ஒவ்வொரு மனிதருக்கும் எடுத்துச் செல்லக்கூடிய பணியைச் செய்பவர்கள். திருமுழுக்குப் பெறும் ஒவ்வொரு குழந்தையும், வானதூதர்களைப் பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் பெறுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தோபித்து. தோபித்து மகன் தோபியா நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டபோது அவனுக்குத் துணையாகச் சென்றவர் இரபேல் என்ற வானதூதர்.”

மார்த்தா: “தந்தையே, வானதூதர்கள் மூன்று விதமான பணிகளைச் செய்வது குறித்து திருவிவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அ) பாதுகாக்கும் பணி: ‘நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார் (திபா 91:11); ‘என் தூதர் உங்களோடு இருக்கிறார்; அவரே உங்கள் வாழ்வைப் பாதுகாப்பார் (பாரூக் 6:6). ஆ) பரிந்து பேசும் பணி: ‘இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள், இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (மத் 18:10). இவ்வசனம் நம் வானதூதர்கள் இறைப் பிரசன்னத்திலிருந்து நமக்காகப் பரிந்து பேசுவதை எடுத்துரைக்கிறது. இ) வழிநடத்தும் பணி: மரியா, யோசேப்பு, ஞானியர் ஆகியோருக்கு வானதூதர்கள் கடவுளின் செய்தியைக் கொண்டு வந்து, அவர்களை வானதூதர்கள் வழிநடத்தியது நாம் அறிந்ததே!”

அகஸ்டின்: “அன்று மட்டுமல்ல, இன்றும் வானதூதர்கள் நம் தோழர்களாக இருந்து நம்மை வழிநடத்துகின்றனர் என்ற செய்தியை அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘Angels in my Air’ என்பதாகும். இதை எழுதியவர் லோர்னா பைரன் (Lorna Byrne) என்பவர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு விதவை இவர். இவர் எழுதிய இப்புத்தகம் வெளியிட்ட சில நாள்களிலேயே இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையானது. ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் புத்தகம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்: ‘நாம் வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் தனியே இருப்பதில்லை; ஒரு வானதூதர் நம்மோடு இருக்கிறார்.’ லோர்னா வானதூதர்களை தனது ஊனக்கண்களால் பார்ப்பதாகவும், மற்ற மனிதர்களுடன் பேசுவது போலவே அவர்களுடன் உரையாடுவதாகவும் கூறுகிறார். வானதூதர்கள் நம் மிகச்சிறந்த தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கின்றார். “

அருள்பணி: “திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் (இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் தொடங்கியவர்) ஒருமுறை புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மறைமாவட்ட ஆயருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆயர், ‘திருத்தந்தையே, என் பொறுப்பு மிகப் பெரியதாக இருக்கின்றது; என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றாராம். அதற்குத் திருத்தந்தை, ‘நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதே போன்றுதான் எனது பெரும்பொறுப்பை நினைத்துத் தூக்கமின்றித் துன்பப்பட்டேன். ஒருமுறை இவ்வாறு நான் தூக்கமின்றிப் படுக்கையில் புரண்டபோது வானதூதர் என்னிடம், ‘யோவானே, நீ திரு அவையை நடத்துவதாக நினைத்துக்கொள்ளாதே! உன்னைப் பற்றி பெரிய அளவில் எண்ணிக் கொள்ளாதே. திரு அவையை வழிநடத்துவது தூய ஆவியார் என்பதை மறந்துவிடாதே என்றார். அன்று முதல் நான் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தேன் என்றாராம். இன்றும் வானதூதர்களின் செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஓர் உதாரணம். நம் ஒவ்வொருவருக்குமே வான தூதர்களின் தோழமை கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அவர்களது குரலுக்குச் செவி கொடுக்கின்றோமா என்பதுதான் நமக்கு முன்னால் உள்ள கேள்வி!”

கிறிஸ்டினா: “திருமுழுக்கு நம்மை இயேசுவின் சகோதரர்களாக்குகிறது என்று சொன்னீர்கள் தந்தையே! அதை விளக்க முடியுமா?”

அருள்பணி:  “இயேசு கடவுளின் மகன் என்ற முறையிலும், நாமும் கடவுளின் மகன் / மகள் என்ற முறையிலும் இயேசுவின் சகோதரர்களாக திருமுழுக்கின் வழியாக மாற்றப்படுகின்றோம். ‘தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர்-சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை (எபி 2: 11) என்று எபிரேய நூலாசிரியர் கூறுவது நினைவுகூரத்தக்கது. மேலும் இயேசு, ‘என் தந்தையும், உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் (யோவா 20:17) என்று கூறியது நினைவுகூரத்தக்கது. அதுபோல, இறைவனின் திருவுளப்படி அவர் செயல்பட்டதுபோல் யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்கள் எல்லாருமே அவரது சகோதர-சகோதரிகள் என்பதை இயேசுவே சுட்டிக்காட்டியிருக்கிறார் (மத் 12:50). இத்தகைய சகோதர பாசத்தின் பொருட்டே இயேசு நம்மை மீட்பதற்காகச் சிலுவையில் அறையுண்டார். சகோதர அன்பிற்காக அவர் கொடுத்த மாபெரும் விலை அது!”

மார்த்தா: “தந்தையே! சில கத்தோலிக்கக் கிறித்தவர்கள் பெந்தகோஸ்து கிறித்தவர்களால் தூண்டப்பட்டு ‘இயேசப்பா என்று கூறுகிறார்களே! இது சரிதானா?”

அருள்பணி: “அப்படியானால் இயேசு ‘தந்தை என்று அழைத்த தந்தையாகிய கடவுள் நமக்கெல்லாம் தாத்தாவா? உணர்வுப்பூர்வமாகச் சொல்லப்படும் இத்தகைய வார்த்தைகள் தவறான இறையியலை நமக்குத் தந்துவிடுகின்றன. இவற்றின் மட்டில் நாம் கவனமுடன் இருப்பது அவசியம்.”

(தொடரும்)