news
ஆன்மிகம்
புனித ஜான் மரிய வியான்னி இறைவன் மீது பேரார்வமும் இறைமக்கள் மீது கனிவிரக்கமும் கொண்ட மேய்ப்புப்பணியாளர்!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 4-ஆம் நாள் அருள்பணியாளர்களின் பாதுகாவலராம் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவைக் கொண்டாடுகின்றோம். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்ஸ் பங்குத்தளத்தில் பணியாற்றிய இவரின் இறைப்பணியின் செயல்பாடுகளும் துணிவான முடிவுகளும் இன்றும் பேசுபொருளாக, உந்துசக்தியாக அனைத்து அருள்பணியாளர்களுக்கும் அமைந்துள்ளன.

கிறிஸ்துவின்மீது அவரது பேரார்வமும் தொடர்முயற்சியும் முன்னெடுப்புகளும் அவரது மறைப்பணி சார்ந்த மக்கள்மீது கொண்டிருந்த கனிவிரக்கமும் செயல்பாடுகளும் உலகில் உள்ள அனைத்து அருள்பணியாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அவரது மேய்ப்புப்பணியின் நான்கு தூண்களாக அவரது செபவாழ்வும் பேரார்வமும் தவமுயற்சிகளும் விடாமுயற்சியும் அமைந்திட்டன.

செப வாழ்வு

இன்று செப வாழ்வு என்பது காலாவதியான ஒரு செயல்பாடாகவே கருதப்படுகின்றது. சமூக ஊடகங்களும் செல்லிடைப்பேசிகளும் நமது செப நேரங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நமது புனிதரின் வியப்புக்குரிய மறைப்பணிக்கு அவரது செப வாழ்வே அடித்தளமாக அமைந்திருந்தது. செப வாழ்வும் அதன் செயல்பாடுகளும் ஓர் அருள்பணியாளரின் குறைந்தபட்சக் கடமையாகும் (திரு அவைச் சட்டம் எண். 276). செப வாழ்வின் மூலம் இறைவனோடு ஓர் அருள்பணியாளர் இணைந்திருத்தால் மட்டுமே, ஒவ்வோர் இறைமக்களின் கண்ணீரையும் வேதனையையும் தமது திருப்பணியின் திருவுடைகளால் வெரோணிக்காவைப் போன்று அவர்களின் துன்பங்களைத் துடைக்க இயலும்.

செபம் என்பது தாழ்ச்சியின் வெளிப்பாடு. ஒவ்வோர் அருள்பணியாளரும் செபிக்கின்றபொழுது, தனது மேய்ப்புப்பணியில் மற்றவர்களின் செயல்களும் தனக்கு மிகவும் அவசியமானது என்பதை அவர் உணர்ந்துகொள்கின்றார். மேய்ப்புப்பணியில் ஈடுபடும் அனைத்து அருள்பணியாளர்களும், இறைமக்கள் தங்களுக்குச் செபிக்கின்ற செயல்களில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சர்வ அதிகாரமும் அடக்கி ஆள்கின்ற மனநிலையும் முற்றிலுமாகச் சரிந்துவிழும் இடம்தான் செப அனுபவச்சூழல்கள். செப அனுபவங்களில்தான் இறைவிருப்பத்தை நாம் அறிகின்றோம்; அதற்குக் கீழ்ப்படிகின்றோம். இறைதூண்டல்களை உய்த்துணர்கின்றோம். கூட்டொருங்கியக்கத் திரு அவையின் மேய்ப்புப்பணிகளின் செப சூழல்களில்தான் தூய ஆவியின் வழிகாட்டுதலைப் பெற்று, அனைவரின் கலந்தாலோசனைக்குப் பிறகு சரியான முடிவுகளை எடுக்க இயலும். எனவே, செப வாழ்வு மேய்ப்புப் பணியில் மிக முக்கிய அங்கம் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றார்.

செபம் என்பது ஒவ்வொரு துன்பச்சூழலிலும் அடைக்கலமாக, மகிழ்ச்சியின் அடித்தளமாக, தொடர் மகிழ்வின் ஊற்றாக, சோகமான வாழ்விலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளதுஎன புனித யோவான் குறிப்பிடுகின்றார். ஆகவே, அருள்பணியாளர்கள் தங்கள் மேய்ப்புப்பணியின் வழக்கமான கடமைகளை நிறைவேற்றுகின்றபொழுது, செப வாழ்விற்கென்று மிகுதியான நேரத்தை வழங்குவது இன்றியமையாதது.

பேரார்வமும் தவமுயற்சிகளும்

திரு அவையின் புனிதர்கள் அனைவரும் தங்களின் அணுகுமுறையிலும் வாழ்வின் செயல்பாடுகளிலும் மிக எளிமையானவர்களாகவே செயல்பட்டார்கள். எளிமையின் வழித்தடங்களே புனிதத்தை அடையும் பாதை என்பதை கற்றுத் தேர்ந்தனர். எளிமையான வாழ்வு முறையும் எண்ணங்களில், செயல்களில் தூய்மையும் தவ ஒடுக்கச் செயல்பாடுகளும் ஓர் அருள்பணியாளரைத் தூய வாழ்விற்கு இட்டுச்செல்லும். புனித ஜான் மரிய வியான்னி 41 ஆண்டுகள் (1818-1859) பிரான்சிஸ் நாட்டின் லியோன் நகருக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த சிறிய நகரமான ஆர்ஸில் தனது இறுதிமூச்சுவரை எளிய பணியாளராக இறைப்பணி ஆற்றினார். அவரது எளிமையை உலகப்புகழுக்கும் பெருமைக்கும் செல்வத்திற்கும் சிறிதும் வளைந்து கொடுக்காத மனவுறுதி கொண்டதாகவே இருந்தது.

இறைவன் மீதும், தனது அருள்பணியில் வெளிப்படுத்தப்பட்ட கடமையுணர்ச்சியும் பிளவுபடா உள்ள ஈடுபாடுமே வியான்னியை ஆர்ஸ் நகரின் பாதுகாவலராக உயர்த்தியது. மாலை நேரங்களில் சிறு குழந்தைகளுக்கு மறைக்கல்வி போதித்து, திருவிவிலியக் கதைகளைப் பகிர்ந்து நேரத்தைச் செலவிட்டார். அவர்களுடன் இயல்பாக, கரிசனையுடன் பழகினார். அருள்பணியாளர்களின் தொடர் உருவாக்கப் பயிற்சிக்கான, சர்வதேச மாநாட்டின் பங்கேற்பாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றிய பொழுது, “ஓர் அருள்பணியாளர் சிறு குழந்தைகளுடன் விளையாட இயலாதபொழுது அவர் மேய்ப்புப்பணியில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்தத் தவறுகின்றார்என்கிறார். முழுமையான மனித மாண்பை வெளிப்படுத்தி, குழந்தைகளுடன் இயல்பாக விளையாடக் கூடியவர்களாகவும், சமூகத்திலுள்ள முதியவர்களைப் பராமரித்து, ஆரோக்கியமான உறவுகளை வளர்த்து, மேய்ப்புப் பணியின் சவால்களை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்ற அருள்பணியாளர்கள் இன்றைக்குத் தேவைப்படுகின்றார்கள்.

புனித ஜான் மரிய வியான்னியைப் பல நேர மணி நேரம் ஒப்புரவு அருளடையாளம் மட்டுமே வழங்கி, ஆன்மாக்களைக் குணப்படுத்திய அருள்பணியாளராக, அவரது மேய்ப்புப்பணியை நாம் சுருக்கிவிட முடியாது. அவரது மேய்ப்புப்பணி ஆலய வளாகத்திற்குள் மட்டும் முடங்கிவிடவில்லை; மாறாக, அது தொலைநோக்குப் பார்வையுடன், விடாமுயற்சியுடன் இணைந்திருந்தது.

ஆர்ஸ் நகரின் திருமண வாழ்விற்கு எதிரான தவறான முறைகளால் பிறந்த பெண் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கவனியாமல் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களுக்குக் கல்வியும் சமத்துவ வாழ்வும் அரவணைப்பும் குடும்பங்களில் மறுக்கப்பட்டன. இப்பெண் குழந்தைகளுக்கென்று இல்லம் அமைத்து, கல்வி வழங்கி, அவர்களைச் சமூகத்தின் பொறுப்புமிக்க பெண்களாக உருவாக்கினார். அந்நகரத்தின் எதிர்காலத் தூண்களாக அவர்களை அதிகாரப்படுத்தினார்.

இத்தகைய சிறு துவக்கமே, சிறுமிகளின் உருவாக்கமே, அந்நகரின் எதிர்காலத்தை மாற்றும் என நம்பிச் செயல்பட்டார். அவரது சமூக அர்ப்பணிப்பு அத்துடன் நிற்கவில்லை. ஆர்ஸ் நகரத் தோட்டத்தின் உரிமையாளர்கள் ஏழைக் கூலியாள்களின் உழைப்பினை, ஏழ்மையினைத் தங்களுக்குச் சாதகமாக்கி, குறைந்த ஊதியம் வழங்குவதை எதிர்த்தார். நீதியான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட நில முதலாளிகளுக்கு எதிராகக் குரலெழுப்பி, ஏழைகளின் சார்பாகப் போராடி அவர்களின் உரிமையைப் பெற்றுத்தந்தார். ஏழைகளின் துன்பங்களை, துயரங்களை உணர்ந்த தனது ஆடுகளின் முடை அறிந்த ஆயனாக அவர் செயல்பட்டதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

விடாமுயற்சி

ஆர்ஸ் நகர மக்களுக்குச் செய்த புனித வியான்னியின் மேய்ப்புப்பணியினை அங்குள்ள இரவு விடுதிகளின் உரிமையாளர்கள் வரவேற்கவில்லை. தொடக்கச் சவால்களும் போராட்டங்களும் மக்களின் புறக்கணிப்பும் மேய்ப்புப்பணியில் தவிர்க்க இயலாதவை என வியான்னி உணர்ந்திருந்தார்.

சிறிய நகரமான ஆர்ஸின் மக்கள்தொகை ஏறக்குறைய 215 மட்டுமே. 65 குடும்பங்களை உள்ளடக்கிய மக்களை இறைப்பக்கம் திருப்ப புனிதர் பத்து ஆண்டுகள் விடாமுயற்சியுடன் உழைத்தார். அவர்களுடன் மிகப்பொறுமையுடன் உரையாடி, அவமானங்களை, இழிப்பேச்சுகளைச் சகித்துக்கொண்டு இறைஇரக்கத்தை அவர்கள் உணர அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

வேதனைகளும் விரக்தியும் அவரது மேய்ப்புப் பணியைச் சோர்வடையச் செய்தது. அப்பங்கினை விட்டு வெளியேறி, தனிமையில் செப ஆராதனையில் தனது வாழ்வினைக் கழித்திட அவர் விரும்பினார். ஆனால், இறைவனின் திட்டத்தைத் தனது தனிச்செபத்தில் உணர்ந்து 41 ஆண்டுகள் அங்குத் தொடர்ந்து பணியாற்றினார்.

வெறுமையாய் இருந்த ஆர்ஸ் நகரமும், அப் பங்கு ஆலயமும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் புனிதத்தளமாகவும் கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்று, எதிர்நோக்கின் நம்பிக்கையாளர்களாக ஆர்ஸ் நகர மக்களைப் புனிதரின் மேய்ப்புப்பணி மாற்றியது.

விடாமுயற்சியுடன் உழைப்பவர்களே, இறையரசின் கனியை மக்களுக்குப் பெற்றுத்தருவார்கள் என்பதற்கு இப்புனிதரின் வாழ்வைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க இயலுமோ?

news
ஆன்மிகம்
“எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் கூறுங்கள்!” - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 59-வது சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சிக்கல்கள் மிகுந்த இக்காலத்தில் நம்மோடுள்ள சகோதரர்-சகோதரிகளுடன் உடன் நடந்து உற்சாகப்படுத்தி, எதிர்நோக்கு அவர்கள் உள்ளங்களில் உருவாகச் செய்யும் ஒன்றாக நமது தொடர்பாடல் அமைய வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். உணர்ச்சிப்பூர்வமான, சினத்தைத் தூண்டியெழுப்பி, தற்பாதுகாப்பிற்கான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும் தொடர்பாடலை அல்ல; மாறாக, மனிதர்களிடையே நட்புறவையும் திறந்த உள்ளத்தையும் உருவாக்கும் தொடர்பாடலாக அது அமைய வேண்டுமென ஆசிக்கிறேன்.

நம்புவதற்குக் காரணங்கள் எதுவும் இல்லாதது போலத் தோற்றமளிக்கும் இன்றைய சூழலில், மக்கள் அன்பையும் அழகையும் போற்றி, அதனால் எதிர்நோக்கையும் பெற்று அவர்களில் அர்ப்பண உணர்வையும், பிறருடன் ஒத்துணர்ந்து வாழும் மனநிலையையும் நமது தொடர்பாடல் உருவாக்க வேண்டுமென விழைகின்றேன். அடுத்தவரின் மனித மாண்பை மதித்துப் போற்றவும், நமது பொதுவான இல்லமாகிய உலகின் மேம்பாட்டிற்காக அக்கறையுடன் செயல்படும் மனநிலையையும் இந்தத் தொடர்பாடல் உருவாக்கவேண்டும் என்பது எனது ஆவல் (Delexit nos 217).

இந்தத் தொடர்பாடல் பொய்யான தோற்றத்தையும், அதனால் எழும் அச்சத்தையும் உருவாக்காமல், நமது எதிர்நோக்கிற்குக் காரணம் கூறும்படி அமைய வேண்டும். மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை பின்வருமாறு கூறினார்: “நான் கடந்து செல்லும்போது யாருக்காவது என்னால் உதவ முடிந்தால், ஒரு வார்த்தையாலோ, பாடலாலோ ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த முடிந்தால் எனது வாழ்வு பயனற்றதாய் இராது.” இதனை நாம் செய்ய வேண்டுமாயின் சுயவிளம்பரங்களைத் தேடும் முயற்சி, தன்னைப் பற்றியே எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும் தற்சிந்தனை போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு, நமது குரல் கேட்கப்பட வேண்டுமென்பதற்காக மற்றவர்களுடன் உரக்கக் கத்துகிற ஆபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும். தனது செய்தியை, பதிவுகளைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், பார்ப்பவர்கள் தம்மை நெருங்கி வரவும், தங்கள் முழு உள்ளத்துடன் தாம் கூற விரும்பும் செய்திகளிலும் நிகழ்வுகளிலும் முழுமனத்துடன் ஈடுபடச் செய்யும் வண்ணம் தொடர்பாளர் தனது தொடர்பாடல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு தொடர்பாடல் மேற்கொண்டால் யூபிலி ஆண்டின் மையக்கருத்தாகியஎதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற நிலையை நாம் அடையும் வாய்ப்பு உருவாகும்.

அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குதல்

எதிர்நோக்குதல் ஒரு சமூகச் செயல்பாட்டுத் திட்டமாகும். இரக்கத்தின் இந்த யூபிலி ஆண்டின் அரும்பெரும் செய்தியை உற்றுநோக்குவோம். கடவுள் எல்லாரையும் மீண்டும் உயர்த்தி, தம்மோடு அணைத்துக்கொண்டு நமக்குத் தமது இரக்கத்தை வழங்கும் யூபிலி ஆண்டின் அருளைப்பெற நாம் எல்லாரும் அழைக்கப் பெற்றுள்ளோம். இதில் தனிமனித மற்றும் சமூகக் கூறுகள் பிரிக்க இயலாதபடி கலந்துள்ளன. நாம் எல்லாரும் ஒன்றாகப் புறப்படுகிறோம். பல சகோதர- சகோதரிகளோடு ஒன்றாகப் பயணிக்கிறோம். ஒன்றாகவே புனிதக் கதவில் நுழைந்து யூபிலி ஆண்டின் அருளைப் பெறுகிறோம்.

நாம் கொண்டாடும் இந்த யூபிலி பல விளைவுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சிறையில் இருப்போருக்கான இரக்கத்தையும், அவர்களது எதிர்நோக்கையும் குறிப்பிடலாம். துன்பத்தில் இருப்போரும், விளிம்பு நிலையில் இருப்போரும் அனுபவிக்கும் மேன்மை மற்றும் உடனிருப்பு அனுபவங்களும் அடங்கும். “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத் 5:9) என்ற செய்தியை இந்த யூபிலி நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு இது எதிர்நோக்கை ஊக்கப்படுத்துகிறது. இதனால் நமது தொடர்பாடல் செயல்பாடுகள் கவனமுடையதாகவும் கனிவுடையதாகவும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகவும் உரையாடலுக்கான வழிவகைகளைச் சுட்டிக்காட்டுவனவாகவும் அமைவது அவசியம். இந்தக் காரணத்திற்காகவே நமது தொடர்பாடல் செயல்பாடுகளில் நாம் பயன்படுத்தும் நிகழ்வுகளில் உள்ள பல நன்மையானவற்றைக் கண்டுகொள்ள முடியும்.

தங்கத் துகள்களைச் சேகரிப்போர் சோர்வடையாது, மணலை நன்கு சலித்து அதில் உள்ள தங்கத்துகள்களைத் தேடிக்கண்டுபிடிப்பது போல, நாமும் நமது தொடர்பாடல் செயல்பாடுகளில் பயன்படுத்தும் செய்திகள், நிகழ்வுகள், பதிவுகளில் காணக்கிடைக்கும் நன்மையானவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். எதிர்நோக்கின் விதைகளைத்தேடி, அவற்றைப் பிறர் அறியச் செய்வது நமது தொடர்பாடலின் நோக்கமாகும். இதனால் இன்றைய உலகினர் ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுக்காமல் இருப்பது குறையும். உலகமாந்தர் பிறரைப் பற்றிப் பாராமுகமாய் இருப்பதும், தம்மிலேயே அவர்கள் மூழ்கி இருப்பதும் குறையும். எனவே எதிர்நோக்கை உருவாக்கும் நன்மையின் மினுமினுப்புள்ள நல்ல செய்திகளைத் தொடர்பாடல் துறையில் இருப்பவர்கள் தேடுதல் அவசியம். இத்தகைய தொடர்பாடல் மக்களிடையே ஒன்றிப்பைக் கட்டியெழுப்ப மிகவும் உதவும். இதனால் யாரையும் தனிமையில் விட்டுவிடாமல், எல்லாருடனும் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு ஏற்படும்.

இதயத்தை மறக்க வேண்டாம்

அன்புக்குரிய சகோதரர்-சகோதரிகளே, வியக்கத்தக்கத் தொழில்நுட்பச் சாதனங்களுக்கு முன்நிற்கும் உங்களை, உங்கள் இதயத்தைப் பற்றியும், உங்கள் உள்ளத்தின் வாழ்வு பற்றியும் அக்கறை கொள்ள உற்சாகப்படுத்துகிறேன். இதன் பொருள் என்ன? இதோ ஒருசில சிந்தனைகளை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

உள்ளத்தில் கனிவோடு இருங்கள்; பிறரது முகங்களை மறந்துவிடாதீர்கள். பிறருக்கு நீங்கள் சில பணிகளைச் செய்யும்போது, அந்த ஆண்கள்- பெண்களுடைய இதயத்துடன் பேசுங்கள்.

• உங்கள் உள்ளுணர்வு இயல்பூக்கத்தினால் மட்டும் உங்கள் தொடர்பாடல் செயல்பாடுகள் தூண்டப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், எதிர்நோக்கிற்கு வாய்ப்பு இல்லையெனத் தோன்றும் போதும், இது ஒரு பயனில்லாத முயற்சி எனத் தோன்றும் போதும் மனவுறுதியுடன் எதிர்நோக்கைப் பரவலாக்குங்கள்.

மனிதகுலத்தின் காயங்களைக் குணமாக்கும் தொடர்பாடலை ஊக்குவியுங்கள்.

வாழ்க்கைச் சிக்கல்களில் வளைந்துகொடுத்து அழிந்து போகாத நீர்நிலையின் மலர்த்தண்டைப் போல மென்மையானதாக ஆனால் உறுதியானதாக நம் எதிர்நோக்கு இருக்க வேண்டும். இந்த உறுதியான எதிர்நோக்கினாலேயே நமது தாய்மார்கள் தம் பிள்ளைகள் இவ்வுலகின் முரண்பாடுகளாகிய அகழிகளைத் தாண்டி வர வேண்டுமென்று செபிக்கின்றனர். அந்த எதிர்நோக்கினாலேயே பல தந்தையர்கள் நல்ல எதிர்காலத்திற்கான வேலைகளைத் தேடி பல சவாலான சூழ்நிலைகளைத் தினமும் கடந்து வருகின்றனர். இந்த எதிர்நோக்கினாலேயே நமது சிறுவர்கள் போர் என்னும் குப்பைக் கூளங்களுக்கிடையிலும், வறுமை மிகுந்த தெருக்களிலும், குடிசைப் பகுதிகளிலும்கூட விளையாடவும் சிரிக்கவும் நம்பவும் செய்கின்றனர்.

நீங்கள் சாட்சிகளாக இருந்து, வன்முறைத் தாக்குதல் இல்லாத தொடர்பாடலை மேற்கொள்ளுங்கள். பிறர்மீது அக்கறை காட்டும் கலாச்சாரத்தை உண்டாக்குங்கள். நிகழ்காலத்தில் காணக்கூடிய, காணக்கூடாத தடைகளைத் தகர்த்து மனிதரிடையே இணைப்புப்பாலங்களைக் கட்டியெழுப்புங்கள்.

எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் (கதைகளை) கூறுங்கள்.

மனுகுலத்தின் பொதுவான இலக்கைப் பற்றியும், அதனை மனிதகுலம் அடையும் வழிவகைகளையும் நமது எதிர்கால வரலாறாக வடிக்கும் ஆற்றல் உள்ள எதிர்நோக்கின் செய்திகளை உங்கள் தொடர்பாடலில் பயன்படுத்துங்கள்.

இந்த யூபிலி ஆண்டில் இறைவன் தரும் அருளால் நீங்களும் நானும் இவற்றையெல்லாம் செய்ய முடியும். இதுவே எனது வேண்டுகோள். உங்களுக்கும் உங்கள் பணிகளுக்கும் ஆசி வழங்குகிறேன்.

- திருத்தந்தை பிரான்சிஸ்

உரோமை, புனித இலாத்தரன் பேராலயம்

2025, ஜனவரி 24,

சலேசு நகர் புனித பிரான்சிஸ் நினைவு நாள்

news
ஆன்மிகம்
தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை: கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்கள்

திரு அவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுள் ஒன்று  2023, 2024-ஆம் ஆண்டுகளில் இரு அமர்வுகளாக நடந்து முடிந்த 16-வது  ஆயர் மாமன்றம். மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட  அறிக்கை கூட்டொருங்கியக்கத் திரு அவை-ஒரு தொடர் பயணம். அது வத்திக்கான் கூட்டத்தோடு முடிவடையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாற்றங்களை  பங்கு, மறைமாவட்டம், நிறுவனங்கள் மற்றும் திரு அவையின் பல்வேறு அமைப்புகளில கொண்டுவர தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரு அவையின் நம்பிக்கையாளர்களாக அந்நம்பிக்கையை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தங்களின் வாழ்வாலும் படிப்பினைகளாலும் கொண்டு சேர்ப்பவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. திரு அவையில்  பெண்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்புக் குறித்து 16-வது  ஆயர் மாமன்றம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை தமிழ்நாடு திரு அவையில் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை இணைந்து திட்டமிடல், செயல்படுத்துதல் நம்பிக்கையாளர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.

ஆயர் மாமன்றத்தின்  தனிச்சிறப்பு

வழக்கமாக ஆயர்களின் பிரதிநிதிகள் இணைந்து திரு அவையின் நலன் சார்ந்த ஏதேனும் ஒரு கருப்பொருளில் ஆய்வு செய்து முடிவெடுக்க வத்திக்கானில்  ஆயர் மாமன்றம் கூட்டப்படும். கூட்டத்தினைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்களால் ஓர் அதிகாரப்பூர்வ ஆவணமாகதிருத்தூது ஊக்க உரைவழங்கப்படும்.

ஆயர் மாமன்றத்தின் நடைமுறையை மாற்றி, ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வு ஆயர்களின் கூடுகையாக மட்டுமின்றி, அனைத்து நம்பிக்கையாளர்களும் பங்கேற்கும் அமர்வாக இருக்க வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் விரும்பினார். அதனைச் செயல்படுத்திட அகில உலக ஆயர்களின் மாமன்றத்தின் செயல்பாடுகள்கூட்டொருங்கியக்கத் திரு அவைஎன்ற கருப்பொருளில் 2021-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டன. அக்டோபர் 9-10, 2021-இல் உரோமையிலும், அக்டோபர் 17, 2021-இல் உலகில் உள்ள அனைத்து மறைமாவட்டப் பங்குத்தளங்களிலும் அது தொடங்கப்பட்டது.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் நோக்கம்

ஒன்றிப்பு - பங்கேற்பு - நற்செய்தி அறிவிப்பு.

இணைந்த திரு அவையே இணைந்து பயணிக்கும் திரு அவைஎன்ற இலக்கோடு தொடக்கத் திரு அவையில் நிலவிய இணைந்த வாழ்வுஇணைந்த பணி, இணைந்த பயணம் (திப 2:42-47;4:32-36) என்பதை மீட்டெடுக்க முனைந்தது.

ஐந்து கட்டத்  தயாரிப்பு (2021-2023)

1. தயாரிப்பு நிலை: 2021, செப்டம்பர் 7-ஆம் நாள் வத்திக்கானில் தயாரிப்பிற்கான ஆவணம் வெளியிடப்பட்டது.

2. பயிற்சி அளித்தல் நிலை: மறைவட்ட அளவிலும் பங்கு அளவிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

3. கருத்துக்கேட்டல் நிலை: உலகளாவியத் திரு அவையாக ஒன்றிணைந்து, மறைமாவட்ட அளவில் கூட்டொருங்கியக்க வாழ்வியல் அனுபவங்களை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்திட, செவிமடுக்க, கூட்டொருங்கியக்கப் பயணம் மேலும் தொடர்ந்திட அனைவரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.

4. தரவுகளைச் சேகரித்தல் நிலை.

5. கருத்துகளை அனுப்பும் நிலை.

மக்களிடம் கேட்டுப் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே ஆயர் மாமன்றம் கூட்டப்பட்டது.

16-வது ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வுகள் இரு கட்டங்களாக நடைபெற்றன.

முதல் அமர்வு: அக்டோபர் 2023

இரண்டாம் அமர்வு: அக்டோபர் 2024

16-வது அகில உலக ஆயர்கள் மாமன்றம் - பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்

கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றில் முதல் முறையாகச் சில பெண்கள் முழுமையாகப் பங்கேற்றார்கள்.

கர்தினால்மார்கள், ஆயர்கள் ஆகியோருடன் பெண்களும் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள்.

2023, அக்டோபரில் நடைபெற்ற அமர்வில் 54 பெண்கள் பங்கேற்று வாக்களித்தனர்.

ஆலோசனைக் குழுக்கள், விவாதங்கள் ஆகியவற்றைப் பெண்கள் தலைமையேற்று வழிநடத்தினர்.

திரு அவையின் எதிர்காலம் குறித்த தங்களின் கருத்துகளை அனைத்து நிலைகளிலும் பகிர்ந்து கொண்டார்கள்.

பெண்களில் சிலர் மொழிக்குழுக்களின் அறிக்கையாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.

16-வது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம்

ஆயர் மாமன்றத்தின் முடிவில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பரிந்துரைகள், ஆலோசனைகள், தீர்மானங்கள், வழிகாட்டுநெறிகள் ஆகியவற்றைத் திருத்தந்தை பிரான்சிஸ் உடனடியாக அங்கீகரித்து (ratified) அதிகாரப்பூர்வ ஆவணமாக (Ordinary Magisterium) வெளியிட்டார். இந்த ஆவணம் திரு அவையைப் புதுப்பிக்க ஐந்து வகையான மாற்றங்களை முன்வைத்தது: 1. அருள் வாழ்வு (Spiritual), 2. உறவு (Relational), 3. நடை முறை (Procedural), 4. நிறுவனம் (Institutional), 5. மறைப்பணி (Missionary).

பெண்களின் பங்கேற்பிற்கான கட்டமைப்பு மாற்றங்கள்

சமமான மாண்பு: திருமுழுக்கினால் பெண்களும் ஆண்களும் சமமான மாண்பும் உரிமையும் பெறுகிறார்கள்.       

பெண்களின் தலைமை, முடிவெடுப்பதில் பங்கேற்பு: திரு அவையின் நிர்வாகத்தில் பொதுநிலையினருக்கு குறிப்பாக, பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளித்தல்; திரு அவைச் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளைப் பெண்களுக்கு அளித்தல்.              

அமைப்புசார் சீர்திருத்தங்கள், விரிவான பங்கேற்பு: அருள்பணிப் பேரவை முதலான பங்கேற்பு அமைப்புகளில் பெண்கள் அதிகம் பங்கேற்கும் வகையில் சீர்திருத்தங்கள், முடிவெடுத்தலில் பெண்களுக்கு வாய்ப்பு.    

குருக்கள் உருவாக்கம்: குருக்கள் உருவாக்கத்தில் பெண்கள் பங்கேற்றல்.

பண்பாட்டு மாற்றம்: திரு அவையில் படிநிலை அதிகாரத்தைக் குறைத்தல்; பங்கேற்பை அதிகரித்தல்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்மாதிரியான நடவடிக்கைகள்

1. திரு அவைச் சட்டத்தில் சீர்திருத்தம்

திருத்தந்தை அவர்கள் திரு அவைச் சட்டத்தில் பெண்களுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த வாசகர் பணி, பீடப்பணியாளர் பணி ஆகியவற்றைச் சீர்திருத்திப் பெண்களுக்கு நிரந்தர வாசகப் பணியாளர், பீடப்பணியாளர் பணியைச் சட்டமாக்கினார். பெண் திருத்தொண்டர்கள் குறித்த ஆய்வுக் குழுவை நியமித்தார். அது ஆயர் மாமன்றத்திற்குப் பிறகும் தொடர்கிறது என அறிவித்தார்.

2. பெண்களுக்குத் தலைமைப் பொறுப்புகள்

குருத்துவத்தோடு தொடர்புடைய அருள்பணிகள் அல்லாத நிர்வாகப் பொறுப்புகளை குருகுலத்தாரே ஆற்றி வந்தனர். அத்தகைய பணிப்பொறுப்புகளைப் பெண்களுக்கு வழங்குவதில் திரு அவைச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை எனப் பல்வேறு பொறுப்புகளைப் பெண்களுக்கு வழங்கினார். இப்பொறுப்புகள் பெண்களின் தலைமைத்துவத்திற்குச் சான்று பகர்வன என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு வத்திக்கான் அருங்காட்சியகங்களின் முதல் பெண் இயக்குநராக பார்பரா ஜட்டா நியமிக்கப்பட்டார். இவர் ஒரு பொதுநிலையினர் என்பது சிறப்பு.

பிப்ரவரி 2021-இல் வத்திக்கான் ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலகத்தின் இரண்டு துணைச்செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நத்தலி பெக்கார்ட்டை நியமித்தார்.

அருள்சகோதரி இரபேல்லா பெட்ரினி வத்திக்கான் நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராக மார்ச் 1, 2025 அன்று பதவியேற்றார். இதற்கு முன் இப்பதவியை வகித்தவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகா ஆவார்.

ஜனவரி 6, 2025 அன்று அருள்சகோதரி சிமோனா பிராம்பில்லாவை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் திருத்தூதர்சார் வாழ்வு சங்கங்களுக்கான வத்திக்கான் பேராயத்தின் முதல்வராக நியமித்தார்.

நான் செய்ததுபோல நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவா  13:15) என நமது ஆண்டவர் இயேசு முன்மாதிரிகை காட்டியதுபோல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நமக்கு முன்மாதிரிகை காட்டியுள்ளார்.

இந்தியக் கத்தோலிக்க (இலத்தீன்) ஆயர் பேரவையின் 36-வது கூட்டம்-2025

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை 2025, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை புவனேஸ்வரில் கூடியது. அதன் கருப்பொருள்: ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்; கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பாதையைக் கண்டறிதல்.’ “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல; நம்பிக்கையின் அடிப்படையிலேயே நடக்கிறோம் (2கொரி 5:7) (‘Pilgrims of Hope: Discerning the Synodal Path’ For we walk by faith, not by sight (2 Cor 5:7).

16-வது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணத்தின் வழிகாட்டு நெறிகளைச் செயல்படுத்த இந்தியச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து இறுதி ஆவணம் ஒன்றையும் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

2033-ஆம் ஆண்டிற்குள் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய அருள்பணித் திட்டத்தினையும் வழங்கியுள்ளது. அத்திட்டத்தை திரு அவையின் அனைத்து அமைப்புகளிலும் பங்குகளிலும் செயல்படுத்த இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்புவிடுத்துள்ளது. இந்திய மண்ணில் பெண்கள் சந்திக்கும் சவால்கள், திரு அவையில் பெண்களின் நிலை, பெண்களை ஆற்றல் ஊட்ட, அதிகாரம் அளிக்க, பாலின நீதியை நிலைநாட்ட, பாலினச் சமத்துவத்தை வாழ்வாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதியான நடவடிக்கைகள், உத்திகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றைச் செவ்வனே வகுத்துத் தந்துள்ளது.

அருள்பணித் திட்டம், கூட்டொருங்கியக்கத் திரு அவைக்காக இணைந்து பயணித்தல்: இலக்கு 2033’ - பெண்கள் மற்றும் பாலின நீதி (5.11. Women and Gender Justice)

பெண்கள் மானுட வாழ்வின் பல்வேறு பகுதிகளில் சிறந்த பங்கேற்பினை நல்கி வருகின்றனர். திரு அவையில் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பார்வையும் முடிவெடுக்கும் இடங்களில் அவர்களின் பங்கேற்பும் இன்றியமையாதது.

திரு அவையின் அமைப்புகளில் பெண்கள் தலைமையேற்கவும் வழிநடத்தவும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். திருவிவிலியத்தின் படைப்பு நிகழ்வு ஆண்-பெண் இருவரும் சமமான மாண்புடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை நமக்கு உறுதி செய்கிறது. ஆனால், நமது இறை நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளன. இந்த வேறுபாடுகள் இறைத்திட்டத்திற்கே எதிரானது. சமுதாயத்திலும் திரு அவையிலும் பெண்களின் இடம், பங்கேற்பு குறித்து ஆழமான புரிதலை உண்டாக்குவது அவசியமாகிறது.

உண்மை நிலையும் சவால்களும்

ஊடகத்தின் தாக்கத்தால் பெண்களின் மாண்பினைச் சிதைக்கும் வகையில் பெண்களை மகிழ்ச்சிக்கான, நுகர்வுக்கான காட்சிப்பொருளாகப் பயன்படுத்துதல்.

பாலினப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.

சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மை.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்.

திரு அவையிலும் சமுதாயத்திலும் பெண்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படல்.

ஆணாதிக்க மனநிலையைப் பெண்களே உள்வாங்கியிருத்தல்.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பாதை.

உறுதியான நடவடிக்கை

திரு அவையின் அனைத்து அமைப்புகளிலும் நிர்வாகத்திலும் பெண்களின் தலைமைத்துவத்தையும்  சமமான பங்கேற்பையும் உறுதி செய்தல்.

மதித்தல், சமமாக ஏற்றுக்கொள்ளல், அனைவரையும் உள்ளடக்கிய பண்பாட்டை உருவாக்குதல்.

பெண் துறவியரின் சமூக அருள்பணிப் பங்கேற்பை அங்கீகரித்தல். திரு அவையிலும் நற்செய்தி அறிவிப்பிலும் உடன் பணியாளராய் அவர்களை ஏற்றுக்கொள்ளல். திரு அவையின் நிர்வாகம், நிறுவனம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்புகள் வழங்குதல்.

அருள்பணிகள், திரு அவை அலுவல்கள் ஆகியவற்றில் பெண்களின் பங்கேற்பிற்கான வழிகாட்டு நெறிகளை மறைமாவட்ட அளவில் ஏற்படுத்துதல்.

சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி அளித்தல்.

குருக்கள், ஆண் துறவியர், பொதுநிலையினர் ஆகியோருக்குப் பாலினச் சமத்துவம், பாலின நீதி குறித்த கல்வி அளித்தல்.

உத்திகளும் திட்டங்களும்

திரு அவையின் அனைத்துப் பங்கேற்பு அமைப்புகளிலும் 50% பெண்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.

திரு அவையின் நிர்வாகத்தில் பெண்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கும் பொருட்டு, தலைமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு அளித்தல்.

பணியிடப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 2013 வழிகாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்துதல்.

மறைமாவட்ட அளவில் பெண்களின் மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துதல்.

பெண்மையைக் கொண்டாடுதல்: பங்குகளில் பெண்கள் தினம், பெண் குழந்தைகள் தினம், அரசியல் அமைப்புச் சட்ட நாள், மனித உரிமைகள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதன் மூலம் இறைவன் விரும்பிய பாலினச் சமத்துவம் குறித்த கல்வியை நம்பிக்கையாளர்களுக்கு அளித்தல்.

மறைமாவட்டப் பிரதிநிதிகளுக்குப் பங்குப் பேரவை, நிதிக்குழு ஆகியவற்றில் அவர்களின் பொறுப்பு, பணி குறித்த பயிற்சிகளை அளித்தல். அரசியல் அமைப்புச் சட்டம், மனித உரிமைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியளித்தல்.

தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் திரு அவை காலத்தின் அறிகுறிகளைக் கண்டுணர்ந்து, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தான்மை கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ்கூட்டொருங்கியக்கத் திரு அவையே மூவாயிரம் ஆண்டிற்கான திரு அவைஎன அறிவித்ததோடு, அதனை ஆயர் மாமன்றத்தின் வழி செயல்படுத்தியும் காட்டியுள்ளார். பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இன்றிகூட்டொருங்கியக்கத் திரு அவையின் பயணம்சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், பெண்களுக்குச் சரிசமமான வாய்ப்புகளை அளிப்பது, அவர்களை மாண்புடன் நடத்துவது, தலைமைப் பொறுப்புகளை அளிப்பது ஆகியவற்றில் திரு அவை இன்னும் ஆற்றலுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ‘சமுதாயத்தில் பெண்கள் என்றுமே பெற்றிராத செல்வாக்கையும் அதிகாரத்தையும் அடையும் நாள் இதோ வந்து விட்டதுஎனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வாக்கு இன்று உலகின் பல்வேறு துறைகளில் மெய்யாகி வருகிறது. உலகிற்கே ஒளியாக விளங்கும் திரு அவை பெண்களை அதிகாரப்படுத்துவதில் முன்னோடியாய் திகழட்டும்.

news
ஆன்மிகம்
மாமன்ற இறுதி ஆவணத்தின் பார்வையில் கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்களின் பங்களிப்பு

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே, அக்டோபர் 2022-துவங்கி அக்டோபர் 2025-வரை நாம் இணைந்து பயணித்த ஒருங்கியக்கப் பயணம் நமக்கு உணர்த்திய தலையாயப் பாடம் என்ன? எதிர் வரும் மூன்றாவது ஆயிரமாண்டின் திரு அவையின் வாழ்வியல், அடையாளம், மற்றும் மறைப்பணி அனைத்திற்கும் அடித்தளமாக அமைவது கூட்டு ஒருங்கியக்கமே. ஆனால், ஒருங்கியக்கத் திரு அவை என்றால் என்ன? இறைவன் தம் திரு அவைக்கு விரும்பும் ஒருங்கியக்கத் திரு அவை Synodal Church- விவரிப்பதற்கு ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கை ஓர் அழகான உருவகத்தைப் பயன்படுத்துகிறது. அறிக்கையின் பகுதி 1 எண் 42 குறிப்பிடுகிறது, ஒருங்கியக்கத் திரு அவை என்பது பல்வேறு இசைக்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து படைக்கும் இன்னிசையைப் போன்றது. வெவ்வேறு தனித்தன்மைகளைக் கொண்ட இசைக்கருவிகளும், வேறுபட்ட குரல் வளங்களைக் கொண்ட இசைக் கலைஞர்களும் தங்கள் தனித்தன்மை மாறாமல் ஒன்றாக இணைந்து செவிக்கு இனிமையான இசையைப் படைக்கின்றனர்.

அதுபோலவே, பல்வேறு இயல்புகள், கருத்தியல்கள், தனித்துவங்கள், வாழ்வுமுறைகளைக் கொண்டோர் இணைந்து உருவாக்குவதே ஒருங்கியக்கத் திரு அவை. A synodal Church is like an orchestra, where women are not just accompanists but lead as conductors, composers, and first violinists in God’s symphony of grace. தனித் தன்மையும் ஒற்றுமையும் இணைந்த இந்த ஒருங்கியக்கத் திரு அவையின் கனவு நிதர்சனமாக வேண்டுமெனில் திரு அவையில் ஒரு பாதியாகத் திகழும் பெண்களின் குரலும் பங்களிப்பும் திரு அவையின் வாழ்வியலில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு ஆயர்கள் பேரவையின் கூட்டம் இந்த முக்கியமான காலத்தேவையை முன்னிறுத்துகின்றது.

பெண்களின் பங்களிப்பைக் குறித்த சிந்தனைக்கு ஆயர்களின் மாமன்றத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு எது என்ற கேள்வியோடு தொடங்க விரும்புகின்றேன். The Synod’s final document stands out for its honest acknowledgment of the Church’s past failure to recognize women’s dignity and significance. பெண்களின் மகத்துவத்தையும் பங்களிப்பையும் தகுந்த முறையில் திரு அவை ஊக்குவிக்கவில்லை என்ற ஒப்புதலே என்னைப் பொறுத்தவரை இந்த ஆவணத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு. ஆவணத்தின் முன்னுரை எண்கள் 6 மற்றும் 16 ஒப்புக்கொள்வதுபோல, பெண்களின் சவால்களையும், அவர்களது கனவுகளையும் முன்னிறுத்த நாம் தவறியிருக்கின்றோம்.

The document acknowledges the Church’s ‘sinful realities’; ignoring women’s charisms, limiting their roles, and the widespread pain of exclusion. பெண்கள் நூற்றாண்டுகளாக அனுபவிக்கும் புறக்கணிப்பின் வலி, திரு அவையில் தலைமைத்துவம் மற்றும் உரிமைக்கான தேடல், பெண்களது திறமைகள் கொடைகள் மற்றும் இறையழைத்தலின் மாண்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவது ஒருங்கியக்கத் திரு அவையின் தலையாயக் கடமை என்கிறது ஆவணம். இந்தக் கடமையை நிறைவேற்ற நமக்குத் தேவைப்படுவது ஒருங்கியக்க மனமாற்றம். The synodal journey requires conversion (Introduction, 6). We must dismantle systems that silence women’s voices and diminish their gifts.

The Synod moves beyond words, proposing a synodal feminist approach. மன்றத்தின் ஆவணம் ஒருங்கியக்கப் பெண்ணியல் சிந்தனையை முன்வைக்கின்றது. இன்று பெண்ணியல் சிந்தனை என்பது கத்தோலிக்க நம்பிக்கைக்கு முரணானது என்னும் பொதுவான விமர்சனத்தை நாம் காண்கின்றோம். குறிப்பாக, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில், பெண்ணியம் திரு அவையின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்று எச்சரிக்கும் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த நிலைமை? பெண்ணியல் சிந்தனை என்பது உரிமைக்கான போராட்டம் என்ற உண்மையை மறந்து வெறும் கருத்தியல் மற்றும் அரசியல் சார்ந்த விவாதப் பொருளாகச் சுருங்கிவிட்டதே இதற்குக் காரணம். ஆயர்களின் மாமன்றம் முன்னிறுத்தும் பெண்ணியல் சிந்தனை என்பது சித்தாந்தங்களை மையமாகக் கொண்டது அல்ல; மாறாக, நமது நம்பிக்கையிலும் மறைப்பணியிலும் வேரூன்றிய தேடல்.

The Synod’s vision for women rejects secular ideologies, grounding its feminist approach in faith and pastoral urgency. மாமன்றம் முன்னிறுத்தும் பெண்ணியல் சிந்தனை நமது ஒருங்கியக்கத் திரு அவையின் கனவிற்குத் தொடுக்கும் கேள்விகள் இவை: கிறிஸ்துவின் உடலாகிய திரு அவையில் பெண்களின் விடுதலை, மாண்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை நடைமுறையில் வளர்ப்பது எவ்வாறு? இன்று திரு அவையில் பெண்கள் அனுபவிக்கும் சவால்கள், அநீதி மற்றும் புறக்கணிப்புக் கட்டமைப்புகளை மாற்றுவது எவ்வாறு? திரு அவையிலும் சமூகத்திலும் பெண்கள் தங்கள் சுயமரியாதையை, உரிமைகளை, பங்களிப்பைத் தாங்களாகவே உறுதிப்படுத்துவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்கு நாம் பதில் தேடப்போவது எங்கு? கருத்தியல் மோதல்களில் அல்ல; மாறாக, நற்செய்தியின் வழிகாட்டுதலில். The vision of a synodal inclusive church is not rooted in external ideologies but the Gospel.

எனது கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். திரு அவை தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்றைய பெண்ணியல் சார்ந்த கருத்துச் சிந்தனைக்கு நமது செவிகளை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. மாறாக, நமது நம்பிக்கையிலும் வரலாற்றிலும் களப்பணியிலும் வேரூன்றிய ஒரு மாற்றுப் பெண்ணியல் சிந்தனையை இந்தச் சமூகத்திற்கு முன்வைப்பது நமது கடமை என்பதே நமது வாதம். இன்றைக்குப் பெண்ணியம் என்ற போர்வையில் கருச்சிதைவை நியாயமாக்கி, பெண்களின் தனித்துவத்தைப் புறக்கணித்து, குடும்பத்தின் மாண்பை மறுதலித்து, ஆண்-பெண் உறவை அதிகாரத்திற்கான போராட்டமாக (Power-struggle) சித்தரிக்கும் சிந்தனைகளுக்கு மாற்றாக நாம் வழங்கப்போகும் ஒருங்கியக்கத் திரு அவையின் மாற்றுப் பெண்ணியல் சிந்தனை என்ன? அதற்கான அடித்தளங்கள் என்ன? ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கை சில கோட்பாடுகளை அடித்தளங்களாக முன்வைக்கின்றது:

1. படைப்பின் அடிப்படையிலான கிறித்தவ மானுடவியல் (Christian Anthropology based on creation): மாமன்றத்தின் இறுதி அறிக்கைப் பகுதி 2 எண் 52 வலியுறுத்துவதுபோல, ஆண்-பெண் சமத்துவத்தின் அடிப்படைத் தொடக்கநூல் 1:27 எடுத்தியம்பும் படைப்பின் தன்மை: “கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். ஆணும்-பெண் ணுமாக அவர்களைப் படைத்தார். ஆணும்-பெண்ணும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டதால் இருவரும் சம மாண்பிற்கும் உரிமைக்கும் உரியவர்கள். The Final Document affirms that women are not an “add-on” but integral to the Synodal Church, reflecting a complementary, enriching Christian vision. படைப்பில் பார்வையில், பெண்கள் வெறும்கூடுதல் சேர்க்கைகள்அல்ல; அவர்கள் திரு அவையின் அடிப்படையான சாரத்திற்கே இன்றியமையாதவர்கள்.

2. திருமுழுக்கின் சமத்துவ அழைப்பு (Women’s equality as a Baptismal reality) இறுதி அறிக்கைப் பகுதி 2 எண் 60 கூறுகின்றதுபோல, “திருமுழுக்கின் மூலம், கடவுளின் மக்களாகிய பெண்களும் ஆண்களும் சம மாண்பினைப் பெற்றுள்ளனர்.” இந்தச் சம மாண்பு என்பது பெண்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல; மாறாக, இறைத்திட்டத்தின் வெளிப்பாடு. ஆவணம் கலாத்தியர் 3:27-28 வசனங்களை நினைவுபடுத்துகின்றது: “கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.” The sacrament of baptism endows all of us with the same diginity of Christ.

3. பெண் உரிமைக்கான குரல் ஒட்டுமொத்தத் திரு அவையின் குரல் (Synodal Feminism is deeply Ecclesial): மாமன்றத்தின் அறிக்கைப் பகுதி 2, எண் 60 குறிப்பிடுகின்றதுபோல, இன்று திரு அவையில் பெண்களின் ஆளுமைத்திறன் நமது பங்குத்தளங்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில் மற்றும் சமூகப்பணியில் பெறும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. நமது ஆலய நிகழ்வுகளில் பெரிதும் பங்கேற்பது பெண்களே. குடும்பங்களில் நம்பிக்கையின் முதல் சாட்சிகளாகத் திகழ்வது நமது தாய்மார்களே. என்றாலும், அவர்களது உரிமைக்கும் மாண்புக்கான போராட்டம் ஏனோ பெண்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினையாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதை ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது.

The Final Document affirms that women\'s inclusion is not a separate issue, but vital to the good of the whole People of God. பெண்கள் வளர்ச்சியடையும்போது, திரு அவையும் முழுமையாக வளர்ச்சியடைகின்றது. பெண்களின் புறக்கணிப்பும் மறுதலிப்பும் நம் அனைவரையும் பலவீனப்படுத்துகிறது. Marginalizing women weakens the Church and dims Christ’s presence. Their leadership enriches discernment and calls for reform. As the document says, “What comes from the Holy Spirit cannot be stopped.”

The Witness of the synod Experience: 2022 முதல் 2025 வரை நாம் மேற்கொண்ட ஒருங்கியக்கப் பயணம் பெண்களின் பங்களிப்பின் சிறப்பையும் மகத்துவத்தையும் நமக்கு நினைவுபடுத்தியிருக்கின்றது. வரலாற்றில் முதன்முறையாக, ஆயர்கள் மாமன்றத்தின் பொதுக்குழுவில், முழு உறுப்பினர்களாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (எண் 6b). இது வெறும் அடையாளப் பங்கேற்பு அல்ல; ஒட்டுமொத்தத் திரு அவையின் வாழ்வியலில் பெண்கள் இன்றியமையாதப் பங்கை வகுப்பவர்கள் என்பதை அங்கீகரிக்கும் உறுதியான நடவடிக்கையாக இது அமைந்தது. அவர்களின் குரல்கள், அனுபவங்கள் மற்றும் அறிவுச்செழுமை மாமன்றத்தின் உரையாடல்களுக்கும், மாமன்றத்தின் இறுதி ஆவணத்திற்கும் பங்களித்தது. சகோதரி நத்தாலி பெக்கார்ட் (XMCJ) அவர்களை ஆயர்கள் மாமன்றத்தின் துணைச் செயலராக நியமித்தது மற்றுமொரு வலுவான அடையாளமாக இருந்தது.

ஆவணம் மாமன்றத்தின் முடிவை அல்ல; மாறாக, ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தை வரையறுக்கின்றது. இந்தத் தொடக்கம் நம்மை ஒருங்கிணைந்த ஆய்ந்து அறியும் தேடலுக்கும், ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கும் அழைக்கின்றது. எதிர்வரும் ஒருங்கியக்கப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட மாமன்றத்தின் இறுதி ஆவணம் உணர்த்தும் அதன் வழிமுறைகளைப் பட்டியலிட விரும்புகின்றேன்.

1. பகுதி 2, எண் 6 - திரு அவையின் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (Implement Canon Law): பெண்களின் ஆளுமைக்கான தற்போதைய விதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல் (.கா: diocesan curia, pastoral councils, finance committees).

2. பகுதி 2, எண் 6 - உள்ளடக்க மொழியைப் பயன்படுத்துதல் Inclusive language: மறையுரை, மறைக்கல்வி, மறைபரப்புப் போதனை மற்றும் திரு அவையின் ஆவணங்களில் பெண்களின் பங்களிப்புகளை மையப்படுத்துதல். பெண் புனிதர்கள், இறையியலாளர்கள், சிந்தனையாளர்கள், அருளாளர்கள் மற்றும் மறையாளர்களின் பங்களிப்பை விவரித்தல்.

3. பகுதி 2, எண் 76 - புதிய மறைப்பணிகளைக் கண்டறிதல் Expand ministries: பொதுநிலையினருக்குரிய மறைப்பணியின் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, செவிமடுத்து வழிநடத்தும் மறைப்பணிக்குப் பெண்களை நியமித்தல். Discern new forms of lay ministry, including the proposal for a “ministry of listening and accompaniment

4. பகுதி 2, எண் 6 - திருத்தொண்டர் பணி பற்றிய ஆய்வு: Continue discernment on women’s access to the diaconate grounded in theological and historical dialogue. பெண்களின் திருத்தொண்டர் பணி குறித்த வரலாற்று மற்றும் இறையியல் சார்ந்த சிந்தனை தொடரவேண்டும். எனினும், பெண்களின் பங்கேற்பைக் குறித்த சிந்தனையைக் குருத்துவத் திருத்தொண்டர் அருள்பொழிவிற்கு நாம் சுருக்கி விடக்கூடாது.

5. பகுதி 5, எண் 148 - கூட்டுப் பங்களிப்பிற்கான உருவாக்கம்: Formation for Co-responsibility: எதிர்கால குருக்கள், திருத்தொண்டர்கள் மற்றும் ஆயர்களின் உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்தல்.

In conclusion, my reflections can be summarized in five key phrases:

Repentance starts the journey Acknowledge past neglect to spark true synodal conversionFaith over ideology – Catholic feminism flows from Revelation, not secular agendas. Theology drives action – Rooted in complementarity, baptismal dignity, and prophetic mission. Women’s witness is vital – Their leadership is essential to an inclusive Synodal Church. Act with purpose – Advance women’s roles through structural and cultural reform.

நமது ஒருங்கியக்கப் பயணம் நம்பிக்கையின் விதைகளை விதைத்துள்ளது. பெண்களின் இன்றியமையாத மதிப்பும் அழைப்பும் திரு அவையின் அடையாளத்திற்கும் பணிக்கும் ஆணிவேர் என்பதை உணர்த்தியுள்ளது. The Final Document calls us to a synodal Church where women are central, not marginal—guiding, teaching, advocating, and sustaining the community with their unique gifts. ஒருங்கியக்க இன்னிசையில் பெண்களின் குரல்களும் இனிமை சேர்க்கட்டும்.

news
ஆன்மிகம்
புனித நீர் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 19)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அருள்பணி:நாம் ஒவ்வொருவருமே பல அடுக்குச் சுரங்கத்தை நம்மில் தாங்கியுள்ளோம். பல்வேறு வகையான புதையல்களும் பொக்கிஷங்களும் நம்முள்ளே புதைந்து கிடக்கின்றன. இத்தகைய புதையல்களை வெளிக்கொணர நாம் முயற்சி எடுக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, சுற்றியுள்ள உலகையும் வளமிக்கதாக மாற்றுகிறது. இதுவே வாழ்வின் நிறைவையும் மகிழ்வையும் கண்டுகொள்வதற்கான சரியான வழி முறையாகும். இத்தகைய நிலையை அடைவதற்கு ஏராளமான விழிப்புணர்வும் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. புதையலைக் கண்டுபிடிக்க விழிப்புணர்வும், கண்டுபிடித்த புதையலை வெளிக்கொணர முயற்சியும் தேவைப்படுகின்றன. அருளடையாளங்கள் தங்களுக்கே உரிய முறையில் செயல்பட்டு, நமக்குள் புதைந்திருக்கின்ற பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்து, வாழ்வை முழுமையாக வாழ நமக்கு உதவுகின்றன.”

அன்புச்செல்வன்:தந்தையே, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் ஒரு முறை இவ்வாறு கூறினார்: ‘திருமுழுக்கு வழியாக நாம் கடவுளின் புனிதத்திலும் முழுமையிலும் நுழைகின்றோம். எனவே, திருமுழுக்கு வாங்கியவர்கள் மேலோட்டமாகவும் ஏனோதானோவென்றும், அரை குறை மனநிலையோடும் வாழும்போது, தாங்கள் பெற்ற திருமுழுக்கிற்கு முரண்பாடான வாழ்வை வாழ்கிறார்கள்.”

அருள்பணி: திருமுழுக்கு அருளடையாளம் நம் உயர் நிலை ஆற்றல் மையங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நாம் முழுமையான வாழ்வு வாழ நமக்கு உதவி செய்கிறது என்று கடந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்போது சென்றமுறை அகஸ்டின் கேட்ட கேள்விக்கு நாம் வருவோம். புனித நீரை ஊற்றுவதாலும், புனிதப்படுத்தப்பட்ட எண்ணெயைப் பூசுவதாலும், ஆற்றல் மையங்கள் செயல்படுத்தப்படுமா என்பதே அக்கேள்வி! முதலில் புனித நீர் குறித்து, திருவிவிலியம் கூறுவதை நாம் சிந்திக்கலாம்.”

மார்த்தா:தந்தையே, எனக்குத் தெரிந்தவரை நீரானது நம்மை உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்ம ரீதியாகவும் தூய்மைப்படுத்த வல்லது என்பதைத் திருவிவிலியம் எடுத்துரைக்கிறது: ‘நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன் (எசே 36: 26:27) என்றும், ‘என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும் (திபா 51:2) என்றும், ‘ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன் (திபா 51:7) என்றும் திருவிவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த வசனங்கள் கடவுளுக்கும் நமக்கும் இடையில் தடையாக வருகின்றவற்றை புனித நீர் கழுவ வல்லது என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன.”

அருள்பணி:நம்பிக்கையோடு பயன்படுத்தப்படுகின்றபோது நீர் நம் புறத்தை மட்டுமல்ல, நம் அகத்தையும் கழுவ வல்லது. காரணம், அதன்மீது தூய ஆவியானவர் அசைவாடினார் (தொநூ 1:2, எசா 44:3). மேலும், தண்ணீர் நம் அகத்தைத் தூய்மைப்படுத்தவல்லது என்பதை எண்ணிக்கை நூல் 19:2-20 பகுதியிலும் நாம் வாசிக்கிறோம். புனித அவிலா தெரசா பல்வேறு விதமான எதிர்மறைச் சக்திகளை எதிர்கொள்ள புனித நீரைப் பயன்படுத்தும்படி தன் சபைச் சகோதரிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஆலோசனை கூறியிருக்கிறார்.”

அன்புச் செல்வன்: சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் புகழ்பெற்ற பேராயராக விளங்கியவர் புல்டன் ஷீன். தொலைத்தொடர்புக் கருவிகளை நற்செய்தி அறிவிக்கின்ற பணிக்காக அதிகம் பயன்படுத்தியவர். அவர் வாழ்ந்தபோது தொலைக்காட்சிப் பெட்டி இன்னும் எல்லாரையும் சென்றடையவில்லை. ஆனால், வீடுகளில் வானொலிப் பெட்டி இருந்தது. வானொலி வழியாக இவர் ஆற்றிய நற்செய்திப்பணி ஏராளமான உள்ளங்களைக் கடவுளிடம் கொண்டு வந்தது. இத்தகைய புகழ்பெற்ற பேராயர் திருமுழுக்கில் பயன்படுத்தப்படும் புனித நீர் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘சிறிது நீரை ஒரு குழந்தையின் உச்சந்தலையில் ஊற்றுவதால் என்ன நன்மை நடந்துவிடப் போகிறது?’ என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். ஒரு கொதிகலனில் இருக்கிற தண்ணீர் சாதாரண நிலையில் ஆற்றல் இல்லாததுதான்! ஆனால், அது சூடேற்றப்பட்டு நீராவியாக மாற்றப்படும்போது, அது தொடர்வண்டிகள் நாடுவிட்டு நாடு செல்ல உதவுகின்றது; கப்பல்கள் கண்டம் விட்டுக் கண்டம் பயணிக்கக் காரணமாக இருக்கிறது. அதேபோல தண்ணீர் சாதாரண நிலையில் ஒன்றுமில்லாததுதான். ஆனால், தூய ஆவியால் நிரப்பப்படும்போது, அது ஒரு சாதாரண மனித உயிரைக் கடவுளின் பிள்ளையாகவே மாற்றவல்லது.”

அகஸ்டின்:என்ன அற்புதமான உதாரணம்!”

அருள்பணி:புனித நீரின் ஆற்றல் என்ன என்பது குறித்து மேற்கண்ட செய்திகள் ஆன்மிகம் தொடர்புடையவை. இவை ஒருபுறம் இருக்க, புனிதப்படுத்தப்பட்ட நீரின் தன்மை என்ன என்பதை ஓர் அறிவியல் ஆய்வே நமக்கு எடுத்துரைக்கிறது.”

கிறிஸ்டினா:புனிதப்படுத்தப்பட்ட தண்ணீர் குறித்து அறிவியல் ஆய்வா? ஆச்சரியமாக இருக்கிறதே!”

அருள்பணி:இதைச் செய்தவர் மசாரு எமோட்டோ (Masaru Emoto) என்ற ஜப்பானைச் சேர்ந்த அறிவியலாளர். இவர் மாற்று மருத்துவத் துறையில் (Alternative medicines) நிபுணத்துவம் பெற்றவர். இவரது Messages from Water என்ற நூல் புகழ்பெற்றது. அவர் செய்த ஓர் ஆய்வை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். ஒரே நீரூற்றிலிருந்து ஒரே நேரத்தில் பெறப்பட்ட நீரை மூன்று பாத்திரங்களில் எமொட்டோ அடைத்தார். முதல் பாத்திரத்தில் இருந்த நீரை அவர் அப்படியே விட்டுவிட்டார். புனிதமான வாழ்க்கை வாழ்ந்த ஒருசிலரை அழைத்து, இரண்டாம் பாத்திரத்தில் இருந்த நீரை ஆசிர்வதிக்கக் கூறினார்; அதைப் பாராட்டக் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அடுத்தபடியாக, எதிர்மறையான மனநிலை கொண்ட சிலரை அழைத்து, மூன்றாவது பாத்திரத்தில் இருந்த நீரைத் திட்டவும் சபிக்கவும் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்பு மூன்று பாத்திரங்களையும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துப் பனிக்கட்டியாக்கினார். பனிக்கட்டியாக்கப்பட்ட நீரை நுண்ணோக்கியில் வைத்து, அவற்றின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்தார். அவரால் அவரது கண்களையே நம்ப முடியவில்லை. இச்செய்தியை மக்களுக்குக் கூறினால், அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். அவர் கண்டறிந்தது இதுதான்: முதல் பாத்திரத்தில் இருந்த நீரின் மூலக்கூறு அமைப்பு வழக்கமான நீரின் தன்மையுடையதாக இருந்தது; அறுங்கோணம் கொண்டதாக (Hexagonal structure) இருந்தது. இரண்டாவது பாத்திரத்தில் இருந்த நீர், அதாவது ஆசிர்வதிக்கப்பட்ட நீர், அறுங்கோண அமைப்போடு இருந்தது; அதன் அமைப்புமுறை சீரானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தன. மூலக்கூறுகள் ஒன்றன்மேல் ஒன்றாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததுபோல இருந்தன. புதிதாகப் பூத்த மலரில் காணப்படும் புத்துணர்வும்  ஈர்ப்பும் அதில் இருந்தன. மேலும், அதன் மூலக்கூறுகள் பெரிய அளவில் வளர்ந்திருந்ததோடு, மூலக்கூறுகளுக்கு இடையேயான இணைப்பும் (dendrites) அதிகமாயிருந்ததைக் கண்டார். மூன்றாவது பாத்திரத்தில் இருந்த, அதாவது சபிக்கப்பட்ட நீரின் மூலக்கூறு அமைப்பு மிகவும் சிதைந்த நிலையிலும் சீரற்ற நிலையிலும் இருப்பதைக் கண்டார். மேலும், அவற்றின் மூலக்கூறிலும் மூலக்கூறு அமைப்பிலும் எந்தவித ஒழுங்கமைவும் இல்லாததைக் கண்டார்.”

மார்த்தா:தந்தையே, நம்ப முடியாத உண்மையாக இருக்கிறதே!”

அருள்பணி:அது மட்டுமல்ல! அவர் ஆலயங்களிலும் புனித இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த புனித நீரை எடுத்துத் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் மூலக்கூறு அமைப்புகள் முற்றிலும் சீரானவையாகவும் சிறப்பானவையாகவும், இரண்டாவது பாத்திரத்தில் இருந்த நீரின் தன்மைகளைப் பெற்றவையாக இருப்பதைக் கண்டு கொண்டார்.”                          

(தொடரும்)

news
ஆன்மிகம்
உண்மையும் நன்மையும் (சதுக்கத்தின் சப்தம் – 4)

வாழ்க்கை என்பது ஓர் அழகான பரிசு! ஆனால், அது மெல்லியதும் உடைந்துபோகக்கூடியதுமாக இருக்கிறது. நோய் என்பது அவ்வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி. ஆனால், மரணம் தவிர்க்க முடியாத ஓர் உண்மை. நமக்கு வாழ்க்கையைக் கொடுத்த கடவுள்மீது நம்பிக்கையோடு இவற்றை எப்படி இணைக்க முடியும்?

நாம் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியாத நேரங்களில் கூட, ஒரு நிகழ்வு நமக்குத் தெளிவாகத் தெரிகிறது; அதாவது, கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததால், மரணம் தோற்கடிக்கப்பட்டது. ஆக, மரணம் ஒரு முடிவல்ல என்பதுதான். இதுவே இயேசுவின் மகத்துவம். இது மாற்கு நற்செய்தி 5-ஆம் அதிகாரத்தில் வரும்  உணர்ச்சி மிகுந்த நிகழ்வில் நாம் காண்கிற இயேசுவின் செயல் என்பதை மையமாகக் கொண்டு திருத்தந்தை லியோ அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரையில் எடுத்துரைக்கிறார்.

வாழ்க்கையை மிகவும் கடினப்பட்டு வாழும் நிலையானது, நமது காலத்தில் ஒரு பரவலான நோயாக இருக்கின்றது. எதார்த்தமான வாழ்வானது மிகவும் சிக்கலானதாகவும் கனமானதாகவும் எதிர்கொள்ள மிகவும் கடினமானதாகவும் நமக்குத் தெரிகிறது. எனவே, நமக்குள் நாமே புதைந்து கொண்டு, நம்மை நாமேசுவிட்ச் ஆஃப்செய்கிறோம். விழித்தெழுந்தால் வாழ்க்கையின் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்ற மாயையின் கீழ் உறங்கிவிடுகின்றோம். சில சமயங்களில் மற்றவர்களை முத்திரை குத்த விரும்புகிறவர்களின் தீர்ப்பால் நாம் தடுக்கப்பட்டதாக உணர்கிறோம்.

மாற்கு 5:21-43 -இல் எடுத்துரைக்கும் இரண்டு நிகழ்வுகளில் இச்சூழல் பின்னிப் பிணைந்துள்ளதை நாம் காணமுடியும். நற்செய்தியில் நாம் வாசிப்பது போல, ஆண்டவர் இயேசு தேவையுள்ள மக்களை எவ்வளவு பரிவுடன் அணுகினார் என்றும், நோயுற்றவர்களையும், இறப்பின் விளிம்பில் சென்றவர்களையும் தேடிப்போய், அவர்களுக்குக் குணமும் வாழ்வும் அளித்தார் என்றும் பார்க்கிறோம். இது வெறும் புற நோய்களுக்கான பதிலல்ல; பாவத்தால் பாதிக்கப்பட்ட நம் உள்ளங்களுக்காகவும், இறைவன் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் நம் குருட்டுத்தன்மைக்கு எதிராகவும் இயேசு எடுத்து வைத்த செயல்களே.

யாயிரின் மகள் & இரத்தப்போக்குடைய பெண்

யாயிரு என்கிற தொழுகைக்கூடத் தலைவர், தன் மகள் மிகவும் பாதிக்கப்பட்டு இறப்பின் எல்லையில் இருக்கிறாள் என்று கூறி இயேசுவை அணுகுகிறார். அந்த வழியில் பல ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் தவித்த பெண், தன்னைத் தூய்மையற்றவளாகக் கருதும் சமூகத்தில் அமைதியாக இயேசுவின் ஆடையைத் தொடுகிறாள். அவளுடைய நம்பிக்கையின் அடிப்படையில், இயேசு அவளுக்கு முழுமையான குணமாக்குதலை வழங்குகிறார். அவள் தைரியத்தையும் நம்பிக்கையையும் பாராட்டி, “மகளே, உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்றுஎன்று இயேசு கூறுகிறார். அவள் உளவியல் வாழ்வு மற்றும் சமூகப் பிரிக்கப்படுதலிலிருந்து மீட்கப்படுகிறாள்.

யாயிரு மகளின் மறு வாழ்வு

யாயிரின் மகள் இறந்துவிட்டாள் என்று அனைவரும் கூறும் வேளையில் இயேசு கூறுகிறார்: “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.” அதைக் கேட்டவர்கள் இயேசுவை இழிவாகப் பார்த்தனர், சிரித்தனர். ஆனால், யாயிரு தன்னை முழுவதுமாக ஆண்டவரிடம் ஒப்படைத்த நம்பிக்கையில் இயேசுவுடன் தொடர்கிறார். அந்த நம்பிக்கைக்குப் பதிலளிக்க இயேசு, இறந்த சிறுமியின் கையைப் பிடித்துதலித்தா கூம்எனக்கூறி அவளைக் கடவுளின் ஆற்றலால் உயிர்த்தெழச் செய்கிறார்.

இயேசுவே உயிரும் உயிர்த்தெழுதலும்

இந்த நிகழ்வுகள் மூலம் இயேசு, இறப்பு நமக்கு இறுதி அல்ல; அவர்தாமே உயிர்த்தெழுதல்; நிலை வாழ்வின் ஊற்றாக இருக்கிறார் என்று நிரூபிக்கிறார். இயேசு தமது சிலுவை மரணத்தினால் இறப்பைக் கடந்து நமக்கு நிலைவாழ்வு என்ற உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கிறார். இவை நமக்கு இரு நம்பிக்கையின் பாடங்களாக இருக்கின்றன: யாயிரு, இரத்தப்போக்கால் வாடும் பெண் மற்றும் நற்செய்தியில் வரும் பலர். இவர்கள் அனைவரும் நம்பிக்கையின் உறுதியை நமக்குக் கற்பிக்கின்றனர். நாமும் நம்மை அவர்களுடன் இணைத்துக்கொண்டு, மாற்கு 9:24-இல் உள்ள அந்த அழகான செபத்தைக் கூறலாம்: “ஆண்டவரே, நான் நம்புகிறேன்; என் நம்பிக்கையின்மையைக் குணப்படுத்தும்!”.

யார் இந்த இரண்டு பெண்கள்?

1. முதல் பெண் 12 ஆண்டுகளாக இரத்தம் வழிந்து நடமாடி வருகிறாள்; அதனால் நீதியற்றவளாகத் தள்ளப்பட்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையை உருவாக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

2. யாயிரின் மகள் 12 வயது இளம்பெண்; திருமணத்திற்குத் தகுதியான வயது. ஆனால், அவளின் வாழ்க்கை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது - அவள் இறந்துவிட்டாள்.

இந்த இரண்டு பெண்களும் இஸ்ரயேலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். முதலாம் பெண், ஆண்டவரின் மணவாட்டியாக இருந்த இஸ்ரயேல், தனது கணவனை விட்டு விலகி, அசுத்தமாகி, வாழ்வை உருவாக்க இயலாத நிலையில் உள்ளதைக் குறிக்கிறாள். அவள் மீண்டும் குணமடைய வேண்டுமென்றால், கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் அவள் பழைய நிலையை விட்டுவிட்டு, புதிதாக வாழ்க்கையை அளிக்கக்கூடியவளாக மாறுவாள்.

இரண்டாவது பெண்ணான யாயிரின் மகள் இஸ்ரயேலைக் குறிக்கிறாள். இஸ்ரயேல் ஆண்டவரின் மணமகள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தனது மணமகன் அவளைத் தனது கையால் தூக்கிக்கொள்ளாவிடில், அவள் சாவுக்குள் தற்காலிகமாகவே நிற்கின்றாள். அவள் வயது வாழ்க்கையை உருவாக்கக்கூடியது - ஆனால், இப்போது அவள் சாவை அடைந்திருக்கிறாள். இந்த வாழ்க்கை இழப்பை நிறுத்த முடியாது.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்காமல் இருக்க பெரும் பணத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், திருப்பாடல் 49 இதைக் கூறுகிறது: “நீ எவ்வளவு கொடுத்தாலும், அது உன் உயிரை மீட்கப் போதுமானதாக இருக்காது. நீ என்றென்றும் வாழ முடியாது.” ஆனால், இந்தப் பெண் வாழ்க்கை இழப்பை நிறுத்தக்கூடிய ஒருவரைப் பற்றிக் கேட்டிருக்கிறாள். அவள் அவர்மேல் நம்பிக்கை வைத்துக் கூறுகிறாள்: “அவருடைய ஆடையின் விளிம்பையேனும் தொட முடிந்தால், நான் பிழைத்துவிடுவேன்.” அவள்குணமடைவேன்என்று அல்ல; மாறாக, ‘பிழைத்துவிடுவேன்என்று கூறுகிறாள். ‘பிழைத்தல்என்பது இனி வாழ்க்கை இழப்பில்லை என்பதைக் குறிக்கிறது.

வாழ்வைக் கொடுத்த வாழ்க்கைப் பாடம்

மூன்று முறை எமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற நடிகையும் பாடகியுமான அன் ஜில்லியன், அமெரிக்காவில் பிறந்த உரோமன் கத்தோலிக்க லிதுவேனியக் குடிபெயர்ந்தோர் மகளாவார். 1985 முதல் தன்னுடைய தனிப்பட்ட நகைச்சுவையும் ஊக்கமளிக்கும் உரையாடலும் சேர்ந்த ஒவ்வொரு நிகழ்வும், அவரது புகழுக்கு மேலும் ஒளிவளிக்கச் செய்தது.

1985-இல் அவள் 35 வயதாக இருந்தபோது மார்பகப் புற்றுநோயாகக் கண்டறியப்பட்டதிலிருந்து அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். தன் உடலில் கண்ட ஒரு வீக்கத்தின் தன்மை பற்றி தெரிந்துகொள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், St. Francis de Sales தேவாலயத்தில் நின்று, கதவிலிருந்த வரிகளை வாசித்தார்: “இன்று உன்னைக் காக்கும் அதே நிலையான கடவுள், நாளையும் உன்னைக் காப்பார். அவர் உன்னைத் துன்பத்திலிருந்து காப்பார் அல்லது அதைச் சுமக்கக்கூடிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் உனக்கு அளிப்பார். ஆகவே, அமைதியுடன் இரு; கவலை, கலக்கம், கற்பனைகளை ஒதுக்கிவிடு.” அந்தத் தேவாலயத்திற்குள் சென்ற அவர், தன்னுடைய சோதனைகளை ஏற்கும் ஆற்றலுக்காகச் செபித்தார். பின்னர் அவர் மேற்கொண்ட இரட்டை மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பிறகும், அவர் காட்டிய இறைநம்பிக்கையும் உள்ளமைதியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. மேலும், பல புற்றுநோயாளிகளுக்கான ஊக்கமாகவும் அமைந்தது. அவர் நம்பிக்கையுடன் குணமடைந்தார். இயேசு நம்மிடமும் கூறுவது: “அஞ்சாதே, நம்பிக்கையை மட்டும் விடாதே (மாற் 5:36).

1. இயேசு நம்மை நாம் உள்ளபடியே ஏற்கிறார். எனவே, நமக்குத் தகுந்த நம்பிக்கையும் தூய எண்ணங்களும் வந்த பிறகே இயேசுவிடம் வரவேண்டும் என்ற தேவையில்லை. நம் துன்பங்களையும் குழப்பங்களையும் குறைந்த நம்பிக்கையோடும் கூட அவரிடம் கொண்டுவரலாம்.

2. நாம் இயேசுவின் குணப்படுத்தும் தொடுதலை உணர்ந்து, உடல் மற்றும் மனத்தின் புண்களை அவரிடம் திறந்து சொல்லி, அவர் குணப்படுத்தும் அருளில் நம்பிக்கை கொள்வோம்.