இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புகூர வேண்டும் என்ற அன்புக் கட்டளை மையம் கொண்டுள்ளது. இக்கட்டளை கிறித்தவத்தின் அடையாளமல்ல; மாறாக, மனிதாபிமானத்தின் ஆழமான வெளிப்பாடு; உடன்பிறந்த உறவு; மனித வாழ்க்கையின் அடித்தளம்.
நமது
பிறப்பு முதல் வளர்ச்சிவரை, பிறருடனான உறவுகளின் ஆதரவு இல்லாமல் நாம் வாழமுடியாது.
இருப்பினும், உலகம் இன்று மோதல்கள், அநீதிகள், தனிமைகள் மற்றும் வெறுப்பால் சிதறிப்போயுள்ளது.
இந்த இருளை வெல்லும் ஒரே ஒளி உடன்பிறந்த அன்பே (யோவா 15;12-15) என்ற மையப்பொருளோடு
நமது திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.
அன்பில் வீரம்: மில்டன்
ஆலிவ்
சிகாகோவில்
‘மில்டன் ஆலிவ் பார்க்’ என்ற ஒரு நகராட்சி பூங்கா உள்ளது. இந்தப்
பூங்காவின் பெயர் ஒரு வீரத்தின் நினைவாக வைக்கப்பட்டது. மில்டன் ஆலிவ் என்பவர் 19 வயது
போர்வீரர். அவர் வியட்நாமில் போராடியவர். 1965, அக்டோபரில் ஒரு கையெறி குண்டு நேரடியாக
வெடிக்க இருந்தபோது, அவர் தன்னைத்தானே குண்டின்மீது வீசி, நான்கு தோழர்களின் உயிரைக்
காப்பாற்றினார். மில்டன் ஆலிவ் தன் உயிரை இழந்தபின், அவருக்கு மரியாதை பதக்கம் வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் கூறியதாவது: “அவர் இறக்க முடிவு
செய்த அந்த நிமிடம் மிகவும் கடினமானது. அதேநேரத்தில் அவர் மற்றவர்களை முதலிடத்தில்
வைத்து, தன்னைக் கடைசியில் வைத்தார். இது எவ்விதமான மனிதனாலும் எடுக்க முடியாத உயர்ந்த
முடிவாகும் என்று நான் நம்புகிறேன்.” எனவே, அந்த வீரத்தின் நினைவாக, பூங்காவின் பெயர்
‘மில்டன் ஆலிவ் பார்க்’ என்று வைக்கப்பட்டுள்ளது. மில்டன் ஆலிவ்
எதிர்கொண்ட சூழ்நிலை கடுமையாக இருந்தது. ஆனால், எவ்வளவு சுலபமான சூழ்நிலைகளில்கூட,
மற்றவர்களை முன்வைத்துக்கொள்வதில் நாம் தயாராக இருக்கிறோமா?
ஒரு
ஹீரோ எப்போதும் கூறுவதுபோல, “ஒரு ஹீரோ தன்னால் பாதுகாக்க முடியாததைத் தியாகம் செய்து,
மற்றவர்களைக் காப்பாற்றுகிறான்.” ஆனால், நம்முடைய நாயகன் இயேசுவோ நம்மீது கொண்ட அன்பினால்
தம்மால் இயன்றபோதும் கூட மற்றவரைத் துன்புறுத்தாது, தாமே தம் சாவை வலிந்து பற்றிக்கொண்டார்.
இயேசுவின் நண்பர்கள்
யார்? கிறித்தவ வாழ்வின் நான்கு முக்கிய அடையாளங்கள்
மனித
வாழ்க்கையில் நட்பு ஒரு பெரும் செல்வம். ஆனால், இந்த உலகின் எந்த உறவையும் மிஞ்சும்
உயர்ந்த உறவு ஒன்று உள்ளது; அது இயேசுவின் அன்பு நட்புறவு! யோவான் 15:12-17-இல் இயேசு,
“நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நீங்கள் என் நண்பர்கள்” என்று கூறுகையில், தன்னைத்தானே எல்லாருக்கும் நண்பன் என
அறிவிப்பதில்லை; மாறாக, தமது நண்பர்களின் பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார். இன்று நாமும்
அந்த நற்செய்தி சத்தியத்தை ஆராய்ந்து, இயேசு நம்மைத் தம் ‘நண்பர்கள்’ என்று அழைப்பாரா? என்பதைப் பார்ப்போம்.
1. அன்பு - இயேசுவின்
நண்பர்களின் முதன்மை அடையாளம் (யோவா 15:12-13,17)
இயேசு
தமது சீடர்களை, “ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்” என்று
ஒரே இரவில் பலமுறை கட்டளையிட்டார். ஏனெனில், அன்பு பளபளக்கும் வார்த்தை அல்ல; தன்னலமில்லாத
அர்ப்பணிப்பு. அவருடைய அன்பு என்பது சிலுவையில் தம்மைத் தாமே பலியாக அளித்த அன்பு.
இன்றும் கிறித்தவர்கள் நடுவே பல மோதல்கள், பிளவுகள் ஏற்படுவதற்குக் காரணம் தன்னலம்.
அன்பு உணர்ச்சி மட்டுமல்ல, அது செயலாக வெளிப்படும் தியாகம். வீட்டில், தேவாலயத்தில்,
சமூகத்தில் நாமே முதலில் தன்னலத்தை மறுத்து, மற்றவரின் நன்மையை நாடும்போதுதான் கிறிஸ்துவின்
அன்பு தெரிய வரும்.
இயேசுவின்
சீடர்கள் ஒரேமாதிரியான மனிதர்கள் அல்லர்; மத்தேயு - உரோமை பேரரசின் அதிகாரி; சீமோன்
- உரோமை அரசுக்கு எதிராகப் போராடிய தீவிரவாதி. இருவரையும் ஒரே குழுவில் வைத்து, “அன்பு
செய்யுங்கள்” என்று கட்டளையிட்டது அன்பின் உண்மையான
சோதனை. தேவாலயங்களிலும் இதே சோதனை இன்று நடக்கிறது. இயேசுவின் நண்பராக இருக்க விரும்புகிறவர்களுக்கு
அன்பு கட்டாயம்!
2. கீழ்ப்படிதல் - நட்பின்
உறுதியான அடையாளம் (யோவா 15:14)
இயேசு
கூறுகிறார்: “என் கட்டளைகளைச் கடைப்பிடித்தால் நீங்கள் என் நண்பர்கள்.” கீழ்ப்படிதல்
நம்மை நண்பர் ஆக்குவதில்லை; ஆனால், நண்பனாகியவரின் அடையாளம் அதுவே. இயேசுவுடன் நெருக்கம்,
அவரது வார்த்தையை அறிந்து, அதை வாழ்வில் செயல்படுத்தும் இடத்தில்தான் இருக்கிறது. இயேசுவின்
நண்பர் என்ற பெயர் வாயால் கூறப்படும் ஒரு பட்டம் அல்ல; வாழ்க்கை நடத்தையால் தெரியும்
ஓர் உண்மை.
3. உண்மையைப் புரிந்துகொள்ளுதல்
- நண்பர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு (யோவா 15:15)
அடிமைக்குத்
தலைவனின் நோக்கம் தெரியாது. ஆனால், நண்பருக்கு எல்லாம் வெளிப்படையாகக் கூறப்படும்.
அதுபோல இயேசு, தந்தையிடமிருந்து கேட்ட அனைத்தையும் தமது சீடர்களோடு பகிர்ந்தார்.
இன்று
நமக்காகத் தூய ஆவி மற்றும் இறை வார்த்தைகள் இறைவனுடைய நோக்கங்கள், நியாயங்கள், உண்மைகளை
வெளிப்படுத்துகின்றன. இதனால் கிறித்தவர்கள் உலகத்தின் எந்த ஞானியையும் மிஞ்சிச் செல்லும்
உண்மையை அறிகிறார்கள்:
•
படைப்பாளியான கடவுளை அறிதல்.
• மீட்பின் வழியை, அருளைப் புரிதல்.
• நிலைவாழ்வின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துதல்.
• வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இறைவனுடைய
நோக்கத்தை ஆழமாக அறிதல்.
• உண்மையைப் புரிந்து, அதன்படி வாழ்வதே
இயேசுவின் நண்பர்களின் மற்றோர் அடையாளம்.
4. கனி கொடுத்தல் - தேர்வுக்குரிய
நோக்கம் (யோவா 15:16)
இயேசு
தெளிவாகக் கூறுகிறார்: “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.”
அவரது அழைப்பு வெறும் மீட்புக்காக மட்டுமல்ல; மாறாக, கனி கொடுக்க. இந்தக் கனி கிறிஸ்துவைச்
சந்திக்கும் ஆத்துமாக்கள். அவர்களை அவர் காக்கிறார்; அவர்களின் வாழ்க்கை நிலைத்த கனி.
ஆனால், கனி அளிப்பது மனித முயற்சியால் அல்ல, செபத்தால்! இறைவன் மட்டுமே தமது இதயத்தைத்
திறந்து புதிய வாழ்க்கை அளிக்க முடியும்.
“அனைவரும்
சகோதர-சகோதரிகள்” என அசிசியின் புனித பிரான்சிஸ் அறிவித்த
ஆத்தும குரல், இன்றும் அதே வலிமையுடன் நம்மில் ஒலிக்கிறது. மனிதர்களை வேறுபடுத்தாமல்
ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க அழைக்கிறது நமது கிறித்தவ வாழ்வு. திருத்தந்தை பிரான்சிஸ்
வெளியிட்ட ‘Fratelli tutti’ இப்படிப்பட்ட உலகளாவிய சகோதரத்துவத்தை
மீண்டும் நினைவூட்டி, ‘இயேசுவின் அன்புக் கட்டளை புதியது; ஏனெனில், அதனை அவர் சிலுவையில்
முழுமைப்படுத்தினார்’ என்கிறது.
“நான்
உங்களிடம் அன்புகொண்டதுபோல...” என்பது ஒரு குடும்ப மரபு அன்பல்ல; தியாகமும் மன்னிப்பும்
நிறைந்த மறுபிறப்பு அன்பு. இந்த அன்பு நம்மைச் சுயநலம், பிரிவினை, பகைமை ஆகியவற்றிலிருந்து
விடுவித்து, கிறிஸ்துவின் ஆவியில் புதுப்பிக்கிறது. நாம் உண்மையிலே ‘உடன்பிறந்தோர்’ என வாழத்தொடங்கும்போது, கிறிஸ்துவின் பாதை நம்முடைய வாழ்க்கையில்
வெளிச்சமாகிறது. எனவே, அன்பில் ஒன்றிப்போம்; கிறிஸ்துவின் சமாதானத்தை உலகில் விதைப்போம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இயேசு நம்மீது அன்புகூர்ந்தார்’ (Dilexit Nos) என்ற தனது 4-வது சுற்றுமடலை 2024-இல் வெளியிட்டார். அதில் இயேசுவின் திரு இருதய இறை-மனித அன்பை மிக அருமையாக எடுத்துக்காட்டுகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின்
நான்கு
சுற்றுமடல்கள்
1. Lumen
Fidei – The Light of Faith’ - ‘நம்பிக்கையின்
ஒளி’
- திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களோடு இணைந்து 2013-இல் வெளியிட்ட சுற்றுமடல்.
2. ‘Laudato
Si’- ‘நம்
பொது இல்லமாகிய பூமியைப் பாதுகாத்தல்’, 2015.
3. ‘Fratelli
Tutti’ - ‘அனைவரும்
உடன்பிறந்தோர்’, 2020.
4. Dilexit
Nos’ - ‘அவர்
நம்மை அன்பு செய்தார்.’ இயேசுவின் திரு இருதய இறை-மனித அன்பு, 2024.
தொடர்ந்து
திரு அவை ஏழை எளியவர்மீது கொள்ளவேண்டிய அன்பு, அக்கறை என்ற ஊக்க உரையை தன் வாழ்வின் இறுதிநாள்களில் எழுதத் தொடங்கினார். கிறிஸ்து நம் ஒவ்வொருவரிடமும் நேரடியாகப் பேசுவதுபோல - “நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்”
(திவெ 3:9) என்ற தலைப்பை, தான் எழுதத் தொடங்கிய ஊக்க உரைக்குக் கொடுத்தார். இதை எழுதி நிறைவு செய்வதற்குமுன் இறைவன் அவரைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார்.
“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். அவர் எழுதத் தொடங்கிய உரையோடு எனது சில சிந்தனைகளையும் சேர்த்துக்கொள்கிறேன். எனது ஆட்சியின் தொடக்கத்தில் புனித பிரான்சிஸ்கு அசிசியாரின் நினைவு நாளாகிய 04.10.2025-இல் இதில் கையொப்பமிட்டு, 9-ஆம் தேதி ‘Dilexi Te’ - ‘நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்’
(திவெ 3:9) என்ற என் திருத்தூது ஊக்க உரையாக வெளியிடுகிறேன்” என்கிறார்
திருத்தந்தை லியோ அவர்கள்.
எல்லாக்
கிறித்தவர்களும் கிறிஸ்துவின் அன்பையும், அதோடு மிக நெருங்கிய தொடர்புடைய கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க இயலாத திரு அவை, ஏழைகள்மீது கொண்ட அன்பும் அக்கறையும் இந்தத் திருத்தூது ஊக்க உரையின் மையக்கருத்தாகும். இதை நான் ஐந்து தலைப்புகளில் விரித்துரைக்கிறேன். அவை முறையே:
1. ஒருசில
முகாமையான வார்த்தைகள் -A Few Essential Words.
2. கடவுள்
ஏழைகளைத் தேர்ந்தெடுக்கிறார் - God Chooses the Poor.
3. ஏழைகளுக்கான
திரு அவை - A Church for the Poor.
4. தொடரும்
வரலாறு - A History that Continues.
5. நிரந்தர
சவால் - Constant Challenge
‘நான் உன்மீது
அன்பு
செலுத்தி
வருகிறேன்’
(Dilexi Te)
முகாமையான
சில வார்த்தை கள் - A Few Essential Words.
முதல்
அதிகாரம் பெண் ஒருவர் இயேசுவின் தலையில் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை ஊற்றுவதோடு தொடங்குகிறது (மத் 26:6-13). சில சீடர்கள் இதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே எனக் கோபமடைந்தனர். ஆனால்,
அப்பெண் இயேசுவில் துன்புறும் மெசியாவைக் காண்கிறார். இன்னும் சில நாள்களில் இத்தலையில் முள்முடி வைத்து அழுத்தப்படும். எனவே, இப்பெண் இப்போதே இயேசுமீது தனது முழு அன்பையும் பொழிகிறார். இச்செயல் இயேசுவுக்கு அதிக ஆறுதல் அளித்திருக்க வேண்டும்.
“ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்; ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. என்னுடைய அடக்கத்திற்கு இப்பெண் என்னை ஆயத்தம் செய்திருக்கிறார்” என்றார்
இயேசு. மேலும், “உலகில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார்” என்றார்.
இதனால் ஏழைகளுக்கு துன்பத்தில், பிரச்சினைகளில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் மிகச்சிறிய அன்புச் செயலும் மறக்கப்படாது; மாறாக, நினைவுகூரப்படும். இத்தனைக்கும் இப்பெண் ஊர் பேர் தெரியாத ஒருவர்.
ஆண்டவரை
அன்பு செய்வதென்பது ஏழைகளை அன்பு செய்வதாகும். “சின்னஞ் சிறியோருக்குச் செய்தது, எனக்குச் செய்தது...” (மத் 25:40) என மக்களினத்தார் அனைவருக்கும்
தீர்ப்பு நிகழ்வில் மிகத் தெளிவாகக் கூறுகிறார் ஆண்டவர்.
சின்னஞ்சிறியோருக்குச்
செய்வது வரலாற்று இயேசுவைச் சந்திப்பதற்கு மிக அடிப்படையான வழி என இயேசு இங்கே
வெளிப்படுத்துகிறார்.
ஏழைகள் வழியாக இன்று கிறிஸ்து நம்மிடம் பேசுகிறார்.
கர்தினால்
ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் அருகில் பிரேசில் நாட்டு கர்தினால் கிளாடியோ ஹமூமஸ் இருந்தார். அவர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோவை அரவணைத்துக் கொண்டு, “ஏழைகளை மறந்துவிடாதீர்கள்” என்றார்.
உடனே புனித பிரான்சிஸ் அசிசியார் இவரது நினைவுக்கு வந்தார். அவருடைய பெயரையே திருத்தந்தை எடுத்துக்கொண்டார். இந்தப் பெயரை இதற்கு முன் எந்தத் திருத்தந்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. புனித பிரான்சிஸ் அசிசி என்ற பெயர் ஏழைகளின் அடையாளம், குறியீடு. ஏழைத் தொழுநோயாளியில் கிறிஸ்துவைச் சந்தித்த நிகழ்வுதானே அசிசியாரின் வாழ்வையே மாற்றியது!
புனித
பவுல் எருசலேமுக்குச் சென்றபோது அங்குள்ள மூப்பர்களை, “ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம்”
எனக் கேட்டுக்கொண்டார். “அதைச் செய்வதிலே நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்” (கலா
2:10) என்றார் பவுல்.
இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கமும் திருத்தந்தை புனித 6-ஆம் பவுலும் திரு அவை பின்பற்ற வேண்டிய ஆன்மிகத்திற்கு, நல்ல சமாரியர் அடிபட்டுக் கிடந்தவருக்கு உதவிய உவமையை நம் கண்முன் வைக்கின்றனர்.
ஏழைகளுக்கு
முன்னுரிமை கொடுத்து உதவுவது என்பது திரு அவையையும், நாம் வாழும் சமுதாயத்தையும் புதுப்பிக்கும்; சுயநலத்திலிருந்து நம்மை விடுவிக்கும்; ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுக்க உதவும்.
இவ்வாறே
பழைய ஏற்பாட்டில் யாவே கடவுள் எகிப்தில் அடிமைப்பட்டுக்கிடந்த ஏழை இஸ்ரயேலரின் கூக்குரலைக் கேட்டு, மோசே வழியாக அவர்களை விடுவித்தார் (விப 3:7-12).
ஏழைகளின்
குரலைக் கேட்கும்போது, நாம் இறைவனின் இதயத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுகிறோம். எப்போதும் இறைவன் ஏழைகள், துன்பப்படுவோர், தேவையில் இருப்பவர்கள் குறித்து மிகுந்த அக்கறை கொள்கிறார். ஏழைகளின் குரலை நாம் கேட்கவில்லையெனில், அவர்கள் ஆண்டவரை நோக்கி நமக்கு எதிராக முறையிடுவர். அது நம்மைக் குற்றத்திற்கு உள்ளாக்கும் (இச 15:9).
பலவகையான
ஏழ்மைகள் உள்ளன. அடிப்படைத் தேவையின்றி உழலும் ஏழ்மை, சமுதாயத்தால் ஒதுக்கப்படும் ஏழ்மை, தங்களுடைய மனித மாண்புக்கும் சுதந்திரத்திற்கும் குரலெழுப்ப முடியாத ஏழ்மை, மின்சாரம் இன்றி வாழும் ஏழ்மை (இது ஏழ்மையாகக் கருதப்படுவதில்லை). இத்தகைய ஏழ்மைகள் செய்தித்தாள்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை.
பெண்கள்
இரண்டு மடங்கு ஏழைகளாக்கப்படுகின்றனர். இவர்களைத் தந்தை வழி ஆணாதிக்கச் சமுதாயம் ஒதுக்குகிறது. இவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தங்கள் உரிமைகளை நிலைநாட்ட இயலாதவர்களாக ஆக்கப்படுகின்றனர். இப்படியெல்லாம் இருந்தும் பெண்கள்தான் குடும்பப் பாரத்தைச் சுமந்து நிற்கின்றனர்.
கருத்தியல்
முற்சார்புகள், ஏழ்மை என்பது முன்போல் இல்லை, பொருளாதாரத்தில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்கிறது. இது ஒருவகையில் உண்மைதான். ஆனால், இன்று வறுமையும் ஏழ்மையும் மிக அதிகமாகவே கூடியிருக்கின்றன. ஒருங்கிணைந்த முழு மனித வளர்ச்சி இல்லை. உண்மையான எதார்த்தம் நம் கண்களைக் குருடாக்குகிறது.
ஏழைகள்மட்டிலான
இரக்கச் செயல்பாடுகளுக்கு நம்மில் ஒருமனநிலை மாற்றம்வேண்டும்.
கத்தோலிக்க உலகில் ஒரு புயல் அடிப்பது போல, சமூக ஊடகங்களில் ஒரு குழப்பச் செய்தி வலம் வந்து திரு அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுதான் அன்னை மரியா பற்றிய செய்தி. இவ்வருடம் 2025, நவம்பர் 4-ஆம் தேதி புனித சார்லஸ் பொரேமியோ திருநாளன்று வத்திக்கானின் நம்பிக்கைக் கோட்பாட்டுத் திருப்பேராயம் (Dicastery for the Doctrine of the Faith) மேற்கூறிய ஓர் அறிக்கையை (Doctrinal Note), “Mater Populi Fidelis” (Mother of the Faithful People) - இறை நம்பிக்கையாளர்களின் அன்னை என்னும் பெயரில் வெளியிட்டது. ஆனால், இந்நம்பிக்கைக் கோட்பாட்டு அறிக்கை பல்லாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, திருத்தந்தையின் ஒப்புதலுக்காகக் காத்திருந்து, பின்னர் 2025 அக்டோபர் 7-ஆம் தேதி செபமாலை மாதா திருவிழா அன்று திருத்தந்தை லியோ அதற்கு ஒப்புதல் கொடுத்துக் கையெழுத்திட்டார். நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் அவர்களைப் பிரகடனப்படுத்தக் கூறினார். இவ்வாறு இவ்வேடு பிரகடனப்படுத்தப்பட்டு, திரு அவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இவ்வேடு குழப்பவுமில்லை; மாதா பக்தியைக் குறைப்பதுமில்லை. இதை விளக்க கீழ்க்காணும் மூன்று ஆய்வுகள் செய்வோம்:
1. 80 எண்கள் கொண்ட
இவ்வேடு அன்னை மரியா பற்றிய திரு அவையின் போதனையாகக் கூறுவதென்ன?
2. திரு
அவை சட்ட முறைப்படி இதன் கனம் என்ன? நம்பிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?
3. எதுவும்
தடை செய்யப்பட்டதா?
1. திருப்பேராயத்தின்
இவ்வறிக்கை உண்மையிலே அன்னை மரியா பற்றிய இறையியலின் ஓர் அருமையான தொகுப்பு. ஒரு மரியியல் (Mariology) கருவூலம்.
இதன் பின்புலம் என்ன? கடந்த அரை நூற்றாண்டாகக் கத்தோலிக்கத் திரு அவையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை மரியாவை ‘இணை மீட்பாளர்’ (Co-Redemptrix) என
அறிவிக்க வேண்டும் என்று நம்பிக்கையாளர்களிடமிருந்து
கோரிக்கைகள் வந்த வண்ணமாய் உள்ளன. அன்னை மரியா பற்றிய இந்த 5-வது கோட்பாட்டைத் திரு அவை அறிவிக்கவேண்டும் என்று தொடர் வேண்டுதல்கள் எழும்பிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு உறுதிபட பதிலளிக்கவே இவ்வேடு திரு அவையின் ஆசிரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேட்டின் சாராம்சம் இதுவே:
இவ்வேடு
அன்னை மரியா பற்றிய கீழ்க்காணும் இரண்டு சொற்றொடர்களைக் (Titles of Mary) கவனமாக
ஆய்வு செய்து, அவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. அவை முறையே: i) அன்னை மரியா, இணை மீட்பர் (Co-Redemptrix); ii) அன்னை
மரியா அனைத்து வரங்களையும் பெற்றுத்தரும் இடைநிலையாளர் (Media trix of All Graces). திரு
அவையின் இந்த இரு போதனைகளும், “கடவுள் ஒருவரே; கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்”
(1திமோ 2:5) என்ற திருவிவிலியத்தின் அடிப்படையிலும், “இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திப
4:12) என்ற இறைவார்த்தையின் அடிப்படையிலும், அன்னை மரியா அல்லர் (எண்கள் 28-33); மாறாக, கிறிஸ்துவே மீட்பர்; மீட்பருக்கு இணையாக எவரையும் கருதக்கூடாது என அறிவுறுத்துகின்றது இவ்வேடு. அதேபோல
இறைவனிடமிருந்து மீட்பையும் வரங்களையும் பெற்றுத் தருபவர் கிறிஸ்துவே (எண் 50-61) என்றும் உறுதிபட விளக்குகின்றது இவ்வேடு.
மனிதர்
என்ற முறையில் அன்னை மரியாவே கிறிஸ்துவால்தான் மீட்கப்பட்டிருக்கிறார் என்பது தான் இறையியல் உண்மை. இதுதான் இவ்வேட்டின் சாராம்சம். இதை முழுமையாகப் படிக்காமல் ஊடகங்கள் குழப்புவது போன்றும், அன்னை மரியா வணக்கத்தைக் குறைப்பது போன்றும், பிரிவினை சபை போலக் கத்தோலிக்கத் திரு அவை மாறுகின்றதா? என்றும் கருத்துத் தெரிவித்துள்ளன. இது அறியாமையின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
2. திரு
அவைச் சட்டம் 750-இன்படி திருவிவிலியத்திலும் (Scripture) மற்றும்
வாழையடி வாழையாகத் திரு அவை மரபு (Tradition) வழியாகவும்,
கத்தோலிக்கத் திரு அவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக் கோட்பாடுகளை (Doctrines), திரு
அவையின் ஆசிரியம், (Solemn Magisterium) உலகளாவிய
ஆசிரியப் போதனையாக அல்லது இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட (divinely revealed) போதனையாக ஒரு கோட்பாட்டை அறிவிக்கும்போது, நம்பிக்கையாளர் அனைவரும் அப்போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத் திருத்தந்தையே அறிவிக்கலாம் அல்லது திருப்பேராயங்களின் (Dicastery) வழி
அறிவிக்கலாம். இப்போதனைக்கெதிரான கோட்பாடுகளையும் கருத்துகளையும் தவிர்க்க வேண்டியது நம்பிக்கையாளர்களின் கடமை.
தி.ச. 752 கூறுகின்றது: ‘நம்பிக்கையாளர்கள் அனைவரும் அப்போதனைக்கு அறிவு மற்றும் மனம் சார்ந்த ஏற்றுக்கொள்ளலை (a religious submission
of intellect and will) வழங்க
வேண்டும்.’ நமது இறையியல் சிந்தனைகளையும் கருத்துகளையும் அதிகாரப்பூர்வமான இப்போதனையின்படி முறைப்படுத்த வேண்டும். திறந்த மனத்துடனும், திரு அவையின் ஆசிரியத்திற்குக் கீழ்ப்படிதல் மனநிலையுடனும் இப்போதனையை (Infallibility) ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
அதேவேளை,
இது வழுவா வரம் (Immaculate Conception) உடைய
போதனை அல்ல; தி.ச. 749-இன்படி
திருத்தந்தை, நம்பிக்கை
மற்றும் அறநெறி (Faith and Morals) சார்ந்த
போதனையைக் கோட்பாடாகத் திருத்தந்தை அறுதியிட்டு அறிவிக்கும்போது மட்டுமே அது வழுவா வரம் பெற்ற கோட்பாடாகின்றது. அதை எதிர்க்கும் அல்லது முரண்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும் நம்பிக்கையாளர்கள் திரு அவையின் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். (உ.ம்.) ‘அன்னை
மரியா அமல உற்பவி’
(Immaculate Conception) என்ற
கோட்பாடு.
3. அன்னை
மரியா பக்தி அல்லது மரியியல் இறையியல் கருத்துகள் ஊடகங்களில் வந்தது போல எதுவும் தடை செய்யப்படவில்லை. தற்போது இப்படி உரைப்பது சரியானதல்ல (எண் 22: ‘it is always
inappropriate to use the title “Co-redemptrix” to define Mary’s
cooperation’) என்றுதான் கூறுகின்றது. அன்னை மரியா இணை மீட்பர் (Co-Redemptrix) எனத்
திரு அவையில் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகளுக்குப் பதில் வழங்கியுள்ளது இத்திருப்பேராயம். இவ்வேடு அன்னை மரியா எப்படி மீட்புத் திட்டத்தில் ‘ஆம்’ எனக் கூறி (லூக் 1:38) பங்கேற்றது முதல் கல்வாரியில் இறுதிவரை மனுக்குல மீட்பின் தாயாக (யோவா 19:25) கிறிஸ்துவாலேயே வழங்கப்பட்டு கிறிஸ்துவின் முதன்மைச் சீடராக (எண் 73) விளங்குகிறார் என்பதை எண்கள் 6,7,8-இல் கூறுகின்றது. பின்னர் எபேசு மற்றும் நிசேயா திருச்சங்கங்களில் மரியா, ‘இறைவனின் தாய்’
(Theotokos) மற்றும் ‘என்றும்
கன்னி’ (virgininty
of Mary) என்ற
போதனைகளை நினைவூட்டி ( எண். 10, 11), பின்னர் வத்திக்கான் ஏடுகள், குறிப்பாக, ‘திரு அவை’ ஏடு வழி (Lumen Gentium No. 62, 66, 69) மீட்புத் திட்டத்தில்
மரியாவின் பங்கு பற்றியும் மற்றும் திருத்தந்தையரின் ஏடுகள், குறிப்பாக, புனித இரண்டாம் ஜான்பாலின் 1987-இல் வந்த ‘மீட்பரின் அன்னை’
(Redemptoris Mater no.
4, 38) போன்ற திருத்தந்தை சுற்றுமடலையும், புனித அகுஸ்தின், பொனவெந்தூர் போன்ற மறை வல்லுநர்களின் கருத்துகளையும் தாங்கிய ஒரு பெட்டகமாக இவ்வேடு வெளிவந்துள்ளது.
தனிப்பட்ட
விதத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அன்னை மரியாமய ஆன்மிகத்தையே என் குருத்துவத் தனிப்பட்ட வரமாகவும் வாழ்வாகவும் கொண்டு, அது பற்றிய நூல் வெளியிட்டு இருக்கும் எனக்கு, தொடக்கத்தில் கேள்விப்பட்டவுடனே குழப்பமிருந்தாலும் ஏட்டின் திரு அவையின் போதனையைப் படித்து, எனது தனிப்பட்ட விருப்ப அறிவை விடுத்து, திரு அவை ஆசிரியத்தின் போதனையை ஏற்றுக்கொண்டவுடன் தெளிவு பிறந்தது. இப்படிப்பட்ட மனநிலையே ஒவ்வொரு நம்பிக்கையாளர்களுக்குள்ளும்
எழவேண்டும். அதுதான் கத்தோலிக்கக் கிறித்தவம்.
ஒரு நபர், ஒரு நிகழ்வு, ஒரு வார்த்தை
தமிழ்க்
கத்தோலிக்க உலகிற்கு ஒரு தொலைக்காட்சி வேண்டும் என்பது ஒரு நீண்ட காலக் கனவு. பல கிறித்தவ சபைகளின்
போதகர்கள் தனிப்பட்ட விதத்தில் தொலைக்காட்சி நடத்தும்போது, ‘நம்முடைய கத்தோலிக்கத் திரு அவை எண்ணிலடங்கா நிறுவனங்களையும் ஆள் பலத்தையும் பணபலத்தையும் வைத்துக்கொண்டு, ஏன் இன்னும் இந்த ஊடகத் தளத்தை உருவாக்கவில்லை?’ என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட காலகட்டத்தில், பல கள ஆய்வுகளின்
அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் நடந்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் கூட்டத்தில், ‘நாம் ஒரு தொலைக்காட்சியை நடத்தலாம்’
என்று ஆயர்களிடத்தில் ஒரு திட்டக் கோரிக்கையை வைத்தேன்.
அப்போது
ஆயர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்படி மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு கள ஆய்வு செய்யப்பட்டது.
அதில் மூன்று முக்கியக் கேள்விகளின் அடிப்படையில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
‘ஒரு கத்தோலிக்கத் தொலைக்காட்சி நமக்குத் தேவையா? அவ்வாறு தேவை எனில் எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றீர்கள்? கத்தோலிக்கத் தொலைக்காட்சி நமக்குத் தேவை எனில், அதை நாம் நடத்த நீங்கள் பொருளாதார ரீதியில் உதவ முன் வருவீர்களா?’ என்ற மூன்று அடிப்படை வினாக்களுக்கு மக்களின் விடைகளைப் பெற்று அதை சென்னை இலொயோலா கல்லூரியுடன் இணைந்து பகுப்பாய்வு செய்து 2012 ஜனவரி 27 அன்று திருச்சி மணிகண்டத்தில் நடைபெற்ற ஆயர் மன்றத்தில் படைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பங்குத்தளங்களிலும் பரப்புரை செய்து, ஏறக்குறைய முப்பதாயிரம் பங்குதாரர்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 5.5 கோடி பணத்தை மத்திய அரசிடம் பாதுகாப்புத் தொகையாக (Security deposit)
உருவாக்கி, தொலைக்காட்சி தொடங்கலாம் என்று ஆயர்களின் இறுதி ஒப்புதலுக்கான 2013-ஜூலை மாதம் மதுரையில் நடந்த ஆயர்கள் மாமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது
இதை மீண்டும் ஓர் ஆழமான பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதே மாதம் 17-ஆம் தேதி சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் ஆயர் மன்றத்தின் சில முக்கிய ஆயர்கள், கத்தோலிக்கத் திரு அவையில் ஊடகத்துறையிலும் தணிக்கைத்துறையிலும்
(auditing) சில முக்கிய வல்லுநர்களை அழைத்து மீண்டும் பரிசீலனை செய்தபோதுதான் அந்த மறக்க முடியாத நிகழ்வு நடந்தது.
“மாதா தொலைக்காட்சியை உங்களால் அரசின் அங்கீகாரத்தோடு அதன் உரிமம் பெற்றுத் (License) தொடங்க
முடியும்; அது பெரிய காரியம் இல்லை; ஆனால், இந்தத் தொலைக்காட்சியை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள்? அதை கேபிள் மற்றும் டிஷ் தளங்கள் வழியாகக் கொண்டு செல்ல என்ன திட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? மாதந்தோறும் ரூ.35 இலட்சம் செலவு பணத்திற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? மேலும், முப்பதாயிரம் பேரிடம் பங்குகளைப் பெற்றுள்ளீர்கள்; இதை எப்படிப் பங்கு ஒதுக்கீடு (share allotment) செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்டனர்.
அந்தப்
பெரியவர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு என்னால் உடனே பதில்கூற இயலவில்லை. எனவே, “மாதா தொலைக்காட்சி ஆரம்பித்துப் பணத்தை இழப்பதற்குப் பதிலாக, மக்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நம்மால் மாதா தொலைக்காட்சியைத் தொடங்க முடியும்; ஆனால், தொடர்ந்து மாதம் ரூ.35 இலட்சம் செலவு செய்து அதை நடத்த வழியில்லை. எனவே, இதை இப்போதே நிறுத்தி விடுவோம்”
என்று ஒரு முடிவு செய்யப்பட்டது.
இந்த
நிகழ்வை என்னால் மறக்க முடியாது. அன்று கூடி வந்த பெரியவர்களின் கேள்விகளுக்கு என்னால் அவர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்குப் பதில் கூற முடியவில்லை. ஆனால், இது கடவுளின் திருவுளம் என்றால் அது நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.
அன்று
முதல் பல இரவுகள் நான்
உறங்கவில்லை. கடவுளிடம் கண்ணீரோடு ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஏன் இந்த மக்கள் இந்தத் திட்டத்தை நம்பிப் பணம் கொடுத்தார்கள்?’ என்று ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு முறையிட்ட நாள்களுக்குக் கணக்கில்லை. என் மனவேதனையின் உச்சமாக எனக்கு Facial Paralysis ஏற்பட்டு பல வாரங்கள் சரிவரப்
பேச முடியவில்லை. பேசினால் என் வாய் ஒரு பக்கமாகக் கோணிவிடும். வேதனையின் உச்சத்தில் இருந்தேன்.
ஏறக்குறைய
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஆயர் அந்தோணி டிவோட்டா என்னை அலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ‘Tomorrow will you be in chennai?’
என்று கேட்டார். “நான் எங்கே போவேன் ஆண்டவரே? இங்கேதான் இருக்கிறேன்” என்றேன்.
மறுநாள்
அதிகாலையிலேயே மலைக்கோட்டை இரயிலில் வந்தார். காலை ஒன்பது மணி இருக்கும். என் அலுவலகத்தில் அமர்ந்து, “David, I will take the responsibility to talk to our bishops and I will give you one more
month time. Can you complete the entire process of the company matters and
apply to the Central Ministry Information and broadcasting affairs for the
Television License?” என்று
படபடவென்று அவருக்கே உரிய பாணியில் பேசினார்.
நான்
அவரிடம், “இது போதும் ஆண்டவரே, உடனே அனைத்துப் பணிகளையும் தொடங்குகிறேன். 20 நாள்களுக்குள் அனைத்தையும் முடித்துக்காட்டுகிறேன். காரணம், ஏற்கெனவே அனைத்துக் கோப்புகளையும் தயார் நிலையில்தான் வைத்திருக்கிறேன். அதனை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியதுதான் பாக்கி” என்றேன்.
அன்று
ஆயர் அந்தோணி டிவோட்டா என்ற ஒரு நபர் இப்படிப்பட்ட ஆதரவும் ஊக்கமும் கொடுத்து, ‘இதை நாங்கள் கட்டாயம் செய்வோம்’
என்று எங்களை நம்பவில்லை என்றால், இன்று மாதா தொலைக்காட்சி இல்லை. ஆயர் அந்தோணி டிவோட்டா வழியாகக் கடவுளின் செயல், தமிழ்நாடு கத்தோலிக்க மக்களின் நீண்ட காலக் கனவு நிறைவேறியது என்றால் அது மிகையல்ல.
2014-ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி காலை 5 மணியளவில் பல்வேறு தடைகள், அவமானங்கள், சோதனைகளைக் கடந்து மாதா தொலைக்காட்சியின் ஒலி-ஒளி அதிர்வுகள் ‘Insat 17’ என்ற
அமெரிக்கச் செயற்கைக்கோள் வழியாக உலகமெங்கும் தமிழர்களின் இல்லங்களைச் சென்றடைந்தபோது என் உள்ளத்தில், என் ஆன்மாவில் ஓங்கி ஒலித்த இறைவார்த்தை: ‘இது கடவுளால் நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு வியப்பாயிற்று.’
இன்று
மாதா தொலைக்காட்சியும், அதன் பல்வேறு சமூக வலைதளங்கள், பல்வேறு முன்னெடுப்புகள்... மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் புதிதாகக் கத்தோலிக்க இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘Synergising Youth for Change’ (SYNC)
என்ற அமைப்பும், AI தொழில்நுட்பத்தில்
தமிழில் புதிய மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள திருவிவிலியத்தில் ‘Madha Chat’ என்ற AI தளம்... இவையனைத்தும் கடவுளின் செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
‘நம் வாழ்வு’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள் என்னிடம் என் பணி வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு, நபர், வார்த்தை இதைப்பற்றி என் அனுபவத்தை எழுதும்படி கேட்டார். நிச்சயமாக! என் வாழ்வில் என்னால் மறக்க முடியாத, கடவுள் என் கூடவே இருந்து என்னை வழிநடத்துகிறார் என்று உறுதிப்படுத்திய, எனக்குத் திடம் கொடுத்த, என்னைச் சரியான பாதையில் பயணிக்கச் செய்த, என் குறைகளை, நிறைகளை எனக்கு மிகத் தெளிவாக உணர்த்திய நிகழ்வுகள், நபர்கள் மேலும் நல்ல வார்த்தைகள் பல பல உள்ளன;
ஆனால், என் வாழ்வின் உச்சகட்டமாகத் தற்சமயம் நான் கருதும் செயல்பாடு ‘மாதா தொலைக்காட்சி’, இதற்காக நான் எடுத்த முன்னெடுப்புகள் மற்றும் செயல் திட்டங்கள் என்னை மிகவும் புடமிட்டுள்ளன. எனவே, இக்காலகட்டத்தில் என்னை மிகவும் பாதித்த கடவுளின் உடனிருப்பையும் பராமரிப்பையும் உணர்த்திய நிகழ்வையும், நபரையும் மேலும் இறை வார்த்தையையும் குறித்துச் சான்று பகர்கிறேன்.
அதேநேரத்தில்
மாதா தொலைக்காட்சியின் தொடக்கம், வளர்ச்சி, முன்னேற்றம், எதிர்கால முன்னெடுப்புகளில் தங்களின் பங்களிப்பையும் தியாகச் செயல்களையும் உடனிருப்பையும் கொடுத்த அனைத்து தமிழ்நாட்டுத் திரு அவையின் பேராயர்கள், ஆயர்கள், மறைமாவட்டக் குருக்கள், துறவியர் மற்றும் மக்கள் ஒவ்வொருவரையும் நான் நன்றியோடு நினைக்கிறேன். அவர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
இன்று
‘மாதா தொலைக்காட்சி’ பல்வேறு
முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. ஊடகத்துறையில் ஒவ்வொரு நிலையிலும் வரும் புதிய தளங்களின் ஊடாக அனைத்து வயதினரையும் சென்றடையும் முயற்சிகளில் சிறந்த வெற்றி கண்டுள்ளது. கடவுள் எனக்கு தமிழ்நாடு ஆயர்கள் வழியாகக் கொடுத்த இம்மாபெரும் பணிக்காக நன்றியோடு துதி பாடுகிறேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!
வழிபாட்டு ஆண்டின் சிகரமாகவும், அதன் மகுடமாகவும் விளங்குவது மாட்சிமிகு கிறிஸ்து அரசர் பெருவிழா. இத்திருநாள் ஒரு சாதாரண கொண்டாட்டம் அல்ல; இது காலத்தைக் கடந்து நிற்கும் ஓர் அரசரின் நிலையான ஆட்சிப் பிரகடனமாகும்.
இந்த
விழா 1925-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களால் ‘Quas Primas’ என்ற சுற்றுமடலின் மூலம் நிறுவப்பட்டது. உலகப் போர்கள் மற்றும் மதச்சார்பின்மையின் எழுச்சியால் உலகெங்கும் குழப்பமும் அநீதியும் கோலோச்சிய காலத்தில், உலகிற்கு உண்மையான அமைதியையும் நீதியையும் வழங்கக்கூடிய ஒரே அரசர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்ற அடிப்படை உண்மையை உலகிற்கு உரக்கக்கூறும் கட்டாயம் திரு அவைக்கு ஏற்பட்டது. கிறிஸ்துவை நம் வாழ்வின் மையத்தில், சமூகத்தின் மையத்தில் மீண்டும் நிலைநாட்டவே இத்திருநாள் நிலைபெற்றது.
திருவிழாவின்
முக்கியத்துவம்
இந்த
விழாவானது ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நமது நம்பிக்கைப் பயணத்தின் இறுதி இலக்கையும், நம் வரலாற்றின் முடிவில் கிறிஸ்து இயேசு எப்படி எல்லாவற்றிற்கும் முடிசூட்டப்பட்ட அரசராக வருவார் என்பதையும் நமக்கு நினைவூட்டி, நாம் அனைவரும் நமது நம்பிக்கை வாழ்க்கையின் விளைவுகளைச் சிந்தித்து, மீண்டும் ஒரு புதிய நம்பிக்கைப் பயணத்தைத் தொடங்க ஆயத்தமாவதற்கு இத்திருநாள் ஆண்டின் முடிவில் கொண்டாடப்படுகிறது. நாம் இன்று கேட்கவேண்டிய கேள்வி: ‘நம் உள்ளங்களில், நம் குடும்பங்களில், நம் சமூகத்தில் கிறிஸ்து உண்மையிலேயே அரசராக ஆட்சி செய்கிறாரா? இல்லையேல், நாம் அவருக்குச் சிம்மாசனத்தை அமைத்துக் கொடுக்க மறுக்கிறோமா?’
கிறிஸ்துவின்
அரச மேன்மை என்பது ஒரு புதிய கருத்து அல்ல; இது யூதர்களின் நம்பிக்கையின் ஆணிவேராக இருந்தது. மேலும், இறைவாக்கினர்கள் மூலமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது.
கடவுள் தாவீது அரசருக்கு, “உன் அரியணை என்றும் நிலைத்திருக்கும்” (2சாமு
7:16) என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி தாவீதின் வழித்தோன்றலாக வரவிருந்த நிலையான அரசராகிய கிறிஸ்துவில்தான் முழுமை பெறுகிறது. “இதோ! ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்; தலைவர்களும் நீதியுடன் ஆட்சி செய்வார்கள்” (எசா
32:1). இயேசு நீதியின் அரசராகவும் அமைதியின் அரசராகவும் வருவதை எசாயா தீர்க்கத்தரிசியும் தெளிவாக முன்னறிவித்தார் (எசா 9:6).
புதிய ஏற்பாட்டின்
பிரகடனம்
கபிரியேல்
வானதூதர் அன்னை மரியாவிடம், “அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்; அவர் தம் தந்தையாகிய தாவீதின் அரியணையை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் வீட்டின்மீது என்றென்றும் ஆட்சி செய்வார்”
(லூக் 1:32-33) என்று அறிவித்தார். இது இயேசுவின் அரச மேன்மையை அவர் கருவிலிருக்கும்போதே உறுதிசெய்கிறது. இயேசு தமது போதனைகள் அனைத்திலும் ‘விண்ணரசு’
அல்லது ‘கடவுளின் அரசு’ பற்றியே அதிகம் பேசினார். மலைப்பொழிவு, உவமைகள் அனைத்தும் அந்த அரசின் மதிப்புகளையும் சட்டங்களையும் வெளிப்படுத்தின. அவர் எருசலேமுக்குள் ஒரு கழுதையின்மீது பவனி வந்தபோது, மக்கள் “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்! இஸ்ரயேலின் அரசர்!” என்று ஆர்ப்பரித்தனர் (மத் 21:9; யோவா 12:13). கிறிஸ்துவின் அரச மேன்மை என்பது தற்காலிகமானதல்ல; அது காலம் கடந்த ஒரு நிலையான உண்மை!
உலக
அரசர்களின் ஆட்சிக் கோட்டைகள், படை பலங்கள், ஆடம்பரமான உடைகள் ஆகியவற்றால் பிரகாசிக்கிறது. ஆனால், கிறிஸ்து அரசர் தமது அரியணையைச் சிலுவையிலும், தமது கிரீடத்தை முள் முடியிலும், தமது அரச உடைமையைப் பிறரின் ஏளனமான பேச்சிலும் கண்டார். இதுவே கிறிஸ்துவின் ஆட்சியின் மிகப்பெரிய முரண்பாடாகும்.
கிறிஸ்து அரசின்
பண்புகள்
கிறிஸ்துவின்
அரசு ஒருபோதும் நிலையற்றதல்ல; காலத்திற்குத் தகுந்தபடி மாறும் கோட்பாடுகளைக் கொண்டதும் அல்ல; அதன் அடிப்படைகள் நிலையானவை. இயேசுவின் மலைப்பொழிவே இந்த அரசின் அரசியலமைப்புச் சட்டமாகும். இயேசுவே “வழியும் உண்மையும் வாழ்வும்...” (யோவா 14:6) என்று அறிவிக்கிறார். அவருடைய அரசு பொய், கபடம், தந்திரம் ஆகியவற்றின்மீது கட்டப்படவில்லை. அது உண்மைமீது நிறுவப்பட்டிருக்கிறது.
“முதலில் அவரது அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள்”
(மத் 6:33). கிறிஸ்துவின் அரசு என்பது சமத்துவத்தின் அரசாகும். இங்குப் பணக்காரன்-ஏழை, ஆள்பவர்-ஆளப்படுபவர் என்ற வேறுபாடுகள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டு, சம மதிப்புடையவனாக மதிக்கப்படுகிறான்.
சமூக அநீதிகளைக் களைவதும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதும் இந்த அரசின் அடிப்படை விதியாகும். கிறிஸ்துவின் அரசின் மிக உயர்ந்த மற்றும் மிக முக்கியமான குணம் அன்பு. “நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்; நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும்”
(யோவா 13:34) என்பதே அரசின் முதன்மைக் கட்டளை. இந்த அன்பு நிபந்தனைகளற்றது. எதிரிகளை மன்னிப்பதும், பகைவருக்கு
நன்மை செய்வதும், அநீதி இழைத்தவர்களுக்காகச் செபிப்பதும் இந்த அன்பின் வெளிப்பாடுகளே.
இந்த
உலகம் தரும் அமைதி நிரந்தரமற்றது. ஆனால், கிறிஸ்து தரும் அமைதி நிலைத்திருப்பது. “நான் உங்களுக்கு அமைதியை கொடுத்துச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவா
14:27). இந்த அமைதி புறச்சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல; அது கடவுளோடு மனிதன் கொண்டுள்ள உள்ளுறவின் விளைவாகும். உன் அமைதி, உன் குடும்ப அமைதி, உலக அமைதி என்பதே இந்த அரசின் செயல்பாட்டுத் தந்திரமாகும்.
சமூக நீதியும்
கிறிஸ்துவின்
ஆட்சியும்
கிறிஸ்துவின்
ஆட்சி தனிப்பட்ட விசுவாசத்துடன் நின்றுவிடவில்லை. அது நாம் வாழும் சமுதாயம் முழுவதையும் உள்ளடக்கியது. சமூக வாழ்வில் நீதியையும் அன்பையும் நிலைநாட்டுவதே கிறிஸ்து அரசருக்கு நாம் செலுத்தும் உண்மையான அன்பின் வெளிப்பாடாகும். இதில் ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரே கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. கிறிஸ்துவின் ஆட்சி வரையறை என்பது வறுமை, ஏற்றத்தாழ்வு, இன வெறி, சாதி
வேறுபாடுகள், மனித உரிமை மீறல்கள் போன்ற எல்லாவகையான சமூகத் தீமைகளுக்கும் எதிரானது. கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்வது என்றால், உழைப்புக்குரிய கூலியை வழங்குவது, ஏழைகளுக்குச் செவிசாய்ப்பது. நேர்மையான ஆட்சிக்கு ஆதரவளிப்பது, பொது நன்மைக்காக உழைப்பது. கடவுளால் கொடுக்கப்பட்ட உலகைப் பாதுகாப்பது; அதைச் சுரண்டாமல் இருப்பது.
தனிப்பட்ட வாழ்வில்
கிறிஸ்து
அரசர்
கிறிஸ்துவை
உலகத்தின் அரசர் என்று ஏற்றுக்கொள்வது எளிது. ஆனால், அவரை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அதாவது நம் மனசாட்சியின், ஆசைகளின், முடிவுகளின் அரசர் என்று அறிக்கை செய்வதுதான் மிகவும் சவாலான செயல். கிறிஸ்து அரசின் குடியுரிமை பெறுவதற்குப் பிறப்புரிமை தேவையில்லை; மனமாற்றமும் சீடத்துவமும் மட்டுமே தேவை.
இறுதிக் காலத்தில்
கிறிஸ்துவின்
அரசு
கிறிஸ்து
அரசர் பெருவிழா வெறும் வரலாற்றுக் கொண்டாட்டம் அல்ல; அது எதிர்காலப் பார்வையை நோக்கி நம்மை நகர்த்துகிறது. கடவுளைப் புறக்கணிக்கும் மதச்சார்பற்ற உலகில், நம்பிக்கையுடன் வாழ்வும் வெறுப்பும் பகைமையும் நிறைந்த உலகில், கிறிஸ்துவின் அன்பை வழங்கவும் அநீதியும் ஒடுக்குமுறையும் உள்ள சமூகத்தில், நீதிக்காக நாம் குரல் கொடுக்கவும் வலியுறுத்துவோம்.
நாம்
ஒவ்வொருவரும் கிறிஸ்து அரசரின் தூதுவர்களாக இருப்போம். நம்முடைய வீடுகள் அந்த அரசின் சிறிய பிரதிபலிப்புகளாக இருக்கட்டும். நம்முடைய பணியிடங்கள் அந்த அரசின் நீதியையும் நேர்மையையும் பிரதிபலிக்கட்டும். கிறிஸ்துவின் அரசு என்றென்றும் நிலைத்திருப்பதுபோல, நம் வாழ்விலும் அவர் தரும் அமைதியும் நீதியும் அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
இறையாட்சியை வாழ்ந்துகாட்டி அடையாளப்படுத்துவதும், சுற்றியிருக்கும் சமூகத்தில் ஈடுபட்டு அதை நற்செய்தி விழுமியங்களால் ஊடுருவி அதனைப் பரவச்செய்யும் ஆற்றல்மிகுக் கருவியாகச் செயல்படுவதுமே திரு அவையின் வாழ்வும் பணியும். இவ்வாறு அது வாழவும் செயல்படவும் உதவும் வகையில் அதன் உறுப்பினர்களுக்குத் தூய ஆவியார் பல்வேறு அருங்கொடைகளையும் ஆற்றல்களையும் அளித்துள்ளார். அவற்றுள் ஆயர், அருள்பணியாளர், திருத்தொண்டர் எனும் முப்பெரும் திருப்பணிகள் திரு அவையின் அமைப்பு சார்ந்த இன்றியமையாத பணிகள். இதனால்தான் தொடக்கத்திலேயே தோன்றி இன்றுவரை அவை எல்லாத் திரு அவைகளிலும் நிலைத்திருக்கின்றன.
இவை
தொடக்ககாலத்திலிருந்து
இன்றுவரைத் திரு அவையில் நிலைத்திருப்பவை என்றாலும், வரலாற்றின் போக்கில் அவற்றைச் செயல்படுத்தும் முறை பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. இன்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பல. உலகின் பல பகுதிகளில் உள்ள
திரு அவைகளில் அருள்பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது; அருள்பணியாளர் மேற்கொள்ளும் கட்டாய மணத்துறவும், பரவலாக நிலவும் அருள்பணியாளர் ஆதிக்கமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன; மேலும், பொதுநிலையினர் பல்வேறு பணிகளை ஏற்றெடுக்க முன்வந்துள்ளனர். இதனால் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிவைத்த இப்பணிகளின் புதுப்பித்தல் இன்னும் ஆழமாகத் தொடரப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இதற்குப் பதிலிறுப்புச் செய்யும் வகையில் 16-வது ஆயர் மாமன்றமும் இணைந்து பயணிக்கும் முறையில் இப்பணிகளை எவ்வாறு புரிந்துகொள்ளவும் செயல்படுத்தவும் வேண்டும் என்பதற்காகப் பின்வரும் சில புதிய பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
குழுமக் கூட்டியக்கத்திற்கு
உதவுபவர்கள்
“திரு அவையில் உள்ள எல்லாத் திருப்பணிகளைப்போல் ஆயர், அருள்பணியாளர், திருத்தொண்டர் எனும் பணிகளும் நற்செய்தி அறிவிப்பு, திரு அவைக் குழுமத்தைக் கட்டி வளர்த்தல் என்பவற்றிற்கு உதவவே இருக்கின்றன” (இஅ
68). இம்மூவகையினரும்
இறைவார்த்தைப் பணி, திருவழிபாடு, அனைத்திற்கும் மேலாக அன்பிரக்கச் செயல்பாடுகள் என்பனவற்றின் வழியாக இறைமக்களுக்குப் பணியாற்றுபவர்கள். எனினும், அவை ஒவ்வொன்றும் திரு அவையின் வாழ்விலும் பணிகளிலும் வகிக்கும் இடமும் பொறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது. இவற்றுள் அருள்பணியாளர்களும் திருத்தொண்டர்களும் பங்கு, நற்செய்தி அறிவிப்பு, கல்வி, கலைகள், இறையியல் ஆய்வு, அருள்வாழ்வு மையங்கள் எனப் பல வகைகளிலும் துறைகளிலும்
பணியாற்றுகின்றனர். அவர்களது அரும்பணிகளுக்காக மாமன்றம் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. அவர்களுள் பலர் தனிமையையும் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்
என்பதை உணர்ந்து, கிறித்தவக் குழுமங்கள் தங்கள் இறைவேண்டல், நட்புறவு, ஒத்துழைப்பு என்பனவற்றால் அவர்களை ஆதரிக்கவேண்டும் எனவும் அது கேட்டுக் கொள்கிறது.
ஆதிக்கம் அற்ற
அருள்பணி
அவர்களது
ஆக்கம் மிக்க பணிக்குப் பெரும் தடையாக இருப்பது அருள்பணியாளர் ஆதிக்கம். இறைவனது அழைப்பைத் தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகத் தோன்றுவதே இவ் வாதிக்கம். இது அவ்வழைப்பைப் பணி என்பதை விட சிறப்புரிமையாகக் கருதுகிறது. மேலும், இது அதிகாரத்தை உலகப் பாணியில் கையாண்டு, தன்னைத் தணிக்கைக்கு உட்படுத்த மறுக்கிறது. இவ்வாறு இது அருள்பணியாளர் அழைப்பையே சீர்குலைக்கிறது.
“தனது நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதே அருள்பணியாளர் ஆதிக்கம் என நாம் புரிந்துகொள்ளலாம்.
இறைமக்களின் பணிக்கான திரு அவையின் அதிகாரத்தை அது சீர்குலைக்கிறது. இது திருப்பணியாளர்களின் பாலியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த முறைகேடுகள், மனச்சான்று மற்றும் அதிகாரம் என்பவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல் எனும் பல வடிவங்களில்
வெளிப்படுகிறது” (இஅ
74). உருவாக்கத்தின் தொடக்க நிலைகளிலிருந்தே இந்த ஆதிக்க மனநிலை வேரறுக்கப்பட வேண்டும்.
“கூட்டியக்கத் திரு அவையில் அருள்பணியாளர்கள் தங்கள் மக்களுடன் நெருங்கியத் தொடர்பு, அனைவரையும் வரவேற்று அவர்களுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருத்தல் எனும் உளப் பாங்குடன் தங்கள் பணியை வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளனர்“ (இஅ
72). மக்களுடன் நெருங்கிய உறவு, தேவையில் இருப்போருக்குப் பணியாற்றும் நடைமுறை அனுபவம் என்பனவற்றிலிருந்து கற்றுக்கொள்வது அதற்கு இன்றியமையாதது.
அருள்பணியாளர்கள்
ஆயரின் முதன்மையான ஒத்துழைப்பாளர்கள். அவருடன் ஓர் அருள்பணிக் குழுமமாக ஒன்றித்துச் செயல்படுவர்கள். ஒருபுறம், ஆயருடனும் அருள்பணியாளர் குழுமத்துடனும் ஒத்திசைவு; மறுபுறம், ஏனைய திருப்பணிகள் மற்றும் அருங்கொடைகளுடன் ஆழ்ந்த ஒன்றிப்பு என்பன அவர்கள் தங்கள் பணியை நன்முறையில் செயல்படுத்த இன்றியமையாதவை.
மணத்துறவு பற்றி
மறு
ஆய்வு
அவசியம்
அருள்பணியாளர்களின்
மணத்துறவு இறைவாக்குத்தன்மையுடன் இயேசுவுக்கு ஆற்றலுள்ள
முறையில் சாட்சியம் பகர உதவுவது என எல்லாராலும் பாராட்டப்படுவது.
இறையியல் பார்வையிலும் அது அருள்பணியாளர் பணிக்கு ஏற்றதே. இருப்பினும், இன்று அருள்பணியாளர் பற்றாக்குறை பல திரு அவைகளில்
நிலவுகிறது. மேலும், பல பண்பாட்டுச் சூழமைவுகளிலும்
அது மிகக் கடினமாகவும் உள்ளது. இந்நிலைகளில், இலத்தீன் மரபுத் திரு அவையில் உள்ளது போன்று அது அப்பணிக்குச் சட்டமுறையில் கட்டாயத்
தேவை ஆக்கப்படவேண்டுமா? எனும் கேள்வியும் எழுப்பப்பட்டது.
பணியில் பகிர்வு
இன்றியமையாதது
அருள்பணியாளர்கள்
தங்கள் பணியில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
தனிமை, தனித்துப் பணியாற்ற வேண்டிய நிலை, மிகுதியான பணிச்சுமை என்பன அவற்றுள் முக்கியமான சில. மாமன்ற அனுபவம் கற்றுத்தரும் பின்வரும் பாடம் அவர்களுக்கு உதவ முடியும். அது இறைமக்கள் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அவர்கள் தேடி, தங்கள் பணியைக் கூட்டுப்பொறுப்புடன் நிறைவேற்ற முயல்வதே. “பணிகளையும் பொறுப்புகளையும் பரவலாகப் பகிர்ந்தளிப்பதும், என்னென்ன திருநிலைப்பாட்டுத் திருப்பணிக்கே உண்மையாக உரியன, எவற்றையெல்லாம் ஆற்ற பிறருக்குப் பதிலாள் உரிமை தரலாம், தரவும் வேண்டும் என்பவை பற்றிய துணிச்சலான தெளிதேர்வுடனும், அருள்பணிசார் இயக்கத் தன்மையுடன் அப்பணியை ஆற்ற உதவும்”
(இஅ 74). மேலும், இது முடிவெடுக்கும் முறைகளைக் கூட்டியக்கத்தன்மை உடையவை ஆக்கவும் அருள்பணியாளர் ஆதிக்கத்தை மேற்கொள்ளவும் உதவ முடியும்.
நிலையான திருத்தொண்டர்கள்
இன்னும்
ஏன்
இல்லை?
நிலையான
திருத்தொண்டர் பணி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின்பே இலத்தீன் மரபுத் திரு அவையில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இன்றளவும் அது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரு அவைகளில் அறியப்படாததாகவே உள்ளது. “நிலையான
திருத்தொண்டர் பணி தம்மையே எல்லாருக்கும் பணியாளர் ஆக்கிக்கொண்ட இயேசுவின் மாதிரியைப் பின்பற்றித் திரு அவை தாமும் பணியாளாக வளர்ச்சி காண உதவும் பயனுள்ள வளம் என்பதை இனங்கண்டு, அதிகத் தாராளமாக அதை வழங்கத் தலத்திரு அவைகள் காலம் தாழ்த்தாமல் இருக்க நல்ல பல காரணங்களைப் (2-ஆம்
வத்திக்கான் பொதுச்சங்கம்) படிப்பினை ஏற்கெனவே தந்துள்ளது” (இஅ
73). ஆனால், இன்றுவரை அப்பணி ஏழைகளுக்கும் தேவைகளில் இருப்போருக்கும் ஆற்றப்படும் வகையில் விரிவாக்கப்படவில்லை; மாறாக, அது பெரிதும் திருவழிபாடு சார்ந்ததாக மட்டுமே நடைபெறுகிறது.
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. நிலையான
திருத்தொண்டர் பணி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
என்பது பற்றிய மதிப்பீட்டாய்வு செய்யப்பட்டு, புத்தாக்கம் பெற வேண்டும். ஏழைகளுக்கும் நலிவுற்றோருக்குமான பணியாகவும் அதை விரிவாக்கம் செய்யும் வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும்.
2. அருள்பணியாளர்களும்
திருத்தொண்டர்களும் தங்கள் பணிப்பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதைச் சரியான கால அளவுகளில் தணிக்கை செய்வதற்கான வழிமுறைகளையும் அமைப்புகளையும் தலத் திரு அவைகள் கண்டறிந்து நடைமுறைப்படுத்தவேண்டும்.
3. தங்கள்
திருப்பணியை விட்டு விலகியிருக்கும் அருள்பணியாளர்களின் உருவாக்கத்தையும் அனுபவத்தையும் பயன்படுத்தும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப என்னென்ன அருள்பணிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யலாம் என்பதை அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பச் சிந்தித்து முடிவெடுக்கலாம்.