news
ஆன்மிகம்
சாம்பலின் சாமர்த்தியங்கள்: தண்டனையைத் தாண்டி மனமாற்றத்தின் வழி!

குழந்தை பிறப்பு முதல் முதியவர் இறப்பு வரை பல்வேறு பருவங்களாகக் காலங்கள் மனித வாழ்வில் ஓர் உறுப்புகளாக உருவெடுக்கின்றன. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், திருமணப் பருவம், முதுமைப் பருவம் இவையெல்லாம் மூன்று காலங்களில் அடங்கியுள்ளது. அவை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவை மனிதரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றது. அதுபோலக் கிறித்தவர்களின் வாழ்வில் காலங்கள் காலடி பதிக்கின்றன.

இந்தக் கிறித்தவக் காலங்களில் மிக முக்கியமான காலமாகக் கருதப்படுவது தவக்காலம். இந்தத் தவக்காலம் ஒவ்வொரு கிறித்தவரின் வாழ்வில் சிறப்பாக, பல புனிதர்களின் வாழ்வில் பல புதுமைகளைப் புரட்டிப் போட்ட காலம். இறைமகன் இயேசு 40 நாள்கள் தமது பணி தொடங்குவதற்கு முன்பாகத் தம்மைத் தயார் செய்துகொண்ட காலம், தவக்காலம் மனமாற்றத்திற்கான காலம், ஒவ்வொரு மனிதனும் மனம் திரும்ப வேண்டிய காலம். சுய ஆய்வுப் பயணத்தில் பயணிக்க அழைப்பு விடுக்கும் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல்! சாம்பல் தவத்தின் தொடக்கம்.

இந்தச் சாம்பல் பழைய ஏற்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினார் (2சாமுவேல் 13:19). இது தாமாரின் சோகத்தையும், தனக்கு நிகழ்ந்த இழிவு நிலை நினைத்து வருந்துவதையும் குறிக்கிறது. “என்னையே நொந்து கொள்கிறேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகிறேன் (யோபு 42:6). “மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த பிள்ளைக்காகத் துயருற்று அழுவதுபோல், மனமுடைந்து அழுது புலம்புங்கள் (எரே 6:26). இவ்வாறு பழைய ஏற்பாட்டில் சாம்பலானது வருத்தத்தைத் தெரிவித்து மனம் வருந்துவதைக் குறிக்கிறது. ஆனால், புதிய ஏற்பாடானது மனம் மாற, மனம் திரும்ப அழைப்பு விடுக்கின்றது. “தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பார் (மத்தேயு 11:21). சாம்பல் புதன், நெற்றியில் சாம்பல் பூசுவது பழைய வாழ்க்கையைக் களைந்து, தீமையிலிருந்து நன்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் பயணிக்க இந்தப் பயணம் தொடர்கிறது.

நாம் பயணிக்கவிருக்கும் இந்தத் தவக்காலமானது, இயேசுவின் அளவு கடந்த மன்னிப்பையும் இரக்கத்தையும் நாம் உணர்ந்துகொள்ள பாதை அமைக்கிறது. சாம்பல் குரல்: ‘இன்று நான், நாளை நீ.’ ஆம், இவ்வுலகில் எவரும் நிலையாக இடம் பதிப்பதில்லை; சாம்பலாகக் காற்றிலே அடித்துச் செல்லாவிட்டாலும், மண்ணோடு மண்ணாக நாம் மக்கிப் போவதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த மனமாற்றப் பயணத்திலே, மன்னிப்புப் பாதையில் பயணம் செய்கின்ற ஒவ்வொருவரையும் மன்னிப்பிற்கு எதிர்மறையான தண்டனை பற்றிக் கேள்வி எழுப்ப இந்தச் சாம்பல் புதன் மனத்திற்குள்ளே ஓர் எரியும் நெருப்பாகின்றது. தண்டனை ஒரு முற்றுப்புள்ளியா? அறிவியலுக்கும் அறிஞருக்கும் பட்டமும் பதவியும், அணு உலைக்கும் ஆயுதக் கிடங்குகளும் ஏவுகணையாக எட்டாத் தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் இம்மின்னணுச் சமுதாயத்தில் தண்டனை ஒரு முற்றுப்புள்ளியா?

கண்ணீரும் கதறலும், இரத்தமும் இரக்கமற்ற மிருகங்களும், குழந்தையென்று பாராமல், தன் இன மனிதனென்று பாராது உடம்பை மிருகமாகக் கிழித்துக் குதறித் தின்னும் இச்சமுதாயத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சீர்கேடுகள் சின்னா பின்னமாகச் சிதறிக்கொண்டே இருக்கின்றன. குற்றம் நடந்துகொண்டே இருக்கின்றன. தண்டனை கொடுக்கப்பட்டே இருக்கின்றன. ஆனால், குற்றம்? குற்றம் குறைகின்றதா? இல்லை. தொன்றுதொட்டு இன்றுவரை அவை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.

இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC), குற்றப் பிரிவியல் தனி அமைப்பு என்று பல குழுக்கள் அமைந்திருந்தும் அழிக்க முடியாத சக்தியாக, பிரிக்க முடியாத பிணைப்பாக இவ்வுலகில் இக்குற்றங்கள் நடைபெறக் காரணம் யார்? எங்கே வைப்பது முற்றுப் புள்ளி? பொதுவாக, தண்டனை என்று கூறும்போது அரபு நாடுகளைக் கூறுவார்கள். ஏனென்றால், பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் பேசினாலே மிகக் கொடூரமான இரக்கமற்ற தண்டனை வழங்குவது வழக்கம். ஆனாலும், குற்றங்கள் குறைகின்றனவா?

தண்டனைச் சட்டங்களும், குற்றவியல் பிரிவுகளும் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. சுப்பிரமணிய இராஜி கூறுவார்: “வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன்; கொப்பளிக்கக் கொப்பளிக்க வாயும் ஓயாமல், அழுக்கும் போகாமல் உற்றுப் பார்த்தேன்; நீரே அழுக்கு.’ இன்று யார் மத்தியில் நீதியும் நேர்மையும் நிலைபெற வேண்டுமோ, எந்தத் தராசு சமமாக உண்மையே வெல்லும் என்று மெய்ப்பிக்கப்பட வேண்டுமோ அங்கேயே உண்மையும் நீதியும் செத்து ஒரு பிணமாக அலைந்து கொண்டிருக்கின்றது.

நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஒருவன் போராடினால் அங்கே அவன் அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறான். இந்தச் சட்டங்கள் எதற்கு? தான் உண்மையைக் கூறினால், அநீதிக்கு எதிர்த்துப் போராடினால், சுயபிம்பம் வெளிவந்தால் என் பிம்பம் மறைந்து விடுமே என்று ஒளிந்து கொண்டிருக்கும் இச்சமூகத்திற்குச் சட்டங்கள் எதற்கு?

இவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் சுய ஆய்வு. இன்று நீ சுய ஆய்வு உன்னைச் செய்யவில்லையென்றால் நாளை நீ ஆய்வுக் கூடத்தில் சுழன்று கொண்டிருப்பாய். இன்றைய நாடும் சமுதாயமும் இதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு தவறை நீ ஏற்றுக்கொள்ளும்போது அது புனிதமாகிறதுஎன்கிறார் அன்னை தெரேசா. தவறிழைப்பது மனித இயல்பு அதை உணர்ந்து கொள்கிறாயா?

நாம் பிறரை விமர்சிக்கவும், பிறருக்குத் தண்டனை வழங்கவும் பரிசேயர், சதுசேயர் போல் ஏங்கி கொண்டிருக்கிறோம். நாம் மனம் மாற, இருளிருந்து ஒளி பெற மானிட மகன் இவ்வுலகிற்கு ஒளியாக உருவெடுத்தார். “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் (யோவா 8:11).

ஆயுதங்களும் சட்டங்களும் மாற்றியமைக்க முடியாத தவறை, மன்னிப்பு என்னும் ஊன்றுகோலால் இரக்கம் காட்டிஇனி பாவம் செய்யாதீர்என்று அன்புக் கட்டளையும் விடுக்கின்றார்.

பிறர் கண்ணில் இருக்கும் தூசியை எடுப்பதை நிறுத்திவிட்டு நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முயற்சிப்போம்.

தீர்ப்பு என்பது ஒரு மனிதரின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பது அல்ல; பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது. அதுபோலத் தண்டனையும் ஒருவரின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பதல்ல; மாறாக, தீமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது.

ஆகவே, சாம்பலை நெற்றியில் பூசி, பழைய தவறுகளைக் களைந்து மனம்மாறி நற்செய்தியைப் பறைசாற்றிட, இருளிருந்து ஒளிக்குத் தவக் காலமென்னும் இவ்வசந்த காலத்தில், மனமாற்றத்தின் காலத்தில் பயணிப்போம்.

news
ஆன்மிகம்
புனித பிரான்சிஸ் 800-வது விண்ணகப் பிறப்பு (பிரான்சிஸ்கன் யூபிலி ஆண்டு: திருத்தந்தை லியோ அறிவிப்பு)

அமைதியின் தூதுவர், இயற்கையின் பாதுகாவலர், கத்தோலிக்க விசுவாசத்தின் வீரர், ஏழ்மையின் காதலர், மறு கிறிஸ்து எனப் போற்றப்படும் அசிசி நகர் புனித பிரான்சிசின் 800-ஆம் ஆண்டு (1226-2026) இறப்பினை நினைவுகூரும் விதத்தில் சிறப்பு யூபிலி ஆண்டைத் திருத்தந்தை 14-ஆம் லியோ அறிவித்துள்ளார். 2026, ஜனவரி 10 அன்று தொடங்கிய இந்த யூபிலியானது 2027 ஜனவரி வரை சிறப்பிக்கப்படும்.

இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டினைப் பயன்படுத்தி இறைமக்கள் திரு அவை அருளும் பரிபூரணப் பலன் என்கின்ற சிறப்பு ஞானச் சலுகையைப் பெற்றுகொள்ள திருத்தந்தை அழைப்புவிடுக்கிறார். பிரான்சிஸ்கன் யூபிலி ஆண்டானது திரு அவைக்குக் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய கொடையாகும். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி உள்ளார்ந்த ஆன்மிக மறுமலர்ச்சிக்கும், கிறித்தவ வாழ்வைப் புதுப்பிக்கவும் முன்வருவோம்.

யூபிலி ஆண்டின் சிறப்பு ஆசிர்: பரிபூரணப் பலன்

பிரான்சிஸ்கன் துறவிகளால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் அல்லது புனித அசிசி பிரான்சிஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, உண்மையான மனத் துயருடன் நல்லதோர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றுப் பரிபூரணப் பலன் என்கின்ற இந்தச் சிறப்பு ஞானச் சலுகையைப் பெறமுடியும். மேலும் முதியோர், நோயுற்றோர் மற்றும் பல்வேறு காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கின்ற இடத்திலே உரிய இறைவேண்டல் மற்றும் இயன்ற ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு இப்பலனைப் பெற்றுக்கொள்ளலாம்.

அமைதியின் தூதுவர் புனித பிரான்சிஸ்

திருத்தந்தை லியோ, யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மடலில், இவ்வுலகம் இன்று பல்வேறு குழப்பங்களையும் போர்களையும் சந்தித்து வருகின்றது; நாடுகள் மற்றும்  சமூகங்களுக்கு இடையே பல்வேறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிவோம். புனித பிரான்சிசின் வாழ்வு நமது சமூக ஒற்றுமைக்கு ஆற்றல் மிகு தூண்டுதலாக உள்ளது என்பதை நினைவில் கொண்டு உலகில் அமைதியான சூழ்நிலை அமைந்திட பாடுபடுவோம். புனித பிரான்சிசின் ஏழ்மை, அமைதி, சகோதரத்துவம், இயற்கையைப் பராமரித்தல், திரு அவைக்குக் கீழ்ப்படிதல் ஆகிய நற்செய்திப் பண்புகளை ஏற்று அன்பான சமூகம் அமைய இணைந்து வருவோம். புனித பிரான்சிஸ் இறைவனோடும் இயற்கையோடும் தன்னோடு வாழ்ந்த மக்களோடும் அமைதியான நட்புறவைக் கொண்டிருந்தார். ஆகவே, அவரது தூய வாழ்வினைப் பின்பற்றி நாமும் இறைவனோடும் இயற்கையோடும் உலக மக்கள் அனைவரோடும் நட்புறவைப் பேணுவோம். உலகிற்கு அமைதியை, நிம்மதியை நிறைவாக வழங்குவோம்.

புனித அசிசி பிரான்சிசின் ஆன்மிகத்தைப் பின்பற்றும் அவரது எளிய சகோதர-சகோதரிகள் மற்றும் இறைமக்கள் இந்த ஆண்டின் சிறப்பு ஆசிரைப் பயன்படுத்தி, புனித வாழ்வின் முன்மாதிரியாகவும், அமைதிக்கான தொடர் சாட்சிகளாகவும் வாழ்ந்திட திருத்தந்தை லியோ வலியுறுத்துகின்றார்.

புனித பிரான்சிஸ் இறந்து 800 ஆண்டுகள் கடந்தும் அமைதிக்கான அவரின் நெறி சார்ந்த வாழ்வு திரு அவைக்கும் சமூகத்திற்கும் இன்றும் ஆக்கப்பூர்வமாக உள்ளது. அமைதி என்பது மனித முயற்சியால் கிடைப்பதல்ல; மாறாக, இறைவனின் கொடை! அது நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டும். பிரான்சிசின் அமைதிக்கான கனவு என்பது மனித உறவுகளைக் கடந்து படைப்பனைத்தோடும் நாம் மேற்கொள்ளும் தோழமை, உறவு கொண்டாட்டமாகும். புனித பிரான்சிசின் ஆழமான, ஆக்கப்பூர்வமான ஆன்மிகம் இறைவனை நோக்கி இறைமக்களை அழைத்துச் செல்லட்டும். பிளவுபட்ட இவ்வுலகில் நற்செய்திப்பணி வாழ்வுக்கும், கிறிஸ்துவின் அமைதிக்கும், உலக ஒற்றுமைக்கும் உயிருள்ள சாட்சிகளாக நாம் திகழ புனித பிரான்சிசின் வாழ்வியல் நெறி உதவட்டும்.

பரிபூரணப் பலன் - திருத்தந்தையின் சிறப்பு ஞானச் சலுகை

பரிபூரணப் பலன் என்றால், உத்தரிக்கிற நிலை பாவங்கள் மன்னிக்கப்படுவது. ஒப்புரவு அருளடையாளத்தால் நரகத்தின் தண்டனையிலிருந்து தப்பினாலும், உத்தரிக்கிற நிலைக்கு உட்படுவோம். ஆகவே, அந்நிலையிலிருந்தும் நமக்கு விடுதலை தருவதுதான் பரிபூரணப் பலன். இது உத்தரிக்கிற ஆன்மாக்களுக்குப் பெரும் உதவியாகும்.

பரிபூரணப் பலனை எப்படிப் பெறலாம்?

திரு அவைச் சட்டம் (992) மற்றும் கத்தோலிக்கத் திரு அவை மறைக்கல்வி நூல் (1471) வழிகாட்டுதலின்படி கத்தோலிக்கர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லதோர் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டு, முழு திருப்பலி கண்டு, திவ்ய நற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துகளுக்காக மன்றாடவேண்டும். இவை அனைத்தும் ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏறக்குறைய 20 நாள்களுக்கும் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளவேண்டும்.

பரிபூரணப் பலன் பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு ஆலயங்களைச் சந்தித்தல், ஆலயத்தில் வழிபடும்போது நம்பிக்கை அறிக்கை மற்றும் ஒருமுறைவிண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையேஎன்ற செபத்தை மன்றாடி ஒரு பரிபூரணப் பலன் பெற்றுக்கொள்ளுவது.

திருத்தந்தையின் கருத்துகளுக்காக மன்றாடும் போது, ஒருவிண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையேமற்றும் ஓர்அருள் நிறைந்த மரியே வாழ்கஎன்ற செபங்களைச் செபிக்கவும்.

பரிபூரணப் பலன் தனக்காகவும், இறந்துபோன இறைநம்பிக்கையாளர்களுக்காகவும் மன்றாடலாம். ஆனால், வாழும் மற்றொரு நபருக்காகச் செபிக்க முடியாது.

ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவர் பரிபூரணப் பலனைப் பெறமுடியும்.

மக்களின் பார்வைக்கு புனித அசிசி பிரான்சிசின் உடல்

புனித அசிசி பிரான்சிசின் 800-வது ஆண்டு விண்ணகப் பிறப்பை நினைவுகூரும் வேளையில் அவரது புனித உடல் பொதுமக்கள் பார்வைக்காக, பிப்ரவரி 22 முதல் மார்ச் 22, 2026 வரை இத்தாலியில் அசிசி பிரான்சிசின் திருத்தலப் பேராலயத்தில் வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் புனித அசிசி பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்கள்

குருசுகுப்பம், பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டம்.

வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மறைமாவட்டம்.

அருளகம், வி.கே.புரம், பாளை மறைமாவட்டம்.

ஒக்கூர் புதூர், சிவகங்கை மறைமாவட்டம்.

கணபதி, கோவை மறைமாவட்டம்.

அசிசி நகர், பொன்னிமாந்துறை, திண்டுக்கல் மறைமாவட்டம்.

மார்த்தால், பூதப்பாண்டி, கோட்டாறு மறைமாவட்டம்.

பாடலூர், கும்பகோணம் மறைமாவட்டம்.

குண்டா பிரிட்ஜ், உதகை மறைமாவட்டம்.

மாத்தூர், திருச்சி மறைமாவட்டம்.

இறைவா! அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்

- புனித அசிசி பிரான்சிஸ் (1182-1226)

news
ஆன்மிகம்
‘நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்’ – Dilexi Te

3-ஆம் அதிகாரம் ஏழைகளுக்கான திரு அவை A Church for the Poor (எண் 35-81)

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நாளில் பிரான்சிஸ் அவர்கள் ஊடகப் பகராளிகளுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போதுதிரு அவை ஏழையாகவும் ஏழைகளுக்காகவும் இருக்க நான் மிகவே விரும்புகிறேன்என்றார்.

கிறித்தவ நம்பிக்கைக்கும் ஏழைகளுக்கும் பிரிக்க முடியாத பந்தம், தொடர்பு இருக்கிறது.

திரு அவையின் உண்மையான செல்வம்

தொடக்கத் திரு அவையில் ஏழைகளுக்குப் பணி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 7 பேர் (திப 6:1-5). இதில் மறைச்சாட்சியாக மரித்த ஸ்தேவான் ஒருவர்.

இரண்டாவது நூற்றாண்டில் திருத்தந்தை 2-வது சிக்டஸ் காலத்தில் ஏழைகளே திரு அவையின் செல்வமென்று திருத்தொண்டர் இலாரன்ஸ் உரோமை அதிகாரிகளுக்குக் காட்டினார். இவரும் மறைச்சாட்சியாக மரித்தார்.

திரு அவைத் தந்தையரும் ஏழைகளும்

ஏழைகளே கடவுளைச் சந்திக்கவும், அவரை அடையவும் சிறந்த வழிஎனத் திரு அவைத் தந்தையர்கள் கண்டுணர்ந்தனர். ஏழைகளுக்கு உதவுவது வெறும் அறப்பணி மட்டுமல்ல; கூடுதலாக வார்த்தை மனுவுருவான இயேசுவை நம்புவதும் ஆகும். ஏழைகளுக்கு உதவுவது, கிறித்தவத்தின் ஒரு பிற்சேர்க்கை அல்ல; மாறாக, கிறிஸ்துவினுடைய வாழும் உடலின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும்.

அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார், புனித பொலிக்கார்பு போன்றவர்கள் திரு அவைப் பணியாளர்கள் ஏழைகளுக்கு உதவுவதை மிகவே வலியுறுத்துகின்றனர். திரு அவைத் தந்தையர்களின் கூற்றிலிருந்து திரு அவை ஏழைகளின் தாய் என்பதை உணரலாம்.

கிறித்தவ நம்பிக்கையையும் ஏழைகளையும் பிரிக்க முடியாதது போல, இறைவழிபாட்டையும் ஏழைகள் மீதான அக்கறையையும் பிரிக்க முடியாது என்பதைத் திரு அவைத் தந்தையரின் வாழ்வும் படிப்பினைகளும் எடுத்துரைக்கின்றன.

புனித ஜான் கிறிஸ்சோஸ்தம்

கிழக்கத்தியத் தந்தையரில் சமூக நீதிக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் யோவான் கிறிஸ்சோஸ்தம். கோவிலில் விலையுயர்ந்த சில்க் துணி, வெளியே குளிரில் ஆடையின்றி ஏழைகள்; கடவுளுக்குத் தங்கப் பாத்திரங்கள், தங்க மனதுள்ள ஏழைகள் வெளியே, ஏழையரில் கிறிஸ்துவைச் சந்திக்காதவர்கள், ஆலய வழிபாட்டில் அவரைச் சந்திக்க முடியாது என்கிறார்.

இரக்கச்செயல் என்பது ஒருவர் விரும்பினால் செய்யும் ஒன்று அல்ல; உண்மையான வழிபாட்டுக்கு மிகத் தேவையான ஒன்று. ஏழைகளைக் கண்டு கொள்வது, நமது மீட்புக்குத் தேவையான ஒன்று.

புனித அகுஸ்தின்

ஏழைகளுக்கு நீ கொடுப்பது உன்னுடையது அல்ல; அவர்களுக்கு உரியது. பொதுநன்மைக்காக எல்லாருக்கும் கொடுத்ததை நீ அபகரித்ததையே ஏழைகளுக்குக் கொடுக்கிறாய். தர்மம் என்பது வஞ்சிக்கப்பட்ட நீதியை, திரும்பக் கொடுப்பது - Almsgiving is Justice Restored.

அன்பில் ஏழைகளுக்கு உதவுவது, உதவி செய்கிறவரின் இதயத்தைத் தூய்மையாக்கும்; அவருடைய கடந்தகாலப் பாவங்களைப் போக்கும்என்கிறார் புனித அகுஸ்தின்.

நோயுற்றவர் மீது அக்கறை

கார்த்தேஜ் நகரில் கொள்ளைநோய் பரவியபோது, ஆயர் சிப்பிரியன் நோயுற்றவர் மீது அக்கறை, ஏழைகளைச் சந்திப்பது, அவர்களின் புண்களைக் கழுவுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது - இவை வெறும் மனிதநேயச் செயல்கள் மட்டுமல்ல; துன்புறும் கிறிஸ்துவின் உடலைத் தொடுவதாகும். மீட்பு என்பது அருவமான ஒரு கருத்து அல்ல; எதார்த்தமான பரிவிரக்கச் செயலாகும் என்றார்.

இதுபோலவே புனிதர்களான கடவுளின் யோவான், கமில்லஸ், வின்சென்ட் தே பவுல், மருத்துவமனை சகோதரிகள், இறைப்பரா மரிப்பின் சிறிய சகோதரிகள் செய்வது கடவுளுக்குச் செய்யும் சேவையாகும்.

துறவு மடங்களில் ஏழைகள் மீது அக்கறை

வேரோட்டமான பற்றற்ற நிலையில் மடத்துறவிகள் ஏழைகளுக்கு உதவுகின்றனர்.

விருந்தினரை உபசரித்தல், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுதல், துறவுமட ஆன்மிகத்தின் ஒரு முக்கியப் பரிமாணம்என்கிறார் புனித பெரிய பேசில்.

மேற்கில்-நோர்சியா புனித பெனடிக்ட்- “செபமும் தர்மமும் அமைதியும் பணியும்- இவர்களது சட்ட ஒழுங்கிலும் ஆன்மிகத்திலும் இடம்பெறுகின்றனஎன்கிறார்.

சிறைப்பட்டோரைச் சந்தித்து, அவர்கள் விடுதலை பெற உதவுவது ஏழைகள் மீதான அக்கறை பணியாகும்.

நற்செய்தியின் ஏழ்மைச் சான்று - பிரான்சிஸ்கர்கள், டொமினிக்கர்கள், அகுஸ்தீனியர்கள், கார்மெல் சபையினர் - இரந்து வாழ்தல் - தர்மம் எடுத்து வாழ்தல் இவைகளை ஏழ்மையின் அடையாளமாகப் பார்க்கின்றனர்.

திரு அவையும் ஏழைகளுக்குக் கல்வியும்

புனித தொன்போஸ்கோ, “ஏழைகளுக்குக் கல்வி புகட்டுதல், மிகச்சிறந்த அறப்பணிஎன்கிறார்.

புனித ஜான் பேப்டிஸ்ட் தெலசால், “ஏழைக் குழந்தைகள், தொழிலாளர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி ஏழ்மைப் பணிஎன்கிறார்.

புலம்பெயர்ந்தோர் - நான் அந்நியனாக இருந்தேன்; என்னை ஏற்றுக்கொண்டீர்கள் (மத் 25:35). அந்நியர்களை நான்கு வினைச் சொற்கள் கொண்டு வரவேற்போம் (Welcome), பாதுகாப்போம் (Protect), ஆதரிப்போம் (Promote), நம்மோடு இணைப்போம் (Integrate)”  என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக! (05)

எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள் (திபா 50:2).

பேரொளியான இறைத்தந்தை நம்மில் ஒளியாக ஒளிர்வது அவரது பேரன்பின் நிலைப்பாடு. இது நிறைவாக நமது அன்பு உறவில், ஆற்றல்மிக்கச் செயல்கள் வழியாக வெளிப்படுகிறது. இதற்குத் திறந்த மனத்துடன் இறைத்தந்தையின் கரங்களில் நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சரணடையும் பொழுதுஅப்பா அனுபவம்பெறுகின்றோம். இயேசுவோடு நாமும் இணைந்து முழக்கமிட்டு அறிக்கையிடலாம்.           

என்னை அனுப்பியவர் (அழைத்தவர்) என்னோடு இருக்கிறார்; அவர் என்னைத் தனியே விட்டுவிடுவதில்லை; ஏனெனில் நான் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும்  செய்கிறேன் (யோவா 8:29).

தந்தைக்கு உகந்த வாழ்வு பற்றிய தெளிவான ஞானம், அப்பா அனுபவம் மிக்க வாழ்வு வாழச் செய்யும். நம்மை ஒளியின் மக்களாக ஒளிரும் பேறுபெற்றோர் என்று உயர்த்தும். ஏனெனில், “ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது (எபே 5:9).

உண்மையைச் சார்ந்து செய்யும் நன்மைகள்தான் சுடர்விடும். இறை நம்பிக்கை ஆழப்பட்டு, இறைவார்த்தையை வாழ்வாக்கும் இயேசுவின் சீடராக வாழ உறுதிசெய்ய தூய ஆவியாரால் இயக்கப்படுபவர்களாக ஒளியேற்றும் விளக்குகளாவோம். இந்த விளக்குகளுக்கு எண்ணெயாக நிலைப்பது இறையருள் என்பது நிதர்சனமான உண்மை. இறையருள் வழங்கும் இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து அன்புப் பணி ஆற்றும்பொழுது ஒளியின் மக்களை உருவாக்க முடியும்.

இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக (உரோ 13:12); “கடவுளின் ஆவியாரால் இயக்கப்படுகின்றவர்களே கடவுளின் மக்கள் (உரோ 8:14). 

புனித யோவான் தன் திருமடலில் குறிப்பிடுவதுபோல, “யாரெல்லாம் ஆண்டவருடைய ஒளியில் நடக்கின்றார்களோ, அவர்கள் ஆண்டவரோடும் மற்றவரோடும் நட்புறவு கொண்டிருக்க முடியும் (1யோவா 1:7). மேலும், ஆண்டவருடைய ஒளியின் வழியில் நடந்து, நாம் அவரோடு நட்புறவு கொண்டிருக்கும் பொழுது பேரொளி நமக்குள்ளும் நம்மைச் சூழ்ந்தும் சுடர்விட, நாம் மட்டுமல்லாமல் நம்மோடு உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர்.

நம் செயல்கள் நன்மையானவையாக ஒளிரும் பொழுது இறைவன் மாட்சி அடைகின்றார். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுகின்றது.  “ஏனெனில், நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி, கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார் (எபே 2:10).

நம் வாழ்வில் நாம் இறைவனின் திட்டப்படி நன்மைகள் புரிய வியத்தகு வகையில் அவர் செயலாற்றுவதை நாம் அனுபவித்திருப்போம். இத்தகைய ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகின்றேன்.

மதுரையில் கணவனைப் பிரிந்து, தன் ஒரே மகனோடு வாழும் தாயைச் சந்தித்தேன். 15 வயது நிரம்பியும் திருமுழுக்குப் பெறவில்லை. இந்த நிலையில், அந்தத்  தாய் கத்தோலிக்கத் திரு அவைச் சட்டப்படி அருளடையாளங்களில் பங்குபெறத் தடைசெய்யப்பட்டதால் பெயரளவுக்குக் கிறித்தவர்களே. இந்தச் சூழ்நிலையில், மீட்பின் கருவியாகச் செயலாற்றி, ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ வழிகாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திரு அவை ஒழுங்குமுறைப்படி அத்தாய் பரிகாரம் செய்து, மீண்டும் உண்மைக் கத்தோலிக்கக் கிறித்தவ வாழ்வு வாழத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த இளைஞனுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்து, திருமுழுக்கு, நற்கருணை, உறுதிபூசுதல் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த மகன், பொறுப்பு நிறைந்த கத்தோலிக்கக் கிறித்தவ மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எத்தனை பொறுப்பு என்றால், கல்லூரிக்குச் செல்லும் முன்பும், கல்லூரியில் இருந்து வந்த பின்பும், வேலைக்குச் சென்று தன் படிப்புக்குத் தேவையான பணம் சம்பாதித்துத் தாய்க்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உடன் பயணிக்கின்றான்.

கிறித்தவக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் இவர்கள் இப்போது கருத்தாய் இருக்கின்றனர். இவர்களை நினைக்கும்பொழுது நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். அண்மையில் நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது என்னைத் தங்கள் உடன்பிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள்.  “மிகச் சிறியோராகிய என் சகோதர-சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) என்ற இயேசுவின் கூற்று இவர்களில் நிறைவேறுகின்றது.

இறைத்தந்தையின் ஆசிபெற்றவர்கள் இவர்களைப் போன்ற நன்மனம் உள்ளவர்கள் பேறு பெற்றோர். விண்ணகச் செல்வம் சேர்ப்பவர்கள் இத்தகையோரே. நாமும் உண்மையைச் சார்ந்து நன்மை மட்டுமே செய்யும் பேறுபெற்றோராவோம். பேரொளியின் ஒளியாக ஒளிரும் அருள் நிறைந்த நம்பிக்கையாளர்களாகிஇறைத் தந்தையின் பேரன்பில் மகிழ்ச்சி கொண்டவர்களாக அவரை என்றென்றும் மாட்சிப்படுத்துவோம்.

news
ஆன்மிகம்
அழைப்பு

திருமணம், புதுநன்மை, காதணி விழா, புதுமனைப் புகுவிழா, நீராட்டு விழா என்று பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் நமக்குக் கொடுக்கப்படும். நாம் அழைப்பிதழைப் பெற்றவுடன் அந்த நிகழ்ச்சிகளுக்குப் போகலாமா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பம் இரண்டு விதங்களில் தோன்றலாம்.

முதலாவது, ‘அழைப்பிதழ் கொடுத்தவர் நெருங்கிய நபர், என் வீட்டு விருந்துக்கு வந்தவர், நான் வேலை பார்க்கும் இடத்திலிருக்கும் உயர் அதிகாரி, நான் இந்த நிகழ்விற்குப் போனால்தான் அவர் என் வீட்டு நிகழ்விற்கு வருவார்என்ற பல காரணங்கள் நம் மனத்தில் தோன்றும். மேற்கண்ட காரணங்களுக்கு ஏற்றபடி நாம் அந்த அழைப்பிற்குப் பதில் கொடுப்போம்.

இரண்டாவது, ‘அழைப்பிதழ் கொடுத்தவர் என் மாமனா? மச்சானா? என் வீட்டு நிகழ்விற்கு அவன் வரவில்லை, நான் ஏன் போகவேண்டும்? கொடுத்தவர் எனக்குக் கீழே வேலை செய்பவர், அதற்கு நான் போவதா? அவருக்கு ஏதாவது செய்தால் அவர் திருப்பியே தரமாட்டார்; அதனால் நான் போக மாட்டேன்என்ற காரணங்களும் தோன்றும்.

முதலாவது மற்றும் இரண்டாவது காரணங்களும் அழைப்பிதழ்களும் நம் வாழ்வில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மேற்கண்ட அழைப்புகள் ஒரு வரையறைக்குட்பட்டு, உறவிற்காக மற்றும் சமூகத்திற்காக ஏற்படுத்தப்படும் அழைப்பாகும். உண்மையான அழைப்பு மூன்று விதங்களில் நடைபெறுகிறது.

அழைப்பு

ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்கும்போது கடவுள் இந்த உலகத்தை இன்னும் அன்பு செய்கிறார் என்ற கருத்தைச் சொல்கிறது என்று இரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். பிறப்பு என்பது கடவுள் கொடுக்கும் ஒரு கொடையாகும். மில்லியன் கணக்கில் இருக்கும் கருமுட்டைகளில் ஒரு கருமுட்டையும் ஒரு விந்தும் சேர்ந்து ஓர் உயிரை இந்த உலகிற்குக் கொடுக்கிறது. ஒரு கருமுட்டையும், ஒரு விந்தும் கடவுளின் விருப்பமின்றி நடைபெறுவதில்லை. எனவேதான்தாய் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்திருந்தேன் (எரே 1:5) என்ற கடவுளின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தாய் வயிற்றிலே கொடுக்கப்படும்  முதல் அழைப்பாகும்.

அழைப்புக்குள் அழைப்பு

பிறப்பு ஒரு கொடை. அந்தக் கொடை கடவுள் நமக்குக் கொடுத்த ஓர் அழைப்பு. அந்த அழைப்பின் அடிப்படையில் நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். ஆனால், இந்த உலகத்தில் பிறப்பு ஓர் அழைப்பு என்று தன் குடும்பத்துடன் அல்லது உறவினர்களுடன் வாழ்ந்தவர்களின் வாழ்வில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகின்றன.

நமது நாட்டின் காந்தியடிகள் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்கறிஞர் படிப்பைப் படித்தார். தனது படிப்பின் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழும் போது, தனது வாழ்விற்கான அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். அவர் தனது வாழ்வையே அகிம்சை வழியில் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தர வேண்டுமென்று மாற்றுகிறார்.

புனிதை அன்னை தெரேசா அவர்கள் இலொரோட்டா என்ற சபையில் சேர்ந்து பணிபுரியும்போது தனது வாழ்வின் அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். பின்பு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதே தனது அழைப்பு என்று உணர்ந்து பொருளுள்ள வாழ்வு வாழ்கிறார்.

தமிழ்நாட்டில் பிறந்த வள்ளலார், அண்ணனின் அரவணைப்பில் குடும்ப உறுப்பினராக வாழ்கிறார்; திருமணமும் செய்கிறார். ஆனால், தனது வாழ்வின் அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். பின்பு சத்திய சுத்த சன்மார்க்க சங்கம் ஒன்றை ஏற்படுத்துகிறார். ‘பசிஎன்ற மொழியே அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்தவராய் அனைவரின் பசியைப் போக்க வேண்டுமென்று உழைக்கிறார்.

இயேசு, தூ ஆவியால் கருவுற்று முதல் அழைப்பைப் பெற்று முப்பது ஆண்டுகள் தம் குடும்பத்துடனும் உறவினருடனும் வாழ்ந்தார். பின்பு இந்த வாழ்வின் அழைப்பு இதையும் கடந்தது என்பதைத் திருமுழுக்கு அனுபவத்தில் உணர்கிறார். அதன்பின் தம் வாழ்வுஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் (லூக் 4:18) என்பதை உணர்ந்து அதற்காக வாழ்கிறார்.

மேற்கண்ட நபர்கள் போன்று நாமும் இந்த உலகத்தில் பிறப்பு என்னும் கொடையைப் பெற்று முதல் அழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாமும்இந்தச் சமூகத்திற்கான எனது  தனிப்பட்ட அழைப்பு என்ன?’ என்பதை உணர வேண்டும். இந்த இரண்டாவது அழைப்பு என்பது நேரிடையாகக் கடவுளிடமிருந்து வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரையும் இயற்கையையும் மதித்து மாண்புடன் வாழும்போது நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த வெளிப்பாட்டிற்கான அழைப்பிற்கு நாம் ஒவ்வொருவரும் எப்போதும் கவனமுடன் விழிப்பாயிருந்து செயல்படவேண்டும். அப்படி வாழும்போது ஒவ்வொருவரும் அந்தஅழைப்பிற்குள் அழைப்பைஉணரமுடியும். இதைத்தான் திருவள்ளுவர்

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)

என்கிறார். ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன, எத்தனையோ உயிர்கள் இறக்கின்றன! ஆனால், அவற்றில் ஒருசில உயிர்கள் மட்டுமே மற்ற எல்லாருக்கும் பயனுள்ள அழைப்பை உணர்ந்து பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து இறக்கின்றன. அதுவே வாழ்க்கை.

நிலையில்லா அழைப்பு

என்னுடைய பணித்தளத்தில் 47 வயதுடைய நபர் திடீரென இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு என்னுடன் அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி உரையாடினார். அந்த அனுபவத்திலிருந்துதான் இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கினேன். அவர் தனது குடும்பத்தை சென்னையில் குடியமர்த்திவிட்டு டெல்லியில் வேலை பார்த்தார். ‘ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்என்ற வரியின் அர்த்தத்தை உணர்ந்தார். தன் வாழ்வு என்ற கொடையின் அழைப்பில் பொருளுள்ள வாழ்வு வாழ வேண்டுமென்று முடிவு செய்தார். அதனால் தனது குடும்பத்துடன் சேர்ந்து சென்னையிலே வேலையைத் தேடிக்கொண்டார். மேலும், தான் இருக்கும் சமூக மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டுமென்று எண்ணி, தனது வாழ்வைப் பொதுச் சேவைக்காகவும், இறையனுபவம் நிறைந்ததாகவும் மாற்றிக்கொண்டு அனைவரையும் சமம் என்று எண்ணி வாழ்ந்தார். மேலும், தனது மகனையும் மனைவியையும் அதன் அடிப்படையில் வளர்த்தார். இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் சேவையும், அவரின் இறையனுபவமும் அந்தச் சமூக மக்களின் மனத்திலும் என் மனத்திலும் அழியாத முத்திரையாக உள்ளதுகாந்தியடிகள், அன்னை தெரசா, வள்ளலார் போன்ற மாமனிதர்கள் வாழ்வின் அழைத்தலை உணர்ந்து வாழ்ந்தார்கள். இன்று அவர்கள் நிலையில்லா அழைப்பைப் பெற்றவர்களாயினர். அதனால் மக்களின் மனத்தில் இன்றும் வாழ்கின்றனர்.

நாமும் நமது வாழ்வின் அழைப்பிற்குள் இருக்கும் அழைப்பை உணர்ந்து வாழும்போது, நிலையில்லா அழைப்பு அனைவருக்கும் பொருளுள்ளதாக இருக்கும். “எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பு, எல்லா மனங்களும் அவனது இருப்புஎன்ற வள்ளலாரின் பாடல்களுக்கு ஏற்ப நாமும் மேற்கண்ட மாமனிதர்கள் போன்று எல்லா மனங்களிலும் நீங்காத இடம்பெற்று நிலையில்லா அழைப்பின் பொருளை உணரமுடியும்.

news
ஆன்மிகம்
மரியாவின் தேர்வு கன்னிமை அர்ப்பணத்தை ஊக்குவிக்கிறது! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 29)

1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது மரியாவின் வார்த்தைகளில் காணக்கூடியகன்னியாக நிலைத்திருப்பதற்கானஅவரின் எண்ணம்தான் திரு அவையில் கிறித்தவக் கன்னிமைக்கான தொடக்கமாகக்  கருதப்படுகின்றது.

மரியாவின்  இந்த முடிவில் புனித அகுஸ்தினார் கடவுளின் எந்தவொரு நிபந்தனையையும் காணவில்லை; மாறாக, அதில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட அவரின் ஒரு வார்த்தைப்பாட்டைக் கண்டார். இந்த வகையில், திரு அவையின் வரலாறு முழுவதுமேபுனித கன்னிகளுக்குஒரு முன்னுதாரணமாக மரியாவைக் காண்பிப்பது சாத்தியமானது.  “மரியா, அவர் யாரைக் கருத்தரிக்கப் போகின்றார் என்பதை அறியாதபொழுதே அவரின் கன்னித்தன்மையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். ஆகவே, விண்ணக வாழ்வைப் பின்பற்றுதல் என்பது உலகு, நிலையற்ற உடல் சார்ந்த ஒரு வார்த்தைப்பாட்டின் மூலமோ, ஒரு கட்டளை அல்லது சேவை செய்வதற்கான ஒரு தேவை வழியாகவோ அல்ல; மாறாக, அன்பின் ஒரு தெரிவு வழியாக வந்ததொன்றாகும் (De Sancta Virg., PL 40:398). 

வானதூதர் மரியாவை ஒரு கன்னியாக நிலைத்திருக்கக் கேட்கவில்லை. மரியாதான் கன்னியாக இருப்பதற்கான எண்ணத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றார். இந்த அர்ப்பணிப்பில் கன்னி வாழ்வால் கடவுளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவரை இட்டுச் செல்கின்ற அன்பின் தெரிவானது காணப்படுகின்றது. மரியாவின்  முடிவு இயற்கையான தன்மையை மையப்படுத்தி, ஒவ்வோர் அழைப்பின் வேராகக் கடவுளுடைய முன்னெடுப்பு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுப்பதன் வழியாக, நாசரேத்து இளம் பெண்ணானவள் தனது உள் அழைத்தலுக்கு அதாவது, தூய ஆவியாரின் உந்துதலுக்கு அவரை அவருடைய கன்னிக் கொடையின் மதிப்பு மற்றும் அர்த்தத்தைப் பற்றி அறிவுறுத்திய அழைத்தலுக்குப் பதில் தந்து கொண்டிருந்தார். இந்தக் கொடையை அழைக்கப்படுவதை உணர்ந்தாலன்றி அல்லது தேவையான ஒளியும் மற்றும் திடனுமான தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டாலன்றி யாராலும் ஏற்க முடியாது

கன்னி வாழ்விற்கான ஒரு தீர்க்கமானதொரு முடிவை மரியா எடுத்தார்

2. புனித அகுஸ்தினார்வார்த்தைப்பாடுஎன்ற சொல்லை முதன் முதலில் அவர்களின் வாழ்க்கை நிலையைபுனித கன்னிகள்என்று அவர் அழைத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருந்தாலும், மரியா திரு அவையின்  தொடக்கக் காலங்களிலிருந்தே அர்ப்பணத்தின் அல்லது ஒருவரின் வாழ்வைக் கடவுளுக்குக் கொடுக்கிறபொழுது, வழக்கத்திலிருக்கிற வார்த்தைப்பாட்டை எடுத்தார் என்பதற்கு நற்செய்தி நூலில் தெளிவான சான்றுகள் இல்லைமரியா கடவுளுக்கு அவரின் இதயத்தையே கொடுத்து கன்னியாக நிலைத்திருக்க, தனிப்பட்ட வகையில் முடிவெடுத்தார் என்பதையே நாம் திருவிவிலியத்திலிருந்து அறிகிறோம். ‘சீயோனுடைய மகளாகவாழ கொடுக்கப்பட்ட அழைத்தலை நிறைவுசெய்து, கடவுளின் நம்பிக்கைக்குரிய மணவாட்டியாக இருக்க மரியா விரும்புகிறார். இவ்வாறு அவரின் முடிவினால் கன்னித்தன்மையில் ஒரு பிளவுபடாத இதயத்தோடு கடவுளுக்குப் பணி செய்ய திரு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் முன்மாதிரியாக அவர் ஆகின்றார்.

நற்செய்தி நூல்களோ அல்லது மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களோ மரியா கன்னியாக நிலைத்திருப்பதற்கான முடிவை எப்பொழுது எடுத்தார் என்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. இருப்பினும், அவர் மிகவும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வானதூதரிடம் அவர் கேட்ட கேள்வியிலிருந்து  எளிதில் உணரப்படுகின்றது. மரியா கன்னித்தன்மையைப் பாதுகாப்பதற்கான அவரின் விருப்பத்தை வெளிப்படுத்த அவருடைய எண்ணமானது கால ஓட்டத்தில் முழு வளர்ச்சி பெற்றது என்பதைக் காண்பித்து, பரிந்துரைக்கப்பட்ட தாய்மையின்  பார்வையில்  அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை.  

உண்மையில், கன்னியாக வாழ்வதற்கான மரியாவின்  தேர்வானது கடவுளின் தாயாக ஆவதன் எதிர்பார்ப்பில் முன்னரே உணரப்படாமல் செய்யப்பட்டதல்ல; மாறாக, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வுக்கு முன்பே அவரின் எண்ணத்தில் வளர்ந்து வந்ததாகும். இதிலிருந்து அவரின் இதயத்தில் இந்த விருப்பமானது, எப்பொழுதுமே இருந்தது என்பதை நாம் யூகிக்க முடியும்: அவரின் கன்னித் தாய்மைக்கு அவரை எந்த அருளானது தயாரித்ததோ அதே தூய ஆவியானவர் அவருடைய சிறு வயது முதலே அவரில் உந்துதலை ஏற்படுத்த இயலாமல் இருந்தபொழுதும் உண்மையில் அவரின் முழு ஆளுமை வளர்ச்சி மற்றும் கடவுளோடு கூடிய முழு ஒன்றிப்பிற்கான ஆர்வத்தையும் அவரில் ஏற்படுத்தியது.

3. கடவுள் இன்றும் அநேக இளைஞர்-இளம் பெண்களின் உள்ளத்திலும் வாழ்விலும் செய்கின்ற அற்புதமானது மரியாவின் ஆன்மாவில் முதன் முதலில் உணரப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் அநேக மேலோட்டமான ஈர்ப்புகளால் தடம் மாறிப் போன நமது சமுதாயத்தில் கூட அநேக இளைஞர்-இளம்பெண்கள் மரியாவின்  எடுத்துக்காட்டிலிருந்து வருகின்ற அழைத்தலை ஏற்று அவர்களின் இளமையைக் கடவுளுக்காகவும் மற்றும் அவர்களுடைய சகோதர-சகோதரிகளுக்கான பணிக்காகவும்  அர்ப்பணிக்கின்றார்கள்.

இந்தத் தேர்வானது மனித மதிப்பீடுகளை நிராகரித்தல் என்பதைவிட, அது மிகப்பெரிய மதிப்பீடுகளின் தெரிவாகும். இந்த வகையில், எனக்கு முந்தைய வணக்கத்திற்குரிய திருத்தந்தை ஆறாம் பவுல் தனது அப்போஸ்தலிக்கப் போதனையானமரியன்னை வழிபாட்டு மரபு (Marialis cultus) என்ற ஏட்டில் எவ்வாறு ஒவ்வொருவரும் திறந்த மனநிலையோடு இறைச் செய்தியின்  சான்றுகளைப் பார்க்கின்றார்கள்  என்பதைகன்னி நிலைக்கான மரியாவின் தேர்வைத்திருமண நிலையின் எந்தவொரு மதிப்பீட்டையும் நிராகரிக்கும் ஒன்றல்ல; மாறாக, கடவுளின் அன்பிற்கு அவரையே முழுமையாக அர்ப்பணிப்பதற்காக அவர் செய்த துடிப்புமிக்க தேர்வு என்றே பாராட்டுவார்கள்என்று வலியுறுத்திக் கூறுகின்றார் (எண். 37).

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், கன்னி நிலையின் தேர்வானது கிறிஸ்துவின்மேல் உள்ள முழுபற்றினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக, இது  மரியாவில்  வெளிப்படையாக இருக்கின்றது. கிறிஸ்துவின்  பிறப்பு அறிவிப்பிற்குமுன் இதைப்பற்றி உணராமல் இருந்தாலும், கிறிஸ்துவினுடைய பின்னணியில் தூய ஆவியானது அவரின் கன்னி வாழ்வுக்கான அர்ப்பணத்தைத் தூண்டுகின்றது. அவரின் முழு இருத்தலிலும் மீட்பரும் மெசியாவுமானவரை வரவேற்பதற்கு அவர்  ஒரு கன்னியாக நிலைத்திருக்கின்றார்மரியாவில்  தொடங்கிய கன்னி வாழ்வானது இவ்வாறு அதன் கிறிஸ்து மைய  பரிமாணத்தை (Christocentric dimension) வெளிப்படுத்துகிறது. மேலும், திரு அவையில் வாழப்படும் கன்னி வாழ்வுக்குக் கிறிஸ்துவின் தாயில் அதன் உன்னத மாதிரியைக் காண்கின்றது. அவரின்  தனிப்பட்ட கன்னி வாழ்வானது இறைத்தாய்மையோடு  இணைக்கப்பட்டு ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக நிலைக்கின்றது. மேலும், கன்னி வாழ்வுக்கான ஒவ்வொரு கொடைக்கும் அர்த்தம் மற்றும் வெளிச்சத்தைக் கொடுக்கின்றது.

கன்னிமை அர்ப்பணமே ஆன்மிக வளங்களின் ஊற்றாக இருக்கின்றது

4. திரு அவையின் வரலாற்றில் எத்தனையோ இளம்பெண்கள் ஆண்டவருடைய தாயின் கன்னி இதயத்தின் அழகு மற்றும் மேன்மையை அவர்கள் தியானிக்கின்றபொழுது கன்னி வாழ்வின் மாதிரியைத் தழுவியதால் இறைவனின் அழைத்தலுக்கு முழு மனத்தோடு சம்மதம் தர தூண்டப்படுவதை உணர்ந்திருந்தார்கள்! நான் திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல்மீட்பரின் தாய்  (Redemtoris Mater) என்னும் சுற்றுமடலில் நினைவுகூருகின்றவாறு, “நாசரேத்து கனியின்  எடுத்துக்காட்டிற்குப் பின் குறிப்பாக இப்படிப்பட்ட கன்னி வாழ்வு ஒரு சிறந்த ஆன்மிகக் கனியின் ஊற்றாகும்: இது தூய ஆவியில் தாய்மையின்  ஊற்றாக இருக்கின்றது (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 43).

மரியாவின்   கன்னிமை ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களிலும் கன்னி வாழ்விற்கான கொடையின் மீதான மதிப்பைத் தூண்டுகிறது. இது திரு அவையில் கடவுளுடைய எல்லா நிகழ்வுகளின் மீதான முதன்மைநிலையின் அடையாளமாகவும், வரவிருக்கின்ற வாழ்வின் முன் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றது. எனவே, இறையாட்சிப் பணிக்குக் கன்னிமையில் இன்றும் தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கும் தாராள உள்ளங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். அதேநேரத்தில், முன்னரே நற்செய்தி அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் தன் இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு (hedonism) மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) போன்றவை பல இளைஞர்-இளம்பெண்களைத் துறவற வாழ்வைத் தழுவுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்புவதைப் போலத் தோன்றுகிறது. எனவே, மரியாவின்  பரிந்துரை வழியாகத் துறவற அழைத்தல் பூத்துக் குலுங்க இறைவனிடம் இடைவிடாது செபிப்போம். நமது செபங்களால் உந்தப்பட்டு அவர்கள், கிறிஸ்துவினுடைய தாயின் முகமானது தெய்வீகக் குருவைப் பின்செல்வதற்கு முயற்சிக்கின்ற அநேக கன்னியர்களில் எதிரொலித்து மனுக்குலத்திற்குக்  கடவுளின்  இரக்கம் மற்றும் கருணையின் சின்னமாக இருப்பதை அவர்கள் தொடர்வார்கள்.

மூலம்: Pope John Paul II, Mary’s choice inspires consecrated virginity, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 21 August 1996, p.7.