news
ஆன்மிகம்
ஆலயப் பாடல்களுக்கு அனுமதி பெற வேண்டுமா?

1. பின்புலம்

கத்தோலிக்கத் திருவழிபாட்டிலும் (திருப்பலி), திருவழிபாட்டிற்குப் புறம்பே திருமணங்கள், அடக்கச் சடங்குகள், மரியா / புனிதர்களின் நவ நாள்கள் மற்றும் திருவிழாக்களிலும், கிறிஸ்து பிறப்பு, வருடப் பிறப்பு மற்றும் தவக்காலம் / புனித வாரச் சிறப்புக் கொண்டாட்டங்களின் போதும் இறைமக்கள் பாடுவதற்காகப் புதுப்புது பாடல்கள் இயற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், பொதுநிலையினர் என்று பலரும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஆலயப் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் யாவை? அவற்றிற்குத் திரு அவையின் உரிய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமா? திரு இசைக்கு அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன? இக்கேள்விகளுக்கு இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.

2. திரு இசையின் பண்புகள்

இறைவனுக்கு மாட்சிமை நல்குவதையும், மானிடரைத் தூய்மைப்படுத்துவதுமே திரு இசை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிடும் திரு அவை, ஆசிரியப் படிப்பினை, அதன் இன்றியமையாத பண்புகளாகக் கீழ்க் காண்பவற்றைக் கோடிட்டுக்காட்டியுள்ளது:

1) இசை அமைப்பாளர்கள் கிறித்தவ உணர்வால் நிரம்பியிருக்க வேண்டும். திரு இசையைப் பேணி அதன் கருவூலத்தைப் பெருக்கத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் அமைக்கும் பண்கள் பாட்டுக் குழுக்களால் மட்டும் பாடக்கூடியனவாய் இல்லாமல், நம்பிக்கையாளர் குழுமம் அனைத்தும் செயல்முறையில் பங்கு கொள்ளப் பொருத்தமானவையாகவும் விளங்கவேண்டும்.

2) ஆலயப் பாடல்கள் திருவிவிலிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டும், கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு ஒத்திருப்பதாகவும் அமைய வேண்டும்.

3) திருவழிபாட்டுக் காலங்களோடும், திருவழிபாட்டு மறைநிகழ்வுகளின் கொண்டாட்டங்களோடும், திருவழிபாட்டுப் பாடல்களின் வார்த்தைகளும் இசையும் பொருந்திச் செல்லவேண்டும்.

4) திரு இசையின் வார்த்தைகள் இறைவனின் பெயரில், அவரை நோக்கி விளித்து, அவரது மாட்சியையும் மாபெரும் செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

5) திருவழிபாட்டில் இடம்பெறும் பாடல்களின் கீழ்க்காணும் வகைகளுக்கு ஏற்றவாறு திரு இசை அமைய வேண்டும்.

வருகைப்பாடல்: கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பைப் பேணவும், திருவழிபாட்டுக் காலத்தின் அல்லது திரு நாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனியில் இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாட லின் நோக்கம் ஆகும்

பதிலுரைப் பாடல்: முதல் வாசகத்தைத் தொடர்ந்து வரும் பதிலுரைப் பாடலுக்கு வாசக நூலில் உள்ள பதிலுரைத் திருப்பாடலையே பாடவேண்டும். அதே திருப்பாடல் ஏற்கெனவே இசையமைக்கப்பட்டுள்ள ஒரு தியானப் பாடலாக இருப்பின் அதைப் பாடலாம்.

காணிக்கைப் பாடல்: நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான அப்ப, இரசம் உள்ளிட்ட காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதற்காகப் பவனியாகவோ பவனியின்றியோ பீடத்திற்குக் கொண்டுவரும்போது பாடுவது.

திருவிருந்துப் பாடல்: நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மிக ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உள்ளத்து மகிழ்ச்சியை எடுத்துக்காட்டவும், பவனியாகச் செல்பவரின் குழும இயல்பைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அமையும் பாடல் (‘கிறிஸ்துவின் ஆத்துமமேஎன்ற பாடலை ஒவ்வொரு திருப்பலியிலும் பாடவேண்டுமென்ற கட்டாயம் இல்லை).

நன்றிப்பாடல்: நற்கருணை விருந்திற்குப் பின், ‘திருவிருந்துக்குப்பின் மன்றாட்டுக்கு முன் அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சிறிது நேரம் அமைதியாகச் செபித்த பின் இறைவனுக்கு நன்றிகூறுவதற்காகப் பாடப்படும் ஒரு திருப்பாடல் அல்லது புகழ்ச்சிப் பாடல்.

இறுதிப்பாடல்: திருப்பலியின் இறுதியில் அருள்பணியாளர் திருக்குழுமத்திற்கு ஆசி வழங்கி, நற்செய்தியை அறிவிக்கவும், நற்பணி செய்யவும் திரும்பிச் செல்லும்படி அதை அனுப்பியபின் பாடுவதற்கு உரோமைத் திருப்பலி நூலில் ஏற்பாடு எதுவும் இல்லை (மக்கள் கலைந்து செல்லும்போது அன்னை மரியா / புனிதர்களின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுவதும் ஏற்புடையதல்ல; அந்நேரத்தில் பொருத்தமான இசையை மட்டும் இசைப் பெட்டியில் வாசிப்பது உகந்தது).

6) திருவழிபாடு திரு அவையின்தனிநபர் கொண்டாட்டம்என்றல்லாமல், ‘பொதுக் கொண்டாட்டம்என்பதால் அதில் இடம்பெறும் திரு இசையும், திரு அவையினுடைய மரபு மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பின்பற்றியிருக்க வேண்டும் (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம். திருவழிபாடு, எண்: 112-121; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண்: 40-41, 47-48, 61, 74, 86 - 88 அன்பின் அருளடையாளம் (Sacamentum Caritatis, 2007), எண் : 42 - 70; ஆண்டவரின் அருள்வாக்கு, (Verbum Domini, 2010), எண்: 69.

3. அனுமதிபெற வேண்டிய வழிமுறைகள்

ஆலய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பாடல்கள், இராகங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிப்பதும் அனுமதிப்பதும் அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதும் ஆயர் பேரவையின் பொறுப்பாகும் (காண்: உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, 2017, எண்: 48 - 393). இந்தியாவில் திருவழிபாடு சார்ந்தவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தந்த மண்டல ஆயர் பேரவைக்கு இலத்தின் ஆயர் பேரவை வழங்கியுள்ளது. சில நாடுகளின் ஆயர் பேரவைகள் (கனடா, வட அமெரிக்கா, மலேசியா) இசை அமைப்பாளர்கள் தங்களின் திரு இசைக்கு அனுமதி பெறுவதற்காக வழங்கியுள்ள கீழ்க்காணும் விதிமுறைகள் மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1. ஓர் இசை அமைப்பாளர் தனது இடத்து ஆயருக்குத் தனது படைப்புகளை அனுப்ப வேண்டும். 2. அதை, அந்த ஆயர் தமக்குரிய ஆயர் பேரவை திருவழிபாட்டுப் பணிக்குழுவிற்கு மேலனுப்ப வேண்டும். 3. மேற்காணும் திருவழிபாட்டுப் பணிக்குழு அனுப்பப்பட்டுள்ள திரு இசைப்பாடல்களை மேற்கூறப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளின்படி ஆராய்ந்து அவற்றின் தகுதியைப் பற்றிய கருத்தை மறைமாவட்ட ஆயருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. அக்கருத்தைப் பெற்றவுடன் மறைமாவட்ட ஆயர் திரு இசைப்பாடல்கள் அனுப்பிய இசை அமைப்பாளருக்குஅனுமதி வழங்கப்படுகிறது / ‘மறுக்கப்படுகிறதுஎன்ற பதிலை அனுப்ப வேண்டும். 5. மறைமாவட்ட ஆயர் அனுமதி வழங்கும் திரு இசைப் பாடல்களின் காப்புரிமை (Coyright) மறைமாவட்டத்திற்கு உரியது. அப்பாடல்கள் மறைமாவட்ட டிஜிட்டல் கருவூலத்தில் சேமிக்கப்படும். அவற்றைக் கத்தோலிக்க இறைமக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவற்றையே ஆலயப் பாடல்களாகப் பயன்படுத்தவேண்டும். 6. தனிச்சுற்றுக்காக வெளியிடப்படும் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளிலிருந்து பாடல்களை ஆலயங்களில் பாடுவதற்கும் மேற்கண்ட முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

4. இறுதியாக...

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளை உள்வாங்கி இசை அமைக்கப்பட்டு வெளியிடப்படும் அருமையான ஆலயப் பாடல்கள் உள்ளன. அதேவேளையில், திருவிவிலியத்திலும், இறையியல் கோட்பாட்டிலும் வேரூன்றி இல்லாத, இறைவனின் பெயரை விளித்து எழுதப்படாத, நம்பிக்கையாளர்களின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தாத பண்களும், திருக்குழுமம் அனைத்தும் பங்குகொள்ள இயலாத, சினிமா/பாட்டுக் கச்சேரிப் பாடல்களின் இராகங்களைப் பிரதிபலிக்கும் இசையும் கொண்ட பாடல்கள் ஆலயப் பயன்பாட்டிற்காக வியாபாரப் போட்டியுடன் புதிது புதிதாக இறக்கப்படுகின்றன என்பதையும் மறுக்கமுடியாது. இந்நிலையில், தமிழ்நாடு ஆயர் பேரவை திரு அவை ஆசிரியப் படிப்பினைகளின்படி ஆலயப் பாடல்களை இயற்றுவதற்குரிய விதிமுறைகளை வெளியிட்டு, அனுமதி வழங்கி, கண்காணிப்பு செய்து திரு இசையின் தரத்தையும் மாண்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.

news
ஆன்மிகம்
ஆற்றல் மையங்களும் திருமுழுக்கும் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 18)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்:தந்தையே! கடந்த வாரம் முழுவதும் நம் உடலில் உள்ள ஆற்றல் மையங்களுக்கும், நம் வாழ்விற்குமான தொடர்பு குறித்துதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நம் ஒட்டுமொத்த மானிட வாழ்வே ஹார்மோன் சுரப்பிகளின் விளையாட்டுதான் என்று கூறினால் அது மிகையல்ல. நம் உடலில் எத்தகைய ஹார்மோன்கள் சுரக்கின்றன என்பதற்கு ஏற்ப நம் உடலும் நம் செயல்பாடுகளும் நம் வாழ்வியல் அணுகுமுறைகளும் அமைகின்றன என்பதை இன்றைய அறிவியலும் மருத்துவத்துறையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இத்தகைய பின்னணியில் பார்க்கும்போது, நம் வாழ்வு சீராகவும் முழுமையாகவும் அமைய வேண்டுமெனில், உடலில் உள்ள ஏழு ஹார்மோன் சுரப்பிகளும் சீராகச் செயல்பட வேண்டியிருக்கிறது. அவற்றைச் சீராக்குவதற்கான வழிமுறையே அவற்றோடு தொடர்புடைய ஆற்றல் மையங்களைச் செயல்படுத்துவது.”

அருள்பணி: நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எனினும், பிரச்சினை என்னவென்றால் பல மனிதர்களுக்கு உடலின் மேல்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்களும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதுதான். நம் உடல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால், உடல் சார்ந்த செயல்பாடுகளான நடத்தல், வேலைகள் செய்தல், ஓடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின்போது உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் தாமாகவே தூண்டப்படுகின்றன. அப்பொழுது அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளும் இயல்பாகவே தூண்டப்படுகின்றன. அதாவது, உடல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது அட்ரினல், கணையம், பாலுறவுச் சுரப்பிகள் இயல்பாகவே இயக்கப்படுகின்றன. எனவே, அவற்றோடு தொடர்புடைய செயல்களை நம் உடல் இயல்பாகவே முன்னெடுக்கின்றது.”

அகஸ்டின்:நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உடலின் மேல்பகுதியில் உள்ள பீனியல், பிட்யூட்டரி, தைமஸ் சுரப்பிகளும், அவற்றோடு தொடர்புடைய ஆற்றல் மையங்களும் நம்மில் அதிகமாக இயங்குவதில்லை என்பது போல் தெரிகிறதே?”

அருள்பணி:ஆம், அவற்றை இயக்குவதற்கான சில முயற்சிகளைத்தான் நாம் ஆன்மிகப் பயிற்சி என்கிறோம்.”

கிறிஸ்டினா:தந்தையே, நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது, எனது வகுப்பு ஆசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்வது எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘புருவ மத்தியில் கவனத்தை வைத்து மூச்சுக் காற்றைக் கவனித்தால் மனம் ஒருமுகப்படும், படிப்பு நன்றாக வரும்என்று அவர் அடிக்கடி கூறுவார்.”

மார்த்தா:தந்தையே! உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும், நாம் கடந்த கட்டுரையில் சிந்தித்த மனம் புறம்நோக்கி இயங்குவதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறதே?”

அருள்பணி:ஆம், உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படும்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையும், தனக்குத் தேவையானவற்றை அடையவேண்டும் என்ற வாழ்வாதாரத் தேடலும் ஒரு மனிதரில் இயல்பாகவே முகிழ்க்கின்றன. இது மனத்தைப் புறம்நோக்கி இயக்குகிறது. இது நல்லது என்றாலும், இதில் இருக்கின்ற தீமைகள் குறித்து நாம் ஏற்கெனவே விவாதித்து இருக்கின்றோம்.”

அகஸ்டின்:இத்தகைய நிலையைச் சமன் செய்யும் பொருட்டே உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் தூண்டப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள்... அப்படித்தானே?”

அருள்பணி:ஆம், உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் இயக்கப்படும்போது மனம் அகம் நோக்கித் திரும்புவது இயல்பாகவே நடக்கும். அதாவது, மனத்தை அகம் நோக்கித் திருப்புவதற்கும், உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. இத்தகைய செயல்பாடுதான் திருமுழுக்கு அருளடையாளத்தின்போது நிகழ்கிறது. இந்திய ஆன்மிகத்தின் பின்னணியில் உச்சந்தலை ஆற்றல்மையமே (crown chakra) மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான பாலமாகத் திகழ்கிறது என்று கடந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். உச்சந்தலை ஆற்றல் மையமானது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று காரணிகளால் அடைபடும்போது, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்படுகிறது. பாலமாக இருக்க வேண்டிய இடம் பாவத்திற்கான காரணமாகி விடுகிறது. உச்சந்தலை ஆற்றல் மையத்தைத் தூய்மையாக்கி, கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவுப் பிணைப்பைக் கொண்டு வருவதே திருமுழுக்கு.”

அகஸ்டின்:இது மிகவும் வித்தியாசமான விளக்கமாக இருக்கிறது தந்தையே! உச்சந்தலையில் ஏன் கிறிஸ்மா தைலம் பூசப்படுகிறது? ஏன் அங்கு புனித நீர் ஊற்றப்படுகிறது? என்பதன் அர்த்தம் இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.”

அருள்பணி: ஆம்! கிறிஸ்மா தைலம் பூசப்பட்டு, புனித நீர் (தீர்த்தம்) ஊற்றப்படும்போது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றையும், இதற்குப் பின்புலமாக இருக்கின்ற மனத்தின் புறம்நோக்கிய அதீத வேட்கையையும் வெற்றி கொள்வதற்கான சிறப்பு அருள், திருமுழுக்கைப் பெறுபவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல திருமுழுக்கின்போது செயல்படுத்தப்படும் மற்றோர் ஆற்றல் மையம் இதயம் (heart center)! ஏழு ஆற்றல் மையங்களில் நடுவில் இருக்கும் இது சமநிலை வாய்ந்ததாக இருக்கின்றது. அகம்நோக்கிய தன்மையையும், புறம்நோக்கிய தன்மையையும் சமமாக வைத்திருப்பதற்கான ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. எந்த ஒரு மனிதர் தன் இதயத்தில் கவனத்தை வைத்து வாழ்கிறாரோ, அந்த மனிதரது வாழ்வு எத்தகைய பதற்றத்திற்கும் ஆளாகாமல் சமநிலையில் இருக்கும் வாழ்வாக இருக்கும். மேலும், இது தைமஸ் சுரப்பியைச் சுரக்க வைத்து, ஒரு மனிதரது அன்பு செய்யும் தன்மையையும் அதிகப்படுத்துகிறது.”

கிறிஸ்டினா:ஒரு குழந்தையின் நெஞ்சில் எண்ணெய் பூசப்படுவது இதற்காகத்தானா?”

அருள்பணி:ஆம், இதையே இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும்போது, எல்லா ஆன்மிக மரபுகளிலும்  ‘இதயக் குகை (cave of the heart) என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. ‘இதயக் குகைஎன்பது ஒரு மனிதர் தன்னை அமைதிப்படுத்தி, தனக்குள் இருக்கின்ற இறைத்தன்மையை உணர்வதற்கான இடமாக இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆன்மிக ஞானியான இரமண மகரிஷி, ‘இதயக் குகையில் கடவுள் நம்மை தம் இயல்பாக உருமாற்றித் தருகிறார்என்கின்றார். அவர் கற்றுக்கொடுத்த தியானம், இதய ஆற்றல் மையத்தில் நம் கவனத்தை வைத்துநான் யார்?’ என்கின்ற கேள்வியைக் கேட்பதாகும். இந்தக் கேள்வியின் நோக்கம் அறிவுப்பூர்வமான பதிலைக் கண்டுபிடிப்பதல்ல; மாறாக, நமக்குள்ளே பயணிப்பதாகும். இராம்தாஸ் என்ற மற்றொரு ஞானி, ‘இதயக் குகையில் வாழத் தெரிந்தவருக்கு எல்லையுமில்லை, காலமுமில்லைஎன்கின்றார்.”

அகஸ்டின்:தந்தையே, ஆற்றல் மையங்களையும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளையும் செயல்படுத்துவது முழுமையான வாழ்விற்கு அவசியம் என்கின்ற உண்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இக்கருத்து இன்றைய அறிவியலோடு இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. எனினும், இந்த ஆற்றல் மையங்கள்மீது புனித நீர் ஊற்றப்படுவதாலும், எண்ணெய் பூசப்படுவதாலும் அவை செயல்படுத்தப்படுகின்றன என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள என் மனம் தயங்குகிறது.”

அருள்பணி:இது குறித்து நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.”              

(தொடரும்)

news
ஆன்மிகம்
மனமும் குணமும் (சதுக்கத்தின் சப்தம் - 3)

இன்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்கே, எதிலே சிக்கித் தவிக்கிறீர்கள்?

நம் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி கருத்துரையில், யோவான் நற்செய்தியில் வருகின்ற பெத்சதா குளத்தில் நடந்த ஒரு நிகழ்வை, ஒரு மருத்துவமனைக்குள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளைக் காண்கின்ற உணர்வாகப் பார்க்கின்ற நமக்கு, “அங்கே பலர் - நோயாளிகள், கண் குருடானவர்கள், காது கேளாதவர்கள், கால் ஊனமுற்றோர் போன்ற பலர் படுத்திருந்தனர் (யோவா 5:1-9) என்றும், நம் வாழ்வில் பல நேரங்களில் இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் நாம் உள்ளாகும்போது பிரச்சினைகளைச் சோர்வில்லாமல் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய துணிவை, நோயுற்ற மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதைஇயேசுவின் குணப்படுத்துதல்குறித்துச் சிந்திக்கும் நாம் குறிப்பாக, முடக்கப்படுதல், ஒரு சூழலுக்குள் சிக்கிக்கொள்ளுதல் பற்றியும், தொடர்ந்து போரிட விரும்பாமல் விட்டுக்கொடுத்துச் செல்லும் நிலையிலிருக்கும் ஒரு மனிதராகஉடல் நலமற்ற மனிதர் நலமடைதல்என்ற பகுதியைக் கொண்டு விவரிக்கின்றார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

குணப்படுத்தும் குளம்

இயேசு யூதர்களின் திரு விழாவில் பங்கேற்பதற்காக எருசலேமுக்குச் செல்கின்றார். நேரடியாக ஆலயத்திற்குள் செல்லாமல், ஆடுகளைக் குளிப்பாட்டித் தூய்மைப்படுத்தி, அதன்பின் காணிக்கையாக்கும் இடத்திற்கு வந்து அதன் வாயிலருகில் நிற்கின்றார். இந்த ஆட்டுவாயிலின் அருகே தீட்டானவர்கள், தூய்மையற்றவர்கள் என்று கருதப்பட்ட, கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நோயாளிகள் இருந்தனர்.

இம்மக்கள் தங்களது வாழ்க்கை விதியை மாற்றக்கூடிய ஓர் அதிசயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வாயிலின் அருகே இருந்த குளத்தில் இருந்த நீரானது அதிசய நீராக, குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட நீராகக் கருதப்பட்டது. அந்த நீர் கலங்கும்போது, யார் முதலில் இறங்குகின்றார்களோ அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தது.

இரக்கத்தின் வீடு, ஏழைகளின் போர்

இக்குளமானதுஏழைகளிடையே போராட்டம்இருந்ததால் ஒரு விரும்பத்தகாத காட்சியை உருவாக்கியது. அங்கிருந்த நோயாளிகள் குளத்திற்குள் நுழைய சிரமப்பட்டுத் தங்களது உடலை இழுத்துச் செல்லும் சோகமான காட்சியை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பெத்சதா என்றால்இரக்கத்தின் வீடுஎன்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டும் அக்குளமானது, இறைவன் வாழும் திரு அவையின் உருவகமாகக் கூட இருக்கலாம்.

சாக்குப்போக்குத் தன்மை 

38 ஆண்டுகளாக உடல்நலமற்று, பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இயேசுவின் கேள்வி இதுதான்: ‘நீர் குணமடைய விரும்புகிறீரா?’

1. ‘என்னை குளத்தில் இறக்கிவிட யாரும் இல்லைஎன்று அவர் கூறுகிறார். எனவே, தவறு அவருடையது அல்ல; ஆனால், அவரைக் கவனித்துக்கொள்ளாத மற்றவர்களின் தவறு என்பதாகக் கூறுகின்றார். இந்த அணுகுமுறையானது பொறுப்பேற்றலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக மாறுகிறது.

2. ‘நான் போவதற்குமுன் வேறு ஒருவர் இறங்கி விடுகிறார்என்று உடல்நலமற்றவர் இயேசுவிடம் கூறிய வார்த்தைகளானது; அம்மனிதர் தனது வாழ்வை ஒரு விவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது. நாம் அதிர்ஷ்டமற்றவர்களாக இருப்பதால், விதி நமக்கு எதிராக இருப்பதால் நமக்கு எல்லாம் மாறாக நடக்கின்றன என்று நாம் எண்ணுகின்றோம். இம்மனிதரும் அதைப்போலவே உற்சாகமிழந்தவராக, வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவராகவே தன்னை உணர்கின்றார்.   

வாழ்க்கையில்அடுத்து என்ன செய்வது?’ என்ற உறுதியான தீர்மானம் செய்யாமல் இருப்பதற்கான ஓர் ஏமாற்றுவழியாக இதனைக் கையாள்கின்றார். நற்செய்தியில் முடங்கிப்போன மனிதனைப் போலவே, நாமும் சிக்கிக்கொள்ளலாம். மேலும், குணமடைய வேண்டும் என்ற ஆசை நமக்கும் மங்கிப்போகலாம்.

உன் வாழ்க்கை உன் கையில்

எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்என்ற வார்த்தைகளின் வழியாக அம்மனிதர் எழுந்து நடக்கவும், பல ஆண்டு களாக இருந்த அவரது சூழலை மாற்றவும், படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கக் கட்டளையிடுகின்றார். அவரது படுக்கையானது அப்படியே அங்கேயே விட்டுவிடக்கூடாது, தூக்கி எறியப்படவும் கூடாது. அது அவரின் நோயினை, வாழ்க்கை வரலாற்றை அடையாளப்படுத்துகின்றது.

அதுவரை கடந்த காலத்தினால் தடுக்கப்பட்டு, இறந்த மனிதனைப்போல அங்கேயே படுத்துக் கிடந்த அவர், இப்போது தனது படுக்கையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில் என்ன செய்யலாம்? என்பதை அவரே தீர்மானிக்கலாம். எந்தப் பாதையில் நடப்பது என்பதை அவரே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்.

அவருக்கு உதவ யாரும் இல்லைஎன்பது உண்மையா? புனித அகுஸ்தினார் கூறுகையில், “முடக்குவாதத்திற்கு ஓர் உதவிக்கரம் மட்டுமல்ல; கடவுளாகவும் இருக்க ஒரு மனிதர் தேவைஎன்கிறார்.

நீங்கள் குணமடைய விரும்புகிறீர்களா?

ஒரு மருத்துவமனையில் இது என்ன கேள்வி? உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், இதயநோய், மனநோய், முடக்குவாதமுற்றோர் இவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இது என்ன கேள்வி? எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கேள்வி தேவைப்படுகிறது. இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் மண்டபத்தில் படுத்துக் கிடப்பவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நோய். அவ்வளவுதான் வேறுபாடு. ஏதோ ஒரு வரிசையில், எதற்கோ காத்திருக்கிறோம்.     

சில சமயங்களில் ஆண்டாண்டாகத் துன்பம் நம்மைத் தொடர்ந்து வரலாம். ஆம், முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருக்கலாம். அடுத்தவரோடு போட்டிபோடவும் நமக்குத் துணிவு, திறமை, வசதி இல்லாமல் இருக்கலாம். நல்லவர்கள் நாலுபேர் நமக்கு உதவி செய்ய முன்வராமலிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். மனம் சோர்ந்து போக வேண்டாம். கடவுள் நம்மைத் தேடிவரும் நேரத்தில் தயாராக இருப்போம். கடவுள் உன்னிடம்நலம்பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கும்போது, உன் உடலும் உள்ளமும் தயாராக இருக்கட்டும். எத்தகைய நோயோடு, குறையோடு, தேவையோடு இருந்தாலும், நம் இயேசு நமக்குத் தருவார் என்ற நம்பிக்கை கொள்வோம்.   

நாம் எவ்வளவு விடாமுயற்சி கொண்டவர்கள்?

இரண்டு தவளைகள் தவறுதலாக ஒரு வெண்ணெய் பாட்டிலில் விழுந்தன. சுமார் ஒரு மணி நேரம் அவை தப்பிக்க முயன்றன. சோர்வடைந்த ஒரு தவளை, “இதற்குமேல் பயனில்லை!” என்று கூறி விட்டது, அது வெண்ணெயில் மூழ்கியது. மற்றொரு தவளை தொடர்ந்து முயற்சி செய்தது. அடிக்கடி அசைந்தது, போராடியது. திடீரென்று அது ஒரு வெண்ணெய் உருண்டையின்மீது பாதுகாப்பாக அமர்ந்திருந்தது

பெரிய மனிதர்கள் எட்டிய உச்சிகளை, திடீரென அவர்கள் அடையவில்லை; அவர்கள் உறங்கும் நேரத்திலும் கூட அவர்கள் உழைத்துக்கொண்டே உயரம் சென்றார்கள்.”

இயேசு எப்போதும் பிரச்சினைகளின் மத்தியில் இருக்கிறார். எங்கு விடுதலை தேவைப்படுகிறது? எங்கு மகிழ்ச்சி கொண்டுவர வேண்டும்? அங்கேயே அவர் இருக்கிறார். 38 ஆண்டுகளாகக் குணமடைய விரும்பி, நம்பிக்கையோடு காத்திருந்த மனிதனுடைய நம்பிக்கையும் விடாமுயற்சியும்  வீணாகவில்லை. நாம் குணமடைய விரும்புகிறோமா? இயேசுவால் குணமாக்க முடியும் என நம்புகிறோமா? இயேசு நம்மைக் குணமாக்க விரும்புகிறோமா? நம்மைச் சுற்றி தினமும் ஏராளமானநடக்க முடியாதவர்கள்இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறதா?

நம்பிக்கைத் தளர்ச்சியைப் போக்குவோம்

நமது வாழ்வில் நமக்கு எப்போதும் அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்தச் சிறுதுளி நம்பிக்கைதான் நமது வாழ்வில் பல அற்புதங்கள் நடப்பதற்குத் தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. எனவே, நாம் எப்போதும் இறைவனில் நம்பிக்கையாளர்களாய் வாழ்வோம்.

news
ஆன்மிகம்
ஏழையரின் திருத்தந்தை பிரான்சிஸ் (நீங்கா நினைவுகள் – 5)

அர்ஜென்டினாவிலிருந்து கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ மார்ச் 13, 2013-இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அருகே அமர்ந்திருந்த அவரது நண்பர் கிளாடியோ ஹீம்மஸ், “நண்பா, ஏழைகளை மறந்துவிடாதே”… என்று வாழ்த்துக் கூறினார். எந்தவொரு தயக்கமுமின்றி, “நான் ஏழைகளின் தோழனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயர் கொண்டு அழைக்கப்பட விரும்புகிறேன்என்று கூறினார். அவர் கூறியபடியே ஏழ்மைக்கும் எளிமைக்கும் பெயர்போனபிரான்சிஸ்என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்து, தொடக்கத்திலிருந்தே தனது வாழ்வாலும் வார்த்தையாலும் தானும்ஏழைகளின் தோழன், ‘எளியவர்களின் காவலன்’… என்பதை உறுதிப்படுத்தினார்.

இறைவனுக்கு அர்ச்சனையான மலர்: இவர் குருவாக, பேராயராக, கர்தினாலாக வாழ்ந்த காலத்தில் சேரிகளுக்குச் சென்று, சேரிவாழ் மக்களின் ஆன்மிகத் தேவைகளுடன் அடிப்படைத் தேவைகளையும், மிக்க ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, வறுமைக்கெல்லாம் வறுமையான, ஆன்மிக வறுமையும் (Spiritual Poverty) நவீன காலத்து மனிதனிடம் ஆழமாகப் புரையோடிக் கொண்டிருக்கும் நோயாகும் என்கிறார்.

ஏழைகளின் குரலான திருத்தந்தை பிரான்சிஸ்: 2015, நவம்பர் மாதம் ஆப்பிரிக்கா, கென்யா நாட்டின் தலைநகரான நைரோபிக்குப் பயணமாகிறார். அங்குள்ள பெரிய சேரிக்குச் செல்கின்றார். சேறும் சகதியும் நிறைந்த தெருக்களைக் கடக்கிறார். பசியும் பட்டினியுமாக உள்ள சிறார் மற்றும் எலும்பும் தோலுமாக நின்ற ஆண்-பெண்களிடம் உரையாடுகிறார். அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு வேதனை அடைகிறார். பாழடைந்த குடிசைகளில் உள்ள பெண்களின் மாண்பினைக் கெடுக்கும் சாராய முதலாளிகளைப் பார்த்து, “இந்தச் சேரிகள் உங்களால் உருவாக்கப்பட்ட புண்கள்”… என்று அவர்களைச் சாடுகின்றார். எனவே, இவர்சேரிகளின் பேராயர்என அழைக்கப்பெற்றார்.

அதேபோல, 2019-இல் ஐரோப்பாவில் உள்ள ரொமேனியா நாட்டிற்குப் பயணம் செய்தபோது, உடைமை, உரிமை, வேலையின்மை, தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களைப் பார்த்து, “நான் கனத்த இதயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். இந்த அரக்கத்தனமான சமுதாயமும், அதில் அடங்கியுள்ள கத்தோலிக்கர்களும் இழைத்த அநீதிகளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்”……என்றார். அடுத்த நாள் பல ஊடகங்களும், “பாவமன்னிப்பு வழங்கும் திருத்தந்தையே, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்”…என்று வியந்தனர்.

இன்னும் இறைவன் முன் ஆணும்-பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக, 2024-இல் புனித வியாழனன்று குற்றங்கள் (பாவங்கள்) செய்து, உரோமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்-பெண் பாதங்களைக் கழுவி முத்தமிட்டு, இயேசு விலைமகளிடம்இனி பாவம் செய்யாதீர் (யோவா 8:11) என்று இயேசு காட்டிய மன்னிக்கும் அன்பைத் தன் இரக்கத்தின் பார்வையால் உணர்த்தினார்.

இவ்வாறாக, திருத்தந்தையின் அரிய பண்புகளால் மக்களைக் காந்தம் போல் தன்பால் ஈர்த்து, எதிர்மறையான சிந்தனைகளுக்குப் பதில், நேர்மறையான சிந்தனைகளையும், அலகையின் பாவத்திற்குப் பதில், ஆண்டவரின் தெய்வீக அன்பையும் விதைத்தார். தான் மேற்கொண்ட விருதுவாக்கானஇறைவனின் இரக்கப் பெருக்கால் மந்தையின் மணத்தை உணரும் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்என்ற கூற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்து விட்டுச் சென்றதால், திருத்தந்தை பிரான்சிஸ்மக்களின் திருத்தந்தை, ‘நலிந்தோரின் திருத்தந்தை, ‘ஏழைகளின் திருத்தந்தைஎன்று போற்றப் பெற்றார்.

இறுதியாக, ‘எல்லாருக்கும் எல்லாமுமான திருத்தந்தைஎன்ற தனிச் சிறப்பு முத்திரையைப் பெற்றார்.

ஒரு நேர்காணலில்நீங்கள் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?’ என்ற கேள்விக்கு, “இந்த மனிதன் ஒரு நல்ல ஆள் - இவர் நல்லது செய்ய முயன்றார்என்று அவர் பதிலளித்தார்.

மனிதர்களின் புனிதராக வாழ்ந்த திருத்தந்தை, இறந்தும் இறவாது நம்முடன் வாழ்கிறார்.

news
ஆன்மிகம்
வயது முதிர்வு என்பது ஒரு கொடை! (நீங்கா நினைவுகள் – 4)

இன்றைய நவீன காலத்தில் முதியோரின் ஆயுள் காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால், இச் சமூகம் முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகக் கருதுகின்றது.  ஒரு சமூகம் தன் மூத்த குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்துதான் அந்தச் சமூகத்தின் தரத்தை நாம் கணிக்க முடியும். எளிதில் பாதிப்பு அடையக்கூடிய நிலையில் இருக்கும் முதியோர் குறிப்பாக, தனிமையில் மற்றும் நோயில் இருப்போர் நமது சிறப்புக் கவனத்திற்கும் அக்கறைக்கும் உரியவர்கள். இவர்கள் சுமையானவர்கள் அல்லர்; மாறாக, திருவிவிலியம் எடுத்துக்கூறுவது போன்று ஞானத்தின் சேமிப்புக்கிடங்குகள் (சீராக் 8:9). எனவேதான், நம் திருத்தந்தை பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு திரு அவையில் முதலாவது தாத்தா-பாட்டிகள் தினத்தை நிறுவினார்.

முதியோர்களைப் பயனற்றவர்களாகக் கருதும் ‘தூக்கி எறியப்படும் கலாச்சாரத்திற்கு மாறாக, அவர்களின் பங்களிப்புகளை மதிப்பதன் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் மதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். காணாமல் போன மகன் பற்றிய உவமையைக் குறிப்பிட்ட திருத்தந்தை, வயது முதிர்ந்த தந்தை தனது இரு மகன்கள் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளலை விண்ணகத் தந்தையின் அன்போடு ஒப்பிட்டுப் பேசினார்.

முதியோர்மீது இரக்கம் மற்றும் கருணையை வலியுறுத்துவதற்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அடிக்கடி முதியோர் குறித்த நற்செய்திப் பகுதிகள் மற்றும் திருவிவிலிய வசனங்களை மேற்கோள் காட்டினார் (திபா 71:9; சீரா 14:2; சீரா 8:9; லூக் 1:42). கடவுளின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முதியோர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்ட திபா 71-ஐ மேற்கோள்காட்டினார். பெற்றோரை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, முதியோர்களை அவமதிப்பது கடவுள் பார்வையில் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.

முதியவர்களை ஒரு சுமையாகப் பார்ப்பதையோ அல்லது அவர்களை நிராகரிப்பதையோ விட, அவர்களை மதிப்பது மற்றும் பராமரிப்பது, அன்பு மற்றும் இரக்கம் காட்டுவது, அவர்களோடு நட்புறவு பாராட்டுவது, முதியவர்களுடன் மீண்டும் இணைவது, அவர்களுக்குச் செவிசாய்ப்பது, அவர்களுக்கு மரியாதை காட்டுவது குறித்து இளைஞர்களுக்குத் திருத்தந்தை பல அறிவுரைகளை வழங்கினார்.

தனிமையாகவோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ இருக்கும் முதியவர்களுடன் இணைய இளைஞர்களை அவர் ஊக்குவித்தார். கருணை மற்றும் பாசத்தைக் காட்ட தொலைப்பேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள் அல்லது நேரில் சென்று சந்திக்குமாறு பரிந்துரைத்தார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் சுயநலத்தையும் தோற்கடித்து, மிகவும் மனிதாபிமான மற்றும் சகோதரத்துவ உலகத்தை உருவாக்க உதவும் என்று திருத்தந்தை நம்பினார்.

இளைஞர்கள் முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் ஞானத்திலிருந்தும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். அங்கு அனுபவம் வாய்ந்த தனிநபர்களின் ‘சாறு இளைய தலைமுறையினரில் ‘நம்பிக்கையின் தளிர்களை வளர்க்க முடியும் எனக் குறிப்பிட்டார். முதுமையை நோயாகக் கருதாமல், ஒரு பேறாகப் பார்க்கக் கூறினார்.

மூத்தவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இளைஞர்கள் மிகவும் சகோதரத்துவச் சமூகத்தை உருவாக்க உதவலாம்; திரு அவையில் பாரம்பரியத்திற்கும் புதுமைக்கும் இடையிலான உரையாடலை எளிதாக்கலாம். எனவே, இன்று முதியோரின் முக்கியத்துவத்தை உணர்வோம். முதியோர்களே சமூகத்தின் அடித்தளம்; அவர்களே சமூகம் எனும் கட்டடத்தின் மூலைக்கற்கள். அவர்களை மாண்புடன் நடத்துவோம்; அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவோம்; உள்ளன்புடன் அவர்களைப் பராமரிப்போம்.

news
ஆன்மிகம்
சீர்மிகு பெண் ஒரு விலைமதிப்பற்ற செல்வம்! (Ideal woman is a Precious treasure) திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 16

1. பழைய ஏற்பாடு மற்றும் யூதப் பாரம்பரியம் பெண்களின் தார்மீக வலிமையை வலியுறுத்துகிறது. தாய்மை மற்றும் இஸ்ரயேலின் மீட்புக்காக எதிரிகளுடைய தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டுவதன் மூலம் கடவுள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அவர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்திற்காக மதிக்கப்படுகிறார்கள். யூதித்தைப் போன்ற உருவங்கள் குறிப்பாக, சமூகத்தால் அவர்களின் வீரம், ஞானம் மற்றும் போற்றத்தக்கக் குணங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றன. இந்த நற்பண்புகளை நிலைநிறுத்தவும், தெய்வீக வழிகாட்டுதலில் நம்பிக்கை வைக்கவும் மற்றவர்களை ஊக்குவிக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க மாதிரிகளாகிய திருவிவிலியக் கதாநாயகிகளுக்கிடையே, எதிர்மறைச் சான்றாக நிற்கக்கூடிய சில பெண்களின் பதிவுகளும் இல்லாமலில்லை. எடுத்துக்காட்டாக, சிம்சோனின் இறைவாக்குரைக்கும் திறமையைச் சீரழித்த தெலீலா (நீத 16:4-21), சாலமோனின் முதிர்ந்த வயதில் அவருடைய இருதயத்தை ஆண்டவரிடமிருந்து திருப்பி மற்ற தெய்வங்களை வணங்கச் செய்த அந்த வெளிநாட்டுப் பெண் (1அர 11:1-8), இறைவனின் அனைத்து இறைவாக்கினர்களையும் கொன்றழித்த ஈசபேல் (1அர 18:13), ஆகாபிற்கு அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பதற்காக நாபோத்தைக் கொன்றவள் (1அர 21) மற்றும் யோபுவின் துன்ப காலத்தில் அவரை அவமதித்து, கடவுளைச் சபிக்கத் தூண்டிய அவருடைய மனைவி (யோபு 2:9).

இந்த நிகழ்வுகளில், பெண்களின் நடத்தையானது ஏவாளுடைய செயல்களை நினைவுபடுத்தக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், திருவிவிலியத்தின் பொதுவான கண்ணோட்டமானது பெண்ணைக் கடவுளின் தோழியாகப் (ally of God) பார்க்கின்ற தொடக்க நற்செய்தியினால் (Proto-Gospel) தூண்டப்பட்டதாக இருக்கின்றது

பெண்ணானவள் ஆண்டவரின் விலைமதிப்பற்ற கொடையாவாள்!

2. உண்மையில், உண்மையான இறைவனிடமிருந்து சாலமோனைத் திருப்பினார்கள் என்று அந்நிய நாட்டுப் பெண்கள் குற்றம் சாட்டப்படுவார்களேயானால், அதற்கு மாறாக ரூத்து புத்தகமானது ஓர் அந்நிய நாட்டுப் பெண்ணை மிகச்சிறந்தவளாகவும் நமக்குக்  காட்டுகின்றது. மோவாபு நாட்டுப் பெண்ணான ரூத்தின் பக்தி, நேர்மை, தாழ்ச்சி மற்றும் தாராள குணத்தில் அவளின் உறவினர்களுக்கு மாதிரியாக இருந்தாள். மேலும், இஸ்ரயேலின் வாழ்வு மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்து, தாவீதின் கொள்ளு பாட்டியாகவும், மெசியாவின் மூதாதையராகவும் திகழ்ந்தாள். நற்செய்தியாளராகிய மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலில் அவளுடைய பெயரையும் சேர்த்து, மனுக்குலம் அனைத்திற்கும் கடவுளின் இரக்கத்தைப் பரப்புகின்ற உலகளாவிய தன்மைக்கான அடையாளமாகவும்  (A sign of universality) அவளை ஆக்குகின்றார்.

முதல் நற்செய்தியாளர், கடவுளுடைய நன்மைத்தனமானது பாவத்தைவிடச் சிறந்தது என்பதை அறிவிப்பதற்காக, இயேசுவின் மூதாதையர்களுக்குள் தாமார், இராகாபு மற்றும் உரியாவின் மனைவியான பத்சேபா என்ற மூன்று பாவிகளான ஆனால், சீர்கேடற்றப் பெண்களையும் மெசியாவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறார். கடவுளின் அருள் வழியாக, கடவுள்  திருமணச் சட்டங்களுக்கு எதிரான அவர்களின் நிலைகளைப் பிற்காலத்தில் மெசியாவின் பிறப்பிற்கான தயாரிப்பில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குப் பங்களிப்பவர்களாக ஆக்குகின்றார் (God, through His boundless grace, employs irregular marriages as divine instruments to fulfil His sacred and eternal salvation plan for humanity).

ரூத்திடமிருந்து வேறுபட்ட, தாழ்மையான அர்ப்பணிப்புக்கு மற்றோர் உதாரணம், இப்தாவின் மகள், அம்மோனியர்களுக்கு எதிரான தனது தந்தையின் வெற்றியைக் கொண்டாடுவதற்குத் தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் (நீத 11:34-40). அவளது சோகமான விதியைத் துக்கத்தில் அவள் எதிர்க்கவில்லை. ஆனால், அவளது மரணத்தை ஏற்றுக்கொள்கிறாள். அந்த நேரத்தில் இன்னும் பொதுவான பழமையான பழக்கவழக்கங்களில் வேரூன்றிய பெற்றோரின் தூண்டுதலான சபதத்தை நிறைவேற்றுகிறாள் (எரே 7:31; மீக் 6:6-8).

3. ஞான இலக்கியமானது (Sapiential Literature) பெண்ணின் குறைகளை அடிக்கடிக் குறிப்பிட்டாலும், அவளில் மறைந்திருக்கும் செல்வத்தையும் எடுத்தியம்புகின்றது. “நல்ல மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான் (நீமொ 18:22) என்று நீதிமொழிகள் புத்தகமானது பெண்மையைப் பற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாராட்டுகளையும் வெளிப்படுத்தி, பெண்ணானவள் ஒரு விலைமதிக்க முடியாத ஆண்டவருடைய கொடை என்று கூறுகின்றது.

அதே புத்தகத்தின் இறுதியில் உயர்வான பெண் பற்றியதொரு பிம்பமானது விவரிக்கப்பட்டுள்ளது. அடைய முடியாததொரு மாதிரியைக் குறித்துக்காட்டாத (far from representing an unattainable model), மிகவும் மதிக்கத்தக்கதொரு பெண்ணின் அனுபவத்திலிருந்து பிறந்த அவள் ஒரு நிலையான மாதிரியாக இருக்கின்றாள் என்று கூறுகின்றது: “திறமை வாய்ந்த, மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள் (நீமொ 31:10). 

ஞான இலக்கியமானது, தெய்வீக உடன்பாட்டிற்கான பெண்ணின் நம்பகத்தன்மையில் அவளுடைய திறமைகளின் உச்சநிலையைக் காண்கின்றது. உண்மையில், சில வேளைகளில் அவள் நம்மை ஏமாற்ற முடிந்தாலும், அவளின் உள்ளமானது கடவுளுக்கு விசுவாசமுள்ளதாக இருக்கின்றபொழுது எல்லாவித எதிர்பார்ப்புகளையும் கடந்துசெல்கின்றாள் என்று கூறுகின்றது: “எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள் (நீமொ 31:30). தாயானவள் மதிப்புமிக்கப் புகழ்ச்சிக்குத் தகுதியானவளே!

4. இந்தச் சூழலில் 2மக்கபேயர் நூலானது, அந்தியோக்கிய எபிஃபானெஸ், இறைவார்த்தைக்காக உயிர்த்தியாகம் செய்த ஏழு சகோதரர்களின் தாயின் கதையில், சோதனையின்போதும் அவளிடமிருந்த வியக்கத்தக்க, மிக உன்னதமான மாண்பின் மாதிரியைத் தூக்கிப்பிடிக்கின்றது.

அந்த ஏழு சகோதரர்களின் இறப்பை விவரித்த பிறகு அந்நூலின் ஆசிரியர், “எல்லாருக்கும் மேலாக அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர்; பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தன் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக்கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிச்சலையும் இணைத்து அவர்களிடம் பேசினாள்.” இவ்வாறு உயிர்த்தெழுதல் பற்றிய அவளுடைய எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தி, “நீங்கள்  என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்று சேர்த்ததும் நான் அல்ல; உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில், அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை (2மக் 7:20-23) என்று விவரிக்கின்றார்.

இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பதைவிட, இறப்பதற்குத் தன்னையே கையளிப்பது மேல் என்று அவளுடைய ஏழாவது மகனைத் தூண்டி, ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் படைத்த கடவுளின் செயலில் அவளுடைய நம்பிக்கையை அந்தத் தாயானவள் வெளிப்படுத்துகின்றாள்: “குழந்தாய், உன்னை நான் வேண்டுவது; விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்றுநோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால், நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்என்று கூறி ஊக்கமூட்டினார் (2மக் 7:20-23).

ஏழுமுறை இதயத்தில் சித்திரவதை  அனுபவித்த பிறகு அசைக்க முடியாத நம்பிக்கை, அளவிட முடியாத எதிர்நோக்கு மற்றும் வீரமுள்ள துணிவுக்குச் சான்றுபகர்ந்து, கொடூரமான சாவிற்குத் தன்னையே கையளிக்கின்றார்.

இறையருள் வெளிப்படுகின்ற வியத்தகு செயல்கள் இத்தகைய பெண்களில் மிகவும் உன்னதமானவராக, ஆண்டவரின் தாய் மரியாவை நாம் காண்கின்றோம்.

மூலம்: John Paul II, Ideal woman is a precious treasure, in “L’Osservatore Romano”, Weekly Edition in English, 17 April 1996, p.7.