திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (21.12.2025)
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் அனைவர்மீதும் அளப்பரிய அன்பு கொண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். திரு அவையின் வாழ்விலும் பணியிலும் தன்னையே கரைத்துக் கொண்டவர். போர்களாலும் வன்முறைகளாலும் அல்லலுற்று வாழும் இளையோருக்காகக் கண்ணீர் சிந்தியவர். ‘போர்களைக் கைவிடுங்கள்’ என்று கூறி இரு எதிரெதிர் துருவத் தலைவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி அமைதிக்கு அடிக்கல் இட்டவர். கடைக்கோடி மனிதன் மூலம் திரு அவை இயங்க வேண்டுமென்று அளவளாவியவர். ஆலயங்கள் வெறும் கட்டடங்களாக இல்லாமல், ஏழைகளின் இல்லமாக மாற்றப் போராடிய சமூகப் போராளி இவர். ‘திரு அவை திண்ணையில் இருக்க வேண்டும்; மக்களைத் தேடி தெருவிற்கு வரவேண்டும்’ என்று கனவு கண்டவர்.
அன்பையும்
மனிதநேயத்தையும் வாழ்வாக்கியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ‘இயற்கை நமக்குத் தாய் வீடு’ என்றதோடு, அதைக் காத்திட அனைவருக்கும் அறைகூவல் விடுத்தவர். இறைவழியிலே அன்னை மரியாவுடன் தந்தை யோசேப்பையும் சேர்த்தவர். திரு அவையின் பணியிலும் வாழ்விலும், தூய ஆவியின் கொடையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருப்பலியும் கொண்டாட்டங்களும் இயேசுவைச் சந்திக்கும் வாய்ப்பு என்பதையும் எடுத்துரைத்தவர். அவரிடம் மன்றாடுவதே நம் முதல் கடமை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியவர். நற்கருணைக் கொண்டாட்டமே உயிர்த்த இயேசுவைச் சந்திக்கும் வாய்ப்பு என மனுக்குலத்திற்கு அறைகூவல் விட்டவர்.
திருமடல்கள் பல தந்து திரு
அவைக்குப் புத்துயிரூட்டியவர்.
கொரோனா
தொற்று, இயற்கைப் பேரிடர்களெல்லாம் நடந்தபோது, ‘கடவுளே காப்பாற்றும்; எம் மக்களைக் காத்தருளும்’ என
ஆண்டவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் கண்ணீர் விட்டு அழுதவர். பெரிய வியாழன் திருச்சடங்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்கும் பாதம் கழுவ வாய்ப்புத் தந்தவர். இதன்மூலம் காலங்காலமாய் இருந்த தடைகளைத் தகர்த்தெறிந்தவர். திரு அவை நிர்வாகப் பணியிலும் அருள்சகோதரிக்கு அரிய வாய்ப்பை அள்ளித் தந்தவர்.
நவீனக்
கலாச்சாரத்திற்கு வெற்றிக்கொடி காட்டி விட்டு உள்ளே புகுந்துள்ள தீய பண்புகளைத் தூக்கி எறிய வழிகாட்டியவர். ஏழைகள், அனாதைகள், ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள், வயது முதிர்ந்தோர் என மனிதகுலத்தில் கடைக்கோடியில்
வாழ்வோருக்காக வாழ்நாள் எல்லாம் வருந்தியவர். வாழ்வெல்லாம் எளிமையின் சின்னமாய், அவர்களின் குரலாய் ஓயாது ஒலித்தவர். தன் இறுதிமூச்சுவரை அடுத்தவர் நலனுக்காகவே அயராது உழைத்தவர்.
இந்திய
மண்ணின் மறைச்சாட்சியான புனித தேவசகாயத்தின் இறைநம்பிக்கை போன்றே தனது நம்பிக்கையையும் வரித்துக்கொண்டவர். புனித தேவசகாயம் இரத்தச்சாட்சியாய் இறைவனிடம் இணைந்தவர்; நம் திருத்தந்தையோ இரத்தச்சாட்சிகளிடம் மன்றாடி இறையருளும் நிறைவாழ்வும் பெற்றவர். இவர்களின் பரிந்துபேசுதலே தன்னை இறைவனிடம் சேர்க்கும் பாலம் என்பதை அறிந்து கொண்டவர். மறைச்சாட்சி தேவசகாயத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொண்ட திருத்தந்தை, 28.02.2019-ஆம் ஆண்டு அவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். அருளாளராக வணங்கப்பட்டு வந்த தேவசகாயம் அவர்களை 15.05.2022-ஆம் நாள் உரோமில் நடந்த பிரம்மாண்ட விழாவில், உலக அளவிலான வணக்கத்தைப் பெறும் வகையில் புனிதர் பட்டம் வழங்கினார். வாழும்போதே புனிதத்துவத்தில் வாழ்ந்த திருத்தந்தை, புனிதர்கள் கூட்டத்தில் நிச்சயம் இருக்கின்றார் என்பதை உறுதியோடு நம்புகிறோம். அவரின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றுவோம்.
“உங்கள் உள்ளங்களில் உள்ள எதிர்நோக்கைப் பணிவோடும் மரியாதையோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்” (1பேதுரு 3:15-16).
அன்புமிக்க சகோதரர்களே,
சகோதரிகளே,
தவறானவையும்
துருவப்படுத்தும் தன்மை கொண்டவையுமான சில மையங்கள் இதற்கு முன் இல்லாத அளவுக்குத் தகவல்களையும் தரவுகளையும் இன்று தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன. நமது இந்தக் காலத்தில் இவற்றின் விளைவுகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இதழியலாளரே, தொடர்பாடல் பணியில் ஈடுபட்டிருப்போரே உங்களுடன் உங்கள் தொடர்பாடல் பணிகளைக் குறித்துப் பேசுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.
அருளின்
காலமாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் 2025-ஆம் ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் இவ்வேளையில், பலவிதமான சிக்கல்களுக்கு மத்தியில் எதிர்நோக்கின் தொடர்பாளர்களாக நீங்கள் செயல்பட இச்செய்தியின் வழியாக அழைப்பு விடுக்கிறேன். இது நற்செய்தியின் ஒளியில் உங்கள் தொடர்பாடல் பணிகளையும் நற்செய்தி அறிவிப்புப் பணியையும் புதுப்பித்துக்கொள்ள வழிவகுக்கும் என நம்புகிறேன்.
தொடர்பாடலை நிராயுதபாணியாக்குதல்
இன்றைய
உலகில் தொடர்பாடல் செயல்பாடுகள் எதிர்நோக்கைத் தோன்றச் செய்வதற்குப் பதிலாக அச்சம், விரக்தி, முன்சார்பு எண்ணங்கள், எதிர்ப்பு, மத, இனவெறி போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன. உண்மையை உள்ளபடி எடுத்துரைப்பதற்குப் பதிலாக மனிதரின் இயல்பு ஊக்கச் செயல்பாடுகளைத் தூண்டி எழுப்புவதாகவே, பல தொடர்பாடல் செயல்பாடுகள்
பலவேளைகளில் அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக ‘சவரக்கத்தி’ போன்ற
கூர்மையான சொற்கள் தொடர்பாடலில் எதிர்வினையைத் தூண்டுபவைகளாக அமைந்து விடுகின்றன. குழப்பத்தையும் காயப்படுத்துதலையும் உருவாக்கும் நோக்கத்தோடு இன்று தவறான, செயற்கையான, சிதைக்கப்பட்ட தகவல்கள் பிறருக்கு ஊடகங்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இதைக் குறித்தே தொடர்பாடலை நிராயுதபாணியாக்க வேண்டும் எனவும், பிறரைத் தாக்கும் போக்கிலிருந்து தொடர்பாடலை மீட்டெடுக்க வேண்டும் எனவும் நான் பலமுறை கூறியுள்ளேன்.
எதார்த்தமான
ஓர் உண்மையை ஒரு வெற்று முழக்கமாகக் குறைத்துவிடுவது பயனற்றது. இன்று பல்வேறு தொலைக்காட்சிகளில் ‘டாக்ஷோ’ எனப்படும் தன்னிச்சையான உரையாடல் நிகழ்ச்சிகளிலும், சமூக ஊடகப் பகிர்வுகளிலும் போட்டிகள், பிறரை எதிர்த்தல், பிறரைச் சிறுமைப்படுத்துதல் போன்ற சிந்தனைச் சட்டக நிகழ்வமைப்புகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் பிறரது கருத்துகள் மீது ஆதிக்கம் செலுத்தி, தகவல்களைக் கையாடல் செய்து, தம் கருத்தே சிறந்தது என நிலைநாட்ட முயல்வதால்
தாம் விரும்பியபடியே மேற்கொள்ளப்படுகின்றன. பொதுக்கருத்தை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மற்றொரு
பிரச்சினைக்குரிய செயல்பாடும் உள்ளது. மேற் கூறியவற்றை எண்ணிம அமைப்புகள் வழியாகத் திட்டமிடப்பட்ட கவனச்சிதறலைத் தோற்றுவிப்பது. நம்மையும், எதார்த்த உண்மையையும் பொருளாதாரச் சந்தைக் குறியீடுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக நம்மை அறியாமலேயே ஒரு தானியங்கி செயல்பாட்டு முறையை நமது உலகிலும், நம் வாழ்விலும் காண்கிறோம். இதனால் நமது இருப்புத்தன்மையின் அடித்தளமும், மனிதரின் சமூக வாழ்வும் ஒருசிலரின் விருப்பங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவதால் பொதுநன்மையைத் தேடி அதை நிலைப்பெறச் செய்தல், ஒருவர் மற்றவருக்குத் திறந்த மனத்துடன் செவிசாய்த்தல், பிறரது கருத்துகளை அறிந்து புரிந்துகொள்ளுதல் போன்றவை இயலாதவையாகின்றன. இதனால் நம்மை இவ்வுலகில் நிலைநிறுத்த வேண்டுமெனில், ஒரு பகைவனை உருவாக்கம் செய்து, அவனுக்கு எதிராக வசைபாடி அவனைத் தூற்றுதல் மிகவும் அவசியமாகத் தோன்றுகின்றது. இவ்வாறு மற்றவர்கள் நமது பகைவர்களாகக் கருதப்படும்போது, அவர்களது தனித்தன்மையும் மாண்பும் போற்றப்படாதபோது எதிர்நோக்கை உருவாக்கும் வாய்ப்பை நாம் இழந்துவிடுகிறோம். தொன்பெல்லோ என்பவர் குறிப்பிட்டுள்ளபடி ‘தனிமனிதர்களின் முகங்கள் கரைந்து காணாமற்போகும்போது எதிர்ப்புகளும் மோதல்களும் உருவாகின்றன.’ இந்த மனநிலைக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.
எதிர்நோக்கு
என்பது எளிதானது அல்ல; ஜார்ஜ் பெர்னானோஸ் என்பவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளதுபோல, ‘எதிர்நோக்கிற்குக் காரணிகளாகத் தாங்கள் ஏற்கெனவே தவறாகக் கருதியவை வெறும் மாயையேயன்றி உண்மையல்ல என்று உணர்ந்து வெட்கப்படவும், தைரியம் உள்ளவர்களே உண்மையான எதிர்நோக்கும் திறன் கொண்டவர்களாவர். எதிர்நோக்கு என்பது சவாலானது. இதைச் சவால்களுக்கெல்லாம் சவால் என்றும் கூறலாம். எதிர்நோக்கு என்பது ஒரு மறைவான நற்பண்பு. இது உறுதியானது. பொறுமையுள்ளது. கிறித்தவர்களுக்கு இது ஒரு விருப்ப நற்பண்பு அல்ல; மாறாக, இது மிகவும் அவசியமானது. ‘ஸபே சால்வி’ என்ற ஏட்டில் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் குறிப்பிட்டுள்ளதுபோல, “எதிர்நோக்கு ஏதோ நல்லது நடக்கும், நடக்கட்டும் என்ற செயலற்ற காத்திருத்தல் அல்ல; மாறாக, இது நம் வாழ்வை மாற்றக்கூடிய செயலாக்கம் கொண்டது. எதிர்நோக்கு கொண்டுள்ள ஒருவர் வித்தியாசமாக வாழ்கிறார். இவ்வாறு எதிர்நோக்குபவருக்கு ‘புதுவாழ்வு’ என்னும்
கொடை கொடுக்கப்படுகிறது” (எண் 2).
பணிவோடும் மரியாதையோடும்
உங்கள்
எதிர்நோக்கிற்கு
விளக்கம்
கூறுங்கள்
எதிர்நோக்கிற்கும்,
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தலுக்கும் தொடர்பாடலுக்குமுள்ள போற்றத்தக்கத் தொடர்பை புனித பேதுருவின் முதல் கடிதத்தில் (3:15-16) காண்கிறோம். “உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாரேனும் விளக்கம் கேட்டால் விடையளிக்க, நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடையளியுங்கள்.” இப்பகுதியிலிருந்து நாம் சேகரிக்கக்கூடிய மூன்று செய்திகளை இங்குக் காண்போம்.
முதலில்
“உங்கள் / உங்களில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்.” கிறித்தவர்களின் எதிர்நோக்கிற்கு ஒரு முகம் இருக்கிறது. உயிர்த்த ஆண்டரின் முகமே அது. தூய ஆவியாரின் வழியாக அவர் நம்மோடு இருப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதி நம்மை எதிர்நோக்க இயலாத சூழ்நிலைகளிலும் நாம் எதிர்நோக்கி இருக்க நமக்கு வலுவூட்டுகிறது. ‘எல்லாம் இழப்பே’ என்று தோன்றும் குழலிலும் அங்கே மறைந்திருக்கும் நன்மைகளைக் கண்டறிய இந்த எதிர்நோக்கு நமக்கு வழிவகுக்கிறது.
இரண்டாவது
செய்தி நம்முள் இருக்கும் எதிர்நோக்கைப் பற்றி விளக்கிக் கூற நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே. நமது எதிர்நோக்கைப் பற்றி நம்மிடம் கேட்போருக்கு, விளக்கம் கூறத் தயாராக இருக்க வேண்டும். கிறித்தவர்களின் முதன்மைப் பண்பு கடவுளைப் பற்றிப் பேசுவது மட்டுமன்று; அவர்கள் கடவுளின் அன்பின் அழகை தம் வாழ்வில் எதிரொலித்து, எல்லாவற்றிலும் புதிய அனுபவத்துடன் வாழ்பவர்கள் என்பது முக்கியமானது. இவ்வாறு இவர்கள் அன்பை வாழ்வதாலேயே பிறர் இதைக்குறித்து ‘நீங்கள் ஏன் இவ்வாறு வாழ்கிறீர்கள்?’, ‘நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று வினா எழுப்புகின்றனர்.
புனித பேதுருவின் சொற்களில் இறுதியாக மூன்றாவது செய்தியையும் காண்கிறோம். இந்த வினாக்களுக்கான நமது விடை ‘பணிவோடும், மரியாதையோடும்’ வழங்கப்படவேண்டும். பொதுவாகத் தொடர்பாடல் சிறப்பாக, கிறித்தவர்களின் தொடர்பாடல் இந்தப் பதிலைத் தரவேண்டும். அவ்வாறு பதில் கூறும்போது சாலையில் நடந்து செல்லும் உடன் பயணிகளிடையே நிகழ்வது போன்று நமது பதில் மரியாதையோடும் நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும். சிறந்த தொடர்பாளராகிய நாசரேத்தூர் இயேசுவின் தொடர்பாடல் இவ்வாறே இருந்தது. அவர் எம்மாவு சாலையில் நடந்து சென்ற இரு சீடர்களோடு சேர்ந்து நடந்தார். அவர்கள் இதயம் பற்றி எரியும்படி அவர்களோடு பேசி, நடைபெற்ற நிகழ்வுகளை இறைவார்த்தையின் ஒளியில் விளக்கிக் கூறினார்.
(தொடரும்)
இறைவாக்கினர்கள் கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்குமிடையேயான உடன்படிக்கையின் உறவை விவரிக்க, கணவன்-மனைவிக்கு இடையேயான ‘திருமண உறவு’ பற்றிய உருவகத்தை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள்.
1. திருவிவிலியமானது
இஸ்ரயேல் நகர மக்களைக் குறிப்பதற்கு வரலாற்றுப்பூர்வமாகவும் சமயம் சார்ந்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீயோன் மலையை மையப்படுத்தி ‘சீயோனின் மகளே’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது (ஒப்பிடுக. மீக் 4:10-13; செப் 3:14-18; செக் 2:14, 9:9-10).
‘மண ஒப்பந்தமானவள்’ அல்லது ‘மனைவி’ என்று அடிக்கடி விவரிக்கப்படும் இந்த உருவகமானது, கடவுளுக்கும் இஸ்ரயேலுக்குமிடையேயான அன்புறவைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
மீட்பின்
வரலாறானது கடவுளின் அன்பின் கதையாக இருக்கிறது. அதேநேரத்தில், அக்கதையானது மனிதனின் பிரமாணிக்கமின்மையைக் கூறுவதாகவும் இருக்கிறது. கடவுள் தமது இணையாக (மனைவியாக) ஏற்றுக்கொண்ட அந்த மக்கள், கடவுளோடு ஏற்படுத்திய திருமண உடன்படிக்கையை அடிக்கடி மீறுவதை இறைவார்த்தையானது பின்வரும் வார்த்தைகளில் கண்டிக்கின்றது: “ஒரு மனைவி தன் கணவருக்குத் துரோகம் செய்வதுபோல இஸ்ரயேல் இனத்தவராகிய நீங்கள் எனக்குத் துரோகம் செய்தது உண்மை”
(எரே 3:20).
யாவேயின்
‘மணவாட்டியான’ இஸ்ரயேலைக்
கறைபடுத்துகின்ற துரோகத்தின் பாவம் எதுவாக இருக்கின்றது? அது எல்லாவற்றையும்விட விபச்சாரத்தில் இருக்கின்றது. திருவிவிலிய வார்த்தைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சிலைகளை நோக்கிச் செல்வதென்பது ஆண்டவரின் பார்வையில் விபச்சாரத்திற்கு இணையானதாகும்.
2. ஓசேயா
இறைவாக்கினர் தனது நாடக வடிவிலான விளக்கத்தின் வழியாக மிக அற்புதமாக இதை விவரிக்கின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையே விளக்குவதற்கான எதார்த்தமான அடையாளமாக மாறுகின்றது. உண்மையில் அவருடைய பிள்ளைகளின் பிறப்பில் அவர்கள் இவ்வாறு கட்டளையிடப்படுகிறார்கள்: “இரக்கமற்றவள் என்று அவளைக் கூப்பிடுங்கள்; இஸ்ரயேல் இனத்தார்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கம்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டேன், மேலும், இனி ஒருபோதும் உன்னை நான் பெயர் சொல்லி அழைக்கமாட்டேன்; ஏனெனில், நீங்கள் என் மக்களுமல்ல, நான் உங்கள் கடவுளுமல்ல” (ஓசே
1:6,9).
எதிர்காலத்திற்கான
மிக உன்னதமானதோர் உடன்படிக்கையை ஆண்டவர் அறிவிக்கின்றார். ஆண்டவரது கண்டிப்பு மற்றும் சிலைகளை வழிபட்டதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் அனுபவமானது பிரமாணிக்கமற்ற மனைவியை மனம் மாறி மீண்டும் புது வாழ்வை நோக்கித் திரும்பி வரச் செய்கிறது. அதனால் அவள் இவ்வாறு சொல்வாள்: “நான் என் முதல் கணவனிடம் திரும்பிச் செல்வேன்; ஏனெனில், இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது நன்றாய் இருந்தது”
(ஓசே 2:7). ஆனால், கடவுளோ மீண்டுமோர் உடன்படிக்கையை ஏற்படுத்த விரும்புகிறார். அவரது வார்த்தைகள் நினைவு, இரக்கம் மற்றும் கனிவு மிக்கவைகளாக மாறுகின்றன. “இதன் காரணமாக இதோ அவளுக்கு நயங்காட்டி அவளைப் பாலைவனத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அவளோடு நயமாகப் பேசுவேன்”
(ஓசே 2:14). உண்மையில் பாலைவனம் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகு கடவுள் அம்மக்களோடு உறுதியான உடன்படிக்கை செய்துகொண்ட ஓர் இடமாகும்.
இந்த
அன்பின் உருவகங்கள் கடவுளுக்கும் இஸ்ரயேலுக்குமான கடினமான உறவை விவரித்தாலும், இவற்றின் வழியாகப் பாவத்தின் துயரத்தையும், பிரமாணிக்கமின்மையின் சங்கடங்களையும், மக்களை மீண்டும் உடன்படிக்கையை நோக்கிக் கொண்டுவர மனித இதயத்தோடு பேசும் இறையன்பின் முயற்சியையும் இறைவாக்கினர் விளக்குகின்றார்.
3. அன்றைய
பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும், இறைவாக்கினர் வழியாக எதிர்காலத்திற்கான மிகவும் நிறைவானதோர் உடன்படிக்கையை ஆண்டவர் அறிவிக்கின்றார்: “அக்காலத்தில் நீ என்னை இனி
‘பாகாலே’ என்று
சொல்லாமல், ‘என் கணவன்’ என்று கூப்பிடுவாய் என்கிறார் ஆண்டவர்.… மேலும், உன்னை எனக்கு மணம் முடித்துக்கொள்வேன்; நீதியிலும் உண்மையிலும் என்றைக்குமான அன்பிலும் இரக்கத்திலும் மணம் முடித்துக்கொள்வேன். நம்பிக்கையில் உன்னை எனக்கு மணம் முடித்துக் கொள்வேன்; நீ உன் ஆண்டவரை
அறிந்து கொள்வாய்”
(ஓசே
2:16,19-20).
மனித
பலவீனங்களால் ஆண்டவர் சோர்ந்து விடுவதில்லை. மாறாக, இன்னும் நெருக்கமான மற்றும் நிலையான ஒன்றிப்பை முன்வைத்து மனிதனின் நம்பிக்கையின்மைக்குப் பதில் தருகிறார்: “நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைப்பேன். இரக்கம் பெறாதவர்களுக்கு இரங்குவேன் மற்றும் என் மக்களாக இல்லாதிருந்தவர்களை ‘என் மக்கள்’ என்று சொல்லுவேன்; அவர்கள் ‘என் ஆண்டவரே’ என்பார்கள்” (ஓசே
2:23).
கடவுளின்
முடிவில்லாத அன்பானது மக்களுடைய நம்பிக்கையின்மையிலும், எப்பொழுதுமே அன்பின் உடன்படிக்கையை மீண்டுமாக ஏற்படுத்திடவும், எல்லாவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக மீட்பை அளித்திடவும் தயாராக இருக்கிறது.
4. இறைவாக்கினர்களான
எசேக்கியேல் மற்றும் எசாயா இருவருமே மன்னிக்கப்பட்ட, பிரமாணிக்கமற்ற பெண்ணின் உருவகத்தினைப் பற்றிப் பேசுகிறார்கள். இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் அவருடைய மனைவியிடம் இவ்வாறு கூறுகிறார்: “உன் இளமையின் நாள்களில் உன்னோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையை இன்னும் நினைவுகூர்வேன்; மற்றும் என்றைக்குமானதோர் உடன்படிக்கையை உன்னோடு நான் ஏற்படுத்துவேன்” (எசே
16:60).
இறைவாக்கினர்
எசாயா நூல் கடவுளின் கருணை நிறைந்ததோர் உரையை மேற்கோள் காட்டுகிறது: “அன்பினால் நான் உனக்கு இரக்கம் காட்டுவேன்’ என்கிறார்
உன் மீட்பரகிய கடவுள்”
(எசா 54:5,7-8).
சீயோனின்
மகளுக்கான வாக்குறுதியானது பிரமாணிக்கமற்ற மனைவியின் கைவிடப்பட்ட நிலையிலிருந்து மீண்டெழச் செய்கின்ற ஒரு புதிய, நம்பிக்கையுள்ள அன்பு மற்றும் வியக்கத்தக்க நம்பிக்கையாக இருக்கிறது (எசா 62:11-12). கடவுளுடனான உறவானது ஏற்கத்தக்க வரையறைகள் வழியாக விவரிக்கப்படுகின்றது
இறைவாக்கினர்
எசாயா கடவுளுடனான உறவை இவ்வாறு விவரிக்கிறார்: “கைவிடப்பட்டவள்’ என்று
இனி நீ பெயர்பெற மாட்டாய்;
‘பாழ்பட்டது’ என
இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்”
(எசா 62:4-5). உருவகங்கள் மற்றும் அன்பின் மனநிலைகளை இனிமைமிகு பாடல்கள் இவ்வாறு சுருக்கமாக விவரிக்கின்றன: “நான் என் காதலர்க்குரியவள்; என் காதலர் எனக்குரியர்” (இபா
6:3). இவ்வாறு யாவே கடவுளுக்கும், அவருடைய மக்களுக்குமிடையேயான உறவானது மீண்டும் இத்தகைய பொருத்தமுள்ள வரையறைகளால் விவரிக்கப்படுகின்றது.
5. மரியா
இறைவாக்கினர்களின் முன்னறிவிப்பைக் கேட்டபொழுது, அவரது இதயத்தில் மீட்பரின் வருகையை வளர்க்கின்ற இந்தக் கண்ணோட்டத்தை நினைத்திருக்க வேண்டும்.
நம்பிக்கையற்ற
மக்களின்மீது கூறப்பட்ட சாபங்கள் அனைத்தும் அருளிலும் அன்பிலும் ஆண்டவருடனான உறுதியான திருமண ஒன்றிப்பினுடையதொரு வேண்டுதலுக்கு அவளது ஆன்மாவை புதுப்பிக்கின்ற உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவராய் இருப்பதற்காக மிகவும் உறுதியான அர்ப்பணத்தை அவளில் தூண்டுகிறது. இந்தப் புதிய உடன்படிக்கையிலிருந்து முழு உலகத்தினுடைய மீட்பும் வரும்.
மூலம்:
John Paul II, God is ever faithful to his covenant, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 1 May 1996, p. 11.
மூன்றாம் உலக நாடுகளில் கிறித்தவம் பெரிதும் பரவியது 16-ஆம் நூற்றாண்டிலிருந்துதான். இந்தியாவில் அது முதல் நூற்றாண்டிலேயே வேரூன்றியிருந்தாலும், படர்ந்து பரவலாகியதும் அதே காலத்தில்தான். அதற்கான மறைபரப்பு முயற்சிகள் பெரிதும் ஐரோப்பாவிலிருந்தும் ஐரோப்பிய பணியாளர்களாலுமே மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலும் பண்பாடுகளிலும் சூழமைவுகளிலும் வாழ்கின்ற பல்வேறு திரு அவைகளுக்கான அனைத்து முக்கியச் சட்டதிட்டங்களும் இன்றளவும் உரோமைத் தலைமையகத்திலேயே இயற்றப்படுகின்றன. இதனால், உலகெங்கும் திரு அவையில் ஐரோப்பியத்தன்மையே அதிகம் மேலோங்கி நிற்கிறது. அதுவும் குறிப்பாக, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தன் நடை, உடை, பாவனைகளில் மட்டுமல்ல, சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் சட்ட திட்டங்களிலும்கூட அந்நியமானதாகவே தோன்றுகிறது. அந்தந்த இடத்துப் பண்பாட்டு வளங்களால் அது அதிகம் செழுமைப்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, அந்தந்த இடத்து மக்களின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தனது நற்செய்தியின் ஆற்றலால் அதனால் இயன்ற முழு பங்களிப்பையும் செய்ய இயலவில்லை. அதன் நற்செய்திப்பணியும் உரிய பெரும் வெற்றியைப் பெறவில்லை.
வேரூன்றி நின்று
வேறுபடுவது
ஒரு
குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது அங்குத் திரு அவை உருவாகிறது. அந்த இடத்துப் பண்பாட்டிலும், வரலாற்றுச் சூழமைவிலும்தான் அம்மக்கள் மீட்பளிக்கும் இறைவனின் சந்திப்பு அனுபவத்தை உண்மையாகவும் ஆழமாகவும் அனுபவிக்கவும், பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். இவ்வாறு குறிப்பிட்ட இடங்களைச் சார்ந்ததாகத் திரு அவை இருப்பதால்தான் நம்பிக்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் எனும் வளமை அதில் தோன்றவும் பாதுகாக்கவும்படுகிறது (இஅ* 110).
ஓர்
இடத்தில் வேரூன்றியிருத்தல் என்பதை இன்று நாம் ஒரு நிலப்பகுதியைச் சார்ந்து இருத்தல் என்று மட்டும் புரிந்துகொள்ளல் ஆகாது; ஏனெனில், இன்று அது முன்பு ஒருபோதும் இல்லாத இயக்கமும் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட உறவுகளின் பின்னலையும் பண்பாட்டுப் பன்மைநிரையையும் சார்ந்திருப்பதும் ஆகும். இதற்கு முக்கிய ஒரு காரணியாக இருப்பது நகர்மயமாதல், மக்களின் புலம்பெயர்தல் என்பன. இவற்றால் நிலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட மறைமாவட்டங்கள், பங்குகள் என்பனவற்றின் எல்லைகள் மங்கி புதுவகைப் பிணைப்புகள் உருவாகின்றன. இம்மாற்றங்கள் திரு அவையின் அருள்பணிசார் செயல்பாடுகளுக்குப் பல சவால்களை முன்வைக்கின்றன.
இச்சவால்களை எதிர்கொள்ளப் புதிய வகைகளிலான அருள்பணிச் செயல்பாடுகளைக் கற்பனை செய்து, தெளிதேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் மறைத்தூதுப் படைப்பாற்றல் அவசியம் (இஅ 111).
இந்நிலையில்
திரு அவையை நாம் ஓர் இல்லம் எனப் புரிந்துகொள்வது அவசியம். “அதனை எல்லா வகையிலும் பாதுகாக்கப்படவேண்டிய, வாயில் திறவாத, மூடிய ஓர் இடமாகக் கருதாது, ஓர் இல்லமாக உருவகிக்கும்போது வரவேற்றல், விருந்தோம்பல், ஏற்றுக்கொள்ளுதல் என்பனவற்றிற்கான வாய்ப்புகள் பிறக்கின்றன. இம்மண்ணுலகம் என்பதே ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஏனைய படைப்புகளுடன் வாழும் நமது பொது இல்லம்தானே! (அனைவரையும்) வரவேற்கும் ஓர் இல்லமாகவும், சந்திப்பு மற்றும் மீட்பின் அருளடையாளமாகவும், கடவுளுடைய பிள்ளைகளாகிய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்குமான உறவு ஒன்றிப்பின் பயிற்சி இல்லமாகவும் திரு அவை பார்க்கப்படுவதைத் தூய ஆவியின் துணையுடன் உறுதிசெய்வதே நமது ஈடுபாடு”
(இஅ 115).
ஒற்றுமை என்பது
ஒருமைப்பாடு அல்ல!
பல்வேறு
நாடுகள், பண்பாடுகள், சூழமைவுகள் என்பனவற்றில் இணைந்து பயணிக்கும் திரு அவைக்குப் ‘பன்மையில் ஒருமை’ என்பது இன்றியமையாதது. ஏனெனில், அது மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்கின்ற கடவுளின் மக்கள் சமூகம். தந்தை, மகன், தூய ஆவியார் மூன்று ஆள்களாக இருப்பினும், அவர்கள் ஒரே கடவுளாகவும், பன்மையில் ஒருமையாகவும் வேறுபடினும் ஒன்றிப்புறவில் இணைந்தவர்களாகவும் இருப்பவர்கள். இவ்வாறே, திரு அவையும் பல நாடுகள், இனங்கள்,
மொழிகள், பண்பாடுகளைச் சார்ந்த மக்களாக இயேசுவின்மீது கொண்ட ஒரே நம்பிக்கையில் ஒன்றித்து வாழ வேண்டிய சமூகமே. ஆனால், “திரு அவையின் ஒன்றிப்பு என்பது ஒருமைப்பாடு அல்ல; மாறாக, அது முறையான வேறுபாடுகளின் உயிரிணைப்பு சார்ந்த கூட்டமைப்பே. மீட்பின் செய்தி பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது. இது அச்செய்தியைத் திரு அவையின் வாழ்க்கைமுறை மற்றும் அது எடுக்கும் இறையியல், திருவழிபாடு, அருள்பணி, ஒழுங்குமுறைகள் என்பவற்றின் வடிவங்களையும் பற்றிய ஒற்றைப்புரிதலுக்குள் முடக்கிவிடுவதைத் தவிர்க்க உதவுகிறது”
(இஅ 39). ஏனெனில், “திரு அவையின் கத்தோலிக்கத் தன்மையின் பொருள் பன்மையில் ஒருமை என்பதே”
(இஅ 38).
திரு
அவையின் இந்தப் பன்மையில் ஒருமை என்பது ஒரு வளமை எனும் அனுபவமாக மாமன்றக் கூடுகைகள் தங்களுக்கு அமைந்திருந்தன என அதன் பங்கேற்பாளர்கள்
வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்: “கூடுகை நாள்களில் திரு அவை பல்வேறு வெளிப்பாடுகளாகத் திகழ்வதை நேரடியாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் நாங்கள் அனுபவித்தறிய முடிந்தது”
(முஅ 5o). எவ்வாறெனில்,
“தலத்திரு அவைகளின் அருள்வாழ்வுசார் மரபுச் செல்வங்களை மாமன்ற இயக்கமுறை வெளிச்சம் போட்டுக்காட்டியது, திரு அவையின் பொதுமை (கத்தோலிக்கத் தன்மை) காரணமாக அதன் தனிப்பகுதிகள் தத்தம் கொடைகளை ஏனைய பகுதிகளுக்கும், முழு திரு அவைக்கும் கொண்டுவருகின்றன. இதனால், அவை தங்களுக்கு இடையிலான பகிர்வுப் பரிமாற்றம் மற்றும் நிறை ஒற்றுமைக்கான ஒன்றுபட்ட முயற்சிகள் வழியாக முழுத் திரு அவையும் அதன் தனிப் பகுதிகளும் வளர்ச்சியடைகின்றன”(இஅ
37).
- மாமன்ற
முதல் அமர்வின் அறிக்கை *(முஅ),
இறுதி
அறிக்கை (இஅ)
சிறுவயது முதலே இறைமகன் இயேசுவின் இவ்வுலகத் தந்தை புனித யோசேப்புமீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். இதை எண்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பணி ஏற்ற நாள் 2013, மார்ச் 19 புனித யோசேப்பு பெருவிழா நாள் அவர் மனத்துக்கு ஏற்றபடி அழகாகவும் பொருத்தமாகவும் அமைந்தது. ஒரு திருத்தந்தையாகப் பின்னாள்களில் புனித யோசேப்பு பக்தி முயற்சிகளை அனைத்துலகுக்கும் வளர்த்தெடுக்கும் செயல்பாடுகளுக்கு முன்னோட்டமாகவும், புனித யோசேப்புக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தைக் கட்டியம் கூறும் சாட்சியமாகவும் திருத்தந்தை பிரான்சிசின் தலைமைப் பணி ஏற்பு நாள் அமைந்தது.
பாதுகாப்பதில்
புனித
யோசேப்பின்
பங்கு
புனித
பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தலைமைப் பணி ஏற்பு விழாவை எளிமையான விதத்தில் கொண்டாடிய திருத்தந்தை, விழாவின் மையப்பொருளாகத் தேர்வு செய்தது ‘புனித யோசேப்பு திருக்குடும்பத்தின் பாதுகாவலர், திரு அவையின் பாதுகாவலர்’ என்பதாகும்.
அன்றைய திருப்பலியில் ‘பாதுகாத்தல்’ என்பதை
மையக்கருத்தாகக் கொண்டு திருத்தந்தை ஆற்றிய மறையுரை, அவர் புதிதாக ஏற்றுக்கொண்ட மிகப்பெரும் பொறுப்புக்கு, புனித யோசேப்பின் பாதுகாவலையும் துணையையும் நாடுவதாக அமைந்தது.
தனது
மறையுரையில் புனித யோசேப்பின் விழா நாளன்று பணி ஏற்பு நடப்பதன் பொருத்தத்தைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “இறை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் பாதுகாப்பளித்து அவர்களைப் பேணிக் காத்தவர் புனித யோசேப்பு; எனவே ‘பாதுகாத்தல்’ என்பது
திரு அவைக்கும் கிறித்தவர்களுக்கும் மிக முக்கியமானது” எனத்
தெரிவித்தார். மேலும், “உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் புனித யோசேப்பைப் போன்று மக்களைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும்”
என்றும் அறிவுறுத்தினார்.
உலகில்
அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்கள் கடவுளின் படைப்புலகு குறித்து அக்கறை கொண்டிருக்கவேண்டும், உலக மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் மிக்கவர்களாக விளங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உலகத் தலைவர்களும் குழந்தைகளை, முதியோர்களை, துன்பத்தில் உழல்வோரைப் பாதுகாக்கக் கடமை கொண்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்தினார். திருத்தந்தையின் இறையியல் பார்வையில் திரு அவை மற்றும் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புனித யோசேப்பின் பாதுகாப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெளிவுபடுத்தினார். உறங்கும் நிலையிலும் ஓர் அமைதியான புனிதராக யோசேப்பு திருக்குடும்பத்துக்கும் திரு அவைக்கும் பாதுகாவலராகத் திகழ்கிறார் எனத் தெரிவித்தார்.
புனித யோசேப்புடன்
நெருக்கமானவர்
திரு
அவையின் வரலாற்றில் குழப்பம் மிகுந்த ஒரு காலகட்டத்தில் திருத்தந்தை 9-ஆம் பத்திநாதர் திரு அவையைப் புனித யோசேப்பின் பாதுகாவலில் வைக்க விரும்பினார். எனவே, 1870-ஆம்
ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாள் புனித யோசேப்பை ‘கத்தோலிக்கத் திரு அவையின் பாதுகாவலர்’ என
அறிவிப்பு செய்தார். எப்பொழுதும் கன்னியான மரியாவின் மிகத் தூய்மையான கணவராகவும், இறைமகனைச் சிறந்த முறையில் வளர்ப்பவராகவும், திருக்குடும்பத்தின் தலைவராகவும் தேர்ந்துகொள்ளப்பட்டதன் காரணமாக இயேசுவால் கட்டியெழுப்பப்பட்ட திரு அவைக்குப் புனித யோசேப்பு பாதுகாவலராகக் கிறிஸ்துவின் பிரதிநிதியான திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.
இவ்வாறு
புனித யோசேப்பு உலகளாவிய திரு அவையின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டதன் 150-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் புனித யோசேப்பு யூபிலி ஆண்டினை 2020, டிசம்பர் 08 அன்று துவக்கினார். அன்று அவர் வெளியிட்ட ‘Patris corde’அதாவது
‘ஒரு தந்தையின் இதயத்தோடு’
என்ற தலைப்பில் அமைந்த திருத்தூது மடல் மூலமாக, அவரும் புனித யோசேப்பும் திரு அவையின் திருத்தந்தை மற்றும் திரு அவையின் பாதுகாவலர் என்ற முறையில் ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் இருப்பது வெளிப்பட்டது. புனித
யோசேப்பின் யூபிலி ஆண்டில் சிறப்புப் பேறுபலன்களை அறிவித்த திருத்தந்தை “புனித யோசேப்பே, ஒரு தந்தையாக வாழும் வாழ்வுப் பாதையை எமக்குக் காட்டியருளும். இரக்கமும் துணிவும் நிறைந்த அருளை எமக்குப் பெற்றுத்தாரும்” என்ற
செபத்துடன் தன் மடலை நிறைவு செய்தார்.
புனித யோசேப்பிடம்
பக்திப்
பற்றுதல்
இறைவனின்
தாய் மரியாவிடமும், புனித யோசேப்பிடமும் திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தைத்தனமான பாசம் கொண்டிருந்தார். அந்தப் பாசமே துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னை மற்றும் உறங்கும் நிலை யோசேப்பு ஆகியோரின் பக்தியைத் திரு அவையில் வளர்க்கச் செய்தது.
19-ஆம்
நூற்றாண்டில் இயேசு-மரியா துறவு சபை பிரெஞ்சு மொழியில் வெளியிட்ட ‘புனித யோசேப்பு பக்தி முயற்சிகள்’ என்ற
பழமையான நூலிலுள்ள செபத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபித்து புனிதரிடம் தனக்குள்ள நேசத்தில் நிலைத்தார். மேலும், தன்னுடைய ஆட்சி
முத்திரையில் புனித யோசேப்பைக் குறிக்கும் லீலி மலரை இடம்பெறச் செய்தார். அவர் தலைமைப் பணியேற்ற அதே ஆண்டிலேயே புனித யோசேப்பின் பரிந்துரையை நாடும் விதத்தில் அனைத்து நற்கருணை மன்றாட்டுகளிலும் புனிதரின் பெயரையும் இணைத்தார். உறங்கும் நிலை புனித யோசேப்பின் பக்தி உலகம் முழுக்கப் பரவுவதற்குத் திருத்தந்தையின் இந்த அனுபவமே காரணமாயிற்று.
புனித
யோசேப்பு குறித்த சிந்தனைகளை அடிக்கடிப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் உள்ளவராகத் திருத்தந்தை
விளங்கினார். புனித யோசேப்பை ஒரு தந்தையாகவும், இயேசுவின் வளர்ப்பாளராகவும், மரியாவிடம் பக்தி செலுத்துபவராகவும் போற்றிய திருத்தந்தை, திரு அவையில் புனித யோசேப்பு ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார். மக்களால் அதிகம் கவனிக்கப்படாதவராய், அதேவேளை காலமறிந்து செயல்படுகிறவராய் மறைவாழ்வு வாழ்ந்தாலும், மீட்பு வரலாற்றில் எவரோடும் ஒப்பிட முடியாத செயல் வீரராக அவர் விளங்கினார் என்றும், இதனாலேயே கிறித்தவ மக்களால் புனித யோசேப்பு எப்போதும் அதிகம் நினைவுகூரப்படுகிறார் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
புனித யோசேப்பிடம்
பெற்ற
படிப்பினைகள்
புனித
யோசேப்பிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்வதற்குப் பல படிப்பினைகள் உள்ளன
என்று திருத்தந்தை பிரான்சிஸ் கருதினார். நாசரேத் தச்சர் யோசேப்பு தனது மனைவி மரியாவை ஏற்றுக்கொண்டது மற்றும் இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கைகொண்டது போன்ற தன் செயல்களால் உலகம் வேண்டுமென்றே புறக்கணிக்கும் விசயங்களைக் கவனிக்கவேண்டும் என்பதைத் திரு அவைக்கு நினைவூட்டுகிறார். மற்றவர்கள் நிராகரிப்பதை நாம் மதிக்கவேண்டும் என்பதை நம் ஒவ் வொருவருக்கும் அவர் அறிவுறுத்துகிறார். உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களைக் கவனிக்கவும், அவர்களைப் பராமரிக்கவும் நமக்கெல்லாம் கற்பிக்கிறார். இவ்வுலகில் ஒருவர் தந்தையாகப் பிறப்பதில்லை; அவர் ஒரு குழந்தையின் வாழ்வுமீது பொறுப்பேற்கும்போதே தந்தையாக மாறுகின்றார். தந்தையரால் கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் நிறைந்துள்ள இன்றைய உலகிற்கு புனித யோசேப்பு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இப்படிப்பினைகளோடு இயேசுவின் பணி வாழ்விற்குமுன் அவர் வாழ்ந்த இடமான நாசரேத், கடவுளால் முன்னரே புனித யோசேப்பின் பிறப்பிடமாகத் தேர்வு செய்யப்பட்டது என்பது அதிகம் அறியப்படாத பகுதிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மீதுள்ள இறைவனின் விருப்பத்தைக் காட்டுவதாக அமைவதாகவும் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
ஒரு
மனிதனின் தனிப்பெரும் மாண்பும் மகத்துவமும், அந்த மனிதர் பெற்றுள்ள அரும்பெரும் பண்புகளாலும், அந்த மனிதர் ஏற்றுள்ள பதவிப் பொறுப்புகளாலும் அவருக்குக் கிடைக்கிறது. அந்த வகையில் இறைவனின் இதயத்துக்கு ஏற்றவராக விளங்கிய புனித யோசேப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவராக விளங்கினார்.
1. பின்புலம்
கத்தோலிக்கத்
திருவழிபாட்டிலும் (திருப்பலி), திருவழிபாட்டிற்குப் புறம்பே திருமணங்கள், அடக்கச் சடங்குகள், மரியா / புனிதர்களின் நவ நாள்கள் மற்றும் திருவிழாக்களிலும், கிறிஸ்து பிறப்பு, வருடப் பிறப்பு மற்றும் தவக்காலம் / புனித வாரச் சிறப்புக் கொண்டாட்டங்களின் போதும் இறைமக்கள் பாடுவதற்காகப் புதுப்புது பாடல்கள் இயற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், பொதுநிலையினர் என்று பலரும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு
ஆலயப் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் யாவை? அவற்றிற்குத் திரு அவையின் உரிய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமா? திரு இசைக்கு அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன? இக்கேள்விகளுக்கு இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.
2. திரு இசையின் பண்புகள்
இறைவனுக்கு
மாட்சிமை நல்குவதையும், மானிடரைத் தூய்மைப்படுத்துவதுமே திரு இசை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிடும் திரு அவை, ஆசிரியப் படிப்பினை, அதன் இன்றியமையாத பண்புகளாகக் கீழ்க் காண்பவற்றைக் கோடிட்டுக்காட்டியுள்ளது:
1) இசை
அமைப்பாளர்கள் கிறித்தவ உணர்வால் நிரம்பியிருக்க வேண்டும். திரு இசையைப் பேணி அதன் கருவூலத்தைப் பெருக்கத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் அமைக்கும் பண்கள் பாட்டுக் குழுக்களால் மட்டும் பாடக்கூடியனவாய் இல்லாமல், நம்பிக்கையாளர் குழுமம் அனைத்தும் செயல்முறையில் பங்கு கொள்ளப் பொருத்தமானவையாகவும் விளங்கவேண்டும்.
2) ஆலயப்
பாடல்கள் திருவிவிலிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டும், கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு ஒத்திருப்பதாகவும் அமைய வேண்டும்.
3) திருவழிபாட்டுக்
காலங்களோடும், திருவழிபாட்டு மறைநிகழ்வுகளின் கொண்டாட்டங்களோடும், திருவழிபாட்டுப் பாடல்களின் வார்த்தைகளும் இசையும் பொருந்திச் செல்லவேண்டும்.
4) திரு
இசையின் வார்த்தைகள் இறைவனின் பெயரில், அவரை நோக்கி விளித்து, அவரது மாட்சியையும் மாபெரும் செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
5) திருவழிபாட்டில்
இடம்பெறும் பாடல்களின் கீழ்க்காணும் வகைகளுக்கு ஏற்றவாறு திரு இசை அமைய வேண்டும்.
வருகைப்பாடல்:
கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பைப் பேணவும், திருவழிபாட்டுக் காலத்தின் அல்லது திரு நாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனியில் இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாட லின் நோக்கம் ஆகும்
பதிலுரைப் பாடல்:
முதல் வாசகத்தைத் தொடர்ந்து வரும் பதிலுரைப் பாடலுக்கு வாசக நூலில் உள்ள பதிலுரைத் திருப்பாடலையே பாடவேண்டும். அதே திருப்பாடல் ஏற்கெனவே இசையமைக்கப்பட்டுள்ள ஒரு தியானப் பாடலாக இருப்பின் அதைப் பாடலாம்.
காணிக்கைப் பாடல்:
நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான அப்ப, இரசம் உள்ளிட்ட காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதற்காகப் பவனியாகவோ பவனியின்றியோ பீடத்திற்குக் கொண்டுவரும்போது பாடுவது.
திருவிருந்துப்
பாடல்:
நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மிக ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உள்ளத்து மகிழ்ச்சியை எடுத்துக்காட்டவும், பவனியாகச் செல்பவரின் குழும இயல்பைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அமையும் பாடல் (‘கிறிஸ்துவின் ஆத்துமமே’
என்ற பாடலை ஒவ்வொரு திருப்பலியிலும் பாடவேண்டுமென்ற கட்டாயம் இல்லை).
நன்றிப்பாடல்:
நற்கருணை விருந்திற்குப் பின், ‘திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு’க்கு முன் அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சிறிது நேரம் அமைதியாகச் செபித்த பின் இறைவனுக்கு நன்றிகூறுவதற்காகப் பாடப்படும் ஒரு திருப்பாடல் அல்லது புகழ்ச்சிப் பாடல்.
இறுதிப்பாடல்:
திருப்பலியின் இறுதியில் அருள்பணியாளர் திருக்குழுமத்திற்கு ஆசி வழங்கி, நற்செய்தியை அறிவிக்கவும், நற்பணி செய்யவும் திரும்பிச் செல்லும்படி அதை அனுப்பியபின் பாடுவதற்கு உரோமைத் திருப்பலி நூலில் ஏற்பாடு எதுவும் இல்லை (மக்கள் கலைந்து செல்லும்போது அன்னை மரியா / புனிதர்களின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுவதும் ஏற்புடையதல்ல; அந்நேரத்தில் பொருத்தமான இசையை மட்டும் இசைப் பெட்டியில் வாசிப்பது உகந்தது).
6) திருவழிபாடு
திரு அவையின் ‘தனிநபர் கொண்டாட்டம்’ என்றல்லாமல்,
‘பொதுக் கொண்டாட்டம்’ என்பதால்
அதில் இடம்பெறும் திரு இசையும், திரு அவையினுடைய மரபு மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பின்பற்றியிருக்க வேண்டும் (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம். திருவழிபாடு, எண்: 112-121; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண்: 40-41, 47-48, 61, 74,
86 - 88 அன்பின் அருளடையாளம் (Sacamentum Caritatis, 2007), எண் : 42 - 70; ஆண்டவரின்
அருள்வாக்கு, (Verbum Domini, 2010), எண்:
69.
3. அனுமதிபெற வேண்டிய வழிமுறைகள்
ஆலய
வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பாடல்கள், இராகங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிப்பதும் அனுமதிப்பதும் அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதும் ஆயர் பேரவையின் பொறுப்பாகும் (காண்: உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, 2017, எண்: 48 - 393). இந்தியாவில் திருவழிபாடு சார்ந்தவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தந்த மண்டல ஆயர் பேரவைக்கு இலத்தின் ஆயர் பேரவை வழங்கியுள்ளது. சில நாடுகளின் ஆயர் பேரவைகள் (கனடா, வட அமெரிக்கா, மலேசியா)
இசை அமைப்பாளர்கள் தங்களின் திரு இசைக்கு அனுமதி பெறுவதற்காக வழங்கியுள்ள கீழ்க்காணும் விதிமுறைகள் மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. ஓர்
இசை அமைப்பாளர் தனது இடத்து ஆயருக்குத் தனது படைப்புகளை அனுப்ப வேண்டும். 2. அதை, அந்த ஆயர் தமக்குரிய ஆயர் பேரவை திருவழிபாட்டுப் பணிக்குழுவிற்கு மேலனுப்ப வேண்டும். 3. மேற்காணும் திருவழிபாட்டுப் பணிக்குழு அனுப்பப்பட்டுள்ள திரு இசைப்பாடல்களை மேற்கூறப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளின்படி ஆராய்ந்து அவற்றின் தகுதியைப் பற்றிய கருத்தை மறைமாவட்ட ஆயருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. அக்கருத்தைப் பெற்றவுடன் மறைமாவட்ட ஆயர் திரு இசைப்பாடல்கள் அனுப்பிய இசை அமைப்பாளருக்கு ‘அனுமதி வழங்கப்படுகிறது’ / ‘மறுக்கப்படுகிறது’
என்ற பதிலை அனுப்ப வேண்டும். 5. மறைமாவட்ட ஆயர் அனுமதி வழங்கும் திரு இசைப் பாடல்களின் காப்புரிமை (Coyright) மறைமாவட்டத்திற்கு
உரியது. அப்பாடல்கள் மறைமாவட்ட டிஜிட்டல் கருவூலத்தில் சேமிக்கப்படும். அவற்றைக் கத்தோலிக்க இறைமக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவற்றையே ஆலயப் பாடல்களாகப் பயன்படுத்தவேண்டும். 6. தனிச்சுற்றுக்காக வெளியிடப்படும் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளிலிருந்து பாடல்களை ஆலயங்களில் பாடுவதற்கும் மேற்கண்ட முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
4. இறுதியாக...
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளை உள்வாங்கி இசை அமைக்கப்பட்டு வெளியிடப்படும் அருமையான ஆலயப் பாடல்கள் உள்ளன. அதேவேளையில், திருவிவிலியத்திலும், இறையியல் கோட்பாட்டிலும் வேரூன்றி இல்லாத, இறைவனின் பெயரை விளித்து எழுதப்படாத, நம்பிக்கையாளர்களின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தாத பண்களும், திருக்குழுமம் அனைத்தும் பங்குகொள்ள இயலாத, சினிமா/பாட்டுக் கச்சேரிப் பாடல்களின் இராகங்களைப் பிரதிபலிக்கும் இசையும் கொண்ட பாடல்கள் ஆலயப் பயன்பாட்டிற்காக வியாபாரப் போட்டியுடன் புதிது புதிதாக இறக்கப்படுகின்றன என்பதையும் மறுக்கமுடியாது. இந்நிலையில், தமிழ்நாடு ஆயர் பேரவை திரு அவை ஆசிரியப் படிப்பினைகளின்படி ஆலயப் பாடல்களை இயற்றுவதற்குரிய விதிமுறைகளை வெளியிட்டு, அனுமதி வழங்கி, கண்காணிப்பு செய்து திரு இசையின் தரத்தையும் மாண்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.