news
ஆன்மிகம்
தந்தையைக் கொண்டாடுதல்! (கண்டனையோ, கேட்டனையோ! – 36)

மெஜோலின் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. ‘யார் மெஜோலின்?’ என்று கேட்கிறீர்களா? ஐந்தாவது படிக்கும் என் பங்குச் சிறுமி; பீடப் பணியாளர். வயது 10. பங்கு நிர்வாகம் மற்றும் ஆன்மிகப் பணிகளில் என் முதன்மை ஆலோசகர்.

ஜூன் 15 அன்று ஞாயிறு திருப்பலி முடிந்து வீட்டிற்குச் சென்றபின், என்னைப் போனில் அழைத்து, “Happy Father’s Dayஎன்று கூறினாள். “அது இன்றைக்கா?” என்றேன். “ஆமாம். இதுகூட உங்களுக்குத் தெரியலியா? செமினேரியில் அப்படி என்னதான் கற்றுக்கொண்டீர்கள்?”

கூடுதல் அவமானங்களைத் தவிர்க்க  அவசரமாகப் போனைத் துண்டித்துவிட்டு, கூகுளில் தேடினேன். அதுவும், ‘ஆம், இன்றைக்கு ஃபாதர்ஸ் டேதான்என்றுஅப்பா சத்தியம்செய்தது.

Father’s Day-க்கு ஐந்து நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1500-களின் ஆரம்பங்களிலேயே ஐரோப்பாவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தொடக்கத்தில் இது ஒரு சமய வழிபாட்டு நிகழ்வாக இருந்துள்ளது. நாள் - மார்ச் 19, புனித யோசேப்பு விழா தினம். திருப்பலி வைத்து, யோசேப்பு போலவே எல்லா அப்பாக்களும் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார்கள். விழா நாளடைவில் மற்ற கலாச்சாரங்களுக்குச் சென்றபோது, நோக்கத்திலும் வடிவத்திலும் மாற்றங்கள் வந்தன.

நவீனத் தந்தையர் தினம் அமெரிக்காவில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகி, பின் உலகம் ழுழுவதும் பரவி பிரபலமடைந்த ஒரு கொண்டாட்டம். வியாபார நோக்கங்கள் மலிந்தது. ஒருசில நாடுகளில் வேறு நாள்களில் அனுசரிக்கப்பட்டாலும், ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு என்பது ஓரளவு நிலைபெற்றுவிட்டது.

தந்தையரைthe unsung parentஎன்றுதான் கூறவேண்டும். அமெரிக்காவில் கூட கவனித்திருக்கிறேன்அன்னையர் தினத்தின் மவுசு, தந்தையர் தினத்திற்கு இல்லை. உலகம் முழுவதும் அதுதான் நிலைமை. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம்!

அப்பா என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி! பெரிதாகக் கொண்டாடப்படவில்லையென்றாலும், ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தந்தை மிகப்பெரும் தாக்கம் செலுத்துகிறார். இது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்பாவின் முன்மாதிரியால் சிறப்பாக உருவான குழந்தைகளும் உள்ளனர். அப்பாவைப் பின்பற்றிக் கெட்டுப் போனவர்களும் உள்ளனர்.

அண்மையில், ‘National Catholic Registerஎனும் இணையப் பத்திரிகையில், ‘திருத்தந்தையர்களும் அவர்களின் தந்தையர்களும்என்ற தலைப்பில் நான்கு திருத்தந்தையர்களின் அப்பாக்கள் குறித்து வெளியான சிறு குறிப்புகளை இரசித்து வாசித்தேன்

லூயிஸ் ப்ரெவோஸ்ட்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தந்தை. முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர். 23 வயதில் கல்லூரி முடித்தவுடன் 1943-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றினார். D-Day Operationஎன்று வரலாற்றில் குறிப்பிடப்படும் மிக முக்கிய இராணுவ நடவடிக்கையில் ஏறக்குறைய 1,56,000 நேசப் படை வீரர்களைப் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் கொண்டு வந்து இறக்கிய கப்பல்கள் ஒன்றின் அதிகாரியாக லூயிஸ் இருந்தார்

போர் முடிந்தபின்பு சிகாகோ நகரில் மவுண்ட் கார்மெல் துவக்கப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார். குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தார். 1949-ஆம் ஆண்டு நூலகராகப் பணிபுரிந்த மில்ட்ரெட் மார்டினெஸ் என்ற பெண்ணை மணந்தார். மூன்று ஆண் குழந்தைகள். கடையவர்தான் இன்றைய திருத்தந்தை லியோ.

2024-ஆம் ஆண்டு அப்போதைய கர்தினால் இராபர்ட் ப்ரெவோஸ்ட் ஓர் இத்தாலிய டி.வி. சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டார்:

இளம் அருள்பணியாளராக இருந்தபோது இராபர்ட் அழைத்தல் வாழ்க்கையில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தார். ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல உணர்ந்தார். தான் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.

ஒருநாள் தன் தந்தையை அழைத்து, “நான் துறவற வாழ்வைக் கைவிட்டு, திருமணம் செய்துகொள்வது நல்லது என நினைக்கிறேன்எனக்குக் குழந்தைகள் வேண்டும். நான் ஓர் இயல்பான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்என்று இராபர்ட் கூறினார்.

தந்தை லூயிஸ், “நீ எதையும் இழந்துவிடவில்லை. எனக்கும் உன் அம்மாவிற்கும் இடையே உள்ள அன்பு மிக முக்கியமானது. ஆனால், அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாதது, ஓர் அருள்பணியாளருக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற அன்பு. யோசித்து முடிவெடுஎன்று கூறினாராம். அதை நினைவுகூர்ந்து, ‘There is something to listen to hereஎன்று அந்த நேர்காணலில் குறிப்பிடும் இராபர்ட், அதன்பின் எந்தவித மாற்றுச் சிந்தனைக்கும் தன் மனத்தில் இடம்கொடுக்காத காரணத்தால்தான்  இன்று அவர் திருத்தந்தை!

கரோல் வொய்த்திவா சீனியர்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் தந்தை. இருவரின் இயற்பெயர்களும் ஒன்றேகரோல், போலந்து நாட்டு இராணுவத்தில் லெஃப்டினன்ட் பதவி வகித்தவர்.   தன் இறையழைத்தல் ஊக்குநர் என்று ஜான்பால், தந்தை கரோலையே குறிப்பிடுகிறார்.

எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது, என் அம்மா இறந்துபோனார். நான் புதுநன்மை கூட பெற்றிருக்கவில்லை. என் மூத்த சகோதரனும் சீக்கிரமே இறந்துவிட, நான் என் தந்தையுடன் தனித்து விடப்பட்டேன். அவர் ஒரு போர்வீரர். ஆழமான நம்பிக்கையாளர். அம்மாவின் இறப்புக்குப் பின், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்பெரும் பொழுதை இறைவேண்டலிலேயே செலவழித்தார். இரவில் சில நேரங்களில் நான் கண்விழித்துப் பார்க்கும்போது, என் தந்தை முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருப்பார்.

நான் அருள்பணியாளராக வேண்டும் என்று ஒரு நாளும் அவர் என்னிடம் கூறியதில்லை. இறையழைத்தல் குறித்து நாங்கள் இருவரும் வீட்டில் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. ஆனால், என் தந்தையின் வாழ்க்கைதான் அருள்பணியாளராக என்னைத் தூண்டியது. அவருடைய முன்னுதாரணம்தான் என் முதல் குருமடம்என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் குறிப்பிடுகிறார்.

ஜோசப் இராட்சிங்கர்

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் தந்தை. அவர் பெயரும் ஜோசப் இராட்சிங்கர்தான். ஒரு போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. ‘Liebfrauenboteஎன்ற பத்திரிகையில்மணமகள் தேவைஎன்று விளம்பரம் கொடுத்துள்ளார்.  ‘மாநில அரசு ஊழியர். கத்தோலிக்கர். வயது 43. ஒரு திறமையான கத்தோலிக்கப் பெண் தேவை.’ இராட்சிங்கர் குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கை, வழிபாடு, இறைவேண்டல் ஆகிய மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது.

பெனடிக்ட் 1927-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் பிறந்தார். அது ஒரு புனித சனிக்கிழமை. அந்த நாளில் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, புதுத் தண்ணீரை நிரப்புவது வழக்கம். இராட்சிங்கருக்குத் தன் மகன் பாஸ்கா புது தண்ணீரில் திருமுழுக்குப் பெறவேண்டும் என்று ஆசை. குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகியிருந்தது. அம்மா இன்னும் படுக்கையிலிருந்து எழவில்லை. இராட்சிங்கர் தன் மகனை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு, வேகமாகக் கோவிலுக்கு ஓடிப்போய், அவன் பிறந்த நாளிலேயே திருமுழுக்குப் பெறச்செய்தார். இது குறித்துப் பின்னாளில், “பாஸ்கா மறைபொருளில் மூழ்கி எழும் அனுபவத்தை என் வாழ்வின் முதல் நாளிலேயே எனக்குப் பெற்றுத் தந்த என் தந்தைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்என்று பெனடிக்ட் குறிப்பிடுகிறார்.

மரியோ பெர்கோக்லியோ

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தை. இரயில்வே துறையில் கணக்கராகப் பணிபுரிந்தார். இளம்வயதிலேயே ஒரு பெரும் கப்பல் விபத்தில் இறக்க வேண்டியவர். அவர் உயிர் தப்பிய நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்Hopeதன் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டிலிருந்து அர்ஜென்டினாவுக்குப் புறப்பட்டSS Principessa Mafaldaஎன்ற பயணிகள் கப்பல், 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் நடுக்கடலில் மூழ்கியது. மொத்தம் 314 பேர் இறந்தனர்.

இந்தக் கதை எங்கள் குடும்பத்தில், எங்கள் ஊரில், குடியிருப்பில்  திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. என்னுடைய தாத்தாவும், பாட்டியும், பிற்காலத்தில் என் தந்தையான இளம் மரியோவும், அந்தக் கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கித் தயாராக  இருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லைஎனவே உயிர் பிழைத்தார்கள்.\"

ஒரு தந்தை காப்பாற்றப்பட்டு, ஒரு திருத்தந்தை நமக்குக் கிடைத்தார்.

ஒவ்வொரு மனிதத் தந்தையும், தந்தை கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்ய அழைக்கப்படுகிறார்.

தந்தைமையைக் கொண்டாடுவோம்!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
ஏழைகளுக்கு முதன்மை! (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 05)

கடவுளின் இதயத்தில் ஏழைகளுக்கும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் தனியோர் இடம் உண்டு. இதனால் அவர்கள் திரு அவையின் இதயத்திலும் இருக்கின்றனர். ஏழைகளாக்கப்பட்டோரிடம் இயேசுவின் முகத்தையும் ஊனுடலையும் இனம் கண்டுகொள்ள கிறித்தவக் குழுமம் முழுவதும் அழைக்கப்படுகிறது(இஅ 19). மேலும், அவர் ஏழையாகவும் தாழ்ச்சி உடையவராகவும் இருந்தவர்; ஏழைகளிடம் நட்புறவு கொண்டிருந்தவர்; அவர்களுடன் சமபந்தி அமர்ந்தவர்; ஏழ்மைக்கான காரணிகளைக் கண்டித்தவர். அவருடைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டிய திரு அவையும், ஏழைகளுக்கும் விளிம்புநிலையினருக்கும் முதன்மை தருவது அவசியம். இது கிறித்தவ நம்பிக்கையின் இன்றியமையாத ஒரு கூறும், இறையியல் அடிப்படையிலான கடமையும் ஆகும்.

பல வேளைகளில் ஏழைகளே திரு அவையில் பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த ஏழைகளோடு ஏழையாக இருக்கவும், அவர்களது குரலைக் கேட்கவும், அவர்களுக்கு ஆவியார் தரும் அருங்கொடைகளை எவ்வாறு கண்டறிவது என அவர்களோடு இணைந்து கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது (இஅ 19).

ஏழைகள் திரு அவையிடம் கேட்பது அன்பையே. அன்பு செய்தல் என்பது அவர்களுக்கு நமது ஏற்பையும் மதிப்பையும் புரிதலையும் தருவது. அவை இன்றி உணவு, பண உதவிகள் என்பனவற்றை எவ்வளவுதான் தந்தாலும், அது அவர்களது மனித மாண்பை முழுமையாக மதிக்கத் தவறுவது ஆகும். அத்தகைய புரிதலும் மதிப்பும் தருவதுதான் பிறருடைய உதவிகளின் பயனாளர்களாகிய அவர்களைத் தங்களது வளர்ச்சியைத் தாங்களே முடிவு செய்ய ஆற்றல் படைத்தவர்கள் ஆக்குகிறது.

ஏழைகள் பல வகையினர்!

மாண்புடன் வாழ்வதற்கான பொருள் வளம் அற்றவர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பழங்குடியினர், வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டோர் சிறப்பாகப் பெண்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றிலிருந்து மீண்டுவரப் போராடுவோர், அமைப்பு முறையாலேயே குரலற்றோர் ஆக்கப்பட்ட சிறுபான்மையினர், கைவிடப்பட்ட முதியோர், இனவெறி, சுரண்டல், ஆள்கடத்தல் என்பனவற்றிற்கு ஆளாக்கப்பட்டோர், அதிலும் குறிப்பாக இளையோர், சுரண்டப்படும் தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் பயன்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையினர் ஆகிய அனைவரும் ஏழைகளே. மிக அதிகமாகப் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் கருவிலிருக்கும் குழந்தைகளும், அவர்களின் அன்னையருமே. அவர்களுக்கான ஆதரவுக் குரலும் செயல்பாடுகளும் மிகவும் அவசியம். மேலும், பல நாடுகளில் நிகழும் போர்களும் பயங்கரவாதமும் புதுவகை ஏழைகளை உருவாக்கியுள்ளன. அவர்களின் குரல் தங்களுக்குக் கேட்கிறது என அறிவிப்பதுடன், அவற்றிற்குக் காரணிகளான ஊழல் அரசியல் மற்றும் சுரண்டல் பொருளாதார அமைப்புகளையும் மாமன்றம் கண்டிக்கிறது.

ஏழ்மையின் மற்றொரு வகை அருள்வாழ்வைச் சார்ந்தது. வாழ்வில் அர்த்தம் இல்லாத நிலை, பிறரைத் தனக்குப் போட்டியாகவோ பகையாகவோ கருதும் மிகையான தன்னல நோக்கு என்பன அதன் சில வடிவங்கள். “இத்தகைய அருள்வாழ்வுசார் ஏழையரும் பொருளாதார ஏழையரும் சந்திக்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவரது தேவையை நிறைவு செய்யும் இணைந்த பயணத்தைத் தொடங்குகின்றனர் (முஅ 5d). இவ்வாறுதான்ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் (மத் 5:3) எனும் நற்செய்திப் பேற்றினை நிறைவாக அனுபவமாக்கும் வகையிலான இணைந்து பயணிக்கும் திரு அவை செயலாக்கம் பெறும்.

மேலும், ஏழைகள் சார்பாக நிலைப்பாடு எடுப்பது என்பது நமது பொதுவீட்டின் நலம் காக்க அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் ஆகும். ஏனெனில், “நிலவுலகின் அழுகுரலும் ஏழ்மையில் வாடுவோரின் அழுகுரலும் ஒரே அழுகுரலே (முஅ 5e).

ஏழைகளுக்காகச் செயல்படுவது

ஏழைகளின் நலனுக்காகச் செயல்படுவது என்பது ஏழ்மை மற்றும் ஒதுக்கப்படுதல் என்பனவற்றிற்கான காரணிகளை அகற்றுவதும் ஆகும். அவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் எழுப்புதல், அவர்களுக்கு எதிரான அநீதிகளைப் பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டித்தல் என்பனவையும் அதில் உள்ளடங்கும். அவை தனியார் மற்றும் தொழில்நிறுவனங்கள், அரசுகள் என்பன இழைக்கும் அநீதச் செயல்களாகவோ, அநீதச் சமூக அமைப்புகளாகவோ இருக்கலாம். அவற்றை இனங் கண்டு எதிர்ப்பதற்குத் திரு அவையின் சமூகப் படிப்பினை உதவ முடியும். அதனால் தூண்டுதல் பெற்று, பொதுநலம் பேணுவதிலும், மனித மாண்பைக் காப்பதிலும் ஈடுபடுவது கிறித்தவர்களது கடமை. இப்பணியில் அவர்கள் குடிமைச் சமூக அமைப்புகளுடனும் தொழில் சங்கங்களுடனும் மக்கள் இயக்கங்களுடனும் அடித்தட்டுக் குழுக்களுடனும் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்படுவது அவசியம். அரசியலிலும் இத்தகைய ஈடுபாடு அவசியம் ஆகலாம். இவ்வாறு ஈடுபடுவோருக்குக் கிறித்தவக் குழுமங்கள் தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவது அவசியம். ஏனெனில், “அவர்களது செயல்பாடும் நற்செய்தி அறிவித்து இறையாட்சியைக் கொணரும் திரு அவையின் பணியைச் சார்ந்ததே (முஅ 4 g).

ஏழைகள் மற்றும் துன்புறுவோரிடம் கிறித்தவச் சமூகம்தாம் செல்வராக இருந்தும் தமது ஏழ்மையின் வழியாக நாம் செல்வராகும் பொருட்டு நமக்காக ஏழையான...” (2கொரி 8:9) கிறிஸ்துவைக் காண்கிறது. அவர்களிடம் நெருங்கி வரவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது. “இணைந்து பயணிப்பது என்பது ஒன்றிணைந்து நடப்பது. அதனால் ஏழ்மையை அனுபவிப்போரைக் கூட்டியக்கத் திரு அவை தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மையப்படுத்த வேண்டும். ஏனெனில், தங்கள் துன்பங்கள் வழியாக அவர்கள் துன்புறும் இயேசுவை நேரடியாக அறிந்தவர்கள். அவர்களது வாழ்வு இயேசுவின் வாழ்வோடு ஒத்திருப்பதால் ஏழைகள் கொடையாகப் பெற்றுக்கொள்ளப்படும் மீட்பின் அறிவிப்பாளர்களாகவும் நற்செய்தியின் மகிழ்ச்சிக்குச் சாட்சிகளாகவும் அவர்களை அது ஆக்குகின்றது (முஅ 4h).

செயல்படுத்த சில பரிந்துரைகள்

1. ஏழைகள் வேறு, நாம் வேறு எனத் திரு அவையினர் எவரும் ஏழைகளை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியும், அவர்களை நம்மிடம் கையேந்தி நிற்பவர்களாகவும் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் (முஅ 4i).

2. திரு அவைகளின் நிதி நிர்வாகம் நற்செய்தியின் கோரிக்கைகளைத் துணிந்து எடுத்துரைக்கத் தடையாகிவிடக்கூடாது. இறைவாக்குத்தன்மையுடன் அநீதச் சூழமைவுகளைக் கண்டிப்பதும், சட்டங்கள் இயற்றுவோரைப் பொதுநலனுக்காகச் செயல்படத் தூண்டுவதும் ஒன்றுக்கு ஒன்று தடையாகிவிடாதவாறு இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் (முஅ 4j).

3. தான் நடத்தும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் நீதி நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்படுகிறார்களா? என்பதைப் பற்றிய நேர்மையான சுய ஆய்வைத் திரு அவை மேற்கொள்ள வேண்டும் (முஅ 4l).

4. பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள தலத் திரு அவைகளிடையே தாங்கள் பெற்றுள்ள வளங்களையும் கொடைகளையும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்கு இடையே நிலவும் கூட்டுத்தோழமையின் அடையாளம் ஆகும். இது அத்திரு அவைகளுக்கு இடையே ஒன்றிப்பை வளர்க்கும் (முஅ 4m).

5.  திரு அவையின் சமூகப் படிப்பினை எனும் வளம் அதிகம் அறியவும் பயன்படுத்தவும் அதனை அதிகமாகப் பரவலாக்கம் செய்வதுடன் பிறரும் ஏற்றுச் செயல்படுத்தத் தூண்டுதல் தரும் வகையில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும் (முஅ 4n).

6. கிறித்தவக் குழுமங்களில் தரப்படும் அனைத்து உருவாக்கப் பயிற்சிகளிலும் சிறப்பாக, அருள்பணியாளர் மற்றும் துறவியருக்குத் தரப்படுவனவற்றிலும் ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்ந்து அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன இன்றியமையாது இடம்பெறவேண்டும் (முஅ 4h).

7. திருத்தொண்டர் பணி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதில் ஏழைகளுக்குப் பணி செய்யும் பரிமாணம் அதிக அழுத்தம் பெறவேண்டும் (முஅ 4p).

8.“திரு அவையின் படிப்பினை, திருவழிபாடு, செயல்பாடுகள் என்பவற்றில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் சார்ந்த விவிலிய, இறையியல் அடித்தளங்கள் வெளிப்படையாகவும் கவனமாகவும் இணைக்கப்பட வேண்டும் (முஅ 4q).

news
ஆன்மிகம்
அன்னை மரியா இறைவேண்டலின் தாய்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 50)

திரு அவையின் அனைத்து ஆவணங்களும் திருமடல்களும் மரியன்னையின் உதவியை நாடி நிறைவடைவதை ஒரு மரபாகவே கொண்டுள்ளன. எனவே, இறைவேண்டல் பற்றிய நமது பார்வையும் பகிர்வும் அன்னை மரியாவோடு நிறைவடைவது பொருத்தமானதே.

அன்னை மரியாவுக்கு எத்தனையோ சிறப்புப் பெயர்களைச் சூட்டி நாம் மகிழ்கிறோம். அவர் இறைவேண்டலின் தாய் என்பது அவற்றுள் ஒன்று. நாம் இறைவேண்டல் செய்வதற்கும், நமது எல்லாப் பணிகளையும் நிறைவாக ஆற்றுவதற்கும் நம் தாய் நமக்குத் துணை நிற்கிறார். திருவிவிலியம் காட்டும் உண்மை இதுவே. திரு அவையின் மரபும் இதுவே. நமது சொந்த அனுபவமும் இதுவே.

தொடக்கத் திரு அவையினர் இறைவேண்டலில் ஈடுபட்டபோது, அன்னை மரியாவின் துணை அவர்களுக்கு இருந்தது என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளது. “இயேசுவின் சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் (திப 1:14). அந்த இறைவேண்டலின் விளைவாகத்தான் தூய ஆவியார் பெருவிழாவின்போது அனைவரும் தூய ஆவியாரைக் கொடையாகப் பெற்றுக்கொண்டார்கள்.

தனதுஇறைவேண்டல்என்னும் மறைக்கல்வித் தொடரில் அன்னை மரியா பற்றி உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தைப் பருவத்திலிருந்தே மரியா இறைவேண்டலில் ஆர்வம் உடையவராக இருந்தார் என்றும், இளமைப் பருவத்தில் அமைதியிலும், இறைவனோடு உரையாடுவதிலும் அவர் நேரம் செலவழித்திருப்பார் என்றும் கூறுகிறார். வழக்கமான யூத மரபிலான மன்றாட்டுகளோடு, தன் வாழ்வில் இறைவன் செய்த அருஞ்செயல்களைப் போற்றிப் புகழும் இறைப்புகழ்ச்சியாளராகவும் (லூக் 1:47-55) அன்னை மரியா இருந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

இதைவிட மேலாக, “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக் 2:19) என்னும் பதிவின் வழியாக, மரியா ஓர் ஆழ்நிலைத் தியானி (Contemplative) என்பதையும் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் நம் திருத்தந்தை.

மேலும், மரியா மரபார்ந்த இறைவேண்டலில் மட்டும் ஈடுபடவில்லை; அவரது வாழ்வே ஓர்  இறைவேண்டலாக இருந்தது என்கிறார். மரியாவின் தாழ்ச்சியும், இறைத்திருவுளத்துக்குப் பணிதலும் இறைவேண்டலின் வடிவங்கள் என்பது திருத்தந்தையின் கருத்து.

நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்பதே மரியாவின் மிகச்சிறந்த இறைவேண்டல் என்று கூறி நம்மை நெகிழ வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் இறைப்பற்றை இழக்காமலிருப்பதும், இறைநம்பிக்கையில் நிலைத்திருப்பதும் எத்துணை பெரிய பேறு! “மரியா சிலுவையடியில் நின்றபோது இறைநம்பிக்கையில் உயர்ந்து நின்றார். அது மிகச்சிறந்த இறைவேண்டல் அல்லவா!” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களும் 2011-12-ஆம்  ஆண்டுகளில்இறைவேண்டல்பற்றிய தொடர் உரைகளைத் தனது புதன்கிழமை மறைக்கல்வி நேரங்களில் வழங்கியுள்ளார். நாற்பத்தைந்து வாரங்கள் தொடர்ந்து வழங்கிய இந்தத் தொடரில், ‘மரியாவின் இறைவேண்டல் உடனிருப்புஎன்னும் தலைப்பில் மரியன்னையின் இறைவேண்டலைப்பற்றிக் கற்பித்துள்ளார்.

மரியா இறைவனின் தாய் மட்டுமல்ல; திரு அவையின் தாயும்கூட அல்லவா! எனவே, மன்றாடும் திரு அவைக்கு மாதிரியாகவும் உடன் வேண்டுபவராகவும் திகழ்கிறார். நற்செய்தியாளர் லூக்காவின் பார்வையில் மீட்பின் வரலாறு மரியாவுடன் தொடங்கி, திருத்தூதர் பணிகள் நூலில் திரு அவையின் பிறப்பின்போது இறைவேண்டல் செய்த மரியாவுடன் நிறைவடைகிறது. வழிநெடுக மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிபவராகவும், அதனைப் பற்றிச் சிந்திப்பவராகவுமே காட்சி தருகிறார். எனவே, அந்தத் தாயை நாமும் பின்பற்ற வேண்டும் என்கிறார் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்.

திருத்தந்தையர்களைப் போலவே, திரு அவைப் புனிதர்களும் மரியாவைத் தங்களின் இறைவேண்டல் மாதிரியாகக் கொண்டனர். தங்கள் பணிகளையும் இறைவேண்டலையும் மரியன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.

அன்னை மரியாவிடமிருந்து இறைவேண்டல் செய்ய கற்றுக்கொண்டவர்கள் என்று சில புனிதர்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, புனித தோமினிக் மரியன்னையைக் காட்சியில் கண்டு, ‘வானதூதரின் வாழ்த்துஎன்னும் செபமாலையைத் தோற்றுவித்தார்.

லூர்து நகரில் காட்சி தந்த மரியன்னையோடு இணைந்து செபமாலையை வேண்டும் வியப்பான பேற்றைப் பெற்றவர் புனித பெர்னதெத். அன்னை காட்சி தந்த 18 முறையும் செபமாலை அவரின் கைகளில் இருந்தது. பெர்னதெத் செபமாலையை மன்றாடியபோது, மரியன்னை அமைதியில் அவரோடு இணைந்தார். திருத்துவப் புகழ் கூறப்பட்டபோது மரியன்னையும் இணைந்துகொண்டார் என்னும் வியப்பான செய்தி பெர்னதெத்தின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரியன்னையின்மீது கொண்ட பக்தியினால் அனைத்துப் புனிதர்களுமே தங்கள் இறைவேண்டல் வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டனர். இன்றளவும் பல கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கும் மரியன்னை மன்றாட்டுகளுக்கும் சிறப்பிடம் இருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே மரியா இறைவேண்டலின் தாயாக விளங்குகிறார்.

நமது இறைவேண்டல் வாழ்வுக்கும் நம் தாய் மரியா துணை நிற்பாராக! அவரது துணையும் பரிந்துரையும் நம் அருள் வாழ்வை, இறைவேண்டலை ஊக்கப்படுத்தட்டும்.

மரியன்னையைப் போலவே நாமும் தனி வேண்டலில் இறைப்புகழ்ச்சியும், பிறரோடு இணைந்து மன்றாடுவதில் பரிந்துரையும், நம் வாழ்வின் நிகழ்வுகளை ஆய்வு செய்து, சிந்திப்பதில் தியானியாகவும் வளர்வோமாக! இறைத்திருவுளத்திற்குப் பணிதலும் எளிமையும் தாழ்ச்சியும் பிறரன்பும் நம்மில் செழிக்கட்டும்.

கடந்த 50 வாரங்களாக இந்தத் தொடரை எழுத அருள்கூர்ந்த இறைவனைப் போற்றி மகிழ்கிறேன். யூபிலி 2025-க்கு ஆயத்தமாக இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு இறைவேண்டலின் பரிமாணங்களை விரிவாக எழுத என்னை ஊக்குவித்து, பெருமைப்படுத்திய நம் வாழ்வின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இறைவனுக்குத் திருவுளமானால், மற்றொரு தொடரில் மீண்டும் சந்திப்போம்.

news
ஆன்மிகம்
நவீனகால சவால்களின் இதயம் குடும்பம்

ஒத்துழைப்பான மற்றும் அமைதியான சிவில் சமூகங்களை உருவாக்குவது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். இதை முதலில் குடும்பத்தில் முதலீடு செய்வதன் மூலம் செய்யலாம். ஆணும்-பெண்ணும் இணைந்து உருவாக்கும் நிலையான ஒன்றிப்பே (stable union between a man and a woman) குடும்பம். சிறியதாயினும், இது உண்மையான சமூகம். எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது.”

இவ்வார்த்தைகளைக் கடந்த மே 16 வெள்ளியன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை 14-ஆம் லியோ பகிர்ந்துகொண்டார். திருத்தந்தையின் சர்ச்சைக்குரிய வார்த்தையாகஆணும்-பெண்ணும் இணைந்த நிலையான ஒன்றியம்என்ற சொற்றொடரில் கவனம் செலுத்தி டிரென்டிங் செய்தன உலக ஊடகங்கள். தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை-நம்பிகள் போன்றவர்களைக் காயப்படுத்திவிட்டார் என்றெல்லாம் பேசின. ஆனால் உண்மையென்ன?

மறைந்த திருத்தந்தையர்களான 13-ஆம் லியோ (ரேரும் நோவாரும்), புனித இரண்டாம் யோவான் பவுல் (ஃபாமிலியாரிஸ் கான்சோர்டியோ) மற்றும் பிரான்சிஸ் (அமோரிஸ் லெட்டீஷியா) இவர்களைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம்  லியோ அவர்களும் திரு அவையின் சமூகக் கோட்பாட்டில் குடும்பத்தை முக்கியமாகக் கருதுகிறார். “மனிதர் - ஆணும் பெண்ணும் - என்பதன் உண்மை ஒரு கலாச்சாரக் கட்டுமானம் அல்ல; மாறாக, இறைவனின் கொடையாகும். நம் குழந்தைகளைக் குழப்பும், இறைவனின் திட்டத்தைத் திரித்துவிடும் சித்தாந்தங்களை நாம் எதிர்க்கவேண்டும். குடும்பம் என்பது இறைவனால் வடிவமைக்கப்பட்ட வாழ்வு மற்றும் அன்பின் புனிதத் தலமாகும். இந்த அடித்தளத்தை மறுவரையறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லைஎன்கிறார்இந்நிலைப்பாட்டினை உறுதிப்படுத்த முன்னோடி திருத்தந்தையர்கள் மூவரின் சிந்தனைகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறார்.

தனதுரேரும் நோவாரும்பகுதிகள் 9-11-இல், திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘குடும்பம்என்பதன் கத்தோலிக்கப் பார்வை சோசலிசப் பார்வையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். குடும்பம் ஒருபுரோலெட்டேரியா நிறுவனம்மட்டுமே. இது முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடக்கப்படுகிறது. மதம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இவ்வமைப்பை அழித்து, அதற்குப் பதிலாகச் சமூகக் கட்டமைப்பான அரசுகள் குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சோசலிசம் வாதிட்டது. இதற்கு மாற்றாய், குடும்பம் என்பது இயற்கையான, மனித இயல்புக்கு அடிப்படையான அமைப்பு. இதுஇல்லத் திரு அவைச் சமூகம்.’ எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது. எனவே, இதற்குச் சொந்த உரிமைகள் உண்டு. அரசுகள், மாநிலங்கள் இந்த உரிமைகளை அளிப்பதில்லை. அங்கீகரிக்க மட்டுமே செய்கின்றன. குடும்பத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்துரொட்டித் தொழிற்சாலையாகசோசலிசம் மாற்றப் போராடிய தருணத்தில் திரு அவை குடும்பத்தைச் சுதந்திரமான ஆனால், சமூகத்துடன் இணைந்துஉணவு தயாரிக்கும் வீடாகமாற்றப் போராடியது. ஆனால், 1968-க்குப் பிறகு, குடும்பத்தின் அர்த்தமே கேள்விக்குள்ளாகியது. உலகமயமாக்கலின் தாக்கம் குடும்பக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தத் தொடங்கியது. அதன் நீட்சியாக இன்றுஎப்படியும் வாழலாம், யாரோடும் வாழலாம்என்கிற அணுகுமுறைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இம்மாபெரும் சவால்களை உற்றுநோக்குகையில், நவீனகாலச் சவால்களின் இதயம் குடும்பம் எனலாம். இங்குதான் மிக முக்கியமான போர் நடக்கிறது என்பதைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஆழமாகப் புரிந்துகொண்டார். எனவே, குடும்பங்களுக்காக அதிகம் உழைத்தார்.

தனதுபாமிலியாரிஸ் கான்சோர்டியோவில் குடும்பத்தைசமூகத்தின் அடிப்படைச் செல்என்று ஒரு தீர்க்கதரிசன பார்வையை மொழிந்தார். இப்போதனையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிசும் தனது திருத்தூதுப் பணியில் குடும்பத்தை மையமாக வைத்தார். இரண்டு ஆயர் மாமன்றங்களைக் கூட்டினார். ‘அன்பின் மகிழ்ச்சி (Amoris Laetitia) என்ற திருத்தூது ஊக்கவுரை வழியாகக் குடும்பங்களின் அனுபவங்களையும் சவால்களையும் கருத்தில் கொண்டு, தெளிந்து தேர்ந்து செயல்படுவது, உடன் பயணிப்பது போன்ற மறைபரப்புத் திட்டங்களை முன்மொழிந்தார்.

புதிய திருத்தந்தையும் குடும்பத்தின் முன்னுரிமையை அரசுகள், அவற்றின் மாநில அமைப்பு முறைகள் மற்றும் உலகமய சந்தைப் பொருளாதாரத்திற்கு மேலானதாக மீண்டும் உயர்த்திப் பிடிக்கிறார். நேற்றும் இன்றும் என்றுமான சமூகப் பிரச்சினையின் வேர்கள் குடும்பத்திலிருந்துதான் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

இவ்விதம் குடும்பத்தைத் தனிப்பட்ட மற்றும் ஆன்மிக விவாதத்தின் மையமாக மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் விவாதத்தின் இதயத்திலும் மீண்டும் வைக்கிறார்; குடும்பத்தை உள்ளார்ந்த மற்றும் தனிப்பட்டத் தேர்வுகளின் கோளத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான அவசரத்தேவையை முன்னெடுக்கிறார்.

இதன் முத்தாய்ப்பாகக் கடந்த ஜூன் 1 அன்று நடந்த குடும்பங்களின் யூபிலி அமைந்திருந்தது.

கிறிஸ்துவைச் சந்திப்பதன் வழியாகத் தீமை மற்றும் மரணத்தின் நீரிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தின்மீனவராகநாம் மாறவேண்டும்என்கிற திருத்தந்தையின் அழைப்பை வாழ்வாக்குவோம்.

news
ஆன்மிகம்
ஆற்றல் மையங்கள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 17)

அன்புச் செல்வன்:தந்தையே! பிறப்புநிலைப் பாவம் என்பது மனம் தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் அந்நியப்பட்டு, புறம் நோக்கிச் சென்று, தன் வாழ்வின் மகிழ்வைத் தேடுவதற்கான வேட்கை என்று கூறினீர்கள். இத்தகைய பிறப்புநிலைப் பாவத்தைதான் திருமுழுக்கு அருளடையாளம் கழுவுகின்றது என்று நாம் நம்புகின்றோம். அது எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து எடுத்துரைக்க முடியுமா?”

அருள்பணி:இங்கு ஆற்றல் மையங்கள் (energy centres) குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நம் உடலில் ஏழு ஆற்றல் மையங்கள் உள்ளன. இந்த ஏழு இடங்களும் உடலின் நரம்பு மண்டலத்தோடு மிக நெருங்கியத் தொடர்பு உள்ளவையாக இருப்பதோடு, உடல் மற்றும் மனநலனைப் பேணுவதற்குக் காரணமான ஏழு சுரப்பிகளோடு (glands) தொடர்புடையதாக இருக்கின்றன. முதலாவது ஆற்றல் மையமானது, நம் உச்சந்தலையில் உள்ளது. குழந்தைகளின் தலையைப் பார்த்தோம் என்றால் அவர்களது உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போன்ற ஒரு வட்டமான பகுதி பள்ளமாக இருப்பதையும், அதைத் தோல் மூடி இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதுவே, உச்சந்தலை ஆற்றல் மையம். இந்த ஆற்றம் மையம் மூளையின் மேற்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியோடு (pineal gland) தொடர்பு உடையது.

இரண்டாவது ஆற்றல் மையம், நம் புருவ மத்தியில் உள்ளது. இது பிட்யூட்டரி சுரப்பியோடு (pituitary gland) தொடர்புடையது. மூன்றாவது ஆற்றல் மையம், நம் தொண்டைப்பகுதியில் உள்ளது. இது தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. நான்காவது ஆற்றல் மையம், நம் இதயத்திற்கு அருகில் உள்ளது. இதுஇதய ஆற்றல் மையம் (Heart Center) என்று அழைக்கப்படுகிறது. இது தைமஸ் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஐந்தாவது ஆற்றல் மையம், நம் தொப்புளுக்கு அருகில் உள்ளது. இது கணையம் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஆறாவது ஆற்றல் மையம், நம் பாலியல் உறுப்போடு தொடர்புடையது. இது பாலியல் சுரப்பிகளான டெஸ்ட்ரஜன் மற்றும் ஈஸ்ட்ரஜன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஏழாவது ஆற்றல் மையம், நம் முதுகுத் தண்டு வடம் முடியும் இடத்தில் உள்ளது. இது அட்ரினல் சுரப்பியோடு தொடர்புடையது.”

அன்புச் செல்வன்:தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது, இந்திய ஆன்மிக மரபில் கூறப்படும் ஏழு சக்கரங்கள் (seven chakras) என்பனவற்றிற்கும், இந்த ஆற்றல் மையங்களுக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது.”

அருள்பணி:உண்மைதான்! இந்திய ஆன்மிகத்தின்படியும் இன்றைய அறிவியலின் கூற்றுப்படியும், ஒரு மனிதரின் மேற்கண்ட ஏழு ஆற்றல் மையங்களும் சிறப்பாகச் செயல்படும்போது மேற்கண்ட ஏழு சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. இச்சுரப்பிகள் சிறப்பாகச் செயல்படும்போது நம் வாழ்வு முழு மனித வாழ்வாக மாற ஆரம்பிக்கிறது.”

அகஸ்டின்:ஆச்சரியமாக இருக்கிறது தந்தையே! இந்த ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளின் செயல்பாடுகள் குறித்தும் கொஞ்சம் கூறுங்கள்...”

அருள்பணி:ஒவ்வோர் ஆற்றல் மையமாக எடுத்துச் சிந்திக்கலாம். உச்சந்தலை ஆற்றல் மையமானது பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான இணைப்புப் பாலமாகக் கருதப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஆற்றல் அபரிமிதமாக நமக்குள் நுழைவது இந்த இடத்தின் வழியாகத்தான். இந்த ஆற்றல் மையம் பீனியல் சுரப்பியோடு தொடர்புடையது. அறிவியல் ஆராய்ச்சிகளின் பின்னணியில் பார்க்கும்போது நம் மனத்தை அமைதிப்படுத்தி, எண்ணங்களைக் குறைத்து மனத்தைத் தளர்வான நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடிய தன்மை பீனியல் சுரப்பிக்கு உண்டு. தியானத்தின்போது மனத்தின் எண்ணங்களைக் குறைத்து, உடலைத் தளர்வான நிலைக்குக் (relaxed state) கொண்டு செல்வதில் பீனியல் சுரப்பியின் பங்கு அபரிமிதமானது. நாம் இரவில் ஆழ்ந்து தூங்குவதற்கு ஏதுவாக மெலாட்டானின் (melatonin) என்ற வேதிப்பொருள் சுரப்பதற்குக் காரணமாக இருப்பதும் இந்தப் பீனியல் சுரப்பியே! இந்த ஆற்றல் மையம் அடைபட்டுக் கிடக்குமென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எப்பொழுதுமே தனித்துவிடப்பட்டு, தனிமையால் துன்புறுவது போன்ற உணர்வு நம்மிடம் இருக்கும்.”

அன்புச் செல்வன்:தந்தையே, டெகார்த்தே என்ற தத்துவயியலாளர் ஆன்மாவிற்கும், பீனியல் சுரப்பிக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார். ஆன்மாவும் உடலும் பீனியல் சுரப்பியா(யி)லே ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது அவரது கருத்து.”

மார்த்தா:தந்தையே! இந்த மையம் அடைபட்டுக் கிடப்பது எதனால்?”

அருள்பணி:ஏராளமான எண்ணங்கள் நம் மனத்தில் இடையறாது ஓடிக்கொண்டிருப்பது முதல் காரணம். மனம் ஏராளமான எண்ணங்களை உருவாக்கி சஞ்சலத்தில் இருக்கும்போது பிரபஞ்சத்தின் ஆற்றலும், கடவுளின் அருளும் நமக்குள் பாயாது என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, ‘நான்என்ற அகந்தையோடும், ‘எனதுஎன்ற பற்றோடும், ‘எனக்குஎன்ற சுயநலத்தோடும் வாழ்கின்றபோது நம் வாழ்வு முழுக்க முழுக்க தன்னை மையப்படுத்திய வாழ்வாக மாறிவிடுகின்றது. அகந்தையோடு வாழ்கின்ற மனிதர் கடவுளிடமிருந்து அந்நியமாகி விடுகிறார்.”

கிறிஸ்டினா:தந்தையே, அடுத்தடுத்த ஆற்றல் மையங்கள் குறித்துக் கூறுங்களேன்?”

அருள்பணி:புருவ மத்தியில் உள்ள இரண்டாவது ஆற்றல் மையமானது இந்திய ஆன்மிகத்தில்நெற்றிக்கண்என்றும், ‘மூன்றாம் கண்என்றும் அழைக்கப்படுகிறது. வாழ்வைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும் தெளிவான, சரியான புரிதலைக் கொண்டிருப்பதற்கு இந்த ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் நம் புரிதல் குறைவுபட்ட ஒன்றாக இருக்கும். குறைவுபட்ட புரிதலில் இருந்து வரும் செயல்பாடுகளும், வாழ்வியல் அணுகுமுறைகளும் அரைகுறையாக இருக்கும். இந்த ஆற்றல் மையம் பிட்யூட்டரி சுரப்பியோடு தொடர்பு உடையது. பிட்யூட்டரி சுரப்பியானது நம் நாளமில்லா சுரப்பு மண்டலத்தில் தலையாயச் சுரப்பியாகக் (master gland) கருதப்படுகிறது. உடலில் நடைபெறும் ஏறத்தாழ எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிட்யூட்டரி சுரப்பிக்கு உண்டு. இது தமிழில்கவச்சுரப்பிஎன்று அழைக்கப்படுகிறது. தொண்டைப்பகுதியில் உள்ள ஆற்றல் மையம் நம் தொடர்புகொள்ளும் திறன் (Communi
-cation
), கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் (expression), உண்மைக்கான தேடல் ஆகியவற்றோடு தொடர்புடையதுஇந்த ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்படும்போது பேச்சில் தெளிவும், தொடர்பு கொள்ளுதலில் உண்மைத்தன்மையும் இருக்கும். இவ்வாற்றல் மையம் தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. தொண்டைப்பகுதியில் அமைந்திருக்கும் இச்சுரப்பி உடலின் வளர்ச்சிதை மாற்றம் (metabolic process), உடலின் செரிமானம், மூளைவளர்ச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நெஞ்சுப்பகுதியில் அமைந்திருக்கும் இதய ஆற்றல் மையம் அன்பு, மன்னிப்பு, திறந்த மனம், பிறர்மீதான நம்பிக்கை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய சுரப்பி தைமஸ். மருத்துவயியலின் கருத்துப்படி தைமஸ் சுரப்பியானது உடலிலிருந்து நோயை விரட்டுகின்ற ‘T’ Blood அணுக்களை உருவாக்குகிறது. இவ்வாறு உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குதலில் இந்த ஆற்றல் மையமும் தைமஸ் சுரப்பியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தொப்புள் பகுதியில் உள்ள ஆற்றல் மையம் உடலின் ஆற்றல் அளவு (energy level), செரிமானமடைந்த உணவை உள்வாங்கும் திறன், சுய அடையாளம் ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையமானது கணையம் சுரப்பியோடு தொடர்புடையது. உடல் நலனைப் பேணுவதில் இந்த ஆற்றல் மையத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. உணவுச் செரிமானம், உணவை ஆற்றலாக மாற்றுதல், உடலில் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்திருத்தல் போன்ற பணிகளைத் தொப்புள் ஆற்றல் மையமும் கணையமும் இணைந்து செய்கின்றன. பாலியல் உறுப்போடு தொடர்புடைய ஆற்றல் மையம் படைப்புத்திறன், இன்பம், பாலியல் வேட்கை போன்றவற்றோடு தொடர்புடையது. இவ்வாற்றல் மையத்தின் செயல்பாடானது இந்தப் பகுதியில் உருவாக்கப்படும் டெஸ்ட்ரஜன், ஆன்ட்ரஜன், ஈஸ்ட்ரஜன் சுரப்பிகளோடு தொடர்புடையது.

ஏழாவது ஆற்றல் மையம் முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் உள்ளது. இது உடலின் அடிப்படைத் தேவைகளான உண்ணுதல், உறங்குதல், தற்காப்பு, சமநிலைத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய அட்ரினல் சுரப்பியானது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கானசண்டையிடுதல் அல்லது சரணடைதல்என்ற வழிமுறையை நமக்குள் முன்னெடுக்கிறது.”

அகஸ்டின்: ஏழு ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகள் குறித்தும் தெளிவைக் கொடுத்ததற்கு நன்றி தந்தையே! இவற்றுக்கும், திருமுழுக்கு அருளடையாளத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”

அருள்பணி:அடுத்து நாம் சந்திக்கும்போது இது குறித்துப் பேசுவோம்.” 

(தொடரும்)

news
ஆன்மிகம்
இயேசுவும் திருத்தந்தை பிரான்சிசும் (நீங்கா நினைவுகள் – 03)

இயேசுவின்வழியும் உண்மையும் வாழ்வும் நானே (யோவா 14:6) என்ற இறைவார்த்தையை வாழ்வாக்கியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் சீடராகப் பிரதிபலித்த திருத்தந்தை பிரான்சிஸ் மாமனிதர்; மங்காத விளக்கு; இயேசுவின் பாதச்சுவடுகளை இன்பமாகப் பின்பற்றியவர்; கருணை உள்ளம் கொண்ட கடவுளின் படைப்பாற்றல்!

கடவுளை அன்பால் உணரலாம்; இரக்கத்தினால் அறியலாம்; அன்பையும் இரக்கத்தையும் இரண்டறத் தன் துறவற வாழ்க்கையில் துணிவோடு பின்பற்றியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ஆன்மிகத்தில் ஆழமானதால் அன்பால் உலகை ஆண்டவர். அவரை நினைக்காத உள்ளம் இல்லை, உணராத இல்லமும் இல்லை.

கொரோனா என்ற கொள்ளை நோய் உலகைத் தாக்கியபோது திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவருக்காகவும் நம் மீட்புக்காகவும் புனித பேதுரு சதுக்கத்தில் விடாத மழையிலும் செபித்தார் என்பதற்கு நாங்களே சாட்சிகள். கடவுள்மேல் வைத்த பேரன்பாலும் நம்பிக்கையினாலும் அனைவரையும் ஆண்டவர்பால் அரவணைத்து, இறைவன்மீது நம்பிக்கையை ஆழப்படுத்தும் வகையில் காணொளியில் திருப்பலியை நிறைவேற்றிதிருவிருந்துதான் நமக்கு அருமருந்துஎன்று ஒவ்வொரு நாளும் இறைப்பிரசன்னத்தில் வழிநடத்தியவர். இயேசுவின் விழுமியங்களான செபம், அன்பு, இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை, தாழ்ச்சி இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, நம் இதயத்தில் விதைக்கப்படுகிறார்கள். பல நூற்றாண்டு இம்மண்ணிலே பலராலும் போற்றப்பட இருப்பவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக (மத் 6:9) என்று இயேசு தந்தையை நோக்கிச் செபித்ததுபோல திருத்தந்தை பிரான்சிசும் செபத்தின் மூலம் கடவுளின் தயவையும் வழிகாட்டுதலையும் நாடினார். திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தை வாழ்வின் ஆதாரமாகப் பார்த்தார். செபத்தின் மூலம் மனிதர்கள் கடவுளின் உதவியையும் ஞானத்தையும் பெறமுடியும் என நம்பினார். சிறியோர் முதல் பெரியோர் வரை இறையன்பை எடுத்து இயம்பியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அகில உலகத்தை அன்பால் அரவணைத்தவர்; அன்புக்கும் அடிபணியாத உயிர்கள் எதுவுமில்லை என்பதை வாழ்வாக்கியவர்; இயேசுவின் முதன்மையான கட்டளையைக் கடைப்பிடித்தவர்; “முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே, தலைசிறந்த முதன்மையான கட்டளை (மத் 22:37); “உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக (மத் 22:39) என்ற இந்த இரண்டு கட்டளைகளுக்கும் சொந்தக்காரர். தன் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் கட்டளைகளைக் கடைப்பிடித்து இறைவனின் அருள்கரம் பிடித்தவர்.

ஏழை-எளியவர்கள்மீது இரக்கம் கொண்டார். பாவிகளின்மீது இரக்கம் கொண்டார். கைம்பெண்கள், கைவிடப்பட்டவர்கள்மீது இரக்கம் கொண்டார். சிறையில் வசித்தவர்கள்மீதும் இரக்கம் கொண்டார்தந்தையாம் கடவுளிடமும் இயேசுவிடமும் பெற்ற இரக்கத்தைத் தூய ஆவியின் துணையோடு செயல்படுத்தினார்ருவாண்டா நாட்டில் நடந்த இனப் படுகொலைக்காக மன்னிப்புக் கேட்டார். பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களுக்காக மன்னிப்புக் கேட்டார்.

ஆடம்பரத்தைத் தவிர்த்து ஏழைகளுடன் தொடர்புகொண்டு பொதுமக்களுடன் எளிதாகப் பழகிப் பணிவை வெளிப்படுத்தினார். எளிமையான வாழ்க்கைமுறை, சமூகத்துடன் தொடர்பு, எளிய மொழிகளைப் பேசுதல், சகோதரத்துவத்தை வலியுறுத்தல், மற்றவர்களைச் சார்ந்திருப்பது போன்ற செயல்கள் மூலம் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகப் பணிவு மற்றும் எளிமை ஆகியவற்றிற்கு நல்ல உதாரணமாக விளங்கினார். நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டுத் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்ட நம் திருத்தந்தை உயிர்ப்பில் இயேசுவோடு இணைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசுவார் என்ற நம்பிக்கையோடு நாம் நம்முடைய நம்பிக்கைப் பயணத்தைத் தொடர்வோம்.