news
ஆன்மிகம்
தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 49)

நமது இறைவேண்டல் கடவுளின் கொடை! அதே வேளையில் நமது முயற்சியும்கூட என்னும் இறைவேண்டல் பற்றிய ஒரு முகாமையான செய்தியைக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியில் (கதிம 2725) வாசிக்கிறோம். ஆம், கடவுளின் அருளின்றி நம்மால் இறைவேண்டல் செய்ய இயலாது. எனவே, நாம் தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்யவேண்டும். திரு அவையின் நெடிய மரபின்படி, செபமாலை போன்ற பல மன்றாட்டுகளும், வழிபாட்டு நிகழ்வுகளும் தூய ஆவியாரின் அருள் வேண்டியே தொடங்குகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த மரபு திருவிவிலியத்திலிருந்துதான் தோன்றியது என்பதை மறந்துவிடக்கூடாது. “எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள் (எபே 6:18) என்பது தொடக்கத் திரு அவையினருக்குப் புனித பவுலடியார் தந்த தெளிவான போதனை. அதனையே, “தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள் (யூதா 1:20) என்னும் யூதாவின் திரு மடல் அழைப்பும் உறுதி செய்கிறது.

ஏன் நாம் தூய ஆவியாரின் துணையுடன் இறைவேண்டல் செய்ய வேண்டும்? இதற்கான விடையை இயேசுவே தந்துள்ளார்: “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார் (யோவா 14:26) என்பது இயேசுவின் வாக்குறுதி. “இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார் (திப 1:1) என்றுதான் திருத்தூதர் பணிகள் நூலே தொடங்குகிறது.

எனவே, இயேசுவின் அறிவுறுத்தலின்படி திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவர்களும் தூய ஆவியாரின் துணையோடுதான் - இறைவேண்டல் உள்பட - அனைத்தையும் செய்தனர். குறிப்பாக, இறைவேண்டலுக்குத் தூய ஆவியாரின் துணை அவசியம் என்பதைப் பவுலடியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார் (உரோ 8:26).

கடவுளைஅப்பா, தந்தாய்என அழைக்கும் உரிமையை இயேசு வழியாகத் தூய ஆவியார்தாம் பெற்றுத்தருகிறார் என்னும் இறையியல் உண்மையைநீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவிஅப்பா, தந்தையேஎனக் கூப்பிடுகிறது (கலா 4:6) என்னும் புனித பவுலடியாரின் சொற்களிலிருந்து உணர்கிறோம். தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்வதாகப் பவுலே சான்று பகர்ந்துள்ளார்: “நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார். என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை (1கொரி 14:14) என்பது அவரது வாக்குமூலம்.

மேலும், இறைவேண்டல் என்பது கடவுளின் அருள்; அதேவேளையில் நமது முயற்சியும்கூட என்பதற்குப் பவுலடியாரின்தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன் (1கொரி 14:15) என்னும் சொற்கள் வலு சேர்க்கின்றன.

தாவீதின் புகழ்பெற்ற 51-ஆம் திருப்பாடலில்என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும் (திபா 51:15) என்னும் மன்றாட்டை வாசித்து நாம் வியப்படைகிறோம். இறைவனுக்குப் புகழ் சாற்ற வாயை நாமன்றோ திறக்க வேண்டும்? பின் ஏன் தாவீது கடவுளிடம் மன்றாடுகிறார்? ஆம், அவரது புகழைப் பறைசாற்றுவதற்கும் அவரது உதவி தேவை. கடவுளின் அருளின்றி நாம் வாய் திறந்து மன்றாட முடியாது என்னும் உண்மையைத் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான், அதே திருப்பாடலில்உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும் (திபா 51:11) என்று கெஞ்சுகிறார்.

எனவே, தூய ஆவியாரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அவரே நமக்கு இறைவேண்டல் ஆர்வத்தைத் தருகிறார். எப்படி இறைவேண்டல் செய்வது எனக் கற்றுத் தருகிறார். இறைவேண்டல் செய்ய மனமும் உடலும் தடையாக வரும்போது, தடைகளை உடைத்து நமக்கு இறைவேண்டலுக்கான ஆற்றலைத் தருகிறார். அவரே நமது இறைவேண்டலின் சொற்களையும், மனத்தின் நோக்கத்தையும் புனிதப்படுத்துகிறார். நமது வாழ்வும் இறைவேண்டலும் முரண்படாதபடி அவரே பாதுகாக்கின்றார். புதுமையாகவும் தேவைக்கேற்பவும் மன்றாட நமக்குப் படைப்பாற்றலையும் அவரே தருகின்றார்.

எனவேதான், திரு அவையின் மாபெரும் புனிதர்கள் அனைவரும் தூய ஆவியாரின் துணையை நாடினர். தூய ஆவியாருக்கென்றே சிறப்பு மன்றாட்டுகளையும் இயற்றினர். புனித அகுஸ்தினாரின்என்னுள் சுவாசியும் தூய ஆவியாரே, புனித ஜோஸ் மரிய எஸ்கிரிவா இயற்றியஎன் மனத்தை ஒளிரச் செய்யும் தூய ஆவியாரே, இரபானுஸ் மவுருஸ் இயற்றியவாரீர் படைத்திடும் தூய ஆவியாரே (Veni Creator Spiritus) போன்றவை புகழ்பெற்ற தூய ஆவியாருக்கான மன்றாட்டுகள்.

நாமும் நாள்தோறும் தூய ஆவியாரை நோக்கி மன்றாடுவோமாக. அவரது துணையோடு இறைவேண்டல் செய்வோமாக.

news
ஆன்மிகம்
திரு அவையும் ஆலயங்களும்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலும், அதற்கு முன்னும் திருத்தலங்களைப் பற்றிய திரு அவை ஆசிரியப் படிப்பினைகள் இல்லை. இக்குறையைப் போக்கியவர் திருத்தந்தை 6-ஆம் பவுல்.  திருத்தலங்களின் அதிபர்களுக்கு வழங்கிய தனது வருடாந்திரச் சொற்பொழிவுகளில் திருத்தலங்கள் ‘ஆன்மிக மருத்துவங்கள் (‘Spiritual clinics, 1965) ‘அ (‘Centres of Spiritual Refreshment,1970) என்றும் அவர் கூறியுள்ளார்.

1983-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட திரு அவைச் சட்டத் தொகுப்பில் திருத்தலங்களைப் பற்றி முதன் முதலாக ஐந்து சட்டங்கள் (திச 1230-1234) இடம் பெற்றுள்ளன. அதன்பிறகு 1999, மே 8 தேதியிட்ட ஆவணத்தில் நாடோடிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கான திருத்தந்தை அருள்பணிப் பேரவை திருத்தலங்களைப் பற்றிய விரிவான படிப்பினைகளை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் 2001, டிசம்பர் 17-இல் வெளியிட்ட ‘பொதுமக்கள் பக்தி மற்றும் திருவழிபாடு (Popular piety and the liturgy) என்ற வழிகாட்டி ஆவண இறுதிப் பகுதியில் (எண்: 261-287) திருத்தலங்களின் இயல்பு பற்றிச் சிறப்பாக விளக்கியுள்ளது. மேலும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) 2024, மார்ச் 19 தேதியிட்ட ‘தேசியத் திருத்தலங்கள் நிலையைப் பெறுவதற்கான விதிமுறைகள் (Norms for the designation of national shrines) என்ற ஏட்டில் திருத்தலங்களுக்கான முக்கிய நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.

இந்நிலையில் பங்கு ஆலயம் அல்லது அதன் கிளைக் கோவில்களுள் ஒன்றை ‘திருத்தலம் என்று தன்னிச்சையாக அறிவித்து, அதன் பெயர் கொண்ட அருள் ஆதரவாளரைக் (patron) குறித்து நவநாள், ஆராதனை, திருப்பலி, அன்னதானம் போன்றவை நடப்பதாக நவீன ஊடகங்களில் விளம்பரம் செய்து ‘பக்த கோடிகளை அழைக்கும் போக்கு சில அருள்பணியாளர்களிடையே அண்மைக்காலமாகப் பரவலாகி வருகிறது.

இவ்வாறு தன்னிச்சையாக ஓர் ஆலயத்தை ‘திருத்தலம் என்று அறிவிக்கலாமா? திருத்தலங்களுக்கும் மற்ற ஆலயங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திருத்தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் யாவை? போன்ற கேள்விகளை இக் கட்டுரை விளக்குகிறது.

ஆலயங்களின் வகைகள்

சர்ச் (church) என்ற ஆங்கிலச் சொல் கிறித்தவ இறைமக்களின் சமூகமான திரு அவையையும், அது குழுமமாகக் கூடி வழிபடும் ஆலயத்தையும் குறிக்கிறது. ஆலயம் ‘கோயில் அல்லது ‘கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திரு அவையில் ஆலயங்கள் பல வகைப்படும்.

1) பங்கு ஆலயங்கள் (Parish churches)

ஒரு மறைமாவட்டத்தில் நிலையான முறையில் நிறுவப்படும் நம்பிக்கையாளர்களின் ஒரு குறிப்பிட்ட குழுமம் இறைவனை வழிபடும் இடம் பங்கு ஆலயம் ஆகும். இங்கு அருளடையாளங்கள் குறிப்பாக, திருப்பலிக் கொண்டாட்டங்கள் மற்றும் அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இதே நோக்கத்திற்காகப் பங்கில் கிளை (sub stations churches) அல்லது வழிபாட்டுக்கூடங்கள் (oratories) அமைக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆலயத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்படுகிறது. மூவொரு இறைவன், கிறிஸ்து ஆண்டவர் (பிறப்பு, குழந்தைப் பருவம், உருமாற்றம், உயிர்ப்பு, மீட்பு உள்ளிட்ட மறையுண்மைகள்), அன்னை மரியா, திருத்தூதர்கள், புனிதர்கள், வானதூதர்களின் பெயர் ஒன்று அதில் இடம்பெறும்; அப்பெயர் அவ்வாலயத்தின் அருள் ஆதரவாளராகக் கருதப்படும்; அதன் நினைவாக விழாக்களும் எடுக்கப்படும்.

2) சிற்றாலயங்கள் (Chapels)

தனியார் வசதிக்காகத் தலத்திரு அவை மேலதிகாரியின் அனுமதியுடன் இறைவழிபாட்டிற்காக அமைக்கப்படுபவை சிற்றாலயங்கள் ஆகும். அங்குத் திருப்பலிகள் மற்றும் புனிதக் கொண்டாட்டங்களை நிறைவேற்றலாம். ஆயர் இல்லம், அருள்பணியாளர் பயிற்சியகங்கள். அர்ப்பண வாழ்வுக் குழுமங்களின் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் சிற்றாலயங்கள் உள்ளன.

3) பெருங்கோவில் (Basilica)

முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொதுக் கட்டடங்களைக் குறிக்கும் ‘பசிலிக்கா என்ற கிரேக்கச் சொல் காலப்போக்கில் முக்கியக் கிறித்தவப் பெருங்கோவில்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் பெருங்கோவிலாக உயர்த்தப்பட முடியும். அதில் ‘மேஜர் பசிலிக்கா மற்றும் ‘மைனர் பசிலிக்கா என்று இருவகை உள்ளது. மேஜர் பசிலிக்கா என்பது திருத்தந்தையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. உரோமை நகரில் உள்ள திருத்தூதர் பேதுரு (வத்திக்கான்), திருத்தூதர் யோவான் (இலாத்தரன்), திருத்தூதர் பவுல் (மதில்களுக்கு வெளியே), புனித மரியா மஜோரே ஆகிய நான்கு பெருங்கோவில்கள் மட்டுமே ‘மேஜர் பசிலிக்கா என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அறியப்படுகின்றன. ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகளை ‘திரு அவையின் இல்லம் (Domus Ecclesiae) என்ற 1989, நவம்பர் 9 தேதியிட்ட ஆவணத்தில் இறை வழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் வழங்கியுள்ளது. அந்த விதிமுறைகளின்படி சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள ஓரியூர் திருத்தலம் அண்மையில் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4) பேராலயம் (Cathedral)

ஒரு மறைமாவட்ட ஆயரின் இருக்கை (Cathedra) உள்ள ஆலயம் அந்த மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில் அல்லது பேராலயம் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆயர், அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு அருளடையாளங்கள், அவர்களது அடக்கச் சடங்குகள் மற்றும் மறைமாவட்டம் தழுவிய சிறப்புத் திருச்சடங்குகள் நடைபெறுகின்றன.

5) திருத்தலங்கள் (Shrines)

திருத்தலம் என்பது நம்பிக்கையாளர்கள் திரளான எண்ணிக்கையில் திருப்பயணம் செல்கின்ற ஓர் ஆலயம் அல்லது மற்றொரு புனித இடம் ஆகும். அப்புனிதத்திற்குக் குவிமையமாக இருப்பவை அங்குள்ள புனிதரின் திருவுருவம், அருளிக்கம் (relic), உருவ ஓவியம் (icon), காட்சி அனுபவங்கள், புதுமைகள் போன்றவை ஆகும். அவற்றின் மூலம் வாழும் கடவுளின் நினைவு, உடனிருப்பு மற்றும் வரலாற்றில் அவரது இடையீட்டின் குறியீடாக அத்திருத்தலம் பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு பங்கு ஆலயத்திற்கு இருப்பதுபோல் குறிப்பிட்ட இறைமக்களோ அவர்களுக்குரிய அருள்பணிகளை நிறைவேற்றுதலோ திருத்தலத்திற்கு இல்லை. மாறாக, ஆன்ம, உடல், மன ரீதியான புத்துணர்வும் புதுப்பித்தலும் நலமும் நாடும் அனைவருக்கும் உரிய இலக்கு இடமாகத் திருத்தலம் கருதப்படுகிறது.

news
ஆன்மிகம்
இரக்கமும் இறைவனும் (சதுக்கத்தின் சப்தம் – 2)

இன்று நாம் அனைவரும் ஒலி கடிக்கும், அமைதியை ஆரவாரத்தில் தேடும் அலை யழுந்திய கப்பலென, ஒலி ஒழுங்குகளை உடைக்கும் யுகத்தில் வாழ்கிறோம்.

ஒரு சிக்கலான சூழ்நிலை உள்ளடக்கிய ஒரு விரைவான பந்தயத்தில் பயணிக்கின்ற நம்மை, எல்லாக் காலத்திலும் மிகவும் பிரபலமான திருவிவிலியப் பகுதி ஒன்றை நினைவுகூர திருத்தந்தை லியோ அவர்கள் தனது இரண்டாவது புதன் மறைக்கல்வி உரையில்நல்ல சமாரியன்உவமை குறித்து எடுத்துரைத்தார்.

போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற திருச்சட்ட அறிஞரின் கேள்விக்கு, “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக (இச 6:5); “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக (லேவி 19:18) என்ற இயேசுவின் பதிலுக்குத் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்ளும் பொருட்டுஎனக்கு அடுத்திருப்பவர் யார்?’ என்று கேட்கும் திருச்சட்ட அறிஞரின் வார்த்தைகளைக் கொண்டு திருத்தந்தை லியோ பகிர்ந்து கொண்டதாவது:

இன்று நான் ஒரு நிபுணர், அறிவுள்ள நபர், சட்டத்தின் மருத்துவர் பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன், இருப்பினும் அவர் தனது கண்ணோட்டத்தை மாற்றவேண்டும், ஏனென்றால் அவர் தன்னை மையமாகக் கொண்டு மற்றவர்களைக் கவனிக்கவில்லை (லூக்கா 10:25-37).

உண்மையில் நிலைவாழ்வு எந்த வழியில் மரபுரிமையாக வருகிறது என்று அவர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார். ஆனால், இந்தக் கேள்விக்குப் பின்னால் ஒருவேளை மறைக்கப்பட்டுள்ள கவனத்தின் தேவையே துல்லியமான கேள்வியாக இருக்கலாம். இயேசு விளக்குமாறு அவர் கேட்கும் ஒரே வார்த்தைஅருகில் இருப்பவர்என்று பொருள்படும்அடுத்திருப்பவர்என்ற சொல்.

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

புதுமை மற்றும் ஆச்சரியத்தைப் பொறுத்தவரை நல்ல சமாரியனின் உவமை சிறந்தது. கதையின் போக்கில், அடித்து நொறுக்கப்பட்ட மனிதனைப் பார்த்து குருகடந்து சென்றார்என்று பார்க்கிறோம். அதேபோல், லேவியனும்கடந்து சென்றான்.’ திருச்சட்ட அறிஞரைப் போலவே இந்த இருவருக்கும் சட்டம் தெரியும், அவர்கள் தூங்கும்போது கூட அதை ஓதுவார்கள். ஆயினும்கூட, ஒரு சமாரியன் எந்தக் கற்பனையிலும்அடுத்திருப்பவர்என்று அழைக்க முடியாதவர். ஆனால் உவமையில், இச்சமாரியனே பாதிக்கப்பட்டவர்மீது இரக்கம் கொள்கின்றார்.

இரக்கம் என்பது மனிதகுலத்தின் வேள்வி!

விசுவாசிகளாக இருப்பதற்கு முன், நாம் மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். இந்த இரக்கம் ஒரு பிச்சைக்காரனின் கிண்ணத்தில் ஒரு நாணயத்தை வீசுவது போன்ற ஒரு தொண்டு செயல் மட்டுமல்ல, இது உறவுகளை உள்ளடக்கியது. சமாரியன், “அவரைக் கவனித்துக்கொள்ளுங்கள், நான் திரும்பி வரும்போது கூடுதல் செலவுகளைச் சரிசெய்வேன்!” என்று கூறுகிறார்.

நல்ல சமாரியனின் உவமையில் குருவும் லேவியனும் கேட்ட முதல் கேள்வி என்னவென்றால், ‘நான் இந்த மனிதனுக்கு உதவுவதை நிறுத்தினால், எனக்கு என்ன நடக்கும்?’ ஆனால், அவரது அக்கறையின் தன்மையால் நல்ல சமாரியன் கேள்வியை மாற்றினார், ‘நான் இந்த மனிதனுக்கு உதவுவதை நிறுத்தினால், அவனுக்கு என்ன நடக்கும்?’

ஆனால்கடந்து செல்ல, ‘உதவ மறுக்கநமக்கு எண்ணற்ற சாக்குகள் உள்ளன. நேரம் இல்லை, பணம் இல்லை, இப்போது இல்லை, நான் சோர்வாக இருக்கிறேன்... இது ஒரு போலிஸ் வழக்கை உள்ளடக்கும்! நான் வெகுதூரம் செல்லவேண்டும்! வேறு யாராவது உதவுங்கள்! அந்த மனிதன் காயம் அடைந்ததாக மட்டுமே பாசாங்கு செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம்... என் மோட்டார் சைக்கிளில் அடித்து நொறுக்கப்பட்ட ஒரு பெண்ணை நான் அழைத்துச்சென்றால் மக்கள் என்ன நினைப்பார்கள்? ‘கடந்து செல்ல, ‘உதவ மறுக்கஎனக்குக் காரணங்கள் ஆயிரமாயிரம்!…

எதை நான் அடிக்கடிகடந்து செல்கின்றேன்?’

நீங்கள் ஒரு நல்ல அண்டை வீட்டுக்காரராக, ஓர் ஆசிரியராக, ஓர் அரசு ஊழியராக, ஒரு கடைக்காரராக, ஒரு போலிஸ்காரராக, ஒரு குருவாக... வெளியில், தெருக்களில், நீர்நிலைகளில் குப்பைகளை வீசுவதைத் தவிர்க்கிறீர்களா? உரத்த இசை அல்லது ஒலிகளை உருவாக்குவதைத் தவிர்க்கிறீர்களா? அல்லதுஹார்ன்அடிப்பது நமது சுற்றுப்புறங்களை, பொது அரங்குகளை மாசுபடுத்துகிறதா? பொது இடங்களில் தொலைப்பேசியைப் பயன்படுத்துவது மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றதா? எவற்றை நான் அடிக்கடிகடந்து செல்கின்றேன்?’

யாரை நாம் அடுத்திருப்பவராகப் பார்க்கிறோம்?

பொதுவாக, நாம் அண்டை நாட்டவரை நமது மக்களாக நினைக்க விரும்புகிறோம். நமது நம்பிக்கை, நமது சமூகம், நமது நிறம் மற்றும் நமது சமூக வர்க்கம் என்கிற எண்ணம். ஆனால் இயேசு, நம் அடுத்திருப்பவர் முற்றிலும் வேறுபட்டவராக இருக்கலாம் என்று சிந்திக்க நமக்குச் சவால் விடுக்கின்றார்.

நமது நேரம், அக்கறை மற்றும் கவனிப்புக்கு எவரும் தகுதியானவரல்லர் என்று நாம் கருதலாம். இருப்பினும், அனைவருமே நாம் நேசிக்க அழைக்கப்படும் அடுத்திருப்பவர்கள். திருச்சட்ட அறிஞர், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்டிருந்தார். இயேசு அவரது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை; ஆனால், ஒரு நல்ல அடுத்திருப்பவராக இருக்கக் கூறினார். “நீயும் போய் அவ்வாறே செய்.” என்ன செய்ய வேண்டும்? என்று இயேசு நமக்குக் கூறவில்லை. மாறாக, மற்றவர்களைப் பற்றிய நமது மனப்பான்மையையும் சிந்தனையையும் மாற்றும்படி நம்மை அழைக்கிறார். இது மனமாற்றத்திற்கான அழைப்பு, யாரையும் விலக்காத வரவேற்பு மற்றும் திறந்த இதயத்தை உருவாக்குவதற்கான அழைப்பு. ஏனென்றால், நம் அடுத்திருப்பவரை நேசிப்பதில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.

இயேசுவின் வார்த்தைகள் எளிமையானவைதாம்; ஆனால், அவை நம்மை முழுமையாய் மாற்றும் சக்தியைக் கொண்டவை. அவர் நம்மிடம் கேட்டுக் கொள்வது: ‘இறைவனை உண்மையாய் நேசியுங்கள்; அடுத்திருப்பவரையும் நம்மைப்போல் நேசியுங்கள்; இரக்கம் காட்டுங்கள்; சடங்குகளுக்குப் பதிலாக அன்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.’

நம்முடைய உண்மையான பக்தி என்பது சடங்குகளின் புற அலங்காரங்களில் அல்ல; நாம் மற்றவர்களுக்குச் செயலில் காட்டும் அன்பிலும், இரக்கத்திலும் உள்ளது. அன்பு இல்லாத வழிபாடு வெறுமைதான். அன்புள்ள செயல்கள் இல்லாமல் பக்தியாக இருப்பது வீணாகும். நம்மை ஒன்றாக இருக்க அழைக்கும் இயேசுவைப் பின்பற்றும் நாம் பிறருக்கு நன்மை செய்வதில் நமது கரங்கள் அழுக்காக அனுமதிப்போம், தீட்டுப்படுத்திக்கொள்வோம். இரக்கம் காட்டுவோம், இறைவனைக் காண்போம். ஏனெனில், இரக்கமே இறைவனாக இருக்கின்றார்!

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

பேரொளியின் ஒளியாக நம்மில் வாழும் இறைவனாகிய பேரொளி! நம்பிக்கை ஒளியை ஏற்றி, விண்ணக ஒளியோடு நம்மை இணைக்கின்ற அனுபவம் நம்மை இவ்வாறு பாடச் செய்கின்றது ‘உமது முகத்தின் ஒளி  என்மீது வீசச் செய்யும் ஆண்டவரே!’ இந்த நம்பிக்கை ஒளி நம்மில் ஏற்றப்படும் பொழுது நம் பலவீனங்கள் மறைந்து வல்லவர்கள் ஆகின்றோம். குணமாக்கும் வல்லமை நம்மில் நிரப்பப்படுகின்றது. அதனால்தான் நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்த நோயாளிகள் குணம் பெற்றபோது இயேசு கூறினார்: “உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.”

நலமடைதலில் மட்டுமல்ல, நம்பிக்கை அனைத்தையும் பெறச் செய்யும். நாம் செய்ய வேண்டியதை இயேசு இவ்வாறு வலியுறுத்துகிறார்: “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது, இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33).

இயேசுவின் வார்த்தை ஒளிமயமானது என்பதை நாம் அறிவோம். அவ்வார்த்தை நம்பிக்கையை ஆழப்படுத்தி நங்கூரமாகச் செயல்படுகின்றது. புனித பவுல் கூறுவதுபோல, “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது” (உரோ10:8).

இயேசுவின் வார்த்தையை உள்வாங்கி, நமதாக்கி வாழ்வாக்கும் பொழுது அவர் கரத்திலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். நிலைவாழ்வை நோக்கித் திருப்பயணம் மேற்கொள்ளும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை உருமாற்றும்.

கடந்த சில நாள்களுக்குமுன் நடந்த ஒரு நிகழ்வு என்னைப் பூரிப்படையச் செய்தது. மே மாதம் முதல் நாள் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இல்லத்திலோ, அருகில் உள்ள ஆலயங்களிலோ திருப்பலி இல்லை. எனவே, புனித மரியன்னைப் பேராலயத்தில் திருப்பலியில் பங்குபெற அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விரைந்தேன். சாலையில் 20 நிமிடங்களுக்குமேல் ஆட்டோ அல்லது பேருந்துக்காகக் காத்திருந்தேன். அண்மையில் ஏற்பட்ட விபத்தால் இடது காலில் மூன்று இடத்தில் எலும்புக் கீறல் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் நடப்பது கடினமாக இருந்தாலும், திருப்பலியில் பங்குபெற வேண்டும் என்ற ஆர்வத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோ கிடைத்தது.

நான் ஆலயத்தில் நுழையும்போது வருகைப் பாடல் பாடினர். மகிழ்வோடு நன்றி கூறிக்கொண்டே திருப்பலியில் பங்கேற்றேன். திருப்பலி முடிந்ததும் சில ஆண்டுகளாகச் சந்திக்க இயலாமல் இருந்த அன்பான, நட்புடன் உறவாடும் ஆசிரியை ஒருவரைக் கண்டேன். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்கள் இல்லம் சென்றோம். காலை உணவிற்குப் பின் கார் ஏற்பாடு செய்து என்னை அனுப்பி வைத்தார்கள். தன் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவிகளுக்குப் பலவகைகளில் உதவி செய்பவர்கள். ஜூலி என்ற இந்த ஆசிரியை மதுரை புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர்.

இத்தகையோர்தான் உலகிற்கு ஒளியாக இருக்கிறவர்கள். அவர்களது நற்செயல்களைக் கண்டு மக்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழும்படி வாழ்பவர்கள். இயேசு மீண்டும் மாட்சியுடன் வரும்பொழுது அவரது வலப்பக்கத்தில் நிற்கும் பேறுபெற்றவர்கள் (மத் 25:34,36). அத்தகைய பேறுபெற்றவர்களாக  வாழ்வோம். விண்ணகத் தந்தையை மாட்சிப்படுத்துவோம்.

அனைத்திற்கும் மேலாக ஆண்டவரை மட்டுமே தேடுவோம். அவரில் நம்பிக்கைகொள்வோம். அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையதையும் நாடுவோம்.

நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் கரங்களிலிருந்து பெற்று மகிழ்வோம். அவற்றைப் பிறரோடு பகிர்ந்து இறையாட்சி மலரச் செய்யும் மீட்பின் கருவிகளாவோம்.

news
ஆன்மிகம்
அன்பின் வடிவமான இயேசுவின் இதயம்! (ஜூன் 27: இயேசுவின் தூய்மைமிகு இதயம்)

நம்மில் பலர் நல்லவர்களாய் இல்லாதிருக்க அடிப்படைக் காரணம் என்னவென்றால், பலருடைய அன்பை நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். நற்செய்தி என்றால் என்ன? ‘கடவுள் என்னை அன்பு செய்கிறார்என உணர்வதுதான் நற்செய்தி. கடவுளின் அன்பை உணர்ந்து எல்லாவற்றிற்கும் நன்றிகூற நமக்குக் கடமையுண்டு.

ஓசேயா நூல் 11-ஆம் அதிகாரம் இறைவனின் பராமரிப்புப் பற்றி மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது: “இஸ்ரேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்துவந்தேன். எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமல் போனார்கள். அவர்கள் கழுத்தின்மேலிருந்த நுகத்தை அகற்றினேன். அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.”

பால் குடிக்கும் தன் சேயைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்!” (எசா 49:15).

என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன்; மதிப்புமிக்கவன்; இதோ, நான் உன்மேல் அன்பு கூர்கிறேன் (எசா 43.4). 

என் உள்ளங்கையில் நான் உன்னைப் பொறித்து வைத்துள்ளேன் (எசா 49:16). இதைப்போல இன்னும் எத்தனையோ பகுதிகள் பழைய ஏற்பாட்டில் கடவுளின் அன்பைப்பற்றிக் கூறுகின்றன. நாம் நம்மையே மதிக்காவிட்டாலும், கடவுள் நம்மை மதிப்பிற்குரியவர்களாகப் பார்க்கின்றார்.

ஆண்டவர் இயேசுவின் பிறப்பே அன்பு நிறைந்ததுதான். தாழ்ச்சி, எளிமை, புன்சிரிப்பு எல்லாம் நிறைந்த குழந்தை இயேசுவாக, கடவுள் மனிதராகப் பிறந்தது அன்பின் வெளிப்பாடுதான். அவர் வளர்ந்த விதத்திலே அன்பு. வளர்ந்த பிறகு அவர் செய்த அனைத்திலும் அன்பு. கானாவூர் திருமணத்திலே தண்ணீர் திராட்சை இரசமானது எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தும் இயேசுவின் அன்பு. இவ்வாறு அவருடைய பொதுவாழ்வின் மத்தியில் அவரது பெருந்தன்மையான இதயத்தைப் பார்க்கலாம். உண்ணக்கூட நேரமில்லாமல் பணியாற்றிய தமது சீடர்களைப் பார்த்து, தனியே வந்துஎன்னோடு சற்று இளைப்பாறுங்கள்என அன்போடு அழைக்கின்றார். தொழு நோயாளியைப் பார்த்துப் பரிவு கொண்டார். கைம்பெண் தன் ஒரே மகனை இழந்தபோது, “அம்மா, அழாதேஎன்று பரிவு கொண்டார். இப்படியாக ஒடுக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர் அனைவர்மீதும் அன்பு காட்டுகின்றது ஆண்டவரின் இதயம்.

துன்பப்படுபவர்களைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்லும் மக்கள் மத்தியிலே, திரும்பி வந்து கவனித்துக் கொண்ட நல்ல சமாரியனைப்போல் நம்மீது பரிவு கொண்டது நம் ஆண்டவர் இயேசுவின் இதயம் (லூக் 10). அதைவிட அதிகமாக, காணாமல்போன மகன் பற்றிய உவமையில், தந்தையின் அன்பை அடையாளம் காட்டும் இதயம்; மன்னிக்க மனமில்லாத மூத்த மகனைப்போல் இல்லாமல் தொலைவில் வரும்போது ஓடிச்சென்று கட்டியணைத்து முத்தமிட்டு, அழுது அணைத்த தந்தையின் இதயம்; மகனை மன்னித்து ஏற்றுக்கொண்டு புதிய ஆடை, மோதிரம், புதிய காலணி, விருந்து இவற்றால் மகிழ்ந்த தாராளமான தந்தையின் இதயம்; துன்புறுவோருக்காக அழுகின்ற ஆண்டவரின் இதயம்; எருசலேம் பட்டணம் மனம் மாறாததைக் குறித்துக் கண்ணீர் விட்ட இதயம்; இலாசரின் கல்லறையில் மார்த்தா-மரியாவின் துன்பத்திலே கண்ணீர் விட்டு அழுத இயேசுவின் இதயம்; இயேசு இறந்தபின் படைவீரர் ஒருவர் அவரது விலாவை ஈட்டியால் குத்தியபோது இரத்தமும் தண்ணீரும் வெளிவந்து, இறுதிமூச்சுவரை எல்லாவற்றையும் கொடுத்ததுதான் இயேசுவின் இதயம்.

இயேசுவின் திரு இதயத்திடம் இருந்து இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகின்றார். “ஒன்று, உங்கள் அன்பு சொல்லில் இராமல், செயலில் வெளிப்பட வேண்டும்; இரண்டாவதாக, பெறுவதைவிட கொடுப்பதில் மகிழ்ச்சி காண வேண்டும்.” சிலர் அழகாய் சிரிப்பார்கள், நன்றாகப் பேசுவார்கள். அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என்பார்கள். ஆனால், எதுவும் செய்யமாட்டார்கள். சிறு வயதிலிருந்து அதுவேண்டும், இதுவேண்டும் எனக் கேட்டுப் பழகிக்கொள்கிறோம். கொடுப்பது எப்போது? கொடுக்கத் தொடங்குங்கள். நல்லது செய்பவர்களுக்குப் பாராட்டுகளைப் பரிசாகக் கொடுங்கள். நல்ல பாதுகாப்பை, உடனிருப்பை வயதான பெற்றோருக்குக் கொடுக்கவேண்டும்.

நம் திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் இதயத்திடமிருந்து நமக்குக் கற்றுத்தருகின்ற மூன்று பண்புகள்:

1.நெருக்கம்! (Closeness) கடவுளிடமும் குடும்பத்தாரிடமும் நெருக்கமாக இருக்க வேண்டும். அருகில் இருந்தாலும் தொட்டுக்கொள்ளாத தண்டவாளம்போல் அந்நியமாகவே வாழ்கிறோம். கடலில் இருக்கிற கூழாங்கல்போல் தொடப்படாமலேயே இருந்துவிடுகிறோம். கடவுள் நம் அருகில், மிக நெருக்கமாக இருக்கிறார். இரக்கத்துடன் இருக்கிறார். மென்மையாக இருக்கிறார். எனவே, நாம் மென்மையாக மாறவேண்டும். நம்மு டைய சாதாரண தொடக்கத்தை மறந்துவிடக் கூடாது. கடவுள் செய்த நன்மைகளுக்கு நன்றிகூற வேண்டும். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் இரக்கத்தையும் பராமரிப்பையும் நினைத்துத் திருப்பாடல்களை இசைத்ததுபோல, நாம் நன்றி கூறவேண்டும். ஆண்டவரின் வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும்.

2. துன்புறுதல்! (suffer) தேவையில் இருப்பவர்களுக்காக, நம்முடைய சகோதர-சகோதரிகளுக்காக, நம் குடும்பத்தாருக்காகத் துன்புற வேண்டும். நமது பாவங்களுக்காக மட்டுமல்ல, மக்களுக்கு வாழ்வு கொடுக்கவும் துன்புற்றார் இயேசு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்திற்கான ஆக்கப்பணிகளிலே பங்கெடுத்துத் துன்புற வேண்டும்.

3. ஆறுதல் கூறுதல்! (console) நம் ஆண்டவர் ஆறுதல் அளிக்கிறார்; ஊக்கமூட்டுகிறார். இதுதான் இயேசுவின் இதயம். நாமும் அப்படித்தான் வாழ வேண்டும். இன்று இயேசுவின் இதயம் நம்மைப் பார்த்துக் கேட்கிறது: ‘என் அன்பை உணரமாட்டாயா? உணர்ந்தால் என்னைபோல் வாழமாட்டாயா?’ என்று. அவருடைய அன்புத்தாய் அன்னை மரியாவின் இதயமும் இதைப்போன்றுதான், கனிவான இதயம், மென்மையான இதயம், துன்புறும் இதயம்!

ஆண்டவர் செய்த அனைத்துச் செயல்களையும் நினைத்து நன்றிகூறுகின்ற இதயம். அன்பின் வடிவமான  இயேசுவின் இதயம் நம்முடையதாகட்டும்.

news
ஆன்மிகம்
யூபிலி 2025 – முன்வைக்கும் கூட்டியக்கத் திரு அவை (பொதுநிலையினர் ஞாயிறு 29.06.2025)

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே,

உலக மாந்தர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதையும், நமக்குள் சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்த உறவும் ஒன்றிப்பும் தேவை என்பதையும் நாம் நன்கு அறிவோம். எனவே, மாண்பு, சமத்துவம், அன்பு, நீதி, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தின் ஒன்றிப்பை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அண்மையில் இறைவனில் இணைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2021-இல் தொடங்கிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் வழியாகவும் யூபிலி 2025 கொண்டாட்டத்தின் மூலமாகவும் உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில்கூட்டியக்கத் திரு அவைஎன்ற ஒப்பற்ற சிந்தனையை நமக்குத் தந்து சென்றிருக்கிறார்.

நற்செய்திப் பார்வை

உலகப் படைப்பின்போது கடவுள் இவ்வுலகைப் பேணிக்காக்க மனிதரை ஒரு சமூகமாகப்  படைத்தார் என்பதையும், மோசே வழியாக ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு அவர்களை இறைமக்களின் கூட்டமாக ஒருங்கிணைத்தார் என்பதையும் தொடக்க நூலிலும் விடுதலைப் பயண நூலிலும் நாம் வாசிக்கிறோம்.

இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது தாம் தனியாளாக அல்ல; தந்தையுடனும் தூய ஆவியாருடனும் இணைந்தே செயல்படுவதை மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். இதிலிருந்துமூவொரு இறைவன் ஒரு கூட்டியக்கமாகச் செயல்படுகின்றார்என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம் (யோவா 14).

தாம் தேர்ந்துகொண்ட சீடர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இறைமகன் இயேசு மன்றாடுகிறார் (யோவா 17:21).

லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை ஒரு திருப்பயணியாகக் காட்டுகிறார் (9:5). இயேசுவும் தம்மைவழியும் உண்மையும் வாழ்வும்என்று உருவகப்படுத்துகிறார் (யோவா 14:6). எனவே, திருப்பயணியாக இருக்கும் திரு அவையும் ஒரு திருப்பயணத் திரு அவையாக உலக மக்களுக்கு நிறைவாழ்வு அளிக்கக் (யோவா 10:10) கடமைப்பட்டுள்ளது.

இரண்டாம் வத்திக்கான் சங்கம்

தொடக்கம் முதலே திரு அவை ஒரு கூட்டியக்கமாகச் செயல்பட்டது என்பதற்கான சான்றுகளைத் திருத்தூதர் பணிகள் நூலின் 1,2,4,6,15-ஆம் அதிகாரங்களில் காண்கிறோம். காலப்போக்கில் திரு அவையில்திருநிலையினர் மையம்என்பது உருவாகி நீண்ட காலம் நிலைத்தது. 20-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-65) ‘உலகோடு உறவாடும் திரு அவைஎன்ற ஒரு மாற்றுச்சிந்தனையை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

துன்புறும் எளியவரின் ஏக்கமும் கவலையுமே திரு அவையின் ஏக்கமும் கவலையுமாகும்கிறிஸ்துவின் பெயரைக் கூவியழைக்கும் அனைவரையும் மட்டுமின்றி, உலக மாந்தர் எல்லாரையும் அழைத்துப் பேச (திரு அவை) தயங்காது முன்வருகிறது(இன்றைய உலகில் திரு அவை எண் 1 மற்றும் 2) என்று சங்கம் தன் பார்வையைத் தெளிவுபடுத்தியது.

ஒவ்வொரு மனிதரும் தமக்கு அடுத்திருப்பவரைத் தம்மறு உருவாககருதி மதிப்பளிக்க வேண்டும் என்பது இன்றைய உலகில் திரு அவை ஏட்டின் எண் 23 முதல் 32 வரை இழையோடும் மிகவும் அடிப்படையான வழிகாட்டுதல் ஆகும். 1983-இல் வெளிவந்த திரு அவைச் சட்டத் தொகுப்பும்இறைமக்களுக்கு இடையே சம மாண்பும் மதிப்பும் உண்டு (எண் 208) என்பதை நிறுவியது.

ஆயர் மாமன்றம்

திருத்தந்தை பிரான்சிஸ் 2021, அக்டோபர் 17 அன்று உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கி வைத்தார். திரு அவை ஓர் இயக்கமாகச் செயல்படஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி அறிவிப்புஎன்ற இலக்கை நிர்ணயித்தார். 2024-இல் நிறைவுபெற்ற ஆயர்கள் மாமன்றம்கூட்டியக்கத்  திரு அவைஎன்ற ஆய்வுப்பொருளை அலசி ஆராய்ந்தது.

இந்த ஆயர்கள் மாமன்றம் இதுவரை நடைபெற்ற மாமன்றங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. ஏனென்றால், இந்த மாமன்றத்தில் கருத்துகள் அனைத்தும் கீழிருந்து மேல்நோக்கிச் சென்றன. அதுவும் தயாரிப்புக் கலந்துரையாடல்களில் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பும் முக்கியத்துவம் பெற்று முன்னிறுத்தப்பட்டது.

யூபிலி 2025

1300-களில் 100 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என்றிருந்த யூபிலிக் கொண்டாட்டம், 1470-இல் திருத்தந்தை 2-ஆம் பவுல் காலத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை என நிர்ணயிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த யூபிலி ஆண்டுக்காக (2025) ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற இலக்குச் சிந்தனையில்எதிர்நோக்கு ஏமாற்றம் தராது (உரோ 5:9) என்ற ஓர் அறிவிப்பு ஆணை மடலைத் திருத்தந்தை பிரான்சிஸ் 2024, மே 9-இல் வெளியிட்டார்.

அதில்ஒன்றிணைத்து - நற்செய்திப் பணியாற்றி - பங்களித்து - கூட்டொருங்கியக்கப் பயணம்   மேற்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன்உள்வாங்கி, நிகழும் தருணத்தில் வாழ்ந்து, வருங்காலத்தை நிர்ணயிக்கநம்மைத் தூண்டுகிறார்.

எதிர்நோக்கின் அடையாளங்கள்இணைந்து பயணிக்கும் திரு அவைஎன்பதை மையப்படுத்தி, எதிர்நோக்கின் அடையாளங்களைத் திருத்தந்தை வரையறை செய்துள்ளார்.

குழந்தைகள் (எண்-9), கைதிகள் (10), நோயுற்றோர் (11), இளையோர் (12), புலம்பெயர்ந்தோர் (13), முதியோர் (14), வறியோர் (15) போன்ற அனைவருமே எதிர்நோக்கின் அடையாளங்கள் என்று தனது அறிவிப்பு ஆணை மடலில் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.

அத்துடன் அன்பிலும் (3), குடும்பங்களிலும் (4), காலத்தின் அறிகுறிகளிலும் (7), மன்னிப்பு மற்றும் ஒப்புரவு அடையாளத்திலும் (10), பசியிலும் (16), வளங்கள் அனைவருக்கும் உரியன என்பதிலும், எதிர்நோக்கைக் கண்டுணரவும், செல்வச் செழிப்புள்ள நாடுகள் ஏழை நாடுகளின் கடன்களை மன்னிக்கவும், போர்ச் சீரழிவுகளை ஒழிக்கவும் திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார்.

நிறைவாக...

எதிர்நோக்கின் மேன்மையான சான்றாகக் கடவுளின் அன்னை திகழ்கிறார். எதிர்நோக்கையும், கடவுள்மீது கொண்டிருந்த பற்றுறுதியையும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை. ஆழ்துயரில் மரியா நம் அன்னையாகவும், எதிர்நோக்கின் அன்னையாகவும் மாறுகிறார்என்று திருத்தந்தை தனது மடலில் (எண்-24) நமக்கான நம்பிக்கையை அடையாளம் காட்டுகிறார்.

நமது கூட்டியக்கப் பயணித்தலின் அடித்தளமாக இறைவார்த்தையும், அடிநாதமாக நற்கருணையும் இருக்கின்றன. இவை நம் நம்பிக்கைப் பாதையை ஒளிர்வித்து, நம்மைக் கிறிஸ்துவின் ஒரே உடலாக மாற்றுகின்றன.

ஒரே உள்ளத்தினராய் இணைந்தால்தான் நாம் இறைவனை நோக்கிப் பயணம் செய்ய இயலும்என்று புனித அகுஸ்தின் கூறியதை நினைவில் கொள்வோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ ஆகியோரின் அழைப்பை ஏற்று, கூட்டியியக்கத் திரு அவையாக - இணைந்து பயணிக்கும் இயக்கமாக நாம் செயல்பட்டு, திரு அவைக்குப் புத்துயிர் ஊட்டுவோம்!

அருள்பணி. மரிய மிக்கேல், செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு

மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி, தலைவர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு