1) பிறந்த நாள் விழா
“என்ன யாழினி, அந்தக் கேன்சர் பேசண்டை செக்கப் பண்ணீட்டீங்களா?” என்று கேட்டார் டாக்டர் சேவியர். “பார்த்திட்டேன் டாக்டர், வலி அதிகமாய் இருக்குன்னு கத்தினார். அதற்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்திட்டு வந்தேன்” என்றாள் யாழினி.
“ஓகே, நாலாவது ப்ளோரில் அந்த அல்சர் பேசண்டும் வலிக்குதுன்னு சொன்னார். கொஞ்சம் அவரையும் போய் பார்த்திட்டு வாங்க” என்றார் சேவியர்.
“இந்தா போயிட்டு வாரேன் டாக்டர்” என்றாள் யாழினி.
“பேசண்டை விசிட் பண்ணிட்டு இங்கே வாங்க, நம்ப இஸ்மாயிலும் இங்கே வருவார், வந்ததும் நாம் பேசலாம்” என்றார் சேவியர்.
“ஓகே சார், போய் பார்த்திட்டு உங்கள்ட்டேயே திரும்பி வாரேன்” என்று பறந்தாள் யாழினி.
சென்னை
நுங்கம்பாக்கத்தில் ‘மெரிட் ஆஸ்பத்திரி’ பேர்
பெற்றது. ஆறு மாடியில் இரவு பகலாய் சுறுசுறுப்பாய் இயங்கும் மருத்துவமனை இது. இதில் எல்லா நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும். அருகிலுள்ள பகுதியிலிருந்து மக்கள் காலை முதல் சிகிச்சைக்காக வரத் தொடங்கி விடுவார்கள்.
இங்கு
கேன்சர், இதய நோய், தோல் வியாதி, கண் நோய், பல் மாற்று என்று அனைத்து நோய்களுக்குமான டாக்டர்கள் நிறையப் பேர் உண்டு. மொத்தம் இங்கே எழுபது மருத்துவர்களும் இருநூறு நர்சுகளும் பணியாற்றுகிறார்கள். இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் டாக்டர் இஸ்மாயில். இவரின் மனைவி டாக்டர் பாத்திமாவும் இங்கேதான் வேலை செய்கிறார்.
இந்த
மருத்துவமனை உள்ளேயே கேன்டீன், மருந்துகள் வாங்குவதற்கு ‘மெடிக்கல் ஷாப்’ எல்லாம் உண்டு. சுற்றிலும் உள்ள மரத்தடியில் அமர்ந்து வந்து செல்வோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
“வாங்க யாழினி, உட்காருங்க. இஸ்மாயில் இப்ப வந்திருவார்” என்றார்
சேவியர்.
“எதுவும் முக்கியமான விசயமா டாக்டர்?” என்றாள் யாழினி சிரித்தபடி.
“இஸ்மாயில் வரவும் சொல்றேன். என்னோட பெர்சனல் மேட்டர்தான், ஆஸ்பிடல் சம்பந்தமானது இல்ல யாழினி” என்று சிரித்தார் சேவியர்.
அப்பொழுது
இஸ்மாயில் உள்ளே நுழைந்து விட்டார்.
“உட்காருங்க டாக்டர்” என்றாள் யாழினி.
“என்ன சேவியர், எதற்கு என்னை வரச் சொன்னாய்?” என்று சிரித்தபடி கேட்டார் இஸ்மாயில்.
“டீ சாப்பிட்டே பேசலாம்” என்று
பெல்லை அழுத்தி நர்சிடம் டீ கொண்டு வரச்
சொன்னார் சேவியர்.
டீயும்
வந்தது. குடித்தபடியே “விசயத்தைச் சொல்லுப்பா சேவியர், வேலை நிறைய இருக்கு” என்றார் டாக்டர் இஸ்மாயில்.
“ஏய், இந்தப் பெரிய ஆஸ்பத்திரிக்கு தலைவர், ஓனர்னா வேலை கொஞ்சமாகவா இருக்கும்? வேலை தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்கும். நாம் கொஞ்சம் ப்ரீயா
பேசலாமே? என்ன டாக்டர் யாழினி” என்று சிரித்தார் சேவியர்.
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்ச நண்பர்கள். இதிலே நான் என்ன சொல்ல முடியும் டாக்டர்” என்றாள் யாழினி.
“ஓகே. நான் மேட்டரை சொல்றேன். வேற ஒண்ணுமில்லே, எனது மூணு வயது மகளுக்கு நாளை பிறந்த நாள். நீங்க ரெண்டு பேரும் குடும்பத்தோடு கட்டாயம் வரணும்” என்றான் சேவியர்.
“தாயில்லாத உன் மகள் பிறந்த நாளைக்கு நாங்க கட்டாயம் வர்றோம், விருந்து சாப்பிடுறோம்” என்றார்
டாக்டர் இஸ்மாயில்.
“ஆமா டாக்டர், நிச்சயம் வர்றோம். மதியம் நான் சாப்பிட்ட பிறகு இங்கே வந்திடுறேன்” என்று
சிரித்தபடி எழுந்தாள் டாக்டர் யாழினி.
(தொடரும்)
டீச்சர் சீபா ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு ஒரு வாடகை வீட்டிற்குக் குடி வந்திருந்தாள். நல்ல உயரமும், அதற்கேற்ற உடலமைப்பும், நேர்த்தியான உடையலங்காரமும், ‘கண்டிப்பான டீச்சராக இருப்பாளோ?’ என்றே நினைக்க வைக்கும். பள்ளி வேளை முடிந்து வீடு திரும்பிய சீபா டீச்சர், ஓட்டி வந்த அழகிய சிவப்பு நிற ஸ்கூட்டி வீட்டு வாசலில் வந்து நின்றதுதான் தாமதம், எதிரே புல்தரையில் அமர்ந்துகொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த பெண்களின் மொத்தக் கவனமும் அவள்மீது திரும்பியது.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடைய புதுமைப் பெண்ணாக்கும் டீச்சரம்மா? அதனால் அந்தப் பார்வை ஓரக் கண்ணால்கூட நம்மைச் சீண்டாதாக்கும்” என
எகத்தாளமாகச் சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் சர்மிளா.
“கூந்தலுள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவாள், இடக்கொண்டையும் போடுவாள் என்று அந்தக் காலத்தில் சும்மாவா சொல்லிப்புட்டுப் போனாங்க? ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஹேர்ஸ்டைல், இரகம் இரகமாகக் கட்டும் புடவை வகை, அதற்கேற்ற அணிகலன் மற்றும் ஒப்பனையும்... நம்மள மாதிரியா அஞ்சுக்கும் பத்துக்கும் அடுத்தவங்க கையை எதிர்பார்த்துக்கிட்டு. அவ புருசனும் சம்பாதிக்கிறான்,
அவளும் சம்பாதிக்கிறா...… அப்புறம் என்ன குறைச்சல்?” எனப் பெருமூச்சு விட்டாள் சரிதா.
ஆனால்
உமா…
“உண்மையிலேயே சீபா டீச்சர் அழகா ஹீரோயின் போலத்தான் இருக்காங்க” என்றாள்.
“என்னடி இது அதிசயமா இருக்கு! பூ விக்கிறவ, இஸ்திரி
போடுற ஆளு, வாட்ச்மேன் எல்லாரையும் மயக்குற மாதிரி உன்னையும் மயக்கிட்டா போல” என்றாள் சரசு.
சரசு
சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் பேரன் அடித்த பந்து சீபா வீட்டுக் கண்ணாடி சன்னலைப் பதம் பார்த்து அவள் வீட்டிற்குள் பாய்ந்தது. அவ்வளவுதான். ‘ஓ!’ எனக் கத்திய அச்சிறுவன் “ஆச்சி… எனக்குப் பயமா இருக்கு; நீங்க போய் எடுத்துத் தாங்க” என்று விடாமல் தொந்தரவு பண்ண ஆரம்பித்தான்.
“இதென்னடி பெரிய வம்பாப் போச்சு?” என்று சொல்லியபடியே அடம்பிடிக்கும் பேரனை இழுத்துக் கொண்டு சீபா வீட்டருகில் சென்றாள் சரசு.
“யாரு ஜன்னலை உடைத்தது?” என்று உறுமியபடியே வெளிவருவாள் என நினைத்த சரசுவை,
மென்மையான புன்முறுவலுடன் எதிர்கொண்டாள் சீபா.
அழுதுகொண்டிருந்த
சிறுவனின் கையில் பந்தைக் கொடுத்து “கவனமா விளையாடனும்; நல்லவேளை, ஜன்னல் பக்கத்தில யாராவது நின்றிருந்தால் மண்டை உடைஞ்சிருக்கும்” என்று
செல்லிக்கொண்டே சரசுவைப் பார்த்து, “வாங்க
அக்கா. உள்ளே வாங்க.… குடிவந்து ஒரு மாதமாகியும் உங்ககிட்ட பேசி அறிமுகப்படுத்திக்க முடியல. காபி சாப்பிட்டுட்டு போகலாம்” என்றாள் சீபா.
“இல்லமா, பரவாயில்லை…” என்றபடியே
அமைதியாக வரவேற்பறையில் அமர்ந்தாள் சரசு.
அப்போது
அங்கு வந்த இஸ்திரிக்காரர், “அம்மா இந்தாங்க. ஐயா எங்கேயோ வெளியூருக்குப் போறார்னு அவசரமா துணி தேய்ச்சுத் தரச்சொன்னீங்களே... அதுதான் சீக்கிரமே…
இஸ்திரி போட்டாந்தேன்” என்று
கூறியபடி மேசையில் அயர்ன் பண்ணிய துணிகளை வைத்தபோது, அவர் கையில் அதற்கான கூலியைக் கொடுத்த சீபா “அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைன்னு கேட்டேல்ல... இந்தா, இத சிகிச்சைக்கு வெச்சுக்கோ” என்றாள்.
கண்களில்
நீர் நிரம்பக் கரம் கூப்பியபடி நன்றி சொல்லி வெளியேறினான் அவன்.
அப்போது
அங்கு வந்த வாட்ச்மேன், “டீச்சரம்மா, மளிகைச் சாமான் வாங்கச் சொன்னீங்களே... சிட்டையைக் கொடுங்க.… நான் போயி சூப்பர் மார்க்கெட்டில வாங்கிட்டு வாரேன்” என்றார்.
“இல்லப்பா,… அங்க போகவேண்டாம். தெரு முனையில அண்ணாச்சி கடையிருக்கு, அங்க போய் வாங்குங்க, போதும். நம்மளை நம்பி, நமக்காகவே கடை வைச்சிருக்கிற இவங்களை நாம ஆதரிக்கலேன்னா எப்படி? நீங்க அண்ணாச்சிக் கடையிலேயே வாங்கிட்டு வாங்க” என்று சொன்னபடியே, “தம்பி, எந்த வகுப்புப் படிக்கிறீங்க? இந்தாங்க சாக்லேட்”
என்றபடியே கைப்பையிலிருந்த இனிப்பைச் சரசுவின் பேரன் கையில் சீபா கொடுக்க, அச்சம் நீங்க அழகாய் சிரித்தான் அவன்!
“அம்மா பூ வாங்கீக்கோங்க! இன்று
விலை ஜாஸ்தி. இங்க யாருமே வாங்கலை. நீங்களாவது வாங்குனா போணியாகும்” வாசலில்
நின்றபடி குரல் கொடுத்தாள் பூ விற்பவள்.
“சரி... இரண்டு முழம் தாங்க”
வாங்கிய
சீபா அதில் ஒரு முழத்தை சரசக்காவின் கையில் கொடுத்தாள்.
மனத்தில்
குற்றவுணர்ச்சி கைகளில் நடுக்கமாக, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் சரசு.
“மகராசி நீ நல்லாயிருக்கணும். இந்த வட்டாரத்தில
சொன்ன விலைக்குப் பூ வாங்கி அன்னன்னக்கி
என் வீட்ல வெளக்கேத்தி வெக்கிற குலசாமி நீ நல்லாயிருக்கணும்” என்றாள் பூ விற்பவள்.
“இப்படிச் சில்லறை வியாபாரம் செய்யறவங்க கேட்ட காச பேரம் பேசாம கொடுத்திடுவேன் அக்கா. பெரிய பெரிய கடைகள்ல பொருள் வாங்கும்போது நாம பேரம் பேச முடியுமா என்ன?” என்றாள் சீபா.
“ஆமாம் டீச்சர், நீங்க சொல்றது சரிதான்” என்று கூறியவளாய், “அப்ப நான் வர்றேன்,…ரொம்ப நன்றி” என்றாள்.…
“எதற்கு சரசக்கா?”
“எல்லாத்துக்கும்தான்” என்று
சொல்லியபடியே பேரனுடன் அவள் திரும்பியபோது சரசுவை எதிர்பாத்தபடி ஆவலுடன் காத்திருந்த பெண்களில் ஒருத்தி, “சரசு அக்கா,… சீபா டீச்சர் பந்தை எடுத்துக் கொடுத்தாங்களா?” எனக் கேட்க, “ம்... எம் பேரனுக்கும் பந்து கெடச்சுது, எனக்கும் நல்ல பாடம் கிடைச்சுது” என்றாள்.
அப்போது
“ஒண்ணும் புரியலையே?” என்று கேட்ட அவர்களிடம், “சீபா டீச்சர் தோற்றத்திலேயும் அழகு, உள்ளத்திலேயும் அழகு” என்றாள் சரசு!
“பங்குப் பேரவையிலேயே பரபாசை வெச்சிருக்கீங்க. இது கொஞ்சங்கூட நல்லால்ல ஃபாதர்” பொங்கியெழுந்தான் அந்தோணி.
“தீவிரவாதி சீமோனும் இருக்கான்”
போனசாகப் போட்டுக் கொடுத்தான் மாசிலாமணி.
பர்னபாசைத்தான்
‘பரபாஸ்’ என்கிறார்கள்
என்பது பங்குத்தந்தைக்குப் புரிந்தது. கிறிஸ்துமஸ் வந்தாலே அவருக்குத் தலைவலி தொடங்கிவிடும்.
“உங்க பிரச்சினை எப்பத்தான் தீரும்? அவனும் ஆபிரகாமின் பிள்ளைதானே? எத்தனை தடவ விவிலியம் படிச்சிருக்கீங்க? எத்தனை மறையுரை கேட்டிருக்கீங்க? யூதன்னும் கிடையாது, கிரேக்கன்னும் கிடையாது. அடிமை, உரிமைக் குடிமகன்னு எதுவுமே கிடையாது, நாமெல்லாம் ஒண்ணுன்னு... ஏய்யா அடிச்சிக்கிறீங்க?”
“சாமி, இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்குது. நடைமுறைக்கு ஒத்துவராது. காலங் காலமா இருக்கற வழக்கத்தை மாத்த முடியாது. குழந்தை ஏசு சுரூபத்தை அவன் ஆளுக தொட்டா கொலை விழும்.”
பங்குச்
சாமியாருக்குத் தலை கிறுகிறுத்தது.
“மாசில்லாக் குழந்தைகள் திருநாளுக்கு முன்னாடியே குழந்தை ஏசுவைக் கொன்னுப்போடுவானுக போலிருக்குதே” எனக்
கவலையோடு கலங்கினார்.
“இத பாருங்கய்யா, தேவாலயத்தையும்,
தேர்த் திருவிழாவையும் வெச்சிட்டு கலவரம் பண்ணாதீங்க. பூசைக்குப் போறதும், சப்பரம் தூக்கறதும் மட்டுமில்ல கிறித்தவம். பகை, வெறுப்பு ஆதிக்கத்தை விட்டுட்டு எல்லாரையும் அன்பால அரவணைச்சுப் போற வாழ்க்கை முறைதான் கிறித்தவம். பலியைவிட இரக்கம்தாய்யா பெரிசு! சமாதானமா நடத்தறதா இருந்தா தேரை எடுங்க. இல்லேன்னா விடுங்க. மத்தவங்க முன்னாடி வெளிச்சமா இல்லாட்டிக்கூடப் பரவால்லே, இருட்டா இருக்காதீங்க.”
“அதெப்படி சாமி நீங்க சொல்லுவீங்க? காலங் காலமா இருந்த நடைமுறைப்படி குழந்தை ஏசு சப்பரத்தை வழக்கம்போல நாங்கதான் தூக்குவோம். அவனுக தொட்டான்னா கையக் கால...”
“மொதல்ல என்னய வெட்டுங்கடா... கத்திய எடுக்கறவன் கத்திலதான்டா சாவான். காட்டு மிருகங்க மாதிரி கடிச்சு முழுங்கறத நிறுத்தலேன்னா அழிஞ்சு போயிருவீங்கடா... பைபிள்ல அப்படித்தான் எழுதியிருக்கு.”
பவுலடியாரின்
ஆவி புகுந்ததைப்போல பங்குச் சாமியார் ஆவேசமானார். மூச்சு வாங்கி, இருக்கையில் அமர்ந்த அவருடன் பேச விரும்பாமல் அந்தோணியும் மாசிலாமணியும் வெளியேறினர்.
‘பைத்தியக்காரர்கள்; யூதாசாக இருந்துகொண்டு சகோதரனை வெறுக்கும் இவர்கள் பரபாசைப் பற்றிப் பேசுகிறார்கள்!’ பங்குத்தந்தை மனத்தில் நினைத்துக்கொண்டார்.
கிறிஸ்துமஸ்
நாளின் மாலைப்பொழுது சப்பரத்தில் வைப்பதற்காகத் தயார் செய்யப்பட்ட குழந்தை ஏசு சுரூபத்தைத் தூக்க வாட்டசாட்டமான திருத்தொண்டர் ஒருவரைப் பங்குத்தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆலய வளாகம் பரபரப்பும், முணுமுணுப்புமாய்க் காட்சியளித்தது.
திடீரென்று
எங்கிருந்து வந்தானோ அந்தோணி... குழந்தை ஏசு சுரூபத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.
“எவனாவது தொட்டா கொலை விழும்”
- கத்தினான் சாராயத்தில் குளித்திருந்த மாசிலாமணி.
பின்னால்
ஒருதரப்புக் கூட்டம் அவனைத் துரத்த, மற்றொரு தரப்பு அவர்களைத் தாக்க ஆலய வளாகம் கலவரக் களமாய் மாறியது.
உச்சக்கட்டமாக...
சிமியோனும் பர்னபாசும் அந்தோணியின் கையிலிருந்த சுரூபத்தைப் பிடுங்க முயற்சிக்க, குழந்தை ஏசுவின் கைகள் ஒடிந்து ஆளுக்கொன்றாக அவர்கள் கைகளில் சிக்க, கைகளில்லாத சுரூபத்தைக் கண்ட கூட்டத்தின் ஒரு பகுதி கதறி அழுதது.
கலவரம்
பெரிதாக, காவல்துறை பலரையும் கைது செய்து அழைத்துப்போக சப்பர ஊர்வலம் நின்றே போனது.
மூர்ச்சையான
பங்குத்தந்தைக்குச் சிகிச்சையளித்து, தூக்க மாத்திரையையும் கொடுத்துச் சென்றிருந்தார் மருத்துவர். விலா எலும்பு பிடுங்கப்பட்டதுகூடத் தெரியாமல் தூங்கிய ஆதாமைப்போல அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார் பங்குத்தந்தை.
எந்த
நினைவுமில்லாத தூக்கத்தில் கனவொன்று வந்தது. கையில்லாத குழந்தை ஏசு கண்ணீருடன்...!
“நண்பனே, நான் பிறந்த போதும் மனிதர்கள் இடம் தரவில்லை. மாட்டுக்கொட்டகைதான் இடம் தந்தது. வாழும்போதும் தலைசாய்க்க இடமில்லாத நிலையில்தானே நான் இருந்தேன். ‘அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்’
என்ற எண்ணம் இங்கு எவனுக்கும் இல்லை. ‘நான் வளர வேண்டும், அவர் எப்படிப் போனால் என்ன?’ என்ற எண்ணம்தான் இங்கே மேலோங்கி இருக்கிறது. சுயநலமும் சாதியமும் ஆதிக்கமும் சமாதானமின்மையும் இருக்கும் இடத்தில் நான் எப்படி இருக்க முடியும்? தன்னையே மறுத்து வாழும் இதயம் எங்கேயாவது இருந்தால் சொல்... அதுவரை ஏதாவதொரு மாட்டுக்கொட்டகையிலேயே இருப்பேன்... என்னைத் தேட வேண்டாம்...”
கனவு
கலைந்து ‘விருட்’டென்று எழுந்தார் பங்குத்தந்தை. அதன்பின் தூக்கம் வரவில்லை.
‘சாதியமும் ஆதிக்கமும் வெறுப்புணர்வும் இல்லாத திரு அவைதானே அவர் கனவு? என் கனவும் அதுதானே? கனவு பலிக்குமா?’
காலையில்
எழுந்த பங்குத்தந்தை முதல் வேலையாக ஆலயத்தின் பின்புற அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கைகளில்லாத சுரூபத்தைப் பார்க்கப் போனார்.
உண்மையிலேயே
சுரூபம் அங்கு இல்லை!
“என்னங்கடா அங்கே சத்தம்? கொஞ்சம் சும்மா இருங்கடா! சும்மா கத்திக்கிட்டே இருக்கீங்க” எனச் சமையலறையிலிருந்து அம்மா தன் இரண்டு மகன்களையும் சத்தம் போட்டாள்.
“அம்மா,
அண்ணன் என்னைய சும்மா அடிச்சுக்கிட்டே இருக்காம்மா” தம்பி
புகார் செய்தான்.
“அம்மா,
இவன் சும்மா சொல்றாம்மா. நான் அடிக்கவே இல்லம்மா” என அண்ணன் கூறினான்.
“உங்களுக்கு
லீவு விட்டது தப்பாப் போச்சு. சும்மா அடக்கவே
முடியல”
அம்மா கூறினாள்.
“நீங்க
என்னம்மா, சும்மா நொயி நொயின்னு புலம்பிக்கிட்டே இருக்கீங்க?” மகன்கள் இருவரும் பேசினார்கள்.
“நானாடா
புலம்பிக்கிட்டே இருக்கேன்? சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தீங்க... உதை வாங்கிடுவீங்க.”
கொஞ்ச
நேரம் வீடு அமைதியா இருந்தது. சமையல் அறையிலிருந்தே அம்மா பையன்கள் சத்தத்தைக் காணோமே
என்று ஹாலில் எட்டிப்பார்த்தாள். மகன்கள் இருவரும் படுத்துக் கொண்டு மொபைலைப் பார்த்துக்
கொண்டு இருந்தார்கள்.
“டேய்
எந்திரிங்கடா, சும்மா செல்போன் பார்த்துக் கொண்டு இருந்தா கண்ணு கெட்டுப்போயிடும்டா!
படிக்கிறதுக்கு வீட்டுப்பாடம் ஒண்ணும் இல்லையா?” அம்மா கேட்டாள்.
“எங்களைக்
கொஞ்ச நேரம் சும்மா விடுங்கம்மா. ஏம்மா எங்களைப் படுத்துறீங்க?” எரிச்சலுடன் கூறினார்கள்.
மதியம்
சாப்பாட்டு நேரம் வந்தது. கம்பெனிக்குச் சென்ற அப்பா வீட்டுக்குத் திரும்பினார். அவரைக்
கண்டதும் “ஏங்க இவனுகரெண்டு பேரும் சும்மா செல்போன் பாத்துக்கிட்டே இருக்காங்க. சொன்னா
கேக்கமாட்டிங்கிறாங்க” என்றாள் அம்மா.
“டேய்
பாடம் படிக்கணும்னு சொன்னீங்க. கம்பெனிக்கு வந்திருக்கலாம்ல. சும்மா வீண்பொழுது போக்கிக்கிட்டு
இருக்கீங்க. ஏற்கெனவே சும்மா சும்மா செல் பாத்து கண்ணு கெட்டுப்போய் சோடாபாட்டில் கண்ணாடி
மாதிரி போட்டிருக்கீங்க. இனிமே கண்ணே தெரியாமப் போயிரும்டா! அப்பத்தான் உங்களுக்குப்
புத்தி வரும்” அப்பா கூறினார்.
“அப்பா,
சத்தம் போடாம சும்மா இருங்கப்பா. வந்தீங்களா, சாப்பீட்டீங்களா, கொஞ்ச நேரம் சும்மா
இருந்தீங்களான்னு போங்கப்பா” பையன்கள் கூறினார்கள்.
“டேய்,
அப்பாவைச் சும்மா சொல்லக்கூடாது. அவரு உங்களுக்காக இராப்பகலா உழைக்கிறாரு. நீங்க என்னடான்னா
சும்மா சலிச்சுக்கிறீங்க. சரி... சரி... எல்லாரும் சாப்பிடலாம் வாங்க” என்றாள் அம்மா.
எல்லாரும்
சாப்பிட உட்கார்ந்தார்கள். “என்னங்கம்மா, இன்னக்கி சுரைக்காய் கூட்டு வச்சுருக்கீங்க?
மீனு, நண்டு, கறி ஒண்ணும் எடுக்கலையா?” மூத்தவன்.
“சுரைக்காய்
மட்டும் சும்மாவா கிடைக்குது? நாட்டுக் காய்களையெல்லாம் நல்லா சாப்பிடப் பழகிக்குங்க. கறி, மீனு, முட்டையெல்லாம்
அதிகமா சாப்பிட்டா ஆயுள் கம்மி. காய்கறிகளை இரண்டு பங்கும், சோறு ஒரு பங்கும் சாப்பிட்டா
சீக்கே வராது” அம்மாவின் அட்வைஸ்.
“சும்மா
கதை விடாதிங்க. யாரோ சொல்றதைக் கேட்டுட்டு எங்களப் பட்டினியா போட்டுறாதீங்க. சித்த
வைத்தியருங்க வேற வேலை இல்லாம சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க” - சின்னவன்.
“டேய்,
என்ன வியாக்கியானம் பேசுறீங்க? மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்னே கசக்கும்,
பின்னே இனிக்கும்னது சும்மாவா? அம்மா சொல்றதைக் கேட்டுட்டுச் சாப்பிடுங்கடா!” - அதட்டினார்
அப்பா.
“வாய்க்கு
ருசியா ஒண்ணுமில்லாம சும்மா எப்படிப்பா சுரைக்காயை மட்டும் சாப்பிட முடியும்?” - பிள்ளைகள்
கேட்டனர்.
“சுரைக்காயில்
ஆயிரம் நன்மை இருக்கு, கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறாம சும்மா சாப்பிடுங்க” - அம்மா.
“டேய்,
ஒரு காலத்தில கூழ் சாப்பிடுறவன் ‘கூலிக்காரப்பய’ என்று
கேலி செஞ்சது போக, இப்ப கோடீஸ்வரன் கூழ் சாப்பிடுறான். உழைப்பாளி சோறு சாப்பிடுறான்,
காலம் மாறிப்போச்சு தெரியுமா?\\\" என்று அப்பா சொல்லிவிட்டு எழுந்தார். “நான் கம்பெனிக்குப்
போறேன். நீங்க ரெண்டு பேரும் மூணு மணியப்போல கம்பெனிக்கு வாங்க” - அப்பா கிளம்பினார்.
“அப்பா,
அங்க வந்து என்னப்பா செய்யப் போறோம்?”
“ஒண்ணும்
செய்ய வேண்டாம். கம்பெனியில் என்ன நடக்குதுன்னு சும்மா பாத்துக்கிட்டு இருந்தாபோதும்.”
மூன்று
மணிக்கு அண்ணன், தம்பி இருவரும் கம்பெனிக்குக் கிளம்பிச் சென்றார்கள். அப்பா மகன்களை
அலுவலகத்தில் அமரச் செய்தார். அந்த நேரத்தில் அப்பாவின் நண்பர்கள் முகமதுவும், முத்துவும்
வந்தார்கள்.
“என்னப்பா
ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?” - அப்பா கேட்டார்.
“ஒண்ணுமில்லப்பா
சந்தியாகு, சும்மா உன்னைப் பாத்துட்டுப் போகலாமுன்னுதான் வந்தோம்” - கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்.
“ரெண்டு
பேரும் சும்மாவா வந்தீங்க, ஏதாவது சுமந்துக்கிட்டு வரக்கூடாது?”அப்பா கேட்டார்.
“நெஞ்சில்
கவலைய, பாரத்தைச் சுமந்துக்கிட்டுத்தான் முகமது வந்திருக்கான்” - முத்து கூறிவிட்டு, கையிலிருந்த பழங்களைக் கொடுத்தான்.
“இதெல்லாம்
எதுக்கப்பா?”- அப்பா
“சும்மா
எப்படியப்பா வர்றது? கூடப் பிறக்கலைன்னாலும் எங்க தங்கச்சி, தங்கச்சி பிள்ளைங்கள்ல” - முகமது.
“முகமது
என்ன கவலையோட இருக்கீங்க? சும்மா சொல்லு, எதுவாக இருந்தாலும் உதவி செய்கிறேன்” - அப்பா
அப்பாவுக்கும்,
அவருடைய நண்பர்களுக்கும் நடக்கிற உரையாடலைப் பையன்கள் இருவரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“சந்தியாகு,
என்னுடைய மகன் யாக்கூப்புக்கு திடீரென மாரடைப்பு வந்திருச்சு. இதயத்தில் இரண்டு அடைப்புகள்
இருக்காம். நாளைக்குள் மூன்று இலட்சம் பணம் கட்டினால்தான் நாளை மாலை ஐந்து மணிக்கு
ஆப்ரேஷன் நடக்கும். வேற வழி தெரியல, உன்னிடம்
கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தோம்” - முகமது கூறினார்.
“அது
சரி, என் மகள் மூத்தவனும், உன் மகனும் ஒரே செட்டு. 28 வயதுதான் ஆகிறது. இந்த வயசுல
மாரடைப்பு வந்துருச்சே! அத நினைக்கும்போதுதான் வருத்தமாயிருக்கு” என்றார் சந்தியாகு.
“வீட்டில்
சாப்பிடுவதே இல்லை. மத்தியானம் பிரியாணி, இரவில் ஃப்ரைட் ரைஸ், பரோட்டா, ஃபாஸ்ட் புட்,
ஜங்க் புட் இவைகளையே சாப்பிட்டா மாரடைப்பு வராமல் என்ன செய்யும்? என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க? சும்மா இந்த வயசில
வந்து ஆப்ரேசன்னு நின்னீங்கன்னா, இந்தத் தலைமுறைப் பசங்க எப்படி வாழப்போறாங்களோன்னு
டாக்டர் வருத்தப்பட்டார்...” முகமது கூறினார்.
“டேய்
பசங்களா, நிலைமையைக் கவனிச்சீங்களாடா? வீட்டுச் சாப்பாடு சாப்பிடாம சும்மா ஓட்டலில்
சாப்பிட்டா இந்தக் கதிதான்” - பசங்களை எச்சரித்தார் அப்பா.
“சரி
நண்பா, நல்ல வேளை... நீ கேக்குற நேரம் என்னிடம் பணம் இருக்கு. உன் மகன் நூறாண்டு வாழணும்.
இந்த மூணு இலட்சத்தையும் சும்மா வாங்கிட்டுப் போ. எப்ப முடியுமோ அப்பக் கொடு. ஆபத்துக்கு
இல்லாத பணம் எதுக்கு இருக்கு? எங்கிட்ட சும்மாதான்
இருக்கு” என்று அப்பா பணத்தைக் கொடுத்தார். முகமதுவும்
வாங்கிக் கொண்டார்.
“கொண்டு
போய் பையனை நன்றாகக் கவனி” என்று சொன்னவர், “இந்தா, லெதர் பேக்
சும்மாதான் இருக்கு; அதுல வச்சுக்கொண்டு போ, ஆப்ரேசன் நேரத்துல நான் வந்துடுறேன்” என்றார் சந்தியாகு.
“டேய்
தம்பிகளா, அம்மா வீட்ல செஞ்சு கொடுக்கிறதை மட்டுந்தான் சாப்பிடணும்” என்று முத்துவும், முகமதுவும் பிள்ளைகளிடம் கூறினார்கள்.
“சரிங்க
அங்கிள், வாழ்க்கையின் இரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டோம், காய்கறிகளைத்தான் அதிகமாகச்
சாப்பிடுவோம். ஓட்டலில் கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட மாட்டோம். பரோட்டாவிலுள்ள மைதா
இதயத்துக்குக் கேடு என்பதையும் தெரிஞ்சுக்கிட்டோம்” என்று பையன்கள் இருவரும் கூறினார்கள்.
முகமதுவும்
முத்துவும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்பா தன் மகன்களிடம், “சரி, வீட்டுக்குப் புறப்படுங்க.
சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு, செல்போன் பாத்துக்கிட்டு நடந்து போகாமா கவனமா ரோட்டைக்
கிராஸ் பண்ணி வீடு சேருங்க” என்று சொன்னார். அப்பா, அம்மான்னா சும்மாவா?
அவனை நாங்கள் ‘இடி’ என்று அழைப்போம். ‘இடியட்’ என்பதன் சுருக்கம் அது. என்னதான் முட்டாளாய் இருந்தாலும், ஒருவரை நேரடியாக ‘முட்டாள்’ என்று அழைப்பது முட்டாள்தனம் இல்லையா? எங்கள் கல்லூரியில் அவனை முதலில் ‘முட்டாள்’ என அழைத்தவர் அவன் அப்பாதான். அவன் ஓரளவு நன்றாகப் படிப்பவன்தான். 90 சதவிகிதம் வாங்கமாட்டான்; ஆனால், 70 சதவிகிதம் வாங்கிவிடுவான். எனவே, அவன் அறிவில்லாத முட்டாள் அல்ல; அறிவுள்ள முட்டாள்தான். யாருக்கும், எந்த நிலையிலும் உதவி செய்வான். இதுதான் அவன் முட்டாள் பட்டம் பெறக் காரணம்.
‘இடி’ கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போதே கவனித்திருக்கிறேன்; அங்கு வந்திருந்த அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருந்தான். எல்லாருக்கும் உதவி செய்து விட்டு, கடைசி நேரத்தில் ஓடிச்சென்று தன்னுடைய விண்ணப்பத்தைக் கொடுத்தான். அன்றிலிருந்து அவனைக் கவனித்து வருகிறேன். அவனிடம் உண்மையாக உதவி பெற்றவர்களுக்குச் சமமாக, அவனை ஏமாற்றுபவர்களும் இருந்தார்கள். ஆனால், அவன் சளைக்காமல் மீண்டும் மீண்டும் சென்று உதவுவான். போகும், வரும் வழிகளில் யாராவது விபத்தில் அடிபட்டால், உடனே அங்கு முதல் ஆளாய்ப் போய் நிற்பான். அவர்களை வீடு சேர்ப்பது வரை விடமாட்டான். ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை, கடந்த இரண்டு வருடங்களில் இருபது முறையாவது இப்படிச் செய்திருப்பான்.
ஒருமுறை நான் அவனுடன் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும்போது இப்படித்தான் தூரத்தில் ஒரு விபத்தைப் பார்த்தான். சைக்கிளை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிச்சென்றான். நான் திரும்பி வந்துவிட்டேன். பிறகு இரத்தக் கறையுடன் வகுப்புக்கு வந்தான். இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வுக்கான கட்டணம் கட்ட வரிசையில் நின்றிருந்தபோது, அவனைப் பலமுறை ஏமாற்றியிருந்த ‘சாண்டி’ எனப்படுகிற சாந்தகுமார் வந்தான். கல்லூரிக்கு வரும் வழியில் தன் மணிப்பர்சை யாரோ திருடிவிட்டார்கள் என்றும், தேர்வுக் கட்டணத்துக்குப் பணமில்லை என்றும் ‘இடி’யிடம் கேட்டான். ஒரு நொடிகூட யோசிக்காமல் ‘இடி’ அவனுக்குத் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தான். அடுத்த வாரம் அவனது அப்பா வந்தபோதுதான், அவன் செய்திருக்கும் வேலை வெளிவந்தது. அவன், தான் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தைதான் சாண்டிக்குத் தந்திருக்கிறான். அவன் தேர்வுக்குப் பணம் கட்டவில்லை என்று பிரின்சிபல் அவன் அப்பாவை அழைத்திருந்தார். அன்றைக்குத்தான் பல மாணவர்களுக்கும் முன்புவைத்து அவன் அப்பா அவனை ‘முட்டாள்’ எனத் திட்டினார்.
வார இறுதியில் பார்வையற்றவர்களுக்குப் பாடம் வாசிக்கச் செல்வான். தமிழ் மீடியம் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பான். பண்டிகைக்கு முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் என்று சென்று கொண்டாடுவான். சினிமா, மால், செல்போன் என எதையும்விட இதைத்தான் கொண்டாடினான். நாங்கள் எல்லாம் வேலை கிடைக்க வேண்டும், வெளிநாடு போக வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தோம். சிலர் சோஷியல் மீடியாவில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தனர். ஆனால், இவன்?…இந்தக் காலத்தில் இப்படி ஒருவன் இருந்தா அவனை ‘இடியட்’ என்று அழைக்காமல் என்ன செய்வது? அதைத்தான் அவன் அப்பாவும் செய்தார். ஆனால், ஒருசிலர் அவனைக் கவனித்தார்கள் என்பது உண்மைதான். அவன் பரிட்சைக்குப் பணம் கட்டாமல் போனான் அல்லவா! அந்தக் கதையைக் கேள்விப்பட்ட எங்கள் கல்லூரியின் வயது முதிர்ந்த அருள்பணியாளர் அவனைக் கூப்பிட்டு பணக்காரரான தன் உறவினர் ஒருவரிடம் சொல்லி அவன் கல்லூரிப் படிப்பு முடியும் வரை எல்லாக் கட்டணங்களையும் செலுத்தச் சொல்லிவிட்டார். ஆனாலும், அவன் செய்த செயல் முட்டாள்தனமானதுதானே? அப்படித்தானே உங்களுக்குத் தோன்றுகிறது? என் தாத்தா அடிக்கடிச் சொல்வார், ‘தனக்குப் பின்தான் தானம்’, ‘ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்’. ஆனால், இப்படிக் கணக்குப் போடாமல் வாழும் ‘இடியட்’ சிலர் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் என் வீட்டில் போய் இன்னொருவருக்கு உதவ ஐந்து ரூபாய் கொடுத்தேன் என்றால், என் அப்பா முறைப்பார்; அம்மா அறிவுரை சொல்வார். ‘ஒன்னைய ஈசியா ஏமாத்திருவாங்கடா?’ என்பார்கள்.
நேற்று ‘இடி’யிடம் ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என நேரடியாகக் கேட்டுவிட்டேன். ‘உன்னை எல்லாரும் முட்டாள் என நினைக்கிறார்கள் தெரியுமா?’ என்றேன். அவன் ஒரு கதையைச் சொன்னான்.
ஒன்பது வயது இருக்கும்போது அவன் விடுமுறைக்குத் தன் சித்தி வீட்டுக்குச் சென்றான். அவர்கள் வீடு ஒரு சிறிய இரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருந்தது. அவனும், சித்தி வீட்டைச் சுற்றி இருந்த பையன்களும் அங்கு சென்று விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்துவிட்டான். பையன்களின் கூச்சலைக் கேட்டு இரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வட இந்திய இளைஞன் ஓடி வந்து கிணற்றில் குதித்து ‘இடி’யைக் காப்பாற்றினான். இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் இருந்தனர். ‘இடி’யைவிட, காப்பாற்றக் குதித்தவனுக்கு அடி அதிகம். காலில் எலும்பு முறிவு.
வட இந்தியாவிலிருந்து அவன் மாமா ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். வந்தது முதல் அவனைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவர் அவனை என்ன சொல்லித் திட்டினார் தெரியுமா? “பேவ்கூஃப், பேவ்கூஃப்”…(முட்டாள், முட்டாள்) என்று திரும்பத் திரும்பத் திட்டிக்கொண்டிருந்தார். அவனுக்கு வேலை கிடைத்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது. குடும்பமே அவனை நம்பிதான் இருந்தது.
‘உண்மையில் அவன் செய்த காரியம் எத்தனை முட்டாள்தனமானது என்று நான் நினைத்தேன்’ என்றான் ‘இடி’. “எனவே, நானும் ஒரு முட்டாளாக வாழ முடிவு செய்துவிட்டேன்” என்றான்.
எப்படிப்பட்ட முட்டாள்கள் பாருங்கள்! இதுபோன்ற முட்டாள்கள் இன்னும் முட்டாள்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், மனத்தில் பொறாமை தோன்றத்தான் செய்தது. ஒருவன் புனிதனா? அல்லது முட்டாளா? என்று அறிவது எப்படி?