இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. பொதுவாக, தவக்காலம் என்றதுமே சாம்பல், சாக்குத்துணி, நோன்பு, தவம், தர்மம் போன்ற அடையாளங்கள் நம் மனத்தை நிரப்பும். சோகம், துயரம், மனவருத்தம், ஒருவகைக் குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் என்பது இறைவனின் இரக்கத்தையும் அருளையும் அன்பையும் மன்னிப்பையும் கொண்டு வரும் வசந்த காலம் என்ற பொருளில் சிந்திப்பது நல்லது.
தவக்காலம்,
நம்மையே நாம் புடமிட்டுப் பார்க்க வேண்டிய சுயஆய்வுக்கான காலம்; இறைவனின் நிபந்தனையற்ற அன்பினை நினைத்து உள்ளம் உருகி ஒப்புரவாகும் காலம்; குற்றங்களிலிருந்து திருந்தி வரும் காலம்; இறைவன் பக்கம் திரும்பி வரும் காலம்; இறைவனோடு ஒன்றிக்கவும், இலக்கு நோக்கிப் பயணிக்கவும் நமக்கு ஊக்கமளிக்கின்ற, வழிகாட்டுகின்ற காலம்; தீமைகளிலிருந்து விடுபட, தீயோனிடமிருந்து விலகிச் செல்ல ஆற்றல் தரும் காலம்; ஆண்டவனின் அருகில் செல்ல, அலகையின் ஆர்ப்பரிப்பிலிருந்து அகன்று செல்ல இறைவன் நம்மை அழைக்கும் மனமாற்றத்தின் காலம்.
ஒவ்வோர்
ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திரு அவை நம்மை அழைக்கிறது. இன்றைய நாளில் இயேசு சந்தித்த மூன்று சோதனைகளையும், அவற்றை எவ்வாறு இயேசு முறியடித்தார் என்பதையும் சிந்தித்து வாழ்வாக்க முயற்சி செய்வோம்.
சோதனை
என்பது என்ன? நம் தீய உணர்வுகளாலும் நாட்டங்களாலும் தீயன செய்வதற்குத் தூண்டப்படும் இயல்பே சோதனை. இச்சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கியமான கூறு எனலாம். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எப்படிப் பார்க்கிறோம்? தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவதுபோல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். சோதனை நேரங்களில் ‘சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை’ - இப்படித்தான் நமது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறோம். ‘மிகப்பெரிய சோதனையில மாட்டிக்கொண்டேன், என்னால எழ முடியல’, ‘எல்லாம் என் தலைவிதி’,
‘ஒரே சோதனையா இருக்குப்பா, குடும்ப வாழ்க்கையை நடத்தவே முடியல...’ போன்ற உணர்வுகளை நாம் பல நேரங்களில் வெளிப்படுத்துகிறோம்.
சோதனைகளுக்கு,
தீய நாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது, நமது சொந்தச் சக்திக்கு மீறியதாய் சோதனைகள் வரும்போது, மனத்திலே உறுதி குறையலாம், நம்பிக்கை தளரலாம். ‘எதுவும் என்னால் செய்ய இயலாது’ என்ற மாயை உருவாகலாம். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், சோதனைகளோடு போராடி வெற்றிபெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும் உறுதியான மனமும் உள்ளன என்பதையே இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார். இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும், நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்ற உணர்வும் நம்மில் உருவாக வேண்டும்.
இயேசு
‘அலகையினால் சோதிக்கப்பட்டார்’(லூக்
4:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. தூய ஆவியாரால் இயேசுவின் பணியில் தொடங்கப்பட்ட திட்டமானது தீய ஆவியால் தடங்கலுறுகிறது. அவர் தீய நாட்டங்களாலோ உணர்வுகளாலோ சோதனைக்குட்படவில்லை; மாறாக, தம் பணிக்குறிக்கோளிலிருந்து திசைமாற அலகையினால் தூண்டப்படுகிறார். அவர் சோதனைகளைச் சந்தித்து, அலகையின் பிடியில் விழாது, அதைத் துரத்தி மிக எளிதாக வெற்றி கண்டார். எப்படி? அவர் பாலைநிலத்தில் நாற்பது நாள் தம் தந்தையின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். தூய்மையான கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படிச் சோதனையில் விழமுடியும்? தந்தையும் தம் மகனை விழவிடவில்லை என்பது இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் நல்லதொரு பாடம்.
இயேசு
அலகையால் மூன்று சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார். அவை: அ) இயேசு தம்முடைய
இறையாற்றலைப் பயன்படுத்தித் தம் பசியைத் தீர்த்துக் கொள்ள, அதாவது கல்லை அப்பமாக்கி உண்ண;
ஆ)
உலக அரசுகள் மேல் அதிகாரம் பெற தன்னைத் தெண்டனிட்டு வணங்க; இ) ‘கடவுள் காப்பாற்றுகிறாரா?’ என்பதைச் சோதித்துப் பார்க்க, கோவிலின் உயர்ந்த பகுதியிலிருந்து குதிக்க என்பன.
கல்லை
அப்பமாக மாற்றச் சொல்லி முன்வைத்த முதல் சோதனை, நம் பேராசையுடன் தொடர்புடையது. கடவுளின் துணை இன்றியும், கடவுளுக்கு எதிராகச் சென்றும் நாம், வாழ்வில் நிறைவைக் காணமுடியும் என்று பல வேளைகளில் நம்மை
நம்பவைக்க அலகை எடுக்கும் முயற்சிகளையே இந்தச் சோதனை குறித்துக் காட்டுகிறது. இரண்டாவது சோதனை, பணம், பதவி, மற்றும் அதிகாரம் என்ற பொய்த் தெய்வங்கள் முன் தலை வணங்குவதைக் குறிக்கின்றது. மூன்றாவது சோதனை, கடவுளை நம் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்த முனைவதைக் குறித்துக்காட்டுகிறது. இம்மூன்று சோதனைகளையும் 1. பேராசையைத் தூண்டும் சோதனை, 2. அதிகாரத்தின்மீது நாட்டம் கொள்ளும் சோதனை, 3. புகழ் மற்றும் ஆணவத்தின் மீதான ஆசையைத் தூண்டும் சோதனை என வகைப்படுத்தலாம்.
இயேசு
எவ்வாறு இச்சோதனைகளை முறியடித்தார்? 1. இயேசு தந்தையின்மீது கொண்ட உறவு (இறைவேண்டல்). 2. உலகப்பொருள்களின்மீது அவருக்கிருந்த பற்றின்மை (இச்சையின்மை). 3. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் மன உறுதிப்பாடு (இறைவார்த்தை).
இவை மூன்றும் இயேசுவுக்கு அலகையின் திட்டங்களைப் புறந்தள்ளும் வெற்றிகரமான பாதைகளாக அமைந்தன. இயேசு இறைவார்த்தையைப் பயன்படுத்தி அலகையை வென்றது, கடவுளின் முன் தாழ்ச்சியோடும் மன உறுதியோடும் செயல்பட்டது
நம் வாழ்விற்குச் சிறந்ததொரு பாடமாக அமைகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் இயேசு எதிர்கொண்ட இந்த மூன்று சோதனைகளையும் குறித்து மக்களுக்குப் போதிக்கும்போது, “ஒரு பொருளை உடைமையாக்குவதில் அல்ல; அதைப் பகிர்வதிலும், பிறர்மீது அதிகாரம் காட்டுவதில் அல்ல; அன்புகூர்வதிலும், புகழ், ஆணவத்தின்மீதும் அல்ல; பணிபுரிவதிலும் நாம் செயல்பட்டால் இயேசுவைப்போல அலகையின் திட்டங்களை முறியடிக்க முடியும்”
என்கிறார் (மூவேளைச் செபவுரை, மார்ச் 6, 2022).
சோதனைகள்
இல்லாத வாழ்க்கை இல்லை. அலகையின் சோதனையில் விழாதவர்கள் எவரும் இல்லை. நாம் யாவருமே வாழ்கையின் வெவ்வேறு கட்டங்களில் சோதனைகளை எதிர்கொள்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் பல்வேறு வகைகளில் அமைகின்றன. மனஅழுத்தம், அச்சம், விரக்தி போன்ற உளவியல் சோதனைகள், வேலை இழப்பு, வறுமை, கடன் போன்ற பொருளாதாரச் சோதனைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான உறவுசார்ந்த சோதனைகள், நோய், மனநலப் பாதிப்புகள் போன்ற உடல்நலச் சோதனைகள், அநீதி, சாதி, சமய வேறுபாடுகள் போன்ற சமூகச் சோதனைகள் என நாம் எதிர்கொள்பவை
கணக்கிலடங்காதவை. துன்பம் அல்லது சோதனைகளுக்கு ‘மனிதப் பேராசையும்’ ஓர்
அடிப்படைக் காரணமாக அமைகிறது.
இன்றைய
நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனைகளைப் போன்றே பொருள், அதிகாரம் மற்றும் புகழுக்கான சோதனைகள் நம் வாழ்வுப் பயணத்திலும் வருகின்றன. நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் உடல் ஆசை, பண ஆசை, பொருளாசை,
பதவி ஆசை, புகழாசை என்பவை தீராத ஆசைகளாக இறுதிவரை இருக்கின்றன. ஆசைகள் ஒரு மனிதருக்கு அதிகமாக இருப்பதால்தான் தொடர்ந்து துன்பங்களும் சோதனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆசைகள் இல்லை என்றால், துன்பம் இல்லை என ‘அவாஅறுத்தல்’ எனும்
அதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:
‘அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது
மேன்மேல் வரும்’
(குறள் 368).
நாம்
எப்படிச் சோதனைகளில் வெற்றி காணமுடியும் என்பதற்கு இன்றைய முதல் இரண்டு வாசகங்களிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்களின் மிகப் பழமையான ‘நம்பிக்கை முழக்கம்’
ஆகும். இவ்வாசகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வைச் சுருங்கக் கூறுகிறது. சாதாரண நாடோடி இனமாக இருந்த இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தெரிந்துகொண்டு, ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பினார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டைக் கொடையாக வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்துகிறார். வலிய கரத்தாலும் அஞ்சத்தக்க பேராற்றலாலும் கடவுள் அருஞ்செயல்களை நிகழ்த்தி வழிநடத்தி வந்ததற்காகவும், நாட்டை வழங்கியதற்காகவும், முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து நன்றிகூறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், ‘இயேசுவே ஆண்டவர்’ எனவும், ‘அவர் சாவை வென்று உயிர்த்தெழுந்தார் எனவும் நாவால் அறிக்கையிட்டு வாழ்பவரே மீட்பு பெறுவர்’ எனப் பவுல் அறிக்கையிடுகிறார்.
ஆக,
ஒருவர் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அவ்வப்போது தன்னைச் சரிசெய்துகொள்ளும்போதும், உயிருள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்போதும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும் என்கிறது முதல் இரண்டு வாசகங்கள்.
நிறைவாக,
நாம் தொடங்கியிருக்கின்ற இத்தவக்காலத்தில், நாம் என்ன செய்யலாம்? முதலில், இடைவிடா இறைவேண்டல் நமக்குத் தேவை. இத்தவக்காலத்தில் அமைதிக்கும் இறைவேண்டலுக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் இதயங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் அலகையின் கவர்ச்சிகரமான சூழ்ச்சிகளை முறியடிப்போம். இரண்டாவது, எவ்வேளையிலும், பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமலும் அலகையோடு உடன்பாடு செய்து கொள்ளாமலும் தீமைகளை எதிர்கொள்ள இறைவார்த்தையின் துணையை நாடுவோம். இறுதியாக, நம் கண்களை இறைவனின் பார்வையோடு பதித்து அவர் திருவுளம் நிறைவேற்ற முன்வருவோம். இன்றைய பதிலுரைப் பாடல் உரைப்பது போன்று, “துன்ப வேளைகளில் எங்களோடு இருந்தருளும், ஆண்டவரே” என இறைவனை நோக்கி
வேண்டிக்கொள்வோம்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அலோன்சோ ஆல்வரஸ் பாரெடா (Alonso Alvarez Parreda) என்பவர் இயக்கிய ஓர் உணர்வுப்பூர்வமான ஆறு நிமிடக் குறும்படம் ‘ஓர் அடையாளத்தின் கதை’ (The Story of a Sigh). ஒரு பார்வைத் திறனற்ற முதியவர் சாலையோரம் அமர்ந்து, தனது அருகில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்து உதவி கோருகிறார். அந்தப் பலகையில், ‘என்மீது பரிவு காட்டுங்கள், நான் பார்வையற்றவன்’ (‘Have Compassion, I am Blind’) என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புப் பலகையைப் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. அப்போது அந்தப் பக்கமாக வரும் இளைஞர், அந்தப் பார்வைத் திறனற்றவரின் அருகிலே வந்து, அந்த அறிவிப்புப் பலகையைக் கையில் எடுத்து, ஏதோ எழுதி, அவர் அருகில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார். சில நிமிடங்களில் அந்தப் பக்கமாகச் செல்கிறவர்கள் ஒவ்வொருவரும் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்துவிட்டு, அந்தக் குவளையில் தங்களிடம் இருந்த காசைப் போடுகிறார்கள். மாலைக்குள் குவளை நிரம்பிவிடுகிறது. தரையிலும் சில நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. கை நிறைய அதை அள்ளி மகிழ்ச்சி அடைகிறார் அந்த முதியவர்.
மாலையில்
அந்த இளைஞர் பார்வையற்றவரின் அருகில் வந்து அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்த்தபடி நிற்கிறார். அந்த முதியவர் இவரின் காலணிகளைத் தடவிப்பார்த்து, காலையில் வந்தவர் இவர்தான் என அறிந்துகொண்டு, “அப்படி என்னதான்
எழுதினீர்கள்?” என வினவுகிறார். “இன்று
மிக அழகான நாள்; ஆனால், அதை என்னால் பார்க்க இயலவில்லை (‘Today is a Beautiful day; and I can\\\'t see it’) என்று எழுதினேன்”
என்று சொல்லிக் கடந்து செல்கிறார்.
ஒரு
வார்த்தையின் ஆற்றலை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் குறும்படம். சரியான வார்த்தைகள் நம் வாழ்வையே மாற்றிவிடும் என்பதற்கு இந்த அழகிய காணொளி சிறந்த எடுத்துக்காட்டு. மனிதரின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். சொற்கள் வெறும் சத்தங்கள் அல்ல; அவை விதைகள். விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு மற்றொரு விதையாகவும் மாறுகிறது. இடம் அறிந்து விதைத்தால், அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பலன் மிகப்பெரிது.
ஆண்டின்
பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு வாசகங்கள் ஒரு மனிதரின் நற்குணம் அல்லது நல்மதிப்பீடு என்பது அவரவர் பேசும் சொற்களையும் செயல்களையும் மையமாகக் கொண்டு அமைகிறது எனப் போதிக்கிறது.
சீராக்கின்
ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மனித வாழ்வின் அறநெறி மற்றும் வாழ்வியல் நெறியைப் பற்றிப் போதிக்கிறது. இவ்வாசகம் ஒரு மனிதரை அவரது சொற்களையும் உரையாடலையும் கொண்டு கணிக்கலாம் என்கிறது. இரண்டு உவமைகள் வழியாக ஆசிரியர் விளக்கம் அளிக்கிறார். முதல் உவமை: ‘சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது.’ இரண்டாவது உவமை: ‘குயவரின் கலன்களைச் சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை உரையாடல் பரிசோதிக்கின்றது.’ அதாவது, மாவு சலிக்கும்போது உமி சல்லடையின் மேலே தங்குவதுபோல, மனிதர்கள் பேசும்போது அவர்களின் பேச்சில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. குயவன் உருவாக்கிய மண்பாண்டங்கள் உறுதியானவையா, உறுதித்தன்மையற்றவையா என்பது சூளைக்குள் போடப்பட்டுச் சோதிக்கப்படுகிறது. அதுபோலவே ஒரு மனிதரின் உரையாடல் மூலம் அவரது தரமும் பண்பும் அறிவும் சோதிக்கப்படுகிறது என ஆசிரியர் விளக்கம்
தருகிறார்.
உரையாடல்
என்பது மனிதனின் உள்ளத்தை வெளிக்காட்டும் ஒரு கருவி. ஒரு மனிதர் நல்லவரா? கெட்டவரா? என்பது அவர் பேசும் பேச்சைக் கொண்டும், உரையாடல் வழியாகவும் கண்டுகொள்ள முடிகிறது. மேலும், ஒரு மனிதரின் நற்குணத்தையும் நல்மதிப்பீட்டையும் அவரது வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அறிந்துகொள்ள முடியாது. மாறாக, அவர் பேசும் சொற்களையும் உரையாடலையும் கொண்டே அறிந்துகொள்ளலாம். ஒருவர் பேசும் நல்ல சொற்களே நல்ல செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. நற்சொல்லும் நற்செயலும் ஒரு மனிதரின் உயர்ந்த பண்புகள். நல்ல சொற்களோடு நல்ல செயல்களும் இணைந்திருக்கின்றன. நல்ல சொற்கள் ஒரு மனிதரை மதிப்படையச் செய்கிறது; பிறரை மகிழ்விக்கிறது; நம்பிக்கையைக் கொடுக்கிறது; ஊக்கமளிக்கிறது. நல்ல செயல்கள் ஒரு சமூகத்திற்குப் பெரும் நன்மைகளைக் கொண்டு வருகிறது. எனவே, நல்ல செயல்கள் செய்வதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என இன்றைய இரண்டாம்
வாசகம் வழியாகப் போதிக்கிறார் திருத்தூதர் பவுல்.
கொரிந்து
நகரக் கிறித்தவர்களில் சிலர் கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உயிர்த்தெழுதலே இல்லை என்று வாதித்து வந்தனர். ‘நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே... பிறகு ஏன் உழைக்க வேண்டும்?’ எனச் சிலர் கேள்வி எழுப்பினர். இந்தப் பின்புலத்தில் ‘சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைக்கும் கொடை’ என்று அக்களிக்கிறார் பவுல். கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர் எனப் போதிக்கிறார். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத்தருகிறது என்று கூறிக் கடவுளுக்கு நன்றிகூற விழைகிறார்.
தொடர்ந்து,
‘உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள். நீங்கள் உழைப்பது ஒருபோதும் வீண்போகாது’ என்று
அறிவுரை வழங்கி, நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்களே உயிர்ப்பின் கனிகள் என நமக்கு ஊக்கமளிக்கிறார்.
‘கை தவறினாலும், நற்செயல் தவறக்கூடாது’ என்பார்கள்.
அதாவது தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமில்லை; ஆனால், நற்செயல் செய்யாமல் ஒருபோதும் இருக்கக்கூடாது எனப் பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
இன்றைய
நற்செய்தி வாசகத்தில், இயேசு இரண்டு உருவகங்களை வாழ்க்கைப் பாடமாகக் கற்றுத்தருகிறார். முதலில் ‘பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவாரல்லவா?’ என்று இயேசு எழுப்பும் இந்தக் கேள்விகள் யார், யாருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. உடல் அளவில் பார்வையிழந்தோர் மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்பதை இயேசு இவ்வுருவகம் வழியே வலியுறுத்தவில்லை. மாறாக, வழிகாட்ட விரும்பும் குரு, தன் சீடர்களைவிட, தெளிவான பார்வை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இந்த அணுகுமுறையிலேயே
திருத்தந்தை பிரான்சிஸ், ‘பிறருக்குக் கற்பிக்கும் பொறுப்பிலுள்ளோர் குறிப்பாக, ஆன்மிக மேய்ப்பர்கள், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் கடமையுணர்ந்து, மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும்’
எனக் கேட்டுக்கொள்கிறார் (ஞாயிறு மூவேளைச் சிந்தனை, மார்ச் 3, 2019).
இயேசு
குறிப்பிடும் இரண்டாவது உருவகத்தில், ‘நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?’ எனக் கேள்வி எழுப்பும் இயேசு, தன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் ஒருவரின் வெளிவேடத்தைத் தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கிறார். இயேசுவின் இச்சிந்தனையை வள்ளுவர் ‘குற்றங்கடிதல்’ எனும்
அதிகாரத்தில்,
‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற
மாகும் இறைக்கு’
(குறள் 436)
என்கிறார்.
அதாவது, முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கிய பிறகு, பிறர் குற்றத்தைக் கண்டு வழிகாட்டும் தலைவருக்கு எந்தக் குறையும் இருக்காது என்கிறார். திருத்தந்தை ‘நம் குறைகளைக் காண மறுத்து, மற்றவர்களின் குறைகள் குறித்து அதிகம் அசைபோடுதல், மற்றவர்களைக் குறித்து புறங்கூறி, மனிதர்களிடையே முரண்பாடுகளையும் பகைமையையும் தீமைகளையும் விதைத்தல் போன்ற பழக்கங்களைக் கைவிட்டு, தங்கள் பாவங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்த நாம் முன்வர வேண்டும்’
என அழைப்பு விடுக்கிறார் (ஞாயிறு மூவேளைச் சிந்தனை, மார்ச் 3, 2019).
இறுதியாக,
‘கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை; ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்’; ‘உள்ளத்தின்
நிறைவையே வாய் பேசும்’ எனும் இயேசுவின் சொற்கள் வழியாக, ஒருவரின் நன்மதிப்பீடு அவரது நற்சொல்லிலும் நற்செயலிலும் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
எனவே,
நம் பார்வையில் மரக்கட்டைகளாகத் தைத்து நிற்கும் குறைகளைத் தூர எறிந்து, தெளிவான பார்வையுடன் பிறரது குறைகளை அகற்ற உதவிகள் செய்யவும், அவர்களை உன்னத வழிகளுக்கு அழைத்துச் செல்லவும் இறைவன் நமக்கு அருள்தர வேண்டுமென்று செபிப்போம். நல்வார்த்தைகளால் பிறரை ஊக்கப்படுத்துபவர்களாகவும்,
நற்செயல்களால் நற்கனியைக் கொடுக்கக்கூடிய நல்ல மரங்களாகவும் வாழ்வோம். நலம் தரும் வார்த்தைகள்தான் நற்செய்தி. அவற்றை நம் ஆண்டவர் இயேசு நமக்குத் தந்திருக்கிறார். இயேசு தரும் நலமான வார்த்தைகளை இதயத்தில் ஏந்தி, பிறரைப்பற்றி நாம் எப்போதும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் எவரையும் தவறாகத் தீர்ப்பிடாமல், ஆண்டவரின் வார்த்தைகளின்மீது அடித்தளமிட்டவர்களாகவும் இறைவேண்டலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ்வோம். நம் வாழ்வு வெறும் பேச்சுகளில் அன்று; செயல்களில் காட்டப்பட வேண்டும். நல்ல சொல்லைப் பேசவும்
நல்ல செயலைச் செய்யவும் ஆண்டவர் அருள்புரியட்டும். நற்சொல்லும் நற்செயலுமே ஒரு நல்ல மனிதரின் அடையாளம்!
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஒரு சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்த சிறாரின் மனநலம் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அடுத்து என்ன செயல் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், சிறார் மற்றும் வளரிளம் பருவத்திலேயே பல கொலைகளைச் செய்து, சீர்த்திருத்தப் பள்ளியில் இவர்கள் இருப்பதற்குக் காரணம் ‘இவர்கள் சிறுவயதில் வெறுக்கப்பட்டதே’ என அந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.
அந்த
ஆய்வில், ஓர் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஒரு சிறுவன் கூறியது: “என் அப்பா என்னை வெறுத்தார். ஏனெனில், அவர் எனது இரண்டாவது அப்பா. என் வீட்டில் நாய் குட்டிக்குக் காட்டிய அன்பைக்கூட அவர் என்னிடம் காட்டியதில்லை. அவருக்குப் பிறந்த என் தம்பி மீதுதான் அவ்வளவு பாசம். நான் மனத்தளவில் தனிமைப்படுத்தப்பட்டேன். நான் விளையாட்டு வீரனாகிக் குடும்பத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டுமென விரும்பிய அவர், அதற்காகச் சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார். என்னை வெறுத்த அவருக்கு நான் ஏன் பெருமை தேடித் தரவேண்டும்? அதற்கு மாறாக, நான் அவருக்கு அவமானத்தைத் தேடித்தர விரும்பினேன். அவர் குற்ற உணர்வால் காலமெல்லாம் கண்ணீரில் துடிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டேன்”
என்றான்.
1994-ஆம் ஆண்டு
ஏப்ரல் 7-ஆம் தேதிக்கும், ஜூலை 15-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அந்நாட்டின் ஹமூட்டு மற்றும் துட்சி இனத்தவர் ஒருவரையொருவர் கொன்று பழிதீர்த்துக் கொண்டனர். இதில், ஐந்து இலட்சம் முதல், பத்து இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் துட்சி இனத்தவர். இந்த இனப் படுகொலைகளுக்குக் காரணம், இவ்விரு இனத்தவரும் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வே!
இவ்விரு
நிகழ்வுகளிலும் ஒருவர் மற்றவர்மீது காட்டுகின்ற வெறுப்பு அத்தனை பேரையும் கொலைக் குற்றவாளிகளாக்கி விட்டது. ஏன் இவ்வளவு வெறுப்பு? அன்பும் அறமும், ஈகையும் ஈரமும், கனிவும் பரிவும், நேயமும் தியாகமும் ஏன் மனிதர்கள் மனத்திலிருந்து மறைந்துவிட்டன? கடவுள் அன்பே வடிவானவர்! அவர் சாயலில்தானே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! அவரைப் போன்றுதானே நாம் இருக்கவேண்டும்!
இன்று
நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 7-ஆம் ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகிறோம். இன்றைய மூன்று வாசகங்களும் பகைமையைப் போக்கவும் வெறுப்பை வேரறுக்கவும் மன்னிப்பை வளர்க்கவும் நம்மை அழைக்கின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில், தன்மீது பகைமை காட்டிய சவுலைக் கொல்லாமல் அமைதியாகச் செல்லும் தாவீதின் உயர்ந்த மனத்தைப் பார்க்கிறோம். சவுல் இஸ்ரயேலின் முதல் அரசர். சாமுவேல், சவுலை எண்ணெயால் அருள்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார் (1சாமு 10:1). அவர்தான் சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய ஆற்றல்மிக்க வேற்றின எதிரியான பெலிஸ்தியருக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றி கண்டார். காலப்போக்கில் சவுல் கடவுளுக்கும் சாமுவேலுக்கும் கீழ்ப்படிதலின்றித் தனக்குச் சரியாகப்பட்டதைச் செய்ய முனைந்தார் (1சாமு 15). எனவே, சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே சாமுவேல் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தார் (16:13). தாவீது படைக்கலத்தின்மீது நம்பிக்கை வைக்காது, கடவுளையே நம்பி கோலியாத்தை வீழ்த்தினார். கோலியாத்தை வென்றதில் தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்பட, இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்பியது.
மனத்திற்குள்
தோன்றும் பொறாமை, ‘அழித்துவிடு, தீங்கு செய், வெறுப்புக்கொள்’ - இப்படித்தான்
மனத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும். இந்த அகத் தூண்டுதலுக்குச் செவிகொடுப்பவர்கள் மறுகணமே குற்றவாளியாகிவிடுகிறார்கள்.
வளமை குன்றாமல் நம் வாழ்க்கை எப்போதுமிருக்க ஒருபோதும் பொறாமை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொறாமை கொண்டு பிறரை அழிக்க முயற்சி செய்பவர்கள் தங்களையே அழித்துக்கொள்கின்றனர். தாவீதுமீது பொறாமை கொண்ட சவுலும் பல நேரங்களில், பல
இடங்களில் தாவீதைக் கொல்ல முயற்சி செய்கிறார். தாவீது சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார். தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து திரிந்த சவுல், களைப்புற்று ஓரிடத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. சவுலைக் கொல்லும் வாய்ப்பு இப்போது தாவீதின் கரங்களில் வாய்த்துள்ளது. இந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.
உறங்கும்
எதிரி, ஊன்றப்பட்ட ஈட்டி, உயிரை எடுக்கத் தயாராக இருந்த தோழர் அபிசாய் என அனைத்தும் தனக்கு
ஆதரவாக இருந்தபோதிலும், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” (1சாமு 26:9) என்று கூறி, மன்னன் சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் செல்கிறார். அத்துடன் நின்றுவிடாமல், சவுல் தன் தவறை உணர்ந்து, நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில், சவுலின் ஈட்டியைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். சற்றுத் தொலைவில் தாவீது நின்று கொண்டு, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை”
(26:22-23) என்ற தாவீதின் வார்த்தைகள் நம் மனங்களில் ஊற்றெடுக்கும் பகைமை உணர்வுகளைக் களைந்தெறிவதற்கான வழிகளைச் சொல்லித் தருகின்றன.
பகைவருக்கு
எதிராக நம் கரங்களை உயர்த்துவதற்குப் பதில் அவர்களை அரவணைக்க, ஆசியளிக்க நம் கரங்களை உயர்த்த வேண்டும் என்ற மேலான வாழ்வியல் சிந்தனையை இயேசு இன்றைய நற்செய்தியில் கற்றுத்தருகிறார். இன்றைய நற்செய்திப் பகுதி சென்ற வாரம் நாம் கேட்ட சமவெளிப் பொழிவின் தொடர்ச்சியாக உள்ளது. சமவெளிப் பொழிவு முழுவதிலும், குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு வழங்கும் அறிவுரைகளும் நடைமுறை வாழ்வுக்கு எள்ளளவும் உதவாத அறிவுரைகள் போலவே தோன்றுகின்றன. காரணம், இந்த உலகம் அன்றிலிருந்து இன்று வரை, பகைவருக்குப் பகைமை, வெறுப்போருக்கு வெறுப்பு, உதவி செய்வோருக்கு உதவி, இரக்கம் காட்டுவோருக்கு இரக்கம், அன்பு செய்வோருக்கு அன்பு, சபிப்போருக்குச் சாபம் என்றுதானே சொல்லித் தந்துள்ளது. ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசுவோ, “பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்காக இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து
திருப்பிக் கேட்காமல் இருத்தல்…”
என மிக அழகாக அடுக்கிக்கொண்டு செல்கிறார்.
மனித
அறிவுக்கு அப்பாற்பட்ட, மிக அசாதாரணமான அறிவுரைகளாக அல்லது சவால்களாக இயேசுவின் போதனைகள் தோன்றினாலும், இவற்றைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்துகிறார். இறையாட்சியின் மக்கள் சாதாரண மற்ற மக்களைப்போல இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. நம்முடைய வாழ்வியலும் அறநெறியும் ஆன்மிகமும் மற்றவர்களைவிட உயர்ந்ததாக, சிறந்ததாக இருக்கவேண்டும். பழிக்குப் பழி, தவறு செய்வோருக்குத் தண்டனை என்ற கருத்தோடு நாம் நின்றுவிட்டால், காந்தியடிகள் கூறுவதுபோல, “இந்த உலகமே பார்வையற்றதாகிவிடும்.”
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, நாம் அனைவரும் விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருக்க வேண்டும். மனித இயல்பை நாம் கொண்டிருந்தாலும், ஆவிக்குரிய இயல்புகளை இறைவன் நமக்குத் தந்துள்ளார். தம் மகனின் உயிர்ப்பின் வழியாக இயேசு உயிர் தருபவராக மாறுகிறார். எனவே, நாம் கிறிஸ்துவின் தெய்வீக இயல்பின்படி வாழ வேண்டும்.
மனித
இயல்பில் வாழ்ந்தாலும் விண்ணக ஆவிக்குரிய இயல்பில் வாழ்ந்த மாமனிதர்களை வரலாறு என்றுமே மறக்கவில்லை. தன்னைச் சுட்ட துருக்கிய இளைஞர் முகமது அலி அஃகாவைச் சிறையில் சென்று சந்தித்து, ஆரத்தழுவி முத்தமிட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், தன்னுடைய கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸ், தன் இரு மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக் கொலை செய்த தாராசிங்கை மன்னித்த ஸ்டெயின்ஸின் மனைவி, பேருந்தில் அருள்சகோதரி இராணி மரியாவைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த சமுந்தர் சிங்கை மன்னித்த இராணி மரியாவின் உடன் சகோதரி செல்மி பவுல் போன்ற அனைவரும் புனித அன்னை தெரசா கூறுவதுபோல, “வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்”
எனும் கூற்றின்படி வாழ்ந்து காட்டியவர்கள்.
இன்றைக்குப்
பழிக்குப் பழி தீர்க்கும் கொடிய செயலைத்தான் அதிகம் காண்கிறோம். அரசியல் கொலை, ஆணவக்கொலை, சாதி, சமய, இனக்கொலை போன்றவை அன்றாட செய்திகள். வெறுப்புணர்வும் பகை உணர்வும் காட்டாற்று வெள்ளமாய்ப் பொங்கி அனைத்து உயிர்களையும் அடித்துக்கொண்டு போவதைப் பார்க்கிறோம். இதற்கு மணிப்பூர் வன்முறை சிறந்த உதாரணம். வெறுப்பு என்ற தீய குணத்தால், ஒருவர், தன்னையும், உறவுகளையும் இழக்கிறார். குடும்பங்களில் உறவுகள்மீது காட்டும் வெறுப்பு, படிப்படியாக உறவுகளையே விலகச் செய்துவிடுகிறது. நம் உறவுகள் ஏதோ ஒரு சூழலில் நமக்குத் தீமை செய்திருக்கலாம் அல்லது நமக்கு எதிராகப் பேசி இருக்கலாம். எத்தனை நாளைக்குப் பகையையே நினைத்துக்கொண்டு வெறுப்பிலே வாழப்போகிறோம்?
மனத்திலிருந்து
வெறுப்பு என்ற தீயசக்தியை வேரோடு அறுத்துவிட்டு, உறவுகளில் வளர முயற்சிப்போம். சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “வன்முறை மற்றும் வெறுப்பின் சூழலிலிருந்து வெளிவந்து உலகை இதயத்தின் கண்களால் உற்றுநோக்குவோம்.” இயேசு-தாவீது-பவுல் இவர்களைப் போன்று வெறுப்புணர்வைத் தவிர்த்து, அன்புணர்வை வளர்ப்போம். ஏனெனில், வெறுப்பற்ற வாழ்வுதானே தெய்வீகமானது!
திருவிவிலியத்தில் கடவுளுக்கெனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. அவை, ‘எல்-ஷடாய்’ (எல்லாம் வல்லவர் - தொநூ 17:1), ‘எபினேசர்’ (உதவி செய்பவர் - 1சாமு 7:12), ‘எல்-ரோயி’ (காண்கின்றவர் - தொநூ 16:13), ‘எலோகிம்’ (படைத்தவர் - தொநூ 1:1; எசா 40:28), ‘யாவே ராஃப்’ (குணமாக்குபவர் – விப 15:26), ‘யாவே யிரே’ (வழங்குபவர் - தொநூ 22:14), ‘யாவே ஷம்மா’ (இருக்கின்றவர் - எசே 48:35), ‘யாவே ஷாலோம்’ (அவரே நம் அமைதி - நீதி 6:24), ‘யாவே சித் கேனு’ (கடவுள் நம்முடைய நீதி - எரே 23:6) மற்றும் பல. இந்தப் பெயர்கள் வெறும் தலைப்புகள் அல்ல; அவை ஒவ்வொன்றும் கடவுளின் தன்மை மற்றும் இயல்பின் பிரதிபலிப்பாகும். கடவுளின் பெயர், அவர் யார்? அவர் நம்முடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்? என்பதை வெளிப்படுத்தும் தனித்துவமான செயலைக் குறிக்கிறது.
கடவுளின்
பல்வேறு பெயர்களில் ‘அனாவிம் யாவே’
(Anawim Yahweh) என்பதும்
ஒன்று. இப்பெயருக்கு ‘ஏழைகளின் கடவுள்’ என்று பொருள்கொள்ளலாம். ஏன் கடவுள் ஏழைகள் பக்கம் இருக்கிறார்? ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு போன்ற வாழ்வியல் எதார்த்தங்களை அன்றாடம் எதிர்கொள்பவர்கள் ஏழைகள். இவர்களின் மனம் இயல்பாகவே ஆண்டவரை நோக்கியே எழும். இவர்களுடைய வாழ்க்கை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதாகவே இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் பணத்திலும் உலகப் பொருள்களிலும் மன மகிழ்வைக் காணாமல்,
இறைவன் வழங்கும் கொடை கள் அனைத்திலும் மனமகிழ்வைக் கண்டு, தங்களிடம் இருப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். இத்தகையோரையே இயேசு ‘பேறு பெற்றவர்’
எனக் குறிப்பிடுகிறார்.
பொதுக்காலத்தின்
ஆறாம் ஞாயிறான இன்று தரப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் இரு வகையான மனிதரை முன்வைக்கின்றன. முதலாவதாக, மனிதர்கள் மீதும், இவ்வுலகப் பொருள்கள்மீதும் நம்பிக்கை வைப்போர்; இரண்டாவதாக, கடவுள்மீது நம்பிக்கை வைப்போர்.
இன்றைய
முதல் வாசகத்தில் (எரே 17:5-8) எரேமியா முன்னுரைத்த இறைவாக்கின் காலம் கி.மு. 598-க்கு
முந்தையதாக இருக்க வேண்டும். இப்பகுதியில் மனிதர்மீது நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும்; கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் வகைப்படுத்துகின்றார் எரேமியா. யூதாவை ஆண்ட அரசர்களில் கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அரசர்களைக் காண்பது மிகவும் அரிது. யூதாவை ஆண்ட மனாசே (2அர 21:2), ஆமோன் (2அர 21:20), யோவகாசு (2அர 23:32), யோயாக்கின் (2அர 24:9), செதேக்கியா (2அர 24:19) போன்ற பெரும்பாலான அரசர்கள் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்கள்மீதே நம்பிக்கை கொண்டனர். இதனால், கடவுள் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். எனவே, யூதாவை ஆண்ட அரசர்களும் அரசும் வீழ்ச்சியையே சந்தித்தன.
இன்றைய
வாசகத்தில் எரேமியாவின் இறைவாக்கு யூதா அரசன் யோயாக்கிம் காலத்தில் (2அர 23:36-37) நடக்கிறது. யோயாக்கிம் 11 ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டார். பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கிம் தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்த்து, பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் இக்கிளர்ச்சியை அடக்கி, கி.மு. 598-ஆம்
ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். இதனால் எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவப் பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கிம் கொல்லப்படுகிறார், எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்.
மனிதரில்
அதாவது, கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாமல் எகிப்தியரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர். கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் வாழ்வு பெறுவர். எரேமியா, தங்கள் சக மனிதர்கள் மேலும்,
தங்கள் சிலை வழிபாட்டின் மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நம்பிக்கையைப் பதிக்காமல், ஆற்றல் வாய்ந்த கடவுள்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இன்றைய முதல் வாசகம் நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.
இரண்டாம்
வாசகத்தில் (1கொரி 15:12,16-20) இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாமல், இவ்வுலகக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களையும், இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பி அவருக்குச் சான்று பகர்ந்து வாழும் மனிதர்களையும் வகைப்படுத்துகிறார் திருத்தூதர் பவுல். கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர், ஒருசில கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் ‘உயிர்த்தெழுதலே இல்லை’ என்று வாதித்து வந்தனர். கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளைப் பொறுத்தவரையில், உடல் என்பது அழிவுக்குரியதாகவும் வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. இறப்பு என்பது அழிவுக்குரிய உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை. எனவே, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் பவுல், மிகவும் பொறுமையோடும் சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார்.
பவுலின்
சிந்தனையில் நாம் கடவுளோடும் மனிதரோடும் ஏற்படுத்தும் உறவின் தொடர்பு சாதனமாக உடல் விளங்குகிறது. இவ்வுலகில் மனிதர்கள் இந்த உடலைக் கொண்டே உலகில் உறவுகளை ஏற்படுத்துகின்றனர். இவ்வுடல் இவ்வுலகில் அழிந்த பிறகும் மனிதர் விண்ணுலகில் கடவுளோடும் புனிதர்களோடும் உறவினைத் தொடர முடியும். அது மனிதரின் உடல் தன்மையிலேயே தொடரும். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது. இந்த அழியா உடலையே இயேசு பெற்றார். அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம். ஆனால், அந்த உடல் விண்ணகச் சூழ்நிலைக்கு ஏற்றதாயிருக்கும். தூய ஆவியால் முழுவதும் உருமாற்றமடைந்த உடலாயிருக்கும். இவ்வாறு உயிர்த்தெழுதலே கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படை என்று வலியுறுத்தும் பவுல், அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய
நற்செய்தி வாசகத்தில் (லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் ‘மலைப்பொழிவில்’ (மத்
5:3-10) எட்டுப் பேறுகளைப் பதிவு செய்கிறார் மத்தேயு. ஆனால்
லூக்கா எழுதும் ‘சமவெளிப்பொழிவில்’ இயேசுவின்
போதனைகளை ‘நான்கு வாழ்வின் பேறுகள்’,
‘நான்கு கேடுகள்’ என வடிவமைக்கின்றார்.
இயேசுவின்
‘சமவெளிப் பொழிவு’ என்பது ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டோருக்கு அவர் கொடுத்த நம்பிக்கை மிக்க அழைப்பாகும். ஏழ்மை, அடக்குமுறை, அநீதி போன்ற சூழ்நிலைகள் காரணமாக நலிவுற்ற நிலையில் வாழ்ந்து வந்த பல யூத மக்கள்
‘கடவுளே எங்கள் கதி’ என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். தங்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே இவர்களின் சக்தியாக இருந்தது. இயேசு இவர்களுக்கே தம் நற்செய்தியை ஒப்படைப்பதோடு, தம்முடைய பணியிலே அவர்களைப் பங்கெடுக்க வைக்கிறார். இறையாட்சியைக் கட்டியெழுப்புவதில் ஏழையரின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.
ஏழ்மை,
பசி, அழுகை, புறக்கணிப்பு - இவை தன்னிலே பேறுபெற்றவை என்றோ அல்லது அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ இயேசு கூறவில்லை. இயேசு இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; மாறாக, இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்துகிறார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகியவை இறைவனை நோக்கி அடிக்கடித் திரும்ப, இறைவனைத் தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்க இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று அறிவுறுத்துகிறார். இவை நிறைவாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள்! இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர் தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புகள் குறைவு எனும் உண்மையையும் இடித்துரைக்கிறார்.
இயேசு,
எசாயாவைப் பின்பற்றி (எசா 65:13-14), மூன்று கேடுகளை முன்வைக்கிறார். பணக்காரர்கள் கடவுளை மறக்கின்றனர்; அத்துடன் இறையருளுக்கு அவர்கள் தங்கள் உள்ளக் கதவுகளைத் திறப்பது கிடையாது (லூக் 12:13-21) என்கிறார். செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில் ஒருவரின் மனம் மனிதர்கள்மீதும் பணத்தின்மீதும் அதிகாரங்களின்மீதும் தங்கும்; பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம்; பணமும் உலகப் பொருள்களும் உண்மை மனமகிழ்வைத் தருவதில்லை. பணம் அழிவுக்கே இட்டுச் செல்லுமென எச்சரிக்கை விடுக்கிறார். கடவுள் ஏழ்மையையன்று, ஏழைகளை ஆசிர்வதிக்கிறார். அவர் ஏழையரின் கடவுள்! (அனாவிம் யாவே). அவர்களுக்கு எப்போதும் அவர் உறுதுணையாயிருக்கிறார். ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.
இன்றைய
பதிலுரைப் பாடலும் இயேசுவின் வழி நின்று, “ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்” எனக் கூறுகிறது (திபா 1:3,4). ஆகவே, இன்றைய மூன்று வாசகங்களும் குறிப்பிடுவதுபோல, மனிதர்மேல் அல்லது உலகு சார்ந்த செல்வங்களின்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரையே தஞ்சமெனக் கொண்டு, நீரோடையோரம் நடப்பட்ட மரங்களாகச் செழித்து வளர்வோம். திருத்தந்தை குறிப்பிடுவதுபோல, ‘ஏழைகளிடம் அன்புடன் கவனம் செலுத்துவது உண்மையான அக்கறையின் துவக்கம்’
(நற்செய்தியின் மகிழ்வு-199) என்பதை உணர்ந்து, இயேசு கூறிய கேடுகளில் சிக்கிக் கொள்ளாமல், அவர் கூறிய வாழ்வின் பேறுகளால் நம் மனங்களை நிரப்புவோம்.
சிறந்த இறையியல் மேதையாக, பேராசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக அறியப்பட்டவர் லூயிஸ் (C.S. Lewis- 1898-1963). இவர் 1942-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் BBC வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்து ‘குறைந்தபட்ச கிறித்தவம்’ (Mere Christianity) என்ற நூலை 1952 -ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் தொடக்க உரையிலேயே ‘பெரும் பாவம்’ (The Great Sin) என்ற தலைப்பில் அகந்தையைப் பற்றிய ஆழமான கருத்துகளைக் கூறியுள்ளார். ‘எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இந்த உலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் ஆணவம்’ என்று அவர் தன் நூலில் எழுதுகிறார்.
தொடர்ந்து
லூயிஸ் ஆணவத்தின் மற்றொரு தவறான கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ‘பல்வேறு குறைபாடோடு இருக்கும் மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு. ஆனால், ஆணவத்தில் ஊறிப் போனவர்கள் இணைந்து வருவது இயலாத செயல். அப்படியே அவர்கள் சேர்ந்துவந்தாலும், தங்களுள் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கும் போட்டி உருவாகும். இந்தப் போட்டியாலும் ஒப்புமையாலும் ஆணவத்தில் சிக்கியவர்கள் கடவுளோடும் தொடர்பு கொள்ள முடியாது. அவர்களைப் பொருத்தவரைக் கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.’
தலையாய
பாவம் ஆணவம் என்றால், தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தாழ்ச்சி என்பது உண்மை நிலை; உயர்ந்த நிலை; துணிவு நிலை; தன் இயலாமையை உணரும் நிலை; தன்னைப் பற்றிய நேர்மையான மனநிலை. தன்னிடம் உள்ள நிறை-குறைகள் முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே தாழ்ச்சி அல்லது பணிவு.
இன்றைய
மூன்று வாசகங்களும் குறிப்பிடும் திருவிவிலிய மாந்தர்கள் - இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய மூவரையும் இறைவன் தம் பணிக்கென அழைக்கின்ற போது, அவர்கள் தங்கள் குறைகளைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, இறையழைப்புக்குத் தங்களையே கையளிக்கின்றனர். எவரொருவர் ஆண்டவர்முன் தன்னையே தாழ்த்திக் கொள்கிறாரோ அவரைத்தானே கடவுள் உயர்த்துகிறார் (லூக் 14:11; யாக் 4:10). தாழ்ச்சி உள்ளவர்களுக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீரா 3:19).
இன்றைய
முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பையும், அவரது பணியையும் பற்றிப் பேசுகிறது. எசாயாவின் அழைப்பு கி.மு. 742 -ஆம்
ஆண்டில் உசியா அரசர் ஆணவத்தால் தொழுநோய் பிடித்து இறந்தபோது (1குறி 26:16,21) நிகழ்கிறது. இந்நிகழ்வு ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியாக அமைகிறது. ஆண்டவர் அரியணைமீது அமர்ந்திருப்பதும், தொங்கலாடைக் கோவிலை நிரப்பி நிற்பதும், செராபீன்கள் சூழ்ந்து நிற்பதும் ஆண்டவருடைய மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன. ‘செராபீன்’
என்றால் எபிரேயத்தில் ‘எரிந்து கொண்டிருப்பது’ அல்லது
‘எரிபவை’ என்பது
பொருள். இந்தச் செராபீன்கள், ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்’ என்று பாடிக்கொண்டிருக்கின்றனர்.
இறைவனின்
மாட்சியைக் கண்ணாரக் கண்ட எசாயா “தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்” எனத் தன் நிலையை உணர்ந்து அறிக்கையிடுகிறார் (6:5). ஆண்டவரது முன்னிலையில் தான் தூய்மையற்றவராக உணர்கிறார். இந்த உணர்வு அவரது குற்றங்களால் வருகின்ற உணர்வு அன்று; மாறாக, மனித நிலையினால் வருகின்ற உணர்வு. ஆண்டவர் அவரது அச்சத்தைப் போக்குகின்றார். செராபீன்களில் ஒருவர் நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து எசாயாவின் உதடுகளைத் தூய்மைப்படுத்துகின்றார். இச்செயலால் எசாயா முழுவதுமாகத் தூய்மையாக்கப்படுகின்றார்.
‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’ என இறைவன் கேட்கும்போது,
தூய உதடுகளைப் பெற்ற எசாயா, ‘இதோ, நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்’
என்கிறார்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், பவுல் கொரிந்து நகரத் திரு அவையில் விளங்கிய ஒரு பிரச்சினை பற்றிப் பேசுகிறார். கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர், ஒரு சில கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உயிர்த்தெழுதலே இல்லை என்று வாதித்து வந்தனர். கிரேக்கச் சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை வெறுத்தது. இச்சிந்தனையை எதிர்த்து ‘உயிர்த்தெழுதலே கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படை’
என்று வலியுறுத்துகின்றார் பவுல். உயிர்ப்பின்போது நம் உடலும் மாற்றம் பெறும் எனவும் போதிக்கிறார். இறந்தவர்கள் உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திரு அவைக்குப் பவுல் இறையியல் விளக்கம் தருகின்றார். ‘கிறிஸ்து நமக்காக இறந்தார், அடக்கம் செய்யப்பட்டார், உயிருடன் எழுப்பப்பட்டார்’ - இதுதான்
தொடக்கத் திரு அவைக்குத் திருத்தூதர்கள் வழங்கிய நற்செய்தி. இதே நம்பிக்கை அறிக்கையை எந்த மாற்றமுமின்றி பவுலும் அறிவிக்கிறார்.
திருத்தூதர்களுக்குத்
தோன்றிய இயேசு, இறுதியாக, காலம் தப்பிப் பிறந்த குழந்தையைப் போன்ற தனக்கும் தோன்றியதாகப் பேசுகின்றார் பவுல். அதே நேரத்தில், திரு அவையைத் துன்புறுத்திய குற்றவுணர்வுக்கு ஆளான அவர், இயேசுவின் அழைப்பைக் கண்டதும், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்’ எனத்
தன் குற்றநிலையை உணர்கிறார் (1கொரி 5:8). தன்னிடம் உள்ள நிறை-குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதுதானே பணிவு!
இன்றைய
நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சீடரை அழைக்கும் நிகழ்வையும், இந்நிகழ்வோடு கெனசரேத்து ஏரியில் பெருமளவு மீன்பிடித்த நிகழ்வையும் இணைத்து லூக்கா பதிவு செய்கிறார். கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்த இயேசு, சீமோனின் படகில் உரிமையோடு ஏறுகிறார். படகையே போதிக்கும் ஒரு தளமாக மாற்றுகிறார். படகில் இருந்த அனைவரும் இயேசுவின் போதனையை உற்றுக் கவனிக்கின்றனர். இரவு முழுவதும் உழைத்தும் மீன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்த சீமோனின் உள்ளத்தில் இயேசுவின் போதனைகள் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தச் சூழலில்தான் இயேசு, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’
என்கிறார். ‘இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை’ என்று
தயங்கிய பேதுரு, இருப்பினும், ‘உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று
கூறி வலைகளைப் போடுகிறார். மிகுதியான மீன்பாடு கிடைக்கின்றது. உடனே, பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்கிறார்.
கடவுள் ஒருவரது வாழ்க்கையில் தலையிடும்போது வெளிப்படும் பயம் இதுவாகும் (எசா 6:5; எரே 1:6; விப 3:11).
இவ்வாறாக,
இன்றைய மூன்று வாசகங்களிலும் எசாயாவும் பவுலும் பேதுருவும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டபோது, தூயவரான கடவுளின்முன் இறைப்பணியாற்ற தங்களை முற்றிலும் ‘தகுதியற்றவர்களாக’ உணர்கின்றனர்.
தங்கள் குறைகளையும் சிறுமையையும் மனத்தாழ்மையையும் உள்ளபடியே வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் இதயத் தாழ்ச்சி அச்சத்திலும் பாவ உணர்விலும் வெளிப்பட்டதல்ல; மாறாக, வியப்பிலும் தாழ்ச்சியிலும் கூறப்பட்டவை. குறையுள்ள இம்மூவரும் நிறையுள்ள இறைவனின் தொடுதலுக்குத் தங்களை அனுமதிக்கின்றனர். கடவுள் அவர்களை நிறைவுள்ளவராக்குகின்றார்.
‘மேன்மை அடையத் தாழ்மையே வழி’
(நீமொ 18:12). ‘தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்’ என்கிறார் புனித அகுஸ்தின். ‘திரு அவையில் இருக்கும் மேய்ப்பர்கள் தாழ்ச்சி எனும் பாதையைக் காட்டாவிடில், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது’
எனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று இங்கே ஆழமாகப் பொருள்படுகிறது (பிப்ரவரி 7, 2020).
ஆணவம்
பாராட்டுபவர்களால் தங்களிடமுள்ள பல வீனத்தைத் தெளிவாகப்
பார்க்க இயலாது. நம்மிடமுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாதபோது அவற்றைத் திருத்துவது இயலாத செயல். குறைகள் திருத்தப்படாதிருந்தால் அதன் எதிர்விளைவுகள் துன்பத்தைச் சுமந்து வரும். அதேவேளை தாழ்ச்சி மனம் கடவுளிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும், நம் குறைகளைத் திருத்திப் புதுவாழ்வுக்கு இட்டுச் செல்லும். ‘தாழ்ச்சியே ஒருவரைக் கடவுளுக்கும் உடன் வாழும் சகோதரர்களுக்கும் நெருக்கமானவர்களாக மாற்றும் திறன்கொண்டது’ என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ் (நவ. 06, 2023). ஒருமுறை அன்னை தெரேசா தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, “நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம்” என்னும் வாக்கு இங்கே எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றது.
எனவே,
நம்மை நெருங்கிவர விரும்பும் இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நாம் தயாராக இருப்போம். நம்முடைய தினசரி வாழ்விலும் குடும்ப வாழ்விலும் உறவுகளை அனுபவிப்பதிலும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தோல்விகளைச் சந்திக்கும் வேளையில் நம் மனம் எனும் படகில் இயேசுவை ஏற்றி அவர் நமக்கு இடும் கட்டளைகளை நிறைவேற்றுவோம். நம்முடைய அன்றாட நிகழ்வில் நம்மை நோக்கி வரும் இறைவனின் அழைப்பை உணரும் வரத்தைக் கேட்போம். கோபுரத்தில் இருந்தபோது ஆடாத ஆட்டம் ஆடியவர்களைக் காலம் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறது என்பதை மறக்கமுடியுமோ? தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். ‘அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும்’
- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்.
“ஓ மானிடா, உன்
கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்துகொள்வதைத் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக் 6:8).
தம் அன்பு மகனை நம் கரங்களில் ஒப்படைக்கும் இறைவன்!
கடவுளின்
படைப்பு அனைத்தும் நல்லவை, சிறப்பானவை, அவரது நன்மைத்தனத்திற்குச் சான்றானவை. கடவுள் நமக்குத் தரும் நிபந்தனையற்றக் கொடைகள் அனைத்தும் முதல்தரமானவை. கடவுளின் அருள் கொடைகளுக்கு நன்றிச்செயலாக நாம் அவருக்குத் திருப்பிச் செலுத்துபவையே காணிக்கைகள். காணிக்கை என்பது தியாக உணர்வின் வெளிப்பாடு. தியாகம் என்பது அன்பை அளக்கும் அளவுகோல். இறைவனை உண்மையாக அன்புகூர்பவரே இறைவனுக்காக எதையும் தரத் தயாராகிறார்.
இந்த
உலகில் எதுவும் நம்முடையது அல்லவே! ஒரு வேளை உழைப்பு நம்முடையதாக இருந்தாலும், விதையும் விதையைத் தாங்கிப் பிடிக்கும் மண்ணும், விதை முளைக்க உயிர் கொடுக்கும் நீரும், முளைத்த செடி ஓங்கி வளர ஒளியும் இறைவன் தந்ததல்லவா! எனவே, ‘நான் கொடுப்பவை என்னுடையதல்ல; அது இறைவனுடையது. இறைவனுடையதை இறைவனுக்கே திருப்பிக் கொடுக்கிறேன்’ என்ற
உணர்வோடு ஒப்புக்கொடுப்பதுதான் காணிக்கை! இந்த உணர்வோடு ‘ஆண்டவர் அருளிய செல்வத்தை’
(திபா 127:3) மரியாவும் யோசேப்பும் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகின்றனர்.
மோசே
வழியாக ‘தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்’
(விப 13:2) எனக் கடவுள் கட்டளை பிறப்பித்திருந்தார். சட்டங்கள் நிறைவேற்றுவதன் வழியாக, நல்ல அறநெறி வாழ்வு வாழ்வதன் வழியாக மீட்பைக் கண்டுகொள்ள முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் யோசேப்பு-மரியா. இவர்கள் தங்கள் குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்து அர்ப்பணித்த இந்த நாளை ‘அர்ப்பணத்தின் நாளாகவும்’,
‘அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாளாகவும்’
சிறப்பித்து மகிழ்கிறோம். இந்த உலக நாளை 1997-ஆம் ஆண்டில் உருவாக்கியவர் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்.
கோவிலுக்குப்
படைக்கப்பட்டவை அனைத்தும் ஏழைகளுக்கே சொந்தம் என்று திருவிவிலியம் கூறுவதுபோல, கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு முழுமையாக ஏழைகளுக்குச் சொந்தமாகிறார். இக்குழந்தை இவ்வுலகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை என்பதை உணர்கிறோம். இயேசு தம்மையே அப்பமாகவும், சிலுவையில் தம் உடலையே பலிபொருளாகவும் உடைத்துக்கொடுப்பதன் அடையாளமாக இந்த அர்ப்பணம் அமைகின்றது.
இயேசுவின்
பெற்றோர் குழந்தையைக் கோவிலில் அர்ப்பணிக்கும்போது, சிமியோனும் அன்னாவும் கோவிலில் இருக்கின்றனர். சிமியோன் நேர்மையாளர்; இறைப்பற்று மிக்கவர். அன்னா ஓர் இறைவாக்கினர்; கைம்பெண். கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி, அல்லும் பகலும் திருப்பணி செய்து வருபவர். ‘நமக்குள்ளேயே நாம் முடங்கிவிடுவதன் வழியாகத் தனிமையை நாம் வெற்றிகொள்ள முடியாது. கடவுளை நோக்கிக் குரல் எழுப்புவதன் வழியாக வெற்றி காணமுடியும்’ என்பதை
உணர்ந்து வாழ்ந்தவர். இவ்விருவரும் மரியா-யோசேப்பைப் போன்று ‘இஸ்ரயேலில் எஞ்சியுள்ளோர்’ (மீக்
2:12) குழுவைச் சார்ந்தவர்கள். இவர்கள் இறைவாக்கினர் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து, தாழ்மையிலும் பற்றுறுதியிலும் தம் வாழ்நாள்களைக் கழித்து வந்தனர். இவர்கள் இறைவன் அனுப்பவிருக்கும் மீட்பரை எதிர்பார்த்திருந்தவர்கள்; இறைவன் மக்களைத் தேற்றும் நாளுக்காகக் காத்திருந்தவர்கள். இவர்கள்மீது கடவுள் அருள் பாலித்து, இவர்களுக்குத் தம் மகனைக் கண்டு மகிழ்வுறும் பேற்றை அளிக்கிறார்.
பொதுவாக,
கோவிலுக்குக் கொண்டு வரும் குழந்தைகளைக் குருக்களிடமே பெற்றோர் கொடுப்பர் (1சாமு 2:20). ஆனால், இங்கே சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். கடவுளின் அருஞ்செயலைக் காணும் சிமியோன் ‘எனது வாழ்நாள் தவப்பயனைப் பெறப்போகின்றேன்; எனது மண்ணக வாழ்வு பொருள் கொண்ட ஒன்றாக முடியப் போகின்றது’
என்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றார். மேலும், சிமியோன் ‘ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!’ (லூக் 2:29) என்று தன்னுடைய இறப்பைப் பற்றியும், ‘மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன’ (2:31) என்று
மகிழ்ச்சிப் பெருக்கோடும் கடவுளைப் புகழ்கின்றார்.
தன்
சொந்த இல்லத்திற்கு இறைவன் வருவார்; அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் வருவார்; அவரது வரவு எப்படி இருக்கும் என்பதை முன்னறிவிக்கும் விதமாக, ‘இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்’
(2:34) என இறைவாக்கு உரைக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் நாளைப்பற்றி மலாக்கியும் இவ்விதம் கூறுகிறார்: “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்... அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்?” (மலா 3:1,2).
யூதாவில்
நிலவிய அறநெறி மற்றும் சமயப் பிரச்சினையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. இறைவாக்கினர் மலாக்கி காலத்தில், குருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர். மக்கள் கொணரும் முதல்தரமான காணிக்கைகளைத் தங்களின் சொந்த உடமைகளாக்கிக் கொண்டு, இரண்டாந்தரக் காணிக்கைகளை அதிக விலைக்கு மக்களுக்கு விற்று (2:1-3) திருப்பீடத்தைத் தீட்டுப்படுத்தினர். பலர் ஆண்டவருக்குச் சேரவேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை. அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர். இந்தப் பின்புலத்தில், கடவுள் தம்முடைய தூதரை அனுப்புவார்; அவர்தம் மக்களைத் தூய்மைப்படுத்துவார்; அந்நாளில் தீர்ப்பளிக்கப்படும், ஒப்புரவு ஏற்படும், விடுதலை அருளப்படும்; ஆலயமும் தூய்மை அடையும். கட்டளைகளைக் கடைப்பிடித்துத் தூய்மையுடன் ஒழுகுபவர்களுக்கு ஆண்டவரின் நாள் ஆசிரின் நாளாக அமையும்” என முன்னுரைக்கிறார் மலாக்கி.
மக்களின்
அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டும் அரசியல் மெசியாவாகவும், கோவில் வழிபாட்டைத் தூய்மைப்படுத்தும் குருத்துவ மெசியாவாகவும் மீட்பர் வருவார் எனக் காத்திருக்கின்ற சிமியோன் உடன்படிக்கையின் தூதராம் இயேசுவைக் கண்டுகொள்கின்றார். சிமியோனின் இச்செயலைக் குறித்து திருத்தந்தை, “தன் வாழ்நாள் முழுவதும், சிமியோன் இறைவனின் வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். தன் நீண்ட வாழ்வில் துயரங்களும், சோர்வும் உண்டானாலும், அவரது உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளி அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. தன்னைச்சுற்றி நடந்த நிகழ்வுகளால் துயருற்று, மனத்தளர்ச்சி அடையாமல், பொறுமையுடன் இருந்ததால்தான் ‘நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன’ என்று
சிமியோனால் இறைவனிடம் கூறமுடிந்தது” என்று
கூறினார் (பிப்ரவரி 03, 2021).
சிமியோன்
அன்னை மரியாவைப் பார்த்து, “உமது உள்ளத்தையும் ஒரு வாள்
ஊடுருவிப் பாயும்” என்ற இறைவாக்கு, தந்தை கடவுள் தம் மகன் இயேசுவுக்காக வைத்திருக்கும் பணி என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இயேசு நன்மைகளைச் செய்யும்போது இச்சமூகம் அவரை எதிர்க்கும்; இறுதியில் அவரது உயிரையே பறிக்கத் திட்டமிடும். ஓய்வுநாளில் நோயாளர்களை நலப்படுத்துதல், கோவிலைத் தூய்மைப்படுத்த சாட்டையை எடுத்தல், பாவிகளுடன் உணவருந்துதல், பிறர் குற்றங்களை மன்னித்தல் இவை அனைத்துமே அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான சவால்களே. பொருளற்ற சட்டங்களால் மக்களைத் துன்புறுத்திய பரிசேயக் கூட்டங்களை வன்மையாகக் கண்டித்தார் இயேசு. நீதியை நிலைநாட்ட தீமையைத் தீக்கிரையாக்கினார். எனவேதான் இயேசு ‘எதிர்க்கப்படும் அடையாளமாகவும்’ (லூக்
2:34), ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’
(2:35) எனவும் சிமியோன் மரியாவை நோக்கிக் கூறினார்.
எனவே,
மனித மீட்புக்குச் சிலுவையின் பாதையைத் தவிர வேறு பாதையை இறைவன் காணவில்லை. நமது மீட்பின் பயணத்தில் இயேசு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எவ்வித ஆறுதலுமின்றி கூட இருந்தவர்கள் கைவிட்ட நிலையை அனுபவித்தார். மனித ஊன், இரத்தம், சாவு இவற்றைப் பகிர்ந்து நம்மை மீட்டார். ‘துன்பம் ஒரு நல்ல ஆசிரியர்தானே!’ ‘துன்பமே நமது அர்ப்பணத்தில் வலிமை சேர்க்கிறது. பிறரோடு இணைந்து உழைப்பது, துன்புறுவது, மகிழ்வுறுவது இவையே கிறிஸ்து நமக்குக் காட்டும் மீட்பின் பாதையாகும்’ என்கிறது
இரண்டாம் வாசகம்.
இன்றைய
விழா நமக்குச் சொல்லித் தரும் முக்கியப் பாடங்கள் என்ன? முதலில், நம்மையே நாம் முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும்போது ‘கடவுள் அனுபவம்’ பெறுகிறோம். நம் அர்ப்பணத்தில் கடவுளைக் காண்கிறோம்; அவரது திட்டத்தை அறிந்துகொள்கிறோம்; மீட்பின் கருவியாகிறோம். இரண்டாவது, ஒவ்வோர் அர்ப்பணமும் நம்மை உலகின் பொதுச் சொத்தாக்குகின்றன. மக்களுக்காக நாம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோமெனில்,
மக்களுக்காகப் பணியாற்ற நாம் முன்வரவேண்டும். ஆண்டவருக்கு அஞ்சி, அவரது பெயரை நினைத்து, நீதிநெறி பிறழாது வாழ்வோரின் பெயர்கள் மட்டுமே கடவுளின் நூலில் இடம் பெறும் (மலா 3:16) என்பதை நினைவில் கொள்வோம்.
மூன்றாவது,
இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த மரியா - யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகிய நான்கு பேரும் பல்வேறு விதங்களில் வேறுபட்டவர்கள்; எனினும், இவர்கள் இறைவனை அணுகி, அவரால் வழிநடத்தப்பட தங்களை அனுமதித்தவர்கள். இறைவனின் பாதையில் நடப்பதற்குரிய விருப்பத்தையும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்கு அனுமதிப்பதையும் கிறித்தவ வாழ்வு எதிர்பார்க்கிறது என்பதை இந்த நான்கு பேரிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.
நிறைவாக,
அர்ப்பண உலக நாளைச் சிறப்பிக்கும் இன்று அர்ப்பண வாழ்விற்கெனத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களையும்,
வயதில் முதிர்ந்து, உடலால் தளர்ந்துள்ள அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரையும் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். உடல், உள்ள ரீதியான பல்வேறு சவால்கள், சோதனைகள், தடுமாற்றங்கள் என எத்தனை தடைகள்
வந்தாலும், அன்னை மரியாவைப்போல மனவுறுதியோடு வாழ இவர்களுக்காக வேண்டிக்கொள்வோம். இன்றைய நாளில் உருகி ஒளி கொடுக்கும் மெழுகுதிரியைச் சுமக்கும் நாம் ஒவ்வொருவரும் குழந்தையின் வடிவில் வரும் இறைவனை நம் கரங்களில் ஏந்தி இறைவனின் ஒளிக் கீற்றுகளாக ஒளிர்ந்திடுவோம்.