கடவுளின் தீர்ப்பு ஏழைகளுக்கே சாதகம்!
திருவழிபாட்டு
ஆண்டின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாளோடு இந்தத்
திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்கிறோம். வரும் திருவருகைக்கால முதல் ஞாயிறு, திருவழிபாட்டின்
புதிய ஆண்டாக அமைகிறது. நாம் நிறைவு செய்யும் இந்தத் திருவழிபாட்டு ஆண்டு முழுவதும்
ஞாயிறு திருப்பலிகளில் மாற்கு நற்செய்தியின் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக
அவருக்கு நன்றி கூறுவோம்.
2016-ஆம்
ஆண்டு நாம் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் உலக வறியோர் நாளை திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார். அதன் அடிப்படையில், நவம்பர் மாதம் 17-ஆம் நாள், அதாவது
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறை எட்டாவது உலக வறியோர் தினமாகச் சிறப்பிக்கின்றோம். இந்நாளைக்
குறித்து ஜூன் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்பட்ட
புனித அந்தோனியார் திருநாளன்று, சீராக் நூலாசிரியர் எடுத்துக்காட்டும் “ஏழைகளின்
செபம் இறைவனை நோக்கி எழுகிறது” (சீரா 21:5) என்ற இறைவார்த்தையை மையக்கருத்தாகத்
திருத்தந்தை தெரிவு செய்துள்ளார்.
உலக
வறியோர் தினத்தைக் கொண்டாடத் திரு அவை பணித்த இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள
வாசகங்கள் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் இறுதிநாள்
எப்போது, எவ்விதம் வரும் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த
இறுதிக்காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு
விடுக்கும் அழைப்பு.
யூத
மக்கள் மத்தியில் இறுதிநாள் சார்ந்த எண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அதுவும் அவர்கள்
வாழ்ந்த காலத்திலேயே உலக முடிவு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம்
இருந்தது. இறுதிக்காலத்தைப் பற்றி யூதர்கள், இறுதி நாள் மிகுந்த அச்சம் தரும் நாளாக
விடியும் என அஞ்சினர். அது கடவுளின் கோபம் எனவும், உலக அழிவு எனவும் எண்ணினர் (1அர
8:37; எரே 4:11-26; எசே 5:120). கொடுமையான அரசர்கள் பிடியில் சிக்கித் தவித்து, அடிமைகளாக
வாழ்ந்தபோது, அதுவே உலக அழிவின் காலம் என நினைத்தனர். குழப்பங்கள், போர்கள், இயற்கை
அழிவுகள் போன்றவை உலக இறுதிநாளின் முன்னோட்டம் எனவும் எண்ணினர். நம் காலத்திலும் புயல்,
வெள்ளம், நிலநடுக்கம் ஆகிய இயற்கைப் பேரிடர்களாலும், ‘கொரோனா’ எனும் பெருந்தொற்றினால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த வேளைகளிலும்
‘இதுதான் உலக முடிவா?’ என்ற கேள்விகளும் எழுந்தன என்பதை நாம் அறிவோம்.
2000-ஆம்
ஆண்டு நெருங்கிய வேளையில் உலக முடிவைப் பற்றிய வதந்திகளும், பல குழப்பங்களும் உருவாகின.
இறுதிநாளின் அச்சத்தை மிகவும் மிகைப்படுத்தி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில சமயப் போதகர்களும்
இலாபம் தேடினர் என்பது உண்மை. எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்றக் குன்றருகே ‘ஒலிவ
மலை ஹோட்டல்’ (Mount
of Olives Hotel) என்ற
விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு
1998 -ஆம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். “2000 -ஆம் ஆண்டு, இயேசுவின் ‘இரண்டாம்
வருகை’ நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள்
காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம்.
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்” என்பதே அக்கடிதத்தில் கூறப்பட்ட விளம்பர
வரிகள்.
வர்த்தக
உலகமும், சில சமயப் போதகர்களும் ‘உலக முடிவு’,
‘இரண்டாம் வருகை’ ஆகியவற்றைக் கேலிப்பொருளாக மாற்றி,
இலாபம் தேடுவதில் தீவிரம் காட்டும் வேளையில், உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை
எண்ணங்களை எழுப்ப வேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும், இறுதிக் காலத்தை நாம்
எவ்விதம் தயார் செய்வது போன்ற கேள்விகளை எழுப்புவது நல்லது.
இன்றைய
முதல் வாசகம், இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது. துன்பங்களில் நிலைகுலையாது
நிலைத்திருக்கும் நல்லவரை ஆண்டவர் கைவிடமாட்டார் எனவும், அவர்கள் பெயர்கள் வாழ்வின்
நூலில் இடம்பெறும் எனவும் நம்பிக்கை தருகிறது. இன்றைய நற்செய்திப் பகுதி மானிட மகனின்
வருகையைப் பற்றி எடுத்துரைக்கின்றது. மனிதராகப் பிறந்து பாடுபட்ட இயேசு மிகுந்த வல்லமையோடு
மீண்டும் வருவார்; வரும்போது வானில் பெரும் அடையாளங்கள் காணப்படும். தம்மைப் பின்பற்றி,
இறைநம்பிக்கை கொண்டு நேரிய வழியில் நடப்போர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை; இறைவனது
விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வோர் இறைவனின் மாட்சியில் பங்குகொள்வர் என இயேசு எடுத்துரைக்கிறார்.
நல்வாழ்வின்
அடிப்படையிலேயே ஒருவர் முடிவில்லா வாழ்வை வெகுமதியாகப் பெறமுடியும் என்பதே இன்றைய முதல்
மற்றும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. திருத்தந்தை உரையாற்றிய மூவேளைச்
செப உரையிலும், “இறுதிநாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ்
காலத்தைச் செம்மையான முறையில் நாம் வாழ வேண்டும்” எனக்
கூறுகிறார் (வத்திக்கான், 18.11.2018).
நாம்
வாழும் இந்த வாழ்க்கை இறப்போடு முற்றிலும் முடிந்து விடுவதில்லை. இவ்வுலகைத் தாண்டி,
மற்றொரு வாழ்வு உண்டு. மறுவாழ்வு குறித்து திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துகளில்
‘இறுதித்தீர்ப்பு’ என்பது ஒரு முக்கியமான பாடம்.
மூவகை
மனநிலைகளில் வாழும் மனிதர்களைச் சந்திக்கிறோம். முதலில், எப்படியும் ஒருநாள் சாகத்தான்
போகிறோம்; அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம் என்ற சுயநல மனநிலையில்
வாழ்பவர்கள்; இரண்டாம் நிலையில், என்னதான் நல்லவற்றைச் செய்தாலும், எல்லாமே ஒருநாள்
அழியத்தான் போகிறது; பின் ஏன் நல்லவற்றைச் செய்ய வேண்டும்? என்ற விரக்தி மனநிலையோடு
வாழ்பவர்கள்; மூன்றாம் நிலையில், எல்லாமே அழியத்தான் போகிறது, நானும் சாகப்போகிறேன்;
அதற்கு முன் உள்ள நேரத்தில், என்னால் முடிந்தவரை நல்லது செய்வேன் என்ற நம்பிக்கை உணர்வில்
வாழ்பவர்கள். இந்த நம்பிக்கை உணர்வுக்குக் கூடுதல் அர்த்தம் தருவது, மறுவாழ்வு என்ற
எண்ணம். நம் வாழ்வு இவ்வுலகத்தோடு முடிவடையாமல் அது மறு உலகிலும் தொடரும் என்ற உணர்வே
இவ்வுலகப் பயணத்தைப் பயனுள்ள பாதையில் தொடர்வதற்கு உதவியாக உள்ளது.
இவ்வுலகில்
வாழும் நாம் இறுதிநாளில் தகுந்த வெகுமதியோ, தண்டனையோ எதனடிப்படையில் பெறுகிறோம்? ‘வறியோருக்கு
நாம் என்ன செய்தோம்?’ என்ற ஒரே ஒரு கேள்விதான் மறுவாழ்விற்குள் நாம் அடியெடுத்து வைக்க
அனுமதி தரும் நுழைவுச்சீட்டு. அதிலும், குறிப்பாக, தேவையில் இருக்கும் வறியோருக்கு
நாம் என்ன செய்தோம் என்பது ஒன்றே மறுவாழ்வின் வாசலில் நம் வாழ்வை எடைபோடப் போகும் தராசு.
நாம்
எத்தனை முறை கோவிலுக்குச் சென்றோம், எத்தனை மறைநூல்களைக் கற்றுத்தேர்ந்தோம், எத்தனை
பக்தி முயற்சிகளில், திருப்பயணங்களில் பங்கேற்றோம், எத்தனை நாள் உண்ணா நோன்புகளைக்
கடைப்பிடித்தோம் என்பவை மட்டும் மறுவாழ்வில் நாம் நுழைவதற்கு அளவுகோல்களாக இருக்காது.
வறியோரிடமிருந்து பெறக்கூடிய பரிந்துரைக் கடிதம் இன்றி, மறுவாழ்வில் அடியெடுத்து வைக்க
முடியாது. தேவையில் இருப்போர் சார்பில் என்னென்ன செய்தோம் அல்லது செய்ய மறுத்தோம் என்பதே
நம்மை ‘முடிவில்லா வாழ்வுக்கு’ அல்லது ‘முடிவில்லா அழிவுக்கு’ இட்டுச் செல்லும்.
உலக
வறியோர் தினத்திற்காகத் தமது செய்தியில், ‘கடவுள் தமது குழந்தைகளின் துன்ப துயரங்களை
அறிந்திருக்கிறார்; ஏனென்றால் அவர் நம்மீது கவனமும் அக்கறையும் கொண்ட ஒரு தந்தை’ என்றும், ‘ஒரு தந்தையாக தேவையில் இருப்போராகிய ஏழைகள்,
ஒதுக்கப்பட்டவர்கள், துன்பப்படுபவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களை மிகவும் நன்றாகக்
கவனித்துக்கொள்கிறார்’ என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்,
‘நாம் நாள்தோறும் சந்திக்கும் ஏழைகளின் முகங்களிலும் முகவரியிலும் இந்த இறைவார்த்தையைப்
படித்துச் சிந்திப்போம்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் (உலக
வறியோர் தின உரை, 13.06.2024).
பல்வேறு
துன்பங்களால் தங்கள் முகத்தையும், முகவரியையும் இழந்து, அடையாளம் ஏதுமின்றி அலையும்
ஏழை மக்களுடன் தம்மையே இணைத்துக்கொண்ட இயேசு,
அதே இணைப்பை இறுதித்தீர்ப்பு நேரத்திலும் உருவாக்குகிறார். மனிதர்கள் என்ற அடையாளமே
இன்றி உருக்குலைந்து போயிருக்கும் இம்மனிதர்களே, இறுதித்தீர்ப்பு வேளையில் இயேசுவோடு
இணைந்து, நமக்குத் தீர்ப்பு வழங்க வருவர். எனவே, தேவையில் இருக்கும் ஒருவருக்காவது
நன்மைகள் செய்து, அவரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்று, விண்ணரசில் நுழையும் தகுதி பெற
இன்றே முயல்வோம்.
ஏழைகளுக்காக
மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு
ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து,
தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம்.
அச்சம் தவிர்த்து, இறுதிநாளில் மானிட மகனை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
அன்பே வாழ்வு!
அன்பே பெருங்கொடை!
“அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து. ஆனால், அந்த அன்பே பொய்யானால் இந்த உலகத்தில் அதைவிடக் கொடிய நோய் எதுவுமில்லை” என்றவர் புனித அன்னை தெரேசா. மனித வாழ்வின் இரகசியம் அன்பு செய்வதிலே அடங்கியிருக்கிறது. காலத்திற்கும் காலாவதியாகாத ஒரே மருந்து அன்பே. மனிதர் அன்பு செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்கிறார்.
“கடவுள் தம் உருவிலே மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்” (தொநூ 1:27). கடவுளுடைய பண்புகளால் படைக்கப்பட்டவரே மனிதர். மற்ற படைப்புகளில் இறைவனுடைய பண்புகள் சில வெளிப்பட்டாலும், மனிதரிடத்தில்தான் கடவுளுடைய பண்புகள் முழுமையாக வெளிப்பட்டன. அன்பே கடவுளின் முழுமையான பண்பு. மனிதர் இறை-மனித அன்பின் வழியாக இறைவனோடு நெருங்கி வரமுடியும். கடவுளின் கட்டளைகளின்படி நடந்தால் கடவுளை இன்னும் அதிகமாக நெருங்கி வரலாம். இறைவனின் முதன்மையான கட்டளையே அன்பு செய்வதுதான். இறைவனோடு அன்புகொள்ளும் தகுதி மனிதருக்கே இருக்கிறது. இதுவே மானிடப் படைப்பின் பெருமை.
‘மானிடர் - கடவுளின் உருவம்’ என்ற கருத்துரு மனிதர் மற்ற படைப்புகளோடும், சக மனிதர்களோடும், இறைவனோடும் அன்பு கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதுவே மனிதராவதற்கு உயரிய வழி. மனித பிறப்பின் இலட்சியமும் அதுவே. “அன்பே உருவான கடவுள், பிறரை அன்புகூர வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, அன்பிலிருந்து நம்மைப் படைத்தார்” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனப் பாடினார் புலவர் ஒளவையார். உண்மையில் மானிடராய்ப் பிறத்தல் எளிது; ஆனால், மானிடராய் வாழ்வதுதான் கடினம். அதனால்தான் உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப், ‘மனிதனுக்கு மிகவும் கடினமானது மனிதனாவதுதான்’ என்கிறார்.
அன்பிற்குரியவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 31 -ஆம் ஞாயிறு வழிபாடு முப்பரிமாண அன்பைக் குறித்துச் சிந்திக்க நம்மை அழைக்கிறது. தன்னையும், தன்னைப் போன்ற பிறரையும், தம் உருவின் முழுவடிவாம் இறைவனையும் அன்பு செய்து வாழ ஆரத்தழுவி நம்மை அழைக்கிறார் இறைமகன் இயேசு.
இன்றைய நற்செய்தியிலிருந்து நம் சிந்தனையைத் துவங்குவோம். இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த மறைநூல் அறிஞர் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” (மாற் 12:28) என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறார். இயேசு அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். “இஸ்ரயேலே கேள்” என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு மூன்று கட்டளைகளைக் கூறுகிறார். அவை 1. இறையன்பு, 2. பிறரன்பு, 3. தன்னன்பு.
யூதர்கள் ஆண்டவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்வதைத் தங்கள் முதன்மையான கட்டளையாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த முதன்மையான கட்டளையே (இச 6:4) யூதரின் நம்பிக்கை முழக்கம் ஆகும். இது யூதச் சமயத்தில் மிக முக்கியமான ‘செமா மன்றாட்டு’ (Shema Prayer). ஒரு யூதர் இந்த மன்றாட்டை ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை செபித்தார். இதனை இஸ்ரயேலர்களின் காலைச் செபம் என்று சொல்வார்கள். இவர்களின் காலைச் செபம் ‘செமா இஸ்ரயேல்’ (shema Israel) என்று தொடங்குகின்றது. யூதக் குழந்தைகளுக்கு முதன்முதலில் கற்றுக்கொடுக்கப்பட்ட செபமும் இதுவே. “நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல்” (இச 6:7). இறக்கும் தறுவாயில் ஒரு யூதரின் உதடுகளில் ஒலித்த இறுதி மன்றாட்டும் இதுதான்.
இந்த ‘இஸ்ரயேலே கேள்’ என்ற நம்பிக்கை முழக்கத்தை ஒவ்வொரு யூதரும் தங்கள் வீடுகளின் கதவுகளில் தொங்கவிட்டனர். ஆண்களோ இந்த நம்பிக்கை முழக்கத்தைக் கையிலே சீட்டுப் பட்டமாகக் கட்டிக் கொண்டனர். சிலர் சீட்டுப் பட்டமாக எழுதி நெற்றியிலும் கட்டிக்கொண்டனர். இஸ்ரயேலர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு சிந்தனையோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும், முழு வலிமையோடும் கடவுளை அன்பு செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.
இதில் மிக முக்கியமான இறையியல் நம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன. யாவே, பிற தெய்வப் போலி வழிபாடுகளைச் சகித்துக்கொள்ளாத கடவுள் ஆவார். அவர் அன்பைக் கொடுத்து அனைத்தையும் தொடங்கி வைக்கிறார் (உரோ 8:31-39; எபே 1:1). பின்னர் அதே அன்பை எதிர்பார்க்கிறார். அந்த அன்பு முழுமையான அன்பாக இருக்கவேண்டும். ‘கடவுளையும் அன்பு செய்வேன்; அதேவேளையில் கொஞ்சம் மூடநம்பிக்கையிலும் எனக்கு விருப்பம் உண்டு’ என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் பகுதி நேர அன்பர்கள். அவர்களால் கடவுளை முழுமையாக அன்பு செய்ய முடியாது. எனவேதான், இக்கட்டளையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இயேசு திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளை எது எனக் கேட்ட மறைநூல் அறிஞரிடம், இந்த வசனத்தையே (இச 6:4) மனப்பாடமாகக் கூற வைத்தார் (மாற் 12:28).
இறையன்பு என்ற கட்டளையைப் பற்றிப் பேசிய இயேசு, இதற்கு இணையாக இரண்டாவது கட்டளையாக லேவியர் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார் (லேவி 19:18; மாற் 12:31). யூதர்களின் பார்வையில் இக்கட்டளை தம் சொந்த இனத்தாரை மட்டுமே அன்பு செய்யத் தூண்டியது (விப 2:13). அதாவது, அடுத்திருப்பவர் என்பது ஒரு சக யூதரையே குறித்தது. ஆனால், இயேசுவோ அன்புக்கு எல்லை இல்லை எனத் தெளிவாகக் கற்பித்தார் (லூக் 10:25; மத் 5:43). இயேசுவின் பார்வையில் அடுத்திருப்பவர் என்பவர் தேவையிலிருக்கும் அனைவரையும் உள்ளடக்குகிற, பரந்து விரிந்த கண்ணோட்டமாகும். இதுவே இயேசு வழங்கும் புதிய கட்டளையாகும் (யோவா 13:34-35).
இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். அடுத்தவர்மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, தன்மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிடுகிறார். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று இயேசு கூறுகிறார். பிறரன்பின் தொடக்கமே தன்னன்பு. தன்னை அன்பு செய்பவர் மட்டுமே கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்வர். தன்னன்பு இல்லாதவர் பிறரிடமிருந்து அன்பைப் பெறவோ, பிறருக்கு அன்பைக் கொடுக்கவோ முடியாது. தன் உணர்வுகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் செவிமடுப்பவரே, பிறருடைய உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் செவிமடுக்க முடியும். தன்னை மதித்து, ஏற்று, அன்பு செய்து, பிறரையும் ஏற்று உறவுகொண்டு, இறையன்பில் வாழும் மனிதரே முழு மனிதராகிறார்.
இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடும்போது, “கடவுளை அன்புகூர்வது என்பது, அவரருகே அவருக்காக வாழ்ந்து, அவருடன் இணைந்து உழைப்பவர்களாக, அதாவது நமக்கு அடுத்திருப்பவரிடையே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பணிபுரிவதையும், எல்லைகளின்றி மன்னிப்பதையும், ஒன்றிப்பிலும் சகோதரத்துவத்திலும் உறவுகளை வளர்ப்பதையும் குறித்து நிற்கின்றது” எனவும், “பிறரன்பு என்பது ஏழைகளின் வெளிப்புறத் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல; அவர்கள் எதிர்பார்க்கும் உடன்பிறந்த நெருக்கத்தையும், அக்கறையையும் நாம் வெளிப்படுத்தவேண்டும்” எனவும் குறிப்பிடுகிறார் (மூவேளைச் செப உரை, 04.11.2018).
நிறைவாக, இடையறாது அன்பு செலுத்தி வாழ்வது என்பது கடினம்தான். ‘அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்று புலம்பும் பெரும்பாலான மனிதர்களின் ஓசையைக் கேட்க முடிகிறது. ‘அன்பினால் பல ஏமாற்றங்களைச் சந்தித்துத் துவண்டுப்போனேன்’ என அங்கலாய்த்தவர்களையும் நாம் சந்தித்துள்ளோம். உண்மையான அன்பு யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை அன்பு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. அன்பு செலுத்துவதையே தங்களது இயல்பாகக் கொண்டவர்களின் எண்ணங்கள் மேன்மையானதாகவே இருக்கும். உண்மை அன்பு எந்த நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல. ஒருவரை அவருடைய இயல்பிலேயே, இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்வதே உண்மையான அன்பு.
இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பு உண்மையான, நிபந்தனையற்ற அன்பு. நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை அன்பு செய்கிறார். தமது வாழ்வில் சந்தித்த எல்லாரையும் அளவுகடந்து அன்புகூர்ந்தார். தலைமைக் குருவான அவர் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி (எபி 7:27), தம் அன்பு முகவரியை அகிலத்திற்கும் பறைசாற்றினார். அன்பே வாழ்வு; அன்பே கடவுள்; அன்பே பெருங்கொடை. “உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப்போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே” (மூவேளைச் செப உரை, 13-10-2024) உண்மையான, கலப்படமற்ற அன்பின் தெய்வீக இலக்கணத்தை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள, அதையே அயலாருக்கும் வழங்க இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.