news
ஞாயிறு மறையுரை
சனவரி 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 62:1-5; 1கொரி 12:4-11; யோவா 2:1-12

காத்திட கடவுளுண்டு, கலங்கிட வேண்டாம்!

இரண்டு இளம் உள்ளங்கள் மகிழ்வோடும் துணிவோடும் ஒரு குடும்பத்தை அமைக்க முடிவெடுப்பது என்பது எத்துணை அழகான சாட்சியம்! குருத்துவம், துறவறம் போன்று உண்மையும் உறுதிப்பாடும் கொண்ட ஓர் இறை அழைத்தலே திருமணம். திருமணம் என்பது மனித உறவுகளிலேயே மிக நெருக்கமான, அழகான இலக்கணம்! அந்த இலக்கணத்தில் தம் இறை முத்திரையைப் பதிக்க மூவொரு கடவுளின் இறைமகன் அந்தத் திருமணத்தில் கலந்துகொள்கிறார். கலிலேயாவின் கானாவில் நிகழ்ந்த ஒரு திருமணத்தில் ஏற்பட்ட குறையையும், அந்தக் குறை தீர்க்கப்பட்ட அழகையும் நாம் இன்று சிந்திக்கிறோம்.

யூத மக்களிடையே பொதுவாக, திருமண நிகழ்வு ஏழு நாள்கள் நடைபெறும். இந்த ஏழு நாள்கள் வெறுமனே உண்டு குடிப்பதற்காக அல்ல; மாறாக, உறவுகளைப் பகிர்ந்திட, உதவிகள் புரிந்திட, உறுதுணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்திட ஒன்றாய் கூடினர். இந்த மனநிலையில்தான் இயேசுவின் சீடர்கள், இயேசு, அவருடைய தாய் முன்னரே அழைப்புப் பெற்றுச் செல்கின்றனர். பொதுவாக, திருமணங்களில் உணவு வேளையில்தான் சில பற்றாக்குறைகள் நிகழ்வதுண்டு. அவ்வாறு குறைகள் ஏற்படும்போது அவற்றைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. கானாவில் நடந்த திருமணத்திலும் உணவு வேளையில் இரசம் தீரப்போவதையும், அதனால் திருமண வீட்டார் எதிர்கொள்ளப் போகும் அவமானத்தையும் உணர்ந்த மரியா, இயேசுவிடம் விரைந்து சென்று, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்கிறார் (யோவா 2:3). இந்த ஒற்றை வரி வார்த்தையால் உளம்நிறை மகிழ்ச்சியை அக்குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் அன்னை மரியா. “நம் நலத்திற்குக் காவலராக இருக்கும் அன்னை மரியா தன் குழந்தைகளின் தேவை குறித்து அக்கறையுள்ளவர்களாகச் செயல்படுவதன்மூலம் அத்தேவை அனைத்தையும் நிறைவு செய்பவராகவும் இருக்கிறார்என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று உண்மை என்பது இங்கே எண்பிக்கப்படுகிறது. மரியா இயேசுவிடம் பரிந்துரைத்ததை ஓர் அழகான இறைவேண்டல் என்கின்றனர் இறையியல் வல்லுநர்கள். செபம் என்றதும், ‘இது வேண்டும், அது வேண்டும்என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். கடவுளிடம் நீண்ட பட்டியல்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச் சொல்வது அழகான, உயர்வான செபம். இந்தச் செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையை அன்னை மரியா வெளிப்படுத்திய ஒற்றை வார்த்தையில் காண முடிகிறது.

அன்னை மரியா திருவிவிலியத்தில் அதிக வார்த்தைகள் ஒன்றும் பேசவில்லை. ஆனால், அவர் பேசிய ஒருசில வார்த்தைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. யோவான் நற்செய்தியாளர் மரியாவைப் பற்றி இரண்டு குறிப்புகளைத் தருகிறார். ஒன்று, கானா  திருமணம் (2:1-12). இரண்டு, சிலுவையடியில் (19:25-27). இயேசு தம் பணி வாழ்வை ஆரம்பிக்கும் வகையில் முதல் அருளடையாளத்தை இயேசு செய்வதற்கு அன்னை மரியாவே தூண்டுதலாக இருந்தார். அதுபோன்று தம் பணி வாழ்வில் இறுதியில் அதாவது கல்வாரி மலைமீது சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது சிலுவை அருகில் இயேசுவின் தாய் நின்று கொண்டிருந்தார். துன்ப வேளையில் ஆறுதல் தரும் அன்னையாக, அன்னை மரியா இருக்கிறார் என்பதை இவ்விரு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகின்றன.

கானா திருமண நிகழ்வில் இரண்டு சொற்றொடர்களை மட்டுமே அன்னை மரியா உச்சரித்தார். ஒன்று, ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது; மற்றொன்று, ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்.’ அன்னை மரியா கூறிய இரண்டாவது கூற்று, கானா திருமண விழா பற்றிய நிகழ்ச்சியின் மையச் சிந்தனையாக அமைகின்றது. ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்னும் கூற்றில் ஆண்டவர் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. நமக்கு விருப்பமானதைத் தெரிவு செய்து செயலாற்றிவிட்டு, பிடிக்காததை விட்டுவிடுவது என்பது மரியா நமக்குத் தரும் அழைப்பு அல்ல. வாழ்வில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதைப்போன்ற தருணங்களில் மரியா கூறிய இந்த நான்கு சொற்களும் நம் வாழ்வில் அடித்தளமாக மாறினால், நாமும் வல்ல செயல்களைக் காணமுடியும்.

தம் தாயின் உதவி செய்யும் உணர்வையும், வருந்துவோரின் துன்பத்தைத் தன் துன்பமாக உணரும் பரிவுள்ளத்தையும் கண்ட இயேசுவால் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியுமோ? இதுதான் அன்னை மரியாவின் அழகு! இதுவே அவரது இலக்கணம்! குறைகள் உருவானதும் வந்து நிற்பவர் அன்னை மரியா. அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும்.

இத்திருமண நிகழ்வில் நம் சிறப்புக் கவனத்துக்குரியவர்கள் பணியாளர்கள். “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்என்று இயேசு சொன்னதும்இயேசு என்ற இந்த இளைஞர் என்ன செய்துவிடுவார்?’ என்றும் எண்ணியிருக்கலாம். காரணம் அவர் இதுவரை வெளிப்படையாக எவ்வித வல்ல செயலையும் செய்திருக்கவில்லை. ஆனால், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதும் பணியாளர்கள், ‘தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப்போல்இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அதுவும் தொட்டியில் விளிம்புவரை தண்ணீரை நிரப்பினர். எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை தண்ணீரை நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது எனலாம்.

கடவுள் என்பவர் நிறைவானவர், அவரிடம் குறையொன்றுமில்லை. இதன் காரணமாக, கடவுள் தம்மால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் நிறைவாக, எந்தக் குறையுமின்றி இருக்க விரும்புகிறார். “கடவுளின் பிரசன்னம் நன்மைத்தனங்களால் நிறைந்துள்ளதுஎனும் தூய பேசிலின் வார்த்தைகள் இங்கே நினைவு கூரத்தக்கவை. தந்தையின் வழியில் இயேசுவும் குறைவில்லா வாழ்வு வழங்க வந்தவர். அதையும் நிறைவாக வழங்க வந்தவர் (யோவா 10:10). ‘காத்திட கடவுளுண்டு, கலங்கிட வேண்டாம்என்ற நம்பிக்கை வரிகளை நினைவூட்டுகிறது கானா திருமண நிகழ்வு. தேவையில் நமக்குத் துணையாக வருபவராகவும் தக்க வேளையில் நமக்கு உணவளிப்பவராகவும் இயேசு நம்மோடு இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை ஒரு மேலான வாழ்விற்கு, ஒரு மகிழ்ச்சியின் கொண்டாட்டத்திற்குக் கடவுள் அவர்களை அழைத்துச் செல்கிறார். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும் அந்நியப் படையெடுப்புகளாலும் சீரழிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்குக் கிடைத்த பெயர்கள்கைவிடப்பட்டவள், ‘புறக்கணிக்கப்பட்டவள்.’ கடவுளின் பார்வையால் இவர்களின் பெயர்கள் மாற்றம் பெறுகின்றன. ‘எப்சிபா - அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், ‘பெயுலா - மண முடித்தவள் என்று இறைவன் வழங்கும் புதிய பெயர்கள் எருசலேம் பெறும் புதிய வாழ்வையும் புதிய உறவையும் குறிக்கின்றன. எனவே, புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் மகிழ்ச்சியின் மக்கள். இம்மகிழ்ச்சி இயேசு நம்மோடு இருப்பதால் என்றும் எங்கும் நிறைவாகக் கிடைக்கும். மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் நம் கடவுள் நம்மில் மகிழ்கிறார் (எசா 62:5).

இறுதியாக, இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தியை அறிய முற்படுவோம். தன் மகன்மீது கொண்ட நம்பிக்கையினால்அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்று பணியாளர்களைப் பார்த்துக் கூறிய அன்னை மரியா இறைவனை எந்தளவுக்கு நம்ப வேண்டும் என்ற அழைப்பை நமக்குத் தருகிறார். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை அன்னை மரியா எடுத்துக்காட்டுகிறார்.

ஏழைகள், ஒதுக்கப்பட்டோர், இரந்துண்போர், ஆதரவற்றோர் இவர்கள் கடைசிப் பந்தியில் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்த சூழலில், எப்போதாவது ஒருமுறை மட்டும் கிடைக்கும் இரசம் இவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்பது மரியாவின் கவலை. எனவேதான் இயேசுவிடம் முறையிட்டு முன்பு பரிமாறப்பட்டதைவிடச் சிறந்த இரசத்தைப் பெற்றுக் கொடுக்கிறார். வேறு யாரும் கவலைப்படாத வேளையில் மரியாவின் பார்வை மட்டும் இவர்கள்பால் விழுகிறது. எனவே, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாகபயணிக்கும் இச்சிறப்பு யூபிலி ஆண்டில், யாருடைய பார்வையும் படாத ஏழைகள்பால் நம் பார்வை படவேண்டும் என்பதை மரியாவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, தொட்டியில் விளிம்பு வரை தண்ணீரை நிரப்பிய பணியாளர்களின் செயல், தயக்கத்தோடும் எரிச்சலோடும் ஈடுபாடின்றியும் செயல்படாமல் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மனநிறைவைத் தருவதோடு, வாழ்வில் பல மாற்றங்களையும் புதுமைகளையும் உருவாக்கும் எனும் பாடத்தை நம் மனத்திலே பதிக்கிறது.

நிறைவாக, திருமண விழாவில் பரிமாறப்பட்ட சாதாரண இரசம் தீர்ந்துவிட, இயேசு அருளிய புதிய இரசம் சுவைமிக்கதாய் இருந்தது (2:10). தீர்ந்துவிட்ட பழைய இரசம் யூத முறைமைகளைக் குறித்து நிற்கிறது. அவை அர்த்தமற்றுப் போய்விட்டன. அவை இனி தேவையில்லை. அவற்றிற்குப் பதில் இயேசு புதிய முறைமைகளை, வாழ்க்கை நெறிமுறைகளைத் தருகிறார். இயேசு தரும் புதிய முறைமைகள் யூத முறைமைகளைவிட மிகவும் சிறந்தவை, வாழ வைப்பவை. ஆகவே, பழைய மரபுகளை விட்டுவிட்டு இயேசு தரும் புதிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்நிகழ்வு நமக்கு வழங்கும் மற்றுமொரு மேலான அழைப்பு.

ஆகவே, இயேசு சொல்வதையெல்லாம் நாம் செய்தால், தண்ணீர் இரசமாய் மாறியதைப் போல், நமது வாழ்வும் பல வகைகளில் மாறும். பிறரின் துயர் துடைக்கும் பணியில், அன்னை மரியாவைப்போல பயணிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 12, 2025, ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) எசாயா 40:1-5,9-11; தீத்து 2:11-14; 3:4-7; லூக்கா 3:15-16, 21-22

அவரோடு அவராக... அவரில் அவர் வழியாக..!

மனித வரலாற்றில் ஆழமான எண்ணங்களையும் காயங்களையும் பதித்துச் சென்ற நிகழ்வு இரண்டாம் உலகப் போர். மனித குலத்தையே வேதனையிலும் வெட்கத்திலும் தலைகுனிய வைக்கும் வரலாற்றுப் பிழை இந்தப் போர். இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டநாத்சிவதைமுகாம்கள் (நச்சு வாயுச் சூளை), மனித வரலாற்றில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளன. பலர் நச்சு வாயுச் சூளையில் உயிரிழந்தனர். இன்னும் பலர் அந்த வாயுச் சூளைகளுக்குச் செல்வதற்கு முன்னரே உள்ளத்தால் இறந்து, நடைப்பிணங்களாக வலம் வந்தனர்.

இந்த வதைமுகாமிலிருந்து உயிரோடு வெளியேறியவர்களில் பலர் உடலாலும் உள்ளத்தாலும் நொறுங்கிப் போய், தங்கள் மீதி நாள்களைக் கழித்தனர். மிகச்சிலரே அந்த வதைமுகாம்களிலிருந்து வெளியேறி உள்ளத்தளவில் போதுமான நலத்துடன் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் விக்டர் பிராங்கல் (Viktor E. Frankl) என்ற ஆஸ்திரிய நாட்டு மேதை.

புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும், மனநல மருத்துவராகவும் வாழ்ந்த விக்டர் பிராங்கல், தன் வதைமுகாம் அனுபவங்களையும், அவற்றிலிருந்து தான் வெற்றிகரமாக வெளிவர தனக்கு உதவியாக இருந்த உண்மைகளையும் தொகுத்து, ‘Man\'s Search for Meaningஅதாவது, ‘அர்த்தத்திற்காக மனிதனின் தேடல்என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். இந்தக் கொடிய சூழல்களிலிருந்து, தான் உயிரோடும் ஓரளவு உள்ள நலத்தோடும் வெளியேறியதற்கு இரு காரணங்களை அவர் கூறுகிறார். ஒன்று, தன் மனைவி தன்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் என்ற உணர்வு; மற்றொன்று, தான் எழுதி முடித்திருந்த ஒரு புதிய நூலின் கைப்பிரதியைத் தன் கண்முன்னேநாத்சிபடையினர் அழித்து விட்டதால், அந்நூலை மீண்டும் எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்று தனக்குள் எழுந்த ஆவல்.

நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொண்டாலும், இரண்டு காரணிகள் நம்மை இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டவை. 1) தன்மீது அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வு. 2) என்னுடைய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு. இந்த இரண்டு நோக்கங்களும்தான் பலரையும் வாழ வைக்கின்றன. அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வுதான் இவ்வுலகையும் இயங்க வைக்கின்றது.

ஆண்டின் பொதுக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் இரண்டு செய்திகள்: 1) நம்மில் ஒருவராக நம்மோடு வந்துள்ள இயேசுவின் அன்பை உணர்வது, 2) அவரில் அவர் வழியாக இணைந்து நற்செயல்கள் புரிவது.

இந்தச் சமூகத்தில் மாற்றங்களை விரும்பிச் செயல்படும் எவரையும் அவ்வளவு எளிதாக இச்சமூகம் அங்கீகரிப்பதில்லை. சமூக மாற்றத்திற்கான நற்செயல்களைச் செய்யும்போது, பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சிலர் தங்கள் நற்பெயரை இழக்க நேரிடலாம். சிலர் பெரிய விலையாகத் தங்கள் உயிரையே கொடுக்க நேரிடலாம். இதுபோன்ற சவால்கள், எதிர்ப்புகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும், சமூக மாற்றத்திற்காக அர்ப்பணத்துடன் ஈடுபடும் உன்னதமான மனிதர்கள் இன்னமும் நம் மத்தியில் வாழத்தான் செய்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இயேசுவின் திருமுழுக்கு அன்றைய பாலஸ்தீன சமூகத்திற்கு இயேசு கொடுத்த சமூகப் பொறுப்புணர்வு மிக்கப் பதிலிறுப்பு எனலாம். பாலஸ்தீன சமூகம் ஏற்றத்தாழ்வுகளும் ஏழ்மைப் பிணிகளும் சமூகப் புறக்கணிப்பும் பாலின வேறுபாடுகளும் நிறைந்த சமூகம். மனிதரைக் கடவுளின் சாயலாகப் பாராமல், சட்டங்களுக்குள் முடக்கிவைத்து, உயர்வு-தாழ்வு பாராட்டிய சமூகம். யாரேனும் மாற்றத்திற்காகக் குரல் கொடுத்தால்சமயத் துரோகிஎனக் குற்றம் சாட்டிய சமூகம். ஏழை - பணக்காரன், ஆள்பவன் - அடிமை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்று பிளவுபட்ட, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தைப் பார்த்துச் சோர்ந்து போன யூத மக்கள், எப்போது இந்த வேறுபாடுகள் மறையும் என்று காத்துக் கிடந்தனர். முப்பது ஆண்டுகள் நாசரேத்தூரில் வாழ்ந்த இயேசு, தம்மைச் சுற்றி நடந்த பல அநீதிகளைக் காண்கிறார். அதற்கு விடைதேடும் ஓர் இளைஞராக, முதலில் மக்களோடு மக்களாகத் தம்மைக் கரைத்துக்கொள்கிறார்; உறுதியுடனும் துணிவுடனும் திருமுழுக்குப் பெற யோவானிடம் வருகிறார்.

முதலில், மக்களோடு மக்களாகக் கலந்து இயேசு திருமுழுக்குப் பெற வருகிறார் (லூக் 3:21). மக்களை மீட்க வந்தவர் மக்களோடு மக்களாக வருவதா? இயேசு தன்னிடம் வருவதைக் கண்டு திகைத்து நிற்கிறார் திருமுழுக்கு யோவான். “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (3:16) என்று மக்களிடம் அடிக்கடிக் கூறி வந்தவர் யோவான். “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்என யோவான் தன் நிலை உணர்ந்து கூறினாலும், தம்மைத் தாழ்த்தி திருமுழுக்குப் பெற முன்வருகிறார் இயேசு. யோவானைவிட பெரியவர் என்ற எண்ணம் எதுவுமின்றி, பாவிகளோடு பாவம் செய்யாத தம்மையும் இணைத்துக்கொள்கிறார். “பாவிகளோடு இருக்க விரும்பி, அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல், மேலிருந்து கொண்டே நம்மை மீட்க இயேசு விரும்பவில்லை; மாறாக, பாவங்களைத் தம்மீது சுமந்துகொண்டு, நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் அவர் என்பதைக் காண்பிக்கின்றது (மூவேளைச் செப உரை, 10.01.2021). இத்தகைய எளிய மக்களோடு மக்களாக இயேசு திருமுழுக்குப் பெறச் செல்வது அவர்கள்பால் அவர் கொண்டிருந்த அன்பையும் அவர்கள் வாழ்வு மாற்றத்தில் அவர் காட்டிய அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கு அவரது சமூகப் பொறுப்புணர்வை நமக்கு உணர்த்துகிறது. திருமுழுக்கு இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இறையாட்சிப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு அவரது திருமுழுக்கு நடந்தேறுகிறது.

பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் (லூக் 3:3) என்றுதான் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளில் பறைசாற்றி வந்தார். மீட்பர் வரும்போது தாங்கள் புனித நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வெளிச்சடங்கின் மூலம் மனம் மாறிப் புதிய வாழ்வு வாழ விரும்பியவர்களுக்கு யோவான் திருமுழுக்கு அளித்து வந்தார். எனவே, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு இயேசுவுக்குத் தேவை இல்லை. பின்பு ஏன் அவர் திருமுழுக்குப் பெறவேண்டும்? பாவிகளாகிய நம்முடன் தம்மை ஒன்றிணைத்துக்கொண்டு கடவுளைத் தேடும் நமது மீட்பின் பாதையில் உடன் இணைகிறார். மேலும், சமூகத்தில் நிலவி வரும் அநீதி அமைப்புகளின் தொடர் செயல்பாடுகளுக்குத் தாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகத் திருமுழுக்குப் பெறுகிறார். ஆக, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உழைப்பதும், நமக்கான சமூகப் பொறுப்புகளை ஏற்பதும் தேவையானது என்பதையே இயேசுவின் திருமுழுக்கு நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் நாம் நமது திருமுழுக்கு நாளையும் சற்று எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். கடவுளின் குழந்தைகளாக, திரு அவையின் உறுப்பினராக நாம் பிறந்த நாள் நம் திருமுழுக்கு நாள். “என் அன்பு மகனே, நீ வானதூதரின் நண்பன், இறைவனின் குழந்தை, இயேசுவின் சகோதரன், தூய ஆவியின் ஆலயம்என்று திருமுழுக்குப் பெற்ற குழந்தையைப் பார்த்துக் கூறுவார் புனித பிரான்சிஸ் சலேசியார். “என் திருமுழுக்கு நாளே என் வாழ்வின் மிக முக்கியமான நாள் எனக் கருதுகிறேன்என்றார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்.

நாம் பெற்றவைகளுள் உயர்ந்த கொடை நம் திரு முழுக்கு. திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்களாகிறோம் மற்றும் மீட்பின் மகிழ்ச்சியைக் கொண்டுள்ளோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (‘டுவிட்டர்செய்தி, 14.01.2019).

நிறைவாக, திருமுழுக்கை நாம் பெறுவதால் பலவித மாற்றங்களை நமக்குள் பெறுகின்றோம். நாம் பிறப்பு நிலைப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று கடவுளுக்குள் புதுப்பிறப்பு அடைகின்றோம் (2கொரி 5:17). கிறிஸ்துவோடு இணைந்து இருக்கும்படி திரு முழுக்குப் பெற்ற நாம், கிறிஸ்துவை ஆடையாக அணிந்து கொள்கின்றோம் (கலா 3:27). கடவுளின் ஆவியால் தூய்மையாக்கப்பட்டு அவருக்கு ஏற்புடையவராகின்றோம் (1கொரி 6:11). வேற்றுமை களைந்து ஒற்றுமை தழைக்க நாம் அனைவரும் திருமுழுக்குப் பெற்றுள்ளோம் (1கொரி 1:13). கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமைப்பேற்றால் அவரைஅப்பா தந்தையேஎன அழைக்கின்றோம். அவருடைய பங்காளிகளாகவும், அவருடைய துன்பங்களிலும் பங்கு பெறுகின்றோம் (உரோ 8:16-17). இறைவன் உறையும் ஆலயமாகத் திகழ்கின்றோம் (1கொரி 6:19). உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புப் பெறுகின்றோம் (மாற் 16:15).  எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினராகவும், அரச குருக்களின் திருகூட்டத்தினராகவும், தூய மக்களினத்தினராகவும், அவரது உரிமைச் சொத்தான மக்களாகவும் திகழ்கின்றோம் (1பேது 2:9).

எனவே, கடவுளின் பிள்ளைகளாகிய நாம் எல்லாரும் அவர் அன்பில் வாழ்வோம். இறைத்திட்டத்தை மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டிய இயேசுவைப் போன்று சமூக மாற்றத்திற்காக உழைக்க முன் வருவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 05, 2025, ஆண்டவருடைய திருக்காட்சி (மூன்றாம் ஆண்டு) எசா 60:1-6; எபே 3:2-3,5-6; மத் 2:1-12

இயேசுவின் ஒளியில் இறைவாழ்வை நோக்கி...!

இன்று நாம் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவைமூன்று அரசர்கள் திருநாள்என்றும், ‘மூன்று ஞானிகள் திருநாள்என்றும் அழைக்கிறோம். கடவுள் அனைத்துலக மக்களுக்குமானவர் என்பதே இவ்விழாவின் மையப்பொருள். “இறைவன் மனுக்குலத்தை நாடி வருவதையும் மனிதர்கள் இறைவனை நாடிச் செல்வதையும் இணைக்கும் ஓர் அழகிய திருநாள் இத்திருக்காட்சித் திருநாள்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இடையர்கள், சிமியோன், அன்னா, மரியா, யோசேப்பு என யூத இனத்தவருக்கே தம்மை வெளிப்படுத்திய இறைவன், பிற இனத்தவர்களாகிய கீழ்த்திசை ஞானிகளுக்கும் தம்மை வெளிப்படுத்துகிறார். ‘இறைவனின் வெளிப்பாடு ஒரு சிலருக்கானதல்ல; இனம், சமயம், மொழி, பண்பாடு என அனைத்து எல்லைகளையும் கடந்து, மெசியா அனைத்துலக மக்களுக்குமானவர்என்பதை இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர் (60:3) என எசாயா முன்னறிவிப்பது மெசியா அனைத்துலக மீட்பர் என உணர்த்துகிறது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் பண்பாடுகளையும் சார்ந்தவர்களாக மக்கள் இருந்தாலும், கடவுளின் மீட்பு அனைவருக்கும் பொதுவானது என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. கீழ்த்திசையிலிருந்து எருசலேமுக்குப் பயணம் செய்த ஞானிகள் யூதரல்லாதவர்கள், தெரிந்துகொள்ளப்படாதவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்! இருப்பினும், மெசியாவின் பிறப்பினால் பெறப்படும் மீட்பு தங்களுக்குமானது என்பதை நம்பியே பயணப்பட்டனர்.

ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு, தங்கள் பேழைகளைத் திறந்து பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களை அளித்ததை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த ஞானிகளிடமிருந்து பயனுள்ள சில பாடங்களை நாம் இன்று கற்றுக்கொள்வோம்.

முதலாவது, யார் இந்த மூன்று ஞானிகள்? மத்தேயு நற்செய்தி 2-ஆம் அதிகாரத்தில் மட்டுமே இம்மூவரைப் பற்றிய சிறு குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவர்கள் விண் ஆய்வாளரையோ, கிழக்கு நாடுகளின் ஓர் அறிஞரையோ, எதிர்காலத்தைக் கணிப்பவர்களையோ குறிக்கலாம்இவர்கள் உண்மையைத் தேடித்தேடி நிலையற்ற மனங்கொண்ட யூதரல்லாப் புறவினப் பெரியோர். மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்பதே இவர்கள் பெயர்கள் என மரபு கூறுகிறது.

வானதூதர்களால் அறிவிக்கப்படாமல் தாங்களாகவே வானியல் விண்மீன்கள் பற்றிப் படித்து இறைவன் பிறப்பை அறிந்து, அறிமுகமில்லாத இடத்திற்குப் பயணம் செய்கிறார்கள் இந்த மூன்று ஞானிகள். இரவில் மட்டுமே கண்களுக்குத் தெரியும் விண்மீன்களைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல; மேலும், சாலைப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். இத்தனை இடர்கள், குழப்பமான கேள்விகள், ஆபத்தான மற்றும் வியப்புகள் நிறைந்த பயணத்தைக் குறித்துக் கவலை கொள்ளாமல், மனவேதனை அடையாமல், ஏமாற்றம் காணாமல், குறைகூறாமல் அவர்கள் தொடர்ந்து பயணித்தார்கள்; குழந்தையைக் கண்டு வணங்கினார்கள். ஞானிகள் போல நாமும் இடர்களுக்கு மத்தியிலும் இறைவனை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பது இவ்விழா உணர்த்தும் முதல் பாடம்.

இரண்டாவது, இயேசுவைக் கண்டு வணங்குவதற்கு நீண்ட மற்றும் கடினமான பயணத்தை எதிர்கொண்ட மூன்று ஞானிகள் ஒரு விண்மீனின் அற்புதமான அடையாளத்தால் வழிநடத்தப்பட்டு, இறுதியாக அவர்கள் தங்கள் இலக்கை அடைகின்றனர். தாங்கள் தேடி வந்த குழந்தை, கற்பனை செய்த விதத்தில் அல்ல; மாறாக, அவர் எளியவராகவும் ஏழையாகவும் இருக்கிறார் என்பதை எண்ணி அவர்கள் அந்த மீட்பரை ஏற்றுக்கொள்கின்றனர். புறத்தோற்றங்களைக் கடந்து பார்ப்பதற்கு அவர்களால் முடிந்தது. வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பல நேரங்களில் மறைந்திருக்கும் ஆண்டவரை வணங்குவதற்கு இந்த ஞானிகளின் செயல் நம்மைத் தூண்டுகிறது.

மனுக்குலத்திற்காகத் தம்மைத் தாழ்த்திக்கொள்ள முன்வந்த பாலன் இயேசுவில் இறைவனைக் கண்டு, வியப்பில் ஆழ்ந்து, மகிழ்ந்து, நெடுஞ்சாண்கிடையாய் தாழ்மையுடன் விழுந்து குழந்தையை வணங்குகின்றனர் (மத் 2:11). வணங்குதல் என்பது, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் மிக மதிப்புமிக்கவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு செயல். ஞானிகள் யூதர்களின் அரசர் எனத் தாங்கள் அறிந்து வைத்திருந்த ஒருவரை வணங்குகின்றனர்.

ஞானிகள் இறைவனை வணங்கியதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடும்போது, “ஆண்டவரை வணங்குதல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது நொடிப்பொழுதில் நடப்பதுமல்ல; மாறாக, அதற்குக் குறிப்பிட்ட ஆன்மிகப் பக்குவம் தேவை. மேலும், அது ஒரு நீண்ட அகவாழ்வுப் பயணத்தின் கனியாகும்என்கிறார் (திருக்காட்சித் திருவிழா மறையுரை, 06.01.2021). மேலும், “நம் வாழ்வில் ஆண்டவரை நுழைய அனுமதிப்பதே வணங்குதலாகும். அவரது ஆறுதல், இவ்வுலகில் இறங்கிவரவும், அவரது கனிவான அன்பு நம்மை நிரப்புவதற்கும் அனுமதிப்பதே வணங்குதல் என்பதன் பொருள்என்கிறார் (‘டுவிட்டர்செய்தி, 08.01.2020).

குழந்தையையும் அதன் தாயையும் காணும் ஞானிகள் இரண்டு முக்கியமான அடையாளங்களை நமக்கு உணர்த்துகின்றனர். ஒன்று, உண்மையான ஞானத்தை இங்கே காண்கிறார்கள். எனவேதான் உண்மையான ஞானத்துக்கு முன்னால், உலக ஞானம் பணிந்து விழுந்து கிடக்கிறது. இங்கே இயேசுவே உண்மையான ஞானமாகவும், அந்த ஞானத்தை வைத்திருப்பவராக மரியாவையும் மத்தேயு காட்டுகிறார். மற்றொன்று, பொன், பொருள், அறிவு, ஞானம், பெயர், புகழ் என எல்லாம் பெற்றிருந்தும், உண்மையான செல்வம் என்பது புகழ், வெற்றி ஆகியவற்றில் இல்லை; மாறாக, பணிவு, பொறுமை, அமைதி, ஏழ்மை, எளிமை போன்றவற்றில்தான் கடவுளைக் கண்டு வியப்படைய முடியும் என்பதை ஞானிகள் கற்றுத் தருகின்றனர்.

என்னுடைய பணிவு எப்படிப்பட்டது? எனது வீண் பெருமை என் ஆன்மிக முன்னேற்றத்தைத் தடுக்கிறதா? கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் திறந்த மனத்துடன் இருக்க நான் பணிவுடன் செயல்படுகிறேனா? நான் எப்போதும் இயேசுவை அறிந்துகொள்ளும் தேவையில் இருக்கிறேனா? போன்ற கேள்விகளை இன்று நாம் கேட்கத் தூண்டுகின்றனர் இந்த ஞானிகள்.

மூன்றாவது, தூரத்திலிருந்து விண்மீனின் வழிகாட்டுதலுடன் வந்து எளிய உருவில் குழந்தை இயேசுவைக் கண்டுகொண்டு, அவர்முன் தெண்டனிட்டு வணங்கிய ஞானிகள் அவருக்கு விலை உயர்ந்த காணிக்கைகளை வழங்குகின்றனர். ‘ஏரோதிடம் திரும்பிப்போக வேண்டாம்எனக் கனவில் எச்சரிக்கப்பட்டதும், அவர்கள் அகமாற்றம் அடைந்தவர்களாக, வேறு பாதையில் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர் (மத் 2:12). இயேசுவுடனான சந்திப்பிற்குப் பிறகு, யாரும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது.

குழந்தை இயேசுவோடு ஞானிகள் மேற்கொண்ட சந்திப்பு அவர்களை, அங்கேயே கட்டிவைக்கவில்லை; மாறாக, அவர்களின் மகிழ்ச்சியை, அவரவர்  இடங்களில் பறைசாற்ற வைத்தது. இறைவனைச் சந்தித்தவர்கள், தங்கள் பழைய வாழ்வுப் பாதையில் நடைபோட முடியாது. ஆண்டவரைக் காணும் தேடலை நிறுத்திக் கொள்ளாமல் தொடர் தேடலில் ஈடுபட்டார்கள். ஆண்டவர் அரண்மனையிலும் அரசக் குடும்பத்திலுமல்ல; எளிமையிலும் ஏழ்மையிலும் தம்மை வெளிப்படுத்த இயலும் என்பதை உலகுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

ஒரு பயணம், எப்போதும் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பயணம் மேற்கொண்டபின் நாம் முன்பிருந்ததுபோல் இருப்பதில்லை. ஒரு பயணத்திலிருந்து கிடைத்த உள்ளார்ந்த வளர்ச்சியை முதலில் அனுபவிக்காமல், எவரும் ஆண்டவரை வணங்குவதில்லை. படிப்படியான செயல்முறை வழியாகவே நாம் ஆண்டவரை வணங்குகிறவர்களாக மாறுகிறோம். நாமும் இறைவனைச் சந்தித்தபின் சுதந்திரமாக, நம் பாதையில் பயணிக்க இறைவனால் விடப்படுகிறோம். அந்தப் பாதை நாம் வந்த பாதையே எனினும், நாம் நம்மில் மாற்றம் பெற்றவர்களாக உள்ளோம் என்பதை ஞானிகள் நமக்கு உணர்த்துகின்றனர்.

நிறைவாக, விண்மீன் காட்டிய பாதையில் சென்று இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிய ஞானிகளைப்போல், நாமும் தடைகள் பல எழுந்தாலும், தளரா உள்ளத்துடன், உன்னதக் குறிக்கோள்கள் என்ற விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண முயல்வோம். விண்ணக வாழ்வுக்குரியவற்றைத் தேடுவதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். ‘இயேசு எங்கே பிறந்திருக்கிறார்?’ என்ற கேள்விதான் ஞானிகள் இயேசுவைத் தேடிக் கண்டுகொள்ள உதவியது. அதுபோல, நமது வாழ்வில் நம் உள்ளத்தில் எழும் கேள்விகள் வழியாக நம்மோடு பேசும் கடவுளின் குரலைக் கேட்போம்.

தீமையின் மாயை, வீண் விவாதங்கள், பொய்யான இன்பத்தை வலியுறுத்தும் உலகப்போக்குகள் போன்ற இவ்வுலக ஒளியில் சிக்கிக்கொள்ளாமல், ஞானிகள் மூவரைப் போன்று, இறை ஒளியைப் பிரதிபலிக்கும் நிலவாக நாம் ஒவ்வொருவரும் செயல்படுவோம். கடவுளை நோக்கி நம் கண்களை உயர்த்தி (எசா 60:4), நம் இதயங்களில் பதிந்திருக்கும் விருப்பங்களைக் கேட்போம். அவர் நமக்கு மேலே ஒளிரச்செய்யும் விண்மீன்களைப் பின்பற்றுவோம். இறைவனிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாகவும் நாம் மாறுவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 01, 2025 புனித மரியா கடவுளின் தாய் (மூன்றாம் ஆண்டு) - எண் 6:22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21

புத்தாண்டு சிறப்பு மறையுரை

அன்னையின் அரவணைப்பில் ஆண்டின் முதல் நாள்!

உலகின் எல்லா மொழிகளின் சொற்களிலும் பேரழகான சொல்அம்மா!’ கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது தாயின் படைப்பு. தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறெதுவுமில்லை. குழந்தையை உலகில் உயிர்மெய்யாக்கி உலவ விடுபவர் தாய். அன்னை இல்லையெனில் இந்த உலகில் மனித இனமே இருந்திருக்காது! ‘தாயிற் சிறந்த கோவில் இல்லைஎன்று ஒளவையார் தாய்மையின் சிறப்பைப்பற்றி அன்றே பாடியுள்ளார்.

உலகின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு மட்டுமே. ‘தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறதுஎன்று நவில்கின்றார் நபிகள் நாயகம். அன்பின் இலக்கணம் தாய்! அன்புக்கு ஆதாரமும் தாயே! தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு வேறு எதுவும் இல்லை. ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, அம்மாவை வணங்காமல் உயர்வில்லையேஎன்று பாடினார் கவிஞர் வாலி. “என் அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவரால்தான் என் இலக்கிய இரசனையும் வளர்ந்ததுஎன்றார் ஜான் இரஸ்கின். ‘அன்னையிருக்கத் தோல்வியில்லை; அன்னையின்றி வெற்றியில்லைஎன்னும் கூற்று நம் நினைவுக்கு வருகிறது.

வரலாற்றை உருவாக்குபவர் தாய். முதல் ஆசிரியராய், செவிலியராய் நம்மைப் புடமிட்டு நமக்குப் பெரும் உந்துசக்தியாக, ஆற்றலின் இருப்பிடமாக, அன்பின் பெட்டகமாக இருப்பவர் நம் தாயே! தாயே உயிர் அனைத்திற்கும் ஆதாரம். உயிர் எழுத்தில்எடுத்து, மெய் எழுத்தில்ம்எடுத்து, உயிர்மெய் எழுத்தில்மாஎடுத்து, அழகுத் தமிழில் கோர்த்தெடுத்த முத்துஅம்மா!’

ஆண்டின் முதல் நாள் இன்று, அன்னையின் மகிமையை எண்ணிப் பார்த்து, அன்னை மரியாவைஆண்டவரின் தாய்என்று அறிக்கையிட்டுக் கொண்டாடத் திரு அவை நம்மை அழைக்கிறது. ஆண்டின் முதல் நாளில் பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசி பெறுவதுபோல, மரியன்னையின் பிள்ளைகளாகிய நாமும் நம் விண்ணக அன்னையிடம் ஆசி பெறுவோம். நமக்கென இருக்கும் ஒரே ஒரு மாதிரி அன்னை மரியா. அவரே நம்பிக்கையின் தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவி புரிய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம் பற்றித் துவங்குவோம்.

அன்னை மரியா பெண்களில் பேறுபெற்றவர் மட்டுமல்ல, மானிடர் அனைவரிலும் பேறுபெற்றவர். ஆண்டவர் தனக்குச் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும் என்று நம்பியதால் (லூக் 1:45), இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றதால் (1:48), ஆண்டவர் இயேசுவைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்ததால் (11:27), இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால் (11:28), தன் மகனின் போதனைகளையும் செயல்களையும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டதால் (7:23), இயேசு நிகழ்த்திய அரும் அடையாளங்களைக் கண்டதால் (10:23), உயிர்த்த ஆண்டவரை முதன்முதலாகக் காணாமலேயே அவரது உயிர்ப்பை ஏற்றுக்கொள்ளும் கொடையை மரியா பெற்றிருந்ததால் (யோவா 20:29) அன்னை மரியா பேறுபெற்றவர் ஆகிறார். இவ்வாறு ஒரு முறை, இருமுறை அல்ல... பலமுறை பேறுபெற்ற கொடையைப் பெற்ற அன்னை மரியாவைகடவுளின் தாய்என அழைத்து மகிழ்கிறது திரு அவை.

அன்னை மரியாவைக் குறித்துகடவுளின் தாய்’ (கி.பி. 431), ‘மரியா எப்பொழுதும் கன்னி’ (கி.பி.553), ‘மரியா அமல உற்பவி’ (கி.பி.1854), ‘மரியா விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்’ (கி.பி.1950) என நான்கு மறைக்கோட்பாடுகளை (Dogma) அறிவித்துள்ளது திரு அவை. அவற்றுள் முதன்மையானதும் பழமையானதுமான பேருண்மைமரியா கடவுளின் தாய்’ (Mary is Theotokos) என்பதாகும். Theotokos எனும் கிரேக்கச் சொல்லுக்கு, ‘கடவுளைத் தாங்கியவர்என்று பொருள்

கான்ஸ்டான்டிநோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர்மரியா கடவுளின் தாய்என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர், “இயேசு இரண்டு ஆள்களாக உள்ளார். அதாவது, இயேசு மனித இயல்பு (human nature) மற்றும் கடவுள் இயல்பு (divine nature) என்று இரண்டு இயல்புகளுடன் உள்ளார். அவர் மரியாவிடம் பிறக்கையில் சாதாரண மனிதர் என்றும், பின் வளர்ந்து வந்தபோது, அவர் கடவுளாக மாறினார்என்றும் தவறான போதனையைப் போதித்தார். எனவே, ‘மரியா இயேசு என்ற மனிதனின் தாய் (Christokos) மட்டுமே; அவர் கடவுளின் தாய் (Theotokos) அல்லர்என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான் நெஸ்டோரியனிசம் (Nestorianism) என்று அழைக்கப்பட்டது.

இப்போதனையால் எழுந்த சிக்கலைத் தீர்க்க முற்பட்டது திரு அவை. கி.பி. 431 -ஆம் ஆண்டு எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் கூடிய திருச்சங்கம், தவறான கருத்துகளைக் கூறிய நெஸ்டோரியசையும் அவரது போதனைகளைப் பின்தொடர்ந்தவர்களையும் நீக்கியதுஇயேசு இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள் என மறைக்கோட்பாடாக அறிவித்தது. இதன் அடிப்படையில்மரியா கடவுளின் தாய்என்பதை வரையறுத்துக் கூறியது. 1974 -ஆம் ஆண்டில் புனித திருத்தந்தை 6 -ஆம் பவுல் அவர்கள், ‘Marialis Cultusஎனப்படும் திருத்தூதுக் கொள்கை வழியாக, சனவரி முதல் நாளில் இவ்விழா சிறப்பிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார் (எண் 5). ஆகவேதான் நாம் இன்று இப்பேருண்மையை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.

திருவிவிலியத்தில் மரியா கடவுளின் தாயாக வானதூதர் கபிரியேல் மரியாவிடம் கூறிய, “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; …உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” (லூக் 1:31) என்பதிலிருந்தும் எலிசபெத் மரியாவிடம், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (1:43) என்று இறைவாக்கு உரைப்பதிலிருந்தும்மரியா கடவுளின் தாய்என்பது திருவிவிலியத்தில் ஆதாரப் புள்ளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. “மரியா உண்மையாகவே இறைவனும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பெற்றுப் போற்றப்பெறுகிறார்என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (திருச்சபை எண் 53). மேலும், “அன்னை மரியா இறைவனின் தாய் எனும் கொடையாலும், அலுவலாலும் மீட்பரான தன் மகனோடு ஒன்றித்திருக்கிறார்என்கிறது (எண் 63). அன்னையின் மகிமையைக் குறிப்பிடுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுளும், மனித சமுதாயமும், ஒருவர் மற்றவரைவிட்டுப் பிரியாவண்ணம், பெண்ணின் வயிற்றில் ஒன்றிணைந்தன. நம் மனித சமுதாயம், கடவுளில் என்றென்றும் இருக்கின்றது. மரியா கடவுளின் அன்னையாக என்றென்றும் இருக்கிறார். அமைதியின் இளவரசரின் அன்னையும், இப்பூமியின் அனைத்து மக்களின் அன்னையுமாகிய மரியா, ஒப்புரவுப் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் நம்மோடு இருந்து காக்கிறார்என்று குறிப்பிடுகின்றார் (‘டுவிட்டர்செய்தி, சன 1, 2020).

மரியா உலகின் மீட்பராம் இயேசுவை நமக்குக் காட்டுகின்றார். அவர் ஓர் அன்னையாக நம்மை ஆசிர்வதிக்கின்றார். அன்னை மரியா அகிலத் திரு அவையையும் அகில உலகையும் ஆசிர்வதிக்கிறார். இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மனித சமுதாயத்திற்கும் ஆசிராக விளங்குகிறார். அவரே அருளையும் இரக்கத்தையும் அமைதியையும் அளவில்லாமல் பொழிகிறார்.

இறைவனே ஆசியின் ஊற்று; அவரிடமிருந்தே அனைத்து ஆசிகளும் உண்டாயின. இந்த இயேசுவை நமக்கு வழங்குவதன் வழியாக, இறைவன் தரும் ஆசிரின் முழுமையைத் திரு அவை நமக்கு வழங்குகிறது. இந்த ஆசிரை மனிதர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே, கிறித்தவர்களாகிய நமது முக்கியப் பணி என்பதை இன்று உணர்வோம்.

ஆண்டின் முதல் நாளில், முதல் வாசகத்தில் இறைவன் மோசே வழியாக ஆரோனுக்கும், அவர் புதல்வர்களுக்கும் கொடுக்கக்கூடியகுருத்துவ ஆசிஇறைவனின் பிள்ளைகளாகிய நமக்கும் உரியதாக அமைகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!”, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!”, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண் 6:24-26) என்று எண்ணிக்கை நூலில் நாம் கேட்கும் சொற்கள், இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் எவ்வாறு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இறைவனின் ஆசியை யாரும், எவருக்கும் பரிந்துரைக்கலாம் என்பது திருவிவிலியம் தரும் பாடம். புதிய ஆண்டில் இறைவனின் ஆசியை இரக்கத்தோடு பெற்றுக்கொண்டு, நாமும் அந்த ஆசியைப் பிறருக்கு வழங்குவோம்.

58-வது உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கும் இந்நாளில், “ஆண்டவரே, எங்கள் குற்றங்களை மன்னியும்; உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்” (மத் 6:12) என வேண்டிக்கொள்வோம். வரலாற்றுப் பாதையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நமக்குக் கவலைகளை உருவாக்கினாலும், அன்னை மரியா நம்மை எப்போதும் கவனித்து வருகிறார் என்ற எண்ணத்தில், நாம் இந்தப் புதிய ஆண்டைத் துவங்குவோம். நம் கரம்பிடித்து நமது தாயாக, நம் தந்தையாம் இறைவனின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள நம்மை வழிநடத்தும் தாயிடம் சேயாய் நாடி வருவோம். இனிமையும், பராமரிக்கும் தன்மையும் கொண்ட நம் தாய், இறைவனிடமிருந்து மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத் தருவாராக! பிறக்கவிருக்கும் புத்தாண்டில் இறைவன் நம் அனைவரையும் நலன்களால் நிரப்பி வழிநடத்திக் காப்பாராக!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 29, 2024 திருக்குடும்ப விழா (மூன்றாம் ஆண்டு) - 1சாமு 1:20-22,24-28; 1யோவா 3:1-2,21-24; லூக் 2:41-52

இறைவனுக்கு இடமளிக்கும் இல்லமாக...

கிறிஸ்துமஸ் காலம் குடும்ப உறவைக் கொண்டாடி மகிழும் ஓர் அழகிய காலம். இக்காலத்தில் வரும் இந்த ஞாயிறன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்பம் மானிட சமூகத்தின் அடிப்படைக் கூறு; மனித உறவின் நிறைவு; நாகரிகத்தின் தொடக்கக் கல்வியைக் கற்றுத்தரும் முதல் பள்ளிக்கூடம். ஒருவர் மற்றவருடைய உள்ளத்து உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களுடன் நல்லுறவுகொள்ளவும், அவரின் ஆளுமை வளர்ச்சியின் முதல் படிநிலையை அமைத்துக்கொடுப்பதும் குடும்பமே! குடும்பம் இல்லாமல் மனிதகுலக் கலாச்சாரம், பண்பாடு என்பது சாத்தியமற்றது. குடும்பம்தான் சமூகத்தின் அடித்தளம்!

ஒரு சமூகத்தின் நலமும் வளமும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் செழுமையும் சீர்மையும் அச்சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பினால் உருவாகிறது. சமூகத்தினுடைய உறவுப் பிணைப்பின் அடிப்படை அமைப்பாக இருப்பதும் குடும்பம். நமக்கு முகவரியாய், அடையாளமாய் இருப்பதும் குடும்பமே. பாசத்தின் உறைவிடமாகவும் நெருக்கத்தின் இருப்பிடமாகவும் இருப்பது குடும்பம். திருத்தந்தை பிரான்சிஸ் கிறித்தவக் குடும்பங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குடும்பம் என்பது ஒரு கருத்தியல் அல்ல; மாறாக, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை நெறி. இது அன்றாட வாழ்க்கையின் அணிகலன். அன்பிலும் ஒழுக்கநெறியிலும் கட்டமைக்கப்பட்ட இறைநம்பிக்கையை அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்கும் வாழ்வியல் பயணம்என்கிறார் (செப்டம்பர் 11, 2013). தாராளக் குணம், பகிர்தல், பொறுப்புணர்வு, அன்பு, அமைதி, இரக்கம், நல்லறிவு, நல்லொழுக்கம், தூய்மை, ஒற்றுமை, பொறுமை, தியாகம், கடின உழைப்பு, சகிப்புத்தன்மை போன்ற அறம் சார்ந்த பண்புகளை நாம் கற்றுக்கொள்ளும் பல்கலைக்கழகம் குடும்பம்.

நல்ல குடும்பத்திற்கு ஒரு சிறந்த மாதிரியாகத் திருக்குடும்பத்தையே திரு அவை காட்டுகிறது. ஆண்டவர் இயேசுவை முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு உருவாகிய அழகிய குடும்பம் திருக்குடும்பம். கடவுளின் வார்த்தையைத் தாழ்ச்சியுடன் நம்பி உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து, உதரத்தில் தாங்கி அடிமையாய் வாழ்ந்த மரியாவும் பிறக்கப்போகும் குழந்தை இறைமகன் என அறிந்ததும், நம்பித்துணிந்த மரியாவின் வழிநின்று, இறைமகனை ஏற்றுப் பாதுகாப்புத் தந்த நேர்மையாளர் யோசேப்பும் தெய்வீகப் பிறவிகள்தாமே! இதை உணர்ந்ததால்தான் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால், “நாசரேத்தூரில் வாழ்ந்த திருக்குடும்பம் உலகோரின் உன்னதமான பல்கலைக்கழகம்என்றார். எனவே, மரியா-யோசேப்பு-இயேசு என்னும் இத்திருக்குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.

அன்னை மரியா தனது வயிற்றில் மட்டுமல்ல, வாழ்வு முழுவதுமாக இறைவார்த்தைக்கு இடம் கொடுத்தார். தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் தனது உள்ளத்தில் பதித்துச் சிந்தித்தார். ஆண்டவர் கூறியவை நிறைவேறும் என நம்பினார். “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று முழு ஈடுபாட்டோடு கூறினார். தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தராமல், ஆண்டவருக்குத் தன் வாழ்வில் முழு இடம் தந்தார். எதிர்பாராத துன்பங்கள் வாழ்வில் பின்தொடர்ந்து வந்தாலும் நிலைகுலையாது, இறைவார்த்தையில் நிலைத்து நின்றார்.

மரியாவின் கணவர் யோசேப்பு ஒரு நேர்மையாளர். யோசேப்பின் அமைதி வாழ்வில் அன்பும் தியாகமும் உரக்க வெளிப்பட்டன. கடவுளின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்கும் ஒரு நபராகவே யோசேப்பு தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். அவர் வாழ்க்கைக்கான தனது சொந்தத் திட்டங்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டவர் அல்லர். எப்போதும் தன்னைக் கடவுளுக்காக வாழக்கூடியவராகவும், அவர் திட்டத்திற்காக எப்போதும் தயாராக இருக்கக்கூடியவராகவுமே இருந்தார். ஆகவேதான் யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ், “தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, தனது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பதிலாக யோசேப்பு தேர்ந்துகொண்ட வாழ்க்கை நெறி மிகப்பெரிய அர்ப்பணம்!” என்றார் (மூவேளைச் செபவுரை, டிசம்பர் 22, 2013).

நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் மையமும் மகிழ்ச்சியும் இயேசுவே. நற்பண்புகளைத் தம் தாய் தந்தையிடமிருந்தே கற்றார். மற்ற குழந்தைகள் போலவே அவர் அறிவிலும் உணர்விலும் அனுபவங்களிலும் வளர்ந்தார். ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2:52). 12 வயதிலே இயேசு தம் தந்தையோடு கொண்டிருந்த ஆன்மிக உறவை வெளிப்படுத்தினார்; தாம் யார் என்பதைக் கண்டுகொண்டார். தந்தையின் பணிக்காகத் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். ஆக, திருக்குடும்பம் ) ஓர் இயல்பான, ) இறைப்பக்தி நிறைந்த, ) இறைத்திட்டத்தை ஏற்ற ஒரு குடும்பமாக இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

முதலில், திருக்குடும்பம் ஓர் இயல்பான குடும்பம். இந்தக் குடும்பம் எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்காமல் இல்லை. இவர்கள் மத்தியிலும் பிரச்சினைகள் இருந்தன. திருவிழாவின்போது காணாமற்போன தன் மகனைக் கண்டுபிடிக்கப் பெற்றோர் எடுக்கின்ற முயற்சிகள், மகனைக் காணாத பதைபதைப்பு, மகனைக் கண்டதும் அடைகின்ற மகிழ்ச்சி, தங்கள் மகன் மறைநூல் வல்லுநர் மத்தியில் அமர்ந்து அவர்களுக்குப் போதனை செய்ததைப் பார்த்த வியப்புஅதே நேரத்தில் ஏற்பட்ட அச்ச உணர்வு, பெற்றோரின் கண்டிப்பு, இயேசுவின் பதில், மகனின் தனித்து முடிவெடுக்கும் நிலை, மரியாவின் அமைதி என மற்ற குடும்பங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள், உரையாடல்கள், உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற இயல்பான குடும்பமே திருக்குடும்பம்.

இரண்டாவது, திருக்குடும்பம் இறைபக்தியில் நிறைந்த ஒரு குடும்பம். இயேசுவின் பெற்றோர் யூதச் சமயச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தனர் (2:41). ஆண்டுதோறும் பாஸ்கா எனும் சமய விழாவைக் கொண்டாட யூதர்களின் சமயத் தலைநகரமான எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது ஒவ்வொரு யூதரின் தவிர்க்க முடியாத கடமையாகும். 12 வயதிலிருந்து ஒவ்வொரு யூத இளைஞனும் சமய வழிபாட்டுச் சடங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியக் கடமையாகும். இக்கடமையைத் தமது மகன் நிறைவேற்ற பெற்றோர் உதவி செய்கின்றனர். மேலும், இயேசு ஆலயத்தில் பெரியவர்கள் நடுவில் இருப்பதும் உரையாடுவதும் இறைத்தந்தையைப் பற்றிக் குறிப்பிடுவதும் அவர் ஒரு நல்ல யூதச் சிறுவனாக, சமயப் பற்றுமிக்கவராக இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மூன்றாவது, மரியா, யோசேப்பு, இயேசு ஆகிய மூவரும் அனைத்தையும் உள்ளத்திலிருத்திச் செபித்து, இறைத்திட்டத்திற்கு அனைத்திலும் பணிகின்றனர். இறைத்திட்டத்தை ஏற்று இறுதிவரைக் கடைப்பிடிக்கின்றனர். இன்றைய நற்செய்தியில்நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனும் இயேசுவின் பதில்மொழி, அவர் பன்னிரண்டு வயதிலேயே தம் வாழ்வின் இலக்கு, இலட்சியம், பணி என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தார் என்பதை விளக்குகிறது.

இவ்வாறு, இயேசு மரியா-யோசேப்பு அமைத்த திருக்குடும்பம் தன்னலமற்ற அன்பை, தன்னிகரற்ற அமைதியை உலகில் வாழ்ந்து காட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தில் புனிதம் காத்தது. புனிதமிகு வாழ்வு முறையாலும் மதிப்பீட்டு வாழ்வாலும் சாட்சிய வாழ்வாலும் உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் திருக்குடும்பம் மாதிரியாகத் திகழ்கின்றதுஆகவேதான் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், “திரு அவையின் முதல் மாதிரி இந்த நாசரேத்தூர் திருக்குடும்பம்என்கிறார்.

குடும்பம்தான் உலகையும் வரலாற்றையும் இயக்குகின்ற ஆற்றல். குடும்பத்தில்தான் மற்றவர்களுக்குச் செவிசாய்க்கவும், அவர்களை அங்கீகரிக்கவும், மதிக்கவும், அவர்களுக்கு உதவவும், ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழவும் கற்றுக்கொள்கிறோம். ஆனால், பிறரன்பும் இறையன்பும் இரண்டறக் கலந்து சங்கமிக்கும் குடும்பம் என்கின்ற அமைப்பு இன்று வளர்ச்சி, நாகரிகம், தனிமனிதச் சுதந்திரம் என்கின்ற சிந்தனைக்குள் சிக்குண்டு, சீரழிந்து வருவது வேதனையான உண்மை. மனிதர்கள் இன்று நுகர்வு கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். அதாவது, தூக்கி எறியப்படுகின்றனர். “பயன்படுத்தி, தூக்கி எறிஎனும் கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். இன்று குடும்பங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிமைப்படுத்தியுள்ளனர்; பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அடிமைகளாக்கியுள்ளனர். தம்பதியர் தங்கள் திருமண வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர்.

ஒரு குடும்பம் என்பது ஒற்றுமை, ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகளைப் போதிக்கும் ஆசானாக இருக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “குடும்ப உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில், ‘நன்றி’, ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’, ‘தயவுசெய்துஎன்ற வார்த்தைகளைச் சொல்லிப் பழகுவோம்”. கடினமான நேரங்களில் கடவுளைஅப்பாஎன்னும் அழகான பெயரில் அழைக்கக் கற்றுக்கொள்வோம். எகிப்தில் அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலைத் திருக்குடும்பம் எதிர்கொண்டபோது, கடவுள் அவர்களைக் கைவிடவில்லை.

கடவுள் நமது போராட்டங்களை அறிவார். அவர் அனைத்தையும் அறிந்தவர்! கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக, கைவிடப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. கடினங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே இயேசு இருக்க விரும்புகிறார். மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் சாமுவேலின் தாய் அன்னாவைப்போல அல்லும் பகலும் கடவுளை நோக்கி வேண்டுவோம். இதயத்தில் இறைவார்த்தையைச் சுமந்து, இல்லங்களுக்கு இயேசுவை அழைத்துச்செல்வோம். நம் குடும்பங்கள் எப்போதும் இறைவனுக்கு இடமளிக்கும் இல்லமாகட்டும்!

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 25, 2024 ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா - எசா 9:2-4,6-7; தீத் 2:11-14; லூக் 2:1-14

ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்!

கடவுள் விண்ணகத்தில் நம் கண்களுக்குத் தோன்றாத வகையில் தங்கிவிடவில்லை; மாறாக, மண்ணகத்தில் மனிதராக இறங்கி வந்துள்ளார். கிறிஸ்துமஸ் - இறைவனின் நெருக்கத்தைக் கொண்டாடவும், அவரது உண்மையான அன்பைக் கண்டுகொள்ளவும் அழைப்பு விடுக்கும் விழா! ஆண்டவரின் நெருக்கமும் அவரது அன்பும் மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் உள்ளங்கள், இல்லங்கள், உறவுகள் அனைத்திலும் நிறைந்திருக்க வேண்டுகிறேன்.

கிறிஸ்து பிறப்பு விழா - மகிழ்ச்சியின் விழா; நம்பிக்கையின் விழா; கடவுளின் பேரன்பை உணர்த்தும் விழா. மனுக்குலத்தின்மீது இறைவன் கொண்ட அன்பின் மேன்மையால் விளைந்த அற்புதமான வரலாறு!

இந்த நள்ளிரவு வேளையில், “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் (எசா 9:6) என்ற எசாயா இறைவாக்கினரின் சொற்கள் இன்று நம் உள்ளத்தை நிரப்புகின்றன. பிறப்பு எப்போதும் நம்பிக்கையின் ஊற்றாக, எதிர்காலத்தின் வாக்குறுதியாகத் திகழ்கிறது. ஒரு குழந்தையின் பிறப்பு விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு, பெற்றுக்கொள்ளும் அனைத்திலும் மிகப்பெரிய ஒன்றாக அமைகிறது.

குளிர் நிறைந்த இவ்விரவில், ஒளிர்விடும் சிறு விளக்குப்போல் இறைமகன் பிறந்துள்ளார். இயேசு எனும் இக்குழந்தை நம்மோடு உரையாடும் வண்ணம் மனுவுரு எடுத்துள்ளார். கடவுள் தமக்குத்தாமே பேசிக்கொள்ள விரும்புவதில்லை; ஏனெனில், தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாராக இருக்கின்ற கடவுளே உரையாடல்தான். எனவே, மனித உடலெடுத்த இறைவார்த்தையாம் இயேசுவின் பிறப்பால் கடவுளே நம்மோடு உரையாடுவதற்கான பாதையைக் காட்டியுள்ளார். அவரின் பிறப்பால் நாம் அனைவருமே கடவுளைநம் தந்தைஎன்றழைக்கிறோம்; அவருடன் பேசுகிறோம். எனவே, நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பது கடவுள் வழங்கும் செய்தி. நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நாம் ஒருவர் மற்றவரை மதித்துச் செவிமடுக்கும் உடன் பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாக இந்த இரவு நேரம் அமையட்டும்.

முதலாவது, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார் (எசா 9:6) என்ற செய்தி அவர் நம்மை அன்பு கூருகிறார் என்பதைக் காட்டுகிறது. இறைவன் நம்மை அருளின் குழந்தைகளாக, இறைவனின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு, அவரே இறங்கி வருகிறார். இது ஒரு வியத்தகு கொடை! “கடவுள் நம்முடன் இருக்கிறார் (மத் 1:23) என்ற உறுதியை நமக்கு வழங்குகிறார். நமக்கென இறைவன் தம் சொந்த மகனையே தந்துள்ளார். வார்த்தையாம் இறைவன், வார்த்தைகளற்ற ஒரு குழந்தையாகத் தம் வாழ்வையே நமக்கு வழங்க வந்துள்ளார்.

கிறிஸ்துவின் பிறப்பு எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் ஆற்றலை நமக்குத் தருகிறது. ஆனால், நாம் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வற்ற செயல்களையும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகச் செய்யும் அநீதிகளையும் பார்க்கும்போது, இறைவன் நம்மை உயர்வாக மதித்து இத்தகைய கொடையை அளிப்பதற்கு நாம் தகுதியுடையவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அமைதியான, வன்முறையற்ற உலகை உருவாக்குவதில் நாம் தோற்றுப்போனோம். திருவிவிலியத்தை வாழ்வாக்கத் தவறிவிட்டோம். பசப்பு வார்த்தைகளால் பிறரை ஏமாற்றிவிட்டோம். கடவுளின் விருப்பத்திற்கு எதிராக எதிர் திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம் வாழ்வின் ஆதாரமாகிய இறைவனை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிறையப் பேசுகிறோம்; அதேவேளை நன்மைத்தனம் குறித்து அறியாதவராகச் செயல்படுகிறோம். ஆதிக்கமும் சுரண்டலும் வன்முறையும் பன்மடங்கு பெருகியுள்ளன. வாழ்வின் அடிப்படைகளை நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. “அனைவரையும் அன்பு செய்வாயாக (மாற் 12:31) எனும் இயேசுவின் உயர்ந்த நெறியைப்பற்றி அறிந்த பிறகும் கடைப்பிடிக்கத் தடுமாறுகிறோம். ஒருவரையொருவர் அன்பு செய்வதற்குப் பதிலாக வெறுக்கிறோம், பகையை வளர்க்கிறோம்.

கடவுள் நமக்கு உயரிய ஓர் இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஏனெனில், அவரின் அன்பு அத்தகையது. நம்மை அன்புகூருவதன் வழியாக, நம் உள்மனக் காயங்களைக் குணப்படுத்தவும், நம்மை மீட்கவும் செய்கிறார். “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்எனும் செய்தி இறைவன் நம்மை அன்புகூருகிறார் என்பதையும், நாமும் மற்றவரை அன்புகூர வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றது.

இரண்டாவது, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்என்ற செய்தி, அக்குழந்தை எவ்விடத்தில் பிறந்துள்ளார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவர் அரசர்களின் மாளிகையில் பிறக்கும் தகுதியுடைய ஒரு குழந்தை. ஆனால், மாடடைத் தொழுவத்தில், இருள் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறக்க வேண்டிய காரணம் என்ன? ஏழ்மை, எளிமை, தனிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை இவற்றில்தான் ஏழையாகப் பிறந்த இயேசுவைக் காணமுடிகிறது. அவர் நம் ஏழ்மையான, எளிய நிலைகளில் இறங்கி வந்து, நம்மை எவ்வளவு தூரம் அன்புகூருகிறார் என்பதைக் காட்ட, அவரும் எளிய வகையில் பிறப்பெடுத்தார். எனவே, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தில் மட்டுமே இறைவனைக் காண முடியும் என்பதுதான் நமக்குத் தரும் மற்றுமொரு செய்தி. கடவுள் எப்போதும் நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் அவர் சிறிய வழியையே தேர்ந்து கொள்கிறார்.

கடவுளின் இந்த வெளிப்பாட்டை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம். இவ்வாறு கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்வதில் தோற்றுப்போகிறோம். இவ்வுலகின் பார்வையில் கடவுள் தம்மை எளியவராக வெளிப்படுத்தினார். நாமோ இன்னமும் அவரைப் பிரமாண்டமான பெரிய காரியங்களில், ஆடம்பர விளக்கு அலங்காரங்களில் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறோம். பகைமை என்ற கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டவர்கள் இறைவனை எப்போதும் தரிசிக்க முடியாது. இறைவன் பணிவிடை புரிபவராக நம் நடுவிலே மனிதராகப் பிறக்கிறார் (லூக் 22:27). நாமோ, பணிவிடை ஏற்பவராக இருக்கிறோம். அவர் பதவியையும் புகழையும் தேடவில்லை. நாமோ பதவியையும் புகழையும் மட்டுமே தேடுகிறோம். எனவே, எளிமையை ஏற்றுக்கொள்வதற்கான அருளைக் கேட்போம். ஏழ்மை நிலையில் பிறந்த இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது அவரைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வதாகும்.

மூன்றாவது, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்என்ற செய்தி, நமக்காகத் தரப்பட்டுள்ள இந்த ஆண் மகவு ஏன் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் (லூக் 2:12) என இடையர்களிடம் வானதூதர் சொல்வதைக் காண்கிறோம். ‘அப்பத்தின் இல்லம்என்று பொருள்படும் பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில் இறைவன் பிறக்கிறார். மனிதர் வாழ்வதற்கு உணவு தேவை என்பதை உணர்ந்த இறைவன், “இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன் (யோவா 6:35) என்று சொல்வதுபோல், இயேசுவின் பிறப்பு அமைகிறது. இந்நேரத்தில் பசியால் வாடும் அனைவரையும் குறிப்பாக, சிறார்களை நினைத்துப் பார்ப்போம்.

இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் (மத் 26:26) என்று தம் பிறப்பு முதல் சொன்னவர் இயேசு. சேர்த்து வைப்பதில் வாழ்வு அடங்குவதில்லை; மாறாக, பகிர்வதிலும், தருவதிலுமே அது அடங்கியுள்ளது என்பதை பெத்லகேமில் பிறந்த இக்குழந்தை நம்மிடம் சொல்கிறது.

இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவில், ஒன்றுமில்லாதவர்களுடன் நான் என்னையே அப்பமாகப் பகிர்ந்துகொள்கிறேனா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போம். வலுவற்றோர், நோயுற்றோர், கைவிடப்பட்டோர், வயது முதிர்ந்தோர், விளிம்புநிலையில் இருப்போர், தனிமையில் வாழ்வோர், கைதிகள், வேலை இழந்தோர், பொருளாதார நெருக்கடியில் துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், புதுமை பாலினத்தோர் ஆகியோர் நம் இல்லக் கதவுகளை வந்து தட்டும்போது அவர்களை மறவாதிருப்போம்.

நிறைவாக, “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்என்ற செய்தி சொல்வது: அவர் நம்மைக் காக்க வந்துள்ளார்! இந்த இரவிலே தம்மையே ஒரு கொடையாக, எவ்வித நிபந்தனையுமின்றி  வழங்குகிறார். இயேசு என்ற கொடையை நாம் வரவேற்று, அவரைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே, இறைவன், ‘இம்மானுவேலாகவாழ பிறந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவில் அவர் மீண்டும் பிறக்க மன்றாடுவோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி (லூக் 2:10) என இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல, அதே மகிழ்ச்சியைக் கடவுள் நமக்கும் இன்று தருவாராக! “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் (எசா 9:2) என்று எசாயா குறிப்பிடுவதுபோல, நம் உள்ளங்களும் இல்லங்களும் கிறிஸ்து எனும் பேரொளியால் நிரப்பப்பட வேண்டுவோம். நாம் வாழ்கின்ற இடங்களில், குடும்பங்களில் ஒரு சிறிய புன்னகையாகக் கிறிஸ்துவின் ஒளியை வழங்குவோம். கடவுளின் அன்பால் ஆழமாக இயக்கப்பட நம்மையே அனுமதிப்போம். ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றுகின்ற சாதாரண செயல்கள் வழியாக, நம் வாழ்வை மிகச் சிறந்த படைப்பாக மாற்றுவோம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!