news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 07, 2025, திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 11:1-10; உரோ 15:4-9; மத் 3:1-12 - மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!

திருவருகைக் காலம் என்பது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம். இது கிறிஸ்து பிறப்பின் உண்மைப்பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம். “பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மன்னிப்பை வரவேற்று, மனம் புண்படச் செய்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அக விடுதலையை அனுபவிக்க அருள்தரும் காலமே திருவருகைக் காலம்என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் (டிச. 4, 2022). திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், இறை-மனித உறவில் உள்ள பிணக்குகளை மனமாற்றத்தின் வழியாகச் சரிசெய்து சமத்துவத்தைப் பேணவேண்டும் என்று அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய வாசகங்களில் இறைவாக்கினர் எசாயாவும் திருமுழுக்கு யோவானும் மனமாற்றத்தின் வழியாகப் பெறப்போகின்ற புதிய வாழ்வைக் குறித்து உரையாடுகின்றனர். தம்மை மீட்க வரவிருக்கும் மெசியாவின் வருகைக்குக் கரடுமுரடுமானதும் கோணலுமாணலுமான, குண்டும்குழியுமான பாதையைச் செம்மைப்படுத்த மனம்வருந்தி மனமாற்றம் பெற இறைவாக்கினர் எசாயா அழைப்புவிடுக்கிறார். இயேசுவின் பணிவாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் பிறப்பிற்கு நம்மையும் தயாரிக்கிறார்.

முதல் வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி, ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது பகுதி, மெசியாவின் வருகையில் வெளிப்படும் உண்மையான சமத்துவம் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எசாயாவின் முதல் பகுதி (11:1-5) நமக்கு விவரிக்கின்றது. ஈசாய் என்பவர் தாவீதின் தந்தை. எசாயாவின் வார்த்தைகள் (11:1) ஈசாயின் மகன் தாவீதையும், அவரது வழிமரபில் தோன்றிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பதாக உள்ளன. இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளை வருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் பொருளைக் காட்டுகிறது. தாவீதின் வழி மரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதிகளைப் பெறாமலே போயினர். ஆனால், இனி வருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருவார். வெட்டி வீழ்த்தப்பட்ட யூதாவிலிருந்து நீதியுள்ள அரசர் வருவார். ஆண்டவர் தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என எசாயா முன்னறிவிக்கிறார்.

அரசர் தாவீதின் காலத்திற்குப் பிறகு தாவீதைப்போல ஓர் அரசரை மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பே பின்னாளில் மெசியாவைப் பற்றிய எதிர்பார்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பகுதியில் எசாயா, ஆண்டவரின் ஆவியின் பலன்களாக, ஆறு நற்பண்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை, ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி மற்றும் ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு. இப்படியான பண்புகள் கொண்ட அரசன் இப்போது இல்லை எனவும், நேர்மையையும் உண்மையையும் இடைக்கச்சையாக அணிந்துள்ள அரசர் தோன்றுவார் எனவும் எசாயா முன்பே உணர்ந்திருந்தார் போலும்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி, நீதியுள்ள அரசரின் வருகையின்போது நிலவும் சமத்துவத்தைப்பற்றி எடுத்துரைக்கிறது. மெசியாவின் வருகையில் ஒரு புதிய ஆட்சி மலரும்; அது ஒரு பொற்காலமாக இருக்கும்; அன்பும் அமைதியும் சமத்துவமும் மக்களிடையே நிலவும். இது நிறைவேறும் என ஒரு மாற்றுச் சமுதாயக் கனவு காண்கிறார் எசாயா (11:6-8)

ஓநாய்-செம்மறி ஆடு, சிறுத்தைப் புலி-இளம் ஆடு, சிங்கக்குட்டி-கன்று, பசு-கரடி என எசாயா வரிசைப்படுத்தும் விலங்குகள் சேர்ந்து வாழமுடியாதவை. தொடர்ந்து  கரடி, பசு மாட்டோடு மேயும்; சிங்கம் மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கும்; பால்குடி மறவாத குழந்தை விரியன் பாம்பின் வளைக்குள் கையைவிடும் என மெசியாவின் ஆட்சியின் சிறப்பை அடையாள ரீதியாகக் குறிப்பிடுகின்றார் எசாயா. எதிரும் புதிருமான தன்மைகொண்ட விலங்கினங்கள் தங்கள் கொடிய இயல்பை விடுத்து, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஏற்படுத்திய இறை-மனித-உயிரின சுமூக உறவிற்குத் திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். மனித மனங்களில் புதைந்துகிடக்கும் சமத்துவம், சகோதரத்துவம், கருணை, அன்பு என்ற இறைத்தன்மை மேலோங்கி வரவேண்டும் என்பதே எசாயாவின் கனவு. எசாயா குறிப்பிடும் இந்த இயல்புநிலை மாற்றம், மனமாற்றம் நீதியுள்ள அரசரின் வருகையின்போது மீண்டும் உருவாகும் என நம்புகிறார்.

எசாயா கண்ட கனவை இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; “எனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்...” (யோவா 1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர். ஒட்டக மயிராடை, தோள்கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத் தேன் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவரை இரண்டாவது எலியாவாகச் சித்தரிக்கின்றார் மத்தேயு.

இன்றைய நற்செய்தியில் யோவான், “மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத் 3:2) எனப் போதிக்கிறார். வெளி வேடத்திற்குப் பெயர்போன பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் மனம்மாறத் தேவையில்லை என்ற மனநிலையோடு அவரை அணுகியபோது அவர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். இத்தகைய மனநிலையும் இரட்டைவேடமும் ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கும், கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்காது. எனவே, கடவுளை வரவேற்பதற்குமனம் வருந்துதல்மிக முக்கியம். ஆகவேதான் திருமுழுக்கு யோவான்மன மாற்றத்தை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்என்கிறார் (மத் 3:8).

மனமாற்றம் (Conversionஎன்ற வார்த்தையின் பொருள் வாழ்க்கைமுறை மாற்றம் என்பதாகும். தீமைகள் நிறைந்த உலகில் தீமைகளைத் தவிர்த்தல் மட்டுமல்லாதுதீமைகளை எதிர்த்து வாழும் புதிய வாழ்க்கை முறையே மனமாற்றம் ஆகும். அதாவது, தீய பிரிவினை நாட்டங்கள் மறைவதும் நீதி, உண்மை, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்தல் எனும் இறையாட்சித் தன்மையில் ஒளிர்வதுமே உண்மையான மனமாற்றம். மனமாற்றத்திற்கான கிரேக்க வார்த்தையானMetanoiaஎனும் சொல் பாவங்களையும் பாவ வாழ்வையும் விட்டு விலகுவது மட்டுமல்ல, தீய வழிகளை விட்டு விட்டு ஆண்டவரை நோக்கி நெருங்கி வருவதைக் குறிக்கிறது.

அடிப்படையில் மனமாற்றம் என்பது இரு பொருள் கொண்டது. ஒன்று, தீமைகளைத் தவிர்த்து நன்மை செய்வது; மற்றொன்று, பாவ வாழ்விலிருந்து விடுபட்டு வாழும் உயிருள்ள கடவுளை நோக்கித் திரும்பி வருவது. எனவே, இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில் நாம் மனமாற்றத்தின் வழியே இயேசுவை நோக்கித் திரும்புவதே இறையாட்சியில் பங்குபெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.

ஆகவே, எசாயா மற்றும் திருமுழுக்கு யோவான் கண்டமாற்றுச் சமுதாயம்என்பது நீதியும் நேர்மையும் அன்பும் அறனும் அமைதியும் எளியவரை ஏற்றலும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நாமும் நமது அன்றாட வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படவேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் பற்றி விளக்கும் பவுல், இயேசுவிற்குயூதரன்றோ யூதரல்லாதவரென்றோ இல்லை; அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எவ்விதத்திலும் தகுதி இல்லாத பாவிகளாகிய நம்மை அவர் ஏற்றுக்கொண்டது போல, நாமும் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பிறரை ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளைப் பெருமைப்படுத்தும்என எடுத்துரைக்கிறார்.

ஆகவே, பழைய ஏற்பாட்டு மக்கள் எசாயாவின் வார்த்தைகளை நம்பி மெசியாவின் வருகைக்குத் தங்களையே தயாரித்ததுபோல, ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் நாம் பழைய பாவ வாழ்க்கை முறையை விலக்கி, புதிய வாழ்க்கை முறையைத் தழுவிக்கொள்வோம். நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் தொடங்கியுள்ள திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகையை, அர்த்தமற்ற வழிகளில் எதிர்பார்க்காமல், தனக்குள் தொடங்கும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவைப்போல மாசற்ற வழியில் பயணிப்போம். அமல அன்னையின் பரிந்துரையாலும் வழிநடத்துதலாலும் நாம் திருவருகைக் காலத்தில் இறைவனின் வருகையையும், கிறிஸ்துமஸ் பெருவிழாவின் முழுப்பொருளையும் உணர்ந்து வாழும் வரம் வேண்டுவோம்.

மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!” என்ற தொனியில் ஒலிக்கும் திருமுழுக்கு யோவானின் குரல் இன்று நம் செவிகளுக்கு எட்டட்டும்!

news
ஞாயிறு மறையுரை
நவம்பர் 30, 2025, திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 2:1-5; உரோ 13:11-14; மத் 24:37-44 - நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; விழிப்பாக இருப்போம்!

இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.

திருவருகைக் காலம் என்பது எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். இது அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கி வந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம் (ஞாயிறு மறையுரை, 30.11.2020).

திருவருகைக் காலம் என்பது இரண்டு முக்கிய நோக்கங்களை வலியுறுத்துகிறது: முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாய் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும் இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது. எனவே, இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது. திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16-ஆம் நாள் வரை உள்ள நாள்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயாரிப்பு நாளாகவும், டிசம்பர் 17 முதல் 24 உள்பட வரும் வாரநாள்கள் கிறிஸ்து பிறப்புக்கு நேரடி முன்னேற்பாடாகவும் அமைகின்றன.

கிறிஸ்துவின் முதல் வருகையை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப்போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம்எச்சரிக்கையாகவும்-விழிப்பாகவும்இருந்து எதிர்நோக்கவேண்டும் என்பதே இந்தத் திருவருகைக் காலத்தின் மையக் கருத்து. இக்கருத்தை மையப்படுத்தியே இன்றைய வாசகங்களும் இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைத்து, நாம் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, மெசியாவின் காலத்தில் நிகழவிருப்பன பற்றி எடுத்துரைக்கின்றார். இவ்வாசகத்தில் கடவுள் தரும் முடிவில்லா அமைதியைப் பற்றி எசாயா இறைவாக்குரைக்கிறார். ‘இறுதி நாள்களில் மக்களினங்கள் யாவே இறைவனை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்என்கிறார் எசாயா. அவர்கள் இங்கு வருவதன் நோக்கம்ஆண்டவரின் வழிகளைக் கற்றுக்கொள்வதே.’ எல்லா மக்களும் யாவே இறைவனைத் தேடி வருவதால், ‘யாவே அனைவருக்கும் ஆண்டவர்என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, யாவே ஆண்டவரின் வழியில் அவருடைய கட்டளைகளைக் கேட்டு மக்கள் நடக்கும்போது அமைதியில் அவர்கள் வாழ்வார்கள் என எசாயா எடுத்துரைக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் நமக்கான அழைப்பு என்பது, ஆண்டவரின் மலைக்குச் செல்லவேண்டுமெனில், அழிவுக்கு இட்டுச் செல்லும் செருக்கையும் ஆணவத்தையும் விட்டுவிடவேண்டும் என்பதுதான். மனிதரில் வெளிப்படும் செருக்கும் ஆணவமும் அழிவுக்கானவை. இவை பல வழிகளில் மனிதரைச் சிறுமைப்படுத்துகின்றன (5:11); கடவுளை அறியவோ, அவருக்குப் பணிவிடை புரியவோ விடாமல் மனிதரைத் தடுத்துவிடுகின்றன. ஆகவே, இன்று இவற்றிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை நாம் பெறவேண்டும். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்தவேண்டும். வாள்கள் கலப்பைக் கொளுக்களாகவும், ஈட்டிகள் கருக்கரிவாள்களாகவும் மாறவேண்டும் (2:4).

இன்றைய நற்செய்தியில் இயேசு இறுதித் தீர்ப்புப் பற்றிப் போதிக்கையில் (மத் 24:37-44) மூன்று கருத்துகளை நமக்கு முன்வைக்கின்றார். அவை: ) எச்சரிக்கையாக இருத்தல், ) தயார்நிலையில் இருத்தல், ) விழிப்பாய் இருத்தல்.

முதலாவதாக, ‘எச்சரிக்கையாக இருத்தல்குறித்து இயேசு பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த நோவா காலத்து வெள்ளப்பெருக்கு நிகழ்வை மேற்கோள்காட்டுகிறார். எல்லாரும் மனம்போன போக்கில் வாழ்ந்தாலும், நோவா மட்டும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். நேர்மையாளராக வாழ்ந்த நோவாவும் அவரது குடும்பத்தாரும் கடவுளின் அருளால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பெட்டகம் செய்வதைக் கண்டும்கூட, மக்கள் விழிப்பாக இல்லை. மனமாற்றம் பெறாததால் அவர்கள் சந்தித்தது அழிவையே. இந்நிகழ்வைக் குறிப்பிடும் இயேசுவும், ‘மானிட மகனின் வருகையின்போதும் இவ்வாறே இருக்கும்என எச்சரித்து, அவரின் குரலுக்குச் செவிமடுக்க அழைப்பு விடுக்கிறார்.

இரண்டாவதாக, எதிர்பாராத நேரத்தில் ஆண்டவரின் திடீர் வருகைக் குறித்து எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, “இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்...” (மத் 24:40,41) என்னும் உருவகம் வழியாகத் தீயவர்கள் கைவிடப்பட்டு நல்லவர்கள் கடவுளால் என்றுமுள்ள வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று பொருள்பொதிந்த விதத்தில் எடுத்துரைக்கின்றார். ஆண்டருடைய வருகை வந்தே தீரும் என வலியுறுத்தும் இயேசு, தம் வாழ்வால் அவருக்கு உகந்தவராய் இருந்து அவரை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கவேண்டும் என அறிவுரை தருகிறார். ஆகவே, கடவுளுக்காக நமது கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றுவதில் பிரமாணிக்கமாக இருப்பதுகூட நமது மீட்புக்குப் பெரிய அளவில் உதவும்.

மூன்றாவதாக, இயேசு திருடர் குறித்த ஒரு கருத்தைக் கூறி, ‘விழிப்பாய் இருங்கள்என்று நம்மை எச்சரிக்கின்றார். நமது வீட்டிற்குள் திருடர் எப்போது வருவார் என்பதை நாம் அறிந்திருந்தால், நமது உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால், திருடர்கள் எப்போது வருவார்கள் என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுபோலவே, மானிடமகனின் இரண்டாவது வருகை எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது (மத் 24:36). எனவே, எந்நேரத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது ஓர் அழுத்தமான அழைப்பாகும்.

திருவள்ளுவர் தனது குறளில்,

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் (435)

என்கிறார். அதாவது, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கையானது, நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல்போர் போலக் கருகிவிடும் என்று எச்சரிக்கின்றார்.

ஆகவே, ‘விழிப்பாக இருத்தல்என்பது இன்று மிக முக்கியக் கிறித்தவக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ‘நகைச்சுவைப் புனிதர்என்று அழைக்கப்படும் புனித பிலிப்நேரி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் அவரிடம், “பிலிப், இதோ அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் புன்னகையுடன், “தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன்என்றாராம். அதுபோலவே, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஜான் வெஸ்லியிடம், “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க, வெஸ்லியோமாலை நான்கு மணிக்கு நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன்; ஆறு மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி. பிரவுனை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன்; எட்டு மணிக்கு மாலை செபங்களைக் கூறிவிட்டு, உணவிற்குப் பின் வழக்கம்போல் தூங்கச் செல்வேன்; விழித்தெழும்போது இறைவன் முகத்தில் விழிப்பேன்என்று கூறினாராம்.

நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்துவேன் (யோவா 17:4) எனும் இயேசுவின் கூற்றுக்குப் புனித பிலிப் நேரி மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் நல்லதோர் எடுத்துக்காட்டு.

நிறைவாக, திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிக் காலம் இதுவேஎன்று கூறி, உறக்கத்திலிருந்து விழித்தெழ நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். இங்கேஉறக்கம்என்பது ஊனியல்பின் நாட்டத்தைக் குறிப்பதாக அமைகிறது. பவுல்இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!’ என்கிறார். அதாவது, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்புக்குரிய செயல்களை விட்டுவிட்டு, ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம்.

நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி செயல்பட்டு, தம் கடமைகளை முழுமையாக நிறைவேற்றி, அவர் மீண்டும் வரும்போது அவரை மகிழ்ச்சியோடு சந்திக்கத் தயாராவோம். ஆக, மகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக (திபா 122:1) இன்றே அன்பையும் அமைதியையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துவோம். நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; எனவே, விழிப்பாக இருப்போம்!

news
ஞாயிறு மறையுரை
நவம்பர் 23, 2025, கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) 2சாமு 5:1-3; கொலோ 1:12-20; லூக் 23:35-43 - நாம் படித்தறிய வேண்டிய வாழும் புத்தகம் கிறிஸ்து அரசர்!

உலகளாவிய வரலாற்றில் மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்று முதல் உலகப்போர் (1914-1918). இப்போரில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 இலட்சம் குடிமக்கள் போர். பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக இறந்ததாகவும் கூறப்படுகிறது. இப்போர் நிகழ்ந்த வேளையில், திரு அவையின் தலைவராகப் பணியாற்றியவர் திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட். அவர் இந்தப் போரை, “பயனற்றப் படுகொலை என்றும், “கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை என்றும் குறிப்பிட்டார். முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922-ஆம் ஆண்டு, திரு அவையின் தலைமைப் பணியை ஏற்ற திருத்தந்தை 11-ஆம் பயஸ் அரசர்கள், மற்றும் அரசுத் தலைவர்களின் அகந்தையும் பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்து, இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 - ஆம் நாள், ‘Quas Primas என்ற சுற்று மடல் வழியாகக் கிறிஸ்து அரசர் திருநாளை நிறுவினார்.

1969-ஆம் ஆண்டு திருத்தந்தை 6-ஆம் பால் வெளியிட்ட ‘திருத்தந்தையின் தம் விருப்ப அறிக்கை (Motu Proprio) என்ற மடலின் வழியாக இந்த விழாவின் பெயரை ‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர் என மாற்றினார். மேலும், இவ்விழாவை வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு அன்று கொண்டாட பணித்தார். ‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர் என விழா கொண்டாடுவதற்கான காரணம், கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள் குறிப்பாக, அரசுத் தலைவர்கள், பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இவ்விழா அறிவிக்கப்பட்டு,  நூற்றாண்டைக் கண்டபோதிலும், உண்மையில் உலகத் தலைவர்கள் கிறிஸ்து அரசருக்குரிய பண்புநலன்களைக் கொண்டு முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியே.

இப்போது உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும் பயங்கரவாதமும், போர்களும், பிரிவினைகளும் தாம். பதவிக்காகவும், பணத்திற்காகவுமே இங்கே தினம் தினம் போட்டியும் பொறாமையும் ஆட்சிப் பொறுப்பாளரிடம் நிலவுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். உலகத் தலைவர்களிடையே நிலவும் “யார் பெரியவர் என்ற போட்டியால், உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும், போர்களும், வன்முறைகளுமே பெருகியுள்ளன. எப்படிப் பதவிக்கு வரலாம், யாரை ஏமாற்றலாம் பதவிக்கு வரலாம் என்று அரசியல் தலைவர்கள் போடும் தவறான கணக்குகளால் அன்பும் அமைதியும் உண்மையும் உலகில் காணாமல் போய்விட்டன.

போரினால் ஆயிரமாயிரம் மக்கள் அமைதியை இழந்து உள்நாட்டிலும் பல்வேறு அந்நிய நாடுகளிலும் புலம்பெயர்ந்தோராகி வருகின்றனர். இரு உலகப்போர்களைச் சந்தித்த இவ்வுலகம் தற்போது, மூன்றாவது உலகப்போரை உலகின் பல பகுதிகளில், சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வருகிறது. இதனையே திருத்தந்தை பிரான்சிஸ், “அமைதிக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்துவருகிறோம் என்று குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், கிறிஸ்துவை ஓர் அரசராகக் கொண்டாட, இந்த ஞாயிறன்று, தாய் திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசு கிறிஸ்து உண்மையில் அரசர்தானா?  அரசர் என்றால் அவர் எப்படிப்பட்ட அரசர்? அனைத்துலகின் அரசராம் கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகள் என்ன? என்பது குறித்துச் சிந்திப்போம்.

புதிய ஏற்பாட்டில் ‘இயேசுவே அரசர் என்ற உணர்வு ஞானிகளிடமும் அரசர்களிடமும் மக்களிடமும் வெளிப்பட்டன. இயேசுவை, அரசர் என்று முதலில் கூறியவர்கள், கீழ்த்திசை ஞானிகளே. “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?  ‘அவரது விண்மீன் எழக் கண்டோம். “அவரை வணங்க வந்திருக்கிறோம் என்று சொல்லி இயேசுவை அரண்மனையில் தேடினர் (மத் 2:2).

இரண்டாவது, இயேசு அப்பத்தைப் பகிர்ந் தளித்த நிகழ்வில் மக்கள் தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவா 6:14-15). மூன்றாவது ஒரு நிகழ்வில், எருசலேமுக்கு பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் “இஸ்ரயேலின் அரசர் போற்றப் பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர் (யோவா 12:12-13).

நான்காவது ஒரு நிகழ்வில், பிலாத்துவே இயேசுவிடம், “நீர் அரசரா?” என்று கேட்டு அச்சமுற்றான் (யோவா 18:37). மேற்குறிப்பிட்ட நான்கு நிகழ்வுகளிலுமே இயேசு தவறான முறையில் “அரசன் என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. அவ்வாறெனில் இயேசுவே அரசர் என்று நாம் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? இயேசுவை மூன்று நிலைகளில் அரசர் என்று புரிந்துகொள்ளலாம்.

1. படைப்பின் அடிப்படையில்,  2. பிறப்பின் அடிப்படையில், 3. பாடுகளின் அடிப்படையில்.

தொடக்கத்தில் கடவுள் படைத்த பொழுது (தொநூ 1:1) வாக்கு இருந்தது (யோவா 1:1). “அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது (1:1). இயேசுவே அந்த வாக்கு. அவரே இறைவனை முழுமையாக வெளிப்படுத்தக்கூடியவர் (1:18). இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரான ஆண்டவரே இயேசு கிறிஸ்து (விப 3:14; திவெ 1:8). கடவுள் கடவுளது அரியணையில் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் (எபி 12:2).

இரண்டாவதாக, இஸ்ரயேலரின் பன்னிரு குலத்தில் ஒன்றான யூதா குலம்தான் அரச குலம். இந்தக் குலத்தில் பிறந்தவர்தான் தாவீது. இந்த தாவீதின் குலத்தில் பிறந்தவர் இயேசு கிறிஸ்து (எரே 33:15, திவெ 22:16). இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பில், “அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1:32-33) என்றே வானதூதர் மரியாவிடம் கூறினர். எனவே, இயேசு பிறப்பின் அடிப்படையில் அரசர்தான்.

மூன்றாவதாக, இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலுக்கு மத்தியில் “இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் (லூக் 23:42) என்ற கள்வனின் குரல் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்கிறது. மனிதன் என்று கணிக்க முடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி.

ஆகவே, இயேசுவின் அரசத் தன்மையை மூன்று கோணங்களில் நாம் சிந்திக்கலாம்.

அவை, அ) துயருறும் அரசர்,  ஆ) துயர் துடைக்கும் அரசர்,  இ) தரணியோர் அனைவருக்குமான அரசர்.

இயேசுவின் தலைமை என்பது உலகத் தலைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதலில் அவர் ஒரு துயருறும் அரசர். சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டபோது, தம் கரங்களை உயர்த்தவில்லை, யாரையும் விரலால் சுட்டிக்காட்டவில்லை, வார்த்தைகளால் வசைமொழி கூறவில்லை. மாறாக, தமது சிலுவை மரணம் வழியாக, எல்லா மக்களையும், அவர்களின் மரணம், துயரம், ஏழ்மை, பலவீனங்கள் என அவர்கள் பற்றிய அனைத்தையும், அரவணைத்துக்கொள்ள தம் கரங்களைத் திறந்தார். திறந்த கரங்களோடு அவர் தம்மை நம் அரசராகக் காட்டுகிறார்.

இரண்டாவதாக, இயேசு துயர்துடைக்கும் அரசர். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்;” (எசா 53:4). ஏழைகளையும் வறியோரையும் வாழ்விழந்தோரையும் புறந்தள்ளப்பட்டோரையும் இயேசு தேடிச்சென்று அவர்களை அன்பொழுக அரவணைத்துக்கொண்டார். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள் அதற்குச் சான்றாக அமைகின்றன.

மூன்றாவதாக, இயேசு தரணியோர் அனைவருக்குமான அரசர். அவரது அரசு அனைவருக்குமானது என்பதை உணர்த்தும்படி, இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள் (லூக் 13:29) என்று கூறினார். அதாவது, இயேசுவின் இறையாட்சியில் எந்த வேற்றுமையும் பிளவுகளும் காணாது, அவரில் நம்பிக்கைகொள்ளும் அனைவருக்கும் அவரது இறையாட்சியில் இடம் உண்டு.

ஆகவே, கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் தனது ஆடுகளுக்காக இன்னுயிரையே தியாகம் செய்த பேரரசராம் கிறிஸ்து அரசரைப்போல, நாமும் மனிதநேயம் கொண்டு துயருறும் மானிடர் அனைவருக்கும் உதவிட முன் வருவோம். அதிகாரபலம், படைபலம், பணபலம் ஆகியவற்றை நம்பி வாழ்வை இழந்துவிடாமல், இவ்வுலகை மீட்கும் பயணத்தில்  துன்புறும்  ஊழியனாகத் திகழ்ந்த கிறிஸ்து அரசரின் வழியில் நாம் பயணித்துப் பிறருடைய நல்வாழ்வுக்காய் உழைக்கும் நன்மக்களாக வாழ்வோம். நாம் படித்தறிய வேண்டிய வாழும் புத்தகம் கிறிஸ்து அரசர்!

news
ஞாயிறு மறையுரை
நவம்பர் 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19 - நமது மேய்ப்புப்பணியின் இதயம் வறியோர்

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை நாம் நெருங்கி வந்துள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன் அடுத்த திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்க இருக்கின்றோம். சென்ற ஆண்டு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நாம் தொடங்கியபோது, நமக்குத் தரப்பட்ட திருவிவிலிய வாசகம் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று மீண்டும் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து வாசகம் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் லூக்கா நற்செய்தியின் பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

ஆண்டின் 33-ஆம் ஞாயிறான இன்றைய நாளின் சிறப்பு என்னவெனில், இன்று நாம்நீரே என் நம்பிக்கைஎன்ற திபா 71:5 வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு, ஒன்பதாவது உலக வறியோர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதி நாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

வாழ்வின் இறுதிநாள் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? இப்போதே நிகழுமா?’ எனும் கேள்விகளுக்குத் தந்தையைத் தவிர வேறு எவருக்கும் விடை தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஆண்டவரின் நாள் என்பது கடவுளின் வருகையைப் பற்றிய இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையாகும். இறைவாக்கினர் எசாயாவும்ஆண்டவரின் நாளை (13:9) பற்றிக் குறிப்பிடும்போது, அது பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாளாக இருக்கும் என்று கூறுகிறார். ஆண்டவர் வரும் அந்த நாளில் நீதி, நேர்மை, உண்மை, நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றவர்கள் கடவுளிடம் நல்ல கைம்மாறு பெறுகின்றனர். எவரெல்லாம் இம் மதிப்பீடுகளைக் கைவிட்டுத் தீயநெறியில் வாழ்கின்றார்களோ, அவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாவர் என மலாக்கி கடுமையாகச் சாடுகிறார் (4:1).

இன்றைய நற்செய்தியிலும் ஆண்டவரின் நாளான அவரது இரண்டாவது வருகையைப் பற்றியும், உலகத்தின் இறுதி நாளைப் பற்றியும் லூக்கா விவரிக்கின்றார். இந்தப் பகுதி ஆண்டவரின் நாள், எருசலேம் அழிவு, இயேசுவின் இரண்டாம் வருகை, வரவிருக்கும் மறைத்துன்பங்கள், உறுதியான இறைநம்பிக்கை, மறுவாழ்வு என, பல கருத்துகள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. எனினும், உலக முடிவையும், இயேசுவின் இரண்டாம் வருகையையும் அச்சத்துடன் நோக்காமல் நமது கடமைகளை நிறைவேற்றி, கிறிஸ்துமீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருந்ததால் ஆண்டவர் வருகையின்போது, நாம் நமது வாழ்வைக் காத்துக்கொள்வோம் என்பதே இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி.

இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகளில் கவின்மிகு கற்களாலும் நேர்ச்சைப் பொருள்களாலும் அழகுபடுத்தப்பட்டிருக்கும் கோவில்கல்லின்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும்என இயேசு எடுத்துரைக்கிறார். இயேசு கூறிய இந்தக் கோவிலின் பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

முதலில், கடவுளுக்கென்று ஓர் ஆலயம் எழுப்ப பேரரசரான தாவீது விரும்பினார். ஆனால், அது அவரால் இயலாமற்போயிற்று. அவரது மகனான சாலமோன் மன்னரால் கி.மு. 950-களில் ஆண்டவருக்கென்று அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. சாலமோன் கட்டிய ஆலயத்தைக் கி.மு. 587-இல் பாபிலோனிய மன்னன் நெபுகத் நேசர் இடித்துத் தரைமட்டமாக்கினார் (2அர 25). ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாபிலோனிய அரசு வீழ்ச்சி கண்டது. பாரசீக மன்னர் சைரஸ் (கி.மு. 538) இஸ்ரயேலருக்கு விடுதலை அளித்தார். யூதர்களுக்கு விடுதலை அளித்த பாரசீகர்கள், எருசலேம் தேவாலயத்தைக் கட்டவும் உதவிசெய்தனர். எஸ்ரா, நெகேமியா தலைமையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது (எஸ்ரா 3:3; சீஞா 49:13).

செருபாபேல் கட்டிய இரண்டாம் ஆலயம் (எஸ்ரா 4:3) அதன் அழகிலும் மேன்மையிலும் முதலாவது ஆலயத்திற்குக் குறைவாகவே இருந்தது (ஆகா 2:1-3). எனவே, 500 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 2020-இல் பெரிய ஏரோது இந்தக் கோவிலைப் புனரமைப்பு செய்து எழில்மிகு கற்களைக் கொண்டும், பொன்-வெள்ளிப் பொருள்களாலும் பேரரசன் சாலமோன் கட்டிய முதல் ஆலயத்திற்கு இணையான ஆலயத்தைக் கட்டினான். இந்த ஆலயத்தின் அழிவைப்பற்றிதான் இயேசு முன்கூட்டியே அறிவிக்கிறார். இயேசு கூறியதுபோலவே, கி.பி.70-இல் எருசலேம் ஆலயம் உரோமைப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் ஒரு தடுப்புச்சுவர் மட்டும்தான் இன்று எஞ்சியிருக்கிறது. அதனைத்தான் யூதர்கள்கண்ணீர் சுவர்என்றழைக்கிறார்கள். அழிக்கப்பட்ட ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்ப முடியாததை நினைத்து, இந்தச் சுவர்களில் யூதர்கள் மோதி கண்ணீர் வடித்துச் செபிக்கின்றனர்.

யூதர்கள் பொறுத்தவரை எருசலேம் ஆலயத்தைத் தங்கள் இதயமாகக் கருதினர். இக்கோவில் அவர்களின் இறையுணர்வுகளின் மகத்தான அடையாளம். ஆண்டுதோறும் ஒருமுறையேனும் இவ்வாலயம் சென்று பலி ஒப்புக்கொடுப்பதும், காணிக்கை செலுத்துவதும் பெரும் சட்டமாக யூதர்கள் கருதினர். இவ்வளவு சிறப்புமிக்க ஆலயத்தில் பல்வேறு முறை கேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்றதைக்கண்டு சாட்டைப் பின்னி அவர் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினார் (லூக் 19:45-46). கடவுளின் ஆலயமே கள்வர் குகையாக, சந்தைக்கூடமாக மாறிப்போனது. எனவேதான், யூதர்களின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய எருசலேம் ஆலயம் இடிபடும் என அவ்வாலயத்தின் அழிவு பற்றி முன்னறிவிக்கிறார் இயேசு.

இயேசுவின் முன்னறிவிப்பு இன்று நமக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. உள்ளக் கோவில்தான் இறைவன் இல்லம். இறைவன் தந்த ஆலயமே நம் உள்ளம் (1கொரி 3:16-17). யூதர்கள் ஆலயத்தைத் தாண்டிக் கடவுளின் பிரசன்னத்தை எவரிலும் எதிலும் காணத் தயாராக இல்லை. இம் மனநிலையில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? உள்ளம் எனும் ஆலயத்தில் புனிதம் காக்கத் தவறிவிட்டால் அங்கு இறைப்பிரசன்னத்திற்கு ஏது வழி? எனவே, நமது நம்பிக்கை ஆலயத்தையும், ஆண்டவரின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரையும் கடவுள் வாழும் கோவிலாகப் பார்க்க அழைக்கிறது இன்றைய நற்செய்தி.

திருத்தந்தை பிரான்சிசும் அவர் வழிவந்த திருத்தந்தை லியோவும் ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். திருத்தந்தை இந்த ஆண்டு வழங்கிய ஒன்பதாவது வறியோர் தினச் செய்தியில், வறுமையை ஏற்றுக்கொண்ட கடவுள் வறியோரின் குரல்கள், கதைகள் மற்றும் முகங்கள் வழியாக நம்மை வளப்படுத்துகின்றார் என்கிறார். மேலும் அவர், ஏழைகள் நற்செய்தியின் மையமாக இருக்கின்றார்கள், நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாக, நமது மேய்ப்புப்பணியின் இதயமாக இருக்கின்றார்கள் என்றும், அத்தகைய ஏழைகளிடமிருந்து நமது பார்வையை விலக்கிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். வறியோர் இறைவனின் கண்களில் விலைமதிப்பற்றவர்கள்; அவர்கள் நற்செய்தியின் வழியில் நாம் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதை நினைவூட்டுபவர்கள் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய உலகில் நடைபெறும் போர்கள் எண்ணற்ற மக்களைப் புலம்பெயரச் செய்துள்ளது; அவர்களை இல்லமற்ற வறியோராக்கியுள்ளது. இன்று உலகில் 120 கோடி மக்கள் இல்லமற்றவர்களாக இருக்கின்றனர். உலகிலுள்ள பெரும்பாலான சொத்துகள் சில நூறுபேரின் கரங்களில் இருக்கின்றன என்பதே நிதர்சன உண்மை. அநீதியே இவ்வுலகின் வறுமைக்கு அடிப்படைக் காரணம். மனித சமூகத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் தன்னலமே. அக்கறையற்று, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ‘ஒன்றும் செய்ய இயலாதுஎன்று கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது. தேவையில் இருப்போருடன் நாம் கொள்ளும் தொடர்பின் வழியே நமது நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இயேசு கிறிஸ்துவைப்போல் அயலவரை அணைக்க நாம் கரங்களை விரித்துக் காத்திருப்போம்.

இறுதிக்காலத்தின் கொடிய முடிவை உணர்ந்து ஒவ்வொருவரும் பொருளுள்ளதாக்கிக்கொள்வோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, கடின உழைப்பு, நேரிய உள்ளம், நன்மை செய்வதில் தளராமனம் கொண்டவர்களாக வாழ முற்படுவோம். பணம், புகழ் என்று அழியும் சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதெனும் நம்பிக்கையோடு உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.

news
ஞாயிறு மறையுரை
நவம்பர் 09, 2025, இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா - எசே 47:1-2,8-9,12; 1கொரி 3:9-11,16-17; யோவா 2:13-22 - ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ‘கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்என்பவை நம் முன்னோர் கூறிச்சென்ற மிக அழகான முதுமொழிகள். மனித வாழ்வில் ஆலயத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? ஆலயங்கள் பல்வேறுபட்ட தலைமுறைகளின் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள். ஆலயம் என்பது அன்பு, மன்னிப்பு, தியாகம், ஒற்றுமை, பிறரன்பு, விட்டுக்கொடுத்தல், பெருந்தன்மை, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளின் கூடாரம்.

ஆலயம் என்பதற்குஆன்மாக்கள் ஆண்டவனின் திருவடியில் இலயிக்கும் இடம்என்பது பொருள். ‘என்றால் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள், ஆன்மாக்கள். இலயம் என்றால் ஒருமைப்படுதல். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் மனம் ஒன்றி இலயிக்கும் இடமே ஆலயம். ஆலயத்திற்குகோவில்என்ற பெயரும் உண்டு. ‘கோஎன்பதற்குக் கடவுள் அல்லது அரசன் என்பது பொருள். ‘இல்என்றால் குடியிருக்குமிடம், இல்லம் என்று பொருள். எனவே, கோவில் எனப்படுவதுகடவுள் குடியிருக்குமிடம்என்பதாகும்.

நம் திரு அவையில் பெருங்கோவில்கள், தலைமைப் பேராலயம், ஆலயங்கள், திருத்தலங்கள், சிற்றாலயங்கள் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை யாவும் மக்களின் வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. ஆலயங்கள் இறையருளின் வாய்க்கால்களாக, மனமுடைந்த தருணங்களில் கண்ணீர் மல்க மன்றாடும்போது, இவை நம்பிக்கை தரும் அடைக்கலப் பாறையாக இருப்பதை நம்மால் உணரமுடியும்.

இன்று கோவில்களைப் பற்றி நாம் சிந்திக்கும் வேளையில், உலகில் இருக்கக்கூடிய ஆலயங்களுக்குள் எல்லாம் சிறந்த ஆலயமாக விளங்கக்கூடிய தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமுடியாது.

தூய இலாத்தரன் பெருங்கோவில் உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும், அனைத்துலகத் திரு அவைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் அமைந்த கோவிலாக விளங்குகிறது. கத்தோலிக்கத் திரு அவையின் பேராலயங் களிலெல்லாம் மிகப் பழமையான பேராலயமும் இதுதான். உரோமை நகரில் அமைந்துள்ள இக் கோவில், உலகமனைத்திற்கும்தாய்க் கோவிலாகவும், ‘தலைமைக் கோவிலாகவும்கருதப்படுகிறது. இந்தத் தூய இலாத்தரன் பெருங்கோவிலின் நேர்ந்தளிப்பு விழாவைத்தான் நாம் இன்று கொண்டாடுகிறோம்.

இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிளாசியோ இலாத்தரானோ என்ற ஆளுநருக்குச் சொந்தமானதாக இருந் தது. கி.பி. 65-இல் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற பிளாசியோ என்பவர் நீரோ மன்னனுக்கெதிராகச் செயல்பட்டதால் பிளாசியோவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான இலாத்தரன் பெருங்கோவில் இருக்கும் இடம் நீரோ மன்னனுக்குச் சொந்தமானது. அதன்பின், கி.பி.  313-ஆம் ஆண்டில் மன்னன் கான்ஸ்டாண்டைன் கிறித்தவ மக்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்க விரும்பி இவ்விடத்தில் அவர்களுக்கான ஆலயம் ஒன்றைக் கட்ட விரும்பினார்.

கி.பி. 318-ஆம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் அக்கோவிலை, ‘தூய்மைமிகு மீட்பராம் கிறிஸ்துவுக்குநேர்ந்தளித்தார். 9-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸ் இக்கோவிலைத்திருமுழுக்கு யோவான் ஆலயம்என்றும், 12-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை இரண்டாம் லூசியஸ்நற்செய்தியாளர் தூய யோவான் ஆலயம்என்ற பெயரையும் வழங்கினர். அதனால் இப்பேராலயத்திற்கு இயேசு மீட்பர் ஆலயம், திருமுழுக்கு யோவான் ஆலயம், நற்செய்தியாளர் யோவான் ஆலயம் என மூன்று பெயர்களுண்டு.

திருத்தந்தையின் ஆலயம்என்று அழைக்கப்படும் இவ்வாலயத்தில் 5 பொதுச்சங்கங்களும், 20 ஆயர் பேரவைகளும் நடைபெற்றிருக்கின்றன. பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும், ஆண்டவர் இராவுணவு உண்ட மேசையும் இங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம்பொன் ஆலயம்என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு பல்வேறு சிறப்புமிக்க தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நன்னாளில், இன்றைய வாசகங்கள் ஆலயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்கு உணர்த்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் கடவுளின் இல்லத்தினின்று, அவரது புனித மலையாம் சீயோனின்று புறப்படுகின்ற நீரோடை, வாழ்வு தரும் நீராக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார். ‘கோவிலிலிருந்து வரும் தண் ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்என்கிறார். அதாவது, நலமான, வளமான வாழ்வுக்குத் தேவையானவற்றை அடையாளம் காட்டும் தளமாக இருப்பவை ஆலயம். உண்மையில் ஆலயம் என்பது இறை உடனிருப்பின் அடையாளம்; இரக்கத்தின் இருக்கை.

ஆனால்... இன்று ஓங்கி உயர்ந்த ஆலயங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள், வனப்புமிக்க ஓவியங்கள், தங்கமும் வைரமும் கலந்த அலங்காரங்கள், கண்களைக் கவரும் ஆலய முகப்புத்தோற்றங்கள்... உண்மையில் கடவுளை அடையாளம் காட்டும் குறியீடாக இருக்கின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆலயங்கள் அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, அதிகாரத்தின் மையமாக அன்றும் இன்றும் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஆலயம் ஒன்றிணைக்கும் இடமாக, பாகுபாடுகளைக் களையும் இடமாக, வாழ்வு தரும் இடமாக, நம்பிக்கையை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், இத்தன்மையை ஆலயங்கள் இழந்தபொழுது இறைவாக்கினர்கள் மிகக் கடுமையாக இறைவாக்குரைத்தனர் (எரே 7:3-11). இயேசுவும் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்ற வேளையில், “என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் (யோவா 2:16) எனக் கடிந்துகொண்டார். ஆலயம் கள்வர்களின் குகையாக (மாற் 11:17; லூக் 19:46) ஏழைகளின் இரத்தம் குடித்த சூழலில், அதன் புனிதம் காக்கக் கடுமையாகச் சாடினார்.

இன்றைய நற்செய்தியில், யூத நம்பிக்கையின் மையமான எருசலேம் ஆலயம் அர்த்தமற்றுப்போக, கடவுளின் வலக்கரத்தால் புதிய ஆலயம் எழுவது பற்றிப் படிக்கின்றோம். ஆலயத்திற்கு புதிய பார்வையை இயேசு முன் வைக்கிறார். உயிர்ப்பெற்றெழப்போகும் இயேசுவே இறைவனும் மனிதரும் சந்திக்கும் புதிய ஆலயம். மனிதர் கையால் கட்டப்பட்ட ஆலயத்தில் அல்ல; மாறாக, கடவுளை உள்ளத்தில், உறைவிடத்தில் வழிபட அழைக்கிறார் இயேசு. “கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவில் உள்ளது (திவெ 21:3); “வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14). எனவே, மனுவுருவான இயேசுவே கோவில் எனப் புரிய முடியும் (யோவா 2:21). ஆகவேதான், ‘46 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள். அதை நான் மூன்று நாளில் கட்டி எழுப்புவேன் (2:19) என்று இயேசு கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டுச் சிந்தனைகளின் அடிப்படையில், சடங்குத்தனமான வழிபாட்டைத் தள்ளி வைத்துவிட்டு, கடவுள் வாழும் ஆலயம் மனிதர்தாம் எனும் மிக உயர்ந்த இறையியல் சிந்தனையை முன் வைக்கிறார் திருத்தூதர் பவுல். கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில்வாழும் கடவுளின் கோவில் நாமே (1 கொரி 3:16) என்கிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் நடுவில் கடவுள் கூடாரத்தில் உறைந்தார். இப்போது தூய ஆவி நம் உள்ளங்களில் குடிகொள்கிறார். இதனால் நாம் அவர் வாழும் கோவிலாகிறோம் (6:19; எபே 2:21). எபேசு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல், திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோரை அடித்தளமாகவும் கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறோம் (எபே 2:20) என்கிறார். இப்பகுதியில் திருத்தூதர் பவுல், இறைவன் கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் அல்ல; மாறாக, இறைமக்களின் இதயங்களில் வாழ்பவராக இருக்கிறார் என்கிறார். ‘ஊனுடம்பு ஆலயம்என்று திருமூலர் கூறியதில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு அன்றோ!

நிறைவாக, இன்றைய விழா நமக்கு உணர்த்தும் பாடம்: முதலில், நாம் ஒவ்வொருவரும் இறைத் தாங்கிகள். அதாவது மனிதராகிய நாம் கடவுளின் உடனிருப்பைத் தாங்கியுள்ள உயிருள்ள நடமாடும் ஆலயங்கள் என்பதை உணரவேண்டும். இரண்டாவதாக, நமக்குள் இறைவன் தங்கி வாழ்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும், நமது உடலென்னும் ஆலயத்தைப் புண்ணியங்களால் அலங்கரிக்கவும் வேண்டும். ‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்என்பது கண்ணதாசரின் பொருளுள்ள வரிகள். மூன்றாவதாக, பெருங்கோவில்களில் அலங்காரங்களைப் பார்த்துப்பழகிய நாம், மனிதரில் கடவுளைப் பார்க்கும் நிலைக்கு உயரவேண்டும். அறிவால் கடவுளை ஆராய்வதைவிட அன்பால் கடவுளை உணர்வோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

news
ஞாயிறு மறையுரை
நவம்பர் 02, 2025, இறந்த நம்பிக்கையாளர் அனைவர் விழா (மூன்றாம் ஆண்டு) சாஞா 3:1-9; உரோ 5:5-11; யோவா 6:37-40 - இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள்!

இறப்பு மனித வாழ்வின் தவிர்க்க இயலாத ஒரு சந்திப்பு. நமது வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பதும் அழுத்தம் கொடுப்பதும் இறப்புதான். இறப்பு என்பது கல்லறையோடு முடிந்துவிடும் மாயை அல்ல; மாறாக, உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களைக் கட்டியெழுப்ப நடத்தப்படும் போராட்டங்களின் நிறைவு. எனவேதான், இறப்பின் அர்த்தம் என்னவென்று சிந்திக்கையில், உண்மையிலேயே அது வாழ்வு பற்றிய கேள்வியாக அமைகிறது. ஆகவே, நமது இறப்பு அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது.

இறப்பை மனநிறைவோடும் மனமகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர், இவ்வுலக வாழ்வைக் கடவுள் எதிர்பார்க்கும் வகையில் வாழ்ந்துள்ளார் எனப் புரிந்துகொள்ளலாம். நமது வாழ்வு இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றது இன்றைய கல்லறைத் திருவிழா! இன்று நாம் இறப்பைச் சந்தித்த நமது அன்புக்குரியவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறோம். இந்த நாளைப் பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ், “கடந்த காலத்தையும் நம்மோடு வழிநடந்தவர்களையும் நமக்கு வாழ்வு தந்தவர்களையும் நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களையும் நினைவுகூரும் நம்பிக்கையின் நாள்என்கிறார் (மறையுரை, 02.12.2018).

நமது கத்தோலிக்க மரபின் சிறப்புமிக்க ஒரு பழக்கம் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பது. இந்த நாளில் ஏன் நாம் இறந்தவர்களை நினைவுகூர வேண்டும்? திருவிவிலியத்தில் இதற்கான குறிப்புகளும் முன்னுதாரணங்களும் உண்டா? திரு அவையில் இந்தப் பழக்கம் எப்போது வந்தது? இது போன்ற பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகின்றன. இதற்கான புரிதல்களை இன்று தேடுவது நமது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாக அமையும்.

இன்று நாம் கொண்டாடும்இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரின் விழாகத்தோலிக்கத் திரு அவையில் மட்டுமல்லாமல், பிற திரு அவைகளும் கூட இந்நாளில் இறந்தவர்களை நினைவுகூர்கின்றன. இந்த விழாவானது புனித ஒடிலோ என்பவரால் 10-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. அன்றைய நாளில் துறவு மடத்தில் உள்ள துறவிகள் சிறப்புச் செபங்களை, பாடல்களை இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுத்தனர். 15-ஆம் நூற்றாண்டில் மூன்று திருப்பலிகளை அருள்பணியாளர்கள் இந்த நாளில் கொண்டாடினர். திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் 1920-ஆம் ஆண்டு இந்த விழாவைத் திரு அவையின் அதிகாரப்பூர்வ விழாவாக மாற்றினார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும்கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்தே வழிப்போக்கர்களின் திரு அவை இறந்தவர்களின் நினைவை வணக்கத்தோடு கொண்டாடி வந்துள்ளது (திருச்சபை எண். 50) என்று இவ்வழக்கத்தின் தொன்மையைக் குறித்துக் குறிப்பிடுகிறது.

நமது மரபுகளும் இறைவார்த்தைகளும் இறந்தோரை நினைவுகூர்ந்து செபிக்கவே நம்மை அழைக்கின்றன. தொடக்க காலத் திரு அவையின் வாழ்க்கையையும் வரலாற்றையும் அறிய நமக்கு உதவியாக இருந்தவை கல்லறைச் சுரங்கங்களே (Catacombs). இறந்தோரின் கல்லறைக் குகைகளில் அவர்களுக்கான செபங்கள் குறியீடுகளாக, வார்த்தைகளாகப் பொறிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இறந்தோருக்கு அமைதி, நிலையான வாழ்வு, மீட்பு, கிறிஸ்துவுடன் ஒன்றிணைதல், வானதூதர்களோடு இணைதல் போன்ற வார்த்தைகள் கல்லறைகளில் செபங்களாகப் பொறிக்கப்பட்டிருந்தன. கி.பி. 120 - 200 உள்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரிகியாவில் உள்ள அயரா போலிசின் ஆயர் அபெர்சியூஸ் தான் இறப்பதற்கு முன்னதாகவே தனக்கான கல்வெட்டில், ‘அபெர்சியுசாகிய எனக்காகச் செபியுங்கள்என்று எழுதியுள்ளார்.

முதல் நூற்றாண்டிலிருந்தே மக்கள் கல்லறைகளைச் சந்தித்து இறந்தவர்களுக்காக அடிக்கடிச் செபித்துள்ளனர். ‘தொடக்கத் திரு அவையின் இரு தூண்கள்எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக இருந்தன. திருமறைத் தந்தையான தெர்த்தூலியன் கி.பி. 211-இல் தான் எழுதிய The Crownஎன்ற தொகுப்பில், ‘இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவு நாளில் அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்போம்என்று எழுதியுள்ளார். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த எருசலேம் நகரத்துப் புனித சிரில் (கி.பி. 315-386) தனது மறைபரப்புப் போதனையில்இறந்த நம்பிக்கையாளர்களை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலி அந்த ஆன்மாக்களுக்கு மிகுந்த பலன் தரும்என்று நம்புவதாக எழுதியுள்ளார். மேலும், புனித அகுஸ்தினாரின் தாய் புனித மோனிக்கா தன் மகனிடம், “ஒன்றே ஒன்றை மட்டும் உன்னிடம் கேட்கிறேன்: திருப்பலியில் ஆண்டவருடைய பீடத்தில் என்னை நினைத்துக்கொள்என்று வேண்டுகோள் வைத்தார். ஆகவே, இறந்தோருக்காக நாம் பலி ஒப்புக்கொடுத்து வேண்டுவது நம் திரு அவையில் தொன்றுதொட்டு உள்ள மரபு. எனவேதான் இன்றைய நாளில் மிகச் சிறப்பாக இறந்தோரை நினைவுகூர்ந்து பலி ஒப்புக்கொடுத்துச் செபிக்கின்றோம்.

இறந்த நம்பிக்கையாளர்களை அன்புடன் நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிக்க இறைவார்த்தையும் நம்மைத் தூண்டுகின்றது. சீராக்கின் ஞானநூல், “உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு; உயிர் நீத்தோருக்கும் அன்பு காட்ட மறவாதே (7:33) என்கிறது. “குழந்தாய் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்து... அவர்களுடைய அடக்கத்திற்குச் செல்லத் தவறாதே (38:16). இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர்களுக்காக வேண்டிக்கொள்வது புனிதமும் பயனுள்ள எண்ணமுமாய் இருந்துள்ளது (2மக் 12:45). மோசே, ஆரோனுக்காக இஸ்ரயேல் மக்கள் 30 நாள்கள் துக்கம் கடைப்பிடித்துக் கொண்டாடினர். புதிய ஏற்பாட்டில் இயேசு தம் நண்பன் இலாசருக்காக உள்ளம் குமுறிக் கலங்கி (யோவா 11:33) அழுதார் (11:35). இவ்வாறாக, இறந்த உறவுகளுக்காகத் துயரம் கொண்டாடுவதும் நினைவுகூர்வதும் திருவிவிலிய அழைப்பாகவே உள்ளது.

இன்றைய நாள் கொண்டாட்டம் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? இந்த நாள் ) நினைவு (செபித்தல்), ) நன்றி, ) நம்பிக்கை என்ற மூன்று எண்ணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

முதலாவதாக, இந்த நாள் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நினைவு நாள். ‘பழகிப் புரிந்த உயிர்கள் பல விலகிப் பிரிந்து போயின. நிலவு போல ஒளிர்ந்த முகங்கள் நினைவுகளாய் ஆயினஎன்ற நமது பாடல் வரிகள் இறந்தோரின் நினைவுகளின் உன்னதத்தைக் கோடிட்டுக்காட்டுகின்றன. மனித வாழ்வில் உறவுகளை மரணம்கூட உடைத்துவிட முடியாது. மரணம் உடலைப் பிரித்தெடுத்தாலும் நினைவுகளை மரணத்தால் பிரித்தெடுக்க இயலாது. மனிதன் இறந்தாலும் அல்லது உடல் மறைந்தாலும் உறவுகள், நினைவுகள் தொடர்கின்றன. சந்தித்த இழப்புகளை, தொலைத்த உறவுகளை, இறந்த மனிதர்களை நாம் நம் நினைவுகளில் சுமந்தே வாழ்கிறோம். நீங்கா நினைவில் இறந்தோர் வாழ்கின்றனர். ஜலாலுதின் ரூமி என்ற சூஃபி அறிஞர், “நினைவுகள் இருக்கும்வரை பிரிவுகள் சுடுவதில்லை. நான் மரித்த பிறகு என்னைக் கல்லறைக் குழிகளில் தேடாதீர்கள்... மனிதர்களின் மனக்குகைகளில் தேடுங் கள்என்கிறார். கல்லறையில் மனிதன் காணாமல் போனாலும் மனிதர்களது மனக்குகைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் நாம் இறந்தவர்களை நினைவுகூர்கிறோம்.

இரண்டாவதாக, இந்த நாள் ஒரு நன்றியின் விழா. “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம்  அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனித கையால் கட்டப்படாதது, நிலையானது (2கொரி 5:1) என்று பவுல் குறிப்பிடுவது போல, பூமியில் புதைக்கப்பட்ட உடல்கள் விண்ணகத் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்கு கொள்கின்றன என்பது நமது நம்பிக்கை. ஆகவே, விண்ணகத் தூயோரின் நினைவைப் போற்றுவதும், அவர்களைக் குறித்து கடவுளுக்கு நன்றி பாராட்டுவதும் அவர்களோடு நமக்குள்ள சகோதர அன்பைச் செயல்படுத்துவதாக அமைகிறது.

மூன்றாவதாக, இந்த நாள் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதாவது, இறந்த நமது சகோதர-சகோதரிகள் இளைப்பாறும் இடமான கல்லறைக்கு நாம் செல்லும்போது, இறந்து அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை நாம் புதுப்பித்துக்கொள்கிறோம். இறைத்தந்தையின் அன்பைக் காணும் இடத்தில், நமக்குமுன் வாழ்ந்து இறந்தவர்களை நாம் உறுதியாகச் சந்திப்போம் என்பதுதான் நமது நம்பிக்கை. ஆகவே, மணமகனைச் சந்திப்பதே நம் வாழ்வுப் பயணத்தின் இலக்கு என்றால், அவ்வாழ்வில் வழங்கப்பட்டுள்ள நேரத்தை அன்பில் வளர்வதற்குரிய நேரமாக மாற்றிக்கொள்வோம். மரணம் முடிவல்ல; எனவே, வாழ்வில் நாம் ஒருவர் மற்றவருக்காக இறப்பதற்குக் கற்றுக்கொள்வோம்இறைவன் மனம் மகிழ்ந்து பாராட்ட, மனிதர் உளமாரப் புகழ, நம் மனம் பெருமிதமடைய சிறப்புடன் வாழ்வோம். இறப்பிலும் புதுவாழ்வு பெறுவோம்.