திருப்பலி முன்னுரை
நமது
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது ஆன்மிகச் செல்வமாகிய இறைஞானமே என்பதைப் பற்றிச் சிந்திக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். செல்வங்களைக் கொண்ட வாழ்க்கைதான் உயர்வானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்று செல்வந்தர்களுக்கே சென்ற இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. ஆகவே, உலகச் செல்வங்களான பணம், பதவி, பொன், பொருள், பட்டம் அதிகம் உள்ளவர்களை உயர்ந்த மனிதர்களாக நினைக்கிறோம். இன்று சொத்துத் தகராறில் எத்தனை குடும்பங்கள் உறவுகளை இழந்து நிற்கின்றன? சொத்துக்காக உடன்பிறப்புகளையே உதாசீனப்படுத்தியவர்கள்தானே?
உலகச் செல்வங்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறோம். இன்னும் சேர்க்கவேண்டும் என்று பேராசைப்படுகின்றோம். இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தும் நிரந்தரமில்லாதவை. அவை நமக்கு நிம்மதியைத் தருவதில்லை. ஆகவே
விண்ணுலகச் செல்வங்களாகிய அன்பு, நீதி, உண்மை, நேர்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகளைத் தேடுவோம். உலகச் செல்வத்தைவிட இறைஞானம் சிறந்தது. மண்ணகச் செல்வங்களை இழந்து விண்ணகச் செல்வங்களைச் சேர்த்தவர்கள்தான் புனிதர்கள். அழிந்துபோகும் செல்வங்களை விடுத்து, அழியாத நிலைவாழ்வைப் பெற்றிட வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
உண்பதற்கும்
உறங்குவதற்கும் நேரமின்றி உழைக்கிறோம். விருந்தினர்களை, உறவினர்களை உபசரிக்க நேரமின்றி உழைக்கிறோம். அருகில் வாழும் மனிதர்களின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள நேரமின்றி உழைக்கிறோம். கடவுளைத்
தேடுவதற்கும், குடும்பமாய் செபிப்பதற்கும், குடும்பத்தோடு உறவாடுவதற்கும் நேரமின்றி உழைக்கிறோம். 24 மணி நேரமும் செல்வம் சேர்ப்பதில் கவனமாக இருக்கிறோம். ‘இவையெல்லாம் வீண்’ என்கிறார் சபை உரையாளர். ஆண்டவனின் அருளைத் தேடி, ஒளியின் பாதையில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
ஆன்மாவிற்குக்
கேடுவிளைவிக்கும் ஒழுக்கக்கேடு, பரத்தமை, தீயநாட்டம், தனிமனிதச் சிலைவழிபாடு, குறிபார்ப்பது, சகுனம் பார்ப்பது, பழிவாங்குதல், பொய் என்று தெரிந்தும் உண்மைபோல் பேசுவது, களவு, பேராசை, தவறு செய்வதற்குப் பயப்படாத உள்ளம், ஆணாதிக்கம், சந்தேகம், கெட்டநடத்தை போன்ற செயல்களிலிருந்து விடுபட்டு, புனிதத்தில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. நல்ல ஆயனே இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் ஆசிர்வதியும். இவர்கள் தங்கள் தலைமைப் பொறுப்பில் நல்ல
ஆயன்களாக இருந்து மக்களை இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வழிநடத்தவும், நிலையான செல்வமாகிய உம்மைப் பற்றிக்கொண்டு வாழவும் தேவையான அருள்வரங்கள் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று மொழிந்த
ஆண்டவரே!
உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அழிந்துபோகக்கூடிய செல்வத்தின்மீது பற்று வைக்காமல், இமைப்பொழுதும் எம்மைவிட்டு நீங்காத
உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம்மோடு வாழும் ஆண்டவரே!
எங்கள் பங்கில் உள்ள குடும்பங்களுக்காக வேண்டுகிறோம். அன்பு,
மன்னிப்பு, உண்மையான பாசம், விட்டுக்கொடுத்தல், சமத்துவம் போன்ற பண்புகளில் எங்கள் குடும்பங்கள் வளர்ந்திடவும், ஒருவர் மற்றவருக்குச் சாட்சிய வாழ்வு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே!
பாவம் என்று அறிந்தும் பயமின்றி வாழும் தீய செயல்களிலிருந்து விலகி புனித வாழ்வு வாழவும், இறைவன் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கைக்காக நன்றிகூறி, கடவுளின் திருவுளம் அறிந்து தூய்மையான வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.