news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (08-02-2026) எசா 58:7-10; 1கொரி 2:1-5; மத் 5:13-16

திருப்பலி முன்னுரை

உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ பொதுக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. உப்பும் ஒளியும் மற்றவருக்குப் பயன்தரும் பொருளாக இருக்கின்றன. உப்பு சுவை தருவது மட்டுமல்ல; மாறாக, பொருள்கள் கெடாமல் பாதுகாக்கும் சக்தியையும் கொண்டது. மற்றவர்கள் வாழ்வுபெற தன்னையே முழுமையாக இழக்கிறது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்கிறது பழமொழிஉப்பு உவர்ப்பற்றுப் போனால், அது வீணாகிவிடும். அதுபோலவே நமது ஆன்மிக வாழ்க்கையும் ஆழம் காணாவிட்டால் வாழ்க்கையும் உவர்ப்பற்றதாகிவிடும்நம்மைப் பார்த்து இயேசு, ‘நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்என்கிறார். ஒளி இருளை அகற்றும்; ஒளி வழியைக் காட்டும்; ஒளி இறைவனின் அடையாளம். ஒளியைப் போன்று நமது அன்புச் செயல்களால் இயேசுவைப் பிரதிபலிக்க முயற்சியெடுப்போம். உப்பைப் போன்றும் ஒளியைப்போன்றும் நமக்காக வாழாமல், பிறரின் நன்மைக்காக வாழ்வோம். நமது உடனிருப்பாலும் மென்மையான அணுகுமுறையாலும் மேன்மையான வார்த்தைகளாலும் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளியேற்றுவோம். நமது பெயருக்காகவும் புகழுக்காகவும் விளம்பரத்திற்காகவும் எந்தச் செயலையும் செய்யாமல், இறைவனின் அதிமிக மகிமைக்காகச் செய்வோம். இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் சுயநலம் களைந்து, உடன்வாழும் சகோதர-சகோதரிகளை உளமார நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்பிக்கையின் தீபங்களாய் ஒளிர்ந்திடவும், இறைவனைச் சார்ந்து சாரமுள்ள வாழ்வு வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.  

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் விரும்பும் நோன்பு என்பது உணவு உண்ணாமல் இருப்பது அல்ல; மாறாக, பசித்தோருக்கு உணவிடுவதும், ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிப்பதும், வறுமையில் இருப்போருக்கு உறைவிடம் கொடுப்பதும், தேவையில் இருப்போரைத் தேடிச் சென்று உதவுவதுமே உண்மையான நோன்பு. இவ்வாறு செய்யும்போது, ஆண்டவரின் மாட்சியை நாம் காண்போம் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்று உலகத்தைப் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும், அறிவியல், பொருளாதாரம் பற்றியும் அறிந்துள்ளோம். ஆனால், மெஞ்ஞானமாகிய கடவுளைப் பற்றிய அறிவில் பின்தங்கியுள்ளோம். தூய ஆவியின் வல்லமையையும் இறைஞானத்தையும் பெற்று, கிறிஸ்து இயேசுவை அறிவதிலும் அன்புசெய்வதிலும் முனைப்போடு செயல்பட்டு, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘உலகின் ஒளி நானேஎன்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்து, நற்செய்தியை அறிவிக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உலகத் தலைவர்களும், நாட்டுத் தலைவர்களும் அன்பையும் அமைதியையும் இவ்வுலகில் கட்டியெழுப்பவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிகாக்கவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழியும் ஒளியுமான ஆண்டவரே! இந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவ-மாணவிகளை ஆசிர்வதியும். ஞானத்தோடு தேர்வு எழுதவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றிபெற்று வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளான ஆண்டவரே! எம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் உண்மையான அன்பும் உறவும் மலர்ந்திடவும், நற்சுகம் கிடைத்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு (01-02-2026) செப் 2:3;3:12-13; 1கொரி 1:26-31; மத் 5:1-12

திருப்பலி முன்னுரை 

ஆண்டின் பொதுக்காலத்தின் 4-ஆம் ஞாயிறான இன்று இயேசு தமது மலைப்பொழிவின் வழியாக  நம்மை  பேறுபெற்ற மக்களாக வாழ அழைக்கிறார். மலைப்பொழிவானது இயேசுவின் போதனைகளின் மையக்கருத்தாகவும், கிறித்தவ வாழ்வின் அடிநாதமாகவும் அமைகிறது.

பேறுபெற்றோர் யார்?’ என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்கும் போது, இயேசு தரும் பதிலுக்கும், இந்த உலகம் தரும் பதிலுக்கும் இடையே அதிகமான வேறுபாடுகள் உள்ளன. இன்றைய உலகமானது பணம், பதவி, பட்டம், புகழ், செல்வம் அடைந்தவர்களைத்தான்பேறுபெற்றோர்எனக் கருதுகிறது. இறைமகன் இயேசு ஏழைகள், துயருறுவோர், கனிவுடையோர், இரக்கமுடையோர், அமைதியை ஏற்படுத்துவோர், நீதியை நிலைநாட்டுவோர், மற்றவர்களின் துயரத்தில் ஆறுதலாக இருப்போர், எளிய மனம் படைத்தோர், துன்பங்களின் மத்தியிலும் இறைவனோடு இருப்போரேபேறுபெற்றோர்என்கிறார். மலைப்பொழிவானது தூய வாழ்வு வாழ வழிகாட்டியாகவும், ஆன்மிக வாழ்வின் மையமாகவும் திகழ்கின்றது. நமது வாழ்க்கையில் அன்றாடம் நாம் கூறும் வார்த்தைகள் பிறர் வாழ்வில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுப்பதாக அமைந்திட செபிப்போம். மனிதநேயத்தோடு வாழ்ந்து இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களிலும் இயேசுவைக் காணவும், மகிழ்ச்சியின் நற்செய்தியாக வாழவும், வாழ்க்கையால் இயேசுவின் விழுமியங்களை விதைத்து ஆண்டவருக்குள் அகமகிழ்ந்து பேறுபெற்ற  மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம் நாம் ஆண்டவரைத் தேடவும், நேர்மையை நாடவும், மனத்தாழ்மையை ஆடையாக அணிந்துகொள்ளவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், உண்மையின் வழியில் பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமதிப்பீடுகளின் வழியில் வாழ்ந்து, இறையொளியில் சங்கமிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நமது அறிவு, ஆற்றல், பட்டம், பதவி, படிப்பு, வேலை, செல்வங்கள், குடும்பம்... இந்த வாழ்க்கை அனைத்தும் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்த கொடை. இவற்றில்என்னுடையதுஎன்று பெருமைப் பாராட்ட ஒன்றுமில்லை. ஆகவே, இறைவனைக் கண்டுகொள்ளத் தேவையான ஞானத்தை முதலில் தேடவும், ஆண்டவரில் பெருமைகொள்ளவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை அனைத்துத் தீங்கிலிருந்தும் விடுவித்துக் காப்பேன்என்று மொழிந்த ஆண்டவரே! பணிக்குருத்துவத்தையும், பொதுக் குருத்துவத்தையும் பெற்ற திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் இறைத்தூதுப் பணியாளராக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘நீங்களே என் சாட்சிகள்என்று மொழிந்த ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, அன்பின் தூதுவர்களாக இவ்வுலகில் வலம்வரத் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டில் மக்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழவும், மக்களை சாதி, மதம், இனம் என்று பிரிக்கும் சக்திகள் அழிந்திடவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நீ போகும்போதும் வரும்போதும் காப்பேன்என்று மொழிந்த ஆண்டவரே! நீர் எம்முடன் பயணிக்கிறீர் என்பதை நாங்கள் உணர்ந்திடவும், ஏழை, எளிய மக்களில் உம்மைக் கண்டு பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு (25-01-2026) எசா 9:1-4; 1கொரி 1:10-13,17; மத் 4:12-23

திருப்பலி முன்னுரை

மனம் மாற்றம் பெற்று, இயேசுவின் சீடர்களாக வாழ பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. அழைப்பு - இது உன்னதக் கொடை; கடவுளின் கருணையால் கொடுக்கப்படும் விலைமதிக்க முடியாத பரிசு! இன்றைய நற்செய்தியில் இயேசு தமது பணிக்காகச் சீடர்களைஎன் பின்னே வாருங்கள்என்று அழைக்கிறார். இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடன், உலகச் செல்வங்களை உதறித் தள்ளிவிட்டு உன்னத வாழ்வுக்கு உயிர் கொடுக்க தயக்கம் சிறிதுமின்றிஆம்என்று கூறி பெற்றோர், உடன்பிறப்புகள், உறவுகள், குடும்பம், தொழில்  என அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நானிலம் முழுவதும் சென்று வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அறிவித்து, இயேசுவின் பெயரால் வல்லமையான செயல்களைச் செய்து, தங்களது இன்னுயிரையும் கொடுத்து இயேசுவின் திரு நாமத்தின் மகத்துவத்தை அனைத்து மக்களும் அறியச் செய்தனர்இத்தகைய சீடத்துவ வாழ்வுக்கு இன்று இயேசு நம்மையும் அழைக்கிறார்.

இந்த உலக வாழ்க்கையின்மீது நாம் கொண்டுள்ள அனைத்துப் பற்றுகளையும் துறந்து, இயேசுவே எனக்கு ஆதாரம் என வாழத் தொடங்குவோம். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ்ந்து, இறையாட்சியின் மதிப்பீடுகளை இம்மண்ணில் விதைப்போம்இயேசு என்ற உன்னத உறவை நமதாக்கி, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இயேசுவின் மதிப்பீடுகளில் நிலைத்து, பல மடங்குப் பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஒளியின் பாதையில் நடக்கும் மக்களுக்கு இறைவன் மகிழ்ச்சியைத் தருவார், துன்பங்களிலிருந்து விடுதலையைக் கொடுப்பார், அழுகையை அக்களிப்பாக மாற்றி பேரானந்தத்தைச் சுவைக்கச் செய்வார் என்று கூறி, இறைவன் என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு அமைதியோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்களாகிய நாம் பிரிவுகளைக் களைந்து, பிளவு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, ஒரே எண்ணமும் ஒரே நோக்கமும் கொண்டு நற்செய்தியை அறிவிக்கவும், நம்மிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களும் இயேசுவின் அன்பைச் சுவைக்க உழைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘என் பின்னே வாருங்கள்என்று சீடர்களை அழைத்த ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்து கொண்ட எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் அனைத்துப் பற்றுகளிலிருந்தும் விலகி உம்மீது பற்றுக் கொண்டு வாழவும், அதன் வழியில் எம்மை வழிநடத்தவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டில் நிலவுகின்ற பிரிவுகள், பிளவுகள், வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து, மக்கள் பாதுகாப்போடு வாழவும், நடைபெறவிருக்கும்  தேர்தலில் மக்களைக் காக்கும் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களைக் கைவிட மாட்டேன்என்று கூறிய ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் அன்பு, அமைதி, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகள் வளர்ந்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவராக வாழ்ந்திடவும் தேவையான தூய மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறிய ஆண்டவரே! அழைப்பின் மகத்துவத்தையும் உன்னதத்தையும் அறிந்த நாங்கள், எமது குழந்தைகளை இறைப்பணிக்கு மனமுவந்து அனுப்பவும், இறையழைத்தலை எமது குழந்தைகளிடம் ஊக்குவிக்கவும் தேவையான நல்ல மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 18, 2026, பொதுக்காலத்தின் 2-ஆம் வாரம் எசா 49:3,5-6; 1கொரி 1:1-3; யோவா 1:29-34

திருப்பலி முன்னுரை

இயேசுவை அனுபவிக்கவும் அறிவிக்கவும் ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றி அறிவிக்க அனுப்பப்பட்டவர்; தான் கருவறையில் இருக்கும்போதே கடவுளின் மகனைக் கண்டு மகிழ்ந்தவர்; தான் அனுபவித்த இயேசுவை இந்த அகிலமும் அனுபவிக்கச் செய்தவர்.

இந்த உலகின் மீட்பர், நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த  ஆட்டுக்குட்டி, இறைமகன், தூய ஆவி நிரம்பப் பெற்றவர்என்று திருமுழுக்கு யோவான்  இயேசுவைப் பற்றி பறைசாற்றுகின்றார். திருமுழுக்கு பெற்ற நாமும் இயேசுவைப் பற்றி அறிவிக்க அழைப்புப் பெற்றுள்ளோம். அருளடையாளங்கள், திருப்பலி, நற்கருணை, இறைவார்த்தை இவற்றின் வழியாக அன்றாடம் இயேசுவை அனுபவிக்கிறோம். நாம் அனுபவித்த இயேசுவை நமது வாழ்க்கையால் இவ்வுலகிற்கு அறிவிப்போம். இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைத் தேடிக் கண்டடைய ஒவ்வொரு நாளும் முயற்சியெடுப்போம். நாம் வாழும் சமுதாயத்தில் அனைவரிலும் அனைத்திலும் இயேசுவைக் காண்போம். வாழ்வும் வல்லமையும் ஆற்றலும் மீட்பும்  கொடுக்கவல்ல இயேசுவின் திருப்பெயர் வெற்றிபெற அன்றாடம் உழைப்போம். திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவை அறிவிக்கும் உயிருள்ள சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் தம்முடைய பணிக்காகக் கருப்பையிலே நம் அனைவரையும் தேர்ந்துகொண்டார். அவரது பிள்ளைகள் என்ற உரிமையை நமக்கு வழங்கினார். அவரது ஊழியர்களாகிய நாம்  இறைவனை விட்டு விலகாதிருக்கவும், நம்முடைய துன்ப வேளைகளில் இறைவன் உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழவும், கடவுளின் பார்வையில் மதிப்புப் பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளோம், இயேசுவின் சாயலை நாம் பெற்றுள்ளோம்.    இயேசுவின் பெயரை நினைத்தவர்கள், அறிக்கையிட்டவர்கள் அனைவரும் அமைதியைப் பெற்றுக்கொன்டார்கள்எல்லா நேரத்திலும் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அறிவித்து, அவரது அருளையும் அமைதியையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாக விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைக்கு ஆசியாக நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்கள் உமது பணியை இக்காலச் சூழலுக்கேற்ப ஞானத்தோடும் ஆற்றலோடும் செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கண்மணி போல் எம்மைக் காக்கும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அன்றாடம் நீர் எமக்குச் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறும் நல்ல மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீ என் ஊழியன்என்று மொழிந்த ஆண்டவரே, உமது ஊழியர்களாகிய நாங்கள் இறைவார்த்தையை அன்றாடம் படித்து அதன்படி வாழவும், எங்களது வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே, எம் குடும்பத்திற்கு ஆசியாக நீர் கொடுத்த குழந்தைகளைத் திரு அவை காட்டுகின்ற நெறிகளில் நாங்கள் வளர்க்கவும்கிறித்தவ நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்து வழிகாட்டவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 11, 2026, பொதுக்காலத்தின் முதல் வாரம் (ஆண்டவருடைய திருமுழுக்கு) - எசா 42:1-4,6-7; திப 10:34-38; மத் 3:13-17

திருப்பலி முன்னுரை

இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று, திருமுழுக்கின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறிந்துகொள்ள அன்னையாம் திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசுவின் திருமுழுக்கு மூவொரு இறைவனின் பிரசன்னத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. “என் அன்பார்ந்த மைந்தர் இவரேஎன்ற தந்தையாகிய இறைவனின் வார்த்தையும், புறா வடிவில் தூய ஆவியின் வருகையும் இயேசுவின் இறைச்சாயலை நமக்கு உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் திருமுழுக்கு அவரது பணிவாழ்வுக்குத் தொடக்கமாக அமைந்தது. திருமுழுக்குப் பெற்றபின் இயேசு அளப்பரிய பணிகளைச் செய்து, உயிரையும் கொடுத்து இந்த மனுக்குலத்தை மீட்டார். திருமுழுக்கு நம் வாழ்வின் அடித்தளம்; நாம் தூய ஆவியில் வாழ்வதற்கான நுழைவாயில். இதுவே நம்மை இறைவனின் பிள்ளையாக மாற்றுகிறது; திரு அவையில் நம்மை இணைத்து, அதன் பணிப்பொறுப்பை நமக்குத் தருகிறது. திருமுழுக்கு என்னும் அருளடையாளம் இறைவார்த்தைக்குச் சான்றுபகர நமக்கு அழைப்புவிடுக்கிறது. எனவே, திருமுழுக்கின் வழியாக இறைச்சாயலையும் இயேசுவின் உடனிருப்பையும் தூய ஆவியின் ஆற்றலையும் பெற்றுக்கொண்ட நாம், இயேசுவுக்குச் சான்றுபகரவும், நாம் பெற்றுள்ள திருமுழுக்கின் மகத்துவத்தை அறிந்து, கொடுத்த வாக்குறுதியைக் கடைப்பிடித்து வாழவும்  நாம் கிறிஸ்துவை நமது வாழ்க்கையால் அறிவிக்கவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இறைவனின் பணியை ஆற்றலுடன் செய்ய நாம் தொடங்கும்போது அவர் நம் கைகளைப் பற்றிப் பிடித்து நம்மைப் பாதுகாப்பார், நாம் செல்லும் இடமெல்லாம் ஒளியாக இருந்து வழிநடத்துவார், பல வல்ல செயல்கள் நம் வழியாக நிகழ்த்துவார். எனவே, இறைவார்த்தை காட்டுகின்ற நெறிகளில் நடந்து, கடவுளின் கண்களுக்குப் பேறுபெற்ற மக்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

திருமுழுக்கின் வழியாக நாம் தூய ஆவியின் வல்லமையைப் பெறுகின்றோம். தூய ஆவியார் நமக்கு நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலைத் தருகின்றார். இறையாட்சிப் பணியைச் செய்வதற்குப் புதிய உத்வேகத்தைத் தருகின்றார். திருமுழுக்குப் பெற்றுள்ள நாமும் இயேசுவைப் போன்று  இச்சமூகத்தில் நல்லவற்றை மட்டும் விதைத்து, பலன் கொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

மன்றாட்டுகள்

1. ‘நீரே என் அன்பார்ந்த மைந்தர்என்று கூறிய ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கவும், காலத்திற்கேற்ப விழிப்புடன் பணி செய்யத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘என் அருள் உனக்குப் போதும்என்று கூறிய ஆண்டவரே! திருமுக்குப் பெற்ற நாங்கள்  இயேசுவை அறிவதில், அன்பு செய்வதில் கருத்துடன் செயல்படவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி நாளும் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீ எனக்கே சொந்தம்என்று கூறிய ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும், பங்கிலுமுள்ள அனைத்துக் குடும்பங்களும் தங்களுடைய வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச்  சான்றுபகரவும், ஆசிபெற்ற மக்கள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆண்டவரே! எம் பங்கிலுள்ள குழந்தைகள் அனைவரும் சிறுவயதிலேயே இயேசுவைப் பற்றி அறிவதிலும், இறைவார்த்தையைப் படிப்பதில் சிறந்திடவும், திருவழிபாட்டு நிகழ்வுகளின் மகத்துவத்தை அறிந்து ஈடுபாட்டுடன் பங்கேற்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 04, 2026, ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா - எசா 60:1-6; எபே 3:2-3, 5-6; மத் 2:1-12

திருப்பலி முன்னுரை

ஆண்டவராகிய இயேசுவைக் கண்டுகொள்ளவும், அவரது உடனிருப்பை உணர்ந்து வாழவும் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருக்காட்சி என்றால், ‘வெளிப்படுத்துதல்என்று பொருள். இயேசு ஒரு தனிமனிதகுலத்திற்கோ அல்லது நாட்டிற்கோ சொந்தமானவர் அல்லர்; மாறாக, உலகிற்கே சொந்தமானவர் என்ற உயர்ந்த, உன்னதக் கருத்தை உணர்த்துவதுதான் இந்தத் திருக்காட்சிப் பெருவிழா!

இயேசுவின் பிறப்பானது இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏரோது மற்றும் மறைநூல் வல்லுநர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும், எளிமையின் வடிவான இடையர்களும், அறிவாற்றல் மிகுந்திருப்பினும் பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்த ஞானிகளும் இயேசுவைக் கண்டு மகிழும் பேறுபெற்றனர். அம்மகிழ்ச்சியினை விண்மீன் காட்டும் பாதையில் சென்று அறிவித்தனர்.

இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற தீராத வேட்கையால் விண்மீனைத் தொடர்ந்து சென்ற ஞானிகளைப் போன்று நாமும் அன்றாடம் இயேசுவை நற்செயல்கள் வழியாகக் கண்டுகொள்ள முற்படுவோம். நம்முடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அன்றாடம் திருக்காட்சிப்படுத்துவோம். கடவுள் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை உலகுக்கு உரக்க அறிவிப்போம் என்ற உறுதித்தன்மையோடு வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஒளியாக இருந்து நம்மை அன்றாடம் வழிநடத்தும் ஆண்டவருடைய மாட்சி நம்மேல் உதித்துள்ளது. அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், நிறைகுறையோடு ஏற்றுக்கொள்ளுதல், சமத்துவம் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து ஒளியாம் இறைவனை இவ்வையகத்தில் ஒளிர்விக்கவும், ஒளியின் மக்களாக வாழவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இறைவாக்கினரும் திருத்தூதரும் தூய ஆவியின் துணையால் இயேசுவை அறிந்து அன்பு செய்து இம்மண்ணகத்தில்  நற்செய்தி அறிவித்ததுபோல், நாமும் தூய ஆவியின் துணையோடு நற்செய்தி அறிவிக்கவும், பிளவுகளைக் களைந்து கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாய் சமத்துவத்தோடு வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘எழு! ஒளி வீசுஎன்று கூறிய ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் ஒளியின் பாதையில் நடந்து அன்றாடம் தங்களுக்கு வருகின்ற இன்னல்கள், இடையூறுகள், சோர்வுகள் அனைத்திலும் அழைத்தவர் உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமக்காக மனுவுரு எடுத்த ஆண்டவரே! திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்களுடைய சொற்களாலும் சிந்தனையாலும் நல்ல செயல்களாலும் இயேசுவைத் திருக்காட்சிப்படுத்த வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று கூறிய ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தூய உள்ளமும் எளிமையான வாழ்வும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த இதயமும் கொண்டு இந்த உலகில் நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘கலங்காதே, நான் உன்னோடுஎன்று கூறிய ஆண்டவரே! ஞானிகள்  உம்மைக் கண்டவுடன் தன்னிலையிலிருந்து இறங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது போன்று நாங்களும்நான், ‘எனதுஎன்பதிலிருந்து இறங்கி, தூய உள்ளத்துடன் உம்மை வணங்கி ஆராதிக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.