திருப்பலி முன்னுரை
உயிர்த்த
இயேசு கொண்டு வந்த அமைதியை அனுபவிக்க இன்றைய உயிர்ப்புப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது மாபெரும் மகிழ்ச்சியின் விழா! ‘அல்லேலூயா... அல்லேலூயா... இயேசு உயிர்த்துவிட்டார், சாவை வென்றுவிட்டார்!’ என்று முழங்கி ஆர்ப்பரிக்கும் வெற்றியின் நாளிது. இயேசு தமது உயிர்ப்பின் வழியாக அமைதியையும் வல்லமையையும் நமக்குக்
கொடுத்துள்ளார். உயிர்த்த இயேசு கல்லறையில் இல்லை; மாறாக, நம்மோடு வாழ்கின்றார். தோல்வியிலிருந்து வெற்றிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கும் இருளிலிருந்து ஒளிக்கும், பாவத்திலிருந்து மீட்பிற்கும், மரணத்திலிருந்து உயிர்ப்புக்கும் நம்மை அழைத்துச் செல்ல ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ என்று
முழங்கி ஆர்ப்பரிப்போம். ஆண்டவராகிய இயேசு மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நமக்கு விடுதலையைக் கொடுக்க, நோய்களுக்கு மருந்திட, வழிநடத்த, அமைதியைக் கொடுக்க, சுமைகளைச் சுகமாக்க, எந்தத் துன்பமும் நம்மை அணுகாது காக்க இயேசு உயிர்த்துவிட்டார். நம்முடைய வாழ்க்கையில் அச்சம், பயம், கலக்கம், வேதனை ஆகியவற்றைக் கடந்து வெற்றி வீரர்களாய், நமது வாழ்க்கையால் இயேசுவை அறிவித்து, உயிரோட்டமுள்ள கிறித்தவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
உயிர்த்த
இயேசுவின் வல்லமையைப் பெற்றுள்ள நாம் செல்லும்
இடமெங்கும் நன்மையை மட்டுமே செய்து கொண்டு செல்லவும், இறைவனின் சாயலை
அனைத்திலும், அனைவரிலும் காணவும், கடவுளின் சாட்சிகளாய் வாழ்ந்து இம்மண்ணில் இறைமதிப்பீடுகளை விதைத்து, இரத்தம் சிந்தி திருமறையைக் காத்த மறைச்சாட்சியர்களைப் போன்று வாழ்க்கை வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
உலகச்
செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விண்ணகச் செல்வமாகிய அன்பு, நீதி, இரக்கம், உண்மை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளை இம்மண்ணகத்தில் விதைத்து, இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து, அவரின் மாட்சியில் பங்கு கொள்ள அழைக்கும் இரண்டாம்
வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. வல்லமையான
ஆண்டவரே! எமது திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் நற்செய்தியைத் துணிவுடனும் உற்சாகத்துடனும் அறிவித்து உமக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வெற்றி
வீரராக உயிர்த்த ஆண்டவரே! நாங்கள் அனைவரும் அன்பையும் அமைதியையும் அனைவருக்கும் கொடுத்து வாழவும்,
இறையாட்சியை இம்மண்ணில் கட்டியெழுப்பத் தேவையான ஆற்றல் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. உயிர்த்த
ஆண்டவரே! எமது திரு அவையிலும் நாட்டிலும் பங்கிலும் உலகத்திலும் அமைதி நிலவிடவும், போர், பகைமை அனைத்தும் ஒழிந்திடவும், மக்கள் அனைவரும் நீர் கொண்டு வந்த அமைதியை அனு பவிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஒளியாக
உயிர்த்த ஆண்டவரே! எம் வாழ்வில் இருளின் செயல்களைக் களைந்து, ஒளியின் மக்களாக வாழவும், அமைதியை மனிதர்களில் தேடாமல் ஆண்டவராகிய உம்மில் தேட தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.