news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (06-04-2025) எசா 43:16-21; பிலி 3:8-14; யோவா 8:1-11

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் மன்னித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவின்மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகவே பல வினாக்களைத் தொடுக்கிறார்கள். “விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே கொடுத்தத் திருச்சட்டம்; நீர் என்ன சொல்கிறீர்?” என்று கையில் கற்களோடு நிற்கிறார்கள். பல நேரங்களில் மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களைப் போன்று மற்றவர்கள்மீது குற்றம் சுமத்தவேண்டும், அவர்களைச் சிக்கவைக்க வேண்டும் என்பதற்காகப் பல வினாக்களைத் தொடுத்துக்கொண்டே இருக்கிறோம். மற்றவர்களைத் தீர்ப்பிடுவதற்குப் பரிசேயரைப் போன்று கையில் கற்களோடும் வாயில் சொற்களோடும் காத்துக்கொண்டு இருக்கிறோம். இயேசு ஒருநாளும் எவரையும் தீர்ப்பிட்டதில்லை. நாமும் வன்மையான சொற்களை விடுத்து, மென்மையான சொற்களைப் பயன்படுத்துவோம். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு, ‘ஏன் பாவம் செய்தாய்?’ என்று கேட்கவில்லை; மாறாக, ‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, இனி பாவம் செய்யாதீர்என்று கூறுகின்றார். இன்று நம்மைப் பார்த்தும்இனி பாவம் செய்யாதீர்கள்என்று இயேசு கூறுகிறார். கடவுள் நம்மை நிபந்தனையில்லாமல் மன்னிப்பது போல, நாமும் பிறரை மன்னித்து, நல்லுறவுடன் வாழவும் வரம் கேட்டு இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், பிரச்சினைகள் போன்றவற்றைச் சந்திக்கும்போது வற்றாத வாழ்வு தரும் நீரோடையை நோக்கி ஆண்டவர் நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், ‘கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்என்றும், ‘கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்என்றும் கூறுகின்றார். உலகச் செல்வங்களில் நாட்டம் கொள்ளாமல், உன்னதச் செல்வமாகிய இயேசுவைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பின் இறைவா! நீர் தேர்ந்துகொண்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும், இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைத் தொய்வின்றி எடுத்துரைக்கத் தேவையான அருள்வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் அனைவரும் இரக்கமுள்ளவர்களாக, அன்புள்ளவர்களாக, மன்னிப்பவர்களாக, கனிவுமிக்கவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றேம்.

3) பாசமுள்ள ஆண்டவரே! நாங்கள் புறத் தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, எம் அகத்திற்கும் கொடுத்து வாழவும், தூயவராகிய உம்மை தூய்மையான மனத்துடன் உட்கொள்ளவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) அளவின்றி எம்மை மன்னிக்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும், இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, எமது சொற்களால், வாழ்க்கையால் இயேசுவை அறிவிக்கவும், ஒவ்வொரு நாளும் இறை வார்த்தையைப் படித்து பலன் கொடுத்து வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (3-ஆம் ஆண்டு) (30-03-2025) யோசு 5:9,10-12: 2கொரி 5:17-21; லூக் 15:1-3,11-32

திருப்பலி முன்னுரை

இறைவனின் எல்லையில்லாத பேரன்பைப் பற்றித் தியானிக்க தவக்காலத்தின் நான்காம் வாரம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்காணாமல்போன மகன்உவமை  கொடுக்கப்பட்டுள்ளது. இளைய மகன் தந்தையின் அன்பை உணராமல், சொத்தைப் பிரித்து  எடுத்துக்கொண்டு தொலை நாட்டிற்கு நெடும்பயணம் மேற்கொண்டான். அனைத்தையும் செலவழித்து உணவுக்கே வழியில்லாமல் அனாதையாகத் தனித்துவிடப்பட்டபோது, தந்தையின் பேரன்பையும் பாதுகாப்பையும் நினைத்து மனம் திருந்தி தந்தையிடம் வருகின்றான். தன்னைப் பிரிந்து சென்ற மகனைக் கண்டவுடன், தந்தை மகனை ஓடி வந்து அணைத்துக்கொள்கிறார், உடலுக்கும் மனத்திற்கும் விருந்து படைக்கின்றார். இந்தத் தந்தையைப் போலவே இறைவன் தம்முடைய அன்பை நமக்குக் கொடுக்க இருகரம் விரித்துக் காத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால், நாமோ, நமது எண்ணத்தால், சொற்களால், செயல்களால், தீய நடத்தையால் ஆண்டவரின் அன்பைத் தொலைத்து வாழ்ந்து வருகிறோம். அதனால் பல துன்பங்களையும் அனுபவிக்கிறோம். இத்தவக்காலத்தில்ஒப்புரவுஎன்ற அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மை செய்து ஆண்டவரின் அன்புக்குள் அடைக்கலமாவோம். இளைய மகனின் தந்தையைப் போன்று நமது வாழ்க்கையில் மன்னிப்பைக் கொடுப்போம். மன்னிப்பே உறவுகளை ஒட்ட வைக்கும், மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும், தீராத நோய்களினின்று முழுமையான விடுதலையைத் தரும். எனவே, நாம் நமது பாவத்திலிருந்து மனம் மாற்றம் பெற்று, நற்செயல்களால் நமது வாழ்க்கைக்கு உயிர் கொடுப்போம்இப்பொழுதும் - எப்பொழுதும் என்ற இரு பொழுதுகளும் நம்மை விட்டு நீங்காது காத்துவரும் இறைப் பேரன்பில் நிலைக்க வரம் வேண்டி இணைவோம் இத் திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நாம் கடவுளுடன் இணைந்திருக்கும்போது எந்தக் குறையும் நமக்கு இருக்காது. ஆண்டவர்  இஸ்ரயேல் மக்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்தினார். இறையுறவில் நிலைத்திருக்கும்போது நமது வாழ்க்கையிலும் பல நன்மைகளை அனுபவிப்போம்  என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது ஆன்மாவைத் தொலைத்துவிடாமல்உன்னதமான உயிரை நமக்காகக் கொடுத்து நிலைவாழ்வைப் பெற்றுத்தந்த இயேசுவோடு இணைந்து வாழ முயற்சி எடுக்கவும், அவரில் அவரோடு அவருக்காக வாழ்ந்து நிறைபலனைக் கொடுத்துத் தூய மக்களாய் வாழவும் அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த எம் திரு அவைத் தலைவர்கள் அப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உடல், ஆன்மிக நலனைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மீது பேரன்பு கொண்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் நற்செயல்களால் உமது அன்பில் நிலைத்து வாழவும், பகை, வெறுப்பு, மன்னிக்காத மனநிலை இவற்றிலிருந்து விடுபட்டு, உம் சாயலை மக்கள் அனைவரிலும் கண்டு மகிழ்வோடு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எல்லையில்லாத அன்பால் எம்மைக் காக்கும் ஆண்டவரே! இன்றைய நற்செய்தியில் கூறப்பட்ட இளைய மகனைப் போன்று மனம் திருந்தி உம்மிடம் வரவும், எம்மோடு வாழும் சகோதர, சகோதரிகளோடு நல்லுறவுடன் வாழவும்  தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! இத்தவக்காலத்தில் உணவில் மட்டும் நோன்பு இருக்காமல், எங்களது வார்த்தைகளில், பார்வையில், மற்றவர்களைப் பற்றிக் குறைபேசுவதில் போன்ற தவறான வாழ்க்கையிலிருந்து விலகி, உம்மை நெருங்கிவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 3:1-8,13-15; 1கொரி 10:1-6,10-12; லூக் 13:1-9 (மார்ச் 23, 2025)

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் மூன்றாம் வாரம்மனமாற்றம் பெற்று கனி கொடுத்து வாழநமக்கு அழைப்பு விடுக்கிறது. உலக ஆசைகளுக்கும் பணத்திற்கும் தேவையற்ற பெருமைகளுக்கும் தகாத உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல், பிறர் குற்றங்களைப் பெரிதுபடுத்தி அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி  வாழும் நமக்கு மாற்றம் தேவை. அழிவை நோக்கிச் செல்லும் வாழ்வை அலசிப் பார்த்து, பொய்மையிலிருந்து மெய்மைக்கும் அழிவிலிருந்து வாழ்வுக்கும் எதிர்மறை எண்ணத்திலிருந்து நேர்மறை எண்ணத்திற்கும் கடந்து செல்வோம். ‘மனம் மாறாவிட்டால் அழிந்துவிடுவீர்கள்என்கிறது நற்செய்தி வாசகம். மற்றவர்களை மாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டாம். நமது வாழ்வை மாற்றி புதுவாழ்வு வாழ பெருமுயற்சி எடுப்போம். அன்பு, கருணை, இரக்கம், பொறுமை, மகிழ்ச்சி, மன்னித்தல் என்ற ஏராளமான கனிகளை ஆண்டவர் நமக்குக் கொடுத்து, அன்றாடம் நம்மை வாழ்வித்துக்கொண்டே இருக்கிறார். அத்தி மரத்தைப் போன்று இறைவன் பல வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அத்திமரத்தில் இலைகள் இருந்தன, கனிகள் இல்லை. நம்மிடம் வாழ்க்கை இருக்கிறது, ஆனால், கனிகள் இல்லைஎன்றாவது கனி கொடுப்பார்கள் என்று இறைவன் பொறுமையாக இருக்கிறார்பல மடங்கு கனி கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஒரேபு மலையில் மோசேவை இறைவன் தம் பணிக்காக அழைக்கிறார். இஸ்ரயேல் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுதலை வாழ்வுக்கும், துன்பத்திலிருந்து மகிழ்ச்சியான வாழ்வுக்கும், எகிப்தியரின் பிடியிலிருந்து புதுவாழ்வுக்கும், இறுதியாக பாலும் தேனும் பொழியும் கானா நாட்டிற்கு மோசே வழியாக அழைத்து வருகிறார். இறைவனின் வழிநடத்துதலை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் முன்னோர் அனைவரும் மேகத்தின் கீழ் இறைப்பராமரிப்பில் வழிநடந்தனர். ஆனாலும் இறைவன் உடனிருந்ததை அவர்கள் உணரவில்லை. முணுமுணுத்தனர், கடவுளை விட்டு விலகினர்இயேசு தம்முடைய உயிரை நமக்காகக் கொடுத்து, நம் அனைவருக்கும் புதுவாழ்வு கொடுத்து காத்து வருகிறார். அன்றாடம் நம்மோடு பயணிக்கும் இறைவனின் மகத்துவத்தை உணர்ந்து, பாவமின்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே எம் இறைவா! திரு அவையை வழிநடத்துவதற்கு நீர் கொடுத்த தலைவர்களுக்காய் நன்றி கூறுகின்றோம். அவர்கள் எங்களுக்குக் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடக்கவும், அவர்களோடு இணைந்து செயல்பட்டு பங்கு என்ற குட்டித் திருச்சபையை வளர்த்தெடுக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் எமக்கு வழியாக, வாழ்வாக இருந்து  அற்புதமாக வழிநடத்தி வருகின்றீர், நன்றி கூறுகின்றோம். எங்களது பலவீனங்களால் பலமுறை உமது அன்பை உணராமல் இருந்திருக்கின்றோம். எங்களை மன்னியும். நாங்களும் எங்கள் குடும்பங்களும் உம்மை விட்டுப் பிரியாது உமது அன்பில் நிலைத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாசமுள்ள ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். பெற்றோர்களாகிய நாங்கள் பக்தியிலும் ஞானத்திலும் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை வளர்க்கவும், திருப்பலியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி ஆர்வத்தோடு பங்குகொள்ளத் தூண்டவும், திருமறையின் முக்கியத்துவத்தை விளக்கும் மறைக்கல்வி வகுப்பிற்குத் தவறாமல் அனுப்பவும் தேவையான அருள் வரங்களை எமக்குத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் ஆண்டவரே! இப்புனிதமான நாள்களில் உடன் வாழும் அனைவருக்கும் உதவி செய்து வாழவும், வாழ்வு தரக்கூடிய வார்த்தைகளைப் பேசவும்எவரையும் தீர்ப்பிடாது தூய வாழ்வு வாழவும், குடும்பத்தில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொண்டு மகிழ்வோடு வாழவும் தேவையான அருள்வரத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (16-03-2025) (மூன்றாம் ஆண்டு) தொநூ 15:5-12, 17-18,21; பிலி 3:17-4:1; லூக் 9:28-36

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று இறைவன்மலைஅனுபவத்தைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறார். மலை அனுபவம் என்பது கடவுளின் மாட்சியின் அனுபவம். இறைபிரசன்னத்தை வெளிப்படுத்தும் அனுபவம். திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் மலை அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது. மோரியா மலையில் ஆபிரகாமும், சீனாய் மலையில் மோசேயும், கார்மேல் மலையில் எலியாவும் இறைவனின் மாட்சியைக் கண்டார்கள். தாபோர் மலையில் கடவுளின் மாட்சியானது வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு பாடுகளின், இறப்பின், உயிர்ப்பின் வழியாகப் பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை வாழ்வைக் கொடுக்க இருக்கிறார் என்பதன் சிறந்த அடையாளமே தாபோர் மலை அனுபவம். நம் வாழ்வுக்குத் தாபோர் மலை அனுபவமும், கல்வாரி மலை அனுபவமும் மிகவும் முக்கியமானவை. தாபோர் மலையில் இயேசுவின் முகம் ஒளியாகப் பிரகாசித்ததுஆடை வெண்மையாய் மின்னியது, மோசேயும், எலியாவும் உடனிருந்தனர், பேதுரு உடனிருந்தார், விண்ணகத் தந்தையின் குரல் ஒலித்தது, சீடர்கள் தங்கள் முகத்தை மூடிக் கொள்கின்றனர். கல்வாரி மலையில் இயேசுவின் முகம் காயப்பட்டிருந்தது, ஆடை களையப்பட்டு நின்றார், இரண்டு கள்வர்கள் இயேசுவோடு உடனிருந்தனர், பேதுரு இயேசுவை விட்டு ஓடிவிட்டார், படை வீரர்களின் ஏளனக் குரல் ஒலிக்கிறதுகதிரவன் தன் முகத்தை மூடிக் கொள்கிறான். இவ் வாறு இயேசுவின் மாட்சியில் நாம் பங்கு பெற வேண்டுமென்றால், தாபோர் மலை மற்றும் கல்வாரி மலை அனுபவத்தைப் பெறவேண்டும். நம் வாழ்க்கையில் இன்பமான மற்றும் துன்பமான நேரங்களில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து, அவரது மாட்சியில் பங்குகொள்ள வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிராமிடம்வானத்து விண்மீன்களைப் போல உன் வழி மரபினரும் இருப்பர்என்றார். ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். நாமும்  ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது, நாம் செய்வது அனைத்திலும் ஆண்டவர் வெற்றி தருவார். நமது தந்தை ஆபிராமைப் போன்று ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், ‘நமக்கு விண்ணகமே தாய்நாடு, அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்என்றும், ‘ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்என்றும் கூறுகின்றார். இன்னல்கள், இக்கட்டுகள், துன்பங்கள் அனைத்திலும் இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவில் நிலைத்து  வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும் இக்காலத்திற்கேற்ப விவேகத்தோடும், முன்மதியோடும் செயல்படவும், உம் பணியைச் செய்வதற்குத் தேவையான உடல் நலம் கொடுத்து வழிநடத்தவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மோடு வாழும் ஆண்டவரே! தவக்காலத்தில் உமது பாடுகளைப் பற்றி அதிகமாகத் தியானிக்கும் நாங்கள் அனைவரும் உடன்வாழும் சகோதர-சகோதரிகளுக்குச் சிந்தனையால், சொற்களால், செயல்களால்  தீங்கிழைக்காதிருக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! மருத்துவமனைகளிலும் எமது இல்லங்களிலும் தெருவோரங்களிலும் முதியோர் இல்லங்களிலும் உடல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரின் தனிமையையும் போக்கிடத் தேவையான நல்ல மனத்தை எங்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நல்ல ஆயனான ஆண்டவரே! எம் பங்கிலும் உலகிலும் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை ஆசிர்வதியும். அறிவியல் உலகில் ஞானத்தோடு வாழவும்ஒவ்வொரு நாளும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் வளரவும், பொறுப்புணர்வோடு செயல்படவும், இவர்களின் எதிர்காலம் சிறக்கவும், நீரே அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் முதல் ஞாயிறு (09-03-2025) (மூன்றாம் ஆண்டு) இச 26:4-10; உரோ 10:8-13; லூக்கா 4:1-13

திருப்பலி முன்னுரை

தவக்காலம் இது மனமாற்றத்தின் காலம்; ஆண்டவரின் பேரன்பைச் சுவைக்கும் காலம்; செபத்தில் நிலைத்து ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொள்ளும் காலம்; மன்னித்து நல்ல மனிதர்களாக வாழும் காலம். சொற்களால், செயல்களால், நல்ல எண்ணங்களால் அமைதியை விதைக்கும் காலம். இத்தகைய புனிதமான தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்றைய நற்செய்தியில் இயேசு நாற்பது நாள் நோன்பிருந்தபோது அலகையினால் சோதிக்கப்படுகிறார். தம்முடைய செபத்தால், வல்லமையான வார்த்தையால் அலகையை வென்றுவிடுகிறார். நாமும் அலகையின் செயல்களிலிருந்து விடுபடவேண்டும். திருப்பலி, செபமாலை, தனிச்செபம், குடும்பச் செபம் ஆகியவற்றின் வழியாக ஆண்டவரை நெருங்கிச் சென்று, அலகையை நாம் வெல்ல முடியும். எனவே, நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் இறை வார்த்தையை அனுதினமும் படித்துத் தியானிப்போம்; ஆண்டவரின் பாதத்தைச்சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். பாவத்திலிருந்து விடுபட்டு தூயவர்களாக வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

மோசே, இஸ்ரயேல் மக்களிடம், ‘ஆண்டவர் தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களினாலும் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்என்று கூறி ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி கூறுகின்றார். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் அன்றாடம் ஏராளமான நன்மைகளைச் செய்து வருகின்றார். ஆண்டவரின் பேரன்பை நினைத்து நன்றி கூற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவர் வேண்டுவதற்கு மேலாகவே அருள்வளங்களை நமக்குத் தருகின்றார். தம்முடைய அளவற்ற நன்மைகளால் நாளும் நம்மை நிரப்புகின்றார். நம்பிக்கையோடு ஆண்டவரிடம் கேட்கும் அனைத்தையுமே நாம் பெற்றுக்கொள்வோம். அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளைப் பொழிகிறார் என்று தூய பவுல் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உமது பணியைச் சிறப்பாகவும், விவேகத்தோடும் செய்வதற்குத் தேவையான உடல் மற்றும் மனவுறுதியைத் தந்திடவும், துன்பமான நேரங்களில் நீரே உம்முடைய தூதர்களைக் கொண்டு வழிநடத்திக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் வடிவமான ஆண்டவரேஉம்முடைய பேரன்பையும் பேரிரக்கத்தையும் சுவைத்து வாழ இத்தவக்காலத்தைத் துவங்கி இருக்கும் நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உன்னதச் செல்வமாகிய உமக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உடன் வாழும் ஆண்டவரே! எம்முடைய நாட்டிலும் பங்கிலும் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். தீராத நோய்களினின்றும், வறுமை, பசி, போர் போன்ற அழிவினின்றும் மக்களைக் காத்திடவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தந்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உடன் பயணிக்கும் ஆண்டவரே! எம் நாட்டில் வாழும்  இளைஞர் மற்றும் இளம் பெண்களை ஆசிர்வதியும். இணையம், அலைப்பேசி எனத் தொலைத்தொடர்புக் கருவிகளில் தொலைந்து போகாமல், மெய்ஞானமாகிய உம்மில் நம்பிக்கைகொண்டு உம் வழியில் வாழவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் அருள் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 8-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (02-03-2025) சீஞா 27:4-7; 1 கொரி 15:54-58; லூக் 6:39-45

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு தூய்மையான பார்வை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. புறப்பார்வை நம் அறிவை விசாலமாக்குகின்றது. அகப்பார்வை நம் ஆன்மாவையும் உள்ளத்தையும் வளப்படுத்துகின்றது. ‘நான் யார்? எனது நிறை - குறை என்ன?’ என்பதை யார் தெளிவாக அறிந்துள்ளார்களோ, அவர்களே சரியான பார்வை கொண்டுள்ளார்கள். மற்றவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதில் நீதிபதிகளாக இருக்கிறோம்; நமது தவற்றை ஏற்றுக்கொள்வதில் வழக்கறிஞர்களைப்போல் வாதாடுகிறோம். பாவம் என்ற சேற்றிலிருந்து எழுந்துதிருவிவிலியம் வாசித்தல், நற்கருணை ஆராதனை, தினமும் திருப்பலியில் பங்குகொள்ளுதல், குடும்பச் செபம் செபித்தல், ஒப்புரவு  இவற்றின் வழியாக நமது ஆன்மாவைத் தூய்மை  செய்து, சிறந்த கனிகொடுக்கும் மரங்களாக மாறுவோம். இன்றைய நற்செய்தியில் இயேசுஉள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்என்கிறார். நம் உள்ளத்தை நல்ல சிந்தனையால், நேர்மறை எண்ணங்களால், வாழ்வு கொடுக்கும் வார்த்தையால், மற்றவர்களை வாழ்விக்கும் செயல்களால்  நிரப்புவோம். மற்றவர்களைப் பற்றிய தவறான கருத்துகளை, கண்ணோட்டங்களை முற்றிலும் அகற்றுவோம். நம்மிடமுள்ள அல்லவைகளை எல்லாம் அகற்றி, நல்ல மதிப்பீடுகளில் நாளும் வளர்வோம். இயேசுவைப் போன்று அன்பும் கனிவும் இரக்கமும் கொண்ட பார்வையும், எவரையும் தீர்ப்பிடாத மனநிலையும் கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சில நல்ல வார்த்தைகள் நம்மை வாழ வைக்கின்றன. சில வார்த்தைகள் நம்மை வீழ்ச்சி அடையச் செய்கின்றன. நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் நாம் யார் என்பதையும், எப்படிப்பட்டவர்கள் என்பதையும், நம்முடைய ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றன. அன்றாடம் நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மாசின்றி இருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் அனைவரும் கடவுளை அறிந்து அன்பு செய்யப் படைக்கப்பட்டுள்ளோம். கிறித்தவன், கிறித்தவள் என்ற முகவரியைப் பெற்ற நாம், ஆண்டவரின் பணியை அன்றாடம் செய்துகொண்டே இருக்கவேண்டும். துன்பங்கள், இன்னல்கள், இடையூறுகள், அவமானங்கள் என எது வந்தாலும் துவண்டுவிடாது இறைவனின் பணியைத் துடிப்போடு செய்துகொண்டே செல்ல வேண்டும்ஆண்டவருக்காக நாம் செய்யும் பணி எப்போதுமே வீண்போகாது. இரட்டிப்பான ஆசிர்வாதத்தையே தரும் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1) அன்பின் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தி வரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரையும் ஆசிர்வதியும். இவர்கள் அனைவரும் உமது வார்த்தையை அன்றாடம் வாசித்து, அதைத் தங்களுடைய வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) கருணையின் இறைவா! எங்கள் அனைவருக்கும் நீர் கொடுத்த இந்த வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். எங்களுடைய வாழ்க்கையில் அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், அமைதி போன்ற பண்புகளை விதைத்து நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) எம்மோடு வாழும் ஆண்டவரே! எமது நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதிக்க வேண்டுகின்றோம். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க எம் தலைவர்களுக்குத் தேவையான ஞானத்தையும் முன்மதியையும் தந்து காத்து வழிநடத்தவும்மக்கள் அனைவரையும் கொடிய நோய்களினின்று பாதுகாக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இறைவார்த்தை வழி எம்மோடு அன்றாடம் பேசும் ஆண்டவரே! எங்கள் குடும்பங்களைபங்கு மக்களை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். நாங்கள் அனைவரும் வாழ்க்கையை வளப்படுத்தும் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசவும், புண்படுத்தக் கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து வாழவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.