திருப்பலி முன்னுரை
இன்று அன்னையாம் திரு அவை இயேசு, மரியா, யோசேப்பு இவர்களின் திருக்குடும்பப் பெருவிழாவைச் சிறப்பிக்கிறது. குடும்பம் என்பது கோவில், இது அன்பின், மகிழ்ச்சியின், உறவின், பகிர்வின், விட்டுக்கொடுத்தலின், நம்பிக்கையின் பிறப்பிடம். திருக்குடும்பம் இதற்குச் சிறந்த சான்று. திருக்குடும்பத்தின் தலைவர் யோசேப்பு நீதிமானாகவும், கடின உழைப்பாளியாகவும், நேர்மையாளராகவும், பொறுமை குணம் கொண்டவராகவும், அமைதியின் இருப்பிடமாகவும், இறைத்திட்டத்திற்குப் பணிந்தவராகவும் இருந்தார். ஒவ்வொரு கணவரும் இத்தகைய நற்பண்புகளைக் கொண்டு வாழ வேண்டும். ஒவ்வொரு மனைவியும் அன்னை மரியாவிடம் மிளிர்ந்த தாழ்ச்சி, எளிமை, ஆடம்பரம் இல்லாத வாழ்வு, அதிர்ந்து பேசாத குணம், ஆழமான அன்பு, இறைத் திட்டத்திற்கு ‘ஆம்’ என்று பணிதல் போன்ற பண்புகளைத் தனதாக்கிட வேண்டும். குழந்தைகள், இயேசுவைப் போன்று அறிவிலும், ஞானத்திலும் வளர்ந்து, பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, செபமாலை, குடும்பச் செபம், திருப்பலி என இறைப்பக்தியில் வளர்ந்து நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாற வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம் முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் அன்னா, ஆண்டவரிடம் செபித்ததால் இறைவன் கொடுத்த குழந்தைச் செல்வத்திற்காக நன்றி கூறியும், வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்குப் பணி செய்ய தன் குழந்தை சாமுவேலை அர்ப்பணித்ததையும் பற்றிக் கூறுகிறது. ஆண்டவர் நமக்குக் கொடுத்த மிகச்சிறந்த செல்வம் நம் குழந்தைகள். அவர்களை இறைப்பற்றில் வளர்த்து, இறைப்பணிக்கு அர்ப்பணிப்பது பெற்றோர் கடமை என்பதை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
கடவுளோடு இணைந்திருப்பவர்கள் அன்பை அடித்தளமாகவும், படைப்பு அனைத்தையும் நேசிப்பவர்களாகவும், அனைத்திற்கும் நன்றி சொல்பவர்களாகவும், மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் இருப்பார்கள். ஏனெனில், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவரோடு கடவுள் இணைந்திருக்கிறார் என்று கூறி, இறையோடு இணைந்து வாழ அழைக்கும் 2-ஆம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1.
எம்மை மீட்க வந்த ஆண்டவரே! திரு அவை என்ற குடும்பத்தை வழிநடத்திவரும் தலைவர்களுக்கு ஆற்றலையும் ஞானத்தையும் தந்து காத்திடவும், திரு அவையில் அன்பும் ஒற்றுமையும் நிலவிடவும், சமத்துவமும் சகோதரத்துவமும் வளர்ந்திடவும், இந்த மகத்தான பணியைச் செய்துகொண்டிருக்கும் அனைவரையும் காத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.
எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! எங்கள் பங்கு என்ற குடும்பத்தில் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். பங்கிலுள்ள நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் மக்கள் என்ற உணர்வுடன் வாழவும், துவங்கியிருக்கிற இந்த யூபிலி ஆண்டில் எங்கள் நம்பிக்கை வாழ்விலும், ஆண்டவரைப் பற்றி அறிவதிலும் நாளும் வளரவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.
குட்டித் திரு அவையாகிய எங்கள் குடும்பங்களைப் பாதுகாத்து வரும் ஆண்டவரே! திருக்குடும்பத்தில் நிலவிய அன்பு, அமைதி, பகிர்வு, இறைப்பற்று, நிறைகுறையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எமது குடும்பங்களிலும் நிலைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.
அமைதியைக் கொடுக்க வந்த ஆண்டவரே! எமது உலகில் பஞ்சம், போர், வன்முறை, நோய் அனைத்தும் நீங்கிடவும், வரும் புத்தாண்டு அனைத்து வளங்களையும், வரங்களையும் தரும் ஆண்டாக மலர்ந்திடவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.