திருப்பலி முன்னுரை:
அன்பான இறைமக்களே! இன்று திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. அன்னையாம் திரு அவை ஆண்டவருக்குள் மகிழ்வோடு வாழவும், மற்றவருக்கு மகிழ்வை வழங்கிடவும் ‘மகிழ்ச்சி’ என்ற திரியை உள்ளத்தில் ஒளிர்விக்க நம்மை அழைக்கிறது. இன்றைய நற்செய்தியானது ஆண்டவர் இயேசுவின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தனக்குத் தகுதியில்லை என்று கூறி, திருமுழுக்கு யோவான் தன்னைத் தாழ்த்திக் கொண்டதையும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் ஆண்டவரை முன்னிலைப்படுத்தியதையும், ‘நான் ஒளி அல்ல; ஒளியைக் குறித்து சான்றுபகர அனுப்பப்பட்டவர்’ என்பதைத் தயக்கமின்றி முழக்கமிட்டதையும் சிந்திக்க அழைக்கிறது. இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானைப் போன்று நாம் நம்மைத் தாழ்த்தும்போதும், நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து வாழும்போதும், ‘நான்’ என்பதை விடுத்து, ‘நாம்’ என்று வாழும்போதும், அனுதினமும் திருப்பலியில் தூய உள்ளத்துடன் ஆண்டவரைச் சுவைக்கும்போதும், உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கும்போதும், எவரிடத்தும் பகைமை பாராட்டாத தூய உள்ளத்துடன் வாழும்போதும் நமது உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எனவே, மகிழ்ச்சியை வெளியே தேடாமல் நமக்குள்ளே தேடுவோம். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். எனவே, மகிழ்ச்சியை மற்றவர்கள் வாழ்வில் விதைத்து, நாமும் மகிழ்ந்திருக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம் முன்னுரை
இன்றைய முதல் வாசகம் ‘மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்’ என்று கூறி ஆண்டவரில் மகிழ்ந்திருக்க நம்மை அழைக்கிறது. ஆயிரம் முறை தவறுகள் செய்து, அண்டிவரும்போதெல்லாம் அணைக்கின்ற தெய்வத்தின் மீட்பு பற்றியும், அவரது உடனிருப்பு பற்றியும் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
பொன், பொருள், பட்டம், பதவி, வசதியான வாழ்க்கை இவற்றை நினைத்து அதிகமாகவே நாம் கவலைப்படுகின்றோம். நாளைய தினத்தைப் பற்றி அதிகமாகக் கவலைகொண்டு இன்றைய தினத்தை அனுபவித்து வாழ மறந்து விடுகின்றோம். உங்கள் கவலைகளை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுங்கள், ஆண்டவர் அண்மையில் உள்ளார்; எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி நம் வாழ்க்கைக்குப் பலம் கொடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1.
எம்மைக் காக்கும் ஆண்டவரே! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மை, நீதி, நேர்மை போன்ற மதிப்பீடுகளுடன் வாழ்ந்து, அதன் வழியில் மக்களை வழிநடத்தவும், அழைத்தல் வாழ்வில் ஞானத்தோடு பணி செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2,
எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! கிறித்தவ மக்கள் அனைவரும் செபத்தில் நிலைத்திருந்து அனுதினமும் உமக்கு நன்றி கூறி, மகிழ்ச்சியோடு வாழ்ந்து, தங்கள் உடலையும், உள்ளத்தையும் குற்றமின்றிக் காக்க தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3.
இமைப்பொழுதும் எம்மை விட்டு நீங்காத ஆண்டவரே! கிறிஸ்துவின் வருகையானது நோயாளிகளுக்கு உடல் நலத்தையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், மனச்சோர்வோடு வாழ்பவர்களுக்கு மனபலத்தையும், நம்பிக்கையின்றி வாழ்பவர்களுக்கு நம்பிக்கையையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.
எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! எம் பங்கில் வாழும் இளைஞர்-இளம்பெண்கள் அனைவரும் தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைந்து போகாமல், ஆன்மாவைக் காக்கவும், திருமுழுக்கு யோவானைப்போல் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.